Thursday, March 13, 2008

எண்ணெய்

குமரன் தமிழ்ச் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் கண்டறிந்து தமிழ் சொற்களை நமக்காக எடுத்துத் தரும் வேளையில், சில பழைய தமிழ்ச் சொற்களை உங்களுக்குப் பொருளோடு அறிமுகப் படுத்துகிறேன். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களுக்குப் பின்னால் இருக்கும் பொருளும் தெரிந்தால் இன்னமும் முறையாகப் பயன்படுத்தலாம் அல்லவா!

கடைக்குப் போய் எண்ணெய் வாங்கி வா என்று அம்மா சொன்னால் நாம் என்ன சொல்வோம்? என்ன எண்ணெய் என்று சொல்ல வேண்டாமா என்றுதானே கேட்போம். அதுதானே முறையும் கூட! இருக்கிற எண்ணெய்களில் எந்த எண்ணெய் என்று வாங்குவது? சரி. எண்ணெய்யில் எத்தனை வகை உண்டென்று பட்டியல் போட்டுப் பார்க்கலாமா? முதலில் நல்லெண்ணெய்யில் துவங்குவோம். தலைக்குத் தேய்க்க தேங்காய் எண்ணெய். பிறகு கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் எனப்படும் பனையெண்ணெய், இலுப்பை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், சுளுக்கு நீக்கும் நீலகிரி எண்ணெய், அடுப்பென்ன சமயத்தில் ஆளையே எரிக்கும் மண்ணெண்ணெய் என்று அடுக்குவதில் என்ன சிரமம் இருக்கிறது.

ஆனால் பாருங்கள். இவை அனைத்தும் எண்ணெய்கள் அல்ல. அதாவது எண்ணெய் என்ற வகையைச் சார்ந்தவை அல்ல. அப்படியானால் இவற்றை எப்படி வகைப்படுத்துவது? ஒரு வகை இருக்கத்தான் செய்கிறது. இவை அனைத்தும் நெய் வகையைச் சார்ந்தவை. என்ன தலையைச் சுற்றுகிறதா? உண்மை என்றைக்குத்தான் உடனடியாக விளங்கியிருக்கிறது? தெளிவாகச் சொல்கிறேன். உலகத்தில் ஒரேயொரு வகையான எண்ணெய் மட்டுமே அன்றும் இன்றும் காணப்படுகிறது. ஆனால் அதுவும் நெய் வகையைச் சார்ந்ததுதான். அது என்ன நெய்? எள் நெய். புணர்ச்சி விதிகளால் அது எண்ணெய் ஆனது.

தமிழில் மிருதுவான கொழகொழப்பான திரவங்கள் அனைத்தும் நெய் வகையைச் சார்ந்ததுதான். வெண்மையாக இருக்கின்ற நெய்தான் வெண்ணெய். அது உருகினால் வருவதுதான் நெய். நெய் ஒரு தியாகி. தான் பிறந்த இடத்திற்கே பெயர் கொடுத்திருக்கிறதே! இந்த நெய்தான் முதலில் தமிழன் பயன்படுத்திய நெய். பிறகுதான் வித்துக்களை கல்லுரலிலிட்டு ஆட்டி அரைத்து நெய்யைப் பிரிக்கும் முறைகளைக் கற்றுக் கொண்டான். அவன் கையில் முதன் முதலில் அகப்பட்ட வித்து எள்தான். அந்த எள்ளில் இருந்து பெறப்பட்டதால் எண்ணெய். அதுதான் எண்ணெய்களில் தலைமை. அதன் பண்புகளால் அதற்கு நல்ல எண்ணெய் என்ற சிறப்புப் பெயர் வேறு! சிறப்புப் பெயர் வந்ததால், பழைய பெயர் பொதுப் பெயராயிற்று. நாளாவட்டத்தில் அது எண்ணெய் என்ற புதிய வகையை உருவாக்கிவிட்டது.

வடமொழியில் ஒரு வழக்கு உண்டு. அது "ஜலே கங்கே! தைலே லக்ஷ்மி!". அதன் பொருள்....நீரெல்லாம் கங்கை. எண்ணெய் எல்லாம் இலக்குமி. இங்கே வருகின்ற எண்ணெய் நல்லெண்ணெய். அதாவது நல்லெண்ணெய்யில் இலக்குமி வசிக்கிறாள்.

அன்புடன்,
கோ.இராகவன்

***

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் இராகவனால் 10 மே 2006 அன்று இடப்பட்டது.

2 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் இராகவனால் 10 மே 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

23 கருத்துக்கள்:

Vajra said...
//தலைமை//

ராகவன், தலமை அல்லது தலைமை எது சரியான எழுத்துச்சேர்க்கை.

தலைமை என்றால் dye ஆகிவிடுமில்லையா?

ஷங்கர்.

May 10, 2006 3:51 AM

செந்தழல் ரவி said...
36 மொட்டைகளின் அட்டகாசங்கள் அட்டகாசங்கள் அட்டகாசங்கள் அப்படின்ற கலாய்ப்பு கேசட்ல கலைஞரை எண்ணை வைத்து மயில்சாமி கலாய்ச்சது தேவை இல்லாமல் நியாபகம் வந்து தொலைகிறது...

May 10, 2006 4:06 AM

சிவமுருகன் said...
//"ஜலே கங்கே! தைலே லக்ஷ்மி!". //
இலக்ஷ்மியை தரிசிக்க வேண்டும் என்று தான் தீபாவளி அன்று எண்ணெய் குளியல் செய்ய சொன்னார்களோ.

May 10, 2006 4:35 AM

குமரன் (Kumaran) said...
இராகவன், நல்ல பதிவு.

தீபாவளி அன்று எண்ணெயில் இலக்குமி நிலைக்கிறாள் என்பது நம்பிக்கை. அதனால் தான் அன்று எண்ணெய் குளியல் நடக்கிறது. ஆனால் மற்ற நாட்களிலும் நீரில் கங்கையும் எண்ணெயில் அலைமகளும் இருக்கிறார்கள் என்று எண்ணுவது சரியே.

May 10, 2006 4:38 AM

senthil said...
nalla pathivu, valthukal

May 10, 2006 4:42 AM

பொன்ஸ்~~Poorna said...
பூனை, ஆனை ந்னு ஒரு பாட்டு உண்டே.. அதுவும் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பா இருந்திருக்கும்..

தேடிப்பாக்கிறேன்.. கிடைத்தால்...

May 10, 2006 5:15 AM

இலவசக்கொத்தனார் said...
எள்+நெய் = எண்ணெய் என்பது தெரிந்திருந்தாலும் நெய் என்பதுதான் இவ்வகை திரவங்களின் சரியான பெயர் என்பது தெரியாத ஒரு விஷயம்தான். நன்றி ஜிரா.

May 10, 2006 6:03 AM

G.Ragavan said...
// ஷங்கர் said...
//தலைமை//

ராகவன், தலமை அல்லது தலைமை எது சரியான எழுத்துச்சேர்க்கை.

தலைமை என்றால் dye ஆகிவிடுமில்லையா? //

ஷங்கர், தலைமை என்பதே சரி. தலை + மை - எண்சாண் உடம்புக்குத் தலையே பெரிதல்லவா. அதனால்தான் தலைமை. தலைவர். தலைவி. தலைநகரம். புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

May 11, 2006 2:54 AM

G.Ragavan said...
// செந்தழல் ரவி said...
36 மொட்டைகளின் அட்டகாசங்கள் அட்டகாசங்கள் அட்டகாசங்கள் அப்படின்ற கலாய்ப்பு கேசட்ல கலைஞரை எண்ணை வைத்து மயில்சாமி கலாய்ச்சது தேவை இல்லாமல் நியாபகம் வந்து தொலைகிறது... //

அது என்னங்க? கொஞ்சம் சொல்லுங்க. நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.

May 11, 2006 2:55 AM

G.Ragavan said...
// சிவமுருகன் said...
//"ஜலே கங்கே! தைலே லக்ஷ்மி!". //
இலக்ஷ்மியை தரிசிக்க வேண்டும் என்று தான் தீபாவளி அன்று எண்ணெய் குளியல் செய்ய சொன்னார்களோ. //

தீபாவளியைத் தமிழர்கள் கடந்த ஐநூறு ஆண்டுகளாகத்தான் கொண்டாடுகிறோம். அது தெரியுமா சிவமுருகன்? தீபாவளிக்கு மட்டுமல்ல சனி நீராடு என்று வழக்கே உண்டல்லவா.

May 11, 2006 2:56 AM

G.Ragavan said...
// senthil said...
nalla pathivu, valthukal //

நன்றி செந்தில்.

May 11, 2006 2:56 AM

G.Ragavan said...
// பொன்ஸ் said...
பூனை, ஆனை ந்னு ஒரு பாட்டு உண்டே.. அதுவும் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பா இருந்திருக்கும்..

தேடிப்பாக்கிறேன்.. கிடைத்தால்... //

அதென்ன பாட்டு...எனக்குத் தெரியாதே...நீங்களே சொல்லுங்க.

May 11, 2006 2:57 AM

G.Ragavan said...
// இலவசக்கொத்தனார் said...
எள்+நெய் = எண்ணெய் என்பது தெரிந்திருந்தாலும் நெய் என்பதுதான் இவ்வகை திரவங்களின் சரியான பெயர் என்பது தெரியாத ஒரு விஷயம்தான். நன்றி ஜிரா. //

பாத்தீங்களா...உண்மையான தியாகிக்கு மதிப்பே இல்லை. தியாகி பேரச் சொல்லிப் பெழச்ச எண்ணெய்க்குத்தான் எல்லாப் புகழும் போகுது.

May 11, 2006 2:58 AM

Samudra said...
எள்ளுன்னா எண்ணெயா நிக்கனும்ன்னு சொல்றாங்களே அதுக்கும் "எள்+நெய் = எண்ணெய்" forumulaவுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா என்ற கண்டுபிடிக்க சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கோள்கிறேன்.

May 11, 2006 4:25 AM

johan -paris said...
அன்பு இராகவனுக்கு!
செய்தித்தாள்கள்,சஞ்சிகைகளுடன் ;பாடப் புத்தகங்கள் ;ஏன்!!! பண்டிதர்கள் கூடக் கூசாமல் விடும் தவறை;மிக அழகாக சொல்லி விளக்கியுள்ளீர்கள். நன்றி!
இதில்; வெண்மையாகவிருப்பதால் வெண்ணெய்,எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.இது சரியா?, என்பதை ஆயவும்.
ஏனெனில்- வெண்பா- என்பது வெண்மையாக இருக்கும் பாடலா??? ,வெண்பொங்கல்-என்பது வெண்மையான பொங்கலா,,,? நானறிந்ததைச் சற்று விளக்குகிறேன். கலப்படமற்ற, மாற்றத்துக்குட்படாத,சாதாரணமான என்ற பொருளிலேயே இதைக் கொள்ளவேண்டும்.
மோரைக் கடைந்து, எம்மாற்றதிதுக்குமே! உட்படுத்தப்படாத நெய், வெண்ணெய்;வெண்பா என்பது எந்தச் சிக்கலான விதிகளுக்குட்படாத பாடல் எனவும்; வெண்பொங்கல்- சக்கரையோ;பாலோ கலக்காது; வெறும் நீரில் அவித்த அரிசி;இந்த அரிசி சிவப்புப் பச்சையரிசியாகக் கூடயிருக்கலாம்.(ஈழத்தில் இந்த நெல்லை மொட்டக்கறுப்பன் எனக்கூறுவர்; யாழ் மாவட்டத்தில் பூனகரி எனுமூர் இந்நெல்லுக்குப் பிரபல்யம்") ஆனாலும் வெண்பொங்கல் என்றே கோவில் அர்ச்சகர்கள் கூறுவார்கள்; சிறப்புப் பூசைகள் அற்ற நாட்களில் ;இறைவனுக்குப் படைப்பது; அதற்கொரு தனிச் சுவையுண்டு.இதே வேளை வெண்புறா;வெண்ணிலா; வெண்கட்டி; வெள்ளோட்டம்;வெள்ளாடு,வெள்ளெருக்கு பற்றியும் சிந்திக்கவேண்டியுள்ளது. நன்கு இலக்கணம் தெரிந்தவர்கள் உதவினால் நன்றி
யோகன்
பாரிஸ்

May 11, 2006 5:27 AM

tbr.joseph said...
இங்கே வருகின்ற எண்ணெய் நல்லெண்ணெய். அதாவது நல்லெண்ணெய்யில் இலக்குமி வசிக்கிறாள்.//

அடடா. ராகவன் உங்கள் நாவில் (சாரி பேனாவில் இதுவும் சரியில்லையோ.. சரி.. கம்ப்யூட்டரில்!) சரஸ்வதி வசிக்கிறாள்:-)

May 11, 2006 5:43 AM

வெற்றி said...
இராகவன்,
நல்ல பதிவு. எண்ணெய் என்பது எள் + நெய் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றிகள்.

//இந்த நெய்தான் முதலில் தமிழன் பயன்படுத்திய நெய். பிறகுதான் வித்துக்களை கல்லுரலிலிட்டு ஆட்டி அரைத்து நெய்யைப் பிரிக்கும் முறைகளைக் கற்றுக் கொண்டான்.//

இதற்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா?
எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?

//தீபாவளியைத் தமிழர்கள் கடந்த ஐநூறு ஆண்டுகளாகத்தான் கொண்டாடுகிறோம். அது தெரியுமா //

தீபாவளி தமிழர் பண்பாட்டில் வேறு கலாச்சாரத்தில் இருந்து புகுந்து என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் எப்போது புகுந்தது என்பது தெரியாது. எப்படி இது 500 வருடங்களுக்கு முன் தமிழ் கலாச்சாரத்திற்குள் நுழைந்தது என்பதை சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமா?

May 11, 2006 12:03 PM

துளசி கோபால் said...
ராகவன்,

அருமையாச் சொல்லி இருக்கீங்க.

நல்லா இருங்க.

வாழ்த்து(க்)கள்.

May 11, 2006 4:05 PM

பொன்ஸ்~~Poorna said...
ஜிரா,

அந்தப் பாட்டு கிடைக்கலை.. எனக்கு நினைவில் இருப்பதைச் சொல்றேன் .. யாருக்காவது நினைவு வந்தா முழுப் பாட்டும் சொல்லுங்க:

ஒரு புலவர் அரசனைப் பார்த்து, பாடிப் பரிசில் பெறச் செல்கிறார். அரசன் புலவரை நெடுநேரம் காக்க வைத்து விடுகிறான். புலவருக்குக் கோபம். அரசன் அழைத்தபோது புலவர் அரசனைப் பாராட்டுவது போல் பாடுகிறார்:
"புவியாளும் அரசன் இவன்
ஆனையும் தின்பான், பூனையும் தின்பான்"

[இந்தப் பாட்டு இன்னும் 2 அடி உண்டு. இந்த அடிகள் தான் தொடர்புடையவை என்பதுடன், இவை இரண்டு தான் எனக்கு நினைவிருக்கு..]

இதைக் கேட்டு அரசனுக்குக் கோபம்.. "பொருள் சொல்லுங்கள் " என்று புலவரிடம் கேட்கிறார்.. இதற்குள் புலவருக்குத் தான் செய்த தவறு புரிகிறது. அரசனின் கோபத்தைத் தணிக்க வேண்டி(ஏன் தணிக்க வேண்டும் என்ற context (குமரன் தமிழ்ல என்ன? ) தெரியவில்லை), இதற்குப் பொருள் சொல்லத் தொடங்குகிறார்:
"உலகெலாம் ஆளும் பேரரசன் நீ,.
ஆனையும் தின்பான் = அதாவது, ஆ+ நெய்= பசு நெய்யும் உண்பாய்;
பூனையும் தின்பான் = பூ+ நெய் = பூவினது நெய்யான தேனையும் உண்பாய், அத்தனை செல்வம் உள்ளவன்"
என்று சொல்லித் தப்பிக்கிறார்.. பாட்டின் அடுத்த இரண்டு அடிகளும் கூட இப்படி இரட்டுற மொழிதலாக வரும்.. பாட்டுதான் மறந்து விட்டது :(

May 12, 2006 3:36 AM

பரஞ்சோதி said...
நல்லா எழுதியிருக்கீங்க, வழக்கம் போல் சுவாரஸ்யமாக இருக்குது.

May 15, 2006 6:57 AM

கோவி.கண்ணன் said...
//வெண்மையாக இருக்கின்ற நெய்தான் வெண்ணெய். //
போடா வெண்ணை யென்று யாராவது வைதால், இனி வெள்ளை மனசுக்காரர் என்று பாராட்டி சொல்கிறார் எடுத்துக் கொள்ளலாமா ? :)

May 15, 2006 7:45 AM

குமரன் (Kumaran) said...
என்ன சமுத்ரா விளையாடறீங்களா? சி.பி.ஐ. விசாரணைக்கு இராகவனோ நானோ எப்படி உத்தரவிட முடியும். சாதாரணமானவர்கள் நாங்கள். நீங்க உத்தரவு போடுங்க. செய்வாங்க. :-)

May 22, 2006 12:38 PM

செந்தழல் ரவி said...
ராகவன் அவர்களே...

மயில்சாமி என்று அறியப்படும் சினிமா நடிகர் முதலில் ஒரு மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்...அவர் ஒரு கலாய்ப்பு கேசட் வெளியிட்டார்..அதில் பலரை கலாய்த்தார்..மிமிக்ரி, கலாய்ப்பு பாடல்கள், மற்றும் கலாய்ப்பு செய்திகள், பிகர் மடிப்பது எப்படி என்பது போன்ற அருமையான யோசனைகள் இருந்தன..

36 மொட்டைகளின் அட்டகாசங்கள் அட்டகாசங்கள் அட்டகாசங்கள் என்பது அதில் உள்ள ஒரு காமெடி..

கலைஞரின் கரகர குரலில் - ரேஷன் கடையில் எண்ணை வாங்க கலைஞர் சென்று - பாமாயில் என்ற பகட்டு எண்ணை வேண்டாம் - நல்ல எண்ணை கொடு என்பது போல வரும்...

அருமையாக செய்து இருப்பார் மயில்சாமி...ஆன்லைனில் ஏற்ற முயற்ச்சிக்கிறேன்..

May 26, 2006 1:12 AM

குமரன் (Kumaran) said...

இராகவன் இவ்வளவு தெளிவாக எள்+நெய் = எண்ணெய் என்று சொன்ன பிறகும் சில நேரங்களில் எண்ணை என்று எழுதிப் பின்னர் திருத்தியிருக்கிறேன். பழக்கத்தை விடுவது எவ்வளவு கடினமாக இருக்கிறது?!