அடுத்தவர்களின் செயல்பாடுகளை (சங்கதி) அறிந்து கொள்வது என்பதில் ஆண் என்ன ? பெண் என்ன ? அவை எல்லோருக்குமே சுவாரசியாமன ஒன்று தான். நம் வலைப்பதிவுகளில் 'சாம்பு' என்ன எழுதி இருக்கிறார், 'கழுகார்' என்ன எழுதி இருக்கிறார் ? எவர், எவர் பற்றிய தகவல்கள் கசிகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் பலருக்கும் இருக்கும்.
உங்க வாழ்க்கையில் மிக சுவாரசியமாக நடந்த ஒன்றை சொல்கிறீர்களா ? என்று கேட்போம். 'கடிதம் கொடுத்து அசடுவழிந்தது, விடுப்பு எடுத்து திரைப்படம் பார்க்கச் சென்று தற்காலிகமாக பாட்டி தாத்தாவை சாகடித்தது' என்பது போன்ற இளமையின் குறும்புகள் பற்றிய நினைவுகள் சிலருக்கு உடனே நினைவு வந்துவிடும்.
இது போல் கேட்பதற்கு, சொல்வதற்கு மிக விரும்பிய செய்திகளில் சுவாரசியத்தை நுழைத்துப் பேசுவோம். சிலருக்கு திரை நடிகர், நடிகைகளின் கிசு கிசுக்களைப் படிப்பதில் என்ன ஒரு சுவாரிசியம் ! என்ன ஒரு சுவாரிசியமான செய்தியாக அவைகள் இருக்கின்றன!.
மிகவும் வியப்பான செய்திகளைக் கேட்கும் போது தெரிந்தவர்களுக்கெல்லாம் இதைச் சொன்னால் என்ன ? என 'சுவாரிசியம்' உணர்வுகளில் சேர்ந்து கொள்கிறது, அதனடிப்படையில் வதந்திகள் விரைவாக பரவுகின்றன. சுவாரசியம் என்பது ஒரு மகிழ்வுடன் தொடர்புடைய ஒரு உணர்வுச் சொல்.
ஆங்கிலத்தில் சில சொற்களுக்கு பல பொருள்கள் உள்ளது போல... தமிழிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சொற்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் இடத்துக்கு ஏற்றவாறு உண்டு. அவற்றை தனியாக சொல்லிப் பார்த்தால் ஒரு பொருளாகவும், சொற்றொடர்களில் (வாக்கியம்) அமைத்துப் பயன்படுத்தும் போது மெல்லிய வேறுபாடு அல்லது முற்றிலும் மாறுபட்ட பொருளைத் தரும் சொற்கள் உள்ளன. இனிமை, சுவை என்பவை அது போன்ற சொற்கள் தான். 'கரும்பின் சுவை இனிமை என்னும் போது இனிமை என்பது இனிப்பு என்னும் சுவை தொடர்பில் சொல்லப்படுகிறது. 'இளையராஜாவின் இசை கேட்பதற்கு இனிமை' என்று சொல்லும் போது செவிக்கு / மனத்துக்கு இதமான ஒரு உணர்வு என்று சொல்வதற்கு 'இனிமை'பயன்படுகிறது.
இது போன்றே 'சுவையான சமையல்' என்னும் போது உணவின் சுவையைக் குறிக்க 'சுவை' யை பயன்படுத்துகிறோம். அதே சுவையை செய்திகளில் சேர்த்துச் சொல்லும் போது ஒரு 'சுவையான தகவல் இருக்கிறது சொல்லட்டுமா ? 'அல்லது 'எதாவது ஒரு சுவையான நிகழ்வை (சம்பவம்) சொல்லமுடியுமா ?' என்று கேட்கிறோம்.
தமிழ் சுவையின் சுவையை மேலும் கூட்ட எங்கெல்லாம் சுவாரசியம் பயன்படுத்துகிறோமோ, அங்கெல்லாம் 'சுவை'யைக் கூட்டிக் கொள்வதால் சுவாரசியத்தின் பயன்பாட்டை குறைத்து தமிழை மேலும் 'சுவை'படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தினாலும் சொற்றொடரில் பொருள் வேறுபடாது.
பின்குறிப்பு : எழுத்துப் பிழை எதாவது இருந்தால், சுவாரசியத்துக்கு மாற்றான வேறு கலைச் சொற்கள் இருந்தால் தெரிவியுங்கள். சுவையான உங்கள் பின்னூட்டங்களை சுவைக்க காத்திருக்கிறேன்.
3 comments:
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் திரு.கோவி.கண்ணனால் 18 ஏப்ரல் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
19 கருத்துக்கள்:
ரவிசங்கர் said...
சுவை, சுவாரசியத்ததுக்கு ஈடாகும் என்று தோன்றவில்லை..சுவைகளில் பல வகை உண்டு. கசப்பு, துவர்ப்பு என்று அதில் அவ்வளவு உவப்பு இல்லாத சுவைகளும் உண்டு. சுவாரசியம் என்பது interesting என்பதை ஒத்திருக்கிறது. ஆர்வமூட்டும் என்பது சுவாரசியத்துக்கு ஓரளவு நெருங்கி வரலாம். ஆனால் தெளிவாகத் தெரியவில்லை
April 18, 2007 2:09 PM
வெற்றி said...
சுவாரசியமா அல்லது சுவாரிசியமா?
இப்போது உடனடியாக ஒரு சொல்லும் நினைவுக்கு வரவில்லை. வந்தால் தெரியப்படுத்துகிறேன்.
/* சுவாரிசியத்துக்கு மாற்றான வேறு கலைச் சொற்கள் இருந்தால் தெரிவியுங்கள். சுவையான உங்கள் பின்னூட்டங்களை சுவைக்க காத்திருக்கிறேன். */
நானும் அறிய ஆவலாக இருக்கிறேன்.
April 18, 2007 5:41 PM
துளசி கோபால் said...
எனக்கும் வெற்றியின் சந்தேகம்தான்.........
ர வா இல்லே ரி யா?
April 18, 2007 7:07 PM
வடுவூர் குமார் said...
சுவாரிசியம்
சுவாரஸ்யமாக இருக்கு.:-))
April 18, 2007 7:30 PM
மாதங்கி said...
.......ரின் கட்டுரை சுவைரசம் ததும்ப இருந்தது.
இப்படி எழுதலாமா?
April 18, 2007 8:28 PM
VSK said...
ஸ்வ+ஆரஸ்யம்= ஸ்வாரஸ்யம்
"ஆரஸ்யம்" என்றால் "ஒரு சுகத்தை அனுபவிப்பது".
"ஸ்வ" என்றால் "தான்".
தான் மட்டுமே அனுபவித்து உணர முடியும் ஒரு சுகமான அனுபவமே ஸ்வாரஸ்யம்.
ஒருவருக்கு ஸ்வாரஸ்யமாக இருப்பது அடுத்தவருக்கு இல்லாமல் போகலாம்.
எனவே, சுவாரசியத்திற்கு நேர்ப்பொருள் "இனிதான தன்னுணர்வு" என்பதே.
இதுவும் ஒரு சுவையே.
கோவியார் சொன்னதும் ஒருவகையில் சரியே!
ஆனால் வெறும் சுவை என்ற அடைமொழி கொண்டு மட்டுமே ஸ்வாரஸ்யத்தைச் சொல்லிவிட முடியாது என்பதை அடக்கத்துடன் சொல்லி விடை பெறுகிறேன்.
சுவாரிசியம் அல்ல; சுவாரசியம் என்பதே கூடுமான வரை சரியான சொல்.
ஸ்வாரஸ்யம் இன்னும் விசேஷம்!
:)
April 18, 2007 11:40 PM
பொன்ஸ்~~Poorna said...
ஆர்வமூட்டுவது என்றே எனக்கும் தோன்றுகிறது... கிசுகிசு என்பது தமிழ்ச்சொல்லா இல்லையா? ;)
April 19, 2007 1:58 AM
ரவிசங்கர் said...
சுவாரசியம் என்பது தான் சரியான பலுக்கல்.
சுவாரசியமான, சுவாரசியமாக ஆகிய உரிச்சொற்களுக்கு வேண்டுமானால் ஆர்வமூட்டுவதான, ஆர்வமூட்டுவதாக என்று சொல்ல இயலும். ஆனால், சுவாரசியம் என்ற பெயர்ச்சொல்லுக்கு நேரடி சொல்லுக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
பொன்ஸ் - கிசு கிசு என்று காதோரம் தணிந்த குரலில் ரகசியம் சொல்வது போல் வதந்திகளைப் பரப்புவதால் கிசு கிசு என்பது ஆகுபெயராக இருக்கலாம் என்பது என் ஊகம். ஆக, இதைத் தமிழ்ச் சொல் என்று வைத்துக் கொள்ளலாம். கிசுகிசு கேட்கச் சுவாரசியமாக இருக்கும். ஆனால், கிசுகிசுவும் சுவாரசியமும் ஒன்றில்லை.
இத்துடன் என் இலக்கண அறுவையை முடித்துக் கொள்கிறேன் ;)
April 19, 2007 5:29 AM
இராம.கி said...
சுவாரஸ்யம் என்பதற்குச் சுவை நிறைந்தது என்றே தமிழ் அகர முதலிகளில் பொருள் சொல்லுகிறார்கள். (சுவை என்பது இங்கே பொதுமைப் பொருளில் வருகிறது. என்ன சுவை என்ற கருத்து இங்கு முகன்மையானதில்லை. just taste; that is all.just like hotness, taste is a qualitative attribute of a body.) நம் பேச்சு வழக்கிலும் அப்படித் தான் குறிக்கிறோம். அதைச் சுற்றி வளைத்து, சங்கத வழியில் ஸ்வ + ஆரஸ்யம் என்று பிரித்து, "தன் நிறைவு" என்று பொருளை மோனியர் வில்லிமசு அகர முதலி கூடச் சொல்லுவதில்லை. இங்கே "ஸ்வ" என்ற முன்னொட்டிற்கு தேவையில்லை. இந்தச் சொல் காட்டும் உணர்வு தன்மை நிலையில் மட்டுமல்லாமல், முன்னிலை, படர்க்கை ஆகிய மற்ற நிலைகளிலும் பெறப்படும் தான். நண்பர் விகேஎஸ் எங்கிருந்து இந்தப் பிரிப்பையும் பொருளையும் பெற்றார் என்று தெரியவில்லை.
தமிழில் ஆர்தல் என்ற வினைச்சொல், நிறைதல் என்ற பொருளைக் கொடுக்கும். ஆர்தலில் இருந்து எழுந்த பெயர்ச்சொல் ஆர்வு (= நிறைவு). ஆர்வின் பெரிய நிலை ஆர்வம். நிறைந்த நிலையை ஆரம் என்று கூட உடம்படு மெய் இல்லாமற் சொல்லலாம். (காட்டாக, ஆர ஆரம் = ஆரவாரம் என்பதில் வரும் முதல் "ஆர" என்பது ஒலியையும், இரண்டாவது "ஆரம்" நிறைந்த நிலையையும் குறிக்கும். ஆரவாரம் = நிறைந்த ஒலி. இது போல பல - ஆரங்கள் தமிழில் உள்ளன. அவற்றை ஓர்ந்து பார்த்தால் அடுத்தடுத்து எடுத்துக் காட்டலாம்.) ஆர்தல் (=ஆருதல்) என்ற வினையின் சொல்லடி, வடமொழியில், வகர உடம்படு மெய்யைக் கொண்டு வாராமல், யகர உடம்படு மெய்யைக் கொண்டு வரும். ஆரயம் என்ற சொல்முடிபு, வடமொழிப் பலுக்கலுக்கு முற்றிலும் உகந்ததே. பின்னால், பொதுவாய் வடமொழியிலும், தமிழிலும், காணும் ஒருவிதப் பலுக்கத் திரிவில், ஆரயம் என்பது ஆரசம் என்று திரியும்.
சுவை என்ற சொல்லின் முடிப்பு ஐகாரம் வடமொழியில் மாறி அகரமே அமையும். இந்த அமைவு வட தமிழிய மொழிகளான தெலுங்கு, கன்னடம், ஏன் தென் தமிழிய மொழியான மலையாளத்திலும் கூட, ஏற்படும்.
சுவை என்னும் தமிழ்ச்சொல்லும் ஆரசம் என்னும் இருபிறப்பியும் சேர்ந்து கூட்டுச் சொல்லாய் கீழே உள்ளது போல் அமையும்.
சுவை + ஆரசம் = சுவ + ஆரசம் = சுவாரசம்>சுவாரஸம்>சுவாரஸ்யம்
இப்படித் திரிவது நாவலந்தீவில் இயற்கையானதே. ஆக இங்கேயும், வேர் தமிழாயும், முடிப்பு வடபுலத்தைச் சேர்ந்ததாயும் இருப்பதைக் காணலாம். சுவை ஆர்ந்த நிலையைத் தமிழ் முடிப்போடு சொல்ல வேண்டுமானால், சுவையாரம் என்றே சொல்லலாம். சில காட்டுக்கள்:
"நீங்கள் சொல்லுவது சுவையாரமாய் இருக்கிறது.""
"அவர் ஒரு சுவையாரமான பேர்வழி" (அல்லது சுவையார்ந்த பேர்வழி)
"அந்தக் கதையின் சுவையாரத்தில் நேரம் போனதையே நான் மறந்து விட்டேன்."
அன்புடன்,
இராம.கி.
April 19, 2007 10:14 AM
ரவிசங்கர் said...
ஆஹா, அருமை. கோவி.கண்ணன் சொன்ன சுவை, என் புரிதலில் பரிந்துரைத்த ஆர்வமூட்டும் - இவை இரண்டையும் கலந்து சுவாரசியம் தமிழ்ச் சொல்லே என்று இராம. கி அவர்கள் நிறுவி இருப்பதைக் காண மகிழ்ச்சி.
சுவையாரம் என்றே இனி பயன்படுத்துகிறேன். இத்தோடு, ஆரம், ஆரவாரம் போன்ற சொற்களின் பொருளும் அறிய முடிந்தது நன்று
April 19, 2007 5:04 PM
விடாதுகருப்பு said...
சுவாரசியம் என்பது தேவபாடையான சமசுகிருதம்.
அய்யா இராமகி அவர்கள் சொல்வது போல சுவை பொருந்திய ஒரு செய்தி அல்லதி விடயம் என்பதே சரி.
மணிப்பிரவாள நடை என்ற பெயரில் நம் தாய்த் தமிழுடன் வடமொழி கலந்ததால் இன்றைக்கு நம் மொழி இந்த பாடுபடுகிறது.
தமிழை வளர்ப்பதற்காக அரும்பாடுபடும் நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
April 19, 2007 8:47 PM
VSK said...
http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/1300/mw__1315.html
எல்லாவற்றைம் தமிழ்ப்படுத்த விழையும் இந்த ஆர்வலர்கள் சற்று இங்கு சென்று பார்க்கவும்.
ஸ்வ ரஸம் =ஸ்வரஸ் எனச் சொல்லி இருப்பதைக் காணலாம்.
ரஸம் என்பது சுவை எனப் பொருள்படும்.
ரஸத்தை உணரும் உருபு ரஸ்யம் எனத் திரியும்.
ஸ்வ+ரஸ்யம் = ஸ்வரஸ்யம்
இது பொது.
அ என்பது தன்னைக் குறிக்கும்.
இந்த அ சேரும்போது, ஸ்வாரஸ்யம் என வரும்.
இது எப்படிப் போனாலும், இராம.கி.ஐயா சொல்லும் சுவையாரம் எனும் சொல் கிட்டத்தட்ட ஸ்வாரஸ்யத்திற்கு அருகில் வருகிறது .
அதை ஏற்பதில் இகழ்ச்சி இல்லை!
April 19, 2007 9:12 PM
கோவி.கண்ணன் [GK] said...
//ரவிசங்கர் said...
சுவை, சுவாரசியத்ததுக்கு ஈடாகும் என்று தோன்றவில்லை..சுவைகளில் பல வகை உண்டு. கசப்பு, துவர்ப்பு என்று அதில் அவ்வளவு உவப்பு இல்லாத சுவைகளும் உண்டு. சுவாரசியம் என்பது interesting என்பதை ஒத்திருக்கிறது. ஆர்வமூட்டும் என்பது சுவாரசியத்துக்கு ஓரளவு நெருங்கி வரலாம். ஆனால் தெளிவாகத் தெரியவில்லை
//
ரவிசங்கர்,
முதல் பின்னூட்டத்திற்கு நன்றி ! சுவை என்பது நாவின் உணர்வு. அதிலுள்ள வகைகளை நுகர்தலில் ஒவ்வொருவரின் சுவை வேறுபடும். சுவாரசியம் என்பது மகிழ்வா ? என்று நினைத்தேன் அதையும் தாண்டிய பொருளாக அதில் ஆர்வமும் அடங்கி இருப்பது தெரிந்தது. சுவையார்வம் என்று சொல்லலாமா ? என நினைத்தேன். அது ஒரு ஒற்றைச் பொருட்சொல் அல்ல (vocabulary) என்பதால் சுவை சரியாக இருக்கும் என நினைத்து சுவாரசியம் உள்ள இடங்களில் சுவையைப் பொருத்திப் பார்த்தேன் 90 விழுக்காடு ஒத்துப் போனது. மீதம் 10 விழுக்காடு நாம் பயன்படுத்திப் பழகிக் கொள்ளாததால் அப்படி தெரிகிறதோ என்று நினைத்துக் கொண்டேன்.
இராமகி ஐயா வந்து அருமையான விளக்கத்தால் ஐயம் நீக்கிவிட்டார்.
//வெற்றி said...
சுவாரசியமா அல்லது சுவாரிசியமா?
//
வெற்றி,
எனக்கு எப்போதும் வடமொழி சொற்களைப் பயன்படுத்தும் போது பிழை நேர்ந்துவிடுகிறது. இது போன்ற சொற்களை படித்ததைவிட காதில் கேட்டது தான் மிகுதி. அதாவது பேச்சுவழக்கில் மிகுதியாக புழங்கும் சொற்கள். திரிக்கப்பட்டு பயன்படுத்தும் பிற மொழிச் சொற்களை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பயன்படுத்துகின்றனர். சுவாரிசியம் என்ற சொல்லைப் போட்டு கூகுளில் தேடினேன் 4 சுட்டிகள் கிடைத்தது. அதன்பிறகு சரிதான் போலும் என்று தலைப்பிட்டுவிட்டேன்.
சுவாரசியம் என்பது சரி, தமிழிலேயே சொல்ல வேண்டுமென்றால் இராமகி ஐயாவின் பரிந்துரைப்படி சுவையாரம் என்று சொல்ல வேண்டும்
//வடுவூர் குமார் said...
சுவாரிசியம்
சுவாரஸ்யமாக இருக்கு.:-))
//
வடுவூர் நண்பரே,
இராமகி ஐயாவின் விளக்கத்தைப் படிங்கள், நீங்கள் சொன்னதன் பயன் அதிலிருக்கும்
//மாதங்கி said...
.......ரின் கட்டுரை சுவைரசம் ததும்ப இருந்தது.
இப்படி எழுதலாமா?
//
மாதங்கி அவர்களே,
சமையல் குறிப்பு எழுதும் போது ரசம் சேர்க்கலாம். :)))
இராமகி ஐயாவின் சொற்பகுப்பு மேலே பின்னூட்டத்தில் இருக்கு.
நன்றி
//VSK said...
ஸ்வ+ஆரஸ்யம்= ஸ்வாரஸ்யம்
"ஆரஸ்யம்" என்றால் "ஒரு சுகத்தை அனுபவிப்பது".
"ஸ்வ" என்றால் "தான்".
தான் மட்டுமே அனுபவித்து உணர முடியும் ஒரு சுகமான அனுபவமே ஸ்வாரஸ்யம்.
//
விஎஸ்கே ஐயா,
வடமொழியில் ஒரு சொல்லை எந்த பொருளில் பயன்படுத்துகிறார்கள், அதன் பகுப்பு என்ன என்று நான் எப்போதும் பார்ப்பதில்லை. அதில் ஆர்வம் இல்லை. தமிழில் அந்த சொல் வழங்கப்படும் போது எந்த பொருளில் பயன்படுத்துகிறோம் என்ற வகையில் தான் எனது இடுகைகள் அமைகின்றன. மேலே எழுத்துப்பிழை நேர்ந்ததற்கான காரணத்தை வெற்றி அவர்களுக்கு மறுமொழியாக எழுதியுள்ளேன். இங்கும் அது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில் ஒற்றொழுத்துக்களை முன் வைத்து எழுதுவது இலக்கணவிதிகளுக்கு புறம்பானது எனவே 'ஸ்வாரஸியம்' தமிழில் எழுதும் போது சுவையாரமாக (சுவாரசியமாக) இல்லை.
:)
//
பொன்ஸ்~~Poorna said...
ஆர்வமூட்டுவது என்றே எனக்கும் தோன்றுகிறது... கிசுகிசு என்பது தமிழ்ச்சொல்லா இல்லையா? ;)
//
பொன்ஸ் அவர்களே,
கிசுகிசு - இரட்டைக் கிளவி போல் தோன்றுகிறது 'கிசு' என்றால் பொருள் இல்லை. தமிழில் தான் இரட்டைக் கிளவிகள் மிகுந்த புழக்கத்தில் உள்ளன் என்பதால் தமிழென்றே நினைக்கிறேன்.
//இராம.கி said...
சுவாரஸ்யம் என்பதற்குச் சுவை நிறைந்தது என்றே தமிழ் அகர முதலிகளில் பொருள் சொல்லுகிறார்கள்.
...
//
இராமகி ஐயா,
இந்த இடுகைக்கு ஆரமிட்டது போன்ற உங்களின் பின்னூட்டத்தினால் சுவையாரம் கூடிவிட்டது. சுவாரசியத்தை பகுத்து மேய்ந்துவிட்டீர்கள். அருமையான விளக்கம். நிறைவான சான்றுகள். புதிதாகவும் தெரிந்து கொள்ள சுவையான விளக்கம். நன்றி ஐயா. ஐயா உதாரணம் என்பதற்கு காட்டு என்று சொல்கிறீர்கள். பாவாணரும் 'காட்டு' என்று தான் எழுதுவார். சான்று என்று எழுதலாம் நினைக்கிறேன். காட்டுக்கு சான்றும் ஒத்த சொல்தானே?
April 19, 2007 9:23 PM
ரவிசங்கர் said...
//வடமொழியில் ஒரு சொல்லை எந்த பொருளில் பயன்படுத்துகிறார்கள், அதன் பகுப்பு என்ன என்று நான் எப்போதும் பார்ப்பதில்லை. அதில் ஆர்வம் இல்லை. தமிழில் அந்த சொல் வழங்கப்படும் போது எந்த பொருளில் பயன்படுத்துகிறோம் என்ற வகையில் தான் எனது இடுகைகள் அமைகின்றன.//
சரியான அணுகுமுறை
//எனக்கு எப்போதும் வடமொழி சொற்களைப் பயன்படுத்தும் போது பிழை நேர்ந்துவிடுகிறது. இது போன்ற சொற்களை படித்ததைவிட காதில் கேட்டது தான் மிகுதி. அதாவது பேச்சுவழக்கில் மிகுதியாக புழங்கும் சொற்கள். திரிக்கப்பட்டு பயன்படுத்தும் பிற மொழிச் சொற்களை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பயன்படுத்துகின்றனர். சுவாரிசியம் என்ற சொல்லைப் போட்டு கூகுளில் தேடினேன் 4 சுட்டிகள் கிடைத்தது. அதன்பிறகு சரிதான் போலும் என்று தலைப்பிட்டுவிட்டேன்.//
இது பிழையான அணுகுமுறை. எல்லா வட மொழிச் சொற்களுக்கான சரியான பலுக்கலையும் சென்னைப் பல்கலை அகரமுதலி மூலம் அறியலாம்.
பார்க்க - http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
தமிழ் அகரமுதலிகளின் முறையான பயன்பாடு குறித்த என் இடுகை உதவலாம். பார்க்க -
http://blog.ravidreams.net/?p=152
April 20, 2007 4:26 AM
சாதனா said...
நன்று.
May 18, 2007 3:46 AM
Shamini said...
hi...நீங்கள் ஓரு புலவரா?மிகவும் சுவாரசியமாக இருக்கிறது...
May 18, 2007 3:49 AM
குறும்பன் said...
ரொம்ப நாள் ஆயிடுச்சு ... அடுத்த இடுகைக்கு காத்திருக்கும் வாசகன்.
May 27, 2007 10:37 PM
மதுமிதா said...
///அவை எல்லோருக்குமே சுவாரசியாமன ஒன்று தான்///
இரண்டாவது வரியில் சுவாரசியமான எனத் தரவும். சுவாரசியாமன என இருக்கிறது
சுவாரசியமான சுவையான பதிவு:-)
October 12, 2007 9:55 PM
பிறைநதிபுரத்தான் said...
வழமைபோல் சுவாரசியம் குன்றா பதிவு தந்த கோவி.கண்ணனுக்கும் - சுவாரசியம் நிறைந்த பிண்ணூட்டமிட்ட அய்யா.இராம.கி. அவர்களுக்கும் நன்றி.
February 19, 2008 7:11 AM
சுவையார்ந்த பதிவுக்கு நன்றி! :)
நன்றிகளும் போகட்டும் கண்ணனுக்கே. :-)
Post a Comment