Friday, January 30, 2009

நான்மணிக்கடிகையில் நாரணன்

சங்க இலக்கியத்தில் ஒரு வகையான பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் 'நான்மணிக்கடிகை' என்றொரு நூல் இருக்கிறது. விளம்பிநாகனார் என்ற புலவர் எழுதியது. கடிகை என்றால் கல்வி கற்பிக்கப்படும் இடம்; பல்கலைக்கழகம். ஒரு கடிகையில் எப்படி பலவிதமான கல்விகள் கற்பிக்கப்படுகின்றனவோ அதே போல் இந்நூலில் பலவிதமான அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணிகள். அப்படிப்பட்ட மணியாக கருத்துகள் நான்கினை ஒவ்வொருப் பாடலிலும் சொல்லுவதால் இந்த நூலுக்கு 'நான்மணிக்கடிகை' என்று பெயர்.

இந்த நூலின் ஆசிரியர் மணிவண்ணனை வணங்குபவர் போலும். அதனால் தான் நூலுக்கும் 'நான்மணிக்கடிகை' என்று பெயர் வைத்து விட்டு முதல் இரண்டு பாடல்களால் மணிவண்ணன் மாயவனைப் புகழ்ந்து பாடியிருக்கிறார். கடவுள் வாழ்த்தாக மணிவண்ணனைப் பற்றிய நன்னான்கு கருத்துகளைச் சொல்லும் முதல் இரண்டு பாடல்களை இன்று பார்ப்போம்.

மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்
புது மலர் ஒக்கும் நிறம்.

மாயோனுக்கு அடையாளமாக நான்கு செய்திகளைச் சொல்கிறார் புலவர். மாயவன் திருவுருவை மனத்திருத்தித் தியானிக்க நினைப்பவர்களுக்கு உதவும் பாடல். மாயோன் என்று தொல்காப்பியத்தால் சொல்லப்பட்டவனும் மாயவன் என்று பிற்கால சமய நூற்களால் சொல்லப்பட்டவனும் ஒரே தெய்வம் இல்லை என்று சொல்லித் திரிபவர்களுக்குப் பதில் சொல்வதைப் போல இந்த சங்க இலக்கிய நூலிலேயே 'மாயவன்' என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார் புலவர்.

அவன் இல்லாத இடமே இல்லை; அவன் இல்லாத காலமே இல்லை என்னும் படி எங்கும் எப்போதும் நிலையாக இருக்கும் (மன்னும்) மாயவனின் ஒளி பொருந்திய திருமுகத்தை வானத்தில் தெரியும் நிலா ஒத்திருக்கும் என்கிறார் முதல் வரியில்.

அடுத்து அவனது சுடர் விடும் சக்கரப்படையை போல் இருக்கின்றது வானத்தில் சுடர் விட்டுத் திகழும் ஞாயிறு என்கிறார்.

வெகுகாலமாக இருக்கும் நீர்நிலையில் இருக்கும் தாமரைத் தண்டுகளில் முளைத்து வரும் தாமரை மலர் அவனது திருக்கண்களை ஒத்திருக்கும் என்கிறார்.

காயாம்பூ என்னும் பூவைப்பு அன்றே அலர்ந்திருந்தால் அந்தப் புதிய பூ அவனது திருமேனியின் நிறத்தை ஒத்திருக்கும் என்கிறார்.

நிலவைப் போன்ற திருமுகம், ஞாயிற்றைப் போன்ற திருச்சக்கரம், புதுமலர்த்தாமரையைப் போன்ற திருக்கண்கள், பூவைப்புதுமலர் போன்ற திருநிறம் என்றே மற்ற புலவர்கள் உவமைகளைக் கூற இவரோ அதனை மாற்றி நிலவு திருமுகத்தை ஒக்கும், ஞாயிறு சக்கரத்தை ஒக்கும், புதிய தாமரை திருக்கண்களை ஒக்கும், பூவைப்புதுமலர் நிறத்தை ஒக்கும் என்று 'மாறிய உவமை'களைக் காட்டுகிறார்.

மதி மாயவன் திருமுகத்தை ஒக்கும் என்பதைப் படிக்கும் போது 'கதிர்மதியம் போல் முகத்தான்' என்று வரும் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.

இங்கே ஞாயிறு சக்கரத்தை ஒத்திருக்கும் என்று படிக்கும் போது சிலப்பதிகாரத்தில் 'ஞாயிறு போற்றுதும்' என்று சொல்லி நூலை இளங்கோவடிகள் தொடங்கும் போது அங்கும் 'திகிரி போல்' என்று சொன்னது நினைவிற்கு வருகின்றது.

இந்தப் பாடல் சொல்வதைப் போலவே வடமொழி வேதங்களும் பல முறை இவனுடைய திருக்கண்கள் தாமரையைப் போன்று உள்ளன என்று சொல்வது நினைவிற்கு வருகின்றது. 'ஞாயிற்றின் கதிரால் விரியும் தாமரையைப் போன்ற திருக்கண்கள் உடையவன் இறைவன்' என்று சொல்லும் வரிகளுக்கு சொல்லப்பட்ட தவறான உரையைக் கேட்டுத் தானே இராமானுஜர் கண்ணீர் வடித்தார். அங்கே ஞாயிறும் தாமரையும் ஒரே வரியில் சொல்லப்பட்டதைப் போல் இங்கே ஒரே பாடலில் ஞாயிறும் தாமரையும் அடுத்து அடுத்து வருகின்றன.

அடுத்த பாடல் 'மாயோன் எனப்பட்டவன் கோகுலத்தில் வாழ்ந்த கண்ணன் இல்லை' என்று மறுப்பவர்களுக்கான பதிலாக அமைகிறது.

படியை மடியகத்து இட்டான்; அடியினால்
முக்கால் கடந்தான் முழுநிலம்; அக்காலத்து
ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான்; சோவின்
அருமை அழித்த மகன்.

இங்கே வாமன திருவிக்கிரம அவதாரத்தினை ஒரு அடியில் சொல்லிவிட்டு மற்ற மூன்று அடிகளிலும் கோகுலத்துக் கண்ணனின் திருவிளையாடல்கள் சொல்லப்படுகின்றன.


மண்ணைத் தின்றான் என்று கேள்விப்பட்டு வாயைத் திறந்து காட்டச் சொன்ன அசோதைக்கு தன் திருவயிற்றில் எல்லா உலகங்களையும் அவன் காட்டினான் என்பதால் 'படியை (உலகத்தை) மடி அகத்து இட்டான்' என்று பாடுகிறார் புலவர்.

முதல் அடியினால் நடுவுலகத்தையும் இரண்டாம் அடியினால் மேல் உலகங்களையும் மூன்றாவது அடியினால் மாவலியை பாதாள உலகத்திற்கு அதிபதியாக்கி கீழ் உலகங்களையும் அளந்தவன் வாமன திரிவிக்கிரமன் என்பதால் 'அடியினால் முக்கால் கடந்தான் முழுநிலம்' என்கிறார் புலவர்.

தனக்கென இடப்படும் படையலைத் தடுத்து கண்ணனே அதனை மலையுருவில் உண்டான் என்று இந்திரன் வெகுண்டு பெருமழை பொழிவிக்க அப்பொழுது பசுக்களின் கூட்டத்தைக் காக்க கோவர்த்தனமென்னும் குன்றை எடுத்தான் கோவிந்தன் என்பதால் 'அப்பொழுது ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான்' என்றார் புலவர்.

'குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்'

என்று தமிழ்வேதமாம் திருவாய்மொழியும் இந்தப் பாடலில் சொல்லப்பட்ட இருமணிகளைச் சொல்வது நினைவிற்கு வருகிறது.

பாணாசுரனின் செல்வ மகள் உஷை கண்ணனின் பேரன் அநிருத்தனை விரும்பி தன் தோழியின் மூலமாகக் கவர்ந்து சென்ற போது அவனை மீட்டுக் கொண்டு வர பாணாசுரனின் ஆயிரம் தோள்களையும் துணித்து அவனது நெருப்புக் கோட்டையை அழித்தான் அச்சுதன் என்பதை 'சோவின் அருமை அழித்த மகன்' என்பதால் சொல்கிறார் புலவர். சோவின் அருமை என்றால் நெருப்பு போல் சுடர்விடும் பொன் கோட்டை என்றும் ஒரு பொருள் உண்டு.

சிலப்பதிகாரமும் 'மூவுலகும் ஈரடியால் முறைநிரம்ப வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர்' பாடுகிறது. அங்கே சொல்லப்படும் சோ அரண் தொல்லிலங்கையின் பொற்கோட்டை.

இப்படி மாயோன் சீர் தொன்மையான தொல்காப்பியத்திலிருந்து நிறைய சங்க இலக்கியங்களில் பாடப்பட்டிருக்கிறது.

Wednesday, January 28, 2009

பழந்தமிழ் இலக்கியத்தில் வடநாடு

வடநாட்டினர் தமிழ்நாட்டைக் குறித்து அக்காலத்தில் தெரிந்திருப்பதைப் பார்க்கிலும், தமிழர்கள் வடநாட்டைப் பற்றி மிகுதியாக அறிந்திருந்தார்கள். இமயமலையையும் கங்கையாற்றையும் தமிழர்கள் பார்த்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.பழந்தமிழர் வடநாட்டைப் புண்ணிய நாடாகவும், வட திசையைப் புண்ணிய திசையாகவும் கங்கையாற்றைக் கடவுள் மாநதியாகவும் இமயம் முதல் குமரி வரை ஒருநாடாகவும் கண்டனர். இதற்குக் காரணமாய் இருந்தவை வடநாட்டுச் சமயங்களே எனலாம்.

சங்ககாலத்தில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய இவை தமிழ்நாட்டில் வேரூன்றி விட்டன. கிமு.மூன்றாம் நூற்றாண்டிலேயே இச்சமயங்கள் தமிழ்நாட்டில் நன்கு தழைத்து சங்க இலக்கியங்களில் நன்கு புகுந்து விட்டன. சைவம் தமிழ்நாட்டுச் சமயமே என்று கூறினும் அது வடநாட்டுச் சமயமாகவே காட்சி அளிக்கிறது. இமயமே சிவனுறையும் கைலாயம் என்று குறிப்பதொன்றே இதற்குப் போதிய சான்றாகும். சைவம் தமிழர் சமயம் என்று போற்றுவதற்குப் போதிய ஆதாரம் இல்லை.

சைவ வைணவ சமண பௌத்த சமயங்கள் வடநாட்டைப் புண்ணிய நாடாகக் கருதுமாறு செய்து விட்டன. திருநாவுக்கரசர் கைலாயம் செல்லக் கருதி இமயம் நோக்கியே சென்றார். தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்துக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர், வடவேங்கடம் என்கிற சொற்றொடரை எடுத்துக் காட்டி, ‘வடதிசை புண்ணிய திசை ஆகலான் அதனை முதற்கூறினார்’ என்றார். ஏணிச்சேரி முடமோசியார், ஆய் என்கிற வள்ளலைக் குறித்துப் பாடிய 132-ஆம் செய்யுளுக்கு உரை கூறிய உரையாசிரியர், ‘வடதிசை தேவருலகோடு ஒத்தலான்’ என்று குறிப்பெழுதி உள்ளார். அவரே, 229-ஆம் புறப்பாட்டில் விண்மீன் வீழ்ச்சியைக் குறிப்பிடுகையில் “தீத்திசையாகிய தெற்கும் மேற்குமான இரண்டனுள் ஒரு திசைக்கண் வீழ்ந்ததென்றுமாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் வடதிசையைப் புண்ணிய திசையாகவும், தென்திசையைத் தீய யம திசையாகவும் கருதினார்கள்.

கீழ்வரும் நாலடியார்ச் செய்யுளைக் காண்க:

‘எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்குஆகா
தென்னாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்’

“தென்னாட்டவர் கூட முயற்சி செய்தால் சுவர்க்கம் போக முடிகிறது; வடநாட்டவராயிருந்தும் முயற்சி செய்யாமல் அதனை இழப்பவரும் இருக்கிறார்களே” என்கிற பொருளின் அடிப்படை அளவுகோலைப் பாருங்கள்.

இமய உச்சியில் சிவபெருமான் எழுந்தருளி இருப்பதாகவும் இமயத்தை ஈர்ஞ்சடை அந்தணன் (சிவ பெருமான்) வில்லாகக் கொண்டதாகவும் இமயத்து உச்சியில் இருந்து கங்கைப் பேரியாறு இழிந்து வருவதாகவும் இமயமலையில் முனிவர்கள் தவம் செய்வதாகவும் சங்ககாலத்து இலக்கியங்களிலும் குறிப்புகள் இருக்கின்றன.

வடதிசையில் இமயம் இருப்பதாலும் தென்திசையில் ஆய் வள்ளல் இருப்பதாலும் இப்பெருநாடு கவிழாமல் சமநிலையில் இருக்கிறது என்று பாடுகிறார் முடமோசியார். சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை “வட இமயமும் தென் பொதியமும் போன்று நீடு வாழ” வாழ்த்துகிறது புறநானூற்றின் இரண்டாம் பாடல். “இமயம் சேர்ந்த காக்கை பொன்னிறமாதல் போல்” என்கிறது யாப்பெருங்கலக் காரிகைச் செய்யுள்.

கங்கையாற்றை “வளமழை மாறிய என்றூழ்க்காலை மன்பதையெல்லாம் சென்றுணக் கங்கை” என்று புறநானூறும், “பொன்கொழித்து இழிதரும் போக்கருங் கங்கை” என்று பெரும்பாணாற்றுப் படையும் “கங்கையும் பேரியாறு கடர்படர்ந்து” என்று மதுரைக் காஞ்சியும் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு இமயத்தையும் கங்கையையும் வர்ணிப்பதோடு நில்லாமல் வடநாட்டில் நிகழ்ந்த செய்திகளையும் கூறுகின்றன சங்க இலக்கியங்கள். மகாபாரதப் போர் பற்றிய குறிப்பு முன்சொன்ன புறநானூற்றுப் பாடலில் இருக்கிறது. அகநானூறு வடநாட்டில் கிமு நான்காம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆட்சி புரிந்த நந்தர்களுடைய பெருஞ்செல்வத்தைக் குறிப்பிடுகிறது. *நந்தர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்ததற்கு ஒரு குறிப்பும் இல்லை; ஆனால் அகநானூற்றின் 251, 265 ஆகிய பாடல்களில் அவர்களுடைய ஆட்சியின் பெருஞ் செல்வச் சிறப்பை மட்டும் காண்கிறோம்.

பழந்தமிழ் இலக்கியங்கள் வடநாட்டைச் சமய நிலையில் உயர்வாக குறிப்பிடினும் அரசியல் நிலையிலும் வீரச் சிறப்பைக் கூறும் முறையிலும் வடநாட்டை மதித்துக் கூறவில்லை. வடநாட்டினர் மேல் தமிழர்க்ள் பகை கொண்டிருந்தது போலவே தோன்றுகிறது. தமிழ் மன்னர்கள் வடநாடு சென்று இமயத்தில் தங்கள் இலச்சினைகளைப் பொறித்ததும் இமயம் முதல் குமரி வரை தமிழ் மன்னர்கள் ஆண்டதும் வடநாட்டு மன்னர்கள் தமிழ்நாட்டு மூவேந்தர்களுக்கு அடி பணிந்ததும் திறை கொடுத்ததும் வடபுல மன்னர்களான கனக விசயர்கள் தலையில் கண்ணகி படிவக் கற்களைச் சுமக்க வைத்ததும் வடநாட்டுக்குப் படையெடுத்ததுமான செய்திகளைப் பழந்தமிழ்ச் சங்க இலக்கியமாகிய பதிற்றுப்பத்து அகநானூறு சிலப்பதிகாரம் போன்றவை கூறுகின்றன.

பெருவீரனான அசோகனும் தமிழ்நாட்டில் காலெடுத்து வைக்கவில்லை.கலிங்கத்தை வென்றதோடு நின்றான். அவன் தன் கல்வெட்டுகளில் சேர சோழ பாண்டியர்களை நேச மன்னர்களாகவே குறிப்பிட்டான். புறநானூறு அசோகருக்குப் பின் வந்த மோரியர் படையெடுப்பை ‘வம்ப மோரியர் படையெடுப்’பாகவே கூறுகிறது. அப்படி வந்தவர் வெற்றி பெற்றதாகக் குறிப்பைக் காணோம்.

ஆனால் வரலாற்றுப் பேராசிரியர் பலர் தமிழ் மன்னர்களின் வீரச் செயல்களையும் படையெடுப்புகளையும் கற்பனைத் திறன் மிகுந்த காப்பியக் கதைகளாகத் தான் கருதுகின்றனர். பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர் தவிர்த்த அனைவரும் செங்குட்டுவன் உள்ளிட்ட தமிழ் வேந்தர்களின் படையெடுப்புகள் அனைத்தையுமே கட்டுக்கதைகளாகப் புறக்கணிக்கின்றனர்.

வடவர்கள் காஞ்சியைத் தவிர பிற பழந்தமிழ் நகரங்களைப் புண்ணிய நகரங்களாகக் கருதவில்லை. தமிழ்ப் புலவர்களோ வட நாட்டைப் புண்ணிய நாடாகவும் வட மொழியைத் தெய்வ மொழியாகவும் மதித்தார்கள்; வடநாட்டுக் கதைகளைக் காப்பியங்களாகப் பாடினார்கள். இது பழந்தமிழர் பண்பாடு மட்டுமன்று; இன்றையத் தமிழர் பண்பாடும் ஆகும்.

- பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்

***

வெகு நாட்களுக்கு முன்னர் நண்பர் இரத்னேஷின் பதிவில் இப்பகுதியைப் படித்தேன். அப்போதே 'படித்ததில் பிடித்தது' வகையில் இடவேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டேன். இப்போது தான் இட முடிந்தது. இக்கட்டுரையைத் தட்டச்சிய இரத்னேஷுக்கு நன்றிகள்.

Friday, January 23, 2009

எனக்குள் ஒரு கதை சொல்லி

இது ஒரு சுய ஆய்வு என்று சொல்லலாம். (சுய தம்பட்டம் என்று நினைத்தாலும் சரியே). என்னுள் இருக்கும் ஒரு திறன் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறும் போது அடையும் வளர்ச்சிகளையும் தடைகளையும் எழுத்தில் வடிக்க எண்ணும் ஒரு முயற்சி இது. எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறேன் என்பதை இக்கட்டுரையை எழுதி முடித்த பின் பார்க்க வேண்டும்.

ஒரு காலத்தில் நிறைய பேசிக் கொண்டிருந்தேன். ஆன்மிகம், தமிழ் இலக்கியம், தன் திறன் வளர்ச்சி (Self Development) போன்ற தலைப்புகளில் பேசத் தொடங்கினால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தேன். அப்படிப் பேசும் போதெல்லாம் கேட்டவர்கள் நான் சொல்லும் கருத்துகளை ஏற்றுக் கொள்பவர்கள்; கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்கள்; மறுத்து பேசாதவர்கள். நான் சொன்ன கருத்துகளில் (முக்கால்வாசி கடன் பெற்ற கருத்துகள் - இலக்கியங்களில் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும்) மயங்கியா அவற்றை நான் சொன்ன விதத்தில் மயங்கியா, எந்த விதத்தில் அவர்களுக்கு என் பேச்சைக் கேட்க விருப்பமாக இருந்தது என்ற ஐயம் இப்போதும் உண்டு. ஆனால் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க வந்தார்கள். மீண்டும் மீண்டும் பேசச் சொன்னார்கள்.

சில நேரங்களில் மாற்றுக் கருத்துகள் கொண்டவர்களும் கேட்க வருவார்கள். அவர்கள் தங்களது மாற்றுக் கருத்துகளைச் சொல்லும் போது அந்தப் பேச்சு ஒரு கலந்துரையாடலாக மாறும். கலந்துரையாடல் என்றால் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் நிறைய உண்டு. அதனால் அப்படிப் பட்ட கலந்துரையாடல்களை மிகவும் விரும்பினேன். சில நேரங்களில் அந்தக் கலந்துரையாடல் விதண்டா வாதங்களாக மாறத் தொடங்கும். மாற்றுக் கருத்தினைச் சொன்னவருக்கு ஏற்ற மறுப்பினைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சொன்ன பின்னரும் தடம் மாறித் தடம் மாறி புலனங்களை மாற்றி மாற்றிப் பேசி வேண்டா விவாதமாகச் சென்று கொண்டிருக்கும். யாரும் யாரிடமிருந்தும் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிந்தவுடன் பேசுவதை அப்போதே நிறுத்திவிட்டுக் கேட்கத் தொடங்கிவிடுவேன். அவர்களின் கருத்து அவர்களின் அனுபவங்களில் இருந்து வருகின்றது என்பதால் கருத்துகள் தவறென்று தோன்றினாலும் அந்த அனுபவங்களில் இருந்து ஏதேனும் கற்றுக் கொள்ள முடியுமா என்று பார்க்கத் தொடங்கிவிடுவேன்.

பள்ளி இறுதி வகுப்பில் தொடங்கிய இந்த 'பேசுதல்' முதுநிலை பட்டப்படிப்பு வரை தொடர்ந்தது. வேலையில் சேர்ந்த முதல் வருடமும் சென்னையில் அது தொடர்ந்தது. வேலையில் சேர்ந்த இரண்டாம் வருடம் அமெரிக்கா வந்துவிட்டேன். அதே வருடம் திருமணமும் நடந்தது. பேசுவது நின்றுவிட்டது. அமெரிக்கா வந்ததால் தான் என்று நினைக்கிறேன். திருமணத்தால் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.

சில வருடங்கள் (மனைவியைத் தவிர்த்து மற்றவரிடத்தில்) மணிக்கணக்கில் பேசுவது என்பதே இன்றிப் போனது. சில நேரங்களில் சில பக்தி இலக்கியஙகளுக்கும் சுலோகங்களுக்கும் ஆங்கிலத்தில் பொருள் சொல்லி மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்புவேன். இப்படியே சென்று கொண்டிருக்கும் போது வலைப்பதிவு தென்பட்டது. இத்தனை நாட்களும் பேசாமல் இருந்த வேகத்தில் நினைத்ததைப் பற்றி எல்லாம் எழுத ஒவ்வொரு பதிவாகத் தொடங்கி நிறைய பதிவுகள் தொடங்கினேன். எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு காலத்தில் பேசிக் கொண்டிருந்தவன் இப்போது அவ்வளவாகப் பேசாமல் எழுதும் போது என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, புதிதாக ஏதேனும் தென்படுகின்றதா என்று இப்போது ஆய்ந்து பார்த்தால் ஒரு விதயம் கண்ணுக்குத் தென்பட்டது.

ஒரு நல்ல கதை சொல்லி என்னுள் இருக்கிறான். பேசும் போது நன்கு சுவையாகக் கதை சொல்லத் தெரிந்த அவனுக்கு எழுதும் போதும் அதே சுவையும் அழகும் வரும்படி எழுதத் தெரிந்திருக்கிறது (வரும்படி எதுவும் வரவில்லை இதுவரை). பேசும் போது எப்படி கதை கேட்பவர்களைத் தொடர்ந்து கேட்கும் படி செய்கிறேனோ அதே போல் எழுதும் போதும் படிப்பவர்களைத் தொடர்ந்து படிக்கும் படி செய்கிறேன். இது வரை எழுதிய தொடர்கதைகளிலும் சிறுகதைகளிலும் இது நன்றாகத் தெரிகிறது.

தொடர்கதைகள் எழுதும் போது சில உத்திகளையும் பயன்படுத்தியிருக்கிறேன். 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதை எழுதும் போது 'எப்போது கதையின் முக்கிய பகுதி வரப்போகிறது?' என்று நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கதை நிறைவு பெற்றுவிட்டது. நிறைந்த பின்னர் கதையை இன்னொரு முறை படித்துப் பார்த்தால் கதையின் முழுவடிவம் தென்படும். அந்தக் கதையில் உண்மை நிகழ்வுகளை வைத்து எழுதியதால் நிறைவு செய்வது எளிதாக வந்தது.

வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலான புனைவுக் கதைகளையும் தொடர்கதைகளாகச் சொல்லிச் செல்வது எளிதாக வருகின்றது. கோதையின் கதை, பெரியாழ்வார் கதை, பாரி வள்ளல்/கபிலர் கதையான 'உடுக்கை இழந்தவன் கை' போன்றவை எடுத்துக்காட்டுகள். பேசும் போது இருந்த அழகும் வருணனைகளும் கற்பனைகளும் எழுதும் போது இன்னும் வளர்ச்சி அடைந்துள்ளதைக் காண்கிறேன். ஆனால் ஒரு பெரும் தடையை கதைகளை 'எழுதும்' போது காண்கிறேன். கதையின் உச்சக்கட்டத்தை அடையும் போதும் புலனம் மாறும் போதும் ஒரு தடுமாற்றம் ஏற்படுகின்றது. பெரியாழ்வார் கதையின் உச்சக்கட்டமான பல்லாண்டு பாடிய நிகழ்வினைச் சொல்லிவிட்டு புலனம் மாறி அவருடைய பாசுரங்களைப் பற்றி பேச வேண்டிய நேரத்தில் ஒரு தடுமாற்றம் வருகிறது. கோதையின் கதையின் உச்சக்கட்டமான திருப்பாவை நோன்பு நோற்கும் நிகழ்வினைச் சொல்லும் போது புலனம் மாறி திருப்பாவையின் பொருளுரையைப் பேச வேண்டிய தருணத்தில் ஒரு தடுமாற்றம் வருகிறது. 'உடுக்கை இழந்தவன் கை' கதையின் உச்சக்கட்டமான கபிலர் பாரி மகளிரை மலையமானுக்கு மணம் செய்து கொடுக்கும் நிகழ்வினை எழுதும் போது ஒரு தடுமாற்றம் வருகிறது. இது வரை எழுதி வந்ததின் அழகு மாறாமல் அதே நேரத்தில் புலனம் மாறுவதும் கதையின் உச்சக்கட்டத்தை அடைவதையும் படிப்பவர்கள் உணர்ந்தும் உணராத வகையில் எப்படி சொல்வது என்பது புரியவில்லை போலும். முயன்றால் முடியும் என்று தெரிகிறது. ஆனால் முயல்வதற்கு கை முன்வரவில்லை. அதனால் அவை மாதக்கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும் முன்னேறாமல் முடங்கி நிற்கின்றன.

இன்னொன்றையும் கவனிக்கிறேன். புத்தம் புதிதான புனைவை எழுத இயலவில்லை. தரவுகள் நிறைந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு தரவுகளின் அடிப்படையில் என் கற்பனையைக் கலந்து விரித்து எழுதுவது தான் வருகிறதே ஒழிய முழுக்க முழுக்கக் கற்பனை செய்து எழுதும் திறன் இல்லாதது போல் தோன்றுகிறது. அப்படித் தொடங்கினால் என்னவோ தரையில் கால் பாவாமல் அந்தரத்தில் தொங்குவது போல் ஒரு உணர்வு. தரவுகள் என்ற தரை இல்லாமல் என்னால் கதை சொல்ல இயலவே இயலாது போலும்.

Thursday, January 22, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 1

வைணவ ஆசாரிய பரம்பரை திருமகள் நாதனான திருமாலிடம் இருந்து தொடங்குகிறது.

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்


என்று எல்லா வைணவர்களும் திருவாராதன (பூசை) காலத்தில் தன்னுடைய ஆசாரிய பரம்பரையை வணங்கிவிட்டே திருவாராதனம் செய்கிறார்கள்.

'இலக்குமிநாதன் தொடக்கமாகவும் நாதமுனிகள், யாமுன முனிகள் (ஆளவந்தார்) நடுவாகவும், என்னுடைய ஆசாரியன் வரையிலாகவும் இருக்கும் குருபரம்பரையை வணங்குகிறேன்' என்பது இந்த சுலோகத்தின் பொருள்.


வைணவ ஆசாரிய பரம்பரை:

1. திருமகள் நாதன்
2. திருமகள்
3. சேனைமுதலியார் என்னும் விஷ்வக்சேனர்
4. மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வார்
5. நாதமுனிகள்
6. உய்யக்கொண்டார்
7. மணக்கால் நம்பி
8. ஆளவந்தார்
9. பெரிய நம்பி
10. திருக்கச்சி நம்பி
11. எம்பெருமானார் என்னும் இராமானுஜர்
12. கூரத்தாழ்வான்

இப்படி திருமாலிடம் இருந்து தொடங்கி வரும் ஒவ்வொரு ஆசாரியனுடைய பெருமையையும் எட்டு வரிகளில் பாடும் 'வாழித் திருநாமம்' என்றொரு மரபு இருக்கிறது. பகவத் இராமானுஜரின் முதன்மைச் சீடரான கூரத்தாழ்வாரின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக திருமகள் கேள்வன் தொடங்கி கூரத்தாழ்வான் வரை உள்ள ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களைப் பார்ப்போம்.

இந்தக் கொண்டாட்டத்தை வலைப்பதிவுகளில் தொடங்கி வைத்தவர் ஷைலஜா அக்கா. அதனைத் தொடர்ந்து இரவிசங்கரும் ஒரு இடுகை இட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து 'ஆசாரிய ஹ்ருதயம்' பதிவில் தொடராக கூரத்தாழ்வாரது திவ்ய சரிதம் பரவஸ்து சுந்தரால் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அடியேன் வாழித் திருநாமங்களைத் தொடராக இடுகிறேன். இன்னும் நிறைய வரும்.

***

பெரிய பெருமாள்


திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடைத்து ஆய் மகளார் சேவிப்போன் வாழியே
இரு விசும்பில் வீற்றிருக்கும் இமையவர் கோன் வாழியே
இடர் கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகி வரும் பொன்னி நடுப்பின் துயின்றான் வாழியே
பெரிய பெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே

வாழித் திருநாமத்தின் பொருள்:

திருமகளான இலக்குமித் தாயாரும் மண்மகளான பூமித் தாயாரும் சிறப்பு பெறும் படி அமைந்தவன் வாழ்க. இறைவனைப் பற்றி சொல்லிக் கொண்டே வரும் புருஷ சூக்தம் என்னும் வேத மந்திரம் அவனது அடையாளமாக 'ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ன்யௌ - உனக்கு பூமியும் இலக்குமியும் மனைவியர்' என்று கூறுகிறது. அப்படி அவன் பரம்பொருள் என்று சொல்வதற்கு அடையாளமாக அமையும் அருளும் பொறுமையும் வடிவான திருமகளும் மண்மகளும் சிறக்கும் படி வந்தமைந்த திருமாலே வாழி வாழி. செம்மையுடைய ஆயர்மகளான நீளாதேவி நப்பின்னைத் தாயாரின் சேவையைப் பெறுவோன் வாழ்க.

உலக உயிர்களின் இடர்களைக் களைய பாற்கடலை அடைந்து அங்கே பள்ளி கொண்டவன் வாழ்க. 'என்ன தவம் செய்தனை' என்று வியக்கும் படியாக அரிய தவம் செய்த தயரதனின் திருமகனாய், சக்ரவர்த்தித் திருமகனாய் அவதரித்தவன் வாழ்க.

அனைத்துயிர்களின் இருதயங்களிலும் உள் நின்று இயக்குபவனாக அந்தரியாமியாக ஆனவன் வாழ்க. பெருகி வரும் வடகாவிரி, தென்காவிரி நடுவில் இருக்கும் திருவரங்கத்தில் துயில்கின்றவன் வாழ்க. பெரிய பெருமாளாகிய எங்கள் தலைவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.

இறைவனின் ஐந்து நிலைகளும் இங்கே போற்றப்பட்டது.



1. திருமகளும், மண்மகளும், ஆயர்மகளும் அருகில் இருக்க பரம்பொருளாய் பரமபதத்தில் அமர்ந்திருக்கும் நிலை - பரம்
2. தேவர்களுக்கும் இருடிகளுக்கும் (ரிஷிகளுக்கும்) அருள் செய்வதற்காகவும் அவதாரம் செய்வதற்காகவும் பிரகிருதி மண்டலத்தில் பாற்கடலில் பள்ளி கொண்ட நிலை - வியூஹம்
3. தருமத்தை நிலை நாட்ட பல உயிர்களாக உருவெடுத்து இறங்கி வரும் நிலை - விபவம்/அவதாரம்
4. உள் நின்று இயக்குபவனாக எல்லா உயிர்களிலும் இருக்கும் நிலை - அந்தரியாமி
5. அனைவரும் எளிதில் கண்டு வணங்கும் வகையில் திருக்கோவில்களிலும் வீடுகளிலும் சிலை உருவில் இருக்கும் நிலை - அர்ச்சை

***

பெரிய பிராட்டியார்



பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்திர நாள் பார் உதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகம் என வந்த செல்வி வாழியே
மால் அரங்கர் மணி மார்பை மன்னுமவள் வாழியே
எங்கள் எழில் சேனை மன்னர்க்கு இதம் உரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே

சீரங்கநாயகித் தாயார் வைணவ ஆசாரிய பரம்பரையில் இரண்டாவது ஆசாரியர். முதல் ஆசாரியன் இறைவனே என்பதால் ஜீவாத்மாக்களுள் முதல் ஆசாரியராக திருமகள் அமைகிறாள். அதனால் பெண்ணை முதல் குருவாகக் கொண்ட மரபாக தமிழக வைணவ மரபைக் கூறவேண்டும். ஸ்ரீயை முதல் ஆசாரியராகக் கொண்டதால் இந்த மரபு ஸ்ரீவைஷ்ணவம் என்று அழைக்கப்படுகின்றது.

வாழித் திருநாமத்தின் பொருள்:

தாமரைப்பூவில் பிறந்த நன்மைகளெல்லாம் ஓருருவான பெண் வாழ்க. பங்குனி உத்திர நாளில் பிறந்தவள் வாழ்க. பெண்களில் சிறந்தவள் என்னும்படி இருப்பவள் வாழ்க. திருமாலவனாம் திருவரங்கன் மணி மார்பில் 'அகலகில்லேன் சிறிது நேரமும்' என்று நிலைத்து வாழ்பவள் வாழ்க. திருமாலவனுக்கு 'இவள் மனைவி' என்பதால் தனித்தன்மை; திருமகளுக்கு 'இவன் திருமார்பில் நிலைத்து வாழ்பவள்' என்பதால் தனித்தன்மை.

எங்கள் அடியார் குழாத்திற்கெல்லாம் தலைவனான 'சேனை மன்னருக்கு' இவ்வைணவ மரபை உரைத்தவள் வாழ்க. இவ்வுலகில் நிலையாக இருக்கும் தத்துவங்கள் இருபத்தி ஐந்து என்ற நுண்ணிய அறிவை திருமாலவனிடமிருந்து பெற்றவள் வாழ்க. செம்மையுடைய திருவரங்க நகரம் செழிக்கும்படி வந்தவள் வாழ்க. சீரங்க நாயகியாரின் திருவடிகள் வாழ்க வாழ்க.
***

சேனை முதலியார்

ஓங்கு துலாப் பூராடத்துதித்தச் செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கு இதம் உரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்கு புகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

திருமாலின் தெய்வீகப் படைகளை 'மாதவன் பூதங்கள்', 'கடல்வண்ணன் பூதங்கள்' என்றெல்லாம் பாடுவார் நம்மாழ்வார். அந்தத் தெய்வீகப் படைகளின் தலைவனாக இருப்பவர் விஷ்வக்சேனர் எனப்படும் சேனை முதலியார். சேனைகளுக்கு முன்னவராக இருந்து படைகளை நடத்துபவர் என்பதால் அவருக்குச் சேனை முதலியார் என்ற திருப்பெயர். இவர் ஆசாரிய பரம்பரையில் மூன்றாவது ஆசாரியர்; ஜீவாத்மாக்களில் இரண்டாவது ஆசாரியர். எந்த வித தடைகளும் இன்றி எடுத்தக் காரியம் யாவினும் வெற்றி பெற வைணவர்கள் எல்லாக் காரியங்களுக்கும் தொடக்கத்தில் வணங்குவது சேனை முதலியாரை.

யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிசத்யா பரஸ்ஸதம்
விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்சேனம் தம் ஆச்ரயே

யாருடைய படையில் / அவையில் இரட்டைக் கொம்பனான விக்னேசர் முதலிய விஷ்ணு கணங்கள் இருக்கின்றார்களோ அந்த விஷ்வக்சேனரை தடைகள் எல்லாம் நீங்கும் பொருட்டு எப்போதும் வணங்குகிறேன்.

வாழித் திருநாமத்தின் பொருள்:

பெருமையில் சிறந்த ஐப்பசி மாத பூராட நட்சத்திரத்தில் உதித்த செல்வன் வாழ்க. ஒளி பொருந்திய நெற்றியையுடைய சூத்ரவதி என்றும் நீங்காமல் வாழும் மார்பை உடையவன் வாழ்க. (எம்பெருமான் திருமகளை என்றும் மார்பில் கொண்டிருப்பதைப் போல் சேனைமன்னரும் தன் பிராட்டியான சூத்ரவதியை என்றும் மார்பில் தாங்கியிருக்கிறார்). இங்கே இவ்வுலகில் சடகோபரான நம்மாழ்வாருக்கு மரபு வழி ஞானத்தை உரைத்தவன் வாழ்க.

இறைவனின் திருக்காரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறுவதற்காகத் தன் திருக்கையில் செங்கோலை ஏந்தி இருப்பவன் வாழ்க. அழகு பெற முப்பத்து மூக்கோடி தேவர்களும் வந்து பணியும் பெருமையுடையவன் வாழ்க. தாமரையாள் ஆகிய திருமகளின் திருவடிகளைப் பணிந்து அவளைக் குருவாகக் கொண்டவன் வாழ்க.

என்றென்றும் புகழ் மங்காத திருவரங்கனையே எப்போதும் சிந்தை செய்பவன் வாழ்க. சேனைகளின் தலைவனது செங்கமலத் திருவடிகள் வாழ்க வாழ்க.

***

இத்துடன் விண்ணுலக ஆசாரியர்களின் வரிசை நிறைவு பெற்றது. மண்ணுலக ஆசாரியர்களின் வாழித் திருநாமத்தை அடுத்த இடுகையில் பார்ப்போம்.

Friday, January 16, 2009

சிவபெருமானைப் போற்றும் பதிற்றுப்பத்து

சேர மன்னர்களைப் பற்றிய பத்து * பத்து = நூறு பாடல்களைக் கொண்டது பதிற்றுப்பத்து. பல மன்னர்களைப் பல புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்ததால் இது தொகை நூலாகும். சங்க இலக்கியத்தின் ஒரு வகையான எட்டுத்தொகை நூற்களில் ஒன்று.

இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து உண்டா இல்லையா என்று உறுதியாகத் தெரியவில்லை. 'மதுரைத் திட்டம்' கடவுள் வாழ்த்துப் பகுதி இல்லாமலேயே பதிற்றுப்பத்தினைக் காட்டுகிறது. இணையப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலில் ஆசிரியர் பெயர் சொல்லாமல் ஒரு பாடல் கடவுள் வாழ்த்தாக இருக்கிறது. ஆனால் அங்கேயே இருக்கும் உரை நூலில் அந்தப் பாடலைக் காணவில்லை. பாடலைப் படித்துப் பார்த்தால் சங்க காலப் பாடலைப் போன்று தான் இருக்கிறது. உரையின் துணையின்றி எனக்குப் புரிந்த வரையில் இந்தப் பாடலின் பொருளை எழுதுகிறேன். இந்தப் பாடலைப் பற்றிய மேற்தகவல்கள் தெரிந்திருந்தாலோ பாடலின் பொருளைத் தவறாக எழுதியிருந்தாலோ சொல்லுங்கள்.

எரி எள்ளு அன்ன நிறத்தன் விரி இணர்க்
கொன்றை அம் பைந்தார் அகலத்தன் பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன் பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன் நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன் குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன் களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன் தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்க மா வலனே




வடமொழியில் இருக்கும் புராணங்கள் எல்லாம் தமிழரிடமிருந்து சென்றவை என்ற கருத்திற்கு அணி செய்யும் இன்னொரு பாடல் இது. சிவபெருமானின் 'உருவ அழகை'யும் (இலிங்கத் திருமேனியை இல்லை) புராணங்கள் கூறும் சிவபெருமானின் பெருமைகளையும் அழகாகக் கூறும் பாடல் இது.

எரி எள்ளு அன்ன நிறத்தன் - எரிகின்ற எள்ளினைப் போன்ற நிறத்தை உடையவன்.

சிவபெருமான் சிவந்தவன் என்பது தமிழர் மரபு. அதனாலேயே சேயோன் (சிவந்தவன்) என்னும் பெயர் தந்தைக்கும் மகனுக்கும் ஆகும் என்று சொல்வதுண்டு. எள்ளு எரியும் போது அது மிக அடர்த்தியான சிவப்பு நிறத்தில் எரியும். அப்படி எரியும் எள்ளினைப் போன்ற அடர்த்தியான சிவப்பு நிறத்தைக் கொண்டவன் சிவபெருமான்.

விரி இணர்க் கொன்றை அம் பைந்தார் அகலத்தன் - விரிந்த கொத்துகளை உடைய அழகிய கொன்றை மாலை சூடிய மார்பன்.

நெஞ்சு அகன்று விரிந்து இருப்பது ஆண்மகனுக்கு அழகு. அப்படி அகன்று விரிந்த மார்பை அகலம் என்று சொல்வது மரபு. அப்போதே பறித்த விரிந்த பூங்கொத்துகளை உடைய அழகிய கொன்றை மாலையை அணிந்தவன் சிவபெருமான்.

பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன் - அடங்காத முப்புரத்தை உடையவர்களின் மதில்களை/கோட்டைகளை எரித்த வில்லை உடையவன்.

திரிபுராசுரர்கள் என்று சொல்லப்படும் முப்புரம் உடைய அசுரர்களின் முக்கோட்டைகளையும் சிவபெருமான் தன்னுடைய சினம் மேவிய சிரிப்பாலேயே எரித்து அழித்தார் என்று சொல்லும் புராணம். அப்படி முப்புரம் எரித்த போது மேரு மலையையே தன் கைவில்லாக ஏந்தி இருந்தானாம். அந்த செய்தியைச் சொல்கிறது 'வில்லன்' என்ற பெயர்.

பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன் - இருள் நிறைந்த (சுடு)காட்டில் நிலையாக இருந்து ஆடும் ஆடல்வல்லவன்.

சிவபெருமான் சுடலையில் ஆடுபவன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சுடலையை இங்கே 'இருள் பயில் காடு' என்ற தொடரால் சொல்லியிருக்கிறார்கள். அங்கேயே நிலையாக இருந்து ஆடுபவன் என்பதால் 'அமர்ந்து ஆடிய' என்றார்கள். அவன் ஆடல் வல்லான் என்பதால் 'ஆடலன்' என்றார்கள்.

நீடிப் புறம் புதை தாழ்ந்த சடையன் - நீண்டு இரு புறங்களும் மறையும் படி தாழ்ந்து இருக்கும் சடைமுடியை உடையவன்.

சிவபெருமானுக்கு தாழ்சடை உண்டு என்பது தேவார திருவாசகங்களின் கூற்று. அந்த தாழ்சடை நீண்டு இரு புறங்களிலும் மறையும் படி நிற்கின்றதாம். சிவபெருமானின் உருவம் இப்பாடலின் வழி தியானிக்கக் கிடைக்கிறதா?

குறங்கு அறைந்து வெண் மணி ஆர்க்கும் விழவினன் - தொடையில் அறைந்து நுண்ணிய ஒலி கொண்ட மணியை ஒலிக்கும் விழாவை உடையவன்.

ஆட்டத்தின் போது தன் திருத்தொடைகளை அறைந்து கொண்டு தன் திருக்கையில் இருக்கும் கண்டா மணியை ஒலிக்கும் செயல்களை சிவபெருமான் செய்வதாக இப்பாடல் வரி சொல்கிறது. நுண்ணிய ஒலியை எழுப்பும் மணி என்பதால் வெண்மணி என்றார் பாடலாசிரியர்.

நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் - நுட்பமான வேலைப்பாடுகள் உடைய உடுக்கையை அடிக்கும் விரலை உடையவன்.

சிவபெருமானின் திருக்கையில் துடி என்ற உடுக்கை இருக்கின்றது. உடுக்கைக்கு இன்னொரு பெயர் சிரந்தை. அது மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருப்பதால் நுண்ணூல் சிரந்தை எனப்பட்டது. இரட்டுதல் என்றால் உடுக்கையின் இடுப்புப்பகுதியில் விரல்களை வைத்து இப்புறமும் அப்புறமும் அசைத்து ஒலி செய்தல். அப்படி உடுக்கையை ஒலிக்கும் விரல்களை உடையவன் சிவபெருமான்.

இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற்தகையன் - ஆணாகிப் பெண்ணாகி இருவுருவமும் ஆகி மாதொரு பாகனாய் நுண்ணிய அணிகலன்கள் அணிந்திருக்கும் பெரும் அழகுடையவன்.

ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தில் சொன்னது போல் இங்கும் சிவபெருமானின் மாதொருபாகன் திருவுருவம் போற்றப்படுகின்றது. இரண்டு உருவாகி நுண்ணிய அணிகலன்களை அணிந்து அழகுடன் திகழ்கிறான் சிவபெருமான்.

ஏரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் - எழுகின்ற இளம்பிறை சேர்ந்த நெற்றியை உடையவன்.

சிவபெருமான் பிறைசூடி என்பதை அனைவரும் அறிவோம். அப்போதே எழுந்து வரும் இளம்பிறையை அணிந்த திருமுடியை உடையவன் என்று இங்கே சொல்லப்படுகிறான் மதிவாணன்.

களங்கனி மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன் - களங்கனியின் கருமைக்குப் போட்டியாக அமைந்திருக்கும் மறு கொண்ட தொண்டையை உடையவன்.

சிவபெருமான் நீலகண்டன். பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலால விடத்தை உண்டதால் அவனுடைய மிடறு/தொண்டை மணிமிடறு/மறுமிடறு ஆகியது என்று கூறும் புராணம். அப்படி சிவபெருமானின் தொண்டையில் காணப்படும் மறு களங்கனியைப் போல் விளங்குவதால் களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் சிவபெருமான் என்கிறார் புலவர்.

தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட்கு - திரிசூலமென்னும் ஒளிவீசும் படைக்கலத்தை உடைய கால உருவான கடவுள்.

சிவபெருமானே அழித்தல் தொழிலுக்குரிய கடவுள் என்னும் புராணம். அதனால் அவனைக் காலக் கடவுள் என்கிறார் புலவர். அவன் தன் திருக்கையில் திரிசூலம் ஏந்தியிருப்பதையும் பாடுகிறார்.

உயர்க மா வலனே - அவனுடைய புகழும் பெருமையும் வலிமையும் மிகுதியாக உயரட்டும்!

இப்படிப் புராணங்கள் சொல்லும் சிவபெருமானின் உருவத்தையும் பெருமைகளையும் போற்றிப் பாடி இதுவும் ஒரு தியானச் சுலோகம் என்னலாம் படி இருக்கிறது இப்பாடல்.

Tuesday, January 13, 2009

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா



இதோ மார்கழி முடிந்து தை பிறக்கப் போகிறது. தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கப் போகிறது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்; தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

தை ஒன்றாம் நாள் என்றால் இன்னொரு புனிதமான நிகழ்வும் நினைவிற்கு வரும். ஒரு மண்டல காலம் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்குச் செல்லும் அடியார்கள் கொண்டாடும் மகரவிளக்கு தரிசனம்.


இந்தப் புனிதத் திருநாளில் பொங்கும் மங்களம் எங்கும் தங்குக என்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளும் புத்தாண்டு வாழ்த்துகளும் சொல்லிக் கொண்டு ஐயப்பனை சரணடைவோம்.

***



சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா (3)

பந்தள மன்னா எந்தனை காவாய்
சந்ததம் உந்தனை பஜித்தேன் சுவாமி (சரணம் ஐயப்பா)

கலியுக வரதன் நீ கரி குகன் அனுஜன் நீ
வலிமிகு விதியையும் நலிவுறச் செய்வோனே (சரணம் ஐயப்பா)

சுத்தியுடன் விரதம் காத்திடும் பக்தர்க்கு
சத்தியமாய் அருள் புரிந்திடும் வள்ளல் நீ
நம்பினோர் கெடுவதில்லை உன்னை
கும்பிடுவேன் கூவி அழைத்திடுவேன் சுவாமி (சரணம் ஐயப்பா)



பாடியவர்: திருமதி. எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
இயற்றியவர்: ஆத்மா
இராகம்: ரேவதி
தாளம்: மிஸ்ரசாபு


சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.

பந்தள மன்னா எந்தனைக் காப்பாய்; எப்போதும் உந்தனை போற்றினேன் தலைவனே. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.

கலியுகத்தில் எல்லா வரங்களும் தருபவன் நீ. ஆனைமுகன் ஆறுமுகன் தம்பி நீ. மிகுந்த வலிமை கொண்ட விதியையும் வலிமை கெடச் செய்பவன் நீ. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.

தூய்மையுடன் நோன்பு நோற்றிடும் அன்பர்களுக்கு உறுதியாக அருள் புரிந்திடும் வள்ளல் நீ. உன்னை நம்பினோர் கெடுவதில்லை; உன்னைக் கும்பிடுவேன்; கூவி அழைத்திடுவேன் தலைவனே. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.

Saturday, January 10, 2009

சேந்தனா? சோமாஸ்கந்தனா?

அப்பாவும் அம்மாவும் சேர்ந்து ஒரு இடத்தில் அமர்ந்துவிடக் கூடாது. இருவர் இடையிலும் ஒரு சிறு இடைவெளியாவது ஆக்கிக் கொண்டு நடுவில் வந்து உட்கார்ந்து கொள்வதில் இந்தக் குழந்தைகளுக்கு என்ன தான் மகிழ்ச்சியோ? அக்காவும் அப்படியே தான் செய்து கொண்டிருந்தாள். தம்பிக்கு ஒரு வயது ஆகும் வரையிலும் அது தொடர்ந்தது. அவன் நடக்கத் தொடங்கியதிலிருந்து இருவரிடையிலும் அந்த இடத்திற்காக கடுமையான போட்டி தொடங்கியது. சின்னவன் என்பதால் மிகப்பெரும்பான்மையான நேரங்களில் தம்பியே வெல்கிறான். இருவரையும் நடுவில் உட்காரச் சொன்னால் அவர்களால் அப்படி அமர முடிவதில்லை. இருவருக்கும் அப்பா அம்மா இருவருமே அருகில் உட்கார வேண்டும்.

தம்பியை வெல்ல விட்டுவிட்டு அக்காள் பல முறை அப்பா பக்கத்திலேயோ அம்மா பக்கத்திலேயோ தான் அமர முடிகிறது. தனக்குக் கிடைத்தது தான் தம்பிக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஒரு நாள் அப்படி போட்டியிட்டுத் தோற்ற பொழுதில் அவள் ஒரு புதிய வாதத்தை எடுத்து வைத்தாள். அந்த வாதத்தை இப்போது கேளுங்கள்.


"பாபா. சன் டீவிம் திருவிளையாடல் நட்கம் அவத்தவேள் விநாய் தேவ்கின் முருகன் தேவ் தெங்கொ அம்பொ போ மத்திம் பிஸுனான். விநாய் தேவ் சிவன் தேவ் லெகுத்தகின் முருகன் தேவ் பார்வதி தேவ் லெகுத்தோ பிஸன். தெல்ல மாதிரினா அமி மெல்லி பிஸுனோ" (அப்பா. சன் டீவில திருவிளையாடல் நாடகம் வர்றப்ப விநாயகரும் முருகனும் அப்பா அம்மா நடுவுல உக்காரமாட்டாங்க. விநாயகர் சிவன் பக்கத்துலயும் முருகன் பார்வதி பக்கத்துலயும் உக்காருவாங்க. அந்த மாதிரி தானே நாம கூட உக்காரணும்)



"கரெக்டூஸ் மாய். லெகுத்தாவால் பபு மத்திம் பிஸத்தக் அவத்த வேள் அமி தீதெனு ஹல்லுனாத்தக் ரீகின் மாய் ஸோனூஸ் பபு மெல்லி தெங்குட் பொக்கட் பிஸுனோ மெனி மென்தெங்கன்" (சரி தான் அம்மா. அடுத்த தடவை தம்பி நடுவுல உக்கார வர்றப்ப நாங்க ரெண்டு பேரும் அசையாம இருந்துக்கிட்டு உன்னை மாதிரியே தம்பியும் அந்தப் பக்கம் உக்காரணும்ன்னு சொல்லிடலாம்)

"அவ தான் அப்படி சொல்றான்னா தம்பி தானே பரவாயில்லைன்னு சொல்லாம நீங்க என்ன இப்படி சொல்றீங்க?" (இது தமிழில் தான் சொல்லப்பட்டது. அவளுக்குப் புரியக்கூடாது என்று நினைப்பதை நாங்கள் இருவரும் தமிழில் பேசிக் கொள்வோம். அதுவும் இன்னும் கொஞ்சம் நாட்களுக்குத் தான். இப்போதெல்லாம் தமிழும் நன்றாகப் புரியத் தொடங்கிவிட்டது அவளுக்கு).

"ஓகே. ஓகே. மாத்தி சொல்றேன்"

"மாய். திருவிளையாடல் நட்கமுமூஸ் திஸொ தெக்கடர்யோ. ஆனா நிஜ்ஜமும் முருகன் தேவ் கொப்பிமூ அம்பா பாபா மத்திமூஸ் பிஸய். தெல்ல மாதிரி பிஸத்த வேள் தெல்ல ஃபேமிலிக் சோமாஸ்கந்தன் மெனி நாவ்" (அம்மா. திருவிளையாடல் நாடகத்துல தான் அப்படி காமிக்கிறாங்க. ஆனா உண்மையில முருகன் எப்பவுமே அம்மா அப்பா நடுவுல தான் உக்காருவார். அந்த மாதிரி உக்கார்றப்ப அந்த குடும்பத்துக்கு சோமாஸ்கந்தன்னு பேரு)

"நிஜ்ஜம்யா?" (உண்மையாவா?)

"ஹாய் மாய். நிஜ்ஜமூஸ். லாப்டாபும் படம் தெக்கடூஸ்" (ஆமாம்மா. உண்மை தான். மடிக்கணியில படத்தை காமிக்கிறேன்)


"ம்ம்ம். ஓகே. அத்தெங்குட் பபூஸ் மத்திம் பிஸந்தோ" (ம்ம்ம். சரி. இனிமேல் தம்பியே நடுவுல உக்காரட்டும்)

நல்ல வேளை. இன்னும் அவள் கீழிருக்கும் படங்களைப் பார்க்கவில்லை. யாரும் காமிச்சுராதீங்க. குறைஞ்சது இன்னும் ஒரு நாளுக்காவது. தம்பிக்கு ரெண்டு வயசு ஆகுது இன்னியோட (11 ஜனவரி). பிறந்த நாளும் அதுவுமா பாவம் அவன் எதுக்கு அக்காவோட போட்டி போடணும். சோமாஸ்கந்தனாகவே இருக்கட்டும்.

Friday, January 09, 2009

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....

உலகில் அறிவுக் குறையின்றி வளர்ந்து நிறைவு பெற்று வாழ விரும்புவோர் எந்த ஒரு பொருளைப் பற்றி யார் சொல்லக் கேட்டாலும், யார் எழுதக் கண்ணுற்றாலும் அந்தப் பொருளின்கண் உண்மையுள்ளதா என்று ஆராய்ந்து தெளிதல் வேண்டும். இவ்வாறு ஆய்வதன் மூலமே செம்பொருள் - மெய்ப்பொருள் கிடைக்கும்.
நூல்வல்லார் எழுதிய அகராதி, நிகண்டுகளாயினும் அவை கூறும் சொற்பொருள் சரிதானா என்று சிந்தித்தல் நலம் பயக்கும். ஆராயாது ஏற்றுக் கொள்வது அறிவுடைமைக்கு அழகன்று. ஏனெனில் இயற்கை அறிவும் நூலறிவும் ஒருங்கே அமையப்பெற்ற சான்றோர்களும் சிலபோது முறை மறந்து எழுதுதல் - பேசுதல் உண்டு என்பதனை மறத்தல் கூடாது.

நூலா சிரியர் கருத்தினை நோக்காது
ஒருசூத் திரத்திற்கு ஒவ்வொராசிரியர்
ஒவ்வொரு மதமா யுரையுரைக் குவரே
யவ்வுரை யதனுள் அடுத்தவா சகங்கட்கு
அவர்கருத் தறியாது அவரவர் கருத்தினுள்
கொண்ட பொருள்படப் பொருள்கூ றுவரே
ஒருவிதி தனக்கே பலபெயர் வருமே
ஒருபெயர் தனக்கே பலவிதி வருமே
நூலுரை பேதகா சிரியர் மூவரும்
முக்குண வசத்தான் முறைமறந் தறைவரே.


என்று இலக்கணக் கொத்து ஆசிரியர் சுவாமிநாத தேசிகர் பாயிரத்துள் கூறிய கருத்துப் புறக்கணிக்கக் கூடியதன்று.

நிகண்டு இயற்றிய பெருமக்கள் இலக்கிய, இலக்கணப் பயிற்சிமிக்குடையர் என்பதை அறிவோம். அதனால் அவர்களின் நூல்களில் குறைகள் இருக்க இடமில்லை என்று துணிதல் கூடாது. அவர்கள் தவறு செய்த இடங்களும் உண்டு.

யானைக் கன்றின் பெயர்களைக் கூறும்போது "கயந்தலை போதகங்கள் துடியடி களபமோடு கயமுனி யானைக் கன்றாம்," என்கிறது சூடாமணி நிகண்டு.

பிங்கல நிகண்டும் (2416),

"கயந்தலை போதகம் துடியடி களபம்
கயமுனி யானைக் கன்றா கும்மே."


என்று கூறுகிறது. திவாகர நிகண்டும் இவ்வாறே கூறுகிறது.

இவை யானைக் கன்றின் வேறு பெயர்களைக்

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி


என்று ஐந்தனையும் குறிப்பிடுகின்றன.

கயந்தலை - யானைக்கன்றைக் குறிக்குமா?

இலக்கிய இலக்கணச் சான்று உண்டா?

என்ற வினாக்களை எழுப்பிச் செம்பொருள் காணல் வேண்டும்.

"தடவும் கயவும் நளியும் பெருமை." - தொல்.உரி: 24
"கயவென் கிளவி மென்மையும் ஆகும்." - தொல்.உரி: 26

என்று ஆசிரியர் தொல்காப்பியனாரே கூறுவதால் "கய" என்ற சொல்லானது பெருமை, மென்மை என்ற பொருள்களையே தரும். சங்கப் புலவர்களும் இவ்விரு பொருள்களிலேயே "கய" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

பரிபாடலில் (8:15) வருகின்ற "கயமுகை" என்பதற்குப் பரிமேலழகர் "பெரியமுகை" என்றே பொருள் எழுதுகிறார்.

கயம்பட்ட உருவின்மேல் - கலித் 72:19, கயம் - மென்மை என்றார் நச்சினார்க்கினியர். இவ்வாறு உரையாசிரியர்கள் அனைவரும் தொல்காப்பிய நெறி நின்றே "கய" என்பதற்கு மென்மை, பெருமை என்று பொருள் கொண்டனர்.

ஆகையால் "கயந்தலை" என்று செய்யுட்களில் வருமிடந்தோறும் பெருமை பொருந்திய தலை, அல்லது மென்மையான தலை என்றுதான் பொருள் கொளல் வேண்டும். முன்னொட்டு எதுவுமின்றிக் "கயந்தலை" என்று மட்டும் வந்தால் யானைக்கன்று எனப்பொருள் கொள்ளல் பொருந்தாது.

"கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டெனக்
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ
ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி."
- அகநா.165:1 - 3

"மெல்லிய தலையினை உடைய மடப்பத்தினையுடைய பெண் யானை, படுகுழியில் வீழ்ந்து அகப்பட்டதென்று களிற்றி யானை விளித்தல் பொருந்திய முழக்கத்தினை யஞ்சி மெல்லென எழுந்த செய்ய வாயையுடைய யானைக்கன்று," என்பது பொருள். ஈண்டு "கயந்தலை மடப்பிடி" என்று பெண் யானை குறிப்பிடப்படுவதையும், இம்மடப்பிடியின் கன்று "செவ்வாய்க் குழவி" எனக் குறிப்பிடப்படுவதையும் கவனிக்க வேண்டும்.

"கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி." - மலைபடு - 307

இங்கே கன்று வேறாகவும் "கயந்தலை மடப்பிடி" வேறாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. "கன்று வயிற்றிலே உண்டான மெல்லிய தலையினை உடைய மடப்பிடி," என்பது நச்சினார்க்கினியர் உரை. மடப்பிடி - இளம் பெண்யானை.

பிடிக்குக் "கயந்தலை" அடைமொழியாக வந்தாற்போல, களிற்றுக்கும் "கயந்தலை" அடைமொழியாக வருவதுண்டு. "கயந்தலைக் களிற்றின்" - சூளாமணி -106. ஆண் யானையின் தலை "கயந்தலை" எனப்பட்டது. கயந்தலை -பெரியதலை என்ற பொருளில் இங்கு வந்துள்ளது. இவை போல் யானைக்கன்றின் தலையும் கயந்தலை எனக்குறிப்பிடப்படும் பாடலும் உண்டு. "கயந்தலைக் குழவி கவியுகிர் மடப்பிடி" - அகநா.229:4. மடப்பிடிக்கு முன் குழவியும் சேர்ந்து "கயந்தலைக் குழவி" என வந்ததால் யானைக் கன்றினைக் குறித்தது.

கயந்தலை உயர்திணையிலும் அடைமொழியாய் வருவதுண்டு.

புதல்வருடைய மென்மையான தலையைப் "புதல்வர் கயந்தலை" என்று பரிபாடல் (16:8) குறிப்பிடக் காணலாம். இப்பரிபாடலிலேயே வேறொரு இடத்தில் (5:10) "மூவிரு கயந்தலை" என வருகிறது. இங்கு பரிமேலழகர் "ஆறுதிருமுடிகளை உடையோய்" எனப்பொருள் எழுதியதுடன், "கயந்தலை என்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; அஃது ஈண்டு ஆகுபெயராய் அண்மை விளியேற்றது" என்று எழுதினார். முருகன் தலைகள் ஆறும் "மூவிரு கயந்தலை" எனப்பட்டன.

உரல் போன்ற அடியினை உடையது பெரிய யானை. அதனால் "கறையடியானை" - (அகநா - 142:9) எனப்பட்டது. யானைக் கன்றின் கால்கள் துடிபோன்று இருப்பதால் "துடியடிக் கயந்தலை" (கலித் -10:8) என்றார் பாலைக்கலி பாடிய பெருங்கடுங்கோன் (துடி - உடுக்கையென்னும் பறைவகை). இவ்விடத்தில் "துடியடி"யின்றி, "கயந்தலை" மட்டும் வந்திருந்தால் யானைக் கன்றைக் குறிக்காது. கயந்தலை என்று மட்டும் வந்து யானைக் கன்றைக் குறித்த இடம் பழந்தமிழ்ச் செய்யுட்களில் யாண்டும் இல்லை. அதனால்தான் 1936ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வையாபுரிப் பிள்ளை தலைமையில் தொகுக்கப்பட்டு வெளிவந்த தமிழ் லெக்சிகனில், எங்கும் கயந்தலை -யானைக்கன்று என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் நிகண்டுகளைப் பின்பற்றிப் பல அகராதிகளில் கயந்தலை -யானைக்கன்று என்று எழுதிவிட்டனர். இது முன்னோர் கொள்கைக்கு முரணாகும்.

மா.சின்னு

நன்றி: தமிழ்மணி (தினமணி)

நன்றி: மின் தமிழ் குழுமத்தில் இட்ட திரு. ஒளவை. ந. கண்ணன்.

***

இந்தக் கட்டுரை மிக நல்ல கட்டுரை. ஒரு அருமையான கருத்தைச் சொல்லியிருக்கிறது. ஆனால் கொஞ்சம் புலமைத்தமிழில் அமைந்திருக்கிறதோ என்ற ஐயம் இருக்கிறது. இன்னும் எளிமையாக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் சொல்லுங்கள்; இக்கட்டுரைக் கருத்தைத் தழுவி இன்னொரு கட்டுரை எழுதி இடுகிறேன். நன்றி.

Wednesday, January 07, 2009

ஐங்குறுநூறு காட்டும் மாதொருபாகன்

மூவகை உலகங்கள் இருக்கின்றனவாம். மேல் உலகங்கள், கீழ் உலகங்கள், நடு உலகங்கள். மக்களும் மாக்களும் மரம் செடி கொடிகளும் வாழும் உலகங்கள் நடு உலகங்கள். மக்களில் சிறந்தோர் முனிவரும் தேவரும் எனப்பட்டோர் வாழும் உலகங்கள் மேல் உலகங்கள். மக்களில் கீழானோர் கீழ்மதி படைத்தோர் வாழும் உலகங்கள் கீழ் உலகங்கள். இவை யாவுமே மனத்தளவிலான ஆன்மிக உலகங்கள். இம்மூவகை உலகங்களும் இந்த பூமி என்ற ஒற்றைத் தளத்திலேயே இருக்கின்றன - இவை யாவும் ஆன்றோர் வாக்கு. இம்மூவகை உலகங்களைப் பற்றி வடமொழிப் பனுவல்களும் பழந்தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. அவ்வாறு கூறும் ஒரு பழந்தமிழ்ப் பாடலைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்.

இம்மூவகை உலகங்களும் யாருடைய திருவடியின் கீழ் தோன்றின என்றும் இப்பாடல் சொல்கிறது. அவன் 'ஒருவன்' என்று நின்றவன். இதனையே வேதமும் 'ஏகம் அத்விதீயம்' என்று சொல்கிறது. இந்தப் பாடல் இப்படி 'ஒருவன்' என்று சொன்னதையே பிற்காலப் பாடல் ஒன்று 'ஒன்றானவன் உருவில் இரண்டானவன்' என்கிறது.

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழல் கீழ்
மூவகை உலகு முகிழ்த்தன முறையே


நீல மேனி கொண்டவன் ஒருவன் - அவன் மாயோன். நீல மேனி கொண்டவள்? அவள் மாயோள். அவளை தன் மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் 'ஒருவன்'. அவன் யார்? அவன் தான் சேயோனின் தந்தையான சிவபெருமான். அவனுடைய திருவடி நிழலில் தான் மூவகை உலகங்களும் ஒவ்வொன்றாக முகிழ்த்தனவாம்.

நீல மேனியும் தூய்மையான ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த உமாதேவியை தன் மேனியின் ஒரு பாகத்துக் கொண்ட ஒருவன் சிவபெருமான். அவனது திருவடிகளின் நிழலின் கீழ் மூவகை உலகங்களும் முறையே முகிழ்த்தன என்கிறார் இந்தப் பாடலைக் கடவுள் வாழ்த்தாக 'ஐங்குறுநூறு' என்ற சங்க கால தொகை நூலில் பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்'. ஆமாம் இவர் தான் திருமுருகனை 'சேவலங்கொடியோன்' என்று குறுந்தொகையில் பாடியவர். இங்கே அவனது தாய் தந்தையைப் பாடுகிறார்.

பழந்தமிழ் இலக்கியங்களில் எங்குமே இலிங்கத் திருமேனியைப் பற்றிய குறிப்புகளை இது வரை நான் காணவில்லை. வடமொழி வேதத்தில் இலிங்க வழிபாடு இகழப்படுவதாகவும் அப்படி இகழப்படுவது திராவிடர் வழிபாடே என்றும் ஒரு கருத்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் கருத்தை நிலை நாட்ட அவர்கள் காட்டும் ஒரே தரவு 'சிசுன தேவர்கள்' என்று யாரையோ இகழ்ந்து பேசும் வேத வரியை. இலிங்க வழிபாடு திராவிடர்/தமிழர் வழிபாடு என்றால் அந்த வழிபாட்டைப் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் ஏதேனும் குறிப்பு இருக்குமே என்று தேடி வருகிறேன். இது வரை பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களிலும் சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் காணவில்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட குறிப்புகள் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

அருவுருவான இலிங்கத் திருமேனியைப் பற்றிய குறிப்பைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கும் போது சிவபெருமானின் உருவ உருவை மிகவும் வருணித்து வரும் பாடல் குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பார்க்கும் போது பழந்தமிழர்கள் அருவுருவத் திருமேனியான இலிங்கத்தை விட உருவத்துடன் கூடிய சிவபெருமானையே பெரிதும் போற்றியிருப்பார்களோ என்று தோன்றுகிறது.

இப்பாடலில் மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்டதாக சிலர் எண்ணிக் கொள்ளும் அருத்தநாரி/மாதொருபாகன் உருவத்தைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. சைவ சமயம் ஆணாதிக்கம் கொண்ட சமயமாகத் தொடக்கத்தில் இருந்ததாகவும் கால மாற்றத்தில் வேண்டா வெறுப்பாக பெண்ணுக்கு சம உரிமை தருவதைப் போல் மாதொருபாகன் என்ற உருவத்தை ஆக்கி வழிபட்டதாகவும் சில மூடர்கள் சொல்லித் திரிகின்றனர். அப்படி சொல்வதெல்லாம் அவர்களின் தடம் புரண்ட கற்பனையே என்பதை இந்தப் பாடல் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. பழந்தமிழ் இலக்கிய காலத்திலேயே மாதொருபாகன் என்ற திருவுருவம் தமிழர் நடுவே மிகவும் பெரிதாக வழிபடப்பட்டிருக்கிறது என்பது இப்பாடலில் சிவபெருமானின் திருப்பெயரைக் கூட குறிப்பிடாமல் 'வாலிழை பாகத்து ஒருவன்' என்று குறிப்பதிலேயே தெரிகிறது.

சிவபெருமானின் திருவடி நிழலைப் பற்றி இந்தப் பாடல் பாடுவதைப் படிக்கும் போது 'மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கு இள வேனிலும் மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே' என்று பக்தி இலக்கியக் காலத் திருமுறைப் பாடல் நினைவிற்கு வருகிறது.

குறுந்தொகையின் சேவலங்கொடியோன்

இந்த உலகமும் உலக மக்களும் இன்பமயமான நாட்களை எப்படி அடைந்தன? அப்படி அடையப்பட்ட இன்பமயமான நாட்கள் எப்படி தொடர்கின்றன? ஏதோ ஒரு பெரிய மலையின் உருவில் எல்லாரையும் மயக்கும் ஒரு தீமை ஒன்று இந்த உலகத்தின் இன்ப நாட்களைக் கெடுத்து நின்றதாம். அதனை ஒரு வெஞ்சுடர் வேல் பிளந்து அழித்ததாம். அவ்வாறு அந்த பெரிய மலையின் உருவில் நின்ற தீமையை அவ்வேல் அழித்ததால் இந்த உலகமும் உலக மக்களும் இன்பமயமான நாட்களை அடைந்து தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்களாம். ஏதோ புராண கதையைக் கேட்டது போல் இருக்கிறதா? கந்த புராணத்தில் வரும் கதை தான். ஆனால் அது கந்த புராணத்தில் தான் முதன்முதலில் சொல்லப்படவில்லை. அதற்கும் முன்பே குறுந்தொகையின் கடவுள் வாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற பழந்தமிழ் புலவரால் சொல்லப்பட்டது. ஆகையினால் கந்த புராணக் காலத்தில் இந்தக் கதை புகுத்தப்பட்டது என்று எண்ணவும் சொல்லவும் இனி செய்தல் வேண்டாம்.

தாமரை புரையும் காமர் சேவடிப்,
பவழத்து அன்ன மேனித், திகழ் ஒளிக்,
குன்றி ஏய்க்கும் உடுக்கைக், குன்றின்
நெஞ்சு பகவெறிந்த அம் சுடர் நெடுவேல்
சேவலங்கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே


தாமரை மலர் போன்ற அழகிய செம்மையான திருவடிகளையும், பவழத்தை ஒத்த சிவந்த நிறம் கொண்ட திருமேனியையும், எத்திசையிலும் விளங்கும் பேரொளியையும், குன்றிமணியை விட சிவந்த ஆடையையும், கிரவுஞ்ச மலையின் நெஞ்சு பிளக்கும் படி எறிந்த அழகும் ஒளியும் உடைய நீண்ட நெடிய வேற்படையும் கொண்ட சேவலைக் கொடியாகக் கொண்ட திருமுருகன் இந்த உலகத்தைக் காப்பதால் உலகத்தில் இருக்கும் உயிர்கள் எல்லாம் எந்தக் குறையும் இன்றி நாள்தோறும் வாழ்கின்றன.

தியான சுலோகம் என்று ஒன்றை வடமொழிப் பனுவல்களில் சொல்வார்கள். இறைவனின் திருமேனியை அடி முதல் முடி வரை வருணித்துத் தியானிக்கும் வகையில் அச்சுலோகங்கள் அமையும். இந்தப் பாடலும் ஒரு தியானசுலோகம் போல் அமைந்திருக்கிறது. திருவடிகளைச் சொல்லி, திருமேனியைச் சொல்லி, அத்திருமேனியின் பேரொளியைச் சொல்லி, அத்திருமேனியில் உடுத்தியிருக்கும் பேரொளிப் பட்டுத் துணியைச் சொல்லி, ஏந்தியிருக்கும் வேற்படையைச் சொல்லி, சேவற்கொடியைச் சொல்லி அவன் திருவுருவைக் கண் முன்னால் நிறுத்தி தியானிக்க வைக்கிறது இந்தப் பாடல்.

தாமரை என்ற மலரை மங்கலக் குறியாகக் கொள்வது வழக்கம். அதனைக் கொண்டு இந்நூலைத் தொடங்குவது போல் இப்பாட்டை அமைக்கிறார் பெருந்தேவனார். அழகிய சேவடி எல்லோரும் விரும்பும் சேவடியாகவும் இருப்பதால் காமர் சேவடி என்றார் போலும்.

இந்தப் பாட்டில் குன்றைத் தொளைத்த வேற்படையைப் பாடியிருப்பதைப் படிக்கும் போது பிற்காலத்தில் ஓசை முனி அருணகிரிநாதர் 'கிளை பட்டு எழு சூர் உரமும் கிரியும் தொளைபட்டு உருவத் தொடு வேலவனே' என்று கந்தரனுபூதியில் பாடியது நினைவிற்கு வருகிறது. 'கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரைக் கடந்த சுடர் இலை நெடுவேல்' என்று சிலப்பதிகாரமும் கூறும். இதன் மூலம் குன்றின் நெஞ்சைக் குமரனின் நெடுவேல் பிளந்த செய்தி சங்க காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வருகிறது என்று தெரிகின்றது.

சேவலங்கொடியோன் என்று சொல்லியதன் மூலம் குன்றினைத் தொளைத்த நெடுவேல் சூரன் மாமரமாய் கடல் நடுவில் நின்ற பின்னர் அம்மரத்தையும் பிளந்து ஒரு பகுதியைச் சேவற்கொடியாய்க் கொண்டனன் குமரன் என்று சொன்னார் ஆசிரியர்.