Saturday, December 31, 2005

100: எழுத்தறிவித்தவன் இறைவன்

'எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்; எழுத்தறிவித்தவன் இறைவன்; ஆசார்ய தேவோ பவ; மாதா பிதா குரு தெய்வம்' என்று பலவிதமாக, அறிவுக்கண் திறக்கும் ஆசிரியர்களைப் பற்றி நம் பண்பாடு சொல்கிறது. குரு வணக்கம் செய்தே எந்தக் காரியத்தையும் தொடங்க வேண்டும். ஆனால் நானோ அப்படிச் செய்யாமல் 100 பதிவு வரை எழுதிவிட்டேன். நல்ல நேரத்தில் தி.ரா.ச அவர்கள் அதனை நினைவூட்டினார். அதனால் இந்த 2006 ஆண்டு தொடங்கும் இந்த நல்ல நாளில் 100வது பதிவை என் வாழ்வில் பல நிலைகளில் எனக்கு அமைந்த ஆசிரியர்களைப் பற்றியதாக எழுதலாம் என்று எண்ணி ஆரம்பிக்கிறேன்.

அம்மாவை விடச் சிறந்த ஆசிரியர் யார் உண்டு? அன்று அந்தத் தாய் என்ன விதைக்கிறாளோ அது தானே நன்கு வேர்விட்டு பெரிய மரமாக (இந்த வார நட்சத்திரத்தைச் சொல்லலீங்க) வளர்கிறது. சின்ன வயதில் அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கோவில் கோவிலாகச் சென்று கந்தர் சஷ்டி கவசம் சொன்னது நினைவில் என்றும் நிற்கிறது. தமிழையும் பக்தியையும் தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டினாள். அதன் பலனைக் காணத் தான் அவள் இன்று இல்லை. தாயே நீயே துணை. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை.

எல்லா அப்பாக்களைப் போலவே எந்தக் குறையும் தெரியாமல் வளர்த்த அதே வேளையில் வருடத்திற்கு ஒரு முறை அவரின் அலுவலக நண்பர்களுடன் இணைந்து பல ஊர்களுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று உலகத்தை சுற்றிக் காண்பித்த அப்பா அடுத்த ஆசிரியர். பழனிக்கு வருடம் மூன்று நான்கு முறை அழைத்துச் சென்று அம்மா ஊட்டிய முருக பக்தி தழைத்தோங்கச் செய்தவர். பின்னாளில் தன் மகன் பல இடங்களில் பேசுவதையும் எழுதுவதையும் கேட்டும் படித்தும் ஆனந்தக் கண்ணீர் வடித்தும் தனக்கு காயத்ரி மந்திரத்தைத் அதன் பொருளோடு மகன் சொல்லிக்கொடுத்ததும் 'தகப்பன் சாமி' என்று சொல்லி மகிழ்ந்ததும் அவன் அருள். அவர் அன்பையும் ஆசியையும் என்றும் விரும்பி நிற்கிறேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

ஒன்றாம் வகுப்பில் படிக்கும் போது எனக்கு 'ஊமைக் குசும்பன்' என்று பெயர் கொடுத்த ஆசிரியையை இன்னும் மறக்கமுடியவில்லை. அது வரை யாருமே என்னைத் திட்டியதில்லை. திட்டுவதென்ன, என்னைப் பற்றித் தவறாய்ச் சொன்னதில்லை. அன்று அந்த ஆசிரியை எங்களை எல்லாம் தானாகப் படிக்கச் சொல்லிவிட்டு புதிதாக வந்த இன்னொரு ஆசிரியையிடம் வகுப்பில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். என்னைப் பற்றி அந்த ஆசிரியை என்னச் சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவர் என்னை 'ஊமைக் குசும்பன்' என்று கூறி அதற்கு விளக்கமும் கூறியது மிக்க அதிர்ச்சியாக இருந்தது. அது ஒரு சிறந்த பாடமாய் அமைந்தது. நாம் நினைப்பது மாதிரியே எல்லாரும் நினைப்பதில்லை. அவரவர்கள் பார்வை அவரவர்களுக்கு அமையும் சூழ்நிலையைப் பொறுத்து அமைகிறது. அதனால் எல்லாவிதமான கருத்தையும் எதிர்நோக்க வேண்டும் என்பது மிகவும் உதவிய ஒரு பாடம்.

எங்கள் ஆரம்பப் பள்ளிக்குப் பக்கத்தில் ஒரு சின்ன பலசரக்குக் கடை இருந்தது. ஒரு வயதான தாத்தா அதை நடத்தி வந்தார். அவர் ஒரு நல்ல விஷயம் செய்து வந்தார். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒரு பேனாவை எடுத்துக் கொண்டு வந்தால் அதில் மையை இலவசமாக ஊற்றித் தருவார். அப்போது அது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் வளர்ந்தவுடன் அவரின் செய்கையின் நோக்கமும் படிப்பு என்பது நம் முன்னேற்றத்திற்கு எவ்வளவுத் தேவையானது என்பதும் நன்கு புரிந்தது. அவரால் முடிந்த அளவில் அவர் செய்ததைப் போல நம்மால் முடிந்த அளவில் மற்றவர் கல்விக்காக நாமும் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்த பாடம் அது.

பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், திருக்குறள், திருப்பாவை, தேவாரத் திருவாசகங்கள், திவ்யப் பிரபந்தம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் போன்ற புத்தகங்களை வீட்டில் வைத்திருந்து அவைகளைப் படிப்பதில் எனக்கு இருக்கும் விருப்பத்தை மிகச் சிறு வயதிலேயே கண்டு அதற்கு ஏற்ற ஊக்கத்தைக் கொடுத்து, கேட்ட போதெல்லாம் என் வயதிற்கு உகந்த விளக்கங்கள் கொடுத்த என் தாய் வழிப் பாட்டி அடுத்து நினைவில் நிற்பவர். மகா பாரதம் படித்து விட்டு பல இடங்களில் புரியாமல் விவகாரமான கேள்விகளைக் கேட்டு அவரை தர்ம சங்கடத்தில் பல முறை ஆழ்த்தியது நன்றாக நினைவில் இருக்கிறது. அப்போதெல்லாம் தாத்தா வந்து வேறு எதையோ சொல்லி என் கவனத்தை மாற்றிவிடுவார். அன்று கேட்ட கேள்விகளுக்கு இன்னும் சரியான விடைகள் எனக்குத் தெரியவில்லை. அதில் ஒரு கேள்வியை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.

அடிக்கடி மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு வந்து நாட்கணக்கில் கதை சொல்லி 'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்' என்பதற்கேற்ப பல விஷயங்களைச் சொல்லிப் புரியவைத்த வாரியார் சுவாமிகளை மறக்க முடியாது. பேசும் போது நடுநடுவே ஏதாவது கேள்விகளைக் கேட்டு கூட்டத்தில் இருக்கும் சிறுவர் சிறுமியர் அதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுவார். சரியாகப் பதில் சொல்லும் சிறுவர்/சிறுமியருக்கு ஒரு சின்ன நூல் பரிசாகக் கொடுப்பார். அப்படிப் பல முறை அவர் கையால் சிறு நூல்களையும் அவர் ஆசிகளையும் பெறும் பாக்கியம் கிடைத்தது. ஒரு முறை என்னுடன் யார் வந்துள்ளார் என்று கேட்ட போது நான் தனியாக வந்துள்ளேன் என்று அறிந்து கண்களில் நீர் மல்க 'நானும் ஒரு வாரமாகப் பார்க்கிறேன். முதல் வரிசையில் இந்த எட்டு வயது சிறுவன் தனியாக வந்து அமர்ந்துக் கொண்டு கூட்டம் முடிந்த பிறகே போகிறான். இவன் நிச்சயமாய் முருகன் அருளால் வருங்காலத்தில் பெரிய ஆளாய் வருவான்' என்று ஆசிர்வதித்தார். அவர் ஆசி சீக்கிரம் பலிக்கும் என்று நம்புகிறேன்.

உயர்நிலைப் பள்ளியில் என் தமிழார்வத்தைக் கண்டுகொண்டு என்னில் தனிக் கவனம் செலுத்தி எனக்குத் தமிழைச் சொல்லிக்கொடுத்த தமிழாசிரியர்கள் சுரேந்திரன் ஐயாவையும் சக்திவேல் ஐயாவையும் மறக்க முடியாது. ஏழாம் வகுப்பு முதல் மூன்று வருடம் சுரேந்திரன் ஐயா எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தார். அதற்கு அப்புறம் மூன்று வருடங்கள் சக்திவேல் ஐயா தமிழ் வகுப்பெடுத்தார். அன்று அவர்கள் சொல்லிக் கொடுத்தத் தமிழ் தான் இன்று இங்கு வலைப்பதிவுகளில் எழுதும் போது பெருந்துணையாக இருக்கிறது.

பத்தாம் வகுப்பில் எனக்கு கணிதம் சொல்லிக் கொடுத்த சுரேந்திரன் சார் அடுத்து நினைவில் நிற்கிறார். அவர் பல ஆன்மிகப் பெரியவர்களைப் பற்றிப் பல தமிழ் நூல்களை எழுதிப் பதித்திருக்கிறார். என்னையும் எழுதத் தூண்டியவர் அவர். அந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தேன். பாரதிதாசன், சுப்புரத்தின தாசன் (சுரதா), கண்ணதாசன் இவர்கள் வரிசையில் நானும் ஒரு பெரிய கவிஞனாய் வருவேன் என்று எண்ணிக் கொண்டு சுரேந்திர தாசன் (சுதா) என்ற பெயரிலும் இளங்கவி குமரன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். மற்றவர் கவிதைகளை ரசிக்க ஆரம்பித்த உடன் நான் கவிதை எழுதுவது இப்போது குறைந்து விட்டது. இன்னும் நான் எழுதியவை எதையும் நூலாகப் பதிக்கவில்லை. எதிர்காலத்தில் நடக்கலாம்.

நான் உங்களிடம் பகவத் கீதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் தயங்காமல் வீட்டிற்கு வா என்று சொல்லி வாராவாரம் பகவத் கீதையையும் திவ்யப் பிரபந்தத்தையும் எனக்குச் சொல்லிக் கொடுத்த, தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராய் இருக்கும் திரு. வாசுதேவன் எனக்கமைந்த அடுத்த குரு. வில்லிபுத்தூர் அருகில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலில் இளங்கலை பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது. ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் மதுரை அருகே இருக்கும் திருநகருக்கு வந்து அவர் இல்லத்தில் அவரிடம் தமிழும் கீதையும் கற்றுக் கொண்டேன். பல முறை அந்த வாரம் மதுரைக்கு (வீட்டிற்கு) வரவேண்டாம் என்று எண்ணியிருப்பேன். அந்த வாரங்களும் தவறாமல் திருநகர் வரை வந்து செல்வேன். அவர் அடிக்கடி சொற்பொழிவு ஆற்றுவார். எனக்கும் சொற்பொழுவு ஆற்ற ஊக்கம் தந்தார்.

நட்பு என்றால் என்ன? நண்பர்கள் எங்கே இருந்தாலும் எப்படி இருக்கவேண்டும்? என்பதை நன்றாக எனக்குப் புரியவைத்தவர்கள் தற்போது குஜராத்தில் இருக்கும் என் நண்பன் குமரனும் வெர்ஜினியாவில் இருக்கும் என் நண்பன் கார்த்திகேயனும். பல விஷயங்கள் அவர்களிடம் கற்றுக் கொண்டுள்ளேன். அவற்றை எல்லாம் சொன்னால் மிக விரிவாய்ப் போய்விடும்.

வேலை பார்க்க ஆரம்பித்தப் பிறகு எத்தனையோ ஆசிரியர்கள். எனக்கு வேலை கொடுத்தவர்கள், என்னுடன் வேலை பார்த்தவர்கள், என்னிடம் வேலை பார்த்தவர்கள் என்று நிறைய பேரிடம் அவர்கள் நேரே சொல்லியும் அவர்கள் செய்வதைக் கவனித்தும் கற்றுக் கொண்டவை ஏராளம். கற்றுக் கொள்வது கடைசிக் காலம் வரை நடப்பது அல்லவா? அதனால் இனிமேல் வரப்போகும் ஆசிரியர்களையும் இப்போதே வணங்கிக் கொள்கிறேன்.

இன்னும் நிறைய பேரைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஆனால் பதிவு மிக விரிவாகச் செல்கிறது. அதனால் அவர்கள் பெயர்களை மட்டும் கூறிக்கொண்டு விரிக்காமல் விடுகிறேன்.

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர், பகவான் ஸ்ரீ ரமணர், ஸ்ரீ அரவிந்த மகரிஷி, அன்னை மிரா, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள், ஸ்ரீ நடனகோபால நாயகி சுவாமிகள், இப்படி பல மகான்கள் எழுதியதைப் படித்தும் கேட்டும் பல விஷயங்கள் புரிந்தன.
பத்தாவது படிக்கும் போது வந்த ஒரு கனவு நினைவிற்கு வருகிறது. வீதியில் ஏதோ ஒரு பேராரவாரம். வீட்டு வாசலில் வீட்டில் இருக்கும் எல்லோரும் நின்று கொண்டிருக்கின்றனர். என்னவென்றால் ஒரு மகான் வந்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். அவர் எங்கள் வீட்டிற்கு முன் வந்தவுடன் என்னை அறியாமல் நான் அவர் முன் சென்று நமஸ்கரிக்கிறேன். யாரோ ஒருவர் ஒரு சிறு நாற்காலியைக் கொண்டு வந்து போடுகிறார்கள். அதில் அந்தப் பெரியவர் அமர்ந்து கொண்டு கீழே விழுந்து வணங்கிக் கொண்டிருக்கும் என் தலையில் தன் கால்களை வைக்கிறார். பின்புலத்தில் கீதையின் பெருமையைப் பேசும் சுலோகத்தை ஒருவர் சொல்கிறார். கனவு கலைந்தது. அப்படி கனவில் வந்து கீதையை படி என்று சொல்லாமல் சொல்லி எனக்குப் பாத தீட்சை கொடுத்தவர் ஆசார்யர் என்று சொன்னவுடனே எல்லாருக்கும் நினைவிற்கு வருபவர்.

என்ன புண்ணியம் செய்தேனோ? சத்குரு நாதா
எத்தனை தவம் செய்தேனோ? உன் அருள் பெறவே (என்ன)

பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும் உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது (என்ன)

அவர் இவரே.



குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஷ்வர:
குருர் சாக்ஷாத் பரப்ரம்ஹ:
தஸ்மை ஸ்ரீ குரவே நம:

99: தெய்வீக எண்

எண்களில் ஒன்பதாம் எண்ணுக்கு ஒரு தனிப் பெருமை உண்டு. இந்த எண்ணை தெய்வீக எண் என்றும் கூறுவர்.

உயர்வற உயர்நலம் உடையவன் இறைவன்; அவனைக் குறிக்க எண்களிலேயே உயர்ந்த எண்ணாகிய ஒன்பது தானே பொருத்தமான எண்.

இந்த எண்ணுடன் வேறு எந்த எண்ணைக் கூட்டினாலும் எந்த எண்ணைக் கூட்டினோமோ அந்த எண்ணே மிகும். எடுத்துக்காட்டுகள்: 9 + 5 = 14 = 1+4 = 5; 9+3 = 12 = 1+2 = 3; இப்படி தன்னுடன் எந்த எண்ணைக் கூட்டினாலும் தான் மறைந்து அந்த எண்ணை வெளிப்படுத்திக் காட்டுவதால் அது இறையைக் குறிக்கும் எண் என்பர்; இறையும் தன்னை மறைத்து தன்னைச் சார்ந்து நிற்கும் பிறவற்றை வெளிப்படுத்துகிறதே.

அதே போல் இந்த எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டைப் பார்த்தால் இன்னும் ஒரு உண்மை விளங்கும். இந்த எண்ணை வேறு எந்த எண்ணோடு பெருக்கினாலும் விடையாக வரும் எண் ஒன்பதாய்த் தான் இருக்கும். எடுத்துக்காட்டுகள்: 9 * 5 = 45 = 4+5 = 9; 9*11 = 99 = 9+9 = 18 = 1+8 = 9. இப்படி மற்ற எண்களை எல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டு தான் மட்டுமே நிலையாய் நிற்பதால் இந்த எண் இறையைக் குறிக்கிறது என்பதில் என்ன சந்தேகம்?

பழந்தமிழில் இந்த எண்ணுக்குத் தொன்பது என்பது பெயர் என்று படித்துள்ளேன். தொன்மையான இறைவனைக் குறிக்கும் எண் தொன்பதாய்த் தானே இருக்க முடியும்? அந்தப் பெயர் எப்படியோ ஒன்பது என்று மறுவிவிட்டது. ஆனால் தொன்னூறு, தொள்ளாயிரம் எல்லாம் இன்னும் வழக்கில் இருக்கிறது.

தொன்னூற்றித் தொன்பதாம் பதிவில் தொன்பதைப் பற்றி பேசக் கிடைத்தது அந்தத் தூயவன் அருளே. அவனைப் பணிந்து இந்த 2005 வருடத்தை இனிதே முடித்து புது வருடம் எல்லார்க்கும் எல்லா நன்மையும் தர வேண்டும் என்று பணிந்து வாழ்த்துவோம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

எல்லார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Thursday, December 22, 2005

85: துளசி தளம்

துளசியைப் பற்றி நம்மில் பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கும். நம் பக்தி இலக்கியங்களிலும் துழாய் மாலை, துழாய் அலங்கல் என்றப் பெயரில் துளசி மிகவும் பெருமையாகப் பாடப்பட்டிருக்கும். கீதையில் கண்ணன் சொல்லும் 'பத்ரம், புஷ்பம், பலம், தோயம்...', 'இலை, பூ, பழம், நீர் இதில் எதையெனக்குச் சமர்ப்பித்தாலும் அதனை அதன் பின் உள்ள பக்தியை முதற்கொண்டு நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்கிறேன்' என்பதில் இலை இந்த துளசியைத் தான் குறிக்கிறது என்றும், துளசி கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதனை முதலில் சொன்னான் என்றும் படித்துள்ளேன். புனிதமான இந்தத் துளசி காலம் காலமாக நம் நாட்டில் ஒரு மூலிகையாகவும் பயன் படுத்தப் பட்டுள்ளது. ஜலதோசம் (இதற்குத் தமிழில் என்ன சொல்வது?) இருக்கும் போது சிறிது துளசியைப் பறித்து உண்டால் ஜலதோசம் குறையும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த மூலிகையைப் பெருமாள் கோவில் போகும் எல்லாருக்கும் கிடைக்கும்படியும் நம் முன்னோர்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்.

அண்மையில் ஒரு ஆங்கில மாத இதழில் துளசியின் மருத்துவ குணங்களைப் பற்றி மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைப் பற்றிப் படித்தேன். இது நாள் வரை மேலை நாடுகளில் தக்காளி சூப்பில் மட்டும் பேசில் எனப்படும் துளசியை உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். இனிமேல் அதனை, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவதற்காக தேனீருடனும் கலந்து சாப்பிடலாம் என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு கொடுக்கிறேன்.

இனிமேல் துளசி தக்காளி சூப்பிற்கு மட்டும் உரியதன்று. நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்க ஒரு கோப்பை துளசி கலந்தத் தேனீரைக் குடிக்கலாம். இதயத்தைக் காக்க அந்த மூலிகையை காய்கறிச் சாறுடன் கலந்துக் குடிக்கலாம். அல்லது உங்கள் மனம் சிறிது குழப்பமுறும்போது அதனை அமைதிப்படுத்தத் துளசிச் செடியை வீட்டில் வைத்திருந்தால் அதன் மணம் உதவலாம்.

இந்தியாவில் இந்த புனித பேசிலுக்குத் துளசி என்று பெயர். அதன் பொருள் 'இணையற்றது' என்பது. மிகப் புனிதமாகக் கருதப்படும் இந்தத் துளசி சமய சம்பந்தமாகப் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது. எந்த வீட்டில் இந்தச் செடி உள்ளதோ அந்த வீடு துளசியால் பாதுகாக்கப் படுகிறது என்று நம்பப்படுகிறது. ஆயுர்வேத பாரம்பரியத்தில் துளசி, மனதையும் இதயத்தையும் ஆன்மீகப் பாதைக்கு ஏற்ப பண்படுத்துவதில் தலைசிறந்த மூலிகை என்றும், ஜலதோசத்தையும் காய்ச்சலையும் குறைக்கவல்லது என்றும், நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்து என்று சொல்லப்படுகிறது.

நவீன (மாடர்ன்) ஆராய்ச்சிகள் இரண்டு விஷயங்களை முன் வைக்கிறது . (1) இந்த மூலிகையில் மிகச் சக்தி வாய்ந்த 'ஆன்டிஆக்சிடன்ட்ஸ் antioxidants' - உடல் முதிர்ச்சி அடைவதற்குக் காரணமான ஆக்சிடன்ட்ஸ்களை குறைக்கும் சக்தி இருக்கிறது. அது இதயத்தையும் அது சார்ந்த மற்ற உறுப்புகளையும் பாதுகாக்கிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. (2) சுற்றுச் சூழலால் பாதிக்கப் பட்ட, பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்பட்ட நுரையீரலை அந்தப் பாதிப்பில் இருந்து மீட்டு நன்கு ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகிறது.

ஆரம்பக்கட்ட ஆராய்ச்சிகள் இன்னும் சில விஷயங்களைச் சொல்கின்றன. வயிற்றுப் புண்ணைக் குணமாக்க துளசியைப் பயன்படுத்திப் பார்க்கிறார்கள். நீரிழிவு நோய் உடையவர்களுக்கு துளசியைக் கொடுத்தால் அவர்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதைக் கண்டிருக்கிறார்கள். அண்மையில் துளசிச் சாறு பூச்சிக்கடிகளையும் புரையோடிய புண்களையும் ஆற்றுவதற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எந்தவிதமான பின்விளைவுகளும் துளசியால் ஏற்பட்டதாக இந்த ஆராய்ச்சிகளில் தெரியவில்லை.

Natural Health (October 2005 issue) என்ற புத்தகத்தில் வந்த கட்டுரையின் தமிழாக்கம்.

-----------------------------------------------------------------------------

இந்த வார நட்சத்திரம் துளசி அக்காவைப் பற்றியப் பதிவு இது என்று எண்ணி உள்ளே வந்திருந்தால் மன்னிக்கவும். இந்தக் கட்டுரையை இரண்டு மாதங்களுக்கு முன்பே படித்து இதை இங்கு எழுதவேண்டும் என்று எடுத்துவைத்திருந்தேன். அதனை இந்த வாரத்தில் எழுதியது தற்செயலானது இல்லை என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். (அவர் மீது விழும் போகஸ் லைட் என்மீதும் சிறிது விழட்டுமே) :-)

Tuesday, December 06, 2005

73: அதற்குத் தக

அதிகாலை நேரம். திருவள்ளுவர் தன் குடிலில் அமர்ந்திருக்கிறார். புதிதாய் ஒரு மாணவன் நேற்று தான் சேர்ந்தான்.

புதிய மாணவன்: ஐயனே. நான் என்ன செய்ய வேண்டும்?

திருவள்ளுவர்: கற்க

மாணவன் (மனதில்): 'கற்க' என்று ஒற்றைச் சொல்லில் சொல்லிவிட்டாரே. நம்மையும் அதற்காகத்தான் நம் பெற்றோர் அனுப்பியுள்ளனர். ஆனால் ஏன் கற்கவேண்டும் என்று நம் பெற்றோர் சொல்லவில்லை. ஆசானைக் கேட்போம்.

மாணவன்: ஐயா. ஏன் கற்கவேண்டும்?

திருவள்ளுவர்: கசடற

மாணவன் (மனதில்): இதற்கும் ஒரு சொல்லில் பதில். ஆனால் தெளிவான பதில். நம் புத்தி, மனம், சொல், மெய் இவற்றில் உள்ள கசடுகள், குற்றங்கள், அழுக்குகள் நீங்க கற்கவேண்டும் என்று சொல்லிவிட்டார். சரி. அடுத்து ஒரு கேள்வி வருகிறதே.

மாணவன்: ஐயனே, நம் கசடு அற கற்கவேண்டும் என்று அருளினீர். எப்படி கற்கவேண்டும்?

திருவள்ளுவர்: கசடற

மாணவன் (மனதில்): இதற்கும் கசடற என்கிறாரே. நம் குற்றங்கள் நீங்க, படிப்பதைக் குற்றமின்றி படிக்கவேண்டும் என்கிறார் போலும். மிக்க சரி. படிப்பதை தவறான பொருள் கொண்டு எத்தனைப் பேர் படிப்பதாய் கேட்டுள்ளோம். அதைத்தான் ஐயன் குறிப்பிட்டு, குற்றமின்றி கற்க என்கிறார்.

மாணவன்: ஐயா, எதைக் கற்கவேண்டும்.

திருவள்ளுவர்: கற்பவை கற்க

மாணவன் (மனதில்) : கற்பவை கற்க. மூத்தோர் எதனைக் கற்கிறார்களோ அதனைக் கற்க. மூத்தோர் கற்பவை கற்க. மூத்தோர் எதனை கற்கவேண்டும் என்று சொல்கிறார்களோ அதனைக் கற்க. களவும் கற்று மற என்பார்கள். ஆனால் அது 'கற்பவை'யில் அடங்காது. எனவே மூத்தோர் வழி நடந்து அதனையும் அது போன்றவற்றையும் கற்க கூடாது.

மாணவன்: ஐயனே. கற்பவைகளைக் குற்றமின்றி நம் குறைகள் நீங்கக் கற்கவேண்டும் என்று அருளினீர். அப்படி கற்றவுடன் நம் குறைகள் எல்லாம் நீங்கிவிடுமா? இல்லை வேறு எதுவும் செய்ய வேண்டுமா?

திருவள்ளுவர்: கற்றபின் நிற்க அதற்குத் தக.

-------------------------------------------------------------

என் மனதில்: இந்த கடைசியில் சொன்னது தான் நமக்குப் பிரச்சனையே. எத்தனையோ படிக்கிறோம். படிப்பது எளிதாய் இருக்கிறது. அதனை மற்றவர்க்கும் சொல்கிறோம். சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்ன்னு சொன்னபடி 'நிற்க அதற்குத் தக' தான் நமக்கு கொஞ்சம் ஆட்டம் காண்கிறது. என் செய்ய?

Saturday, December 03, 2005

71: நன்றே செய்மின் அதை இன்றே செய்மின் - 2

துளசி அக்கா என் 'நன்றே செய்மின் அதை இன்றே செய்மின்' பதிவுக்குக் கொடுத்திருந்த பின்னூட்டத்தை இப்போது தான் படித்தேன். அந்த பின்னூட்டத்தில் 'இன்றே செய்மின் இல்லை குமரன். இப்போதே செய்மின்; இந்தக்கணமே செய்மின்' என்று இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார். அது எவ்வளவு உண்மை என்பது dreamindia2020 நண்பர் வருண் அனுப்பிய ஒரு சோகச் செய்தியில் இருந்து தெரிகிறது. அந்த சோகச் சம்பவத்தைப் பற்றி வருண் அவருடைய ஆங்கில வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.

Monday, November 21, 2005

58: நன்றே செய்மின் அதை இன்றே செய்மின்...

அதிகாலை நேரம். நேற்று இரவு ஒரு நல்ல பாலகுமாரன் நாவல் படித்ததால் இரவு தூங்குவதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது. அதனால் என்ன? வழக்கம் போல் அதிகாலையில் எழுந்தால் தானே வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அலுவலகம் செல்ல முடிகிறது. இன்றும் காலை எழுந்ததில் இருந்து ஒரே வேலை. இன்று அவசியம் காய்கறி வாங்க சந்தைக்குப் போகவேண்டும். காலையில் போனால் தான் புத்தம் புதிதாய் வந்த காய்கனிகள் கிடைக்கும். அதனால் எத்தனை வேலை இருந்தாலும் மற்றவர் போல் மாலையில் சந்தைக்குப் போகாமல் முடிந்தவரை காலையிலேயே போவதை வழக்கமாய் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

இதோ சந்தைக்கு வந்தாயிற்று. நல்லவேளை. இன்றைக்குச் சந்தையில் அவ்வளவாய் கூட்டம் இல்லை. சனி ஞாயிறு என்றால் ஆற அமர காய்கனிகளைத் தேர்ந்தெடுத்து பேரம் பேசி வாங்கலாம். ஆனால் இன்றோ அலுவலகம் செல்லவேண்டும். அதனால் அவசர அவசரமாய் எங்கெங்கு நல்ல காய்கறி தென்படுகிறதோ அங்கெல்லாம் அவ்வளவாய் பேரம் பேசாமல் வாங்கிவிட்டு போகவேண்டியது தான்.

அது யார்? புதிதாய் ஒரு பாட்டி தெருவோரம் எதையோ விற்றுக்கொண்டிருக்கிறாளே? இதுவரை அவரை இங்கு பார்த்ததில்லை. முள்ளங்கி மட்டும் தான் வைத்துக்கொண்டிருக்கிறார். நன்றாய் வெள்ளையாய் நீளமாய் ஒல்லியாய் இளசாய் இருக்கிறது. சாம்பாரோ குழம்போ வைத்தால் நன்றாய் இருக்கும்.

என்னைப் பார்த்தவுடன் பாட்டி 'ஒன்னு ஒரு ரூபாதான். எடுத்துக்கோ சேட்டு' என்றாள். குரல் மிகவும் நடுங்கியது. ஒரு 80, 90 வயதாவது இருக்கும். நான் ஒன்றும் சொல்லவில்லை. இந்த தள்ளாத வயதில் காய்கறி விற்கும் படி என்ன கஷ்டமோ?

'சேட்டு. நீ தான் போணி பண்ணி வைக்கணும். மூனு ரெண்டு ரூபாக்கு குடுக்கறேன். வாங்கிக்கோ' . இன்னும் நான் முள்ளங்கிகளையும் அந்த பாட்டியையும் மாறி மாறி பார்த்துகொண்டிருந்தேன்.

ஒரு ஆறு முள்ளங்கிகளை எடுத்துக் கொண்டு 'இத எல்லாமே எடுத்துக்கோ சேட்டு. அஞ்சு ரூவா குடு போதும். எல்லாத்தையும் அப்படியே சாப்புடலாம். அவ்வளவு எளசு' என்றாள். இதற்கு மேல் பாவம் ஒன்றும் சொல்லாமல் இருக்கக்கூடாது. அவருக்கு ஏதோ அவசரம். சீக்கிரம் விற்றுவிட்டுப் போக விலையை குறைத்துக்கொண்டே போகிறார். என்னை சேட்டு என்று வேறே நினைத்துவிட்டார் போல. அது தான் முள்ளங்கியை அப்படியே தின்னலாம் என்கிறார்.

'பாட்டி. நான் சேட்டு இல்ல. தமிழ் தான். அந்த ஆறு முள்ளங்கிய குடுங்க' என்றேன்.

'அப்படியா தம்பி. செவப்பா குண்டா பாத்தவுடனே சேட்டுன்னு நெனச்சேன்' என்றார். நான் சிரித்து விட்டு 5 ரூபாய் கொடுத்துவிட்டு அந்த முள்ளங்கிகளை வாங்கிக்கொண்டேன்.

'உங்கள இதுவரைப் பார்த்ததே இல்லையே. புதுசா வந்திருக்கீங்களா?'

'இல்லியேப்பா. நான் எப்பவும் இங்கயே தான் உக்காந்திருப்பேன். நீதான் இந்தப் பக்கமே பாக்கறதில்ல.'

'அப்படியா பாட்டி' என்று சிறிது வழிந்துவிட்டு வந்துவிட்டேன். அவருக்கு என்ன கஷ்டம் என்று கேட்க நினைத்தும் ஏதோ ஒன்று கேட்கவிடாமல் தடுத்தது. நீதான் இதுவரை என்னை பார்க்கவில்லை என்று சொன்னாரே அதுவாய் இருக்குமோ? இருக்கலாம். எனக்கு கண் தெரியவில்லை என்றல்லவா சொல்லிவிட்டார். அவர் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? நமக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. நாமுண்டு நம் வேலை உண்டு என்று இருக்கவேண்டியது தான்.

-----------------------------------------

கடந்த மூன்று வாரங்களாக சந்தை பக்கமே போகவில்லை. சரியான வேலை. இருக்கும் காய்கறிகளை வைத்து காலம் தள்ளியாச்சு. ஆனால் அந்த பாட்டியை பற்றிய கேள்வி மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. நாம் அப்பொழுதே அந்த பாட்டிக்கு என்ன கஷ்டம் என்று கேட்டு ஏதாவது முடிந்த அளவு உதவி செய்திருக்க வேண்டும். ஏன் தான் இப்படி இருக்கிறோமோ? இந்த நான் என்ற எண்ணத்தை அந்த ஏழைக்கிழவியிடம் கூடக் காண்பிக்கவேண்டுமா? நாமெல்லாம் என்ன மனித ஜென்மமோ? சுற்றி எத்தனையோ பேர் கஷ்டப்படும்போது முடிந்த உதவி செய்யாமல் நமக்கென்ன என்று வந்துவிடுகிறோம்.
இன்றைக்கு அவசியம் சந்தைக்குப் போகவேண்டும். போகும்போது நிச்சயமாய் அந்தப் பாட்டியைப் பற்றி விசாரித்து ஏதாவது உதவி செய்யவேண்டும்.

எங்கே அந்தப் பாட்டியைக் காணோமே? தினமும் இங்கு தான் உட்கார்ந்திருக்கிறேன் என்று பொய் தான் சொன்னார் போல. வாரத்திற்கு ஏதோ ஒரு நாள் வருவார் என்று நினைக்கிறேன். இதற்கு முன் நான் வரும் போதெல்லாம் அவர் வந்ததில்லை போலும்; அதனால் தான் நான் பார்க்கவில்லை.

அந்தப் பாட்டி உட்கார்ந்திருந்த பாதை ஓரம் இருந்த கடைக்காரரிடம் அவரைப் பற்றி விசாரித்தேன்.

'இங்க ஒரு பாட்டி உக்காந்திருந்துச்சே. எங்க அந்தப் பாட்டி?'

'அந்தப் பாட்டிக்கு என்ன சார். சந்தோசமா போய் சேந்துருச்சு'.

ஓ....அந்தப் பாட்டிக்கு எந்த கஷ்டமும் இல்லையோ; நாம் தான் தேவையில்லாமல் கற்பனை செய்து கொண்டோமோ? யாரோ மகனோ மகளோ இல்லை வேறு உறவுக் காரர்களோ அவரை சந்தோசமா வைத்திருக்கிறார்கள் போல. அந்த கடைக்காரர் என் பதிலை எதிர்பார்க்காமல் மேலும் தொடர்ந்தார்.

'அந்த பாட்டி தினமும் இங்கன உக்காந்து தான் வித்துகிட்டு இருக்கும். அது போயி மூனு வாரம் போல ஆச்சே. என்னைக்கு சார் நீங்க பாத்தீங்க'

'நானும் ஒரு மூனு வாரத்துக்கு முன்னால பாத்தேன். அவங்க தினமும் வர்றவங்க தானா?'

'ஆமாம் சார். சின்ன வயசிலயே புருசங்காரன் செத்துபோயிட்டான். ரெண்டு பொண்ணுங்க. கஷ்டப்பட்டு அவங்களை வளத்து கல்யாணமும் பண்ணி குடுத்தாச்சு. அதுக்கப்பறமும் கஷ்டப்பட்டு இந்த காய்கறி வியாபாரம் செஞ்சுகிட்டு இருந்தாங்க. செத்து போற கடைசி நா வரைக்கும் கஷ்டப்பட்டு எப்படியோ இப்ப சந்தோசமா போய் சேந்துட்டாங்க'.

ஓ...அந்த சந்தோசமா போய்ச் சேர்வதைத் தான் அந்த கடைக்காரர் சொன்னாரா? மனம் பாரமாய் இருந்தது. வேறு ஒன்றும் சொல்லாமல் நடையைக் கட்டினேன்.

Tuesday, November 15, 2005

55: நாளும் கோளும் குமரேசர் இரு தாளும்

கார்த்திகையில் கார்த்திகை நாளாம் இன்று கார்த்திகேயனின் புகழ்பாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று கார்த்திகை மாதம் பிறக்கிறது. இந்த வருடம் கார்த்திகை மாத முதல் நாளே பௌர்ணமி திதியாகவும் கார்த்திகை நட்சத்திரமாகவும் அமைந்துள்ளது மிகச்சிறப்பு.

நண்பர் இராகவன் தன் 'இனியது கேட்கின்' வலைப்பதிவில் இந்தப் பாடலைப் பற்றி ஒரு பதிவு இட்டுள்ளார். அந்த பாடலுக்கு மேலும் விளக்கம் கூறலாம் என்றவுடன் நீங்களே கூறுங்கள் என்று சொல்லிவிட்டார். கரும்பு தின்ன கூலியா? இதோ அவன் அருளை முன்னிட்டு அவன் புகழைப் பேசலாம் என்று கிளம்பிவிட்டேன்.

நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!!!


இந்த உலகத்தில் எந்த நல்ல காரியம் செய்வதென்றாலும் நல்ல நேரம் பார்த்துச் செய்வது தான் வழக்கம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது போன்ற பழமொழிகள் இந்த வழக்கத்திலிருந்து வந்தவைதான். இந்த மாதிரி ஒவ்வொரு வார நாட்களுக்கும், சந்திரனின் சுற்றில் வரும் 15 திதிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் தங்கள் அனுபவத்தில் கண்ட பலன்களைச் சொல்லி வைத்துள்ளனர் நம் பெரியோர். நல்ல நாளில் நல்ல நேரத்தில் நல்ல காரியத்தைத் துவக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றனர்.

ஆனால் நாளடைவில் இந்த நல்ல பழக்கம் ஒரு மூட நம்பிக்கை அளவு வளர்ந்து நல்ல காரியம் செய்வதற்கே தடையாய் பல நேரம் அமைந்துவிடுகிறது. நல்ல காரியம் எப்போதுமே நன்மையிலேயே முடியும். அதை நல்ல நேரத்தில் துவங்கினால் நன்மை மிகுதியாய்க் கிடைக்கும் என்பதே நாள் பார்க்கும் வழக்கத்தின் பொருள். ஆனால் அது நல்ல காரியம் செய்வதற்கே தடையாய் வந்தால் அந்த வழக்கத்தையே தூர எறிய வேண்டியது தான்.

நாளுக்கு பிறகு, ஒருவனுடைய முயற்சி வெற்றியடைவது அவனவன் முன்னர் செய்துள்ள நல்வினைத் தீவினைப் பயனை ஒட்டியே உள்ளது. அவன் நல்வினை அதிகம் செய்திருப்பின் அவன் முயற்சி சீக்கிரம் பலன் தருகிறது. தீவினை அதிகம் என்றால் சிறிது தாமதம் ஏற்படுகிறது. ஆனால் தெய்வப்புலவர் சொன்னது போல் 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்ப நவகோள்கள் பலன் தருகிறார்கள் என்பது நம் நாட்டவரின் நம்பிக்கை. நல்வினைகளின் பலன் பெருகவும் தீவினைகளின் பலன் குறையவும் நவகோள்களை வழிபட்டால் நல்லது என்றும் நம் நாட்டவர் நம்புகின்றனர்.

போகும் நேரம் வந்தால் கூற்றுவன் வந்து அழைத்துக் கொண்டு போய்விடுவான். என்னை விட்டுவிடு; அதோ அவன் என்னை விட வயதில் மூத்தவன்; நான் இன்னும் நிறைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பலவாறாகக் கெஞ்சினாலும் எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் அந்த கொடுங்கூற்றுவன் தன் கடமையை நிறைவேற்றிவிடுவான்.

ஆனால் முருகப் பெருமான் அருள் இருந்தால் இவை அனைத்தின் பாதிப்பிலிருந்தும் நாம் தப்பலாம் என்கிறார் அருணகிரிநாதர்.

குமரேசரின் இரண்டு திருவடிகளும், அந்த திருவடிகளில் விளங்கும் சிலம்பும், சதங்கையும், தண்டையும், அவனுடைய ஆறு திருமுகங்களும், திரண்ட பன்னிரு தோள்களும், அந்த தோள்களின் மேல் அணிந்த கடம்ப மாலையும், எனக்கு முன் வந்து தோன்றினால் நாள் என்னை என்ன செய்யும்? என்னுடைய நல்வினை தீவினைகள் தான் என்ன செய்யும்? என்னைத் தேடி வந்து என் வினைகளுக்கு ஏற்ப பலன் கொடுக்கும் நவகோள்கள் தான் என்ன செய்யும்? கொடிய யமன் தான் என்ன செய்யமுடியும்? ஒன்றும் செய்ய முடியாது - என்கிறார் அருணகிரிநாதர்.

அதென்ன குமரனின் அழகை வர்ணிக்கும் போது காலுக்கும், முகத்துக்கும், தோளுக்கும் தாவுகிறாரே என்றால் அதற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. நாம் நாளையும், வினையையும், கோளையும், கொடும் கூற்றையும் எண்ணி நடுங்கும் போது 'யாமிருக்கப் பயமேன்' என்று அவன் வருவதை நமக்கு முதன்முதலில் சொல்வது அவன் இரண்டு தாள்களும் அதில் அவன் அணிந்துள்ள ஓசை மிகுந்த சிலம்பும், சதங்கையும், தண்டையும் தானே. அதனால் அவற்றை முதலில் பாடுகிறார்.

அப்படி அவன் நம் முன்னே வந்தவுடன் நமக்குத் தெரிவது அவனது ஆறு முகங்களும் தான். அதனால் அதனை அடுத்துப் பாடுகிறார். பின்னர் தான் அவனது அழகிய பன்னிரு தோள்களும் அவற்றின் மேல் அவன் அணிந்துள்ள மணம் மிகுந்த கடம்ப மாலையும் தெரிகிறது.

சரி எப்போது இது நடக்கும்? நாம் எப்போது நம் நினைவில் அவனை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கிறோமோ அப்போது நடக்கும். அப்படி நாம் அவனை எப்போதும் நினைத்தால் நமக்கு அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்.

சரி எப்படி நாம் அவனை எப்போதும் நம் நினைவில் வைத்துக்கொள்வது? அவன் தாளை நாம் வணங்கினால் அது நடக்கும்.

சரி நான் நினைத்தால் அவன் தாளை வணங்கிவிட முடியுமா? எத்தனையோ மயக்கங்கள் இருக்கின்றனவே எனைத் தடுக்க? உண்மைதான். அவன் அருளாலேயே அவன் தாள் வணங்க முடியும். அதனால் தான் அருணகிரியும் 'தோன்றிடினே' என்கிறார். நான் அவனைத் தோன்றவைக்கவில்லை. அவன் தனது அருளாலே தானாய்த் தோன்றினால் நாள் என் செயும்.... என்கிறார்.

அப்படி என்றால் நாம் என்ன தான் செய்வது? அவன் தாள் வணங்க அவன் அருளை வேண்டுவதே நாம் இப்போது செய்யக்கூடியது. அதுவே நாம் அவனை அடைய முதற்படி.

Thursday, November 10, 2005

தமிழ்மணக்கும் 50!!!

திக்கெட்டும் பரவி செந்தமிழ் முழங்கும் நம் தமிழ்மண அன்பர்களின் ஆதரவால் இதோ எனது ஐம்பதாவது வலைப்பூ தமிழ் மணத்துடன் தமிழ்மணத்தில் மலர்கிறது. நண்பர் சிவா (சிவபுராணம்) இந்த வருடம் காந்தி ஜெயந்தி அன்று 'ஏன் குமரன்...நீங்களும் ஏன் வலைப்பதிக்கக் கூடாது' என்று கேட்ட அந்த நேரம் நல்ல நேரம் போலிருக்கிறது. மறுநாள் (Oct 3, 2005) ஆரம்பித்தப் பயணம் இதோ இந்த ஆறாவது வாரத்தில் ஐம்பதாவது வலைப்பூவில் வந்து நிற்கிறது.

தமிழ்மணத்தில் எனக்கு எந்த எந்த வலைப்பதிஞர்களின் பதிவுகள் பிடிக்கும் என்று பட்டியலிட ஆசையாகத் தான் இருக்கிறது. ஆனால் அது இந்தப் பதிவை எல்லையில்லாமல் நீட்டிவிடும் என்பதால் சொல்லாமல் விடுகிறேன். நான் எந்த வலைப்பூக்களை விரும்பிப் படிக்கிறேன் என்பதை என்னிடம் பின்னூட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும் தெரியும்.

இப்படி ஒரு திரட்டியை உருவாக்கி தமிழன்பர்கள் எங்கிருந்தாலும் தமிழை ஆசை தீரப் பருக வழிவகை செய்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு என் அன்பான நன்றிகலந்த வணக்கங்கள். எல்லோரும் சொல்வது தான் என்றாலும் 'நன்றி மறப்பது நன்றன்று' அல்லவா?

இந்த வாரம் ஒரு நல்ல வாரமாய் எனக்கு அமைந்தது. முதலில் நம் பட்டங்களின் நாயகி அக்கா மதுமிதா தமிழ் மணத்தில் எழுதும் பலருக்கு பட்டங்களை வாரி வழங்க ஆரம்பித்தார். எனக்கு 'சகலகலா சமரச சத்வ பாரதி' என்ற பட்டம் கொடுத்தார். இந்தப் பட்டத்திற்கு என்ன பொருள் என்று அக்காவுக்கு மட்டுமே புரியும் என்று எண்ணுகிறேன். :-) உங்களில் யாருக்காவது புரிந்தால் தயை செய்து சொல்லுங்களேன்.

நண்பர் சிவா 'ஏன் குமரன். நீங்கள் தான் எல்லா செய்யுளுக்கும் விளக்கம் கொடுக்கிறீர்களே. இந்தப் பட்டத்திற்கும் விளக்கம் கொடுத்தால் என்ன?' என்கிறார். அப்படித்தான் செய்ய வேண்டும் போல என்றவுடன் அவர் தன் பங்குக்கு 'விளக்கத் திலகம்' என்ற பட்டம் கொடுத்துவிட்டார். இப்போது எனக்கு ஒரே குழப்பம். எந்தப் பட்டத்தை ஏற்றுக் கொள்வது என்று. நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எனக்குச் சொல்கிறீர்களா? ஆனால் நண்பர் ராம்கியிடம் சொல்லவேண்டாம். பட்டத்திற்கு அலைகிறேன் என்று திட்டப் போகிறார். :-)

இன்னொரு விஷயத்தையும் இந்த வாரம் கவனித்தேன். என் எல்லாப் பதிவுகளும் தமிழ்மண அன்பர்களில் ஆதரவால் 'வாசகர் பரிந்துரைத்த 25'ல் வருவதைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. பின்னூட்டம் இடாவிட்டாலும் வாக்களித்து ஆதரவு காட்டும் எல்லா தமிழன்பர்களுக்கும் நன்றிகள்.

இரண்டு நாட்களுக்கு முன் அலுவலக வேலையில் மூழ்கியிருக்கும் போது மதுரையில் இருந்து தம்பி தொலைப்பேசினான். தினமலரில் என் வலைப்பதிவு ஒன்றைப் பற்றி குறிப்பிட்டுள்ளதாகச் சொன்னான். எனக்கு ஆன்மிகத்திலும் தமிழிலும் சம்ஸ்கிருத்திலும் ஆவலை சிறு வயதிலேயே ஏற்படுத்திய என் தாயைப் பெற்ற தாய் அந்த செய்தியை தினமலரில் கண்டு தம்பியிடம் சொல்லியிருக்கிறார். என் பாட்டியின் குரலில் தெரிந்தப் பெருமையும் சந்தோசமும் பார்க்க (கேட்க?) மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
இப்படி இந்த வாரம் முழுவதும் நல்ல செய்திகளாகவே வந்து கொண்டு இருக்கிறது. இதோ இப்போது ஐம்பதாவது வலைப்பூவும் மலர்கிறது.

ஒரே வலைப்பதிவால் தமிழ்மண அன்பர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்ற அக்கா பட்டங்களின் நாயகி, பட்ட வள்ளல் மதுமிதா அவர்கள் கொடுத்த பட்டங்கள் வீணாய்ப் போகக்கூடாது அல்லவா? அதனால் பட்டம் பெற்ற எனக்குத் தெரிந்த எல்லாருக்கும் அவர்களின் பட்டத்தைச் சொல்லி ஒரு முறை நன்றி கூறிக்கொள்கிறேன்.

பொறுமையின் சிகரம் காசி அவர்களே, ந்டத்துனர் திலகம் மதி கந்தசாமி அவர்களே, நடுநிலை நாயகன் ராம்கி அவர்களே, சிந்தனைச் செல்வி ரம்யா அவர்களே, வெற்றி விழா நாயகி எங்கள் அன்பு ஆசிரியை துளசி கோபால் அவர்களே, உரை வேந்தன் Sam ஐயா (அதாங்க தருமி ஐயா) அவர்களே, நட்பின் நாயகன் இந்த வார நட்சத்திரம் கணேஷ் அவர்களே, நாகரிக நேசன் இராமநாதன் அவர்களே, எரி தழல் (??) அன்பு நண்பர் சிவா அவர்களே, சிறுவர் நீதிக்கதை அரசு பரஞ்சோதி அவர்களே, செஞ்சொல் பொற்கொல்லன் ராகவன் அவர்களே, சர்வ குரு ஹரி கிருஷ்ணன் அவர்களே, பொறுமையின் சிகரம் என் மனதிற்கினிய என் துணைவியார் ச்ரீலேகா அவர்களே, என் மனைவியைத் தவிர வேறு எல்லோருக்கும் பட்டம் தந்த அக்கா மதுமிதா அவர்களே - உங்கள் அனைவருக்கும் முதற்கண் (கடைசிக்கண்?) என் நன்றி கலந்த வணக்கங்கள்.

என்ன ராகவன்...ஏன் வலைப்பதிவுகளை எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வருத்தப்படுகிறீர்களா? என்ன செய்வது? ஐயன் வள்ளுவன் 'எண்ணித் துணிக கருமம்' என்று சொல்லியிருக்கிறாரே? :-)

Monday, October 31, 2005

உலகமெல்லாம் அன்பு நெறி ஓங்க வேண்டும்

உலகமெல்லாம் அன்பு நெறி ஓங்க வேண்டும்
ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேன்டும்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

Monday, October 24, 2005

தீபாவளியை முன்னிட்டு...

இதோ தீபாவளி வந்திருச்சுங்க....நீங்க என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க? வழக்கம் போல புதுத்துணி உடுத்திக்கிட்டு, பலகாரம் தின்னுட்டு, குழந்தைக்குட்டிகளோட பட்டாசு வெடிச்சு கொண்டாடலாம்ன்னு இருக்கீங்களா? நல்லதுங்க. அதுக்குத்தானே பண்டிகைன்னு ஒண்ணு இருக்கு.

அப்படி நாம பண்டிகை கொண்டாட்டத்துல மூழ்கி இருக்கிறப்ப நம்மல சுத்தி ஏழை பாழைங்க யாராவது இருந்தா அவங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவி பண்ணப் பாருங்க. உங்க வீட்டுல வேலைக்காரங்க யாராவது இருந்தா அவங்க பசங்க படிக்கிறாங்களான்னு பாத்து அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாருங்க. யாராவது ஒரு ஏழைக்கிழவியோ கிழவனோ நீங்க போற பாதையில இருந்தாங்கன்னா அவங்களுக்கு என்ன உதவி பண்ணலாம்ன்னு பாருங்க.

நாம பண்டிகை கொண்டாடற அதே நேரத்துல நம்மச் சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் சந்தோசமா இருக்கணும்ன்னு என்னை மாதிரி நீங்களும் ஆசைப்படுவீங்கன்னு தெரியும். ஆனா எல்லாரையும் சந்தோசமா நம்மால வச்சுக்க முடியுமா என்ன? ஏதோ முடிஞ்ச வரைக்கும் நம்மச் சுத்தி இருக்கிறவங்க சந்தோசமா இருக்க ஏதாவது பண்ண முடியுமான்னு பாருங்க.

என்னை மாதிரி வெளிநாட்டில இருக்கிறவங்க நம்ம மக்களுக்கு சேவை செய்ற ஏதோ ஒரு நிறுவனத்துக்கு ஏதாவது நம்மால முடிஞ்சது தீபாவளியை முன்னிட்டு கொடுங்க.

இந்தப் பதிவை தமிழ்மணத்தில இருக்கிறவங்க எல்லாரும் படிச்சு அவங்கவங்க முடிஞ்ச உதவி நம்ம மக்களுக்கு செய்யணும்ன்னு நினைச்சீங்கன்னா + வோட்டு போட்டுட்டுப் போங்க. குறைஞ்சது தீபாவளி முடியற வரைக்குமாவது தமிழ்மணத்துல இந்த பதிவு நிக்கும் இல்லீங்களா?

உங்க கருத்துகளையும் மறக்காம எழுதிட்டுப் போங்க. எந்த எந்த வகையில உதவி பண்ணலாம்ன்னு உங்களுக்குத் தோணுறதை எழுதிட்டுப் போனா உங்களுக்குப் பின்னால இந்த வலைப்பதிவ படிக்கிறவங்களுக்கு உதவியா இருக்கும்.

ரொம்ப நன்றிங்க.

Saturday, October 15, 2005

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!


எம். எஸ். பாடின இந்தப் பாட்ட கேட்டுருக்கீங்களா? ரொம்ப உருக்கமான பாட்டு. மூதறிஞர் இராஜாஜி எழுதினது.

கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, 'எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்'ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் 'ஏம்மா...எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்க...நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே'ன்னு கேட்டதுக்கு, 'கண்ணா. கஷ்டம் வர்ரப்பதான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்'னு சொன்னாங்களாம்.

இந்தப் பாட்டுல 'நீயிருக்கிறப்ப எனக்கு எந்த குறையும் இல்ல' அப்படின்னு இராஜாஜி எழுதியிருக்கார். மொதல்ல பாட்டை முழுசா குடுத்துட்றேன். அப்புறம் வரிகளோட அர்த்தம் பார்க்கலாம்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா...எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.

எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா...அதனால் என்ன...நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு...அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர...வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா...நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா...திருமலையில் நிற்கும் என் அப்பா...என்னைக் காப்பவனே கோவிந்தா...

மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா...உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்...என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா...நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்...அது போதும் எனக்கு...நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா...

வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது... அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்... அழகிய சுருள்முடியை உடைய கேஸவா... மலையப்பா...நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை...உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மஹாலக்ஷ்மி இருக்கும் போது...நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்...ஆனால் அன்னையோ அப்படி அல்ல...அவள் கருணைக்கடல்...என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்...அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா... மணிவண்ணா... மலையப்பா... கோவிந்தா...கோவிந்தா....

Friday, October 14, 2005

சத்தியமாய் வாழ்ந்திடு நீ எங்கள் உயிர் அப்துல் கலாம்!!!


அக்டோபர் 15, நம் குடியரசுத் தலைவரின் பிறந்த நாள். அதை முன்னிட்டு நம் தலைவருக்கு ஒரு சிறு வாழ்த்துக் கவிதை.

பார்க்கலாம் பார்க்கலாம் என்பவர்கள் நடுவே
'பார்த்தோம்' என்னும் கலாம்!

பகற்கனவு காண்பவர்கள் நிகழ்கனவு காண்பதற்கே
பாரினிலே வந்த கலாம்!

எத்தனையோ இளைஞர்களை இத்தரணி மீதினிலே
எழுச்சியுறச் செய்யும் கலாம்!

நித்தியமாய் இப்புவியில் சத்தியமாய் வாழ்ந்திடு நீ
எங்கள் உயிர் அப்துல் கலாம்!!!

Wednesday, October 12, 2005

சகலகலா வல்லி ஸரஸ்வதி - 2

நண்பர்களின் வேண்டிகோளின் படி, ஸரஸ்வதி பூஜையன்று எழுதிய சகலகலா வல்லி மாலையின் முதல் பாட்டிற்கு முறையான பொருள்:

வெண்தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்(து)
தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலா வல்லியே!

வெண்தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்(து) தண்டாமரைக்குத் தகாது கொலோ - தாயே! நீ வெண்தாமரை மலரில் உன் பாதம் வைத்து நின்றுள்ளாய். உன் அருள் இருந்தால் என் உள்ளம் கூட எந்த குறைகளும் இன்றி வெள்ளை உள்ளம் ஆகி குளிர்ந்த தாமரை மலர் போல் உன் பாதம் தாங்கும் தகுதி அடையும்.

சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க - ஏழு உலகும் காக்கும் இறைவனாம் திருமால் எல்லா உலகையும் உண்டு பாற்கடலில் உறங்க சென்று விட்டார்.

ஒழித்தான் பித்தாக - எல்லா உலகையும் அழிக்கும் சிவனாரோ 'பித்தன்' என்று பெயர் கொண்டு சுடலையில் நடனமாட சென்று விட்டார்.

உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலா வல்லியே! - உன் கணவரான பிரம்ம தேவர் மட்டும் உலகைப் படைக்கும் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதற்குக் காரணம், அவர் நாவில் நீ சுவை கொள் கரும்பாய் அமர்ந்திருப்பதுதான்.

ஸரஸ்வதி தேவியின் துணை இல்லாததால் தான் திருமால் உறக்கம் கொண்டார்; சிவனார் பித்தானார் என்ற பொருளில் குமரகுருபரர் இந்த பாடலை சகல கலா வல்லியாம் ஸரஸ்வதி தேவியின் புகழாகப் பாடியுள்ளார்.

இந்த பாட்டிற்கு கொஞ்சம் நக்கலாக எழுதப்பட்ட பொருளை யாராவது படிக்க விரும்பினால், இங்கே படிக்கலாம்.

இந்தியக் கனவு 2020

நம்ம பசங்க சில பேரு சேந்து ஒரு இயக்கத்தை ஆரம்பிச்சிருக்காங்க. அந்த இயக்கத்தைப் பத்தி தெருஞ்சிக்க இங்கே சொடுக்குங்கள்.

நண்பர் நடராஜன் நம்ம நாட்டை முன்னேற்றுவது பத்தி ரெண்டு பேப்பர் கட்டிங்ஸ் இங்கே போட்டிருக்காரு. படிச்சுப் பாருங்க.

Tuesday, October 11, 2005

சகல கலா வல்லி ஸரஸ்வதி

இன்னைக்கு ஸரஸ்வதி பூஜைன்னு சொன்னாங்க. அதான் ஸரஸ்வதி தேவியைப் பத்தி நம்ம தமிழ் புலவர் ஒருத்தர் பாடின பாட்டை இங்க பார்க்கலாம்ன்னு. பாட்டு கஷ்டமா இருக்குமோன்னு பாக்குறீங்களா? அர்த்தம் சொல்லிடுவோம்ல.

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்(து)
தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலா வல்லியே

குமரகுருபரர் எழுதுனதுங்க இது. அவசரப்படாதீங்க...அர்த்தமும் சொல்லிட்றேன்.

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்(து)தண்டாமரைக்குத் தகாது கொலோ - அம்மா சகல கலா வல்லியே! என்னம்மா நீ வெள்ள தாமரைபூ மேல மட்டும் தான் உன்னோட காலை வைப்பியா? என் மனசும் வெள்ளை உள்ளம் தாம்மா. கொஞ்சம் அதிலெயும் உன் காலை வைக்கக் கூடாதா?

சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க - நாராயணன் இந்த ஏழு உலகத்தையும் காத்து, எங்கே என்னைப் போல உள்ளவங்க இந்த உலகத்தை கெடுத்திடுவாங்களோன்னு பயந்து எல்லா உலகத்தையும் முழுங்கிட்டு உண்ட களைப்பு தீர பாற்கடலுக்கு தூங்க போயிட்டாரு.

ஒழித்தான் பித்தாக - யப்பா நாராயணா...உம்ம தொழில் உலகத்த காப்பாத்துறது மட்டும் தான்...அழிக்கிறது என் வேலை..இப்படி நீர் உலகத்த முழுங்கிட்டு போய் தூங்கலாமான்னு கவலப்பட்டு கவலப்பட்டு சிவனாருக்கு பைத்தியமே புடிச்சுருச்சு.

உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவை கொள் கரும்பே - இதையெல்லாம் பார்த்துட்டு உங்க புருஷன் பிரம்ம தேவர், நாம இந்த உலகத்தை எல்லாம் திரும்பவும் படைச்சுடலாம்ன்னு ஆரம்பிக்கிறப்ப அவரோட வாயில தித்திக்கும் கரும்பா இனிக்கிறியாமே

சகல கலா வல்லியே - அம்மா சகல கலா வல்லி...ஏன் நீ கரும்பா தித்திக்கிறேன்னு எனக்கு தெரியும். நீ தான் எல்லா கலைகளும் அறிந்தவள் ஆச்சே...உன் துணை இருந்தாத் தானே உங்க புருஷன் உலகத்தை படைக்கும் கலைய தெரிஞ்சிக்க முடியும். அதான் உங்களைப் போட்டு மென்னுக்கிட்டு இருக்கிறாரு.

பின்குறிப்பு: புராணம் சொல்லும் செய்திகள் இவை. ஸரஸ்வதி தேவி பிரம்ம தேவரின் நாக்கில் நிலையாக இருக்கிறாள். சிவபெருமானுக்கு 'பித்தன்'ன்னு ஒரு பெயர் உண்டு. பெருமாள் உலகம் அழியும் காலத்துல எல்லாத்தையும் உண்டு சிறுபிள்ளை வடிவத்தில ஆலிலையில தூங்குவார். அவர் பாற்கடல்ல தூங்குறது தான் உங்களுக்கு தெரியுமே. இந்த எல்லா செய்திகளையும் வச்சிக்கிட்டுத் தான் நம்ம குமரகுருபரர் இந்த பாட்டை எழுதியிருக்கிறார் போல.

Monday, October 10, 2005

கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு?

சின்ன வயசிலெ இந்த மகாபாரதம் படிக்க ஆரம்பிச்சிட்டா போதும், சோறு தண்ணி வேணாம் எனக்கு. அவ்வளவு சுவாரசியமா போய்க்கிட்டு இருக்கும். நல்லவனா எப்படி வாழ்றதுன்னு கத்துக்கற அதே நேரத்துல ஊர எப்படி எப்படி எல்லாம் ஏமாத்தலாம்ங்கறதையும் அதுல கத்துக்கலாம். அப்பப்ப விடுகதை, கேள்வி பதில், துணுக்குகள், புதிர்கள், கதைக்குள் கதை அப்படின்னு வந்துக்கிட்டே இருக்கும். அதுல இருக்கிற எல்லா புதிர்களிலும் நான் இப்பொ எழுதப்போற புதிருக்குத் தான் எனக்கு இன்னும் பதில் தெரியல.

உங்ககிட்ட யாராவது வந்து 'கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு?'ன்னு கேட்டா என்ன சொல்வீங்க? டக்குன்னு 'அண்ணன் தம்பி'ன்னு தானே? நானும் அப்படித்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன். ஒரு நாள் எங்க பாட்டிக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிறப்ப, 'யமன் சூரியனோட மகன்'ன்னு சொன்னாங்க. உடனே எனக்கு கர்ணனும் தருமனும் தான் ஞாபகத்துக்கு வந்தாங்க.

மகாபாரத்தின் படி, கர்ணன் சூரிய தேவனின் 'அருளால்' குந்தி தேவிக்குப் பிறந்தவன்; தருமன் யம தரும ராஜனின் 'அருளால்' குந்தி தேவிக்குப் பிறந்தவன். அப்படின்னா கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு? அண்ணன் தம்பியா? இல்லியே...கர்ணனும் யமனும் சூரிய தேவனின் மக்கள். அப்படின்னா, கர்ணனுக்கு அண்ணன் மகன் தானே தருமன்...தம்பி இல்லியே? சரியா?

இந்த கேள்விக்கும இன்னும் எனக்கு யாரும் சரியா பதிலே சொல்லல...உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களே!!!!

Saturday, October 08, 2005

மைத்ரீம் பஜத

நீங்கள் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடிய இந்த பாடலை கேட்டிருப்பீர்கள். இந்தப் பாடல் 'பெரியவா' என்றும் 'பரமாசாரியர்' என்றும் அறியப்படும் ஜகத்குரு காஞ்சி காமகோடி பீட சங்கராசாரியார் ச்ரீ சந்த்ரசேகர சரஸ்வதி சுவாமிகளால் இயற்றப்பட்டது. ஐக்கிய நாட்டுச் சபையின் 50ம் ஆண்டு (அப்படித் தான் நினைவு) நிறைவு விழாவில் பாட எம்.எஸ்ஸிற்கு அழைப்பு வந்தது. எம்.எஸ் இந்த அழைப்பைப் பற்றி ஆசாரியரிடம் சொன்ன போது ஆசாரியர் இந்த பாடலை எழுதிக் கொடுத்தார்.

இந்த பாடலை எழுதி ஏறக்குறைய 40 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் இந்த பாடலின் கருத்து நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வகையில் உள்ளது.

மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜேத்ரீம் - பணிவுடனும் நட்புடனும் உலக மக்கள் எல்லோருக்கும் சேவை செய்யுங்கள். அது எல்லோர் இதயத்தையும் வெல்ல உதவும்.

ஆத்மவத் ஏவ பராந் அபி பஷ்யத - பிறரையும் உங்களைப் போலவே எண்ணிப் பாருங்கள்.

யுத்தம் த்யஜத - போரினை விடுங்கள்.

ஸ்பர்தாம் த்யஜத - தேவையற்ற அதிகாரப் போட்டியினை விடுங்கள்.

த்யஜத பரேஸ்வ அக்ரம ஆக்ரமனம் - பிறர் நாட்டையும் சொத்தையும் ஆக்ரமிக்கும் அக்கிரம செயலை விடுங்கள்.

ஜனனீ ப்ருதிவீ காமதுகாஸ்தே - பூமித்தாய் மிகப் பெரியவள். காமதேனுவைப் போல் நம் எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்ற காத்துக் கொண்டு இருக்கிறாள்.

ஜனகோ தேவ: சகல தயாளு: - நம் தந்தையான இறைவனோ எல்லோர் மேலும் மிக்கக் கருணை கொண்டவன்.

தாம்யத - ஆதலால் தன்னடக்கம் கொள்ளுங்கள்.

தத்த - ஆதலால் எல்லோருக்கும் உங்கள் செல்வத்தை தானம் கொடுங்கள்.

தயத்வம் - ஆதலால் எல்லோரிடமும் கருணையோடு இருங்கள்.

ஜனதா - உலக மக்களே!

ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!

ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!

ச்ரேயோ பூயாத சகல ஜனானாம்! - உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் எந்த குறையும் இன்றியும் இருக்கட்டும்!

இந்தப் பாடலின் பொருள் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன். தமிழ் அறியாத உங்கள் நண்பர் யாருக்காவது நீங்கள் இந்த பாடலின் பொருளை அனுப்ப விரும்பினால் இங்கே சொடுக்கி அனுப்பவும்.

நம் நண்பர் சிவராஜா இந்த பாடலை தன் வலைப்பதிவில் கொடுத்துள்ளார். கேட்டுப் பாருங்கள்.

திருவாசகம்

நண்பர் சிவராஜா திருவாசகம் பாடல்களுக்கு நான் எழுதிய உரைகளை தன்னுடைய வலைப்பதிவில் கொடுத்துள்ளார். படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லவும்.

Friday, October 07, 2005

மதுரை

நம்ம ஊரு பத்தி ரமணன் ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார், படித்துப் பாருங்கள் - ஆனால் அது ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழில் நாம கூடிய சீக்கிரம் எழுதணும்.

Wednesday, October 05, 2005

வாங்கண்ணே! வணக்கம்!

நம்ம ஊரு மருதைங்கண்ணே! படிச்ச பசங்க எல்லாம் 'மதுரை'ன்னு சொல்லுவாங்கண்ணே. எங்க ஊருக்கு இன்னொரு பேரும் இருக்குதுண்ணே - 'கூடல் கூடல்'ன்னு சொல்லுவாங்கண்ணே. அதான் நம்ம ஊரு பேரை இந்த இணையப்பதிவேட்டுக்கு வச்சுட்டேண்ணே.

கூடல்ன்னா கலவைன்னு கூட ஒரு அர்த்தம் இருக்குதாம்ண்ணே. கலவையா எதைஎதையோ பத்தி இங்க பேசலாம்ன்னுதான் இந்த பேரை தெரிவு செஞ்சாச்சுண்ணே.

எல்லோரும் கூடும் இடத்துக்கும் கூடல்ன்னு பெயர் சொன்னாங்க - நாமளும் நம்ம கூட்டாளிகளும் கூடி குலாவலாம்ன்னுதான் இந்த பேரை வச்சாச்சுண்ணே.

நீங்க அடிக்கடி இங்க வந்து போய்க்கிட்டு இருங்கண்ணே.