ஒரு அழுத்தம் மிகுந்த, பணிப்பளு மிகுந்த நாளுக்குப் பின் நீங்கள் என்ன செய்வீர்கள்? தொலைக்காட்சி பார்ப்பீர்களா? தியானம் செய்வீர்களா? நண்பரை அழைத்துப் பேசுவீர்களா? மக்கள் மிகுதியாகப் பயன்படுத்தும் ஐந்து வழிகளைப் பற்றியத் துணுக்கு இது.
தியானம்: தியானம் மன அழுத்தத்தைக் குறைப்பதில் மிக்க உதவியாக இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தியானத்திற்கு நிறைய நேரமும் செலவழிக்க வேண்டாம். 15 முதல் 20 நிமிடங்களே போதும். ஏற்றி வைத்த தீபத்தையோ ஏதாவது ஒரு சொல்லையோ தியானக் குறிக்கோளாக வைத்துக் கொண்டால் போதும்.
உடற்பயிற்சி: அளவான உடற்பயிற்சி என்டோர்பின் (Endorphin) என்னும் மூளை வேதியியற் பொருளின் தோற்றத்தை ஊக்குவிக்கிறது. என்டோர்பின் நல்லுணர்வைக் கொடுக்கும் வேதிப் பொருள். ஆனால் அதிகமான உடற்பயிற்சி செய்ய வேண்டாம். 90 நிமிடங்களுக்கு மேல் செய்யப்படும் கடுமையான உடற்பயிற்சி உடலின் நோயெதிர்ப்புச் சக்தியைத் தாக்கக்கூடும்.
படிப்பு: புத்தங்களைப் படிப்பது என்ற செயல் மட்டுமே அழுத்தத்தைக் குறைத்துவிடுவதில்லை. மகிழ்வூட்டக்கூடியதாகவோ நம்மை ஆழ்ந்து போகச் செய்வதாகவோ படிப்பது இருக்க வேண்டும். எரிச்சலூட்டுவதாக இருந்தால் படிப்பது அழுத்தத்தைக் கூட்டும்.
மற்றவருடன் பேசித் தீர்ப்பது: நல்ல நண்பருடன் பேசித் தீர்ப்பது நல்லதே. ஆனால் அந்த நண்பர் தேவையில்லாத அறிவுரை கூறுபவராகவோ நாம் செய்தது/செய்வது சரி அல்லது தவறு என்று தீர்ப்பு கூறுபவராகவோ இருந்தால் அதனால் பயனின்றிப் போகலாம். அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
தொலைக்காட்சி பார்ப்பது: தொலைக்காட்சி பார்ப்பது மன அழுத்தத்தை நீக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளார்கள். ஆனால் கொடூரமான, நன்மை அளிக்காத காட்சிகளைப் பார்ப்பது அழுத்தத்தைக் கூட்டுமே ஒழிய குறைக்காது.
From 'Natural Health' July/August 2007 issue
***
1 ஆகஸ்ட் 2007 அன்று 'தமிழ் அறிவியல்' பதிவில் இட்ட இடுகையின் மறு பதிவு இது.
2 comments:
பாடல்கள் கேட்டாலும் மன அழுத்தம் குறையுமே அதையும் கூறியிருக்கலாம்
உண்மை தான் ராஜா. ஆனால் மொழிபெயர்த்து இட்ட கட்டுரையில் அதனைச் சொல்லவில்லை; அதனால் மொழிபெயர்த்த நானும் சொல்லவில்லை. :-)
Post a Comment