Wednesday, October 27, 2010

இன்பத்துப் பால்: நாணுத்துறவுரைத்தல் - 2





'நாணமும் இல்லை. ஆண்மையும் இல்லை. இரண்டுமே காதல் என்னும் கடும்புனலால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. என் காதல் நிறைவேற மடல் ஏறியே தீருவேன்' என்று சொல்லிக் கொண்டே வரும் காதலன் வாய்மொழியாக இன்னும் சில குறள்கள் இந்த அதிகாரத்தில் இருக்கின்றன.

மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண்.


என் காதலியை நினைத்து நினைத்து எல்லோரும் உறங்கும் இரவிலும் என் கண் உறங்குவதே இல்லை. அதனால் மடல் ஊர்தலைப் பற்றி நடு இரவிலும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் - மடல் ஏறுவதைப் பற்றி நடு இரவிலும் நினைப்பேன்

மன்ற - உறுதியாக

படல் ஒல்லா பேதைக்கு என் கண் - பேதையான என் காதலியை எண்ணி என் கண்கள் மூடாது.

'மடல் ஏறுவேன் மடல் ஏறுவேன் என்கிறீர்களே. இதோ பொழுது கழிந்துவிட்டது. இனி மேல் எப்படி மடல் ஏறப் போகிறீர்?' என்று வினவிய தோழியிடம் காதலன் கூறியது இது.

'பொழுது சாய்ந்துவிட்டது; இரவு வந்துவிட்டது என்று ஊரார் வேண்டுமானால் உறங்கலாம். ஆனால் என் காதலியின் நினைவால் என் கண் உறங்குவதே இல்லை. அதனால் நள்ளிரவானாலும் மடல் ஏறுதல் பற்றி நான் நினைக்கிறேன். அதனை செயல்படுத்தவும் செய்வேன்' என்றான்.

இன்றைக்குப் போய் நாளை வாரும்; தலைவியைக் காணலாம் என்று தோழி சொல்லாமல் இப்போதே இருவரையும் கூட்டி வைக்க வேண்டும் என்பது காதலன் நோக்கம். அதனால் நடு இரவானாலும் நீ எங்களைச் சேர்த்து வைக்கவில்லை என்றால் மடலேறுவேன் என்கிறான்.

***

கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணில் பெருந்தக்கது இல்.


கடல் போலக் கரையற்ற காதல் நோயால் வருந்தினாலும் அதை நீக்குவதற்காக மடல் ஏறத் துணியாத பெண்ணினத்தைப் போல் பெருமையுடையது எதுவுமே இல்லை.

கடல் அன்ன காமம் உழந்தும் - கடலைப் போல் கரையில்லாத காதல் நோய் உற்று வருந்தினாலும்

மடல் ஏறாப் - மடல் ஏறுவதைப் பற்றி எண்ணாத

பெண்ணில் பெருந்தக்கது இல் - பெண்ணைப் போல் பெருமையுடைய ஒன்று இல்லை.

'பேதை என்று எங்கள் தலைவியைச் சொன்னீரே. பேதையர் அன்றோ காம நோயால் வருந்தி மடல் ஏறத் துணிவார்கள். பேரறிவினராகிய நீர் அப்படி மடல் ஏறத் துணியலாமா? அது உம் அறிவுண்மைக்குப் பொருந்துமா?' என்று தோழி கேட்க, 'பெண்களைப் போல் பெருமையுடைய இனம் இல்லை. கடல் போல் காதல் நோய் இருந்தாலும் அதனை நீக்க பெண்கள் மடலேறுவதில்லை. நான் பெருமை மிக்க பெண்ணினத்தைச் சேர்ந்தவன் இல்லை. அதனாலே தான் என்னால் இத்துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை' என்றான் காதலன்.

***



தன் காதல் எப்படி எல்லாம் தன்னையும் தன் நாணத்தையும் மீறி வெளிப்படுகின்றது என்று தலைவி சொல்வதாக அமைகின்றன அடுத்து வரும் குறட்பாக்கள்.

நிறை அரியர் மன் அளியர் என்னாது காமம்
மறை இறந்து மன்று படும்.


எனது காதல் பெருக்கு, நற்குணங்கள் உள்ளவள் இவள்; அதனால் இவளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் நினைக்காது; எளியவள் இவள்; அதனால் இவளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று நினைக்காது. என்னையும் என் நாணத்தையும் மீறி என் காதல் மறைவாக இருந்த நிலை நீங்கி ஊரறிய மன்றத்தில் ஏறும்.

நிறை அரியர் மன் - குணங்களால் சிறந்தவர் அதனால் அரியவர் (என்றோ)

அளியர் - எளியவர் (என்றோ)

என்னாது - என்று நினைக்காது

காமம் - என் காதல்

மறை இறந்து - மறைவிலிருந்து நீங்கி

மன்று படும் - எல்லோரும் அறிய வெளிப்படும்

நற்குணங்கள், நல்ல பண்புகள் உடையவரைக் காம நோய் 'இவர்கள் அரியவர்' என்று எண்ணி விட்டுவிடலாம். இல்லையேல் 'எளியவர்' என்று எண்ணி விட்டுவிடலாம். இவ்விரண்டும் இங்கே நடக்கவில்லை. இவளது நிறை எல்லாம் நீங்கும் படி ஊரார் அறிய இவள் காதல் தானே வெளிப்படுகிறது.

***

அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.


இப்படியே மறைந்து இருந்தால் யாருக்கும் தெரியாது என்று எண்ணியோ என்னவோ என் காம நோய் இவ்வூரின் நடுவே வெளிப்பட்டு அம்பலும் அலரும் ஆயிற்று.

அறிகிலார் எல்லாரும் என்றே - எல்லோரும் அறியவில்லை என்று எண்ணிக் கொண்டு

என் காமம் - என் காதல்

மறுகின் மறுகும் மருண்டு - என்னையும் மீறி மிகவும் வேகவேகமாக வெளிப்பட்டுவிட்டது

காதல் நோய் எத்தனை தான் மீறினாலும் என் நாணத்தால் அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தேன். இப்படியே மறைவாகவே இருந்தால் யாரும் என் காதலை அறியமாட்டார்கள் என்று நினைத்ததோ என்னவோ என் காதல். ஊரார் அறிய மன்றுபட்டது.

***


யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம் பட்ட தாம் படாதவாறு.


என் கண்ணெதிரேயே என் காதலைக் குறித்து நான் பட்ட பாடு தான் படாத அறிவில்லாதவர் நகைக்கின்றார்கள்.

யாம் கண்ணின் காண நகுப - நான் கண்ணால் காணும் படி நகைக்கிறார்கள்

அறிவில்லார் - அறிவில்லாதவர்கள்

யாம் பட்ட தாம் படாதவாறு - நான் படுவதை அவர்கள் படாததால்

'அலர் தூற்றுவது மட்டும் இல்லை. நான் காணவே என் கண் எதிரேயே சிலர் நகுகின்றார்கள். நான் பட்ட பாடு அவர்கள் பட்டிருந்தால் காதல் நோயின் கடுமை பற்றிய அறிவு அவர்களுக்கு இருக்கும். அந்த அறிவு இல்லாததால் தான் இப்படி நகைக்கிறார்கள்' என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள் தலைவி.

'என் உணர்வுகளை நீ அறிய மாட்டாய். ஏனென்றால் நானல்ல நீ' என்று சொல்வது போல் ஏதோ ஒரு அண்மைக்கால பாட்டும் வருமே? பாடல் வரிகள் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா?

Saturday, October 23, 2010

இன்பத்துப் பால்: நாணுத்துறவுரைத்தல் - 1




வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாலோ ஊரார் பழிச்சொற்களை அஞ்சியோ தலைவியைக் காண முடியாமல் தவிக்கும் தலைவன், தன் காதலை ஊரார் அறியச் சொல்லித் தலைவியை மணப்பதற்காகத் தன் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்று கூறுவது 'நாணுத்துறவுரைத்தல்' என்னும் இந்த அதிகாரம்.

***

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி.

காதல் மிகுந்ததால் வருந்தி காதலியைக் காண முயன்றும் இயலாதவருக்கு தமது உயிரைக் காக்கும் காப்பாக அமைகின்றவற்றில் மடல் ஏறுதலே மிகுந்த வலிமையுடையதாகும்.

காமம் உழந்து வருந்தினார்க்கு - காதல் மிகுந்து முயன்று வருந்தியவர்களுக்கு

ஏமம் - காப்பாக அமைவதில்

மடல் அல்லது இல்லை வலி - மடலை விட வலிமையானது இல்லை.

காதலன் கூற்றாக அமைகிறது முதல் குறள். காதலியைக் கண்டு இயற்கைப் புணர்ச்சியில் மகிழ்ந்து காலம் கழிக்க உதவியாக இருந்த தோழி இப்போது அந்த உதவியைச் செய்ய மறுத்த போது காதல் நோயால் மிகுந்த துன்பம் கொண்ட தலைவன் மடல் ஏறுவதை விட வேறு வழி தனக்கு இல்லை என்று கூறுகிறான்.

தலைவி காவலில் இருந்தாலும் தோழியின் உதவி இருந்தால் காவலைக் கடந்து தனது காதலியைக் காண்பான் தலைவன். பெற்றோரும் உற்றோரும் அறியாமல் தலைவனும் தலைவியும் சேர்ந்து வீட்டை விட்டுச் செல்வதற்கும் (உடன்போக்கு) தோழியின் உதவி வேண்டும். இப்படி காதல் மிகுந்து வாடுபவர்களுக்கு காப்பாக அமையும் சில வழிகள் உண்டு. இங்கே அவை பயன் தராமையால் மடல் ஏறுவதே சிறந்த காப்பு. அதனால் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்கிறான் காதலன்.

***

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து.


காதலியின் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தைப் பொறுக்காத உடம்பும் உயிரும் நாணத்தை நீக்கி வேறிடத்தே நிறுத்திவிட்டு மடல் ஏறும்.

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - பொறுக்க முடியாத உடம்பும் உயிரும் மடல் ஏறும்

நாணினை நீக்கி நிறுத்து - நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு.

'ஊராரின் மதிப்பில் உயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர். அந்த மதிப்பை இழக்கும் படி உமது நாணத்தை விட்டுவிட்டு உம்மால் மடல் ஏற இயலாது' என்று கூறிய தோழியிடம் காதலன் கூறியது இது.

'காதல் மிகுதியால் பிரிவுத்துன்பம் மேலிட்டு என் உடலுடன் உயிர் நிற்காது போலிருக்கிறது. அதனால் எனது நாணத்தை தனியே நீக்கி நிறுத்திவிட்டு உயிரும் தூண்ட உயிரும் உடலும் இரண்டுமே சேர்ந்து மடல் ஏறும். இது உறுதி' என்றான் காதலன்.

நாணம் உடலைக் கூனிக் குறுகச் செய்யும். ஆனால் உயிரும் இங்கே துன்பப்படுவதால் அந்த உயிரின் தூண்டுதலால் துன்பத்தைப் பொறுக்காத உடலும் உயிரும் ஒருங்கே மடல் ஏறத் துணிந்துவிட்டன என்கிறான் காதலன்.

***



நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

நாணமும் நல்ல ஆண்மைக்குணமும் முன்பு உடையவனாக இருந்தேன். ஆனால் இன்றோ காதலில் துன்பப்படுபவர்கள் ஏறும் மடல் என்பதை மட்டுமே உடையவனாக ஆனேன்.

நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணத்தொடு நல்லாண்மையும் முன்னர் உடையவனாக இருந்தேன்.

இன்று உடையேன் காமுற்றார் ஏறும் மடல் - இன்றோ காதல் கொண்டவர்கள் ஏறும் மடலை உடையவனாக இருக்கிறேன்.

'இழிவிற்கு அஞ்சும் நாணத்தை மட்டுமே உம்மால் விட இயலும். ஒன்றிற்கும் தளராத ஆண்மைக் குணம் உம்மிடம் இருக்கிறது. அதனால் காதல் துன்பத்தால் தளர மாட்டீர். மடலும் ஏற மாட்டீர்' என்று கூறிய தோழியிடம் காதலன் கூறும் மறுமொழி இது.

'நாணத்தையும் எதற்கும் தளராத ஆண்மையையும் உடையவனாக முன்னர் இருந்தேன். ஆனால் இப்போதோ காதலியின் பிரிவால் நாணத்தையும் ஆண்மைக் குணத்தையும் இழந்து காதலர்களின் ஒரே கதியான மடல் ஏறுதல் மட்டுமே உடையவனாக இருக்கிறேன்' என்று கூறுகிறான் காதலன்.

***



காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

நாண், நல்லாண்மை என்னும் படகுகளை காதல் என்னும் காட்டுவெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே.

காமக் கடும்புனல் - காதல் என்னும் கடுமையான வெள்ளம்

உய்க்குமே - அடித்துக் கொண்டு செல்லுமே

நாணொடு நல்லாண்மை என்னும் புணை - நாணத்தொடு ஆண்மை என்னும் மிதவைகளை.


'எல்லா துன்பங்களையும் உமது நாணம், எதற்கும் தளராத ஆண்மை என்னும் குணங்களால் தாண்டுவீர்களே' என்ற தோழியிடம் 'நாணம், நல்ல ஆண்மை என்னும் மிதவைகள் வேறு ஆறுகளைக் கடப்பதற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம். இந்த காதல் என்னும் காட்டு வெள்ளத்தைக் கடப்பதற்கு உதவவில்லை. இந்தக் கடும்புனல் அவற்றை அடித்துக் கொண்டு செல்கிறது' என்று கூறினான் காதலன்.

***

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

மாலை போல் தொடுக்கப்பட்ட சிறிய வளையல்களை உடைய என் காதலி தான் மாலை நேரத்தில் என்னை நோகவைக்கும் துயரத்தையும் அந்தத் துயரத்தைத் தாங்க முடியாமல் ஏறும் மடலையும் தந்தாள்.

தொடலைக் குறுந்தொடி தந்தாள் - மாலை போல் தொடுக்கப்பட்ட சிறிய வளையல்களை உடைய தலைவி தந்தாள்

மடலொடு - மடல் ஏறுதலுடன்

மாலை உழக்கும் துயர் - மாலை நேரத்தில் என்னை நோகவைக்கும் துயர்.

'நாணத்தையும் ஆண்மையையும் விடும்படியான இந்த நிலைமையை நீர் எப்படி அடைந்தீர்?' என்று வியந்த தோழியிடம் 'இந்தத் துன்பத்தையும் மடலேறும் துணிவையும் தந்தவள் உன் தலைவி தான்' என்று சொல்கிறான் தலைவன்.

காதல் நோய் எல்லா நேரத்திலும் துன்பத்தைக் கொடுத்தாலும் மாலை நேரத்தில் மிகுதியான துன்பத்தைக் கொடுக்கும் என்பதால் அதனை 'மாலை உழக்கும் துயர்' என்றான் தலைவன்.

தலைவி மிகவும் மென்மையானவள் என்றும், அவள் தானே ஒன்றைச் செய்யும் வயதினள் இல்லை; தோழியின் காவலில் இருக்கும் இளவயதினள் என்றும் கூறுவதற்காக மாலை போல் தொடுக்கப்பட்ட சிறிய வளையலை அணிந்தவள் என்று தலைவியைக் குறித்தான். அவள் தந்த நோயை அவளே போக்க வேண்டும். அவள் தோழியின் காவலில் இருப்பதால் தோழியே அதற்கு உதவ வேண்டும் என்று குறிப்பால் வேண்டினான்.

(தொடரும்)

Friday, October 15, 2010

இன்பத்துப் பால்: நாணுத்துறவுரைத்தல் - முன்னுரை

தலைவனும் தலைவியும் ஒருவர் மேல் ஒருவர் அளவில்லாத காதல் கொண்டு, தாய் தந்தையர் உற்றார் உறவினர் ஊரார் என யாரும் அறியாமல், சில நேரங்களில் நெருங்கிய தோழியர்களும் அறியாமல், திருமணத்திற்கு முன்னரே சேர்ந்து வாழ்வது சங்க காலத்தில் ஏற்கப்பட்ட இலக்கிய மரபாக இருந்தது. அதனைக் களவியல் என்றார்கள். அனைவரும் அறிய மணம் செய்து கொண்டு வாழ்ந்ததை கற்பியல் என்றார்கள்.

தமிழ்ப்பெருந்தெய்வங்களான கண்ணனும் முருகனும் இரு வகைகளிலும் திருமணம் செய்திருப்பதாகச் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தொழுனைக் கரையில் அண்டர் மகளிரை கண்ணன் களவு மணம் செய்ததையும் ஏறுகள் ஏழினைத் தழுவி நப்பின்னையைக் கற்பு மணம் செய்ததையும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அதே போல் முருகன் வள்ளியை களவு மணம் புரிந்ததையும் கற்பின் வாணுதலான தேவசேனையை கற்பு மணம் புரிந்ததையும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழ்க்கடவுளர்கள் இருவரும் இவ்விரு வகை மணங்களும் செய்திருக்கும் செய்தி இவ்விரு வகை மணங்களும் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தன என்பதை காட்டுகிறது.

அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வகைகளில் பாக்களை உடைய வள்ளுவத்தை இயல்களாகவும் முன்னோர் பகுத்து வைத்திருக்கிறார்கள். இன்பத்துப்பாலில் அப்படி அமைந்த இயல்கள் இரண்டு - களவியல், கற்பியல்.

இது வரை இந்தத் தொடரில் களவியலில் அமைந்த 'காதற்சிறப்பு உரைத்தல்' என்ற அதிகாரம் வரை பொருள் கண்டோம். அந்த அதிகாரத்தில் காதலனுக்கும் காதலிக்கும் இடையே உள்ள அளவில்லாத அன்பைக் காதலை உரைக்கும் அவர்களின் வாய்சொற்களைக் கண்டோம்.

களவியலில் நாட்கள் மகிழ்வுடன் சென்றன அவ்விருவருக்கும். அரசல் புரசலாக ஊராருக்கு இவர்களின் களவொழுக்கம் தெரிய வந்ததால் அவர்கள் ஒருவருக்கொருவர் அலர் பேசத் தொடங்கினர்; அதாவது சாடைமாடையாகக் கேலி பேசத் தொடங்கினர். அதுவரையில் இவ்விருவரும் இணைந்து இன்பம் துய்ப்பதற்கு உதவியாக இருந்த தோழியும் இவர்கள் சந்திப்பைத் தடுக்கத் தொடங்கினாள். பிரிவினால் காதலர்களின் காதல் பெருகியதே ஒழிய குறையவில்லை.

சங்க காலத்தில் இப்படி பிரிவினால் வருந்திய காதலன் தனது காதல் நோய் தீர மடலேறுதல் என்றொரு வழியைப் பின்பற்றியதாக இலக்கிய மரபு கூறுகிறது. ஊரார் கேலி பேசுவார்களே என்று எண்ணி நாணாமல் அந்த நாணத்தைத் துறந்து மடலேறுவேன் என்று கூறிய வாய்மொழிகளைக் கூறும் அதிகாரம் என்பதால் இந்த அதிகாரத்திற்கு 'நாணுத்துறவுரைத்தல்' என்ற பெயர் அமைந்தது.

மடல் என்றால் என்ன? அதில் ஏறுதல் என்றால் என்ன? அதனால் என்ன பயன்?

பனை மரத்தின் மட்டையைத் தான் மடல் என்றார்கள். அது இரண்டு பக்கமும் கூராக இருக்கும். குதிரையின் உருவத்தை அந்த கூரான பனை மட்டைகளால் செய்து, கீழே உருளை வைத்து, அதனை உருட்டிக் கொண்டு ஒரு நாற்சந்தியில் நிறுத்தி, அதன் மேல் ஏறி அமர்ந்து கொள்வான் காதலன். அப்போது அவன் மானத்தை மறைக்கும் அளவிற்கு ஆன உடையை மட்டுமே அணிந்திருப்பான். உடல் முழுவதும் சாம்பலைப் பூசியிருப்பான். கையில் காதலியின் உருவத்தை வரைந்த ஓவியத்தை வைத்துக் கொண்டு அதனையே பார்த்துக் கொண்டிருப்பான். சில நேரம் காதலன் ஏறி அமர்ந்திருக்கும் அந்த மடற்குதிரையைச் சிறுவர்கள் தெருத் தெருவாக இழுத்துச் செல்வார்கள்.

இப்படி நாணத்தை விட்டு தன் காதலை ஊரறிய வெளிப்படுத்தி மடலேறிய காதலனைக் கண்ட ஊரார்கள் அவனது அடக்க இயலா காதலை உணர்ந்து காதலியின் வீட்டாருடன் பேசி இருவரையும் இணைத்து வைப்பார்கள்.

மடலேறுவேன் என்று காதலன் கூறுவதும் மடலேறாதே என்று தோழி மறுத்துரைப்பதும் என்றே தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலான இடங்களில் வந்துள்ளது. அதனால் சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் இந்த மரபு உண்மையில் இருந்திருக்கலாம்; ஆனால் சங்க காலத்தில் அதனைப் பேசுவது மட்டுமே மரபாக இருந்திருக்கும் என்று தேவநேயப் பாவாணர் எண்ணுகிறார்.

இருக்கலாம். ஆனால் 'காதலன் சும்மா பயமுறுத்துகிறான். உண்மையிலேயே மடல் ஏறும் மரபு இப்போது இல்லை' என்று தோழிக்குத் தெரிந்திருந்தால் அவள் மீண்டும் மீண்டும் காதலனிடம் மடலேறாதே என்று மறுத்துரைத்திருக்க மாட்டாள். இலக்கியங்களில் அப்படி மறுத்துக் கூறுதல் மீண்டும் மீண்டும் வருவதால் அப்படி ஏறிய காதலர்கள் சில பேராவது இருந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். பேதையர் என்று பெண்களைச் சொன்னாலும் வெற்றுப் பயமுறுத்தலுக்கெல்லாம் பயப்படும் அளவிற்குச் சங்க கால மகளிர் பேதையர்களாக இருந்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.

நாணுத்துறவுரைத்தல் என்ற இந்த அதிகாரத்தில் சில குறட்பாக்கள் காதலன் கூறுவதாகவும் சில குறட்பாக்கள் காதலி கூறுவதாகவும் அமைந்திருக்கின்றன. அடுத்த பகுதிகளில் அந்த குறட்பாக்களையும் அவற்றின் பொருட்களையும் பார்ப்போம்.

அன்பன்,
குமரன்.

குறிப்பு: இந்த முன்னுரை பிடித்திருக்கிறதா? இது போல் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முன் முன்னுரை வேண்டுமா? இன்பத்துப்பால் அதிகாரங்களை இரு மாதங்களுக்கு ஒரு முறை பார்க்க இயலும் என்று நினைக்கிறேன். அந்த இடைவெளி சரியான இடைவெளி தானா? இடைவெளியைக் குறைக்க வேண்டுமா? என்ன நினைக்கிறீர்கள் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

Friday, October 08, 2010

ஓர் உருவம் ஒரு பெயர் இல்லாததற்கு ஆயிரம் உருவங்கள் ஆயிரம் திருப்பெயர்கள்!


உங்கள் ஊர் திருக்கோவிலில் நீங்கள் கண்டு மகிழ்ந்த தெய்வ அலங்காரங்களை தொடர்ந்து பார்த்து மகிழ்ந்து வணங்க முடியாத நிலையா உங்களுக்கு?! அதனால் ஏங்குகின்றீர்களா?

திருவிழாக்கள் நடக்கும் போது நாம் அங்கில்லையே என்று எண்ணி வருந்தியதுண்டா?

இடுகை இடும் போது அலங்காரத்துடன் கூடிய தெய்வத் திருமேனிகளின் படம் வேண்டுமென்று கூகிளாரைக் கேட்டு அவர் நீங்கள் விரும்பும் படங்களைத் தரவில்லையா?

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நீங்கள் செல்ல வேண்டிய இடம் நமது கைலாஷி ஐயாவின் பதிவுகளுக்கே!

கைலாய யாத்திரையை மேற்கொண்டவர் என்பதால் கைலாஷி! அஹோபில யாத்திரையும் மேற்கொண்டவர்! முருகான (அழகான) தெய்வத் திருமேனிகளை அழகாகப் படம் பிடித்துத் தன் பதிவில் இட்டு அனைவருக்கும் ஆனந்தம் தருகிறார் இந்த கைலாஷி முருகானந்தம்! எனக்கு இவரிடம் மிகவும் பிடித்தது இவரது பணிவும் பண்பும். இவருடைய பணிவும் பண்பும் பதிவுகளில் இருக்கும் ஒவ்வொரு சொல்லிலும் துலங்கும்!

கொஞ்சமே கொஞ்சம் இலக்கியம் தெரிந்தவர்கள் எல்லாம் அனைத்தும் அறிந்தவர் போல் ஆன்மிக சூப்பர் ஸ்டார் என்று யாராவது அழைத்தால் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் போது ஆழ்வார் அருளிச்செயல்களும் நாயன்மார் தேவாரமும் நன்கு அறிந்து தகுந்த இடத்தில் தகுந்த வகையில் தகுந்த பாடல்களை இட்டு இவர் எழுதுவதைப் பார்த்தால் இவரே ஆன்மிக சூப்பர் ஸ்டார் என்று சொல்லத் தோன்றும். இவரும் மற்ற ஆன்மீக பதிவர்களும் மலையும் மடுவும் போன்று என்று சொன்னாலும் தகும்!

இறையுருவங்களில் எனக்கு பேதமில்லை பேதமில்லை என்று பறை சாற்றிக் கொண்டே முருகன், கண்ணன், சிவன், அம்மன் என்று நேரடியாகவும் மறைவாகவும் பிற ஆன்மிகப் பதிவர்கள் பிதற்றிக் கொண்டிருக்க, அவற்றை எல்லாம் பேசாமல் கருமமே கண்ணாய் சேவையே தேவையாய் ஆலய தரிசனங்கள் செய்து, 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று எண்ணி தெய்வத் திருப்படங்களைத் தொடர்ந்து இட்டு வரும் கைலாஷி ஐயாவின் பதிவுகளை நீங்களும் தொடர்ந்து பார்த்துப் படித்துப் பாராட்டி வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

மேலே உள்ள படம் கைலாஷி ஐயாவின் பதிவில் இருந்து சுபவரம் என்ற இதழ் எடுத்து இட்ட படங்களின் தொகுப்பு. ஐயாவைப் பற்றிய சிறு குறிப்பும் அதில் இருக்கிறது.

கைலாஷி முருகானந்தம் ஐயாவின் பதிவுகள்:

அன்னையின் நவராத்திரி: அன்னையின் நவராத்திரி அலங்காரப் படங்கள்

ந்ருஸிம்ஹர்: விண்ணவனின் அலங்காரப் படங்கள்

கைலாய மானசரோவர் யாத்திரை: திருக்கயிலாய தரிசனப் படங்கள்

வைகுந்த ஏகாதசி: தமிழ்ப்பெருவிழாவான ஆழ்வார் அருளிச்செயல் விழா படங்கள்

கயிலையே மயிலை: திருமயிலை திருவிழா படங்கள்

கருடசேவை: புள்ளேறும் பெருமாளின் படங்கள்

அம்பலத்தரசே அருமருந்தே: சிவாலயங்களின் படங்கள்

திருப்பாவை: ஆண்டாளின் திருப்பாவையின் விளக்கங்கள்

திருவெம்பாவை: மாணிக்கவாசகரின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கங்கள்

அன்பன்,
குமரன்.

குறிப்பு: தொடர்ந்து இப்படி என்னைக் கவர்ந்த பதிவுகளை/பதிவர்களைப் பற்றி எழுதலாமா? என்ன நினைக்கிறீர்கள் என்று பின்னூட்டங்களில் சொல்லுங்கள்.