Tuesday, April 29, 2008

உயிரெழுத்துகள் எத்தனை?

அண்மையில் என் மகளுக்குத் தமிழ் எழுத்துகள் சொல்லிக் கொடுக்கும் போது இந்த கேள்வி வந்தது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது? தமிழில் உயிரெழுத்துகள் எத்தனை? அவை யாவை?

உடுக்கை இழந்தவன் கை - 13 (பாரி வள்ளலின் கதை)

பாரி வள்ளல் மூவேந்தர்களின் சதியால் கொல்லப்பட்ட பின்னர் பாரியின் நண்பரான புலவர் கபிலரும் பாரி மகளிரான அங்கவையும் சங்கவையும் பறம்பு நாட்டிலிருந்து கிளம்பி பறம்பு நாட்டின் வடக்கிலிருக்கும் வேளிர்களால் ஆளப்படும் நாடுகளுக்குச் சென்றார்கள். ஒவ்வொரு நாடாகச் சென்று பாரி மகளிரை அறிமுகம் செய்து அந்த நாட்டை ஆளும் வேளிரிடம் அந்த மகளை மணம் செய்து கொள்ள கபிலர் வேண்டினார். மூவேந்தர்களுக்குப் பெண் தர மறுத்து அதனால் உயிர் இழந்த பாரியின் மக்களை மணம் கொண்டு மூவேந்தர்களின் சினத்திற்கு ஆளாக அந்த வேளிர் அரசர்கள் விரும்பவில்லை. சிலர் நேரடியாகவும் பலர் மறைமுகமாகவும் தங்கள் இயலாமையை கபிலரிடம் சொல்லிவிட்டனர். அப்படி ஒவ்வொரு நாடாக வரும் போது கபிலரும் பாரி மகளிரும் விச்சிக்கோ என்னும் வேளிர் அரசன் ஆளும் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். அரசவைக்கு அங்கவையையும் சங்கவையையும் அழைத்துக் கொண்டு வந்து அரசனுக்கு அறிமுகப்படுத்துகிறார் கபிலர்.

***

"மன்னவா. உன்னுடைய மலை மிகவும் குளிர்ச்சி உடைய மலை. மிகவும் உயர்ந்த மலை. நீ தாங்கிய வேலோ பகைவர்களின் ஊனை உண்டு நெருப்பு போல் ஒளி வீசும் தன்மை கொண்டது. பெரிய யானைகளை உடையவன் நீ. விச்சிக்கோவே. இந்தப் பெண்களைப் பற்றிக் கூறுகிறேன் கேள். நாத்தழும்பேறும் அளவிற்குப் பாடும் பாணர்களுக்குப் பல பரிசில்களைக் கொடுக்கும் வள்ளல்கள் உண்டு. அப்படி பாடாமல் போனாலும் நலிந்து நிற்கிறதே என்று முல்லைக்குத் தேர் தந்தானே பாரி அவனுடைய மக்கள் இவர்கள். நான் ஒரு புலவன்; அந்தணன். யான் உனக்குத் தர நீ இவர்களை மணம் முடித்துக் கொள்வாய். அவர்கள் தந்தை விரும்பியது போல் நீ வீரம் மிகுந்த வேளிர் குலத்தில் உதித்தவன். அதனால் இந்தப் பெண்களை மணக்கத் தகுதியுடையவன்.

பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந்துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி
மழை மிசை அறியா மால்வரை அடுக்கத்துக்
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடுவேல்
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே
இவரே பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத்தழும்பிருப்பப் பாடாதாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப்போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே
"

விச்சிக்கோன் கபிலரின் பாடலையும் வேண்டுதலையும் கேட்டு தன் அவையோருடன் கலந்து பின்னர் பாரி மகளிரை மணக்க மறுத்துவிட்டான். கபிலரும் மன வருத்தத்துடன் இருங்கோவேளின் ஊருக்குச் சென்று அவனிடம் பேசுகின்றார்.

"வாருங்கள் புலவரே. தங்களைப் பார்த்தால் பாணராகத் தெரியவில்லை. இந்தப் பெண்களைப் பார்த்தாலும் விறலியர்களாகத் தெரியவில்லை. தாங்கள் யார்? இங்கே வந்த காரியம் என்ன?"

"மன்னவா. இவர்கள் யார் என்று கேட்கிறாய். சொல்கிறேன் கேள். இரந்து வந்தவர்களுக்கு ஊர்களையே பரிசாகக் கொடுத்தவனும் வாடி நின்ற முல்லைக்கொடிக்குத் தன் தேரைத் தந்தவனும் என்றும் அழியாத புகழை உடையவனும் ஆன பறம்பு நாட்டரசன் பாரியின் மக்கள் இவர்கள். நான் அவர்களின் தந்தையின் தோழன். அதனால் அவர்கள் என் மக்களும் ஆவர். நான் ஒரு அந்தணப் புலவன். என் பெயர் கபிலன்"

"பறம்பு வேந்தர் பாரியின் மக்களா? மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இங்கே வந்ததன் நோக்கம் என்ன கபிலரே?"

"மன்னவா. நாற்பத்தொன்பது தலைமுறைகளுக்கு முன் துவரைப்பதியை ஆண்டு பெரும் புகழ் கொண்ட வேளிர்களின் வழி வந்தவனே. துவரையை ஆண்ட மாலின் வழி வந்த நீயும் புலியைக் கொன்று புலிகடிமால் என்று பெயர் பெற்றாய். வேளிர் குலத்திற்கு ஏற்பத் தேடி வரும் பாணர்களுக்கு எல்லாம் பரிசில்களை வாரி வழங்கும் வள்ளலே. இருங்கோவேளே. இந்தப் பெண்களை நான் இங்கே அழைத்து வந்த காரணத்தைக் கூறுகிறேன் கேள். இவர்கள் தந்தை பெரும் புகழ் கொண்ட வேளிர் குலத்துதித்தவர்க்கே இந்தப் பெண்களை மணம் முடித்துத் தர விரும்பினான். அவன் விரும்பிய படி பெரும் புகழ் கொண்ட வேளிர் குலத்தில் பிறந்த உனக்கு நான் தர இவர்களை நீ மணந்து கொள்ள வேண்டும்.

இவர் யார் என்குவை ஆயின் இவரே
ஊர் உடன் இரவலர்க்கு அருளி தேர் உடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமா பாரி மகளிர் யானே
தந்தை தோழன் இவர் என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே
நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா வீகைத் துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங்கோவே
ஆண்கடன் உடைமையில் பாண் கடனாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான் தர இவரைக் கொண்மதி வான் கவித்து
இருங்கடல் உடுத்த இவ்வையகத்து அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ வென் வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே
"

"ஐயனே. தாங்கள் சொல்வதெல்லாம் வியப்பாக இருக்கிறது. பாரி வள்ளல் வேந்தர்கள் சதியால் இறந்ததை அறிந்துள்ளேன். பாரி மன்னர் பெண் தர மறுத்ததால் படை எடுத்து பழி தீர்த்தனர் வேந்தர்கள் என்றும் அறிந்துள்ளேன். அந்தப் பெண்களை இன்று நீங்கள் என் அவைக்கு அழைத்து வந்திருப்பதைக் கண்டு என் மனம் துணுக்குறுகிறது. தங்களுக்குத் தகுந்த பதிலை என் அவை முன்னவர்களிடம் கலந்து கொண்டு தருகிறேன். அது வரை தாங்கள் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்"

***

பாடற்குறிப்புகள்:

இரு பாடல்களும் பாடாண் திணையிலும் (பாடப்படுபவரது பெருமைகளைக் கூறுதல்) பரிசில் துறையிலும் (பரிசை வேண்டிப் பாடுவது) அமைந்திருக்கின்றன.

1. பனிவரை நிவந்த என்று தொடங்கும் பாடல் கபிலர் விச்சிக்கோ வேளைப் பாடியது. புறநானூறு 200வது பாடல்.

பொழிப்புரை: குளிர்ந்த மலையின் மீது ஓங்கி வளர்ந்த பச்சை இலையையுடைய பலா மரத்தினது கனியைக் கவர்ந்து உண்ட கரிய விரலையுடைய கடுவன் (ஆண் குரங்கு) சிவந்த வாயையுடைய தன் மந்தியொடு (பெண் குரங்கு) விற்றிருக்கும். பார்க்கும் போது மலையின் உச்சி வெகு தூரத்தில் விளங்கும். மேகங்களும் இந்த மலையின் உச்சியை அறியாமல் மலையின் இடையில் தவழ்ந்து கொண்டிருக்கும் (மலை அவ்வளவு உயரமானது). ஆனால் அந்த மலை உச்சியில் மூங்கில்கள் முழைத்துப் பரவியிருக்கும். அப்படிப்பட்ட மலையை உடையவனே. பகைவர்களின் உடலைக் கிழித்ததால் பெற்ற நிணத்தை உண்டு அதனால் செருக்கிய நெருப்பினைப் போல் ஒளிவீசிச் சுடும் தலையையுடைய வேலை உடையவன் நீ. போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்டு கனல் வீசும் கடிய கண்களையுடைய யானைகளைக் கொண்டவன் நீ. ஒளி வீசும் மாணிக்கங்களைக் கொண்ட வளைந்த அணிகலன்களை உடைய விச்சிக்கோவே! இவர்கள், எப்போதும் பூக்கள் பூத்துக் குலுங்கும் முல்லைக் கொடி நாத்தழும்பேறும் படி பாடாது ஆயினும் ஒலிக்கும் மணிகளையுடைய பெரிய தேரினை கொழுகொம்பாகக் கொள்க என்று கொடுத்த எல்லாத் திசைகளிலும் பரந்து ஓங்கி நிற்கும் புகழை உடைய பாரி வள்ளலின் மகளிர். நான் பரிசினை வேண்டி வந்திருக்கும் பரிசிலன். அந்தணனும் ஆவேன். நீயோ தகுந்த போர் முறைகளால் பகைவரை தாழச் செய்யும் வாளினை உடையவன். உனக்கு நான் இவர்களைத் தர நீ மணம் கொள்வாய். சினத்தால் போர் செய்து அடங்காத பகையரசர்களை அடக்கும், அளவில்லாத விளைச்சலைத் தரும் நாட்டையுடைய தலைவனே!

கடுவன் மந்தியோடு மகிழ்ந்திருப்பதைப் போல் நீ இந்தப் பெண்களுடன் மகிழ்ந்து இருக்கலாம் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

முகம் என்ற சொல் வடசொல் என்றும் தமிழில் அந்தச் சொல் இல்லை என்றும் சிலர் கூறக் கேட்டுள்ளேன். இங்கே செம்முகம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. அதனால் இது சங்ககாலத்திலேயே இருந்த தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.

2. இவர் யார் என்குவை என்று தொடங்கும் பாடல் கபிலர் இருங்கோவேளைப் பாடியது. புறநானூறு 201வது பாடல்.

பொழிப்புரை: இவர் யார் என்று வினவுவாய் ஆயின், இவர்கள், இரப்பவர்களுக்கு ஊர்களையே உடனே அருளி தேரினை முல்லைக்கு உடனே தந்து என்றும் மறைந்து போகாத நல்ல புகழை உடைய ஒலிக்கும் மணிகளைக் கழுத்தில் அணிந்த யானைகளை உடைய பறம்பு நாட்டின் தலைவனும் நெடியவனும் ஆன பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன்; அதனால் இவர்கள் என் மகளிரும் ஆவர். அந்தணனும் புலவனும் ஆகிய நான் இவர்களைக் கொண்டு வந்தேன். நீயோ வடதிசையில் ஒரு முனிவருடைய வேள்வித்தீயில் தோன்றி உயர்ந்த நெடிய செம்பினால் ஆனது போன்ற மதிலை உடைய துவரைப் பதியை என்றும் குறையாத ஈகைக் குணத்துடன் ஆண்டவர்களின் வழியில் நான்பத்தொன்பது தலைமுறைக்குப் பின்னர் வந்திருக்கும் வேளிர்களில் சிறந்த வேளே! வெற்றியைத் தரும் போரினைச் செய்யும் அண்ணலே! தார் என்னும் மலர் மாலையை அணிந்த யானைகளை உடைய பெரிய இருங்கோவே! உன்னுடைய ஆண்மைக்கு ஏற்ற கடமையாக பாணர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எப்போதும் செய்து, தழைந்த மாலைகளைச் சூடிய புலிகடிமாலே! நான் தர இவர்களை மணம் கொள்வாய்! வானத்தால் கவிழப்பட்டும் பெரும்கடல்களால் ஆடையைப் போல் சூழப்பட்டும் இருக்கும் இந்த உலகத்தில் அருமையான வலிமையையுடைய பொன்விளைக்கும் மிக உயர்ந்த மலைக்குத் தலைவனே1 வெற்றி வேலுடன் பகைவர்கள் நடுங்கும் படையைக் கொண்ட கேடில்லாத நாட்டினை உடைய தலைவனே!

இரு பாடல்களிலும் 'நான் புலவன். பரிசிலன். அந்தணன்' என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் கபிலர். பெண் கேட்டு வரும் போது அதனை ஏற்றுப் பெண் கொடுப்பது முறையாக அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. அந்த முறையை மீறி இப்போது தானே வந்து பெண்களைத் தருகிறேன்; பெற்றுக் கொள் என்று வேண்டி நிற்பதால் இது பரிசில் துறை ஆயிற்று. அப்படிப் பரிசில் வேண்டுவதால் தன்னைப் பரிசிலன் என்றும் புலவன் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். வேறெங்கும் அந்தணன் என்று சொல்லாமல் 'பெண் கொடுக்கிறேன். கொண்மதி' என்னும் போது மட்டும் தன்னை அந்தணன் என்று சொல்வதைப் பார்த்தால் 'அந்தணர் தர மன்னர் பெறுதல்' முறையுடையது என்ற குறிப்பைத் தருகிறதோ என்று தோன்றுகிறது. இங்கே அந்தணன் என்பது குணத்தால் வந்ததா பிறப்பால் வந்ததா என்ற குறிப்பு இல்லை. பலரும் பிறப்பால் வந்த பெயர் என்றே பொருள் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாம் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் துவரைப்பதி கருநாடகத்திலிருக்கும் துவாரசமுத்திரம் என்று சிலரும் துவாரகை என்று சிலரும் பொருள் கொள்கிறார்கள். தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் 'துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதிணென்மரையும் பதிணென்குடி வேளிர் உள்ளிட்டோரையும் கொண்டு போந்து' என்றும் 'மலையமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதிணென்வகைக் குடி பிறந்த வேளிர்' என்றும் சொல்லுபவை இந்த இரு வகைக் கருத்துக்கும் துணை நிற்கிறது. துவரைப் பதி துவாரகை தான் என்று எண்ணுபவர்கள் நச்சினார்க்கினியர் சொல்லும் 'நிலங்கடந்த நெடுமுடியண்ணல்' வாமன திரிவிக்கிரம அவதாரத்தில் உலகை அளந்தவனாகக் கூறப்படும் மாயோனாகிய கண்ணன் என்று பொருள் கொள்கிறார்கள். கண்ணனின் வழி வந்தவர்களே வேளிர்கள் என்ற கருத்து அவர்களுடையது. துவரைப்பதி துவாரசமுத்திரம் என்று எண்ணுபவர்கள் நச்சினார்க்கினியர் கூறும் 'நிலம் கடந்தவர்' அகத்தியர் என்று பொருள் கொள்கிறார்கள். வடக்கிலிருந்து அகத்தியரால் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் வேளிர்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள். வேளிர் குடியினர் வேந்தர் குடியினரை விட காலத்தால் மூத்தவர்கள் என்ற செய்தியைக் கொண்டு பார்க்கும் போது இந்த இருவிதமான கருத்தும் சுவையாக இருக்கின்றன.

Sunday, April 27, 2008

கிழவன்

யாரு யாரு இந்தக் கிழவன் யாரு?
நாரு நாரு இது தேங்கா நாரு!

இந்தப் பாட்டு தெரியாதவர் யார்? குரு சிஷ்யன் படத்தில் கிழவன் வேடத்தில் வருகின்ற ரஜினியைப் பார்த்து பிரபு பாடுகின்ற பாடல். கிழவனென்றால் அத்தனை இளப்பம்! அதனால்தான் பாருங்கள், பாட்டின் முதல் வரியில் கிழவர் என்று கூடச் சொல்லாமல் கிழவன் என்று ஒருமையில் அழைக்கிறார் பிரபு. இரண்டாவது வரிக்கு வருவோம். தேங்கா நாரு! இது அந்தக் கிழவனின் வயதுக் குறிப்பு. வயது முதிர்ந்த காரணத்தால் வளர்ந்த தாடி வெளிரிப் போய் வெண்ணிறமாய் இருக்கிறது. அதையும் கிண்டலடிக்கிறார் பிரபு.

நல்ல வேளை நக்கீரர் இங்கே இல்லை. இருந்திருந்தால் பிரபுவை ஒரு கை என்ன, இரண்டு கைகளும் பார்த்திருப்பார்? சிவனிடம் துணிந்தவன் எவனிடம் அஞ்சுவான்? (இதுவும் ரஜினி படப் பாட்டுதானே!) கிழவனுக்குத் தாடி இருக்கலாம்! அவனுக்கு வெண்ணிறத் தாடி இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்பார் நக்கீரர். (நாகேஷ் திருவிளையாடல் படத்தில் சொன்னது நினைவிற்கு வருகிறது. உம்மைப் போல்...இல்லை நீர் ஒருவரே போதும். உலகம் உருப்படும்.) நக்கீரர் நம்மையெல்லாம் குழப்பவில்லை. அவர் சொல்ல வருவது என்னவென்றால், கிழவன் என்பவன் வயது முதிர்ந்தவனாக இருக்க வேண்டியதில்லை!

குழப்பமில்லை என்று கூறிவிட்டு குழப்பினால் எப்படி? நக்கீரர் சங்கப் புலவர். அதிலும் செண்பகப் பாண்டியனின் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலமைப் புலவர். ஈசருடன் நேருக்கு நேர் வாதிட்டு வென்றவர். அவர் தவறாகச் சொல்வாரா? எதனால் அப்படிச் சொல்கிறார் என்று நாமும் சற்று சிந்திக்க வேண்டும். கிழவன் என்ற சொல்லுக்கு அன்றைக்குப் பொருளே வேறு. இன்றைக்கு அதன் பொருள் வேறு. அன்றைய பொருளுக்கு இன்றைக்கு ஒரு சொல் இருக்கிறது. அது தலைவன். இன்றைக்குத் தலைவர்கள் எல்லோரும் கிழவர்களாய்த்தானே இருக்கிறார்கள். அப்படி வந்ததுதான் கிழவன் என்ற சொல்லுக்கு முதியவர் என்ற பொருள்.

இழுமென இழிதரும் அருவி
பழம் முதிர்ச் சோலைமலை கிழவோனே!
இந்த இரண்டு அடிகளும் நக்கீரரின் திருமுருகாற்றுப்படையின் கடைசி இரண்டு அடிகள். இதற்கு நான் பொருள் சொல்லவும் வேண்டுமோ?

வரலாற்றில் ஒரு சுவையான நிகழ்ச்சி. ஒரு திருத்தலத்தில் இறைவனுக்குக் கிழவன் என்றும் இறைவிக்குக் கிழவி என்றும் பெயர். கோயில்களில் வடமொழி நுழைந்த காலத்தில் பெயர்களை முறையே விருத்தகிரீசுவரன் என்றும் விருத்தகிரீசுவரி என்றும் மாற்றி விட்டார்கள். சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் (அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர்) அந்தக் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். பெயர்களைப் பார்த்துவிட்டு, கிழவனையையும் கிழவியையும் பாடமாட்டேன் என்று கோவித்துக் கொண்டு போய்விட்டாராம். தேவாரப் பாடல் பெற்ற தலம் என்ற பெயருக்காக இறைவனுக்கும் இறைவிக்கும் முறையே பாலகிரீசுவரர் என்றும் பாலாம்பிகை என்றும் புதுப் பெயர்களை சூட்டினார்களாம். அதன் பிறகு அந்த குரவர் அந்தக் கோயிலுக்குத் தேவாரம் பாடினாராம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, April 24, 2008

Intelligence: அறிவாற்றல், அறிவாண்மை

ஓகை நடராஜன் அவர்கள் தற்போது இளைஞர்கள் நடுவில் புழக்கத்தில் இருக்கும் ஆங்கிலச் சொற்களுக்கு உரிய தமிழ்ச் சொற்களை இந்த 'சொல் ஒரு சொல்' வலைப்பூவில் தந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அது எனக்கும் சரியாகத் தோன்றியது. அதனால் தமிழில் கலந்திருக்கும் பிறமொழிச் சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைச் சொல்லும் அதே நேரத்தில் தமிழாகவே பாவிக்கப்பட்டு தற்போது புழங்கும் ஆங்கிலச் சொற்களில் எளிதாகத் தமிழ்ப்படுத்த முடியாத (தமிழ்ச்சொல் என்னவென்று உடனே நினைவிற்கு வராத) சில சொற்களையும் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்.

இன்டெலிஜென்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அறிவாற்றல், அறிவாண்மை என்ற சொற்களைப் புழங்கலாம் என்று எண்ணுகிறேன். என்ன சொல்கிறீர்கள்? வேறு ஏதாவது சொல் இன்னும் பொருத்தமாக இருக்குமா? அப்படியானால் அதனையும் சொல்லுங்கள்.

Wednesday, April 23, 2008

Zero = சுழி

சுழி என்ற சொல்லை zero என்ற சொல்லுக்கு பரிந்துரைக்கிறேன்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். பிள்ளையார் சுழியுடன் எழுத்தைத் தொடங்குவது பலரின் மரபு. ஆனால் எண்களோ சுழியிலிருந்தே தொடங்குகின்றன. zero, சைபர், பூஜ்ஜியம், சூன்யம் என்று பல பெயர்களில் நாம் இந்த எண்ணைக் கூறுகிறோம். இந்த எண்ணுக்கு சுழி என்கிற அழகான பெயர் இருக்கிறது. சுழி என்ற சொல்லை இவ்வெண்ணுக்குப் பதிலாக எழுதுவதையோ அல்லது பேசுவதையோ நாம் இன்னும் தொடங்கவில்லை. பல தமிழறிஞர்களாலும், விக்கியிலும், அகராதிகளிலும் zero என்பதற்கு சுழி அல்லது சுழியம் என்றே குறிக்கப் பெற்றிருக்கிறது. இராம கி ஐயா அவர்கள் பல பதிவுகளில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். எடுத்துக்காட்டாக ஒரு சுட்டி. நான் என்னுடைய தனித்தமிழ் பேசும் ஒரு நண்பருடனும் மேலும் பல நேரங்களிலும் இச்சொல்லையே பாவிக்கிறேன்.

சரியாகப் படிக்காவிட்டால் ஆசிரியர் சுழி மதிப்பெண் கொடுப்பார் என்பதை 'ஆசிரியர் சுழித்துவிடுவார்' என்று கூறுவர் பாமரர். இவ்வகையில் பாமரரிடம் இச்சொல் வினைச்சொல்லாகப் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் பொதுவாக இந்த எண்ணைச் சொல்வதற்கு சைபர் என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். சிலர் இதைத் தமிழில் சொல்ல வேண்டும் என்று விரும்பி மிகுந்த சிரமத்துடன் பூஜ்ஜியம் என்று உரைப்பார்கள். முன்பே இப்பதிவுகளில் குறித்தாற்போல் கிரந்த எழுத்து உச்சரிப்பு தமிழர்க்கு அந்நியமானதென்பதால் பூஜ்ஜியத்தை பூச்சியம் என்றும் zero என்பதை ஜீரோ என்றும் சீரோ என்றும் அல்லது வடிவேலு வழக்கில் ச்சீரொ என்றும் பல்விதமாக உச்சரிப்பார்கள். ஆனால் சுழி என்பது எளிதும் சிறிதுமான சொல். இச்சொல் நேரடியாக அவ்வெண்ணின் வடிவத்தைக் குறிக்கிறது. ழகர உச்சரிப்பு சரியாக வராதவர்கள் சுலி என்று உச்சரித்தாலும் எனக்கு அது உடன்பாடே. ஏனெனில் சுலி என்றொரு தமிழ்ச்சொல் இருப்பதாகத் தெரியவில்லை. குழப்பத்திற்கு வழியில்லை.

சுழி என்பதுடன் இந்த எண்ணை சுழியம் என்றும் சொல்லலாம். சுழியம் என்ற பெயரில் தலையில் அணியும் நகை ஒன்று உண்டு. சுழியம் என்றபெயரில் ஒரு திண்பண்டமும் உண்டு. இது சுழியன் என்றும் அழைக்கப்படும். தீப ஒளித்திருநாளில் பெரும்பாலான தமிழர் வீடுகளில் இத்திண்பண்டம் செய்யப்படும். இவற்றுடன் சுழி எண்ணையும் சிற்ப்பாகக் கூறவேண்டிய இடங்களில் சுழியம் என்று நாம் கூறத் தொடங்கலாம். காட்டாக வெப்பயியக்கவியலில் சுழியமென்றால் அது நேரடியாக absolute zeroவைக் குறிக்க வல்லது.

கருவிகளில் zero error எனப்படுவது சுழிப்பிழை என்று சிறப்பாக மொழியாக்கம் பெற்றிருக்கிறது. அமாவசையை நாம் சுழிப்பிறை என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். சுழிமதி என்றும் அழைக்கலாம். தொலைபேசி எண் அல்லது இது போன்ற எண்களைச் சொல்லுகையில் தமிழில் சொல்ல விரும்பும்போதோ அல்லது தமிழ் மட்டுமே அறிந்தோரிடம் சொல்லும் போதிலோ மற்ற எண்களை எளிதாகச் சொல்லிவிட்டு சுழி வரும்போது இடறுவது வழக்கம். இது போன்ற சுழல்களில் சுழி என்ற சொல் அழகாகப் பொருந்திவரும். நான் உணர்ந்து மகிழ்ந்திருக்கிறேன். நீங்களும் சொல்லிப் பாருங்கள். மகிழுங்கள்.

எல்லோரிடமும் எண்கள் இனி சுழியுடன் தொடங்கட்டுமாக!

எழுதியவர்: ஓகை நடராஜன்.

Tuesday, April 22, 2008

அன்பே அன்பே கொல்லாதே!

எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் இது. திரைப்படத்தில் இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதமும் மிக நன்றாக இருக்கும்.

திரைப்படம்: ஜீன்ஸ்
வெளிவந்த வருடம்: 1998
இயற்றியவர்: கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்கள்: அனுராதா ச்ரிராம், ஹரிஹரன்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே (அன்பே)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி (அன்பே)



கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்தக் கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்


மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் (அன்பே)

Friday, April 18, 2008

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ?

தமிழ்மணம் சூடா இருக்கு; சூடா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. அந்த சூடு தணிக்க என் பங்காக:

:-)

எந்த மனநிலையில் இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்டால் மனம் அமைதி ஆகிவிடுகிறது. சிறந்த பாடல் வரிகள். நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

திரைப்படம்: என் சுவாசக் காற்றே
வெளிவந்த வருடம்: 1999
இயற்றியவர்: கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்: எம்.ஜி. ச்ரிகுமார்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்

க்ளங்க் க்ளங்க் க்ளங்க் க்ளங்க்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
க்ளங்க் க்ளங்க் க்ளங்க் க்ளங்க்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி
படபடபட தடதடதட சடசடசடவெனச் சிதறுது

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ (சின்னச் சின்ன)

சக்கரவாகமோ மழையை அருந்துமாம் - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
இழுத்துப் பிடித்து விண்ணில் செல்வேனோ (சின்னச் சின்ன)




சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவ தானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது (சக்கரவாகமோ)

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்
கண்கள் மூடிக் கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்

ஓஹோஹோ ஓஹோ ஓஹோ ஓஹோஓஹோஹோ (3)

(சக்கரவாகமோ)

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்


வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்

உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!


வேயுறு தோளி பங்கன் - மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்

விடம் உண்ட கண்டன் - தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல்

மிக நல்ல வீணை தடவி - மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு

மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து - களங்கமற்ற பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு (சந்திரன் இயற்கையாய் களங்கமுள்ளவன். அவன் ஐயன் திருமுடியில் அமர்ந்ததால் அவன் களங்கம் நீங்கி மாசறு திங்களானான்).

என் உளமே புகுந்த அதனால் - அவனாகவே அவன் அருளை முன்னிட்டு என் உள்ளத்தில் புகுந்து நிறைந்ததனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கோள்களும் (பாம்பு இரண்டு ராகுவும் கேதுவும்)

ஆசறு நல்ல நல்ல - ஒரு குற்றமும் இல்லாதவை

அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அவையெல்லாம் ஈசன் அடியவர்க்கு மிக மிக நல்லவையாகும்.

Thursday, April 17, 2008

கோளறு பதிகம் தோன்றிய கதை

'அப்பரே. அடியார் குழாத்தில் இருந்து ஐயனை வணங்குவது மிக மிக அருமையாக இருக்கிறது. தாங்கள் அடியேனைத் தேடி வந்ததும் நாம் இருவரும் இந்த திருவெண்காட்டுத் திருத்தலத்தில் இருந்து மாதொரு பாகனை வணங்கி வாழ்த்துவதும் எல்லாம் ஐயனின் திருவருளே. நாளெல்லாம் இப்படியே சென்றுவிடக் கூடாதா என்று இருக்கிறது நாவுக்கரசப் பெருமானே!'.

'முற்றிலும் உண்மை காழிப்பிள்ளையாரே. நாம் இருவரும் சேர்ந்து அவன் புகழைச் செந்தமிழில் பாடவேண்டும் என்பது ஐயனின் ஆவல் போல் இருக்கிறது. அதனால் தான் நம்மை சேர்த்துவைத்திருக்கிறான்'.

'திருநாவுக்கரசப் பெருமானே. அடியார் குழாம் என்று நான் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டேன். கிடைத்தற்கரிய பேறல்லவா எனக்குக் கிடைத்திருக்கிறது. நற்றுணையாவது நமச்சிவாயமே என்று கல்லைக் கட்டி கடலில் தள்ளிய போதும், சுண்ணாம்பு காளவாயில் வீசப்பட்டப்போதும் இறைவன் திருநாமத்தைச் சொல்லி அந்தத் துன்பங்களில் இருந்தெல்லாம் எந்த வித குறையும் இன்றி வெளிவந்து அரன் நாமத்தின் பெருமையை உலகறியச் செய்த தங்களின் அன்பு அடியேனுக்குக் கிடைத்தது என் பெரும் பாக்கியம்.'

'சம்பந்தப் பெருமானே. அடியேன் மீதுள்ள அன்பினால் தாங்கள் என்னை உயர்த்திப் பேசுகிறீர்கள். அம்மையப்பனை நேரே கண்டு உமையன்னையின் திருமுலைப்பாலை அவளே தர உண்டு திருஞானசம்பந்தர் என்ற திருப்பெயரைப் பெற்று இந்த சின்ன வயதில் ஊர் ஊராய் போய் ஐயனைப் பற்றி அழகான தமிழ்ப் பாடல்கள் பாடி வரும் தங்கள் பெருமையே பெருமை. தாங்கள் வெயிலில் வெகுதூரம் நடக்கக் கூடாது என்று ஐயனே தங்களுக்கு முத்துப்பல்லக்கும் முத்துப்பந்தலும் சிவகணங்களின் மூலம் தந்தாரே. என்னே அவன் அருள்! என்னே தங்கள் பெருமை!'.

அடியார் ஒருவர் குறிக்கிட்டு, 'பெருமானே. மதுரையில் இருந்து மகாராணி மங்கையர்கரசியாரிடமிருந்தும் அமைச்சர் குலச்சிறையாரிடமிருந்தும் செய்தி வந்துள்ளது', என்று கூறி ஒரு ஓலையை சம்பந்தரிடம் தருகிறார். அதனைப் படித்துவிட்டு காழிப்பிள்ளையார் அப்பரைப் பார்த்து

'ஐயனே.பாண்டியன் தேவியாரும் குலச்சிறையாரும் அடியேனை மதுரையம்பதிக்கு வந்து ஆலவாய் அரசனின் ஆலய தரிசனம் செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஓலையைப் பார்த்தவுடன் உடனே சென்று அன்னை அங்கயற்கண்ணியுடன் அமர்ந்திருக்கும் திருஆலவாயானைப் பார்க்கவேண்டும் போல் ஆவல் கூடுகிறது'.

திருநாவுக்கரசர் ஒன்றுமே சொல்லாமலும் முகவாட்டம் அடைவதையும் பார்த்து, 'பெருமானே. ஏன் தயங்குகிறீர்கள்? உடனே திருஆலவாய்க்குச் செல்லவேண்டும் என்று என் மனம் பொங்குகிறது. ஆனால் தாங்கள் எதையோ எண்ணிக் கலங்குவதாய்த் தோன்றுகிறது. என்னவென்று தயைசெய்து சொல்லுங்கள்'.

'ஒன்றும் இல்லை பிள்ளையாரே. பாண்டியன் சமணனாய் மாறிவிட்டான். மதுரையில் சமணர் ஆதிக்கம் அளவில்லாமல் போய்விட்டது என்று கேள்விப்பட்டேன். என் இளம்வயதில் சமணரால் அடியேன் அடைந்த துன்பங்கள் எல்லாம் தங்களுக்குத் தெரிந்திருக்கும். சிறு பிள்ளையான தாங்கள் மதுரைக்குச் சென்றால் அந்த சமணர்களால் ஏதாவது ஊறு விளையுமோ என்று அஞ்சுகிறேன். அதனால் தாங்கள் மதுரைக்குச் செல்லவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்'.

'அப்பரே. என் தந்தையாரைப் போன்ற அன்பு என் மேல் தங்களுக்கு இருப்பதால் தான் அடியேன் உங்களை அப்பர் என்று அழைத்தேன். உங்களுக்கு சமணர்களால் விளைந்த துன்பங்களெல்லாம் எந்த இறைவனின் திருவருளால் விலகியதோ அதே இறைவன் திருவருள் அடியேனையும் காக்கும் என்பதனை மறந்து கலங்குகிறீர்களே. தாங்கள் இப்போது கலங்குவதைப் பார்க்கும் போது நான் உங்களை அப்பர் என்று அழைத்தது மிகச் சரி என்று தெளிவாகிவிட்டது. என்னை தயைசெய்து தடுக்கவேண்டாம்.'

'அது மட்டும் இல்லை ஐயனே. இன்று நாளும் கோளும் சரியில்லை. அதனால் இன்று நீங்கள் கிளம்பி மதுரைக்குச் செல்லாமல் பிறிதொரு நாள் சென்றால் மிக்க நலமாகும் என்று அடியேன் எண்ணுகிறேன்'.

'அப்பரே. நாளும் கோளும் அடியார்க்கு என்றும் மிக நல்லவை என்று தாங்கள் அறியாததா. வேயுறு தோளி பங்கன் ....'

---------------

இப்படி தொடங்கியது தான் 'கோளறு பதிகம்' என்னும் இந்தப் பத்துப் பாடல்களும். பதிகப் பொருளை அடுத்தப் பதிவிலிருந்து பார்க்கலாம்.

Wednesday, April 16, 2008

கிருஷ்ண நாமம்

ஜக்ஜித் சிங்கின் கிருஷ்ண பஜன் பாடல்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்குப் பிடித்த ஒரு பஜன் பாடலை இங்கே தந்திருக்கிறேன்.

Tuesday, April 15, 2008

உடுக்கை இழந்தவன் கை - 12 (பாரி வள்ளலின் கதை)

"பெரியப்பா. சான்றோர்கள் மிகுந்திருந்ததால் மழை பொய்க்காமல் இருந்தது என்றீர்கள். இனி அவ்வாறு நடக்காது என்று நினைக்கிறீர்களா?"

"ஆமாம் சங்கவை. உன் தந்தை இல்லாத நாட்டில் இனி சான்றோர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் பாவம் இந்தப் பறம்பு நாடு தான் படாத பாடு படப் போகிறது.

எட்டாம் நாள் நிலவைப் போல் அரைவட்டமாக இருக்கும் குளங்கள் அழிந்து போவதைப் போல் முல்லைக்குத் தேர் தந்த பாரியின் நாடு அழிந்து போகப் போகிறது. ஐயோ பாவம்.

அறையும் பொறையும் அணந்த தலைய
எண்ணாட்டிங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர்வேல் குவைஇய மொய்ம்பிற்
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே
"

"குளங்கள் அழிவது போல் நாடு அழியும் என்றீர்களே. ஏன் பெரியப்பா?"

"மகளே. உன் தந்தை ஏந்திய கூர்வேலைப் போல் கூர்மையுடைய பாறைகளும் சிறு குன்றுகளும் நிறைய தெளிந்த நீர்க்குளங்கள் புரப்பவர் இருக்கும் வரை தெளிந்த நீரக் கொண்டிருக்கும். காப்பாற்றுவார் இல்லாத பொழுது நீரில் பாசி படர்ந்து குளம் அழிந்து போகும். கூரிய வேலைத் தாங்கிய உன் தந்தையின் பாதுகாப்பை இழந்த இந்த தண்பறம்பு நாட்டிற்கும் அதே கதி தானே என்று ஏங்குகிறேன்"

"அப்பா இறந்தாலும் ஆள்வதற்கு வேந்தர்கள் இருக்கிறார்களே பெரியப்பா. அவர்களின் ஆட்சியில் பாதுகாப்புடன் இந்த நாடு இருக்குமே. அவர்களுடன் சேர்ந்து சான்றோர்களும் இருப்பார்களே. அதனால் பறம்பு நாட்டிற்கு அழிவொன்றும் நேராது பெரியப்பா"

"சங்கவை. உன் தந்தை முரசினையுடைய இந்த மூவேந்தர்களைக் காட்டிலும் மிகுதியாக இரவலர்களுக்கு வழங்கியவன். நிழலே இல்லாத நீண்ட நெடிய வழியில் நிழல் தரும் தனி மரம் போல் இருந்தவன். அவன் நீங்கிய பின் சான்றோர் இங்கே நில்லார். அவன் ஆளும் போது மழை பெய்து நின்றபின்னர் புளிமாங்காயை மோரில் சேர்த்துச் சமைத்த புளிங்கறியை ஆசையுடன் உண்டோம். சான்றோர் நீங்கியதால் மழையும் பெய்யாது. ஆசையுடன் உண்ட புளிங்கறியும் கிடைக்காது.

கார்ப்பெயல் தலைஇய காண்பின் காலைக்
களிற்று முக வரியில் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்னலைப் புளித்து
மென்றினை ஆணர்த்து நந்தும் கொல்லோ
நிழலின் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே
"

"பெரியப்பா. நீங்கள் சொல்லச் சொல்ல வருத்தம் கூடுகிறது. நாம் இங்கேயே இருந்துவிடலாமே. நான் பிறந்த இந்த நாட்டின் நிலை இனி மேல் இப்படி கெட்டுப் போகும் என்றால் அதனை நிகழாமல் செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நாம் இங்கேயே இருந்துவிடலாம் பெரியப்பா"

"அம்மா. உன் தந்தைக்கு நான் தந்த உறுதிமொழியை நீ அறிவாய். உங்கள் இருவருக்கும் தகுந்த மணாளர்களைத் தேடித் தானே நாம் இப்போது வடக்கு நோக்கி செல்கிறோம். நான் தந்த உறுதிமொழியை நானும் மீற முடியாது. உங்கள் தந்தையாரின் விருப்பத்தை நீங்களும் மீறமுடியாது. அதனால் நாம் தொடர்ந்து நம் வழியே செல்வோம்"

தொடர்ந்து வடக்கு நோக்கி நடக்கின்றனர். வேளிர் ஆளும் நிலங்களுக்கு எல்லாம் சென்று பாரி மகளிரை மணக்கும் படி கபிலர் வேண்டுகிறார். மூவேந்தர்களுக்கு அஞ்சி எல்லோரும் மறுத்துவிடுகின்றனர். இப்படியே ஒவ்வொரு நாடாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

***


பாடற்குறிப்புகள்:

இரண்டு பாடல்களும் பொதுவியல் திணையிலும் கையறுநிலைத் துறையிலும் அமைந்திருக்கின்றன. இரண்டும் கபிலர் பறம்பு நாட்டைப் பாடியது.

1. அறையும் பொறையும் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 118ம் பாடல்.

பொழிப்புரை: பாறையும் சிறு குன்றுகளும் நிறைந்த அஷ்டமி (எட்டாம் நாள்) திங்களைப் போல் வளைந்த கரையையுடைய தெளிந்த நீர்க் குளம் பாதுகாப்பார் இன்மையால் அழிவது போல் கூரிய வேலையேந்திய திரண்ட தோள்களைக் கொண்ட தேரினை முல்லைக்கு வழங்கிய வள்ளலாகிய பாரியின் தண்பறம்பு நாடும் அழியுமோ?

2. கார்ப்பெயல் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 119ம் பாடல்.

பொழிப்புரை: கார்காலத்து மழை பெய்து முடித்த பின்னர் யானையின் முகத்தில் இருக்கும் வரிகளைப் போல் தோன்றும் புளிமாங்காயின் பூக்கள் நிறைய பூக்க அந்த செம்மை மிகுந்த மரத்தில் விளைந்த காயை இனிய மோருடன் கூட்டிச் செய்த புளிங்கறியை மெல்லிய தினையுடன் சுவைத்த நாட்கள் குறைந்து போகுமோ? நிழலில்லாத நீண்ட வழியில் தனியாக நிற்கும் மரத்தைப் போல் பெரும்படையுடன் முரசினையும் உடைய வேந்தர்களை மிகுத்து இரவலர்களுக்கு ஈயும் வள்ளன்மை உடைய பாரியின் நாடும் அது போல் குறைந்து போகுமோ?

Saturday, April 12, 2008

நல்லதே நினைப்போம்! நல்லதே சொல்வோம்!

அண்மைக்காலமாக மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எளிமையான இரு துதிப்பாடல்களை இந்த இனிய சித்திரைத் திங்கள் முதல் நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்கிறேன்.



ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்
ஞானகுரு வாணியை உள் நாடு.


ஆனைமுகனாம் விநாயகன், ஆறுமுகனாம் திருமுருகன், அம்பிகையாம் அன்னை, பொன்னம்பலவனாம் நடராஜன், ஞானத்தை அருளும் குருநாதர், அறிவை வழங்கும் வாணி இவர்களை உள்ளத்தில் நாடித் துதிப்பாய் (மனமே).

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

நொடிப்பொழுதும் அகன்றிருக்க மாட்டேன் என்று சொல்லி அலர்மேல்மங்கையாம் திருமகள் உறைகின்ற திருமார்பை உடையவனே! நிகரில்லாத புகழை உடையவனே! மேலுலகம், கீழுலகம், நடுவுலகம் என்ற மூன்று உலகங்களையும் உடையவனே! என்னை என்றும் ஆள்பவனே! நிகரில்லாத அமரர்களும் முனிவர்கள் கூட்டங்களும் விரும்பித் தொழுகின்ற திருவேங்கடத்தானே! வேறு கதி ஒன்றுமே இல்லாத அடியேன் உன் திருவடிகளின் கீழ் தஞ்சமாக வந்து அடைந்து அங்கேயே நிலையாக நிற்கின்றேன்.

Thursday, April 10, 2008

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன்...

இந்தப் பாடல் வரிகளை யாராலும் மறக்க முடியாது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு சூழலில் இந்தப் பாடல் தாங்களே பாடுவது போல் தோன்றும். இந்த ஞானம் எல்லாருக்கும் எப்போதாவது வருவது தான். இதுவரை உங்களுக்கு இது தோன்றவில்லை என்றால் நீங்கள் கொடுத்துவைத்தவர்.

திரைப்படம்: படிக்காதவன்
வெளிவந்த வருடம்: 1985
இயற்றியவர்: தெரியவில்லை (பாடல் வாளிப்பா இருப்பதைப் பார்த்தால் இது வாலிப்பாவாய் இருக்கும் என்று எண்ணுகிறேன்)
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடலைப் பிரபலப்படுத்தியவர்: சூப்பர் ஸ்டார் :-)

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி (ஊரைத்)

பச்சைக் கொழந்தையின்னு பாலூத்தி வளத்தேன்
பாலைக் குடுச்சுப்புட்டு பாம்பாகக் கொத்துதடி (ஊரைத்)

ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்
சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ
என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி
தீப்பட்டக் காயத்துல தேள்வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி (ஊரைத்)

நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி
ஆளைக் கரை சேத்து ஆடும் இந்தத் தோணி
சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்
பணங்காசைக் கண்டுபுட்டா புலி கூட புல்லைத் தின்னும்
கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி
அடங்காத காளை ஒன்னு அடிமாடாப் போனதடி கண்மணி என் கண்மணி (ஊரைத்)


இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 26 ஜூன் 2006 அன்று இட்டது.

Monday, April 07, 2008

கோஷ்டி: குழுமம், குழாம்

நாம் அதிகம் பயன்படுத்தும் சொற்களில் ஒன்று இந்த 'கோஷ்டி' என்னும் சொல். ஒரு அரசியல் கட்சியின் இரு பிரிவினர் சண்டை போட்டுக் கொண்டால் அதனைக் 'கோஷ்டி சண்டை' என்போம். இந்த மாதிரி குழு சேர்ந்து ஒருவரை மற்றவர் சாடுதல் நம் இயற்கையிலேயே இருக்கிறது. அதனால் 'ஓ நீ அந்த கோஷ்டி தானே' என்று ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதையும் அடிக்கடி பார்த்திருக்கிறோம். வைணவ கோவில்களில் ஒரு குழுவாக இறைவன் முன் அமர்ந்து திவ்விய பிரபந்த பாசுரங்களைப் பாடி இறைவனை வணங்குதலை 'கோஷ்டி பூஜை' என்பார்கள். இந்த மாதிரி 'கோஷ்டி' என்ற சொல் பயன்படும் இடங்களில் எல்லாம் 'குழு, குழாம்' போன்ற சொற்களைப் புழங்கலாம்.

கோஷ்டி சண்டை - குழுப்பூசல்
நீ அந்த கோஷ்டி தானே - நீ அந்த குழாம் தானே
கோஷ்டி பூஜை - குழு வழிபாடு

ஆனால் கோஷ்டி என்ற சொல்லில் கிடைக்கும் போதை குழுவில் கிடைக்கவில்லை என்று சொல்வார்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் :-(

அண்மையில் அப்படி 'கோஷ்டி' என்று சொல்லாமல் ஒரு அருமையான தமிழ்ச்சொல்லான 'குழுமம்' என்ற சொல்லைப் புழங்கத் தொடங்கியுள்ளார்கள். அந்தத் தமிழ்ப்பற்றாளர்களுக்கு என் வாழ்த்துகள்.

***

இந்த இடுகை அந்தக் காலத்தில் ஒரு சூடான இடுகையாக இருந்தது. இன்றைக்கும் அப்படி ஆவதற்குரிய தகுதி உடையது என்றே நினைக்கிறேன். :-)

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 24 மே 2006 அன்று இடப்பட்டது.

கர்வம்: செருக்கு

இதுவும் அர்த்தம் போன்ற சொல் தான். நம்மில் பலர் இந்த கர்வம் என்ற சொல்லை மிகுதியாக மிக இயற்கையாகப் பயன்படுத்துகிறோம். வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்து (இங்கிருந்து அங்கு சென்றதா என்று தெரியாது - இராம.கி. ஐயாவைக் கேட்டால் தெரியும்) தமிழ்படுத்தப்பட்ட பல சொற்களில் இதுவும் ஒன்று. நம் இலக்கியங்கள் பலவற்றில் இது கருவம் என்று பயின்று வருகிறது. இதற்கேற்ற தமிழ்ச்சொல் செருக்கு என்று சொல்லலாம். வேறு ஏதாவது தமிழ்ச்சொல் இருந்தால் அதனையும் சொல்லுங்கள். 'கருவம்', 'கர்வம்' என்று மிகுதியாகப் புழங்குவதைக் குறைத்துக் கொண்டு இனிமேல் செருக்கு என்ற சொல்லையும் புழங்கலாம் என்று இருக்கிறேன். நண்பர்களுக்கு என் வேண்டுகோளும் அதுவே. ஆரணங்கு என்ற சொல் போல் இளம்பெண்களுக்குப் புரியாத சொல் இல்லை செருக்கு என்பது என் கருத்து. செருக்கு என்பது ஆரணங்குகளுக்கு மட்டும் உரியதா? இருபாலருக்கும் உரியது. அதனால் வெயில் மிகுதியாக இருக்கிறது என்னார் (என்று சொல்லமாட்டார்கள்). மற்றவர் என்ன நினைக்கிறார்களோ? :-)

***

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 17 மே 2006 அன்று எழுதப்பட்டது.

Sunday, April 06, 2008

கல்தோன்றி மண்தோன்றிக்...

அமெரிக்காவில் ஒரு திரையரங்கில் நான் முதன்முதலில் பார்த்த தமிழ்ப்படம்/இந்தியப்படம் ஜீன்ஸ். வெளிநாட்டிலும் நம் நண்பர்களின் கூச்சல்கள், கிண்டல்கள், விசில்கள் என்று அந்தப் படத்தைப் பார்த்த அனுபவமே அருமையாக இருந்தது. அதற்குப் பின் பல தமிழ் திரைப்படங்களை இங்குள்ள திரையரங்குகளில் பார்த்தாலும் அன்று முதல் முதலில் பெற்ற அனுபவம் அப்புறம் கிடைக்கவில்லை.

அப்போது தான் எனக்குத் திருமணம் நிச்சயமாகி மூன்று மாதப் பணிக்காக அமெரிக்கா வந்திருந்த நேரம். அதனாலும் இந்தப் படத்தில் இருக்கும் எல்லா பாடல்களும் மிகவும் பிடித்துவிட்டதோ என்னவோ?!

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளை செல்லும் காற்று மெல்லிசை ஆவது அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் (பூவுக்குள்)



ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறு வாசமுள்ளப் பூவைப் பார்
பூவாசம் அதிசயமே
அலைகடல் தந்த மேகத்தில் ஒரு
துளி கூட உப்பில்லை
மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல்
மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

(கல் தோன்றி)

பெண்பால் கொண்ட சிறுதீவு
கால் கொண்டு நடமாடும்
நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய் பேசும் பூவே நீ
எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கை கொண்ட விரல்களும் அதிசயமே
நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

(கல் தோன்றி)

திரைப்படம்: ஜீன்ஸ்
வெளிவந்த வருடம்: 1998
இயற்றியவர்: வைரமுத்து
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, உன்னிகிருஷ்ணன்


***

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 1 டிசம்பர் 2007 அன்று இடப்பட்டது.

Friday, April 04, 2008

சுட்டும் விழிச் சுடரே...

அண்மையில் வந்து பலருடைய மனதையும் கவர்ந்த பாடல் இது. சுட்டும் விழிச்சுடரே என்று தொடங்கும் பாரதியாரின் பாடலின் முதல் அடியை மட்டும் எடுத்துக் கொண்டு மிக அருமையான பாடலை எழுதியிருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு வரியும் அருமை. எந்த வரி மிகப் பிடித்தது என்று சொல்ல முடியாத படி எல்லா வரியும் பிடித்திருக்கிறது. புதிய கற்பனைகள் ஒவ்வொரு வரியிலும். அருமையான இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.

திரைப்படம்: கஜினி
வெளிவந்த வருடம்: 2005
இயற்றியவர்: கவிஞர் நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: பாம்பே ஜெயச்ரி, ச்ரிராம் பார்த்தசாரதி
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண்:

சுட்டும் விழிச் சுடரே
சுட்டும் விழிச் சுடரே
என்னுலகம் உன்னை சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

சுட்டும் விழிச் சுடரே
சுட்டும் விழிச் சுடரே
என்னுலகம் உன்னை சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்



மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்

பெண்:

தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூறலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்

ஆண்:

கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன் உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்

பெண்:

சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என் இதயம் பற்றி கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்

மரங்கொத்திப் பறவை ஒன்று
மனம் கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர் வரை தந்தேன்

ஆண்:

தீயின்றித் திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்

பெண்:

மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு கண்ணா நீ
கோபப்பட்டால் வெயில் அழகு கண்ணா நீ
கோபப்பட்டால் வெயில் அழகு

ஆண்:

சுட்டும் விழிச் சுடரே
சுட்டும் விழிச் சுடரே
என்னுலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத் தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே

பெண்:

உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பனம் கண்டேன்


பாடியவர்கள் ஒற்று மிகுத்துப் பாடியிருந்தால் இங்கே வரிவடிவிலும் ஒற்று மிகும்; ஒற்று மிகாமல் பாடியிருந்தால் இங்கும் மிகாது. இலக்கணம் பார்க்கவில்லை. :-)

***

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 11 ஜூன் 2006 அன்று இட்டது.

உன்னி

வீட்டு நாயோ தெரு நாயோ, அவைகளை உன்னிகள் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அவைகள் சொறிவதைப் பார்த்தால் நமக்கே அரிப்பெடுக்கும். அவற்றின் தோலோடு ஒட்டிக்கொண்டு மெல்லிய இரத்த நாளங்களைக் கடித்துத் திறந்து, அங்கே பெருகும் குருதியைச் சுவைத்து உண்ணும் அந்த உயிரியை உண்ணி என்றல்லவா அழைக்க வேண்டும்? மாறாக உன்னி என்பது எதற்காக?

"இல்லை. அது உன்னியல்ல. உண்ணி என்பதுதான் சரி. அதுமட்டுமல்லாமல் ஒட்டுண்ணி சாறுண்ணி என்றெல்லாம் கேட்டதில்லையா? இது ஒட்டுண்ணிதான். அதிலுள்ள உண்ணிதான் தனியாக வந்து பெயராகி உள்ளது." இப்படியெல்லாம் விளக்கம் தரலாம். ஆனால் அது உண்மையல்ல. உன்னி என்பதுதான் சரி.

நாய்களை மட்டுமல்ல மனிதர்களையும் மாடுகளையும் கூட உன்னிகள் வருத்துவதுண்டு. மனிதர்களை வருத்தும் உன்னிகளுக்கு வேறு பெயர் உண்டு. அது பேன். நம் தலையில் ஒளிந்து கொண்டு வாழ்க்கை நடத்தும் அவைகளும் உன்னிகள்தான். அப்படியானால் உன்னி என்று இவைகளை ஏன் அழைக்கிறோம்? உன்னி என்பதற்கு சின்ன அல்லது சிறிய என்று பொருள். உருவில் சிறியாதாக இருந்து பெரிதாக துன்பந்தரும் இவைகளை உன்னி என்று சொல்வதில் என்ன தவறிருக்கிறது?

அதெல்லாம் கிடக்கட்டும். உண்ணி கிருஷ்ணனைத் தெரியுமா? உண்ணி மேனனைத் தெரியுமா? இப்படி எழுதினால் தின்கிற கிருஷ்ணன் என்றும் தின்கிற மேனன் என்று பொருள். இப்படி எழுதுவது பிழை. உன்னி கிருஷ்ணன் என்றும் உன்னி மேனன் என்றுந்தான் எழுத வேண்டும். உன்னி கிருஷ்ணன் என்றால் சின்னக் கிருஷ்ணன். உன்னி மேனன் என்றால் சின்ன மேனன். திவ்யா உன்னி என்றால் திவ்யா குட்டி. என்னதான் சொல்லுங்கள். உன்னி கிருஷ்ணன், வெண்ணெய் திருடி உண்ணி கிருஷ்ணன் என்று சொல்வதுதானே மனதிற்குப் பிடிக்கிறது. உன்னிக்குப் பொருள் என்னவென்று கேரளக் குட்டிகளைக் கேட்கு!

அன்புடன்,
கோ.இராகவன்

***

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் இராகவனால் 30 மே 2006 அன்று இடப்பட்டது.

Thursday, April 03, 2008

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ ...

பாவேந்தர் பாரதிதாசனாரின் பாடல் இது. இதனைப் படித்திருக்கிறேன். ஏதோ ஒரு பழைய திரைப்படத்திலும் கேட்டிருக்கிறேன். அண்மையில் வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது கர்நாடக இசை வடிவில் இந்தப் பாடலை இருவர் பாடியிருப்பதைப் பார்த்தேன். அருமையாக இருக்கின்றன. அவற்றை இங்கே கேளுங்கள்.

இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
தலைப்பு: பெற்றோர் ஆவல்
பாடியவர்கள்: நித்யச்ரீ, சுதா இரகுநாதன்
இராகம்: தேஷ்
தாளம்: ஆதி, ஏகம்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...

இந்தப் பாடலுக்குப் பொருள் விளக்கம் சொல்லவேண்டுமா என்று தெரியவில்லை. ஒரு வேளை சொற்களைக் கொஞ்சம் மாற்றி எழுதினால் இன்னும் நன்றாகப் புரியுமோ என்று தோன்றுவதால் அதனைச் செய்கிறேன். ஏதேனும் கேள்வி இருந்தால் கேளுங்கள். பதில் தெரிந்தால் சொல்கிறேன்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா? தமிழில் பாடி நீ நல் அன்பிலா நெஞ்சில் அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா?

வன்பும் எளிமையும் (வன்மையும் ஏழ்மையும்) சூழும் நாட்டிலே வாழ்வில் உணர்வு சேர்க்க எம் வாழ்வில் உணர்வு சேர்க்க நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா?

அறம் இதென்றும் யாம் மறம் (அறமல்லது) இதென்றுமே அறிகிலாத போது யாம் அறிகிலாத போது தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? நீ இயம்பிக் காட்ட மாட்டாயா?

புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே (புறநானூறு, அகநானூறு) புலவர் கண்ட நூலின் தமிழ்ப் புலவர் கண்ட நூலின் நல் திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச் செல்வம் ஆக மாட்டாயா? தமிழ்ச் செல்வம் ஆகமாட்டாயா?

***

இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 6 ஜூன் 2006 அன்று இடப்பட்டது.

உடுக்கை இழந்தவன் கை - 11 (பாரி வள்ளலின் கதை)

தங்க நாணை பாரியிடமிருந்து பரிசிலாகப் பெற்ற கதையை விறலி சொல்லச் சொல்ல அங்கவை, சங்கவை இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டன. இன்றும் முழுநிலவு காய்கிறது. அன்றைக்கும் முழு நிலவு காய்ந்ததே. சோகமான குரலில் அங்கவை ஒரு பாட்டைப் பாடத் தொடங்கினாள். அவளுடைய பாடலுக்கு ஏற்ப பாணரும் விறலியும் தத்தமது யாழ்களை மீட்டத் தொடங்கினர்.

"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்
"

இதற்கு மேல் அங்கவையால் பாட இயலவில்லை. சங்கவை தொடர்ந்தாள்.

"இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே
"

இந்தப் பெண்களின் உணர்வுகள் இந்தப் பாடலில் பெருக்கெடுத்ததால் இந்தப் பாடல் பல்லாயிரம் வருடங்கள் மக்கள் நினைவில் நிலை நின்று பாரியின் புகழையும் பாரி மகளிரின் இழப்பையும் கூறி நிற்கும் என்று கபிலருக்குத் தோன்றியது. தன்னுடைய கவிதைகளிலும் உணர்வுகள் வெளிப்படுவதுண்டு. ஆனால் தனது புலமையின் விளைவாக அந்த உணர்வுகள் உவமைகள் என்னும் அணிகளைக் கொண்டே வெளிப்படுவதால் வருங்காலம் பாடல்களில் இருக்கும் உணர்வுகளை விட உவமைகளையே நினைவில் நிறுத்தும். உவமைகளைச் சுவைக்கத் தொடங்கிய உடனேயே அந்த உவமைகளைச் சொன்னவர் யார்; அந்த உவமைகள் வெளிப்படுத்திய உணர்வுகள் என்ன என்பவை மறந்து போகத் தொடங்கி அந்த உவமைகளை மட்டும் நினைவில் நிறுத்தி அவற்றைத் தாங்களும் எடுத்தாளத் தொடங்குவார்கள். அப்படி எல்லாம் நிகழும் போது முதல் கவிதை மறந்து போகும். தன் கவிதைகளுக்கு நேரக்கூடிய இவை இந்தப் பெண்கள் பாடிய இந்தக் கவிதைக்கு நேராது என்று கபிலருக்குத் தோன்றியது. ஒப்புமைக்காக மூன்றே பொருட்களை எடுத்துக் கொண்டு தங்கள் உள்ளக் குமுறல்களையும் கையறு நிலையையும் இந்தப் பெண்கள் மிக அழகாகச் சொல்லிவிட்டார்கள். எந்த வித உவமைகளும் இல்லை; அலங்காரங்களும் இல்லை. இப்படிப்பட்ட நேரடியான உணர்வுகள் மிகும் பாடல்கள் மக்கள் மனத்தில் நீங்காத இடம் கொண்டு நிலைத்து நிற்கும் தானே.

தந்தையாரின் இறப்பால் மனம் மிக நொந்து வருந்தும் இளம்பெண்கள் இருவரையும் விறலி அணைத்துக் கொண்டு தேற்றினாள். எத்தனை தான் தேற்றினாலும் மறைந்துவிடக்கூடிய இழப்பா அது? மறந்துவிடவும் முடியுமா? ஆனாலும் மூத்தவள் ஒருத்தியின் அணைப்பு கொஞ்சம் மன அமைதியைக் கொடுத்ததென்னவோ உண்மை. மாண்டவர் மீள்வரோ என்றெல்லாம் அறிவு சான்ற மூத்தோர் எத்தனை சொன்னாலும் ஆதரவுடன் ஒருவர் அணைத்துக் கொண்டு தேற்றும் போது கிடைக்கும் அமைதி அந்த அறிவுரைகளில் கிடைப்பதில்லையே. உணர்வுகள் மிஞ்சும் போது அறிவுரைகளால் அவற்றை ஓரளவிற்குத் தான் அமைதிபடுத்த முடிகின்றது.

நிலவொளியில் அமர்ந்து வெகு நேரம் பாரியின் பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர் ஐவரும். பேசியும் அழுதும் களைத்து ஒவ்வொருவராக நிலா முற்றத்திலேயே உறங்கத் தொடங்கிவிட்டனர். கபிலரும் பாணரும் ஒவ்வொருவர் மேலும் ஒரு போர்வையைச் சாற்றிவிட்டுத் தாங்களும் படுத்து உறங்கத் தொடங்கினர். இன்றைக்கு தன் மனத்தை உருக்கிப் பல பாடல்களைப் பெற்ற பறம்பு மலையை இனி வாழ்நாளில் எப்போது காணப்போகிறோமோ என்று எண்ணிக் கொண்டே உறங்கிப் போனார் கபிலர். நாளை முழுவதும் பறம்பு நாடு தன்னிடம் பல பாடல்களைப் பெறப் போகிறது என்பதை அறியாமல் போனார் அவர்.

***

"இந்த பறம்பு நாடு இது வரை பெற்றிருந்த பேறு தான் என்னே? எத்தனை கொடிய அறிகுறிகள் தோன்றினாலும் உங்கள் தந்தை செங்கோல் வழுவாது ஆண்டிருந்ததால் எந்தக் குறையும் இன்றி இருந்ததே. இனி என்னாகுமோ?"

"பெரியப்பா. கொடிய அறிகுறிகள் என்று சொன்னீர்களே. அவை என்ன? நாங்கள் கண்டதில்லையே?"

"சங்கவை. நீ பிறந்த பின்னரும் அந்த அறிகுறிகள் தோன்றியுள்ளன. ஆனால் அவற்றின் பாதிப்பு பறம்பு நாட்டிற்கு இல்லாமல் போனதால் உனக்கு அவை தெரியவில்லை. கருநிறம் கொண்ட கோள்மீனான காரியாம் சனி புகையுடன் வானில் தோன்றுவதும் புகையை வாலாகக் கொண்ட தூமகேது வானில் தோன்றுவதும் தெற்கு திசையில் வெள்ளி தோன்றுவதும் நாட்டிற்குக் கேட்டை விளைவிக்கும் அறிகுறிகள். பாரியின் ஆட்சியில் பறம்பு நாடு இருந்த போது பல முறை அவை தோன்றியிருக்கின்றன. ஆனால் அவனுடைய செங்கோல் திறம்பாமை அந்த அறிகுறிகளின் பாதிப்பில் இருந்து நாட்டைக் காப்பாற்றிவிட்டன".

"நீங்கள் சொன்ன இந்த அறிகுறிகளால் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும் பெரியப்பா?"

"மழை பொய்த்துப் போகும். அதனால் வயல் வெளிகளில் பயிர் விளைவது குன்றும். புல்லும் முளைக்காத நிலை தோன்றும். அழகிய கன்றினை ஈன்ற பசுக்கள் தின்று இளைப்பாறப் புற்களும் இல்லாமல் துயருறும். இவை பொதுவாகத் தோன்றக்கூடிய பாதிப்புகள். இவற்றை எல்லாம் விட மன்னவன் இறந்துபட நேரிடும் என்பதே பெரும்பாதிப்பு"

"இவ்வளவு கொடிய பாதிப்புகள் ஏற்படாமல் மன்னவனது செங்கோல் தடுத்ததா? அது எப்படி பெரியப்பா?"

"முறையோடு மன்னவன் ஆண்டு வந்தால் அந்த நாட்டில் சான்றோர்கள் வாழ விரும்பி வந்து கூடுவார்கள். சான்றோர் ஒருவர் இருந்தாலே அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்று கேட்டிருப்பீர்களே. உன் தந்தையை அண்டி வாழ சான்றோர் பலரும் வரும் போது இந்த இயற்கைக் குறிகளால் என்ன செய்ய முடியும்? செங்கோல் வளையாமையால் சான்றோர் மிகுந்தனர். சான்றோர் மிகுந்ததால் மழை பொய்க்கவில்லை

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயலகம் நிறையப் புதற்பூ மலர
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடுநிரை நன்புல் ஆரக்
கோல் செம்மையில் சான்றோர் பல்கிப்
பெயல் பிழைப்பறியாப் புன்புலத்ததுவே
பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே
"

***

பாடற்குறிப்புகள்:

1. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 112ம் பாடல். பாரி மகளிர் பாடியது.

திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை.

பொழிப்புரை: அன்றொரு நாள் முழுநிலவில் எங்கள் தந்தையையும் நாங்கள் பெற்றிருந்தோம் எங்கள் குன்றத்தையும் பிறர் அடையவில்லை. இன்று இந்த முழுநிலவு நாளில் வென்று பகைவரை வீசி எறியும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எங்கள் குன்றை அடைந்தார் எங்கள் தந்தையையும் நாங்கள் இழந்தோமே.

2. மைம்மீன் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 117ம் பாடல். பறம்பு நாட்டைக் கபிலர் பாடியது.

திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை.

பொழிப்புரை: கரிய நிற கோள் மீனான காரி புகையுடன் கூடித் தோன்றினாலும், தூமகேதுவான புகைக்கொடி தோன்றினாலும், தெற்கு திசை ஓரமாக வெள்ளி ஓடினாலும், வயலகம் நிறைய புதற்பூவாகிய நெல் விளையும்; வீட்டில் முதல் மகவை ஈன்ற அழகிய கண்களையுடைய பசுவின் கூட்டம் புற்களை ஆர உண்ணும்; பாரியின் செங்கோல் செம்மையால் சான்றோர்கள் பல்குவர். அதனால் மழை பொய்க்காத பெருமை கொண்ட நாடு இது. இளம்பூனையின் முற்களைப் போன்ற பற்களை ஒத்த முல்லைப் பூவினை சூடிய வளையல்கள் அணிந்த பாரிமகளிரின் தந்தை நாடு இனி பாரியின்றி என்ன பாடுபடுமோ?

'கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்' என்று இந்த மூன்று காரணங்களையும் சிலப்பதிகாரத்திலும் காணலாம்.

'முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்' என்ற குறளையும் 'ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவானெனின்' என்ற குறளையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

Wednesday, April 02, 2008

விவேக சிந்தாமணி - கடவுள் வணக்கம்


அல்லல் போம் வல்வினை போம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம் - நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.

அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக் கணபதியைக் கை தொழுதக் கால் - அருணாசலம் என்னும் திருவண்ணாமலை கோபுர வாசலில் வீற்றிருக்கும் செல்வக் கணபதியை கை தொழுது கும்பிட்டால்

அல்லல் போம் - எல்லாவிதமான தடங்கல்களும் தொல்லைகளும் போகும்

வல்வினை போம் - என்ன செய்தாலும் பின் தொடர்ந்து தன் பயனைக் கொடுக்கும் நாம் செய்த நல்வினைத் தீவினைப் பயன்கள் அழிந்து போகும்

அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் - பிறவிகள் எடுக்கக் காரணமான முன்வினைகளின் தொல்லை தீர்ந்து போகும்

போகாத் துயரம் போம் - என்றும் நீங்காமல் மனத்தில் நிற்கும் துயர நினைவுகள் எல்லாம் தெளிந்து போகும்

கெட்டவைகள் போகும். அது மட்டுமா

நல்ல குணம் அதிகமாம் - நல்ல குணங்கள் நம்மில் மேன்மேலும் பெருகும்.

அதனால் செல்வக் கணபதியை எந்நேரமும் வணங்குங்கள்.
****

விவேக சிந்தாமணி என்னும் இந்த நூல் அருமையாக இருக்கிறது. இதுவரை நான் படித்ததில்லை. ஞானவெட்டியான் ஐயா அவரது வலைப்பூவில் இந்த நூலில் உள்ளப் பாடல்கள் ஒவ்வொன்றாக எடுத்துப் பொருள் எழுதி வருகிறார். அவர் வலைப்பூவில் அந்தப் பாடல்கள் எல்லாவற்றையும் படித்த போது அவற்றை இன்னும் விளக்கமாகப் பொருள் கூறலாமே; சில பாடல்களை விளக்கும் போது கதையாகவும் சொல்லலாமே என்று ஒரு ஆசை எழுந்தது. ஐயாவிடம் அனுமதி கேட்டேன். 'நன்றாய் செய்யுங்கள். இதற்கு அனுமதி எதற்கு. அவற்றை நானும் படித்து அறிந்து கொள்கிறேன்' என்று அவருக்கே உரிய பெருந்தன்மையுடன் அனுமதி கொடுத்தார். இதோ செல்வகணபதியைக் கைதொழுது தொடங்குகிறேன். அவன் அருள் முன்னிற்கட்டும்.

***

இந்த இடுகை 'விவேக சிந்தாமணி' என்ற பதிவில் 22 பிப்ரவரி 2006 அன்று இடப்பட்டது. அப்புறம் தொடர்ந்து அந்தப் பதிவில் எந்த இடுகையும் இடவில்லை. இந்த ஒரே இடுகையை அங்கிருந்து கூடலுக்கு நகர்த்திவிட்டு அந்தப் பதிவை மூடிவிடுகிறேன்.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும்...

ஒரு சிறுவன் இருந்தான். பெரிய கோவக்காரன். எப்போது சினம் கொண்டாலும் சினம் வரச் செய்தவரைத் திட்டித் தீர்த்துவிடுவான். அவன் தந்தை ஒரு நாள் அந்தச் சிறுவனை அழைத்து ஒரு பை நிறைய ஆணிகளைக் கொடுத்து 'தம்பி. இனி மேல் ஒவ்வொரு முறை நீ யாரையாவது கோவித்து சுடுவார்த்தைகள் சொல்லும் போதெல்லாம் நம் வீட்டு வேலியில் இந்தப் பையிலிருந்து ஒரு ஆணியை எடுத்து அறைய வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் ஒரு ஆணியையும் அறையாமல் இருந்தால் அப்போது எனக்கு வந்து சொல்' என்று சொன்னார். பையனும் அப்படியே செய்து வந்தான்.

முதல் நாள் வேலியில் 37 ஆணிகள் இருந்தன. மறு நாள் அந்த எண்ணிக்கை குறைந்தது. நாட்கள் செல்ல செல்ல ஆணியை அறைவதை விட சினத்தை அடக்குவதும் சினம் கொள்ளாமல் இருப்பதும் பையனுக்கு எளிதாக இருந்தது. சில வாரங்களில் சினம் கொள்வதே இல்லாத நாட்களும் வந்தன. ஆணிகளை அறைவதும் நின்றது. ஒரு மாதம் எந்த ஆணியும் அறையாமல் நாட்கள் சென்ற பின் தன் தந்தையிடம் பையன் சென்று சொன்னான். மிக்க மகிழ்ந்த அந்தத் தந்தை 'மகனே. இப்போது உனக்குப் புதிய வேலை. நீ அறைந்த ஆணிகளை எல்லாம் பிடுங்கு. எல்லா ஆணிகளும் பிடுங்கிய பின் வந்து சொல்' என்றார். ஆணிகளை அறைவதை விட அதைப் பிடுங்குவது பெரும் வேலையாக இருந்தது. எல்லா ஆணிகளையும் பிடுங்கிய பின் தந்தையிடம் வந்து சொன்னான் சிறுவன். தந்தை அவனை அழைத்துக் கொண்டு வேலி அருகில் சென்று 'பார்த்தாயா. நீ எல்லா ஆணிகளையும் பிடுங்கி விட்டாய். ஆனாலும் ஒவ்வொரு ஆணி இருந்த இடத்திலும் ஒரு துளை இருப்பதைப் பார். இந்த துளைகள் அவ்வளவு விரைவில் மறையாது. நீ சினம் கொண்டு சுடு சொற்கள் சொல்வது இந்த வேலியில் ஆணிகளை அறைவது போலத் தான். எவ்வளவு தான் ஆணிகளை அறைந்த பின் அவற்றை நீக்குவது போல் மன்னிப்பு கேட்டாலும் இந்த வேலியில் இருக்கும் துளைகளைப் போல் சினத்தினால் ஏற்பட்ட வடுக்கள் என்றுமே மனத்தில் இருக்கும். இதை நினைவில் வைத்துக் கொள்'.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.


***

இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 4 நவம்பர் 2007 அன்று இடப்பட்டத்து. இந்த இடுகையுடன் 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் இருந்த எல்லா இடுகைகளும் கூடலுக்கு நகர்த்தப்பட்டுவிட்டன. 'சின்ன சின்ன கதைகள்' பதிவு மூடப்படுகிறது.

போகும் போது அழகா? வரும் போது அழகா?

ஒரு முறை ஒரு அறிவாளியின் வீட்டிற்கு இரு தேவதைகள் வந்தார்கள். அந்த அறிவாளி அவர்களைப் பார்த்துத் திகைத்த போது அவர்கள் தங்களை செல்வத்தின் அதிதேவதையாகவும் வறுமையின் அதிதேவதையாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அந்த அறிஞர் இருவரையும் வணங்கி அவர்கள் வந்த காரணத்தை வினவினார். அவர்களும் 'அறிஞரே. உங்கள் அறிவுத்திறனைப் பற்றி வெகுவாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்களில் யார் அழகு என்று நீங்கள் சொல்லிக் கேட்க விரும்பி வந்திருக்கிறோம்' என்றார்கள். அறிஞரோ அடடா மாட்டிக் கொண்டோமே என்று திகைத்தார். வறுமைத்தேவதையை அழகில்லை என்றால் அவள் கோவித்துக் கொண்டுவிடுவாள். செல்வத்திருமகளை அழகில்லை என்றால் அவள் அவரை விட்டுச் சென்றுவிடுவாள். இரண்டுமே நடக்கக் கூடாது. என்ன செய்வது என்று சிந்தித்தார்.

சிந்தித்தவருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. இருவரையும் நோக்கி வாசல் வரை நடந்து காண்பியுங்கள் என்றார். இருவரும் நடந்தார்கள்.

செல்வத்தின் அதிதேவதையிடம் 'அம்மா. நீங்கள் வரும் போது அழகாக இருக்கிறீர்கள்' என்று சொல்லிவிட்டு வறுமையின் அதிதேவதையிடம் 'அமாம். நீங்கள் போகும் போது அழகாக இருக்கிறீர்கள்' என்று சொன்னார். அவர்களும் அவர் பார்க்கும் போது அழகாக இருக்க செல்வத்தின் அதி தேவதை அவரை நோக்கி வந்து கொண்டும் வறுமையின் அதிதேவதை அவரிடம் இருந்து விலகிச் சென்று கொண்டும் இருந்தார்கள்.

***

இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 20 ஜூலை 2007 அன்று இடப்பட்டது.

Tuesday, April 01, 2008

துரியோதனப் பார்வை

மக்களில் பலவகை உண்டு. ஆனால் எல்லாவற்றையும் கருப்பு வெளுப்பில் 'உண்டு - இல்லை' என்ற அளவில் பிரிக்கும் போது பல வகைகளில் மனிதர்களையும் இரு எதிர் எதிர் வகைகளாகப் பிரிக்கும் நிலை தோன்றுகிறது. அப்படி உள்ளவற்றில் ஒரு எதிர்-எதிர் இருமையைப் பற்றியக கதை இது.

***

துரோணருக்கு அருச்சுனன் மேல் தனிப்பட்டப் பாசம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் சிறிது காலமாக தருமனின் மேலும் அதிகப் பாசம் காட்டுவது போல் இருக்கிறது. பாண்டு மகன்களில் மேல் அழுக்காறு கொண்ட துரியோதனனுக்கு இது மேலும் எரிச்சலைத் தந்தது. நேராகச் சென்று பிதாமகர் பீஷ்மரிடம் 'ஐயா. ஆசிரியர் எங்கள் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவதில்லை. அவருக்கு பாண்டவர்கள் என்றால் ஒரு தனிப்பாசம் இருக்கிறது. அதுவும் தருமன் என்றால் தலையில் வைத்து ஆடுகிறார்' என்று முறையிட்டான்.

பீஷ்மருக்கு நடப்பது என்ன என்பது ஓரளவிற்குத் தெரியும். ஆனாலும் அதனைத் தானே துரியனுக்குச் சொல்வதை விட ஆசிரியர் சொன்னால் நன்று என்றெண்ணி அவனை ஆசிரியர் அழைத்துச் சென்றார்.

ஆசிரியரும் 'பரத குலத் தோன்றலே. இருவரும் எனக்கு ஒரே மாதிரி தான். ஆனால் அவர்கள் பார்வையில் தான் பிசகு இருக்கிறது. அதனால் என்னில் குறை காண்கிறார்கள்' என்றார். வீடுமரும் 'ஐயா. நீங்களே அதனை துரியனுக்குப் புரிய வைக்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டார்.

ஆசிரியரும் தருமனையும் துரியனையும் அழைத்து ஒவ்வொருவரிடமும் ஒரு காரியத்தைச் சொல்லி அனுப்பிவைத்தார். தருமனிடம் 'உன்னை விட கீழானவரைக் கண்டு அழைத்து வா' என்றார். துரியனிடம் 'உன்னைவிட மேலானவரைக் கண்டு அழைத்து வா' என்றார்.

சிறிது நேரம் சென்று இருவரும் தனித் தனியே வந்தனர். என்ன என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னது.

தருமன்: ஐயா. நான் எல்லா இடத்திலும் தேடிவிட்டேன். எல்லோருமே என்னைவிட மேலானவர்களாகத் தான் இருக்கிறார்கள். அதனால் என்னால் அழைத்து வர முடியவில்லை.

துரோணர்: உன்னை ஒப்பு நோக்கும் போது சிறு குறைகளும் உள்ளவர் யாருமே இல்லையா?

தருமன்: ஐயா. சிறு குறைகளுடன் சிலர் இருந்தார்கள். ஆனால் அவர்களின் நிறைகளை ஒப்பு நோக்கும் போது அவர்களின் குறைகள் பொருட்படுத்த முடியாத வண்ணம் இருக்கிறது.

துரோணர்: அப்படியென்றால் ஒருவர் கூடவா உன்னை விட கீழானவர் இல்லை?

தருமன்: இல்லை ஐயா.

துரோணர்: துரியா. நீ ஏன் யாரையும் அழைத்துவரவில்லை?

துரியன்: ஐயா. என்னை விட மேலானவர் யாரையும் நான் காணமுடியவில்லை. அதனால் அழைத்து வரவில்லை.

துரோணர்: உன்னைவிட நல்ல குணங்கள் உடையவர் எவருமே இல்லையா?

துரியன்: இருக்கிறார்கள் ஐயா. ஆனால் யாருமே குறையில்லாதவர்களாக இல்லை. அவர்களின் குறைகளைப் பார்க்கும் போது அவர்களின் குணங்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

துரோணர்: பார்த்தாயா துரியா?! நீ எல்லாவற்றிலும் தீயதைப் பார்க்கிறாய்; அதனைப் பற்றியே பேசுகிறாய். அவன் எல்லாவற்றிலும் நல்லதைப் பார்க்கிறான். அதனைப் பற்றியே பேசுகிறான். வருங்காலம் உன்னைப் போல் எல்லாவற்றிலும் தீயதையே கண்டு அதனையே பேசி வருபவர்களை 'துரியோதனப் பார்வை' கொண்டவர்கள் என்று அழைக்கும். அது மாறவேண்டும் என்றால் நீ மாறவேண்டும்.

***

துரியோதனனின் கதை எல்லோருக்கும் தெரியும். அவன் மாறவில்லை. 'துரியோதனப் பார்வை' கொண்டவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

***

இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 24 மே 2007 அன்று இடப்பட்டது.