Wednesday, November 29, 2006

மதுசூதனன் மார்பில் நிலைத்தவளே!

நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிக்குப் பொருள் சொல்லிக் கொண்டு வருகிறார். அண்மையில் அவர் இட்ட பதிவில் அடியேன் சில பின்னூட்டங்களை இட்டேன். அப்போது தோன்றிய கருத்துகளை அப்படியே எழுத்தில் இட முயன்றதால் முற்றுப்புள்ளியே இல்லாமல் சில கருத்துகளைச் சொல்லியிருந்தேன். அவற்றை இன்னும் எளிமையாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் அறிவுறுத்தியதால் அங்கே சொன்னதை இன்னும் எளிமையாகவும் விளக்கமாகவும் சொல்ல அடியேன் முயல்கிறேன்.

மதுகைடபாரே வக்ஷோ விஹாரிணி - மதுகைடபர்களை அழித்தவனின் மார்பில் கோயில் கொண்டவளே!

நல்லவைகள் குறைந்து கெட்டவைகள் மேம்படும் போது நல்லவைகளை நிலைநாட்டுவதற்காக நான் மீண்டும் மீண்டும் பிறப்பேன் என்கிறான் கீதாசார்யன் கண்ணன். சொன்ன சொல் தவறாதவன் தானே இறைவன்? எப்போதெல்லாம் அடியவர்களுக்கு துன்பம் நேர்கிறதோ அப்போதெல்லாம் தோன்றுகிறான். அடியவர்களின் துன்பத்திற்கு காரணமானவர்களையும் காரணமானவைகளையும் நீக்கி நல்லதை நிலைநாட்டுகிறான். அப்படி நல்லதை நிலைநாட்டும் நீதிபதி அவன் என்பதைச் சொல்கிறது மதுகைடபர்களை அழித்தவன் என்ற பெயர்.

அவன் அப்பன் என்றாலும் முதலில் நீதிபதி. நன்மையையும் தீமையையும் சீர்தூக்கி எந்த பக்கமும் சாராமல் நீதியை வழங்குபவன். அடியேனோ அளவற்ற குற்றங்கள் செய்தவன். அபராதச் சக்ரவர்த்தி. அப்படிப்பட்டவனை அந்த மதுசூதனன் தள்ளிவிடுவானோ என்ற ஐயம் தோன்றும். அப்போது அவன் மார்பில் அன்னை நித்ய வாசம் செய்கிறாள் என்று சொல்லுவதால் அந்த ஐயம் நீங்கி ஆறுதல் ஏற்படுகிறது.

அன்னை அருகில் இருக்கும் போது அப்பன் நம்மை மன்னிக்கலாம். ஆனால் நான் அவனை நெருங்கும் போது அன்னை பக்கத்தில் இல்லாமல் போய்விட்டால்? அசுரர்களை அழிக்கும் அவன் நம்மிடம் இருக்கும் அசுர குணங்களையும் அழிக்கலாம்; அழிக்க முடியும்; அழிப்பான். ஆனால் அவற்றை இவ்வளவு நாள் நமக்குள் வைத்துக் கொண்டிருந்ததால் சினம் கொண்டு தண்டிப்பானோ? இந்த ஐயமே தேவையில்லை. அன்னை எப்போதும் அவன் மார்பில் இருக்கிறாள். எப்போதும் நகலக் கூடாது என்று அங்கேயே கோயில் கொண்டு இருக்கிறாள். அதனால் எந்தக் கவலையும் இல்லை.

சரி. கோயில் கொள்வதற்கு சுவாமியின் உடலில் வேறு இடமா இல்லை? ஏன் மார்பில் கோயில் கொண்டாள்? கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இன்று மாலை என்ன என்ன செய்வது என்று கொஞ்சம் சிந்தியுங்கள். எண்ணங்கள் தோன்றுகின்றனவா? அவை எங்கே தோன்றுகின்றன என்று பாருங்கள். எனக்குத் தெரிந்தவரை அவை தலையிலிருந்து தோன்றும். சிலருக்கு புருவ மத்தியில் இருந்து எண்ணங்கள் வருவதாய் தோன்றும். சிலருக்கு பிள்ளையாரைக் கும்பிடும் போது குட்டிக் கொள்வோமே அந்த இடங்களில் (னெற்றிப் பொட்டு?) இருந்து எண்ணங்கள் எழுவதாகத் தோன்றும்.

சரி இப்போது அம்மாவையோ அப்பாவையோ நம் வாழ்க்கைத் துணைவரையோ குழந்தையையோ நினைத்துக் கொள்ளுங்கள். தோன்றும் உணர்வு எங்கே இருந்து கிளம்புகிறது? மார்புகளின் நடுவில் ஏதோ அசைந்தது போல் தோன்றுகிறதா? அங்கே தான் உணர்ச்சிகள் தோன்றுகின்றன.

நாம் செய்த தவறுகளைக் கண்டு நம் மீது சுவாமிக்குச் சினம் வந்தால் அது எங்கிருந்து தோன்றும்? மார்பின் நடுவிலிருந்து தானே?! அது தோன்றும் முன் அதனை மாற்றி நம் மேல் கருணை எழச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் கருணைக்கடல் அன்னை வேங்கடவன் மார்பைத் தேர்ந்தெடுத்து அங்கே கோயில் கொண்டாள்.

இனி மேல் என்னங்க கவலை? அன்னையின் சிபாரிசோடு அப்பனை சரண் புகலாம் வாருங்கள்.

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று...

என்.எஸ்.கே. பிறந்த நாள் வாழ்த்துகள்

நண்பர்கள் பலரும் ஏற்கனவே அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிவிட்டார்கள். எல்லோரும் விரும்பும் வண்ணம் அவரின் குண நலன்களும் பழகும் விதமும் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அவரைப் பற்றித் தவறாகப் பேசியவர்களும் எண்ணியவர்களும் உண்டு. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று உணர்ந்த நண்பர்கள் அவரின் கருத்துகளுக்கு எதிர்கருத்துகள் இருந்தாலும் அவரைச் சந்தித்துத் தங்கள் இயல்பான நற்குணத்தைக் காட்டிக் கொண்டனர். ஐயா அவர்களின் பிறந்த நாளைப் பற்றிச் சொன்ன அண்ணன் கோவி.கண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் பிறந்த நாளான இன்று 'என் எஸ்.கே' அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி பெருமகிழ்ச்சியடைகிறேன்.

அவருக்கு அடியேனின் பிறந்த நாள் பரிசு கீழே இருக்கிறது.

Tuesday, November 28, 2006

அம்பிகா தனயா பால கஜானன



அம்பிகா தனயா கஜானனா - அம்பிகை மகனே யானைமுகனே
கஜவதனா கணநாத கஜானன - யானைமுகனே கணங்களின் தலைவனே யானைமுகனே
சாயி கணேசா விநாயகா - சாயி கணேசனே விநாயகனே

த்ரிபுவன பாலக - மூவுலகையும் காப்பவனே
மங்கள தாயக - மங்களங்கள் அருள்பவனே
வித்யா புத்தி சித்தி ப்ரதாயக - கல்வி, அறிவு, செயல்திறம் நிலையாகத் தருபவனே
சாயி கணேசா விநாயகா - சாயி கணேசனே விநாயகனே

மேரே பாபா ஸ்ரீ சத்ய சாயீ!


ஜெய் ராதே! ஜெய் கிருஷ்ண!


ஜெய் ராதே! ஜெய் கிருஷ்ண!

Monday, November 27, 2006

அனைத்துலகிற்கும் தாயே!!

நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிக்குப் பொருள் சொல்லிக் கொண்டு வருகிறார். அண்மையில் அவர் இட்ட பதிவில் அடியேன் சில பின்னூட்டங்களை இட்டேன். அப்போது தோன்றிய கருத்துகளை அப்படியே எழுத்தில் இட முயன்றதால் முற்றுப்புள்ளியே இல்லாமல் சில கருத்துகளைச் சொல்லியிருந்தேன். அவற்றை இன்னும் எளிமையாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் அறிவுறுத்தியதால் அங்கே சொன்னதை இன்னும் எளிமையாகவும் விளக்கமாகவும் சொல்ல அடியேன் முயல்கிறேன்.

மாத: ஸமஸ்த ஜகதாம்: எல்லா உலகங்களுக்கும் தாயே!

அம்மா அப்பா இருவரும் கண்கண்ட தெய்வங்கள் என்பது நம் ஆன்றோர் வாக்கு. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறாள் ஒளவைப்பிராட்டி. அம்மா அப்பாவை தெய்வமாக நினைப்பவர்கள் அதே நேரத்தில் தெய்வ தம்பதியரான திரு மாலையும் பார்வதி பரமேஸ்வரரையும் அம்மையப்பராக நினைப்பதும் உண்டு. அப்படி நமக்கு என்றும் நிலைத்த அன்னையாக இருக்கும் திருமகள் நமக்கு மட்டுமே அன்னையன்று; உலக மக்கள் எல்லாருக்கும் அன்னை என்பது இந்த சொற்றொடரைச் சொல்லும் போது தோன்றுகிறது.

அப்படி உலக மக்கள் எல்லோருக்கும் அன்னையான அவள் அடியேனுக்கும் அன்னை என்பதால் உலக மக்கள், மாக்கள் என எல்லாருமே எல்லாமுமே அடியேனின் உடன் பிறந்தவர்கள் என்பதும் இந்தச் சொற்றொடரைச் சொல்லும் போது தோன்றுகிறது.

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்று மூத்தோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அல்லது (கெட்டது) செய்தலே மிக இயற்கையாக அடியேனுக்கு அமைந்திருக்கிறது. அன்னையின் கருணை நல்லது செய்து அவள் மனம் மகிழும் படி செய்யும் பெரியோர்களுக்கு அமைவதும் அவள் அவர்களை அரவணைப்பதும் எளிதாக நடக்கும். அல்லதே செய்து பொழுதைக் கழிக்கும் நீசனான எனக்கு அன்னையின் அருள் அமையுமா என்ற ஐயத்தையும் உலக மக்கள் எல்லோருக்கும் அவள் அன்னை என்ற சொற்றொடர் நீக்குகின்றது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்று சொல்வார்கள். பசுங்கன்றின் அழுக்குகளை பசு தன் நாக்காலேயே நக்கி சுத்தம் செய்யும். அது போல் எல்லா உலகங்களுக்கும் அன்னையான திருமகள் அடியேனின் அழுக்குகளைக் கண்டு என்னைத் தள்ளாமல் அவள் அருளால் அந்த அழுக்குகளை நீக்கி என்னையும் அரவணைப்பாள் என்ற ஆறுதலும் இந்த சொற்றொடரால் கிடைக்கிறது.

ஜகத் என்ற வடமொழிச் சொல்லுக்குப் போவதும் வருவதுமாக இருப்பது என்று பொருள். ஸமஸ்த ஜகதாம் மாத: என்றதால் போவதும் வருவதுமாக இருக்கும் அசையும் பொருட்கள் அசையாப் பொருட்கள் எல்லாவற்றிற்கும் அன்னை என்பது புரிகிறது. அதே நேரத்தில் ஒரு பொருள் அசைவது, அசையாதது (உயிருள்ளது உயிரில்லாதது, அறிவுள்ளது அறிவில்லாதது போன்ற எதிர்மறைகளும் இதில் அடங்கும்) என்ற பிரிவினைகள் இன்றி எல்லாப் பொருட்களுக்கும் அன்னை திருமகள்; அவற்றிடையே உயர்வு தாழ்வு இல்லை என்ற தெளிவு பிறக்கிறது.

ஜகத் என்னும் சொல் போவதும் வருவதுமாக இருக்கும் நிலையா உலகைக் குறிக்கும் சொல். நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் பெருமை உடையது இந்த உலகம். இப்படி உலகம் நிலையில்லாதது என்ற அறிவை நினைவுறுத்துகிறது ஜகத் என்னும் சொல். ஆனால் அதே நேரத்தில் அன்னையைப் பற்றிச் சொல்வது இந்த நிலையில்லா உலகில் நிலைத்த சொந்தமாய் இருப்பவள் அன்னையே என்ற தெளிவைத் தருகிறது.

ஸமஸ்த ஜகதாம் என்று எல்லா உலகங்களையும் சொன்னதால் ஈரேழு பதினான்கு உலகங்களும் (மேல் உலகங்களான தெய்வீக உலகங்களும், கீழ் உலகங்களான பாதாள உலகங்களும்) சொல்லப்பட்டன. அதனால் அது சிறந்தது; இது சிறப்பில்லாதது என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி திருமகள் எல்லா உலகங்களுக்கும் தாய் என்பது சொல்லப்பட்டது.

சொல்லின் செல்வனாம் அனுமன் அன்னை சீதையை அசோக வனத்தில் கண்டபின் சேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இராமபிரானிடம் வந்து சேதியைச் சொல்லும் போது எடுத்தவுடன் 'கண்டேன்' என்று தொடங்கியதைப் போல் இங்கே தாய் என்ற பொருள் தரும் 'மாத:' என்ற சொல்லில் தொடங்கி சொல்வதால் திருமகள் அடியேனின் நிலைத்த அன்னை என்ற பொருளைச் சுட்டிக் காட்டுகின்றது இந்தச் சொற்றொடர்.

***



அன்னை சீதையைத் தேடி எட்டு திசைகளிலும் சென்ற வானரர்கள் எல்லாம் திரும்பிவிட்டார்கள். தென் திசைக்குச் சென்ற வானரர்களில் சிலர் மட்டுமே இன்னும் வரவில்லை. திரும்பிய வானரர்கள் யாருமே அன்னையைக் காணவில்லை. பறவைகள் அரசரும் சக்ரவர்த்தி தசரதரின் நண்பருமான ஜடாயு சொன்ன குறிப்புகளின் படியும் சுக்ரீவனும் அவன் நண்பர்களும் கண்ட குறிப்புகளின் படியும் அன்னையை எடுத்துச் சென்றவன் அவளைத் தென் திசை நோக்கியே எடுத்துச் சென்றான் என்பதால் தென் திசைக்குச் சென்று இன்னும் திரும்பாத வானரர்கள் நல்ல செய்தியைக் கொண்டு வருவார்கள் என்று இராமபிரான் ஆவலுடன் வானத்தையும் தென் திசையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறான்.

திடீரென்று எங்கே பார்த்தாலும் ஒரே பரபரப்பு. தென் திசைக்குச் சென்ற வானரர்கள் திரும்பிவிட்டனர். அவர்களுக்குத் தலைமை ஏற்றுச் சென்ற ஜாம்பவானும் அனுமனும் வருகிறார்கள். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சிக் குறி தெரிகிறது. ஏற்கனவே பொங்கிப் பிரவாகம் கொண்டு புயல் சின்னங்களை மனத்தில் கொண்டு இருந்த இராகவனும் அந்த மகிழ்ச்சிக் குறியைக் கண்டு மகிழ்ந்து உவகையும் ஆவலும் பிடித்துத் தள்ள திரும்பி வரும் வானரரை எதிர் கொண்டு அழைக்க முந்துகிறான். அந்த நேரத்தில் நாமாக இருந்தால் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு கடலைக் கடந்து இலங்கினியைக் கொன்று குறுவுருவம் தரித்து இலங்கையில் புகுந்து என்ன என்னவெல்லாம் செய்து பின்னர் அன்னையைக் கண்டோம் என்று நம்மைப் பற்றியே நாம் பட்ட கஷ்டங்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் அனுமன் சொல்லின் செல்வன் அல்லவா? அவனுக்குத் தெரியாதா எதனை எப்போது சொல்லவேண்டும் என்று. அதனால் ஐயனை அந்த நிலையில் கண்டதும் அவன் வாயிலிருந்து வந்த முதல் சொற்றொடர் 'கண்டேன் கற்பினுக்கணியை' என்பதே.

ஜானகியைக் கண்டீர்களா என்று எல்லா வானரர்களையும் கேட்டுக் கேட்டு இல்லை என்ற சொல்லையே கேட்டறிந்த ஐயன் 'கண்டேன்' என்ற சொல்லைக் கேட்ட போது எவ்வளவு மகிழ்ந்திருப்பான்? இது வரை மலை போல் வளர்ந்து வந்த துயரங்கள் எல்லாம் ஒரே நொடியில் தகர்ந்து போயிருக்குமே! அப்படி நடக்க வேண்டும் என்பது தான் அனுமனின் ஆவலும். ஒரே சொல்லில் ஐயனின் துயரெல்லாம் தீர்த்துவிட்டான். சீதையைக் கண்டேன் என்று சொன்னாலும் சரியாக இருந்திருக்காது. சீதையை என்ற சொல்லைக் கேட்டவுடன் 'ஐயோ சீதைக்கு என்ன ஆயிற்று?' என்று ஐயன் கலங்க வாய்ப்புண்டு. அதனால் முதலில் கண்டேன் என்று சொன்னான் அனுமன். (அதே போல் மாத: என்று முதலில் சொல்லியிருக்கிறார்கள். அப்புறம் தான் ஸமஸ்த ஜகதாம் என்று சொன்னார்கள்).

அடுத்த கேள்வியாக 'சீதை நலமா?' என்பதற்கும் சுருக்கமாக 'கற்பினுக்கணியை' என்ற சொல்லால் சொல்கிறான் செஞ்சொற்பொற்கொல்லன் அனுமன். அன்னை நலமே என்பதும் அவள் கற்பினுக்கு எந்த இடையூறும் இல்லை என்பதையும் இந்தச் சொல் மிகத் தெளிவாக சொல்லிவிடுகிறது.

அதன் பின்னரே நடந்த எல்லாவற்றையும் ஆற அமர இருந்து பேசித் தெரிந்து கொள்கிறார்கள் அனைவரும்.

***

அடுத்த இரு பின்னூட்டங்களிலும் சொன்னவற்றை அடுத்தப் பதிவுகளில் சொல்கிறேன்.

Wednesday, November 22, 2006

ஸ்வாமியின் 81வது பிறந்த நாள்

சுவாமி என்றும் பாபா என்றும் சாய்ராம் என்றும் பக்தர்களாலும் நல்லெண்ணம் கொண்டவர்களாலும் அழைக்கப்படும் பகவான் சத்ய சாயி பாபாவின் பொற்பாதக் கமலங்களில் அவரின் 81 வது பிறந்த நாளான இன்று அடியேனின் ஆயிரம் கோடி வணக்கங்கள்.




போற்றி போற்றி ஓராயிரம் போற்றி உன்
பொன்னடிகளைப் போற்றி நிற்கின்றேன்.


இருவருடங்களுக்கு முன்பு சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டுவரும் கால்வாயை சுவாமி மேம்படுத்தி நீர்வரத்து ஏற்பாடு செய்ததைக் காட்டும் செய்தித் தொகுப்பு.

Tuesday, November 21, 2006

Friday, November 17, 2006

அருணாசலத்தைப் பசுமையாக்கல்

திருவண்ணாமலையை பசுமையாக்குவதற்கும் திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நீரை நன்னீராக்கவும் ஒரு சிறு முயற்சி செய்யப்படுகிறது. அதனைப் பற்றிய படம் இது.



Tuesday, November 14, 2006

கண்ணன் அல்லால் தெய்வமில்லை!!!

நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை
முனைவர் கண்ணன், கீல், ஜெர்மனி.
(Project Madurai)மதுரை மின் பதிப்புத் திட்டத்திற்காக எழுதியது


--------------------------------------------------------------------------------



1. இந்திய மெய்யியல் - ஒரு கண்ணோட்டம்
2. திருமால் வழிபாட்டின் வரலாற்றுச் சிறப்பு
3. வைணவ சித்தாந்தம்
4. சைவ-வைணவ பேதம் உண்மையா?
5. ஆழ்வார்கள் பெயர்க் காரணம், அவர்களின் சிறப்பு
6. ஆழ்வார்கள் காட்டும் வாழ்வு நெறி
7. பாசுரங்களின் சம காலப் பயன்பாடு




--------------------------------------------------------------------------------


1. இந்திய மெய்யியல் - ஒரு கண்ணோட்டம்

தொன்மையான இந்திய மெய்யியல் வரலாறை அறிந்து கொள்ளும் போது இந்திய உள்ளத்தின் பரிணாம வளர்ச்சியையும் (evolutionary history) புரிந்து கொள்ள முடிகிறது. முடிந்த அளவு, இந்திய மெய்யியல் ஞானிகள் மெய்யியல் புரிதலை (ஞானத்தை) எல்லோரும் சுதந்திரமாக அணுகும் வண்ணம் திறந்த புத்தகம் போல் அமைத்தது மட்டுமல்லாது, இறைவனை அடைவதற்கான வழியில் அளப்பரிய சுதந்திரத்தையும் அள்ளி வழங்கி உள்ளனர். இந்திய மதம் என்றொன்று "இந்து மதமாக" ஸ்தாபனப் படமுடியாமல் இன்றுவரை இருப்பதற்கான அடைப்படைக் காரணி இந்த பரந்த, சுதந்திர மனப்பான்மைதான்.

எப்படி மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறாக உள்ளோமோ, அதுபோல் நாம் வழிபடும் வழிகளிலும் கிளைகள் இருப்பதை நம் மூதாதையர் புரிந்து அனுமதித்து உள்ளனர். அதன் வெளிப்பாடுதான், இந்தியர்கள் வழிபடும் பல் தேவதை வழிபாடுகள் (இஷ்ட தேவதா நிஷ்டை). எப்படி ஆறுகளின் தோற்றுவாயும், வழியும் வேறு பட்டு இருந்தாலும் இறுதியில் கடல் என்ற ஒன்றில் கலக்கிறதோ அதுபோல் பல்வேறு வழிபாட்டு முறைகளும் இறைமை என்ற ஒன்றில் கலப்பதை அறிந்து, உணர்ந்திருந்தனர் நம் முன்னோர்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பரிணாமவியல் விதியின் படி வேற்றுமை விரிந்து இருக்கும் போதுதான் உயிர்த் தொடர்ச்சி காலத்தை வெல்கிறது. (variation is the basis of evolution). இந்திய மெய்யியல், இன்றளவும் காலத்தை வென்று நிற்பதற்கு அதன் பல நோக்கு அணுகு முறைதான் காரணம் என அறியலாம்.
2. திருமால் வழிபாட்டின் வரலாற்றுச் சிறப்பு:

இதனால்தான், தொன்மையான தமிழ் இலக்கியங்கள் தமிழ் நில அமைவை (tamil landscape) விளக்கிச் சொல்லும் போது மரம் செடி, கொடிகள் மாறுபடுவது போல் பல்வேறு நில அமைவுகளுக்கு ஏற்றவாறு கடவுளரையும் வெவ்வேறாய் வைத்தன. இதன் உளவியல் சூட்சுமத்தை இருபதாம் நூற்றாண்டு மனோதத்துவியல் உணர்ந்து பாராட்டுகிறது.

ஐந்திணைக் கோட்பாடு என்றழைக்கப் படும் இத்திணை வகுப்பில் முல்லைத் தெய்வமாய் அறிமுகமாகிறான் கண்ணன். முல்லை என்பது காடும், காடு சார்ந்த பகுதியைக் குறிக்கும். மரங்கள் அடர்ந்த நில அமைவுடன் கண்ணன் என்னும் தெய்வம் எவ்வாறு ஒத்துப் போகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டுமெனில், நம்மாழ்வார் இறைவனை எவ்வாறு தனது அனுபூதி நிலையில் உணர்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

"வேரும் வித்துமின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன் மிகு பெரு மர"

என்று வியக்கிறார் நம்மாழ்வார்.

இங்கு திருமாலை மரமாக உருவகிக்கிறார். தொன் மரம் என்பதை - கால அளவிற்கு (beyond time) உட்படாதது என்று புரிந்து கொள்ளவேண்டும்; மிகு மரம் என்றால் - வெளி அளவுக்கு (beyond space limitation) உட்படாதது என்றும்; பெரு மரம் என்பதால் - உருவ அளவுகளைக் கடந்தது (immeasurable) என்றும் ஆகிறது.

அதாவது மெய் பொருள் என்பது கால, வெளி, அளவுகளைக் கடந்த ஒன்று என்று சொல்கிறார். தன்னை அண்டியவற்கு தண்ணிழல் தருவது மரம். நல்லவர், கெட்டவர் என்று பேதம் பார்க்காது நிழலும், பழமும் (பரமபதம்) தருவது மரம்.

மரம் என்ற உருவகத்திற்கு ஒரு உருவம் கொடுக்க முயலும் போது மரங்கள் அடர்ந்த காடும், காடு சார்ந்த நிலமும் நினைவுக்கு வருவது தவிற்க இயலாதது. இப்படித்தான் தொல்காப்பிய பாடலும் கண்ணனை முல்லைத் தெய்வமாக உருவகித்து தமிழ் உலகிற்கு அளிக்கிறது.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்.....
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

கடைச் சங்க நூலான புறநானூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடும் வழக்கம் இருப்பது அறியக் கிடைக்கிறது. அரி, அரன், அயன் என்னும் முத்தெய்வங்களில் ஒன்றை முதன்மைப் படுத்தி வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இங்கு அரி என்பது திருமாலையும், அரன் என்பது சிவனையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கும். கடைச் சங்கம் நிலைப்படும் முன் இடைச் சங்கமும், அதன் முன் முதல் சங்கமும் இருந்த தொன்மையான இலக்கிய பாரம்பரியம் நமது. இக்கால கட்டத்தில் வேளிர் குல மக்களுடன் கண்ணன் தமிழ் சங்கத்தை நிறுவகித்த பழம் செய்தி ஒன்றும் உள்ளது.

சங்க நூல்களில் மிகவும் பெருமை வாய்ந்ததும், காலத்தை வென்று இன்றளவும் சிறப்புடன் போற்றப் படுவதும் திருக்குறள் ஆகும்.வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் திருமால் வழிபாடு சீறும், சிறப்புடன் இருந்திருப்பதை பரணர் என்னும் சங்கப் புலவர் இயற்றிய ஒரு குறள் சொல்லும்:

தேவரில் திருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர் வெண்பா

இதன் பொருள், எவ்வாறு திருமால் என்பவன் வணங்கும் தெய்வங்களில் மிக உயர்ந்தவனாக உள்ளனோ, அதுபோல் தமிழ் வெண்பாக்களில் சிறந்து விளங்குகிறது வள்ளுவரின் குறள் என்பதாகும்.

3. வைணவ சித்தாந்தம்

வைணவ சம்பிரதாயப்படி தத்துவம் மூன்று என்பர். அவை சித்து, அசித்து, ஈசுவரன். சித்து-உயிர்; அசித்து-மக்கள், விலங்கு, இவைகளின் உடம்பு மற்றும் உலகப் பொருட் களுக்கு காரணமான பிரகிருதி. இதை "மூலப்பகுதி" என்பர். ஈசுவரன்-இறைவன். இவை தனித்தனி இயல்புடையவை, என்றும் அழிவில்லாமல் இருப்பவை. எக்காலத்தும் இவை சேர்ந்தே இருக்கும் தன்மையாயின. இவற்றுள் இறைவன் சித்து-அசித்து இவையுள் இயங்கு சக்தியாக (அந்தர்யாமியாக) இருக்கிறான். இது ஒரு "சூக்கும நிலை" யாகும். மூலப்பொருள் விரிவடைந்து விலங்கு, மக்கள் என்று பரிணாமமுறுகிறது. உயிர் தனது புண்ணிய, பாவங்களுக்கேற்ப வெவ்வேறு உடலை (உயிர் நிலையை) அடைகிறது. அதுவே உயிருக்கு பிறப்பாகும். விகாரமடையும் (மாறுதலடையும்) மூலப்பகுதியை "ஸ்தூல நிலை" என்பர். அதாவது பார்த்து, உணர்ந்து, அளந்து பார்க்கக்கூடிய நிலை. இந்நிலைக்கு பின் புலமாயுள்ள உயிருக்கு இத்தகைய விகாரமில்லை. எனினும், அது தான் செய்த பிறவிப் பயனாய் இவ்வுடம்பின் வழி வரும் இன்ப, துன்பங்களைத் துய்க்கிறது.

இவ்வுடம்பினுள்ளும், உயிரினுள்ளும் அந்தர்யாமியாக உள்ள இறைவன், உடம்பின் விகாரங்களையும், உயிரின் இன்ப-துன்பங்களையும் அடைவதில்லை. இறைவன் வினை காரணமின்றி தன் விருப்பினால் இவ்விரண்டினுள்ளும் குடியிருப்பதால் இவ்விரண்டின் தன்மைகளையும் அடைவதில்லை. உயிர் மூலப்பொருளின் விகாரமாகிய உடம்பைக் கொண்டிருத்தல் போல் இறைவன் உடம்பு, உயிர் இவையிரண்டையும் தனது உடம்பாகக் கொண்டுள்ளான். இவ்வாறு, இம்மூன்று தத்துவங்களும் ஒன்றை விட்டொன்று பிரியாமல் எக்காலத்தும், தத்தம் இயல்பை விடாமல் ஒன்று சேர்ந்துள்ளன என்பது திருமாலை வழிபடும் வைணவர்களின் கொள்கையாகும்.

இக்கொள்கையை விளக்க வைணவ துறவிகள் மூன்று கோல்களை ஒன்றாகப் பிணைத்து கையில் வைத்திருப்பர். இதை "முக்கோல்" என்பர். துறவிகள் இவ்வாறு முக்கோல் ஏந்தும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பதை கீழ் கண்ட தொல்காப்பிய செய்யுள் வரிகளால் அறியலாம்:

"நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய"

இங்கு அந்தணர் என்பது முற்றும் துறந்த முனிவரைக் குறிக்கிறது.

திருமாலை வேதத்தின் வித்தாக, வேத முதல்வனாகக் காணும் நோக்கு பிற்சங்கப் பாடலான நற்றிணைப் பாடலில் வருகிறது. அது திருமாலை உலகின் காரணப் பொருள் என்றும், அவர் எங்கும் பரந்து நிற்கும் வியாபக நிலை உடையவர் என்றும், ஒவ்வொரு பொருளிலும் கரந்து நிற்கும் அந்தர்யாமி என்றும் சொல்கிறது:


மாநிலஞ் சேவடியாக.....
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
வியன்ற வெல்லாம் பயின்றகத் தடங்கிய
வேத முதல்வ னென்ப
தீதற விளங்கிய திகிரி யோனே


இச் சங்க வழியில் தோன்றுகின்றனர் ஆழ்வார்கள் என்று பின்னால் அறியப் படும் தமிழ்க் கவிகள். இவர்கள் இயற்றிய கவிதைகளின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகும்.

வைணவம் என்பது இராமானுசர் ஆரம்பித்து வைத்தது என்பது போன்ற பிழையான கருத்தொன்று தமாழகத்தில் உண்டு. அது திருத்திக் கொள்ள வேண்டியது.

4. சைவ-வைணவ பேதம் உண்மையா?

அரி, அயன், அரன் என்னும் முதல் மூவரில் யாராவது ஒருவரை முதன்மைப் படுத்துவது ஒரு இலக்கிய, மெய்யியல் மரபு. அயன் என்னும் பிரம்மாவை முதன்மைப் படுத்துவது வழக்கொழிந்து போய்விட்டது. ஆயின் சிவனையும், திருமாலையும் முழு முதற் கடவுள் என்று வழி படுவது இன்றளவும் உள்ளது.

"கறுத்த மனமொன்றும் வேண்டா
கண்ணன் அல்லால் தெய்வமில்லை,
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி
யாயவர்க் கேயி றுமினே!"

என்று திருவாய்மொழியில் வருகிறது ஒரு பாசுரம். சடகோபன் அடித்துச் சொல்கிறார் "கண்ணன் அல்லால் தெய்வமில்லை, இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி" என்று. இதைப் படித்து விட்டு திருமூலரின் திருமந்திரம் படித்தால் அவரும் இவருக்கு சளைக்காமல்:

சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

என்கிறார்.

இதைப் புரிந்து கொள்வதற்கு நுண்ணிய நோக்கும், புத்தி கூர்மையும் வேண்டும். இவர்கள் இருவர் சொல்வதும் சரி. ஏனெனில் கண்ணன் ஒருவர் தெய்வமெனின் கண்ணன்தான் நினைவில் நிற்க வேண்டும். சிவனை முழு முதற் கடவுள் என்று கொள்பவர்க்கு அவனே முற்றும், முதல்வனாய் தெரிய வேண்டும். அதுதான் உண்மையான பக்தி.

இதற்கும் பண்டைய தமிழ் மண்ணின் காதல் மரபுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கற்பு என்பது தமிழ் பண்பாட்டின் முக்கிய கூறு. கற்பு என்பது இருபாலருக்கும் பொது. கற்பு என்பது களவியலுக்கு மட்டுமல்ல, மெய்யியலுக்கும் அது பொருந்தும். பக்தி செய்வது, காதலின் உன்னத பரிமாணம். காதலில் கற்பு இருப்பது போல் பக்தியிலும் கற்பை வைத்தனர் நம் முன்னோர். இந்தக் கண்ணோட்டத்துடன் நாம் இவ்வியலக்கியங்களை அணுகினால் முழு முதற் கடவுள் யார் என்ற சண்டையில் இறங்காமல், முழு முதற் கடவுளின் தேவையை உணர்ந்து பக்தி செய்யத் தொடங்குவோம், அது எந்தத் தெய்வமாக இருந்தாலும்! எப்படி அவரவர் கணவர்/மனைவி அவரவருக்கு உயர்வோ அதுபோல்தான் அவரவர் தெய்வமும்.

இந்த சுதந்திரத்தையும் வழங்குகிறது இந்திய மெய்யியல். சுதந்திரம் என்பது தான்தோன்றித் தனமாக நடப்பது அன்று. சுதந்திரம் என்பது பொறுப்பு அறிந்து நடந்து அதன் பயனாய் விளையும் இன்பத்தை அனுபவிப்பது ஆகும். அதே போல் இந்திய மெய் பொருள் தேடலின் இரண்டு முக்கிய வழிகளான சைவம், வைணவம் இவை இரண்டையும் இவ்வாறே காண வேண்டும். எப்படி மக்களாட்சி முறையில் சில நேரங்களில் சுதந்திரம் சரியாக கையாளப் படுவதில்லையோ அதுபோல் தமிழக சமய வரலாற்றில் சைவ-வைணவ பேதம் தலை தூக்கிய காலங்கள் உண்டு. அது இன்றைய இருபதாம் நூற்றாண்டுத் தமிழனுக்கு அவசியமில்லாத ஒன்று.

5. ஆழ்வார்கள் பெயர்க் காரணம், அவர்களின் சிறப்பு

ஆழ்வார்கள் என்ற பெயர் காரணம் மிகவும் சுவையானது. வேதம் என்ற ஆரியச் சொல்லை விட "மறை" என்ற தமிழ்ச் சொல் பொருள் நிறைந்தது. மறைந்து உள்ள பொருளைப் பற்றியது மறை. மறை தேடும் ஞானம் எல்லோருக்கும் வருவதில்லை.

மறைந்து கிடக்கின்ற எல்லாப் பொருள்களையும் ஆழ்ந்து அறியும் தன்மை உடையவர்கள் ஆதலால் ஆழ்வார் எனப்படுவர். பண்டைய உரை ஆசிரியர்கள் ஆழ்வார்களை, "எம்பெருமானுடைய மங்கல குணங்களில் ஆழங்காற்படுபவர்கள்" என்றனர். ஆழங்காற்படும் அறிவாவது, வேதத்தாலும் அளவிட்டறிய முடியாத எம்பெருமானின் எல்லாக் குணங்களையும் அவனருளால் அறிந்து அனுபவிக்கும் ஞானமாகும்.

இத்தகைய ஆழ்ந்த அறிவுடைய ஆழ்வார்கள் செய்வித்ததுதான் தெய்வத் தமிழ் பாசுரங்கள். ஆழ்ந்தறியத்தக்க சொல் நயம், பொருள் நயம் உடைய கவிதைகள் அவை. இவற்றிற்கு பொருள் சொல்ல முற்பட்டதன் விளைவுதான் வைணவ பரம்பரையில் உள்ள சுவை மிகுந்த வியாக்கியானங்கள். வியாக்கியானங்களுக்காக பாசுரங்களா? இல்லை, பாசுரங்களுக்காக வியாக்கியானமா? என்று மயங்கும் அளவில் ஒன்றை ஒன்று சார்ந்து, ஒன்றை ஒன்றும் விஞ்சும் தன்மையாயின.

உதாரணமாக:

தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரின், "திருமாலை" யில் வரும் பாடலின் பொருளைப் பாருங்கள்:

பச்சை மா மலைபோல் மேனிப்
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர, யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை தரினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே!


பசுமையான மரங்கள் சூழ்ந்த வனத்தை உடையவனாகையால் அவனை பச்சை மா மலை போன்ற மேனி என்கிறார். மரம் தண்ணிழல் கொடுத்து காப்பதோடு நிற்பதில்லை. "ஆயர் தம் கொழுந்தே" என்கிறார் ஆழ்வார். கொழுந்து மரத்தின் உச்சியில், தளிர்க்கும் கிளையில் இருப்பது. ஆயர் குலத் தலைவனான கண்ணனை கொழுந்து என்பது சரிதான். கொழுந்து மென்மையானது, மிருதுவானது, பார்க்க அழகுள்ளது - முல்லைத் தலைவனும் அப்படி என்பதும் பொருந்துகிறது. அதற்கும் மேலே, அடி வேரில் புண் என்றால் முதலில் வாடுவது கொழுந்துதான். மெய் பொருளின் காருண்ய கிருபையைக் காட்ட இதற்கு மேல் ஒரு உதாரணம் தர முடியுமா என்று தெரிய வில்லை. அடியார்களின் துன்பம் காண்கையில் முதலில் கண்ணீர் சிந்துபவன் கண்ணன் என்று வெகு அழகாக சொல்லி வைத்தனர் பண்டைத் தமிழர். இப்பாடலையும் முன்பு நம்மாழ்வார் உவமைப் படுத்திய "தொன் மிகு பெரும் மரம்" என்பதையும் சேர்த்து ரசிக்க முடியும்!

திருக்குறளுக்கு எழுந்த உரைகளில் தனிச் சிறப்பு வாய்ந்தது பரிமேல் அழகர் உரையாகும். அதில் இறைமாட்சி அதிகாரத்தில் அதிகாரப் பொருளை விளக்குமிடத்து "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்" என்று பெரியாரும் பணித்தார் என்று சொல்கிறார். பெரும் பாலான இடங்களில் "பிறர் கூறுவர், பிறர் கூறுவர்" என்று சொல்லும் பரிமேல் அழகர் ஆழ்வார் பாசுரத்தை மேற் கோள் காட்டும் போது, "பெரியாரும் பணித்தார்" என்று விநயத்துடன் கூறுவதிலிருந்து ஆழ்வார்களை தமிழகம் மிக உயர்ந்த இடத்தில் வைத்து பெரியார்-பேரறிவினையுடையார் என்று வழங்கி வந்தது என்று தெரிகிறது.

ஆழ்வார்கள் பன்னிருவர் என்றும், பதின்மர் என்றும் வழங்கப் படுவர். தமிழக ஐதீகப்படி இவர்கள் திருமாலின் கருத்துப்படி-அவரது ஆபரணங்களாக இருந்த இவர்கள்-அவதாரம் எடுத்தவர்கள் என்றாகிறது. கவிச்சக்கிரவர்த்தி கம்பனே இவர்களை அவ்வாறுதான் கொள்கிறான் என்பது:

"பாவகத்தால் தன் திருவவதாரம் பதினொன்றென்றி...." (சடகோபர் அந்தாதி)

என்ற வரிகளால் அறியப்படும். இவர்கள், பொய்கையார், பூதத்தார், பேயார், திருமழிசை, மாறன் (நம்மாழ்வார்), மதுரகவி, சேரர் பிரான் (குலசேகரன்), திருமங்கை மன்னன், பட்டர்பிரான் (பெரியாழ்வார்), கோதை நாச்சியார் (ஆண்டாள்), தொண்டர் பாதப் பொடி (தொண்டர் அடிப்பொடி), பாணன் (திருப்பாணாழ்வார்) ஆகியோர் ஆவர்.

இவர்கள் அருளிச் செய்தவை நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் ஆகும். கி.பி. 10 நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனி இவற்றைத் தொகுத்தார். அத்துடன் கீழ்வரும் 4 பகுதிகளாக வகைப் படுத்தினார்.

1. முதலாயிரம்
2. திருமொழி
3. திருவாய்மொழி
4. இயற்பா

இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3776 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் சேர்த்து நாலாயிரம் என்பர். விசிட்டாத்துவைதக் கோட்பாடுகளை நிறுவி, வைணவ சமயத்தினை மக்கள் கூட்டத்திடம் எடுத்துச் சென்று, தம் வாழ்நாள் முழுவதும் வைணவத்திற்காகவே பணி செய்த எம்மெருமானாரின் பணியைப் போற்றுமுகத்தான் 13 நூற்றாண்டில் வாழ்ந்த வேதாந்த தேசிகர் இதனை மற்ற ஆழ்வார் பாசுரங்களுடன் சேர்த்தார்.
ஆழ்வார்களில் மிகுதியான (1296) பாசுரங்களைப் பாடியவர் மாறன், பாராங்குசன், சடகோபன் என்ற பெயர்களில் வழங்கும் நம்மாழ்வார் ஆகும். அடுத்து வருபவர் (1137) திருமங்கை மன்னன் . ஆழ்வார்களில் தலை சிறந்தவராக நம்மாழ்வார் கொண்டாடப் படுகிறார். இருக்கு, யஜூர், அதர்வண, சாம வேதங்களின் பிழிவாகத் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியவற்றை முறையே அருளிச் செய்தார் நம்மாழ்வார். திருவாய்மொழி (தெய்வப் பேச்சு) பகவத் விஷயம் என்று அழைக்கப் படுகிறது. இராமானுசர் தம் முதன்மைச் சீடரான திருக்குருகைப் பிரான் பிள்ளானை திருவாய்மொழிக்கு ஓர் உரை எழுதுமாறு பணித்தார். இதைத் தொடர்ந்து பல உரைகள் இதற்குத் தோன்றின. நம்பிள்ளை உபதேசித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதியருளிய "ஈடு" (முப்பதாயிரப் படி) மிகவும் கொண்டாடப் படும் உரையாகும். வியாக்கியானச் சக்கிரவர்த்தி என்று புகழ் பெற்ற பெரியவாச்சான் பிள்ளை என்பவர் நாலாயிரம் பாசுரங்களுக்கும் உரை எழுதியுள்ளார்.
இராமானுசருக்குப் பின் விசிட்டாத்துவ சிந்தனையாளர்களில் மிகவும் புகழ் பெற்ற வேதாந்த தேசிகன், "வடமொழி, தமிழ் ஆகிய இருமொழி வேதங்களிலும் நன்கு பயிற்சி பெற்றுக் கொள்வது கடினம் என்று ஒரு வைணவர் நினைத்தால் அவர் ஆழ்வார் பாசுரங்களான திராவிட வேதத்தை மட்டும் நன்கு கற்றுத் தோய வேண்டும்" என்று கூறுகிறார். தமிழில் உள்ள ஆழ்வார் பிரபந்தங்களின் தத்துவ உண்மைகள் சிலவற்றை விளக்க (வடமொழியாளர்களும் புரிந்து திளைக்க வேண்டும் என்பதற்காக- "தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார், இங்கமரர் சிறப்புக் கண்டார்" என்றபடி) "ஸ்ரீ திராவிடடோப நிஷத்தாத்பர்ய ரத்னாவளி", "ஸ்ரீ திராவிடோபநிஷத் சாரம்", "ஸ்ரீ மதுரகவி ஹிருதயம்", "முனி வாகன போகம்" ஆகிய நூல்களை வடமொழியில் செய்துள்ளார்.
தம்முடைய 1137 பாடல்களுள் ஏராளமான சோதனை முயற்சிகளைக் கவிதை வடிவில் செய்தவர் திருமங்கை மன்னன். அதனாலேயே அவரை "ஆசுகவி", "சித்திரக்கவி", "மதுரக்கவி", "வித்தாரக்கவி" என்பர். அவருடைய நடையில் எளிமையான ஓட்டமும், கவித்துவமும் இருக்கும். அவருடைய சித்திரக்கவிப் புலமையை திருவெழுகூற்றிருக்கை புலப்படுத்தும். அப்பாடல் முழுவதும் ஒரு தேரின் வடிவைப் புலப்படுத்தும். தமிழ் கவிதை மரபில் சோதனை முயற்சிகளைச் செய்தோருள் திருமங்கை மன்னன் முன்னோடிக் கவிஞர் எனலாம்.
பிள்ளைத் தமிழ் என்ற தமிழ்க் கவிதை மரபைத் தோற்றிவித்தவர் விட்டுசித்தர் என்றும், பட்டர்பிரான் என்றும் போற்றப்படும் பெரியாழ்வார் ஆகும். கண்ணனைத் தன் மகனாகப் பாவித்து இவர் செய்வித்த ஈரப் பாசுரங்கள் பிள்ளைத் தமிழுக்கோர் முன்னோடியாக அமைந்தன.
ஆழ்வார்கள் பன்னிருவரில் கோதை நாச்சியார் என்றும், சூடிக் கொடுத்த சுடர் கொடி என்றும் போற்றப்படும் ஆண்டாள் ஒரு பெண் கவி. இவர் செய்வித்த கவிதையில் பெண்மையின் ஏக்கம் முழுவதும் தொனிக்கும் கவிதைகள் ஏராளம். ஆழ்வார்களின் கடைக்குட்டியான இவர் மற்ற ஆழ்வார்களை நினைவு கூர்ந்தும், பரந்தாமனான கண்ணனை துயில் எழுப்பும் வண்ணமும் செய்வித்த "திருப்பாவை" முப்பது பாடல்களும் தமிழ் மரபின் விழுமியச் செழுமைக்கு உச்ச உதாரணமாகத் திகழ்கின்றன. அதனால்தான்:

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு

என்று சொல்லிப் போயினர்!

6. ஆழ்வார்கள் காட்டும் வாழ்வு நெறி

முதல் மூவர் என்றழைக்கப்படும் பொய்கை, பூதத்தார், பேயார் என்பவர்கள் காலத்தால் முந்திய ஆழ்வார்கள். வைதீக மதங்களை புறந்தள்ளிப் பிறந்த சாக்கியம், பெளத்தம், சமணம் போன்ற மதங்களின் ஆள்கையில் தமிழகம் இருந்த காலத்தில் வாழ்வின் குதூகலம் மறக்கப் பட்டு, அறம் என்பது மட்டும் உயர்த்தி பேசப்பட்டு தமிழ் வாழ்வு சோர்வுற்றிருந்த வேளையில் தோன்றுகின்றனர் இம்மூவரும். இவர்கள் வாழ்வு சுவைக்கக் கூடியது, வாழ்வு கன்னல் போல் இனிப்பானது, இறைவன் வாழ்வின் பின்புலமாக அமைந்து வாழ்வுக்கு சுவை தருகிறான் என்று பாடி சங்க வாழ்வியல் மரபை மீட்டுத் தந்தனர்.
பேயாழ்வார் வேங்கடேசப் பெருமான் மீது பாடும் கீழ்காணும் பாசுரம் சைவ-வைணவ ஒற்றுமையின் திலகமாகப் பொற்றப்படுகிறது:

தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்,
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து


இவர்கள் காலத்தின் பின் பகுதியில் தோன்றும் திருமழிசைப் பிரான் சித்தர்கள் மரபில் கவிதை யாத்து ஒரு வைணவ சித்தராக பரிமளிக்கிறார்.
திருமங்கை மன்னன் திருவரங்கத்து கோவில் மதில் சுவரைக் கட்டும் காலத்தில் தொண்டர் அடிப்பொடி இருந்தார் என்று குருபரம்பரைக் கதைகள் கூறும். திருமங்கை மன்னன் ஒரு குறுநில மன்னாய் இருந்து திருமால் அருள் பெற்று "குலம் தரும் செல்வந்தந்திடும்" என்று நாராயண மந்திரத்தின் பெருமை பேசும் பாசுரங்களைத் தருகிறார். தொண்டர் அடிப்பொடியோ கண்ணன் கழல் தொழும் அடியார்களுள் சாதி வித்தியாசம் கிடையாது என்று சூழுரைக்கும் பாசுரங்களை அருளிச் செய்கிறார்.

அமரவோ ரங்கமாறும்
வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவராய
சாதியந்தணர்களேலும்
நுமர்களை பழிப்பாராகில்
நொடிப்ப தோரளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்கமாநகருளானே!


என்ற பாடலை மேற்கோள் காட்டி, இது திருப்பாணாழ்வாரை சுட்டும் முகமாக தொண்டர் அடிப்பொடி செய்வித்த பாசுரம் என்று மு.ராகவவையங்கார் கருதுகிறார்.
திருப்பாணாழ்வாரின் சரிதமோ, தெய்வ பக்தி செய்வதற்கு சாதி ஒரு தடையில்லை என்று சொல்கிறது. அந்தணர் அவமதித்த பாணரை தோள் மீது சுமந்து தன் சந்நிதிக்கு வருமாறு ஆணையிட்டதோடல்லாமல், அவரை தன்னுள் ஐக்கியப் படுத்தியது அரங்கனின் அன்பு அனைவருக்கும் சமம் என்பதைக் காட்டுகிறது. இவர் செய்வித்த

கொண்டல் வண்ணனைக் கோவலானாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே!


என்ற பாசுரத்தைப் பாடி கண்ணீர் வாராத மனிதர்தாம் உளரோ?
குலசேகரர் சேர மன்னர். இவர் வடமொழியில் "முகுந்த மாலா" என்னும் பக்தி நூலைச் செய்தவர். திருவரங்கத்து எம்பெருமானை வணங்குவதற்காக அவர் மணி மகுடம் துறந்தவர். இராமர் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் செய்வித்திருக்கும் "இராமனின் திருப்பள்ளி எழுச்சி" வெங்கடேச சுப்ரபாதத்திற்கு முன்னோடி.

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே


என்று இவர் பாடிய பாசுரங்கள் பக்தியின் எல்லை நிலமாகக் கருதப் படுகிறது.
மதுர கவியாழ்வார், நம்மாழ்வார் பிறந்து தவமிருக்கும் திருக்குருகூர் திசை தெரிந்த ஔ¢ கண்டு வந்து அவர் சரண் புகுகிறார். நம்மாழ்வார் ஆக்கித்தந்த பாசுரங்கள் அனைத்தையும் உடனிருந்து பதிப்பித்து,

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்,
நின்று தன்புக ழேத்த வருளினான்,
குன்ற மாடத் திருக்கு கூர்நம்பி,
என்று மென்னை யிகழ்விலன் காண்மினே.


என்று இறைவனைப் பாடாது தன் குரு சரணத்தை மட்டும் பாடிய மதுரகவியாழ்வார் குரு சரணம் என்பது இறைவனின் சரணத்திற்கு ஒப்பாகும் என்று உலகிற்கு காண்பிக்கிறார்.

7. பாசுரங்களின் சம காலப் பயன்பாடு


இன்றைக்கு சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு இயற்றிய இப்பனுவல்கள் இன்றளவும் இரசிக்கத் தக்கதாய் இருப்பது என்றுமுள தமிழின் இளமைக்குச் சான்று.
இப்பனுவல்களை உரையின் துணையின்றியே வாசித்துப் புரிந்து கொள்ளுமாறு ஆழ்வார்கள் அமைத்திருப்பது அது காலத்தைக் கடந்து தமிழனுக்கு என்றும் உற்ற துணையாய் இருக்க வேண்டும் என்ற பரந்த உள்ளத்தால் அன்றி வேறில்லை.
எனினும் நம் பூர்வாசிரியர்கள் பல உரைகளை அருளித் தந்துள்ளனர். அவைகள் பெரும்பாலும் ஆரியமும்-தமிழும் கலந்த- அக்காலத்து- மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன. திருவாய் மொழிக்கான அத்தகைய உரையை முழுவதும் தமிழ் படுத்தி சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. உரைவளம் வேண்டுவோருக்கு அதுவொரு விருந்து.
இசையுடன் அமைத்து பாடும் வண்ணமே பாசுரங்கள் அமைந்துள்ளன. நல்ல குரல் வளம் உள்ளவர்கள் பாசுரங்களைப் பாடி "நாத உபாசனை" பண்ணலாம். பாசுரங்களுக்கான பண்கள் சில பதிப்புகளில் காணக் கிடைக்கின்றன.
பாசுரங்கள் "அரையர் சேவை" என்ற கூத்து வடிவிலும் இரசிக்கப் படுகிறது. பொதுவான ஆர்வக் குறைவால் ஒரு சில கோவில்களில் மட்டும் நடைபெறும் இக்கலை வடிவம் விரைவாக மறைந்து வருகிறது. கர்னாடக சங்கீதத்திற்கு வெளிநாட்டுத் தமிழர்கள் ஒரு புதிய தளம் அமைத்துத் தந்தது போல் "அரையர் கூத்திற்கும்" அமைத்துத் தந்தால் பண்டைய தமிழ் மரபொன்று அழிந்து விடாமல் காக்கப் படும்.
உண்ணும் சோறு, பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்ற உள்ளப் பாங்குடைய ஆழ்வார்கள் காலம் காலமாக இந்திய மனத்திடை உள்ள சாதி உணர்வை தகர்க்க பாடு பட்டுள்ளனர். அவர்கள் வழி வந்த இராமானுச மாமுனி இதை பலவழிகளில் நடை முறைப்படித்தியிருப்பதற்கான சான்றுகள் சரித்திரத்தில் உள்ளன. இக்காரணத்தால் வைணவம் தலித் தோழமையுள்ள இயக்கமாகப் பார்க்கப்படும் ஒரு புதிய கண்ணோட்டம் காணக் கிடைக்கிறது.
ஆழ்வார்கள் பக்தி என்னும் சாதனம் மூலம் எளிதில் பிளவுபடக்கூடிய மனத்தை ஒருங்கிணைத்து, வாழ்விற்கு உயர் நோக்கு கொடுத்து, செம்மைப் படுத்தினர். கூர்ந்து கவனித்தால் ஆழ்வார்களின் சரிதத்தில் பின்னிழை போல் ஒரு இயக்கம் தென்படும். இவ்வியக்கம் விசை பெற்ற போது அது தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் பரவியது. கிருஷ்ண சைத்தன்யர், பிரபு பாதா போன்ற வங்கத்து வைணவர்களால் இவ்வியக்கம் கடல் கடந்து மேலை நாடுகளுக்கும் சென்று இன்று கால் ஊன்றியுள்ளது. மீரா, கபீர்தாஸ், பக்த ராமதாசர், பண்டரிநாதர், ஸ்ரீகிருஷ்ணசைதன்யர், ஸ்மார்த்த ராமதாசர் , நரசிம்ம மேத்தா, அண்ணல் காந்தி, மகாகவி பாரதி இவர்கள் ஆழ்வார்களின் வழியில்தான் கிருஷ்ண/ராம பக்தி செய்தனர். ஆழ்வார்களின் அன்பு வழி அகிலத்தையும் அரவணைக்கும் பாங்குடையது.
ஆழ்வார்களின் பக்தி இயக்கத்தின் முக்கியக் கூறு தாய் மொழியில் இறைவனை அணுகுதலாகும். இதை "விதையாக நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய் கற்ற மொழியாகிக் கலந்து" என்ற திருமழிசைப் பிரானின் இனிய பாசுரத்தால் அறியலாம். மெய்யியல் ஞானம் உயர் குலச் சொத்தாக இருந்ததை மாற்றி உயர் வேதத்தை தமிழ் செய்து தமிழ் மறையை எக்குலத்தோர்க்கும் சமம் என்று வைத்தனர் வைணவர்கள். இதையே புரட்சிக் கவி பாரதிதாசன்,

"முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமானுசனை ஈன்றதன்றோ?" என்கிறார்.

ஆழ்வார்கள் ஆக்கி வைத்த ஆதி தமிழ் மறுமலர்ச்சியால் இன்றளவும் வைணவத் திருக் கோவில்களில் தமிழ் பாசுரங்களால்தான் தினமும் ஆண்டவனுக்கு ஆர்ச்சனை ஆகிறது. தமிழ் முன் செல்ல பெருமாள் பின் தொடர அதன் பின் ஆரிய வேதத்தை வைத்த பெருமை தமிழகத்தில் வைணவத்திற்கே சாரும்.
காலம் என்பது மனித உடலை சிதைத்துவிடும் உண்மையறிந்து ஆழ்வார்கள் என்றும் அழியா இறைபொருளைப் பற்றி பக்தி சொட்ட பாசுரங்கள் அருளிப் போயினர். இப்பாசுரங்களை அர்த்தம் புரிந்து படிக்கும் காலையில் ஆழ்வார்களின் அருளும், எம்பெருமானின் அருளும் கிட்டுவது வாசிக்க, வாசிக்க புரியத் தொடங்கும்.
இத்தகைய பெருமை வாய்ந்த வைணவத் திருமறைகள் இன்று தகவல் புரட்சியின் அலையில் தவழ்ந்து ஆலிலைக் கண்ணன் போல் உங்கள் கைக்கு வருகின்றன. எத்தனையோ நல்ல உள்ளங்கள் நூற்றாண்டுகளாக காத்து, போற்றி, பாதுகாத்து வைத்த பாசுரங்கள் இன்று உங்களுக்கு இலவசமாக வருகின்றன. காற்றைப் போல், நீரைப் போல், உயிர் மூச்சைப் போல் பிரதிகூலம் பார்க்காது வருகின்றன.
திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,
எண்ணின்மீதிய னெம்பெருமான்,
மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட, நம்
கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே

என்று நம் இதத்தாய் சடகோபன் சொன்னவாறு இதைக் கண்ணே போல் காத்து அனுபவித்து "பத்துடை அடியவர்க்கு எளியவனான" எம்பெருமானின் கருணைக்கு பாத்திரமாகுமாறு உங்களை மதுரை மின் பதிப்புத் திட்டத்தின் சார்பாக அழைப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

ஆழ்வார்க்கு அடியானாகிய

நா.கண்ணன்

Sunday, November 12, 2006

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!

கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!




சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!

ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!

தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்!
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே!
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!



கன்னி நன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக்குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!

குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்!

***

வடுவூர் வல்வில் இராமன் திருவுருவ தரிசன சௌபாக்கியத்தை எல்லோரும் பெறும் படி அடியேனுக்கு இராகவனின் தரிசனத்தைச் செய்வித்த இரவிசங்கர் கண்ணபிரானுக்கு மிக்க நன்றி.

Wednesday, November 08, 2006

ஆறு காசுக்காகாத அருமையான சூளை

இருவர் மண் சேர்த்திட ஓருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்தச் சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரை காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே!

Wednesday, November 01, 2006

கற்பக மரம் = தமிழ்மணம்

அடர்ந்த காடு. ஒருவன் அந்தக் காட்டு வழியாக நடந்து போகிறான். நடுப்பகல் நேரம் என்பதால் நடந்து நடந்து களைத்துப் போய்விட்டான். சிறிது நேரம் ஓய்வெடுப்போம் என்று ஒரு மரத்தின் கீழே அமர்ந்தான். அந்த மரம் கேட்பதையெல்லாம் கொடுக்கும் கற்பக மரம் என்பது அவனுக்குத் தெரியாது.
'ஆகா. ரொம்பத் தாகமாக இருக்கிறதே. குளிர்ந்த நீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே' என்று எண்ணினான். எண்ணிய மறுவிநாடி ஒரு குடுவையில் குளிர்ந்த நீர் அவன் அருகில் இருந்தது. வியப்புடன் அதைப் பார்த்து குடுவையை எடுத்து குளிர்ந்த நீரை அருந்தி மகிழ்ந்தான்.

தாகம் ஆறியவுடன் 'பசிக்கிறதே. அறுசுவை உணவு இருந்தால் இந்நேரம் மிக நன்றாக இருக்குமே' என்று எண்ணினான். உடனே அறுசுவை உணவுகள் அங்கே தோன்றின. உண்டு மகிழ்ந்தான்.

'அப்பாடா. வயிறு நிறைய உண்டு ஆயிற்று. ஜிலு ஜிலு எனக் காற்று வீசுகிறதே. இந்த நேரத்தில் ஒரு கட்டில் இங்கே இருந்தால் உறங்கி ஓய்வெடுக்கலாமே' என்று எண்ணினான். கட்டிலும் வந்தது. கட்டிலில் ஏறிப் படுத்தான்.

'நடந்து நடந்து கால்கள் வலிக்கின்றனவே. யாராவது கால் பிடித்துவிட்டால் சுகமாக இருக்கும்' என்று எண்ணினான். ஒரு அழகிய பெண்ணும் வந்து கால்களை பிடித்துவிடத் தொடங்கினாள்.

சுகமாக உறங்கத் தொடங்கியவனுக்குத் திடீரென ஒரு ஐயம் எழுந்தது. 'நாம் படுத்திருக்கும் நேரம் புலி வந்து நம்மை அடித்துப் போட்டுவிட்டால்?'. ஒரு புலியும் வந்தது. அவனைக் கொன்றும் போட்டது.

தமிழ்மணமும் அப்படித்தான் இருக்கிறது. இங்கே சுகங்களும் கிடைக்கின்றன. மற்றவையும் கிடைக்கின்றன. கேட்டது கிடைக்கும் இங்கே. சுகங்களை மட்டும் பெற்று வாழவேண்டும்.