Sunday, June 08, 2008

உபயோகத்தை பயன்படுத்தலாமா ?

அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு என்ற சொல்லாடல் எதற்கு பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ தமிழுக்கு பொருந்தி போய் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கிறோம் நாம். சொற்களஞ்சிய குவியல் தமிழில் மலைபோல் இருக்கும் இருப்பு அறியாமலேயே இன்றைக்கு தமிழில் ஆங்கிலம் நுழைத்து நாகரீக பேச்சு என்ற பெயரில் தமிங்கிலம் பேசுவது போல் நூற்றாண்டுகளுக்கு முன்பு இலக்கிய காப்பியங்களை மொழிப் பெயர்க்கும் காலத்திலும் அது பரவலாக புழங்க ஆரம்பித்த போதும் நம்மவர்கள் வடமொழி சொற்களை முதன்மையாகவும் பிற மொழிச் சொற்களை தேவை (அவசியம்) இல்லாமலேயே பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர் என்ற பேருண்மையை 'தமிழினி மெல்லச் சாகும்' என்ற வசை எச்சரிக்கைகுப் பிறகு ஒருவாறு தெரிந்து கொண்டு எழமுயற்சித்து காலூன்றி விட்டோம்.

இனி நாம் நட(ன)மாடவே முடியும் என்ற நிலைக்கு உறுதி பெற்றுள்ளோம் என்றால் அது தனித் தமிழ் ஆர்வலர்கள் பரிதிமார் கலைஞர், மறைமலை அடிகளார், அண்மையில் (சமீபத்தில்) வாழ்ந்து கலைச் சொற்களுக்கும், வேர்சொல் ஆராய்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றிய தேவநேய பாவானர் போன்றோர்களால் தான். தற்பொழுது வலைப்பக்கம் வழியாக நம் அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஐயா இராம.கி அவர்கள் அத்தகைய சீரிய பணியை செவ்வனே செய்து வருகிறார்கள்.

இந்த களையெடுப்பை கொச்சைப்படுத்த பல்வேறு உத்திகளில் அவ்வப்போது ஏற்படும் எதிர்ப்புகளை தமிழர்கள் நேர்கொண்டும் (சந்தித்தும்) , பொறுத்துக் (சகித்துக்) கொண்டும் தமிழன்னைக்கு பணிவிடை செய்தே வந்திருக்கிறார்கள். தாங்களும் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு சில வலைப்பதிவர்கள் தமிழார்வளர்களை குறி(வை)த்து தூற்றல், ஏச்சு, கிண்டல் என தொடர்ந்து ஒரு தொண்டாகவே செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்மழை வேண்டுமென வேண்டுபவர்கள் சிறு மழைத்துளிக்குக் கூட தவளைகளின் இரைச்சல் ஆரம்பமாகிவிடுமோ என்றெல்லாம் நினைப்பது இல்லை. எனவே தவளைகள் அவைகளின் இயல்பை வெளிப்படுத்துகின்றன என்று புறம்தள்ளி மழையால் பெரும் பயனை மட்டுமே நினைத்துப் பார்ப்போம்.

கொள்கைபிடிப்பு என்ற பெயரில் பழமை வாதம் பேசுபவர்கள் எப்போதும் மாறப் போவதில்லை. தமிழறிஞர்கள் எழுதுவது எல்லாம் மேற்படி பேசுபவர்களை மாற்றவேண்டும் என்பதற்கு அல்ல என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். எது உண்மை என்று அறியாமல் மயக்கத்தில் இருந்து கொண்டு இது சரியாக இருக்குமா ? என்று கூட ஆராயாமல் இருக்கும் மற்ற தமிழர்களுக்கு இவைகள் கண்ணில் படும் போது தமிழரிஞர்களின் கருத்துக்களும் கட்டுரைகளும் சென்றடைந்து நல்ல தாக்கத்தைத் தரும். சரி கட்டுரையின் தலைப்பைத் தொடவேண்டும்...

'பயன்படுத்துதல்' என்ற பதம் எங்கு புழக்கத்தில் மிகுந்து (அதிகம்) இருந்தால் சமூகத்துக்கு பெரிதும் நலம் என்று எடுத்துக் கொண்டால் அது 'மொழியை சரியாக பயன்படுத்துதல்' என்ற இடத்தில் பயன்படு(த்து)ம் போது பண்பாடும், பழமை வாதம் தவிர்த்து கலாச்சாரமும் மென்மேலும் வளரவும், கட்டிக் காக்கவும் பயன்படுகிறது.

பயன் என்ற சொல்லின் இனிமை எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பதை திருக்குறளில் அந்த சொல்லை பல குறள்களில் திருவள்ளுவர் பயன்படுத்தி இருப்பதிலிருந்து நன்கு அறிய முடிகிறது.

பயன் என்ற சொல்லில் இருந்து பயனீட்டாளர், பயனாளர், பயன்படுத்துபவர், பயனளிப்பு போன்று பயன் தொடர்புடடைய மேலும் பல பெயர் சொற்களுடன் சேர்த்து 'பயன்' கலைச் சொற்கள் அமைக்க பெரிதும் பயன்படுகிறது. இவ்வளவு பெருமையும், பயனும், சொல்லினிமையும் உள்ள சொல்லை வைத்துக் கொண்டு 'உபயோகம்' என்ற சொல்லை பெருவாரியாக நாம் பயன்படுத்துகிறோம்.

பயன் என்ற தமிழ் சொல்லும் உபயோகம் என்ற வடசொல்லும் ஒரே பொருள்தான். உபயோகத்தின் பயன் தமிழுக்கு தேவையற்றது. எளிதான பயன் இருக்கையில் உபரியான உபயோகத்தை பயன்படுத்துவதை தவிர்கலாம். குறையொன்றுமில்லை. தமிழைப் பொறுத்தவரை பயனென்ற பைந்தமிழ் நற்பயன் சொல்லைப் பயன்படுத்துவதால் பெரும்பயனே !

5 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் திரு. கோவி.கண்ணன் அவர்களால் 2 மார்ச் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

44 கருத்துக்கள்: குழலி / Kuzhali said...
//இந்த களையெடுப்பை கொச்சைப்படுத்த பல்வேறு உத்திகளில் அவ்வப்போது ஏற்படும் எதிர்ப்புகளை தமிழர்கள் நேர்கொண்டும் (சந்தித்தும்) , பொறுத்துக் (சகித்துக்) கொண்டும் தமிழன்னைக்கு பணிவிடை செய்தே வந்திருக்கிறார்கள். தாங்களும் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு சில வலைப்பதிவர்களும் தமிழார்வளர்கள் குறித்து தூற்றல், ஏச்சு என தொடர்ந்து ஒரு தொண்டாகவே செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்மழை வேண்டுமென வேண்டுபவர்கள் சிறு மழைத்துளிக்குக் கூட தவளைகளின் இரைச்சல் ஆரம்பமாகிவிடுமோ என்றெல்லாம் நினைப்பது இல்லை. எனவே தவளைகள் அவைகளின் இயல்பை வெளிப்படுத்துகின்றன என்று புறம்தள்ளி மழையால் பெரும் பயனை மட்டுமே நினைத்துப் பார்ப்போம்
//
சும்மா நச்சுன்னு இருக்கு....

நானும் இனி "உபயோகத்தை" பயன்படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறேன்

March 02, 2007 10:46 AM
சிவபாலன் said...
நல்ல பதிவு!!

மிக எளிமையாக விளக்கியுள்ளீர்கள்..

நிச்சயம் பயனளிக்கும் (உபயோகமாக இருக்கும்) :)

நன்றி

March 02, 2007 10:46 AM
SK said...
உபயோகம் என்பது பயன் அல்ல!!
யோகம் என்பதுதான் பயன்.
யோகத்தைச் செய்வது உபயோகம்
பயனைச் செய்வது பயன்படுத்துவது
பயனை அடைவது பயன் பெறுவது.
பயனை அளிப்பது பயனளிப்பது.
இப்ப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதேபோல, உபயோகம், அதியோகம், ப்ரத்யதியோகம், சமயோகம் என பல சொற்கள் வடமொழியில் உள்ளது.

முதலில் மூலச் சொல்லைத் தெரிந்து கொண்டு பிறகு மொழிக்குள் வரலாமே!

நீங்கள் பயனும், உப்யோகமும் ஒன்றேனச் சொல்லியதை வைத்து இதைச் சொல்லலாயிற்று.

3 எழுத்துப்பிழைகள் இப்பதிவில் உள்ளன.
திருத்தவும்!

எல்லாரும் பயன்படுத்தக் கூடிய ஒரு ஸொல்தான் இது!

March 02, 2007 12:22 PM
SP.VR.சுப்பையா said...
///எஸ்.கே அவர்கள் சொல்லியது:முதலில் மூலச் சொல்லைத்
தெரிந்து கொண்டு பிறகு மொழிக்குள் வரலாமே!
நீங்கள் பயனும், உப்யோகமும் ஒன்றேனச் சொல்லியதை
வைத்து இதைச் சொல்லலாயிற்று.///

நியாயமான வாதம்!!
எஸ்.கே அவர்களுக்கு நன்றி!

இன்னும் ஒரு கோண்த்தில் பார்க்க வேண்டும்.
லத்தின், ஹீப்ரு, போன்ற மொழிகளிலிருந்து
தயக்கமின்றிப் பல சொற்களை உள் வாங்கிக் கொண்டதால்
தான் ஆங்கிலம் உருப்ப்ட்டிருக்கிறது. முதல் மொழியாகத்
திகழ்கிறது.

நாம் இன்னும் நமக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக
சமஸ்கிருதத்தையும், ஹிந்தியையும் விரட்டி அடிப்பதிலேயே
முனைப்பாக இருக்கிறோம்
யோசிக்க வேண்டிய விஷயம்.

carburator
Oil sump
Steering wheel
Gear Box
Radiator
இதையெல்லாம் சாதாரண மொழியறிவில்லாத்
Car Mechanic எப்ப்டிச் சொல்கிறார் அல்லது எப்படிச்
சொல்ல வேண்டும் சொல்லுங்கள்!

March 02, 2007 1:12 PM
கோவி.கண்ணன் [GK] said...
//நீங்கள் பயனும், உப்யோகமும் ஒன்றேனச் சொல்லியதை வைத்து இதைச் சொல்லலாயிற்று.//

பயனும் உபயோகம் குறித்து தமிழ்பேசுபவர் அனைவருமே அறிவர். இறைத்தமிழ் எழுதும் எஸ்கே ஐயா மாறுபட்ட பொருள் கொண்டுள்ளது பற்றி நினைக்கையில் எப்போதும் தங்கள் தனித்தமிழ் கருத்து குறித்தும் இதையும் ஒப்பு நோக்க எனக்கு வியப்பு ஏதும் இல்லை. உங்கள் கடமையும் அதன் பயனும் உங்களுக்கு கிட்டட்டம் !
உபயோகம்

பின்னூட்ட தகவல்களுக்கு நன்றி ஐயா !

March 02, 2007 1:21 PM
குமரன் (Kumaran) said...
வாத்தியார் ஐயா, 'சொல் ஒரு சொல் - ஏன்?' என்ற தலைப்பில் சென்ற இடுகை இந்த வலைப்பதிவில் இருக்கிறது. அதில் தாங்கள் சொல்வதைப் பற்றி பேசியிருக்கிறேன். அதனைப் படித்துப் பார்த்து தங்கள் கருத்தினைக் கூறுங்கள்.

March 02, 2007 1:42 PM
SK said...
நான் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டு, எப்போதும் போல் வார்த்தைகளை அள்ளித் தெளித்திருக்கிறீரகள், கோவியாரே!

உபயோகிக்கலாம் என்பது போல, பயனிக்கலாம் எனச் சொல்ல முடியுமா?

உபயோகப் படுத்தலாம் என்பது போல், பயன் படுத்தலாம் எனச் சொல்ல முடியும்.

இதன் மூலம் உபயோகம், பயன் இரண்டும் ஒரு பொருள் தரும் சொல் அல்ல என உணர முடியும்.

இப்போது நான் சொல்வதின் அர்த்தம்....... மன்னிக்கவும்..... பொருள் புரியுமென நம்புகிறேன்!
ப்ரயோஜனம் என்பது பயனுக்குக் கிட்டத்தில் வருகிறது.

உன்னால் என்ன ப்ரயோஜனம்; உன்னால் என்ன பயன்.

இது இரண்டும் சரியாக வரும்.

ஆனால், உபயோகம்......????
இது இன்னும் சற்று ஆழமானது.

சில உதாரணங்கள்![எடுத்துக்காட்டுகள்]

"அவன் கர்மயோகம் அவனுக்குக் கிட்டியது."
"அவனுக்கு யோகம்யா!"


அதற்குத்தான், மூலத்தை முதலில் தெரிந்து கொண்டு பிறகு சொல்ல வாருங்கள் எனச் சொன்னேன்.

அன்புடன் இதை அணுகுங்கள்.

இங்கு யாரும் தமிழுக்கு விரோதி... மறுபடியும் மன்னிக்கவும்.... பகைவர் அல்ல!

நல்ல, சரியான சொற்களைச் சொல்லுங்கள் எனத்தான் ஸொல்லுகிறேன்.

[நீங்கள் காட்டிய சுட்டியைப் பார்த்தேன்.]

March 02, 2007 5:08 PM
SK said...
//தமிழார்வளர்கள் //
//பாவானர் //
//தமிழார்வளர்களை //
//கொள்கைபிடிப்பு //
//தமிழரிஞர்களின்//
//தொடர்புடடைய//
//தவிர்கலாம்.//

எ.பி.
:))

March 02, 2007 5:15 PM
குமரன் (Kumaran) said...
//நம்மவர்கள் வடமொழி சொற்களை முதன்மையாகவும் பிற மொழிச் சொற்களை தேவை (அவசியம்) இல்லாமலேயே பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்//

அண்மையில் ஐராவதம் மகாதேவன் அவர்களின் கட்டுரையை வரலாறு.காம் இணைய இதழில் படித்தேன். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கூட தமிழகத்தில் கிடைத்திருக்கின்றனவாம். அவையே மிகப் பழமையான கல்வெட்டுகள். அவையும் தமிழிலேயே இருக்கின்றன. அவற்றிலும் ஆங்காங்கே பிராகிருதச் சொற்கள் இருக்கின்றனவாம். இதனைப் படித்த போது வியப்பாக இருந்தது. எழுத்தறிவு அப்போது தான் தோன்றியிருக்க வேண்டும் என்று ஐராவதம் மகாதேவன் கருதுகிறார். அப்போதே பிராகிருதச் சொற்கள் தமிழில் கலந்திருந்தன என்ற செய்தி எனக்கு வியப்பை அளித்தது.

*

//நேர்கொண்டும் (சந்தித்தும்) , பொறுத்துக் (சகித்துக்) //

கண்ணன் அண்ணா.

இந்த சந்தித்தும் என்ற சொல்லையும் சகித்து என்ற சொல்லையும் அடைப்பில் போட்டதற்கு என்ன காரணம்? மற்ற இடங்களில் தமிழல்லாத சொற்களை அப்படி இட்டிருக்கிறீர்கள். அதனால் கேட்கிறேன்.

*

எஸ்.கே.

உபயோகப்படுத்தலாம் என்பது தான் பயன்படுத்தலுக்கு நேர் என்று சொல்லியிருக்கிறீர்கள். மறுப்பில்லை. ஆனால் பொதுவழக்கில் 'அவனால என்ன உபயோகம்?' என்பது 'அவனால என்ன பயன்?' என்ற பொருளில் தானே உள்ளது? அதன் படி பார்த்தால் உபயோகமும் பயனும் நேராகத் தானே இருக்கிறது. உபயோகம் எந்த எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; பயன்படுகிறது என்பவற்றைப் பார்த்து கண்ணன் அண்ணா சொல்லியிருக்கலாம் இல்லையா? அதில் நம் வடமொழி அறிவைக் காட்டி தமிழ்ப்பயன்பாட்டில் இல்லாத பல வடசொற்களைச் சொல்லி, முதலில் அந்த வடமொழியைக் கற்றுக் கொண்டு வாருங்கள்; பின்னர் தமிழில் கலந்துள்ள வடசொற்களைக் களைய விழையலாம் என்றால் எப்படி? உபயோகம் வடமொழியில் எந்தப் பொருளில் பயன்படுகிறது? அதனை வடமொழியறிந்த தமிழர் எந்தப் பொருளில் புழங்குகிறார்கள்? என்றெல்லாம் ஆராயப் புகவில்லை என்றே நினைக்கிறேன். அதே இடத்தில் 'பயன்' என்ற சொல்லைப் புழங்கலாம் என்பதே இந்த இடுகையின் பரிந்துரை. அன்பின் வழி நின்று 'பயன்' என்ற சொல்லை மிகுதியாகப் புழங்கி 'உபயோகத்தைக்' குறைவாக உபயோகிப்போம். (இதற்குப் பயனிப்போம் என்று சொல்ல முடியுமா என்று கேட்காதீர்கள். :-) இதற்கு நேரான தமிழ்ச்சொல் எளிதான 'பயன்படுத்துவோம்' என்றே வைத்துக் கொள்ளுவோம்).

வாத்தியார் ஐயா.

ஆங்கிலம் உருப்பட்டதற்கு நல்ல காரணம் சொல்லியிருக்கிறீர்கள். ஆங்கிலத்திற்கு சொற்றொகை (Vocabulary) மற்ற மொழியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது (இருக்கிறது) - எடுத்துக் கொண்டது (கொள்கிறது). தமிழுக்கு அந்த நிலை இல்லை என்றே நினைக்கிறோம். நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதனால் தமிழ் உருப்பட தமிழ்ச்சொற்கள் சொல்ல வேண்டும்; இல்லையேல் அவை மறைந்துவிடும் என்பது தான் கவலை. இந்தக் கவலையை மிக விரிவாக முந்தைய இடுகையில் பேசியிருக்கிறோம். என் முந்தைய பின்னூட்டத்தில் அந்த இடுகையைத் தான் தங்களைப் படிக்கச் சொன்னேன்.

வடமொழியையும் இந்தியையும் நமக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் விரட்டியடிக்க நினைக்கிறோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்- இந்த அரசியல் சிலரிடம் இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் சொல் ஒரு சொல் பதிவு அந்த வகை இல்லை. வடமொழியிடமும் இந்தியிடமும் எங்களுக்கு வெறுப்பு எதுவும் இல்லை. 'சொல் ஒரு சொல் - ஏன்?' இடுகையில் மிக விரிவாக இதனைப் பேசியிருக்கிறோம்.

சிற்றுந்து இயந்திர வினைஞர்கள் (Car Mechanics) புழங்கும் சில ஆங்கிலச் சொற்களைத் தந்து அவற்றிற்குத் தமிழ்ச்சொற்களைக் கேட்டிருக்கிறீர்கள். நல்ல பட்டியல். இவற்றிற்கான தமிழ்ச்சொற்களைக் கண்டுபிடித்து அதனைப் புழக்கத்தில் கொண்டுவருவது மிகவும் இன்றியமையாதது. இந்தப் பட்டியலை புதிய கலைச்சொற்களை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள நண்பர்களின் பார்வைக்குக் கொண்டு செல்கிறேன்.

புதிய கலைச்சொற்களைப் பரிந்துரைப்பது ஒன்று; அது புழக்கத்தில் வருவதென்பது வேறொன்று. இதுவரை எத்தனையோ சொற்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் தற்போது புழக்கத்தில் வந்து பெரும்பாலான மக்களுக்குப் புரியும் படியான சொற்களைப் பார்த்தால் - அவை எளிதானவையாக இருக்கும்; எளிதில்லாவிட்டாலும் மீண்டும் மீண்டும் செல்வாக்குள்ளவர்களாலும் மற்றவர்களாலும் புழங்கப்பட்டிருக்கும். அப்படி எளிதான சொற்களாகவும் மீண்டும் மீண்டும் புழங்கப்படுபவைகளாகவும் இந்த புதிய கலைச்சொற்கள் அமைந்துவிட்டால் சிற்றுந்து கைவினைஞர்களும் அவற்றைப் புழங்கத் தொடங்கிவிடுவார்கள். மொழியைப் பற்றிச் சிந்திக்க நேரம் இல்லாத அவர்களைக் கைகாட்டி நாமும் புதிய சொற்களை உருவாக்கித் தரவேண்டிய கற்றவர்களான நம்மைக் கைகாட்டி அவர்களும் ஆங்கிலச் சொற்களையும் வேற்று மொழிச் சொற்களையும் பயன்படுத்தத் தொடங்கினால் விரைவில் ஆங்கிலத்திலிருந்து தான் தமிழ் தோன்றியது என்று சொல்லும் நிலை வரலாம்.

March 02, 2007 6:42 PM
ஆதிசேஷன் said...
தற்போது இருக்கும் தமிழே போதும். தமிழ்படுத்துகிறேன் என்ற பெயரில் கொலை செய்யாமல் இருந்தாலே என் போன்றவர்களுக்கு செளகர்யமாக இருக்கும்.

எஸ்கே அவர்கள் சொல்வது சரியாக இருக்கிறது. வழிமொழிகிறேன்.

March 02, 2007 8:22 PM
குமரன் (Kumaran) said...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.ஆதிசேஷன். கட்டாயம் தமிழ் மட்டுமே போதும் என்பதே எங்கள் எண்ணமும். தமிழ்க்கொலை செய்கின்றவர்களிடம் தான் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம் - தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன; அவற்றைப் பயன்படுத்துவோம் என்று.

March 02, 2007 9:10 PM
SK said...
கோவியாரை விட மிக அதிகமாக..... கூடுதலாக... நீங்கள்தான் தவறாக நான் சொன்னதைப் புரிந்திருக்கிறீர்கள் போலும், குமரன்.

மூலத்தைக் கொஞ்சம் அறிந்த பின்னர் அதனைக் குறை கூற ..."தேவையற்ரது என... சொல்லுங்கள் எனத்தான் கூறியிருக்கிறேன்.

அதனைத் திரித்து, வடமொழியைக் கற்றுக் கொண்டு வாருங்கள் என நான் சொன்னதாக நீங்கள் திரித்துக் கூறியிருப்பது வியப்பையும், வருத்தமும் அளிக்கிறது.

புரிதல் இல்லாத இடத்தில் கருத்து சொல்ல வந்தது என் தவறுதானோ என மனம் அஞ்சுகிறது.

மற்றவர் போல் நானும் பேசாமல் போயிருக்கணும்!
:(

மன்னிக்கவும்.

March 02, 2007 11:02 PM
SP.VR.சுப்பையா said...
குமரன் அவர்களுக்கு,
உங்களுடைய நீண்ட விளக்கத்திற்கு நன்றி!
உங்களுடைய சொல் ஒரு சொல் சேவை
தொடர வாழ்த்துக்கள்

கடந்த 150 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட அபரிதமான
விஞ்ஞான வளர்ச்சியால் நமக்குக் கிடைத்துள்ள
சாதானங்கள் ஏராளம்.
அவை அனைத்துமே நம்து பயன்பாட்டிற்குக்
கிடைத்துள்ளன
அதுபோல வானவியல், ஜோதிடம், கணிதம் போன்ற
துறைகளிலும் ந்மக்குக் கிடைத்துள்ள நூலகள் ஏராளம்

அவற்றையும் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்
அவற்றில் உள்ள சொற்களையும் நாம் பயன்படுத்துவதில்
தவறு இல்லை என்பது என் கருத்து!. என்கருத்து மட்டுமே
அது தவறாகக் கூட இருக்கலாம்

Kochaaram (கோச்சாரம், கோள் சாரம - இன்றைய கிரக நிலைமை)
Television (தொலக்காட்சி)
Mobile Phone (அலைபேசி)
Telephone (தொலைபேசி)
Cinema Theatre (திரையரங்கு)
Cinema (திரைப்படம்)
Computer (கணினி)

என்று நாம் பல சொற்களை தமிழுக்கு மாற்றம் செய்து விட்டோம்
ஆனால் பேச்சுத்தமிழில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது
கவனிக்கப்படவேண்டிய விஷ்யம்

அலோபதி மருந்துகளின் பெயரையெல்லாம் தமிழுக்கும் மாற்றுவது
சாத்தியமா? தேவைதானா? பயன்பாட்டுக்கு கொண்டுவரமுடியுமா?
சற்று யோசிக்கும்படி வேண்டுகிறேன்

March 02, 2007 11:42 PM
ஜீவா (Jeeva Venkataraman) said...
இரண்டு சொற்களையும் பயன்படுத்தலாமே, தவறேதும் தெரியவில்லை. சில சந்தர்ப்பங்களில் எதுகை மோனைக்காகவும் ஒரு குறிப்பிட்ட சொல்லை பயன்படுதுவது உசிதமாய்த் தெரிகிறது. ஒரே பொருள் தரும் பல்வேறு சொற்கள் கற்போம். அவற்றின் சரியான பயன்பாடுகள் கற்போம். வேர்ச் செற்கள் தேடிப்போய், இந்த சொல் பயன்படுத்த வேண்டாம் என்று சொன்னால் மொழியின் வீச்சும் வளமும் குன்றித்தான் போகும்.

எது தமிழ்?
தமிழர் தற்போது பேசும் மொழியே தமிழ். அது இப்படித்தான் என்றில்லாமல் மாறிக்கொண்டே இருக்கும். அந்த நீரோட்டத்தில் எதிர் நீச்சல் போடாமல், இழந்த சொற்களை மீட்டு, வளப்படுத்துதல் நலம்.

சொல் ஒரு சொல் வளம் சேர்க்கட்டும்.

March 03, 2007 6:42 AM
கோவி.கண்ணன் [GK] said...
//சும்மா நச்சுன்னு இருக்கு....

நானும் இனி "உபயோகத்தை" பயன்படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறேன்//

குழலி !
பாராட்டுக்கு நன்றி !

March 03, 2007 7:28 AM
கோவி.கண்ணன் [GK] said...
//சிவபாலன் said...
நல்ல பதிவு!!

மிக எளிமையாக விளக்கியுள்ளீர்கள்..

நிச்சயம் பயனளிக்கும் (உபயோகமாக இருக்கும்) :)

நன்றி
//

சிபா,
நன்றி !

நிச்சயம் பயனளிக்கும் என்று சொல்வதை விட உறுதியாக பயனளிக்கும் என்று சொல்வது மிகப் பொருத்தம் !
:)


பாராட்டுக்கு நன்றி !

March 03, 2007 7:32 AM
கோவி.கண்ணன் [GK] said...
//நாம் இன்னும் நமக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக
சமஸ்கிருதத்தையும், ஹிந்தியையும் விரட்டி அடிப்பதிலேயே
முனைப்பாக இருக்கிறோம்
யோசிக்க வேண்டிய விஷயம்.//

தமிழ்பேசுவது தீட்டு என்றும் சூழ்நிலைவசத்தால் பேசினால் பின்பு குளிக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு தங்கள் கூற விரும்பும் பதில் என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

அடுத்தவீட்டுக் குப்பை நம்வீட்டில் பரவியிருப்பதை நாம் பொருட்படுத்தாமல் தான் இருந்தோம். ஆனால் அடுத்தவீட்டுக்காரர்கள் நம் வீட்டில் குப்பையைப் போட்டுவிட்டு உன்வீட்டில் ஒன்றும் இல்லை என்வீட்டு குப்பைதான் நிறைந்து இருக்கிறது என்று சொன்னால் உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும் ?

நீங்கள் அமைதியானவர் என்று எடுத்துக் கொள்வோம், குப்பையை அள்ளிக் கொட்டிவிட்டு பக்கத்துவீட்டுக் காரான் குப்பையைப் போட்டதுமில்லாமல் அறிவின்றி பேசுகிறான் என்று எண்ணி குப்பையை அள்ளிக் கொட்ட முனைவீர்கள் தானே !

அதைத்தான் செய்து வருகிறோம். ஆனால் பக்கத்துவீட்டுக்காரர் தன் செய்வது சரியே என்றும் எந்த காரணமுமின்றி தன்னை அவமதிப்பதாகவும் கூறினால் அது சரியா ?

நம் வீட்டை தூய்மையாக வைத்து இருக்க நாம் முயல்வதில் பக்கத்து விட்டுக்காராருக்கு இங்கே அவமதிப்ப்பு எங்கே இருக்கிறது ?

உங்களுடைய மற்ற கேள்விகளுக்கு இராமகி ஐயா அவர்களின் பதில் எண்ணற்ற இடுகைகள் இருக்கின்றன. நேரமிருந்தால் அவற்றையும் பார்வை இடுங்கள் !

இன்றைக்கு பேசுவது 95 விழுக்காடு தனித்தமிழ் ...இன்றைய நிலையையும் 50 ஆண்டுகளுக்கு இருந்த நிலையும் ஒப்பிட்டால் 65 விழுக்காடில் இருந்து நாம் அதை அடைந்திருக்கிறோம் என்பதை பல இடங்களில் பல தமிழ் அறிஞர்கள் சொல்லி ஆகிவிட்டது.

இன்னும் ஐந்தே விழுக்காடுதான் மீதம் அதன் இலக்கை அடையும் தொலைவை குறைப்பதற்கு தான் களையெடுப்பை தொடர்ந்து செய்துவருகிறோம்.

நீங்கள் சொல்வது புதிய சொற்களை ஏற்பதுபற்றி... அதுபற்றி வேறெரு பதிவில் பேசலாம். இங்கே குறிப்பாக நான் எழுதும் இடுகைகள் களையெடுப்புதான். எனவே அச்சம் தேவையில்லை.

March 03, 2007 7:51 AM
சுல்தான் said...
எனக்கு உங்களது இநதப் பக்கம் மிகவும் பிடிக்கிறது. தமிழை தமிழாகவே எழுத வேண்டுமென்பதே என் அவா. எனினும் எழுதும் போது நல்ல தமிழ்ச்சொற்கள் கிடைப்பதில்லை. இனியாவது நல்ல தமிழ்ச்சொற்களை கையாள முயற்சிக்கிறேன். தங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது.

March 03, 2007 8:10 AM
இலவசக்கொத்தனார் said...
எனது எல்லைக்குட்பட்டுச் சொல்ல வேண்டுமானால் -

உபயோகம் என்ற வார்த்தையை உபயோகிப்பது எனக்கு கஷ்டமாக இல்லை.

ஓகையார் எல்லைப்படிச் சொல்ல வேண்டுமானால் -

உபயோகம் என்ற சொல்லைப் பாவித்துப் புழங்கி வருவது எனக்குச் சிறிதளவேனும் கடினமாக இல்லை.

சரிதானே ஓகை? :)

March 03, 2007 8:39 AM
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. நீங்கள் சொன்னதை நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். நான் குறைமதியினன் என்பதும் பலர் சொல்வது முதல் தடவையே எனக்குப் புரிவதில்லை என்றும் பல இடங்களில் கண்டிருக்கிறேன். ஆனால் நான் சொல்வதை மீண்டும் மீண்டும் ஒருவர் தவறாகப் புரிந்து கொள்கிறார் என்றால் அதிலும் அப்படி புரிந்து கொள்பவர் நல்ல நண்பரும் பல விதயங்களில் ஒத்த கருத்தினையும் உடையவர் என்றால் நான் சொல்லும் முறையில் கூட ஏதாவது தவறு இருக்கலாம் என்று நான் சிந்திப்பேன்.

உபயோகம் என்ற சொல் தேவையற்றது என்று சொல்லவில்லை. பயன் என்ற அழகான தமிழ்ச்சொல் இருக்க உபயோகம் என்ற வேற்று மொழிச் சொல்லை மிகுதியாகப் பயன்படுத்தத் தேவையில்லை. மூலத்தை அறிந்த பின் பேசுங்கள் என்று சொல்லிவிட்டு தமிழில் புழக்கத்தில் இல்லாத பல வடசொற்களைப் பட்டியலிட்டு பேசினால் அதனை வடமொழியைக் கற்றுக் கொண்டு பின்னர் தமிழைப் பற்றிப் பேசுங்கள் என்று சொன்னதாகத் தான் எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது. அதனைத் திரித்தல் என்றும் புரிதல் இல்லாத இடத்தில் கருத்து சொல்ல வந்தது தவறோ என்றும் வருந்தினால் அடியேனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. தாங்கள் வருத்தம் அடைகிறீர்கள் என்பதால் என் புரிதலைச் சொல்லாமல் விடுவதா? இல்லை நீங்கள் சொல்வது எப்படிப்பட்ட புரிதலைத் தருகிறது என்று நீங்கள் புரிந்து கொள்வதா? எது சரியான செயல் என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் கருத்தைச் சொல்லாமல் விடுவது சரியென்று தோன்றவில்லை.

*

வாத்தியார் ஐயா. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

நீங்கள் சொன்ன கருத்தினில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. ஐயா. அறிவியல் வளர்ச்சியால் நமக்குக் கிடைத்தவற்றையும் அவற்றிலுள்ள சொற்களையும் பல்வேறு கலைத்துறைகளில் உள்ள சொற்களையும் தான் நாம் அவை நமக்கு அறிமுகம் ஆகும் போது புழங்கத் தொடங்குகிறோம் - அதற்குக் காரணம் அவற்றிற்கான தமிழ்ச்சொல் தெரியாததும் இல்லாததும்.

அவற்றை அப்படியே தொடர்ந்து பயன்படுத்தும் போது தமிழில் அந்த கலைகளைப் பற்றி எழுதும் போது தமிழில் அதனைச் சொல்ல முடியவில்லை என்ற குறை தோன்றுகிறது. இன்று அறிவியல் கலைகளைப் பற்றிய நூல்களும் பதிவுகளும் தமிழில் மிகுதியாக வராததற்குக் காரணமாக இது இருக்கிறது. அபிராமி அந்தாதியைப் பற்றி எழுத மிக எளிதாக இருக்கிறது எனக்கு; ஆனால் அறிவியல் கருத்தைச் சொல்ல வேண்டும் என்றால்? தமிழ் அறிவியல் என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவைத் தொடங்கிவிட்டு அதில் எதையும் எழுதாமல் இருப்பதற்குக் காரணம் இது தான். கடினமாக இருக்கிறது. இவற்றிற்குத் தீர்வு என்ன? பலவித முயற்சிகள் இவற்றிற்காக நடக்கின்றன. அவற்றில் ஒன்று சொல் ஒரு சொல். இன்னொன்று தமிழ் விகசனரி. கலைச்சொல்லாக்கத்தில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அது நல்ல தமிழ்த் தொண்டு.

நீங்கள் பட்டியல் இட்டுள்ள சொற்கள் இப்போது எழுத்துத் தமிழில் மிகுதியாக வந்துவிட்டன. எப்போதும் பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் தமிழில் வேறுபாடு இருந்துள்ளது போல் தோன்றுகிறது. அதனால் இந்த வேறுபாட்டை நாமும் இப்போதும் பார்க்கிறோம். ஆனால் எழுத்தில் மீண்டும் மீண்டும் புழங்கும் சொற்கள் பேச்சுத்தமிழில் வரத்தொடங்குவதையும் குறைந்தது அவை என்ன என்று பலருக்கும் புரிவதையும் பார்க்கலாம். அப்படி ஆகும் போது அந்தச் சொல் நிலை பெறுகிறது; அழிவதில்லை.

பேச்சுத்தமிழில் இந்தச் சொற்கள் புழக்கத்தில் வருமா? வரும். எடுத்துக்காட்டாக அண்மையில் தமிழர்களுடன் தொலைபேசும் போதோ நேரில் பேசும் போதோ பேசும் போது வழக்கமாக உபயோகிக்கும் பல ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாகத் தமிழ்ச் சொற்களைப் புழங்க நான் தலைப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கும் அது செயற்கையாகத் தோன்றவில்லை; நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறது. தமிழறிந்தவன் என்ற பெயர் நண்பர்கள் நடுவில் இருப்பதால் அவர்களும் நான் புழங்கும் அச்சொற்களை தாமும் புழங்கத் தலைப்படுகின்றனர்.

எது முடியும் எது முடியாது என்பதை அந்தந்தச் சொல்லைப் பார்க்கும் போது தான் கவனிக்க வேண்டும் ஐயா. சில துறைச் சொற்களைத் தமிழாக்குவது கடினமாக இருக்கும் என்பதால் கடினமல்லாத பிற சொற்களையும் தமிழாக்கம் செய்யாமல் விடுவதா? தேவையா என்ற கேள்விக்கு முடிந்த வரை மேலே விடை சொல்ல முயன்றுள்ளேன். பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியுமா என்ற கேள்விக்கும் மேலே விடை சொல்ல முயன்றுள்ளேன். நீங்கள் கேட்ட கேள்விகளைச் சிந்தித்தது மட்டுமின்றி செயல்களிலும் அவற்றின் விளைவைக் கண்டிருக்கிறேன் ஐயா.

*

ஜீவா. உண்மை. நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். மக்கள் நடுவே நன்கு ஊறிய சொல்லினை அவ்வளவு எளிதில் நீக்க முடியாது; அப்படி நீக்குவதும் முறையில்லை. பயனை மிகுதியாகவும் உபயோகத்தைக் குறைவாகவும் பயன்படுத்தலாம் என்பதே என் கருத்தும்.

எதுகை மோனைக்காக தனித்தமிழ் பேசும் அறிஞர்களும் பிற மொழிச் சொற்களைப் புழங்குவதைக் கண்டிருக்கிறேன்.

இழந்த சொற்களை மீட்டு வளப்படுத்துதல் என்பதே சொல் ஒரு சொல்லின் முதன்மையான குறிக்கோள். நன்றி ஜீவா.

*

கண்ணன் அண்ணா. நீங்கள் சூடாகப் பேசுகிறீர்களா நான் சூடாகப் பேசுகிறேனா தெரியவில்லை. உங்கள் சொற்களில் சூடு கொஞ்சம் மிகுதியாக இருப்பதாகத் தோன்றுகிறது. அமைதி கொள்ளவும்.

*

நன்றி சுல்தான். நீங்கள் சொல்வதை நானும் பலமுறை என்னிடமும் கண்டிருக்கிறேன்.

March 03, 2007 8:50 AM
கோவி.கண்ணன் said...
//கண்ணன் அண்ணா. நீங்கள் சூடாகப் பேசுகிறீர்களா நான் சூடாகப் பேசுகிறேனா தெரியவில்லை. உங்கள் சொற்களில் சூடு கொஞ்சம் மிகுதியாக இருப்பதாகத் தோன்றுகிறது. அமைதி கொள்ளவும். /

சொன்னது புரிந்தது ! சூடெல்லாம் இல்லிங்க குமரன்.

எனக்கு கொஞ்சம் சுரணை எட்டிப்பார்த்து இருந்து இருக்கும் ! அதன் வெளிப்பாட்டான்னு தெரியல
:))

மண்ணிக்க !

March 03, 2007 9:33 AM
இலவசக்கொத்தனார் said...
//மண்ணிக்க !//

இது மன்னிக்க என வரவேண்டும் கண்ணன்.

இன்றைக்கு தனித்தமிழை விட எழுத்துப் பிழைகளே அதிகம் கவலை தரக்கூடிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது.

குறிப்பாக 'ல / ள / ழ', 'ர / ற', 'ண / ன / ந' என்ற எழுத்துக்களில் தெளிவின்மை. இதை எங்கு கண்டாலும் சுட்டிக் காட்டி சரி செய்ய முனைவோமே. அதை அடுத்தவர் குற்றம் சாட்டுகிறோம் என நினைக்காமல் உதவி செய்கிறோம் என நினைக்கும் மனப்பான்மையையும் வளர்க்க முயல்வோம்.

March 03, 2007 10:33 AM
குறும்பன் said...
அருமையான பரிந்துரை கோவி, பாராட்டுக்கள்.

இதனால் என்ன உபயோகம்? என்று நம்மில் பலர் சொல்லுவதன் பொருள் "இதனால் என்ன பயன்?". இது போல் பல இடங்களில் உபயோகம் என்ற சொல்லை பயனுக்கு மாற்றாக புழங்குகிறோம்.

S.K அவர்கள் ஸொல்வது ;-) போல் "ப்ரயோஜனம்" என்ற சொல்லையும் பயனுக்கு மாற்றாக சொல்வதுண்டு.

அதாவது ப்ரயோஜனம், உபயோகம் என்ற இரண்டையும் நம்மில் பலர் பயன் என்ற பொருள் வருகிற இடங்களில் பயன்படுத்துகிறோம்.

/உபயோகம் என்ற வார்த்தையை உபயோகிப்பது எனக்கு கஷ்டமாக இல்லை.
/
பயன் என்ற சொல்லை பயன்படுத்துவது சிரமமாக இல்லாமல் இல்லாமல் இருந்தால் சரி. ;-) .

March 03, 2007 11:30 AM
ரவிசங்கர் said...
கோவி. கண்ணன் -

இந்த இடுகையில் ஏராளமான எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. பதிப்பிக்கும் முன் சரி பார்த்து வெளியிடுவது நன்று. சும்மாவே, தமிழார்வலர்களை நொட்டம் சொல்பவர்கள், இதையே சாக்காக வைத்து, "தமிழே எழுதத் தெரியாமல் எப்படி தமிழ் சொல்லிக் கொடுக்கலாம்" என்று கேள்வி கேட்பர். எழுத்துப்பிழை இல்லாமல் இருப்பது இப்பதிவின் நம்பகத்தன்மைக்கு முக்கியம்.

போன இடுகையிலேயே சொல் ஒரு சொல் ஏன் தேவை என்று விளக்கியாகிவிட்டது. அதை திரும்ப இந்த இடுகையின் தொடக்கத்திலும் விளக்கியது சலிப்பாகவும் திசை திருப்ப விரும்புபவர்களுக்கு வாய்ப்பாகவும் போய் விட்டது.

சொல் ஒரு சொல் குழுவுக்கு -

இனி வரும் இடுகைகளில் பிற மொழி சொல் - அதற்கு ஈடான ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொல் - மேற்கோள்கள் என்ற தெளிவான கட்டமைப்பில் இருந்தால் மறுமொழிகளின் திசை மாறாது. ஏற்கனவே, புழக்கத்தில் உள்ள சொற்களை முன்னிறுத்துகிறீர்கள் என்ற தெளிவான அணுகுமுறையுடன் நீங்கள் செயற்படுவது அவசியம். இல்லாவிட்டாலும், ஒவ்வொரு இடுகையிலும் "அதுக்கு என்ன தமிழ்ல, இதுக்கு என்ன தமிழ்ல" என்று குழப்ப நிறைய ஆட்கள் வருவார்கள். உங்கள் குழுவின் ஆற்றல் வீணாக மறுமொழிகளில் கழியும். பல இடுகைகளில் குழுவினரின் தமிழ்ப் பயன்பாட்டு நிலைப்பாட்டை திரும்பத் திரும்ப சொல்லி நேரம் வீணாகிறது. பேசாமல் சுருக்கமாக இப்படி குழப்புபவர்களுக்கு எல்லாம் சொல் ஒரு சொல் ஏன் இடுகைக்கு இணைப்பு தந்து ஒதுங்கிக் கொண்டு உங்கள் வேலையில் கண்ணாய் இருப்பது உங்கள் வினைத்திறத்தை கூட்டும்.

தமிழின் அழகை இயம்புவதை முன்னிறுத்தி பிற மொழிகளை சாடுவது போல் வரும் தொனியை குறைப்பது மறுமொழிகள் திசை மாறாமல் இருக்க உதவும்.

SK - பிற மொழி வேரை ஆராய்வது இப்பதிவின் நோக்கம் அன்று. உபயோகம் என்பதற்கு மூலப்பொருள் என்னவாக இருந்தாலும் தமிழில் அது பயன் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்படுகிறது. அதைத் தான் சுட்டிகாட்டி இருக்கிறார்கள். cycle என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சுழற்சி என்று பொருள். ஆனால், அது தமிழகத்தில் பயன்படுத்தப்படும் வழக்ககுக்கு ஏற்பத் தான இணையான தமிழ்ச் சொல்லை சுட்ட முடியும்? cycleஐ சக்கரம், சுழற்சி என்றா மொழி பெயர்க்க முடியும்.

தமிழ்ச் சொற்கள் அறிய விரும்புபவர்கள் மட்டும் இப்பதிவுக்கு வந்து தெளிந்து செல்வது நன்று. இதில் விருப்பம், உடன்பாடு இல்லாதவர்கள் இடுகைக்கு இடுகை வந்து குழப்பவும் வேண்டாம். அந்த மறுமொழிகளை பதிப்பித்து குழுவினரும் தங்கள் ஆற்றலை வீணாக்க வேண்டாம்.

March 03, 2007 11:38 AM
ஞாயிறு said...
கணினியை முதலில் அனைவரும் கம்ப்யூட்டர் என்றே எழுதி வந்தனர். இன்றும் பலருக்கும் கம்ப்யூட்டர் என்று சொன்னால்தான் புரியும்.
ஆனால் இது போன்ற வேற்றுமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துவதைவிட தமிழ் வேர் கொண்ட சொற்களை ஆக்கி பயன்படுத்துவதால் பின்னர் அது தொடர்பான பிற சொற்களையும் ஆக்குவது எளிதாகிறது. கணினியையே எடுத்துக்கொள்வோம். அதை முதலில் தமிழார்வலர்கள் பயன்படுத்தத் தொடங்கியபோது பலரும், இப்பொழுது இங்கு பலரும் சொல்வதைபோலவே, "எதற்கு புழக்கத்தில் இருக்கும் சொற்களை மாற்றுகிறார்கள்? கம்ப்யூட்டரை எல்லோருக்கும் தெரிந்த கம்ப்யூட்டர் என்றே சொல்லலாமே?" என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், இன்றோ கணினி என்ற சொல்லை ஆக்கியதன் பயனாக பல கணினி சார்ந்த சொற்களையும் தமிழில் அழகாக சொல்ல முடிகிறது. கணி என்ற வேருக்குள் புதிய பொருள்களைப் புகுத்தி விட்டார்கள். கணிமை என்கிறார்கள். இன்னும் அழகழகாக பல சொற்களை ஆக்கியிருக்கிறார்கள். இவையெல்லாம், வேற்றுமொழிச் சொல்லை அப்படியே பயன்படுத்துவதால் வாய்க்குமா?

மேலும் பேச்சுத்தமிழ் உடனடியாக மாறும் என்று எதிர்பார்க்க முடியாது. எழுதுதமிழில் நிகழும் போக்குகள் மெல்ல பேச்சுத்தமிழை மாற்றிக்கொண்டுதானிருக்கின்றன. பழைய தமிழ்ப் படங்களையும், இன்றைய பேச்சுத்தமிழையும் ஒப்பிடுங்கள். எத்தனையோ சொற்கள் நல்லதமிழுக்கு மாறியிருக்கின்றன.
பாசை -- மொழி
பழைய படங்களில் பேசப்படும் பல சமசுகிருதச் சொற்கள் இன்று என்னால் புரிந்து கொள்ளக்கூட முடியாதனவாகிவிட்டன.

மாற்றம் ஒன்றே மாறாதது.

"வேற்றுமொழி சொற்களை முனைப்புடன் நேரமிட்டு கற்றுக்கொள்வார்களாம்; ஆனால் தமிழ் மொழியில் சொற்களை ஆக்கினால் "நான் தமிழன்; எனக்கே இது புரியவில்லை; அதனால் இது தமிழ்ச் சொல்லே அல்ல; தனித்தமிழ் என்பது பிற்போக்குத்தனம்" என்று கூறும் கற்றோரின் அறியாமை அகல வேண்டும்.

March 03, 2007 12:09 PM
ஞாயிறு said...
இந்தக்குழுவில் நான் பங்களிக்க விரும்புகிறேன். என்னையும் சேர்த்துக்கொண்டால் மகிழ்ச்சி.

நன்றி.

March 03, 2007 12:10 PM
ஓகை said...
தமிழின் சொற்கள் பயன்பாடில்லாமலிருக்க அவ்விடங்களில் மற்ற சொற்கள் பயன்படுத்தப் படுவது உடன்பாடாக இல்லை என்பது சொல் ஒரு சொல் பதிவின் நோக்கங்களின் ஒன்று. அவ்வகையில் உபயோகம் என்ற இடங்களில் பயன்பாடு என்ற சொல்லைப் பயன்படுத்துமாறு சொல்வது எவ்வகையில் தவறாகும்?

உபயோகம் என்ற சொல் வினைச்சொல் முதல்நிலையாகவும் பயன்படுகிறது. ஆனால் பயன் என்பது பெயர்ச்சொல்லாக மட்டுமே இருப்பதால் பயனிக்கலாம் என்று பயன்படுத்தமுடிவதில்லை. இதற்கு தமிழில் இணையான சொல் பாவித்தல் என்பது. இலங்கை மற்றும் மலேசியாவில் இன்றும் இச்சொல்லே உபயோகித்தல் என்ற வினைச்சொல்லுக்கு பயன்படுவதை உணரலாம்.

March 03, 2007 12:29 PM
ஓகை said...
// ஓகையார் எல்லைப்படிச் சொல்ல வேண்டுமானால் -

உபயோகம் என்ற சொல்லைப் பாவித்துப் புழங்கி வருவது எனக்குச் சிறிதளவேனும் கடினமாக இல்லை.

சரிதானே ஓகை? :)

இல்லை கொத்தனாரே! என் எல்லைக்குள் உபயோகத்தின் பயன்பாடு விலக்கப்பட்டிருக்கிறது. எப்போதாவது ஊடுறுவல் நடக்கலாம். கவனித்தவுடன் பாய்ந்தோடி விலகிவிடும்.

March 03, 2007 12:36 PM
ஓகை said...
// carburator, Oil sump, Steering wheel, Gear Box, Radiator - இதையெல்லாம் சாதாரண மொழியறிவில்லாத
Car Mechanic எப்ப்டிச் சொல்கிறார் அல்லது எப்படிச்
சொல்ல வேண்டும் சொல்லுங்கள்! //

இது போல் கிடுக்கிப்பிடி போடும் விதமான கேள்விகளக் கேட்க உங்களுக்கு எத்தனை ஆங்கிலச் சொற்கள் வேண்டும்? இவை மட்டுமா? ஆயிரமாயிரம் சொற்கள் இருக்கின்றனவே! சென்ற பதிவில் drill bit என்று இன்று பயன்படும் சொல்லுக்கு அலகு என்ற சொல் பயன்பாட்டிலிருந்தது என்று சொல்லியிருக்கிறேன். உங்கள் வயதை நோக்கும்போது நீங்களும் இந்த சொல் பயன்பாட்டிலிருந்ததை அறிந்திருக்கலாம். இது போன்று வழக்கொழிந்த சொற்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டுமென்பது இப்பதிவின் நோக்கங்களில் ஒன்று. மலேசியாவில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றை எண்ணெய் என்றே சொல்கிறார்கள். நாம் என்ன சொல்லலாம் என்று நீங்களே சொல்லுங்கள்?

நீங்கள் குறிப்பிட்ட மெக்கனிக் சென்ற தலைமுறையில் திருப்புளி, மூக்கொறடு, சுத்தி என்று சொன்னவற்றையெல்லாம் இன்று screw driver, nose plyer, hammer என்றுதானே சொல்கிறார். இது உங்களுக்கு பரவாயில்லையா? எனக்கு இல்லை. carburator, Oil sump, Steering wheel, Gear Box, Radiator இவற்றையெல்லாம் இப்படியே சொன்னாலும் பரவாயில்லை, சுத்தியலை hammer என்று சொல்ல வேண்டாம்.

March 03, 2007 12:57 PM
ஓகை said...
// புரிதல் இல்லாத இடத்தில் கருத்து சொல்ல வந்தது என் தவறுதானோ என மனம் அஞ்சுகிறது.//

புரிதல் இல்லாத இடம் என்று நீங்கள் நினைக்கும் இடத்தில் உங்களுக்கு அன்பானவர்கள் இருக்கும் போது கட்டாயம் கருத்து சொல்ல வரவேண்டுமென்று மனம் கெஞ்சவில்லையா?

// மற்றவர் போல் நானும் பேசாமல் போயிருக்கணும்! :( //

மற்றவர்? யாரவர்?

March 03, 2007 1:05 PM
SK said...
This post has been removed by the author.
March 03, 2007 1:14 PM
குமரன் (Kumaran) said...
//அடஎன்னங்க கொத்தன்னரே!
இவ்வளவு பெரிய தமிழறிஞரைக் குறைத்துக் கூற உங்களுக்கு எப்ப்டி மனது வந்தது!
//

எஸ்.கே. அப்படியே கொத்தனாருக்கும் கொத்தன்னருக்கும் வேறுபாடு என்ன என்று சொன்னீர்கள் என்றால் நன்று. :-) கொத்து அன்னவர் - குண்டானவர் - குண்டர் என்று கொத்தனாரைத் திட்டுகிறீர்களோ? :-)

இதுவும் தவறான புரிதலோ? பெரும் தமிழறிஞரான தாங்கள் சாபம் இடாமல் கிண்டல் மட்டுமே செய்கிறீர்களோ? உங்களைக் குறை கூறவில்லை; அதற்கு எனக்கெல்லாம் தகுதி இல்லை. :-)

March 03, 2007 3:29 PM
SK said...
This post has been removed by the author.
March 03, 2007 3:51 PM
இலவசக்கொத்தனார் said...
//இந்த இடுகையில் ஏராளமான எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. பதிப்பிக்கும் முன் சரி பார்த்து வெளியிடுவது நன்று. சும்மாவே, தமிழார்வலர்களை நொட்டம் சொல்பவர்கள், இதையே சாக்காக வைத்து, "தமிழே எழுதத் தெரியாமல் எப்படி தமிழ் சொல்லிக் கொடுக்கலாம்" என்று கேள்வி கேட்பர். எழுத்துப்பிழை இல்லாமல் இருப்பது இப்பதிவின் நம்பகத்தன்மைக்கு முக்கியம்.//

எழுத்துப்பிழைகளைப் பற்றி நான் குறிப்பிட்டு இருப்பதால் ரவிசங்கர் அவர்கள் இவ்வாறு தொடங்கி எழுதி இருக்கும் நீண்ட பின்னூட்டம் என்னை (என்னை மட்டுமே/ என்னையும்) குறிக்கிறதோ என்ற ஐயம் எழுந்ததால் ஒரு தன்னிலை விளக்கம்.

எழுத்துப் பிழை இல்லாமல் எழுதப் பழக வேண்டும். அது இங்கு மட்டுமல்ல எல்லா இடங்களிலும். இதன் காரணமாக இன்று நம்மிடையே பல சொற்களை தவறாக உச்சரிப்பதையும் காண்கிறோம். ஆகையால் எழுத்துப் பிழையை சுட்டிக்காட்டி அதனை தவிர்க்க முயல்வோம் எனத்தான் சொல்லி இருக்கிறேனே தவிர அது இல்லாமல் எழுதுபவர்கள்தான் தமிழ்ச் சொல்லித் தர முன் வர வேண்டும் என்ற கருத்தை நான் எங்கும் முன் வைக்கவில்லை. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டாவது மாற்று கருத்து இருப்பவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் சிலரிடையே ரவிசங்கர் இருப்பதாக நான் எண்ணவில்லை. அது அவரின் எண்ணம் இல்லை என்றால் எனக்கு மகிழ்ச்சியே. "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்னும் குறள் எனக்கும் தெரியும். படித்தவுடன் விளக்கம் அளிக்கத் தோன்றியது அதனால்தான் இந்த விளக்கமும்.

இரண்டாவது ஒரு கருத்துக்கு தமிழில் பல சொற்கள் இருந்தால் அவையனைத்தையும் பல இடங்களில் மாறி மாறி பாவிப்பதால் நம்முடைய சொற்குவையின் வளம் பெருகும். அதற்காக இந்த பதிவை தொடர்ந்து படித்து வருபவன் நான். உபயோகம் எனச் சொல்ல வரும் பொழுது பயன் என்ற சொல்லும் இருக்கிறது, அதனையும் பயன்படுத்துங்கள் எனச் சொன்னால் ஒரு பொருள் வரும்படியாக இரண்டு சொற்கள் கிடைக்கின்றன. அதை விடுத்து இது தமிழ் இது தமிழில்லை என எல்லைக் கோடுகள் வரைவதில் எனக்கு உடன்பாடில்லை.

ஆனால் இன்று புழக்கத்தில் இருந்து எல்லோராலும் புரிந்து கொள்ள முடிந்த சராசரி மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய (பாத்தீங்களா, நானும் பயன் என்பதை உபயோகப்படுத்துகிறேன்!) சொற்களை இது தமிழ், இது தமிழ் இல்லை. இப்படி தமிழ் இல்லாத வார்த்தைகளை பயன் படுத்தக்கூடாது. மீறி பயன் படுத்துபவன் தமிழ்த் துரோகி என்பது போன்ற ஒரு போக்கு வருவது என்னால் ஒத்துக் கொள்ள முடியாத ஒன்று. அது மேலும் மேலும் பல இடங்களில் ஓங்கி ஒலிக்கிறது. அது இப்பொழுது இங்கும் கேட்க தொடங்கி இருப்பது எனக்கு வருத்தத்தை அளிப்பதால்தான் அயராது மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கிறேன்.

//இதில் விருப்பம், உடன்பாடு இல்லாதவர்கள் இடுகைக்கு இடுகை வந்து குழப்பவும் வேண்டாம். அந்த மறுமொழிகளை பதிப்பித்து குழுவினரும் தங்கள் ஆற்றலை வீணாக்க வேண்டாம்.//

ரவி சொல்லி இருப்பது போல இந்த கருத்துக்களை வெளியிடுவதும் வெளியிடாமல் இருப்பதும் முற்றிலும் உங்கள் சுதந்திரம். இது வரை வெளியிடப்படுவதால்தான் இது குறித்து இரு வகை கருத்துக்களும் வெளியிடும் ஆர்வம் உங்களிடையே இருக்கிறது என தொடர்ந்து வருகிறேன். அது தங்கள் ஆற்றலை வீணாக்குகிறது எனச் சொல்லுங்கள், இனி வந்து படித்துவிட்டு மட்டுமே செல்கிறேன். ஆனால் வந்து படிக்கவும் வேண்டாம் என ரவிசங்கர் கூடச் சொல்ல மாட்டார் என்றே நம்புகிறேன்.

அதே போல் இன்று அதிகார பூர்வமாக, பள்ளிகளில் பாடமாக சொல்லித் தரப்படக்கூடிய கிரந்த எழுத்துக்களை தவிர்க்க வேண்டும் என்ற கருத்தும் எனக்கு ஒவ்வாத ஒன்று. அது பற்றிதான் நான் போன இடுகையில் எனது கருத்துக்களை சொன்னேன்.

எஸ்.கே. அவர்களுக்கும் இந்த வருத்தம் இருக்கிறது, அதுதான் அவரது கிண்டல் கலந்த பின்னூட்டங்களாக வெளிவருகிறது என நினைக்கிறேன். அதன் பின் உள்ள வருத்தத்தை புரிந்து கொள்ளாமல் அவருக்கு முன் வைக்கப்படும் பதில்கள் அயர்ச்சியையே உண்டாக்குகின்றன.

குமரன் / கண்ணன், இந்த நீண்ண்ண்ட தன்னிலை விளக்கப் பின்னூட்டத்தை இந்த பதிவில் எழுதியதற்கு என்னை மன்னிக்கவும்.

March 03, 2007 4:27 PM
குமரன் (Kumaran) said...
//மன்னிக்க என்றால் உங்கள் மன்னிப்பைக் கோருகிறார்
மாண்ணிக்க என்றால் மண்ணோடு நீங்கள் போகக் கடவது எனச் சாபம் இடுகிறார்!
//

எஸ்.கே. ஐயா. அடியேன் கும்மியடிக்கிறேன் என்றால் தாங்கள் செய்தது என்னவோ? ஏதாவது சொன்னால் சினந்து கொண்டுவிடுகிறீர்கள். எழுத்துப்பிழைகளும் தட்டச்சுப்பிழைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரி தானே ஆகிறது? மண்ணிக்க என்று கோவி.கண்ணன் சொன்னதை மாண்ணிக்க என்று தட்டச்சுப்பிழை நீங்கள் செய்தீர்கள். அதோடு புது விளக்கம் தந்து கும்மியடித்தீர்கள். உங்கள் பிழைகளைச் சுட்டிக் காட்டினால் அதனை கும்மி என்கிறீர்கள். மண்ணிக்க என்று எழுத்துபிழையோடு எழுதியவரை 'பெரிய தமிழறிஞர்' என்று கிண்டல் செய்வது கும்மியடித்தலில் சேராதா? அதே கிண்டலை நான் உங்கள் பக்கம் நீங்கள் செய்த தட்டச்சுப்பிழையை வைத்துத் திருப்பினால் 'இங்கே பேச வந்தது தவறு' என்று சினந்து கொள்கிறீர்கள்.

உங்கள் பின்னூட்டத்தை 'பசங்களா. முதல்ல தப்பில்லாம எழுத்துப்பிழை இல்லாமல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் மாற்றுச் சொல்லைப் பரிந்துரை செய்யத் தகுதியில்லை' என்று புரிந்து கொள்ளலாமா கூடாதா? அதனையே அப்படியே 'ஐயா. நீங்களும் முதலில் தப்பில்லாமல் தட்டச்சிடக் கற்றுக் கொள்ளுங்கள். தட்டச்சுப்பிழை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அது எழுத்துப்பிழையாகத் தான் முடிகிறது. ஒரு நாலு வரி எழுதுவதற்குள் இரண்டு தட்டச்சுப் பிழைகளை எழுத்துப்பிழைகளாக இட்டுவிட்டு மற்றவரை தமிழறிஞர் என்று ஏன் கிண்டல் செய்கிறீர்கள்?' என்று கேட்டால் மேலும் சினந்து கொள்வீர்கள்.

கொத்தனார் சொன்னது போல் எழுத்துப்பிழைகளைச் சொன்னால் நட்புணர்வோடு எடுத்துக் கொள்ள முயல்கிறோம். ஆனால் அதற்கு வரும் பின்னூட்டம் அப்படி இருக்க வேண்டும். இல்லையேல் நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்வதே நடக்கும்.

நானும் சிரிப்பான் இட்டுவிடுகிறேன். எதற்கு வம்பு?

:-))))

March 03, 2007 4:27 PM
இலவசக்கொத்தனார் said...
ஓகை,

//அவ்வகையில் உபயோகம் என்ற இடங்களில் பயன்பாடு என்ற சொல்லைப் பயன்படுத்துமாறு சொல்வது எவ்வகையில் தவறாகும்? //

அதை விடுத்து இதனை மட்டுமே பயன் படுத்துங்கள் என்ற உங்கள் நிலையில்தான் எனக்கு சம்மதமில்லை. இரண்டுமே உங்கள் சொற்குவையில் இருக்கட்டுமே.

Vocabulary என்ற பதத்திற்கு தமிழில் என்னவென்று இதுவரை தெரியவில்லை. அதற்கு போன இடுகையில் சொற்குவை என முன்வைக்கப்பட்ட உடன் அதனையே பயன்படுத்துகிறேன். இது போல் தமிழில் தெரியவராத சொற்களை வெளி கொண்டு வரவேண்டும் என்பதே எனது விருப்பம்.

//// ஓகையார் எல்லைப்படிச் சொல்ல வேண்டுமானால் -

உபயோகம் என்ற சொல்லைப் பாவித்துப் புழங்கி வருவது எனக்குச் சிறிதளவேனும் கடினமாக இல்லை.

சரிதானே ஓகை? :)

இல்லை கொத்தனாரே! என் எல்லைக்குள் உபயோகத்தின் பயன்பாடு விலக்கப்பட்டிருக்கிறது. //

அது தெரியும் ஓகை!! :)

நான் சொல்ல வந்தது "ஓகையார் எல்லைப்படி என் கருத்தைச் சொல்ல வேண்டுமானால்" என இருக்க வேண்டும். (உபயோகம், கஷ்டம் என்ற சொற்களை விடுத்துச் சொல்ல முயன்றேன்.) :)

March 03, 2007 4:34 PM
குமரன் (Kumaran) said...
தற்போதைக்குப் பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டிருக்கிறது. நண்பர்கள் மன வருத்தங்கள் இருந்தால் அவற்றை விடுத்துக் கொஞ்சம் நேரம் பொறுத்திருக்க வேண்டுகிறேன். விரைவில் விளக்கமான பின்னூட்டம் இடுகிறேன். அதில் உங்கள் மன வருத்தங்கள் நீங்கும் என்று நினைக்கிறேன்.

March 03, 2007 4:40 PM
குமரன் (Kumaran) said...
கருத்துகளில் வேறுபாடுகளும் அந்தக் கருத்துகள் சொல்லும் முறையில் வேறுபாடுகளும் எல்லாருக்கும் இருக்கின்றன. 'சொல் ஒரு சொல்' பதிவில் எழுதும் அன்பர்கள் இடையிலும் அது உண்டு. அவர்கள் எழுதுவதில் - என்ன எழுதுகிறார்கள், எப்படி எழுதுகிறார்கள் - என்பதில் ஓரளவு தான் வரையறை செய்ய முடியும். என் எழுத்துகளில் என் கருத்துகள் 'தமிழில் இருக்கும் பழைய சொற்களை மீட்டு வருவது, புதிய சொற்களை அறிமுகப்படுத்துவது' என்ற வரையறைக்குள் ஆனால் என் சொந்த நடையில் அமைந்திருக்கும். இராகவன், கண்ணன் - இருவரின் கருத்துகள் அதே வரையறைக்குள் அவரவர் சொந்த நடையில் அமைந்திருக்கும். ஓகையாரும் ஞானவெட்டியான் ஐயாவும் இன்னும் இந்தப் பதிவில் இடுகைகள் இடவில்லை. அவர்கள் இடும்போது அவர்கள் கருத்தும் அவர்கள் நடையிலேயே இருக்கும். அப்படி அவரவர் நடையில் எழுதும் போது அவர்களின் கருத்துச் சார்புகள் வெளிப்படும். என் கருத்துச் சார்புடைய இடுகைகள் வரும் வரை அவற்றை ஏற்றுக் கொண்டு மாற்றுக் கருத்துடைய இடுகைகள் வந்தால் அதனால் துணுக்குறுதல் எனக்கும் இயற்கை. அதே எதிர்வினையை நண்பர்களும் செய்திருக்கலாம். ஆனால் 'சொல் ஒரு சொல்' ஒரு குழுப்பதிவு என்ற முறையில் இப்படி வெவ்வேறு கருத்துச் சார்புடைய இடுகைகள் வரத்தான் செய்யும் என்பதை உணர்ந்து அதனை எடுத்துச் சொல்லவும் விரும்புகிறேன். முடிந்த வரை தம் கருத்துச் சார்பினைத் தவிர்த்து எழுத முயற்சிக்கலாம்; ஆனால் அது இயற்கையாக இருக்காது என்பதால் முழுதும் தடுத்து நிறுத்தவும் இயலாது. அந்த வகையில் என் கருத்துச் சார்பிற்கு எதிரான கருத்துச் சார்பு என்று நான் நினைக்கிற இடுகைகளும் 'சொல் ஒரு சொல்'லில் வரலாம்.

அப்படி கருத்துச் சார்புடைய இடுகைகள் வரும் போது அவற்றிற்கு எதிர்வினைகள் வரத்தான் செய்யும் என்பதும் உண்மை. நட்புணர்வுடன் வரும் எதிர்வினைகள் என்றே அவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த எதிர்வினைகளின் கருத்துச் சார்பைக் கண்டு கொள்ளாமல் இருப்பது இயலாதது. அந்தக் கருத்திற்கு எதிர் கருத்தைச் சொல்லும் போது முடிந்த வரை இயல்பான நடையில் குறியீடுகளையும் தேவையில்லாத உவமைகளையும் நீக்கிப் பதில் உரைக்க முயலலாம். நானும் முயல்கிறேன்.

இரவிசங்கர் மிக அருமையான கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அந்த அறிவுரைகளைப் படித்த போது மனம் மகிழ்வுற்றது. மிக்க நன்றி இரவிசங்கர்.

இடுகைகளில் எழுத்துப்பிழைகள் நிறைய இருந்தால் அது பதிவின் நம்பகத்தன்மைக்கே வேட்டு வைக்கும் என்பது உண்மை. சொல்லாமல் விட்டிருப்பர் சிலர். சொன்னவர் சிலர். சொன்னவர்களின் பின்னூட்டங்கள் அதனை நன்றாகச் சொல்கின்றன. இந்தப் பதிவின் நம்பகத் தன்மைக்கு இழுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் எழுத்துப்பிழைகளும் தட்டச்சுப் பிழைகளும் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் முதன்மையானது.

படிப்பவர்களின் மன நிலையை இரவிசங்கர் மிக நன்றாக அடுத்தப் பத்தியில் சொல்லிவிட்டார். போன இடுகை என்னுடையது; இந்த இடுகை கண்ணனுடையது என்ற வேறுபாட்டை விட இரண்டுமே இந்தப் பதிவில் வந்தவை; பதிவின் நோக்கத்தை ஏற்கனவே சொல்லியாகிவிட்டது; அதனை ஏன் மீண்டும் வலியுறுத்துகிறார்கள் என்ற சலிப்பு படிப்பவர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது; அது மட்டும் இன்றி போன பதிவில் தங்களது மாற்றுக் கருத்துகளைத் தெள்ளத் தெளிவாகச் சொன்ன நண்பர்களும் மீண்டும் இந்த இடுகையில் திரும்ப கருத்துகள் சொன்னவுடன் தங்கள் மாற்றுக் கருத்துகளைச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

மறுமொழிகளின் திசை மாறாமல் இருக்க இரவிசங்கர் சொன்ன அறிவுரைகளை அப்படியே நான் பின்பற்ற எண்ணியிருக்கிறேன்; அதனை பதிவின் மற்ற பதிவர்களுக்கும் பரிந்துரை செய்கிறேன். தமிழின் பெருமை பேசுவோம். வேற்று மொழிகளை சாடுவது போல் வரும் தொனிகளையும் நீக்குவோம். எங்கே எப்படி என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியாது. ஊகங்களின் அடிப்படையிலும் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையிலும் பல விதமான கருத்துகள் 'இப்படி நடந்திருக்கலாம். அப்படி நடந்திருக்கலாம்' என்று சொல்லப்படுகின்றன. ஆனால் அவை யாவுமே முழு உண்மையைக் கூறுவதாகக் கொள்ள முடியாது. ஒரு குடும்பத்திற்குள்ளேயே உண்மையில் என்ன நடந்தது என்று சொல்ல முடியாத போது பல நூறு ஆண்டுகளாக என்ன நடந்தது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அவரவர் நம்பிக்கைக்கும் புரிதலுக்கும் ஏற்றக் கருத்துகளை ஏற்றுக் கொள்வோம். ஆனால் அது மற்றவர் கருத்தினைத் தாக்குவதாக இந்தப் பதிவில் அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்வோம். நம் தனிப் பதிவுகளில் நம் கருத்துச் சார்புடைய இடுகைகள் இடுவோம்.

மறுமொழிகளில் வரும் எதிர்வினைகளை எதிர் கொண்டு ஏற்ற பதில்கள் சொல்வது தவிர்க்க முடியாதது. இந்த இடுகைக்கு வந்த ஒரே ஒரு பின்னூட்டம் மட்டுமே அழிக்கப்பட்டது. அது அப்பட்டமான திசை திருப்பலாக இருந்ததால். மற்ற பின்னூட்டங்கள் எல்லாம் அனுமதிக்கப்பட்டன. ஆனால் இரவிசங்கர் சொன்னது போல் இடுகைகள் அமைந்திருந்தால் மறுமொழிகளில் மாற்றுக் கருத்துகளைச் சொல்ல வேண்டிய கட்டாயம் நண்பர்களுக்கு ஏற்பட்டிருக்காது; அப்போது மறுமொழி சொல்லும் கட்டாயமும் குழுவினருக்கு ஏற்பட்டிருக்காது. இதனால் நேர வீணானது குழுவினருக்கு மட்டுமின்றி மாற்றுக் கருத்துகள் சொன்ன நண்பர்களுக்கும் தான். இதனைத் தவிர்க்கவும் கொஞ்சம் விழிப்பாக இருப்போம்.

மாற்றுக் கருத்துகள் என்ன அவ்வளவு கெட்டவையா? அவை இந்தப் பதிவில் வரவே கூடாதா? என்றால் மேலே அதற்கும் பதில் சொல்லியிருக்கிறேன். அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சிலவற்றை நம்புகிறோம். மற்றவர்கள் நாம் அறிந்த அளவு அறியவில்லை என்று கூட நம்புகிறோம். இந்த இடுகையில் வந்த கருத்துகள் (நான், கோவி.கண்ணன், எஸ்.கே., வாத்தியார் ஐயா என்று எல்லோருடைய கருத்துகளும்) அதனைத் தெளிவாகச் சொல்கின்றன. இந்த கருத்து விவாதத்திற்கு முடிவே இல்லை. புதிய புதிய கோணங்களில் கருத்துகள் வெளிவரலாம். ஆனால் விவாதம் முடிவுறப் போவதில்லை. ஏனெனில் முழு உண்மை என்பது அறிய முடியாததாக இருக்கிறது. அதனால் அவற்றில் நேரத்தைக் கழிப்பதைவிட நம் குழுவின் நோக்கத்தை ஒரு கட்டமைப்பிற்குள் நிறைவேற்றுவது சிறந்தது. விவாதம் செய்ய வேண்டும் என்று விரும்பினால் நம் தனிப்பதிவுகள் இருக்கின்றன.

*

கோவி.கண்ணன் அண்ணா. நீங்கள் அறியாமல் எழுத்துப்பிழையாக மண்ணிக்க என்று எழுதினீர்களோ இல்லை தட்டச்சுப் பிழையாக அப்படி வந்ததோ தெரியாது. ஆனால் எழுத்துப்பிழை நீக்கி எழுத நீங்களும் நானும் மற்ற குழுவினரும் முயற்சி செய்ய வேண்டும். நம்மில் யாரும் தமிழறிஞர்கள் இல்லை. பல சொற்களுக்கு என்னால் பொருள் சொல்ல இயலாது. ஆனால் அதே நேரத்தில் இந்தப் பதிவில் இடுகைகள் இடுவது நம் ஆர்வத்தின் காரணமாக. அந்த ஆர்வத்திற்கு எழுத்துப்பிழைகளோ சொற்பிழைகளோ தடையாக வந்துவிடாமல் பார்த்துக் கொள்வோம்.

*

கொத்ஸ், எனக்கு எழுத்துப்பிழைகளும் கவலை தருகின்றன. தமிழ்ப்பயிற்சி எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதை அது காட்டுகிறது. போன இடுகையிலும் எழுத்துப்பிழைகள் பற்றிய பேச்சு வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் சொன்னதைப் போல் நட்புணர்வுடன் சுட்டிக் காட்டுவோம். நீங்களும் நானும் எஸ்.கே.யும் 'எழுத்துப்பிழை' என்ற பெயரில் பின்னூட்டம் இட்டுக் கொண்டிருந்த நண்பரும் (யாரவர்?) இன்னும் பலரும் தொடர்ந்து செய்யலாம்.

*

நன்றி குறும்பன். உபயோகம், பிரயோசனம் மட்டும் இல்லாமல் பலன் என்ற சொல்லிற்கும் சில நேரம் நான் பயன் என்றச் சொல்லைப் பாவித்திருக்கிறேன். பலன் என்பது வடசொல் இல்லை என்பது தான் என் எண்ணம்; ஆனாலும் உறுதியாகத் தெரியவில்லை. பழம் பலம் என்று வடமொழியில் மாறி மீண்டும் தமிழுக்கு பலன் என்று வந்ததோ என்ற ஐயம் உண்டு.

*

ஞாயிறு, தங்கள் கருத்துகளுக்கு நன்றி. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்களும் இந்தக் குழுவில் பங்களிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறீர்கள். நண்பர்களுடன் பேசிவிட்டு விரைவில் அழைப்பை அனுப்புகிறோம்.

*

தங்கள் கருத்துகளை நன்கு எடுத்து வைத்ததற்கு நன்றி ஓகை ஐயா. அடுத்த இடுகை உங்களுடையதா?

*

கொத்ஸ்.

இரவிசங்கர் சொன்னது பொதுவானதே என்பது என் எண்ணம். உங்களையோ எஸ்.கே.வையோ மட்டும் வைத்து இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் எழுத்துப்பிழைகள் இருந்தால் இரவிசங்கர் சொன்னது போல் நடக்கும் என்பது உறுதி.

தங்கள் கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். இது தமிழ்; இது தமிழில்லை என்று சொல்வதே அந்த விழிப்புணர்ச்சியை உண்டாக்கத் தான். மற்றபடி அந்த விழிப்புணர்வால் 'உபயோகம்' போன்ற சொற்கள உபயோகிக்கப் படாமல் போய்விடும் என்று எண்ணவில்லை. ஏற்கனவே சொன்னது போல் தனித் தமிழ் விரும்புபவர்களே பழக்கத்தின் காரணமாகவும் சில இடங்களில் எதுகை மோனை போன்ற காரணங்களுக்காகவும் வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தும் போது மற்றவர்கள் அவ்வளவு விரைவில் வேற்று மொழிச் சொற்களை மறந்துவிடுவார்கள் என்று எண்ணவில்லை. ஆனால் வேற்று மொழிச் சொற்கள் எவை என்ற விழிப்புணர்வும் அதற்கேற்ற தமிழ்ச் சொற்கள் எவை என்ற விழிப்புணர்வும் தமிழ்ச்சொற்களை மறக்காமல் இருக்க வழி வகுக்கும்.

தமிழ் இல்லாத சொற்களைப் பயன்படுத்துபவன் தமிழ்த்துரோகி என்ற தொனி இந்தப் பதிவில் எழுப்பப்படவில்லை. அப்படி எழுப்பப்பட்டதாக உங்களுக்குத் தோன்றியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். அப்படி குற்றம் சாட்டுபவர்கள் வைக்கும் வாதங்களில் சில இங்கே வைக்கப்பட்டிருக்கலாம். அதனால் உங்களுக்கு அந்தத் தொடர்பு நினைவிற்கு வந்து அந்த தொனி தோன்றியிருக்கலாம். தொடர்ந்து உங்கள் கருத்துகளைச் சொல்லி வாருங்கள். படிப்பதோடு நிறுத்த வேண்டாம்.

*

பின்னூட்டப் பெட்டி மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது. பொறுமையுடன் இருந்த நண்பர்களுக்கு நன்றிகள்.

March 04, 2007 8:16 AM
கோவி.கண்ணன் said...
//கோவி.கண்ணன் அண்ணா. நீங்கள் அறியாமல் எழுத்துப்பிழையாக மண்ணிக்க என்று எழுதினீர்களோ இல்லை தட்டச்சுப் பிழையாக அப்படி வந்ததோ தெரியாது. ஆனால் எழுத்துப்பிழை நீக்கி எழுத நீங்களும் நானும் மற்ற குழுவினரும் முயற்சி செய்ய வேண்டும். நம்மில் யாரும் தமிழறிஞர்கள் இல்லை//

குமரன்,

எழுத்துப்பிழைகள் இருப்பதை ஒப்புக் கொள்கிறேன், சரி செய்ய முயல்கிறேன்.

அம்மணத்தை மறைக்க வேண்டும் என்று சொல்லும் ஒருவருடைய சட்டையில் கழுத்து பட்டன் இல்லை என்று அவரை குறைசொல்லி ... 'நீ முதலில் பட்டனை தைத்துக் கொண்டு வந்து பிறகு நிர்வாணம் மறைக்கப் படவேண்டும் என்பதைப் பற்றி பேசு' என்பது போல் எழுத்துப் பிழையை வைத்து சொல்லவந்த கருத்தை விடச் சொல்வது போன்ற வாதங்கள் கூட மாற்றுச் சிந்தனையைத் தான் தருகிறது !

March 04, 2007 10:29 AM
குமரன் (Kumaran) said...
கண்ணன் அண்ணா. இரண்டுமே தேவை. எழுத்துப்பிழை/தட்டச்சுப்பிழை இன்றி எழுதுவது, முயன்று தமிழ்ச்சொற்களில் எழுதுவது இரண்டுமே தேவை. சட்டைப்பொத்தான், அம்மணம் என்று அவற்றை நீங்கள் வகைப்படுத்தலாம். ஆனால் அது மிகுவுரையே அன்றி வேறில்லை. எழுத்துபிழையுடன் எழுதுவது சட்டைப்பொத்தான் அவிழ்ந்தது போல் சாதாரணமானதும் இல்லை; பழக்கத்தால் எல்லோருக்கும் புரியும் வேற்று மொழிச் சொற்களுடன் எழுதுவது அம்மணமாய் நிற்பதும் இல்லை. நீங்கள் இப்படி மிகுவுரையாக (extreme) குறியீடுகளையும் உவமைகளையும் வைத்துப் பேசினால் இந்த விவாதம் நிற்கப்போவதில்லை.

நீங்கள் இப்படி மிகுவுரையாக 'தவளைச்சத்தம்', 'தீட்டு', 'குப்பை' என்றெல்லாம் பேசியதற்கு எதிர்வினையாக வந்தது தான் 'எழுத்துப்பிழை இன்றி எழுதுங்கள். அதற்குப் பின் தமிழறிஞரைப் போல் பேசலாம்' என்பதாக இருக்கலாமோ?

March 04, 2007 1:12 PM
துளசி கோபால் said...
நல்ல பயனுள்ள பதிவும், பயனுள்ள விவாதங்களும்( விவாதம் தமிழா? தெரியலையேப்பா)

படித்துப் பயனடைந்தேன்.

இது பின்னூட்டம் இனியவை '40' ?

March 04, 2007 1:15 PM
ரவிசங்கர் said...
இலவசக் கொத்தனார் - நிச்சயமாக உங்களை முன்னிட்டு என் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. அப்படி தோன்றி இருந்தால் வருந்துகிறேன்.

குமரன் - பழம் - பலம் - பலன் - சுவையான சிந்தனை. நானும் பல முறை தவறாக பலன்-பயனை குழப்பிக் கொள்வதுண்டு. பலன் என்பது effect-result என்ற பொருளிலேயே பயன்படுகிறது. fruit of an effort என்று முடிவுகளை ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. அதே பாணியில் பழம் - பலன் சொல்லுக்கான உறவு சுவையாக இருக்கிறது. ஆனால், அறிஞர்கள் தான் இந்த தொடர்பை உறுதிப் படுத்த வேண்டும்.

அனைவருக்கும் நீங்கள் தந்த விரிவான மறுமொழி நன்று.

கோவி. கண்ணன் - தமிழாசிரியர் பிழை இல்லாமல் தமிழ் எழுத வேண்டும் என்று ஒரு மாணவன் நினைப்பது ஒரு நியாயமான எதிர்ப்பார்ப்பு. அப்படி எழுதுவது ஆசிரியரின் கடமை கூட. ஏனென்றால் ஆசிரியர் எழுதுவது முழுக்க சரி என்ற மனோபாவம் மாணவனுக்கு உண்டு. எப்படி குமரன் தமிழறிந்தவர் என்று அவருடைய நண்பர்கள் அவரிடமிருந்து தமிழ்ச் சொற்களை பெறுகின்றனரோ அதே போல் சொல் ஒரு சொல்லுக்கு வரும் தமிழறிவு குன்றியோர் இங்குள்ள எழுத்துப் பிழைகளை சரி என்று பின்பற்றத் தொடங்கினால் என்னாவது? இதனால், கட்டுரை எழுதுபவர்கள் கூடுதல் கவனம், பொறுப்புடன் எழுதுவது அவசியம். தவறை சுட்டிக் காட்டி கிண்டல் செய்வது நோக்கம் என்றால் வந்தவர் அனைவரும் அடையாளம் காட்டாமலே சொல்லி இருக்க முடியுமே. அடையாளத்துடன் சொல்வது இனி வரும் இடுகைகளில் கவனமாக நீங்கள் செயல்பட வேண்டும் என்ற நன்னோக்கில் தான். எழுத்துப்பிழைக்கும் தட்டச்சுப் பிழைக்கும் எளிதாக வேறுபாடு காணலாம். இந்த இடுகையில் உள்ளவை எழுத்துப் பிழைகளே.

குழுவினருக்கு -

பொதுவாக, தமிழ் மன்றங்கள் அனைத்திலும் நிகழும் கிரந்த எழுத்துத் தவிர்ப்பு - சேர்ப்பு, பிற மொழி தவிர்ப்பு - சேர்ப்பு போன்றும் என்றும் முடியப்போகாத வாதங்கள் தான் இங்கும் நிகழ்கின்றன. அதை தொடர்ந்து கவனித்ததின் அயர்ச்சியாலே என் கருத்துக்களை சொன்னேன். இது போன்ற வாதங்களில் இது தான் சரி தவறு என்று நிறுவி சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. அவரவர் கருத்துக்களை தெளிவாக உரைத்துவிட்டு அவரவர் பாணியில் செல்வது தான் நேரம், ஆற்றலை மிச்சப்படுத்தும். அடுத்தவரை நம் வாதத்தை ஒப்புக் கொள்ள வைப்பதில் கவனம் செலுத்தும்போது தான் உரையாடல்கள் திசை மாறுகிறது. அப்படி ஒப்புக் கொள்ள வைத்து நாம் சாதிப்பதும் ஏதும் இல்லை. ஏனெனில் சொல் ஒரு சொல்லாகட்டும், வேறு இணையக்களங்களாகட்டும் அவற்றின் scope - தாக்க எல்லை மட்டுப்படுத்தப்பட்டதே. ஒரு வேளை இது குறித்து அரசு சட்டம் ஏதும் கொண்டு வந்தால் அங்கு வாதிப்பது முறையாக இருக்கும். ஏனெனில் அது தலைமுறைகளையும் பாதிக்கும் முடிவாக இருக்கும். சொல் ஒரு சொல் தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தி இடுகை எழுதும். மாற்றுக் கருத்துடையவர்கள் அவர்கள் நிலைப்பாட்டின் படி எழுதுவர். மக்களுக்கு எது சரியெனப்படுக்கிறதோ, யாருடைய நடை பிடித்திருக்கிறதோ, சரி என்று தோன்றுகிறதோ அதை பின்பற்றப் போகிறார்கள். அவ்வளவு தான். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அவரவராகத் தான் தெளிய வேண்டும். எதிர்க்கருத்துகளில் உடன்பாடில்லாத போது - "உங்கள் கருத்தை மதிக்கிறோம். ஆனால், உடன்பாடில்லை. இதுவே எங்கள் கருத்து" என்று தெளிவாக சொல்லி விட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டும். இதே செயல்முறை எதிர்க்கருத்து உடைவர்களுக்கும் பொருந்தும். உரையாடல்களின் திசையை நிர்ணயிப்பது குழுவினரின் இடுகைத் தொனியிலும் மறுமொழிகளின் தொனியிலும் தான் இருக்கிறது. எதிர்க்கருத்தாளர் எவ்வளவு தீவிரமான தனிப்பட்ட விமர்சனங்களை வைத்தாலும், குழுவினர் நிதானம் காப்பது அவசியம். சொல் ஒரு சொல் குழுவில் மேலும் பலர் சேரும்போது ஒரு உறுப்பினரின் தனிப்பட்ட நடை, கருத்து குறித்த சுதந்திரம் இருந்தாலும் ஒரு உறுப்பினரின் நிலைப்பாடு முழுக் குழுவின் நிலைப்பாடாகத் தான் பார்க்கப்படும் என்பது உணரப்பட வேண்டும். மேம்பட்ட புரிந்துணர்வுக்கு குழுவினர் தனிப்பட்ட முறையில் கூகுள் குழுமத்திலோ மின்மடல்களிலோ கலந்துரையாடலாம்.

பைய பைய, அருணா கயிறு :) இடுகைகளை நான் விரும்பிப் படித்தேன். அதே பாணியில் தொடர்ந்து இடுகைகள் வரும் என்று எதிர்ப்பாக்கிறேன். எதிர்க் கருத்தாளரும் நாடி வந்து சொற்களை அறிந்து கொள்ளும் இடமாக சொல் ஒரு சொல் இருக்க வேண்டும் என்பது என் அவா. இடுகைத் தொனியும் மறுமொழிகளின் தொனியும் இந்த திசையில் இருப்பது நன்று.

வாழ்த்துக்கள்.

March 04, 2007 1:48 PM
ஞானவெட்டியான் said...
அன்புடையீர்,
யாவரும் http://vettiyaan.blogspot.com/2007/03/blog-post.html
கண்டிருப்பீர்கள். "சொல் ஒரு சொல்" லின் நோக்கமும் அதுவே.

//குமரன் - பழம் - பலம் - பலன் - சுவையான சிந்தனை. நானும் பல முறை தவறாக பலன்-பயனை குழப்பிக் கொள்வதுண்டு. பலன் என்பது effect-result என்ற பொருளிலேயே பயன்படுகிறது//

நாட்டுப்புறங்களில் இன்னமும் (இதுவரை)பலன் எனும் சொல் இயல்பாகவே புழங்கி வருகிறது. பலன் தமிழ்ச் சொல்லே!

"தானத்தில் சிறந்தது நிதானம்."
இது நம் குழுவினருக்கு. ஓர்மையுடனும், சினமுறாதும் எப்பொழுதும், நம் பணி என்னவோ அதை மட்டும் செய்வதே!

(தானம் வடசொல் அல்லவா என விவாதத்தைத் தொடங்கலாகாது.இது பின்னூட்டு இடுபவர்களுக்கு.)

எல்லோருடைய நோக்கமும், வழக்கிழந்த சொற்களை மீட்டெடுப்பதுதான்.
புழங்குவது அவரவர் விருப்பம்(இஷ்டம்). வற்புறுத்தல்(கட்டாயம்) செய்யலாகாது.
42 பின்னூட்டுகளில் விரயம் செய்த காலத்தில்(நேரத்தில்), ஏறத்தாழ(குத்து மதிப்பாக) 4 இடுகைகள் இட்டிருக்கலாம். அதனால், நாம் எல்லோரும் பயன்(பலன்) பெற்றிருக்கலாம்.

என் மனதில் பட்டதை(உதித்ததை) சொல்லுகிறேன்.
விவாதம் தேவையே! பிடிவாதமாகும் வரை.

March 04, 2007 8:48 PM
கீதா சாம்பசிவம் said...
ம்ம்ம்ம்ம், எல்லாப் பின்னூட்டங்களும் படித்தேன். உள்ளேன் ஐயா!!!!!!!!!!!!

March 05, 2007 3:07 AM

குமரன் (Kumaran) said...

இந்த மறுபதிப்பை இடும் போது இடுகையையும் பின்னூட்டங்களையும் படிக்காமல் இடுகிறேன். இனி மேல் தான் அவற்றைப் படிக்க வேண்டும். என்ன எழுதியிருக்கிறது என்று மறந்து போய்விட்டது.

கவிநயா said...

நீங்கள் அவ்வளவு பெரிய விளக்கம் தந்த பின்னும் சொல் ஒரு சொல்லின் நோக்கம் தெளிவாகவில்லை என்பது இந்தப் பதிவைப் படித்ததும் தெளிவாகிறது :(

கவிநயா said...

//இந்தப் பதிவைப் படித்ததும்//

'பதிவையும் பின்னூட்டங்களையும்' என்று சொல்லியிருக்க வேண்டும்!

குமரன் (Kumaran) said...

'சொல் ஒரு சொல் - ஏன்?' இடுகையை எல்லோரும் படித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது அக்கா. அப்படியே படித்தாலும் சொன்னதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.

சில நேரங்களில் தமிழுக்காக நான் பேசும் போது நாத்திகர்களும் அதே கருத்தினைச் சொல்லுவதால் நான் நாத்திகர்களுக்குச் சார்பாக பேசுகிறேன் என்றெண்ணி என் மேல் பாய்ந்தவர்களும் உண்டு. இப்படி ஒரு கருத்துக்கு இன்னொரு கருத்து தொடர்பு இருக்கிறதோ இல்லையோ தொடர்பை உய்த்துண்ரந்து ஐயம் கொள்வது இயற்கை. நானும் என்னை அறியாமல் செய்வதுண்டு. என்றைக்கும் தொடரும்.