Tuesday, June 17, 2008

கவிநயா அக்கா, வாத்தியார் ஐயா, பரிசல்காரன், கோவி.கண்ணன் - அனைவருக்கும் வணக்கம் (கேள்வி பதில் 2)

பாராட்டுகளை அள்ளி வழங்கக் கற்றுக் கொள்ள வேண்டுமா? உணர்ச்சிப் பெருக்கில் உருக வேண்டுமா? அப்படி உருகக் கற்றுக் கொள்ள வேண்டுமா? ஒரு பதிவர் எழுதுவது பிடித்துவிட்டால் அவர் ஒரு இடுகை இட்டு பத்தே நிமிடத்தில் படித்துப் பின்னூட்டம் இடக் கற்றுக் கொள்ள வேண்டுமா? இவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு 'ஆம்' என்று உங்கள் மனத்திற்குள்ளேயே பதில் சொல்லிக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டியவை கவிதாயினி கவிநயா அக்காவின் பதிவினையும் பின்னூட்டங்களையுமே. :-)

இதோ அக்கா கேட்ட கேள்விகளும் தம்பியேன் சொல்லும் பதில்களும்:

அக்கா முதல் கேள்வியாக செல்வன் கேட்ட கேள்விகளில் ஒன்றையே கேட்டார். அதற்கான விடை சென்ற இடுகையிலே சொல்லியிருக்கிறேன்.

2. உங்களுக்கு சங்க இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் எப்போது ஆர்வம் ஏற்பட்டது? ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பினாலா, இல்லை தனித்தனியாக ஏற்பட்டதா?

ஆன்மிகத்தில/சமயத்தில/மதத்தில/பக்தியில ஈடுபாடு வந்தது குட்டியூண்டு வயசிலே. ( நீங்க ஆன்மிகத்திலன்னு தான் கேட்டீங்க. மத்ததையும் சொல்லாட்டி உஷா கோவிச்சுக்குவாங்க போலிருக்கு. :-) )

முதல் காரணம் அம்மம்மா சந்திரா அம்மாள். இந்தப் பாட்டியைப் பத்தி முந்தையப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன். அவங்க நேரடியா எதுவுமே சொல்லித் தரலை. ஆனா புத்தகப்புழுவா சின்ன வயசுலயே இருந்த எனக்குப் படிக்க நிறைய புத்தகங்களை வச்சிருந்தார். என் பதிவுகளைப் பத்தி தினமலர்ல வந்தப்ப அவங்க தான் அதை முதல்ல பார்த்து என் தம்பிக்கிட்ட சொன்னாங்க. அமெரிக்காவுல இருந்துக்கிட்டு அபிராமி அந்தாதியும் நாயகி சுவாமிகள் பாட்டும் எழுதுனா வெள்ளைக்காரன் இதெல்லாம் படிக்கிறானான்னு நான் அதுக்கப்புறம் மதுரைக்குப் போனபோது கேட்டாங்க. பாட்டி இதெல்லாம் நம்ம ஊரு ஆளுங்க படிக்கிறதுக்குத் தான் எழுதிக்கிட்டு இருக்கேன்னா அவங்களுக்குப் புரியலை. இன்னைக்குப் போயி சொன்னாலும் புரியாதுன்னு நினைக்கிறேன். ஏதோ பேரன் அமெரிக்காவுல பொட்டி தட்டிக்கிட்டு நிறைய சம்பாரிச்சுகிட்டு அப்பப்ப கம்ப்யூட்டர் பொட்டியில அபிராமி அந்தாதியும் எழுதிக்கிட்டு இருக்கான்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க வச்சுக்கிட்டு இருந்த புத்தங்களைப் படிச்சு 7 (அ) 8 வயசுல அவங்ககிட்ட கீதையில ஐயம் கேட்டுக்கிட்டு இருந்தது நினைவிருக்கு. புரியாம மகாபாரதம் பெரிய புத்தகம் படிச்சதும் நினைவிருக்கு. ராமாயணம் படிக்கிறப்ப அகலிகைக்கு ஏன் கௌதமர் சாபம் குடுத்தாருன்னு புரியாம பாட்டிக்கிட்ட கேட்டதும் நினைவிருக்கு. ஆனா அவங்க என்ன பதில் சொன்னாங்கங்கறது மட்டும் மறந்திருச்சு. :-)

ரெண்டாவது காரணம் நான் பத்தாப்பு படிக்கிறப்ப டாடா சொல்லாம செத்துப் போன அம்மா. பகவத் கீதையெல்லாம் படிச்சு ரொம்ப அறிவாளியா நினைச்சுக்கிட்டு அம்மா செத்ததுக்கு அன்னைக்கு அழலை. ஆனா கல்லூரிக்காலத்துல இருந்து இன்னை வரைக்கும் அழுதுக்கிட்டு இருக்கேன். இப்ப இதை எழுதுறப்பவும் கண்ணுல தண்ணி கட்டுது. சரி சரி. எதையோ சொல்ல வந்து வேற எதையோ சொல்றேன். எங்கம்மா சுசிலா பெரிய முருக பக்தை. திருப்பரங்குன்றத்துக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கூடல் குமரன் சன்னிதிக்கும் அடிக்கடி (தினமும் ஒரு முறைன்னு சொல்ல முடியாது; வாரத்துக்கு ஒரு முறைன்னும் சொல்ல முடியாது - ரெண்டுக்கும் நடுவுல) கூட்டிக்கிட்டு போயி திருப்புகழும் 'சண்முக நாயகன் தோன்றிடுவான்' பாட்டும் நல்லா சொல்லிக் குடுத்தாங்க. அன்னைக்குத் தொடங்குனது தெய்வத் தமிழின் மேல் காதல்.

அம்மாவோட மறைவுக்குப் பிறகு அந்த தெய்வப் பாடல்களின் மேல் இருந்த காதல் கீதையின் மேல் திரும்பியது. அப்ப எல்லாம் கீதைக்கு எத்தனை உரைகள் இருக்கோ அத்தனையையும் வாங்கி ஒவ்வொரு சுலோகமா ஒப்பீடு செஞ்சே படிச்சேன். அப்படிப் படிச்சது தான் வடமொழி. பள்ளிக்கூடத்துல தமிழ் படிச்சது மாதிரி யாருக்கிட்டயும் முறையா வடமொழி படிக்கலை. அதனால என்னோட வடமொழி அறிவு கேள்வியறிவு மட்டுமேன்னு சொல்லலாம்; அரைகுறை அறிவுன்னும் சொல்லலாம். :-) உங்க அடுத்த கேள்வியான '3. வடமொழியும் நீங்களே ஆர்வத்தால் கற்றுக் கொண்டீர்களா?'க்கும் பதில் சொல்லியாச்சு. ரெண்டாவது கேள்விக்கான பதில் தொடருது.

கல்லூரிக்காலத்தில கீதையை எந்தளவுக்குப் படிச்சேனோ அந்த அளவுக்கு ஆழ்வார் பாசுரங்களைப் படிக்கத் தொடங்குனது வேலை பாக்கத் தொடங்குனப்ப. அதுக்கு இணையத்துல இருக்கிற வைணவ குழுமங்கள் (பக்தி, ஒப்பிலியப்பன், சரணாகதி) தான் காரணம். அப்ப பழந்தமிழ் இலக்கியங்கள் மேல இன்னும் பழக்கம் கூடிச்சு.

2005ல பதிவுகள்ல எழுதத் தொடங்குன பிறகு தான் சங்க இலக்கியங்கள்ல ஆர்வம் வந்தது. 2006 ஜனவரியில 'மாலவனும் தமிழ்க்கடவுள்' என்ற விவாதம் என்னோட நட்சத்திர வாரத்துல வந்தது. நான் அந்தக் கருத்தை வைக்க இராகவன் மறுத்தார். பலவகையில என் கருத்தைச் சொன்னேன். ஆனா தரவுகளோட சொன்னா இன்னும் பலமா என் கருத்தை வைக்கலாம்ன்னு தோணிச்சு. அப்பத் தொடங்குனது 'இலக்கியத்தில் இறை' என்ற தொடருக்கான எண்ணம். ஆனா நான் விரும்புற கருத்துக்குத் தரவுகளைத் தேடாம திறந்த மனத்தோடு தான் சங்க இலக்கியங்களை அணுகுகிறேன். அதனால் கடைசியில் மாலவன் தமிழ்க்கடவுள் என்று சொல்ல சரியான தரவுகள் கிடைக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளவும் புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளவும் தயக்கங்கள் இல்லை.

சங்க இலக்கியங்கள்ல ஆர்வம் வந்ததுக்கு இன்னொரு காரணமும் உண்டு. வடமொழி வேதங்கள், நூற்கள் ஆராயப்பட்ட அளவிற்குத் தமிழிலக்கியங்கள் ஆராயப்படவில்லை என்ற எண்ணம் உண்டு. திராவிடம், ஆரியம், தமிழ், வடமொழி போன்ற கருத்தாங்கள் எல்லாம் வடமொழி நூற்களை அடிப்படையாகக் கொண்டே இருப்பதாக ஒரு எண்ணம். தமிழிலக்கியங்களில் அதற்கு ஏற்பவோ எதிர்ப்பாகவோ தரவுகள் இருக்கிறதா என்று பார்க்க ஆசை. சில தரவுகள் கிடைத்து அவற்றை கூடலில் (முக்கியமாக பாரி வள்ளல் தொடர்கதையில்) வைத்திருக்கிறேன். எத்தனை பேர் படித்தார்களோ தெரியாது.

***

இணையத்தில் ஒரே ஒரு வாத்தியார் தான்; ஒரே ஒரு வாத்தியார் அம்மா தான். ரெண்டு பேருக்கும் அறிமுகம் தேவையில்லை. வாத்தியார் அம்மாவை நான் அக்கான்னு தான் கூப்புடறது. வாத்தியார் ஐயா எழுத வந்த நாள்ல இருந்து தொடர்ந்து படிச்சுக்கிட்டு தான் வர்றேன். பின்னூட்டங்களும் முடிஞ்ச வரைக்கும் இட்டுக்கிட்டு வர்றேன். வாத்தியார் ஐயா கேட்ட கேள்வியும் என்னோட பதிலும் இங்கே.

இறைவனைக் காணும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?

நல்ல கேள்வி வாத்தியார் ஐயா. பதில் சொல்லக் கடினமான கேள்வியும். எந்தப் பதில் சொன்னாலும் முழுமையாக இருக்காது.

இப்போதைக்கு ரெண்டு பதில்கள் இருக்கிறது. இரண்டையுமே சொல்கிறேன்.

உங்க கேள்வியை நீங்க கேட்டவுடனே படிச்சப்ப ஒரு பதில் தோணிச்சு. அது: சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து படிச்சு எல்லாத்தையும் தெளிவா புரிஞ்சுக்கிற அறிவு வேணும். அப்படி படிச்சுப் புரிஞ்சிக்கிட்டதைத் தெளிவா மத்தவங்களுக்குச் சொல்ற வல்லமையும் வேணும். (ஏன் இந்த வரம்ன்னு போன பத்தியில சொல்லியிருக்கேன்)

இந்தக் கேள்விக்குப் பதில் எழுத உக்காந்தப்ப இதைப் பத்தி சிந்திச்சேன். அப்ப தோணினது: எங்குமுளன் கண்ணன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இப்ப எனக்குக் கிடைச்ச இந்தக் காட்சி என்றென்றைக்கும் தொடர்ந்து கிடைக்கணும். எந்த எந்த வகையில உனக்குத் தொண்டு செய்ய முடியுமோ அந்த அந்த வகையில தொண்டு செய்யும் வாய்ப்பும் வசதியும் வல்லமையும் கிடைக்க வேண்டும். நீ எங்கு எந்த நிலையில் என்னை வைக்கிறாயோ அந்த நிலையில் உன் நினைவோட நான் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கணும். (இதெல்லாம் சொல்லுதல் யார்க்கும் எளிய கதை. கடவுள் காட்சி தரும் போது இவற்றைத் தான் கேப்பேனாங்கறது ஐயமே)

***

என் பதிவுக்குப் புதுசா வந்து கேள்வி கேட்ட பரிசல்கார கிருஷ்ணகுமாரை வரவேற்கிறேன். அவர் கேட்ட கேள்வியும் அதற்குரிய பதிலும்:

எனது கேள்வி..
உங்களுக்கு எங்களையெல்லாம் பத்தா பாவமா இல்லையா?


கிருஷ்ணகுமார். பதிவுகள்ல எழுதுறதே சில நேரம் மத்தவங்களைக் கொடுமைபடுத்துற மாதிரி தான். குடும்பத்தோட செலவழிக்க வேண்டிய நேரத்துல பதிவு எழுதுறதால குடும்பத்தைக் கொடுமைபடுத்துறோம். இந்த மாதிரி கேள்வி கேளு கேள்வி கேளுன்னு நச்சரிச்சு உங்களை மாதிரி பதிவர்களைக் கொடுமைபடுத்துறோம். என்னங்க செய்றது - கொடுமையே கொடுந்தொழில்ன்னு ஆகிப் போச்சு வாழ்க்கை. :-)

***

கோவி.கண்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. வெள்ளம் போல் பெருகும் அவரது கருத்துகளே அவரை நன்கு அறிமுகம் செய்து விடும். அந்தக் கருத்துகள் அவருக்கு என்ன பட்டப்பெயரை வாங்கித் தந்ததுங்கறதை மட்டும் நான் சொல்ல மாட்டேன். :-)

அவர் 'கேள்விகள் தயாராகின்றன'ன்னு முன்னோட்டம் கொடுத்தபோது சரி வழக்கம் போல விவகாரமா தான் எதாச்சும் கேப்பாருன்னு நினைச்சேன். அப்புறம் அவர் கேட்ட ஒரே கேள்வியைப் பாத்தவுடனே சப்புன்னு ஆயிருச்சு. அப்படி கேட்ட ஒரே கேள்விக்கு முன்னாடியும் ஒரு பாராட்டுரைங்கற பாறாங்கல்லு. எதுக்குன்னு தெரியலை. :-)

ஆன்மிகம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம்,சமஸ்கிரதம் ஆகியவற்றை கரைத்துக் குடித்து இருக்கிறீர்கள்.

ஆன்மிகம் தொடர்புடைய கேள்வி - பதில் பகுதியை ஆரம்பிக்கலாமே... இது பற்றி உங்கள் எண்ணம் ?


கண்ணன்,

எதையும் இன்னும் கரைத்தெல்லாம் குடிக்கவில்லை. அப்படி செய்ய வெகுகாலம் செல்லும். அதற்கெல்லாம் காலம் தான் கை கொடுக்க வேண்டும்.

ஆன்மிகம் தொடர்பா கேள்வி - பதில் தொடங்கலாம்ன்னு இரவிசங்கரோட விண்மீன் வாரத்துல பாபா சொல்லியிருந்தார். நீங்களும் இப்ப அதைக் கேக்குறீங்க. அப்படி ஒன்னு தொடங்குறதா எண்ணம் இல்லை. காரணங்கள் இரண்டு.

1. ஆன்மிகத்தில் கேள்வி பதில் தொடங்கும் அளவிற்கு ஒன்றும் தெரியாது. உஷா சொல்வது போல் இந்து மதத்தைப் பற்றித் தான் எழுதுகிறேன்; அதனால் மதப்பதிவர் தான் என்றாலும் இந்து மதத்தைப் பற்றி கேள்வி பதில் நடத்தும் அளவிற்கு அறிவில்லை. அறிந்தவன் என்ற எண்ணமும் இல்லை.

2. அப்படியே அரைகுறை அறிவோடு தொடங்கினாலும் உஷா பட்டியல் இட்ட ஒவ்வொருவரும் ஒரே கேள்விக்கு ஒவ்வொரு விதமாக பதில் சொல்வார்கள்/சொல்வோம். அது அப்புறம் கேள்வி பதிலாக இருக்காது; பெரும் சர்ச்சையாக முடியும். ஏற்கனவே விளையாட்டாகச் சிலர் தொடங்கிய சர்ச்சைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் போது இது வேற தேவையா? :-)

எனக்கு ஏன் இந்த எண்ணம் இல்லைங்கறதுக்குத் தான் காரணங்கள் சொன்னேன். வேற எவராவது 'கேள்வி - பதில்' தொடங்கும் எண்ணம் இருந்தா கட்டாயம் அவங்க செய்யலாம்; அது அவங்களோட உரிமை.

21 comments:

Kavinaya said...

குமரா, மறுபடியும் உருக்கிட்டீங்க! ஒரு முறை வேகமா படிச்சிட்டேன். இன்னொரு தரம் நிதானமா படிச்சிட்டு வரேன். விவரமான பதிலுக்கு நன்றி மட்டும் இப்ப சொல்லிக்கிறேன்! :)

கோவி.கண்ணன் said...

ஒரு பதிவராக உங்கள் எண்ண ஓட்டங்கள் தான் தெரிந்தது..அதிலும் சில தப்பாக புரிந்தது :) , தற்பொழுது உங்களைப் பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவருகிறிர்கள்.

வாழ்க ... வாழ்க !

SP.VR. SUBBIAH said...

மதுரைக்கு ஒரு பெருமை உண்டு.
வேறு எந்த ஊருக்கும் இல்லாத புகழ் உண்டு! தமிழ் நாட்டின் வரலாற்றில் அந்த ஊருக்குத்தான் முதல் இடம்.

சங்கம் வைத்து தமிழை வளர்த்த ஊர்.

இறைவன் என் முன் தோன்றி ‘குமரனுக்காக' வரம் கேட்டகும் உரிமையை உனக்குத் தருகிறேன்
என்று சொன்னால், நான் இதைத்தான் கேட்பேன்.

”குமரனுக்கு, பொருள் ஈட்டும் நிலையை மாற்றி, ஒரே நாளில் அவரை மிகப் பெரிய செல்வந்தாராக்கி, உன் புகழைப்பாடும் வேலையை மட்டும் அவர் மதுரையிலேயே இருந்து எழுத்தாலும், பேச்சாலும் செய்யும் வாய்ப்பை நல்குவீராக!”

Kavinaya said...

வந்துட்டேன்!

முதல்ல என்னை அவ்ளோ நீளமா அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி. ஒரே ஒரு விஷயம் - யாரும் எந்தக் கேள்விக்கும் 'ஆமா' சொல்லியிருப்பாங்கன்னு தோணல :)

முதல் கேள்விக்கு நீங்க சரியா பதில் சொல்லல குமரா! மறுபடியும் தெளிவா சொல்வீங்கன்னு காத்திருக்கேன் :)

7 வயசில கீதையா! எங்கயோ போய்ட்டீங்க :)

//அகலிகைக்கு ஏன் கௌதமர் சாபம் குடுத்தாருன்னு புரியாம பாட்டிக்கிட்ட கேட்டதும் நினைவிருக்கு. ஆனா அவங்க என்ன பதில் சொன்னாங்கங்கறது மட்டும் மறந்திருச்சு. :-)//

:)) உங்க பாட்டிக்கு என்னுடைய வணக்கங்கள்.

உங்க அன்னை பற்றி படிக்கும்போது எனக்கும் கண்ணு கட்டுது :(

//அப்ப எல்லாம் கீதைக்கு எத்தனை உரைகள் இருக்கோ அத்தனையையும் வாங்கி ஒவ்வொரு சுலோகமா ஒப்பீடு செஞ்சே படிச்சேன். அப்படிப் படிச்சது தான் வடமொழி. //

அசந்துட்டேன்! ஆனா இதுக்கப்புறம் நீங்க என்ன சொன்னாலும் அசர மாட்டேன்னு நெனக்கிறேன் :)

//நான் விரும்புற கருத்துக்குத் தரவுகளைத் தேடாம திறந்த மனத்தோடு தான் சங்க இலக்கியங்களை அணுகுகிறேன்.//

உங்களிடம் பிடித்த விஷயம்... நடுநிலைமை; நேர்மை.

பாரிவள்ளல் தொடர்கதை இன்னும் எல்லாம் படிக்கலை. படிச்சுட்டு சொல்றேன்.

நீங்கள் இறைவன் தோணினா கேட்கணும்னு இருக்க வரம் உங்களுக்கு அவன் தோன்றாவிட்டாலும் கிடைக்க வாழ்த்துக்கள்!

அப்புறம் வாத்தியார் ஐயா உங்களுக்காக கேட்பதா சொன்னாரே, அந்த வரம் எனக்கு ரொம்ப பிடிச்சது! :)

//வாழ்க ... வாழ்க !//

ரிப்பீட்டேய்! :))

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன். பதிவில் பாடல்களுக்குப் பொருளுரைகள் எழுதும் போது எனது எண்ணங்களையும் சில நேரங்களில் எழுதினாலும் பெரும்பாலான பொழுதுகளில் பாடல்கள் சொல்லும் கருத்தை விவரிப்பதையே முதன்மையாகக் கொள்கிறேன். அந்தப் பாடல்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துடனும் நான் ஒத்துப் போகிறேன்; அவையே என் கருத்துகள் என்று யாரேனும் நினைத்தால் அது தவறு. பஜ கோவிந்தமோ அபிராமி அந்தாதியோ கோதைத் தமிழோ எல்லாமே அப்படித் தான். என் கருத்துடன் இது ஒத்துப் போகிறது; இது ஒத்துப் போகவில்லை என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்று எண்ணுகிறேன்; அதனால் அப்படி செய்வதும் இல்லை. ஆனால் எல்லா கருத்துடனும் நான் ஒத்துப் போகிறேன் என்ற புரிதல் கூடாது. :-) அந்தப் புரிதல் இருந்தால் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் நிறைய உண்டு. எனக்கு வந்த சில கேள்விகளைப் பார்த்தாலும் அது தெரியும். பதிவுகளைப் படித்துவிட்டு 'இவன் இப்படித் தான்' என்று முடிவு செய்து கொண்டு இதுவரை என் பதிவுகளில் பின்னூட்டம் இடாத சிலர் இன்று சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். :-)

என்றைக்கும் எதையும் ஒளித்து வைக்க வேண்டும் என்றெண்ணியதில்லை. ஒவ்வொரு முறை என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சொல்ல வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சொல்லியிருக்கிறேன். இந்தக் கேள்வி-பதில் தொடரும் அந்த வாய்ப்பை மீண்டும் தந்திருக்கிறது. அவ்வளவு தான். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கவி அக்காவுக்கு ஒரு வணக்கஞ் சொல்லிட்டே பின்னூட்டத்தை அடியேனும் துவக்குகிறேன்!

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை-ன்னு குறள்!
அது நாம், நமக்குப் பிடித்தமான பொருள் மீது காட்டும் அன்பு மட்டும் இல்லை!
நம் மீது பிறர் காட்டும் அன்பும் கூட!

உங்கள் தாயார் மறைதிரு. சுசீலாம்மா உங்க மேல் காட்டிய அன்பே, உங்கள் தமிழ் ஆர்வம்-உடைமையா ஆகி இருக்கு!
'சண்முக நாயகன் தோன்றிடுவான்'-ன்னு, தமிழ்க் கடவுள் முருகப் பெருமானே அதைத் துவக்கி வைத்திருப்பது, எண்ணிப் பார்க்கவே இனிக்கிறது!

அம்மாவின் படத்தின் கீழ், அடியேனும் அடிக்கீழ் வீழ்ந்து சேவித்துக் கொள்கிறேன்!

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா! -உன்
பங்கயக் கைநலம் பார்த்து அலவோ, பாரினில் அறங்கள் வளருதம்மா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஏதோ பேரன்
1. அமெரிக்காவுல பொட்டி தட்டிக்கிட்டு
2. நிறைய சம்பாரிச்சுகிட்டு
3. அப்பப்ப கம்ப்யூட்டர் பொட்டியில அபிராமி அந்தாதியும் எழுதிக்கிட்டு

இருக்கான்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க//

அம்மம்மா வரிக்கு வரி 100% சரியாத் தான் நினைச்சிக்கிட்டு இருக்காங்க! :-)

சரி, நீங்களும் அம்மம்மா-ன்னு தான் கூப்புடுவீங்களா?
நானும் தேன்!
அப்பாவோட அம்மா=ஆயா! பாட்டி!
அம்மாவோட அம்மா=அம்மம்மா, செல்லமா அமுமா :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதனால என்னோட வடமொழி அறிவு கேள்வியறிவு மட்டுமேன்னு சொல்லலாம்;//

கேள்வி நலத்தால் வந்த பேரறிவு! சரி தான்!
கீதையால் வந்த சீதனமா இது? அருமை! அருமை!

வடமொழியை முதலில் காட்டி, ஆழ்வாரின் தென்மொழியைப் பின்பு காட்டி, என்னிலும் அவர் சொல் இனிதே! கண்ணனில் கோதை இனிதே!-ன்னு புரிய வச்சிருக்கான் போல!
தமிழ்க் கடவுள் மாயோன் செய்த மாயமா இது? :-)

தங்கள் வடமொழிப் புலமையை அடியேன் நன்கு அறிவேன்! மற்ற பதிவர்களை ஏமாத்தலாம்! ஆனால் கீதை சொன்ன கண்ணபிரானை ஏமாற்ற முடியாது குமரன்! ஞாபகம் வச்சிக்கோங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதனால் கடைசியில் மாலவன் தமிழ்க்கடவுள் என்று சொல்ல சரியான தரவுகள் கிடைக்கவில்லை என்றால்//

ஏன் இந்த "என்றால்"?
அதான் விண்மீன் வாரத்தில் அடியேன் வைத்தேனே!
தொல்காப்பியருக்கும் முன்னால் செல்ல வேண்டுமானுலும் சொல்லுங்கள்! செல்லலாம்! அருமையான மறைமலை அடிகளின் கையேடு ஒன்றும் வாசிக்கக் கிடைத்துள்ளது!

//அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளவும் புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளவும் தயக்கங்கள் இல்லை//

இதற்கு அடியேனும் உடன்படுகிறேன்!
முன்னம் எழுதிய ஓலை பழுது என்றால் புத்தோலை புனைவதில் வெட்கமோ, தயக்கமோ, மறைமுகமோ ஒன்றும் கிடையாது!

பழுதெனவோ இல்லை விழுதெனவோ, இரு பக்கமும், தயக்கம் இன்றித் தரவுகள் வரவேணும் என்று இருபெரும் தமிழ்க் கடவுள்களையும் அடியேனும் வேண்டிக் கொள்கிறேன்!

நல்-அறிவால் அறிந்துன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே!
அழகான செம்பொன் மயில் மீதமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இறைவனைக் காணும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?//

வாத்தியார் ஐயா, குமரன்
நானும் ஒன்னு சொல்லிக்கட்டுமா, இங்கு?

இது குமரன் கேள்வி-பதிலா இருக்கேன்னு பாக்குறேன்!
சரி, இதன் பதிலை நானும் என் கேள்வி-பதிலில் சொல்ல முற்படுகிறேன்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெள்ளம் போல் பெருகும் அவரது கருத்துகளே அவரை நன்கு அறிமுகம் செய்து விடும்//

:-)
இதுக்கு கொத்ஸ் தான் வரணும்! நு.அ, புதசெவி எல்லாம் சொல்ல!:-)

//ஆன்மிகம் தொடர்புடைய கேள்வி - பதில் பகுதியை ஆரம்பிக்கலாமே... இது பற்றி உங்கள் எண்ணம் ?//

ஓ...துவக்கலாமே!
என்ன குமரன், கோவி அண்ணா ஆசைப்படுறாரு-ல்ல?
துவங்கலாம், வாங்க!
கேள்வியை நாம் கேட்போம்!
கோவியானந்தா பதில் சொல்வார்!
:-)))

jeevagv said...

படித்து தங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டேன் குமரன், நன்றி!

பரிசல்காரன் said...

//குடும்பத்தோட செலவழிக்க வேண்டிய நேரத்துல பதிவு எழுதுறதால குடும்பத்தைக் கொடுமைபடுத்துறோம்//

யோவ்.. என்னய்யா இது எங்க வீட்டுக்கு வந்து பாத்த மாதிரி கரீக்ட்டா சொல்லிருக்கீங்க??

ஜீவி said...

உங்கள் அடக்கம் புதிதில்லை.
அதே நேரத்தில் ஆற்றோட்டமாகப் பொருள் பொதிந்து செல்கிறது, இந்தப் பகுதி.
வாழ்த்துக்கள்..

Geetha Sambasivam said...

ரொம்பவே நீளமான?? தன் வரலாறு எனினும் படிக்கும்போது அதன் தேவையும் புரிய வைக்கிறீங்க, நல்ல பதிவு, சுய விளக்கங்களும் ஓரளவுக்குத் தேவைதான். வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

வாத்தியா ஐயா. எனக்காக இறைவனிடம் நீங்கள் கேட்கும் வரத்திற்கு மிக்க நன்றி. படித்தவுடன் சட்டென்று ஏதோ ஒன்று நகர்ந்தது போல் உணர்வு. மீண்டும் நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். அதென்ன கவி அக்காவுக்கு மட்டும் தான் வணக்கம் சொல்லுவீங்களா? வாத்தியார் ஐயாவுக்கு, பரிசல்காரனுக்கு, கோவி.கண்ணனுக்கு வணக்கம் சொல்ல மாட்டீங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? :-)

அம்மாவோட அம்மாவை 'அயிங்கர் அம்பா'ன்னு தான் சௌராஷ்ட்ரத்துல கூப்பிடுவேன். தாய்வழிப்பாட்டின்னே எப்பவும் எழுதுவேன். இந்தத் தடவை அப்படி எழுதாம அம்மம்மான்னு எழுதிட்டேன்.

எப்ப உங்க கேள்வி பதில்? எப்ப வாத்தியார் கேள்விக்குப் பதில் சொல்லப் போறீங்க?

குமரன் (Kumaran) said...

நன்றி ஜீவா.

குமரன் (Kumaran) said...

உங்க வீட்டுக்கு வந்து பார்த்தா தானா பரிசல்காரரே? வீட்டுக்கு வீடு வாசப்படி. அதே கதை தானே எல்லா இடத்துலயும். :-)

குமரன் (Kumaran) said...

பாராட்டிற்கு நன்றிகள் ஜீவி ஐயா.

குமரன் (Kumaran) said...

நன்றி கீதாம்மா.