Saturday, June 14, 2008

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்


மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

மதிநுதல் மங்கையோடு - நிலாப் பிறையை போல் வளைந்து, நிலவைப் போல் குளிர்ந்த ஒளிவீசும் நெற்றியையுடைய அன்னை உமையோடு

வடபாலிருந்து - தென் திசை நோக்கி (தட்சினாமூர்த்தி திருவுருவத்தில்) வடப்பக்கமாய் அமர்ந்து

மறையோதும் எங்கள் பரமன் - மறைபொருளாய் இருக்கும் ஞான நூல்களை ஓதி அருளும் எங்கள் பரமனான சிவபெருமான்

நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்து - கங்கையும் கொன்றை மாலையும் தன் திருமுடிமேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிரந்தரமாய் வீற்றிருப்பதால்

கொதியுறு காலன் - உடலை வருத்தும் காய்ச்சல் என்னும் காலனும்

அங்கி - உடலைச் சுடும் அக்கினியும் (தீயும்)

நமனோடு தூதர் - உயிரை எடுக்கும் நமனெனும் யமனும் அவனுடைத் தூதர்களாகிய

கொடுநோய்கள் ஆன பலவும் - கொடிய நோய்கள் யாவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - சிவனடியார்களுக்கு அவை மிக நல்லவை. நற்குணங்கள் மிகுந்தவை. நற்குணங்கள் அளிப்பவை.

***

சிவபெருமான் உமா மகேசுரவராக அன்னையுடன் கூடி அமர்ந்திருக்கும் திருக்கோலமும் யோகீஸ்வரனாய் வட விருக்ஷம் எனப்படும் கல் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து மறைகளை சனத்குமாரர்களுக்கு உபதேசிக்கும் தென்முகக் கடவுள் திருக்கோலமும் முதல் வரியில் குறிக்கப் படுகின்றன. தென்முகக்கடவுளாய் அமர்ந்திருக்கும் போது அன்னையுடன் சேர்ந்திருப்பதில்லை ஐயன். ஆனால் சம்பந்தருக்கு அன்னையையும் ஐயனையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை போலும். உள்ளம் புகுந்தவன் அன்னையுடன் அல்லவா புகுந்தான். அதனால் மதி நுதல் மங்கையோடு என்று யோகநிலையில் இருக்கும் திருக்கோலத்திலும் அன்னையுடன் சேர்த்து ஐயனை தரிசிக்கிறார்.

ஐயனுடன் அடியாருக்கு இருக்கும் நெருக்கமான உறவைக் குறிக்க 'எங்கள் பரமன்' என்கிறார். அவன் பரமன் - எல்லோருக்கும் மேலானவன். ஆனால் அதே நேரத்தில் எங்களவன். :-)

காலனும் நமனும் யமனின் மறுபெயர்கள். இங்கு கொதியுறு காலன் என்று சொல்லிவிட்டு மீண்டும் நமன் என்கிறார். இருமுறை யமனைக் குறித்திருப்பாரோ என்று கேள்வி வந்தது. அதனால் அவன் அருளை முன்னிட்டுச் சிந்தித்ததில் 'கொதியுறு காலன்' என்பது 'காய்ச்சலாகிய காலன்' எனப் பொருள் தரலாம் என்று தோன்றியது.

அங்கி என்பது அக்கினி எனும் வடசொல்லின் திரிபு.

நமனோடு அவன் தூதர்களும் கொடு நோய்களான பலவும் என்று சொல்லவந்தவன் பின்னர் நோய்களைத் தானே யமதூதர்கள் என்று சொல்லுவார்கள் என்று எண்ணி அதே பொருளைக் கொடுத்திருக்கிறேன்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'கோளறு பதிகம்' பதிவில் 6 மே 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

30 comments:

சிவமுருகன் said...
//கொடிய நோய்கள் யாவும் ...சிவனடியார்களுக்கு அவை மிக நல்லவை. நற்குணங்கள் மிகுந்தவை. நற்குணங்கள் அளிப்பவை.//

கொடிய நோய்கள் எப்படி நன்மை பயக்கும்? பொருளை சற்றே விரிவாக தரவும்.

May 06, 2006 6:20 AM
---

Sivabalan said...
Kumaran,

You are doing good job for Tamil language.

Can you please put some thing on Naladiar.. etc...

Why I am asking this, because, I had read (you too also), Naladiar talks about Management methodology.

One example..
If you keep a sharp chisel on very thin leave, the chisel may not cut thro the leave. It needs a push.

Thanks

P.S. I have read little bit of Thevaram, Thirumandiram ... ( My family is belongs to Tamil Othuvar)

I am sorry; these are all man made things.

May 06, 2006 6:21 AM
--

குமரன் (Kumaran) said...
நல்ல கேள்வி சிவமுருகன். கொதியுறு காலனாகிய காய்ச்சலும், அக்கினியும், நமனும், அவன் தூதர்களான கொடிய நோய்களும் அடியார் பக்கமே வராமல், வந்து துன்பம் தராமல், நன்மை செய்யும். இறையடியார்களாய் இருந்தால் அவை வரமாட்டா என்பதால் அந்த பயத்தாலும் பக்தி வளரும். குணம் வளரும். அப்படி அடியார்கள் பக்கம் வராமல் நன்மை செய்வதும், மக்களை அடியார் ஆக்குவதும் ஆகிய நற்குணங்கள் உள்ளவை அவை. :-) விளக்கம் சரியா?

May 06, 2006 2:11 PM
--

குமரன் (Kumaran) said...
சிவபாலன்,

உங்கள் பாராட்டுக்கு நன்றி. ஏதோ என்னால் செய்ய முடிந்ததைச் செய்கிறேன்.

நாலடியாரை நான் படித்ததில்லை. அதனால் நீங்கள் சொன்ன படி மேலாண்மையைப் பற்றிய கருத்துகள் அதில் இருக்கின்றதா என்று தெரியாது. தற்போது பல தலைப்புகளில் எழுதிக் கொண்டிருப்பதால் வருங்காலத்தில் முடிந்தால் நாலடியாரைப் படித்துப் பொருள் கூற முயற்சிக்கிறேன்.

ஓதுவார் திருக்குலத்தில் பிறந்த நீங்களும் தமிழ்ப் பாடல்களைப் பற்றி எழுதலாமே.

இவை எல்லாமே திருவடியார்களான மனிதர்களால் செய்யப்பட்டவை தான். ஆனால் அதனைச் சொல்ல ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்? 'Sorry' என்பது மன்னிப்பா, வருத்தமா? வருத்தம் என்றால் ஏன் வருத்தப் படுகிறீர்கள்? எதையே சொல்ல வந்து நேரடியாகச் சொல்லாதது போல் தெரிகிறதே....

May 06, 2006 2:22 PM
--

Sivabalan said...
//எதையே சொல்ல வந்து நேரடியாகச் சொல்லாதது போல் தெரிகிறதே....//

Yes it true.

May 06, 2006 5:30 PM
---

Sivabalan said...
//ஓதுவார் திருக்குலத்தில் பிறந்த நீங்களும் தமிழ்ப் பாடல்களைப் பற்றி எழுதலாமே. //
I am poor writer, Kumaran

May 06, 2006 5:31 PM
---

Sivabalan said...
//நாலடியாரைப் படித்துப் பொருள் கூற முயற்சிக்கிறேன்//

Please try to do it.

May 06, 2006 5:32 PM
---

Sivabalan said...
'Sorry' என்பது மன்னிப்பா, வருத்தமா? வருத்தம்

Yes it is வருத்தம்

May 06, 2006 5:32 PM
---

Sivabalan said...
My basic intention is not to hurt you. I do agree, we can read Thevaram.. to get peace of mind. I still hear the Devaram songs of Mr.Thaumapuram Swaminathan.

I do go to temple to get peace of mind. It does mean that I have belief in God. All these systems are man made things to protect the man kind.

May 06, 2006 5:33 PM
--

குமரன் (Kumaran) said...
சிவபாலன். உங்கள் கருத்துக்களை தயங்காமல் கூறுங்கள். தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள மாட்டேன். அதனால் என் மனம் புண்படுமோ என்று எண்ண வேண்டாம். உங்கள் கருத்துக்களுக்கு எனக்கு விடை தெரிந்தால் சொல்கிறேன். தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லிவிடுகிறேன். தயங்க வேண்டாம்.

May 06, 2006 6:11 PM
--

குமரன் (Kumaran) said...
எல்லோருமே தொடக்கத்தில் எழுதக் கொஞ்சம் தடுமாறத்தான் செய்வார்கள் சிவபாலன். செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் செந்தமிழும் கைப்பழக்கம் (அதுவும் வலைத்தளத்தில் எழுதித் தான் நம் எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்). எழுதத் தொடங்குங்கள். நீங்களா இவ்வளவு அழகாய் எழுதுவது என்று நீங்களே வியக்கும் அளவிற்கு எழுதுவீர்கள். தமிழ்மணத்தில் அதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.

May 06, 2006 6:14 PM
---

Sivabalan said...
மிக்க நன்றி!!
எனக்கு தமிழ் சொன்ன இதயத்திற்கு!!

May 07, 2006 5:09 AM
--

Merkondar said...
//தென்முகக்கடவுளாய் அமர்ந்திருக்கும் போது அன்னையுடன் சேர்ந்திருப்பதில்லை ஐயன்.//
தென் திசை எம திசை என்பதாலா?

May 07, 2006 7:10 AM
--

வெளிகண்ட நாதர் said...
//மதிநுதல் மங்கை// ஒன்னு தெரியுமா குமரன், நான் காலேஜ் படிக்கும் போது இந்த சொற்றொடரை என் கவிதை புனைய உபயோகித்திருக்கிறேன்!

May 07, 2006 2:15 PM
--

சிவமுருகன் said...
அன்புள்ள சிவபாலன்,

//எழுதத் தொடங்குங்கள். நீங்களா இவ்வளவு அழகாய் எழுதுவது என்று நீங்களே வியக்கும் அளவிற்கு எழுதுவீர்கள்.//
உடனே தொடங்குங்கள். குமரன் அவர்கள் சொன்னது போல் நீங்களே வியப்பீர்கள்.

//தமிழ்மணத்தில் அதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.//

அதில் நானும் ஒருவன்.

May 08, 2006 2:14 AM
--

rnateshan. said...
வித்தியாசமாக எழுதி சிந்தனையைத் தூண்டும் முயற்சி!!

May 08, 2006 5:19 AM
---

குமரன் (Kumaran) said...
என்னார் ஐயா. தென் திசை நோக்கி தட்சினா மூர்த்தியாக அமரும் போது ஐயன் யோகீஸ்வரனாய் இருக்கிறார். காமேஸ்வரனாக காமாக்ஷியுடன் காட்சி தருவதில்லை அப்போது.

ஆனால் நீங்கள் கேட்டதில் வேறு ஒரு செய்தியும் இருக்கிறது. ஐயன் கல்லாலின் கீழ் அமர்ந்து மறையை ஓதும் போது தென் திசை நோக்கியது அத்திசையவனான யமனின் வாதனை இந்த மறையை பொருளுணர்ந்து ஓதி ஞானமடைபவர்களுக்கு இல்லை என்று உணர்த்தத்தான் என்று படித்திருக்கிறேன். ஞானவெட்டியான் ஐயாவிடம் தான் கேட்கவேண்டும் இது சரியா என்று.

May 08, 2006 7:15 AM
--

குமரன் (Kumaran) said...
வெளிகண்ட நாதர் ஐயா. அந்தக் கவிதையைச் சொல்லலாம் என்றால் கொஞ்சம் சொல்லுங்களேன். :-)

May 08, 2006 7:16 AM
---

குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன்.

May 08, 2006 7:17 AM
---

குமரன் (Kumaran) said...
நன்றி நடேசன் ஐயா.

May 08, 2006 7:17 AM
---

குமரன் (Kumaran) said...
ஏதோ காரணத்தால் ப்ளாக்கர் சிவபாலனின் இந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை. எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்து வெட்டி ஒட்டுகிறேன்.

Sivabalan has left a new comment on your post "181: மதிநுதல் மங்கையோடு (பாடல் 4)":

If we do not these kinds of systems, then all people will fight each other & eventually the man kind will be ruined.
But, whatever is happening right now to fight for religion & God makes me very angry with the system and eventually it leads to frustration.

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by Sivabalan to கோளறு பதிகம் (அண்மைப் பதிவுகள்) at 5/06/2006 07:33:44 PM

May 08, 2006 8:08 AM
---

குமரன் (Kumaran) said...
சிவபாலன், உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

May 08, 2006 8:09 AM
---

சிவமுருகன் said...
//விளக்கம் சரியா?//

மிகச் சரி.

அத்தோடு மேலும் என்னுடைய ஒரு சிந்தனை. கொடிய நோயினால் அண்டப்பட்ட மன்னனின் நோயை குணமாக்கும் பொருட்டே சம்பந்தரும் மதுரை வந்தார். பின் சைவ தழைக்க ஆவண செய்தார். இதைதான் இவ்விடத்தில் சொல்லியிருந்திருக்கலாம்.

(அவர் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் ஸ்தாபித்த மதுரை ஆதினம் இன்றும் அதே இடத்தில் தெற்காவணி மூல வீதியில் உள்ளது. தற்போதய பீடதிபதியாக 292வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத தேசிகநந்த பரமாச்சாரியர் உள்ளார்.)

May 09, 2006 1:36 AM
---

G.Ragavan said...
நல்ல விளக்கம் குமரன். கொடுங்காலனுக்கும் மிக நல்ல விளக்கமே. சிறப்பாக இருந்தது.

மதிநுதல் என்றதும் நினைவிற்கு வந்தது மதிவாள் நுதல் வள்ளியை என்ற வரிகள்தான்.

கல்லால மரத்தடியில் அமர்ந்து தனியாளாய் இருந்தாலும் அவர் தனியனல்லர். மாதொரு பாகன். எப்பொழுதுமே.

May 10, 2006 4:35 AM
---

குமரன் (Kumaran) said...
நீங்கள் சொல்வது போலும் இருக்கலாம் சிவமுருகன்.

May 11, 2006 12:28 PM
---

குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன். நீங்கள் சொல்வது சரிதான். யோக நிலையிலும் ஐயன் மாதொரு பாகன் தான். அதனால் மதிநுதல் மங்கையோடு என்று சொன்னது சரி தான்.

இதனைப் படிக்கும் போது பெருமாளின் வாமனாவதாரம் நினைவிற்கு வந்தது. பிரம்மச்சாரியாக வரும் போதும் மான் தோலாடையை மார்பில் அணிந்து மகாலக்ஷ்மியை மறைத்துக் கொண்டு வந்தார் என்று சொல்லுவார்கள். அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் அல்லவா?

May 11, 2006 12:31 PM
---

Anonymous said...
Kumaran Avargalukku,

Ungal valai thalam miga sirapaaga irunthathu.

Nann Chennaiil muraiyaai Devaaramum, Vallalaar Paadalgalum, Thirupuzhagum payindru vandhen.

enaku tamizhil neengal epadi inaiya thalathil, ungal padivugalai serkireergal endru solla mudiyuma?

en min mugavari,
vidhya_449@rediffmail.com

Ungalin nalla muyarchi inidhe thodara en vaazhthugal.

Tamizhil epadi ezhuthuvathu endru theriyaamal, aangilathil ezhuthugiren.

Nandri
Vidya

November 25, 2006 8:28 AM
--

குமரன் (Kumaran) said...
Thanks Vidya. I have sent an email to you.

November 27, 2006 10:17 AM
---

ஞானவெட்டியான் said...
அன்பு குமரா,

சிவம்(சீவன்) தனித்திருப்பதில்லை; சக்தியொடுதான் இருக்கும். சக்தி பிரிந்தால் சவமல்லவோ?

மறை கற்று ஓகம் பயிலுவோர் வடக்கு திசை நோக்கி இருந்து தவமியற்றல் வேண்டும். ஏனெனில் காந்த சக்தி வடக்கில் இருக்கிறது. அப்படியிருக்க சீடர்கள் வடக்கு நோக்கியிருக்க, குரு தெற்கு நோக்கித்தானே இருத்தல்வேண்டும்.

சிவன், தென்திசையிலிருந்து ஏமன் வராது காவலிருந்து ஓகிகளைக் காக்கிறார் என்பதும் ஒரு சாராரின் வாதம்.

November 27, 2006 6:31 PM
---

குமரன் (Kumaran) said...
நல்ல விளக்கம் ஐயா. மிக்க நன்றி.

November 30, 2006 1:17 PM

R.DEVARAJAN said...

குமரன் சார்,
தென் முகக் கடவுள் மனம், மொழி, மெய் கடந்த நிர்குண , நிஷ்க்ரிய நிலையில் 'சொல்லாமல் சொல்லி' மறை முனிவர் நால்வருக்கும் மெய்ப்பொருளை உணர்த்தி வருவதாக சித்தாந்தம் கூறும். மறையோதும் செயல் அங்கு இல்லை ; உமா தேவியாரும் அங்கு கிடையாது. 'வடபாலிருந்து' என்பதற்குக் 'கயிலை மலையில் இருந்தவாறு' என்றே பொருள் கொள்ள வேண்டும். சிவ பெருமான் மறை ஓதுவதைத் தேவாரம் பல இடங்களிலும் தெரிவிக்கிறது.
தேவராஜன்

குமரன் (Kumaran) said...

நல்ல பொருத்தமான விளக்கம் திரு.தேவராஜன் ஐயா. மிக்க நன்றி.