Tuesday, June 17, 2008

செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறும் செல்வன்


செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக - அழகான கொங்கைகளைக் கொண்ட மங்கையான உமையன்னை ஒரு பாகமாக

விடையேறு செல்வனடைவார் - விடையில் ஏறுகின்ற, நம்மையெல்லாம் தன் செல்வமாக உடைய செல்வனாம் சிவபெருமான் சேரும் இடம்

ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து - ஒப்பு கூறத்தக்க இளமதியமும் கங்கையும் (அப்பு - நீர், இங்கு கங்கை) தன் திருமுடி மேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - தானாகவே என் உள்ளம் புகுந்து அங்கு நிலை நின்றதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் - வெப்பமான காய்ச்சல், குளிர் காய்ச்சல், வாதம் (நரம்பு தொடர்பான நோய்கள்), பித்தம் (மனநிலை தொடர்பான நோய்கள்) போன்ற எந்த நோயும்

வினையான வந்து நலியா - வினைப்பயனாக வந்து என்னை வாட்டாது

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - சிவனடியார்களுக்கு அந்த வினைகளும் மிக நல்லவை; அவற்றின் பயனாக வரும் நோய்களும் மிக நல்லவை (அவை வராமல் இருந்து நல்லவையாய் இருக்கும்; வந்தாலும் வாட்டாமல் இருந்து நல்லவையாய் இருக்கும்)

6 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'கோளறு பதிகம்' பதிவில் 28 மே 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

18 comments:

N. Rethinavelu said...
நன்றாக உள்ளது
//சிவனடியார்களுக்கு அந்த வினைகளும் மிக நல்லவை; அவற்றின் பயனாக வரும் நோய்களும் மிக நல்லவை (அவை வராமல் இருந்து நல்லவையாய் இருக்கும்; வந்தாலும் வாட்டாமல் இருந்து நல்லவையாய் இருக்கும்)//
அருமையாக உள்ளது

May 28, 2006 6:01 AM
--

Sivabalan said...
குமரன்,

//அப்பு - நீர் //

அருமையாக சொன்னீர்கள்.


இப்பாடலை வெங்கள குரலோன் சீர்காழி பாட கேட்க மிக அருமையாக இருக்கும்.

May 28, 2006 8:00 AM
--

வல்லிசிம்ஹன் said...
குமரன், உங்கள் பதிவைப் பார்க்கும்போதெல்லாம் மனசுக்கு இதமாக இருக்கிறது. பொருளுரையும், னோய் வரும்போது மட்டும் சிவனை நினைக்காமல் அதற்கு முன்னாலேயெ "அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்" ஆக இருப்பதுதான் பதிகத்தின் அருமை.மிக மிக நன்றி.

May 28, 2006 5:18 PM
--

செல்வன் said...
செல்வனின் பெருமையை சொல்லவும் முடியுமோ குமரன்?செல்வனை நம் உள்ளத்தில் வைத்தால் நாம் அனைவரும் உய்வோம் என்பது கண்கூடு

May 28, 2006 7:45 PM
---

குமரன் (Kumaran) said...
பாராட்டுகளுக்கு நன்றி என்னார் ஐயா.

May 28, 2006 8:01 PM
---

குமரன் (Kumaran) said...
இப்பாடல்களை சீர்காழி பாடியிருக்கிறாரா சிவபாலன். நான் கேட்டதில்லையே. ஏதேனும் சுட்டி இருந்தால் சொல்லுங்கள்.

May 28, 2006 8:02 PM
---

குமரன் (Kumaran) said...
நன்றி வல்லி.

May 28, 2006 8:02 PM
---

குமரன் (Kumaran) said...
உண்மை தான் செல்வன். செல்வனின் பெருமை சொல்லவும் அரிதே.

May 28, 2006 8:03 PM
---

குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன். நீங்கள் கொடுத்த சுட்டி பதிவின் டெம்ப்ளேட்டை பதம் பார்த்ததால் அந்தப் பின்னூட்டத்தை எடுத்துவிட்டேன். மன்னிக்கவும்.

May 28, 2006 8:38 PM
--

Sivabalan said...
Oh no.

Sorry Kumaran

May 28, 2006 9:02 PM
---

G.Ragavan said...
நல்ல விளக்கம் குமரன். அப்பும் என்ற சொல்லைப் படித்ததும் எனக்கு நாழி அப்பும் நாழி உப்பும் நாழி அப்பான வரிகள் நினைவிற்கு வருகின்றன. ஆனால் சரியான வரி நினைவில்லை. உங்களுக்குத் தெரியுமா?

May 28, 2006 9:10 PM
--

சிவமுருகன் said...
//வினைப்பயனாக வந்து என்னை வாட்டாது,...சிவனடியார்களுக்கு அந்த வினைகளும் மிக நல்லவை; அவற்றின் பயனாக வரும் நோய்களும் மிக நல்லவை (அவை வராமல் இருந்து நல்லவையாய் இருக்கும்; வந்தாலும் வாட்டாமல் இருந்து நல்லவையாய் இருக்கும்) //

மிக அருமையான விளக்கம்

May 28, 2006 9:15 PM
---

குமரன் (Kumaran) said...
Sorry எதற்கு சிவபாலன்?

May 29, 2006 2:50 AM
---

குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன். நீங்கள் சொன்ன சொலவடையைக் கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் முழுவதுமாக நினைவில்லை. இறைவனும் உயிரும் கலந்த பின் இறைவன் மட்டுமே மிஞ்சி நிறபதைச் சொல்கிறதோ அது?

May 29, 2006 2:52 AM
---

குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன்

May 29, 2006 2:52 AM
---

johan -paris said...
நோய் வராதிப்பது,இலகுவல்ல!ஆனால் வந்த நோய் வாட்டாதிருக்க அருள்! கிட்டும் பனுவல்!
நன்று.பித்தம் ;மனநிலை சம்பந்தமான வியாதியை உருவாக்குமா?; அதனால் தான் "பித்தம்" தலைக்கேறித் திரிகிறான் என்கிறார்களா,,,?,! இது; கேலிக்குச் சொல்லும் வார்த்தை என இதுவரை எண்ணினேன்.
யோகன் -பாரிஸ்

May 29, 2006 6:49 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் யோகன் ஐயா. பித்தம் அதிகமானால் மனநோய் வரும் என்று தான் படித்திருக்கிறேன். அதனால் பித்தம் தலைக்கேறுதல் என்பதில் பொருள் உண்டு என்று தான் தோன்றுகிறது. அதே போல் முடக்கு வாதம் என்று சொல்வதும் வாதம் அதிகமானால் நரம்பு தொடர்பான நோய்கள் வரும் என்பதைச் சொல்கிறது என்று நினைக்கிறேன்.

May 29, 2006 7:00 AM

Unknown said...

என் பதிவையும் படித்து பாருங்கள்

Kavinaya said...

'ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்'

இந்த வரி ரொம்ப பிடிச்சிருக்கு.

//(அவை வராமல் இருந்து நல்லவையாய் இருக்கும்; வந்தாலும் வாட்டாமல் இருந்து நல்லவையாய் இருக்கும்)//

அழகான விளக்கம், குமரா!

குமரன் (Kumaran) said...

நன்றி அக்கா.

குமரன் (Kumaran) said...

வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி ஜெய்சங்கர். விரைவில் வந்து படிக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

படித்துப் பார்க்கிறேன் விஜய். நன்றி.