Monday, March 24, 2008

காலமெல்லாம் அவன் காதலை எண்ணி...

இந்தப் பாட்டை நான் போடுவேன் என்று எத்தனை பேர் எதிர்பார்த்தார்களோ தெரியாது. பழைய பாடல் வேண்டும் என்று சொன்னவர்களுக்காக இந்தப் பாடல். யப்பா...நாங்க பழைய பாடல் கேட்டோம்னு இவ்வளவு பழசாவா போடறதுன்னு அடிக்க வராதீங்க. இது காலத்தால் அழியாத அமரகீதம். (மன்னிச்சுக்கோங்க. தமிழ்படுத்தலை இந்தச் சொல்லை).

பக்தி மரபில் இறைவனை காதலனாகவும் நம்மை காதலியாகவும் நினைத்து வழிபடுவதும் ஒரு முறையாக இருக்கிறது. இந்த மரபு பழங்காலத்திலிருந்து பாரதியின் 'கண்ணன் என் காதலனை'த் தாண்டி இன்னும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையிலும் இந்தப் பாடல் ஒரு அருமையான பக்திக் காவியம்.



திரைப்படம்: மீரா
வெளிவந்த வருடம்: எனக்குத் தெரியவில்லை
பாடகி: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
இசையமைப்பாளர்: எஸ்.வி.வெங்கட்ராமன்
இயற்றியவர்: கல்கி
குழலில் இசைத்தவர்: சிக்கில் மாலா சந்திரசேகர்


காற்றினிலே..... வரும் கீதம்..... காற்றினிலே....

காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

துணை வண்டுடன் சோலை குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீலநிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்


அருஞ்சொற்பொருள்:
பண்ணொலி - இசையுடன் கூடிய ஒலி
மதுர - இனிமை
மோகன - மனம் மயக்கும்
கீதம் - பாடல்; இசை
தாராகணையே - தாரா என்றால் விண்மீன்கள்; தாராகணையே என்றால் விண்மீன்கள் கூட்டம்
வேய்ங்குழல் - மூங்கில் குழல்



***

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 24 மே 2006 அன்று இட்டது.

5 comments:

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 24 மே 2006 அன்று இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

37 comments:

Sivabalan said...
குமரன்

அருமையான பாடல்.

மிக்க நன்றி!!

Wednesday, May 24, 2006 2:28:00 PM

பொன்ஸ்~~Poorna said...
ரொம்ப ரொம்ப நல்ல பாட்டு குமரன்.. இன்றைக்கும் என் விருப்பப் பாட்டு.. கல்கி எழுதிய பாட்டா இது?!!

Wednesday, May 24, 2006 2:39:00 PM

குமரன் (Kumaran) said...
அருஞ்சொற்பொருளை இணைத்திருக்கிறேன். பின்னரும் எதாவது பொருள் புரியவில்லை என்றால் சொல்லுங்கள்.

Wednesday, May 24, 2006 3:17:00 PM

பொன்ஸ்~~Poorna said...
தாராகணங்கள் = என்று நினைத்தேன்.. கணைகள்?!!

Wednesday, May 24, 2006 3:32:00 PM

வெளிகண்ட நாதர் said...
ஆக எம் எஸ் சூப்புலட்சுமி பாட்டு கேட்டு இன்ப தேண் வந்தது பாயுது காதினிலே, குமரன்!

Wednesday, May 24, 2006 3:39:00 PM

மலைநாடான் said...
சர்க்கரைப் பந்தலில் தேன் மழை. குரல் வடிவம் கூடவே குழல் வடிவம். நன்றி குமரன்!

Wednesday, May 24, 2006 3:51:00 PM

மலைநாடான் said...
உண்மையாக நான் எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரமல்ல

Wednesday, May 24, 2006 3:56:00 PM

குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.

Wednesday, May 24, 2006 4:20:00 PM

குமரன் (Kumaran) said...
ஆமாம் பொன்மழையே. கல்கி எழுதியது என்று தான் அந்த இணையத்தளத்தில் போட்டிருக்கிறது. இது என்றும் நிலைக்கும் பாடல் என்பதற்கு அது உங்களுக்கும் (இளைய தலைமுறையின் ஒரே பிரதிநிதி :-) ) ரொம்ப ரொம்ப பிடித்தப் பாடலாய் இருப்பதே சான்று :-)

Wednesday, May 24, 2006 4:22:00 PM

குமரன் (Kumaran) said...
தாராகணங்கள் என்று சொன்னால் தான் விண்மீன் கூட்டங்கள் என்ற பொருள் வரும். ஆனால் பாட்டைக் கேட்டால் தாராகணையே என்று தன் பாடுகிறார். பாடல் வரிகளைப் பாட்டைக் கேட்டு எழுதுவதால் எது சரி என்று தெரியவில்லை. பாட்டின் வரிகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

தாராகணவன் என்று சொல்கிறாரோ என்று கூட தோன்றுகிறது. தாரா கணவன் என்றால் அது நிலவைக் குறிக்கும்.

Wednesday, May 24, 2006 4:24:00 PM

குமரன் (Kumaran) said...
ஆமாம் வெளிகண்டநாதர். எனக்கும் அப்படித் தான் தோன்றும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும்.

என் நண்பன் ஒருவன் இருக்கிறான். இந்தப் பாடலைக் கேட்டாலே உணர்ச்சிப் பெருக்கில் அவனுக்குக் கண்ணில் நீர் வரும். 'கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்' என்று பொருத்தமாகத் தான் பாடியிருக்கிறார்.

Wednesday, May 24, 2006 4:27:00 PM

குமரன் (Kumaran) said...
உண்மைதான் மலைநாடான். குரல் வடிவமும் குழல் வடிவமும் மிக அருமை. நானும் இவ்வளவு விரைவில் இந்தப் பாடலை இடுவேன் என்று எதிர் பார்க்கவில்லை. ஆனால் இன்று தோன்றியது. உடனே இட்டுவிட்டேன். மிக்க நன்றி.

Wednesday, May 24, 2006 4:28:00 PM

Merkondar said...
அருமையான பாடல் கல்கி எழுதியதா? பரவாயில்லையே நன்றாக இருக்கிறது காலத்தை வென்ற பாடல்

Wednesday, May 24, 2006 8:49:00 PM

manu said...
வானவெளி தனில் தாராகணங்கள் மயங்கி நின்றிடவும்!
ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றீனிலே வரும் கீதம்.
கண்கள் பனித்திடத்தான் செய்யும்.
எல்லோருடைய ஏக்கமும்
இதில் இணைகிற மாதிரி தான் கல்கி எழுதி இருக்கிறார்.
எம்.எஸ். அம்மாவும் பாடினார். மீரா படம் பார்க்கும்போது மனம் கனியாதவர் யாராவது இருக்க முடியுமா?எத்தனை பேருக்கு அம்மாவொட பாடல்கள் நிம்மதியைக் கொடுத்து இருக்கின்றன. நன்றி குமரன்.

Wednesday, May 24, 2006 8:55:00 PM

Anonymous said...
A song that touches the soul with the music and the lyrics.. truly an amarageetham ... Another song from the same movie "Brindavanathil" is also a siul gripping song..

-Ramya

Wednesday, May 24, 2006 8:56:00
PM

சிவமுருகன் said...
மிக அருமையான பாடல். கேட்கவும் படிக்கவும் அருமையாக இருக்கிறது. மேலும் இப்பாடல் என்னுடைய மாமா(தந்தை வழி) அடிக்கடி பாடுவார்.

நன்றி.

//பக்தி மரபில் இறைவனை காதலனாகவும் நம்மை காதலியாகவும் நினைத்து வழிபடுவதும் ஒரு முறையாக இருக்கிறது.//

நவபக்தியில் ஒருவித பக்தி நாயக-நாயகி பக்தி, அதை பற்றி எழுத தூண்டி விட்டீர்கள். என் அடுத்த பதிவு நவ பக்தியில் முதல் பக்தி பற்றி எழுதுகிறேன்.

Wednesday, May 24, 2006 11:21:00 PM

தி. ரா. ச.(T.R.C.) said...
காற்றினிலே வாரும் கீதம் மட்டுமல்ல, காலத்தையும் வென்ற கீதம். மக்கள் மனதிலும் கருத்தினிலும் நின்ற கீதம். திரு. ஸ்.வி. வெங்கட்ராமன் இசையில் வந்த தேனமுது. நன்றி. தி ரா ச

Thursday, May 25, 2006 12:04:00 AM

சீனு said...
//பாடகி: எம்.எஸ்.சுப்பலக்ஷ்மி (சுப்பலக்ஷ்மியா? சுப்புலக்ஷ்மியா?)
//
சுப்புலக்ஷ்மி

Thursday, May 25, 2006 5:38:00 AM

குமரன் (Kumaran) said...
ஆமாம் என்னார் ஐயா. காலத்தை வென்ற பாடல் இது.

Thursday, May 25, 2006 6:00:00 AM

குமரன் (Kumaran) said...
மனு, நீங்கள் சொன்ன படி பதிவிலும் பாடலைச் சரி செய்துவிட்டேன். மிக்க நன்றி.

Thursday, May 25, 2006 6:06:00 AM

குமரன் (Kumaran) said...
ஆமாம் ரம்யா. மீரா படத்தில் எல்லா பாடல்களும் அருமை. நீங்கள் சொல்லும் 'பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ' பாடலைக் கேட்டு பலமுறை உருகியிருக்கிறேன். 'அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்?' பாடலும் அருமை.

Thursday, May 25, 2006 6:08:00 AM

குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன். உங்கள் நவவித பக்தி முகவுரை பதிவைப் படித்துப் பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.

Thursday, May 25, 2006 6:08:00 AM

குமரன் (Kumaran) said...
நன்றி தி.ரா.ச. இசையமைப்பாளர் பெயரைச் சொன்னதற்கும் நன்றி. பதிவில் இசையமைப்பாளரின் பெயரை இட்டுவிட்டேன்.

Thursday, May 25, 2006 6:09:00 AM

குமரன் (Kumaran) said...
நன்றி சீனு. பதிவில் அந்தக் கேள்வியை எடுத்துவிட்டேன்.

Thursday, May 25, 2006 6:10:00 AM

lakshmi said...
arumai!arumai!pazahaiya paadalai ettadharku nanri,nanri!!!

Thursday, May 25, 2006 8:17:00 AM

SK said...
கண் சிமிட்டும் விண்மீன்கள் கூட, சிமிட்டலை மறந்து தயங்கி நிற்பதையே கவிஞர் அவ்வாறு அழகுபடச் சொல்லுகிறார்.

வேதநெறியில், இந்த விண்மீன்கள் எல்லாம் தேவரும், முனிவரும் மற்ற நல்லோருமே என வருகிறது!

அவ்வண்ணம், அவர்கள் எல்லாம், அங்கிருந்து நமக்கு அருள் பாலிப்பதாகவும் ஒரு நம்பிக்கை.

'லக்கி ஸ்டார்' எனச் சொல்லுவோமே! அதுபோல!

அவர்கள் எல்லாம், தம் வேலையையும் மறந்து, இந்த வேய்ங்குழல் கானத்தைக் கேட்டு, தயங்கி, மயங்கி நிற்கிறார்கள் எனவும் கொள்ளலாம்!

Thursday, May 25, 2006 9:37:00 AM

குமரன் (Kumaran) said...
நன்றி லக்ஷ்மி.

Thursday, May 25, 2006 12:14:00 PM

குமரன் (Kumaran) said...
அருமையான பொருள் சொன்னீர்கள் எஸ்.கே.

Thursday, May 25, 2006 12:15:00 PM

தேசாந்திரி said...
மிக நல்ல பாடல். பதிப்பித்தற்கு நன்றி குமரன்.

Thursday, May 25, 2006 12:48:00 PM

johan-paris said...
எம்.எஸ் எஸ் அம்மா ;மதுரை மீனாட்சியின் இசைவடிவம்;.நிறைகுடம் தழும்பாது என்பதற்கு உதாரணம்.; இந்தியப் பெண்மையின் இலக்கணம். எம்.எஸ்.எஸ் அம்மாவை; நினைவூட்டும் குரல்; இசை;பொருள்;யாவும் ஒருங்கே சிறந்த அமைந்த; என்றும் கேட்க இனிக்கும் பாடல்.
விரைவில் "குறையொன்றுமில்லை" எதிர்பார்க்கிறேன்.
யோகன் -பாரிஸ்

Thursday, May 25, 2006 4:29:00 PM

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. குறையொன்றுமில்லை பாடலை ஏற்கனவே எழுதியாயிற்று. ஆனால் பாடல் வடிவாய் இன்னும் கொடுக்கவில்லை. விளக்கம் மட்டும் எழுதியிருக்கிறேன் முன்பு. அதன் சுட்டி

http://koodal1.blogspot.com/2005/10/blog-post_15.html

Thursday, May 25, 2006 4:33:00 PM

வல்லிசிம்ஹன் said...
நன்றி குமரன்.மனசைப் பிழியும் கீதம்.எங்கள் வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும் குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார வைக்க உபயோகித்த பாடல்கள் இவை.

Thursday, May 25, 2006 7:16:00 PM

G.Ragavan said...
பழைய பாடலானாலும் மிகவும் இனிய பாடல். பாடலும் இசையும் குரலும் இணைந்து இயைந்த பாடல் இது.

பாலா மே பைராகனு போலியே என்று ஒரு மீரா பஜன் உண்டு. அந்த பைராகனுவில் இருக்கும் கனுவும் இந்தத் தாராகனுவும் ஒன்றா வெவ்வேறா?

Friday, May 26, 2006 1:01:00 AM

குமரன் (Kumaran) said...
நன்றி வல்லி. உங்கள் குழந்தைகள் இந்தப் பாடலைக் கேட்டால் ஒரே இடத்தில் உட்கார்ந்தார்களா? ரொம்ப நல்லது. என் பொண்ணும் இருக்காளே. இந்தப் பாடலைக் கேட்டால், அப்பாப் பாட்டுங்கறா. டைலமோ டைலமோ கேட்டா அம்மாப்பாட்டுன்னு சொல்லி ஆடிக்கிட்டு இருக்கறா. குத்துப் பாட்டுங்க தான் பிடிக்குது. :-)

Friday, May 26, 2006 1:44:00 PM

குமரன் (Kumaran) said...
ஆமாம் இராகவன். எல்லாமே இயைந்து வரும் நல்ல பாடல் தான் இது. நீங்கள் சொல்லும் மீரா பஜன் பாடலைக் கேட்டதில்லையே. அதனால் தெரியவில்லை.

Friday, May 26, 2006 1:45:00 PM

மதுமிதா said...
எனக்கு பிடித்த பாடல் குமரன்

///நினைவழிக்கும் ///
அல்லது
நினைவளிக்கும்

என்று பலமுறை தடுமாறியிருக்கிறேன்.

///துணை வண்டுடன் சோலை குயிலும்
மனம் குவிந்திடவும்///
இதை ஒருமுறை சரிபாருங்கள் குமரன்

சுனை வண்டுடன்...
மனம் ...

என வருமா பாருங்கள்

//வானவெளிதனில் தாராகணங்கள்
தயங்கி நின்றிடவும்//
இதையும் ஒருமுறை சரிபார்த்து சொல்லுங்கள் குமரன்

எத்தனை முறை பாடினாலும்,கேட்டாலும் இனிக்கும் பாடல்

Tuesday, June 06, 2006 8:16:00 AM

குமரன் (Kumaran) said...
நன்றி மதுமிதா அக்கா. நினைவழிக்கும் என்று பாடுகிறாரா நினைவளிக்கும் என்று பாடுகிறாரா என்று பலுக்கலை வைத்துச் சொல்லமுடியவில்லை.

சுனை வண்டுடன் என்று தான் பாடுகிறார் போலும்.

அது அந்த அடியில் வரும் எதுகை மோனையோடும் பொருந்துகிறது.

சுனை வண்டுடன் சோலை மலரும் - சு, சோ
மனம் குவிந்திடவும்
வான வெளி தனில் - சுனை, மனம், வான

அதனால் அந்த மாற்றததைப் பதிவிலும் செய்துவிட்டேன்.

தாராகணங்களா தாராகணைகளா என்ற குழப்பம் இன்னும் இருக்கிறது.

Tuesday, June 06, 2006 11:17:00 PM

மாயன் said...

அமைதியான விடியற்காலை நேரங்களிலும், காரில் போகும் போதும் நான் விரும்பி கேட்கும் சில பாடல்களில் இதுவும் ஒன்று....

எனக்கு எப்போதும் எதையோ உணர்த்தும் வரிகள் இவை...

"காலமெல்லாம்.... காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம்..."

இதை ஒரு Fact-ஆகவும் எடுத்து கொள்ளலாம்.. அல்லது மீராவின் உள்ளக்கிடக்கையாகவும் (Desire
அல்ல... Aspiration) பொருள் கொள்ளலாம்... அற்புதமான வரிகள்....

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

குமரன் (Kumaran) said...

ரொம்ப சரியா சொன்னீங்க மாயன். அதிகாலை நேரம் இந்தப் பாடலைக் கேட்க மிக உகந்த நேரம் தான். என்னை மிகவும் மயக்கும் வார்த்தையைத் தான் தலைப்பில் இட்டேன். அதனைப் பற்றி நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.

மிக்க நன்றி.

sury siva said...

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களைப்பற்றி எழுதப்படும் எந்த ஒரு
கட்டுரையிலும் சரி, அந்தக்கால தமிழ் சினிமாபட‌ முன்னோடியான சரித்திர‌
படங்கள் பற்றிய கட்டுரைக‌ளானாலும் சரி, இந்தப்பாடல் இடம் பெறுகிறது.

மேலும் கர்னாடக சங்கீதம் சொல்லிக் கொடுக்கும்போதும், வர்ணம், கீதம் என்னும்
வரிசையில் இந்த கீதம் எனக்குத்தெரிந்து ஒரு 40 ஆண்டுகளாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்தப் படம் வந்த வருடம் பிறந்த பெண்குழந்தைகளில் பலருக்கு
மீரா எனப்பெயர் வைக்கப்பட்டதாக என் அம்மா என்னிடம்
சொல்லியிருக்கிறாள்.

சங்கீத மும்மூர்த்திகள் மற்றும் தியாகராஜர், ஸ்வாதி திரு நாள் கீர்த்தனைகள்,
தஞ்சை நால்வர் கீர்த்தனைகளுக்கு அப்பால், ஒரு பாடல் காலத்தை வென்றது என்று சொன்னால் அது டாக்டர் எம்.எஸ்.அம்மாவின் இந்தப்பாடல் தான்.

எனது பாட்டி நான் சிறுவனாக இருந்தபோது பாடிய இந்தப்பாட்டினை,
நான் என் பேரனுக்கு தூளி ஆட்டும்போது பாடி இருக்கிறேன்.

என் பேரனும் பேத்தியும் அவர்கள் பேரக்குழந்தைகளுக்கு இப்பாடலைப் பாடுவார்கள்.

மேனகா சுப்புரத்தினம்.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com

குமரன் (Kumaran) said...

சரியாகச் சொன்னீர்கள் அம்மா. இசை வரலாறு, திரை வரலாறு என்று எந்த வரலாற்றை எழுதினாலும் இந்தப் பாடலைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். எங்கள் சொந்தக்காரர்களிலும் சில மீராக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்தப் படம் வந்த அண்மையில் பிறந்தவர்களோ என்னவோ? நீங்கள் உங்கள் பேரனுக்குத் தாலாட்டாக இந்தப் பாடலைப் பாடியிருக்கிறீர்கள். நான் என் மக்களுக்கு இந்தப் பாடலைத் தாலாட்டாகப் பாடுகிறேன். என் மகளும் அவளுடைய குழந்தைகளுக்குப் பாடுவேன் என்று சொல்கிறாள். பார்க்கலாம். புலம் பெயர்ந்த எங்கள் குடும்பத்தில் அது நடக்காமல் போனாலும் தமிழகத்தில் அது தொடர்ந்து நடக்க வாய்ப்புகள் உண்டு நீங்கள் சொன்னதைப் போல. முதல் வருகைக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் அம்மா.