Sunday, February 21, 2016

படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!
- குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி
புதர்போல் மண்டிக்கிடக்கும் என் பாவ புண்ணியங்கள் என்னும் வலிமையான வினைப்பயன்களைத் தீர்த்து உன் திருவடிகளில் சேர்க்கும் திருமகள் தலைவனே! எல்லோரையும் எல்லாவற்றையும் விட பெரியவனே! உயரமானவனே! திருவேங்கடவா! உனது சந்நிதியின் திருவாசலில் அடியவர்களும் தேவர்களும் தேவமகளிர்களும் கால்வைத்து ஏறி இறங்கும் படியாகக் கிடந்து காலம் காலமாய் உனது பவளவாயின் அழகைக் கண்டு மகிழ்வேனே!

துணிவு உனக்குச் சொல்லுவன் மனமே!


துணிவு உனக்குச் சொல்லுவன் மனமே! தொழுது எழு! தொண்டர்கள் தமக்கு 
பிணி ஒழித்து, அமரர் பெருவிசும்பு அருளும், பேரருளாளன் எம்பெருமான் 
அணிமலர்க் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் 
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆசிரமத்துள்ளானே!


- திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி

மனமே! உனக்கு உறுதியாக ஒன்றைச் சொல்கிறேன் கேள்! வணங்கி வாழ்ந்து போ!

யாரை வணங்குவது என்று கேட்டால் சொல்கிறேன்!

தொண்டு செய்பவர்களுக்கு எல்லாவிதமான நோய்களையும் ஒழித்து, மரணமில்லாத தேவர்களின் (நித்யர்களின்) நிலையான பெரிய பரமபதத்தை அருளும் பேரருளாளனான எம்பெருமான்

அழகிய மலர்களைச் சூடிய கூந்தலை உடையவர்களான தேவ மகளிர்கள் நீராடும் போது, அவர்களின் மெல்லிய உடைகளையும் (துகிலையும்) கழுத்தில் அணியும் நகைகளையும் வாரிக்கொண்டு வந்து பொன்னும் மணியுமாகப் பொங்கி வரும் கங்கையின் கரை மேல் பத்ரிகாச்ரமத்தில் நிலையாக வாழ்கின்றான்! அவனைத் தொழுது எழு!

Monday, December 14, 2015

சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?!

'கண்ணன் எல்லா இடத்துலயும் இருக்கான்'ன்னு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லாம உறுதியா சொன்ன பிள்ளைய கோவிச்சு, 'இங்கே இருக்கானா?' ன்னு சவால் விட்டு இரணியன் தூணை உடைக்க, அங்கேயே அப்போதே அவன் கொட்டத்தை அழிக்க, தூணுல இருந்து வெளிய வந்த நரசிங்கப் பெருமானுடைய பெருமை நம்மால ஆராயுற அளவுல இருக்கா என்ன?

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய
சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?!


Sunday, November 29, 2015

துப்புடையாரை அடைவதெல்லாம்....

பெரிய ஆளுங்களை ஐஸ் வச்சு அவங்க பின்னாடி போறதெல்லாம் கஷ்ட காலத்துல அவங்க துணை நமக்கு கிடைக்கும்ன்னு தானே!
நான் ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவன்னாலும், நீ யானைக்கு எல்லாம் அருள் செஞ்சு காப்பாத்துனதுனால, தைரியமா உன்னை வந்து அடைஞ்சேன்.
கடைசி காலத்துல இழுத்துக்கிட்டு கிடக்கிறப்ப உன்னை நினைக்க என்னால இயலாது.
அப்போதைக்கு இப்போதே சொல்லிவச்சுக்கிறேன், அரங்கத்துல பாம்புல படுத்துக்கிட்டு இருக்குறவனே!

துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்து துணை ஆவர் என்றே!
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன்! ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்!
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே!


Friday, August 23, 2013

யாதும் ஊரே, யாவரும் கேளிர்

யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
தீதும், நன்றும், பிறர் தர வாரா!
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன!
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

எல்லா ஊரும் எங்கள் ஊர்; எல்லாரும் நண்பர்கள், உறவினர்கள்! தீமையும் நன்மையும் பிறர் தந்து வருபவை இல்லை - நாம் செய்த செயல்களின் பயன்களாக வருபவை! 

அதே போல் தான் மற்றவர் அவமானப்படுத்திவிட்டார்கள் என்று மனம் நொந்து போவதும், சில நாட்கள் பின்னர் நோவு தணிந்து போவதும் (அதாவது நாமே நினைத்துக் கொள்வது தான்)! 

சாவது புதியது இல்லை; உலகம் தோன்றிய நாள் முதல் அது இருக்கிறது!

என்றும் வாழ்வதே இனியது என்று மகிழ்ந்தும் இருப்பதில்லை; ஏனெனில் வாழ்வது சில நேரம் கடினமானது. 

சினம் கொள்வதைப் போல் இனிமையில்லாதது எதுவும் என்றுமே இருந்ததில்லை! 

மின்னலுடன் வான்மழை பெய்து கல்லும் மண்ணும் அடித்துச் செல்லும் பேராற்றின் நீரில் செல்லும் சிறு படகு நீர் செல்லும் வழியில் செல்வதைப் போல் உயிரின் வாழ்க்கையும் தம் தம் இயல்பிற்கு ஏற்ப செல்கிறது என்று அறிந்தவர் சொன்னதை கேட்டுத் தெளிந்தோம்!

ஆதலால் அறிவில், அன்பில், வலிமையில், செல்வத்தில், அதிகாரத்தில் பெரியவர்களை வியந்து போற்றுவதும் இல்லை! 

அவ்வாறு பெரியவரைப் போற்றுவது கூட சில நேரம் செய்வது உண்டு! எப்போதும் அறிவில், அன்பில், வலிமையில், செல்வத்தில், அதிகாரத்தில் குறைந்தவர்களை இகழ்வது என்பது கிடையவே கிடையாது!

Friday, July 12, 2013

மாதங்களில் நான் மார்கழி


'அப்பா. நன்கு சொன்னீர்கள். பாவை நோன்பு நோற்று கண்ணனை கோபியர் அடைந்ததைப் போல் அடியேனும் அவன் அருள் பெற ஒரு நல்ல வழி காட்டினீர்கள். பக்தியால் மட்டுமே வசப்படுபவன் அவன். அவனை நோற்றுத் தான் அடைய முடியும். அந்த நோன்பினை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அப்பா'.

'கோதை. நீ சொல்வது உண்மை தான் அம்மா. பக்தியுடையவர்களுக்கு எளியவன் கண்ணன்; மற்றவர்களுக்கு அரியவன். இந்த பாவை நோன்பினை நோற்கும் முறையினைச் சொல்கிறேன் கேள்.

மாதங்களில் நான் மார்கழி என்று சொன்னான் கீதாசார்யன். அந்தப் புனிதமான மார்கழி மாதம் முழுக்க கடைபிடிக்க வேண்டிய நோன்பு இது'.

'மாதங்களில் நான் மார்கழி என்று மாதவன் சொல்லும் அளவிற்கு உயர்ந்ததா மார்கழி? அதன் பெருமைகளைச் சொல்லுங்கள் அப்பா'.

'நல்ல கேள்வி கேட்டாய் மகளே. ஒரு நாளில் எல்லா காலங்களும் நல்ல காலம் என்பதைப் போல் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறந்தவையே. ஒரு நாளில் எல்லா நேரமும் நல்ல நேரம் ஆனாலும் இறை வழிபாட்டிற்கு பகலவன் உதிப்பதற்கு முன் இருக்கும் ஐந்து நாழிகைகளும் (இரண்டு மணி நேரம்) (காலை 4 முதல் 6 வரை) மாலை கதிரவன் மறையும் நேரத்தை ஒட்டிய ஐந்து நாழிகைகளும் (மாலை 6 முதல் 8 வரை) ஏற்றவை என்பது உலக வழக்கு. மற்ற நேரங்களை விட அந்த நேரத்தில் மனம் இறைவழிபாட்டில் ஒன்று படுவதை நன்கு காணலாம். அந்த இரண்டு நேரங்களிலும் அதிகாலை நேரம் மிக உயர்ந்தது. அந்த நேரத்திற்கு பிரம்ம முஹூர்த்தம் என்றே பெரியோர் பெயர் இட்டிருக்கின்றனர். அந்த அதிகாலை நேரத்தில் இறை வழிபாடு செய்தல் மிக மிக உகந்தது.

காலக் கணக்கில் நம் ஒரு வருட காலம் தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களின் பகல்; ஆடி தொடங்கி மார்கழி வரை அவர்களின் இரவு. ஆக மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முஹூர்த்தம்; ஆடி மாதம் தேவர்களின் மாலை நேரம். தேவர்களுக்குப் புனிதமான இந்த காலங்களில் இறைவழிபாடு செய்தால் மனிதர்களுக்கும் நலம் என்பதால் அவ்விரண்டு மாதங்களையும் தெய்வ வழிபாட்டிற்காக என்று சிறப்பாக வைத்தார்கள் நம் முன்னோர்.

மார்கழி, ஆடி இவ்விரண்டு மாதங்களிலும் தேவர்களின் பிரம்ம முஹூர்த்தமான மார்கழி மாதம் மிகச் சிறப்பானது. ஒரு குழுவில் எதுவெல்லாம் சிறப்பானவையோ அவற்றை எல்லாம் தன் வடிவாக கண்ணன் கீதையில் சொல்லிக் கொண்டு வரும் போது தான் மாதங்களில் நான் மார்கழி என்று சொல்கிறான். இப்போது மார்கழியின் பெருமை புரிந்திருக்குமே'.

'புரிந்தது அப்பா. இனி நோன்பு செய்யும் முறையைச் சொல்லுங்கள்'.

'அம்மா. மறந்தும் புறந்தொழாத நாம் இந்த நோன்பையும் கண்ணனை முன்னிட்டே செய்ய வேண்டும். மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் அதிகாலையில் பகலவன் தோன்றுவதற்கு முன் எழுந்து நன்னீராடி தூய உடை அணிந்து கொண்டு இறைவன் நாமங்களைப் பாடி பாவை நோன்பு நோற்பதற்கு ஏற்பட்டுள்ள பாவைக்களத்திற்குச் சென்று அவன் திருவருளை எண்ணி வணங்க வேண்டும். இந்த நோன்பை தனியாக செய்தாலே சிறப்பு தான். ஆனால் அனைவரும் கூடியிருந்து இந்த நோன்பை நோற்றால் இன்னும் மிகச் சிறப்பு. அதிலும் ஒத்த எண்ணமுடையவர்கள் சேர்ந்து செய்தால் இன்னும் பல மடங்கு சிறப்பு'

'அப்பா. நீங்கள் சொன்ன படியே இந்த நோன்பை நோற்கிறேன். நான் மட்டும் இன்றி என் தோழியர் அனைவரையும் சேர்த்துக் கொண்டு நாங்கள் எல்லோருமே இந்த நோன்பை நோற்கிறோம் அப்பா'

'அப்படியே செய்வாய் மகளே. மாயவன் திருவருள் முன்னின்று காக்கட்டும்'.

***
2007ல் எழுதியதன் மறுபதிவு...

Thursday, July 11, 2013

காத்யாயினி விரதம்

'இப்போதெல்லாம் நம் வீட்டு வேலைகள் எல்லாம் மிக நன்றாக நடக்கிறது. கவலை தொலைந்தது. நல்ல கட்டுபாட்டை விதித்தோம். நம் பெண்டு பிள்ளைகள் எல்லாம் நம் கட்டுபாட்டில் இருந்தால் எல்லாம் தானாகவே நன்கு நடக்கிறது பாருங்கள்'.

'சரியா சொன்னீங்க. வீடு ஒழுங்கா இருந்தா தானே ஊரும் நாடும் ஒழுங்கா இருக்கும்.'

'ஒரு கவலை விட்டதுன்னா இன்னொரு கவலை. இந்த வானம் ஒரு நேரத்துல பெஞ்சு கெடுக்குது. இன்னொரு நேரம் பெய்யாம கெடுக்குது. ஹும்'.

'ஐயா. நான் ஊருக்கு புதுசு. நீங்க எல்லாம் ஆயர்கள் தானே. வேளாண் தொழில் செய்பவர்களைப் போல் வானம் பொய்த்ததற்கு வருந்துறீங்க? ஒன்னும் புரியலையே?!'

'தம்பி. நீங்க சொல்றது சரி தான். விவசாயம் பாக்குறவங்களுக்குத் தான் மாதம் மும்மாரி பெய்யணும்ன்னு கவலை இருக்கும். அவங்க பருவம் பாத்து பயிர் செய்றவங்க. அதுனால அவங்களுக்குப் பருவம் தவறாம மழை பெய்யணும். ஆனா எங்களுக்கும் ஒழுங்கா காலா காலத்துல மழை பெய்யணுமப்பா. இல்லாட்டி மாடு கன்னுகளுக்கு எப்படி தண்ணி காட்டுறது? அதுங்க தானே எங்க சொத்து? அதுங்களுக்கு நேரா நேரத்துக்கு தண்ணி கிடைக்கலைன்னா பால் வருமா? அதை வித்து நாங்க வாழ்க்கை தான் நடத்த முடியுமா? அது தான் எங்க கவலை'

'ஓ. அப்படியா? நான் கூட எங்க ஊரு பாட்டுக்காரர் ஒருத்தர் பாடுன மாதிரியோன்னு நினைச்சேன்.'

'உங்க ஊரு பாட்டுக்காரர் பாடுன மாதிரியா? என்ன பாடுனாரு?'

'அதுவா? தண்ணியப் பாத்து அவரு பாடுவாரு.

"தண்ணீரே. நீ வானத்துல இருக்கும் போது மேகம்ன்னு உனக்குப் பேரு. மண்ணுல விழும்போது மழைன்னு பேரு. எங்க ஊரு ஆய்ச்சிமாரு கண்ணுல பட்டுட்டா நீர்மோருன்னு உனக்குப் பேருன்னு பாடுவாரு. அதான்".

'தம்பி. உனக்கு ரொம்பத் தான் குறும்பு. விருந்தாளியாச்சேன்னு பாக்கறேன்'

'கோவிச்சுக்காதீங்க ஐயா. ஏதோ நினைவுல வந்தது. அதான் சொன்னேன்'.

'சரி. சரி. இந்த வீண் பேச்சை எல்லாம் விடுங்கள். இப்படி மழை பெய்யாமல் இருக்கிறதே. அதற்கு ஏதாவது ஒரு நல்ல வழி இருந்தால் சொல்லுங்கள்'

'நாட்டாமை ஐயா. உங்களுக்குத் தெரியாத வழியா? நீங்களும் நம்ம ஊரு பெரியவங்களும் சேர்ந்து ஆலோசிச்சு ஒரு நல்ல வழியைச் சொல்லுங்க'

'ம். பல வழிகளையும் சிந்திச்சோம். ஒரு வழி சரியா வரும்ன்னு தோணுது. நம்ம ஊரு கன்னிப் பொண்ணுங்க எல்லாம் காத்யாயினி நோன்பு இருந்தா மழை தானா பெய்யும்ன்னு சொல்றாங்க. அது எனக்கும் சரின்னு படுது. நீங்க என்ன சொல்றீங்க?'

'காத்யாயினி நோன்பா? அப்படின்னா என்ன நோன்பு?'

'கன்னிப் பெண்கள் எல்லாம் வெள்ளென எழுந்து யமுனையில் நீராடி ஒரு பாவையை நோன்புக்காக உருவாக்கி அதனை காத்யாயினியாக வரித்து நோன்பு நோற்க வேண்டும். இப்படி முப்பது நாட்கள் செய்தால் நல்ல மழை பெய்யும்'.

'நல்ல நோன்பாகத் தான் இருக்கிறது. ஆனால் நம் வீட்டுப் பெண்பிள்ளைகளை எல்லாம் எப்படி அந்த அதிகாலை வேளையில் தனியாக யமுனை நதிக்கரைக்கு அனுப்புவது? எந்த நேரத்துல என்ன நடக்குமென்றே இப்போதெல்லாம் தெரிவதில்லை? அரக்கர்களும் அரக்கிகளும் இந்த சுற்று வட்டாரத்தில் உலாவிக் கொண்டே இருக்கிறார்கள். தகுந்த பாதுகாப்போடு தான் நம் பெண்களை நதிக்கரைக்கு அனுப்ப வேண்டும்'.

'நீங்கள் சொல்வதும் சரி தான். நம் காளையர்களைத் தான் அந்த பெண்களுக்குத் துணையாக அனுப்ப வேண்டும்.'

'நல்ல கதை போங்கள். பாலுக்குக் காவல் பூனையா?'

'அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். நாமே தேர்ந்தெடுப்போம் ஆட்களை. நல்லவர்களாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினால் எந்த குறையும் நேராது'

'சரி சரி. என்ன செய்தாலும் பார்த்து செய்யுங்கள்'

***

'இன்றோடு நம் தொல்லைகள் எல்லாம் தீர்ந்ததடி நிருபமா.'

'ஏன் அப்படி சொல்கிறாய் சாருலேகா? கண்ணனைக் காணாத நாளும் ஒரு நாளா? எத்தனை நாள் ஆனது அவனைக் கண்டு?'

'அதற்குத் தான் விடிவு காலம் வந்ததென்றேன் நிருபமா'.

'உண்மையாகவா? ஊர்க்கட்டுப்பாட்டை நீக்கிவிட்டார்களா? இனி மேல் நம் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் செல்லலாமா?'

'ஊர்க் கட்டுப்பாட்டை நீக்கவில்லை. ஆனால் மழை வேண்டி நம்மை எல்லாம் நோன்பு நோற்கச் சொல்லியிருக்கிறார்கள்'

'நோன்பா? என்ன நோன்பு? அதனால் நமக்கு என்ன பயன்?'

'பாவை நோன்பு தான் தோழி. அதிகாலையில் எழுந்து நதியில் நீராடி பாவையைத் தொழுது நோன்பு நோற்க வேண்டும்.

அந்த நோன்பிற்குக் காவலாக இளைய கோபர்களை அனுப்புகிறார்கள். கோபகுமாரன் நந்தகுமாரனும் வருகிறான்.'

'உண்மையாகவா? கண்ணனும் வருகிறானா? அவனைக் காணலாமா? இதனை ஏனடி முதலிலேயே சொல்லவில்லை'.

'என்ன செய்வது? இது வரை உன் தாயார் இங்கே இருந்தார்களே. அவர்கள் முன்னால் எப்படி சொல்வது? நாளை முதல் நோன்பு தொடங்குகிறது. நோன்பினை நன்கு கடைபிடித்தால் கண்ணனையும் காணலாம். மழையும் பொழியும். அப்படி நடந்தால் ஊர்க்கட்டுப்பாடும் தளரும் வாய்ப்பு உண்டு. கண்ணனை நாம் அடையும் வாய்ப்பும் உண்டு'.

'நோன்பைக் கட்டாயம் நல்லவிதமாகக் கடைபிடிப்போம். மழை வேண்டி நீங்கள் வேண்டுமானால் நோன்பிருங்கள். நான் கண்ணனை வேண்டி இருக்கப் போகிறேன்'

'அடிப் போடி. நீ மட்டுமா? எல்லாருமே அப்படித் தான். அவனை அடைய இதுவே தகுந்த வாய்ப்பு. அவனையே வேண்டி நோன்பை நோற்போம்'

***
2007ல் எழுதியதன் மறுபதிவு...