Thursday, March 20, 2008

உடுக்கை இழந்தவன் கை - 9 (பாரி வள்ளலின் கதை)

வெயில் தாழத் தொடங்கிவிட்டாலும் மனத்தில் இருக்கும் வெம்மை குறையாமல் தகிக்கின்றது. வருபவர்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்கி வாழ்வாங்கு வாழ்ந்தவனின் அருகாமை கிடைத்தது எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நாட்கள் மீண்டும் தான் வருமா? முப்பெரும் படைகளும் முற்றி நின்று போரிட்டன. ஆனாலும் என்ன? பாரியின் வன்மைக்கு ஈடு கொடுக்க முடிந்ததா? 'என் தமிழ் பொய்க்காது' என்று மூவேந்தர்களிடம் சொல்லி வந்தேனே. அது என் முன்னேயே நடந்ததே. மலை மேல் ஏறி வந்த படைகள் ஒரே பொழுதில் பாரியை வீழ்த்தி விடலாம் என்று எண்ணிக் கொண்டு வந்தன. ஆனால் ஒவ்வொரு நாளும் மலையேற முயன்று பாரியின் படைத் தாக்குதலால் நிலை குலைந்து அடிவாரத்திற்கு மீண்டும் திரும்பி என்று ஒரு பட்சம் முயன்றனரே. கடைசியில் சதி செய்தல்லவா பாரியைக் கொன்றுத் தங்கள் பழி தீர்த்துக் கொண்டார்கள் பாவிகள்.

ஐயகோ. அதனை நினைக்கவும் இயலவில்லையே. கொடுமை. கொடுமை. ஆருயிர் நண்பனைப் பலி கொடுத்துவிட்டு இன்னும் நான் ஏன் உயிரோடு இருக்கிறேன்? இறக்கும் தருவாயில் அவன் அடைக்கலமாகக் கொடுக்க மகளிருக்குச் செய்ய வேண்டிய கடமையும் செய்து முடித்தாகிவிட்டது. இனி இங்கிருக்கக் கூடாது. வடக்கிருந்து உயிரை விட வேண்டியது தான்.

பாரியின் உயிர் போகும் வழியை உண்டாக்கிக் கொடுத்த பாவி நான் அல்லவோ?! பாரியின் குன்றைப் பெற வேண்டுமென்றால் பாணராகவும் விறலியாகவும் வாருங்கள் என்று பார்வேந்தர்களுக்குச் சொன்னேன். அந்தத் தார்வேந்தர்களோ தாளாத கொடுமைக்காரர்கள் என்று அறிந்திலனே. பாணர்களாகவும் விறலியர்களாகவும் படைவீரர்களை அனுப்பி பாரியைக் கொன்று போட்டார்களே. ஐயகோ. இந்தப் பழியை நான் எப்படித் தீர்ப்பேன்?!

நாம் வடக்கிருக்கிறோம் என்று தெரிந்தால் மலையமான் பேசாது இருக்க மாட்டான். அதனால் எங்காவது மனிதர் இல்லாத இடத்திற்குச் சென்று விடுவதே மேல். அதோ அங்கு ஆற்றின் குறையாக ஆற்றின் நடுவில் பெரும்பாறை தெரிகிறதே. அங்கு சென்று அமர்ந்துவிட வேண்டியது தான்.

நண்பன் பாரியின் மனக்குறை தீர அவன் விரும்பிய வண்ணம் வேளிர் குலத்தவருக்கே அவன் மக்களை மணம் முடித்துக் கொடுத்தேன். அவனைக் கொல்லும் வழி சொன்ன என் மனக்குறை தீர இந்த ஆற்றுக்குறையில் உயிர் விடுவதே வழி.

***

பாரி இறந்துவிட்டான். பறம்பு மலையிலிருந்து அவன் அடைக்கலமாகக் கொடுத்த பாரி மகளிர் இருவருடன் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கிறார் கபிலர். பாரி இறந்தான் என்ற செய்தி கேட்டவுடன் பெரும் மகிழ்ச்சியுடன் அதனைக் கொண்டாடத் தொடங்கிய வேந்தர்கள் கபிலரையும் மற்றவரையும் மறந்துவிட்டனர். தங்கள் குலத்தைக் குறைத்துப் பேசியவன் ஒழிந்தான் என்பதே அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் கபிலர் இரு பெண்களுடன் கோட்டையை விட்டு அகன்று செல்வதை அவர்கள் தடுக்கவில்லை.

"பெரியப்பா. இது என்ன கொடுமை பெரியப்பா. தந்தையார் இறந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. இந்தப் பகைவருக்குப் பயந்து இப்படிப் பதுங்கிப் பதுங்கி நம் கோட்டையை விட்டு வெளியேறும் நிலை நமக்கு வந்ததே"

"கலங்காதே அங்கவை. இதுவும் நீங்கும். பாரியின் ஆசைப்படி உங்கள் இருவரையும் வேளிர் குலத்துதித்த வேங்கையருக்கு மணம் முடிப்பேன். இது உறுதி. நீங்கள் இருவரும் எதற்காகவும் கலங்க வேண்டாம்"

"பெரியப்பா. எங்களைச் சொல்லிவிட்டு நீங்கள் கலங்குகின்றீர்களே. நீங்கள் அழுதால் நாங்களும் அழுவோம்"

"என் செய்வது சங்கவை. உன் தந்தையுடன் நான் வாழ்ந்த நட்பு வாழ்க்கை அப்படிப்பட்டது. இதோ இந்தப் பறம்பு மலையில் எத்தனை நாட்கள் மகிழ்ச்சியோடு இருந்திருக்கிறோம்.

பறம்பு மலையே. மது இருந்த பாண்டத்தை ஒரு பக்கம் திறந்து மதுவைச் சேந்திச் சேந்தி அருந்தினோம். ஆட்டுக்கிடாயை ஒரு பக்கம் வீழ்த்தி அதன் ஊனிலிருந்து தின்றுத் தீராத அளவிற்கு துவையலும் ஊனும் சேர்ந்த சோற்றினை உண்டோம். அப்படிப்பட்ட செல்வச் செழிப்பைத் தந்து எங்களுடன் நட்பு செய்தாய் நீ. இப்போதோ பாரி மாய்ந்தான் என்று கலங்கிச் செயலற்று நீர் சொரியும் கண்களுடன் இந்தப் பெண்களுக்கு ஏற்ற மணவாளரைத் தேடிச் செல்கிறோம். நீயாவது வாழ்ந்து போ பெரும்புகழ் பறம்பே.

மட்டு வாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டான்றானாக் கொழும் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே இனியே
பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர் வார் கண்ணேன் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிரும் கூந்தற் கிழவரைப் படர்ந்தே
"

***

பாடற்குறிப்பு:

புறநானூறு 113ம் பாடல். கபிலர் பறம்பு நோக்கிப் பாடியது.

திணை: பொதுவியல் (பொதுவானது)

துறை: கையறுநிலை (பெரும் இழப்பினால் செயலற்று நிற்றல்)

பொழிப்புரை: மது இருந்த பானையை வாய் திறக்கவும் இன்னொரு பக்கம் கரு நிற ஆட்டுக்கிடாயை வீழ்த்தவும் அவை சமைக்கப்பட்டு (இன்றைக்கும் மேற்கத்திய அசைவ உணவு வகைகளில் மது சிறிதளவு சேர்க்கப்படுகிறது. அது போல் சொல்கிறாரோ?) தீரவே தீராத அளவிற்கு கொழுத்த துவையலும் ஊனும் கலந்த சோற்றை தொடர்ந்து தரும் செல்வம் நிறைந்து எங்களுடன் நட்புடன் இருந்தாய் முன்னர். இனி மேலும் அப்படி இருப்பாயோ? பாரி மாய்ந்தான் என்று கலங்கிச் செயலற்று நீர் சொரியும் கண்ணுடன் உன்னைத் தொழுது பாடுகிறேன். அழகிய வளையல்களை அணிந்த இந்தப் பெண்களின் நறுமணம் வீசும் திரண்ட கூந்தலுக்கு உரியவர்களைத் தேடிச் செல்கிறோம். நீ வாழ்ந்து போவாய் பெரும் பெயர் கொண்ட பறம்பே. (இளம்பெண்களின் கூந்தலைத் தீண்டும் உரிமை கணவனுக்கு/காதலனுக்கு மட்டுமே உரியது என்பது பழந்தமிழ் மரபு. )

10 comments:

மதுரையம்பதி said...

//இளம்பெண்களின் கூந்தலைத் தீண்டும் உரிமை கணவனுக்கு/காதலனுக்கு மட்டுமே உரியது என்பது பழந்தமிழ் மரபு//

புதிய செய்தி....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//பாரி இறந்தான் என்ற செய்தி கேட்டவுடன் பெரும் மகிழ்ச்சியுடன் அதனைக் கொண்டாடத் தொடங்கிய வேந்தர்கள் //

இறப்பைக் கொண்டாடும் தன்மை அப்போதும் இருந்ததா??
எதிரியானாலும் அவன் இறப்பைக் கொண்டாடலாமா???

சிவமுருகன் said...

//நண்பன் பாரியின் மனக்குறை தீர அவன் விரும்பிய வண்ணம் வேளிர் குலத்தவருக்கே அவன் மக்களை மணம் முடித்துக் கொடுத்தேன். அவனைக் கொல்லும் வழி சொன்ன என் மனக்குறை தீர இந்த ஆற்றுக்குறையில் உயிர் விடுவதே வழி.//

அடிமனது ஆசை இறந்தாலும் நிறைவேறி விடும் என்பதற்க்கு நற்சான்று இது.

குமரன் (Kumaran) said...

நானும் அண்மையில் தான் இந்த செய்தியை அறிந்து கொண்டேன் மௌலி. கதையின் இந்தப் பகுதியை இடும் போது கபிலரும் இதைச் சொன்னதைக் கவனித்தவுடன் நான் படித்த செய்தி உறுதியாகிவிட்டது.

குமரன் (Kumaran) said...

ஒரு நாட்டை வெற்றிக் கொள்ளும் போது வெற்றி கொண்டவர்கள் கொண்டாடுவது எல்லாக் காலத்திலும் நடப்பது தானே யோகன் ஐயா. தோல்வி அடைந்த நாட்டில் எத்தனையோ பேர் இறந்திருப்பார்கள். அதற்காகக் கொண்டாடாமல் இருப்பது நடக்குமா? அதே போன்ற கொண்டாட்டம் தான் இங்கும்.

பாரி இறந்தான் என்பது பறம்பு வீழ்ந்தது என்ற செய்தியாக மூவேந்தர்களுக்குத் தோன்றியது. அதனைத் தான் மகிழ்ச்சியாக அவர்கள் கொண்டாடினார்கள்.

எதிரியின் இறப்பைக் கொண்டாடுவது எல்லா இனங்களிலும் இருப்பதாகத் தான் தோன்றுகிறது. நாம் இன்றைக்கும் கொண்டாடும் சில புண்ணிய நாட்கள் தீமையை நன்மை வென்ற நாட்கள் என்று சொன்னாலும் அவையும் தீமையின் உருவமாக நாம் எண்ணும் எதிரிகள் இறந்த நாட்கள் தானே.

குமரன் (Kumaran) said...

கபிலர் உடுக்கை இழந்தவன் கையானது இந்த ஆழ்மன ஆசையை நிறைவேற்றியதால் தானே சிவமுருகன்.

G.Ragavan said...

அப்படியானால் சதி செய்துதான் மூவேந்தர்களும் பாரியைக் கொன்றார்களா? ம்ம்ம்..

எப்படியோ பெண்களைக் காப்பாற்ற நட்புறவு ஒன்று துப்புரவாக இருந்தது நன்றே. அங்கவையும் சங்கவையும் முருங்கைக்கீரை நன்றாகச் சமைப்பார்களாமே!

பாச மலர் said...

சூழ்ச்சி செய்து வீழச் செய்திருக்கிறார்கள் மூவேந்தர்கள்..நல்ல நட்பின் உதவியால் பாரியின் கொள்கை வாழ்ந்தது..எந்தக் காலமாயினும் வெற்றி ஒன்றே குறிக்கோளாயிருக்கும் அரசியல் கூட்டணி..மூவரில் ஒருவருக்குக் கூட தவறு உரைக்கவில்லை...

குமரன் (Kumaran) said...

அப்படித் தான் கதையின் போக்கில் தெரிகிறது இராகவன். கபிலர் பாரியின் வீரத்தைப் புகழ்ந்து பாடியவை எல்லாம் உண்மையென்றால் மூவேந்தர்கள் சதி செய்து தான் அவனைக் கொன்றிருக்க வேண்டும்; வேறு வழியில்லை.

அவர்கள் முருங்கைக்கீரைக்கறி செய்து தமிழ்ப்பாட்டிக்குக் கொடுத்த கதையைத் தானே சொல்கிறீர்கள் இராகவன். நானும் படித்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொன்னதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை பாசமலர். வேந்தர்கள் பார்வையிலிருந்து பார்த்தால் அவர்கள் செய்தது தவறில்லை என்று தான் தோன்றுகிறது.