
என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே!
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க - எலும்பு, கொம்பு, ஆமை ஓடு இவை போன்றவை மார்பில் இலங்கி நிற்க
எருதேறி ஏழையுடனே - அறவுருவாகிய எருதின் மேல் ஏறி அன்னையுடன்
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து - பொன்னால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய மாலையையும் புனலாகிய கங்கையையும் தலையில் சூடி வந்து
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு - கிருத்திகையை முதல் விண்மீனாய்க் கொண்டால் ஒன்பதாவது விண்மீனாய் வரும் பூரமும்
ஒன்றொடு - முதல் விண்மீனான கிருத்திகையும்
ஏழு - ஏழாவது விண்மீனான ஆயிலியமும்
பதினெட்டொடு - பதினெட்டாவது விண்மீனான பூராடமும்
ஆறும் - அதிலிருந்து ஆறாவது விண்மீனான பூரட்டாதியும்
உடனாய நாள்களவை தாம் - இவை போல் உள்ள பயணத்திற்கு ஆகாத நாட்கள் எல்லாமும்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே - ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.
***
முதல் பாடலில் நவகோள்கள் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொன்னார். இந்தப் பாடலில் பயணத்திற்கு ஆகாத விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) என்று தள்ளப்பட்ட நாட்களும் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொல்கிறார்.
சிவபெருமான் எலும்பு மாலை, கொம்பு, ஆமை ஓடு போன்றவை அணிந்திருக்கும் காரணத்தை மற்றோரிடத்தில் காணலாம்.
ஏழையென்றது பெண் என்னும் பொருளில். இங்கு அது உமையன்னையைக் குறித்தது. ஏழைப்பங்காளன் என்று வள்ளல் தன்மையை உடையவரைக் குறிப்பது இன்று வழக்கில் உள்ளது. அது 'ஏழைப்பங்காளன்' என்னும் சொற்றொடரின் பொருள் உணராததால் வந்த வினை. ஏழைப்பங்காளன் என்று குறிப்பிடப் படும் முழுத் தகுதியும் சிவபெருமானுக்கே உண்டு. மற்றோருக்கு இல்லை. ஏழையை (பெண்ணை) தன் உடலில் ஒரு பங்காக உடையவன் என்று இதற்குப் பொருள். அப்படி மனைவிக்கு தன் உடலில் பாதியைத் தந்தவர் அண்ணலையன்றி வேறு யார்?
சோதிட நூல்களில் 27 விண்மீன்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. வார நாட்கள் ஏழும் கோள்களின் பெயர்களில் அமைந்தது போல ஒவ்வொரு மாதமும் இந்த 27 விண்மீன்களின் சுழற்சியில் வருமாறு அமைத்திருக்கின்றனர் நம் முன்னோர். நல்ல செயல் செய்யவோ எங்காவது பயணம் கிளம்பும் போதோ வார நாளைப் பார்த்தபின் அந்த நாளில் அமைந்த விண்மீனையும் பார்த்திருக்கிறார்கள். அந்த 27 விண்மீன்களில் 12 விண்மீன்களை பயணம் தொடங்க தகுதியில்லாத நாட்களாகத் தள்ளி வைத்துள்ளனர் - பூரம், பூரட்டாதி, பூராடம், மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், ஆதிரை, சித்திரை என்பவையே அவை. அவற்றில் சிலவற்றை இந்தப் பாடலில் சம்பந்தர் குறித்து அவையெல்லாமும் கூட அடியார்க்கு மிக நல்லவையே என்கிறார்.
சோதிட நூல்களில் அசுவினியில் தொடங்கி விண்மீன்களைச் சொன்னாலும் கிருத்திகையை முதல் விண்மீனாய் சொல்லும் மரபும் இருந்திருக்கிறது. மேஷம் முதல் ராசியானதால் அது அசுவினியில் தொடங்குவதால் அசுவினியை முதலாகக் கூறும் வழக்கமும் வந்தது. ஆனால் சம்பந்தரோ இங்கு கிருத்திகையை முதலாகக் கூறும் மரபைப் பாராட்டி அந்த விண்மீன்களை எண்களாகச் சொல்லியிருக்கிறார்.
3 comments:
இந்த இடுகை 'கோளறு பதிகம்' பதிவில் 22 ஏப்ரல் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
27 comments:
manu said...
Kumaran, I always wondered how can anything , created by the Parasakthi be evil or wrong.
thank you for this URAI. manappadam seyvathu inimel easy.
April 22, 2006 7:24 PM
--
SK said...
??அந்த 27 விண்மீன்களில் 8 விண்மீன்களை பயணம் தொடங்க தகுதியில்லாத நாட்களாகத் தள்ளி வைத்துள்ளனர் - பூரம், பூரட்டாதி, பூராடம், மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், ஆதிரை, சித்திரை என்பவையே அவை.??
8 விண்மீன்கள் எனச் சொல்லிவிட்டு 12-ஐ பட்டியலிட்டிருக்கிறீர்களே!
எது சரியானது?
எட்டா? பன்னிரண்டா?
April 22, 2006 8:19 PM
--
G.Ragavan said...
மனு, நீங்கள் சொல்வது உண்மைதான். தீதும் நன்றும் பிறர் தர வாரா. அத்தோடு நாம் எடுத்துக் கொள்ளும் விதத்திலும் இருக்கின்றன. ஆகையால்தால் அறிஞர் பெருமக்கள் இறைவனை நம்பு. அவன் அருளால் அனைத்தும் நல்லதே நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
நல்ல விளக்கம் குமரன்.
April 22, 2006 8:55 PM
--
johan-paris said...
குமரா!
சம்பந்தர்; சோதிட சாஸ்திரத்தை இகழ்கிறாரா??ஆண்டவனை நினைத்து எக்கருமத்தையும்;எந்நேரத்திலும்;எல்லா நாளிலும் செய்யலாமா?, அப்போ தீட்சதர்களும்;ஐயர்மாரும்;சாஸ்திரிகளும் எதேதோ சொல்லிப் பயப் படுத்துறாங்களே!!!
யோகன்
பாரிஸ்
April 22, 2006 9:12 PM
--
செல்வன் said...
குமரன்,
நாளும் கோளூம் பார்க்கவேண்டியதில்லை என ஈசன் அப்போதே சொன்னதாக இதை எடுத்துக்கொள்கிறேன்.ஈசன் துணையிருந்தால் நாளென் செய்யும்,கோளென் செய்யும்?மார்க்கண்டேயனுக்கு நாளும்,கோளும் விதித்த விதியை மாற்றி எழுதியவரல்லவா ஈசன்?
சோதிடந்தன்னை இகழ் என பாரதி பாடிய புதிய ஆத்திச்சூடியை என்றோ பாடியுள்ளார் சம்பந்தர் என தோன்றுகிறது
April 22, 2006 9:57 PM
--
Merkondar said...
//சிவபெருமான் எலும்பு மாலை, கொம்பு, ஆமை ஓடு போன்றவை அணிந்திருக்கும் காரணத்தை மற்றோரிடத்தில் காணலாம//
அவசியத்தேவைதான்
இது என்ன ஜோதிட கலைபோல் இருக்கிறதே அருமையாக உள்ளத குமரன்
// ஏழை//
ஏந்திழை இதில் உள்ள 'ந்தி'யை நந்தி எடுத்துக்கொண்டாரோ
April 23, 2006 3:36 AM
--
rnateshan. said...
குமரன்,
மிகவும் பயனுடைய மற்றும் வியப்பூட்டும் செய்திகளாக உள்ளது!!
April 23, 2006 5:02 AM
--
Ram.K said...
//ஏழையை (பெண்ணை) தன் உடலில் ஒரு பங்காக உடையவன் என்று இதற்குப் பொருள்.//
அப்படியென்றால் பாதி உடம்பு இல்லாத ஆணும் ஏழை தானே. பெண்ணை மட்டும் சொன்னால் எப்படி ?
;-)
April 23, 2006 6:02 AM
--
சிவமுருகன் said...
//27 விண்மீன்களில் 8 விண்மீன்களை பயணம் தொடங்க தகுதியில்லாத நாட்களாகத் தள்ளி வைத்துள்ளனர் //
தினமும் எல்லா பாடலை பாடி வந்தாலும் 8 நாட்களை தள்ளி வைத்தது என்பது எனக்கு புதிய செய்தி. இதன் பொருள் எனக்கு கிடைத்தும், கடந்த முறை படிக்கமுடியவில்லை. இப்போது தெரிந்து கொண்டேன்.
April 23, 2006 8:38 PM
--
manu said...
;-)
adhuthaane?
Abiraami Idabaagam vavviyathaal
Thaan
Sivanum Porul(rich) petraar.
April 23, 2006 9:51 PM
--
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி மனு அவர்களே. இங்கு இந்தப் பாடல்களின் பொருளைக் கொடுப்பதற்கு முன் இணையத்தில் தேடியும் மனதில் மீண்டும் மீண்டும் எண்ணியும் பார்ப்பதால் எனக்கும் இந்தப் பாடல்கள் மனப்பாடம் ஆகிவிடுகிறது.
April 24, 2006 4:29 AM
--
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. சார். பன்னிரண்டு தான் சரியானது. மாற்றி எழுதுகிறேன். தட்டச்சுப் பிழை. சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.
April 24, 2006 4:31 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன். எங்கேனும் ஏதாவது பிழையாகப் பொருள் சொல்லியிருந்தால் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்.
April 24, 2006 4:32 AM
--
குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. எக்கருமத்தையும் எந்நேரத்திலும் எல்லா நாளிலும் ஆண்டவன் திருவருளை முன்னிறுத்தி செய்யலாம்; ஆனால் ஒரே ஒரு கட்டுப்பாடு மட்டும் தான் சம்பந்தர் போடுகிறார். அவ்வாறு செய்யும் போது நாம் இறைவன் அடியார் தானா என்பதை நமக்கு நாமே உறுதி செய்து கொள்ளவேண்டும். நாம் நம்மை 'இறைவன் அடியான்' என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இறைவன் நம்மை 'தன் அடியான்' என்று சொல்லும் படி நாம் இருக்கிறோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படி நாம் இருந்தால் 'நாள் என் செயும்; வினை தான் என் செயும்' என்று நன்றாகப் பாடலாம். அப்படி நாம் இல்லை என்று தோன்றினால் அது வரை இறைவனின் வாய்மொழியென்று நம்பப்படும் வேதங்களின் பகுதியான சோதிட சாத்திரத்தை நம்பி அதற்கேற்றபடி நடந்து கொள்ள வேண்டும். :-)
இங்கு சோதிட சாத்திரத்தை சம்பந்தர் இகழ்வது போல் எனக்குத் தோன்றவில்லை. நான் படித்து அறிந்தவரை சோதிட சாத்திரம் சாதாரண மனிதருக்குச் சொல்லப்பட்டது. என்று ஒருவர் ஆன்மிக வழியில் (அது பக்தியோ, ஞானமோ, கர்மமோ, யோகமோ எந்த வழியாய் இருந்தாலும் சரி) செல்லத் தொடங்குகிறாரோ அன்று முதல் சோதிட சாத்திரத்தில் சொல்லியிருக்கும் பலன்கள் மாறி மிகுதியாக நன்மையே விளையும் என்றும் படித்திருக்கிறேன். நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் - கருணையாளன் - பத்து அடி எடுத்து வைப்பதால், நம் வினைகளின் பயன்களைத் தரும் கோள்களின் வீச்சு குறையத் தொடங்கும்; அது மழை நேரத்தில் குடையின் கீழ் இருப்பது போல். மழை பெய்தே தீரும்; ஆனால் இறைவன் கருணையெனும் குடை இருப்பதால் கோளும் நாளும் நல்லவையாக இருக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் நான் அடியான் என்று சொல்லிக் கொள்வதால் மட்டும் இது நிகழாது. அடியாருக்கு ஏற்றவாறு நாம் நடந்து கொள்ள வேண்டும்.
கருமப்பலனைப் பற்றி பலவாறாக பழைய தமிழ் நூல்களிலும் இருக்கின்றன. நாம் செய்த வினைகளுக்கு ஏற்ப தான் கோள்களும் நாள்களும் பயன் தருகின்றன. அதனை நம் ஜாதகத்தைப் படித்து பின் சாத்திரத்தைப் படித்து சோதிடர்களும் மற்றவர்களும் சொல்கிறார்கள். சிலர் பொய் சொல்லி பயமுறுத்துகிறார்கள் என்றாலும் எல்லோரும் அப்படித்தான் என்று பொருள் இல்லை.
இப்போது சம்பந்தரின் இந்தப் பாடல்களையும், அருணகிரியாரின் 'நாள் என் செயும்' பாடலையும் படித்துப் பாருங்கள். நான் சொல்லும் விளக்கம் பொருந்துகிறதா என்று புரியும்.
அடியேன் இன்னும் இறைவன் என்னைத் 'தன் அடியான்' என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்றாற்போல் அவன் அடிகளை வணங்க அவன் அருளை எப்போதும் இறைஞ்சி நிற்கிறேன்.
அடியேன் சிறிய ஞானத்தன்
அறிதல் யார்க்கும் அரியானை
அடியேன் காண்பான் அலற்றுவன்
இதனில் மிக்கோர் அயர்வுண்டே!
April 24, 2006 4:53 AM
--
வெளிகண்ட நாதர் said...
//சோதிட நூல்களில் 27 விண்மீன்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. வார நாட்கள் ஏழும் கோள்களின் பெயர்களில் அமைந்தது போல ஒவ்வொரு மாதமும் இந்த 27 விண்மீன்களின் சுழற்சியில் வருமாறு அமைத்திருக்கின்றனர் நம் முன்னோர்.//
விண்மீன்களின் அமைப்பு ஜோதிடத்தில் எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அழகாக கூறி இருக்கிறீர்கள். விண்மீன்கல் பத்தி சயிண்டிபிக்கா எழுதனும்னு இப்பதான் நினைச்சிக்கிட்டிருந்தேன்!
April 24, 2006 9:34 AM
--
குமரன் (Kumaran) said...
யோகன் ஐயாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும்,
இந்தத் தொடரின் முடிவில் சோதிட சாத்திரத்திற்கும் இந்தப் பதிகத்திற்கும் உள்ள தொடர்பையும், வினைப்பயன், சோதிடம், ஆன்மிகம் போன்றவற்றிற்கு உள்ள தொடர்பினையும் பற்றிய என் கருத்துக்களை இன்னும் விரிவாகக் கூறுகிறேன்.
April 24, 2006 2:37 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் செல்வன், ஈசன் துணையிருந்தால் நாளும் கோளும் ஒன்றும் செய்யா. நம் வினைப்பயன்களின் வீச்சும் நமக்குத் தெரியாமல் காப்பான் இறைவன். விதியை மாற்றி எழுதும் வல்லமை அவனுக்கே உண்டு.
சோதிடத்தைப் பார்த்து மூடத்தனமாகச் செயல்படாமல் இருப்பதே சாலச் சிறந்தது. அந்த வகையில் நானும் பாரதி சொன்ன படி சோதிடந்தனை இகழ் என்று சொல்லுவேன். இருக்கும் 27 நாட்களில் யாராவது 12 நாட்களை பயணத்திற்கு ஒவ்வாதது என்று தள்ளிவைப்பார்களா? அந்தக் காலத்தில் ஓரித்தில் இருந்து மற்றோரிடத்திற்குச் செல்ல பல நாட்கள் ஆனது. அப்போது ஒரு நாள் தாமதமாய் கிளம்பினால் அதன் பாதிப்பு அவ்வளவாக இருக்கவில்லை. தற்போதைய நிலைமை அப்படியா இருக்கிறது? இந்தக் காலத்தில் இந்த 12 நாட்களிலும் இறைவன் அருளை முன்னிட்டு பயணங்களைத் துவங்க வேன்டியது தான். அதற்குத் தடையாக எந்த சாத்திரம் வந்தாலும் அதனை இகழ வேண்டியது தான். :-)
April 24, 2006 2:42 PM
--
குமரன் (Kumaran) said...
பாராட்டிற்கு நன்றி என்னார் ஐயா. ஏந்திழையை எப்படி அழைத்தாலும் ஏந்திழை தானே. :-)
April 24, 2006 2:43 PM
--
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி நடேசன் சார்.
April 24, 2006 2:43 PM
---
குமரன் (Kumaran) said...
உண்மைதான் இராம்பிரசாத் அண்ணா. பாதி உடம்பு இல்லாதவன் ஏழை தான். ஆனால் அந்தப் பாதி உடம்பு இல்லாளாக இருந்துவிட்டால் இவன் இல்லான் ஆகமாட்டான் அல்லவா? :-)
April 24, 2006 2:45 PM
--
குமரன் (Kumaran) said...
//இதன் பொருள் எனக்கு கிடைத்தும், கடந்த முறை படிக்கமுடியவில்லை. இப்போது தெரிந்து கொண்டேன்.
//
சிவமுருகன், எங்கு பொருளைப் படித்தீர்கள் என்று சொல்லுங்கள். இனி வரும் பாடல்களின் பொருளைச் சரிபார்த்துக் கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
April 24, 2006 2:46 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் மனு, அபிராமி இடப்பாகத்தை வவ்வியதால் சுடலையாண்டி சுந்தரேஸ்வரன் ஆனார். :) ஐஸ்வர்யம் உடையவனுக்குத் தான் ஈஸ்வரன் என்று பெயர்.
நம்மையுடையவன் அவன். நாமெல்லோரும் அவனுடைய ஐஸ்வர்யங்கள்.
April 24, 2006 2:47 PM
---
குமரன் (Kumaran) said...
சீக்கிரம் அதையும் எழுதுங்க வெளிகண்ட நாதர் சார். உங்கள் விஞ்ஞானக்கட்டுரைகளை ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு வருகிறேன். அருமையாக இருக்கின்றன ஒவ்வொன்றும்.
April 24, 2006 2:49 PM
---
ஜெயஸ்ரீ said...
நல்ல விளக்கம் குமரன்.
April 29, 2006 11:22 AM
---
குமரன் (Kumaran) said...
நன்றி ஜெயஸ்ரீ
April 30, 2006 7:10 AM
---
சிவமுருகன் said...
//விதியை மாற்றி எழுதும் வல்லமை அவனுக்கே உண்டு. //
மார்கண்டேயனின் வாழ்வில் வருவது போல் விதியை மதியால் அல்ல, பக்தியால் வெல்லலாம்.
//நானும் பாரதி சொன்ன படி சோதிடந்தனை இகழ் என்று சொல்லுவேன். .. 27 நாட்களில் யாராவது 12 நாட்களை ... தள்ளிவைப்பார்களா? அந்தக் காலத்தில் ... பல நாட்கள் ஆனது. .... தற்போதைய நிலைமை அப்படியா இருக்கிறது? ... 12 நாட்களிலும் இறைவன் அருளை முன்னிட்டு பயணங்களைத் துவங்க வேன்டியது தான். அதற்குத் தடையாக எந்த சாத்திரம் வந்தாலும் அதனை இகழ வேண்டியது தான்.//
அண்ணா, ஒரேடியா சொதிடத்தை இகழ் என்று கூற முடியாது. ஆள் செய்யாத வேலை கோள் செய்யும் என்பர். நானும் பல முறை இதை எதிர்த்து போராடியுள்ளேன் எல்லாம் வீணானது. பின் கடவுளருளால் சில புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் எல்லாம் வெற்றி தான் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
அதர்வன வேதத்தில் கிளை வேதம் ஆயுர்வேதம், அதேபோல் ஜோதிடம் யஜூர்வேதத்தின் கிளை நூலாகும்.
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்" என்று சொன்ன திருவள்ளுவரும்,
"பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது."
என்கிறார். இதில் பொழுது என்பது சாதகமான பொழுது என்று தான் குறிப்பிடுகிறார்.
(எனக்கு சொதிடத்தில் ஒரு சின்ன ஈடுபாடு, என் பக்கத்தில் உள்ள சின்ன பொருளை இங்கே குறிப்பிடுகிறேன், மற்றபடி 27 நாட்களில் 12 நாட்களை தள்ளி வைப்பது தவறானதே.)
May 01, 2006 11:29 PM
--
குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன். எனக்கும் சோதிடத்தில் சிறிது ஈடுபாடு உண்டு.
May 03, 2006 10:45 AM
ஏழைப் பங்களான் பற்றி இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி குமரா.
ஏழைப்பங்காளன் சிவபெருமான் மட்டும் தானே கவிநயா அக்கா. இரவிசங்கர் ஒத்துக்குவோரோ இல்லியோ? :-) ஆனா இராகவன் கட்டாயம் ஒத்துக்குவார். :-)
Post a Comment