Thursday, April 29, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 15

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் பதினைந்தாம் (இறுதிப்) பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் பதினான்கு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்? நீ கண்கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், வானம். தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில். பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு, இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள் - இவையெல்லாம் நினது விளக்கம்.

மண்ணிலும், நீரிலும், காற்றிலும் நிரம்பிக் கிடக்கும் உயிர்களைக் கருதுகின்றோம். காற்றிலே ஒரு சதுர அடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன.

ஒரு பெரிய ஜந்து; அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள்; அவற்றுள் அவற்றிலுஞ் சிறிய பல ஜந்துக்கள்; அவற்றுள் இன்னுஞ் சிறியவை - இங்ஙனம் இவ்வையக முழுதிலும் உயிர்களைப் பொதிந்து வைத்திருக்கிறது.

மஹத் - அதனிலும் பெரிய மஹத் - அதனிலும் பெரிது - அதனிலும் பெரிது.

அணு - அதனிலும் சிறிய அணு - அதனிலும் சிறிது - அதனிலும் சிறிது.

இரு வழியிலும் முடிவில்லை. இருபுறத்திலும் அநந்தம். புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களையெல்லாம் போற்றுவோம். 'நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி'.

----------

உரை தேவையில்லை. எளிதாகவே இருக்கிறது.

Monday, April 26, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 14

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் பதினான்காம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் பதிமூன்று பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

காற்றைப் புகழ நம்மால் முடியாது. அவன் புகழ் தீராது. அவனை ரிஷிகள் 'ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம' என்று போற்றுகிறார்கள்.

ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக. அபாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. வ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. உதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. சமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. காற்றின் செயல்களையெல்லாம் பரவுகின்றோம். உயிரை வணங்குகின்றோம். உயிர் வாழ்க.

----------

உரை:

ப்ரஹ்ம என்றால் மிகப் பெரியது என்று பொருள். அது இறைவனைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது. இறைவன் தானே மிகப் பெரியவன். வேத ரிஷிகள் காற்றைக் 'கண்கண்ட கடவுள் - ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம' என்று போற்றுகிறார்கள். ஏனெனில் அவன் புகழ் எவ்வளவு போற்றினாலும் போற்றி முடியாது. வேதங்களே காற்றின் புகழைப் போற்ற முடியாது என்றால் நம்மால் முடியுமா? முடியாது.

ப்ராணன் என்பது உயிராகிய காற்று. அது ஐந்து விதமாக மாறி நம் உடலில் நிகழும் அனைத்து முக்கியக் காரியங்களையும் ஆற்றுகின்றது என்பது ஆயுர்வேதக் கொள்கை.

ப்ராணன் இருக்கும் இடம் இருதயம்; மூச்சினால் நாம் உட்கொள்ளும் காற்று நுரையீரலுக்குச் சென்று அங்கிருந்து இருதயத்தில் அமர்ந்து நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான செயலைச் செய்கிறது. அதனால் அது முக்கியமான காற்று எனப்படுகிறது. அவனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.

ப்ராணனின் இரண்டாவது உருவாகிய அபாநன் நிலைக்கும் இடம் மலஜலம் கழிக்கும் உறுப்புகள். இந்த வாயுவின் உதவியினால் தான் நம் உடலில் இருக்கும் அசுத்தங்கள் வெளியேறுகின்றன. ஒரு நாள் அபாநன் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மிகக் கடினம். அதனால் அவனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.

ப்ராணனின் மூன்றாவது உருவாகிய வ்யாநன் உடலெங்கும் பரவியிருக்கிறது. இருதயத்தில் ப்ராணனிடமிருந்து பெற்ற உயிர்ச்சக்தியை உடலெங்கும் இரத்தத்தின் மூலம் பரப்புவது வ்யாநனின் வேலை. அவனை வணங்குகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.

ப்ராணனின் நான்காவது உருவாகிய உதாநன் கழுத்தில் (தொண்டையில்) நின்று உண்ணும் உணவையும் குடிக்கும் நீரையும் வயிற்றுக்குக் கொண்டு செல்கிறான். அவனே பேசுவதற்கும் பாடுவதற்கும் ஒலி எழுப்புவதற்கும் உதவுகிறான். அவனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.

ப்ராணனின் ஐந்தாவது உருவாகிய சமாநன் வயிற்றில் நிலைத்து எல்லா உணவையும் செரிக்கிறான். அப்படி ஜீரணம் பண்ணிய உணவில் இருந்து சக்தியை வ்யாநன் உடலெங்கும் கொண்டு செல்கிறான். சமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.

Saturday, April 24, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 13

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் பதிமூன்றாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் பன்னிரண்டு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம். இரைகின்ற கடல் நீர் உயிரால் அசைகின்றதா? ஆம். கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது. அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால். ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது? உயிர் நிலையில். ஊமையாக இருந்த காற்று ஊதத் தொடங்கிவிட்டதே! அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது.

வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது. அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது. வண்டி செல்லும் போது உயிருடனேதான் செல்கிறது. காற்றாடி? உயிருள்ளது. நீராவி வண்டி உயிருள்ளது; பெரிய உயிர். யந்திரங்களெல்லாம் உயிருடையன.

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது. அவள் தீராத உயிருடையவள். பூமித்தாய். எனவே அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதேயாம்.

அகில முழுதும் சுழலுகிறது. சந்திரன் சுழல்கின்றது. ஞாயிறு சுழல்கின்றது. கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கப்பாலும், அதற்கப்பாலும், அதற்கப்பாலும், சிதறிக் கிடக்கும் வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்று கொண்டே தானிருக்கின்றன. எனவே இவ்வையகம் உயிருடையது. வையகத்தின் 'உயிரையே' காற்றென்கின்றோம். அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல் செய்கின்றோம்.

----------

உங்களுக்குப் புரிந்ததை விளக்கலாம்.

Friday, April 23, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 12

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் பன்னிரண்டாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் பதினொன்று பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

காக்கை பறந்து செல்லுகிறது. காற்றின் அலைகளின் மீது நீந்திக்கொண்டு போகிறது. அலைகள் போலிருந்து, மேலே காக்கை நீந்திச் செல்வதற்கு இடமாகும் பொருள் யாது? காற்று அன்று. அஃதன்று காற்று. அது காற்றின் இடம், வாயு நிலயம். கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத்தூள்களே (காற்றடிக்கும்போது) நம்மீது வந்து மோதுகின்றன. அத்தூள்களைக் காற்றென்பது உலக வழக்கு. அவை வாயுவல்ல. வாயு ஏறிவரும் தேர். பனிக்கட்டியிலே சூடேறினால் நீராக மாறி விடுகிறது. நீரிலே சூடேற்றினால் 'வாயு'வாகி விடுகிறது. தங்கத்திலே சூடேற்றினால் திரவமாகி உருகிவிடுகிறது. அத்திரவத்திலே சூடேற்றினால் 'வாயு'வாகின்றது.

இங்ஙனமே, உலகத்துப் பொருள்களனைத்தையும் 'வாயு' நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்த 'வாயு' பௌதிகத் தூள். இதனை ஊர்ந்துவரும் சக்தியையே நாம் காற்றுத் தேவனென்று வணங்குகிறோம்.

காக்கை பறந்து செல்லும் வழி காற்றன்று. அந்த வழியை இயக்குபவன் காற்று. அதனை அவ்வழியிலே தூண்டிச் செல்பவன் காற்று. அவனை வணங்குகின்றோம். உயிரைச் சரணடைகின்றோம்.

----------

உங்கள் உரை தேவை.

பாரதியின் வசனகவிதை: காற்று - 11

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் பதினொன்றாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் பத்து பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம். எற்றுகிற சக்தி. புடைக்கிற சக்தி. மோதுகிற சக்தி. சுழற்றுவது. ஊதுவது. சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று. எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம். சக்தியின் கலைகளையே தெய்வங்களென்கிறோம். காற்று சக்தி குமாரன். அவனை வழிபடுகின்றோம்.

----------

இந்தக் கவிதைக்கு விளக்கம் தேவையில்லை.

Thursday, April 22, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 10

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் பத்தாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் ஒன்பது பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

மழை பெய்கிறது. ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள் எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள். ஈரத்திலேயே உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல். ஈரத்திலேயே உணவு.

உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்.

ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்து போகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் 'விதிவசம்' என்கிறார்கள். ஆமடா, விதிவசந்தான். 'அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை' என்பது ஈசனுடைய விதி.

சாஸ்திரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.

தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடங் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள். குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்? அது அமிழ்தம். நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் காற்று நன்று; அதனை வழிபடுகின்றோம்.

----------

படிப்பவர்கள் தங்களுக்குத் தோன்றும் விளக்கம் சொல்லுங்கள். என் விளக்கத்தைப் பின்னர் சொல்கிறேன்.

Wednesday, April 21, 2010

சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே!


"எம்பெருமானாரே. தண்டமும் பவித்ரமும் அல்லவோ ஒரு முக்கோல் பகவரான துறவியின் அடையாளங்கள். அவற்றை எங்கும் எப்போதும் தரித்துக் கொள்வது தானே துறவியரின் கடமை. தங்களின் தண்டமும் பவித்திரமும் என்று தேவரீரால் சொல்லப்பட்டவர்கள் தங்களின் முதன்மைச் சீடர்களான முதலியாண்டானும் கூரத்தாழ்வானும். அடியோங்கள் கூரத்தாழ்வானின் வைபவத்தைக் கொஞ்சமேனும் பேசியிருக்கிறோம். முதலியாண்டானின் வைபவங்களையும் பேசும் பாக்கியத்தை அடியோங்களுக்கு தேவரீர் அருள வேண்டும்!"

"சித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்த முதலியாண்டானின் வைபவத்தை நீர் பேசுவதற்கு எம்பெருமானின் திருவருள் கூடி வந்திருக்கிறது. இன்றே சித்திரை புனர்பூசம்! முதலியாண்டானின் பெருமைகளைப் பரக்க பேசும்!"

"ஆகா. தேவரீர் கருணையே கருணை.

அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே!

காரேய் கருணை இராமானுச இக்கடலிடத்தில் யாரே அறிபவர் நின் அருளாம் தன்மை?!"

***

இறைவனுடன் கூடவே இருந்து எப்போதும் தொண்டு செய்து கொண்டிருப்பது ஒரு வகை. அதனை இராமவதாரத்தில் இலக்குவனிடம் கண்டோம். அதுவே இராமானுச முனியின் வாழ்க்கையில் கூரத்தாழ்வானிடம் கண்டோம்.

இறைவனின் திருவுள்ள உகப்பை முன்னிட்டு இறைவனின் அருகாமையைக் கூடத் துறந்து இறை பணி செய்வது இன்னொரு வகை. அதனை இராமாவதாரத்தில் பரதனிடம் கண்டோம். இராமானுச முனியின் வாழ்க்கையில் அதனை முதலியாண்டானிடம் கண்டோம். ஆசாரியனின் திருவுள்ள உகப்பிற்காக தன்னுடைய கல்விப்பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு இராமானுசரின் ஆசாரியர் பெரிய நம்பிகளின் திருமகளார் அத்துழாயின் புகுந்த வீட்டிற்கு முதலியாண்டான் வேலைக்காரனாக சென்று வேலை செய்ததை நமது கண்ணபிரான் இரவிசங்கர் முன்பே இங்கு பேசியிருக்கிறார். அதனை முதலியாண்டானின் பிறந்த நாளான இன்று மீண்டும் ஒரு முறை படிப்போம்!

***

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே!
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தோன் வாழியே!
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே!
சீபாடியம் ஈடு முதல் சீர் பெறுவோன் வாழியே!
உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே!
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே!
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே!
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதோறும் வாழியே!


திருவத்திகிரி எனப்படும் காஞ்சிபுரத்தில் அருளும் பேரருளாளன் வரதராசப் பெருமாளின் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க! திருவருள் கூடிய பச்சைவாரணம் என்ற ஊரில் அவதரித்தவன் வாழ்க! சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் சிறப்பு பெறும் படி அதில் பிறந்தவன் வாழ்க! ஸ்ரீபாஷ்யம் நூலை உடையவரிடமிருந்து முதல் ஆளாக சிறப்புடன் பெற்றவன் வாழ்க! உத்தமமான வாதூல குலம் உயர வந்தவன் வாழ்க! திருவரங்கத் திருநகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கைங்கர்யம் என்னும் நல்வழியில் திரும்பும்படி அழகிய மணவாளனை ஊரெல்லாம் தாங்கிச் செல்லும் சீர்பாதம் என்னும் கொத்தினை எம்பெருமானாரின் கட்டளைப்படி நிலைநாட்டியவன் வாழ்க! முதலியாண்டான் பொற்பதங்கள் எக்காலத்திலும் வாழ்க!

***

எம்பெருமானார் இராமானுசர் அவதரித்து பத்து வருடங்களுக்குப் பின்னர் பிரபவ வருடத்தில் பூவிருந்தவல்லிக்கும் திருமழிசைக்கும் இடையில் இருக்கும் 'பச்சைபெருமாள் கோயில்' என்னும் ஊரில் பிறந்தவர் தாசரதி என்ற இயற்பெயர் கொண்ட முதலியாண்டான். இவர் பிறந்த ஊருக்கு 'புருஷமங்கலம்', 'வரதராஜபுரம்', 'பச்சைமங்கலம்' என்ற பெயர்களும் உண்டு. இவருடைய திருத்தகப்பனார் பெயர் அனந்த நாராயண தீட்சிதர். இவருடைய திருத்தாயார் பெயர் நாச்சியார் அம்மன் என்னும் கோதாம்பிகை. இவருடைய தாய்மாமன் எம்பெருமானார். இவருடைய கோத்திரம் வாதூல கோத்ரம். எம்பெருமானாருடைய சீடர்கள் அனைவருக்கும் தலைவராக இருந்ததால் இவருக்கு முதலியாண்டான் என்ற திருப்பெயர் அமைந்தது.

நம்மாழ்வாரான சடகோபன்/சடாரி எம்பெருமானின் திருவடிநிலைகளாக இருந்து அருள்பாலிக்கிறார். அதே போல் எம்பெருமானாரின் திருவடிநிலைகளாக அவரது அந்தரங்க அடியாராக இருந்த முதலியாண்டான் கருதப்படுகிறார். இனி மேல் இதனை நினைவில் நிறுத்தி இராமானுசரின் சன்னிதிக்குச் செல்லும் போது 'சடாரி சாதிக்க வேண்டும்' என்று கேட்காமல் 'முதலியாண்டான் சாதிக்க வேண்டும்' என்று வேண்டுவோம்!

***

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம்


யாருடைய திருப்பெயரால் எதிராசரான இராமானுசரின் திருவடிநிலைகள் அழைக்கப்படுகின்றனவோ அந்த தாசரதியின் திருவடிகளை நான் என் தலையில் அணிகிறேன்.

ஸ்ரீமத் தாசரதிம் வந்தே ராமானுஜ பதாஹ்வயம்
வாதூலாநாம் அலங்காரம் த்ரிதண்டாஹ்வய தேசிகம்


ஸ்ரீ ராமானுசரின் திருவடிகள் என்ற திருப்பெயரை உடையவரும், வாதூல கோத்திரத்தவர்களுக்கு அணிகலனைப் போன்றவரும், ஸ்ரீ ராமானுசரின் முக்கோலாகச் சொல்லப்படுபவரும் ஆன ஸ்ரீமத் தாசரதி என்னும் குருவை வணங்குகிறேன்.

அநந்த நாராயண கோதாம்பிகா கர்ப்ப ஸம்பவம்
பாகிநேயம் யதீந்த்ரஸ்ய பஜே தாசரதிம் குரும்


அநந்த நாராயண தீட்சிதருக்கும் கோதாம்பிகைக்கும் திருமகனாகப் பிறந்தவரும், எதிராசருக்கு மருமகனும் ஆன தாசரதி எனும் குருவை வணங்குகிறேன்!

மேஷே புநர்வஸு திநே தாசரத்யம்ஸ ஸம்பவம்
யதீந்த்ர பாதுகாபிக்யம் வந்தே தாசரதிம் குரும்


மேஷ மாதமான சித்திரையில் புனர்பூச நாளில் தசரத குமாரனின் அம்சமாகப் பிறந்தவரும், எதிராசருடைய திருப்பாதுகைகள் எனப்படுபவரும் ஆன தாசரதி எனும் குருவை வணங்குகிறேன்!

ய: பூர்வம் பரதார்த்தித: ப்ரதிநிதிம் ஸ்ரீபாதுகாம் ஆத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாசரத்யாஹ்வய:
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ச்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹதி நோ தைவம் குலஸ்யோத்தமம்


யார் முற்காலத்தில் பரதனால் வேண்டிக்கொள்ளப்பட்டு அரசாளுவதற்கு தன் பிரதிநிதியாகத் தன் திருப்பாதுகைகளைத் தந்து அருளினானோ, அந்த ராமனே தாசரதி என்னும் பெயருள்ள ஆசாரியனாய் மீண்டும் வந்து நம்முடைய குலத்திற்கு மிகவும் உயர்ந்த தெய்வமான ச்ரி ராமானுச பாதுகைகளாக ஆகி எல்லா உயிர்களும் உய்யும்படி திருவருட் பேரரசை இங்கே தானே ஆண்டு கொண்டிருக்கிறான்!

தனது பாதுகைகள் கோசல சாம்ராஜ்யத்தை ஆண்டது போல் தானே இராமானுச பாதுகைகளாகி பக்தி சாம்ராஜ்யத்தை ஆளுகிறான் தாசரதி!

ஸ்ரீவைஷ்ணவ சிரோபூஷா ஸ்ரீராமானுஜ பாதுகா
ஸ்ரீவாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீதாசரதிரேததாம்


ஸ்ரீவைஷ்ணவர்களின் திருமுடிகளுக்கு அணிகலனாக இருக்கும் ஸ்ரீ ராமானுச திருவடிநிலைகளாக ஆகி, ஸ்ரீவாதூல குலத்திற்கு அணிகலனாக விளங்கும் ஸ்ரீதாசரதி என்னும் முதலியாண்டான் எங்கும் வெற்றி பெறுவாராக!

முதலியாண்டான் திருவடிகளே சரணம்!
எம்பெருமானார் திருவடி நிலைகளே சரணம்!

Tuesday, April 20, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 9

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் ஒன்பதாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் எட்டு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

காற்றே வா. மெதுவாக வா. ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே. காயிதங்களையெல்லாம் எடுத்து விசிறி எறியாதே. அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே. பார்த்தாயா? இதோ, தள்ளிவிட்டாய். புஸ்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய். மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய். வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்.

நொய்ந்த வீடு. நொய்ந்த கதவு. நொய்ந்த கூரை. நொய்ந்த மரம். நொய்ந்த உடல். நொய்ந்த உயிர். நொய்ந்த உள்ளம். இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான். சொன்னாலும் கேட்கமாட்டான். ஆதலால், மானிடரே வாருங்கள். வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம். உடலை உறுதி கொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம். உள்ளத்தை உறுதி செய்வோம். இங்ஙனம் செய்தால் காற்று நமக்குத் தோழனாகி விடுவான். காற்று மெலிய தீயை அவித்துவிடுவான். வலிய தீயை வளர்ப்பான். அவன் தோழமை நன்று. அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.

----------

படிப்பவர்கள் விளக்கம் சொல்லுங்கள்.

Friday, April 16, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 8

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் எட்டாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் ஏழு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

மழைக்காலம். மாலை நேரம். குளிர்ந்த காற்று வருகிறது. நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான். பயனில்லை.

காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது. பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வதுண்டா? காற்று நம்மீது வீசுக. அது நம்மை நோயின்றிக் காத்திடுக. மலைக்காற்று நல்லது. வான் காற்று நன்று. ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர். அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை.

அதனால் காற்றுத்தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான். காற்றுத் தேவனை வணங்குவோம். அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள் போடலாகாது. புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அசுத்தமும் கூடாது. காற்று வருகின்றான். அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம். அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களைக் கொளுத்தி வைப்போம். அவன் நல்ல மருந்தாக வருக. அவன் நமக்கு உயிராகி வருக; அமுதமாகி வருக. காற்றை வழிபடுகின்றோம். அவன் சக்தி குமாரன், மஹாராணியின் மைந்தன். அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க.

----------

இந்தப் பாகத்திற்கு நான் விளக்கம் சொல்லப் போவதில்லை. படிக்கும் போது உங்களுக்கு பாரதியார் என்ன சொல்ல வருகிறார் என்று தோன்றுகிறது? அதனை பின்னூட்டத்தில் இடுங்கள். என் கருத்தினை பின்னர் பின்னூட்டத்தில் இடுகிறேன்.

Added on 06-Jan-2006
--------------------------
எனது உரை:

மழைக்காலத்தில் மாலை நேரத்தில் வரும் குளிர்ந்த காற்றிலிருந்து ஆரம்பிக்கிறார் பாரதியார். நோயாளியைப் பற்றிக் கூறிவிட்டு அந்த நோய் வரும் காரணங்களையும் அடுக்குகிறார். காற்றே உயிரென்பதால் அதற்கு அஞ்சி வாழ முடியாது. அதனை மதிக்க வேண்டும். அதனை இன்பமுற அனுபவிக்க வேண்டும். காற்றை அனுபவிக்க வேண்டும் என்றால் எங்கே செல்ல வேண்டியிருக்கிறது? மலையுச்சிக்கு. அந்த மலைக் காற்றும் வான் காற்றும் நோயின்றி நம்மைக் காத்திடும். அப்படிக் காக்கவேண்டும் என்றும் வேண்டுகிறார்.

ஏன் மலையுச்சிக்குச் செல்லவேண்டும்? ஊரில் உள்ள காற்று அசுத்தமாய் இருக்கிறது. அதனை பகைவனாக்கிவிட்டனர் மக்கள். அவர்கள் காற்றை மதிப்பதில்லை. அதனால் அவன் கோபம் கொண்டு நம்மை அழிக்கிறான் என்கிறார்.

அவன் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால் அவனை மதிக்கவேண்டும். சுற்றுப்புற சூழல் பேணப் பட வேண்டும். சேறு தங்கலாகாது. கெட்ட நாற்றம் இருக்கலாகாது. எவ்வித அசுத்தமும் செய்யக் கூடாது என்கிறார். நாற்றம் என்ற சொல் பாரதியார் காலத்திலேயே கெட்ட நாற்றம் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது போலும். என்ன என்ன செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டுப் பின் என்ன என்ன செய்யவேண்டும் என்றும் பட்டியல் போடுகிறார். ஒரு விஷய்த்தைச் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டு பின்னர் அதன் இடத்தில் என்ன செய்யவேண்டும் என்பதை மனோதத்துவம் தெரிந்த ஒருவர் சொல்லிவிடுவார். இல்லையெனில் செய்யாதே என்னும் விசயத்தைச் செய்யாமல் இருக்க இயலாது மனிதனால். காற்று வாழ்க.

Tuesday, April 13, 2010

இனிய சௌராஷ்ட்ர புத்தாண்டு வாழ்த்துகள்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய சௌராஷ்ட்ர புத்தாண்டு வாழ்த்துகள்!

விக்ருதி வருட சித்திரை முதல் நாள் (14 ஏப்ரல் 2010) அன்று சௌராஷ்ட்ர விஜயாப்தம் 698ஆம் ஆண்டு தொடங்குகிறது. இந்த வருடமும் இனி வரும் வருடங்களும் உலகத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் அனைத்து நன்மைகளையும் வழங்கட்டும்!

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

***

இந்த சௌராஷ்ட்ர விஜயாப்த கணக்கு என்றிலிருந்து தொடங்கியது என்பதை இன்னும் ஆய்வாளர்கள் உறுதியாகச் சொல்லவில்லை. விஜயாப்தம் என்பதை விஜய + அப்தம் என்று பிரிக்க வேண்டும். அப்தம் என்றால் வருடம் என்று பொருள். விஜயம் என்றால் வெற்றி என்றும் வருகை என்றும் பொருட்கள் உண்டு. இங்கே வெற்றியாண்டு என்பதை விட வருகையாண்டு என்பதே பொருத்தமாக இருக்கும் என்று கொண்டு இது தமிழகத்திற்கு சௌராஷ்ட்ரர்கள் வருகை தந்த ஆண்டுக்கணக்கு என்று சொல்பவர்கள் உண்டு. விஜயநகர பேரரசின் அழிவினை ஒட்டி சௌராஷ்ட்ரர்கள் தமிழகத்திற்கு வந்தார்கள் என்றும் திருமலை நாயக்கரின் காலத்தில் மதுரைக்கு வந்தார்கள் என்றும் சொல்லும் சௌராஷ்ட்ரர்களின் வாய்மொழி வரலாற்றுக் கூற்றுகள் இந்த கருத்திற்கு ஒத்து போகவில்லை.

ஏறக்குறைய 675 வருடங்களுக்கு முன்னர் தான் (கி.பி. 1336) விஜயநகரப் பேரரசே தோன்றியது. அதனால் இந்த விஜயாப்த கணக்கு தமிழகத்திற்கு வருகை தந்த ஆண்டாக இருக்காது.

விஜயநகரத்திற்கு வந்து சேர்ந்த ஆண்டிலிருந்து தொடங்குகிறது இந்த ஆண்டுக் கணக்கு என்று சொல்பவர்களும் உண்டு. மேலே சொன்ன அதே காரணம் அதுவும் சரியில்லை என்று காட்டுகிறது. விஜயநகரமே 675 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோன்றியது என்னும் போது 698 என்ற ஆண்டுக்கணக்கு எப்படி பொருந்தும்?

கூர்ஜரத்து (குஜராத்) சௌராஷ்ட்ர தேசத்திலிருந்து சௌராஷ்ட்ரர்கள் புலம்பெயரத் தொடங்கிய காலக் கணக்கு இந்த ஆண்டுக் கணக்கு என்பவர்களும் உண்டு. கஜினி முகம்மதுவின் தாக்குதல்களைத் தாங்காமல் சோமநாதபுரத்திலிருந்து கிளம்பியதாகச் சொல்லும் சௌராஷ்ட்ரர்களின் வாய்மொழி வரலாற்றுக் கூற்று இந்தக் கருத்துடன் ஒத்துப் போகவில்லை. கஜினி முகம்மது சோமநாதபுரத்தின் மீது தாக்குதல் நடத்தியது கி.பி. 1024. அது இன்றையிலிருந்து ஏறக்குறைய ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆனால் கஜினி முகம்மதுவின் தாக்குதலினால் தெற்கே ஒரு கூட்டம் கிளம்ப, கொஞ்சம் கொஞ்சமாக சிறு சிறு கூட்டங்களாக சௌராஷ்ட்ர மக்கள் தென்னகம் வந்திருக்கலாம். அப்படி வந்த போது ஏதோ ஒரு கூட்டம் விஜயநகரம் தோன்றுவதற்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கிளம்பி விஜயநகரத்தில் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்து பின்னர் தமிழகம் வந்திருக்கலாம். அது உண்மையானால் அந்தக் கூட்டம் சௌராஷ்ட்ர தேசத்தை விட்டுக் கிளம்பிய ஆண்டுக்கணக்கே இந்த சௌராஷ்ட்ர விஜயாப்தக் கணக்கு.

***

சித்திரை முதல் நாள் தான் சௌராஷ்ட்ர விஜயாப்தத்தின் முதல் நாளா?

இக்காலத்தில் சித்திரை முதல் நாள் தான் சௌராஷ்ட்ர விஜயாப்தத்தின் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடப்படுகிறது. அது தமிழகத்திற்கு வந்த பின்னர் வந்த வழக்கமாக இருக்க வேண்டும். விஜயநகரத்தில் வாழ்ந்த போது அங்கிருந்த வழக்கப்படி உகாதியே (சைத்ர மாத முதல் நாள்) சௌராஷ்ட்ர விஜயாப்தத்தின் ஆண்டுத் தொடக்கமாக இருந்திருக்க வேண்டும். மொழி வகையில் கொங்கணிக்கு (மராட்டியின் கிளை மொழி) மிக அருகில் இருக்கும் மொழி சௌராஷ்ட்ரம். மராட்டியர்களும் உகாதியையே ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். சௌராஷ்ட்ரர்களும் அப்படியே தமிழகத்திற்கு வருவதற்கு முன்னர் கொண்டாடியிருக்கலாம்.

Sunday, April 11, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 7

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் ஏழாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் ஆறு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

சிற்றெரும்பைப் பார். எத்தனை சிறியது; அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு, எல்லா அவயங்களும் கணக்காக வைத்திருக்கிறது.

யார் வைத்தனர்? மஹாசக்தி. அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன. எறும்பு உண்ணுகின்றது. உறங்குகின்றது. மணம் செய்து கொள்கின்றது. குழந்தை பெறுகிறது. ஓடுகிறது. தேடுகிறது. போர் செய்கிறது. நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்று தான் ஆதாரம்.

மஹா சக்தி காற்றைக் கொண்டுதான் உயிர் விளையாட்டு விளையாடுகின்றாள். காற்றைப் பாடுகிறோம். அஃது அறிவிலே துணிவாக நிற்பது; உள்ளத்திலே விருப்பு வெறுப்புகளாவது. உயிரிலே உயிர் தானாக நிற்பது. வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம். நாம் அறிவதில்லை. காற்றுத் தேவன் வாழ்க.


----------

எனது உரை: இங்கே எறும்புகளென்று மனிதர்களைத் தான் சொல்கிறாரோ பாரதியார் என்று தோன்றுகிறது. இல்லை எறும்புகளைக் கூறி உலகத்தில் சிறிய உயிர்களிலிருந்து எல்லா உயிர்களுக்கும் காற்று தான் முக்கியத் தேவை என்று மட்டும் தான் கூறுகிறாரோ?

வேதங்கள் இறைவனைப் பற்றிப் பலவாறாகக் கூறிவிட்டுப் பின்னர் அவனை நாம் முழுவதும் அறியோம் என்று உரைப்பதைப் போல இங்கே பாரதியும், வெளி உலகத்திலே காற்றின் செய்கையை நாம் அறிவோம் என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே நாம் அறிவதில்லை என்றும் சொல்கிறார் போலும்.

Saturday, April 10, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 6

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் ஆறாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் ஐந்து பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

காற்றே வா. மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா. இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண - ரசத்தை எங்களுக்குக் கொண்டு கொடு. காற்றே வா. எமது உயிர் - நெருப்பை நீடித்து நின்ற நல்லொளி தருமாறு செய். சக்தி குறைந்து போய், அதனை அவித்துவிடாதே. பேய்போல வீசி, அதனை மடித்துவிடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம். உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம். உன்னை வழிபடுகின்றோம்.

----------
எனது உரை: இங்கு உயிராகிய காற்று நீண்ட நாள் நிலைக்கவேண்டும் என்று வேண்டுகிறார்.

பாரதியின் வசனகவிதை: காற்று - 5

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் ஐந்தாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் நான்கு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும். உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம். உயிர் தான் காற்று. உயிர் பொருள். காற்று அதன் செய்கை. பூமித்தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று. காற்றே உயிர்.

அவன் உயிர்களை அழிப்பவன். காற்றே உயிர். எனவே உயிர்கள் அழிவதில்லை. சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது. மரணமில்லை. அகிலவுலகமும் உயிர் நிலையே. தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் - எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம்.


----------

எனது உரை: மரணமிலா நிலை என்பதற்கு ஒரு புதிய விளக்கம் இந்தப் பாடலில் பாரதியார் கொடுக்கிறார். காற்று என்றும் நிலையாக இருக்கிறது. உயிர் காற்றேயாதலால் உயிரும் நிலையானது. காற்று உயிர்களை அழிப்பது போல் தோன்றினாலும் உயிர்கள் அழிவதில்லை. சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது. உலகில் ஏற்படும் எல்லா மாற்றங்களும் காற்றால் தான் ஏற்படுகிறது. அதனால் காற்றை உயிரை வாழ்த்துகிறோம்.

Friday, April 09, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 4

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் நான்காம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் மூன்று பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

பாலைவனம். மணல், மணல், மணல். பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல்.

மாலை நேரம். அவ்வனத்தின் வழியே ஒட்டைகளின் மீதேறி ஒரு வியாபாரக் கூட்டத்தார் போகிறார்கள்.

வாயு சண்டனாகி வந்துவிட்டான். பாலைவனத்து மணல்களெல்லாம் இடைவானத்திலே சுழல்கின்றன. ஒரு க்ஷணம் யம வாதனை. வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே அழிந்து போகிறது. வாயு கொடியோன். அவன் ருத்ரன். அவனுடைய ஓசை அச்சந் தருவது. அவனுடைய செயல்கள் கொடியன. காற்றை வாழ்த்துகின்றோம்.

----------

அரும்சொற்பொருள்:

யோஜனை தூரம் - தூரத்தை அளக்க இன்று நாம் சொல்லும் கிலோமீட்டர், மைல் போல் அந்தக் கால அளவு.
ஒட்டைகள் - ஒட்டகங்கள்.

சண்டன் - வம்பன்.

----------

எனது உரை: இங்கு பாலைவனத்தில் நடக்கும் ஒரு அழிவைப் படம் பிடித்துக் காட்டுகிறார். ஒரு நொடியில் காற்றால் ஒரு கூட்டத்தையே அழித்துப் போட முடியும் என்பதைக் காட்டுகிறார். அப்படிச் செய்வதால் அவன் கொடியவன் என்றும் ருத்ர ரூபி என்றும் கூறுகிறார். அந்தக் கொடியவன் நமக்கு நல்லது செய்யட்டும் என்று அவனை வாழ்த்துகிறார்.

பாரதியின் வசனகவிதை: காற்று - 3

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் மூன்றாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் இரண்டு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

-------------------------------------------------------------------

காற்றுக்குக் காது நிலை. சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான். காற்றில்லாவிட்டால் சிவனுக்குக் காது கேட்காது. காற்றுக்குக் காதில்லை. அவன் செவிடன்.

காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா? காதுடையவன் மேகங்களை ஒன்றோடொன்று மோதவிட்டு, இடியிடிக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பானா? காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா? காற்றை, ஒலியை, வலிமையை வணங்குகின்றோம்.

------------------------------------------------------------------

எனது உரை: ஐம்புலன்களில் காது தான் காற்றுக்கு இருப்பிடம் என்று பழைய நூல்கள் கூறும். அந்த செய்தியை அடிப்படையாக கொண்டு இந்தப் பாகத்தைப் பாரதியார் எழுதியிருக்கிறார்.

காற்று இருப்பதால் தான் நம் காது ஓசையை ஒலியை கேட்கமுடிகிறது. காற்றில்லாவிடில் ஒலி கேட்காது என்பது அறிவியலார் அறிந்து கூறியது. அதைத் தான் நம் முன்னோர்கள் காற்றின் நிலை காது என்று கூறினர். அந்தக் காற்று இல்லாவிட்டால் யாருக்கும் (சிவன் உட்பட) காது கேட்காது என்று பாரதியார் கூறுகிறார்.

அப்படி சொல்லிக்கொண்டே காற்றுக்குக் காதில்லை என்றும் கூறி அதன் காரணங்களையும் சுவைப்பட அடுக்குகிறார். அந்தக் காரணங்களுக்கு விளக்கம் தேவையில்லை என்பதால் விளக்கவில்லை.

பாரதியின் வசனகவிதை: காற்று - 2

பாரதியார் எழுதிய 'காற்று' என்னும் தலைப்பில் உள்ள வசன கவிதையின் இரண்டாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் பாகத்தில் ஒரு கதையை சொல்லி, பின்னர் காற்றுத்தேவன் ஒவ்வொரு உயிருக்கும் பிராணனாக இருக்கிறான் என்று கூறி, காற்றுத்தேவனை வணங்கினார் பாரதியார் - அதனைப் போன பதிவில் பார்த்தோம். இரண்டாம் பகுதியில் காற்றுத்தேவன் புயலாக மாறினால் எப்படி அழிவுசக்தியாக உருவெடுக்கிறான் என்பதைக் கூறுகிறார். இறைவனே ஆக்கவும் அழிக்கவும் செய்கிறான் என்பதைக் கூறுதல் இது.

Dec 11ம் தேதி பாரதியாரின் பிறந்த நாள். அந்த நன்னாளில் பாட்டுக்கொரு புலவனைப் போற்றுவோம்.

---------------------------------------------------------------

நடுக் கடல். தனிக் கப்பல். வானமே சினந்து வருவது போன்ற புயற்காற்று. அலைகள் சாரி வீசுகின்றன. நிர்த்தூளிப் படுகின்றன. அவை மோதி வெடிக்கின்றன. சூறையாடுகின்றன. கப்பல் நிர்த்தனஞ் செய்கிறது; மின் வேகத்தில் எற்றப்படுகின்றது; பாறையில் மோதிவிட்டது. ஹதம்! இருநூறு உயிர்கள் அழிந்தன. அழியுமுன், அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனமிருக்குமென்பதை அறிந்து கொண்டு போயின.

ஊழி முடிவும் இப்படியே தானிருக்கும். உலகம் ஓடுநீராகி விடும்; தீ, நீர். சக்தி காற்றாகி விடுவாள்.

சிவன் வெறியிலேயிருப்பான். இவ்வுலகம் ஒன்றென்பது தோன்றும். அக்து சக்தியென்பது தோன்றும். பின்னே சிவன் நிற்பது தோன்றும்.

காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான். அவற்றில் உயிர் பெய்கிறான். காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி, நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி, நீரைத் தூளாக்கித் தூளை நீராக்கிச் சண்ட மாருதம் செய்கின்றான்.

காற்றே யுகமுடிவு செய்கின்றான். காற்றே காக்கின்றான். அவன் நம்மைக் காத்திடுக. "நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி".

Monday, April 05, 2010

வசன கவிதை - காற்று - 1

பாரதியார் வசன கவிதை என்ற தலைப்பில் சில கவிதைகள் எழுதியுள்ளார். அவை இக்காலப் புதுக்கவிதைகளுக்கு முன்னோடி என்று சொல்லலாம். வடமொழி வேதங்களில் சாமவேதம் மட்டுமே பாடல்களாய் இசையுடன் கூடி இசைப்பதாய் இருக்கிறது. மற்ற மூன்று வேதங்களும் உரைநடையில் தான் இருக்கின்றன. இருக்கு வேதத்தில் உள்ள மாதிரி வசனங்களால் இறைசக்தியை வழிபடும் முறையில் இந்த வசனகவிதைகளும் இருக்கின்றன.

இந்த வசனகவிதைகளை ஒரே பதிவில் இட முடியாது - அவை சற்றே பெரியவை. அதனால் பகுதிகளாக இடலாம் என்று இருக்கிறேன். பெரும்பாலும் விளக்கம் தேவையிருக்காது. எங்கு விளக்கம் தேவையாய் இருக்கலாம் என்று தோன்றுகிறதோ அங்கு விளக்கம் சொல்கிறேன். உங்களுக்கும் ஏதாவது விளக்கம் தோன்றினாலோ அல்லது ஏதாவது கேள்விகள் இருந்தாலோ அதனைப் பின்னூட்டத்தில் இடுங்கள்.

இன்று 'காற்று' என்ற தலைப்பில் உள்ள வசன கவிதையின் முதல் பகுதியைப் பார்க்கலாம்.

************************************

ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல். தென்னோலை.

குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்டி மேலே தென்னங்கிடுகுகளை விரித்திருக்கிறது.

ஒரு மூங்கிற் கழியிலே, கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது. ஒரு சாண் கயிறு. இந்தக் கயிறு, ஒரு நாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. சில சமயங்களில் அசையாமல் 'உம்'மென்றிருக்கும். கூப்பிட்டாற் கூட ஏனென்று கேட்காது.

இன்று அப்படியில்லை. 'குஷால்' வழியிலிருந்தது.

எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்நேஹம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக்கொள்வதுண்டு.

"கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?"

பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.

ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்லவேண்டும். இல்லாவிட்டால், முகத்தைத் தூக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும், பெண்களைப்போல.

எது எப்படியிருந்தாலும், இந்த வீட்டுக் கயிறு பேசும். அதில் சந்தேகமேயில்லை. ஒரு கயிறா சொன்னேன். இரண்டு கயிறு உண்டு. ஒன்று ஒரு சாண்; மற்றொன்று முக்கால் சாண்.

ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும் மனைவியும். அவையிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள் பார்த்துக் கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டும், வேடிக்கைப் பேச்சுப் பேசிக்கொண்டும் ரசப்போக்கிலேயிருந்தன.

அத்தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன். ஆண் கயிற்றுக்குக் 'கந்தன்' என்று பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் 'வள்ளியம்மை'.

(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்).

கந்தன் வள்ளியம்மைமீது கையைப்போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின் வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.

"என்ன, கந்தா, சௌக்கியம்தானா? ஒரு வேளை, நான் சந்தர்ப்பம் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ! போய், மற்றொரு முறை வரலாமா?" என்று கேட்டேன்.

அதற்குக் கந்தன் :- "அட போடா வைதிக மனுஷன்! உன் முன்னே கூட லஜ்ஜையா? என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?" என்றது.

"சரி, சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்க வேண்டாம்" என்றது வள்ளியம்மை.

அதற்குக் கந்தன், கடகடவென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து, நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளியம்மையைக் கட்டிக்கொண்டது.

வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்குச் சந்தோஷந்தானே?

இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்தி தான். உள்ளத்தைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?

வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டுவிட்டது.

சில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக்கொண்டது.

மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும் தழுவல். மறுபடியும் கூச்சல். இப்படியாக நடந்து கொண்டே வந்தது. "என்ன, கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்த்தைகூடச் சொல்லமாட்டேனென்கிறாய்? வேறொரு சமயம் வருகிறேன். போகட்டுமா?" என்றேன்.

"அட போடா! வைதிகம்! வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருந்தாய். இன்னும் சிறிது நேரம் நின்று கொண்டிரு. இவளிடம் சில விவகாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். போய் விடாதே, இரு" என்றது.

நின்று மேன்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழிந்தவுடன், பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டு விட்டது.

உடனே பாட்டு. நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு.

இரண்டே 'சங்கதி'. பின்பு மற்றொரு பாட்டு. கந்தன் பாடி முடித்தவுடன், வள்ளி. இது முடித்தவுடன், அது மாற்றி மாற்றிப் பாடி - கோலாஹலம்.

சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டேயிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும்.

அது தழுவிக்கொள்ள வரும். இது ஓடும். கோலாஹலம்! இங்ஙனம் நெடும்பொழுது சென்றபின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது.

நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்து விட்டு வரப் போனேன்.

நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.

நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது. கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது.

என்னைக் கண்டவுடன், "எங்கடா போயிருந்தாய் வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டாயே" என்றது.

"அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறதே?" என்று கேட்டேன்.

ஆஹா! அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்!

காற்றுத்தேவன் தோன்றினான். அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். வைர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது. 'நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி'. காற்று, போற்றி, நீயே கண்கண்ட பிரமம்.

அவன் தோன்றிய பொழுதிலே வானமுழுதும் ப்ராண சக்தி நிரம்பிக் கனல் வீசிக் கொண்டிருந்தது.

ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன்.

காற்றுத் தேவன் சொல்வதாயினன் :- " மகனே, ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா? இல்லை. அது செத்துப் போய் விட்டது. நான் ப்ராண சக்தி.

என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாதது சவம். நான் ப்ராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு உயிர்த்திருந்தது; சுகம் பெற்றது. சிறிது களைப்பெய்தியவுடனே அதனை உறங்க - இறக்க - விட்டு விட்டேன். துயிலும் சாவுதான், சாவும் துயிலே. யான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன். அது மறுபடி பிழைத்துவிடும்.

நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான் சக்தி குமாரன். என்னை வணங்கி வாழ்க, என்றான்.

"நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி. த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி".

Friday, April 02, 2010

பொய்யா? மெய்யா?

பூனை தன் முன் உள்ள ஒரு சிறு பாத்திரத்தில் உள்ள பாலைத்தான் குடிக்கமுடியுமே ஒழிய பாற்கடலையே குடிக்க ஆசைப்பட்டால் அதனை என்ன சொல்வது? தத்துவ விசாரணையும் அப்படிப்பட்டதே. அது மாபெரும் கடல்; ஆனால் அது பாற்கடல். பால் இந்தப் பூனைக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த பாற்கடலில் இருக்கும் பாலை எல்லாம் அருந்திவிட வேண்டும் என்றப் பேராசையுடன் இந்தப் பூனை இறங்குகிறது. அது அந்தப் பாற்கடலில் மூழ்கிவிடாமல் இருக்க இறைவன் துணை செய்யட்டும்.

அன்பர்களே! உங்களுக்கு தத்துவம் படிப்பதில் விருப்பம் இல்லையென்றால் இதற்கு மேல் படிக்காதீர்கள். உங்கள் நேரம் வீணடிக்கப் பட்டதாய் பின்பு வருந்த நேரிடும்.

பாரதியார் 'நிற்பதுவே; நடப்பதுவே' என்ற பாடலில் உலகம் பொய் என்னும் தத்துவக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இறுதியில் 'காண்பதுவே உறுதி கண்டோம். காண்பதல்லால் உறுதியில்லை; காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்' என்று முடிக்கிறார். ஆனால் இந்த உலகம் அநித்தியமானது; அதனால் அது பொய் என்னும் கருத்து மிகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த கருத்தின் தாக்கம் எவ்வளவு தூரம் என்பதை அறிந்து கொண்டு தான் அவர்கள அதைச் சொல்கிறார்களா; இல்லை 'ஆஹா. எனக்கும் இந்த தத்துவம் புரிந்துவிட்டது. நான் பெரிய ஆள்' என்று எண்ணிக்கொண்டு பேசுகிறார்களா தெரியவில்லை. இந்தக் குற்றசாட்டு எனக்கும் பொருந்தும். எனக்கு இந்த 'உலகம் பொய்' என்னும் தத்துவம் முழுதாய்ப் புரியவில்லை. ஆனால் கேள்விகள் உண்டு. அவற்றைதான் இங்கு பேசப்போகிறேன்.

நண்பர் நடராஜன் இந்தப் பதிவின் முந்தையப் பதிவில் இட்ட பின்னூட்டம் தான் இந்தப் பதிவு எழுதத் தூண்டுதல். அவர் எடுத்தவுடனே சொல்வது 'இந்த உலகில் எது உண்மை? எல்லாம் மயக்கம் தான் இல்லையா? உன்னிடம் இப்போது என்ன இருக்கிறதோ அது உனது என்று எண்ணுகிறாய். ஆனால் எது உன்னிடம் நிற்கிறது?'. இந்தக் கருத்து பாதி சரி; மீதி சரியில்லை. இந்த உலகில் எல்லாமே மெய் தான். எதுவுமே பொய் இல்லை. இராகவன் சொன்னது போல் நிற்பது எல்லாம் நிலையானது இல்லை தான். அதனால் அது பொய் ஆகாது. பொய் என்றால் அது என்றைக்குமே இல்லாதது. அது இருப்பது போல் தோன்றும் போதும் இல்லாதது - கானல் நீரைப் போல. இன்று இருந்து நாளை இல்லாமல் போனால் அது நிலையில்லாததே ஒழிய பொய்யில்லை.

கானல் நீர் கூட பொய்யில்லை என்று சில நேரம் தோன்றும். அதில் நீர் இருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் அது தோற்ற மயக்கமே. அதில் நீர் இல்லை. அதில் இருப்பது போல் தோன்றும் நீரால் யாருக்கும் பயன் இல்லை. அதனால் அதனைப் பொய் என்று கூறலாம். ஆனால் அறிவியல் படித்தவர்கள் அது சரி என்று ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதில் பயன் கொள்ளத்தக்க நீர் இல்லாவிட்டாலும், நீராவியின் வடிவில் அதில் நீரின் பாகம் இருக்கிறது. அது தான் நீராய் கானலில் தெரிகிறது என்பர்.

அப்படி நிலையில்லாதது பொய்யில்லை என்றால் ஏன் பெரியவர்கள் அப்படி சொல்லியிருக்கிறார்கள்? அவர்கள் சரியாய்த் தான் சொல்லியிருக்கிறார்கள். நாம் புரிந்துகொண்டது தான் தவறு. அவர்கள் சொன்னது 'இந்தப் பொருள்கள் எல்லாம் நிலையில்லாதவை. (பொய் என்று சொல்லவில்லை) அவற்றின் மீது நீ பற்று வைத்துள்ளாயே - அது பொய். அந்தப் நிலையில்லா பொருள்கள் என்றும் நிலைத்தவை என்று எண்ணுகிறாயே அது பொய். அது தான் மயக்கம்'. மனைவி மக்கள், வீடு வாசல், காடு கழனி, பெயர் புகழ் எல்லாமே உண்மைதான். ஆனால் நிலையில்லாதவை. அதனால் அவை கொடுக்கும் போதையிலிருந்து வெளியே வா. மயக்கம் கொள்ளாதே' என்பது தான் பெரியவர்கள் செய்யும் உபதேசம்.

இதை இன்னொரு விதத்திலும் கூறலாம். அன்பே சிவம் என்றும் பெரியவர்கள் கூறியுள்ளனர். எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் பேண வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இவ்வுலகில் எல்லாம் பொய் என்றால் எதற்காக எதன் மேலும் அன்பு பூண வேண்டும்? எல்லா உயிர்களும் பொய் அல்லவா? ஏன் அவற்றின் மீது அன்பு செலுத்தவேண்டும்? அவர்கள் அப்படி எல்லா உயிர்களையும் தன்னுயிராய் எண்ணும்படி சொல்வதே அந்த உயிர்களும் அவை வாழும் இந்த உலகமும் பொய்யல்ல என்று சொல்லும்.

தன் குழந்தையின் மீது வைக்கும் அன்பு அது தனக்கே தனக்குரியது என்னும் மயக்கத்தால் வருவது; அந்தக் குழந்தை மட்டும் அல்ல; இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனின் படைப்பு; அதனால் எனக்கு உறவு; அதனால் நான் எல்லா உயிர்கள் மேலும் அன்பு பூண வேண்டும்; இதுவே அந்தப் பெரியவர்களின் உபதேசம்.

எல்லா உயிர்கள் மேலும் அன்பு கொள்; அது நித்தியம். ஆனால் அப்படி நீ ஏதாவது செய்யும் போது புகழ் வந்தால் அதனைப் பெரிதாய்க் கொள்ளாதே; ஏனெனில் அது அநித்தியம். ஆனால் நீ அன்பு கொள்வதும், புகழ் வருவதும் இரண்டும் பொய் அல்ல. நித்தியமானதின் மேல் பற்று வை. அநித்தியமானதை அது நிலையில்லாதது என உணர். இதுவே அவர்களின் கருத்து.