Saturday, March 01, 2008

பளிங்கு மண்டபமா? கண்ணாடி மண்டபமா?

மரத்தடியில் திரு.மதுரபாரதி எழுதிய இந்தக் கட்டுரையைப் படித்தேன். பளிக்கறை மண்டபம் என்று பழைய தமிழ் இலக்கியங்களில் வருவதை சாதாரணமாக நாம் பளிங்கு மண்டபம் என்று தான் விளக்குகிறோம். ஆனால் மதுரபாரதி அவர்கள் அது பளிங்கு மண்டபம் அன்று; கண்ணாடி மண்டபம்; பளிங்கு மண்டபம் என்றால் உள்ளே இருப்பதை வெளியே இருந்து பார்த்தால் தெரியாது; வெளியில் இருந்து பார்க்கும் போது பிரதிபலிப்பு தெரியலாம்; ஆனால் கண்ணாடி மண்டபம் என்பது வெளியில் இருந்து பார்க்கும் போது உள்ளிருப்பதைக் காட்டும்; என்ற செய்திகளை எல்லாம் எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளார். அவர் சொல்லுவதைப் பார்த்தால் தமிழர்கள் சங்க காலத்திலும் அதற்குப் பின்னும் கண்ணாடி செய்வதில் மிக்க தேர்ச்சியுடன் இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது.

திரு. மதுர பாரதி போன்ற தமிழறிஞர்கள் மேலும் மேலும் இப்படிப் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினால் இன்னும் எத்தனையோ விஷயங்கள் நம் இலக்கியங்களில் இருந்து வெளிப்படும்.

இதோ அந்தக் கட்டுரை.

****

கண்ணாடி சொல்லும் கதைகள் - மதுரபாரதி

இப்போதெல்லாம் பெருநகரங்களில் இருக்கும் வானுயர மகாவணிகக் கட்டிடங்களின் முன்புறம் முழுக்கக் கண்ணாடியால் மினுங்குமாறு கட்டப்படுகிறது. ஆனால் அவை ஒருவழிப் பார்வை கொண்டவையாய் உள்ளன. வெளியே இருப்பவருக்கு உள்ளிருப்பது தெரியாது. உள்ளே மெல்லிய வெள்ளீயப் படலம் கொண்ட மிதவைக் கண்ணாடி (float glass) வகையைச் சேர்ந்தவை அவை.

ஆனால் அவ்வாறில்லாமல் நிறமற்ற கண்ணாடியாலேயே அறை கட்டியிருந்ததை தமிழ்க் காவியமான மணிமேகலை விவரிக்கிறது. மாதவியின் மகளான மணிமேகலை, புத்தமதத்தை மேற்கொண்டு, துறவறம் பூண்டு, தன் தோழி சுதமதியோடு உவவனம் என்ற மலர்வனத்துக்குச் செல்கிறாள். அவள் மீது மிகவும் காதல் கொண்டிருக்கிறான் உதயகுமாரன். இவன் கரிகாற் சோழனின் வழிவந்த அரசகுமாரன். வழியிலே எட்டிகுமாரன் என்பவன் மூலம் மணிமேகலை உவவனம் போயிருக்கிறாள் என்பதை அறிந்து, அங்கே போய் அவளைத் "தேரில் ஏற்றிக்கொண்டு வருவேன்" என்று சொல்லிப் போகிறான்.

அவன் தேரொலி கேட்டதுமே அவளைச் சுதமதி பளிக்கறை என்னும் கண்ணாடி அறையில் வைத்துத் தாழிட்டுவிடுகிறாள். அந்தப் பளிக்கறை எப்படிப்பட்டது தெரியுமா?

விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதனுள்

(மலர்வனம் புக்க காதை: 63-64)

[விளிப்பறை போகாது - அழைத்தால் அது அறைக்கு வெளியே கேட்காது; மெய் புறத்து இடூஉம் - உருவத்தை வெளியே காட்டும்; பளிக்கறை - பளிங்கு அறை, கண்ணாடி அறை]

"அந்தக் கண்ணாடியறைக்கு வெளியே இருந்து பார்ப்பவர்க்கு உருவம் தெரியும், ஆனால் ஒலி வெளியே கேளாது". எனவே இந்தப் பளிக்கறை வெறும் கவிஞனின் கற்பனையல்ல. மிகத் துல்லியமாகக் கண்ணாடியறையின் தன்மை சொல்லப்படுகிறது.

உதயகுமாரன் வந்து தேடுகிறான். பளிக்கறைக்குள் பேரழகோடு பவழத்தால் செய்த பதுமை ஒன்று இருப்பதுபோல அவனுக்குத் தெரிகிறது. பிறகு மணிமேகலைதான் அது என்று உணருகிறான். அவனுக்கு அவசரம். ஒன்றுபோலக் கண்ணாடித் தகடாக இருக்கும் அந்தச் சுவற்றில் அவனால் தாழ்ப்பாள் எங்கே இருக்கிறது என்றுகூடக் கண்டுபிடிக்கமுடியவில்லை. கையால் தடவிப்பார்க்கிறான்.
பயனில்லை.

காவி அங்கண்ணி ஆகுதல் தெளிந்து
தாழொளி மண்டபம் தன் கையிற் தடைஇச்
சூழ்வோன்

(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை: 8-10)

[குவளைமலர் போல அழகிய கண்களை உடைய மணிமேகலைதான் அது என்பதைத் தெரிந்துகொண்டு உதயகுமாரன் தன் கையாலே தடவி மண்டபத்தின் தாழ்ப்பாளைத் தேடுகிறான்.]

கண்டுபிடிக்க முடியவில்லை. அவனால் தாழ்ப்பளைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் என்ன பொருள்? தாழ்ப்பளையும் கண்ணாடிப் பொருளாலே செய்திருக்கிறார்கள் என்பதுதானே!

இதே போல சித்திரகூட மலைமீது அமைந்த ஒரு பளிக்கறையைப் பற்றி கம்பராமாயணம் சொல்கிறது. இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் சித்திரகூட மலையின் அழகை இரசித்தவாறு செல்லுகையில் இராமன் இவ்வாறு சொல்கிறான்:

அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும்
களிப்பு இல் இந்தியத்து யோகியைக் கரக்கிலன் அதுபோல்
ஒளித்து நின்றுளர் ஆயினும் உருத் தெரிகின்ற
பளிக்கு அறைச் சில பரிமுக மாக்களைப் பாராய்

(அயோத்தியா காண்டம்: சித்திரகூடப் படலம்: பாடல் 11)

"இறைவன் மாயைக்குள்ளே தன்னை ஒளித்துவைத்துக் கொண்டிருந்தாலும், புலன்களால் வரும் சுகங்களை ஒதுக்கிய ஞானியருக்கு அவன் தன்னை ஒளித்துக்கொள்வதில்லை. அதுபோலத் தம்மை ஒளித்துக் கொள்ளமுயன்றும், வெளியே உருத்தெரிகின்ற பளிக்கறைக்குள் இருக்கும் கின்னரர்களைப் பார்" என்று இராமன் சொல்கிறான். கின்னரர் என்பவர் குதிரைத் தலையும் மனித உடலும் கொண்டவர். (ஆங்கிலத்தில் centaur என்று அழைப்பதன் தலைகீழ் இணைப்பு. 'Harry Potter and the Sorcerer's Stone' பார்த்திருந்தால் அதில் குதிரை உடலும் தலைப்பகுதியில் இடுப்பிலிருந்து தொடங்கும் மனிதனுமான உருவத்தைப் பார்த்திருக்கலாம்.)

இக்காலத்தில் நாம் பளிங்கு அறை என்றால் சலவைக்கல்லால் கட்டிய அறை என்று புரிந்துகொள்கிறோம். சலவைக்கல் என்பது சுண்ணாம்புக்கல்லின் வேறொரு பவுதீக வடிவம். நாம் தூய வெள்ளைக் கற்களையே சலவைக்கல் என்றாலும், பிற தனிமங்களின் கலப்பால் வெவ்வேறு நிறமும், கோலங்களும் படிந்த சலவைக்கற்களும் உண்டு. சலவைக்கல்லால் ஆனதொரு சிம்மாசனம் 'பாண்டுகம்பளம்' என்ற பெயரில் இந்திரனிடத்து இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. 'பாண்டு' என்றால் வெண்மை. பாண்டவர்களின் தந்தைக்கு வெண்குஷ்டம் இருந்தது என்பதாலேயே அவன் பெயர் வந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் சலவைக்கல்லுக்கு ஒளி ஊடுருவும் தன்மை கிடையாது. எனவே இந்தக் கட்டுரையில் காணும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பளிங்கு என்ற சொல்லுக்கு சலவைக்கல் என்று பொருள் வராது.

ஆனால் முன்னரே நாம் பார்த்தது போல, பளிங்கு என்பது கண்ணாடி. அதிலும் ஒரு மாளிகை கட்டுமளவுக்குத் தடிமனும் உறுதியும் வாய்ந்த கண்ணாடிகளை இந்தியாவில் செய்தனர் என்பது வியப்பான செய்தி.

கண்ணாடியின் வரலாற்றைப் பார்த்தால், கிறிஸ்து பிறப்பதற்கு 5000 ஆண்டுகளுக்குமுன் தழைத்த மீசோபொடாமியா (Mesopotamia - இதை மெசபடோமியா என்று உச்சரிப்பது தவறு) நாகரிகத்தில் கண்ணாடிப் பொருட்கள் காணப்பட்டனவாம். எகிப்து நாட்டில் கி.மு. 3500-இல் புழங்கிய பளிங்குச் சாமான்கள் கிடைத்துள்ளன. ஆனால் கண்ணாடியின் வரலாற்றில் இந்தியாவின் பெயர் இல்லை. ஏன் என்பது சிந்தனைக்குரியது. இப்போதிருக்கும் பதின்ம எண் வரிசை இந்தியாவில் தோன்றியதாக இருக்க, அதை 'அராபிய எண்கள்' என்று உலகம் சொல்லிவருவதைப் போன்றது.

சரி, வெறும் கண்ணாடி மாளிகைகள்தாம் இந்தியாவில் கட்டினார்களா? இல்லை வேறு பொருள்களும் செய்யப்பட்டனவா? கம்பராமாயணம் மது அருந்துவதற்கான கண்ணாடிக் கிண்ணத்தைக் குறிப்பிடுகிறது. இரண்டு வகைக் கிண்ணங்கள் பேசப்படுகின்றன:

பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறுந் தேறல் மாந்தி

(மிதிலைக்காட்சிப் படலம்: பாடல்-14)

[படிகக் கண்ணாடி வட்டிலில் வார்த்த மணமுள்ள, பசுங்கள்ளை அருந்தி]

கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி

(உண்டாட்டுப் படலம்: பாடல் -17)

[மணி வட்டிலில் இருக்கும் கள்ளில் காணும் தன் போதையேறிய முகத்தைப் பார்த்து, வானத்தில் இருந்த நிலா மது அருந்தும் ஆசையால் வட்டிலுக்குல் விழுந்ததோ என்று எண்ணி..]

வள்ளம் என்பது உண்ண அல்லது பருகப் பயன்படும் கிண்ணம் அல்லது வட்டில். முதல் பாடல் வரியில் வரும் பளிக்கு வள்ளம் புரிகிறது. அது என்ன மணி வள்ளம்? சாதாரணமாக, மணி என்பது நவமணிகளையும், முத்தையும் குறிக்கும். இதே படலத்தில் கம்பன் மதுவருந்தத் தங்கக்கிண்ணங்களைப் பயன்படுத்தியதாகவும் சொல்கிறான். மணிகளைப் பதிப்பதானால் அதிலேதான் பதிக்கவேண்டும். அதைத் தவிர மீண்டும், மீண்டும் பல பாடல்களில் மணி வள்ளம் என்கிறானே. மணி என்பதற்குப் படிகம் (crystal) என்றும் பொருள் உண்டு. நாம் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியைப் பார்த்தால் பளிக்கறை என்பதற்கு Crystal Palace என்ற பொருளைப் பார்க்கலாம். இப்போதும் உயர்தரக் கண்ணாடியால் செய்யப்பட்ட கெட்டியான கண்ணாடிக் கோப்பை முதலியவற்றைக் 'கிரிஸ்டல்' (படிகக் கண்ணாடி) என்றே வழங்குவதை அறிந்திருக்கலாம். இவை சாதாரணக் கண்ணாடியால் செய்யப்பட்ட பாண்டங்களை விட விலை உயர்ந்தவை.

இதை நான் சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. கம்பன் இராமாயணத்தை எழுதிய காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்று பெரும்பாலும் சொல்கின்றனர். சிறுபான்மையினர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு என்கின்றனர். ஆனால் படிகக் கண்ணாடி (Crystal glass) முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. 1765-இல் என்று சரித்திரம் சொல்கிறது. அப்படியானால் இந்தியா இதனை முதலிலேயே அறிந்து, பயன்படுத்தியது என்பதைப் பிறநாட்டு வரலாற்றறிஞர் அறியவில்லை என்றுதானே பொருள்? கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த பிளைனி என்ற கிரேக்க அறிஞர் இந்தியாவில் படிகக் கண்ணாடி இருந்ததாகச் சொல்வதைப் பின்னால் பார்க்கப் போகிறோம்.

நான் முன்னரே கூறிய கி.மு. 5000-இல் கண்ணாடியால் அம்புநுனிகள், கத்திகள் ஆகியவையும் செய்யப்பட்டதாக வரலாறு சொல்கிறது. எரிமலைக் குழம்பு உறைவதால் ஒருவகைக் கருப்பான கண்ணாடி இயற்கையிலேயே கிடைக்கும். இதை 'Obsidian' (ஆப்சிடியன்) என்பார்கள். இந்தக் கண்ணாடியாலேயே ஆதிகாலக் கருவிகள் செய்யப்பட்டனவாம். ஆனால், அவ்வாறல்லாது நல்ல படிகக் கண்ணாடியாலே செய்த நுகத்தடி பொறுத்திய தங்க ஏரினால் வேள்விக்கான நிலத்தைத் திருத்தும்போதே சிவதனுசோடு, சீதாப்பிராட்டியாரை உள்ளே வைத்த பேழை கிடைத்ததாக இராமாயணம் சொல்கிறது.

இரும்பு அனைய கரு நெடுங்கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து

(கார்முகப் படலம்: பாடல்-16)

[பெரிய கருப்பான இரும்புபோன்ற கொம்புகளை உடைய காளைச் சோடியின் புடைத்த பெரும் கழுத்தில் பளிங்கினாலான நுகத்தடியைப் பிணைத்து...]

அயோவா மாநிலப் பல்கலைக் கழகம் வலையில் பதிப்பித்திருக்கும் கண்ணாடியின் வரலாற்றின் படி கி.மு. 12000-த்திலேயே நீர்க்குடுவைகள், குப்பிகள் மற்றும் ஜாடிகளிலிருந்து நீர் ஒழுகாதிருக்கும் பொருட்டுச் சீனாக் களிமண் பூச்சுப் போன்றதொரு கண்ணாடிப் படலத்தைப் பூசினர் என்று தெரியவருகிறது. இத்துடன் ஒப்பிடத்தக்க ஒன்றைக் கம்பராமாயணத்தில் பார்த்தபோது எனக்கு வியப்புத் தாங்கவில்லை.

அயோத்தி மாநகரத்தைச் சுற்றி ஒரு மதிற்சுவர் இருந்தது. அதற்கு வெளியே செயற்கையாக அமைத்த அகழி ஒன்று இருந்தது. அகழியின் வெளிப்புறச் சுவர் வெள்ளியாலே அமைக்கப்பட்டிருந்தது. உள்புறம் முழுவதும் முதலில் தங்கத் தகட்டினால் பாவப்பட்டிருந்தது. தகட்டின்மேல் முன் சொன்னதுபோலப் படிகக் கண்ணாடிப் பூச்சு ஒன்று தரப்பட்டிருந்தது.

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளிகட்டி உள்ளுறப்
பளிங்கு பொன்தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்
தளிந்த கல்தலத்தொடு அச்சலத்தினை தனித்துற
தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே

(நகரப்படலம்: பாடல்-20)

இப்படி அமைத்ததாலே இரண்டு பயன்கள். ஒன்றைக் கம்பனே சொல்கிறான். இந்த அகழி கற்பாறைகளால் ஆன கோட்டையின் அருகே இருக்கிறது. கோட்டைக்கும் அகழிக்கும் இடைப்பட்ட பகுதியிலும் கருங்கல் தளம் உள்ளது. மேலே சொன்னதுபோல் அமைத்த அகழி ஒரு செம்மையாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே செயல்படும். எனவே கோட்டையின் கற்கள் அதில் தெரியும். அப்போது தூரத்திலிருந்து வருகின்ற எதிரிப் படையினருக்கு அகழிநீர் தெரியாது. கருங்கல் தளத்தின் தொடர்ச்சியாகவே தோன்றும். "தளிந்த கல் தலத்தொடு அச் சலத்தினைத் தனித்துறத் தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே" என்கிறான் கம்பன். அகழிநீரையும், கருங்கல் தரையையும் இனம் கண்டு பிரித்துச் சொல்லத் தேவராலும் முடியாதாம்!

அடுத்த பயன் கம்பன் சொல்லாதது. அகழி செயற்கையானது. அதற்கு நீரை நிரப்பியாக வேண்டும். அவ்வாறு நிரப்பிய நீர் இரண்டு வழிகளிலே வீணாகும். ஒன்று, பூமி இழுத்துக் கொள்ளும். இரண்டாவது, சூரிய ஒளியில் ஆவியாகிப் போகும். முன்பே நீர்க்குடுவை, குப்பி ஆகியவற்றுக்குச் சொன்னதுபோல் இந்தக் வலுவான கண்ணாடிப் பூச்சு நீர் ஒழுகிப்போக முடியாது தடுக்கும். மேலும் அகழியே ஒரு கண்ணாடி போலப் பளபளப்புடன் இருப்பதால், சூரிய ஒளி பெரும்பாலும் பிரதிபலிக்கப்பட்டு, நீர் வெம்மையாவதையும் குறைக்கும். அப்போது ஆவியாதல் மட்டுப்படும்.

"பளிங்குச் சொரிவு அன்ன பாய் சுனை", அதாவது கண்ணாடியை உருக்கி ஊற்றியது போலச் சுனையின் நீர் பாய்ந்து வருகிறது, என்று பத்துப்பாட்டில் ஒன்றான கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு சொல்கிறது. இதுவும் சங்ககாலத்து நூல் என்பதைப் பார்க்கவேண்டும்.

ஆகவே இதுவரையில் நமது பழநூல்கள் எல்லாமே பளிங்கு அல்லது பளிக்கு என்பதை படிகக் கண்ணாடி (crystal glass) என்றே கொண்டிருப்பதைக் கண்டோம். அது எங்குமே முகம்பார்க்கும் கண்ணாடி (mirror) என்ற பொருளில் பயன்படுத்தப் படவில்லை. அதே சங்க காலத்தவரான திருவள்ளுவரும் இச்சொல்லை நாம் கண்ட பொருளிலேயே தான் பார்த்திருக்கவேண்டும் என்று நினைக்கும்போது, நமக்குப் பெரிதும் பழக்கமான

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (குறள் - 706)

என்ற குறளுக்கு ஒரு புதிய, தெளிவான, துல்லியமான பொருள் விளங்குகிறது. நாம் பளிங்கு என்றதும் முகம்பார்க்கும் கண்ணாடி அல்லது சலவைக்கல் என்றே தற்போது புரிந்துகொள்கிறோம். அதாவது "ஒரு பளபளப்பான சலவைக்கல்லில் அல்லது கண்ணாடியில் அதனருகே இருப்பது பிரதிபலிக்கிறது. அதேபோல ஒருவன் மனத்தில் கோபம் வருமெனின் அதை முகம் பிரதிபலிக்கும்" - இவ்வாறே நாம் புரிந்துகொள்கிறோம். இதிலே நாம் பொதுவாக இரண்டு தவறுகள் செய்கிறோம். ஒன்று 'பளிங்கு' என்பதைப் புரிந்துகொள்வதில். இதைத் தவறாகப் புரிந்துகொண்டதால் வரும் தவறு 'காட்டும்' என்பதற்குப் 'பிரதிபலிக்கும்' என்று கொண்ட பொருள்

நாம் இதுவரையில் விவரித்தபடி பளிங்கு என்ற சொல்லை ஒளி ஊடுருவும் படிகக் கண்ணாடித் தகடு என்ற பொருளில்தான் நமது பழைய இலக்கியங்கள் பயன்படுத்தி இருக்கின்றன.

அடுத்து நாம் செய்யும் தவறு, 'கடுத்தது' என்று சொல்லுக்குக் 'கோபம் கொண்டது' என்று பொருள் கொள்ளுதல். ஏன், ஒருவேளை அவன் மகிழ்ந்தாலோ அல்லது அஞ்சினாலோ அதை முகம் காட்டாதா? 'கடுப்பு' என்பதற்கு 'மிகுதல்' என்றும் பொருளுண்டு. ஆகவே, அவன் மனதில் அதிகமாய் ஏற்பட்ட உணர்வு எதுவோ அதுதான் 'கடுத்தது'.

வள்ளுவனின் மனத்தைக் காண்பதில் மிக வல்லவரான பரிமேலழகர் சொல்லும் பொருள் இவ்வாறு: "தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்குபோல, ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும்". இவ்விளக்கத்தில் பரிமேலழகர் செய்தது ஒரே ஒரு தவறுதான் - 'பளிங்கு' என்பதற்குப் படிகம் என்று மட்டுமே பொருள் கண்டது. படிகம் தட்டையானதல்ல, ஒரு மணிபோன்ற வடிவம் கொண்டது. அதனருகில் ஒரு சிவப்பான பூ இருந்தால் படிகத்தில் சிவப்பு நிறம் தெரியும். ஆனால் அதன் வழியே பூவின் வடிவம் தெளிவாகத் தெரியாது.

ஆனால், நம்முடய பளிங்கிலோ மணிமேகலையில் சொன்னாற்போல "விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்", அதாவது ஒலிதான் வெளியே கேட்காது, உருவம் தெரியும். எனவே பரிமேலழகரும் வள்ளுவனின் மனம் காணவில்லை. 'அடுத்தது' என்பதற்கு 'பளிங்கின் மறுபுறத்திலிருப்பது' என்று பொருள். 'காட்டும்' என்றால் மறுபுறமிருந்த மணிமேகலையை உதயகுமாரன் பார்த்ததுபோல் முழுமையாகக் காட்டும் என்றுதான் பொருளே தவிர, 'அதன் நிறத்தை மட்டும் காட்டும்' என்று பொருள் அல்ல. "பளிக்குத் தகட்டின் அப்புறம் இருப்பது இப்புறம் தெரியும். அதேபோல, உள்ளத்தின் உள்ளே மிகுவது முகத்தின் வழியே வெளியே தெரியும்" என்பதுதான் இக்குறளின் சரியான பொருள்.

இக்கட்டுரையில் நான் கொடுத்திருக்கும் பளிங்கு பற்றிய இலக்கியக் குறிப்புகள் இதுவரையில் யாராலும் ஆய்ந்து சொல்லப் பட்டவையல்ல. கிரேக்க நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த பிளைனி என்பவர் (கி.பி. 23-79) "இந்தியாவில் பார்ப்பது போல உலகில் வேறெங்கும் கண்ணாடியைப் பார்க்கமுடியாது, ஏனென்றால் படிகத்தை உடைத்துச் செய்யப்படுவது இது" என்று சொல்லியிருக்கிறார். இதைச் சொல்லும் ஆலன் மக்·பார்லேன் (http://www.alanmacfarlane.com/glass/AINDIA.pdf) என்பவர் "இந்தியாவில் பழமையான கண்ணாடிப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார். குறிப்பாக "கண்ணாடியின் பிறப்பிடமான மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு அருகில் இருந்தும்கூட இந்தியாவில் கண்ணாடித் தொழில்நுட்பம் செழிக்கவில்லை. கிறித்துவுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணாடி செய்யத் தெரிந்த இந்தியர் கண்ணாடியில் வளையலும், மணிகளும் மட்டுமே செய்தனர்" என்கிறார்.

அரிக்கமேடு ஒரு காலத்தில் கண்ணாடி மணிகள் செய்வதில் முன்னோடியாக இருந்தது என்று சுவேவா லுச்சியோலா (Sveva Lucciola) என்னும் அம்மையார் கூறுகிறார். கி.மு. 400 முதல் கி.பி. 1600 வரை மிக நீண்டகாலம் கண்ணாடி மணிவகைகளைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்வதில் முன்னோடியாக அரிக்கமேடு இருந்ததை அவர் மிக வியப்போடு குறிப்பிடுகிறார். (http://www.geocities.com/ladysveva/BeadHistory.html). இதுவும் பெருமைப்படத் தக்கதே. ஆனால் நாம் அத்தோடு நிற்கவில்லை என்பதே என் வாதம்.

தமிழ் இலக்கியங்கள் கூறும் சான்றுகளின் படி கண்ணாடியினாலே மாளிகைகள், மாடங்கள், அகழியின் உட்புறத் தளங்கள் என்று பலவகையிலும் செய்யும் அளவுக்கு இந்தியர் முன்னேறியிருந்தார்கள் என்பதைக் காட்டினேன். அவர்கள் விவரிக்கும் பாங்கிலிருந்தே இவை வெறும் கவிஞர்களின் அதீதக் கற்பனையல்ல என்று புரிந்துகொள்ளவேண்டும். அதிலும் பளிங்கில் இத்தகையன செய்யலாம் என்பதை இந்திய நாடு இத்தனைப் பழங்காலத்தில் அறிந்திருந்தது என்பதையும் கண்ணாடியைப் பற்றிப் பேசும் பிறநாட்டினர் யாரும் சொல்லவில்லை. இதைப் படிக்கும் எவரேனும் இந்த இலக்கியச் சான்றுகளோடு, நமது அறிவியல் மேன்மையை உலக அரங்கில் நிறுவமுடியுமென்றால் நான் மிக மகிழ்வேன்.

***

இது என்னுடைய 'படித்ததில் பிடித்தது' பதிவில் முன்பு இட்ட இடுகையின் மறு பதிவு. முதன்முறை இட்ட போது வந்த பின்னூட்டங்கள்:

பலப் பாடல் உதாரணங்களுடன் அருமையான தகவல்கள்.

பயனுள்ள கட்டுரை.

நன்றி

By Ram.K, at March 10, 2006 9:57 AM

மிக அருமையான ஆய்வொன்றை,எனக்கறிமுகப்படுத்தியதற்கு, நன்றி. ஆக்கத்துக்ரியவருக்குத் தனி மடலிடுகிறேன்.
மேலும், வெங்காயம் போன்றோரிடம் அக்கப்போர் தேவையா?
இதனால் நம் எழுத்தின் நோக்கம் அடிபட்டுப் போகிறாது.
முடிவுக்குக் கொணர்ந்து,நம் எழுத்தின்;வாசிப்பின் பயனை உணர்வோம்,பகிர்வோம்.
அன்புடன்
யோகன்
பாரிஸ்

By johan-paris, at March 10, 2006 11:08 AM

இப்படிப்பட்ட தகவல்கள் மிக ஆச்சரியத்தை அளிக்கின்றன!!நம் மதிப்பு நமக்கே தெரிவதில்லை!!
என்ன செய்வது குமரன்!!

By rnateshan., at March 10, 2006 9:11 PM

பளிங்கு மண்டபத்தை பற்றி சொல்லும் பொழுது 'பைஞ்சேறு மெழுகா மண்டபம்' என்று சொல்வதாக ஒன்பதாம் வகுப்பில் படித்துள்ளேன். தகவல்களும், கட்டுரை தொகுப்பும் அருமை.

By சிவமுருகன், at March 12, 2006 9:00 PM

ஆமாம் இராம்பிரசாத் அண்ணா. இன்னும் நிறைய கட்டுரைகள் இவர் எழுதி இணையத்தில் இருக்கின்றன என்று எண்ணுகிறேன். தேடித் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வலைப்பதிவும் வைத்திருக்கிறார். பழைய தமிழ்மணத்தில் இருந்தது. இப்போது எனக்கு வலைப்பூ முகவரி தெரியவில்லை.

By குமரன் (Kumaran), at March 15, 2006 12:34 PM

யோகன் அண்ணா. கட்டுரை ஆசிரியருக்குத் தனிமடல் அனுப்ப முடிந்ததா?

By குமரன் (Kumaran), at March 15, 2006 12:35 PM

உண்மைதான் நடேசன் சார். பழைய இலக்கியங்களில் இருந்து இந்த மாதிரி விஷயங்கள் எடுத்துக் கொடுத்தால் இதனைப் பற்றி எந்த கல்வெட்டும் இல்லை; அதனால் இது இடைச்சொருகல் என்று சொல்லிவிடுவார்கள். தமிழ்மொழி இலக்கியங்கள் மட்டும் இல்லை; வடமொழி நூல்களிலும் இப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எடுத்துக் காட்டினாலும் நம்புவார் இல்லை.

By குமரன் (Kumaran), at March 15, 2006 12:36 PM

படித்து உங்கள் கருத்தைச் சொன்னதற்கு நன்றி சிவமுருகன்.

By குமரன் (Kumaran), at March 15, 2006 12:37 PM

2 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்ல கட்டுரை, சுட்டிக் காண்பித்ததற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி கொத்ஸ்