Wednesday, June 18, 2008

ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்


வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

வேள்பட விழி செய்து அன்று - அன்று மதனவேள் சாம்பலாக நெற்றிக்கண்ணைத் திறந்து

விடைமேல் இருந்து - அறவுருவான எருதின் மேல் அமர்ந்து

மடவாள் தனோடும் உடனாய் - அழகிய உமையன்னையுடன் சேர்ந்து

வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து - ஒளிமிகுந்த நிலவையும் வன்னி, கொன்றை மலர்களையும் திருமுடிமேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்ற அதனால்

ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா - ஏழ்கடல்களால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனான இராவணன் முதலான அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது

ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - ஆழ்கடல்களும் அவற்றில் வாழ்பவைகளும் சிவனடியார்களுக்கு மிக நல்லவையே.

***

இராவணன் சிறந்த சிவபக்தன். அவ்வாறிருக்க இராவணன் போன்றவர்களால் துயரம் வராது என்று ஏன் எழுதியிருக்கிறார் சம்பந்தர் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. மதனவேளை அழித்தவன், காமேஸ்வரன், காமதகனன் தன் துணைவியுடன் என் உள்ளத்தில் நிலைபெற்றதனால், பெரும்பண்டிதனாய் இருந்தும் எல்லாவிதமான அரச நற்குணங்கள் இருந்தும் பிறன் மனையை நாடிய இராவணனை போன்ற காமத்தால் நிலைதடுமாறியவர்களால் எனக்கு எந்த துயரமும் நிகழாது என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'கோளறு பதிகம்' பதிவில் 4 ஜுன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

12 comments:

சிவமுருகன் said...
//எல்லாவிதமான அரச நற்குணங்கள் இருந்தும் பிறன் மனையை நாடிய இராவணனை போன்ற காமத்தால் நிலைதடுமாறியவர்களால் எனக்கு எந்த துயரமும் நிகழாது என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது.//

அழகான விளக்கம்.

June 04, 2006 9:46 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன்.

June 05, 2006 3:46 AM
--

johan -paris said...
அன்புக் குமரனுக்கு!
இனிய ,எளிய விளக்கம்; மேலும்
வான்மதியா?வாண்மதியா?
பிரிக்கும் போது ;வான்+மதி தானே!! வரும்
யோகன் பாரிஸ்

June 05, 2006 4:24 AM
--

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. பாராட்டிற்கு நன்றி. வான்மதி, வாண்மதி இரண்டுமே புழக்கத்தில் இருக்கின்றன. வான்மதி எனும் போது வானத்தில் மதி என்று பொருள் வரும். வாண்மதி எனும் போது வாணுதல் (வாள் + நுதல் - ஒளி பொருந்திய நெற்றி) என்பது போல் வாள் + மதி - ஒளி பொருந்திய நிலவு என்று பொருள் வரும். இந்தப் பாடலில் வாண்மதி என்றே வந்துள்ளது.

June 05, 2006 4:30 AM
--

Merkondar said...
இந்திரனைவிடவா இலங்கை வேந்தன் மோசமானவன்.

June 05, 2006 5:55 AM
---

குமரன் (Kumaran) said...
உண்மை தான் என்னார் ஐயா. இந்திரனே சாலும் கரி என்று வள்ளுவர் இந்திரனை எடுத்துக்காட்டியிருக்கிறார். சம்பந்தர் இராவணனைச் சொல்லியிருக்கிறார்.

June 05, 2006 8:03 AM
---

SK said...
சம்பந்தரின் தேவாரப் பதிகங்களில், எட்டாவது பாடலில் இராவணனைக் குறிப்பிட்டிருப்பார்.
அப்படியே, ஒன்பதாம் பாடலில், மலரானுக்கும், மாலுக்கும் மேன்மை கொண்டவராகச் சிவனைச் சித்தரிப்பார்.
பத்தாம் பாடலில், சமணர்களையும், பௌத்தர்களையும் சாடியிருப்பார்.

பத்துப் பாடல்கள் கொண்டதுதான் பதிகம்.
ஆனால், சம்பந்தரின் பதிகங்களின் இறுதியில், அந்தப் பதிகத்தைப் பாடிய தன்னைப் பற்றியும், தமிழின் சிறப்பையும்,பதிகத்தைப் பாடுவதால் அகும் பயனையும் கூறியிருப்பார். இந்தப் பதினோராம் பாடலைத் 'திருக்கடைக்காப்பு' எனக் குறிப்பிடுவார்கள்.

சம்பந்தர் பதிகங்கள் அனைத்திலும் இந்த ஒழுங்கு முறையைக் காணலாம்.

இப்போது புரிந்திருக்கும் இராவணனை ஏன் சொன்னார் என்று!

June 05, 2006 10:31 AM
--

குமரன் (Kumaran) said...
அட ஆமாம் எஸ்.கே. ஏற்கனவே வேறெங்கோ இதைப் பத்திப் படிச்சிருக்கேன். ஆனா நினைவில நிறுத்தலை. நீங்க சொன்ன பிறகு போய் ஒரு நாலைஞ்சு பதிகம் பாத்தேன். நீங்க சொன்ன மாதிரி 8வது பாடல்ல இலங்கையர் கோன் வர்றார்; 9வது பாடல்ல மலரோனும் மாலும் வர்றாங்க; 10வது பாடல்ல சமண சாக்கியர்கள் வர்றாங்க. பதினோராம் பாடலைப் பற்றித் தெரியும்; ஆழ்வார்கள் பாசுரங்களும் அந்த வகையில் தானே அமைந்திருக்கின்றன. ஆனால் 8,9,10 பாடல்கள் இந்த வகையில் சம்பந்தர் தேவாரத்தில் அமைவதை இதுவரை கவனிக்கவில்லை. இப்போது புரிகிறது ஏன் இராவணனைச் சொன்னார் என்று. மிக்க நன்றி எஸ்.கே.

June 05, 2006 10:48 AM
--

SK said...
//இந்திரனைவிடவா இலங்கை வேந்தன் மோசமானவன்.//


என்ன இருந்தாலும் இந்திரன், சம்பந்தர் ஊர்க்காரராயிற்றே!!

அவனை வசை பாடுவாரா!!!!

June 05, 2006 10:57 AM
--

குமரன் (Kumaran) said...
இந்திரன் சம்பந்தர் ஊர்க்காரரா? கொஞ்சம் விவரமா சொல்லுங்க எஸ்.கே.

சீர்காழியை பிரமாபுரம்ன்னு சம்பந்தர் பாடுனதால தெரியும். ஆனால் இந்திரம் எப்படி சம்பந்தர் ஊர்க்காரரானார்?

June 05, 2006 1:47 PM
--

SK said...
கொஞ்சம் உங்கள் பின்னூட்டங்களை அதிகரிக்க வேண்டாமா?

அதனால்தான் அவ்வாறு போட்டேன்!

கந்தபுராணம் படித்தால் தெரியும்!

சூரனுக்குப் பயந்து,
இந்திரன்,
இந்திராணியுடன்,
வந்து,
ஒளிந்து,
பயந்து,
தங்கியிருந்த ஊர்........
சீர்காழி!

சம்பந்தர் ஊரும்.......
சீர்காழி!!

அதனாற்றான் அப்படி சொன்னேன்!

June 05, 2006 7:08 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. சின்ன வயசுல கந்த புராணம் படிச்சது. அதனால இந்த சின்ன விவரத்துல மனசுல வாங்கிக்கலை போல இருக்கு. இந்திரனும் இந்திராணியும் மறைஞ்சு வாழ்ந்தது சீர்காழியிலேயா! விவரம் சொன்னதற்கு நன்றி.

June 06, 2006 3:46 AM

Kavinaya said...

விளக்கமும் பின்னூட்டங்களும் நன்று. நன்றி, குமரா!

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.