Wednesday, February 24, 2010

ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற! அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற!

தென் தமிழ் நாட்டின் புத்தூர் இந்த ஊர். ஆற்றங்கரையில் அரவணையில் துயின்று கொண்டே இருந்து அது அலுத்துப் போய், 'மானைத் தேடி மருகன் சென்றது போல்' இந்த மாமனும் கையில் சாட்டையுடன் அரச கோலம் கொண்டு அரங்க மன்னாராய் நிற்கும் ஊர். இவன் வந்து நின்ற நேரம் கோதை, இராதை, குமரி, சங்கரி, இராகவி என்று பல பெண்மான்கள் இந்த ஊரில் பிறந்தார்கள். இப்பெண்களில் கோதையே தலைவி; இவர்களின் நாச்சியார்! கூடல் இழைத்துப் பார்த்ததில் கோவிந்தன் வருவான் என்ற செய்தி கிடைக்க அந்த மயக்கத்திலேயே ஆழ்ந்து போய் அரங்கன் என்னும் மதயானையால் சுவைத்து எறியப்பட்ட கரும்புச்சக்கையாகக் கிடக்கிறாள் கோதை! வடமதுரைக்கு அவளை உய்த்திடும் நாள் இன்னும் வரவில்லையோ என்று வியந்து கொண்டு அவளைத் தனியே இருக்க விட்டு அவள் தோழியர் திண்ணைப்புறத்திற்கு வந்தனர். வந்தவர்கள் நடுவே அயோத்தியர்கோனைப் போற்றுவதும் ஆயர்கள் ஏற்றினைப் போற்றுவதும் என்று ஒரு போட்டி தோன்றியது.

குமரி: உங்கள் கோவிந்தன் தாய் தந்தைக்கு அடங்காதவன். உடன்பிறந்தவனோ கோள் சொல்லி. எங்கள் இராமன் அப்படியா? பெற்றோர் சொல்படி கானகம் ஏகினான் எங்கள் காகுத்தன். தன்னுடைய உடமைகள், உணவு, உறக்கம் அனைத்தையும் தொலைத்து கூடவே காவலாக நின்றான் உடன்பிறந்தானான இளையாழ்வான். இவனையும் மிஞ்சும் வகையில் 'என் உகப்பு பெரிதில்லை; உன் திருமுக உகப்பே பெரிது' என்று முடி சூடாமல் அடி சூடி நின்றான் தம்பி பரதாழ்வான். 'உன்னைப் பேணுதற்கு உன் அடியார்கள் உண்டு; உன் அடியார்களைப் பேணுதலே உன் திருவுள்ளக் குறிப்பு' என்று சொல்லி அடியார்க்கு அடியானாய் நின்றான் சத்ருக்னன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாமாயனாய் உங்கள் கண்ணன் இருக்கலாம். நற்குணங்களில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள் இந்தச் சக்ரவர்த்தித் திருமகன்கள்!

***

"என் மனம் பெரிதும் மயங்குகின்றதே. பெருமாள் காடேறப் போனான். சக்ரவர்த்தியோ அப்பிரிவைத் தாங்காமல் வானேறப் போனார். இவ்விரு துன்பமே தாங்க முடியாத போது பழுத்த புண்ணிலே புளி பெய்ததைப் போல அரசனின்றி நாடு இருக்கக் கூடாது; முடி சூட்டிக் கொள் என்று சொல்கிறீர்களே! இது தகுமா? முறையா? நீதியா?

எம்பெருமானுக்கு உடைமையான நான் அவன் உடைமையான இந்த நாட்டை ஆளுவது எப்படி? நீங்கள் எல்லோரும் இப்படி ஒன்றாகக் கூடி வந்து என் இயல்பைத் துறக்க வேண்டுவது ஏன்? அவனுக்கே அடிமையாக இருப்பது தானே என் இயல்பு?!

குருதேவரே. நீங்கள் எங்கள் குலத்திற்கு புரோஹிதர். முன்னோடிச் சென்று இக்குலத்திற்கு ஹிதமானதை செய்வது தானே தங்கள் கடமை. தமையன் காடேறவும், தந்தை துஞ்சவும் நான் முடி சூட்டிக் கொள்வது தானா தாங்கள் முன்னோடிச் சென்று இக்குலத்திற்கு இதம் செய்வது?

ஒருவருக்கு உரிமையான இரு பொருட்கள் ஒன்றையொன்று ஆளுவது இயலுமோ? நானும் பெருமாளின் உடைமை; இந்நாடும் அவன் உடைமை. இந்நாட்டை நான் ஆளுவதும் நிகழுமோ?

தந்தை சொல்லே மிக்கது என்று எண்ணி இந்த நாட்டை அப்படியே விட்டுச் சென்றான் அண்ணன். அவனைப் பிரிந்த துயரம் தாங்காமல் உடனே உயிரைத் துறந்தார் தந்தை. இப்படி ஒருவருக்கொருவர் இளைக்காதவராய் இருக்க, நான் இந்த நாட்டை ஆளத் தொடங்கினால் இந்த அண்ணனுக்குத் தம்பியாக நான் ஆவது எப்படி? இந்தத் தந்தைக்கு நான் மகனாக ஆவதும் எப்படி?"

"பரதா. அப்படியென்றால் என்ன தான் செய்வது?"

"சுவாமி. நாம் எல்லோரும் சேர்ந்து போய் பெருமாள் திருவடிகளிலே விழுந்து அவரை மீட்டுக் கொண்டு வந்து திருவபிஷேகம் செய்வோம். வாருங்கள்"

அனைவரையும் அழைத்துக் கொண்டு திருச்சித்திரக்கூடத்திலே போய் பெருமாள் திருவடிகளிலே தனது விருப்பத்தைச் சொல்கிறான் பரதாழ்வான்.

"அண்ணா. திருமுடியைத் துறந்து சடாமுடியைப் புனைந்தீர்கள். நாட்டை விட்டு காட்டிலே எழுந்தருளினீர்கள். இந்தக் காட்டையும் தவ வேடத்தையும் துறந்து திருவயோத்திக்கு வந்து திருமுடி சூடி (முடியொன்றி) மூன்று உலகங்களையும் என்றைக்கும் ஆண்டு (மூவுலகங்களும் ஆண்டு), உன்னுடைய இளையவனாய் பிறந்ததால் தம்பியாகவும், உன்னிடமே உலக வழக்குகள் அனைத்தையும் அறிந்து கொண்டதால் சீடனாகவும், உன்னால் விற்கவும் கொள்ளவும் படியான பொருளாக இருப்பதால் அடிமையாகவும் இருக்கிற எனக்கு அருள் செய்ய வேண்டும் (உன் அடியேற்கு அருள் என்று)"

***

இராகவி: இப்படி நாட்டை விட்டு காட்டுக்குப் போன அண்ணனின் பின் தொடர்ந்து சென்று (அவன் பின் தொடர்ந்த), மூத்தவன் இருக்க இளையவன் முடிசூடும் வழக்கம் இல்லை என்றும், தன்னுடைய இயல்பு பெருமாளுக்கு உடைமையாக இருக்கும்படி இருக்க அவன் உடைமையான இராச்சியத்தைத் தான் ஆள இயலாது என்றும் சொன்ன ஒப்பில்லாத நற்குணங்கள் நிரம்பிய பரத நம்பிக்கு (படி இல் குணத்துப் பரத நம்பிக்கு) தன் திருவடி நிலைகளைத் தந்தான் காகுத்தன்.

சங்கரி: இவ்வளவு தூரம் கெஞ்சியவனுடன் திரும்பி வராமல் தன் திருவடி நிலைகளைத் (பாதுகைகளைத்) தந்தானே கோமகன்! அது ஏன்?

குமரி: திருவடி நிலைகளைத் தந்ததால் தந்தையின் சொல்லையும் நிறைவேற்றினான்; தம்பியின் துயரத்தையும் தீர்த்தான்.

இராதை: அது எப்படி?

இராகவி: "பரதா. நீ அழைக்க நான் மீண்டும் வந்தால் நம் தந்தையார் சொன்னதைச் செய்யாமல் அரசாட்சியின் ஆசையினாலே மீண்டு வந்ததாக ஆகும். நீ என்னை மீட்டுக் கொண்டு போனால் உனக்கும் அபவாதம் உண்டாகும். தாயுடன் சேர்ந்து சதி செய்து நாட்டைப் பெற்றுக் கொண்டு தமையனைக் காடேற விட்டான்; இப்போது கெட்ட பெயர் உண்டான போது பின்னே தொடர்ந்து சென்று கண்ணைக் கசக்கி காலிலே விழுந்து மீட்டுக் கொண்டு வந்தான்; இரண்டையும் செய்ய வல்லவனாக இருக்கிறான் பரதன் என்று உனக்கு மேலும் கெட்ட பெயர் உண்டாகும். அதனால் நான் மீண்டும் திருவயோத்திக்கு வருவது இயலாது" என்று சொன்னான் இராமன். மேலும் சுதந்திரனாக அவனே ஆள்வதைத் தானே பரதன் மறுத்தான். அவன் சுதந்திரன் இல்லை; தனக்கு பிரதிநிதியாக ஆள்கிறான் என்று சொல்வதைப் போலும், காட்டிற்குச் சென்றவன் தந்தை சொற்படி பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டிற்கு எழுந்தருளுவான் என்று உறுதி சொல்வதைப் போலும் தன் திருவடி நிலைகளைத் தந்து முடி சூட மறுத்தவனை அடிசூடும் அரசாக்கி விட்டான் இராமன் (அன்று அடி நிலை ஈந்தானைப் பாடிப் பற). இதனால் தந்தை சொல்லும் நிறைவேறியது; தம்பி துயரமும் நீங்கியது. அப்படிப்பட்ட அயோத்தியர் கோமானை நாம் பாடுவோம் (அயோத்தியர் கோமானைப் பாடிப் பற)!

இராதை: இது என்ன முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாய்?! மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்ததன் பின்னர் இராமனை அயோத்தியர்கோன் என்று சொல்லுதல் ஆகுமா?

குமரி: பரதாழ்வான் மரவடிகளைத் தான் கொண்டு போனான். அவன் ஆள்கிறான் இல்லை. அவன் முடி சூடவில்லை. பெருமாள் அடியையே சூடினான். அதனால் திருவயோத்திக்கு அரசன் இராமனே. அதனால் அயோத்தியர் கோமானைப் பாடுவோம் என்றதில் தவறில்லை.

சங்கரி: சரி தான். இப்போது எங்கள் கண்ணனைப் பற்றி நாங்கள் சொல்ல நீங்கள் கேளுங்கள்.

அருகில் இருக்கும் மரம் செடி கொடிகளும் அணுகி வரும் மாடு மனிதர் பறவைகளும் பொசுங்கிப் போகும்படி நஞ்சை உமிழும் காளியனின் பொய்கை கலங்கும்படி (காளியன் பொய்கை கலங்க) ஓடிச் சென்று குதித்து (பாய்ந்திட்டு), பொய்கையின் கலக்கத்தால் சினம் கொண்டு வானளவிற்கு விரித்து நின்ற காளியனின் ஐந்து தலைகளிலும் மாறி மாறி நின்று (அவன் நீள் முடி ஐந்திலும் நின்று) நடனம் செய்து (நடம் செய்து) அதனால் தலையும் கழுத்தும் உடலும் நெரிந்து குருதி உமிழ நலிந்து நின்று உயிர் பிழைக்க வேண்டி நின்ற காளியனின் அடைக்கலத்தை ஏற்றுக் கொண்டு அவனுக்கு அருள் புரிந்தான் எங்கள் வித்தகன் (மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்)! அவனுடைய தோள் வலிமையைப் பாடுவோம் (தோள் வலி வீரமே பாடிப் பற)! குற்றமற்ற நீல மணியைப் போன்ற வடிவழகை உடைய கண்ணனைப் பாடுவோம் (தூமணி வண்ணனைப் பாடிப் பற)!

குமரி: சரி தான்! கண்ணன் ஆடினான் என்றால் அவன் கால் வலிமையை அல்லவோ பாட வேண்டும்?! தோள் வலிமையைப் பாடச் சொல்கிறாயே?!

இராதை: காலால் ஆடினான் என்பது சரி தான். ஆனால் அந்த காளியன் தன் உடலாலும் வாலாலும் கண்ணனைப் பிணைத்தும் அடித்தும் கீழே விழும்படி செய்ய முயன்றானே. அப்போது அவன் உடலையும் வாலையும் விலக்கி நின்ற வீரம் கண்ணனின் தோள் வலிமை தானே?! அதனால் அவன் தோள் வலிமையைப் பாடுவோம்!

இராகவி: நன்கு சொன்னாய்! தூமணி வண்ணனைப் பாடச் சொன்னதற்கும் ஏதேனும் காரணம் உண்டா?

சங்கரி: உண்டு இராகவி! காளியனால் கருநிறம் கொண்டு கிடந்த பொய்கை கண்ணனால் காளியன் விரட்டப்பட்ட பின்னர் மீண்டும் தூய்மை கொண்டு தன் இயல்பான நிறமான நீல நிறத்தைக் கொண்டதே! அதனைச் செய்தவன் இந்த தூமணிவண்ணன் தானே! அதனால் தூமணிவண்ணனைப் பாடுவோம்!

இராதை: காளியன் தலையில் மட்டுமா ஆடினான் கோகுலன்?! அவன் இன்னும் நிறைய ஆச்சரியங்களைச் செய்திருக்கிறான்! மாயத்தால் வண்டிச் சக்கரமாக வந்த கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சினான் கோவிந்தன் (மாயச் சகடம் உதைத்து)! தாயார் கட்டி வைத்த உரலை இழுத்துக் கொண்டு சென்று, வழியிலே நின்ற இரு மருத மரங்களின் இடையே புகுந்து, தடை செய்த அம்மருத மரங்கள் முறியும் படி இழுத்துச் சென்றான் தாமோதரன் (மருது இறுத்து)! பசு மேய்க்கப் போன இடையர்களுடனே அவர்களுக்குத் தலைவனாகச் சென்று, பசுக்கூட்டத்தை மேய விட்டு ஆநிரையைக் காத்தான் கோபாலன் (ஆயர்களோடு போய் ஆநிரை காத்து)! மற்ற இடங்களில் இருக்கும் பசுக்கூட்டங்கள் புல்லும் தண்ணீருமே தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாகக் கொண்டிருக்க கோகுலத்தின் பசுக்களோ இவனது அழகிய வேய்ங்குழல் இசையினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாழும்படியான வித்தகம் கொண்டவன் வேணுகோபாலன் (அணி வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற)! இமையா நெடுங்கண் இமையவர்கள் போற்ற நிற்கும் விசும்பினை விட அறிவொன்றும் இல்லா ஆய்க்குலத்துப் பிறந்து ஆயர்களுக்குத் தலைவனாய் இருப்பதில் செருக்கு கொள்பவனைப் பாடுவோம் (ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற)! பரமபதத்தில் இருப்பதைக் காட்டிலும் மிக்க மகிழ்ச்சி கொண்டு பசு நிரை மேய்த்தவனைப் பாடுவோம் (ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற)!


இராகவி: சரி தான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னைச் சரணடை என்று நிபந்தனை இட்ட கோவிந்தனைப் போல் இல்லாமல் யாராயிருந்தாலும் சரணடைந்தவர்களுக்கு என் உயிரையும் தருவேன் என்றானே காகுத்தன், அவன் புகழைக் கேள்! மிகவும் ஆழமாக இருப்பதாலே தன் நீல நிறம் மாறி கரு நிறம் கொண்டிருந்தது தென் கடல் (கார் ஆர் கடலை). நீரில் இட்டாலோ கருங்கற்கள் ஆழ்வதையே இயல்பாகக் கொண்டவை. குரங்குகளோ ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கும் ஒரு கல்லிலிருந்து இன்னொரு கல்லிற்கும் தாவுவதையே இயல்பாகக் கொண்டவை. இவற்றின் இயல்பிற்கு மாறாக இந்த ஆழம் நிறைந்த கருங்கடலை குரங்குகள் கல்லினை இட்டு அடைத்து அணை கட்டும் படி இயல்புகளையே மாற்றும் திறன் கொண்டவன் இராமன் (அடைத்திட்டு)! அது மட்டுமா?! நுழைவதற்கு மிகவும் அரிதானது இலங்கை! பல அரண்களையும் காவல்களையும் கொண்டது! புகவரிய அந்த இலங்கையில் பல்லாயிரக்கணக்கான குரங்குகளின் படையுடன் புகுந்தவன் எங்கள் ஆஜானுபாகு (இலங்கை புக்கு)!

குமரி: இப்படி செய்வதற்கரிவற்றை எல்லாம் செய்து வந்திருக்கிறானே சீராமன் என்று அவன் பெருமையையும் வலிமையையும் புரிந்து கொள்ளாமல், புரிந்து கொண்டு பிராட்டியைத் திருப்பித் தராமல், தன்னுடைய வரத்தின் வலிமையையும் தோள் வலிமையையும் பெரிதாக எண்ணிக் கொண்டு போர் செய்ய வந்த இராவணனின் அழகிய பொன்முடி சூடிய தலைகள் பத்தினையும் துணித்தான் தசரதகுமாரன். ஒவ்வொரு தலையாக அறுத்தானா என்ன? இல்லை. ஒரே அம்பினால் ஒன்பதோடு ஒன்று என்னும்படி பத்துத் தலைகளையும் ஒரே நேரத்தில் துணித்தான் (ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும் நேரா)! 'இராவணன் தம்பி நான்' என்று தன்னைப் பற்றிய உண்மையைக் கூறிக் கொண்டே வந்து நேர்மையுடன் சரண் புகுந்த வீடணனுக்கு பல நூறு காலம் அரசாளும் படி இலங்கை அரசை தந்தான் சரணாகத வத்ஸலன் (அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த)! இப்படி எதிரியானாலும் சரணென்று வந்தால் இகபர சுகங்களைத் தந்து ஆட்கொள்ளும் குணத்தால் ஒரு காலும் திருப்தி பிறவாமல் மேன்மேலும் அனுபவிக்க வேண்டும் என்னும் ஆவலை உண்டாக்கும் அமுதத்தைப் போன்றவனைப் பாடுவோம் (ஆரா அமுதனைப் பாடிப் பற)! இராவணனை அழித்து பின்னர் பிராட்டியோடே திருவயோத்திக்கு எழுந்தருளி திருவபிஷேகம் செய்து கொண்டு திருவயோத்யையில் உள்ளவர்களுக்கு அரசனாக ஆண்டவனைப் பாடுவோம் (அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற)!

நால்வரும்: அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற! அயோத்தியர் கோமானைப் பாடிப் பற! தோள்வலி வீரமே பாடிப் பற! தூமணிவண்ணனைப் பாடிப் பற! ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற! ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற! ஆரா அமுதனைப் பாடிப் பற! அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற!

வியாக்கியான சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த உரையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்தப் பொருளுரை. இப்பாடலை கண்ணன் பாட்டில் கேட்கலாம்!

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்!

Monday, February 22, 2010

புறநானூறு போற்றும் பொலிந்த அருந்தவத்தோன்!


அகத்திணைப் பாடல்களின் தொகுப்பான அகநானூறு என்ற சங்க கால தொகை நூலிற்கு கடவுள் வாழ்த்து பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்ற புலவர் பெருமான் புறத்திணைப் பாடல்களின் தொகுப்பான புறநானூறு என்ற தொகை நூலிற்கும் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார். அங்கு போலவே இங்கும் சிவபெருமானின் திருவுருவ சிந்தனை ஓங்கும் வண்ணம் இப்பாடலும் இயற்றப்பட்டிருக்கிறது.

கண்ணி கார் நறுங்கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை;
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர் அறவு அறியாக் கரகத்து
தாழ் சடை பொலிந்த அருந்தவத்தோற்கே.

மஞ்சள், வெள்ளை, கருப்பு என்று பல நிறங்களை சிவபெருமானின் திருவுருவத்தில் கண்டு அக்காட்சியை ஒரு வண்ணக்காட்சியாகத் தருகிறது இந்த கடவுள் வாழ்த்து.

மழைக்காலத்தில் மலர்வது மஞ்சள் நிறம் உடைய மணம் வீசும் கொன்றைப்பூ. அப்பூவினால் ஆன கண்ணியைத் தன் தலையில் சூடியவன் சிவபெருமான். அழகிய வண்ண மார்பின் மீது அணிந்த தாராகவும் அக்கொன்றைப்பூவே இருக்கின்றது. கண்ணி என்பதற்கு தார் என்பதற்கும் பொருளை, அகநானூற்றின் கடவுள் வாழ்த்தினைப் பார்க்கும் போது பார்த்தோம். மாதொருபாகனாக விளங்கும் திருவடிவைப் போற்றும் வகையில் அங்கே கார்விரிக் கொன்றை பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன் என்று மாலை அணிந்ததையும் பாடினார் புலவர். இங்கே பெண் உருவை மறைத்துத் தோன்றும் திருவடிவைப் போற்றுகிறார் போலும். அதனால் தான் மாலையைப் பாடாமல் கண்ணியையும் தாரையும் மட்டும் பாடினார். கண்ணி கார் நறுங்கொன்றை; காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை!

சிவபெருமானது ஊர்தி (வாகனம்) ஒளிவீசும் வெண்ணிறம் கொண்ட விடை, இடபம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஆனேறு. அவனுடைய சிறப்பினை விளக்கும் வகையில் அமைந்திருக்கும் சீர் மிக்க கொடியும் அந்த ஏற்றை உடையதே. ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப!

இப்படி மஞ்சளும் வெண்மையும் அழகு செய்தது போதாதென்று நஞ்சையுண்டு உலகைக் காத்ததால் பெற்ற தொண்டையின் கருநிறம் சிவபெருமானின் திருவுருவத்திற்கு இன்னும் அழகு சேர்த்தது. கறை கொண்ட திருமிடறு (தொண்டை) அழகு செய்தலும் செய்தது; கறை மிடறு அணியலும் அணிந்தன்று!

அக்கறை மூவுலகத்தாரையும் காக்க ஏற்பட்டதால் மறைகளைச் சொல்லும் அந்தணர்களால் போற்றப்படும். அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே!

பெண் என்ற சொல்லுக்கே இலக்கணமான உமையன்னையை தன் உடலில் ஒரு பாகத்தில் வைத்திருப்பவன் சிவபெருமான். சில நேரங்களில் அந்தப் பெண் உருவைத் தன்னுள் அடக்கி மறைத்தாலும் மறைப்பான். பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் கரக்கினும் கரக்கும்!

பிறையைப் போல் வளைந்த நெற்றி அழகுடையதாக இருக்கிறது; பிறை நிலவு நெற்றியின் மேல் நின்று அழகு பெற்றது; பிறை நுதல் வண்ணம் ஆகின்று!

இறைவன் சூடியதால் அப்பிறை நிலவு பதினெட்டு வகைக் கூட்டத்தாரால் போற்றப்படும். அப்பதினெட்டு வகையினர் தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதர், வேதாளர், தாராகணம் (விண்மீன் கூட்டம்), ஆகாசவாசிகள், பூலோகவாசிகள். (இப்படி ஒரு பட்டியலைத் தந்துவிட்டு 'பிறவாறும் உரைப்பர்' என்றும் சொல்கிறது உரை. பிறவாறு எப்படி பொருள் உரைக்கப்பட்டது என்பதைத் தேடிக் காணவேண்டும்). அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே!

எல்லா உயிர்களுக்கும் காவலாக விளங்கும், நீர் வற்றியறியாத கங்கையைத் தலையில் சூடிய, நீர் வற்றியறியாத சிறு குடத்தை (குண்டிகையை) உடைய, தாழ்ந்த திருச்சடையை உடைய, சிறந்த செய்தற்கு அரிய தவத்தை உடைய சிவபெருமானுக்கு இத்திருவுருவம் அமைந்திருக்கிறது. எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய நீர் அறவு அறியாக் கரகத்து தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோற்கே!

Friday, February 19, 2010

பூஜையறை பொக்கிஷம்! அழகென்ற சொல்லுக்கு முருகா!

பூஜையறை பொக்கிஷம்!

அழகென்ற சொல்லுக்கு முருகா!

டி.எம்.சௌந்தரராஜன்


'உள்ளம் உருகுதய்யா...' - குரலைக் கேட்டால், அந்த முருகனே மனம் உருகி வருவார். 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...' என்று இவர் பாடினால், அந்தக் கண்ணனே மயங்கி விடுவார். அப்படியரு காந்தர்வக் குரல் டி.எம். சௌந்தரராஜனுக்கு!

மந்தவெளியில் உள்ள இவரது வீட்டுக்குச் சென்ற போது, குடும்பத்தினரோடு மகிழ்வாகப் பேசிக் கொண்டிருந்தவர், புன்னகையுடன் வரவேற்றார். 80 வயதைக் கடந்தாலும், மார்க்கண்டேய வரம் வாங்கி வந்த கணீர் குரல் மட்டும் அப்படியே இருக்கிறது!

''எல்லாரும் விருப்பு வெறுப்பு இல்லாம கேக்கக்கூடிய குரலை எனக்குக் கொடுத்து, பாடக்கூடிய பக்குவத்தை தந்ததே முருகப் பெருமான்தான்'' என்று நெகிழ்ந்த டி.எம்.எஸ்., நான் பண்ணின கச்சேரிகள்ல, என் பாட்டுக்குக் கிடைச்ச விக்கிரகங்கள்தான், எங்க வீட்டு பூஜையறைய அலங்கரிக்குது!'' என்று சொல்லிக் கொண்டே பூஜையறைக்குள் அழைத்துச் சென்றார்.

''1946-ல கல்யாணமாச்சு. அப்ப மதுரைல சஷ்டி உற்ஸவம்; அங்கதான் இந்த முருகன் படத்தை வாங்கினோம். என்னவொரு அழகு பாருங்க...'' என்றவர், ''அழகென்ற சொல்லுக்கு முருகா... உன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா?'' என்று குழைவு சேர்த்துப் பாடினார்.

''சில வருஷத்துக்கு முன், மலேசியாவுல கச்சேரி... அங்கே ரசிகர் ஒருத்தர், இந்த கல் பதித்த வேலையும் கந்தனையும் கொடுத்தார். எங்க ஆயுசு நீடிச்சிருக்கறதுக்கு, இவைதான் காரணம்! தினமும் காலைல முருகனை வழிபட்டுட்டுதான் அடுத்த வேலை! மொட்டை மாடில வாக்கிங், விஜயலட்சுமிங்கறவங்க மூலமா தியானம், ஜான்நாயகத்திடம் 'முத்ராஸ்', கிருஷ்ணமூர்த்தியிடம் 'யோகா' என உடம்பையும் மனசையும் முருகனருளால ஆரோக்கியமா வெச்சிட்டிருக்கேன்...'' என்றவர், வைஷ்ணவராக இருந்து முருக பக்தராக மாறிய ரகசியத்தை விவரித்தார்... ''நாங்க வடகலை நாமம் போடும் வைஷ்ணவர்கள். அப்பா, மதுரை வரதராஜ பெருமாள் கோயில்ல பூஜை பண்ணிட்டிருந்தார். முறைப்படி வேத சாஸ்திரங்களை படிச்சேன். இதுதான் அட்சர சுத்தமா என்னைப் பாட வெச்சுது! கோயிலுக்கு அப்பாவோட நிறைய முறை போயிருந்தாலும் எனக்குள்ளே ஆன்மிக சிந்தனை வந்ததுக்கு பழநி முருகனே காரணம்! ஒருமுறை, பழநி கோயிலுக்குப் போனவன், சந்நிதிக்குள் நுழைஞ்சதும், தண்டாயுதபாணிய பாத்தேன். அவ்ளோதான்... பஞ்சாமிர்த வாசனையும் விபூதியோட நறுமணமும் ஏதோ பண்ணுச்சு. 'கடைசில நாமளும் சாம்பலாத்தானே போகப் போறோம்'னு சட்டுன்னு ஒரு எண்ணம். அந்த நிமிஷத்துல இருந்து முருகனோட பாடல்களைப் பாடுறதுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சேன்; முருக பக்தனாவே மாறிப் போனேன்...'' என்று நெகிழ்கிறார் டி.எம்.எஸ்.

அறைச் சுவரில் புட்டப்பர்த்தி ஸ்ரீசாயிபாபாவின் படமும், பாபாவிடம் இவர் ஆசி பெறும் புகைப்படமும் இருந்தது. பாபாவின் முன் கச்சேரி பண்ணியிருக்கிறாராம் காஞ்சி மகா பெரியவரை தரிசித்ததையும் விவரித்தார் டி.எம்.எஸ்.

''காஞ்சி மகா பெரியவாளைப் பத்தின பாடல்களை நான் பாடி, அதை பெரியவாள் கேட்டு ரசிச்சதோட, அந்த கேசட் மேல தேங்காயை சுத்தி திருஷ்டி கழிச்சாராம். இதை என் ரசிகர்கள் சொல்லவும், அடுத்ததா... அவரை தரிசிக்கிற வாய்ப்பும் கிடைச்சது. சைகையில பக்கத்துல வரச்சொன்ன சுவாமிகள், 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' பாட்டை பாடச் சொன்னார். நானும் பாடினேன். உடனே, உதவியாளரைக் கூப்பிட்டு, தன் மேல போட்டிருந்த சால்வையைக் கொடுத்து, என் கழுத்துல போடச் சொன்னார். இதைவிட பாக்கியம் என்ன வேணும் எனக்கு?'' என்று நெக்குருகிச் சொல்கிறார் டி.எம்.எஸ்.

- ரேவதி
படங்கள்: பொன். காசிராஜன்
நன்றி: சக்தி விகடன்.
நன்றி: இக்கட்டுரையை எனக்கு அனுப்பிய மின் தமிழ் குழும நண்பர் கேசவன்
நன்றி: இக்கட்டுரையை மின்வருடி தன் பதிவில் இட்டிருக்கும் நண்பர் டி.எம். பாலாஜி

ஸ்ரீமந் நாராயணனின் நாயகியாக வாழ்ந்தவர்!

ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள்

'என் மீதே மனத்தை வைத்து, என்னையே வணங்கி பூஜிக்கும் என் பக்தன், என்னையே அடைவான்' - என பகவத் கீதையில் அருள்கிறார் ஸ்ரீகண்ணபிரான்!
இதன்படி, உண்ணும் உணவு, பருகும் நீர் அனைத்தும் கண்ணனுக்கே என்று, அவனுக்கே ஆட்பட்டு வாழ்ந்தவர் - 'மதுரையின் ஜோதி' என அன்பர்களால் போற்றப்படும் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள்.


ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் அவதரித்த பக்தி வளம் செறிந்த பூமி, தமிழ் மண். இந்த மண்ணுக்குப் பெருமை சேர்ப்பது, மதுரையம்பதி. 'ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள்' என்று பெரியாழ்வார் வைணவத் தத்துவத்தை நிலைநாட்டிய கூடல் நகரான மதுரையம்பதியில், ஆழ்வார்களின் அவதாரம் நிகழவில்லை. பகவான் கண்ணன், இந்தக் குறையைப் போக்க வேண்டும் என்று நினைத்தானோ என்னவோ... ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளை மதுரை நகரில் அவதரிக்கச் செய்தான்!

அது 1843-ஆம் வருடம்; ஜனவரி 9-ஆம் தேதி; மார்கழி- 22 (சௌராஷ்டிர வருடம் 531). வியாழக்கிழமை. சௌராஷ்டிர விப்ரகுல ஜாபாலி கோத்திரத்தில் வந்த சின்னக்கொண்டா ஸ்ரீரங்காரியருக்கும் லட்சுமி அம்மைக்கும் குமாரராக அவதரித்தார் ராமபத்ரன். அன்று, மிருகசீரிஷ நட்சத்திரம். நெசவுத் தொழிலைச் செய்து வந்த குடும்பம் அது! குழந்தைப் பருவத்தில் இருந்தே, ராமபத்ரனுக்கு உலக வாழ்க்கையில் நாட்டம் இல்லை; கல்வியில் ஈடுபாடு அறவே இல்லை. வேலை செய்வதிலோ, குடும்பத் தொழிலான நெசவை கவனிப்பதிலோ ஆர்வம் சிறிதுகூட இல்லை. அவருடைய எண்ணம் முழுவதையும் இறைச் சிந்தனையே ஆக்கிரமித்திருந்தது.

அப்போது ராமபத்ரனுக்கு 9 வயது. வீட்டைத் துறந்து சென்றார்; திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி வரும் பாதையில் முருகப் பெருமானின் சந்நிதிக்கு பின்புறம் உள்ள குக ஆஸ்ரமத்தில் தவம் புரிந்தார்... 12 வருடங்களாக!

பரமக்குடியில் நாகலிங்க அடிகளைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை குருவாக ஏற்றார். அவரிடம் அஷ்டாங்க யோகப் பயிற்சி கிடைத்தது. பதினெட்டே நாட்களில் ஸித்திகள் பலவும் கைவரப் பெற்று, 'சதானந்த சித்தர்' எனும் திருப்பெயர் பெற்றார் ராமபத்ரன்.
பரமக்குடியில் இருந்து மதுரைக்குத் திரும்பினார். வழியில் சிவகங்கை சமஸ்தான மன்னர் இவரை வரவேற்று உபசரித்தார். இவருடைய தோற்றத்தைக் கண்டு வியந்தார். அழகு ததும்பும் சரீரம்; கோலமோ, துறவிக் கோலம். பொல்லாத பெண்ணாசையை இவர் துறந்துவிட்டாரா என்பதை அறிய இவரை சோதித்துப் பார்க்கும் எண்ணம் எழுந்தது மன்னருக்கு! அழகு மங்கை ஒருத்தியை இவர் இருந்த அறைக்கு அனுப்பி வைத்தார்.

'பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள், கடலில் சென்று அடங்கும். அதுபோல் எவன்பால் ஆசைகள் அனைத்தும் சென்று அடங்குகின்றனவோ அவனே சாந்தி அடைகிறான். ஆசையுள்ளவன் சாந்தி அடையமாட்டான்' என்ற கீதையின் வாக்குப்படி, ஆசைகளைக் கடந்த சதானந்தர், அந்த மங்கையை சக்தியின் சொரூபமாகக் கண்டார்.

இத்துடன் விட்டாரா மன்னர்?! இன்னுமொரு சோதனையும் வைத்தார் சதானந்தருக்கு!

ஆண்டுக் கணக்கில் தவம் இருந்த சதானந்தரை, சமாதி நிலையில் பார்க்கும் எண்ணம் மன்னருக்கு! சதானந்த சித்தரின் ஒப்புதலுடன் பாதாள அறை ஒன்றில், சதானந்தரை அமரச் செய்து, அந்த அறைக்குச் செல்லும் வழியை அப்படியே அடைக்கவும் செய்தனர். காவலர்கள் பாதுகாக்க, ஒரு மண்டல காலம்... இப்படியே ஓடியது. திடீரென பாதாள அறையின் மேல் பாகத்தில் வெடிப்பு ஏற்பட, அதை மன்னரிடம் தெரிவித்தனர் காவலர்கள். அதேநேரம், சித்தர் மதுரையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மன்னருக்கு தகவல் வந்தது. ஆச்சரியம் அடைந்த அவர், பாதாள அறையைத் திறக்கச் சொன்னார். அங்கே சித்தர் இல்லாதது கண்டு வியந்தார். மனம் வருந்தியவர், சதானந்தரிடம் மனதார மன்னிப்புக் கேட்டார்.

மதுரை நோக்கிச் செல்லும்போது, சதானந்தர் களைப்பின் மிகுதியில் 'விடின்தோப்பு' எனும் தோட்டத்தில் சற்றே உறங்கினார். அப்போது, அவர் முகத்தில் சூரிய ஒளி படாமல் இருக்க, நாகப் பாம்பு ஒன்று படம் எடுத்து இருந்ததாம்! இதைக் கண்டு வியந்த சிலர், ஊருக்கு சேதி பரப்ப... சதானந்த சித்தரின் புகழ் பரவியது.

மதுரையில் சில நாட்கள் தங்கினார்; சீடர்கள் சேர்ந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு தெற்கு நோக்கி யாத்திரை சென்றார் சதானந்தர். ஒருநாள்... வழிப்பறிக் கும்பல் ஒன்று இவர்களைத் தாக்கியது. சதானந்தர், ஒரு பிடி மண்ணை எடுத்துத் தூவ, கொள்ளையருக்கு பார்வை பறி போனது. அவர்கள், சித்தரின் மகிமையை உணர்ந்து தங்களை மன்னிக்க வேண்டினர். அவரும் அறிவுரை கூறி, அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க அருளினார்.

பாத யாத்திரை தொடர்ந்தது. ஆழ்வார்திருநகரிக்கு வந்த சதானந்தர், நம்மாழ்வார் சந்நிதியில் மனம் கரைந்தார். அங்கே, வைணவ ஆச்சார்யரான வடபத்ர அரையரின் தேஜஸ் இவரைக் கவர்ந்தது. அவரிடம் அடிபணிந்து, உபதேசம் பெற்றார். சதானந்தருக்கு திருமால் மீது காதலை ஏற்படுத்தி, பஞ்ச சம்ஸ்காரம் எனும் ஐவகைச் சடங்கினைச் செய்து, திருமண் காப்பு அணிவித்து, அவரை வைணவராக்கினார் வட பத்ராச்சார்யர்; தாஸ்ய நாமமாக நடனகோபாலன் என்ற நாமத்தையும் சூட்டினார்.

ஆழ்வார்திருநகரியிலேயே சில காலம் தங்கியிருந்து, வடபத்ராச் சார்யரிடம் பிரபந்தம் முதலான தத்துவங்களை உபதேசமாகப் பெற்று, குருவின் திருவருளால் பகவானின் திருவருளையும் தரிசனத்தையும் பெற்றார் ஸ்ரீநடன கோபால சுவாமிகள்.

மீண்டும் யாத்திரை செல்ல எண்ணி, ஆழ்வார் திருநகரியிலிருந்து கிளம்பினார். வழியில், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் சந்நிதிக்கு வந்து தரிசித்தார். ஆண்டாளின் நாயகி ஸ்வரூபமான பக்தி உணர்வும், கண்ணன் மீதான காதல் வேகமும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவரது வாக்கிலிருந்து தமிழிலும் சௌராஷ்டிர மொழியிலும் மளமளவெனப் பாடல்கள் வெளிவந்தன.திருப்பதிக்குச் சென்றார். வழியில் திருபுவனம் எனும் ஊரில் குழந்தைச் செல்வத்துக்காக ஏங்கிய தம்பதி, சுவாமிகளை வணங்க... 'விரைவில் குழந்தை பிறக்கும்' என ஆசி வழங்கிச் சென்றார்.

நாட்கள் சென்றன. மீண்டும் அந்த வழியே அவர் திரும்பியபோது, அந்தத் தம்பதி தங்கள் குழந்தையுடன் சென்று சுவாமிகளை வணங்கினர். அப்போது, புடவை, ரவிக்கை, மஞ்சள், குங்குமம், வளையல், சலங்கை ஆகிய மங்கலப் பொருள்களை சுவாமிகளுக்கு அர்ப்பணித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசித்த பிறகு, உள்ளத்தால் நாயகி பாவனை மேலிட பாடல்களைப் பாடிவந்த சுவாமிகள், 'தாம் தோற்றத்தாலும் மாற வேண்டும் என்பதற்காக திருமாலே இவற்றை அளித்தார் போலும்' என எண்ணினார். உடனே, சேலையை உடுத்தினார்; முகத்தில் மஞ்சள் பூசினார்; நாயகியாகவே மாறினார்! இதே கோலத்தில் திருவரங்கம் வந்தார். அங்கே... ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் இவருக்கு 'நடனகோபால நாயகி' என பெயர் சூட்டி அருளினார். இதன் பிறகு, ஸ்ரீமந் நாராயணனை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் பாவித்து, சுவாமிகள் பாடிய பாடல்களும் நாமாவளிகளும் பிரபலம் அடைந்தன.

சுவாமிகள் பெரும்பாலும் மதுரையிலேயே வசித்தார். வயிற்றுக்கு வேண்டிய உணவை உஞ்சவிருத்தி மூலம் பெற்றார். பிரம்மச்சரிய வாழ்க்கைதான்! சுவாமிகளின் நாவில் கலைமகள் களிநடம் புரிந்தாள். அவர் பாடிய தமிழ்ப் பாக்களும் சௌராஷ்டிரப் பாடல்களும், சுவாமிகளை வரகவி என புகழ்பெற வைத்தன. அவருடைய பாடல்களில் அறவுரை, வைணவ தத்துவ பக்தி நெறி, நாயகனாகிய கண்ணனைப் பிரிந்து வாடும் நிலை ஆகியவை அதிகம் வெளிப்பட்டன.

சுவாமிகளுக்கு தாம் முக்தியடையப் போகும் நாள் குறித்த நினைவு வந்தது. அதை சீடர்களுக்கு குறிப்பால் உணர்த்தினார்.

பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணன், 'ஸர்வத் வாராணி ஸம்யம்ய' என்ற கீதா ஸ்லோகத்தில் (அத்: 8 ஸ்லோ: 12,13) சொன்னது இது...

'எல்லா இந்திரிய வாயில்களையும் அடைத்து, மனத்தையும் இதயத்தில் நிலைநிறுத்தி, தனது பிராணனை தலை உச்சியில் வைத்து, யோக தாரணையில் நிலை பெற்றவனாக, 'ஓம்' என உச்சரித்துக் கொண்டு, என்னை முறைப்படி சிந்தித்தவனாக உடலை விட்டு எவன் செல்கிறானோ அவன் உயர்ந்த கதியை அடை கிறான்.' - இதன்படி, தான் முன்பே கணித்த ஸ்ரீவைகுண்ட ஏகாதசி நாளுக்கு முன்னதாக... அஷ்டமி நாளில் இரவு, ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் தியானத்தில் அமர்ந்தார். அன்ன ஆகாரம் ஏதுமில்லை. வைகுண்ட ஏகாதசி. 1914 ஜனவரி-8, வியாழக்கிழமை, மதியம் 12 மணி; சுவாமிகள் மேலே நோக்கி, 'ஹரி அவ்டியோ' (ஹரி வந்துவிட்டார்) என்று உரக்கச் சொல்லியபடி பகவான் ஹரியின் தரிசனம் கண்ட மகிழ்ச்சியில் கலகலவென சிரித்து, முக்தி நிலை அடைந்தார்.

இந்த நிலை அடைய அவர் சௌராஷ்டிர மொழியில் அடிக்கடி இப்படிப் பாடினாராம்...

ஸெணமவி ஸேவ தீ ஸெரிர் வெக்ள கெரி தொர
ஸெர மிள்விலேத் ஸீன் திரயி (தொர் ஸெர)
ஸ்ரீலக்ஷ்மி தேவிஸெர அவி மொகொ தூபொவ்லே
'

'விரைவில் வந்து சேவை சாதித்து, இந்த சரீரத்தில் இருந்து விடுவித்து, உன்னுடன் நான் சேர்ந்தால்தான், பிறந்து இறந்து என... பிறவிச் சுழலில் சிக்கியதால் ஏற் பட்ட களைப்பு தீரும். ஸ்ரீலட்சுமிதேவியுடன் வந்து என்னை உன்னிடத்தில் அழைத்துக் கொள்' என்று அவர் விரும்பியபடி திருமாலின் திவ்ய தரிசனம் பெற்று, பத்மாசனத்தில் இருந்தபடி முக்தி அடைந்தார் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள். அவர் விரும்பிய வண்ணம், மதுரை- காதக்கிணறு பகுதியில் சுவாமிகளுக்கு பிருந்தாவனம் அமைந்தது. பீடத்தின் மேல், சுவாமிகளின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அருகில் நின்ற கோலத்தில் சுவாமிகளின் உற்ஸவ விக்கிரகத்தையும் தரிசிக்கலாம்.

பிருந்தாவனக் கோயிலின் உள்ளே, ஸ்ரீருக்மிணி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி சந்நிதி உள்ளது. மூலவர் மற்றும் உற்ஸவர் விக்கிரகங்கள் கொள்ளை அழகு! எதிரில் தியான மண்டபம் ஒன்று அமைத்து வருகிறார்கள்.

ஒரு சுவாரஸ்யம்... சுவாமிகள் அவதரித்ததும், முக்தி அடைந் ததும் மார்கழி, வியாழக்கிழமையில்தான்! அவருடைய ஜன்ம தினமும், பிருந்தாவனத்துக்கு எழுந்தருளிய தினமும் மிருகசீரிஷ நட்சத்திரமே!

சித்திரைத் திருவிழாவின் போது, கள்ளழகர் மதுரைக்குச் செல்லும் போதும், திரும்பி வரும்போதும்... பிருந்தாவனத்துக்கு வந்து தரிசனம் தருகிறார் என்பது சுவாமிகளின் பெருமையைப் பறைசாற்றும்.

மதுரையில் இருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது காதக் கிணறு. சாலையின் இடதுபுறத்தில் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது பிருந்தாவனக் கோயில். இங்கே வந்து சுவாமிகளை தரிசித்தால், குருவருளும் திருவருளும் கிடைப்பதை உணரலாம்!

- எஸ். ஜானகிராமன்
படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

நன்றி: சக்தி விகடன்.
நன்றி: இக்கட்டுரையை எனக்கு அனுப்பிய மின் தமிழ் குழும நண்பர் கேசவன்
நன்றி: இக்கட்டுரையை மின்வருடி தன் பதிவில் இட்டிருக்கும் நண்பர் டி.எம். பாலாஜி




Friday, February 12, 2010

தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே! (தஞ்சை பெரிய கோவில் - 1000 ஆண்டுகள்)


பேரரசன் இராசராச சோழன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி முடித்து 1000 வருடங்கள் நிறைந்துவிட்டன. 1010ல் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா இவ்வருடம் கொண்டாடப்படுகிறது.

Friday, February 05, 2010

தமிழிற்கு இல்லாத ஒரு தகுதி (தூய தமிழில் பேசுவோம்! )

தமிழ் செம்மொழி ஆனதற்கு ஆளுக்கு ஆள் எதிரணிகள் உள்பட, பலரும் பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் இடையே ஒரே குழப்பம்.

இந்தத் தலைப்பிற்குள் நுழைந்து அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால், செம்மொழி ஆன தமிழ், பதினோரு தகுதிகளுள் ஒன்றைப் பெற்றிருக்கவில்லை. அப்படியிருந்தும் நம்மவர்கள் போராடிச் செம்மொழி ஆக்கிவிட்டார்கள்.

1. தனித்தன்மை, 2. தொன்மை, 3. பிறமொழிக் கலப்பின்மை (?!), 4. இலக்கிய வளம், 5. உயர்ந்த பண்பு நலன், 6. பண்பாடு (அ) நாகரிகம், 7. பொதுமைப் பண்பு, 8. நடு நிலைமை, 9. தாய்மைத் தன்மை, 10. உயர்ந்த சிந்தனை, 11. மொழிக் கோட்பாடு.

இவைதாம் செம்மொழியின் சிறப்பு இயல்புகள். இவற்றுள் மூன்றாவது தகுதி தமிழிற்கு இல்லை.

தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள் தமிழில் வடமொழி கலக்க இடம் தந்துவிட்டனர். சாதவாகனர்களின் மகிழ்ச்சிக்காக இதைச் செய்தார்கள் என்கிறார்கள். களப்பிரர் படையெடுப்பால் கன்னடம் கலந்தது. முகம்மதியர் படையெடுப்பால் உருது, அரபு கலந்தன.

இவர்களை ஆட்சியிலிருந்து அகற்றிய விஜயநகரப் பேரரசு தெலுங்கு மொழி அதிகம் கலந்துவிடக் காரணமாக இருந்தது. ஆங்கிலேயரின் ஆட்சியோ சொல்லவே வேண்டாம். ஆங்கில ஆதிக்கம் தமிழர்களைப் பேயாட்டம் போட வைக்கிறது.

இப்படியே போனால் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் தமிழிற்குக் கிடைத்த செம்மொழித் தகுதியை இன்னும் ஐந்து ஆண்டுகளில் அழித்துவிடும் என்று அஞ்சுகிறார் தமிழறிஞர் நன்னன்.

எத்தகைய சூழலிலும் தாய்மொழியில் பேசியே அதை வாழ வைக்கும் சௌராஷ்டிரர் போல் நாமும் மாறினால் என்ன?

- லேனா தமிழ்வாணன் (8 - 11 - 2004 குமுதம் இதழில்)

Tuesday, February 02, 2010

மொழியைக் கடந்த பெரும்புகழான் கூரத்தாழ்வான்!

"இராகவ். எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன் குமரன். எம்பெருமானார் வாழித் திருநாமத்தை எழுதி இரண்டு வாரத்திற்கு மேலாகிறதே. கூரத்தாழ்வானுடைய ஆயிரமாவது ஆண்டு நிறைவும் வந்துவிட்டது. இன்னும் அடுத்த பகுதி எழுதவில்லையே. ஏன்?"

"எம்பெருமானார் திவ்ய சரிதத்தைப் போல் கூரத்தாழ்வான் திவ்ய சரிதமும் எழுதிக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது இராகவ். எதை எழுதுவது, எதை விடுவது என்று குழப்பமாக இருக்கிறது. அதனால் தான் தாமதம்".

"இதற்கு ஒரு வழி இருக்கிறது குமரன். வாழித் திருநாமத்தில் எந்த நிகழ்ச்சிகளைக் குறித்திருக்கிறார்களோ அதனை மட்டும் சொல்லுங்கள்".

"என் குழப்பத்தை நீக்க அது ஒரு நல்ல வழி தான் இராகவ். அந்தப் பாடல் சொல்லும் நிகழ்ச்சிகள் என்ன என்று தொடர்ச்சியாக நீங்களே சொல்லுங்கள்".

"கூரத்தாழ்வான் பெருமையைப் பேசக் கசக்குமா? கட்டாயம் சொல்கிறேன் குமரன்."

***

இன்றையிலிருந்து (3-Feb-2010)சரியாக ஆயிரம் வருடங்களுக்கு முன். சௌம்ய வருடம் (1010 CE), தை மாதம், ஹஸ்த நட்சத்திரம். காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் கூரம் என்ற ஊரில் வைணவத் தத்துவங்களை நிலை நாட்ட இவ்வுலகில் அவதரிக்கப் போகும் இராமானுசருக்கு அருந்துணையாக விளங்கப் போகும் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்குத் திருமறுமார்பன் என்று பெயர் வைத்தார்கள். அத்திருப்பெயரை வடமொழியில் ஸ்ரீவத்ஸாங்க மிஸ்ரர் என்றும் சொல்வார்கள். பிற்காலத்தில் கூரத்தைச் சேர்ந்த ஆழ்வான் என்ற பொருளில் கூரத்தாழ்வான் என்ற திருப்பெயரே இக்குழந்தைக்கு நின்றது.


காஞ்சியில் இராமானுசர் தனது முப்பத்திரண்டாவது வயதில் வரதராசப் பெருமாளிடம் 'எதிராசர்' என்ற திருநாமத்துடன் கூடிய துறவினைப் பெற்றுத் திருக்கச்சி நம்பிகளால் ஒரு திருமடம் ஏற்படுத்தப்பட்டு அங்கே வாழ்ந்து வரும் போது கூரத்தில் வாழ்ந்த கூரத்தாழ்வான் அச்செய்தியை அறிந்து காஞ்சிபுரம் வந்து எதிராசரின் சீடரானார். வரதராசப் பெருமாள் திருவரங்கப் பெருமாளுக்கு இராமானுசரைத் தந்த போது, எதிராசருடன் கூரத்தாழ்வானும் அவரது தேவியாரான ஆண்டாளும் திருவரங்கம் வந்து சேர்ந்தனர். எப்போதும் இராமானுசரை விட்டுப் பிரியாமல் அவருடனே எங்கும் எப்போதும் இருந்தார் கூரத்தாழ்வான். இராமானுசரும் கூரத்தாழ்வானைப் பற்றிய நினைவினை எப்போதும் கொண்டிருந்தார். திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உட்பொருளைக் கேட்கும் போது கூரத்தாழ்வானையும் முதலியாண்டனையும் கூட அழைத்துச் சென்றார். பிறிதொரு முறை திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சரம சுலோக உட்பொருளைக் கேட்கும் போது அவர் 'இதனை யாருக்கும் சொல்லக்கூடாது' என்று நிபந்தனை இட்ட போது, கூரத்தாழ்வானுக்கு மட்டும் சொல்ல அனுமதி பெற்றார். இப்படி ஒருவருக்கொருவர் மிகவும் அன்யோன்யமாக, அனந்தாழ்வானும் எம்பெருமானும் போல், இராமானுசரும் கூரத்தாழ்வானும் இருந்தார்கள்.



***

ஒரு முறை இராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் இராமானுசரின் திருமடத்திற்கு வந்தார்.

"இளையாழ்வாரே. எனக்கு ஒரு உதவி வேண்டும்".

"சுவாமி. தேவரீர் கட்டளை எதுவோ அதனைத் தெரிவித்து அருள வேண்டும்".

"எம்பெருமானாரே. திவ்ய தேசங்களில் இருக்கும் பெருமாள் திருமேனிகளை எல்லாம் அகற்றிவிட்டால் வைணவ சமயம் அழிந்துவிடும் என்று எண்ணி அதற்கு முன்னர் அப்பெருமாள் திருமேனிகளில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தை அழிக்க வேண்டும் என்று சில தீயவர்கள் முனைந்திருக்கிறார்கள். அதற்கு அரசனின் துணையும் இருக்கிறது. அதனைத் தடுக்க வேண்டும் என்றால் மந்திர பூர்வமாக சில கிரமங்களைச் செய்யவேண்டும். அதனைச் செய்ய நான் செல்கிறேன். அப்போது என் பின்னே ஒரு வித்வான் வர வேண்டும். அப்படி வந்தால் தான் அக்காரியங்கள் முழுப்பலனையும் தரும். அப்படி வருபவர் அனைத்துக் கல்வியும் பெற்றிருந்தாலும் இன்னொருவர் பின் செல்வதா என்று சிறிதும் எண்ணாதவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நீர் என்னுடன் அனுப்ப வேண்டும்".

"சுவாமி. நம் குழாத்தில் அப்படிப்பட்டவர் யார் இருந்தாலும் அவரை நீங்களே தேர்ந்தெடுத்து அழைத்துக் கொள்ள வேண்டும்".

"உடையவரே. கூரத்தாழ்வானே அக்குணங்கள் எல்லாம் நிறைந்தவர். அவரைத் தர வேண்டும்".

குலப்பெருமை, செல்வப்பெருமை, கல்விப்பெருமை என்ற மூன்று குற்றங்களையும் கடந்த பெரும்புகழான் என்று கூரத்தாழ்வானை எல்லோரும் போற்றுவது உண்மை என்பது பெரிய நம்பிகள் கூரத்தாழ்வானைத் தேர்ந்தெடுத்ததில் நன்கு தெரிந்தது. குலப்பெருமையும் செல்வப்பெருமையும் கடத்தலே மிக அரிது. ஆனால் அவற்றைக் கடந்தவரும் உள்ளார்கள். அவற்றிலும் மிக அரிது கல்விப்பெருமையைக் கடப்பது. ஊரார் அறியாமல் அவரிடம் கல்வி கற்க வேண்டும் என்று வந்த கல்விப்பெருமை கூடிய ஒருவருக்கு ஒரு நூலைப் பயிற்றுவிக்கும் போது யாரோ அந்தப் பக்கம் வர, கற்க வந்தவரிடம் இருந்து நூலை வாங்கி வைத்துக் கொண்டு தான் அவரிடம் இருந்து கற்பதைப் போல் காட்டிக் கொண்ட கொஞ்சமும் கல்விப்பெருமை இல்லாத பணிவுக் குணம் மிக்கவர் கூரத்தாழ்வான்.

***

"கூரத்தாழ்வாரே. ஆளவந்தாரின் மனத்தில் இருந்த கடைசி ஆசைகளில் ஒன்று வேத வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்குப் போதாயன ரிஷியின் குறிப்பு நூலான போதாயன விருத்தியின் அடிப்படையிலும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் அடிப்படையிலும் ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என்பது. ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் நாதமுனிகளின் கருணையினால் நம்மிடம் இருக்கிறது. போதாயன விருத்தியோ காஷ்மீரத்தில் மட்டுமே தான் இருக்கிறது. அதனைப் பார்த்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு பாஷ்யம் எழுதலாம் என்று தான் நாம் இவ்வளவு தூரம் வந்தோம். அரசனின் அனுமதியையும் பெற்று நேற்று போதாயன விருத்தியைப் பெற்றோம். ஆனால் அதனை யாருக்கும் காட்டாமல் வைத்திருந்த வித்வான்கள் அரசனின் மனத்தை மாற்றி இன்று அதனை மீண்டும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்களே? தெரிந்திருந்தால் முழு நூலையையும் நேற்றே படித்திருப்பேனே. இப்போது என்ன செய்வது?"

"சுவாமி. தேவரீர் வருந்த வேண்டாம். நேற்றிரவு அந்நூல் முழுவதையும் படித்துவிட்டேன்".

"ஆகா. அருமை அருமை. கூரத்தாழ்வாரே. நீர் ஏகசந்தகிராகியாயிற்றே. ஒரு முறை படித்தாலே முழுவதும் மனத்தில் நிறுத்திக் கொள்வீர். இனி கவலையில்லை. நாம் திருவரங்கம் சென்று அடைந்த பின்னர் பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதத் தொடங்குகிறேன். ஏதேனும் ஐயம் வந்தால் உம்மிடம் கேட்கிறேன். போதாயன விருத்தி என்ன சொல்கிறது என்பதை அப்போது சொல்லும்".

"சுவாமி. தேவரீர் என் ஆசாரியன். உங்களுக்குத் தோன்றும் ஐயங்களைத் தீர்க்கும் அளவிற்கு அடியேன் அறிவுடையேன் இல்லை. அப்படி நினைத்தாலும் செய்ய முயன்றாலும் அது பெரும் தவறு".

"சரி. இப்படி செய்யலாம். நான் உரையைச் சொல்லச் சொல்ல நீர் எழுதும். எங்காவது நான் சொல்லும் பொருள் போதாயன விருத்திக்கு மாறுபாடாக இருந்தால் எழுதுவதை நிறுத்திவிடும். அதனை நான் புரிந்து கொள்கிறேன். போதாயன விருத்திக்கு ஏற்ற பொருளை நான் சொல்லும் வரை நீர் மீண்டும் எழுத வேண்டாம்"

"தங்கள் கட்டளை சுவாமி".

எம்பெருமானாரும் கூரத்தாழ்வானும் பிரம்மசூத்திரத்தின் உரையான ஸ்ரீபாஷ்யத்தை இந்த வகையில் எழுதி மீண்டும் காஷ்மீரத்திற்குச் சென்று அங்கிருக்கும் சரஸ்வதி பீடத்தில் அதனை அரங்கேற்றினர். சரஸ்வதி தேவியே அந்த உரையைப் பாராட்டி எம்பெருமானார்க்கு 'ஸ்ரீபாஷ்யக்காரர்' என்ற திருப்பெயரை அருளினாள்.



பிற்காலத்தில் தனது மகன்களான பராசர பட்டர், வேதவியாச பட்டர் உட்பட தன்னிடம் சீடர்களாக இருந்தவர்களுக்கு ஸ்ரீபாஷ்யத்தின் உட்பொருளை மிக நன்றாகப் போதித்தார் கூரத்தாழ்வான்.

ஆளவந்தாரின் இறுதி ஆசைகளான - 1. வேதங்களைத் தொகுத்த வேதவியாசரின் பெயர் விளங்கச் செய்வது, 2. பராசர ஸ்மிருதியும் விஷ்ணு புராணமும் இயற்றிய பராசரரின் பெயர் விளங்கச் செய்வது, 3. பிரம்மசூத்திரத்திற்கு உரை நூல் செய்வது என்ற மூன்று விருப்பங்களையும் இராமானுசர் நிறைவேற்ற கூரத்தாழ்வான் உறுதுணையாக இருந்ததை அவரது திருக்குமாரர்களின் திருப்பெயர்களிலிருந்தும் ஸ்ரீபாஷ்யம் இயற்றுவதிலும் பரப்புவதிலும் அவர் செய்த அருந்துணையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

***

கூரத்தாழ்வானுக்கு ஏறக்குறைய எண்பத்தி எட்டு வயது ஆகிவிட்டது. எம்பெருமானாருக்கோ ஏறக்குறைய எண்பது வயது. எட்டு ஆண்டுகளாக சோழ தேசத்தை விட்டு மேல் நாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் இராமானுசர். கூரத்தாழ்வான் எம்பெருமானார் தரிசனத்திற்காக (வைணவ சமயத்திற்காக) தன் தரிசனத்தை (கண்ணை) இழந்து நிற்கிறார். வயதில் மிகவும் முதிர்ந்த, இராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் சமயக் குழப்பங்களினால் வந்த கொடுமைகளைத் தாங்க இயலாமல் கூரத்தாழ்வானோடு அரசவைக்குச் சென்ற போது கண்கள் பிடுங்கப்பட்டத் துன்பம் தாங்காது அரசவையிலிருந்து வரும் வழியிலேயே தனது இன்னுயிரை விட்டுவிட்டார். இப்படி வைணவ சமயத்திற்கு திருவரங்கத்தில் ஒரு தாழ் நிலை ஏற்பட்ட காலம் இது.

ஒரு நாள் தட்டுத் தடுமாறி எம்பெருமானாரது திருவடிகளே தனது கண்களாகக் கொண்டு திருவரங்கன் திருக்கோவிலுக்கு வருகிறார் கூரத்தாழ்வான்.

"இது அரசகட்டளை. இராமானுசனைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் கோவிலில் நுழைய அனுமதியில்லை"

"ஆகா. இது என்ன கொடுமை? வாயில் காப்போரே. இவர் கூரத்தாழ்வான். யாருக்கும் எதிரி இல்லை இவர். எல்லாருக்கும் நல்லவர். இவரைத் தடுப்பது தகாது"

"ஐயா. நீங்கள் மிகவும் நல்லவர்; யாருக்கும் எதிரி இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கும் அது நன்கு தெரியும். உங்களுக்கு இராமானுச சம்பந்தம் இல்லை என்று சொன்னீர்கள் ஆயின் கோவிலுக்குள் நுழைய அனுமதி தரப்படும்"

"ஐயோ இது என்ன இப்படி ஒரு நிலை அடியேனுக்கு வந்ததே. அனைவருக்கும் நல்லவனாக இருத்தல் மிகப்பெரிய ஆத்ம குணம். அப்படிப் பட்ட ஆத்ம குணம் ஆசாரியருடன் சம்பந்தத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இங்கே ஆசார்ய சம்பந்தத்தை விலக்குவதற்குப் பயனாகிறதே! ஐயா வாயில் காப்போரே! நம்பெருமாள் சம்பந்தம் போனாலும் போகட்டும்! எமக்கு எம்பெருமானார் சம்பந்தமே அமையும்!"

மிகுந்த வருத்தத்தோடு திருக்கோவிலை விட்டு வந்த கூரத்தாழ்வான் மேலும் அங்கே வசிக்க மனமின்றி திருமாலிருஞ்சோலைக்குச் சென்று அங்கே வசிக்கலானார்.

***

எம்பெருமானாருக்கு ஏறக்குறைய நூறு வயது. கூரத்தாழ்வானுக்கு நூற்றி எட்டு வயது. திருவரங்கத்திலும் சுற்று வட்டாரங்களிலும் வைணவ சமயத்திற்கு ஏற்பட்டிருந்த தாழ்வுகள் அகன்றுவிட்டன. அதனால் எம்பெருமானாரும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் திரும்பிவிட்டார்கள். திருமாலிருஞ்சோலையான அழகர்மலையில் வாழும் போது காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் மேல் கூரத்தாழ்வான் வரதராஜ ஸ்தவம் என்ற ஒரு துதி நூலை இயற்றியிருந்தார். திருவரங்கத்தில் அதனைக் கண்ணுற்றார் இராமானுசர்.

"ஆகா. மிகவும் அருமையாக இருக்கிறதே. இதனைத் திருக்கச்சியில் வரதன் திருமுன் உரைத்தால் அவன் மிகவும் மகிழ்வானே. ஆழ்வானே. நீர் உடனே காஞ்சிக்குச் சென்று தேவராசப் பெருமாளின் திருமுன் இந்தத் துதியை விண்ணப்பம் செய்யும்"

"அப்படியே செய்கிறேன் சுவாமி"

"ஆழ்வான். அப்படி செய்தால் வரதன் மிகவும் மகிழ்வான். அப்போது என்ன வரம் வேண்டும் என்று கேட்பான். நீர் கண் பார்வையை வேண்டிப் பெற்றுக் கொள்ளும்"

***

திருக்கச்சி. வரதன் சன்னிதி. அர்ச்சகரின் மூலம் வரதனின் அருளப்பாடு கூரத்தாழ்வானுக்குக் கிடைக்கிறது.

"மிகவும் மகிழ்ந்தோம். உமக்கு என்ன வேண்டும்?"

"தங்கள் கிருபையே வேண்டும். அடியேனுக்கு வேறென்ன வேண்டும்?!"

"என் கிருபை என்றுமே உண்டு. வேறு என்ன வேண்டும்? ஏதேனும் நீர் கேட்டே ஆக வேண்டும்".

"அப்படியென்றால் அடியேன் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும். பகவானிடம் அபசாரப்பட்டால் பக்தனிடம் சரணடைந்து உய்ந்து போகலாம். ஆனால் பக்தனிடம் அபசாரப்பட்டால் அந்த பகவானாலேயே காக்க இயலாது. இப்படித் தான் தேவரீர் பல இடங்களிலும் சொல்லியிருக்கிறீர். அறிந்தோ அறியாமலோ அரசனைத் தூண்டிவிட்டு இராமானுசர் முதலிய பல பக்தர்களுக்குத் துன்பத்தைத் தந்துவிட்டான் நாலூரான். அவனை நீர் கைவிடாது அவனுக்கு நல்லகதியை அருள வேண்டும்"

"அப்படியே தந்தோம்"

இராமானுசரும் பல அடியார்களும் திருவரங்கத்தை விட்டு செல்லவும், பெரிய நம்பிகளின் உயிர் வேதனையுடன் விலகவும், தான் கண்களை இழக்கவும் காரணமான நாலூரானுக்கும் நல்ல கதி வேண்டிப் பெறும் கூரத்தாழ்வானின் கருணை, 'தான் ஒருவன் நரகம் சென்றாலும் தகும். மற்றவர் எல்லோரும் நற்கதி பெறவேண்டும்' என்று அனைவருக்கும் திருமந்திரப் பொருளைச் சொன்ன எம்பெருமானாரின் கருணைக்கு ஈடாக இருக்கிறது. ஆசாரியனுக்குத் தகுந்த சீடன். சீடனுக்குத் தகுந்த ஆசாரியன்.

***

"என்ன? உமது கண்களை வேண்டிப் பெறவில்லையா? நாலூரானுக்கு முக்தி வேண்டினீரா? உமது இயல்புக்குத் தகுந்ததைச் செய்தீர் ஆழ்வான். திருவரங்கனிடமாவது கண்களை வேண்டிப் பெறும். நீர் கண் பார்வையின்றி வருந்துவது நமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது"

இராமானுசரின் வாக்கின் படி திருக்கோவிலுக்குச் செல்கிறார் கூரத்தாழ்வான்.

"கூரத்தாழ்வான். அருளிச்செயல்களால் எம்மைத் துதித்ததில் மிகவும் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும்?"

"தேவரீர் கருணையே போதும் சுவாமி. வேறொன்றும் வேண்டாம்".

"ஆழ்வான். உமக்கும் உம் சம்பந்தம் உடையாருக்கும் வைகுந்தம் நிச்சயம் தந்தோம்"

"ஆகா. ஆகா. ஆகா. நம் ஆசாரியனான திருக்கோட்டியூர் நம்பிகளின் ஆணையை மீறி அனைவருக்கும் வரம்பறுத்துத் திருமந்திரப் பொருளை உரைத்ததால் நம் கதி என்னவோ என்று இருந்தோம். இன்று ஆழ்வானுக்கு அரங்கன் உம் சம்பந்தம் உடையோருக்கு வைகுந்தம் நிச்சயம் என்றான். கூரத்தாழ்வான் சம்பந்தம் பெற்றதால் நமக்கும் வைகுந்தம் உண்டு. வைகுந்தம் உண்டு"

மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது காவி மேலாடையை மேலெறிந்து ஆனந்தக் கூத்தாடினார் எம்பெருமானார். இராமானுச சம்பந்தம் எந்த வழியிலேனும் கிடைக்காதா என்று பல்லாயிரக்கணக்கானோர் வேண்டியிருக்க, கூரத்தாழ்வான் சம்பந்தத்தை இராமானுசர் கொண்டாடினார்.

***

"மிக நன்று இராகவ். கூரத்தாழ்வான் திருக்கதையில் இருக்கும் முக்கிய நிகழ்ச்சிகளாக வாழித் திருநாமம் சொல்லும் பகுதிகளை மிக நன்றாகக் கூறினீர்கள். நம் இணைய எழுத்தாள நண்பர்கள் இரவிசங்கர், சுந்தர் அண்ணா, மௌலி, கைலாஷி ஐயா, ஷைலஜா அக்கா போன்றவர்கள் கூரத்தாழ்வானின் வைபவத்தை நிறைய இடுகைகளில் எழுதியிருக்கிறார்கள். நாமும் வருங்காலத்தில் எம்பெருமானாரின் ஆசாரியர்களைப் பற்றியும் சீடர்களைப் பற்றியும் நிறைய பேசலாம். இப்போது இருவரும் சேர்ந்து, கூரேசரது ஆயிரமாவது ஆண்டு நிறைவான இன்று (3-Feb-2010), அவரது வாழித் திருநாமத்தைப் பொருளுடன் சொல்லுவோம்"

சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே!
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே!
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே!
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே!
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே!
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே!
ஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே!
எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே!!


சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே - சிறப்புகள் பொங்கும் திருமால் திருப்பதிகள் அனைத்தும் இன்னும் சிறப்பாக விளங்க பெரிய நம்பிகளுடன் பின் தொடர்ந்து வந்தவன் வாழ்க!

தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே - 'உமக்கும் உம்மைச் சேர்ந்தவர்களுக்கும் வைகுந்தம் தந்தோம்' என்று தென்னரங்கரின் உறுதியைப் பெற்று அவரது சிறந்த திருவருளைச் சேர்கின்றவன் வாழ்க!

பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே - உலகெலாம் புகழும் எதிராசராம் எம்பெருமானார் இராமனுசரின் திருவடி சம்பந்தமே வேண்டும்; திருவரங்கன் சம்பந்தமும் வேண்டாம் என்று ஆசாரியன் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க!

பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே - வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுசர் உரைநூல் (பாஷ்யம் - பாடியம்) எழுதும் போது அதன் உட்பொருளை அவர் உணரும் படி அவருக்கு உதவி, அந்த உரை நூல் காலமெல்லாம் நிலைக்கும் படி தன் மகன்களான பராசர பட்டர், வேதவியாச பட்டர் முதலியவர்களுக்கு பாடியத்தின் உட்பொருளைச் சொல்லுகின்றவன் வாழ்க!

நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே - அரசவையில் தன் கண்ணே போனாலும் வேத வேதாந்தங்களை எல்லாம் எடுத்துக் கூறி நாராயணன் சமயத்தை நிலை நாட்டியவன் வாழ்க!

நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே - தனக்கும் பல அடியார்களுக்கும் தீங்கு ஏற்படுவதற்குக் காரணமாக நின்ற வைணவன் நாலூரானும் முக்தி அடைய பேரருளாளனை வேண்டி நாலூரானுக்கும் முக்தி தந்தவன் வாழ்க!

ஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே - ஏரின் பெருமை விளங்கும் தை மாதத்தில் அத்த (ஹஸ்த) நட்சத்திரத்தன்று உலகில் அவதரித்தவன் வாழ்க!

எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே - எழில் மிகுந்த கூரத்தாழ்வானின் திருவடிகள் வாழ்க வாழ்க!"

***

கூரத்தாழ்வானது ஆயிரமாவது ஆண்டு விழா நடப்பதைப் பற்றி சொல்லி கடந்த ஒரு வருடமாக கூரத்தாழ்வானின் ஆசாரிய பரம்பரையைப் போற்றும் இடுகைகளை இடும் வாய்ப்பை நல்கிய எம்பெருமானுக்கும் எம்பெருமானாருக்கும் கூரத்தாழ்வானுக்கும் இவர்கள் அனைவரின் இன்னருளையும் என்னிடம் கொண்டு வரும் இரவிசங்கருக்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

கூரத்தாழ்வான் பிறந்த நாளை முன்னிட்டு இரவிசங்கர் தரும் பிறந்த நாள் பரிசு!



இரவிசங்கர் அனுப்பிய சில படங்கள் இங்கே, இங்கே, இங்கே பார்க்கலாம்.



நன்றி: திரு. ஸ்ரீரங்கம் மோகனரங்கன்