Monday, June 09, 2008

உதயம், மதியம், அஸ்தமம், ராத்திரி

பொழுதுகளை குறிப்பிட்டுச் சொல்ல இன்னும் பேச்சு வழக்கிலும், எழுத்து நடையிலும் வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக ஆங்கிலத்தில் 'குட்மார்னிங் சார்', 'குட் ஈவினிங் சார்' என படித்த தமிழர்களிடையே (மத்தியில்) வணங்க (WISH) பயன்படுத்தும் சொற்கள் மிகுந்து வழக்கில் இருக்கிறது .

புலம்பெயரும் போது தமிழர் மட்டுமல்ல பிற இந்திய மொழிக்காரர்களும் தத்தம் அடையாளத்தை கட்டிக் காக்கவும் சிலர் அதைவிட முதன்மையாக நாம் பேசுவது வெளிநாட்டுக்காரர்களுக்கு புரியக் கூடாது என்ற சூழ்நிலையில் அவரவர் மொழிகளை தூய்மையாகப் (சுத்தம்) பேச ஆரம்பிக்கின்றனர். இதுதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் முடிந்த அளவில் செந்தமிழில் பேசுவதற்கு காரணம். வெளிநாட்டில் தமிழருக்கிடையே அழைக்கும் போது அங்கு வாழும் தமிழர்கள் இயல்பாகவே 'வணக்கம்' , 'காலை வணக்கம்' என்று புழக்கத்திற்கு வந்து ஹலோவுக்கு விடை செல்லிவிட்டார்கள்

இத்தகைய பயிற்சி தமிழகத்து தமிழர்களுக்கு குறைவாக இருப்பதாலும் பலுக்குவதில் அதிக ஈடுபாடு, அக்கறை காட்டாததால் திரித்தும், தமிழகம் வணிக (வியாபார) காரணங்கள் மற்றும் அலுவல் தொடர்புடன் மற்ற மாநிலங்களுடன் இருப்பதால் மற்ற மாநில மொழிகளின் சொற்கள் தமிழகத்தில் பேச்சு வழக்கில் மிகுந்து இருக்கிறது.

எந்த ஒரு மொழியும் அது வேற்று மொழிச் சொற்களைக் ஏற்றுக் கொள்ளும் நிலை எவ்வாறு என்று ஆராய்ந்தால் அந்த மொழியில் புதிய பெயர் சொல்லையோ, வினைச்சொல்லையோ பொருள் மாறாமல் சொல்ல
சொற்களோ, கலைச் சொற்கள் அமைக்க வேர் சொற்கள் முற்றிலும் இல்லை என்ற ஒரு தீர்மான நிலையில் இயல்பாகவே அது பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்கிறது. இது உலக மொழிகள் அனைத்திற்கும் பொருந்தும். நாம் இருப்பதை மறந்து கடினமான எழுத்துக்கள் அமைந்த சொற்களை ஏற்றுக் கொண்டு தமிழின் தொன்மை மற்றும் மென்மையை மறந்துவிட்டோம்.

பொழுதுகளைப் பற்றி சொல்லும் போது காலை வேளைகளை குறிப்பிட அதிகாலை (உதயம்), காலை என்றும் பகல் வேளைகளை குறிப்பிட மதியம் (மத்ய + சமயம் = மதியம் ?) என்ற சொல்கிறோம். அதையே முற்பகல், நடுப்பகல், பிற்பகல் என்று கால வேறுபாடுகளைக் குறித்து முறையாகக் குறிப்பிட்டால் மொழிக்கும் பொருளுக்கும் அழகு.

அதுபோல் மாலை நேரத்தை குறிக்க 'அந்தி வரும் நேரம்' என்றும் அந்தி என்றும் பாடல் ஆசிரியர்களைத் தவிர மற்றவர்கள் மிகுந்து பயன்படுத்துவதில்லை. சாயும் + காலம் = சாயங்காலம் (அஸ்தமனம்) எனவும் எளிதாக பிற்பகலின் பகுதியாக இருப்பதால் மாலை வேளை என்று குறிக்கலாம்.

இரவு பொழுதின் பல்வேறு வேளைகளைக் குறிக்க முன்னிரவு, நடு இரவு, பின்னிரவு என மூன்று கால அளவுகளில் குறியிடலாம். வெறும் இரவு என்றால் இரவு பொழுது முழுவதும் என்று பொருள் படுகிறது, அவ்வாறு சொல்ல வேண்டிய இடத்தில் மட்டும் இரவு என்பது சரி. ராத்திரி (ராத்ரி) என்று சொல்வதைவிட இரவு என்று சொல்வதால் இரவின் கருமைக்கு குறைபாடு இல்லை. இரவு என்பது தனித்தமிழ்ச் சொல். பொதுவாக முன் ராத்திரி, பின் ராத்திரி என சொல்வதில்லை, அங்கெல்லாம் சரியாகவே முன்னிரவு, பின்னிரவு என குறிப்பிடுகிறோம். நடு இரவு-க்கு பதில் நடு ராத்திரி என்று சொல்கிறோம் அப்படிச் சொல்வதும் தற்போது குறைவாகவே வழக்கில் இருந்து வருகிறது.

கடந்த மாதம் நான் சென்னை சென்றிருந்த போது பி.எஸ்.என்.எலின் செல்பேசி குறித்த தமிழக விளம்பரத்தில் 'ஒரு வருட வேலிடிட்டியுடன்' என்று தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து தமிழெழுத்துகளில் விளம்பரப் படுத்தி இருந்தார்கள். அதாவது அந்த குறிப்பிட்ட சலுகை உடைய தொடர்பு திட்டத்தை (wireless plan) ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம் என்பதைக் குறிக்க அவ்வாறு எழுதி இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். எளிமையாக 'ஓர் ஆண்டு பயனுடன் அல்லது ஓர் ஆண்டு பயன்படுத்த' என்றும் குறிக்க முடியும் என்ற போதிலும் அரசாங்க அமைப்பே இத்தகைய கலப்புக்கு துணை போவது வியப்பாகவும், வருத்தமாகவும் இருந்தது.

உதயம், மதியம்,அஸ்தமம், இராத்திரி என்று சொல்வது பற்றியும் காலை, பகல், மாலை, இரவு என்பது பற்றியம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

8 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 12 மார்ச் 2007 அன்று திரு. கோவி.கண்ணன் அவர்களால் இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

17 கருத்துக்கள்:

மு. உமாசங்கர் said...
//நாம் பேசுவது வெளிநாட்டுக்காரர்களுக்கு புரியக் கூடாது என்ற சூழ்நிலையில் அவரவர் மொழிகளை தூய்மையாகப் (சுத்தம்) பேச ஆரம்பிக்கின்றனர்//
மிகவும் சரி. பெரும்பாலும் மற்றவர்களுக்கு புரியக்கூடாதென்றே பேசினாலும் நாளடைவில் அதுவே பழக்கத்துக்கு வந்து விடும். நான் இந்த காரணத்க்காக மட்டும் இல்லையென்றாலும் பெரும்பாலும் தமிழிலேயே பேசுகிறேன். ஒம்போது புள்ளி ஒம்போது ஒம்போது பெளண்டு என்கிற மாதிரி. அபேட்சகர் இப்பொதெல்லாம் வேட்பாளராகி தொகுதிக்கு வரும்போது, நாளடைவில் தனித்தமிழிலேயே பேசும் காலமும் வரும்

March 13, 2007 12:25 PM
---

பாலராஜன்கீதா said...
சிற்றஞ்சிறு காலே வந்து உன்னைச் சேவித்து என்ற திருப்பாவை வரிகளில் குறிப்பிடப்படுவது அதிகாலை / விடியல்பொழுதுதானே.

அதிகாலையை கருக்கல் என்றுகூட கிராமப்புறங்களில் குறிப்பிடுகின்றனர்

வைகறைத் துயிலெழு என்பது விடியல் பொழுதைத்தானே குறிக்கிறது.

March 13, 2007 12:58 PM
---

இலவசக்கொத்தனார் said...
ஏன் இப்படி திடீரென்று அலைன்மெண்டை ஜஸ்டிபைடாக மாற்றிவிட்டீர்கள்? (இதை எல்லாம் தமிழில் எழுதாததால் திட்ட மாட்டீர்கள் என நம்புகிறேன்.) நெருப்பு நரி உலாவியில் சரியாகத் தெரியவில்லையே. மீண்டும் இடது புறம் அலைன் ஆவது போல் மாற்றி விடுங்களேன்.

March 13, 2007 4:05 PM
--

குமரன் (Kumaran) said...
கொத்ஸ், இடப்புறம் நேர்ப்படுமாறு மாற்றிவிட்டேன்.

March 13, 2007 4:58 PM
---

வடுவூர் குமார் said...
கிராமம்- இரவு
நகரம்- ராத்திரி யை பயன்படுத்துகிறார்கள்.
சிங்கையில் விடாப்பிடியாக "இரவை" நுழைத்தால் எனக்கிருக்கும் ஒன்றிரண்டு நண்பர்களும் விலகிவிடும் சாத்தியம் இருக்கிறது.
:-))

March 13, 2007 7:58 PM
--

இலவசக்கொத்தனார் said...
நேர்படுத்தலைச் சரி செய்ததற்கு நன்றி. அப்போ ஜஸ்டிபைய்ட் என்பதற்கு சமச்சீர் நேர்படுத்துதல் அப்படின்னு வெச்சுக்கலாமா?

March 13, 2007 8:05 PM
--

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். அலைன்மென்டுக்கு நேர்ப்படுத்தல் சரியான சொல்லா என்று தெரியாது. ஒரு நொடி சிந்தித்தேன் - அந்தச் சொல் தோன்றியது. அதனைச் சொன்னேன் அவ்வளவு தான். வேண்டுமென்றால் அதனைப் பற்றி விக்சனரி மக்களிடம் கேட்கலாம். அவர்கள் நல்ல நல்ல கலைச் சொற்களை ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

March 13, 2007 8:31 PM
--

குமரன் (Kumaran) said...
வடுவூர் குமார். ஒரேயடியாக மாற்றவேண்டாம். 50% இராத்திரி என்று சொல்லுங்கள்; 50% இரவு என்று சொல்லுங்கள். இரண்டுமே நண்பர்களுக்கு புரியும் இல்லையா? அப்போது அது இயற்கையாகத் தோன்றும். :-)

March 13, 2007 8:32 PM
---

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் அண்ணா.

உதயம் என்ற சொல் வடசொல்லா என்பதில் எனக்கு ஐயம் உண்டு. அதே போல் இராத்திரியும் தமிழ்ச்சொல்லாக இருக்க வாய்ப்புண்டு. ஒரு முறை ஞானவெட்டியான் ஐயா சிற்றஞ்சிறுகாலையில் என்று எழுதிய போது உதயத்தில் என்றும் எழுதிப் பழகலாமே என்றார்.

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மிகுதியாக 'வணக்கம்' 'காலை வணக்கம்' போன்றவற்றைச் சொல்கிறார்கள் என்பது நல்ல அவதானம். இங்கே பல நண்பர்கள் தொலைபேசும் போது 'வணக்கம் குமரன்' என்றும் நேரில் பார்க்கும் போது 'காலை வணக்கம்' என்றும் சொல்லுவார்கள். அது எனக்கு இயற்கையாகத் தோன்றும் - ஆனால் இப்போது நீங்கள் சொல்லியதைப் படித்த பின் அப்படியும் இருக்குமோ என்று தோன்றுகிறது; நம் ஊரில் வணக்கம் சொல்பவர்கள் அரசியலாளர்களும் தமிழாசிரியர்களும் தான்; மற்றவர்கள் குட் மார்னிங்; ஹலோ தான். :-)

மதியம் என்றால் நிலா என்றொரு பொருளும் இருக்கிறது - அது இலக்கிய வழக்கு. நடைமுறை வழக்கில் மதியம் என்பது நீங்கள் சொல்லுவதைப் போல் பகல் வேளையைக் குறிக்கிறது. மத்யானம் என்ற வடசொல்லின் மருவுதலாக இருக்கலாம். (இங்கேயும் மதியம் தமிழோ என்ற ஐயம் உண்டு)

அஸ்தமனம் வடசொல் தான். ஆனால் அது புழக்கத்தில் அவ்வளவாக இருப்பது போல் தோன்றவில்லை. சாயங்காலம் தான் நான் சொன்னது; சொல்வது; மற்றவர்கள் சொல்லிக் கேட்டது. மாலை என்பதும் புழக்கத்தில் உண்டு.

வேலிடிட்டிக்கு நல்ல மாற்று வழக்கைச் சொல்லியிருகிறீர்கள்.

உதயம் என்று சொல்வது தென் தமிழகத்தில் இருக்கும் வழக்கு என்று ஞானவெட்டியான் ஐயா சொன்னார். மற்ற இடங்களில் கேட்டதில்லை. மதியம் தமிழாக இருக்கலாம். ஆனால் பகல் என்பது தமிழ் என்பதில் ஐயமே இல்லை. அஸ்தமனம் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை. மாலையும் சாயங்காலமும் உண்டு. இரவு, இரா இரண்டும் புழக்கத்தில் உண்டு. இரண்டுமே தமிழ் என்பது என் எண்ணம்.

March 13, 2007 8:42 PM
--

துளசி கோபால் said...
இரவு- தமிழ் --- ராத்திரி நேரம்

ராவிலே = காலையிலே ( மலையாளம்)

ராவைக்கு வந்தாங்க = இரவு நேரத்தில் வந்தாங்க(தமிழ்நாட்டுக் கிராமத்துலே சொல்லும் வழக்கம்)



அஸ்தமனகாலம் = அத்தாழம்( மலையாளம்)

நடுப்பகல் = உச்சைக்கு( சூரியன் உச்சிக்குவரும் நேரம்)= மலையாளம்.

வைகுந்நேரம்= மாலைவேளை ( சூரியன் போகும் நேரம்) மலையாளம்

March 13, 2007 10:44 PM
---

இராம.கி said...
சொல் ஒரு சொல்லை விடாது படித்து வருகிறேன். பெரும்பாலும் பின்னூட்டு இடாமல் படித்துப் போய்விடுவது உண்டு. இப்பொழுது, உதயம், மதியம், அஸ்தமம், ராத்திரி என்ற நான்கு சொல்லை இங்கு கொடுத்துச் சிறுபொழுதுகள் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். என்னுடைய இடையூற்றைப் பொறுத்துக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.

இது போன்ற சொற்கள் பெரும்பாலும் இருபிறப்பிகள். அவற்றின் கருக்கள் தமிழாய் இருக்கும், வெளித்தோற்றம், முடிப்பு ஆகியவையோ வடமொழியாய் நிற்கும்.

உத்தல் என்பது தோன்றுதல், விடிதல், உயர்தல் என்ற பொருளைக் குறிக்கும் நல்ல தமிழ் வினைச் சொல் தான். அதன் திரிவான உற்றது என்ற சொல்லை நாம் புழங்குகிறோம், இல்லையா? உற்றது என்றால் ஏற்பட்டது என்றுதானே பொருள்? ஒளி தோன்றியது, ஏற்பட்டது என்பதைக் குறிப்பது தான் உத்தல் என்னும் வினை. சூரியன் உற்றினான் என்றால் = சூரியன் தோன்றினான். உற்றுதல்>உற்றித்தல்>உத்தித்தல்>உதித்தல் என்ற வளர்ச்சி நமக்கு உரியது தான். சூரியன் உதித்தான் என்பதும் நாம் சொல்லக் கூடியது தான். (பொழுது என்பது கூட முதலில் கதிரவனைக் குறித்துப் பின்னால் தான் காலத்தைக் குறித்தது.) ஆனாலும் உதயம் என்ற அந்த முடிவில் எங்கோ வடமொழிச் சாயல் தெரிகிறது. என்ன என்று அறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்த இருபிறப்பிச் சொற்கள் எல்லாமே இப்படித்தான்; ஒருவகையில் பார்த்தால் தமிழாய்த் தெரியும்; இன்னொரு வகையில் பார்த்தால், வடமொழித் தோற்றம் கொள்ளும்.

அடுத்து மதியம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நண்பகல் என்பது நள்ளிய பகல் என்றே பொருள் கொள்ளும். நள்ளுதல் என்பது குத்தப் பட்டது, நிலைக்கப் பட்டது என்ற பொருளை இங்கு காட்டும். "நட்டமே நிற்கிறான் பார்" என்று சிவகங்கைப் பக்கம் சொல்லுவார்கள். (நட்டப் பட்ட ஒரு நிலம் நாடு.) ஒரு வட்டத்தின் மையத்தில் நட்டப் பட்டது நடுவம். நண்பகல் என்பதும் நடுப்பகல் என்பதும் ஒன்றுதான். பகலை ஒதுக்கி வெறுமே இடம், பொருள், ஏவல் பார்த்து நடுவம் என்றும் சொல்லலாம். அது காலத்தைக் குறிக்கிறது என்று உரையாட்டில் புரியுமானால் சுருக்கச் சொல்லைப் புழங்குவதில் தவறில்லை.

பொதுவாக தமிழிய மொழிகளுக்கும், வடபால் மொழிகளுக்கும் (=இந்தையிரோப்பிய மொழிகளுக்கும்) நடக்கும் ஒலிமாற்றத்தில் நம்முடைய நகரம் அங்கு மகரமாகும். நம்முடைய டகர, றகர, ழகர, ளகரங்கள் அங்கு தகர, ஷகரங்களாய் மாறி ஒலிக்கும். நம் நடு அங்கே மது என்று ஆகும். [இந்த விதியைப் பின்பற்றித்தான், minute -இன் இணையான "நுணுத்து" என்ற நம் சொல்லை மீட்டெடுத்தோம்]; நகர, மகர இணைகளை நான் ஒரு பட்டியல் போட்டே சொல்ல முடியும். நடுவம் ம(த்)தியம் என வடமொழியில் ஆனது ஒரு இயல்பான மாற்றம் தான். (யகரம், ரகரம் ஆகிய ஒலிகள் வடமொழிப் பலுக்கில் இது போன்ற சொற்களில் உள்நுழையும்.) நடுவ அண்ணம் (approximately middle time) என்பது நடுவத்திற்கு அண்மையில் உள்ள காலம்; இதையே வடமொழிப் பலுக்கலில் மத்திய அண்ணம் = மத்திய அண்ணம் = மத்தியாண்ணம்>மத்தியானம் என்று சொல்லுவார்கள். இதிலும் பார்த்தீர்களா? அடிப்படை தமிழ், ஆனாலும் வடமொழித் தோற்றம்.

இனி அஸ்தமனம் பற்றிப் பார்ப்போம். கயிறு அறுந்தது என்றால் இரண்டாய்ப் போனது; அவளுக்கும் எனக்கும் உறவு அற்றுப் போனது என்றால் உறவு இல்லாமற் போனது என்று பொருள். வேலையற்ற நிலை = வேலையில்லாத நிலை; அற்றம் என்ற சொல்லுக்கு பொருள் இல்லாத நிலை தான். நாம் சுழியம், சுன்னம் என்று சொல்லுகிறோமே, அந்த zero விற்கு இன்னொரு சொல் அற்றம். nothingness. அற்றல் என்ற வினைக்கு இல்லாது போதல் என்றே பொருள். அல்லன் என்றால் இல்லாதவன் என்றுதான் பொருள். அற்றலுக்கும் அல்லலுக்கும் ஒரே வேர் தான். அல் என்னும் அடிவேர். அற்றல்>அத்தல் என்றும் பேச்சுவழக்கில் சொல்லப் படும். "என்ன அவனோடு பேச்சு? அவனுக்கும் நமக்கும் ஆகாதுன்னு ஆயிப் போச்சுல்ல; அத்துவிடு". அத்தமானம் = இல்லாத நிலை. வருமானம், பெறுமானம், கட்டுமானம் என்பது போல் இங்கே அத்தமானம். மானுதல் என்பது அளத்தல்; மானம் என்பது நிலையைக் குறிக்கும் பெயர்ச்சொல். மேலே கூறிய மானங்கள் கூட்டுச் சொற்கள். இங்கே ஒளி இல்லாத நிலை; சூரியன் மறையும் நிலை. அத்தமானம் வடமொழிப் பலுக்கில் அத்தமனம்>அஸ்தமனம் என்று ஆவது மிக எளிது. ஆக அடிப்படை நம் மொழியில் தான் இருக்கிறது. இன்றையத் தோற்றம் கண்டு நாம் வடமொழியோ என்று மயங்குகிறோம். அவ்வளவுதான்.

இதே போல இராத்திரிக்குள்ளும் நம்முடையது உள் நிற்கிறது. ஒருவன் என்பதற்கு பெண்பாலாய் ஒருத்தி (பழைய புழக்கம்), ஒருவள் (புதிய புழக்கம்) சொல்கிறோம் அல்லவா? அதே போல இருள்தல் என்ற வினையில் இருத்து இருள்வு, இருட்டு என்ற இரு பெயர்ச்சொற்கள் பிறக்கும். இருள்வு மருவி இரவு என்று ஆகும். இருட்டு வடக்கே போக இருத்து>இருத்தி என்றாகிப் பின் பலுக்கல் திரிந்து ரகரம் நுழைந்து இரத்தி>இராத்தி>இராத்ரி ஆகும். முன் இரவு, பின் இரவு என்பதை முன்னிருட்டு, பின்னிருட்டு என்று நாம் சொல்ல முடியுமே?

நான் இந்தப் பின்னூட்டை முடிக்குமுன் சிறுபொழுதுகள் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். ஒரு நாளை நான்கு பொழுதாகப் பிரிப்பது பொதுவாக மேலையர், மற்றும் வடமொழியாளர் பழக்கம். ஆறு பொழுதாய்ப் பிரிப்பதே பழந்தமிழ்ப் பழக்கம். (என்னுடைய காலங்கள் தொடரை இங்கு நினைவு படுத்துகிறேன்.) நம்மூர் வெதணத்திற்கு (climate) அது சிறப்பாக இருக்கும்.

6AM - 10AM = காலை; morning; ஒளி கால் கொண்டது காலை. காலுதல் = ஊன்றுதல்
10AM - 02PM = பகல்; noon; பொகுல் என்பது உச்சி; பொகுல்>பொகுள்>பொகுட்டு என்பதும் உச்சி தான்.
02PM - 6PM = எற்பாடு; எல் (கதிரவன்) படுகின்ற (=சாய்கின்ற) நேரம் எற்பாடு. இந்தச் சொல்லை முற்றிலும் இந்தக் காலத் தமிழில் தவிர்த்துவிட்டோம். இது ஒரு பெரிய இழப்பு. இந்தச் சொல் இல்லாமல் பகலையும், மாலையையும் கொண்டுவந்து போட்டு பேச்சில் குழப்பிக் கொண்டு இருக்கிறோம்.
6PM - 10PM = மாலை; மலங்குதல் = மயங்குதல்; ஒளி மலங்கும் நேரம் மாலை. (கவனம் மாலை என்பது 6 மணிக்கு மேல்தான்; மாலை 4 மணி என்று சொல்லுவது பெரும் பிழை; ஆனாலும் பல தமிழர்கள் எற்பாட்டைப் புழங்காததால் மாலையைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் evening என்பது சரியாகவே பயன்படுகிறது.)
10PM - 2AM = யாமம், இரவு, night, யா என்னும் ஓரெழுத்தொரு மொழிக்கு இருட்டு, கருமை என்ற பொருள் உண்டு. யா வில் பிறந்த பலசொற்கள் ஆழமான பொருள் உள்ளவை. யாமத்தை ஜாமமாக வடமொழி மாற்றிக் கொள்ளும்.
2AM - 6AM = விடியல், வைகறை tweilight ஒளி விடிகிறது; இருள் வைகிறது; இரண்டின் வேறுபாட்டையும் தெளிவாக உணர வேண்டும்.

இது போக நண்பகல் 1200 noon, நள்ளிரவு, நடுயாமம் midnight பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. மாலை, யாமம், விடியலை மும்மூன்று மணிகளாய்ப் பிரித்து முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் யாமம் என்று சொல்லுவது ஒரு சிலரின் பழக்கம்.

அன்புடன்,
இராம.கி.

March 14, 2007 12:50 AM
---

Anonymous said...
இராமகி சார் வந்தவுடன் பதிவே களைகட்டுது!

March 14, 2007 1:18 AM
---

ரவிசங்கர் said...
நான் இராம.கி அவர்களின் பதிவை உசாத்துணையாக வைத்து கருத்தை சொல்லலாம் என்று வந்தால் அவரே வந்து விட்டார் ! பொதுவாக நன்பகல், முன்பகல், நள்ளிரவு, பின்னிரவு என்று முன்னொட்டுகளை சேர்த்துக் கொண்டிராமல் இராம. கி அவர்கள் சொல்வது போல் தொலைந்து பொன பொருத்தமான சொற்களை மீட்டெடுப்பது தான் தமிழின் சொல்வளத்தைக் கூட்டும். அதே போல், பல சொற்களை வட மொழி என்று ஒதுக்கும் போக்கு அபாயம் இருக்கிறது. ஆய்ந்து பார்க்கையில் அவை தமிழ் வேரடியாக இருக்கக் கூடிய வாய்ப்பு அதிகம். எனவே, தமிழா வட மொழியா என்று உறுதி இல்லாத நிலையில் ஒரு சொல்லை ஒதுக்கச் சொல்லாமல் மாற்றுச் சொல்லாக மட்டும் ஒன்றை தருவது நன்று. ஆனால், இப்படி உறுதி செய்வதற்கு பெரிய அளவில் மொழியியல் அறிவு வேண்டும் என்பது உண்மை.

கிராமங்களில் இரவு என்று எழுத்துத் தமிழில் சொல்லாமல் ரவைக்கு வருவாக என்பது போல் சொல்வார்கள். கோவை நகரத்திலும் ரவைக்கு என்ற சொல்லை கேட்டு வளர்ந்துள்ளேன். எனவே நகரங்கள் = இராத்திரி என்று சொல்வது சரி இல்லாமல் இருக்கலாம்.

கருக்கல், அத்துப் போச்சு என்று சொல்லும் வழக்கம் எங்கள் ஊரில் இன்னும் உண்டு. 7 ஆண்டு ஒரு மிகவும் உள்தங்கிய கிராமத்தில் வளர்ந்தது நல்லதாப் போச்சு :)

புதுகை மாவட்டத்தில் பெரிதும் வழங்கும் இன்னொரு சொல் - வெள்ளன (early, early morningஎன்று பொருள் வரும்). வெள்ளன வா, வெள்ளனக் காலைல என்பார்கள். இந்த வெள்ளன என்ற சொல் இல்லாமல் ஒரு நாள் கூட பேச முடியாது. ஆனால், பிற மாவட்டங்களில் கேட்டது இல்லை. இதே போல் சூரியனை பொழுது என்றால் சொல்லால் குறிப்பது எங்கள் ஊரில் இன்னும் வழக்கில் இருக்கிறது. பொழுது சாஞ்ச பிறகு வா என்று சொல்வார்கள்.

தெலுங்கு நண்பர் ஒருவர் மாலைக்கு சாயந்திரம் என்றார். நான் சாயும் + காலம் = சாயுங்காலம் என்று பொருள் விளக்கியதும் அவரிடம் இருந்து ஈயாடவில்லை ! தெலுங்கில் உள்ள சமசுகிரத சொற்களை எல்லாம் நீக்கி விட்டால் பெரும்பாலும் தமிழ் மிஞ்சுமோ என்று தோன்றும் அளவுக்கு தமிழ் சொற்கள் தெலுங்கில் இருக்கின்றன. இது குறித்து அறிந்தவர் சொல்லலாம்.

March 14, 2007 5:47 AM
---

குமரன் (Kumaran) said...
தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி இராம.கி. ஐயா. எற்பாட்டை இனிமேல் புழங்க முயல்கிறேன். எற்பாடு பற்றி படித்திருக்கிறேன்; ஆனால் மனத்தில் கொள்ளவில்லை.

காலை, பகல், எற்பாடு, மாலை, இரவு, விடியல் - நன்கு இவற்றைப் புழங்குவோம்.

March 14, 2007 6:01 AM
---

குறும்பன் said...
உண்மை கோவி. "வணக்கம்" வெளிநாட்டு வாழ் தமிழர்களால் அதிகமாக புழங்கப்படுகிறது.

இராம.கி ஐயாவின் பின்னூட்டம் இவ்விடுகைக்கு மேலும் சிறப்பு கூட்டியுள்ளது. "எற்பாடு" நான் இதுவரை கேள்விபடாதது. யாமம் பற்றியும் அறிந்து கொண்டேன்.

"உதயம், மதியம்,அஸ்தமம்" இவற்றை நான் புழங்குவதில்லை ஆனால் இராத்திரியை புழங்குவதுண்டு . விடியகாலை, உச்சிப்பொழுது, கருக்கல், சாயங்காலம் போன்றவற்றை அவ்வப்போது புழங்குவதுண்டு.

கிராமங்களில் "பொழுது போறதுக்கு முன் வீட்டுக்கு போயிடனும்" , "பொழுது சாயரதுக்கு முன்னாடி வேலையை முடிக்கனும்" என்று சொல்லி கேட்டுள்ளேன், பல முறை அவ்வாறு சொல்லியும் இருக்கிறேன். இராம.கி ஐயா சொன்னது போல் இங்கு பொழுது என்பது கதிரவனை குறிக்கிறது.

March 15, 2007 1:25 PM
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//யா என்னும் ஓரெழுத்தொரு மொழிக்கு இருட்டு, கருமை என்ற பொருள் உண்டு. யா வில் பிறந்த பலசொற்கள் ஆழமான பொருள் உள்ளவை. யாமத்தை ஜாமமாக வடமொழி மாற்றிக் கொள்ளும்.//

இராம.கி ஐயாவின் சொல் விளக்கம் பல சிந்தனைகளைத் தூண்டுகிறது.

இந்த "யா" என்னும் ஒற்றைச் சொல் கருமைக்கும் இரவுக்கும் தொடர்புடைய பல கடவுளர்க்கு ஆகி வருவதையும் ஒப்பு நோக்கிக் காணலாம்.

யாமினி = காளி
யாமளை = கரும்பச்சை = பார்வதி
(வடமொழி இதை சியாமளையாக மாற்றிக் கொள்கிறதோ?)

யமன் = கூற்றுவன்
யாமி = யமனின் மனைவி
யாமளம் = இரவுப் பூசை

யாமிகன் என்று இரவில் நகரச் சோதனை செய்யும் காவலனைச் சொல்வதும் வழக்கம்
(Night watchman = யாமிகன் என்று சொல்வதே அழகாக உள்ளதே!)

சொல் ஒரு சொல் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகிறது. வாழ்த்துக்கள் கோவி ஐயா.

March 15, 2007 3:59 PM
---

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
குமரன்!
இந்தப் பதிவு இராம.கி ஐயா வருகை உட்படக் களைகட்டியுள்ள வேளை ;
நானும் தெரிந்த ஈழப் புழக்கத்தைக் கூறுகிறேன்.
எழுத்துவழக்கு பேச்சுவழக்கென இருந்தபோதும்; எழுத்து வழக்கில் சகல
பிரதேசங்களும் ஓரே வழக்கைக் கைக்கொள்வது; பரவலாக அவதானிக்கக்
கூடியதாக இருக்கும்.
ஆனால் பேச்சுவழக்கு பிரதேசம்;வயது என்பவற்றை ஒட்டி மாறுப்படுவதை
அவதானித்துள்ளேன்.
இரவு 12 மணிக்கும் காலை 6 மணிக்குமிடைப்பட்ட நேரம் அதிகாலை என
எழுத்து வழக்கம் இருந்த போதும் பேச்சுவழக்கில் பல சொற்களைக் கேட்டுள்ளேன்.
விடியற்காலை; விடியப்புறம்;வெள்ளனக்காத்தாலை;வெள்ளன;காலைக்கருக்கல்;
வெள்ளாப்பு இப்படியான சொற்களும்; அதிகாலை 5 மணியை சேவல் கூவும் நேரம்;
விடிவெள்ளி காரிக்கும் நேரம்; ஏன் ? நவீன காலத்தில் "முதல் பஸ் போற நேரம்"
எனக் கூடக் கூறுவோரும் உண்டு
11 மணிமுதல் மாலை 2 மணி வரை மதியம்;பகல் என்பது எழுத்து வழக்கில் இருக்கிறது.மத்தியானம்,பகல் என்பதே பெரும்பாலும் புழக்கத்தில் உண்டு.
பகல் 12 மணியை நண்பகல் என எழுத்துப் பழக்கம் இருந்தபோதும். மத்தியானம்,
உச்சி வெய்யில் எறிக்கையில் எனப் பேச்சுவழக்கில் கூறுவோரும் உண்டு.
மாலை 3 மணியில் இருந்து 6 மணிவரை..எழுத்துப் புழக்கம் மாலை; ஆனால் பேச்சில்
பல சொல் புழங்கும்.
பின்னேரம்; பொழுது சாய்தல்;அந்திப்பொழுது;மாலைக் கருக்கல்;பொழுது படுதல்
மாலை 6 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை இரவு என எழுத்திலும்
பேச்சுவழக்கிலும் புழங்குவர்.
இரவு 12 மணியை ,எழுத்தில் நள்ளிரவு எனக் குறிப்பிடுவர். பேச்சுவழக்கில்
நடுச்சாமம்; நடுராத்திரி;அர்த்தராத்திரி,நடுநிசி எனவும் குறிப்பிடக்
கேட்டுள்ளேன்.
வேறு ஈழத்தவர் வந்து கருத்துக் கூறுவார்களோ பார்ப்போம்.
அடுத்து...இந்த ஏற்பாடு எனும் சொல் எனக்கு இந்த இடத்திலும் பாவிக்கலாம்
என்பது புதியது.ஈழத்தில்; இதைத் "ஒழுங்குபடுத்தல்";எனும் பொருளிலே
புழங்குவோம்.
உதாரணமான: ஒரு விழாவுக்கு பேச்சாளரை ஏற்பாடு செய்தல்; ஒருவர்
தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்தல்;ஓருவர் பயணம் செய்ய வண்டி ஏற்பாடு
செய்தல்.இப்படியே புழங்குவோம்.

March 17, 2007 3:58 PM

Kavinaya said...

இப்பதான் 'அந்தி நேரத்தில்' அப்படின்னு ஒரு பதிவு இட்டுவிட்டு வந்தேன்; பார்த்தா நீங்களும் பொழுதுகள் குறித்து எழுதியிருக்கீங்க! எற்பாடு புதுசா கத்துக்கிட்டேன். நன்றி, கோவி. கண்ணன், குமரா!

குமரன் (Kumaran) said...

எற்பாட்டிற்கு நீங்கள் இராம.கி. ஐயாவிற்குத் தானே நன்றி சொல்லியிருக்க வேண்டும்? நானெல்லாம் அந்த மலைக்கு முன் மடுவளவு கூட இல்லை. :-)

Kavinaya said...

இராம.கி. ஐயாவிற்கு மிக மிக நன்றி!

குமரன் (Kumaran) said...

:-))

R.DEVARAJAN said...

பகற்பொழுதிற்கு - முற்பகல், நண்பகல் (நடுப்பகல்),பிற்பகல்

இரவுப்பொழுதிற்கு - முன்னிரவு, நள்ளிரவு, பின்னிரவு
என்று குறிப்பிடுவதே முறை.

‘மதியம்’ என்பது நிலவைக் குறிக்கும் சொல்;
‘மத்யாநம்’ எனும் வட சொல்லின் மருஉ.

Diya Ar said...

காலை வணக்கம் தமிழ் வேறு பெயர்கள் கொண்டு எவ்வாறெல்லாம் கூறலாம்

எதுக :. இனிய காலை வணக்கம். காலை வணக்கம் ‌

Unknown said...

வெள்ளைக்காரன் குட் மார்னிங் என்று சொல்லுவது போல நாமும் காலை வணக்கம் என்று சொல்லவேண்டியதில்லை வணக்கம் சொன்னால் போதும் அல்லது தமிழ் வணக்கம் குறள்வணக்கம் நல் வணக்கம் என்றெல்லாம் கூட சொல்லலாம்