Tuesday, June 17, 2008

வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர்


வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே


வாள்வரி அதளதாடை - வாளைப் போன்ற கூரிய வரிகளைக் கொண்ட புலித்தோலால் ஆன மேலாடையும்

வரிகோவணத்தர் - வரிகளையுடைய புலித்தோலால் ஆன இடையாடையும் அணிந்த சிவபெருமான்

மடவாள் தனோடும் உடனாய் - அன்பு மனையாளோடு சேர்ந்து

நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து - தாமரையும் வன்னிமலரும் கொன்றைமலரும் கங்கை நதியும் தன் திருமுடியின் மேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - தானாக என் உள்ளம் புகுந்து அங்கே நிலைநின்றதால்

கோளரி உழுவையோடு - கொடுமையே வடிவான புலியும்

கொலையானை - பயங்கரமான யானையும்

கேழல் - காட்டுப் பன்றியும்

கொடுநாகமோடு - கொடிய நாகமும்

கரடி - கரடியும்

ஆளரி - ஆளைக் கொல்லும் சிங்கமும்

நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அவை அடியார்களுக்கு மிக நல்லவைகளாக இருக்கும்

***

மேலே இருக்கும் படத்தில் இருப்பவர் திருஞானசம்பந்தர். 9ம் நூற்றாண்டுத் திருவுருவம். பாரிஸில் உள்ள ஆசிய அருங்காட்சியகத்தில் தற்போது இருக்கிறது. யோகன் ஐயா அண்மையில் அங்கு சென்றிருந்த போது எடுத்து அனுப்பியப் புகைப்படம்.

4 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'கோளறு பதிகம்' பதிவில் 20 மே 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

8 comments:

செல்வன் said...
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிக////

இதே போல் கருத்து அப்பரின் பாடலிலும் வருகிறது குமரன்.சுண்ணாம்புகாளவாயில் இட்டபோது அவருக்கு அது மாலைமதியம் போல்,மாசில் வீணைபோல்,மூசுவண்டுறை பொய்கை போல் தோன்றியதாம்.

கற்றூணைப்பூட்டி கடலிற் பாய்ச்சினும்
நற்றுனையாவது நமச்சிவாயவே

May 20, 2006 2:00 PM
--

குமரன் (Kumaran) said...
செல்வன். நீங்கள் சொல்லும் பாடல் நாம் பள்ளியில் மனப்பாடச் செய்யுளில் படித்திருக்கிறோமே.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

என் தந்தையான ஈசனின் இணைந்திருக்கும் திருவடி நிழலானது மாசு இல்லாத வீணையின் இசையைப் போன்றது; மாலையில் வரும் மதியைப் போன்றது; வீசுகின்ற தென்றலைப் போன்றது; அதிகாலை இள வெயிலைப் போன்றது; அழகிய வண்டு இசை பாடும் பொய்கையைப் போன்றது.

May 20, 2006 2:04 PM
--

செல்வன் said...
இந்த பாடலை தான் குறிப்பிட்டேன் குமரன்.மகேந்திரவர்மன் அப்பரை சுண்ணாம்பு காளவாயில் இட்டபோது அவர் பாடியது இது

May 20, 2006 2:14 PM
---

குமரன் (Kumaran) said...
ஆமாம் செல்வன். நீங்கள் சொல்வது சரிதான். நற்றுணையாவது நமச்சிவாயமே என்று பாடியது அப்பரை கல்லில் கட்டிக் கடலில் தள்ளிய போது.

May 21, 2006 4:57 AM
--

கலாநிதி said...
வரிகோவணத்தர் என சமணர்களையும் குறிப்பிடும் சொல்லல்லவா?குமரன்

May 21, 2006 9:12 AM
---

குமரன் (Kumaran) said...
கலாநிதி, நான் அறிந்தவரை அது புலியாடையை அரையாடையாக அணிந்துள்ள சிவபெருமான் தான் வரிகோவணத்தர். ஏன் அது சமணர்களைக் குறிக்கும் சொல் என்று நினைக்கிறீர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்?

May 21, 2006 6:04 PM
--

சிவமுருகன் said...
குமரன் அண்ணா,
படமும், விளக்கமும் மிக அருமை.

நாண்மலர்-நான்கு வித மலர்களை குறிக்கிறதா இல்லை தாமரையை தான் குறிக்கிறதா?

May 21, 2006 8:46 PM
---

குமரன் (Kumaran) said...
சிவமுருகன்,

நான்மலர் என்று இருந்தால் நான்கு விதமான மலர் என்று பொருள் கொள்ளலாம். இங்கு இருப்பதோ நாண்மலர் என்ற சொல். நாள்+மலர் என்று பிரியும். நாள் என்று குறிக்கப்படுவது கதிரவன். கதிரவன் மலர்த்துகின்ற மலர் நாள் மலர். அது தாமரை.

May 23, 2006 11:01 AM

Kavinaya said...

படிக்கும்போது நாண்மலர் குறித்து கேள்வி வந்தது. அழகாக விளக்கி விட்டீர்கள் :) படிக்கப் படிக்க சுவைக்கிறது. நன்றி, குமரா!

Kavinaya said...

திருஞானசம்பந்தர் படத்துக்கும் யோகன் ஐயாவிற்கு நன்றி!

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.