Friday, August 29, 2008

என் அருமை நண்பனுக்கு வணக்கம் (கேள்வி பதில் 7)

பதிவுலகில் எனக்கிருக்கும் மிகச்சில அருமை நண்பர்களில் இவரும் ஒருவர். ஆனால் அண்மைக்காலமாக என் பதிவுகளுக்கு அவர் வருவதில்லை. எப்போது கேட்டாலும் வேலை மிகுதி என்று காரணம் சொல்கிறார். ஆனால் வேறு இடங்களில் பின்னூட்ட கும்மியும் மின்னரட்டையும் அடித்துக் கொண்டிருக்கிறார். என் மேல் கடுஞ்சினம் இருந்தால் ஒழிய அவர் இப்படியெல்லாம் நடந்து கொள்ள மாட்டார் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை. அதனால் அவருடைய கடுஞ்சினம் தீர்ந்து என் பதிவுகளுக்கு வந்து அவருடைய பொன்னான கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று எல்லாம் வல்ல பெருமாளை (விஷ்ணுவைன்னு விதப்பா சொல்லுன்னு அவர் சொல்லுவார் - ஆனாலும் வழக்கமா சொல்ற மாதிரி பெருமாளைன்னே சொல்லிட்டேன்) அழகனை தேசனை வணங்கிக் கொள்கிறேன். :-)

சௌராஷ்ட்ரத்தில் ராக் என்றால் சினம்; அவி என்றால் வந்து. என்னருமை நண்பரின் பெயரில் இரண்டுமே சேர்ந்து இருப்பதால் அவரை அப்பெயர் கொண்டு நான் அழைப்பதால் பெயரின் பொருளுக்கேற்ப சினம் வந்து இங்கே எட்டிப்பார்ப்பதில்லை போலும். :-)

அவரது சினம் தீர என்ன வழி என்று சிந்தித்ததில் அவர் எப்போதோ கேட்ட கேள்விகளுக்கு இன்னும் விடை சொல்லவில்லை என்று நினைவிற்கு வந்தது. சரி அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை சொன்னாலாவது வந்து பார்க்கிறாரா பார்ப்போம் என்று எழுதுகிறேன்.

அவர் கேட்ட கேள்விகளும் அதற்குரிய பதில்களும்:

குமரனிடம் கேள்விகளா? என்ன கேக்குறது? (என்ன கேக்குறதுன்னு என்னையே கேட்டா எப்படிங்க? அதான் டக்கு டக்குன்னு கேள்விகளா கொட்டியிருக்கே). :-)

1. உங்கள் கருத்துப்படி கோழிக்கறியில் எந்தப் பகுதி மிகவும் சுவையானது?

தொடைப்பகுதி. என் மக்களுக்கு கோழிக்கால் பிடிக்கும். :-)

2. ஆட்டாத கறியை ஏன் ஆட்டுக்கறி என்கிறார்கள்?

எனக்கு ஆட்டாத கறியை விட நுண்மையா அடிச்ச கறி பிடிக்கும். கைம்மான்னும் கொத்துக்கறின்னும் சொல்லுவாங்க. கொத்துக்கறி பாக்குறதுக்கு ஆட்டுன கறி மாதிரி இருக்குறதால ஆட்டுக்கறிங்கறாங்களோ என்னமோ? :-)

3. அமெரிக்கா இந்தியா தவிர்த்த ஏதாவது ஒரு நாட்டில்தான் இனிமேல் வாழவேண்டும் என்ற நிலை வந்தால் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்புவீர்கள்?

சிங்கப்பூர். அப்படித் தான் சொல்லணும்ன்னு மேலிடத்துக் கட்டளை. :-)

மேலிடம் யாருன்னா கேக்குறீங்க? அதெல்லாம் சொல்லிக்கிட்டேவா இருப்பாங்க? ;-)

4. தங்கள் வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமை உங்கள் குழந்தைகளுக்குக்குக் கொடுக்கப்படுமா?

கட்டாயமா. இதுக்கு மேல ஏதாவது சொல்லி மாட்டிக்குவேனா என்ன? :-)

5. சின்னவீடு வைத்துக் கொள்வதைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

குமரன்னு பேரு இருக்குறதால தானே இதைக் கேக்குறீங்க. உங்க பெயரை வச்சு உங்ககிட்ட அதைக் கேக்க முடியாதுன்னு ரொம்பவே துணிச்சல் தான். :-)

வீட்டில் நாங்கள் இப்போதெல்லாம் அடிக்கடி பேசுவது இது. இப்போதிருக்கிற நிலைமையில் ஒரு சின்ன வீடும் வைத்துக்கொண்டால் வசதியாக இருக்கும் என்று. என் பொண்ணு தான் 'அப்ப இந்த பெரியவீட்டை வாடகைக்கு விட்டுட்டு நாம சின்னவீட்டுக்குப் போயிருவோமா அப்பா?'ன்னு கவலைப்படறா. :-)

தொலைக்காட்சியில என்னமோ பாட்டு வருதே. என்ன நீங்களும் பாக்கணுமா? இதோ பாருங்க.

மதுரையம்பதிக்கு வணக்கம் (கேள்வி பதில் 6)

ஆன்மிகத்தில் எல்லையில்லா ஆர்வம் கொண்டவர், ஆசார்ய ஹ்ருதயத்தை அறிந்தவர், அன்னையின் அருட்பாலகர் மதுரையம்பதி வளர் சந்திரமௌலி அண்ணன் ஒரு அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

அத்வைதம் / விசிஷ்டாத்வைதம் / துவைதம் ஆகிய மூன்றில் எதை நீங்க உங்களுக்கு ஏற்றதாக நினைக்கிறீங்க? [ஏதேனும் ஒன்றை மட்டும் சொல்லவும்]. ஏன் அது உங்களுக்கு ஏற்றதுன்னு நினைக்கிறீங்க?

இது தான் அவருடைய கேள்வி.

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே


என்று நம்மாழ்வார் அருளிய பாசுர வரிகள் தான் என் எண்ணமும். ஆனால் குறிப்பிட்டு ஒன்றை மட்டும் சொல்லவேண்டும் என்று பணித்திருப்பதால் சொல்கிறேன். அடியேன் சிறிய ஞானத்தன் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டுகிறேன். :-)

இப்போது சுருக்கமாக மூன்று தத்துவங்களைப் பற்றியும் சொல்லுகிறேன் - மௌலிக்காக இல்லை. மற்றவருக்காக. :-)

அத்வைதம் சொல்வது - இறை (ப்ரம்மம்), உயிர் (ஜீவன்) இரண்டும் ஒன்றே. இறையொன்றே இருக்கிறது. உலகம் பொய்த்தோற்றம். உயிர் தானே இறையாக இருப்பதை உணர்வதே விடுதலை (முக்தி/மோக்ஷம்).

ஒன்றே உண்டு; வேறொன்று இல்லை என்று சொல்வதால் இந்தத் தத்துவத்திற்கு அத்வைதம் (அல்லிருமை) என்று பெயர்.

விசிஷ்டாத்வைதம் சொல்வது - இறை, உயிர், உலகம் மூன்றுமே மெய்ப்பொருட்கள். உயிர்களும் உலகங்களும் இறையின் அங்கங்களாக இருக்கின்றன. அவ்வகையில் இறை ஒன்றே உண்டு. அங்கங்கள் முழுமைக்கு என்றும் அடங்கியவை என்று உயிர் உணர்ந்து தன் உண்மை உருவை அடையும் போது விடுதலை.

மூன்று பொருட்கள் உண்டு; ஆனால் அவற்றில் கடைசி இரண்டு முதலாவதான இறையின் அங்கங்கள் என்பதால் இறையொன்றே அங்கங்களுடன் உண்டு என்று சொல்வதால் இந்தத் தத்துவத்திற்கு விசிஷ்டாத்வைதம் (விதப்பொருமை) என்று பெயர்.

த்வைதம் சொல்வது - இறை, உயிர், உலகம் மூன்றுமே மெய்ப்பொருட்கள். மூன்றும் வெவ்வேறானவை. உயிர்களும் உலகங்களும் இறைக்கு அடங்கியவை.

இரண்டிரண்டாக எதையும் எதிர் எதிர் நிலையில் வைத்துச் சொல்லுவதால் இந்தத் தத்துவத்திற்கு த்வைதம் (இருமை) என்று பெயர்.

மூன்று தத்துவங்களும் தென்னாட்டில் தோன்றியவை. அந்தத் தத்துவங்கள் தென்னாட்டில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தவை. அவற்றை வெளிக்கொணர்ந்து வேத நெறியும் அத்தத்துவங்களையே சொல்கின்றன என்று நிலைநாட்டியவர்களையே இன்று நாம் அந்தத் தத்துவங்களைத் தோற்றுவித்தவர்களாக எண்ணிக் கொள்கிறொம்; ஆனால் அவை ஆதிசங்கரருக்கு முன்னரே, இராமானுஜருக்கு முன்னரே, மத்வருக்கு முன்னரே இருந்தவையே. இவர்கள் அந்த அந்த தத்துவங்களை தான் வேத நெறியின் முதன்மை நூற்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை மூன்றுமே சொல்கின்றன என்று நிலைநாட்டியவர்கள். அவர்கள் அவற்றைத் தோற்றுவித்தவர்கள் இல்லை.

இந்த மூன்று நூற்களிலும் இம்மூன்று தத்துவங்களையும் கூறும் கருத்துகள் இருக்கின்றன. அபேத ஸ்ருதிகள் என்னும் 'உயிர், உலகம், இறை இவற்றிற்கிடையே வேறுபாடின்மையைக் கூறும் வாக்கியங்கள்' இருக்கின்றன. பேத ஸ்ருதிகள் என்னும் 'உயிர், உலகம், இறை இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறும் வாக்கியங்கள்' இருக்கின்றன. கடக ஸ்ருதிகள் என்னும் 'வேறுபாடின்மையையும் வேறுபாடுகளையும் கூறும் வாக்கியங்களை இணைக்கும் வாக்கியங்கள்' இருக்கின்றன.

அத்வைதிகள் அபேத ஸ்ருதிகளையும் அவற்றின் நான்கு மஹாவாக்கியங்களையும் முதன்மையாகக் கொண்டு அத்வைதத்தை நிலை நாட்டுகிறார்கள். அவர்கள் பேத ஸ்ருதிகளுக்குப் பொருள் சொல்வதில்லை.

த்வைதிகள் பேத ஸ்ருதிகளை முதன்மையாகக் கொண்டு த்வைதத்தை நிலை நாட்டுகிறார்கள். அவர்கள் அபேத ஸ்ருதிகளுக்குப் பொருள் சொல்வதில்லை.

விசிஷ்டாத்வைதிகள் கடக ஸ்ருதிகளை முதன்மையாகக் கொள்வதால் அதற்கேற்ப பேத ஸ்ருதிகளுக்கும், அபேத ஸ்ருதிகளுக்கும் பொருள் கூறுகிறார்கள்.

இதுவரை இந்த மூன்று தத்துவங்களைப் பற்றி சுருக்கமாகச் சொன்னேன். அப்படிச் சொன்னதிலேயே என் மனத்திற்குகந்த தத்துவம் எது என்றும் அது ஏன் என்றும் குறிப்பாகச் சொல்லியிருக்கிறேன். இனி மேல் வெளிப்படையாகச் சொல்கிறேன்.

எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தத்துவங்களில் ஈடுபாடு இல்லை. எங்கள் குடும்பம் சிருங்கேரி மடத்தின் சீடர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் நேரடித் தொடர்பு பல காலமாக இல்லை. அதனால் பிறப்பால் நான் அத்வைதி என்று தொடக்கத்தில் நினைத்துக் கொண்டேன். குலக்கடவுள் முருகப்பெருமான். பள்ளிக்காலம் முடியும் வரை அன்னையின் முருக பக்தி ஆட்கொண்டிருந்தது. தத்துவங்களில் அந்த வயதில் இறங்கவில்லை.

அன்னையின் மறைவிற்குப் பிறகு கல்லூரிக்காலத்தில் கண்ணனின் அறிமுகம் கிட்டியது. கீதையின் அறிமுகம் கிட்டியது; நாலாயிரத்தின் அறிமுகம் கிட்டியது; கண்ணனிடம் நெருக்கம் ஏற்பட்டது. குலக்கடவுளின் ஈர்ப்பினை ஒத்த ஈர்ப்பாக கண்ணனின் ஈர்ப்பும் இருந்தது. அதனால் அவன் என் காமக்கடவுள் (இஷ்டதெய்வம்) என்றும் சொல்லத் தொடங்கினேன்.

கீதையைப் படிக்கத் தொடங்கியவுடன் தத்துவ ஆராய்ச்சி தொடங்கியது. அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைதங்களைப் படிக்கத் தொடங்கினேன். நாலாயிரத்தின் துணையுடன் அவற்றைப் படிக்கத் தொடங்கியதால் விசிஷ்டாத்வைதத்திலேயே மனம் பற்றுதல் கொண்டது. அத்வைதமும் த்வைதமும் மனத்திற்கு ஏற்புடையதாக இல்லை. அதற்குத் தமிழின் பால் கொண்ட பற்றுதலும் காரணமாக இருக்கலாம். அத்வைத த்வைத தத்துவங்களைப் படிக்க வடமொழி நூற்களே இருந்தன. நாலாயிரத்தைப் போல் தமிழ் கூறும் தத்துவம் இது என்று கூறும் வகையில் அவ்விரண்டும் இல்லை.

விசிஷ்டாத்வைதம் கடக ஸ்ருதிகளை எடுத்துக் கொள்வதால் முழுமையாக பேத அபேத ஸ்ருதிகளுக்கும் பொருள் சொல்கிறது. அதனால் இதுவே முழுமையான தத்துவம் என்ற எண்ணமும் உண்டு.

சைவ சித்தாந்தத்தையும் அந்தத் தமிழார்வம் என்ற வகையிலேயே படிக்கத் தொடங்கினேன். விசிஷ்டாத்வைதமும் சைவ சித்தாந்தமும் ஏறக்குறைய ஒரே தத்துவம் தான் என்று படிக்கப் படிக்கத் தோன்றியது. விசிஷ்டாத்வைதம் பக்திக்கு முதன்மை இடம் கொடுக்க சைவ சித்தாந்தம் யோகத்திற்கு முதன்மை இடம் கொடுத்தது. அது ஒன்று மட்டுமே வேறுபாடு. மற்ற படி தத்துவம் என்று பார்த்தால் இரண்டும் ஒன்றே. இன்னொரு வேறுபாடும் உண்டு. விசிஷ்டாத்வைதம் விஷ்ணு பரம் சொல்லும்; சைவசித்தாந்தம் சிவபரம் சொல்லும்.

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆனால் மௌலி கேட்ட கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொன்னால் அந்த பதில்: விசிஷ்டாத்வைதம் தான் என் மனத்திற்கு உகந்ததாக தற்போது இருக்கிறது. :-)

Wednesday, August 27, 2008

நிற்க அதற்குத் தக!

அதிகாலை நேரம். திருவள்ளுவர் தன் குடிலில் அமர்ந்திருக்கிறார். புதிதாய் ஒரு மாணவன் நேற்று தான் சேர்ந்தான்.

புதிய மாணவன்: ஐயனே. நான் என்ன செய்ய வேண்டும்?

திருவள்ளுவர்: கற்க

மாணவன் (மனதில்): 'கற்க' என்று ஒற்றைச் சொல்லில் சொல்லிவிட்டாரே. நம்மையும் அதற்காகத்தான் நம் பெற்றோர் அனுப்பியுள்ளனர். ஆனால் ஏன் கற்கவேண்டும் என்று நம் பெற்றோர் சொல்லவில்லை. ஆசானைக் கேட்போம்.

மாணவன்: ஐயா. ஏன் கற்கவேண்டும்?

திருவள்ளுவர்: கசடற

மாணவன் (மனதில்): இதற்கும் ஒரு சொல்லில் பதில். ஆனால் தெளிவான பதில். நம் புத்தி, மனம், சொல், மெய் இவற்றில் உள்ள கசடுகள், குற்றங்கள், அழுக்குகள் நீங்க கற்கவேண்டும் என்று சொல்லிவிட்டார். சரி. அடுத்து ஒரு கேள்வி வருகிறதே.

மாணவன்: ஐயனே, நம் கசடு அற கற்கவேண்டும் என்று அருளினீர். எப்படி கற்கவேண்டும்?

திருவள்ளுவர்: கசடற

மாணவன் (மனதில்): இதற்கும் கசடற என்கிறாரே. நம் குற்றங்கள் நீங்க, படிப்பதைக் குற்றமின்றி படிக்கவேண்டும் என்கிறார் போலும். மிக்க சரி. படிப்பதை தவறான பொருள் கொண்டு எத்தனைப் பேர் படிப்பதாய் கேட்டுள்ளோம். அதைத்தான் ஐயன் குறிப்பிட்டு, குற்றமின்றி கற்க என்கிறார்.

மாணவன்: ஐயா, எதைக் கற்கவேண்டும்.

திருவள்ளுவர்: கற்பவை கற்க

மாணவன் (மனதில்) : கற்பவை கற்க. மூத்தோர் எதனைக் கற்கிறார்களோ அதனைக் கற்க. மூத்தோர் கற்பவை கற்க. மூத்தோர் எதனை கற்கவேண்டும் என்று சொல்கிறார்களோ அதனைக் கற்க. களவும் கற்று மற என்பார்கள். ஆனால் அது 'கற்பவை'யில் அடங்காது. எனவே மூத்தோர் வழி நடந்து அதனையும் அது போன்றவற்றையும் கற்க கூடாது.

மாணவன்: ஐயனே. கற்பவைகளைக் குற்றமின்றி நம் குறைகள் நீங்கக் கற்கவேண்டும் என்று அருளினீர். அப்படி கற்றவுடன் நம் குறைகள் எல்லாம் நீங்கிவிடுமா? இல்லை வேறு எதுவும் செய்ய வேண்டுமா?

திருவள்ளுவர்: கற்றபின் நிற்க அதற்குத் தக.

-------------------------------------------------------------

என் மனதில்: இந்த கடைசியில் சொன்னது தான் நமக்குப் பிரச்சனையே. எத்தனையோ படிக்கிறோம். படிப்பது எளிதாய் இருக்கிறது. அதனை மற்றவர்க்கும் சொல்கிறோம். சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்ன்னு சொன்னபடி 'நிற்க அதற்குத் தக' தான் நமக்கு கொஞ்சம் ஆட்டம் காண்கிறது. என் செய்ய?

Saturday, August 23, 2008

*நட்சத்திரம்* - இந்த நட்சத்திர வாரம் எப்படி இருந்தது?

முன்பெல்லாம் நட்சத்திர வாரத்தில் இடப்படும் இடுகைகள் ஒவ்வொன்றையும் விடாமல் படித்துவிடுவது வழக்கம். தொடர்ந்து எழுதி வரும் பதிவர்களை முன்னிறுத்துவது தான் நட்சத்திர வாரத்தின் நோக்கம் என்ற புரிதல் இருப்பதால் அப்படி தொடர்ந்து செய்து வந்தேன். ஆனால் அண்மைக்காலமாக வேறு வேலைகள் (வேறென்ன - அலுவலக வேலைகளும் வீட்டு வேலைகளும் தான்) மிகுதியாகிவிட்டதால் தொடர்ந்து பதிவும் எழுத இயலுவதில்லை; விடாமல் நட்சத்திரங்களில் இடுகைகளைப் படிப்பதும் முடிவதில்லை.

வலைப்பதிவுகளில் ஒரு வெளிப்படையாகச் சொல்லாத கொடுக்கல் வாங்கல் கணக்கு உண்டு. ஒருவருடைய பதிவுக்குத் தொடர்ந்து சென்று பின்னூட்டம் இட்டால் தான் அவர் நம் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் இடுவார். நீங்கள் பின்னூட்டம் இடாமல் படித்துவிட்டு மட்டும் வந்துவிட்டால் அவரும் அதையே செய்வார். சிலரே இந்த பின்னூட்ட கொடுக்கல் வாங்கல் கணக்கைப் பொருட்படுத்தாமல் செயல்படுபவர்கள். பெரும்பாலோனோர் பதிவுகளை கூகுள் ரீடரில் வைத்திருப்பதால் நேரம் தாழ்த்தியாவது அவர்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். சில நேரங்களில் காலம் தாழ்த்தி இடப்படும் பின்னூட்டங்களை அந்த நண்பர்கள் மதிப்பதில்லை. சில நேரங்களில் காலம் தாழ்த்தி என்ன பின்னூட்டம் இடுவது என்று தெரியாததால் நானும் பின்னூட்டம் இடுவதில்லை. ஆகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நான் அவர்களது இடுகைகளைப் படிப்பதே இல்லை என்றொரு தோற்றம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

கொடுக்கல் வாங்கல் கணக்கு பார்க்காமல் நான் காலம் தாழ்த்தியாவது பின்னூட்டம் இடும் பதிவர்கள் பலர் உண்டு. அவர்களில் யாருமே என் இடுகைகளுக்குப் பின்னூட்டங்கள் இப்போதெல்லாம் இடுவதில்லை. அதற்கு மேற்சொன்ன தோற்றம் ஏற்பட்டுவிட்டது தான் காரணம் என்று நினைக்கிறேன்.

இவை எல்லாம் மனத்தில் இருந்ததால் சென்ற முறை விண்மீன் ஆன போது கிடைத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கையோ படிப்பவர்களின் எண்ணிக்கையோ இந்த முறை கிடைக்காது என்று தோன்றியது. அது மட்டுமின்றி என் மேல் ஒவ்வொருவர் மனத்திலும் ஒவ்வொரு விதமான முத்திரை இப்போது விழுந்துவிட்டது. அதுவும் ஒரு தடையாக அமையும் என்று தோன்றியது. அதனால் இந்த வாரம் ஒரு மந்தமான வாரமாகத் தான் செல்லப்போகிறது என்ற எண்ணம் இருந்தது.

ஆனால் எதிர்பார்த்ததை விட இந்த வாரம் மிக சுவையாகவே சென்றது என்பது என் எண்ணமும் புரிதலும். சரி தானா? உங்களுக்கும் அப்படித் தான் தோன்றியதா?

முன்னோட்டத்தில் சொன்ன இடுகைகள் அனைத்தையும் இந்த வாரத்தில் இட முடியாவிட்டாலும் முக்கால்வாசிக்கும் மேல் இட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். முதல் விண்மீன் வாரத்தில் இட்ட நான்கு இடுகைகளை இந்த வாரத்தில் மீள்பதிவாக்கமும் செய்தேன். அவையும் சுவையாக இருந்தன என்று எண்ணுகிறேன்.

சென்ற முறை 'எழுத வந்த மூன்றே மாதத்தில் கிடைத்த வாய்ப்பு' என்ற கிளர்ச்சி மனத்தில் இருந்தது போலும். அதனால் வீட்டிலும் அலுவலகத்திலும் அதன் பாதிப்பு நன்கு தெரிந்தது. மனக்குறைகளும் எழுந்தன. இந்த முறை அந்த கிளர்ச்சி இல்லை போலும். வீட்டில் நேற்று 'இந்த வாரம் விண்மீன் வாரம் நினைவிருக்கிறதா?' என்று கேட்ட பின்னர் தான் 'ஆமாம். சொன்னீங்கல்ல? நிறைய எழுதலையா?" என்று கேட்டார்கள். 'அப்பாடா. இந்த முறை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என்று மகிழ்ந்தேன். ஆனால் அலுவலகத்தில் நிறைய வேலை முடிக்க வேண்டியிருக்கிறது. திரும்பவும் வழக்கமான நிரலுக்கு வர நான்கு வாரங்களாவது ஆகும் என்று நினைக்கிறேன்.

சில இடுகைகளுக்கு வலுவான மாற்றுக் கருத்துகளும் வரும் என்று எதிர்பார்த்தேன். ஒரே ஒரு இடுகைக்கு மட்டும் என் பதிவுகளுக்கு அவ்வளவாய் வராத புதியவர்கள் (அவர்கள் எல்லோரும் அறிந்த பதிவர்கள் தான். என் பதிவுகளுக்குப் புதியவர்கள்) வந்து பின்னூட்டங்கள் இட்டு கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக நிறைய கருத்து சொல்லும் நண்பர்கள் வெளியூர் சென்று விட்டார்கள் போலும். இருப்பவர்களும் ஏதோ காரணத்தால் ஒரு பின்னூட்டத்தோடு நிறுத்திக் கொண்டார்கள். சிலர் என் மூன்றாவது கண்ணிற்கு (நெற்றிக்கண் = சினம்?) பயந்தோ என்னவோ வாயே திறக்கவில்லை. :-)விண்மீன் வாரம் முடியட்டும்; ஒரு கை பார்க்கலாம் - என்று இருப்பவர்களும் நேரம் கிடைக்காததால் இன்னும் படிக்காதவர்களும் இனி மேல் வந்து படித்துப் பின்னூட்டங்கள் இட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். :-)

நான் அவர்கள் இடுகைகளுக்கு வருகிறேனோ இல்லையோ பின்னூட்டங்கள் இடுகிறேனோ இல்லையோ அதனை எல்லாம் மனத்தில் கொள்ளாமல் இந்த வாரத்தில் எழுதப்பட்ட பெரும்பான்மையான இடுகைகளைப் படித்து தங்கள் கருத்துகளைச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். நான் உங்கள் இடுகைகளுக்கு வருவதில்லை என்று எண்ணிக் கொண்டு படித்தோ படிக்காமலோ சென்ற நண்பர்களே - உங்கள் இடுகைகளுக்கு விரைவில் வந்து பின்னூட்டங்கள் இடுகிறேன் - குறை கொள்ள வேண்டாம்.

இந்த வாரம் எனக்கு எப்படி இருந்தது என்று சொல்லுவதை விட உங்களுக்கு எப்படி இருந்தது என்று சொன்னால் சுவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். பின்னூட்டங்களில் உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் இந்த வாரத்தில் இருந்த நிறைகுறைகளையும் சொல்லுங்கள். அப்படியே வலப்பக்கம் இருக்கும் தேர்விலும் உங்களுக்குப் பிடித்த இடுகைகளைப் பற்றி சொல்லுங்கள்.

மீண்டும் முன்னாள் விண்மீன் ஆகிறேன். தமிழ்மணத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி. என்னை விட அதிக துடிப்புடன் இந்த வாரத்தை நடத்திச் சென்ற கிசுகிசுக்கள் என்று தலைப்பிட்டு புதிரா புனிதமா இடுகை இட்ட நண்பர் இரவிசங்கருக்கும், என்னுடைய பதிவுலக ஆளுமைக்குறிப்பை(Biodata) இட்ட நண்பர் சிவமுருகனுக்கும், எல்லா இடுகைகளையும் விடாமல் படித்துப் பின்னூட்டம் இட்ட கவிநயா அக்காவிற்கும் சிறப்பு நன்றிகள்.

*நட்சத்திரம்* - கிருஷ்ணஜெயந்தி - ஜன்மாஷ்டமி - கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்








Friday, August 22, 2008

*நட்சத்திரம்* - பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரைகள் தேவையா?

சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போதே சில இடங்களில் சில சொற்கள் புரியாமல் போகும் நிலை இருக்கிறது. இது எல்லா மொழிகளுக்கும் உள்ள இயல்பு தான். எத்தனை சதவிகிதம் அப்படி புரியாமல் போகின்றது என்பதைப் பொறுத்தே அந்த மொழியின் வளர்ச்சியையும் தேய்வினையும் கூறிவிடலாம் என்று நினைக்கிறேன்.

என்றுமுள தென் தமிழின் சிறப்பியல்பு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பாடல் வரிகளை இன்று படித்தாலும் புரிவது தான். தமிழில் இருக்கும் பயிற்சிக்கு ஏற்ப அந்தப் புரிதல் சதவிகிதம் மாறும். நேரடியாக பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது புரிதல் குறை ஏற்பட இன்னொரு காரணமும் உண்டு. செய்யுள் இலக்கணத்திற்கு ஏற்பவும் புணர்ச்சி விதிகளுக்கு ஏற்பவும் சொற்கள் சேர்ந்தும் பிரிந்தும் இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும். அவற்றை நேரடியாகப் படிக்கும் போது அவை சட்டென்று புரியாது. அதே பாடல் தளை, சீர் போன்ற இலக்கணங்களைப் பொருட்படுத்தாமல் புணர்ச்சி விதிகளையும் பொருட்படுத்தாமல் தனித் தனிச் சொற்களாக பிரித்து எழுதப்படும் போது அவை விரைவில் புரிவதைக் காணலாம்.

சில நேரங்களில் எப்படி அந்தச் சொற்களைப் பிரித்து எழுதுவது என்றோ பிரித்து எழுதப்பட்டதை எப்படி தொடுப்பது என்றோ புரியாது. அப்போது துணை புரிவது முன்னோர் அந்த நூற்களுக்கு எழுதிய உரைகள் தான்.

மொழியின் இன்னொரு அழகும் சில நேரம் புரிதல் குறையை ஏற்படுத்தும். ஒரே சொல்லுக்குப் பல பொருட்கள் இருப்பதும் பல சொற்களுக்கு ஒரே பொருள் இருப்பதும் என்பது மொழியின் அழகு. ஒரே சொல்லுக்குப் பல பொருட்கள் இருக்கும் போது எந்த பொருள் அந்த இடத்தில் பயின்று வருகின்றது என்று புரிந்து கொள்வதில் கொஞ்சம் சுணக்கம் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக 'ஆழி' என்ற சொல்லிற்கு சக்கரம், கடல் என்ற இரு பொருளைக் கூறலாம். ஒவ்வொருவர் பார்வைக்கு ஏற்ப ஒவ்வொரு பொருள் தோன்றலாம். ஒவ்வொரு உரையாசிரியரும் ஒவ்வொரு பொருளை எடுத்துக் கொள்வதை இதனால் காணலாம். ஒரே பொருளுக்குப் பல சொற்கள் இருக்கும் போது வேறு வகையாக தடை ஏற்படுகிறது. அந்தப் பல சொற்களில் சில இன்றைக்குப் புழக்கத்தில் இருக்காது. அதனால் அவற்றின் பொருள் புரியாது. அந்தப் பொழுதிலும் கை கொடுப்பது முன்னோர் செய்த உரைகள் தான்.

சில நேரங்களில் சொற்களின் பொருள் காலவேகத்தில் மாறியிருக்கும். நாற்றம், காமம், கற்பு, களவு போன்ற சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இவற்றிற்கு தற்கால பொருளைக் கொண்டால் இலக்கியத்தைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் ஏற்படும். கற்பு என்ற சொல்லை கல்வி என்ற பொருளில் எடுத்துக் கொள்ளாமல் தற்போதுள்ள பொருளில் எடுத்துக் கொண்டு 'கற்பழிக்கத் திருவுள்ளமே' என்று ஒரு ஆன்றோர் சொன்னதைத் தவறாகப் பொருள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே. அது போன்ற தடுமாற்றங்களும் குறை புரிதல்களும் நிகழும். அது போன்ற நேரங்களிலும் உரைகள் கை கொடுக்கும்.

இப்படி பழந்தமிழ் இலக்கியங்களைப் புரிந்து கொள்ள நமக்கு மிகவும் உதவியாக இருப்பது உரைகள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. பொருள் புரிந்து கொள்ள உதவுவதோடு உரை நூற்கள் இன்னொரு வகை நன்மையும் செய்கின்றன. அது என்ன என்று பார்ப்பதற்கு முன் உரை நூற்கள் எழும் சூழ்நிலைகளைப் பற்றி பார்க்கலாம்.

இன்றைக்கும் அடியேனைப் போன்றவர்கள் பாடல்களுக்குப் பொருள் சொல்லுவதற்கு என்ன காரணம்? மேலே சொன்னது போல் தனித் தனிச் சொற்களாகப் பிரித்து புழக்கத்தில் இல்லாத சொற்களின் பொருளைச் சொல்வது அந்தப் பாடல்களைப் புரிந்து கொள்ள பலருக்கும் உதவியாக இருக்கும் என்பது தானே. சட்டென்று இது தானே முதன்மையான காரணமாகத் தெரிகின்றது. யாரிடம் கேட்டாலும் இதுவே பதிலாக இருக்கும்.

ஆனால் இன்னும் நுணுகிப் பார்த்தால் உரை செய்பவர்களின் தேவை இன்னும் ஆழமானது. எந்த ஒரு இலக்கியமும் படைப்பும் அந்த அந்த காலத்திற்குப் பொருத்தமாக இருக்கும் போது அது மக்களிடையே மிக இயல்பாக நடை போடும். பலரும் அந்த இலக்கியங்களை பயில்வார்கள். நவீன இலக்கியங்கள், பின்நவீன இலக்கியங்கள் என்றெல்லாம் சொல்லப்படுபவற்றில் சில இவ்வகையில் அடங்கும். பழைய இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள் போன்று வகைப்படுத்தப்படும் இலக்கியங்களில் சிலவும் இவ்வகையில் அடங்குவதைக் காணலாம். அது ஏன் என்று பார்த்தால் மக்களின் தற்கால வாழ்க்கையையும் புரிதல்களையும் ஒட்டியே அந்த இலக்கியங்கள் அமைந்திருப்பதே. எடுத்துக்காட்டாக உடனே நினைவிற்கு வருவது 'பொன்னியின் செல்வன்' புதினம். அந்தப் புதினம் எழுதப்பட்டு அரை நூற்றாண்டிற்கு மேல் ஆன பின்னரும் இன்னும் அது மக்களின் நடுவே பெரும் செல்வாக்கோடு இருப்பதற்குக் காரணம் அது இன்னும் மக்களின் வாழ்க்கையையும் புரிதல்களையும் கனவுகளையும் ஒட்டி இருப்பதே.

அப்படி அமையாமல் சில இலக்கியங்கள் கால மாற்றத்தில் மக்களின் பார்வையில் தற்காலத்திற்கு ஏற்றவை இல்லை என்ற நிலைக்குச் சென்றிருக்கும். ஒரு காலத்தில் மக்களின் புரிதல், நம்பிக்கை, வாழ்க்கை போன்றவற்றோடு ஒட்டியிருந்த அந்த இலக்கியம் தற்போது விலகி நிற்பதைப் போல் தோற்றமளிக்கும். அப்படி நிகழும் போது அவை தற்காலத்திலும் மக்களின் புரிதல், நம்பிக்கை, வாழ்க்கை இவற்றிற்கு ஒட்டியே இருக்கின்றன என்று காட்ட எழுவதே உரைகள். இதற்கு எடுத்துக்காட்டாக திருக்குறள், கீதை போன்ற நூற்களுக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான உரைகள் எழுவதைக் காணலாம்.

இப்படி ஒவ்வொரு பழைய நூலுக்கும் இருக்கும் உரைகளை எல்லாம் படிக்கும் போது மூல நூலை மட்டுமின்றி உரைகள் எழுதப்பட்ட கால கட்டத்தையும் படிக்கும் வாய்ப்பு நமக்கு கிட்டுகிறது.

உரைகள் எழுதப்பட்ட கால கட்டத்தைப் பற்றி மட்டும் இன்றி உரையாசிரியர்களைப் பற்றியும் அவர்களின் நம்பிக்கைகள், அரசியல், குறிக்கோள் போன்றவற்றை பற்றியும் கூட உரைகளைப் படிக்கும் போது தெரிந்து கொள்ள இயல்கிறது. எடுத்துக்காட்டாக திருக்குறளின் உரைகளான நச்சினார்க்கினியர் உரை தொடங்கி இடைக்கால பரிமேலழகர் உரை அண்மைக்கால தேவநேயப் பாவாணர் உரை, கலைஞர் உரை, சுஜாதா உரை என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதே போல் சங்க இலக்கியங்களுக்கு மறைமலையடிகள் எழுதிய உரைகளைப் படித்தால் அவருடைய தனிப்பட்ட நம்பிக்கைகள், அரசியல், உரைகளை எழுதியதன் குறிக்கோள் போன்றவை புரியும்.

தற்காலத்தில் ஒருவர் ஆய்வு என்று இறங்கி உரைகள் செய்தாலும் அப்படியே. அவர்களது தனிப்பட்ட நம்பிக்கைகள், அரசியல், குறிக்கோள்கள் போன்றவை தெளிவாகத் தெரியும். அடியேன் எழுதும் இலக்கிய உரைகளும் அப்படியே. :-)

முன்னுரை போதும் என்று நினைக்கிறேன். இவ்வளவு நீண்ட முன்னுரையா என்று கேட்காதீர்கள். :-) எழுத நினைத்தது தொல்காப்பியத்திற்கான இளம்பூரணரின் உரையையும் திருக்குறளுக்கான நச்சினார்க்கினியரின் உரையையும் படித்த போது கிடைத்த சில சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தான். முன்னுரை என்று எழுதத் தொடங்கி இவ்வளவு நீண்டுவிட்டது. ஆனால் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன். :-)

****

தொல்காப்பியத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் திருக்குறளுக்கு இளம்பூரணர் எழுதிய உரையும் இணையத் தமிழ் பல்கலைகழகத்தின் நூலகத்தில் கிடைக்கிறது. இலக்கியத்தில் இறை என்ற தொடருக்காக தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் படிக்கத் தொடங்கினேன். அப்போது இந்த உரைகள் மிக உதவியாக இருந்தது/இருக்கிறது. அதில் கண்ட சில சுவையான தகவல்களை இங்கே தருகிறேன்.

1. தமிழ் எழுத்துகளில்னகரம் இறுதி எழுத்து என்று தொல்காப்பியம் சொல்கிறது. அதற்கு உரையெழுத வந்த இளம்பூரணர் 'னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின்வைக்கப்பட்டது" என்று எழுதியிருக்கிறார். ஆண்பால் மட்டுமே வீடுபேற்றிற்குரியது என்ற கருத்தினைப் படித்தவுடன் பெரும் வியப்பு ஏற்பட்டது. நான் அறிந்திருந்த வரையில் எந்த இந்தியத் தத்துவமும் ஆண்பாலுக்கு மட்டுமே வீடு பேறு உண்டு என்று சொல்லவில்லை. அதனால் கொஞ்சம் இந்தியத் தத்துவங்களைத் துழாவினேன். அப்போது தான் தெரிந்தது சமணம்/ஜைனம் அப்படி சொல்கின்றதென்று. ஜைன தத்துவத்தின் படி ஆண்பாலரே முக்தி/வீடுபேறு பெற தகுதி உடையவர்கள். பெண்பாலருக்கு அந்த தகுதி இல்லை. அப்போது தான் கவனித்தேன். எல்லா ஜைன தீர்த்தங்கரர்களும் ஆண்பாலரே. உடனே இளம்பூரணரைப் பற்றி கூகிளாரைக் கேட்ட போது அவரும் ஒரு சமணர் என்று சொன்னது.

னகரம் எப்படி ஆண்பாலை உணர்த்துகிறது என்று தெளிவாக இன்னும் தெரியாது - அன் விகுதியைக் குறிக்கிறதோ என்ற எண்ணம் உண்டு. ஆனால் ஆண்பாலைக் குறிப்பதால் அதில் என்ன சிறப்பு என்றும் எதற்கு அது பின்வைக்கப்பட்ட காரணமாக அமைகிறது என்றும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

2. குறில், நெடில் வகைகளை எல்லாம் விளக்கிவிட்டு அவற்றின் மாத்திரை அளவுகளையும் சொல்லிவிட்டு மூன்று மாத்திரை கொண்ட எழுத்துகள் தமிழில் இல்லை என்று தொல்காப்பியம் சொல்கிறது. அப்படியே இரண்டிற்கும் மேற்பட்ட மாத்திரைகள் வேண்டுமென்றால் எழுத்தைக் கூட்டிக் கொள்க என்று சொல்கிறது. அப்படி சொல்லும் போது வரும் சூத்திரம்

நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்

இந்த சூத்திரத்தைப் படித்த போது சரி தெளிவாகப் புரிகிறது என்று நகன்று போயிருப்பேன். உரையைப் படித்த போது அளபெடையின் இலக்கணத்தைக் கூறும் போது எழுதல் என்று சொல்லி விடாமல் அங்கேயே எழூஉதல் என்று மும்மாத்திரையின் எடுத்துக்காட்டையும் சொல்லிச் சென்ற அழகு புரிந்தது. இப்படிப்பட்ட குறிப்புகள் எல்லாம் செய்யுளில் வரும் போது உரைகள் தான் அவற்றை வெளியே கொண்டு வந்து ஒரு தனிப்பட்ட இலக்கிய இன்பத்தை நல்குகிறது.

3. உயிர் எழுத்துகளுக்கும் மெய் எழுத்துகளுக்கு அப்பெயர்கள் ஏன் ஏற்பட்டன என்று இளம்பூரணர் மிக அருமையாக விளக்குகிறார். உயிர்மெய்யெழுத்துகளில் மெய்யெழுத்து வெளி நிற்க உயிர் மறைந்து நின்ற ஆனால் அந்த மெய்யெழுத்துகளை இயக்குவதால் மறைந்து நிற்கும் எழுத்துகள் உயிர் எழுத்துகள் என்று வெளிப்பட்டு நிற்பவை மெய்யெழுத்துகள் என்றும் பெயர் பெற்றன என்கிறார். எவ்வளவு அருமையான விளக்கம் பாருங்கள்.

அப்படி சொல்லி வரும் போதே அவருடைய சமய நம்பிக்கையைச் சொல்லும் இன்னொரு கருத்தையும் சொல்கிறார். மெய்யெழுத்துகள் தனித்து இயங்காதவை. உயிர் எழுத்துகள் தனித்து இயங்குபவை. உடம்பின்றியும் உயிர்கள் இயங்குவதைப் போல் இவ்வெழுத்துகள் இயங்குவதால் இவை உயிர் எழுத்துகள் என்று பெயர் பெற்றன என்கிறார்.

4. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்னும் திருக்குறளின் முதற்குறளின் விளக்கத்தில் இளம்பூரணரின் விளக்கத்தை ஒட்டிய விளக்கத்தைத் தருகிறார் நச்சினார்க்கினியர். எல்லா எழுத்துகளுக்கும் அகரம் முதன்மையாக இருப்பதைப் போல் உலகங்களுக்கெல்லாம் ஆதிபகவன் முதன்மையாக நிற்கிறான் என்பது தானே நமக்கு இப்போது தெரிந்திருக்கும் பொருள். நச்சினார்க்கினியர் சொல்வது அடுத்த நிலைக்கு இந்தக் குறளின் பொருளைக் கொண்டு செல்கிறது. இறைவன் தனித்தும் இயங்குகிறான்; எல்லா உயிர்களின் உள்ளே நின்று அவற்றையும் இயக்குகிறான். அதனால் அவன் அகரத்தைப் போன்றவன். இது நச்சினார்க்கினியர் தரும் உரை. பாருங்கள் அவருடைய சமய நம்பிக்கை இங்கே வெளிப்படுகிறது.

இப்படி படிக்கப் படிக்கச் சுவைக்கின்றன தமிழ் இலக்கியங்களும் அவற்றின் உரைகளும். இதுவரை எழுந்துள்ள உரைகளை எழுதிய எல்லா பெரியவர்களின் திருவடிகளையும் வணங்கி இந்த அணிலோன் அமைகிறேன்.

*நட்சத்திரம்* - இயற்கைக் குணம்?

இந்தக் கட்டுரை சுனாமிக்குப் பின் நான் ஆங்கிலத்தில் எழுதி இந்தியக்கனவு 2020 வலைப்பக்கத்திலும் என் ஆங்கிலப் வலைப்பூவிலும் பதிக்கப்பட்டது. அதில் உள்ள கருத்து இப்போதும் பொருத்தமாக இருக்கிறது (என்றும் பொருத்தமாக இருக்கும் போலும்) என்பதால் தமிழில் மொழிபெயர்த்து இங்கே பதிக்கிறேன்.

***

இந்தியப் பெருங்கடல் சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற அளவுக்கு உதவி செய்துவிட்டோம். இந்த மாதிரி இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்க்கு உதவும் நம் இயற்கைக் குணம் இன்னொரு சுனாமியாய் இனிய சுனாமியாய் இத்தகைய தருணங்களில் வெளிப்படுவது கண்டு நெகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களால் முயன்ற வரை தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பலவிதமான போற்றத்தகுந்த உதவிகளை நிறையபேர் செய்திருக்கின்றனர். சுனாமி தாக்கிய இடங்களுக்கு அண்மையில் இருப்பவர்கள் பலர் உடனே அந்த இடங்களுக்குச் சென்று மிகச் சிறந்த பணிகள் ஆற்றியிருக்கின்றனர். தூரத்தில் இருப்பவர்கள் தொண்டு நிறுவனங்களுக்கு பொருள் உதவி செய்தும், நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பியும் தங்கள் பங்கினைச் செய்திருக்கிறார்கள். இப்படிப் பட்ட செயல்களைக் காண்பது மிக்க நெகிழ்ச்சியாகவும் உந்துதலாகவும் இருக்கிறது.

ஆனால் இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது எனக்கு ஒரு கேள்வி அண்மையில் அடிக்கடி தோன்றத் தொடங்கியுள்ளது. இந்த மாதிரி இயற்கை அழிவு நேரும் போது மட்டும் தான் இப்படிப்பட்ட கருணைச் செயல்களை நாம் பார்க்கிறோம். மற்ற நேரங்களில் நம் இயற்கைக் குணமான இந்தக் கருணை எங்கே சென்று விடுகிறது? என்னை முதற்கொண்டு எல்லோரும் ஏன் நம்மைச் சுற்றியிருக்கும் துன்பப்படும் மக்களின் துயரங்களைக் கண்டு கொள்வதில்லை? நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு எத்தனையோ கஷ்டப்படுகிறார்கள். நாம் ஏன் அவர்களை அப்படியே துன்பப்படும்படி விட்டுவைத்திருக்கிறோம்? நம் மனம் இயற்கை அழிவுகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ விழைகிறது; ஆனால் மற்றத் துன்பங்களான பொருளாதார சமூக அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டுமென்று எண்ணுவதில்லையே? ஏன்?

நாம் இன்னும் கொஞ்சம் கவனமாய்ப் பார்த்தால் நம்மைச் சுற்றி நிறைய பேர் தம்மால் முடிந்த அளவு துன்பப்பட்டு இனிமேலும் தாங்காது என்ற நிலைமையை அடைந்துள்ளார்கள் என்பதையும் நம்முடைய பணத்திலும் நேரத்திலும் சிறிது செலவழித்தாலும் போதும் அவர்கள் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கமுடியும் என்பதைப் பார்க்கலாம். ஆனால் நாம் அதனைச் செய்வதில்லையே ஏன்? நம்மைத் தடுப்பது எது? நாம் இப்படி கடின மனம் கொண்டவராய் ஏன் மாறிவிட்டோம்? நாம், நம் குடும்பம், சுற்றம், நட்பு இவர்களைப் பற்றி மட்டும் கவலைப்படும் சுயநலம் கொண்டவர்களாக ஏன் ஆகிவிட்டோம்?

இயற்கை அழிவு தாக்கும் போது மட்டும் தான் நான் மற்றவர்களுக்கு உதவுவேன் என்று நான் சொன்னால் அது மிகக் கொடூரமான எண்ணம். மற்றவர்களுக்கு உதவுவது என்பது என் இயற்கைக் குணம் என்றால் நான் அப்படிச் சொல்ல மாட்டேன். என்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் காண்பேன்; கேட்பேன். ஏதோ உயிரோடு இருக்கிறோம் என்ற நிலையில் 'வாழ்வதொன்றே' மிச்சமாய் இருக்கும் துன்பப்படும் மக்களையும் காண்பேன். அவர்களுக்கு என்னால் முடிந்ததெல்லாம் செய்வேன்.

என் இயற்கை குணமான கருணையைப் பற்றி எனக்கு மற்றவர்கள் சொல்லவேண்டியிருப்பதை எண்ணினால் வெட்கமாக இருக்கிறது. தினமும் இந்தக் கருணை என்னும் குணத்தை வெளியே கொண்டுவருவதற்கு மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், அன்னை தெரஸா போன்ற சமூகச் சேவகர்களின் உந்தும் சொற்கள் தேவைப்படுவது வெட்கமாய் இருக்கிறது. என்னைச் சுற்றி இருப்பவர்கள் மேல் என் கருணைக் குணத்தை வெளிப்படுத்துவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. நான் இன்னும் அதிக கவனத்துடன் இருந்து என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன். எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் உறுதி - 'என் இயற்கைக் குணமான கருணை வெளிப்படுவதற்கு இன்னொரு இயற்கை அழிவு தேவையில்லை. சான்றோர்களின் உந்தும் வார்த்தைகளைத் தொடர்ந்து படிப்பேன்; ஆனால் மற்றவர்களுக்கு உதவும் என் குணம் வெளிப்பட அந்த வார்த்தைகள் இனித் தேவையில்லை. அது இன்னும் இயற்கையாக நடக்கும்'. இந்த உறுதி மொழியில் நிலையாக நிற்க நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் என் இயற்கைக் குணமான கருணைச் செயல்கள் செய்வதற்கும் ஆண்டவனை வேண்ட வேண்டியுள்ளதே என்று எண்ணும் போது வெட்கமாய் இருக்கிறது.

Thursday, August 21, 2008

*நட்சத்திரம்* - எங்கள் அபிராமி தரிசனம் காண வாரீரே! (அபிராமி அந்தாதி நிறைவு)

அபிராமி அந்தாதிப் பொருளுரை நிறைவாகும் இந்த நல்வேளை! இதுவும் ஒரு வகையில் அப்த பூர்த்தி தான்! Oct 2005-இல் துவங்கிய தேர், பதிவு வீதிகளில் ஆடி ஆடி, இதோ நிலைக்கு வருகிறது! நிறைவுக்கு வருகிறது!
சஷ்டி+அப்த+பூர்த்தி = அறுபது+ஆண்டு+நிறைவு!
அந்தாதிப் பொருளுரையோ, த்ரியப்த பூர்த்தி=மூன்றாண்டு நிறைவு!

இது அப்த பூர்த்தி மட்டுமில்லை! ஆப்த பூர்த்தியும் கூட! விரும்பிய எல்லாம் நிறைவேற்றித் தரும் தமிழ்ப் பனுவல்! நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்! ஆபத்து காலத்தில் OMG என்றோ, Gotcha-ன்னோ அடியேன் வாய்க்கு வருகிறதா? இத்தனைக்கும் பீட்டர் விட்டே பழகிய வாய்! :) அடக் கடவுளே-ன்னோ, அம்மா-ன்னோ தானே வருகிறது!
அதே போல் அபிராமி பட்டருக்கு, நெருப்பின் நடுவிலே, தாய் மொழியில், தெய்வத் தமிழ் மொழியில், துதியும் பனுவலும் இயல்பாகவே வந்து விட்டது!
இத்தனைக்கும் அவர் வடமொழி வித்தகர்! சகல சாஸ்திர பண்டிதர்! இருப்பினும் அம்மா என்று அழைக்கும் போது, அம்மா மொழியில் தானே அழைக்க முடியும்!

விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு என்று பாடி விட்டார் பட்டர்! தோன்றி விட்டாள் அன்னை!
விழிக்கே அருள் உண்டு என்ற....
பாட்டை எடுத்த போது தான், அன்னைத் தோட்டை எடுத்தாள்!
வீசினாள், முக வானிலே சந்திரனைப் பூசினாள்!

ஒரே நேரத்தில், தை அமாவாசையில், பூமிக்கு இரண்டு சந்திரன்கள்!
பட்டருக்கோ அக நிலவிலே அவள் முக நிலவு! மற்றவர்க்கோ வானிலே புற நிலவு!
சாட்சி கேட்கும் புற நிலவு தேய்ந்து விடும்!
ஆனால் நம் அக நிலவும் முக நிலவு மட்டும் தேயவே தேயாது!

வாருங்கள் அபிராமி அந்தாதி பொருளுரையின் இந்த அப்த பூர்த்திக்கு, திருக்கடையூர் சென்று அம்மாவைச் சேவிப்போம்! தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தி அழகு பார்ப்போம்!


மயிலாடுதுறை-நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம் திருக்கடவூர்! திருக்கடையூர் என்றும் சொல்லலாம்! கடம்=பானை, கலம்! கடை=கடைதல்! எனவே ரெண்டுமே சரி தான்!
கடலைக் கடைந்த போது, அமுதம் கிடைத்த பாத்திரத்துக்குப் பேரு தான், அமிர்த கடம்!
நம் போன்ற உயிர்களுக்கு வேண்டிய அமுதம்/இன்பம் எல்லாம் இருக்கும் கடம் எதுங்க?

இறைவன்! இறைவன் தான் கொள்கலம்! அதில் தான் அமுதம்/இன்பம் கொள்ளும்!
நமக்கு வேண்டும் போது மட்டும், அதில் இருந்து இன்பங்களை எடுத்துக் கொள்கிறோம்! பின்னர் கலத்தை மறந்து விடுகிறோம்! மீண்டும் அடுத்த முறை ஏதாவது நிறைக்க வேண்டி இருக்கும் போது தான, நமக்குக் கலம் தேவைப்படுகிறது!:)

அவரவர் பாப புண்ணியங்களுக்கு ஏற்றவாறு, அமுதம் வழங்கும் அதிகாரி சிவபெருமான்! அதான், ஈசனே கொள்கலமாய், அமிர்தம் கொண்டுள்ள கடமாய் வந்தான்! தன்வந்திரிப் பெருமாள் கைகளிலும், மோகினியின் கைகளிலும் தவழ்ந்தான்!
அந்த அமிர்த கடமே பின்னர் லிங்கமாய் மாறி விட்டது! அதனால் தான் அமிர்த கட ஈஸ்வரர்! அவர் தர்ம பத்தினி அபிராமி அன்னை!

பார்த்தீர்களா? பாற்கடல் கடைந்த போது தான் எத்தனை எத்தனை தத்துவங்கள்! எத்தனை எத்தனை தெய்வ வடிவங்கள்!
கூர்மாவதாரம், நீலகண்டன், அலைமாகள் ஸ்ரீ மகாலக்ஷ்மி, மோகினித் திருக்கோலம், தன்வந்திரிப் பெருமாள், அமிர்த கடம், அமிர்த கட ஈஸ்வரர், அருள்வாமி அபிராமி! - இப்படி தெய்வத் திருவுலா!


சரி, ஏன் அறுபதாம் கல்யாணம், மணி விழா, சஷ்டி அப்த பூர்த்தியைத் திருக்கடையூரில் செய்து கொள்ள நினைக்கிறார்கள்?
இது மார்க்கண்டேயனுக்காக, யமனை வென்ற தலம்! சிரஞ்சீவித் தலம்!
அதான், என்றும் சீரஞ்சீவி-சுமங்கலியாக வாழ்ந்து, இல்லறம் நடாத்த, இங்கு செய்து கொள்கிறார்கள்!
கணவரின்,
59 முடிந்து 60 துவக்கம் = அர்த்த ரத சாந்தி
60 முடிந்து 61 துவக்கம் = சஷ்டி அப்த பூர்த்தி
69 முடிந்து 70 துவக்கம் = பீம ரத சாந்தி
79 முடிந்து 80 துவக்கம் = சதாபிஷேகம்!

யமனை வென்ற ஈஸ்வரன் மிருத்யுஞ் ஜெய ஈஸ்வரன்! பாலாம்பிகை!
அட, அம்பிகை இங்கே எதற்கு வந்தாள்? யமனை வெல்லும் போது கூட அருகில் துணைவி வேண்டும்! துணையை எதிலுமே ஒதுக்குவதில்லை! அழித்தலிலும் இருப்பாள்! ஆக்கத்திலும் இருப்பாள்!!
இப்படி, இந்தத் தலத்தில் இப்படி இரண்டு ஈஸ்வரர்கள்! இரண்டு அம்பிகைகள்!
மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகை! அமிர்தகடேஸ்வரர்-அபிராமி!!

அறுபதாம் கல்யாணம் செய்து கொள்ள திருக்கடையூர் தான் போக வேணுமா?
அவசியம் இல்லை! அவரவர் நிலைமையைப் பொறுத்தது தான்!
நித்ய கல்யாணமாய் இருக்கும் பல ஆலயங்களிலும் செய்து கொள்ளலாம்!
தினமும் கல்யாணம் நடந்து கொண்டே இருக்கும் தலங்கள் பல! நித்ய சுமங்கலித் தலங்கள் அவை!
சென்னைக்கு அருகே திருவிடந்தை, திருப்பதி திருமலை இங்கெல்லாம் நித்யமும் கல்யாணம் தான்! ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன ஈஸ்வரனுக்கும் நித்ய கல்யாணம்!
அவரவர் இல்லத்திலும் செய்து கொள்வார்கள்! எங்கு செய்து கொண்டாலும், அது பெருமாள் கோயிலோ, சிவன் கோயிலோ, வீட்டிலோ,
அங்கு மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகை ஆகிய இருவரையும், மந்திரப் பூர்வமாகக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வைப்பார்கள்!
எப்பவுமே, சங்கரன்-சங்கரிகள் ஆசியோடு தான் இந்த விழா!


வாருங்கள்...
அதோ கோயில் யானை மாலையுடன் வரவேற்கிறது! கஜ பூஜை முடித்து, பின்னர் கோ பூஜையில் அன்னை மகாலஷ்மியை வளமுடன் வேண்டிக் கொள்வோம்! ஆலயத்துக்குள் நுழைந்து விட்டோம்!

கள்ள வாரணப் பிள்ளையாரைத் தரிசித்து, பின்னர் மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகையைச் சேவிப்போம்! நீண்ட ஆயுளுடன், நிறைந்த ஆயுளையும் அருள வணங்கி மகிழ்வோம்!

இதோ அப்பனின் சன்னிதி!
அமிர்த கடேஸ்வரன் குடம் போலவே தெரிகிறான்!
வழியில் இது என்ன இம்புட்டு மல்லிக் கொடிகள்? ஜாதி மல்லி தான் தல விருட்சம்!
மோகினித் திருக்கோலத்துக்கு உகந்த மலர் ஜாதி மல்லி அல்லவா? மலர்கள் சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகின்றன!
தேவார மூவரும் அப்பனைப் பாடி உள்ளார்கள்! திருநீற்றுப் பிரசாதம் தரித்துக் கொண்டு, அம்மாவைப் பார்க்கச் செல்லலாமா?


இதோ வந்து விட்டோம்!
அழகிய கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட அபிராம சுந்தரி சன்னிதி!
சாயரட்சை என்னும் மாலை நேரப் பூசை!
சன்னிதி எங்கும் மின்னி மினுக்கும் தீபங்கள்! சாம்பிராணி அகிற் புகை!
செண்டை, கொம்பு, கோல், சங்கு, நாதசுர மங்கல வாத்தியங்கள் முழங்குகின்றன!
மேடையில் அம்பாளுக்குச் செய்ய இருக்கும் சோடஷ உபசாரம்! பதினாறு வகையான உபசரிப்புகள்! தீபகலசம் முதலான பூசைப் பொருட்கள்!

இதோ திரை விலகுகிறது!
ஜகத்ஜோதி, ஜோதி ஸ்வரூபிணியாய், மதிவதன பிம்பமாய் அம்பாள் ஜொலிக்கின்றாளே!
ஆத்தாளை! எங்கள் அபிராம வல்லியை! அண்டம் எல்லாம்
பூத்தாளை! மாதுளம் பூ நிறத்தாளை! புவி அடங்கக்
காத்தாளை! ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும், அங்கை
சேர்த்தாளை! முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!

ஐந்தடக்கு தீபத் தட்டு அன்னையின் திருமேனிப் பிரதிட்சணமாய்ச் சுழல்கிறது! எல்லாரும் கூடி இருந்து, குளிர்ந்தேலோ-ன்னு சேவித்துக் கொள்ளுங்கள்!

பாதபத்ம பீடம்! தாமரைத் திருவடிகள்!
வெள்ளி மெட்டி பிஞ்சு விரல்களில் கொஞ்சுகிறது! காற்சிலம்பு மின்னுகிறது!
அம்மாவின் பாதங்களிலே, சேலையின் விசிறி மடிப்பு அருவியாய் வந்து விழுகிறது!
அண்ணனைப் போலவே பச்சைத் திருமேனி! அந்தப் பச்சை மேனியிலே, அரக்குச் சிவப்பிலே, பட்டுச் சீலையிலே பார்வதி ஜொலிக்கின்றாள்!
(பாதாரவிந்த தீப சேவை)

அண்ணன் அபிராமன்! தங்கை அபிராமி!
அவர்களின் தரிசனமே அபி என்னும் இன்பம் கொடுத்து, ரமிக்க வைக்கிறதே!
அபிராம இங்கு வருக! மைந்த வருக! மகனே இனி வருக! என்கண் வருக! எனது ஆருயிர் வருக! வருகவே!

அபய ஹஸ்தம் = அஞ்சேல் எனுமொரு கரம்!
வரத ஹஸ்தம் = வா, தந்தேன் எனுமொரு கரம்!
கரங்களிலே கலகலவென வளை குலுங்க,
புறங்களிலே ஜிலுஜிலுவென பூமாலை தொங்க,

மார்பணியும், கழுத்தணியும், அத்தாணிப் பூணும், அட்டிகையும் தவழ்ந்திலங்க,
பின்னிரு கைகளிலே சக்கரமும், சங்கும் ஏந்திச் சேவை சாதிக்கின்றாள்!
நமஸ்தேஷூ மகாமாயே, ஸ்ரீபீடே, சுர பூஜிதே!
சங்கு சக்ர கதா ஹஸ்தே, மகாலக்ஷ்மீ, நமோஸ்துதே!

(கரதல கமல தீப சேவை)

அம்மாவின் சக்கரத் தோளிலே பச்சைக்கிளி!
சங்குத் தோளிலே செங்கரும்பு!
நித்ய சுமங்கலியின் பச்சைக் கழுத்திலே திவ்யத் திருமாங்கல்யம்!
தம்பதிகளும், காதலரும், இன்னும் எல்லாரும் கண்ணாரச் சேவித்துக் கொள்ளுங்கள்!
சுவாசினிப் ப்ரியே மாதே, செளமாங்கல்ய விவர்தினீ!
மாங்கல்யம் தேஹீ மே நித்யம்! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!!

(மாங்கல்ய பலப் ப்ரத தீப சேவை)
சர்வ மங்கள மாங்கல்யே! சிவே! சர்வார்த்த சாதிகே!
சரண்யே! த்ரயம்பகே! கெளரீ! நாராயணி நமோஸ்துதே!!


அன்னையின் திருமுக தரிசனம்! கோடி சந்திரக் குளிர் பிரகாசம்!
இவள் தாடங்கம் வீசித் தானா நிலவு உதிக்க வேண்டும்?
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், நெற்றியிலே விபூதிச் சுட்டி!
கருவிழிக் கண்கள் கடாட்சித்து நிற்க,
மீன-அக்ஷி, காம-அக்ஷி, விசால-அக்ஷி என்று அனைத்து அன்னையரின் கடைக்கண் பார்வையும், எங்கள் அபிராமியின் கருவிழியிலே!
(நேத்ரானந்த தீப சேவை)

காதிலே தாடங்கம் மின்ன, ஒய்யாரக் கொண்டையிலே ஆண்டாள் கொண்டை அலங்கரிக்க, திருவாசி மாலைகள் பின்னே திகழ,
அபிராம வல்லியின், அருள் கோலம் காணீர்! அருள் கோலம் காணீர்!
சந்திர மண்டல மத்யஸ்தே, மஹா திரிபுர சுந்தரீ!
ஸ்ரீ சக்ர ராஜ நிலையே! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!!

(பாதாதி கேச பரிமள நீராஞ்சன கர்ப்பூர தீப சேவை)

01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!!!!!
அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!!


அபிராமியம்பிகா திவ்ய சரணார விந்தயோஹோ,
தீப மங்கள கர்ப்பூர நீராஞ்சனம் தரிசயாமி!


அருள்வாமி அபிராமி திருவடிச் சரணங்களிலே,
திவ்ய மங்கள கர்ப்பூரத் தீப தரிசனம் காண்மின்களே!

இதோ, கர்ப்பூர ஆரத்தியை ஒற்றிக் கொள்ளுங்கள்! அபிராமி அம்மன் திருவடிகளே சரணம் சரணம்!!


நண்பர் குமரன் பணிவோடு சமர்ப்பித்த அபிராமி அந்தாதிப் பொருளுரை சம்பூர்ணம்!

(வரும் புரட்டாசி மாதத்தில், நியூயார்க்கில் இருந்து, திருக்கடவூர் அபிராமவல்லியைத் தரிசிக்க இந்தியப் பயணத் திட்டம்!
அம்மா-அப்பாவின் அப்த பூர்த்தி! ஆசி கூறுவீர்! சுபம்)


**************************************************

அடியேனின் வேண்டுகோளுக்கு இணங்க அபிராமி அந்தாதி பொருளுரையின் நிறைவாக அன்னையின் தெய்வீகத் திருவுருவ தரிசனத்தை நாமெல்லாம் பெறும்படி செய்த நண்பர் இரவிசங்கர் கண்ணபிரானுக்கு அடியேனின் பல நூறு வணக்கங்கள். அன்னையின் ஆரத்தி பாடலை தந்துதவிய கவிநயா அக்காவிற்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். வாழ்க வளமுடன்!

*நட்சத்திரம்* - கண்ணன் என்னும் கருநிறக் கடவுள்

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் என்று குதூகலம் கொள்ள வேண்டிய வாரம் இது. ஆமாம் இந்த வாரத்தில் தான் கண்ணனின் பிறந்த நாள் வருகிறது. சென்ற முறை தமிழ்மண விண்மீனாய் இருந்த போது குடியரசு தினம் வந்தது. இந்த முறை விண்மீனாய் இருக்கும் போது விடுதலை நாள் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே; அந்த வாரத்தில் இந்த வாய்ப்பு கிடைக்காமல் அதற்கடுத்த வாரத்தில் கிடைக்கிறதே என்று நினைத்த போது அதை விடச் சிறப்பாக கண்ணனின் பிறந்த நாள் அமையும் வாரமாக அமைந்துவிட்டது.

கண்ணனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்கமாக இந்த இடுகை அமைகின்றது. கொண்டாட்டத்தின் தொடக்கம் என்று சொல்வதில் இருக்கும் குறிப்பு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கொண்டாட்டத்தை வேறு இடங்களிலும் காணலாம். :-)

***

"அப்பா. முல்லை நிலக்கடவுள் மாயோன் என்பதை தொல்காப்பியம் சொல்கின்றது. முல்லை நிலத்தின் கருப்பொருளும் உரிப்பொருளும் எப்படியெல்லாம் கண்ணனுக்குப் பொருந்தி வருகின்றது என்பதையும் நீங்கள் முன்பு சொன்னீர்கள். சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல், பூவை நிலைத் துறை போன்ற இலக்கண இலக்கிய செய்திகளையும் கண்டோம்.

ஆரியத்தின் வருகைக்குப் பின்னர் ஆரியம் தமிழ்நெறியோடு செய்து கொண்ட உடன்பாடே மாயோனும் விஷ்ணுவும் இணைந்தது; சேயோனும் ஸ்கந்தனும் இணைந்தது; வாலியோனும் பலராமனும் இணைந்தது என்றெல்லாம் பலரும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் அவர்கள் சொல்லும் ஆரியம் வருவதற்கு முன்னரே தமிழ்நெறியில் ஸ்கந்தனுக்கு உரியவை, விஷ்ணுவுக்கு உரியவை, பலராமனுக்கு உரியவை என்று அவர்கள் வகுக்கும் செய்திகள் இருக்கின்றனவே. ஒரே குழப்பமாக இருக்கிறது"

புன்னகையுடன் "குமரா. நல்ல கேள்வி கேட்டாய். துவரைப்பதியிலிருந்து வந்த மன்னர் குடியினர் வேளிர்கள் என்று சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இருக்கின்றன. துவரைப்பதி என்றால் கண்ணன் ஆண்ட துவாரகையைக் குறிப்பதாகச் சிலரும் கருநாடகத்தில் இருக்கும் துவாரசமுத்திரத்தைக் குறிப்பதாகச் சிலரும் சொல்கிறார்கள். மூவேந்தர்களில் பாண்டியர்கள் மூத்த குடியினர் என்பது உனக்குத் தெரியும். பாண்டியர்களுக்கு இணையான தொன்மையுடன் இருப்பவர்களாக வேளிரையும் இலக்கியத் தரவுகள் சுட்டுகின்றன. அவர்கள் வடக்கிலிருந்து தெற்கே வரும் போது சில தொன்மங்களைக் கொண்டு வந்திருக்கலாம். அல்லது துவாரகையை ஆண்ட யாதவ குலத்தவர்கள் தமிழர்களாகவே இருக்கலாம். அப்படி இருந்தால் இந்தத் தொன்மங்கள் எல்லாம் தமிழர்களுடையதாகவே இருந்து ஆரியத்தில் பின்பு கலந்திருக்கலாம். என்றைக்கு ஆரியத் தொடர்பு ஏற்பட்டது, அது நிகழ்ந்த இடம் வடபுலமா தென்னகமா என்றெல்லாம் இன்னும் நுணுகிப் பார்க்கவேண்டும். உனக்கு ஆர்வமும் நேரமும் இருந்தால் இறங்கி ஆய்வு செய்து பார்"

"நீங்கள் சொல்வது சரி தான் அப்பா. வெளிநாட்டிலிருந்து தங்கள் மதத்தைப் பரப்ப வந்தவர்கள் மேலோட்டமாக ஆராய்ந்து சொல்லிச் சென்ற சில செய்திகள் உறுதியான கருத்தாக்கங்களாக கொண்டு பல குழப்பங்கள் இருந்து வருவதை அறிகிறேன். அந்தப் பாதிரியார்கள் செய்த தமிழாய்வால் பல நன்மைகளும் ஏற்பட்டிருக்கின்றன; சில குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன"

"இருக்கலாம் மகனே. ஆனால் அவர்கள் அந்தக் குழப்பங்களை வலிந்து செய்தார்கள் என்று எண்ண இடமில்லை. அவர்களுக்குக் கிடைத்த தரவுகளின் படி அவர்களின் புரிதலைச் சொல்லிச் சென்றார்கள். அதனை அடுத்து மேன்மேலும் உள்ளே சென்று பல விதமான தரவுகளைத் தேடி மற்ற செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும். அதனைச் செய்யாமல் அவர்களின் அரைகுறைப்புரிதல்களின் மேலாக ஒரு பெரும் கட்டடத்தையே கருத்தாக்கம் செய்துவிட்டார்கள். அது தமிழின் போகூழே. ஒரே மூச்சில் தமிழின் தமிழரின் தொன்மைப்பெருமையைப் பேசிக் கொண்டே அடுத்த நொடியே அந்நியர்கள் வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்கள் என்று தன்னிரக்கம் பேசி மேலும் கீழுமாக அலைக்கழிக்கப்படுகிறார்கள் தமிழர்கள். ஒரே நேரத்தில் பேரறிவினராகவும் அ‍ன்‍னியர்களால் ஏமாற்றப்பட்ட ஏமாளிகளாகவும் நம் முன்னோர்கள் இருந்தார்கள் என்று சொல்லிக் கொள்வது நகைப்பிற்குரியது. இதெல்லாம் பேசித் தீராது. வேறேதும் இருந்தால் சொல். பேசலாம்"

"உண்மை தான் தந்தையே. இவை பேசித் தீரப் போவதில்லை. பேசினாலும் புரிந்து கொள்பவர் மிகக்குறைவு. அந்த நேரத்தை நல்லபடியாக இலக்கிய ஆய்வில் செலவழிக்கலாம்.

தமிழ் இலக்கியங்களில் பற்பல இடங்களில் கரு‍‍ நிறக் கடவுளான மாயோனைப் பற்றி நிறைய செய்திகள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறீர்கள். அவற்றில் சிலவற்றை சொல்லுங்கள் அப்பா."

"சேந்தன் தாதை. முன்பே சொன்னது போல் நீயே கற்று தெளிவதே நல்லது. மற்றவர் சொல்வதும் உரை நூல்களும் கடின சொற்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானாலும் உதவியாக இருக்கலாம். ஆனால் உண்மையை உணர வேண்டும் என்ற ஆர்வம் இருப்பின் நீயே உள் நுழைந்து பார்ப்பதே நல்லது"

"தந்தையே. அப்படியே சொல்கிறேன். உள்ளே இறங்குவதற்கு முன் கரையோரம் நின்று நீரைச் சோதிப்பதைப் போல் சோதிக்க நினைக்கிறேன். அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். இருக்கும் நேரத்தில் எதையெல்லாம் கோடி காட்ட முடியுமோ அவற்றை எல்லாம் சொல்லுங்கள்"

"மகனே. நீ வேண்டிக் கேட்பதால் சொல்கிறேன். கண்ணனை இலக்கியம் எங்கெல்லாம் குறிப்பிடுகிறது என்று பட்டியல் இடத் தொடங்கினால் பட்டியல் நீளும். சட்டென்று நினைவிற்கு வருபவற்றில் சிலவற்றைச் சொல்கிறேன். கேட்டுக் கொள்.

முதலில் நினைவிற்கு வருவது பரிபாடல். எட்டுத் தொகை நூற்களில் ஒன்றான பரிபாடல் தொகுப்பில் எழுபது பாடல்கள் இருந்தன என்றும் தற்போது இருபத்தி இரண்டு பாடல்களே கிடைக்கின்றன என்றும் படித்திருக்கிறேன். அந்த இருபத்தி இரண்டில் முருகன் மேல் எட்டு பாடல்களும் வையை நதி மீது எட்டு பாடல்களும் மாயோன் மீது ஆறு பாடல்களும் இருக்கின்றன. அந்த ஆறு பாடல்களையும் சொல்லத் தொடங்கினால் வெகு நேரம் செல்லும். அவற்றை இன்னொரு நாள் பார்க்கலாம். அதனால் வேறு நூற்களில் இருக்கும் குறிப்புகளை மட்டும் சொல்லிச் செல்கிறேன்.

எட்டுத்தொகை நூற்களில் இன்னொன்று நற்றிணை. அதன் கடவுள் வாழ்த்தாக 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்ற சங்கப்புலவர் பாடிய பாடல் ஒன்று மாயோனின் மீது இருக்கிறது. விட்டுணு என்ற வடசொல் விண் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்ததாக தமிழறிஞர் சிலர் சொல்வார்கள். விட்டுணு என்னும் வடசொல்லிற்கு எங்கும் நிறைந்தவன்; அண்ட உருவாக இருப்பவன் என்று பொருள். இந்தப் பாடல் மாயோனை அண்ட உருவாகக் காட்டுகிறது. அந்த வகையில் விட்டுணு என்ற பெயரின் அடிப்படைக் கருத்து இந்தப் பாடலில் சொல்லப் பட்டிருக்கிறது எனலாம்.

மாநிலம் சேவடியாகத் தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கையாக
விசும்பு மெய்யாகத் திசை கையாக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே.
"

"ஆகா. பாடல் மிக எளிமையாக இருக்கிறது அப்பா. அப்படியே சுருக்கமான பொருளும் சொல்லிவிடுங்கள்"

"குமரா. எளிதாக இருக்கிறது என்று சொல்கிறாய். பின் ஏன் பொருள் உரைக்கச் சொல்கிறாய்?"

"முழுவதுமாகப் புரியவில்லை அப்பா. அதனால் தான்"

"சரி சுருக்கமாகச் சொல்கிறேன் கேள். உலகம் திருவடிகளாக, கடல் உடையாக, வானம் திருமேனியாக, திசைகள் கைகளாக, சூரியனும் சந்திரனும் திருக்கண்களாக, எல்லா உயிர்களும் உலகங்களும் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கும் வேத முதல்வன் சக்கரத்தைக் கையில் கொண்டிருக்கும் மாயோனே என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். இது தான் சுருக்கமான பொருள்"

"மிக்க நன்றி அப்பா. அடுத்தப் பாடலைக் கூறுங்கள்"

"பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில் ஒரு இடத்தில் மாயோனின் கொப்பூழிலிருந்து நான்முகன் தோன்றிய செய்தியைக் கூறுகிறது.

நீல நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டு...


என்று செல்லும் அந்தப் பாடல் வரிகள். இதன் பொருள் புரிகிறதா?"

"நன்கு புரிகிறது அப்பா"

"நல்லது. அடுத்தப் பாடலைச் சொல்கிறேன் கேள். பதினெண்கீழ்கணக்கு நூற்களில் ஏதாவது ஒன்றைச் சொல் பார்ப்போம்"

"என்ன அப்பா இப்படி கேட்டுவிட்டீர்கள்? திருக்குறளும் நாலடியாரும் பதினெண்கீழ்கணக்கு நூற்கள் தானே"

"ஆமாம் மகனே. அந்தப் பதினெட்டு நூற்களில் ஒன்று திரிகடுகம் என்பது. அதன் கடவுள் வாழ்த்தும் மாயோனைப் போற்றுகிறது.

கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் - நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி


இந்த வெண்பாவின் பொருள் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்"

"மேலோட்டமாகப் புரிகிறது அப்பா. சொல்கிறேன். சரியா என்று பாருங்கள். வாமனனாக வந்து திருவிக்ரமனாக வளர்ந்து உலகங்களை அளந்ததும், கண்ணனாக வந்த போது குருந்த மரத்தை உதைத்துச் சாய்த்ததும், அப்போது நெருங்கி வந்த மாய வண்டிச்சக்கரத்தை உதைத்ததும் பூவைப்பூ வண்ணம் கொண்ட மாயோனின் திருவடிகளே. சரியா அப்பா?"

"சரி தான் மகனே. இப்படியே இன்னும் இருக்கும் பாடல்களையும் படித்துப் பார்த்தால் பழந்தமிழர் மாயோனை எப்படி போற்றியிருக்கின்றார்கள் என்று புரியும்"

"இன்னும் இருக்கும் பாடல்களைச் சொல்லுங்கள் அப்பா"

"இன்னும் இரு பாடல்களைச் சொல்கிறேன். பின்னர் நான் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்"

"அப்படியே ஆகட்டும் அப்பா. இன்னும் இரு பாடல்களை மட்டும் சொல்லுங்கள். உங்களைச் சிரமப்படுத்துவதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்"

"புறநானூறு ஐம்பத்தி ஆறாம் பாடல் பழந்தமிழகத்தின் நாற்பெரும் தெய்வங்களைப் பற்றி சொல்கிறது.

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர்சடை
மாற்றரும் கணிச்சி மணி மிடற்றோனும்
க்டல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்
மணி மயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்...


எந்த நான்கு கடவுளர்களைப் பற்றி சொல்கிறது இந்தப் பாடல் தெரிகிறதா குமரா?"

"நன்றாகத் தெரிகிறது அப்பா. சிவபெருமான், பலராமன், திருமால், திருமுருகன் என்ற நால்வரைத் தானே இந்தப் பாடல் குறிக்கிறது?"

"ஆமாம் மகனே. பாடல்வரிகள் முழுவதும் புரிகின்றனவா?"

"இல்லை அப்பா. சுருக்கமாகப் பொருள் சொல்லுங்கள்"

"எருதினைக் கொடியாகக் கொண்ட தீ போன்ற சடைமுடி கொண்ட எதிர் நிற்க முடியாத மழுப்படையையுடைய நீல மணி போன்ற திருத்தொண்டையை உடைய சிவபெருமானும், கடலில் வளரும் வலம்புரி சங்கைப் போன்ற வெண்ணிறம் கொண்ட திருமேனியை உடையவனும் வெற்றி பெறும் கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனும் பனைக்கொடியை உடையவனும் ஆன பலராமனும், கருமணியைப் போல் திருமேனியின் நிறம் கொண்டவனும் விண் வரை உயர்ந்த கருடக் கொடியைக் கொண்டவனும் பெரும் திறன் கொண்டவனும் ஆன மாயோனும், மயிற்கொடியை உடையவனும் எதிரிகள் இல்லாத வெற்றியை உடையவனும் பிணிமுகத்தை ஊர்தியாகக் கொண்டவனும் ஆன செவ்வேளும் என்று நான்கு கடவுளர்களைச் சொல்கிறது இந்தப் பாடல்"

"திருமுருகாற்றுப்படையில் பலராமனைத் தவிர்த்து மற்ற மூவரைச் சொல்லுவதை ஏற்கனவே படித்திருக்கிறேன் அப்பா. இன்று இந்த நால்வரைப் பற்றிய பாடலை அறிந்தேன்."

"மகிழ்ச்சி. இதோ இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் கடைசி பாடல். புறநானூறு ஐம்பத்தி ஏழாம் பாடல் மாயோனைப் பற்றி பேசுகிறது.

வல்லாராயினும் வல்லுநராயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன்..."


"புரியவில்லையே அப்பா"

"கல்வியே இல்லாதவர்களோ கல்வியில் வல்லவர்களோ புகழ விரும்புபவர்களுக்கு மாயோனின் புகழினைப் பாடுதல் மிக அரிது என்றும் அவ்விருவர்களில் யார் அவனைப் புகழ விரும்பினாலும் அந்த விருப்பம் ஒன்றே அவன் அருளைப் பெறுதற்குப் போதும் என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள் உரையாசிரியர்கள்"

"மாயோனைப் பற்றிய பழந்தமிழ் குறிப்புகளைச் சொன்னதற்கு மிக்க நன்றி அப்பா. இதே போல் மற்ற கடவுளர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று வரும் நாட்களில் சொல்ல வேண்டும்"

"அப்படியே செய்கிறேன் குமரா. அதற்குள் நீயே கொஞ்சம் இலக்கியம் படிப்பதும் நன்று"

Wednesday, August 20, 2008

*நட்சத்திரம்* - அஷ்ட அட்சரம் ஏற்கும் மனது பஞ்ச அட்சரம் பார்க்காது!!!

கடைசியாகப் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்கிறீர்களா? என்ன செய்வது? மனத்தில் இருப்பதை எத்தனை நாட்களுக்குத் தான் மறைத்து வைப்பது? அதனால் வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன்.

எட்டெழுத்துகளை ஏற்றுக் கொண்ட மனது உடனே ஐந்தெழுத்தைத் தள்ளிவிடுவது இயல்பு தானே. இதனை ஏன் மறைக்க வேண்டும்?

என்னடா குமரன் திடீரென்று இப்படி எல்லாம் பேசுகிறானே என்று குழப்பமாக இருக்கிறதா? நண்பர் ஆனந்த் குமார் எழுதியதைப் படித்த பிறகு தோன்றுவது தான் இவையெல்லாம். அப்படி அவர் என்ன எழுதிவிட்டார் என்கிறீர்களா? அவருடைய அனுமதியின்றி அவருடைய இடுகையை இங்கே அப்படியே எடுத்து இடுகிறேன். நீங்களே படித்துப் பாருங்கள்.

****

கட்டையன்: என்னடா ரொம்ப சோகமா வர்றே?

கரட்டாண்டி: எங்கப்பா என் loveக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாருடா

கட்டையன்: எவன்டா இவன்? கமலே love பண்ணா அப்பாவை கண்டுக்காதேனு தசாவதராத்தில சொல்லிருக்காரு.இன்னமும் அப்பாட்ட பர்மிஷன் கேட்டுக்கிட்டு.

கரட்டாண்டி: தசாவதாரத்தில love scenea இல்லையேடா? சாமிய கண்டுக்காதேனுதான எப்பவும் சொல்லுவார். இப்ப அப்பாவையும் கண்டுக்காதேனு சொல்ல ஆரம்பிச்சிட்டாரா? நான் கவனிக்கலையே.

கட்டையன்: இந்த பாட்டு நீ கேக்கலையா? "அஷ்ட அட்சரம் ஏற்கும் மனது பஞ்ச அட்சரம் பார்க்காது".

கரட்டாண்டி: ஆமாம். அது சாமி பாட்டு இல்லையா? இதுல எங்கே love வருது? எங்க அப்பா எங்கே வர்ரார்?

கட்டையன்: ம்ம்.. உங்க அப்பா வேற இந்த பாட்டுல வரனுமா? இந்த பாட்டுக்கு அர்த்த்ம் தெரியுமா உனக்கு?

கரட்டாண்டி: தெரியாதே?

கட்டையன்: I Love You ஏற்கும் மனது Daddyயை பார்க்காது

கரட்டாண்டி: டேய்.. கதை விடாதே.

கட்டையன்: அஷ்ட அட்சரம்னா எட்டு எழுத்து அதாவது எட்டு லெட்டெர்ஸ் . I Love Youல இருக்கர லெட்டெர்ஸ கௌன்ட் பண்ணு. எட்டு லெட்டெர்ஸ் வருதா?

கரட்டாண்டி: ஆமாம்

கட்டையன்:பஞ்ச அட்சரம்னா அஞ்சு எழுத்து அதாவது அஞ்சு லெட்டெர்ஸ். Daddyல இருக்கர லெட்டெர்ஸ கௌன்ட் பண்ணு. அஞ்சு லெட்டெர்ஸ் வருதா? இப்ப கணக்கு சரியா வருதா?

கரட்டாண்டி: அது சரி. அப்ப கமல் I Love You சொல்லலைங்கறதக்காகவா அந்த அடி அடிச்சாங்க.

கட்டையன்: பாட்டுக்கு அர்த்தம் சொன்னா அனுபவிக்கனும். ஆராயக்கூடாது.

***
என்ன? இனிமேல் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு குமரன் பதிவிற்குள் வரக்கூடாது என்று நினைக்கிறீர்களா? அடடா. அப்படியெல்லாம் தப்பா நினைச்சுறாதீங்க. நீங்க வழக்கம் போல வந்து படிச்சுகிட்டே இருக்கணும். நண்பர்கள் சிலர் நகைச்சுவை இடுகை எழுது எழுது என்று வற்புறுத்தியதால் இப்படி ஒரு கடன் இடுகை இட்டிருக்கிறேன். அவ்வளவு தான்.
ஆனந்த் குமார். உங்களிடம் கேட்காமல் எடுத்து இட்டதற்காகக் கோவித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ;-)

*நட்சத்திரம்* - தமிழ் இறைவனுக்கும் முன்னால்...

'ஏன்டா. சீக்கிரம் வெளிய வா. பெருமாள் ஏளறார்'.

'ஏளரார்ன்னா என்னடா?'

'அதுவா. பெருமாள் வீதி உலா வர்றதைத் தான் அப்படிச் சொல்வோம்'

'அப்படியா. நாங்க எல்லாம் சாமி வருதுன்னு சொல்லுவோம்'.

'சரி. சரி. வெளிய வா. நாம் பெருமாளைச் சேவிக்கலாம்'

'சேவிக்கலாமா? அப்படின்னா?'

'தப்பாச் சொல்லிட்டேன். பெருமாளைக் கும்புடலாம் வாடா'

'சரி. என்னடா இது. இவ்வளவு பெரிய கூட்டம் சாமி முன்னாடி போகுது'

'அதுவா. அது பிரபந்த கோஷ்டிடா. சரி. சரி. பெருமாளை நல்லா சேவிச்சுக்கோ...இல்லை...இல்லை...கும்புட்டுக்கோ'.

'சாமிக்கு நல்லா அலங்காரம் பண்ணியிருக்காங்கடா. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. ஏன்டா சாமி இவ்வளவு வேகமா போகுது?'

'அதுவா பிரபந்த கோஷ்டி வேகமா போகுதுல்ல அதான்'

'ஏன்டா. முன்னாடி ஒரு கூட்டம் போச்சு. பின்னாடியும் ஒரு கூட்டம் போகுது. முன்னாடி போன கூட்டமாவது என்னமோ தமிழ்ல பாடிகிட்டுப் போனாங்க. பின்னாடி போறவங்க என்னமோ கத்திக்கிட்டுப் போறாங்களே. யாருடா இவங்க?'

'முன்னாடி போறவங்க பிரபந்த கோஷ்டிடா. ஆழ்வார்கள் பாடின நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் சேவிச்சுக்கிட்டுப் (பாடிக்கிட்டுப்) போறாங்க. பின்னாடி போறவங்க வேத பாராயண கோஷ்டி. வேதங்களை ஓதிக்கிட்டுப் போறாங்க'.

'வேதங்களை ஓதுறாங்களா. அது வடமொழியில இருக்கிறதால எனக்குப் புரியலைன்னு நெனைக்கிறேன். அதான் கத்துற மாதிரி தோணிச்சு. ஆமா. முன்னாடி போறவங்க பிரபந்தம்ன்னு என்னமோ சொன்னியே. அவங்க தமிழ்ல பாடுற மாதிரில்ல இருந்துச்சு?'

'அது தமிழ் தான்டா. ஆழ்வார்கள் பாடுன தமிழ் பாட்டுகளை எல்லாம் நாலாயிர திவ்யப் பிரபந்தம்ன்னு சொல்லுவாங்க'.
'அப்டியா. ஹேய். இவங்களும் ஏன்டா சாமி பின்னாடி ஓடுறாங்க?'

'பெருமாள் பிரபந்த கோஷ்டி பின்னாடி ஓடுறார். வேத பாராயண கோஷ்டி பெருமாள் பின்னாடி ஓடுறாங்க'.

'ஏன் எல்லாரும் ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் ஓடுறாங்க? வேடிக்கையா இருக்கே?'

'அதுவா. எங்க தாத்தாகிட்ட இதைப் பத்திக் கேட்டேன். அவரோட ஆசாரியர் சொன்னதை அவர் எனக்குச் சொன்னார்.

வடமொழி வேதங்கள் தன்னோட சொந்த முயற்சியால பெருமாளைத் தெரிஞ்சுக்க முயற்சி செஞ்ச மகரிஷிகளால் பாடப்பட்டது. அதனால பெருமாளோட முழுப் பெருமையும் பாட முடியாம வேதங்கள் பின்வாங்கிடுச்சாம். ஆழ்வார்கள் பெருமாளாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். அதனால பெருமாளை உள்ளது உள்ளபடி உணர்ந்து பாடல்கள் பாடியிருக்காங்க. அவங்களோட இனிமையான தமிழ்ப் பாடல்களை கேக்கிறதுக்குத் தான் பெருமாள் பிரபந்தம் பாடுறவங்களைத் தொரத்திக்கிட்டுப் போறார். அவரை இன்னும் முழுசாத் தெருஞ்சுக்காத வேதங்களை ஓதுறவங்க அவரைத் தொரத்திக்கிட்டுப் போறாங்க'.

'நல்லா இருக்கே இந்த விளக்கம். எப்படியோ தமிழுக்கு முதலிடம் கெடைச்சா சரிதான்'.

'எங்க வீட்டுல எப்பவுமே தமிழுக்குத் தான்டா முதலிடம். ஏன் அப்படிச் சொல்ற'.

'அத விடு. ஆமா. இந்த போர்டுல உங்க தாத்தா பேருக்கு முன்னாடி என்னமோ உ.வே.ன்னு போட்டிருக்கே? அப்டின்னா என்னடா? திரு.ன்னு போட்டுப் பாத்துருக்கேன். ஆனா இது புதுசா இருக்கே'.

'அதுவா. அது உபய வேதாந்தி அப்படிங்கறதோட சுருக்கம்'.

'அப்டின்னா என்னடா?'

'எங்க ஆளுங்க சமஸ்கிருதத்துல இருக்கிற வேதங்களோட ஆழ்வார்கள் பாடுன திவ்யப் பிரபந்தங்களையும் தமிழ் வேதங்கள்ன்னு சொல்லுவாங்க. உபய வேதாந்தின்னா ரெண்டு வேதங்கள் உடையவர்ன்னு அர்த்தம். வடமொழி வேதங்களை விட தமிழ் வேதங்களுக்கு மதிப்பு கூட. ஆழ்வார் அருளிச்செயல்ன்னு எங்க தாத்தா எப்பவுமே ஆழ்வார் பாட்டுகள் பாடிக்கிட்டே இருப்பார்'

'ஆமான்டா. நானும் கேட்டுக்கேன். அப்ப எல்லாம் ஏதோ பழைய பாட்டாப் பாடுறார்ன்னு நெனைச்சுக்குவேன்.'

'சரி வா. பெருமாள் அடுத்தத் தெருவுக்குப் போயிட்டார். நாம உள்ள போகலாம். படிக்கிறதுக்கு நிறைய இருக்கு'.

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
இருநிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகி
திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாதென்றும்
வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சம்மே


பாடிக்கொண்டே வந்தார் தாத்தா...

Tuesday, August 19, 2008

*நட்சத்திரம்* - நான் தோமா கிறித்தவன் ஆகப் போகிறேன்!!!

எத்தனை பேர் என் அறிவுக்கண்ணைத் திறந்து வைத்த இந்த அற்புதமான ஆய்வினைப் பற்றி படித்தீர்களோ தெரியாது. நட்சத்திர இடுகையாக இதனை இட்டால் இன்னும் நிறைய பேரின் அறிவுக்கண்ணைத் திறக்குமே என்று இங்கே இடுகிறேன்.

மூன்று விதமான 'முழுமுதல் உண்மை'யைப் பற்றி நான் சொல்ல விரும்புகிறேன்.

முதல் வகை முழுமுதல் உண்மை:

வேத உபநிடத பிரம்மசூத்திர கீதைகளிலேயே உலகத்தின் எல்லா அறிவும் அடங்கியிருக்கிறது. வேறு எந்த மொழியிலும் மதத்திலும் இருக்கும் எல்லா அறிவிற்கும் அடிப்படை இந்த நூற்களில் தான் இருக்கிறது. இப்படி ஒரு 'உண்மை' மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதைப் படித்திருக்கிறேன்.

இரண்டாம் வகை முழுமுதல் உண்மை:

உலகத்தில் இருக்கும் தீமைகளுக்கெல்லாம் காரணம் வடமொழி நூற்கள் தான்; எல்லா தீமைகளும் ஆரியர்களிடமிருந்தே வந்தன. உலகத்தில் இருக்கும் எல்லா நல்லவைகளுக்கும் காரணம் தமிழ் நூற்கள் தான்; எல்லா நல்லவைகளுக்கும் அடிப்படை திராவிடர்கள் தான். இப்படி ஒரு 'உண்மை'யும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதைப் படித்திருக்கிறேன்.

இரண்டையும் மிஞ்சும் விதமாக 'உண்மையிலும் உண்மையாக' ஒரு 'உண்மை'யை அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவில் படித்தேன். அவர் எழுதியதை அவருடைய பதிவிற்கே சென்று படிப்பது தான் சரி என்பதால் அந்த நீண்ட கட்டுரைக்கு சுட்டியை மட்டும் இங்கே தருகிறேன். அதனைப் படித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் - நான் தோமா கிறித்தவனாக மாறிவிடவா? அப்படி மாறும் போது நீங்களும் என்னுடன் சேர்ந்து தோமா கிறித்தவனாக மாறிவிடுகிறீர்களா?

இந்த மூன்று விதமான 'முழுமுதல் உண்மை'களில் எந்த உண்மையை நீங்கள் 'மனதார நம்புகிறீர்கள்' என்பதை உங்களிடமே கேட்டுப் பாருங்கள். :-)

*நட்சத்திரம்* - அகலிகைக் கதை சங்க இலக்கியத்திலா? வாய்ப்பே இல்லை!

"நண்பரே. இந்த அகலிகைக் கதை வடநூல்களில் தானே காணப்படுகிறது. இந்தத் தொன்மம் எவ்வளவு தொன்மையானது என்று தெரியுமா?"

"நண்பா. வடமொழிப் புராணங்களும் இதிகாசங்களும் அகலிகைக் கதையைக் கூறுகின்றன என்பது உண்மை தான். ஆனால் அந்தத் தொன்மம் வடநூற்களில் மட்டுமில்லாது தமிழ் இலக்கியங்களிலும் இருக்கின்றன. அதனால் அது மிகத் தொன்மையான ஒரு கதை என்றே சொல்லலாம்"

"பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்க்கும் ஆசையில் பூனை இறங்கியது போல் வால்மீகி வடமொழியில் எழுதிய இந்த இராமாவதாரக் கதையைத் தமிழில் எழுத இறங்கினேன் என்று சொல்லி இராமாவதாரக் காவியம் எழுதினாரே கம்பர் அவர் இலக்கியத்தில் அகலிகைக் கதை வருவதைச் சொல்கிறீர்களா?"

"நீ சொன்னது போல் கம்பநாட்டாழ்வாரின் காவியத்தில் அகலிகைக் கதை வருகின்றது தான். உன் குறிப்பையும் புரிந்து கொண்டேன். அது வடமொழி இதிகாசத்தின் தழுவல் தானே; அதில் அகலிகைக் கதை வருவதில் வியப்பென்ன என்கிறாய். சரியா?"

"ஆமாம். கம்பராமாயணத்தில் அகலிகைக் கதை வருவதில் வியப்பில்லை. வடமொழியாளர்களின் கற்பனைக் கதையான இந்தக் கதை தொன்மையான கதை என்பதற்கு இந்தத் தரவு மட்டும் போதாது"

"ஹாஹாஹா. நான் கம்பரின் இராமாவதாரக் காவியத்தைப் பற்றியே குறிப்பிடவில்லை. நீயாக அதனைத் தான் நான் சொல்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அந்தத் தரவு போதாது என்று சொல்கிறாய். பழந்தமிழ் இலக்கியங்கள் என்று நீயும் ஒப்புக் கொள்ளும் படியான சங்க இலக்கியங்களிலேயே இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

வடமொழி நூற்களை ஆய்ந்த அளவிற்குப் பழந்தமிழ் நூற்களை ஆய்வு செய்யாததால் நிறைய பேருக்கு இதெல்லாம் தெரிவதில்லை. வடமொழி நூற்களை மட்டுமே நோக்கிய பார்வையைக் கொஞ்சம் பழந்தமிழ் இலக்கியம் பயில்வதற்கும் திருப்பு. அப்படிச் செய்தால் இன்னும் பல செய்திகள் தெளிவாகும்"

"சங்க இலக்கியத்திலேயே இருக்கிறதா? பொய் சொல்லாதீர்கள். புராணங்கள் சொல்வதெல்லாம் கற்பனைக் கதைகள். அந்தக் கற்பனைக் கதைகள் சங்க இலக்கியங்களில் இருக்கவே இருக்காது."

"நண்பா. நான் சொல்லுவதை நம்ப இயலாவிட்டால் நீயே படித்துப் பார்க்கலாம் அல்லவா?"

"அதற்கெல்லாம் நேரமில்லை நண்பரே. அகலிகைக் கதை சங்க இலக்கியங்களில் வருகிறது என்பதற்கு ஒரே ஒரு தரவு தாருங்கள். பின்னர் நீங்கள் சொல்லுவதை நம்புகிறேன்"

"சரி தான். தமிழ் இலக்கியங்கள் என்று வந்துவிட்டாலே எல்லோரும் வாழைப்பழ சோம்பேறிகள் ஆகிவிடுகிறார்கள். சரி. நானே பழத்தை உரித்து உன் வாயில் ஊட்டுகிறேன்.

திருப்பரங்குன்றத்தில் இருக்கும் மால்மருகன் திருக்கோவிலின் அருகில் நடைபெறும் நிகழ்ச்சிகளைச் சொல்லி வரும் போது நப்பண்ணனார் இயற்றிய பரிபாடல் தொகுப்பின் பத்தாம் பாடல் அகலிகைக் கதையைப் பேசுகின்றது. அங்கிருக்கும் குரங்குகளுக்கு தின்பண்டங்களைச் சிலர் தருகிறார்கள்; சிலர் யானைகளுக்குக் கரும்புகளைத் தருகிறார்கள்; சிலர் தெய்வீகமான பிரமவித்தையைப் பற்றி பேசுகிறார்கள்; சிலர் குழல் இசைக்கிறார்கள்; சிலர் யாழ் இசைக்கிறார்கள்; சிலர் வேள்வியின் பெருமைகளைச் சொல்கிறார்கள்; சிலர் முரசுகளை ஒலிக்கிறார்கள்; சிலர் முறைப்படி வானத்தில் வரும் விண்மீன்களையும் இருசுடர்களையும் கொண்டு வகுக்கப்பட்ட கலையை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்; இப்படி இருக்கும் போது காமனும் இரதியும் போன்ற இளையவர்கள் அசையாது அமர்ந்து இவற்றை எல்லாம் நோக்குகிறார்கள். அவர்கள் அப்படி அசையாது இருப்பது எப்படி இருக்கின்றதென்றால் - இந்திரன் பூனையாக இருக்கும் போது கவுதமன் சினம் கொள்ள அதனால் அகலிகை கல்லுருவாகி நின்றாளே - அது போல இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்."

"இந்த விளக்கம் எல்லாம் சரி தான். பாடலைச் சொல்லுங்கள். அந்தப் பாடல் வரிகள் இதனைத் தான் சொல்கிறதா இல்லை நீங்கள் உரை செய்யும் போது மாற்றிவிட்டீர்களா என்று அப்போது தான் அறியலாம்"

"என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா அன்றி பழந்தமிழர் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா தெரியவில்லை. பாடல் வரிகளைச் சொல்கிறேன். கேள்.

குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்
கரும்பு கருமுகக்கணக்கு அளிப்போரும்
தெய்வப் பிரமம் செய்குவோரும்
கைவைத்து இமிர்பு குழல் காண்குவோரும்
யாழின் இளிகுரல் சமம் கொள்வோரும்
வேள்வியின் அழகியல் விளம்புவோரும்
கூர நாண்குரல் கொம்மென ஒலிப்ப
ஊழுற முரசின் ஒலி செய்வோரும்
என்றூழ் உற வரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவாரும்
இரதி காமன் இவன் இவள் எனாஅ
விரகியர் வினவ வினாவிறுப்போரும்
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக் கல்லுரு
ஒன்றிய படி இதென்று உரை செய்வோரும்

இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டறிவுறுத்தவும்
நேர்வரை விரியறை வியலிடத்திழைக்கச்
சோபன நிலையது துணி பரங்குன்றத்து
மாஅல் மருகன் மாட மருங்கு
..."

"எனக்குப் புரியக்கூடாது என்றே வேகவேகமாகச் சொல்லிவிட்டீர்கள். இதில் இந்திரன், அகலிகை என்றெல்லாம் இருப்பது நீங்கள் சொல்லும் போது கேட்டது. ஆனால் இது அகலிகைக் கதையைத் தான் சொல்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?"

"நன்றாய் கேட்டாய் நண்பா. அகலிகைக் கதையில் கவுதமன் திரும்பி வரும் போது இந்திரனின் நிலை என்ன என்று நினைவிருக்கிறதா?"

"கவுதமன் வருவதைக் கண்டவுடன் இந்திரன் பூனை வடிவம் எடுத்து நிற்பானே அதனைச் சொல்கிறீர்களா?"

"ஆமாம். அதனைத் தான் இங்கே இந்தப் பாடலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இந்திரன் பூசை - இந்திரன் பூனையாக நின்றான்; இவள் அகலிகை - இந்தப் பெண் அகலிகை; இவன் சென்ற கவுதமன் - இவன் குளிக்கச் சென்ற கவுதமன்; அந்தக் கவுதமன் சினம் கொள்ள அகலிகை கல்லுரு கொண்டது போல் இவர்கள் நிலை. இப்படித் தெளிவாக அகலிகைக் கதை சொல்லப்பட்டிருக்கிறது"

"அதெல்லாம் சரி. இந்திரன் பூனையாக இருந்ததை இந்தப் பாடல் சொல்கிறதென்றே வைத்துக் கொள்வோம். அகலிகை கல்லானதைச் சொல்லும் இந்தப் பாடல் இந்திரன் பெற்ற சாபத்தைப் பற்றி சொல்கிறதா?"



"இந்திரன் பெற்ற சாபத்தைப் பற்றி இந்தப் பாடல் சொல்லவில்லை நண்பா. ஆனால் பரிபாடலில் இன்னொன்று சொல்கிறது. குன்றம்பதனார் இயற்றிய ஒன்பதாம் பாடல் அது. செவ்வேளின் மனைவியைப் பற்றி குறிப்பிடும் போது அவள் இந்திரன் மகள் என்பதைக் குறிக்க "ஐயிரு நூற்று மெய்ந்நயனத்தவன் மகள்" என்று சொல்கிறது. இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் கண்களை உடையவன் என்ற குறிப்பு அகலிகைக் கதையில் இந்திரன் பெற்ற சாபத்தைக் குறிக்கிறது. சரியா?"

"சரி தான். இன்னும் என்ன என்னவோ பிரமவித்தை, வேள்விகளின் பெருமை, கோள் நிலைக் கலை என்றெல்லாம் சொன்னீர்களே. அவற்றைப் பற்றியும் இங்கே சொல்லியிருக்கிறதா?"

"சொல்லியிருக்கிறது நண்பா. நீயே ஒரு முறை இந்தப் பத்தாம் பாடலைப் படித்துப் பார். தெரியும்"

"கடைசியாக ஒன்று. முருகன் திருமாலின் மருகன் என்று சொன்ன கதையெல்லாம் இடைக்காலத்தில் தமிழ்க்கடவுளான முருகனைத் தங்களுக்குரியவன் ஆக்கிக் கொள்ள வைணவ வடக்கத்தியர் செய்த சூழ்ச்சி தானே. நீங்களும் பொருள் சொல்லும் போது மால் மருகன் என்று சொன்னீர்களே. வலிந்து நீங்களே சொன்னது தானே"

"அடடா. என்ன ஒரு அவநம்பிக்கையும் அரைகுறை ஆராய்ச்சியும்! இலக்கியங்களைப் படிக்காமலேயே மனத்திற்குத் தோன்றியபடி எல்லாம் போகிற போக்கில் இப்படி சொல்லிச் செல்கிறார்கள் சில பேர். அவர்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி என்றும் வேறு சிலர் போற்றுகிறார்கள். எல்லாம் சங்க இலக்கியங்களைப் பெரும்பான்மையோர் கற்காததால் வரும் விளைவுகள்.

நான் வலிந்து இதனைச் சொல்லவில்லை. நீயே இந்த பரிபாடலை நேரடியாகப் படித்துப் பார்த்துக் கொள். மிக மிகத் தெளிவாக பரங்குன்றத்து மால் மருகன் மாடம் என்று திருப்பரங்குன்றம் கோவிலைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். முருகனை மால் மருகன் ஆக்கியது பிற்காலத்தவர் சூழ்ச்சி என்றால் இங்கே சொல்லப்படும் மால் மருகன் யாரோ? திருப்பரங்குன்றத்துக் கோவிலும் எவருடையதோ?



அது மட்டுமில்லை நண்பா. கச்சியப்பர் கந்த புராணம் எழுதும் காலம் வரை முருகனுக்கு வள்ளி என்ற மனைவி மட்டுமே உண்டு; இந்திரன் மகளான தேவசேனையை அவனுக்கு முதல் மனைவியாக்கியது ஆரியர் சூது என்று சொல்லுவோரும் உண்டு. அவர்கள் இந்தப் பரிபாடலை எல்லாம் படித்ததில்லை போலும். இந்த ஒன்பதாம் பாடலில் மிகத் தெளிவாக செவ்வேளின் மனைவி தேவசேனை என்றும் அவள் இந்திரனின் மகள் என்றும் சொல்லியிருக்கிறது. திருமுருகாற்றுப்படையில் தேவசேனையாம் தெய்வயானையின் பெயர் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை; ஆனால் அங்கும் திருப்பரங்குன்றத்தைப் பற்றி பேசும் போது 'மறு இல் கற்பின் வாணுதல் கணவன்' என்று 'இரு சாராரும் முன் நின்று நடத்த நடந்த திருமணத்தினால் அமைந்த மனைவி' என்று தேவசேனையின் பெயர் குறிப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நேரடியாகச் சொல்லியிருந்தாலும் சரி; குறிப்பாகச் சொல்லியிருந்தாலும் சரி; நாங்கள் சொல்வதே சரி. தரவுகளைப் பார்க்கமாட்டோம் என்றிருப்பவர்களை என்னவென்று சொல்வது?

ஒன்றை மட்டும் கடைசியாகச் சொல்லிக் கொள்கிறேன். நல்லதென்று நாம் இன்று நினைப்பவை எல்லாம் எல்லாக் காலத்திலும் நல்லவையாகவே நினைக்கப்பட்டவை இல்லை; கெட்டதென்று நாம் இன்று நினைப்பவையும் அப்படியே.

அதே போல் நல்லவை என்று நாம் இன்று நினைப்பவை மட்டுமே நமக்குரிய்வை; நாம் கெட்டது என்று நினைப்பவை எல்லாம் அந்நியர்கள் கொண்டு வந்து நுழைத்தவை என்று நினைப்பதும் அறிவுடைமை ஆகாது. நல்லதும் கெட்டதும் எல்லா வகையினரிடமும் உண்டு. முடிந்தவரையில் விருப்பு வெறுப்பின்றி ஒன்றை நோக்கக் கற்றுக் கொள்வதே நல்லது."

*நட்சத்திரம்* - தமிழா? ஆரியமா?

இந்தக் கேள்வி என் முன் அடிக்கடி வைக்கப்படுகிறது. தமிழார்வம் கொண்டவர்கள் எல்லாருக்கும் வடமொழி பிடிக்காது; பிடிக்கக்கூடாது என்ற ஒரு எண்ணம் தமிழக மக்களிடம் இருக்கிறது. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. தனித்தமிழ் இயக்கத்தின் பின், வடமொழியின் மேல் ஒரு இனம் தெரியாத வெறுப்பு தமிழர்களிடம் இருப்பதாய் தோன்றுகிறது. வடமொழியை வெறுக்காத தமிழார்வலர்களும் வடமொழியைக் கற்கவோ அதில் சொல்லப்பட்டிருப்பதை மொழிபெயர்ப்பின் மூலம் படிக்கவோ அவ்வளவாய் விருப்பம் இல்லாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். அதனால் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பவர்கள் ஒரு அர்த்தத்துடன் தான் கேட்கிறார்கள்.

இந்தக் கேள்விக்குப் பதில் கூறும் போது என் பின்புலத்தைக் கூறுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தமிழ்மணத்திலும் சில நண்பர்கள் இந்தக் கேள்வியை நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்டிருக்கிறார்கள். அதனால் என் பதிலை இங்கும் பதிவாய் இடுகிறேன்.

மதுரைவாழ் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் சௌராஷ்ட்ரர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் தமிழல்லாத ஒரு மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டுள்ள ஒரு குழுவினர். இவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தாலும், மதுரையில் தான் பெரும்பான்மையினராய் வசிக்கின்றனர். வீட்டில் சௌராஷ்ட்ரத்தில் பேசினாலும், வெளியே தமிழில் பேசி நிறைய பேர் மிக்கத் தமிழார்வத்துடன் நிறையத் தமிழ் தொண்டு ஆற்றிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குத் தமிழ் இரண்டாம் தாய்மொழி. தமிழனாய்ப் பிறந்து தமிழனாய் வாழும் ஒரு தமிழனுக்கு இணையான தமிழ்ப்பற்று இந்த மக்களிடம் காணலாம்.

நான் பிறந்தது ஒரு சௌராஷ்ட்ர குடும்பத்தில் தான். வீட்டில் இப்போதும் சௌராஷ்ட்ரத்தில் தான் பேசிக்கொண்டிருக்கிறேன். தமிழில் உள்ள ஆர்வம் போல் சௌராஷ்ட்ரர்களுக்கு ஆன்மிகத்தில் பெரும் ஆர்வம். நான் பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியில் படிக்கும் போதும் என் நண்பர்களுடன் பொழுது போகவில்லையென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குத் தான் போவோம். வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது சென்று விடுவோம். அந்த ஆன்மிக ஈடுபாடும் தமிழார்வமும் தான் சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கியங்களைப் படிப்பதில் என் கவனத்தைச் செலுத்தியது. நான் நான்கு வயதாக இருக்கும் போதே கந்தர் சஷ்டி கவசத்தை மனப்பாடமாகச் சொல்வேன் என்று என் பெற்றோர்களும் மற்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள். உறவினர்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்டது எனக்கும் சற்று நினைவிருக்கிறது. அப்படி தமிழில் ஏற்பட்ட ஈடுபாடு எனக்குத் தமிழ் சொல்லித்தந்த ஆசிரியர்களாலும் வளர்ந்தது.

ஏழாம் வகுப்பில் எனக்குத் தமிழ் சொல்லித்தந்தவர் சுரேந்திரன் ஐயா அவர்கள். தமிழை எவ்வளவு அழகாகச் சொல்லிக்கொடுக்க முடியும் என்பதை அவரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அவர் ஒரு சௌராஷ்ட்ரர். நிறைய பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு 'பட்டிமன்றத் தென்றல்' என்றப் பட்டம் பெற்றவர்.

பின்னர் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை எனக்குத் தமிழாசிரியராய் வந்தவர் சக்திவேல் ஐயா. தமிழர். தமிழின் அழகை, தமிழின் இனிமையை சுரேந்திரன் ஐயா சொல்லிக் கொடுத்தார் என்றால், தமிழின் நுண்மையை தமிழின் பழமையை மற்றவர் தமிழில் செய்யும் தவறுகளை மிக நன்றாய்ச் சொல்லித்தந்தவர் சக்திவேல் ஐயா. இவர்கள் இருவருமே என் மேல் தனிப்பாசம் கொண்டு என் சந்தேகங்களுக்கு எல்லாம் மிகத் தெளிவாய் விளக்கம் கூறி என் தமிழறிவை நன்கு வளர்த்தார்கள்.

ஆன்மிகத்தில் எனக்கு இருந்த ஈடுபாடு சமஸ்கிருதத்தில் உள்ள புத்தகங்களைப் படிப்பதில் எனக்கு ஆர்வத்தை ஊட்டியது. சிறிது சிறிதாக சமஸ்கிருதத்தின் அழகையும் அனுபவிக்க ஆரம்பித்தேன். தமிழை முறையாகப் பள்ளியில் கற்றது போல் வடமொழியைக் கற்கவில்லை. தமிழிலோ ஆங்கிலத்திலோ மொழிபெயர்ப்புடன் கூடிய வடமொழி புத்தகங்களையே படித்தேன். அப்படிப் படித்ததில் வடமொழியில் சிறிது புலமை ஏற்பட்டது. வடமொழி ஆர்வம் சில புதிய நண்பர்களைக் கொண்டுவந்து சேர்த்தது. இப்படி நம் நாட்டின் செம்மொழி இரண்டின் மேலும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.

இந்தப் பின்புலத்தின் என்னிடம் கேட்கப்படும் 'உனக்கு தமிழ் அதிகமாய்ப் பிடிக்குமா? சமஸ்கிருதம் பிடிக்குமா?' என்ற கேள்விக்கு நான் கூறும் பதில், 'எனக்கு இரண்டு மொழிகளும் இரண்டு கண்களைப் போன்றவை. கண்களில் எதை அதிகமாய்ப் பிடிக்கும் என்று சொல்வது. இரண்டும் பிடிக்கும்' என்பதே.

சில நண்பர்களால் இந்தப் பதிலை ஏற்றுக்கொள்ள முடிகிறது. சில நண்பர்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் பார்த்திருக்கிறேன். வடமொழியே மூத்த மொழி; முதன்மையான மொழி; உயர்ந்த மொழி என்ற எண்ணம் கொண்ட நண்பர்களுக்கு தமிழை வடமொழிக்கு இணையாக நான் கூறுவது பிடிப்பதில்லை. தமிழில் ஈடுபாடு கொண்டு வடமொழியை வெறுக்கக் கற்றுக்கொண்ட நண்பர்களுக்கு வடமொழியை தமிழுக்கு இணையாக நான் சொல்வது பிடிப்பதில்லை. ஆனால் அதற்கு நான் என்ன செய்வது? எனக்கு இரண்டும் பிடித்திருக்கிறது. மதுரையில் பிறந்தததால் தமிழார்வம் வந்தது. சௌராஷ்ட்ரனாய்ப் பிறந்ததால் வடமொழியின் மேல் வெறுப்பு வரவில்லை. ஆன்மிகம் வடமொழியையும் கற்றுக்கொள்ள வைத்தது.

தமிழை விரும்பி வடமொழியை வெறுக்கும் ஒரு நண்பர், என்னிடம் ஒரு முறை இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு நான் சொன்ன 'இரண்டும் இரு கண்கள்' என்ற பதிலுக்குப் பின், 'சரி. அதில் வலக்கண் எது? இடக்கண் எது?' என்று கேட்டார். நான் அந்தக் கேள்வியில் உள்ள விவகாரத்தை அறியாமல் 'தமிழ் வலக்கண். ஆரியம் இடக்கண்' என்றேன். 'அப்படியென்றால் நீ வடமொழியை விட தமிழைத் தான் அதிகம் நேசிக்கிறாய்' என்று சொல்லிவிட்டார். நான் வாயடைத்து நின்றேன். உண்மை தானே?!

Monday, August 18, 2008

*நட்சத்திரம்* - இராமனா கிருஷ்ணனா யார் கருணை வேண்டும்?



நீரில் மூழ்கும் போது நீச்சல் தெரியாதவன் எப்படித் தவிப்பானோ அப்படிப்பட்ட தவிப்பு இருந்தால் இறையை உடனே உணரலாம் என்று அறிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். குறைவற்ற அன்பு மட்டுமே துணையாகக் கொண்டு நீரில் மூழ்கி மூச்சுத் திணறும் ஒரு மீனவ பக்தனுக்காக அன்னை காட்சி கொடுப்பதை மிக நன்றாக 'ஆதிபராசக்தி' திரைப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தவிப்பு கொள்வதை 'ஆர்த்தி' என்று சொல்வது வழக்கம். இனி மேலும் தாங்காது; நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன; ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கழிகிறது; உன் கருணைக்காக வேண்டி நிற்கிறேன்; வருவாய் வருவாய் வருவாய் என்று ஏங்கி அழைக்கும் ஆர்த்திப் பிரபந்தமாக இருக்கும் நாயகி சுவாமிகளின் பாடல்கள் பலவற்றில் ஒன்றை இங்கே தருகிறேன்.

இந்தப் பாடலை டி.எம்.எஸ். பாடி இங்கே கேட்கலாம். இந்த இடுகையில் சௌராஷ்ட்ரப் பாடலின் வரிகளையும் அதனைத் தொடர்ந்து அடியேன் செய்த தமிழாக்கத்தையும் தருகிறேன். ஒரே மெட்டில் இரண்டு மொழிப் பாடல்களையும் பாடலாம் என்று நினைக்கிறேன். யாரேனும் அதே மெட்டில் தமிழ்ப்பாடலைப் பாடித் தந்தால் அதனை இங்கே சேர்த்துவிடுகிறேன்.


ராமா க்ருப ஸாரே ராக் ஸோட் ரே ஸ்ரீ
ராமா க்ருப ஸாரே (ராமா)

இராமா கருணை செய்வாய் சினம் விடடா ஸ்ரீ
இராமா கருணை செய்வாய் (இராமா)

ராமா க்ருப ஸாரே ப்ரேம ஹோர் அவிகிநு
தே தொர் பதாலுநு தூஸ் மொக் கதி ஸ்ரீ (ராமா)

இராமா கருணை செய் அன்புடன் வந்திங்கு
தா உன் பாதங்கள் நீயே கதி எனக்கு ஸ்ரீ (இராமா)

திந்நூ ஜேடரேஸி தேவு கோ
திந்நூ ஜேடரேஸி
திந்நூ கோ ஜேடரேஸ் மொந்நு தொவி மொர
மொந்நும் அவி மொந்நு துவெ மொதி காரி ஸ்ரீ (ராமா)

நாட்கள் போகின்றன தேவா வீணே
நாட்கள் போகின்றன
நாட்கள் வீணாகின்றன மனம் வைத்து எனது
மனத்தில் வந்து மனம் வெண் முத்தாய் செய் ஸ்ரீ (இராமா)

காய் கரு மீ யேடு ஏ கர்முனுக்
காய் கரு மீ யேடு
காய் கரு மீ யேடு மாய் பாப் மொக் கோநுரே
ஸாய் தூத் லொநி சொரே ரெங்க ஸாயி க்ருப ஸாரே (ராமா)

என்ன செய்வேன் நான் இங்கே இந்த வினைகளை
என்ன செய்வேன் நான் இங்கே
என்ன செய்வேன் நான் இங்கே அன்னை தந்தை எனக்காரடா
ஆடைப் பால் வெண்ணெய் தின்ற ரெங்கசாயி கருணை செய்வாய் (இராமா)


கெடோ செர்சிலேரே க்ருஷ்ணா க்ருஷ்ணா செனம்
கெடோ செர்சிலேரே க்ருஷ்ணா
கெடோ செர்சிலே நமம் படன கர்யாஸ்தெங்கோ
வடபத்ரஸாயி ஹொய் அவெ நடனகோபாலா (ராமா)

கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா கிருஷ்ணா விரைவாய்
கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா
கரை சேர்த்துக் கொள் நாமம் பாடிக் கொண்டிருப்பவர்களை
வடபத்ரசாயி ஆகி வந்த நடனகோபாலா (இராமா)



ஆழ்வார்கள் கண்ணன் செய்ததை இராமன் செய்ததென்றும் நரசிம்மனைப் பாடும் போது நடுவில் இராமனையும் கண்ணனையும் பாடியும் அவதாரங்களில் முன் பின்னாக நிகழ்ச்சிகளைக் கொண்டு சென்று உருகுவார்கள். ஆழத் தொடங்கி உருகிவிட்டால் இப்படித் தான் நிகழும் போலிருக்கிறது. பத்தொன்பதான் நூற்றாண்டின் சௌராஷ்ட்ர ஆழ்வாருக்கும் அப்படியே நடக்கிறது.

சினத்தை விடடா இராமா என்று கெஞ்சித் தொடங்கியவர் உன் பாதங்களே கதி என்று சரணம் அடைந்து, 'உன் அருளாலே உன் தாள் வணங்கி' என்று அருளாளர்கள் சொன்னது போல் நீயே மனம் வைத்து என் மனத்தில் வந்திருந்து என் மனத்தைத் தூய்மை செய் என்று பாடுகிறார். நடுவில் கரும வினைகளைப் பற்றி நொந்து கொண்டு என் தாயும் தந்தையுமான ரங்கசாயி நீயே கருணை செய் என்று இராமனிடமிருந்து அந்த இராமன் வணங்கிய அரங்கனிடம் தாவிவிடுகிறார்.

திருவரங்கனைப் பாடியவுடன் கண்ணனின் உருவாக நிற்கும் அழகிய மணவாளன் திருவுருவம் நினைவில் ஆடியது போலும். அதனால் திருவரங்கனைப் பாடும் போதே வெண்ணெய் களவு செய்து உண்ட வாயனையும் பாடிவிடுகிறார். அப்போது தானே இறுதியில் கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா கிருஷ்ணா என்று உருகி அழைக்க முடியும்.

இராமனாய், அரங்கனாய், கண்ணனாய் வந்தவனே தன் குருவான வடபத்ரஸாயி ஜீயராகவும் வந்தார் என்று குருவின் கருணையே தலையாயது என்று நிறைவு செய்தார். நாயகி சுவாமிகளுக்கு வடபத்ரார்யராக வந்து அருள் செய்த நடனகோபாலா! நீயே எங்களுக்கும் கருணை செய்ய வேண்டும்!

*நட்சத்திரம்* - வெண்மதி வெண்மதியே நில்லு...

'மாம்ஸ். இந்தப் பாட்டைக் கேட்டியா?'

'எந்தப் பாட்டு ராம்ஸ்?'

'அதான். வெண்மதி வெண்மதியே நில்லு. நீ வானமா மேகத்துக்கா சொல்லு. வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்'

'அருமையாப் பாடறே. நானும் இந்தப் பாட்டு கேட்டுருக்கேன். நல்ல பாட்டு தான்'.

'என்ன நல்ல பாட்டுன்னு சொல்லி நிறுத்திக்கிட்டே. அருமையான பாட்டு இது'

'சரி. அருமையான பாட்டு தான். ஒத்துக்கறேன். ஏன் அருமையான பாட்டுன்னு சொல்றியா?'

'பாட்டோட அர்த்தத்தைப் பாரு. அந்த வரிகளோட அர்த்தம் தெரிஞ்சா இது எவ்வளவு அருமையான பாட்டுன்னு ஒத்துக்குவே'

'அப்டியா. சரி. வரிகளோட பொருளைச் சொல்லு. கேட்டுக்கறேன்'.

'ஒரு காதலன் காதலிக்கிட்ட சொல்ற மாதிரி இந்தப் பாட்டு வருது மாம்ஸ். அந்தப் பொண்ணை ரெண்டு பேரு காதலிக்கிறாங்க. இவனுக்கு அவ யாரைக் காதலிக்கிறான்னு தெரியல. அதான் அந்தப் பொண்ணை வெண்மதின்னு சொல்லி நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லுன்னு கேக்கறான். தன்னை மேகம்ன்னும் அடுத்தவனை வானம்ன்னும் சொல்றான்'.

'சரி. அப்புறம்'.

'நீ அவனைத் தான் காதலிக்கப் போற; என்னை இல்லைன்னா பரவாயில்லை. அத நான் பொறுத்துக்குவேன் அப்படின்னு சொல்றான்'.

'அப்படியா சொல்றான். எனக்கு அப்படி தோணலையே.'

'பின்ன வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் அப்படின்னா என்ன அர்த்தம்?'

'எனக்குத் தெரிஞ்ச மாதிரி பொருள் சொல்றேன் ராம்ஸ். கோவிச்சுக்கக் கூடாது'.

'கோவிச்சுக்க மாட்டேன். சொல்லு மாம்ஸ்.'

'தன்னை மேகம்ன்னும் அடுத்தவனை வானம்ன்னும் பொண்ணை நிலவுன்னும் சொல்றது தான். இந்தப் பாட்டை எழுதுன கவிஞர் ஒரு உட்பொருள் வச்சிருக்கார். நாம இங்க இருந்து பார்த்தா வானத்துல இருக்கிற வெண்மதியை மேகம் மூடுற மாதிரி தெரியுது இல்லையா?'

'ஆமாம்.'

'ஆனா உண்மையிலேயே மேகம் நம்ம பூமிக்கு மேல இருக்கிற காற்று மண்டலத்துல இருக்கு. மதி ரொம்ப தூரத்துல இருக்கு. வானம் என்கிறதோ இல்லவே இல்லை. அது அகண்ட வெட்ட வெளி. அதனால நிலா வானத்தைத் தான் பிடிக்கும்ன்னு சொன்னாலும் மேகத்துக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஏன்னா வானம் தான் உண்மையிலேயே இல்லையே. இல்லாத ஒரு பொருளை பிடிச்சாலும் அதை அடைய முடியாது இல்லியா. அது போல நீ அவனை விரும்பினாலும் எனக்குத் தான் சொந்தம்ன்னு சொல்றான்.'

'பரவாயில்லையே. இந்த அர்த்தம் நல்லாத் தான் இருக்கு'.

'அப்டியா. இதுக்கும் மேல ஒரு பொருளும் கவிஞர் வச்சிருக்கார்'

'என்ன பொருள் அது?'

'அந்தக் காதலனுக்கும் தெரியாத ஒரு பொருளை மறைமுகமா கவிஞர் இந்தப் பாட்டுல வச்சிருக்கார். வானம் உண்மையில் வெட்டவெளிதான். அதனால் வானத்துக்கு வெண்மதி சொந்தமாக முடியாது. ஆனால் மேகமும் பூமியைச் சுற்றியுருக்கும் காற்று மண்டலத்தை விட்டு வெளியே இருக்க முடியாது. அதனாலும் நிலவை அடைய முடியாது. அதனால் அந்தப் பெண் இந்தக் காதலனுக்கும் கிடைக்க மாட்டாள் என்பதைத் தான் உட்பொருளா வச்சிருக்கார் கவிஞர்.'

'ஐயோ. மாம்ஸ். ஓவரா அர்த்தம் சொல்றியே. ரொம்ப எளிமையா இருக்கிற இந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல்ல ஒன்கிட்ட வந்தேனே. என்னைச் சொல்லணும்'.

'ஏன் ராம்ஸ்? இந்தப் பொருளுக்கு என்ன குறை?'

'என்ன குறை? ஒரு குறையும் இல்லை. அந்தப் பாட்டைப் பாடுன கவிஞரே இந்த அர்த்தத்தை யோசிச்சிருப்பாரோ இல்லையோ. நீ என்னடான்னா வெளிப்படையாத் தெரியுற அர்த்தத்தை விட்டுட்டு ஏதேதோ சொல்லிக்கிட்டுப் போற?'

'ராம்ஸ். நீ தமிழ்மணம் பாக்குறதில்லைன்னு நெனைக்கிறேன். அதுல குமரன்னு ஒருத்தர் பாட்டுக்கெல்லாம் பொருள் சொல்லிக்கிட்டு இருக்கார். அவர் எழுதுறதைப் படிச்சு படிச்சுத்தான் இந்த மாதிரி எல்லாம் தோண ஆரம்பிச்சிருச்சு.'

'ஐயோ. நல்லவேளை சொன்ன. நான் ஜன்மத்துக்கும் அவர் எழுதுறதப் படிக்க மாட்டேனே. பைத்தியம் புடிச்சிரும்'

*நட்சத்திரம்* - இந்த வார முன்னோட்டம்: எதிர்பார்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

போன வாட்டி தமிழ்மண நாட்காட்டியா (விண்மீனா) இருந்தப்ப பல்சுவையா இடுகைகள் இட்டதா நினைவு. இந்தவாட்டியும் அப்படியே எழுதலாம்ன்னு ஆசை இருந்தாலும் போன தடவை மாதிரி தமிழ்மணமே கதின்னு இந்த வாரமும் இருந்தா கட்டாயம் மணமுறிவும் வேலை இழப்பும் நடக்கும்ங்கறதால கொஞ்சம் அடக்கித் தான் வாசிக்கணும்ன்னு நினைக்கிறேன். இந்த வாரம் தமிழ்மண நாட்காட்டி வாய்ப்பு கிடைக்கப் போகும் தகவல் போன வாரம் செவ்வாய் அன்னைக்குத் தான் தெரிஞ்சது. அதனால நிறைய ஆயத்தமும் செய்ய முடியலை. மேலோட்டமா ஒரு திட்டம் இருக்கு. அந்தத் திட்டத்தை இங்கே தர்றேன். அது படியே, அந்த வரிசையிலேயே இடுகைகள் வரும்ன்னு சொல்ல முடியாது.

1. 'கேட்டதில் பிடித்தது' தலைப்புல ஒரு திரைப்படப் பாட்டு.
2. பரிபாடலின் அறிமுகமா அந்த சங்க இலக்கியத் தொகுப்பில இருந்து சில பாடல் வரிகள்
3. சங்க இலக்கியத்தில் அகலிகைக் கதை
4. சௌராஷ்ட்ரப் பாடல் ஒன்று
5. கண்ணன் என்னும் கருநிறக் கடவுள்
6. பழந்தமிழ் ஆய்வு ஒன்று - இன்னும் இதுக்கு ஆராய்ச்சியைத் தொடங்கலை - அதனால தலைப்பு என்னன்னு இப்ப சொல்றதா இல்லை. :-)
7. சங்க இலக்கியத்தில் இராவணன்
8. மதுரையைப் பற்றி ஒரு இடுகை
9. சங்க இலக்கியத்தை உரையுடன் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
10. அபிராமி அந்தாதி நிறைவு - இரவிசங்கரின் சிறப்பு இடுகை

இந்தப் பட்டியலைப் பத்தி இரவிசங்கர்கிட்ட சொல்லாம இந்த வாரம் சங்க இலக்கிய வாரம்ன்னு மட்டும் சொன்னதுக்கு அவருடைய எதிர்பார்ப்புகள்ன்னு ஒரு பட்டியல் கொடுத்தாரு. அந்த பட்டியல் இதோ:

1. இயல் + இசை + நாடகம் = ஆய்ச்சியர் குரவை
2. சங்கப் புலவர்கள் - சிறு அறிமுகம்
3. சங்க இலக்கியத்தில் வெளிநாடுகளைப் பற்றிய குறிப்புகள்
4. சங்க இலக்கியத்தில் இருந்து சிறுகதைகள்
5. சங்க இலக்கியத்தில் காதலர் திருவிழா

இதுல ஒவ்வொன்னும் எழுத எனக்கு குறைஞ்சது ஒரு வாரமாவது ஆகும். அதனால இந்த வாரம் இந்தத் தலைப்புகள் கிடையாது. வருங்காலத்துல பார்க்கலாம். இந்தப் பட்டியலைப் பார்த்தா இரவிசங்கரோட வருங்கால இடுகைகளோட முன்னோட்டம் போலவும் இருக்கு.

இந்த வாரம் என்ன இடுகைகள் வரும்ன்னு உங்க எதிர்பார்ப்புகளையும் சொல்லுங்க. எல்லாத்தையும் நிறைவேத்த முடியாட்டியும் எதாவது சுளுவா இருந்தா அதனை இந்த வாரப் பட்டியல்ல சேர்த்துக்கறேன். :-)

Sunday, August 17, 2008

*நட்சத்திரம்* - இராம.கி. ஐயா, டோண்டு ஐயா, துளசியக்கா, சிந்தாநதி வரிசையில் நானா?


உண்மையாவா? சும்மா விளையாடாதீங்க. உண்மையே தானா? அட போங்க நீங்க வேற. இன்னும் எம்புட்டு பேரு காத்திருக்காங்க. ஏற்கனவே நான் ஒரு தடவை இந்த விளையாட்டை விளையாடியாச்சு. காத்திருக்கிறவங்கள்ல ஒருத்தரைக் கூப்புட்டு ஆடவிடுங்க. என்ன சொல்றீங்க? நான் விளையாடுனதை நீங்க பாக்கலையா? அதனால நான் இன்னொருக்கா ஆடுனா உங்களுக்கு ஒப்புதல் தானா? சரியா போச்சு போங்க. இப்படி சொன்னா வந்த வாய்ப்பை விடுவேனா? விடறதுக்கு நான் என்ன மடையனா?

உங்களுக்கு ஒப்புதல்னா எனக்கும் ஒப்புதல் தானுங்க. என்னங்க இது நீங்களும் இதையே சொல்றீங்க? நான் சொன்னதையே நீங்களும் திருப்பி சொன்னா எப்படி? அட நிறுத்துங்க. நாம இதையே திருப்பித் திருப்பி சொல்லிக்கிட்டு இருந்தா முடிவே இருக்காது. கடைசியா என் முறை இப்ப. கேட்டுக்கோங்க. உங்களுக்கு ஒப்புதல்னா எனக்கும் ஒப்புதல் தான். இந்த வாரம் தமிழ்மணம் விண்மீனா நான் இருந்துக்கிறேங்க.

***

ஆமாங்க ஐயா. அவிங்ககிட்ட இப்படி ஒத்துக்கிட்டு தாங்க இப்ப இந்த விளையாட்டை ஆட வந்திருக்கேன். முந்தி ஒருக்கா 2006 ஜனவரில ஆடறப்ப நீங்க தந்த ஆதரவை இந்த வாரத்துலையும் தரணும்ன்னு வேண்டிக்கிறேங்க. இதுக்கு முன்னாடி இந்த ஆட்டத்தை ரெண்டு தடவை ஆடுன பெரிய மனுசங்க இருக்காங்கன்னு தெரியும். அதான் அவிங்க யாருன்னு பாத்து அந்தப் பட்டியலைத் தலைப்புல போட்டிருக்கேங்க. இவிங்க நாலு பேரு ரெண்டாவது ஆட்டம் படம் பாத்திருக்காங்கன்னு தெரியும். அஞ்சாவதா எனக்கு இந்த வாய்ப்பு வந்திருக்குன்னு நினைக்கிறேன். நான் அஞ்சாவதா ஆறாவதா ஏழாவதா எட்டாவதான்னு நீங்க தான் சொல்லணும். என்ன சொல்றீங்க? நான் கல்லூரி எல்லாம் படிச்சி முடிச்சுட்டு தான் இங்கன குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்னு நினைச்சீங்களா. அட ஆமாங்க. அது உண்மை தான். நல்ல படிப்பு எல்லாம் படிச்சு முடிச்சாச்சு. இப்ப எதுக்கு இந்த ஐயம் உங்களுக்கு? ஓ. அஞ்சாப்பு, ஆறாப்பு, ஏழாப்புன்னு எல்லாம் சொன்னேனா? சரியான ஆளுங்க நீங்க. நான் எப்ப அஞ்சாப்பு, ஆறாப்புன்னு சொன்னேன்? இந்த வாய்ப்பு கிடைச்சவங்கள்ல நான் அஞ்சாவதா ஆறாவது ஆளான்னு கேட்டேங்க. ஏங்க இப்படி குழப்புறீங்க?

இப்படி எல்லாம் குழப்புறதுக்குன்னே எனக்கு நண்பர்கள் சில பேரு இருக்காங்க. அவிங்ககிட்ட சொல்லிவிட்டிருவேன். அவிங்க உங்களை எல்லாம் நல்லா கொழப்பி விட்டிருவாங்க. அப்புறம் கீழ்ப்பாக்கம், குணசீலம்ன்னு அலைய வேண்டியதா போயிரும். என்ன நீங்க அதுக்கும் தயாரா? அப்படி போடுங்க அருவாளை. அப்ப உங்களை விடறதா இல்லை.

போனவாட்டி கேட்ட மாதிரியே இந்த வாட்டியும் தமிழ்மணத்துக்காரங்க அறிமுகம் வேணும்ன்னு கேட்டாங்க. அவங்க கேட்டாங்களேன்னு நானும் கிறுக்கோ கிறுக்குன்னு கிறுக்கித் தள்ளி ஒரு அறிமுகத்தை அனுப்பியிருக்கேன். போனவாட்டி கிறுக்குப் பயலாட்டம் என்னாத்தைக் கிறுக்கியிருக்கேன்னு நிறைய பேருக்குப் புரியலைன்னு சொன்னதுனால ஒரு நண்பர்கிட்ட விளக்கத்தைச் சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டேன். அவரும் விளக்கோ விளக்குன்னு விளக்கித் தள்ளிப்புட்டாரு. தனியா இல்லை. மயிலாருன்னு ஒரு கூட்டாளியோட சேந்துக்கிட்டு. இந்த வாட்டி எங்க வூட்டுல இன்னொரு ஆளு கூடியிருக்காருன்னு நானும் கூடுதலா ஒரு நாலு வரி எழுதிச் சேத்திருக்கேன். அந்த இராகவப் பெருந்தகைக்கிட்டேயே அதுக்கும் விளக்கம் சொல்லுங்கன்னு கேட்டுக்கிறேன். மயிலாரைக் காணோம் அதனால விளக்கம் சொல்லமுடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. நீங்க கொஞ்சம் சொல்லுங்க. நீங்க சொன்னா அவரு கேட்டுக்கிருவாரு.

நான்மாடக் கூடலாம்
மதுரையம்பதியினில்
நாயகனின் திருவருளினால்
நானன்று தோன்றினேன்
நலமுடைக் குமரனெனும்
நல்லபெயர் தனை அருளினான்!

அகவையோ மூவாறுப்
பதினெட்டு; அழகுடைய
அகமுடையாள் மனைமாட்சியாம்!
மகிழ்ச்சியுறத் தேசு பெறும்
மகளுடையேன் மனைமுழுதும்
மன்னன் மகள் அவளாட்சியாம்!

விளையாட்டுத் தோழனாய்
வீட்டிலே அக்கைக்கு
விளைந்தானே மைந்தனவனே!
தளை நீக்கி அடியாரைத்
தான் தாங்கிக் காப்பாற்றும்
சிவகுமரன் சேந்தனவனே!

வாழ்வதுவோ அமேரிக்க
மினசோட்டா மாகாணம்;
வாழ்க தமிழ்! வாழ்க தமிழே!
வாழ்வுபெற நானும் வந்தேன்
தமிழ்மணத்தின் விண்மீனாய்
வாழ்த்திடுவீர்! வாழ்த்துவீரே!


இப்ப போயிட்டு வர்றேங்க. கொஞ்ச நேரத்துக்கப்புறமா பாக்கலாம்.

Saturday, August 09, 2008

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் க.ர.ச. (K.R.S)


வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் இரவிசங்கரா!

எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கில்லையோ என்று இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப்பிரானைப் போல் தோன்றிய இரவிசங்கரா இங்கும் இனி இரணியர்கள் இல்லாமல் போகும்படி செய்வாய்!



சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தா? இல்லையே?! அது போல் எங்கள் கண்ணபிரான் இரவிசங்கரின் பெருமையும் ஆராயும் நிலையில் இல்லை. நல்லோரும் அல்லோரும் உள்ளோரும் இல்லோரும் வல்லோரும் வறியவரும் எல்லோரும் அறிவாரே எங்கள் அண்ணலின் பெருமையை!

எம்பெருமான் ஈசன் எழிலார் திருவேங்கடவன் திருவருளால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவாய் இரவிசங்கரா! இன்று போல் என்றும் வாழ்க!


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இரவிசங்கர்!