Friday, June 20, 2008

நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்


தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

தேனமர் பொழில் கொள் ஆலை - தேன் நிரம்பிய மலர்கள் நிரம்பிய சோலைகளும் கரும்பு மிகுதியாக விளைவதால் எங்கெங்கு நோக்கினும் கரும்பாலைகளும்

விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ - செந்நெல் எங்கும் மிகுதியாக விளைந்து சிவந்த பொன்னைப் போல் திகழ இருக்கும்

நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து - நான்முகனாகிய பிரம்மனை முதலாகக் கொண்டு எல்லாத் தேவர்களும் நிலையாகத் தங்கியிருக்கும் பிரமாபுரமாகிய சீர்காழியின்

மறைஞான ஞான முனிவன் - மறைஞானமும் மறைகளைத் தாண்டிய இறையருளால் பெற்ற மெய்ஞ்ஞானமும் உடைய முனிவனான திருஞான சம்பந்தர்

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் - தன் நல்வினைத் தீவினைக்கேற்ப பயன் நல்கும் கோள்களும் நாட்களும் அடியாரை நலியாத வண்ணம் உரைத்த

ஆன சொல் மாலை ஓதும் - சிறந்த இந்தச் சொல்மாலையை ஓதுகின்ற

அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே - அடியவர்கள் வானுலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள். இது மிக மிக உறுதி.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'கோளறு பதிகம்' பதிவில் 23 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

8 comments:

manu said...
நன்றி குமரன்.
ஓரோரு திங்களும் பதிகம் படிக்கும் புண்ணியம் எனக்குக் கிடைக்க வழி செய்தீர்கள். உங்களுக்கும் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள். மீண்டும் இதே போல் ஒரு பதிவு "அருணாசல கவிராயரின் இராமாயணம் " பற்றிப் போட இயலுமா?
அன்புடன்,

June 25, 2006 8:59 PM
--

சிவமுருகன் said...
அண்ணா,
//அடியவர்கள் வானுலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள். இது மிக மிக உறுதி. //

உறுதி - ஆணை சற்று வித்யாசமாக உள்ளதே.

ஒருவேளை ஞானசம்பரது ஆணையால் உறுதியோ.

மற்ற விளக்கங்கள் அருமை.

June 26, 2006 1:33 AM
--

johan -paris said...
மறைஞான ஞான முனிவன் - மறைஞானமும் மறைகளைத் தாண்டிய இறையருளால் பெற்ற மெய்ஞ்ஞானமும் உடைய முனிவனான திருஞான சம்பந்தர்
குமரா!
ஞானம், என்பதை ;இருதரம் ஏன்? சம்பந்தர் குறிப்பிட்டார். என்றதை அழகாக விளக்கிவிட்டீர்கள்.அவனைத் தொழுவதால் எந்த துன்பனும்;எம்மை அனுகாதென்ற நம்பிக்கையை;ஆணையாகச் சம்பந்தர் தருகிறார். தொழுவோம்;உய்வோம்.
நன்றி
யோகன் பாரிஸ்

June 26, 2006 2:47 AM
--

Merkondar said...
இதைத்தான் சோழ நாடு சோறுடைத்து என்பர் சோறு என்றால் சுவர்க்கம் என்று பொருள் என வாரியார் சுவாமிகள் சொன்னார்கள்.

June 26, 2006 3:48 AM
--

குமரன் (Kumaran) said...
மனு அம்மா. தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. அருணாசல கவிராயரின் இராமாயணம் நான் படித்ததில்லை. இணையத்தில் தேடிப் பார்க்கிறேன். இல்லையென்றால் அடுத்த முறை ஊருக்குப் போகும் போது புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன். ஏற்கனவே தொடங்கிய திருவாசகம், திருப்பாவை, பிரபந்தம், அபிராமி அந்தாதி போன்றவற்றை முடித்தப் பின்னரே அடுத்ததைத் தொடங்கலாம் என்று எண்ணியிருக்கிறேன். அதனால் தற்போதைக்கு அருணாசலக் கவிராயரின் இராமாயணத்தைக் குறித்து வைத்துக் கொள்கிறேன்.

June 26, 2006 7:21 AM
--

குமரன் (Kumaran) said...
சிவமுருகன். உத்தரவு என்ற பொருளில் தற்போது ஆணை என்ற சொல் வழங்குகிறது. அந்தக் காலத்தில் உத்தரவு என்ற பொருளிலும் உறுதி (சத்தியம், ப்ராமிஸ்) என்ற பொருளிலும் ஆணை என்ற சொல் வழங்கியிருக்கிறது. சத்தியமாகச் சொல்கிறேன் என்பதற்கு ஆணையிட்டுச் சொல்கிறேன் என்று சொல்லுவார்கள். ஆணை நமதே என்னும் போது நமது சத்தியம் இது என்ற பொருள் வருகிறது.

June 26, 2006 7:24 AM
--

குமரன் (Kumaran) said...
ஆம் யோகன் ஐயா. அவனைத் தொழுவதால் நமக்கு எந்தத் துன்பமும் விளையாது என்பதனைத் தெளிவாக உறுதியாகச் சொல்லுகிறார் சம்பந்தர்.

June 26, 2006 7:25 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் என்னார் ஐயா. சோழநாடு சோறுடைத்தே.

வாரியார் சுவாமிகள் சொன்ன பொருளிலும் சோறு என்ற சொல் நூல்களில் பயின்று வந்துள்ளது.

June 26, 2006 7:27 AM

Kavinaya said...

//செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ//

எவ்வளவு அழகா தமிழும் பக்தியும் கலக்குது!

//மறைஞான ஞான முனிவன் - மறைஞானமும் மறைகளைத் தாண்டிய இறையருளால் பெற்ற மெய்ஞ்ஞானமும் உடைய முனிவனான திருஞான சம்பந்தர்//

அருமையான விளக்கம், குமரா.

இறையருள் உங்களுடன் என்றென்றும் தங்கட்டும்!

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.