Monday, December 31, 2012

உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்!




அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்!
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற்கழல் அடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!

ஆடைகளும் தண்ணீரும் சோறும் அளவில்லாமல் தானம் செய்யும் எங்கள் தலைவனே நந்தகோபாலா எழுந்திடுவாய்!

கொடியைப் போன்ற பெண்களுக்கு எல்லாம் கொழுந்து போன்றவளே! எங்கள் குலவிளக்கே! எங்கள் தலைவியே யசோதையே எழுந்திடுவாய்!

வானத்தை ஊடு அறுத்து ஓங்கி உலகங்கள் எல்லாம் அளந்த தேவர்கள் தலைவனே கண்ணனே! உறங்காது எழுந்திடுவாய்!

செம்பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்த திருவடியை உடைய செல்வா! பலதேவா! உன் தம்பியும் நீயும் உறங்கா வேண்டாம்!

Sunday, December 30, 2012

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்!



நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியர் எமக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்!
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

எங்கள் குலத்திற்குத் தலைவனான நந்தகோபனுடைய அரண்மனையைக் காப்பவனே! அவனது கொடியும் தோரணங்களும் தோன்றும் வாயிலைக் காப்பவனே! மாணிக்கக் கதவைத் தாள் திறப்பாய்!

ஆயர் சிறுமியர்களாகிய எங்களுக்கு வேண்டியதெல்லாம் தருவதாக மாயன் பச்சை மணி போல் நிறம் கொண்டவன் நேற்றே வாக்குறுதி தந்திருக்கிறான்! அதனால் அவனைத் துயில் எழுப்பிப் பாட தூயவர்களாக வந்திருக்கிறோம்! அம்மம்மா! பேசிப் பேசி நேரத்தைக் கடத்தாமல் நீர் அன்பின் வெளிப்பாடான நிலைக்கதவைத் திறப்பாய்!

Saturday, December 29, 2012

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?!



எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?!
சில்லென்று அழையேன்மின்! நங்கைமீர் போதர்கின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன் வாயறிதும்!
வல்லீர்கள் நீங்களே! நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய்! உனக்கென்ன வேறுடையை?!
எல்லாரும் போந்தாரா? போந்தார்! போந்து எண்ணிக் கொள்!
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!

அடியே! இளமையான கிளி போன்றவளே! இன்னுமா தூங்குகிறாய்?

கத்தாதீர்கள் பெண்களே! இதோ வருகின்றேன்!

உன் பேச்சு மட்டும் பலமாக இருக்கிறது. உன் வாயைப் பற்றி முன்பே அறிவோம்!

நீங்கள் தான் வாயாடிகள்! என்னையா வாயாடி என்கிறீர்கள்?! சொல்லிவிட்டு போங்கள்!

சீக்கிரம் நீ வருவாய்! உனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?!

எல்லாரும் வந்தார்களா?

வந்துவிட்டார்கள்! நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்!

வலிமையுடைய குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்றவனை, பகைவர்களின் பகையை அழிக்க வல்லவனை, மாயனைப் பாடுவோம்!

Friday, December 28, 2012

நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!




உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்!
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்!
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக்கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!

உங்கள் வீட்டுப் புழக்கடையின் இருக்கும் தோட்டத்துக் கிணற்றில் செங்கழுநீர்ப்பூ மலர்ந்து ஆம்பல் பூ கூம்பிவிட்டதைப் பார். அதிகாலை நேரத்தில் நடக்கும் நிகழ்வல்லவா இது?!

செங்கல் பொடியைப் போன்ற நிறத்தை உடைய ஆடையை அணிந்த, வெண்ணிறம் மாறாத பல்லை உடைய தவத்தில் சிறந்தவர், தங்கள் இறைப்பணி செய்யும் திருக்கோவில்களில் இறைப்பணி செய்வதற்காகச் செல்கின்றார்கள்!

எங்களுக்கு முன்னால் எழுந்து எங்களை எழுப்புவேன் என்று வாயாடியாகப் பேசிய பெண்ணே! உனக்கு வெட்கமே இல்லை! வாய் மட்டுமே இருக்கிறது! எழுந்திருப்பாய்!

சங்கும் சக்கரமும் ஏந்திய நீண்ட கைகளை உடைய தாமரைக் கண்ணனைப் பாடுவோம்!

Thursday, December 27, 2012

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!




புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!
புள்ளும் சிலம்பின காண்! போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ?! பாவாய் நீ நன்னாளால்!
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!


கொக்கு வடிவில் வந்த அரக்கனின் வாயைப் பிளந்தவனை, பொல்லாத அரக்கனான கம்சனை கறிவேப்பிலையைக் கிள்ளுவது போல் கிள்ளிக் களைந்தவனை, அவனது புகழை எல்லாம் பாடிக் கொண்டு எல்லா பெண்பிள்ளைகளும் பாவை நோன்பு நோற்கும் களத்தில் நுழைந்துவிட்டார்கள்!

வானத்தில் விடிவெள்ளி எழுந்துவிட்டது! வியாழ கிரகம் மறைந்துவிட்டது! பறவைகளும் பேசத் தொடங்கிவிட்டன!

பூவில் அலையும் வண்டினைப் போன்ற அழகான கண்கள் உடையவளே! உடலும் மனமும் நினைவுகளும் குளிர்ந்து போகும் படி நன்கு குடைந்து நீராடாமல் இன்னும் படுத்துக் கொண்டிருக்கிறாயே?! மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் அல்லவா இன்று? தனியாகச் சென்று இறைவனை வணங்கலாம் என்ற கள்ள எண்ணத்தைத் தவிர்த்து விட்டு இறையடியார்கள் எல்லோருடனும் கலந்து இறைவனை வணங்கலாம் வா!

Wednesday, December 26, 2012

நற்செல்வன் தங்காய்!




கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்!
இனித் தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்?!
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!

கன்றுடன் கூடிய இளைய எருமை கனைத்து, தன் கன்றை நினைத்துக் கொண்டு அதற்குப் பசிக்குமே என்று இரங்கி அந்த நினைவினாலேயே பால் மடியிலிருந்து தானே விழ, அந்தப் பாலால் நனைந்தௌ வீடெல்லாம் சேறு ஆகும். அந்த வீட்டை உடைய நற்செல்வனின் தங்கையே!

தலையின் மேல் பனி விழ உன் வாசல் கதவைப் பற்றிக் கொண்டு, தென்னிலங்கைக்கு அரசனான இராவணனைச் சினம் கொண்டு தோற்கடித்த, நம் மனத்துக்கு இனியவனான இராமனை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். அதனைக் கேட்டும் நீ வாயைத் திறக்கவில்லை!

இனி மேலாவாது எழுந்திருப்பாய்! இது என்ன இவ்வளவு நீண்ட தூக்கம்?! எல்லா வீட்டுக்காரர்களும் உறக்கம் விட்டு எழுந்துவிட்டார்கள்!

Tuesday, December 25, 2012

புற்று அரவு அல்குல் புனமயிலே!




கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே! போதராய்!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!

கன்றுடன் கூடிய பசுக்கூட்டங்கள் பல வளர்த்து, எதிரிகளின் பெருமை அழியும்படி சென்று போர் செய்யும், குற்றம் ஒன்றும் இல்லாத கோபாலர்களின் பொற்கொடி போன்றவளே! புற்றில் வாழும் பாம்பின் படமெடுத்த தலையைப் போன்று தோன்றும் அழகிய இடையின் கீழ்ப்பகுதியை உடையவளே! பூந்தோட்டத்தில் வசிக்கும் மயிலைப் போன்றவளே1 எழுந்து வருவாய்!

அக்கம் பக்கம் சுற்றிலும் வாழும் தோழியர்கள் எல்லாரும் வந்து உன் வீட்டு முற்றத்தில் புகுந்து நின்று மேக நிறம் கொண்டவனின் திருப்பெயர்களைப் பாடிக் கேட்டும், கொஞ்சமும் அசையாமலும் ஒரு சொல்லும் சொல்லாமலும் செல்வப் பெண்ணே நீ உறங்குகின்றாயே?! இதற்கு என்ன பொருளோ

Monday, December 24, 2012

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!




நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?!
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ?!
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!

நோன்பு நோற்றுச் சுவர்க்க உலகம் புகுவேன் என்று சொன்ன எங்கள் தலைவியே! வாசல் கதவைத் தான் திறக்கவில்லை; பதிலாவது சொல்லக் கூடாதா?

நறுமணம் மிகுந்த துளசியை திருமுடியில் சூடிய நாராயணன் நம்மால் போற்றப்பட்டு நாம் வேண்டியதெல்லாம் தருவான். அந்த புண்ணியனால் முன்பு ஒரு நாள் எமனின் வாயில் விழுந்த கும்பகருணன் தான் உன்னிடம் தோற்று அவனது பெரும் தூக்கத்தை உனக்குத் தந்தானோ?

அளவிடமுடியாத பெரும் தூக்கத்தை உடையவளே! அழகிய கும்பத்தைப் போன்ற அழகுடையவளே! உறக்கம் தெளிந்து வந்து கதவை திறப்பாய்!

Sunday, December 23, 2012

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!



தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ?! உம் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!

தூய்மையான மாணிக்கங்களால் ஒளி வீசும் மாடங்களில் எல்லாம் விளக்குகள் எரிய, நறுமண தூபங்கள் கமழத், தூங்குவதற்காகவே இருப்பது போன்ற படுக்கையின் மேல் கண்களை மூடிக் கொண்டிருக்கும் மாமன் மகளே! மாணிக்கங்களால் அழகு பெற்றிருக்கும் கதவுகளின் தாளைத் திறப்பாய்!

மாமீ! அவளை எழுப்ப மாட்டீர்களா? உங்கள் மகள் தான் ஊமையா? இல்லை செவிடா? மயக்கம் அடைந்துவிட்டாளோ? படுக்கையை விட்டு எழ முடியாதபடி நீண்ட உறக்கம் கொள்ளும் படி யாராவது மந்திரம் போட்டுவிட்டார்களா?

மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று என்று இறைவனின் திருப்பெயர்கள் பலவற்றையும் சொல்வோம்! அவளை எழுப்புங்கள்!

கோதுகலமுடைய பாவாய்!


Thanks for the picture: Valliammaa

கீழ்வானம் வெள்ளென்று! எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு
மா வாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால்
என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!

கிழக்கு வானம் வெளுத்துவிட்டது! எருமைகள் எல்லாம் சிறுதீனி மேய்வதற்காக வீட்டைச் சுற்றிலும் பரந்து திரிகின்றன பார்! மிச்சம் இருக்கும் பிள்ளைகளும் நோன்பு நோற்கும் இடத்திற்கு போவதே கொண்டாட்டமாகப் போய் கொண்டிருக்கிறார்கள்; அவர்களைப் போகாமல் தடுத்து நிறுத்தி உன்னைக் கூவி எழுப்புவதற்காக வந்து நின்றோம்! குதூகலம் உடைய அழகான பெண்ணே! எழுந்திரு! குதிரையின் உருவில் வந்த கேசி என்ற அரக்கனின் வாயைப் பிளந்தவனை, முஷ்டிகன் சாணூரன் என்னும் மல்யுத்த வீரர்களை வென்று கொன்ற தேவாதிதேவனான கண்ணனைப் பாடி வேண்டியதெல்லாம் பெறுவதற்காக அவன் முன்னே சென்று நாம் சேவிப்போம்! அப்படி செய்தால் 'ஆகா! இவர்கள் நம் அடியவர்கள் அல்லவா?! நாமே சென்று அருள வேண்டியிருக்க இவர்கள் நம்மைத் தேடி வரும்படி செய்தோமே!' என்று நாம் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள் செய்வான்!