Monday, June 02, 2008

தீக்குறளை சென்றோதோம்!

'என்ன? என்ன சொல்றீங்கப்பூ? குறளை ஓத மாட்டீங்களா? உணர்ந்து தான் சொல்றீங்களா? இல்லை உளர்றீங்களா? திருக்குறள் உலகப் பொதுமறைங்கோ. எல்லா காலத்துக்கும் எல்லா நாட்டுக்கும் பொதுவான பொத்தகமுங்கோ. அத ஓதாட்டி உங்களுக்குத் தான் நட்டமுங்கோ. அம்புட்டுதான் சொல்லமுடியும்.'

'ஐயா. நான் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க. தீக்குறளை சென்று ஓதோம்ன்னு தானே சொன்னேன். திருக்குறளை ஓதமாட்டேன்னா சொன்னேன்?'.

'என்னப்பூ இது? சொல்றதையும் சொல்லிப்புட்டு அப்புறம் இல்லைங்கறீங்க. அதென்ன திருக்குறளை தீக்குறள்ன்னு சொல்றது? இது நல்லதுக்கில்லைப்பூ. சொல்லிப்புட்டேன்'

'ஐயா. தீக்குறளைன்னா திருக்குறளைன்னு பொருள் கிடையாதுங்கையா. குறள்ன்னா குறுகியது; சின்னதுன்னு பொருளுங்கையா. சின்னதா இருக்கும் எல்லாத்தையுமே குறள்ன்னு சொல்லலாமையா. வாமன அவதாரத்தையும் குறள்ன்னு சொல்லுவாங்கையா தமிழ்ல. புள்ளையாரப்பனையும் அப்படி சொல்றது உண்டுங்கையா. திருக்குறள் முழுக்க சின்ன சின்ன குறள் வெண்பா வகையில பாக்கள் இருக்கிறதால அதுக்கு திருக்குறள்ன்னு பெயருங்கையா. இதெல்லாம் உங்களுக்கே தெரியுமையா'

'ஆமாம். தெரியுந்தான்'

'நான் சொன்னது குறளைங்கறதுங்க ஐயா. குறளை சொல்றதுன்னா புறம் பேசறதுங்கையா. குறளை சென்று ஓதோம்ன்னா எங்கேயும் போய் கோள் சொல்ல மாட்டொம்; புறம் பேசமாட்டோம்ன்னு பொருளுங்கையா. அதை நீங்க தப்பா திருக்குறளைன்னு புரிஞ்சிக்கிட்டிங்கையா. இலக்கண முறைப்படி சொன்னா தீக்குறளைச் சென்றோதோம் அப்படின்னு இருந்தா நீங்க சொன்ன பொருளை எடுத்துக்கலாமுங்கையா. ஆனா ச் மிகாம தீக்குறளை சென்றோதோம்ன்னு இருக்குங்கையா. தீக்குறளையைச் சென்றோதோம்ங்கறதுல யை அப்படிங்கற இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கி வந்த (மறைந்து வந்த) இரண்டாம் வேற்றுமைத் தொகைங்கையா இது. இப்ப சொல்லுங்க நான் தப்பா ஏதாவது சொன்னேனா?'

'இல்லைப்பூ. சரியாத் தான் சொல்லியிருக்கீங்க. நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்'.

'ஐயா. இது கூட நான் சொல்லலைங்கையா. நம்ம காமராஜர் மாவட்டத்து பொண்ணு கோதை சொன்னது தாங்கையா'.

'கோதை சொன்னதா? என்ன சொல்லியிருக்கு அந்தப் புள்ளை?'

'ஐயா. அதை இங்கன விளக்கக் கூடாதுங்கையா. அது திருப்பாவை விளக்கமெல்லாம் 'கோதை தமிழ்' வலைப்பதிவுல வர்றப்ப படிச்சுக்கலாம்'

'ஆமாம். நீங்க எழுதுற வேகத்துக்கு அதுக்கு ரொம்ப... நாளாயிடுமே.'

10 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 02 பிப்ரவரி 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

28 கருத்துக்கள்:

குமரன் (Kumaran) said...
ஏலாதி என்னும் பழந்தமிழ் நூலில் வரும் ஒரு சொற்றொடர் 'பொய்யே குறளை கடுஞ்சொல் பயனிலசொல் நான்கும்' - பொய், புறங்கூறுதல், கடுஞ்சொல், பயனில்லாத சொல் இவை நான்கும் (ஒரே வகையைச் சேர்ந்தவை).

February 02, 2007 1:39 PM
--

குமரன் (Kumaran) said...
'ஓம் குறளை களைபவளே போற்றி'

என்று ஞானவெட்டியான் ஐயாவின் 'அம்மை ஆயிரம்' என்ற வலைப்பூவில் இருக்கிறது. இங்கே இது 'கோள் சொல்லும் குணத்தை நீக்குபவளே' என்ற பொருளில் அமைகிறது.

http://ammaiaayiram.blogspot.com/2005_12_01_ammaiaayiram_archive.html

February 02, 2007 1:47 PM
--

வெற்றி said...
அடடா! குமரன் நீங்களுமா?
நீங்கள் இப்பிடி நகைச்சுவையாக எழுதுவீர்கள் என்று இதுவரை அறிந்திருக்கவில்லை!
குமரன், உண்மையில் நன்றாக இருக்கிறது. இப்படிச் சொன்னால்தான் நம்ம சனங்களும் விரும்பிப் படிப்பார்கள் போலும். போன வாரம் இராகவனும் இப்படிக் கலக்கியிருந்தார். சொல் ஒரு சொல் தளம் மெருகேறுது.

/* குறளை சொல்றதுன்னா புறம் பேசறதுங்கையா.*/

குமரன், நல்லதொரு சொல். எங்கள் ஊரில் இச் சொல் புழக்கத்தில் உண்டு.
அறளை, குறளை, சூது, வாது இப்படியான சொற்கள் எனது ஊரில் எம் சுற்றாடலில் புழக்கத்தில் உண்டு.

எடுத்துக்காட்டாக, "அவனுக்கு அறளை பேந்திருக்கு", "குறளை பேந்தவன்" "சூதுவாது தெரியாதவன்"
என்ற சொல்லாடல்கள் எமது ஊரில் அன்றாட புழக்கத்தில் உள்ள சொற்கள்.

அறளை பேருதல், குறளை பேருதல் என்ற சொற்கள் ஏதோ கூடாத குணங்களை உடையவர்களைச் சொல்லும் சொற்கள் எனத் தெரியும். ஆனால் அச் சொற்களின் பொருள் தெரிந்திருக்கவில்லை.

குமரன், இப்போது உங்கள் புண்ணியத்தில் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

குமரன், அறளை என்ற சொல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்ன பொருள்? தயவு செய்து தெரிஞ்சால் சொல்லுங்கள். என் யூகத்தின் படி, அறளை என்றால் எரிச்சல் குணம் கொண்டவராக இருக்குமோ என ஒரு ஐயம். எதற்கும் நேரம் கிடைக்கும் போது நம்ம ஊர்ப் பெரியவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.

பதிவுக்கும், ஒரு நல்ல பழந்த் தமிழ்ச் சொல்லை அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றிகள் குமரன்.

February 02, 2007 1:52 PM
--

குமரன் (Kumaran) said...
கந்தர் சஷ்டி கவசத்தில் வரும் 'கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்' என்ற சொற்றொடர் பலருக்கும் தெரிந்திருக்கும். இங்கே குட்டிச்சாத்தானைத் தான் குறளை பேய் என்கிறார் என்பவர்கள் உண்டு. அது தவறு. இங்கே கோள் சொல்பவர்களைக் குறளைப் பேய்கள் என்கிறார் பாடல் ஆசிரியர். அப்படித் தான் அடியேனுக்குத் தோன்றுகிறது.

February 02, 2007 2:04 PM
--

சிவபாலன் said...
குமரன் சார்

நீங்க எழுத்து நடை மாற்றி இருந்தாலும் படிக்க சுவாரசியமாக இருந்தது.

இதை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி!

நல்ல பதிவு!

நன்றி!

February 02, 2007 2:29 PM
--

SK said...
நீங்கள் சொன்னதும் சரிதான் ஒரு விதத்தில் திரு. வெற்றி.

'அறளை' என்றால் தொணதொணப்பு, தொந்தரவு எனப் பொருள்.

வயதான காலத்தில் சில முதியவர்கள், உடம்பு படுத்தும் பாட்டைத் தாங்க முடியாமல், எல்லாரிடமும் எரிந்து, எரிந்து விழுவார்களே, போறவன் வருபவன் எல்லாரையும் இழுத்து வைத்து, ஒரு பிலாக்கணம் படிப்பார்களே அதுதான் அறளை.

அறற்றுவது அறளை!

நல்ல பதிவு, குமரன்!

February 02, 2007 2:59 PM
--

வெட்டிப்பயல் said...
நல்ல பதிவு குமரன்...

வித்யாசமா எழுதியிருந்ததால படிக்க ரொம்ப நல்லா இருந்துச்சு... இதை போல் மேலும் பல பதிவுகளை எதிர் பார்க்கிறோம்!!!

February 02, 2007 4:20 PM
--

குமரன் (Kumaran) said...
வெற்றி, முயன்று எழுதினால் இப்படி எழுத முடிவதில்லை. சில நேரம் நகைச்சுவையாக எழுதியிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு நான் ஏதாவது எழுத அது மற்றவர்களுக்கு அப்படி தோன்றாமலும் இருந்திருக்கிறது. இந்த குறளை என்பதை குறள்+ஐ என்று பிரித்துப் பொருள் கொண்டு திருப்பாவை திருக்குறளைப் பழிக்கிறது என்று தவறான பிரச்சாரம் போன நூற்றாண்டிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. அந்த சர்ச்சையை வைத்து இந்தப் பதிவை எழுதும் போது இந்த நடையில் எழுதுவது இயல்பாக வந்திருக்கிறது. நகைச்சுவையாக எழுத முயலவில்லை.

இராகவன் எழுதியதற்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது வெற்றி. அவருடைய நடையே தனி. எட்டுவது முடவன் கொம்புத்தேனுக்குப் பிடிவாதம் பிடித்தாற்போலத்தான். :-)

அறளை என்பதை இதற்கு முன் படித்திருக்கிறேன். ஆனால் பொருள் மனதில் நிற்கவில்லை. அதனால் அகராதியைப் பார்க்கலாம் என்றிருந்தேன். அதற்குள் எஸ்.கே. வந்து பொருள் கூறி என் வேலையைக் குறைத்துவிட்டார். :-) உங்கள் ஊகம் சரியாகத் தான் இருந்திருக்கிறது பாருங்கள். என் மகளும் இப்படித் தான் சொற்களையும் அவற்றின் பொருளினையும் கற்றுக் கொள்கிறாள். எந்த இடத்தின் எந்த புதுச் சொல் வருகிறது என்று பார்க்கிறாள். அதே போன்ற பொருளில் புழங்குகிறாள். தவறான இடம் என்றால் நாம் நேர் செய்கிறோம். சரியான இடம் என்றால் அவள் சொல்வதை ஏற்றுக் கொண்டு பேசிக் கொண்டே செல்கிறோம். அப்படித் தான் அவள் புதிய சொற்களைக் கற்கிறாள். நாமும் அப்படித் தான் கற்றிருப்போம் போலிருக்கிறது.

பதிவைப் படித்துவிட்டு நல்ல பின்னூட்டமாக இட்டதற்கு நன்றி வெற்றி.

February 03, 2007 6:08 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.

February 03, 2007 11:11 PM
--

குமரன் (Kumaran) said...
அறளைக்குப் பொருள் சொன்னதற்கு நன்றி எஸ்.கே.

February 03, 2007 11:47 PM
--

குமரன் (Kumaran) said...
பாலாஜி. வெற்றிக்குச் சொன்ன பதில் தான் உங்களுக்கும். கூடலிலும் கோதை தமிழிலும் சில பதிவுகள் இப்படி அமைந்ததுண்டு. தானாக அமையட்டும். முயன்றால் குறைச்சித்திரமாகத் தான் முடிகிறது. தானாக அப்படி அமையும் பதிவுகளை நீங்கள் கட்டாயம் படிப்பீர்கள் என்று தெரியும். நன்றிகள் பாலாஜி.

February 03, 2007 11:49 PM
--

ennataa vambu said...
ஆமாம் குமரன்,
வழக்கொழிந்துபட்ட சொற்களைக் கற்க ஒவ்வொருவரிடமும் ஒரு "நிகண்டு அல்லது அகராதி" கையில் இருத்தல் வேண்டும். புது சொற்களைச் சந்திக்கும் நேரத்தே அதன் பொருளை உணர அகராதியை நாடவேண்டும். வட்டார வழக்குகளில் நிறையச் சொற்கள் ஒளிந்துள்ளன.

February 04, 2007 8:17 PM
--

குமரன் (Kumaran) said...
உண்மை ஞானவெட்டியான் ஐயா. வட்டார வழக்குகளில் பல பழந்தமிழ்ச்சொற்கள் மறைந்துள்ளதை இராம.கி. ஐயாவும் பலமுறை எடுத்துக் காட்டி எழுதியிருக்கிறார்.

February 04, 2007 8:58 PM
--

பச்சப்புள்ள said...
எனக்கு தான் சும்மாவே பேச வராதே, பின்ன எப்படி தீக்குறளை பேசாமா இருக்கறது.

February 04, 2007 9:06 PM
--

வல்லிசிம்ஹன் said...
தீக்குறளை,
இத்தனை இயல்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
எத்தனை தரம் இந்தப் பாவைப் பாடலைப் பாடும்போது நானும் என் தோழிகளும் அஞ்சி அஞ்சிப் பாடி இருக்கிறொம் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
நீங்க ஒரு 50வருஷம் முன்னாலேயே சொல்லி இருக்கலாம்.:-) நன்றி குமரன்.

February 05, 2007 5:44 AM
--

johan-paris said...
குமரன்!
ஈழக் கிராமப் புறங்களில்; "மனிசனுக்கு இப்ப அறளை பெயர்ந்திட்டுது" எனச் சொல்லும் பழக்கம் உண்டு.
இதை பிரபா,சின்னக்குட்டியர்,மலைநாடர்,வெற்றி;வசந்தன் கேட்டிருக்கலாம். இதை என்ன ? கருத்தில் கூறுவார்களேனில்; மறதி..எனும் பொருள்படவே! பாவிப்பார்கள்.
அதாவது, "அறளை பெயர்ந்து; வச்ச இடம் தெரியாமல் மனிசன் தேடுது"...; உந்த அறளை பெயர்ந்ததுகளுக்கு எத்தனை தரம் சொல்லுவது"
குறளையென்பது நேரடி வழக்கில்லாவிடிலும்; "குறளி" எனும் சொல் வழக்குண்டு. அவன் குறளிக் கதைகாரன்; அவன்ர கதையை நம்புறியோ?" எனும் போது பொய்;சூது;கோள் கதைப்பவன். எனும்
கருத்துடனே கூறுகிறார்கள்.
தீக் குறளை என்னும் போது இந்தத் "தீ" என்பது கடுமையைக் குறிக்கிறதோ??
யாராவது விளக்குங்கள்!
யோகன் பாரிஸ்

February 05, 2007 7:40 AM
--

இலவசக்கொத்தனார் said...
//இலக்கண முறைப்படி சொன்னா தீக்குறளைச் சென்றோதோம் அப்படின்னு இருந்தா நீங்க சொன்ன பொருளை எடுத்துக்கலாமுங்கையா. ஆனா ச் மிகாம தீக்குறளை சென்றோதோம்ன்னு இருக்குங்கையா.//

ஒரு 'ச்' விட்டுப் போச்சுன்னா இவ்வளவு வித்தியாசமா? இதெல்லாம் தெரியாம நாமளும் எழுதிக்கிட்டு இருக்கோம். எம்புட்டு விவரம் இருக்கு சாமியோவ்!

February 05, 2007 2:18 PM
--

குமரன் (Kumaran) said...
இராகவனின் திருப்பாவை விளக்கப் பதிவிலிருந்து...

//சொன்னால் தீமையொன்றை மட்டுமே பயக்கும் குறளி சொல்ல மாட்டோம். (தீக்குறளைச் சென்றோதோம் என்பதைப் பலர் திருக்குறள் என்று தவறாகப் பொருள் கொள்கின்றனர். அது தவறு. குறளி சொல்வது என்று தெற்கு வழக்கு. இன்றைக்குள்ள வழக்கில் அது கோள் சொல்வது. கோள் மூட்டுவது மிகக் கொடிய பாவம். அதை என்றைக்கும் செய்யக்கூடாது. ஆண்டாளின் பாடல்களைப் படித்துப் பொருள் கொள்ளும் பொழுது தென்பாண்டி வட்டார வழக்கு தெரியாமல் படித்துப் பொருள் கொள்வது முறையாகாது. தெரியாதவிடத்து தெரிந்தவர்களிடம் கேட்டுப் பொருள் பெற வேண்டும்.)
//

http://iniyathu.blogspot.com/2005/12/blog-post_16.html

February 05, 2007 4:04 PM
--

கோவி.கண்ணன் said...
//'நான் சொன்னது குறளைங்கறதுங்க ஐயா. குறளை சொல்றதுன்னா புறம் பேசறதுங்கையா. குறளை சென்று ஓதோம்ன்னா எங்கேயும் போய் கோள் சொல்ல மாட்டொம்; //

குமரன்,
பழைய சொல் புதிதாக தெரிந்து கொண்டேன்.

குரளை(த்தான்) சொல்கிறீர்களோ என நினைத்தேன். குரளை சொல்லக் கூடாது என்கிறீர்கள்.
:)))))))))

February 05, 2007 6:47 PM
--

G.Ragavan said...
இது ரொம்ப நல்லாயிருக்குதுங்க. எனக்குத் தெரிஞ்ச நான் சொல்ல முடிஞ்சதெல்லாம் ஏற்கனவே சொல்லீட்டு....நான் சொன்னதையும் சொல்லீட்டு எனக்கு வேலையே வைக்காம இருந்தா எப்படிப் பின்னூட்டம் போடுறதாம்?

குறளை என்பது குறளி என்று மருவி இப்பொழுது கொரளியாகியிருக்கிறது. இதற்கும் திருக்குறளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

தீங்குறளை என்றால் இனிமையானது. தீக்குறளை என்றால் தீயது.

// இராகவன் எழுதியதற்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது வெற்றி. அவருடைய நடையே தனி. எட்டுவது முடவன் கொம்புத்தேனுக்குப் பிடிவாதம் பிடித்தாற்போலத்தான். :-) //

இது எதுக்குங்க. நானே என்னவோ தமிழைக் கண்டுபிடிச்சி எழுதுறாப்புல சொல்றீங்களே. நான் கிளிப்பிள்ளை. சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை.

// வல்லிசிம்ஹன் said...
தீக்குறளை,
இத்தனை இயல்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
எத்தனை தரம் இந்தப் பாவைப் பாடலைப் பாடும்போது நானும் என் தோழிகளும் அஞ்சி அஞ்சிப் பாடி இருக்கிறொம் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
நீங்க ஒரு 50வருஷம் முன்னாலேயே சொல்லி இருக்கலாம்.:-) //

என்னது அம்பது வருசத்துக்கு முன்னாடியா...அப்ப எங்கப்பாரு ரொம்பச் சின்னப் பிள்ளைங்க. :-))))

February 06, 2007 6:03 AM
---

குமரன் (Kumaran) said...
பேசவே வராதவங்க எப்படி குறளை பேசமுடியும்ன்னு தெரியலையே பச்சபுள்ள? :-)

March 11, 2008 7:23 AM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் வல்லியம்மா. திருக்குறளைச் சென்றோதோம்ன்னு இருக்கிற மாதிரி தோன்றினா அஞ்சி அஞ்சித் தான் பாட வேண்டியிருந்திருக்கும். 50 வருடத்திற்கு முன்னாலேயே சொல்லியிருக்கலாம் தான். என் வயசை என் ப்ரொபைல்ல பார்த்தீங்க தானே. :-)

March 11, 2008 7:25 AM
---

குமரன் (Kumaran) said...
அருமையாக 'அறளை'யைப் பற்றியும் 'குறளி'யைப் பற்றியும் விளக்கினீர்கள் யோகன் ஐயா. ஆமாம். குறளிச் சொல்லுதல் மிகவும் தீமையைத் தருவது - எல்லோருக்கும் - என்பதால் தீக்குறளை என்றார் போலும் கோதை நாச்சியார்.

March 11, 2008 7:27 AM
--

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். இந்த விவரம் எல்லாம் இந்த 'தீக்குறளை சென்றோதோம்' என்ற சொற்றொடரைப் பற்றிப் படிக்கும் போது தான் தெரிந்தது. இந்த விவரம் எல்லாம் தெரியாமல் தான் நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன். :-)

March 11, 2008 7:28 AM
--

குமரன் (Kumaran) said...
கோவி. கண்ணன்.

குரளை என்றொரு சொல் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்று புரியவில்லை. :-)

March 11, 2008 7:30 AM
--

குமரன் (Kumaran) said...
நல்லா சொன்னீங்க இராகவன். தீங்குறள், தீங்குரல் எல்லாம் இனிமையைச் சொல்கிறது. தீக்குறளை தீமையைச் சொல்கிறது.

மீண்டும் சொல்கிறேன் இராகவன். நான் எழுதுறதெல்லாம் 'கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அது போல்...' வகை தான். :-)

March 11, 2008 7:32 AM
--

அறிவன் /#11802717200764379909/ said...
பலருக்கும் அறியாத,சட்டென்று தெரியாத செய்தி..
ஆனால் சுவாரசியமானது.
'குறளை' என்பதற்கு கோள்சொலல்,வறுமை,நிந்தனை போன்ற பொருளும் உண்டு.

March 11, 2008 7:42 AM
--

குமரன் (Kumaran) said...
வாங்க அறிவன். குறளை என்பதற்கு கோள் சொல்லுதல், நிந்தனை என்ற பொருட்கள் இருப்பது தெரியும். வறுமை என்றொரு பொருளும் இருப்பதை அறிந்து கொண்டேன். நன்றிகள்.

March 11, 2008 8:02 AM

Kavinaya said...

குறளைப் பேய்களைப் பத்தி இப்பதான் சரியாப் புரிஞ்சது. நன்றி குமரா!

//சில நேரம் நகைச்சுவையாக எழுதியிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு நான் ஏதாவது எழுத அது மற்றவர்களுக்கு அப்படி தோன்றாமலும் இருந்திருக்கிறது. //

:))

R.DEVARAJAN said...

குமரன் சார்,
வணக்கம். "கண்ண நீர் கைகளால் இறைக்கும்" எனும் தொடரில் 'கண்ணநீர்'
என்பது தொகைச் சொல்லா ?
ராம். தேவராஜன்

R.DEVARAJAN said...

நண்பர்களே,
தமிழில் காணப்படும் வட சொற்களைத் தேடிப் பிடித்து மாற்றுச்சொல்
கண்டறிய முயல்கிறார்களே ! ஏற்கெனவே இலக்கியங்களில் காணப்படும்
சொற்களை என்ன செய்வது ? அயற் புலங்களிலிருந்து இங்கு வந்துள்ள சிந்தனைகளுக்குமொரு வழி செய்தாக வேண்டுமே ? திராவிட இயக்கத்தினர்
கையாண்டுள்ள வட சொற்களை என்ன செய்யலாம் ? அவர்களுக்கு ஒரு லைசென்ஸ் கொடுத்து விடலாமா?
ராம. தேவராஜன்

R.DEVARAJAN said...

எம்மான். பெம்மான், அம்மான் என்றெல்லாம் இறைவனைச் சுட்டுகின்றனரே!!
அவை தூய தமிழ்ச் சொற்கள் தாமா? அம்மான் என்றால் தாயுடன் பிறந்தவர்
என ஆகி விடுகிறதே ? விளக்கம் தேவை.

குமரன் (Kumaran) said...

திரு. தேவராஜன். உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றாகப் பதில் சொல்கிறேன். அதற்கு முன்னர் இந்தப் பதிவில் இன்று இட்டிருக்கும் 'தமிழ்ச்சுடர்', 'சொல் ஒரு சொல் - ஏன்?' இடுகைகளைப் படித்துப் பாருங்கள். அவை சென்ற வருடம் 'சொல் ஒரு சொல்' பதிவில் எழுதப்பட்டவை. நீண்டவை. பின்னூட்டங்களும் நிறைய வந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் படித்தால் உங்கள் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம்.

ஒவ்வொரு பின்னூட்டங்களாகப் பதில் சொல்லி வருகையில் நீங்கள் இங்கே கேட்டிருக்கும் கேள்விகளுக்கும் சுருக்கமாகப் பதில் சொல்கிறேன். நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

மகிழ்ச்சி கவிநயா அக்கா. நன்றி.

குமரன் (Kumaran) said...

திரு. தேவராஜன். எனக்கு இலக்கணம் அவ்வளவாகத் தெரியாது. படிக்கும் போது சரியாகப் படிக்கவில்லை போலும். அதனால் தொகைச்சொல் என்றால் என்ன என்று சரியாகத் தெரியாது.

கண்களது நீர்; கண்களின் நீர்; கண்ணீர் என்பதே நம்மாழ்வார் பாசுரத்தில் கண்ணநீர் என்று வந்துள்ளது. அது, இன் என்னும் வேற்றுமை உருபுகள் தொக்கி வந்துள்ளதால் இது தொகைச்சொல் எனப்படும் என்றால் 'ஆமாம். இது தொகைச் சொல் தான்'. என் புரிதல் சரி தானா?

குமரன் (Kumaran) said...

தேவராஜன் ஐயா. இலக்கியங்களில் இருக்கும் வடசொற்களைப் பார்த்தால் அவை தமிழுக்கேற்ப மாற்றப்பட்டிருக்கும். கிருஷ்ணன் கிருட்டிணனாகவும் கர்ணன் கருணன்/கன்னன் என்றும் விபீஷணன் வீடணன் எனவும் மாற்றப்பட்டிருப்பார்கள். அது தமிழிலக்கண முறைப்படி அமைகிறது என்று நினைக்கிறேன்.

தமிழில் காணப்படும் வடசொற்களுக்குத் தேடிப் பிடித்து மாற்றுச்சொல் 'கண்டுபிடிக்கவில்லை'. ஏற்கனவே இருக்கின்ற, ஆனால் மக்கள் புழங்காத சொற்களைச் சொல்கிறோம். அது வடசொல் மேலிருக்கும் வெறுப்பன்று. தமிழில் இருக்கும் சொற்கள் வழக்கொழிந்து போகாமல் இருக்க ஒரு வழி.

வடசொல் என்று மட்டும் இல்லை. எந்த வேற்று மொழிச் சொல்லுக்கும் இதே.

வெளியிலிருந்து வந்த சிந்தனைகள் தமிழில் நிலை பெற வேண்டும் என்றால் வேற்றுமொழிச் சொற்களையே புழங்க வேண்டும் என்றில்லை; தமிழாக்கியும் புழங்கலாம்; அப்படிச் செய்தால் தான் அந்த வெளிச் சிந்தனை உட்சிந்தனையாகி வளம் சேர்க்கும் - தமிழுக்கும் தமிழருக்கும்.

திராவிட இயக்கத்தினர் என்று தொடங்கி கேட்டிருக்கும் இரு கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. எனக்குத் தேவையில்லாத கேள்விகள் அவை. :-)

குமரன் (Kumaran) said...

தேவராஜன் ஐயா. எவ்வித ஐயமும் இன்றி எம்மான், பெம்மான், அம்மான் மூன்றுமே தனித் தமிழ்ச் சொற்களே.

அம்மான் என்பது தாயுடன்பிறந்த மாமனை வழக்கில் குறித்தாலும் திருநாவுக்கரசரின் தேவாரத்தில் அந்தச் சொல் அம்மா என்ற பொருளில் வந்து 'தாயுமானவன்' என்ற பொருளைத் தருகிறது என்று எண்ணுகிறேன். வேறெங்கேனும் இச்சொல் இலக்கியத்தில் இறைவனைச் சுட்டுவதாக வந்துள்ளதா?