Thursday, June 19, 2008

பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்


பல பல வேடமாகும் பரன் நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

பல பல வேடமாகும் பரன் - அடியார்கள் வேண்டிய வடிவங்களில் எல்லாம் தோன்றி அருள் புரியும் பரமன்

நாரி பாகன் - பெண்ணாகிய உமையன்னையைத் தன் உடலில் பாதியாகக் கொண்டவன்

பசுவேறும் எங்கள் பரமன் - விடையின் மேல் ஏறும் எங்கள் பரமன்

சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து - நீர்மகளாகிய கங்கையையும் எருக்கம் பூக்களையும் தன் திருமுடி மேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - தானாகவே (என் முயற்சி சிறிதுமின்றி அவன் அருளாலே அவனாகவே) என் உள்ளம் புகுந்து நிலைநின்றதனால்

மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும் - மலரில் வாழும் பிரமனும் திருமாலும் வேதங்களும் தேவர்களும் எல்லோருக்கும் முடிவினை ஒரு காலத்தில் வந்து நடத்தும் காலனும் அது போன்ற பலவும்

அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அலைகடலில் இருக்கும் மேரு மலை போல் மிக நல்லவை; அவை அடியார்களுக்கும் மிக மிக நல்லவை.

2 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'கோளறு பதிகம்' பதிவில் 10 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

14 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...
எருக்கம்பூ பூத்தால் என்ன எட்டி காய்த்தால் என்ன என்று கூறுவார்கள்.அதவது எருக்கம் பூ ஒன்றுக்கும் உதவாது என்பர்கள். அதில் இரண்டு வகை உண்டு நீலம் வெள்ளை. நீலக்கலர் பூவை கணபதிக்கு சதுர்தித்தியன்று பூஜை செய்வார்கள்.வெள்ளைப்பூவை சிவனுக்கு சூட்டுவார்கள்.வெள்ளெருக்கம் சடைமுடியான் வெப்பெடுத்த திருமேனி என்று கம்பர் இராவணனுடைய சடலத்தை பற்றிகூறுவார்.நம்மால் தள்ளப்பட்ட பொருளையும் உவந்து ஏற்று அவனுக்கு வேண்டியது வேண்டாதது என்றே கிடையாது என்பதை நமக்கு உணர்த்துகிறார்.காலன் விளக்கம் சரியா? தி.ரா.ச

June 10, 2006 6:53 AM
--

rnateshan. said...
thank you very much kumaran!!

June 10, 2006 8:29 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் தி.ரா.ச. எருக்கம் பூ யாரும் புழங்காத இடத்தில் தான் வளரும் என்றும் படித்திருக்கிறேன். பிள்ளையாருக்கும் ஐயனுக்கும் மட்டும் எருக்கம் பூ மாலை இடுகிறார்கள். மற்றவருக்கு இல்லை. நீங்கள் சொன்னபடி வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் இறைவன் என்பதைத் தான் இது காட்டுகிறது போலும்.

வருகாலம் என்பதற்குச் சரியான பொருள் என்னவாக இருக்கும் என்று நீங்கள் எண்ணுவதைத் தயவுசெய்து சொல்லுங்கள் தி.ரா.ச. எனக்கு நேரடிப் பொருள் தோன்றாமல் கொஞ்சம் சிந்தித்துத் தான் இந்தப் பொருள் எழுதினேன். தவறாக இருக்கலாம். தயங்காமல் சொல்லுங்கள்.

June 10, 2006 3:01 PM
---

குமரன் (Kumaran) said...
Any time Natesan Sir

June 10, 2006 3:01 PM
---

G.Ragavan said...
இந்த எருக்கம்பூவுக்குக் கூதாளம் என்றும் பெயருண்டு என நினைக்கிறேன். கூதாள கிராத குலிக்கிறைவா என்று அநுபூதியும் சொல்கிறதே.

இரண்டும் ஒன்றுதானா என்று தெரிந்தவர் சொல்லுங்களேன்.

June 10, 2006 11:46 PM
--

வல்லிசிம்ஹன் said...
நன்றி குமரன்.சிவன் எப்போதுமே வேண்டாததை மட்டும் எடுக்க வில்லை. நமக்கு வேணும் என்பவர்களையும் வைத்து இருக்கிறார்.கங்கைஅம்மா, பார்வதி அம்மா எல்லாம் சும்மாவா?
என் உடல்(மன) நலத்திற்கு இந்தப் பதிகம் தெளிவு தருகிறது.

June 11, 2006 4:03 AM
---

குமரன் (Kumaran) said...
கந்தரனுபூதிக்குப் பொருள் சொல்லும் திறமை எனக்கு இல்லை இராகவன். எஸ்.கே., ஜெயச்ரீ, இராமநாதன், கொத்ஸ் யாராவது சொல்கிறார்களா பார்ப்போம்.

June 11, 2006 2:00 PM
---

குமரன் (Kumaran) said...
ஆமாம் வல்லி அம்மா. நமக்கு வேண்டுவது, வேண்டாதது இரண்டையும் தான் ஐயன் வைத்திருக்கிறார். மிக்க நன்றி.

June 11, 2006 2:01 PM
---

சிவமுருகன் said...
//அலைகடலில் இருக்கும் மேரு மலை போல் மிக நல்லவை; அவை அடியார்களுக்கும் மிக மிக நல்லவை.//

அலைகடலில் மேருவை நிறுத்தியதால், நிலவு முதல் அமுதம் வரை உலகை காக்கும் பல தேவ பொருட்களும், உலகுக்கு செல்வங்களை வழங்கும் திருமகளும் வந்தாள் அதே போல் எல்லாம் நன்மையே நடக்கும் என்பதை ஒரே வார்த்தையில் (அலைகடல்மேரு) சொன்ன சம்பந்தர், உண்மையில் திருஞானசம்பந்தரே.

June 12, 2006 3:02 AM
--

johan -paris said...
அன்புக் குமரா!!
"பசுவேறும் எங்கள் பரமன்"- உண்மையில் சிவனின் வாகனம் ;எருதா,,,பசுவா. விடை என்பது பசுமாட்டையா????எருத்து மாட்டையா,,,,,.
சாதாரண எருக்கம்பூ ஊதா நிறமா,,, நீல நிறமா,,,??,தி.ரா.ச ,,,நீலமெனக் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கவும்
யோகன் பாரிஸ்

June 12, 2006 6:14 AM
---

குமரன் (Kumaran) said...
சிவமுருகன் நீங்கள் சொல்லும் மலை மேருமலை தானா? அது மந்தர மலை அல்லவா? மந்தர மலையை தானே மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள்? அப்போது தானே நீங்கள் சொல்லும் எல்லாமே வந்தன?

June 12, 2006 6:20 PM
--

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. சொல் ஒரு சொல் வலைப்பூவில் மாடு என்ற தலைப்பில் நம் இராகவன் எழுதிய பதிவில் பசு என்ற சொல் வடமொழியில் எப்படிப் பயன்படுகிறது என்று பார்த்தோமே. வடமொழியில் பசு என்றால் விலங்கு என்று பொருள். இங்கே அந்த முறையில் தான் சம்பந்தர் பசு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன்.

எல்லா இடத்திலும் எருது தான் சிவபெருமானின் வாகனமாக வருகிறது. விடை என்பது எருதினைத்தான். இங்கே பசு என்ற சொல்லை எருது என்ற பொருளில் பயன்படுத்துகிறார் சம்பந்தர். சேவற்கொடியோன் என்றும் கோழிக்கொடியோன் என்றும் முருகனைச் சொல்வதில்லையா? அது போல என்றும் சொல்லலாம்.

ஊதாவும் நீலமும் ஏறக்குறைய ஒரே போல் தெரிவது தானே பல முறை? என் மகளிடம் ஊதாவை நீலம் என்றும் நீலத்தை ஊதா என்றும் கூறி அவளால் பலமுறை திருத்தப் பட்டிருக்கிறேன். :-)

June 12, 2006 6:25 PM
---

Venkataramani said...
'ஆறு' விளையாட்டுக்கு உங்களை கூப்பிட்டிருக்கேன். இதை பாருங்க.

June 14, 2006 10:23 PM
---

குமரன் (Kumaran) said...
ஆறு விளையாட்டிற்கு அழைத்ததற்கு நன்றி வெங்கடரமணி. விரைவில் ஆறு பதிவு போடுகிறேன்.

June 16, 2006 10:13 AM

Kavinaya said...

ஆகா, விளக்கமும், பின்னூட்டங்களும் அருமை. நம்மால தள்ளப்பட்டதையும் ஏற்றுக் கொள்ளும் இறைவன், நம்மையும் தள்ளாமல் ஏற்றுக் கொண்டு அருள்வானாக!