Saturday, June 21, 2008

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே


மந்திரமாவது நீறு - மந்திரங்களில் எல்லாம் சிறந்த மந்திரமாவது திருநீறு.

வானவர் மேலது நீறு - வானில் வாழும் தேவர்கள் எல்லாம் வணங்கி அணிவது திருநீறு.

சுந்தரமாவது நீறு - அழகு தரும் பொருட்களில் எல்லாம் மிகவும் அழகானது திருநீறு.

துதிக்கப்படுவது நீறு - பெரும் பெருமையுடையது என்று எல்லாராலும் துதிக்கப்படுவது திருநீறு.

தந்திரமாவது நீறு - இறைவனை அடையும் வழிகளில் (தந்திரங்களில்) எலலாம் மிகச் சிறந்த வழியாக விளங்குவது திருநீறு

சமயத்திலுல்ளது நீறு - சிவபெருமானை ஏத்தும் சைவ சமயத்தில் பெருமையுடன் போற்றப்படுவது திருநீறு.

செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே - சிவந்த திருவாயினையுடைய உமையம்மையை இடப்பாகத்தில் கொண்டிருக்கும் திருவாலவாயான மதுரையம்பதியில் வாழும் சோமசுந்தரக் கடவுளின் திருநீறே.

5 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'திருநீற்றுப்பதிகம்' பதிவில் 8 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

14 comments:

Johan-Paris said...
அன்புக் குமரனுக்கு!
திருநீற்றுப்பதிகம் எம் பாடத்திட்டத்தில் இருந்ததால் படித்தேன். அப்போ "செந்துவர் வாயுமை பங்கன்"- என்பதற்கு "சிவந்த பவளம் போன்ற வாயையுடைய உமையை;தன் பாதியாயுடையவன் எனப் படித்ததாக ஞாபகம். துவர்- பவளம். ஆயவும்.
யோகன் பாரிஸ்

2:53 AM, October 09, 2006
--

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. துவர் என்பதற்குப் பவளம் என்ற பொருள் உண்டா என்று தெரியவில்லை. துவர் என்பது துவர்ப்பு என்ற சுவையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். பவளம் துவர்ப்புச் சுவையுடையது என்றால் அதனைத் துவர் என்று அழைப்பதும் சரி.

செந்துவர்வாய் என்னும் போது துவர்ப்புச் சுவையுடன் சிவந்த நிறத்துடன் கூடிய வாய் எனலாமா?

அறிந்தவர் வந்து சொல்லுங்கள்.

7:50 AM, October 09, 2006
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்

யோகன் ஐயா குறிப்பிட்டது போல, துவர் என்பதற்குப் 'பவளம்', 'சிவப்பு' என்ற பொருளும் உண்டு.
"துடித்தனள் புருவம், துவர் இதழ்ச் செவ்வாய்" என்று சிலம்பும் சொல்கிறது.

வாய், துவர்ப்புச் சுவை என்று அவ்வளவாக எந்த இலக்கியத்திலும் பயிலவில்லை. "திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ" என்று தான் ஆண்டாள் காதலியாக கேள்வி கேட்கிறாள்!

துவர்ப்பு சுவையைக் கொண்ட வாய் என்பதை விட செம்பவள வாய் என்று கொள்ளுதலே சிறப்பாக இருக்கும் என்பது அடியேன் கருத்தும் கூட.

3:56 PM, October 09, 2006
--

வல்லிசிம்ஹன் said...
குமரன்,

திருநீற்றுப் பெருமை அணிந்தவர்களுக்குத் தெரியும்.

பயம் போக்கும் நீறு.
பாதுகாக்கும் நீறு.
வாய் மணக்கும்
திடம் வளர்க்கும்
கந்த கணபதி நீறே.
நன்றி குமரன்.அழகான பொருள்
கொடுத்ததற்கு.

7:05 PM, October 11, 2006
--

சிவமுருகன் said...
அருமையான விளக்கம்.

//செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே//

சிவந்தவளான உமையன்னையின் பாகத்தில் இருப்பவனான ஆலவாயப்பனின் திருநீறு.

10:39 PM, October 11, 2006
--

குமரன் (Kumaran) said...
இந்தக் குழப்பமே வேண்டாம் என்று தான் வெறும் 'சிவந்த திருவாய்' என்று சொல்லிவிட்டேன். நன்றி இரவிசங்கர்.

3:53 AM, October 14, 2006
--

குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி வல்லி அம்மா.

3:53 AM, October 14, 2006
--

குமரன் (Kumaran) said...
சிவமுருகன். சிவந்தவளான உமையன்னையா? நன்றி சிவமுருகன்.

3:54 AM, October 14, 2006
--

G.Ragavan said...
சின்னக்குழந்தையொன்று தொண்டையிலிருந்து மதுரையெழுந்து வந்து தொண்டையிலிருந்து குரலெழுந்து வந்து அத்தோடு சிந்தையிலிருந்து இறைவன் மீது அன்பெழுந்து செப்பிய செய்யுள் இது. எனக்கும் எந்தச் சைவனுக்கும் மிகவும் பிடித்த செய்யுள் இது. இதைக் கொடுத்தமைக்கு மிக்க நன்று. மதுரைக் கோயிலில் ஒருமுறை தரிசனம் முடிந்து வருகையில் ஓதுவார்கள் சிலர் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கக் கேட்டேன். மிகச் சிறப்பு. மிகமிகச் சிறப்பு.

11:17 AM, October 14, 2006
--

குமரன் (Kumaran) said...
இராகவன். மதுரைக்கோவிலில் மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் இது. இந்தப் பதிகத்தைப் பாடிக்கொண்டே மடப்பள்ளிச் சாம்பலை கூன்பாண்டியன் உடலில் தடவி அவரது வெப்பு நோயை சம்பந்தர் குணப்படுத்தினார் என்று சொல்வார்கள். இன்றைக்கும் முக்குறுணி விநாயகர் திருமுன்பு இருக்கும் கோபுரத்தின் மாடத்தில் மடப்பள்ளிச் சாம்பலை வைத்திருப்பார்கள். எடுத்து இட்டுக் கொண்டீர்களா?

9:37 AM, October 16, 2006
--

Johan-Paris said...
குமரா!
உமை கரியநிறத்தவள் என கிருபானந்தவாரியார் கூறக்கேட்டுள்ளேன். சிவன் தான் செவ்வழகர்; அதனால் தான் ஆலகாலம் - கண்டத்தில் நீலமாகத் தெரிந்து; நீலகண்டனானார். எனவும் கூறினார்.கரிய நிறமேனியில் செம்பவழவாய் பளிச் சிட்டுள்ளது.பவளத்தில் கரும்பவளம்; செம்பவளம் என இரு நிறமுண்டு.அதனால் தான் குறிப்பாகக் கூறியுள்ளார்.
யோகன் பாரிஸ்

2:28 PM, October 31, 2006
--

bala said...
குமரன் அய்யா,

அற்புதமாக இருக்குதய்யா இந்த பாடல்..

மேலும், ராகவன் அய்யா,KRS அய்யா,Johan-Paris அய்யா,வல்லி அம்மா,சிவமுருகன் அய்யா அவர்களின் பின்னூட்டங்களும் சேர்ந்து பாராதியார் அறிவுறுத்தியது போல் "காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு" என்ற அனுபவத்தை ஏற்படுத்தியது அய்யா.

காலை எழுந்தவுடன் இதை படிக்கும் பேறு எனக்கு கிடைத்ததால் இனிமே நான் " ஓடி விளையாடும் பாப்பா" தான்.

பாலா

8:08 PM, October 31, 2006
--

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. மிக நன்றாக இருக்கிறது உங்கள் விளக்கம். அன்னையின் கருநிற மேனியில் செம்பவளவாய் தனித்துத் தெரிந்ததால் அதனைக் குறிப்பிட்டுச் சொன்னார் என்பது நன்றாக இருக்கிறது. செம்பவளத்தைக் கண்டிருக்கிறேன். கரும்பவளத்தைக் கண்டதில்லை. அந்த செய்தியைச் சொன்னதற்கும் நன்றிகள்.

10:57 AM, November 03, 2006
--

குமரன் (Kumaran) said...
'ஓடி விளையாடு பாப்பா' பாலா. உங்கள் அன்பான சொற்களுக்கு நன்றிகள். :-) நான் வாராவாரம் எனது ஞாயிறு மாலை/இரவு ஒவ்வொரு பாடலாக பதித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவில் இருப்பவர்கள் திங்கள் அன்று படிப்பதற்கு வசதியாக.

1:52 PM, November 07, 2006

Simulation said...

குமரன்,

http://simulationpadaippugal.blogspot.com/2008/06/01.html

இதனையும் பார்க்கவும். மன்னிக்கவும். கேட்கவும்.

சிமுலேஷன்

Kavinaya said...

அழகாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள், குமரா. செம்பவள வாய் என்பதே பொருத்தமாக இருக்கிறது.

//சின்னக்குழந்தையொன்று தொண்டையிலிருந்து மதுரையெழுந்து வந்து தொண்டையிலிருந்து குரலெழுந்து வந்து அத்தோடு சிந்தையிலிருந்து இறைவன் மீது அன்பெழுந்து செப்பிய செய்யுள் இது.//

இதனையும் ரசித்தேன் :)

குமரன் (Kumaran) said...

சிமுலேஷன். நீங்கள் காட்டிய இடுகையைப் பார்த்தேன். பாடலைக் கேட்டேன். ரொம்ப நல்லா பாடியிருக்கீங்க.

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

நீங்க இரசிச்ச மாதிரி எல்லாம் எழுத இராகவனால் மட்டுமே முடியும். நானும் முயன்று பார்த்துவிட்டேன். எனக்கு வசப்படுவதில்லை.