Sunday, January 13, 2013

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்!






வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

பெரிய கப்பல்கள் செல்லும் கடலை கடைந்த திருமகள் கணவனான மாதவனை, அழகிய திருமுடியை உடைய கேசவனை, சந்திரனைப் போன்ற அழகிய முகத்தை உடைய அழகிய பெண்கள் சென்று வணங்கி, அங்கே அவனிடம் வேண்டியதெல்லாம் பெற்ற வரலாற்றை

அழகிய வில்லிபுத்தூரில் வாழும் புத்தம் புதிய தாமரை மாலையை அணிந்த பட்டர்பிரான் ஆன பெரியாழ்வாரின் திருமகள் கோதை சொன்ன இந்த சங்கத் தமிழ் மாலை முப்பதையும் தவறாமல் உரைப்பவர்கள்

இரண்டு இரண்டு - ஈரிரண்டு - நான்கு மயக்கும் அழகுடைய மலை போன்ற திருத்தோள்களை உடைய, சிவந்த திருக்கண்களும் அழகிய திருமுகமும் உடைய செல்வத் திருமாலின் திருவருள் பெற்று எங்கும் என்றும் இன்புற்று வாழ்வார்கள்.

Saturday, January 12, 2013

உனக்கே நாம் ஆட்செய்வோம்!




சிற்றம் சிறு காலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது!
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!

அதிகாலையில் வந்து உன்னைப் போற்றி வணங்கி, உன் தங்கத் தாமரைப் போன்ற திருவடிகளை நாங்கள் போற்றுவதன் நோக்கத்தைக் கேட்பாய்!

பசுக்களை மேய்த்து அதைக் கொண்டு வாழும் குலத்தில் நீயும் நாங்களும் பிறந்ததால், நீ எங்களை குற்றேவல் கொள்ளாமல் இருக்க இயலாது!

இன்று நாங்கள் வேண்டியதைப் பெறுவதற்காக மட்டும் நாங்கள் வரவில்லை கோவிந்தா!

எப்பொழுதும் ஏழேழ் பிறவிக்கும் உன்னோடு சொந்தபந்தமாக சுற்றத்தவராக ஆவோம்! உனக்கே நாங்கள் அடியவர்களாக இருப்போம்! எங்களுக்கு வேறு ஆசைகள் ஏதேனும் இருந்தாலும் அவற்றை மாற்றி இந்த பாக்கியத்தையே நீ அருள் செய்ய வேண்டும்!

Friday, January 11, 2013

சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே!





கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்!
அறிவொன்றும் இல்லாத ஆய்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் எமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே!
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!

பசுக்களையும் கன்றுகளையும் மேய்ப்பதற்காக மேய்ச்சல் காட்டிற்குக் கூட்டிச் சென்று, அவை பின்னே நாங்களும் சென்று அங்கே எல்லோரும் சேர்ந்து அமர்ந்து இருப்பதைப் பகிர்ந்து உண்போம்! அதற்கு மேல் எங்களுக்கு ஒன்றும் தெரியாது!

ஆனால் எப்படியோ அறிவில் குறைந்தவர்களான எங்கள் ஆயர் குலத்தில் உனது பிறப்பு ஏற்படும்படி புண்ணியம் செய்திருக்கிறோம்!

எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா (பசுக்களைக் காப்பவனே)! உன்னோடு எங்களுக்கு இருக்கும் உறவு நீ நினைத்தாலும் ஒழிக்க இயலாது!

அறியாத பிள்ளைகள் நாங்கள்! அன்பினால் உன்னை 'அடே கிருஷ்ணா! அடே நண்பா! இங்கே வாடா!' என்றெல்லாம் உனது பெருமைக்கு ஒவ்வாதவாறு உன்னை அழைத்திருப்போம்! அதனால் எங்கள் மேல் கோவித்துக் கொள்ளாதே!

எங்களுக்கு எல்லாம் தலைவனே! நீ வேண்டுவதை எல்லாம் தருவாய்!

Thursday, January 10, 2013

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!





கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சன்மானம் -
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்!
ஆடை உடுப்போம்! அதன் பின்னே பால் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

உன்னுடன் நண்பராக விரும்பாதவரையும் உனது அன்பால் வெல்லும் பெருமை உடைய கோவிந்தா! உன்னைப் பாடி நோன்பிற்கு உரியவற்றைப் பெற்று நோன்பினை நோற்றபின் நாங்கள் பெறும் சன்மானங்களை சொல்கிறோம்.

நாடெல்லாம் புகழும் பெருமையால் நன்றாக நெற்றிச்சுட்டி, தோளில் அணையும் வளையல், தோடு, காதின் மேல்புறத்தில் அணியும் செவிப்பூ என்று இவை போன்ற பலவிதமான அணிகலன்களை அணிவோம்!

புத்தாடைகளை உடுப்போம்! அதன் பின்னே பால் சோறு பொங்கி அதில் நெய் நிறைய இட்டு அந்த நெய் முழங்கை வரை வழிந்து வர, அனைவரும் கூடி அமர்ந்து உண்டு மகிழ்வோம்!

Wednesday, January 09, 2013

கோல விளக்கே! கொடியே! விதானமே!



மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே!
சாலப் பெரும் பறையே! பல்லாண்டு இசைப்பாரே!
கோல விளக்கே! கொடியே! விதானமே!
ஆலின் இலையாய்! பறையேலோர் எம்பாவாய்!

திருமாலே! கருமாணிக்கத்தின் நிறம் கொண்டவனே! மார்கழி நீராடுவதற்காக பெரியவர்கள் சொன்னபடி நாங்கள் என்ன வேண்டுகிறோம் என்று கேட்பாயானால் சொல்கிறோம்.

உலகத்தை எல்லாம் நடுங்கும்படி ஒலி எழுப்பும் பால் போன்ற நிறம் கொண்ட உனது பாஞ்சஜன்யத்தை ஒத்த சங்குகள் வேண்டும்!

மிகப் பெரிய பறை (பேரிகை) வேண்டும்!

பல்லாண்டு பாடும் அடியவர்கள் வேண்டும்!

அழகான குத்துவிளக்குகள் வேண்டும்!

கொடி வேண்டும்!

பந்தல் வேண்டும்!

ஆலிலையில் துயில்பவனே! வடபத்ரசாயியே! இவையே நாங்கள் இந்த மார்கழி நோன்பிற்காக வேண்டுபவை!

Tuesday, January 08, 2013

நெருப்பு என்ன நின்ற நெடுமாலே!




ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்! பறை தருதியாகில்
திருத்தக்கச் செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!


பெருமையில் சிறந்த ஒருத்தியான தேவகியின் திருமகனாகப் பிறந்து, பிறந்த அன்று இரவே பெருமையில் சிறந்த இன்னொருத்தியான யுசோதையின் மகனாக மறைத்து வைக்கப்பட்டு நீ வளரும் போது, நீர் மறைந்து வாழ்வதைப் பொறுக்க இயலாமல் உனக்குத் தீங்கு செய்ய நினைத்து அரக்கர்களை அனுப்பிய கம்சனின் எண்ணத்தை பொய்யாக்கி, அவனது வயிற்றில் நெருப்பாக நின்ற நெடுமாலே! கண்ணா!

உன்னைப் போற்றி வந்தோம்! நீ எங்களுக்கு வேண்டியதை தருவாய். நாங்கள் உனது பெருமை மிக்க செல்வத்தையும் புகழையும் பாடி எங்களது வருத்தங்கள் எல்லாம் தீர்ந்து மகிழ்வோம்!

Monday, January 07, 2013

குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!



அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி!
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!

திருவிக்கிரம அவதாரம் எடுத்த போது இந்த உலகத்தை ஓர் அடியால் அளந்தவனே! உன் திருவடிகள் போற்றி!

கடல் கடந்து சென்று அங்கே தென்னிலங்கையில் இருந்த பகையை அழித்தவனே! உன் திறமை போற்றி!

தூள் தூள் ஆகும்படி வண்டிச்சக்கரமாக வந்த சகடாசுரனை உதைத்தவனே! உன் புகழ் போற்றி!

கன்று வடிவில் வந்த வத்ஸாசுரனை மரத்தில் எறிந்து கொன்றவனே! உன் வீரக்கழல்கள் போற்றி!

பெருமழை பெய்து ஆயர்பாடி வெள்ளத்தில் தவித்த போது கோவர்த்தனம் என்னும் குன்றை குடையாக எடுத்தவனே! உன் குணம் போற்றி!

பகையை வென்று இல்லாமல் செய்யும் உனது திருக்கையில் இருக்கும் வேல் போற்றி!

என்றென்றும் உன் பெருமைகளையே போற்றி எங்களுக்கு வேண்டியதெல்லாம் பெறுவதற்காக இன்று நாங்கள் வந்தோம்! எங்கள் மேல் இரக்கம் கொள்வாய்!




Sunday, January 06, 2013

மாரி மலை முழைஞ்சில் ...




மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவு உற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதரு மா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்து அருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!

மழை எப்போதும் பெய்து கொண்டிருக்கும் மலையில் இருக்கும் குகை. அதில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெருமை வாய்ந்த சிங்கம். அது தனது உறக்கத்தை விட்டு எழுந்து தீ போல் விழித்து, பிடரி மயிர் பொங்க, எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு, உடலை நிமிர்த்தி, கர்ஜனை செய்து புறப்பட்டு வரும்.

அந்த சிங்கத்தைப் போலே பூவைப்பூவண்ணக் கண்ணா, நீயும் நின் அரண்மனையை (அந்தப்புரத்தை) விட்டு எழுந்து இங்கே வந்து அழகானதும் பெருமை வாய்ந்ததும் ஆன உனது சிங்காசனத்தில் அமர்ந்து கொண்டு, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டு அறிந்து எங்களுக்கு அருள் செய்யவேண்டும்!


Saturday, January 05, 2013

செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ?!



அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீழே
சங்கம் இருப்பாற் போல் வந்து தலைப்பெய்தோம்!
கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூ போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ?!
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!

அழகு நிறைந்த மிகப்பெரிய இந்த பூமியின் அரசர்கள் பலரும் உன் பெருமையின் முன்னர் தங்கள் கருவம் தொலைந்து போக, மிகப்பணிவுடன் உன்னைக் காண வந்து உனது இருக்கையின் அருகில் கூடி இருப்பதைப் போல் நாங்கள் கூடி நிற்கின்றோம்!

சிறிதே திறந்து கிண்கிணி (சதங்கை) போல் தோன்றும் உன் தாமரைப் போன்ற சிவந்த திருக்கண்களை இன்னும் சிறிது சிறிதாகத் திறந்து எங்கள் மேல் நோக்காதா?

சந்திரனும் சூரியனும் ஒரே நேரத்தில் உதித்ததைப் போல் உன் இரண்டு அழகிய திருக்கண்களாலும் எங்களை நீ பார்த்தால் எங்கள் குறைகள் எல்லாம் உடனே நீங்கிவிடும்!

Friday, January 04, 2013

ஊற்றம் உடையாய்! பெரியாய்!




ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்!
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!

பாலைப் பிடிப்பதற்காக ஏந்திய பாத்திரங்கள் எல்லாம் நிறைந்து பொங்கி வழியும்படி தடையே இன்றி பாலைச் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் நிறைய உடையவனான நந்தகோபனின் மகனே எழுந்திருப்பாய்!

ஊக்கம் உடையவனே! பெரியவனே! உலகினில் எல்லாம் விளங்கும்படி தோன்றி நின்ற சுடரே! எழுந்திருப்பாய்!

உன் பகைவர்கள் உன்னிடம் தங்கள் வலிமையெல்லாம் இழந்து தோற்று உன் வாசலில் வந்து உன் திருவடிகளைத் தொழுவார்களே அது போல் நாங்களும் உன்னைப் போற்றிப் புகழ்ந்து வந்து உன் வாசலில் நிற்கின்றோம்!