Wednesday, April 26, 2006

175: மதுரை - 3

சரி இன்னைக்காவது நாம மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளப் போகலாம். கீழே இருக்கறப் படம் ஏற்கனவே சொன்ன மாதிரி எனக்கு மின்னஞ்சலில் வந்த புகைப்படம். ஆனா அருமையான படம். இது வடக்காடி வீதியினைக் காட்டும் புகைப்படம்.

புகைப்படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அன்னை அங்கயற்கண்ணியின் வரலாறு சுருக்கமாக.

மதுரையை ஆண்ட மலயத்துவஜ பாண்டியன் தனக்கு வாரிசு வேண்டுமென்பதற்காக வளர்த்த வேள்வித்தீயில் தோன்றியவள் அன்னை அங்கயற்கண்ணி. உமையன்னையின் அம்சம். அழகிய மீனைப் போன்றக் கண்களைக் கொண்டிருந்ததாலும் மீன் எப்படி தன் கண்பார்வையாலேயே தன் குஞ்சுகளைப் பாதுகாக்கிறதோ அது போல் தன் அடியவர்களைப் பாதுகாப்பவள் என்பதாலும் இவளுக்கு அங்கயற்கண்ணி (அம்+கயல்+கண்ணி - அழகிய மீனைப் போன்ற கண்கள் உடையவள்), மீனாக்ஷி (மீன் + அக்ஷி - அக்ஷம் என்றால் வடமொழியில் கண்) என்ற பெயர்கள் அமைந்தன. பெற்றவர் வைத்தப் பெயர் தடாதகைப் பிராட்டியார்.

அன்னை வேள்வித்தீயிலிருந்து சிறுமியாகத் தோன்றியபோது அவளுக்கு மூன்று கொங்கைகள் இருந்தன. அதனைக் கண்டு பெற்றோரான மலையத்துவசனும் காஞ்சனமாலையும் வருந்த, தகுந்த மணவாளனை இந்தப் பெண் காணும் போது இயற்கைக்கு மாறாக இருக்கும் மூன்றாவது கொங்கை மறையும் என்று வானமகள் சொல் சொன்னது.

அன்னையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரச மகளுக்குரிய எல்லாக் கலைகளையும் அரசமகனுக்குரிய கலைகளையும் கற்றுத் தேறினாள். அன்னை தகுந்த வயதுக்கு வருமுன்னரே பாண்டியன் காலமாக அன்னையை மதுரைக்கு அரசியாக முடிசூட்டினர்.

அரசியான பின் அவளும் அரசர்களுக்குரிய முறைப்படி எல்லா திசையிலும் சென்று பகையரசர்களை வென்று வாகை சூட விரும்பி திக்விஜயம் மேற்கொண்டாள். எல்லாத் திசைகளிலும் உள்ள அரசர்களை வென்று வடதிசையில் கயிலைக்குச் சென்று எல்லா சிவகணங்களையும் வெல்கிறாள். அன்னையின் வீரத்தைக் கண்டு சிவபெருமானே போருக்கு எழுந்தருளுகிறார். அன்னையை ஐயன் கண்டதும் அன்னையின் மூன்றாவது கொங்கை மறைகிறது. அதனைக் கண்ட அன்னை இவரே தனக்கு மணாளன் என்று உணர்ந்து பெண்ணரசிக்குரிய நாணத்தால் தலை குனிகிறாள். ஐயன் தான் மதுரைக்கு எழுந்தருளி அவளை மணப்பதாக உறுதி கூறுகிறார். அதன் படி மதுரைக்கு எழுந்தருளி அன்னையை மணந்து சுந்தரப்பாண்டியனாக வேப்பம்பூ மாலை சூடி மதுரை அரசனாக மூடி சூட்டிக் கொள்கிறார். பின்னர் அன்னைக்கும் ஐயனுக்கும் முருகப் பெருமானின் அம்சமாக உக்கிரப் பாண்டியன் தோன்ற அவனுக்குத் தகுந்த வயது வந்ததும் அரசனாக முடிசூட்டி அன்னையும் ஐயனும் மதுரை நகரில் கோயில் கொள்கின்றனர். அது தொடங்கி வாழையடி வாழையாக பாண்டிய அரசர்கள் அன்னை மீனாட்சியின் பிரதிநிதியாக மதுரையை ஆண்டு வந்தனர். அன்னை இன்றும் மதுரை நகருக்கு அரசியாய் விளங்குவதால் மதுரை வாழ் மக்கள் அனைவரும், அவர் சைவரோ வைணவரோ, யாராயிருந்தாலும் அன்னையின் அருளை நாடி நாள்தோறும் அன்னையின் கோயிலுக்கு வந்து சென்ற வண்ணமே இருக்கிறார்கள்.

மதுரையைக் கோயில் மாநகர் என்று கூறுவார்கள். திட்டமிட்டுக் கட்டிய பழைய நகரங்களில் ஒன்று மதுரை. கோயிலை மையமாக வைத்து திருவீதிகள் நான்கு புறமும் அமைந்திருக்கின்றன. கோவிலின் வெளித் திருச்சுற்றாக இருக்கும் ஆடி வீதி, அதனைச் சுற்றி சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி, வெளி வீதி எனத் தெருக்கள் நீள் சதுரமாக கோயிலைச் சுற்றி அமைந்துள்ளன. மதுரையில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். அன்னையும் ஐயனும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருவீதியில் வலம் வருவர். எந்த மாதத்தில் எந்த வீதியில் வலம் வருவார்களோ, அந்த வீதிக்கு அந்த மாதத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்.



இந்தப் புகைப்படத்தில் இருப்பது வடக்கு ஆடி வீதி. கோயிலுக்குள்ளேயே இருக்கிறது இந்த திருவீதி. இந்தப் படத்தைப் பார்க்கும் போது பல நினைவுகள் பொங்கி வருகின்றன. முதலில் எதிரே தூரத்தில் நான்கு தூண்கள் மட்டும் தெரிகிற திருக்கல்யாண மண்டபம். ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவிழாவில் அன்னைக்கும் அப்பனுக்கும் திருக்கல்யாணம் இந்த மண்டபத்தில் தான் நடக்கிறது. அது மட்டும் அன்றி கோவிலில் நடக்கும் எல்லா வித சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் இந்த மண்டபத்தில் தான் நடைபெறும். இந்த மண்டபத்தில் சொற்பொழிவு ஆற்றும் போது தான் வாரியார் சுவாமிகளின் அருளாசியும் பாராட்டுக்களும் அடியேனுக்கு கிடைத்தன. பல முறை அவரின் சொற்பொழிவுகளை இந்த மண்டபத்தில் கேட்டிருக்கிறேன். அது மட்டும் அன்றி மற்ற பலருடைய சொற்பொழிவுகளும் இசைக் கச்சேரிகளும் கேட்டு ரசித்தது இந்த மண்டபத்தில் தான்.

அதற்கடுத்து நினைவிற்கு வருவது திருக்குறள் சபை. வலப்பக்கம் தெரியும் பெரிய கோபுரத்தின் முன்பு ஒரு சின்ன மஞ்சள் நிறக் கட்டடம் தெரிகிறதே. மதில் சுவரை ஒட்டிய கட்டிடம் அன்று. கோபுரத்திற்கு முன் புறம் உள்ளது. இந்த சிறு மண்டபத்தில் திருவள்ளுவர் சிலை இருக்கும். அதற்கு முன் தினந்தோறும் திருக்குறள் சொற்பொழிவு நடைபெறும். கேட்டு இன்புறும் வாய்ப்பு சில முறை கிட்டியுள்ளது.

அடுத்து நினைவிற்கு வருவது இசைத் தூண்கள். இந்தப் படத்தில் அவை தெரியவில்லை. ஆனால் அருமையான தூண்கள் அவை. அந்தத் தூண்களில் வெவ்வேறு இடத்தில் தட்டும் போது வெவ்வேறு இசை வெளிப்படும். இது போன்ற இசைத் தூண்களை திருமாலிருஞ்சோலையான அழகர் கோவிலிலும் நாச்சியார் திருமாளிகையாகிய வில்லிபுத்தூரிலும் கண்டிருக்கிறேன். மதுரையில் வாழும் பலருக்கே தெரியாத வியப்பான விஷயம் இது.

அடுத்து நினைவிற்கு வருவது இந்தப் படத்தில் தெரியும் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் பிள்ளையார். வாராவாரம் அதிகாலை 5 மணிக்கு இவர் திருமுன்பிருந்து தொடங்கி இறைவன் திருப்பெயர்களைப் பாடிக் கொண்டு கோவிலை வலம் வரும் சாயி பஜன் குழுவினருடன் பலமுறை கோவிலை வலம் வந்தது நினைவிற்கு வருகிறது.

அடுத்து நினைவிற்கு வருவது இடப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய் தெரியும் பதினாறு கால் மண்டபம். இந்த மண்டபத்தில் தான் முறுக்கு, சுண்டல் போன்றவற்றை விற்கும் சிறு வியாபாரிகள் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு முறை கோவிலுக்கு வரும் போதும் இவர்களிடம் வாங்கித் தின்ற தின்பண்டங்கள் ஒவ்வொன்றும் தமிழமுதைப் போல் என்றும் நினைவில் தித்திப்பவை. :)

இவை எல்லாவற்றையும் விட இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்து அந்த நீல நிற மேகக் கூட்டங்கள் தான். என்ன அருமையான படம் இது. அந்த மேகக் கூட்டங்கள் தான் இந்தப் படத்தின் அழகுக்கு அழகூட்டுகிறது என்று எண்ணுகிறேன். இந்தப் படத்தை எடுத்தவரும் அதனை அனுப்பியவர்களும் நூறாண்டு காலம் நலமாய் வாழட்டும்!

Monday, April 10, 2006

168: பங்குனி உத்திரம் - 3

பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்... நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்....

என்ன திடீரென்று இந்தப் பாடலைப் பாடுகிறேன் என்று கேட்கிறீர்களா? இன்று யாருக்குப் பிறந்த நாள் என்பதை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன். மெதுவாக முழுமையாக இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். :-)

***

தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோவில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோவில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவு தான் நமக்கு வருகிறது. எனக்கும் அப்படித் தான். ஆனால் நாள் செல்லச் செல்ல நம் சமயத்தில் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் இந்த திருநாளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் தான் இந்தப் பதிவைத் தொடராக எழுதினேன். எனக்கு உடனே நினைவுக்கு வந்த விஷயங்களை இந்த மூன்று பதிவுகளிலும் எழுதியிருக்கிறேன். இதற்கும் மேலாக பல பெருமைகள் இந்தத் திருநாளுக்கு இருக்கலாம். படிப்பவர்கள் நான் எதையாவது விட்டிருந்தால் தயைசெய்து சொல்லுங்கள்.

***

எந்த காரணத்தினால் பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்ததாகக் கொண்டாடப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் குல தெய்வமான பழனியாண்டி அன்று தான் திருத்தேர் விழா கண்டருள்கிறான். முடிந்த வரை ஒவ்வொரு ஆண்டும் என் பெற்றோர் என் சிறு வயதில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவிற்காக எங்களை (என்னையும் என் தம்பியையும்) பழனிக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அதனால் பழனி தண்டாயுதபாணியின் மேல் எனக்குத் தனியொரு பாசம். இன்றும் ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போது பழனிக்குச் செல்லத் தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கும் போது கண் பனி சோரும்.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்(து)
உருகும் செயல் தன்(து) உணர்(வு) என்(று) அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே

கூகா என என் கிளை கூடியழப்
போகா வகை பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

இந்தப் பாடல்களின் பொருளினை இராகவன், இராமநாதன் இவர்களின் பதிவில் பாருங்கள்.

***

இப்போது இதுவரை சொன்னதைப் பற்றியத் தொகுப்புரை:

1. திருவரங்கத்தில் திருவரங்கநாதனும் திருவரங்கநாயகியும் சேர்த்திச் சேவை அருளும் நாள்
2. வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் காட்சி தரும் நாள்
3. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள்
4. ஜனக ராஜ குமாரி ஜானகி இராகவனை மணந்த நாள்
5. நாமக்கல் இலட்சும் நரசிம்மப் பெருமாளும் நாமகிரித் தாயாரும் தேரில் பவனி வரும் நாள்
6. அன்னை திருமகள் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள்
7. மோகினி சுதனான ஐயன் ஐயப்பன் தோன்றிய நாள்
8. பார்வதி பரமேஸ்வரனை மணந்த நாள்
9. முருகனின் திருவருளால் மதுரை மாநகரில் உங்கள் அன்பிற்கினிய அடியேன் பிறந்த நாள்
10. முருகன் அருள் முன்னிற்க அடியேனின் அன்புத் திருமகள் பிறந்த நாள்

வணங்கி நிற்கிறோம். வாழ்த்துங்கள்.

Sunday, April 09, 2006

167: பங்குனி உத்திரம் - 2

வருகின்ற ஏப்ரல் 11ம் நாள் பங்குனி உத்திரத் திருநாள். பங்குனி உத்திரத் திருநாள் பலவிதங்களில் சிறப்புடையது. அதன் சிறப்புக்களை ஒரே பதிவில் சொல்லிவிட முடியாது என்பதால் இரண்டு மூன்று பதிவுகளில் அதனைச் சொல்ல முயல்கிறேன். முதல் பதிவையும் படித்துப் பாருங்கள்.

***

துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால் இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான். தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது.


துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத் தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.

விண்ணோர் தலைவனும் அந்த மலர் மாலையை அலட்சியமாக அங்குசத்தால் வாங்கி ஐராவதத்தின் தலையில் வைத்தான். தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர்மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கி கொள்வதா என்ற எண்ணம். ஆனாலும் கொடுப்பவர் துர்வாசர் என்பதால் பேசாமல் வாங்கி கொண்டான். யானையோ தன் தலையில் வைக்கப்பட்ட மலர்மாலையை உடனே எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு துவைத்துவிட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது.

'தேவேந்திரா. தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னிடம் இருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார்.

துர்வாச முனிவரின் சாபத்தின் படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் எல்லோரும் துன்பம் வரும்போது செய்யும் வழக்கம் போல் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள்.

மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால் திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது. பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது.

உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணாமூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும் படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் 'நீலகண்டன்' என்ற திருப்பெயரைப் பெற்றார்.

இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின.

அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர்மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் பிறந்த நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப் படுகிறது.

***

மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவள் வாங்கிய வரத்தின் படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால் தான் அழிவு. ஆனால் ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை எப்படி பிறக்கும்? அது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் செய்துக் கொண்டிருக்கிறாள்.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்யத் தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.

***

சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போய்விட்டன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலகாலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் சூரன். அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்க தவம் செய்து கொண்டிருக்கிறாள். சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால் காமன் கணைகள் தன் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார். ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.

***

Saturday, April 08, 2006

166: பங்குனி உத்திரம் - 1

வருகின்ற ஏப்ரல் 11ம் நாள் பங்குனி உத்திரத் திருநாள். பங்குனி உத்திரத் திருநாள் பலவிதங்களில் சிறப்புடையது. அதன் சிறப்புக்களை ஒரே பதிவில் சொல்லிவிட முடியாது என்பதால் இன்று தொடங்கி இரண்டு மூன்று பதிவுகளில் அதனைச் சொல்ல முயல்கிறேன்.

கங்கையில் புனிதமான காவிரி நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில் தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்விய தரிசனம் கிடைக்காது. அண்ணலும் அவளும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை.




வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய இராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போது தான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ச்ரிரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசனகவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்த போது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். அன்றிலிருந்து இராமானுஜர் 'உடையவர்' என்ற திருநாமத்தாலும் அழைக்கப் படுகிறார்.

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!

என் தலைவனை, என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை இப்படி என் முன்னோர் அனைவருக்கும் தலைவனை, குளிர்ந்த தாமரைக் கண்களை உடையவனை, பூங்கொம்பினை ஒத்த நுண் இடையாளான திருமகளைத் தன் மார்பில் உடையவனை, என் இறைவனைத் தொழாய் மட நெஞ்சமே!

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்!

என் மனமே! உன்னை நான் பெற்றதால் நன்றாகப் போனது. என்றும் இளையவனை, மலராளாகிய பெரியபிராட்டியின் மணவாளனை நான் தூங்கும் போதும் (என் உயிர் பிரியும் போதும்) நீ விடாது தொடர்ந்து போகிறாய். நன்று. நன்று. உன்னைப் பெற்று நான் என்ன தான் செய்ய முடியாது? இனி எனக்கு என்ன குறை?

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே

என் நெஞ்சமே! நீயும் நானும் இப்படி கூட்டணி அமைத்து அவனை வணங்கி வந்தால், இவ்வுலகத்தில் நமக்குத் தாயும் தந்தையுமாய் இருக்கும் ஈசன் மணிவண்ணன் என் தந்தை வேறெந்த பிறவி நோயும் நமக்கு வரும்படி விடமாட்டான். சொன்னேன் கேட்டுக் கொள்.

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே

வானவர்கள் எல்லாம் 'என் தந்தையே! என் தலைவனே' என்று தங்கள் சிந்தையில் வைத்து வணங்கும் செல்வனை (சம்பத் குமாரனை) இந்த உலகினில் பிறந்து எண்ணற்ற பாவங்களைச் செய்த நானும் 'எந்தையே' என்றும் 'எம்பெருமான்' என்றும் சொல்லி சிந்தையில் வைப்பேன். என்ன பேறு பெற்றேன்?

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.

வழியில் போகும் ஒருவர் செல்வநாராயணன் என்று சொல்லவும் அதனைக் கேட்டு என் கண்களில் நீர் நிரம்பி வழியும். இது என்ன மாயம்? எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்த நான் எப்படி ஆகிவிட்டேன்? இரவும் பகலும் இடைவீடு இன்றி என்னை நம்பித் தன்னை எனக்குத் தந்து என்னை விடான் என் அழகிய மணவாள நம்பி.

(இவை மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள்)

***

கோதை பிறந்த ஊராம் தென்புதுவை நகரில் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்க மன்னாரும் மகிழ்ந்திருக்கும் காட்சி இங்கே.


கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்

***

மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப் படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் ச்ரி பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காகக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.

(பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆற்றில் இறங்கும் படம் இல்லாததால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் படத்தை இங்கு இடுகிறேன்)

***