நிறைய பேர் - இந்த வார தமிழ்மண விண்மீன் முத்து (தமிழினி) உட்பட - பெரும்பாலோர் ஆண்கள் அணியும் இந்த அழகிய உடையை வேஷ்டி என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அது வேட்டி என்னும் தமிழ்ச்சொல் வடக்கே போகும் போது வேஷ்டி என்று ஆனது என்று தமிழறிஞர்கள் ஐயம் திரிபற உணர்த்தியுள்ளார்கள். நீளமான துணியை வெட்டி அணிவதால் அதற்கு வெட்டி - வேட்டி என்று பெயர். அது வடமொழிக்குச் சென்ற போது ட் ஷ் ஆகி வேஷ்டி ஆகிவிட்டது. ஆனால் நம் மக்களிடையே வேஷ்டி என்பதே சரியான சொல் என்பது போலவும் வேட்டி என்பது அந்த சொல்லை வலிந்து தமிழ்ப்படுத்தியதால் வந்த சொல் என்பது போலவும் ஒரு எண்ணம் நிலைத்திருக்கிறது. அது மாற வேண்டும். வேட்டி என்பதே சரியான சொல்; அதிலிருந்து பிறந்ததே வேஷ்டி என்பதை உணர்ந்து இனிமேல் 'வேட்டி' என்ற சொல்லை மட்டுமே புழங்கவேண்டும். கௌசிகனுக்காக - இது முழுக்க முழுக்க வேண்டுதலே :-)
---
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 3 மே 2006 அன்று இடப்பட்டது.
1 comment:
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 3 மே 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
79 கருத்துக்கள்:
தேசாந்திரி said...
நல்ல பதிவு. தொடர்க தம் தமிழ்ப்பணி.
May 03, 2006 6:54 AM
பொன்ஸ்~~Poorna said...
வெட்டி தான் வேட்டியாச்சா? அதான் டீக்கடைகள்ல வேட்டி கட்டிகிட்டு வெட்டிப் பேச்சு பேசிகிட்டு திரியறாங்களா.. இருந்தாலும் நம்ப முடியலை.. ட் எப்படி ஷ் ஆச்சுன்னு...
May 03, 2006 6:55 AM
முத்து(தமிழினி) said...
நன்றி ஐயா,
இனி வேட்டி என்றே இந்த வெட்டி சொல்லுவான்.
May 03, 2006 7:01 AM
இலவசக்கொத்தனார் said...
அட வெட்டிப் பயலுகளா!
நல்ல வேட்டி கட்டினவங்களான்னு சொன்னேன். :)
May 03, 2006 7:25 AM
Merkondar said...
சண்டைக்குப் போகும் வீரன் சின்னதாக இடுப்பைச் சுற்றிக் கட்டுவது வட்டுடை எம்ஜியார் சில படங்களில்(அடிமைப்பெண்) அணிந்திருப்பார் அதற்குப் பெயர் வட்டுடை என்பர். சல்லடம் என்றால் அரைப் பேண்ட்
சித்தாடை கச்சை வேட்டி லங்கோடு தமிழ் தானே
May 03, 2006 8:15 AM
சிவமுருகன் said...
வேட்டி தான் சரி என்று நினைத்திருந்தேன்.
May 03, 2006 8:56 AM
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி தேசாந்திரி.
May 03, 2006 12:50 PM
குமரன் (Kumaran) said...
பொன்ஸ், வெட்டி வேட்டியானதால் வேட்டி கட்டிகிட்டு வெட்டியாத் திரியுறாங்களா இல்லையான்னு எனக்குத் தெரியலை. ஆனா ட் ஷ் ஆவதும் ஷ் ட் ஆவதும் தெரியும். விஷயம் - விடயம் படிச்சிருக்கீங்களா?
May 03, 2006 12:52 PM
குமரன் (Kumaran) said...
ரொம்ப நல்லது தமிழ்மணத் தாரகையே!!! :-)
May 03, 2006 12:52 PM
குமரன் (Kumaran) said...
கொத்ஸ், ஏன் நம்மளைப் பத்தியெல்லாம் பொதுவுல வந்து சொல்றீங்க? :-)
May 03, 2006 12:53 PM
குமரன் (Kumaran) said...
லங்கோடு தமிழா என்று தெரியவில்லை என்னார் ஐயா. சல்லடம் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அரை கால்ச்சட்டையை சௌராஷ்ட்ரத்திலும் சல்லடம் என்று தான் சொல்லுவோம். தெலுங்கிலும் அப்படித் தான் என்று எண்ணுகிறேன். வட்டுடையைப் பற்றி இலக்கியத்தில் படித்ததுண்டு.
May 03, 2006 12:54 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் சிவமுருகன். வேட்டி தான் சரி.
May 03, 2006 12:55 PM
SK said...
வெட்டித் தகவல் இல்லாமல், வேட்டித் தகவல் தந்தமைக்கு நன்றி.
May 03, 2006 1:19 PM
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. தேர்தல் நேரத்தில் பலருக்கு இது வெட்டித் தகவல் தான். :-)
May 03, 2006 2:29 PM
வெற்றி said...
குமரன்,
உங்களிடமிருந்து இன்னுமொரு தரமான பதிவு. நன்றி. ஈழத்தமிழர்கள் வேட்டி என்று தான் சொல்வார்கள். அங்கே வேஷ்டி என்று சொல் புழக்கத்தில் இல்லை.
//சண்டைக்குப் போகும் வீரன் சின்னதாக இடுப்பைச் சுற்றிக் கட்டுவது வட்டுடை // -(என்னார் சொன்னது)
ஈழத்தில் இதைச் கொடுக்கு என்று சொல்வார்கள்.
எடுத்துக்காட்டு:- [1]"உங்க பார், அவன் கொடுக்கு கட்டிக்கொண்டு கையிலை அரிவாளோடை போறான்"
அடுத்தது, வேட்டியை மடித்து முழங்கால் உயரத்துக்கு கட்டுவதை ஈழத்தில் சண்டிக்கட்டு என்று சொல்வார்கள்.
எடுத்துக்காட்டு:-
[2]"அங்கை மழை பெய்து வெள்ளமாய் இருக்கு, சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு போ, இல்லையெண்டால் வேட்டி நனைஞ்சுபோம்"
May 03, 2006 4:46 PM
குறும்பன் said...
நமக்கு வேட்டின்னு சொல்றது தான் பழக்கம், கொஞ்சம் நாகரிகமா பேசுனும்ன்னா வேஷ்டின்னு சொல்றது. இப்பவெல்லாம் வேட்டி தான். ( இப்ப அநாகரிகமா பேசுரியான்னு கேட்காதிங்க.:-)) )
வேட்டி என்ற சொல்லை பார்த்ததும் எனக்கு தோன்றியது "வேட்டிய வரிஞ்சு கட்டு " என்ற பாட்டு வரி தான்.
May 03, 2006 5:40 PM
ஜெயஸ்ரீ said...
குமரன்,
வேஷ்டித என்ற சொல் வடமொழியிலும் உண்டு. வேஷ்டித என்றால் சுற்றப்பட்ட அல்லது சுற்றிக் கட்டப்பட்ட என்று பொருள். பரிவேஷ்டித என்றால் சுற்றப்பட்ட, சூழப்பட்ட என்று பொருல். உத்வேஷ்டித, உபவேஷ்டித என்று பல சொற்கள் ஏறத்தாழ இதே பொருளில் வரும்.
May 03, 2006 6:50 PM
சிவமுருகன் said...
அண்ணா,
நான் பின்னூட்டமிட்டதில் பாதி தான் வந்துள்ளது,
கதர் கைதறி வேட்டிகளை சொல்லும் போது வேட்டி என்பர், அதே பட்டு போன்ற விதமான ஆடைகளை சொல்லும் சமயம் தானாக வேட்டி- வேஷ்டி ஆகிவிடுகிறது.
May 03, 2006 11:44 PM
குமரன் (Kumaran) said...
எடுத்துக்காட்டுகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி வெற்றி. இனி கொடுக்கு, சண்டிக்கட்டு என்றால் என்ன என்று தெரியும். :)
May 04, 2006 4:11 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் குறும்பன். வேட்டி என்று பட்டிக்காட்டான் தான் சொல்வான். கௌரவமா சொல்றதுன்னா வேஷ்டின்னு சொல்லணும் என்ற எண்ணம் எனக்கும் இருந்ததுண்டு. :-)
May 04, 2006 4:12 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் ஜெயஸ்ரீ.நீங்கள் சொல்லும் வேஷ்டித, பரிவேஷ்டித, உத்வேஷ்டித, உபவேஷ்டித போன்ற வடமொழிச் சொற்களை நானும் படித்துள்ளேன். அதனால் இந்தச் சொல் அங்கிருந்தும் இங்கு வந்திருக்க வாய்ப்புண்டு. விஷயம் விடயம் ஆனது போல் வேஷ்டி வேட்டி ஆகியிருக்கலாம். அதன் பின் அதற்கு வெட்டியிலிருந்து வேட்டி வந்தது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கலாம். எப்போது என்ன நடந்தது என்பதனை வேட்டி என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் (வடமொழி இங்கே வருவதற்கு முன்) இருந்து பார்த்தால் தான் அறுதியிட்டுக் கூற முடியும். அது வரை இது இங்கிருந்து வடமொழி சென்றதா இல்லை அங்கிருந்து வந்ததா என்று சொல்லுவது கடினம்.
May 04, 2006 4:16 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் சிவமுருகன். நீங்கள் சொல்வது குறும்பன் சொல்வது போல. :) கதர்வேட்டியைச் சொல்லும் போது பட்டிகாரத்தனமான வேட்டி என்று சொல்லலாம். ஆனால் பட்டினைச் சொல்லும் போது பட்டு வேஷ்டி என்று சொன்னால் தான் கௌரவமாக இருக்கிறது. எல்லாம் எப்படி புழங்குகிறோமோ அதில் உள்ளது. பட்டு வேட்டி என்று பல முறை புழங்கிவிட்டால் அதுவும் பொருந்துவது மாதிரி தோன்றும். :-)
May 04, 2006 4:17 PM
லதா said...
// கதர் கைதறி வேட்டிகளை சொல்லும் போது வேட்டி என்பர், அதே பட்டு போன்ற விதமான ஆடைகளை சொல்லும் சமயம் தானாக வேட்டி- வேஷ்டி ஆகிவிடுகிறது //
பக்கத்தில் வரும் வார்த்தையைப் பொருத்து வேட்டி என்ற வார்த்தையை இப்படி இனம் பிரிப்பது கொஞ்சம்கூட நன்றாக இல்லை.
:-)))
May 04, 2006 4:48 PM
குமரன் (Kumaran) said...
இனம் எங்கே பிரிக்கிறோம் லதா? மொழி தானே பிரிக்கிறோம்? :-)
May 04, 2006 4:51 PM
G.Ragavan said...
குமரன், விஷயம் விடயமானது உண்மைதான். ஆனால் வேட்டிதான் வேஷ்டியானது என்பதற்கு மிகத் தகுந்த ஆதாரங்களைப் பாவேந்தர் தனது வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
வடமொழியில் இருப்பதால் அது வடமொழியே என்று சொல்ல முடியாது. தமிழ் மொழியிலும் இருப்பதால் அது தமிழ் மொழியே என்றும் கூறிட முடியாது. ஆராயும் நுண்புலன் வேண்டும்.
இப்பொழுது கலர் டீவி என்பதே செம்மொழிதான். ஆனால் அதன் மூலம் தமிழன்று.
வேட்டி என்பது சரியே. ரெட்டத்தட்டு, ஒத்தத்தட்டு வேட்டி என்று ரெண்டு உண்டு. ரெட்டத்தட்டு கட்டுனா நா தடுமாறி விழாம இருந்தாச் சரி.. :-))))
May 05, 2006 2:41 AM
பொன்ஸ்~~Poorna said...
//விஷயம் - விடயம் படிச்சிருக்கீங்களா? //
விஷயம் விடயமானது தெரியும்.. வந்தாரை வாழவைக்கும் தமிழ் மொழியில் எல்லா மொழி வார்த்தைகளும் தமிழாவது தெரிந்த சங்கதி தானே..
வேட்டி எப்படி வேஷ்டியாகப் போச்சுன்னு உங்களை நல்லா கேக்கலாம்னு நினைத்துத் தான் வந்தேன்.. இன்றைக்கு அவள் விகடனில் படித்த பட்டினத்தார் பாட்டு அந்தக் கேள்வி எழாமல் தவிர்த்து விட்டது. பட்டினத்தார் காலத்திலேயே வேட்டி என்ற சொல்லை பயன் படுத்தி இருக்கிறார்கள்.
பாட்டு:
உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று
வெயில் ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழைய ஒரு வேட்டி
உண்டு சகம் முழுவதும்
படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும்
உண்டு பசித்து வந்தால்
கொடுக்கச் சிவனுண்டு நெஞ்சே
நமக்குக் குறைவில்லையே..
May 05, 2006 3:59 AM
Anonymous said...
ரொம்ப பீலா வுடாதே! உனக்கு மண்டையில் மசாலா இல்லை என்பது எங்களுக்கு முன்பே தெரியும்!
போலிடோண்டு ரசிகர்மன்றம்
லண்டன் பிராஞ்ச்.
May 05, 2006 6:14 AM
rnateshan. said...
எப்படியோ ஒழுங்கா கட்டினா சரி!!
May 05, 2006 9:00 AM
குமரன் (Kumaran) said...
//வடமொழியில் இருப்பதால் அது வடமொழியே என்று சொல்ல முடியாது. தமிழ் மொழியிலும் இருப்பதால் அது தமிழ் மொழியே என்றும் கூறிட முடியாது. ஆராயும் நுண்புலன் வேண்டும்.
//
இதைத் தானே இராகவன் நானும் சொன்னேன். நான் சொன்னதை நீங்கள் உறுதிப் படுத்துகிறீர்களா? ரெட்டத்தட்டு, ஒத்தத்தட்டு வேட்டிகளைப் பற்றிச் சொல்லுங்களே. என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் அது தானா என்று சந்தேகமாக இருக்கிறது. கொஞ்சம் விளக்குங்கள்.
May 05, 2006 7:35 PM
குமரன் (Kumaran) said...
பட்டினத்தார் பாடலைத் தந்ததற்கு மிக்க நன்றி பொன்ஸ். அப்புறம்...எங்களுக்குள்ளே (இராகவன், தி.ரா.ச., இராமநாதன், நான், கொத்ஸ்,...) ஒரு விதி உண்டு. யாராவது ஒரு செய்யுளைப் பின்னூட்டத்தில் இட்டால் அதற்குப் பொருளும் சொல்ல வேண்டும் :-) இந்தப் பாட்டில் வேட்டி வருவது தெரிகிறது; ஆனால் பொருள் புரியவில்லையே... கொஞ்சம் சொல்லுங்கள். :-)
May 05, 2006 7:37 PM
குமரன் (Kumaran) said...
போலி டோண்டு ரசிகர் மன்றம் (அ) அந்தப் பெயரில் பின்னூட்டம் இடும் போலி டோண்டு,
நான் எழுதுவது பீலாவா இல்லையா என்பதை படிப்பவர்கள் தீர்ப்புக்கு விட்டுவிடுகிறேன். உன் எண்ணத்தில் அது பீலாவாய் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும்.
எனக்கு மண்டையில் மசாலா இல்லை என்பது உலகறிந்த சங்கதி. எனக்கு அருமையான, நல்ல வழியில் வேலை செய்யும் மூளை உண்டு மண்டையில். உன் மண்டையில் தான் மசாலா இருக்கும் - அசிங்கமான பின்னூட்டங்கள் இட்டு, கெட்ட வழியில் சென்று, அதனால் மூளை கெட்டு அழுகி, அந்த கவுச்சி நாற்றம் வெளியே வீசாமல் இருக்க, மசாலா சேர்த்து வைத்திருக்கிறாயோ என்னவோ? யாருக்குத் தெரியும்.
May 05, 2006 7:42 PM
குமரன் (Kumaran) said...
நடேசன் ஐயா. ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாய் சொன்னீர்கள். :-)
May 05, 2006 7:43 PM
பொன்ஸ்~~Poorna said...
கெடைச்சது ஒரு சான்ஸ்,.. நமக்கும் விளக்கம் சொல்ல. இதோ விளக்கம்:
உடுக்கக் கவிக்கக், குளிர்காற்று-வெயில் ஒடுங்கி வந்தால், தடுக்கப் பழைய ஒரு வேட்டி உண்டு:
உடலை மறைக்கவும், குளிருக்கும் வெயிலுக்கும் பாதுகாப்பாகவும் பழைய வேட்டி ஒன்று இருக்கிறது.
சகம் முழுவதும் படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும் உண்டு:
படுத்து உறங்க உலகம் முழுவதும் ஒரு வெளித் திண்ணை இருக்கிறது (அந்தக் காலத்துல இருந்துச்சி,...)
பசித்து வந்தால் கொடுக்கச் சிவனுண்டு:
பசி வரும்போது உணவு தர நான் வணங்கும் தெய்வமான சிவன் இருக்கிறார்.
நெஞ்சே நமக்குக் குறைவில்லையே..:
இத்தனை இருக்கும் போது எனக்கு எந்த குறைவும் இல்லை.. நிறைவான வாழ்க்கைதான்..
தெளிவா இருக்கா?
May 06, 2006 12:42 AM
ஜெயஸ்ரீ said...
பொன்ஸ்,
பெரிய ஆளுங்க நீங்க. கலக்கறீங்க.
இருக்கிற கட்சி தான் சரியில்ல.......
May 06, 2006 7:21 AM
நாமக்கல் சிபி said...
சட்டசபைக்குள்ள இதை எப்படிச் சொல்ல வேண்டும்! வேட்டி என்றுதானே!
May 06, 2006 8:28 AM
SK said...
உடுத்துக்கட்ட ஒரு வேட்டி இருக்கிறது
படுத்துறங்க ஒரு திண்ணையும் உள்ளது.
எத்தனை முறை உண்டாலும் மீண்டும் மீண்டும்
பசிக்கும் இவயிற்றுக்கு உண்டியிட
சிவனின் கருணையும் உண்டு.
எந்தக் குறையும் இல்லையே
என்று நெஞ்சோடு பேசுகிறார்
பட்டினத்தார்!
[சரிதானே, 'பொன் ஸ்'?]
May 06, 2006 8:33 AM
SK said...
மன்னிக்கவும்,
நீங்கள் இட்ட மறுமொழியைப் பார்க்காவில்லை!
May 06, 2006 8:34 AM
SK said...
//சட்டசபைக்குள்ள இதை எப்படிச் சொல்ல வேண்டும்! வேட்டி என்றுதானே!
By நாமக்கல் சிபி//
கேள்வியே தவறு!
'சொல்ல' அல்ல!
'உருவ' என்று இருக்க வேண்டும்!!
May 06, 2006 10:07 AM
நாமக்கல் சிபி said...
//கேள்வியே தவறு!
'சொல்ல' அல்ல!
'உருவ' என்று இருக்க வேண்டும்!!//
அரசியலில் உங்களுக்கு வளமான எதிர்காலம் உள்ளது எஸ்.கே!
May 06, 2006 10:28 AM
வெற்றி said...
பொன்ஸ், SK,
பட்டினத்தார் பாடலுக்கான உங்கள் இருவரின் விளக்க உரைகளும் மிகவும் நன்றாக உள்ளது.நன்றிகள்.
//உடுக்கக் கவிக்கக் //
கவிக்க என்பதன் பொருள் என்ன?
//கெடைச்சது ஒரு சான்ஸ் //
பொன்ஸ், சந்தர்ப்பம்/வாய்ப்பு எனும் அழகான தமிழ்ச் சொற்கள் இருக்கும் போது, ஏன் chance எனும் ஆங்கலச் சொல்லை வலுக் கட்டாயமாக புகுத்துகிறீர்கள்? அது சரி, சந்தர்ப்பம் தமிழ்ச் சொல்லா?
May 06, 2006 11:20 AM
குமரன் (Kumaran) said...
பார்த்தீர்களா பொன்ஸ். அம்புட்டுத் தான். நன்றாகப் பொருள் சொன்னீர்கள் நன்றி.
May 06, 2006 3:58 PM
குமரன் (Kumaran) said...
சிபி. சட்டசபை என்ன எங்காகிலும் வேட்டி வேட்டி தானே? ஒரு வேளை தமிழக அமைச்சர்களைக் கிண்டல் செய்கிறீர்களோ? அரசியல் புரியாதவன் நான்.
May 06, 2006 4:00 PM
குமரன் (Kumaran) said...
நன்றாய் பொருள் சொன்னதற்கு நன்றி எஸ்.கே. ஐயா.
May 06, 2006 4:01 PM
குமரன் (Kumaran) said...
வெற்றி,
கவிக்க என்றால் போர்த்திக் கொள்ள என்று பொருள் இருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் இதுவரை பொருள் சொன்ன இருவரும் வந்து அதனை உறுதிப் படுத்தட்டும்.
பொன்ஸ் பழக்கத்தின் குறையால் (தோஷத்தால்) அப்படி சொல்லிவிட்டார். வலுக்கட்டாயமாகப் புகுத்தவில்லை என்று எண்ணுகிறேன். அது தற்போது தமிழகத்தார் மிக எளிதாகப் புழங்கும் ஒரு சொல்லாகிவிட்டது. முதலில் அவரின் பின்னூட்டம் பார்த்தபோது எனக்கு அது தமிழன்று என்றே தெரியவில்லை. நீங்கள் சொன்னபிறகு தான் அவர் வேற்று மொழிச் சொல்லைச் சொல்லியிருப்பதே தெரிந்தது. அந்தளவிற்கு அது தமிழக மக்களிடையே புழங்குகிறது. பொன்ஸ் எத்தனையோ வேற்று மொழிச் சொற்களுக்குத் தமிழைச் சொன்னவர் தான். எடுத்துக்காட்டாக விஷயம் என்பதற்கு சங்கதி என்பதனைப் பயன்படுத்தலாம் என்று எனக்குச் சொன்னவர். அதே போல் இந்த 'சொல் ஒரு சொல்'லில் கற்றவற்றை வேறு இடங்களில் அவர் புழங்குவதைப் பார்த்தேன். அவரும் நம்மைப் போல் கற்றுக் கொண்டு தான் இருக்கிறார்.
சந்தர்ப்பம் என்பது வடமொழிச் சொல் என்று எண்ணுகிறேன்.
May 06, 2006 4:06 PM
பொன்ஸ்~~Poorna said...
//கவிக்க என்பதன் பொருள் என்ன?
//
குமரன், வெற்றி,
கவிக்க என்றால், உடலை மறைக்க, அல்லது அணிய என்று பொருள் வருவது போல் இருக்கிறது.. சரியாகத் தெரியவில்லை.
நீங்கள் கேட்டபின் தேடிப் பார்த்தேன்.. கம்ப ராமாயணத்திலும் இந்த சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்:
"பரதன் வெண் குடை கவிக்க"
இங்கு பிடிக்க, அல்லது விரித்து மறைக்க என்று கொள்வோமானால், மறைக்க என்பது பொருத்தமே..
May 06, 2006 10:50 PM
பொன்ஸ்~~Poorna said...
//ஏன் சான்ஸ் எனும் ஆங்கலச் சொல்லை வலுக் கட்டாயமாக புகுத்துகிறீர்கள்? //
வெற்றி, ஆங்கிலச் சொல்தான்.. ஆனால், வலுக் கட்டாயமாகப் புகுத்த வில்லை.. குமரன் சொல்வது போல் தானாக வந்து விட்டது. இயல்பாக இருந்தது எனவே மாற்றவில்லை..
சந்தர்ப்பம் தமிழ் போல் தோன்றவில்லை. வாய்ப்பு சரி தான்.. வேறு ஏதேனும் சொற்கள் இருக்கிறதா இந்த பொருளில்? கொஞ்சம் மெனக்கெட்டால் இன்னும் தகுதியான சொல் கிடைக்கும் என்றே தோன்றுகிறது..
May 06, 2006 10:54 PM
வெற்றி said...
மதிப்பிற்குரிய குமரன்,பொன்ஸ்
கவிக்க என்ற சொல்லுக்கு விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்.
//பொன்ஸ் பழக்கத்தின் குறையால் (தோஷத்தால்) அப்படி சொல்லிவிட்டார். வலுக்கட்டாயமாகப் புகுத்தவில்லை என்று எண்ணுகிறேன்//
//வெற்றி, ஆங்கிலச் சொல்தான்.. ஆனால், வலுக் கட்டாயமாகப் புகுத்த வில்லை.. குமரன் சொல்வது போல் தானாக வந்து விட்டது. இயல்பாக இருந்தது எனவே மாற்றவில்லை..//
பொன்ஸ் அண்ணா, மன்னித்துக் கொள்ளுங்கள். நான் தங்களிடம் குற்றம் கண்டு பிடித்து குறை சொல்லும் நோக்கத்தில் அப்படிச் சொல்லவில்லை. குமரன், இராகவன், மற்றும் தங்கள் போன்றோரின் பதிவுகளைப் படித்துத் தான் நான் என் தமிழ் அறிவை வளர்த்துக் கொள்கிறேன். தங்களின் தமிழ் அறிவும், ஆர்வமும் கண்டு நான் பல தடவைகள் வியந்திருக்கிறேன்.ஆகவே உங்களைப் போன்ற தமிழ் ஆவலர்கள் எதிர் காலத்தில் தமிழில் ஆங்கிலச் சொற்களைப் புழங்கக் கூடாது எனும் ஆசையால் வந்த அன்பான பின்னூட்டம்
[feedback] தான் அது. தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
May 07, 2006 10:32 AM
வெற்றி said...
இராகவன்,
//ரெட்டத்தட்டு, ஒத்தத்தட்டு வேட்டி என்று ரெண்டு உண்டு. ரெட்டத்தட்டு கட்டுனா நா தடுமாறி விழாம இருந்தாச் சரி.. :-))))//
இன்று தான் நான் இவ் வேட்டி வகைகளைக் கேள்விப்படுகிறேன்.
ரெட்டத்தட்டு, ஒத்தத்தட்டு வேட்டி என்றால் என்ன என்று சற்று விளக்கம் தர முடியுமா?
ஈழத்தில் இச் சொற்கள் புழக்கத்தில் இல்லையென்றே நினைக்கிறேன். நான் ஈழத்தில் வாழ்ந்த காலம் குறைவென்பதால் சரியாகத் தெரியாது.
ஆனால் ஈழத்திலும் வேட்டியை இரு வகையாகப் பிரிப்பார்கள்.
[1] நாலு முழ வேட்டி
[2] எட்டு முழ வேட்டி
சில வேளை, நானும் நீங்களும் ஒரே விடயத்தை வெவ்வேறு விதமாகச் சொல்லுகிறோமோ தெரியாது.
May 07, 2006 10:43 AM
வெற்றி said...
பொன்ஸ்,
//சந்தர்ப்பம் தமிழ் போல் தோன்றவில்லை. வாய்ப்பு சரி தான்.. வேறு ஏதேனும் சொற்கள் இருக்கிறதா இந்த பொருளில்? கொஞ்சம் மெனக்கெட்டால் இன்னும் தகுதியான சொல் கிடைக்கும் என்றே தோன்றுகிறது..//
ஈழத்தில் 'சமயம்', 'தருணம்' எனும் சொற்கள் சந்தர்ப்பம், வாய்ப்பு போன்ற சொற்களுக்கு பதிலாக புழங்குவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனல் இவை தமிழ்ச் சொற்களா என்று தெரியாது.
எடுத்துக்காட்டுகள்:
[1]"சமயம் பார்த்து அப்பாட்டை விசயத்தை சொல்லிப் போடு"
[2]"நல்ல தருணமாய் பார்த்து ஆளை வளைச்சுப் போடு"
May 07, 2006 10:59 AM
வெளிகண்ட நாதர் said...
குமரன், ஏற்கனவே இந்த வேட்டி அதுவும் கறை வேட்டி ஆளுங்க அலும்பு தாங்க முடியலேன்னா, அதுவும் எலெக்ஷன் டைம் அதுவும், நீங்களுமா?
May 07, 2006 3:52 PM
manu said...
குமரன், வெட்டி வேலை செய்து பணம் சம்பாதிப்பதை விட
வேட்டி விடயம் சொன்னதற்கு நன்றி.
"சம்பாதிப்பது" தமிழா?
இஙுகு வெட்டி(cut n paste}.:-)))
தமிழ் வார்த்தை உயர்வு.
வேட்டி அழகு. மனு.
May 07, 2006 8:18 PM
Sivabalan said...
நல்ல பதிவு!! மிக்க நன்றி!!
May 07, 2006 8:51 PM
SK said...
'கவிக்க'
பொன்ஸ் அவர்கள் மிக அழகாக முதலிலேயே 'மறைக்க' என்று சரியான பொருள் தந்து விட்டார்!
'குடை கவிக்க'
'மேகம் கவிக்குது'
இந்த இரு இடங்களிலும், 'கவித்தல்' என்றால் 'உயரத் தூக்கி மறைத்தல்' என்ற பொருளே வருகிறது!
இப்போது, குமரன் அய்யாவிற்கு இன்னொரு சவால்!
'கவித்தல்', 'கவிழ்த்தல்' இதில் எது சரி?!!!!!!!
May 07, 2006 9:12 PM
நாமக்கல் சிபி said...
கன்னடத்தில் இதனை தோவத்தி/தோத்தி என்கிறார்கள். இது தமிழிலிருந்தி உருவானதா அல்லது ஆங்கிலத் தழுவலா குமரன்?
(தமிழாராய்ச்சி மட்டும் போதும், விட்டு விடுங்கள் என்கிறீரா?)
May 07, 2006 11:56 PM
குமரன் (Kumaran) said...
பொன்ஸ், பரதன் வெண்குடை கவிக்க என்னும் போது குடையை தலைகீழாய் இருக்கும் ஒரு பாத்திரம் போல் பிடிக்க என்ற பொருள் வருவது போல் தோன்றுகிறது.
May 08, 2006 9:22 AM
குமரன் (Kumaran) said...
வெற்றி, பொன்ஸ் அண்ணா இல்லை; அக்காவும் இல்லை. நம் எல்லாரையும் விட இளைவராய் இருப்பார் என்று எண்ணுகிறேன்; அதனால் தங்கை என்று அழைத்தால் பொருந்தும். ஆனால் அவர் ஒத்துக் கொள்ள மாட்டார். :-)
தமிழில் ஆங்கிலம், வடமொழி, பிறமொழிச் சொற்களைச் சேர்த்துப் புழங்குவது பழக்கத்தால் இயல்பாய் அமைந்து விடுகிறது. நேற்று என் பழைய பதிவுகள் (டிசம்பரில் எழுதியது தான்) படித்துக் கொண்டிருந்தேன். என்னையே அறியாமல் எத்தனை வடமொழிச் சொற்கள் பெய்து அந்தப் பதிவுகளை எழுதியிருக்கிறேன் என்பதைப் படிக்க வியப்பாய் இருக்கிறது. தனித் தமிழ்ச் சொற்களைப் புழங்கப் புழங்க அது சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.
May 08, 2006 9:26 AM
குமரன் (Kumaran) said...
வெற்றி, நீங்கள் சொல்லும் நாலுமுழ வேட்டி, எட்டுமுழ வேட்டியைத் தான் இராகவனும் ஒத்தத்தட்டு, ரெட்டத் தட்டு என்று கூறுகிறார் என்று நினைக்கிறேன். அவர் வந்து மேற்கொண்டு சொல்லட்டும்.
May 08, 2006 9:27 AM
குமரன் (Kumaran) said...
வெற்றி, சமயம் என்ற சொல் தமிழா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் தருண: என்ற சொல் வடமொழியிலும் அதே பொருளில் வழங்குகிறது. ஆனால் அது தமிழிலிருந்து அங்கு சென்றதா இல்லை அங்கிருந்து இங்கு வந்ததா என்று சொல்ல இயலவில்லை.
May 08, 2006 9:29 AM
குமரன் (Kumaran) said...
வெளிகண்ட நாதர். ஆமாம் நீங்கள் சொல்வது போல் கரை வேட்டி ஆட்களால் அந்த வேட்டிகள் கறை வேட்டிகளாகத் தான் மாறிவிட்டன. :-) தற்செயலாய் அமைந்தது தானே ஒழிய தேர்தல் நேரத்தில் வேட்டியைப் பற்றிப் பேசவேண்டும் என்று எண்ணி இடவில்லை. :-)
May 08, 2006 9:33 AM
குமரன் (Kumaran) said...
நன்றி மனு. 'சம்பாத்யம்' தமிழ் இல்லை என்று எண்ணுகிறேன். வடமொழிச் சொல். வருமானம் தமிழ்ச் சொல்.
May 08, 2006 9:34 AM
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்
May 08, 2006 9:34 AM
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. ஐயாவின் கேள்விக்கு குமரன் மட்டும் பதில் சொல்லவேண்டும் என்று கட்டாயம் இல்லை. எல்லோரும் சொல்லலாம். அதுவும் இது சவால் அல்லவா? :-)
May 08, 2006 9:35 AM
குமரன் (Kumaran) said...
சிபி, நீங்கள் கன்னடத்தில் வேட்டிக்கு என்ன சொல்வார்கள் என்று சொல்லியிருப்பதைப் பார்த்தால் ஏதோ ஒன்று புரிந்தும் புரியாத மாதிரி இருக்கிறது. ஆங்கிலத்திற்கு தோத்தி என்ற சொல் சென்றது இந்தியிலிருந்து. இந்திக்கு கன்னடத்திலிருந்து சென்றிருக்கலாம். ஆனால் வேட்டியோ வேஷ்டியோ தோவத்தி அல்லது தோத்தி எப்படி ஆனது என்று தெரியவில்லை.
May 08, 2006 9:37 AM
குமரன் (Kumaran) said...
வெற்றி. நீங்கள் இந்தப் வலைப்பூவை மட்டுமே படிக்கிறீர்கள் போலிருக்கிறது. என் மற்ற வலைப்பூக்களையும் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்று எண்ணுகிறேன். என் மற்ற வலைப்பூக்களைப் பார்க்க:
http://www.blogger.com/profile/13762040
May 08, 2006 9:48 AM
ஜெயஸ்ரீ said...
கவித்தல் கவிழ்த்தல் இரண்டும் வெவ்வேறு பொருள் தரும் சொற்கள்.
கவிதல் என்பது ஒன்றுகூடி ஒரு பொருளின் மேல் சூழ்வது . (உ-தா) மேகம் கவிந்த மலை முகடு.
கவித்தல் என்பது தலைக்குமேல் (தலைமேல் அல்ல) குடை போன்றவற்றை உயர்த்திப் பிடித்தல்.
(உ-தா) பரதன் வெண் குடை கவிக்க
கவிழ்த்தல் என்றால் ஒரு பொருளைத் தலைகீழாகத் திருப்புவது. (உ-தா) குடத்தைக் கவிழ்
ஆட்சியைக்(!) கவிழ்
May 08, 2006 10:15 AM
Anonymous said...
இப்போது இன்னும் சுவையாகப் போகிறது!
முன்னொரு படத்தில் ந்ச்க்யும் ம்க்ரும் போட்டி போடுவார்கள்.
இவர் ஒரு விரலைக் கான்பிப்பார் பதிலுக்கு அவர் இரண்டு விரல்;
இவர் மூன்று; அவர் நான்கு இப்படிப் போகும்
அந்தக் கதையைப் பிறகு சொல்கிறேன், யாரேனும் விரும்பினால்!
இங்கெயும் அது போல, 'பொன் ஸ்' ஒன்று என்றார், நான் கவித்தல், கவிழ்த்தல் என இரண்டு சொன்னேன்,
இப்போது 'ஜெயஸ்ரீ'யோ, கவிதல், கவித்தல்,கவிழ்த்தல் என மூன்று சொல்லியிருக்கிறர்.
னான் அதை நான்காக்கி, கவிதல், கவித்தல், கவிழ்தல், கவிழ்த்தல் என்று வைக்கிறேன்.
ஒவ்வொன்றும் ஒரு சொல், வேறு வேறு பொருள்!
இதில் இரண்டு தானியங்கி;
இரண்டு பிறவியங்கி!
BTW,'ஜெயஸ்ரீ'
பிடித்தலா திருப்புதலா, மறைத்தலா, இந்த கவித்தல், கவிழ்த்தல் இவையெல்லாம்?
May 08, 2006 11:17 AM
Anonymous said...
இப்போது இன்னும் சுவையாகப் போகிறது!
முன்னொரு படத்தில் ந்ச்க்யும் ம்க்ரும் போட்டி போடுவார்கள்.
இவர் ஒரு விரலைக் கான்பிப்பார் பதிலுக்கு அவர் இரண்டு விரல்;
இவர் மூன்று; அவர் நான்கு இப்படிப் போகும்
அந்தக் கதையைப் பிறகு சொல்கிறேன், யாரேனும் விரும்பினால்!
இங்கெயும் அது போல, 'பொன் ஸ்' ஒன்று என்றார், நான் கவித்தல், கவிழ்த்தல் என இரண்டு சொன்னேன்,
இப்போது 'ஜெயஸ்ரீ'யோ, கவிதல், கவித்தல்,கவிழ்த்தல் என மூன்று சொல்லியிருக்கிறர்.
னான் அதை நான்காக்கி, கவிதல், கவித்தல், கவிழ்தல், கவிழ்த்தல் என்று வைக்கிறேன்.
ஒவ்வொன்றும் ஒரு சொல், வேறு வேறு பொருள்!
இதில் இரண்டு தானியங்கி;
இரண்டு பிறவியங்கி!
BTW,'ஜெயஸ்ரீ'
பிடித்தலா திருப்புதலா, மறைத்தலா, இந்த கவித்தல், கவிழ்த்தல் இவையெல்லாம்?
May 08, 2006 11:17 AM
பொன்ஸ்~~Poorna said...
//பொன்ஸ் அண்ணா, மன்னித்துக் கொள்ளுங்கள்.நான் தங்களிடம் குற்றம் கண்டு பிடித்து குறை சொல்லும் நோக்கத்தில் அப்படிச் சொல்லவில்லை.//
வெற்றி, என்னங்க மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க.. நீங்க கேட்டது சரியான கேள்விதானே. 'சொல் ஒரு சொல்' பதிவிலயே இப்படி ஆங்கிலக் கலப்போட பேசுவது தப்புத் தானே.. :) இது மாதிரி அன்பானக் குட்டுகளால தான் எங்க மொழியும் வளரும் :)
அப்பப்போ குட்டுங்க :)
May 09, 2006 11:50 AM
பொன்ஸ்~~Poorna said...
குமரன், வெற்றி,
சமயமும் வடமொழியில் புழங்கும் சொல் தாங்க.. "இஸ் சமய்", "அபி சமய் நஹி" ந்னு இந்தியில் பேசியே கேட்டிருக்கேனே...
தருணம் கொஞ்சம் ஐயம் தருவதா இருந்தாலும், சமயம் அப்படித் தெரியலை.. யாராவது தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும் :)
May 09, 2006 11:54 AM
பொன்ஸ்~~Poorna said...
எஸ் கே ஐயா,
புதுப் புது சொற்கள் தருகிறீர்கள்..
சுவையான விளையாட்டுத் தான்..
நானும் முயல்கிறேன்:
கவிதல் :- தன்வினை - மூடுவது
கவித்தல்:- பிறவினை - வேறொன்றால் மூட வைப்பது
கவிழ்தல்:- தன்வினை - தானே திருப்புதல், விழுதல்
கவிழ்த்தல் - பிறவினை - பிறரைத் திருப்புதல், கீழே விழவைத்தல்..
சரியா?
May 09, 2006 11:58 AM
SK said...
சுருங்கச் சொல்லி விளங்க வத்து விட்டீர்கள், 'பொன்ஸ்'.
நன்றி.
May 09, 2006 1:28 PM
johan-paris said...
ஈழத்தில்;வேட்டி என்பதே புழக்கத்திலுள்ள சொல்!! 4 முழ வேட்டி என்பது ஒரு சுற்றுச் சுற்றிக் கட்டுவது நடக்கும் போது முழங்காகுக்கு மேலும் சற்றுத் தெரியும்; 8 முழ வேட்டி என்பது இரு சுற்றுச் சுற்றிக் கட்டுவது ;எந்நிலையிலும் இடுப்புக்கு மேலிருந்து பாதம் வரை முற்றாக மறைப்பது-பலர் விரும்பிப் கட்டுவது; பாதுகாப்பானது."இந்த "லங்கோடு" எனும் சொல் சிங்கள மக்கள் ஆண்களின் உள்ளாடையைக் குறிப்பிடும் சொல்.தென்னிலங்கை வாழ் தமிழர்களும் இதைப் பேச்சு வழக்கில் பாவிப்பர்.
வருமானம் எனும் சொல்லுக்கு வருவாய்!;ஊதியம் எனும் சொல்களும் புழக்கத்திலுண்டு.
சமயம் எனும் சொல்லுக்கு வேளை என்பதும் பாவிப்போம்.
யோகன்
பாரிஸ்
May 09, 2006 4:35 PM
G.Ragavan said...
வெற்றி மற்றும் குமரன்.
இந்த ஒத்தத்தட்டு, ரெட்டத்தட்டு என்ற சொற்கள் மிகப் பழைய தமிழ்.
தட்டு மறைக்கும். தட்டி என்று இன்று சொல்வார்கள் அல்லவா. "தட்டூடு அற வேல்" என்று கந்தர் அநுபூதியிலும் வரும்.
சுற்றிக் கட்டினால் ஒரு மறைப்பு வருவது ஒத்தத்தட்டு வேட்டி (அதாவது வெற்றி சொன்ன நாலு முழம்.). சுற்றிக் கட்டினால் இரண்டு மறைப்பு வருவது ரெட்டத்தட்டு வேட்டி (அதாவது எட்டு முழம்.)
இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
May 11, 2006 3:05 AM
G.Ragavan said...
// Ennar said...
சண்டைக்குப் போகும் வீரன் சின்னதாக இடுப்பைச் சுற்றிக் கட்டுவது வட்டுடை எம்ஜியார் சில படங்களில்(அடிமைப்பெண்) அணிந்திருப்பார் அதற்குப் பெயர் வட்டுடை என்பர். சல்லடம் என்றால் அரைப் பேண்ட்
சித்தாடை கச்சை வேட்டி லங்கோடு தமிழ் தானே //
என்னார், லங்கோடு தமிழ் இல்லை. கோமணம் என்பதே சரி. எங்கோ மணம் வீசுதுன்னு ஒரு பாட்டை இழுத்து இழுத்துப் பாடுன பாகவதர் எங்கோமணம் வீசுதுன்னு பாடுனதா ஒரு பட்டிக்காட்டுப் பேச்சு உண்டு.
May 11, 2006 3:06 AM
குமரன் (Kumaran) said...
அனானிமஸாக பின்னூட்டம் இட்டிருக்கும் எஸ்.கே. ஐயா. அந்த ஒரு விரல், இரு விரல், மூவிரல் கதையைச் சொல்லுங்கள். மற்ற படி உங்கள் கேள்விகளுக்கு பொன்ஸ் விடை சொல்லிவிட்டார்.
May 14, 2006 6:43 AM
குமரன் (Kumaran) said...
பொன்ஸ், தருண: என்ற சொல் வடமொழியாகிய சமஸ்கிருதத்தில் இருக்கிறது. ஆனால் சமய என்ற சொல்லைப் படித்ததாக நினைவில்லை. நீங்கல் சொல்வது போல் ஹிந்தியில் சமய் என்று கேட்டிருக்கிறேன். அதே நேரத்தில் தருண் என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்; அப்போது தருண் என்பது இளமை என்ற பொருளில் புழங்கும். சமயம் இங்கிருந்து அங்கே சென்றிருக்க வாய்ப்புண்டு என்று எண்ணுகிறேன்; ஆனால் அது நான் சமய: என்பதை வடமொழியில் படிக்காததாலேயே சொல்கிறேன். இல்லை அதுவும் வடமொழியில் பயின்றுள்ளது என்று யாராவது சொன்னால், இங்கிருந்து அங்கு சென்றதா இல்லை அங்கிருந்து இங்கு வந்ததா என்று சொல்ல முடியாது. நிறைய சொற்கள் இப்படித் தான்.
May 14, 2006 6:47 AM
குமரன் (Kumaran) said...
ஈழத்தில் புழங்கும் தமிழ்ச்சொற்களைப் பற்றி சொன்னதற்கு நன்றி யோகன் ஐயா.
May 14, 2006 6:49 AM
குமரன் (Kumaran) said...
நன்றாய் புரிந்தது இராகவன்
May 14, 2006 6:50 AM
குமரன் (Kumaran) said...
இராகவன், கோமணம் என்ற சொல்லை பலரும் அறிந்திருப்பர். ஆனால் லங்கோடு என்ற சொல்லும் வழக்கில் இருக்கிறது. அது தமிழில்லையென்றால் எந்த மொழிச் சொல் என்று சொல்ல முடியுமா? எனக்கு அது லுங்கி, கைலி என்பவற்றைப் போல் உருதிலிருந்து வந்ததோ என்று தோன்றுகிறது. ஆனால் யாராவது உறுதிபடுத்த வேண்டும்.
May 14, 2006 6:52 AM
Post a Comment