Saturday, May 29, 2010

பேயாய் உழலும் சிறுமனமே!


இன்று பாரதியின் நினைவு நாள். அவனது நினைவு நாளில் அவனது அழகான கவிதைகளில் ஒன்றை - பலரும் அறியாத கவிதைகளில் ஒன்றை - எடுத்துப் படித்துப் பார்ப்பது தான் அவனது நினைவிற்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலி என்று எண்ணுவதால் இதோ அவன் எழுதிய 'மனதிற்குக் கட்டளை' என்ற தலைப்பில் அமைந்த ஒரு சிறு கவிதை.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
தாயாம் சக்தி தாளினிலும்
தருமம் என யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்று உழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.


இந்தப் பாடல் மிக எளிமையான பாடல். மனம் என்பது அறிவு சொல்வதைக் கேட்காமல் உழலுவதை வேறு யாரும் சொல்லி நமக்குத் தெரிய வேண்டியதில்லை. எல்லோருக்கும் அந்த அனுபவம் உண்டு. அதனால் பாரதி தன் மனத்திற்குச் சொல்லும் இந்தக் கட்டளையை ஒவ்வொருவரும் தம் தம் மனத்திற்குச் சொல்லும் கட்டளையாகவும் அமைவது இயற்கை.

நம் மனம் தான் ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருள், அதிலிருந்து வேறொரு பொருள் என்று அலைபாய்ந்து கொண்டிருக்கிறதே. சொல்லும் சொல்லை கேட்கிறதா என்ன? நல்லது இது; இதனைக் கொள்ளுவாய் என்றால் கேட்காமல் அதிலிருந்து நழுவுகிறது. இதை விட்டுவிடு என்றால் கேளாமல் அதிலேயே போய் விழுகின்றது. எதாவது புதுமையைக் கண்டால் அதனைப் பெற விரும்புகிறது. அது கிடைக்குமோ கிடைக்காதோ என்று அஞ்சுகிறது. சில நேரங்களில் புதுமையைக் கண்டவுடன் நமக்கு அது தீங்கு செய்துவிடுமோ என்று அஞ்சுகிறது. எத்திசையில் போகக் கூடாது என்று அறிவு சொல்கிறதோ அவ்வழியிலேயே அழைத்துச் செல்கிறது. அதனால் தான் பாரதி 'பேயாய் உழலும் சிறு மனமே' என்று விளிக்கிறான் போலும்.

ஆனாலும் அதற்கு இன்னொரு முறை அறிவுரை சொல்லிப் பார்க்கிறான். 'நினது தலைவன் நானே; நான் சொல்லுவதைத் தான் இனி மேல் நீ கேட்க வேண்டும்' என்று மிரட்டிப் பார்க்கிறான். 'அன்னை பராசக்தியின் திருவடிகளிலும், இதுவே சரி என்று நான் குறிப்பதிலும் மட்டுமே நீ ஓயாது நிற்க வேண்டும்' என்று கட்டளை இடுகிறான். 'எதற்கு நான் இதைச் செய்யவேண்டும்?' என்று எப்போதும் போல் திமிறி ஓடுமே - அதற்கு விடையாக 'சொல்லிவிட்டேன். உன் தலைவனான என் சொல் கேட்டு அடங்கி நடந்து கொண்டாய் என்றால் நீயும் உய்வாய். அதனால் நானும் உய்வேன்' என்று சொல்கிறான்.

Friday, May 28, 2010

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்!

எந்தத் தருணத்தில் பாரதியார் இந்தப் பாடலை எழுதியிருப்பாரோ என்று பல முறை எண்ணுவதுண்டு. பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்று எழுதி அதில் வலுவான பல காரணங்களை அடுக்குவதற்குத் தகுந்த தருணமாக எது இருந்திருக்கக் கூடும். 'வாய்ச்சொல்லில் வீரரடி' என்று மிதவாத பேராயக் கட்சியினரைப் பழித்த பாரதியார் பின்னர் 'வாழ்க நீ எம்மான்' என்று மிதவாதிகளின் தலைவரைப் போற்றும் வகையில் மனமாற்றம் பெற்ற போது எழுதப்பட்டப் பாடலாக இருக்கலாம் என்றொரு ஊகம் உண்டு.

புகை நடுவினில் தீ இருப்பதைப் போல் பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் இருக்கிறான் என்று சொல்வது முதற்கொண்டு வாழ்க்கையில் என்னைப் பலமுறை சிந்தை செய்யத் தூண்டிய பல கருத்துகள் இந்தப் பாடலில் இருக்கின்றன. ஒவ்வொன்றாக என் விளக்கத்தைச் சொல்ல நினைத்தாலும் அது நுனிப்புல் மேய்வதாகவே அமையும். ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட இந்தப் பாடலைப் படிப்பவர்கள் என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்கள்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப்
பூமியில் கண்டோமே - நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான்
(பகை)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ? - நன்னெஞ்சே
செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக்
கொடி வளராதோ? - நன்னெஞ்சே
கொடி வளராதோ? (பகை)

உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே
உள்ளம் நிறைவாமோ?
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? - நன்னெஞ்சே
சேர்த்த பின் தேனாமோ? (பகை)

வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ? - நன்னெஞ்சே
சாத்திரம் கேளாயோ?
(பகை)

போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர்
போல வந்தானும் அவன் - நன்னெஞ்சே
போல வந்தானும் அவன்
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு
நின்றதும் கண்ணன் அன்றோ? - நன்னெஞ்சே
நின்றதும் கண்ணன் அன்றோ?
(பகை)

தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
சிந்தையில் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே
அவளைக் கும்பிடுவாய் (பகை)

காலைப் பிடித்தேன் கணபதி


காலைப் பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி
நூலைப் பல பலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன்
கோலை மனமெனும் நாட்டில் நிறுத்தல் குறியெனக்கே

மூன்று வேண்டுதல்களை இந்தப் பாட்டில் வைக்கிறார் பாரதியார். பற்பல நூற்களைச் சமைக்க வேண்டும். நொடிப்பொழுதும் வேலைத் தவறு நிகழாமல் நல்ல வினைகள் செய்ய வேண்டும். கணபதியின் ஆட்சியை மனத்தில் நிலை நிறுத்த வேண்டும்.

சரணாகதியில் இரு விதம் சொல்லுவார்கள். 'எனக்குக் குழப்பம் மிகுந்து விட்டது. அதனால் எது சரி எது தவறு என்பது புரியவில்லை. உன் சீடனாகச் சரணடைகிறேன்' என்று கூறி கண்ணனை அருச்சுனன் சரணடைந்தானே அது ஒரு வகை சரணாகதி. எல்லா நெறிகளையும் சொல்லிவிட்டு விஸ்வரூப தரிசனமும் காட்டிவிட்டு தனது பெருமைகளை எல்லாம் விவரித்து விட்டு கடைசியில் 'எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னையே சரணாக அடைவாய்' என்று கண்ணன் சொல்ல அதற்கு ஏற்ப அருச்சுனன் செய்யாமல் செய்கிறானே அது இன்னொரு வகை சரணாகதி.

இங்கே வேண்டுதல்களை வைக்கும் முன் 'காலைப் பிடித்தேன் கணபதி' என்கிறார் பாரதியார். இங்கே காலைப் பிடிக்கிறாரே அது மேலே சொன்ன இரு வகை சரணாகதியில் எந்த சரணாகதி என்று தோன்றுகிறது?

தன்னலம் மிக்கதோரு தருணத்தில் இறைவன் காலைப் பிடிப்பது முதல் வகை. அப்படியா இங்கே பாரதியார் செய்கிறார்? மேலோட்டமாகப் பார்த்தால் அவர் ஒரு புலவர்; அதனால் பல நூல்களைச் சமைக்க வேண்டும் என்று தன்னலத்துடன் வேண்டுவதாகத் தோன்றுகிறது. அப்படி பல நூல்களைச் சமைக்கும் போது அவற்றில் எந்த வேலைத் தவறும் நிகழாமல் இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் வைக்கிறார்; அதுவும் தன்னல வேண்டுதலாகத் தோன்றுகிறது. ஆனால் கடைசி வரியைப் பார்த்தால் அவர் தன்னல வேண்டுதல் வைப்பதாகத் தோன்றவில்லை. உன் ஆட்சி என் மனத்தில் நிலைக்க வேண்டும் என்று சொல்லும் போதே 'மன் மனா பவ; மத் யாஜி - என்னையே மனத்தில் வை. என்னை வணங்கு' என்றெல்லாம் கீதையில் கண்ணன் சொன்னானே அவை பிரதிபலிப்பது போல் தோன்றுகிறது.

இறைவனின் ஆட்சி மனத்தில் நிலைபெற்றால் 'செய்யும் தொழில் உன் தொழிலே; சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்' என்று இன்னொரு இடத்தில் பாடுகிறாரே அது போல் இறைவனின் கருவியாக இவ்வுலகத்தில் செயலாற்றிட முடியும். அப்படிச் செயலாற்றும் போது செய்யும் செயல்களில் தவறு நடக்காது. செயல்களும் பல மடங்கு நடக்கும். 'யோக: கர்மஸு கௌசலம் - யோகம் என்பது செய்யும் செயல்களில் முழுமை' என்று கண்ணனும் கீதையில் சொல்கிறான்.

ஆக, இந்தப் பாடலில் கணபதி காலைப் பிடித்த போது இரண்டாவது வகை சரணாகதையைத் தான் பாரதியார் செய்வதாகத் தோன்றுகிறது. பின்னர் வைக்கும் வேண்டுதல்கள் அதனை உறுதி செய்கிறது. அவன் அரசாட்சியில் மனத்தில் நிலை நிறுத்த வேண்டும்; அதனால் நூல்கள் பல பலவாய் செய்யப்படும்; நொடிப்பொழுதும் வேலைத் தவறு நிகழாதிருக்கும்; நல்ல வினைகள் செய்யப்படும். இதுவே எனக்குக் குறி. இவற்றை எல்லாம் செய்யம் நாமும் கணபதியின் தாளினை கண்ணில் ஒற்றிக் செயல்கள் செய்வோம்.

Thursday, May 27, 2010

கணபதியைப் போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்


உணர்வீர் உணர்வீர் உலகத்தீர் இங்குப்
புணர்வீர் அமரர் உறும் போகம் - கணபதியைப்
போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்
காதலுடன் கஞ்சமலர்க் கால்

அறிவொன்றே தெய்வம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துபவர் பாரதியார். சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகளைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுபவர். இறைவன் அறிவு மயமாக இருக்கிறான் என்பது ஆன்மிகம் மீண்டும் மீன்டும் வலியுறுத்தும் கருத்து. எந்த அறிவைப் பெற்ற பின் வேறு எதுவும் தெரிய வேண்டியதில்லையோ அந்த அறிவே பிரம்மம் என்று வேதங்களும் பேசும். அந்த அறிவு அன்பின் அடிப்படையில் ஆன அறிவாக இருக்கும் போது இன்னும் மேன்மை. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் என்று அன்பு, சிவம், அறிவு மூன்றையும் ஒரே மூச்சில் இணைப்பார் திருமூலர். அப்படி அன்பும் அறிவும் இணைந்த உருவாக கணபதியைப் போற்றிப் பணிந்திடுங்கள் என்று இங்கே சொல்கிறார்.

இதனை ஏன் 'உணர்வீர் உணர்வீர்' என்று இருமுறை சொல்லி வலியுறுத்தவேண்டும்? உலகத்தவர் எல்லா போகங்களையும் தேடி அலைகின்றார்கள். அதனை எந்த முறையிலேனும் அடைந்து விடத் துடிக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களிடம் ஒரு முறைக்கு இருமுறை வலியுறுத்தினாலாவது கேட்க மாட்டார்களா என்று நினைத்தார் போலும்.

கணபதியை போத வடிவாகப் போற்றிப் பணிந்தால் 'இனி மேல் என்றோ ஒரு நாள் வருங்காலத்தில்' அமரர்கள் அடையும் இன்பத்தை அடையலாம் என்று சொல்லவில்லை அவர். இங்கேயே இப்போதே அமரர் உறும் போகத்தை புணரலாம் என்று அறுதியிடுகிறார். அறிவொன்றே தெய்வம் என்ற தெளிவு வந்த பின் வேறெதையும் தேடி அலையாத மனம் கிடைத்துவிடுமே. அந்த நிலை அடைந்தால் ஆனந்தம் தானே வருமே. அதனால் 'இனி மேல்' என்றோ 'வேறுலகில்' என்றோ சொல்லாமல் இங்கேயே புணர்வீர் என்று சொல்கிறார்.

அறிவுடன் இருப்பது என்பது இறைவனுக்கு உருவம் உண்டா என்ற கேள்வியை எழுப்புவது என்றதொரு கருத்து வலிவுடன் இருக்கிறது. எல்லா உருவங்களும் ஆன இறைவனுக்கு ஓருருவம் ஒரு பெயர் என்று கற்பித்தல் மட்டுமே தவறு; ஆயிரம் உருவங்களும் ஆயிரம் பெயர்களும் இருப்பது இயற்கை. அதுவே பகுத்தறிவாக இருக்க முடியும். அறிவு வடிவமாக கணபதியைப் போற்றுங்கள் என்னும் போது அந்த அறிவு உருவமான தெய்வத்திற்கு 'உருவம்' உண்டு என்பதைக் காட்டுவது போல் 'மென்மையான மலர்க்கால்களை'ப் பணிந்திடுங்கள் என்று சொல்கிறார்.

எல்லாவற்றிலும் முத்தாய்ப்பாக இன்னொன்றையும் சொல்லுகிறார். கண்பதியை அறிவு வடிவாகப் போற்றிப் பணிந்திட்டால் மட்டுமே போதுமா? முக்கியமான ஒன்று குறைகிறதே. அந்த ஒன்று இருந்தால் தானே நிறைவு பெற முடியும். காதலுடன், அன்புடன், பக்தியுடன் அவன் திருவடிகளைத் தொழ வேண்டும் என்கிறார். அந்தக் காதல் இன்றி அறிவே உயர்ந்தது என்று எவ்வளவு தான் கூறினாலும் அது தெய்வத்தைத் தொழுவது ஆகாது. அன்புடன் கூடிய அறிவே தெய்வம் என்பதை மீண்டும் இங்கே ஒரு முறை வலியுறுத்துகிறார்.

***

நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். நான்காம் பாடல் இஃதுணர்வீரே என்று நிறைய இந்தப் பாடல் உணர்வீர் என்று தொடங்கியது. இந்தப் பாடல் கால் என்று நிறைய அடுத்தப் பாடல் காலைப் பிடித்தேன் என்று தொடங்கும். இந்தப் பாடல் வெண்பா வகையைச் சேர்ந்தது.

எதுகை: உணர்வீர் - புணர்வீர் - கணபதியை, போதவடிவாக - காதலுடன்.

மோனை: உணர்வீர் - உணர்வீர் - உலகத்தீர், புணர்வீர் - போகம், போத - போற்றி - பணிந்திடுமின், காதலுடன் - கஞ்சமலர் - கால்.

Monday, May 24, 2010

கற்பக விநாயகக் கடவுளே போற்றி!


கற்பக விநாயகக் கடவுளே போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக்கிறையவன், பண்ணவர் நாயகன்
இந்திர குரு எனது இதயத்தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்!
குணமதில் பலவாம்; கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்;
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை அதனையும்
துச்சமென்றெண்ணித் துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்; இஃதுணர்வீரே

வானுலகத்தில் இருக்கும் கற்பக மரம் வேண்டியதை எல்லாம் தரும் என்று புராணங்கள் சொல்கின்றன. விநாயகப் பெருமானும் அப்படியே. அதனால் அவருக்கு கற்பக விநாயகக் கடவுள் என்றே பெயர். 'கற்பகம் என வினை கடிது ஏகும் - கற்பகவிநாயகா என்று சொன்னால் நாம் செய்த தீவினைப் பயன்கள் எல்லாம் விரைவாக ஓடிவிடும்' என்று அருணகிரி பெருமானும் சொல்கிறார். அந்தக் கடவுளை கருத்தினில் வைத்தால் என்ன என்ன கிடைக்கும் என்று இனி சொல்லப் போவதால் தொடங்கும் போதே கற்பக விநாயகக் கடவுளே போற்றி என்று தொடங்குகிறார்.

இறைவன் அறிவே உருவானவன். அறிவின் விரிவுகளில் பல வகை இருக்கின்றன. ஓரறிவு முதல் ஆறறிவு வரை உயிரினங்களின் அறிவினைச் சொல்கிறார்கள். சித் என்பது அறிவைக் குறிக்கும் சொல். இந்த ஆறறிவிலும் மேலாக எல்லாவற்றையும் அறியும் பேரறிவாளனாக இறைவன் இருக்கிறான். அவனைச் சிற்பரன் என்கிறார். அறிவு விரிய விரிய அமைதி கூடுகின்றது. மேலான எக்குறையும் அற்ற அறிவினையுடையவனாக ஒருவர் ஆகும் போது அங்கே அமைதியுடன் மௌனமெனும் மோன நிலையும் கூடுகிறது. விநாயகப் பெருமானை சிற்பரன் என்றதோடு மோனத் தேவன் என்று சொல்லி அவனை வாழ்த்துகிறார் பாரதியார்.

முற்றறிவின், ஞானத்தின் அடையாளமாக யானையைக் கூறுவார்கள். இங்கே வாரணமுகத்தானும் (யானைமுகத்தானும்) அந்த ஞானத்தின் அடையாளமாகத் தான் நிற்கிறான். அவனுடைய மலர் போன்ற திருவடிகள் எங்கும் வெல்லட்டும். அறிவே எங்கும் வெல்லட்டும்.

முற்றறிவின் வெளிப்பாடாய் வெளிவரும் எல்லா நூல்களும் வேத நூல்களே. அவற்றினை தன் திருமுகமாகக் கொண்டவன் விநாயகன். வேதங்களைத்/ஆரணத்தைத் திருமுகமாகக் கொண்டிருக்கும் தேவனின் அருட்திருவடிகள் எங்கும் வெல்லட்டும். அறிவும் அருளும் எங்கும் வெல்லட்டும்.

கணபதி எல்லாப் படைப்புகளுக்கும் இறையவன். இறைவன் என்றால் சொத்தினை உடையவன் என்று பொருள். இங்கே படைக்கப்பட்ட எல்லாவற்றையும் உடையவன் கணபதி.

அறிவும் அருளும் அழகும் சேர்ந்து இயங்கும் இடம் கலைகளின் இடம். சிறந்த கலைகளில் இசைக்கலையும் ஒன்று. அந்த இசைக்கலையில் வல்லவர்களைப் பண்ணவர்கள் என்பர். அந்த இசைவாணர்களின் தலைவன் பண்ணவர் நாயகன் கணபதி.

நல்ல குணங்களை எல்லாம் தேவர்களாக உருவகித்தால் அந்த நற்குணங்களில் எல்லாம் சிறந்த குணமொன்றைத் தேவர் தலைவன் இந்திரன் எனலாம். கணபதி அந்த நற்குணங்கள் எல்லாம் பொருந்தியவன். இந்திரனுக்கும் குரு.

இதயத்தில் அன்பாக இருந்து அருளுபவனும் இறைவனே. அன்பும் அறனும் உடைத்தாயின் வாழ்க்கைப் பண்பும் பயனும் அது என்றார் வள்ளுவப் பெருந்தகை. அந்த அன்பும் அறனுமாக என் இதயத்துள் நின்று ஒளிர்பவன் கணபதி.

அறிவினைக் குறிக்கும் இன்னொரு சொல் மதி. மதி என்றால் சந்திரனுமாம். அந்த மதியினைத் திருமுடியில் சூடிய தலைவன் சந்திர மவுலித் தலைவன். கணபதி அந்தத் தலைவனின் மைந்தன்.

அப்படிப்பட்ட கணபதியின் திருவடிகளைக் கருத்தினில் நிலை நிறுத்துவோம்!
அப்படி நிலை நிறுத்தினால் பல பயன்கள் கிடைக்கும். அவற்றைக் கூறுகிறேன். கேளுங்கள்.

பல நேரங்களில் நம்மை நெருங்கி இருந்து யாராவது சொல்லும் சொற்கள் கூட நம் காதில் விழுவதில்லை. கவனம் எங்கோ சென்று விடுகிறது. அப்படி இருக்க, சொல்லாமல் சொல்லும் பல சொற்கள் நம் காதில் விழுந்தால் அப்படி சொல்லாமல் சொன்னவற்றைக் கேட்டு பல விதங்களில் அவர்களுக்கு நன்மைகள் செய்யலாமே. கணபதியைக் கருத்தினில் வைத்தால் காதால் கேட்க முடியாத நுண்மையான ஒலிகளையும் கேட்கும் படியான உட்செவி திறக்கும்.

கண்ணெதிரே நடக்கும் காட்சிகளில் பலவும் கவனத்தில் நிற்பதில்லை. அப்படி இருக்க எங்கேயோ நடக்கும் காட்சிகளும் அகக் கண்களுக்குத் தெரிந்து அதற்கேற்ப நாம் செயல்பட்டு மற்றவருக்கு உதவினால்? கணபதியைக் கருத்தினில் வைக்க அப்படிப்பட்ட அகக்கண்ணும் திறந்து ஒளி தரும்.

இப்படி உட்செவியும் அகக்கண்ணும் செயல்பட எட்டுத் திசைகளில் உள்ளவர்கள் எல்லாருக்கும் உதவிகள் செய்து அவர்கள் மனங்களை எல்லாம் வென்று வெற்றிக் கொடி நாட்டலாம்.

எல்லோரும் நண்பர்கள் எனும் நிலை வந்த போது யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையின்றிப் போகும். துஷ்ட மிருகங்களும் அன்புடன் பழகும். கண்ணையே செவியாக உடைய நல்ல பாம்பினையும் அன்புடன் கையிலே எடுக்கலாம்.

இந்த நிலை ஏற்பட விடத்தைக் கண்டு பயமில்லை; நோவைக் கண்டு பயமில்லை; கொடிய பகையொன்றும் இல்லாததால் பகையைக் கண்டு பயமில்லை. எல்லாவற்றையும் துச்சமென்று எண்ணி எந்தவித துயரமும் இன்றி மகிழ்ச்சியுடன் தினமும் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் ஒருவராக வைக்கப்பட்டு நிலை பெற்று ஓங்கலாம்.

எந்த வித பயமும் இன்றித் தீரும்.

உடலில் இருக்கும் யோக சக்கரங்கள் ஏழில் உச்சந்தலையில் இருக்கும் ஆயிரம் தாமரைச் சக்கரமாகிய சஹஸ்ராரத்திலிருந்து அமுதம் பொங்கும்.

எல்லா விதமாக கலைகளும் கை கூடி வரும்.

மற்றவருக்காக வாழும் வாழ்க்கையே வேள்வி எனும் இறைச்சொல்லிற்கு ஏற்ப வாழும் வாழ்க்கையாம் வேள்வி ஓங்கும்.

என்றும் நிலையாக வாழும் இறப்பிலா வாழ்வினையும் எய்தி இங்கு நாம் வாழலாம்.

இதனை உணர்வீராக.


இந்தப் பாடலை எம்.எஸ்ஸின் அமுதக் குரலில் கேட்க

***

நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். மூன்றாம் பாடல் கற்பகமே என்று நிறைய இந்த நான்காம் பாடல் கற்பகவிநாயக என்று தொடங்கும் தொடங்குகிறது. இந்தப் பாடல் இஃதுணர்வீரே என்று நிறைய அடுத்தப் பாடல் உணர்வீர் என்று தொடங்கும். இந்தப் பாடல் அகவல் பாவகையைச் சேர்ந்தது.

எதுகை: கற்பக - சிற்பர, வாரண - ஆரண, இந்திர - சந்திர, கணபதி - குணமதில், அக்கினி - திக்கெல்லாம், கட்செவி - விடத்தையும், துச்சம் - நிச்சல் - அச்சம்.

மோனை: கற்பக - கடவுளே, சிற்பர - தேவன், வாரண - மலர்த்தாள், ஆரண - அருட்பதம், படைப்பு - பண்ணவர், இந்திர - இதயம், சந்திர - தலைவன், கணபதி - கருத்திடை, குணமதில் - கூற, அக்கினி - ஆண்மை, கட்செவி - கையிலே, விடத்தையும் - வெம்பகை, துச்சம் - துயரிலாது, நிச்சலும் - நிலை, அச்சம் - அமுதம், வித்தை - வேள்வி, இங்கு - இஃது.

Friday, May 21, 2010

செய்யும் தொழில் உன் தொழிலே!


ஏதோ ஒரு காலத்தில் (கற்பத்தில்) விநாயகப் பெருமான் நான்முகப்பிரமனாக இருந்து எல்லா உலகையும் படைத்ததாக வேதங்கள் சொல்லும். கணானாம் த்வா என்று தொடங்கும் வேத மந்திரம் பிரம்ம தேவனே கணபதி என்று சொல்லும். பாரதியாரும் அந்த கருத்துப்படி பல பாடல்களில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் விநாயகரை நான்முகப் பிரம்மனாகவே எண்ணிப் பாடுகிறார். நடுவில் யானை முகனே என்று வரும் ஒரு சொல்லை மட்டும் எடுத்துவிட்டால் இது முழுக்க முழுக்க பிரம்ம தேவனைப் போற்றும் பாடலாகவே தோன்றும்.

செய்யும் தொழில் உன் தொழிலே காண்
சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்
வையம் தனையும் வெளியினையும்
வானத்தையும் முன் படைத்தவனே
ஐயா நான்முகப் பிரமா
யானை முகனே வாணிதனை
கையால் அணைத்துக் காப்பவனே
கமலாசனத்துக் கற்பகமே


செய்யும் செயல்களெல்லாம் தெய்வத்தின் செயலே என்று எண்ணிச் செயல்களை நிகழ்த்துபடி கீதையில் கண்ணன் சொல்கிறான். அந்தக் கட்டளையை அப்படியே ஏற்றுக் கொண்டு பாரதியார் இங்கே பேசுகிறார். 'செய்யும் தொழில் உன் தொழிலே காண்' என்கிறார். அடுத்து தான் பாரதியின் குறும்பு வருகிறது. நான் செய்பவை எல்லாம் உன் செயல்கள் தான் என்றவர் உன் செயல்கள் சீர் பெற்றிட வேண்டும் அதற்கு நீ அருள் செய்வாய் என்கிறார். என் செயல்கள் சீர் பெற்றிட அருள் செய்வாய் என்றால் வேன்டுதல் ஆகிவிடும். உன் செயல்கள் தான் எல்லாமே; அவை சீர் பெற்றிட நீ அருள் செய்வாய் என்றால் அது ஒரு நினைவூட்டல் மட்டும் தானே. :-)

வாணியைக் கையில் அணைத்துக் காக்கும் ஐயனே; நான்முகப் பிரமனே; யானை முகனே; தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் வேண்டியதை எல்லாம் வழங்கும் கற்பகமே! உலகங்களையும் வானத்தையும் வானவெளியையும் முன்பு படைத்தவனே! உன் செயல்களே ஆன என் செயல்கள் எல்லாம் சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்!


இந்தப் பாடலை நித்யஸ்ரீ பாடி இங்கே கேட்கலாம்.

***

நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். இரண்டாம் பாடல் செய்குவனே என்று நிறைய இந்த மூன்றாம் பாடல் செய்யும் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் கற்பகமே என்று நிறைய அடுத்தப் பாடல் கற்பகவிநாயக என்று தொடங்கும். இந்தப் பாடல் விருத்தம் என்ற பா வகையைச் சேர்ந்தது.

எதுகை: செய்யும், வையம், ஐயா, கையால்

மோனை: செய்யும் - சீர், வையம் - வெளியினையும் - வானத்தையும், ஐயா - ஆனை, கையால் - காப்பவனே - கமலாசனத்து - கற்பகமே.

Wednesday, May 19, 2010

பல பிழை செய்து களைத்தேனா?


அவரவர் செய்யும் செயலுக்கேற்ப தான் பயனும் இருக்கும். என்னை இன்று சிலர் திட்டுகிறார்கள்; எனக்குத் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால் அது நான் எப்போதோ எங்கோ செய்த வினைப்பயனே. ஆனாலும் தவறு செய்வதை நிறுத்துகிறேனா? இல்லையே. பல பிழைகள் செய்து கொண்டே தான் இருக்கிறேன். அந்த சுழலிலிருந்து தப்ப பாரதியார் ஒரு நல்ல வழியைக் கண்டு கொண்டிருக்கிறார். இந்தப் பாடலில் அதைச் சொல்கிறார் பாருங்கள்.

நீயே சரணம் நினதருளே சரணம் சரணம்
நாயேன் பல பிழை செய்து களைத்து உனை நாடி வந்தேன்
வாயே திறவாத மௌனத்திருந்து உன் மலரடிக்குத்
தீயே நிகர்த்து ஒளி வீசும் தமிழ்க்கவி செய்குவனே


முதலில் நீயே சரணம் என்றார். அவன் பாராமுகமாக இருக்கிறான். இவ்வளவு குற்றங்கள் புரிந்துவிட்டு 'ஐயா நீயே சரணம்' என்றால் நீதிபதியான அவன் எப்படி மன்னிப்பான். பார்த்தார் பாரதியார். அடுத்து நினதருளே சரணம் என்று சொல்லிவிட்டார். அவனது வேண்டுதல் வேண்டாமை இலாத குணத்தை விட அருட்குணம் தானே அடியவரைக் காக்கிறது. அதனால் நினது அருளே சரணம் என்று சொல்லிவிட்டார். நாயைப் போன்ற நான் பற்பல பிழைகளைச் செய்து கொண்டிருந்தேன். இன்றோ அவற்றை செய்து செய்து களைத்து உன்னை நாடி உன் அருளை நாடி வந்தேன். எண்ணம், செயல், சொல் இம்மூன்றிலும் வேறு எந்த வித காரியமும் இன்றி உன்னருளையே எண்ணி மற்றவற்றைப் பற்றி வாயே திறவாத மௌனத்தில் இருந்து உன் மலர் போன்ற திருவடிகளுக்குத் தீயைப் போல் ஒளி விடும் தமிழ்க்கவிதைகளைச் செய்வேன் என்கிறார். அவரோ மகாகவி. மௌனத்தில் இருந்து தமிழ்க்கவிதை செய்வார். நாம்? அவர் கவிதைகளைப் படித்து அவன் மலரடிகளைப் பணிய வேண்டியது தான். கீதையில் கண்ணன் சொன்னதும் அது தானே. பரஸ்பரம் போதயந்த: என்னைப் பற்றி ஒருவர் மற்றொருவருக்குச் சொல்லிப் பொழுதை நன்முறையில் போக்குங்கள்.

இந்தப் பாடலில் ஒன்றைக் கவனிக்கலாம். யாரைப் பாடுகிறார் என்று சொல்லவில்லை. விநாயகர் நான்மணிமாலையில் வரும் பாடல் என்பதால் அவர் பாடும் போது விநாயகரை எண்ணியேப் பாடலை இயற்றினார் என்று சொல்லலாம்.

இந்தப் பாடலை எம்.எஸ்ஸின் அமுதக் குரலில் கேட்க

***

நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். முதல் பாடல் நீயே என்று நிறைவு பெற்றது. இந்த இரண்டாம் பாட்டு நீயே சரணம் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் செய்குவனே என்று நிறைய அடுத்தப் பாடல் செய்யும் என்று தொடங்கும். இந்தப் பாடல் கலிப்பா வகையைச் சேர்ந்தது.

எதுகை: நீயே, நாயேன், வாயே, தீயே

மோனை: நீயே - நினதருளே, நாயேன் - நாடி, வாயே - மௌனத்திருந்து - மலரடிக்கு, தீயே - தமிழ்க்கவி.

விநாயகர் நான்மணி மாலை


விநாயகர் நான்மணி மாலை என்ற தலைப்பில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் புதுவை மணக்குள விநாயகப் பெருமான் மேல் ஒரு நூலை இயற்றியுள்ளார். வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற நான்கு வித பா வகைகளில் பாடல்கள் புனைந்திருக்கிறார். மொத்தம் நாற்பது பாடல்கள் இந்த நூலில் இருக்கின்றன. மிக அருமையான கருத்துகள் பல இந்தப் பாடல்களில் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சக்தி பெறும் பாவாணர் சாற்று பொருள் யாதெனினும்
சித்தி பெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தானே!
நின் தனக்குக் காப்புரைப்பார் நின் மீது செய்யும் நூல்
இன்றிதற்கும் காப்பு நீயே.


சக்தியின் அருள் பெறும் பாக்கள் இயற்றுவதில் வல்லவர்கள் எந்தப் பொருளைப் பற்றி நூற்களை எழுதினாலும் அது நன்கு அமையும் படி வாக்கு வன்மை பெற தலைவனே உனக்கு காப்புச் செய்யுள் உரைப்பார்கள். உன் மீது இயற்றப்படும் இந்த நூலுக்கும் நீயே காப்பு.

Tuesday, May 18, 2010

எங்கள் தாய்!!



நித்யஸ்ரீ பாடிய இந்த பாரதியார் பாடலின் ஒளி-ஒலிப்பேழையை யோகன் ஐயா தன் பதிவில் அண்மையில் இட்டிருந்தார். அந்தப் பாடல் எளிதான பாடல் என்றாலும் ஆங்காங்கே சொற்பொருள் கொடுக்கலாம் என்று தோன்றியதால் அந்தப் பாடலை இங்கே கொடுத்திருக்கிறேன்.



தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!


(முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும் நன்கு உணரும் பல கல்வி கற்றவர்களும் இவள் என்று தோன்றியவள் என்று சொல்ல இயலாத இயல்பை உடையவள் எங்கள் தாய்)

யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்தள்
ஆயினுமே எங்கள் தாய் - இந்தப்
பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்னப்
பயின்றிடுவாள் எங்கள் தாய்

(எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் சரியாக வகுத்துச் சொல்ல முடியாத அளவு வயதினை உடையவள் எங்கள் தாய். ஆனாலும் இந்த உலகில் எப்போதும் ஒரு கன்னிகை போல் இருப்பாள் எங்கள் தாய்)

முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்

(முப்பது கோடி மக்களை உடையவள் - தற்போது நூறு கோடிக்கும் மேலாகச் சென்றுவிட்டது - ஆனாலும் உயிர் எல்லோரிடமும் சேர்ந்து ஒரே உயிராக உடையவள். இவள் பேசுகின்ற மொழிகள் பதினெட்டாக இருந்தாலும் சிந்தனையில் ஒன்றாக இருக்கிறாள்)

நாவினில் வேதமுடையாள் கையில்
நலந்திகழ் வாளுடையாள் - தனை
மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்

(இவள் நாவினில் வேதத்தைக் கொண்டிருக்கிறாள். கையில் நன்மை விளங்கும் வாளினைக் கொண்டிருக்கிறாள். அவளை அடைந்தவர்களுக்கு இன்னருள் செய்பவள். தீயவர்களை வீழ்த்திடும் வலிமையுடைய தோளினை உடையவள்)

அறுபது கோடி தடக்கைகளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்
செறுவது நாடி வருபவரைத் துகள்
செய்து கிடத்துவள் தாய்

(அறுபது கோடி நீண்ட வலிமையான கைகளாலும் எல்லாவித அறங்களையும் நடத்துகிறாள் எங்கள் தாய். தன்னை அழிக்க விரும்பி யாராவது வந்தால் அவர்களை தூள் தூளாக்கி ஒழித்துவிடுவாள் எங்கள் தாய்.)

பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்
தோமிழைப்பார் முன் நின்றிடும் கார் கொடும்
துர்க்கை அனையவள் தாய்

(பூமியை விட பொறுமையில் சிறந்தவள். பெரும் புண்ணியம் செய்யும் மனத்தை உடையவள் எங்கள் தாய். ஆனாலும் அவளுக்குக் குற்றம் இழைப்பவர் முன் நிற்கும் கரிய கொடிய துர்க்கையைப் போன்றவள் எங்கள் தாய்.)

கற்றை சடைமதி வைத்த துறவியைக்
கைதொழுவாள் எங்கள் தாய் - கையில்
ஒற்றைத் திகிரி கொண்டு ஏழுலகாளும்
ஒருவனையும் தொழுவாள்

(கற்றைச் சடையையும் நிலவையும் தலையில் வைத்திருக்கும் துறவியாம் சிவபெருமானைக் கைதொழுவாள் எங்கள் தாய். கையில் தன்னிகரில்லா ஆயுதமாம் சக்கரத்தை வைத்திருக்கும் ஒருவனாம் பெருமாளையும் தொழுவாள்)

யோகத்திலே நிகரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறிவாள் - உயர்
போகத்திலேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடையாள்

(யோகங்களிலே நிகரில்லாதவள். உண்மையாம் இறை ஒன்று தான் என்பதை நன்கு அறிவாள். உயர்ந்த போகங்களிலேயும் நிறைவுடையவள். எண்ணி மாளா பொற்குவை (செல்வங்கள்) உடையவள்)

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம் புரிவாள் எங்கள் தாய் - அவர்
அல்லவர் ஆயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்

(நல்லறம் நாடிய மன்னர்களை வாழ்த்தி நல்லதைப் புரிவாள் எங்கள் தாய். அவர்கள் கெட்டவர்கள் ஆயின் அவர்களை அழித்துப் பின் ஆனந்தக் கூத்திடுவாள்)

வெண்மை வளர் இமயாசலன் தந்த
விறன்மகளாம் எங்கள் தாய் - அவன்
திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம்
சீருறுவாள் எங்கள் தாய்

(வெண்ணிறம் கொண்ட இமயமலை தந்த மகளாம் எங்கள் தாய். அந்த இமயத்தின் திண்மை குறைந்தாலும் தான் மறையாத திண்மையுடையவள்; தினமும் மேன்மேலும் சீர்களைப் பெறுவாள் எங்கள் தாய்.)

***

இந்தப் பாடலின் சில செய்யுள்களை மட்டுமே பாடகர் பாடியிருக்கிறார். ஆனால் யோகன் ஐயாவின் குறிப்பின் படி எல்லா செய்யுள்களையும் இங்கே கொடுத்திருக்கிறேன்.

***

இந்தப் பாடலை திருமதி. டி.கே. பட்டம்மாள் பாடியும் திரு.இராஜேஷ் வைத்யா வீணையில் இசைத்தும் கேட்கலாம்.

Monday, May 17, 2010

வந்தே மாதரம் - நிறைவு - விளக்கம்

த்வம் ஹி துர்கா தஷ ப்ரஹரணதாரிணீ
கமலா கமலதல விஹாரிணீ
வாணீ வித்யாதாயினீ நமாமி த்வாம்

நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
ஸுஜலாம் ஸுபலாம் மாதரம்!

ஸ்யாமளாம் சரளாம் சுஸ்மிதாம் பூஷிதாம்
தரணீம் பரணீம் மாதரம்!

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல்லிதழ்களில் களித்திடும் கமலை நீ!
வித்தை நன்கருளும் வெண்மலர்த் தேவி நீ!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

போற்றி வான்செல்வி! புரையிலை, நிகரிலை!
இனிய நீர்ப்பெருக்கினை இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!
இனிய புன்முறுவலாய்! இலங்கு நல்லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!


பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத்திதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

திருநிறைந்தனை, தன்னிகர் ஒன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளம் சார்ந்தனை!
மருவு செய்களின் நற்பயன் மல்குவை!
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை!
பெருகுமின்பம் உடையை குறுநகை
பெற்றொளிர்ந்தனை பல்பணி பூண்டனை
இருநிலத்து வந்து எம்முயிர் தாங்குவை
எங்கள் தாய் நின் பதங்கள் இறைஞ்சுவாம்!

இந்தப் பகுதி தான் பலர் வந்தே மாதரத்தைப் பாடமாட்டோம் என்று மறுப்பு சொல்லக் காரணம்.

த்வம் ஹி துர்கா தஷ ப்ரஹரணதாரிணீ - நீயே துர்கை. பத்துவிதமான படைக்கலங்களைத் தாங்கியிருப்பவளே!

கமலா கமலதல விஹாரிணீ - தாமரை மலரில் மகிழ்வுடன் வசிப்பவளே! கமலை எனும் திருமகளே!

வாணீ வித்யாதாயினீ - வித்தைகளை அருள்பவளே! கலைமகளே!

நமாமி த்வாம் - உன்னை வணங்குகிறேன்

நமாமி - போற்றி

கமலாம் - திருமகளே!

அமலாம் - குற்றமற்றவளே!

அதுலாம் - நிகரற்றவளே!

ஸுஜலாம் - நன்னீரை உடையவளே!

ஸுபலாம் - நற்கனிகளை உடையவளே!

மாதரம்! - அன்னையே!

ஸ்யாமளாம் - பயிர்களின் பச்சை நிறம் உடையவளே

சரளாம் - இயல்பாய் இருப்பவளே!

சுஸ்மிதாம் - இனிய புன்முறுவல் உடையவளே!

பூஷிதாம் - அணிகலன்களை அணிந்தவளே!

தரணீம் - எங்களைத் தாங்குபவளே!

பரணீம் - வெற்றியுடையவளே!

மாதரம்! - அன்னையே!



ஒருபது படை - ஒரு பத்து படை

புரையிலை - குற்றமற்றவள்

மருவு செய் - வளர்ந்த பயிர்

Sunday, May 09, 2010

வந்தே மாதரம் - 3 & 4 - விளக்கம்

கோடி கோடி கண்டா கலகலநிநாத கராலே
கோடி கோடி புஜைந்திர்திரித கர கரவாலே
அபலா கேனோ மா எதோ பாலே
பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்
ரிபுதலவாரிணீம் மாதரம்!
வந்தே மாதரம்!

முப்பது கோடி வாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடி தோளுயர்ந்துனக்காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திறலுடையாய்! அருளினை போற்றி!
பொருந்தலர் படை புறத்தொழித்திடும் பொற்பினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும்
'கூடு திண்மை குறைந்தனை' என்பதேன்?
ஆற்றலில் மிகுந்தனை, அரும்பதம் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை ஓட்டுவை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

கோடி கோடி கண்டா கலகலநிநாத கராலே - கோடி கோடி தொண்டைகள் (குரல்கள், வாய்கள்) கலகல என்று உன் புகழைப் பாடும்

கோடி கோடி புஜைந்திர்திரித கர கரவாலே - கோடி கோடி தோள்கள் (புஜங்கள்) தம் தம் கரங்களில் படைக்கலங்கள் தாங்கி நிற்கும்

அபலா கேனோ மா எதோ பாலே - (அப்படியிருக்க) உன்னை வலுவற்றவள் என்று யார் தான் சொல்லுவார்கள்?

பஹுபல தாரிணீம் - தோள்வலு மிக்கவளே!

நமாமி - போற்றி

தாரிணீம் - தாங்கும் நிலமே!

ரிபுதலவாரிணீம் மாதரம்! - எதிரிகளின் படைகளை விரட்டுபவளே! அன்னையே!

வந்தே மாதரம்! - தாயை வணங்குகிறேன்!

பொருந்தலர் - பொருந்தாதவர்; நட்பில்லாதவர்; எதிரிகள்.

***

துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா
த்வம் ஹி ப்ராணா: ஷரீரே

பாஹுதே துமி மா சக்தி
ஹ்ருதயே தும் மா பக்தி
தொமார இ ப்ரதிமா கடி
மந்திரே மந்திரே!

நீயே வித்தை! நீயே தருமம்!
நீயே இதயம், நீயே மருமம்!
உடலகத்திருக்கும் உயிருமன் நீயே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

தடந்தோளகலாச் சக்தி நீ அம்மே!
சித்தம்தீங்காதுரு பக்தியும் நீயே!
ஆலயந்தோறும் அணி பெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவி இங்குனதே!
வந்தே மாதரம் வந்தே மாதரம்!


அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ!
தோளிடை வன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ,
ஆலயந்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

துமி வித்யா - நீயே கல்வி

துமி தர்மா - நீயே அறம்

துமி ஹ்ருதி - நீயே உள்ளம்

துமி மர்மா - நீயே அதனுள் மறைந்திலகும் எண்ணங்கள்

த்வம் ஹி ப்ராணா: ஷரீரே - உறுதியாக (எங்கள்) உடல்களில் வாழும் உயிரும் நீயே

பாஹுதே துமி மா சக்தி - தோள்களில் நீயே எங்கள் வலிமை

ஹ்ருதயே தும் மா பக்தி - உள்ளங்களில் நீயே எங்கள் பக்தி

தொமார இ ப்ரதிமா கடி மந்திரே மந்திரே - ஆலயங்கள் தோறும் இருப்பது உன் திருவருவம் தானே!

வன்பு - வலிமை

***

Friday, May 07, 2010

வந்தே மாதரம் - 1 & 2 - விளக்கம்

பாரதியார் 'வந்தே மாதரம்' பாடலை இருமுறை மொழிபெயர்த்திருக்கிறார். மூலத்தையும் பாரதியாரின் இரு மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் ஒவ்வொரு கண்ணியாக எடுத்து அருஞ்சொற்பொருள் விளக்கம் தரலாம் என்று எண்ணுகிறேன்.

***

வந்தே மாதரம்!
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்!
வந்தே மாதரம்!

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனி நறு மலயத் தண் காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந்தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

ஸுஜலாம் - அருமையான நீர்வளம் கொண்டவள்

ஸுபலாம் - அருமையான கனிவளம் கொண்டவள் (கனி - கனிமம் இல்லை; கனிகள்; பழங்கள்)

மலயஜ ஸீதளாம் - மலயத்தில் (பொதிகையில்) பிறந்த குளிர்ந்த தென்றலை உடையவள் (மலய + ஜ + ஸீதள - மலயத்தில் பிறந்த குளிர்)

ஸஸ்ய ஸ்யாமளாம் - பச்சை நிறப் பயிர்களை உடையவள் (ஸஸ்ய - பயிர்; ஸ்யாமள - கருமை; பசுமை)

இப்போது பாரதியாரின் மொழிபெயர்ப்புகளைப் படித்தால் நன்கு புரியும் என்று எண்ணுகிறேன். இதே முறையிலேயே எல்லா கண்ணிகளுக்கும் எழுத எண்ணியுள்ளேன். பாரதியாரின் கவிதைகளில் உள்ள சில அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள் தருகிறேன். மேல் விளக்கம் வேண்டுமென்றால் கேளுங்கள்.

தண் கால் - குளிர்ந்த காற்று

பைந்நிறம் - பச்சை நிறம்

பழனம் - வயல்கள்

கொழும்பொழில் - கொழிக்கும் வயல்கள்

***

ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம்
புல்லகுஸுமித த்ருமதள சோபினீம்
ஸுஹாசினீம் ஸுமதுர பாஷினீம்
ஸுகதாம் வரதாம் மாதரம்!
வந்தே மாதரம்!

வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத் திகழ் மரன் பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம் பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

தெண்ணிலவதனில் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளிரும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம் - வெண்ணிற நிலவொளியில் மகிழ்ந்து புலகிதமடையும் (சிலிர்க்கும்) இரவைப் போன்றவளே!

புல்லகுஸுமித த்ருமதள சோபினீம் - மணம் வீசும் மலர்கள் நிறைந்த மரங்களால் செழிப்புடன் திகழ்பவளே!

ஸுஹாசினீம் - இனிய புன்னகை உடையவளே!

ஸுமதுர பாஷினீம் - இனிமையும் மென்மையுமான சொற்களை உடையவளே!

ஸுகதாம் வரதாம் மாதரம் - இன்பமும் (சுகமும்) வரங்களும் தருபவளே! அன்னையே!

***

Thursday, May 06, 2010

வந்தே மாதரம் - பாரதியாரின் மொழிபெயர்ப்பு

விடுதலைப் போராட்டக் காலத்தில் பாரதியாரின் பாடல்கள் எப்படி தமிழக நாட்டுப் பற்றாளர்களுக்கு உணர்ச்சியூட்டும் பாடல்களாக இருந்தனவோ அப்படியே இந்திய நாட்டுப் பற்றாளர்கள் எல்லோருக்கும் 'வந்தே மாதரம்' என்னும் வங்க மொழிப் பாடல் மிகவும் உணர்ச்சியூட்டும் பாடலாக இருந்தது. அந்தப் பாடலுக்கு பாரதியார் இருமுறை மொழிபெயர்ப்புக் கவிதை இயற்றியிருக்கிறார். 'வந்தே மாதரம்' பாடலின் மூலத்தையும் பாரதியாரின் மொழிபெயர்ப்புகளையும் இங்கே கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு கண்ணியாக எடுத்து இனிவரும் பதிவுகளில் விளக்கம் தருகிறேன். கேள்விகள் ஏதேனும் இருந்தால் இப்போதே கேளுங்கள். அவற்றிற்கு வரும் பதிவுகளில் விடை சொல்ல நல்ல வாய்ப்பாக அமையும்.

***

வந்தே மாதரம்!
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்!
வந்தே மாதரம்!

ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம்
புல்லகுஸுமித த்ருமதள சோபினீம்
ஸுஹாசினீம் ஸுமதுர பாஷினீம்
ஸுகதாம் வரதாம் மாதரம்!
வந்தே மாதரம்!

கோடி கோடி கண்டா கலகலநிநாத கராலே
கோடி கோடி புஜைந்திர்திரித கர கரவாலே
அபலா கேனோ மா எதோ பாலே
பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்
ரிபுதலவாரிணீம் மாதரம்!
வந்தே மாதரம்!

துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா
த்வம் ஹி ப்ராணா: ஷரீரே

பாஹுதே துமி மா சக்தி
ஹ்ருதயே தும் மா பக்தி
தொமார இ ப்ரதிமா கடி
மந்திரே மந்திரே!

த்வம் ஹி துர்கா தஷ ப்ரஹரணதாரிணீ
கமலா கமலதல விஹாரிணீ
வாணீ வித்யாதாயினீ நமாமி த்வாம்

நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
ஸுஜலாம் ஸுபலாம் மாதரம்!

ஸ்யாமளாம் சரளாம் சுஸ்மிதாம் பூஷிதாம்
தரணீம் பரணீம் மாதரம்!

***

பாரதியாரின் முதல் மொழிபெயர்ப்பு:

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனி நறு மலயத் தண் காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத் திகழ் மரன் பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம் பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

முப்பது கோடி வாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடி தோளுயர்ந்துனக்காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திறலுடையாய்! அருளினை போற்றி!
பொருந்தலர் படை புறத்தொழித்திடும் பொற்பினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

நீயே வித்தை! நீயே தருமம்!
நீயே இதயம், நீயே மருமம்!
உடலகத்திருக்கும் உயிருமன் நீயே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

தடந்தோளகலாச் சக்தி நீ அம்மே!
சித்தம்தீங்காதுரு பக்தியும் நீயே!
ஆலயந்தோறும் அணி பெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவி இங்குனதே!
வந்தே மாதரம் வந்தே மாதரம்!

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல்லிதழ்களில் களித்திடும் கமலை நீ!
வித்தை நன்கருளும் வெண்மலர்த் தேவி நீ!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

போற்றி வான்செல்வி! புரையிலை, நிகரிலை!
இனிய நீர்ப்பெருக்கினை இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!
இனிய புன்முறுவலாய்! இலங்கு நல்லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

***

பாரதியாரின் இரண்டாம் மொழிபெயர்ப்பு:

நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந்தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

தெண்ணிலவதனில் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளிரும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல் படை தாங்கு முன் நிற்கவும்
'கூடு திண்மை குறைந்தனை' என்பதேன்?
ஆற்றலில் மிகுந்தனை, அரும்பதம் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை ஓட்டுவை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ!
தோளிடை வன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ,
ஆலயந்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத்திதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

திருநிறைந்தனை, தன்னிகர் ஒன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளம் சார்ந்தனை!
மருவு செய்களின் நற்பயன் மல்குவை!
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை!
பெருகுமின்பம் உடையை குறுநகை
பெற்றொளிர்ந்தனை பல்பணி பூண்டனை
இருநிலத்து வந்து எம்முயிர் தாங்குவை
எங்கள் தாய் நின் பதங்கள் இறைஞ்சுவாம்!


இந்த இரண்டாம் மொழிபெயர்ப்பின் பகுதியை இசையரசி எம்.எஸ். பாடியிருக்கிறார்.

Wednesday, May 05, 2010

எந்தையும் தாயும்...

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்
போந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்
தழுவியதிந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

எளிமையான பாடல். அதனால் விளக்கம் தரவில்லை. :-)