இந்த 'அர்த்தம்' என்ற வடமொழிச் சொல்லை நாம் மிகுதியாகப் பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் இதற்குப் பதிலாக 'பொருள்' என்ற சொல்லை எழுதும் போது நான் பயன்படுத்தியிருந்தாலும் பேசும் போது 'இதற்கு என்ன அர்த்தம்?' என்று தான் வருகிறதே ஒழிய 'இதற்கு என்ன பொருள்?' என்று கேட்பதில்லை. அதனால் எளிமையான இந்தச் சொல்லை இந்த வாரத்திற்கு உரிய சொல்லாய் இங்கு இடுகிறேன். நண்பர்கள் எல்லோரும் தயை செய்து எங்கெல்லாம் தாங்கள் 'அர்த்தம்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம் என்று கவனித்து அங்கெல்லாம் 'பொருள்' என்ற சொல்லைப் பயன்படுத்துங்கள்.
***
ஏப்ரல் 12, 2006 அன்று 'சொல் ஒரு சொல்' பதிவில் என்னால் இடப்பட்ட இடுகை இது. இதற்கு வந்த பின்னூட்டங்கள் இங்கே:
இலவசக்கொத்தனார் said...
எல்லா அர்த்ததிலேயும் இந்த பொருளை உபயோகிக்கலாமாங்க? :)
April 12, 2006 7:26 PM
கௌசிகன் said...
குமரன் பரிந்துரைக்கு நன்றி. அது தமிழாக்கப்பட்ட வடமொழி வார்த்தை. இது போல நிறைய இருக்கு குமரன். இராமாயணத்தை தமிழ்ல இராமாயணம்னு சொல்றதில்லையா. லிங்கத்தை தமிழ்ல லிங்கம்னு சொல்றதில்லையா அந்த மாதிரி தான். (ராமலிங்கம், சிவலிங்கம் இத எல்லாம் தமிழ்ப்படுத்த முடியாது குமரன்.ஏன்னு கேக்காதீங்க). சிபி சார் பதிவில சைலன்டா பட்டம் எல்லாம் குடுத்திட்டீங்க. அதுக்கு இது கூட எழுதாட்டி எப்படி :) :)
தயவு செய்து இதுமாதிரி வேண்டுகோளெல்லாம் விடுக்காதீர்கள். தயவுக்கு பதில் தயவு. :) :) இரண்டு ஸ்மைலியும் கூட.
April 12, 2006 7:55 PM
சிவமுருகன் said...
பொருள் என்றால் அருஞ்சொற்பொருளை விட ஜடப்பொருட்களே ஞாபகத்தில் வருகிறது எனவே உபயோகப்படுத்துவது சற்று கடினம், இருந்தாலும் முயன்றால் முடியாதது இல்லை.
April 12, 2006 9:26 PM
Anonymous said...
Good work towards Tamil.
Continue...
N.S.Kumaran.
April 12, 2006 10:42 PM
குமரன் (Kumaran) said...
கொத்ஸ்...
இந்தச் சொல்லுக்கு என்ன என்ன பொருள் உங்களுக்குத் தோன்றுகிறது என்று சொல்லுங்கள். அவற்றைப் பார்த்தப் பின் உங்கள் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.
April 13, 2006 2:22 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் கௌசிகன். அது தமிழாக்கப்பட்ட வடமொழிச் சொல். (யாராவது வார்த்தை, வாக்கியம், சொல் இவற்றிற்கு உள்ள வித்தியாசங்களைச் சொல்லுங்களேன்). பொருள் என்ற தனித் தமிழ்ச் சொல் இருக்கும் போது தமிழாக்கப்பட்டச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாமே என்று தோன்றியது. சிவமுருகன் சொன்னது போல் இப்போது அருஞ்சொற்பொருள் என்றாலே 'அர்த்தம்' என்ற சொல் தான் வந்து விழுகிறது. 'பொருள்' என்ற சொல்லுக்கு அப்படி ஒரு பொருள் இருப்பதையே நாம் மறந்து விடுகிறோம். மீண்டும் அந்தப் பொருளில் 'பொருளை'ப் பயன்படுத்தினால் அந்தச் சொல்லின் பொருள் மறைந்து போகாமல் இருக்குமல்லவா? அவ்வளவு தான். நீங்கள் 'அர்த்தம்' தான் பயன்படுத்துவேன்; ஏனெனில் அது தமிழ்ப்படுத்தப்பட்டுவிட்டது என்று சொல்வீர்களானால் அது உங்கள் தனிப்பட்ட விருப்பம் என்று சொல்லி விட்டுவிடுகிறேன். :-)
April 13, 2006 2:27 PM
குமரன் (Kumaran) said...
இராமாயணம் என்று வழக்கில் இருக்கிறது. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அதனையே இராமகாதை என்று கூட சொல்லலாமே. அதே பொருள் தானே வருகிறது இந்தத் தனித் தமிழ்ச் சொல்லில்? (ஆஹா. அர்த்தம் என்று பயன்படுத்தாமல் பொருள் என்று சொல்லியாகிவிட்டது). கம்பர் அப்படித்தான் தன் நூலுக்குப் பெயர் வைத்தார் என்று எண்ணுகிறேன். நாம் தான் அதனைக் கம்பராமாயணம் என்கிறோம்.
இராமலிங்கம், சிவலிங்கம் என்று உள்ளதை மாற்ற வேண்டாம். ஏனெனில் அவை பெயர்கள். அவற்றிற்குத் தனித் தமிழ்ச் சொற்கள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இல்லை என்றால் இலிங்கம் என்று தமிழ்ப் படுத்திப் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன்.
April 13, 2006 2:31 PM
குமரன் (Kumaran) said...
சிவமுருகன், நாம் மறந்து போன ஒரு பொருள் அது. அர்த்தம் என்றே எல்லோரும் சொல்லி அதுவே முன்வந்து விழுகிறது. ஆனால் இருக்கும் சொற்களுக்குள்ளேயே எளிமையாக மாற்றி எழுதக் கூடியது இந்தச் சொல் என்று நினைத்தேன். நீங்கள் என்னடாவென்றால் அது கடினம் என்கிறீர்கள். இனிமேல் வரப்போகும் சொற்களுக்கு என்ன சொல்வீர்களோ? :-)
April 13, 2006 2:32 PM
குமரன் (Kumaran) said...
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா என்.எஸ். குமரன்.
சிவமுருகனும் 'நீலமேகம்' வீட்டுக் காரர் தான். முடிந்தால் அவருடையப் பதிவுகளையும் படித்துப் பார்.
April 13, 2006 2:34 PM
கௌசிகன் said...
//அதனையே இராமகாதை என்று கூட சொல்லலாமே. அதே பொருள் தானே வருகிறது இந்தத் தனித் தமிழ்ச் சொல்லில்?//
ஓ சொல்லலாமே. ஒரு நிமிடம். நாங்க எல்லாம் இராமாயணத்தை இராம காதைன்னு சொல்லணும். நீங்க லிங்காஷ்டகம்னு பதிவு போடுவீங்களா? :) :)
எந்த ஊர் நியாயம் இது குமரன்?
April 14, 2006 2:20 PM
கௌசிகன் said...
//இல்லை என்றால் இலிங்கம் என்று தமிழ்ப் படுத்திப் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன். //
அப்படி வாருங்கள் வழிக்கு. அதைத்தானே நானும் சொல்லுகிறேன். அர்த் தமிழ்ப்படுத்தி அர்த்தம் என்று பயன்படுத்தலாம் என்று. அதில் ஒன்றும் தவறில்லை நண்பரே.
April 14, 2006 2:24 PM
கௌசிகன் said...
//என்று கவனித்து அங்கெல்லாம் 'பொருள்' என்ற சொல்லைப் பயன்படுத்துங்கள்//
இதை இத்தனை serious-ஆக நான் எடுத்துக் கொண்டதற்கான காரணம் மேலே குறிப்பிட்டுள்ள வரிதான். இது வேண்டுகோள் இல்லை. கிட்டத்தட்ட கட்டளை. தாழ்மையுடன் சொன்னாலும் கூட.
"பயன்படுத்தலாமே?" இப்படி முடிந்திருக்கலாமே குமரன்.
April 14, 2006 2:29 PM
குமரன் (Kumaran) said...
கௌசிகன்,
நீங்கள் இங்கு செய்வதற்குப் பெயர் விதண்டா வாதம் என்று எங்கள் ஊரில் சொல்லுவார்கள். :-)
லிங்காஷ்டகம் என்ற வடமொழி நூலில் உள்ள பாடல்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காகத் தொடங்கப்பட்ட வலைப்பூவிற்கு அந்தப் பெயரைக் கொடுத்திருக்கிறேன். அதில் நூல் அறிமுகப் பதிவு போடும் போது லிங்காஷ்டகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு என்ன பொருள் என்று நிச்சயம் சொல்லுகிறேன்.
நீங்கள் வடமொழியின் ஆதி காவியமான வால்மீகி இராமாயணத்தைப் பற்றி எழுதுகிறீர்கள். நான் அங்கு வந்து இதனை இராமாயணம் என்று சொல்லக் கூடாது. இராமகாதை என்று தான் சொல்லவேண்டும் என்று சண்டையிடவில்லையே. நீங்கள் கம்பரின் இராமகாதையைப் பற்றி எழுதி, அங்கு இராமாயணம் என்று குறிப்பிட்டிருந்தால் அங்கு வந்து இந்த நூலுக்கு இராமகாதை என்று கம்பர் பெயர் வைத்திருக்கிறார் என்று கூட சொல்லியிருப்பேனோ இல்லையோ தெரியவில்லை. அப்படி சொல்லியிருந்தாலும் நியாய அநியாயம் எல்லாம் பேசியிருக்க மாட்டேன். :-)
நான் தான் என் முதல் பதிலிலேயே தெளிவாகச் சொல்லிவிட்டேனே. நீங்கள் அர்த்தம், இராமாயணம் என்று தான் புழங்கப் போகிறீர்கள் என்றால் எனக்கு அது ஏற்புடையதே. நான் தவறென்று சொல்லமாட்டேன். ஆனால் அவற்றிற்குத் தனித் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன; அவற்றையும் புழங்குவோம்; இல்லையேல் அவை வழக்கொழிந்து போகும் என்பது தான் நான் சொல்லுவது. இனி இயன்றவரை 'பொருள்' என்றும் 'இராமகாதை' என்றும் 'புழங்குதல்' என்றும் சொல்ல முயல்கிறேன். நான் இங்கு இப்படி சொல்லிவிட்டேன் என்பதால், பழக்கத்தின் காரணமாய் நான் எங்காவது 'அர்த்தம்' என்றோ 'இராமாயணம்' என்றோ 'பயன்படுத்துதல்' என்றோ சொல்லிவிட்டால் சண்டைக்கு வந்து நிற்காதீர்கள். :-)
April 14, 2006 2:33 PM
குமரன் (Kumaran) said...
//அர்த் தமிழ்ப்படுத்தி அர்த்தம் என்று பயன்படுத்தலாம் என்று. அதில் ஒன்றும் தவறில்லை நண்பரே.
//
கௌசிகன்,
நான் எங்காவது இதனைத் தவறென்று சொன்னேனா? நீங்களாகவே நான் அப்படித் தான் சொல்லியிருப்பேன் என்று நினைத்துக் கொண்டு பேசுவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. உங்களின் இந்த பின்னூட்டத்தைப் பார்ப்பதற்கு முன்பே உங்களின் லிங்காஷ்டகப் பின்னூட்டத்திற்குப் பதில் சொல்லிவிட்டேன். அங்கும் நான் இதனைத் தவறென்று சொல்லவில்லை என்றே சொல்லியிருக்கிறேன். அதுவே எனக்குச் சொல்கிறது என்றுமே இதனை நான் தவறாக நினைக்கவில்லையென்று.
April 14, 2006 2:37 PM
குமரன் (Kumaran) said...
\\//என்று கவனித்து அங்கெல்லாம் 'பொருள்' என்ற சொல்லைப் பயன்படுத்துங்கள்//
இதை இத்தனை serious-ஆக நான் எடுத்துக் கொண்டதற்கான காரணம் மேலே குறிப்பிட்டுள்ள வரிதான். இது வேண்டுகோள் இல்லை. கிட்டத்தட்ட கட்டளை. தாழ்மையுடன் சொன்னாலும் கூட.
"பயன்படுத்தலாமே?" இப்படி முடிந்திருக்கலாமே குமரன்.
\\
ஓஹோ. இது கட்டளை போல் தோன்றிவிட்டதா? மன்னித்துவிடுங்கள். கட்டளை எல்லாம் இல்லை. வேண்டுகோள் தான். அவசியம் என்றால் அதனை மாற்றிக் கூட எழுதிவிடுகிறேன். சொல்லுங்கள்.
April 14, 2006 2:39 PM
G.Ragavan said...
குமரன் நல்ல துவக்கம்.
அர்த்தம் என்ற சொல்லை விட பொருளுடையது பொருள். ஏனென்றால் தமிழில் சொல்லென்று இருந்தாலே பொருள் இருக்கத்தானே செய்யும். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை.
லிங்கத்தை நாம் லிங்கம் என்று சொல்வதில்லையா என்று கௌசிகன் கேட்பதும் பொருத்தமற்றது. ஏனென்றால் ஆவுடையார் என்ற அழகு சொல்லும் தமிழிலுண்டு. பயன்படுத்துவது நம் கையில்தான் இருக்கிறது.
இராமாயணம் என்பது பெயர்ச் சொல். பெயர்ச்சொற்களை முடிந்த வரை மொழி பெயர்ப்பது மிகக் கடினம். ஆனால் அர்த்தம் என்பது பெயர்ச்சொல் இல்லை. ஹிமய் என்பது இமயம் என்ற அளவில் மட்டுமே நாம் மொழி பெயர்க்க முடியும். ஆனால் அர்த்தம் என்ற சொல்லுக்கு மிகவும் இணையாக நம்மிடம் பொருள் என்னும் சொல் இருக்கும் பொழுது அதைப் பயன்படுத்தாமல் இருப்பதே பிழை.
நான் அர்த்தம் என்பதைக் குறைக்கத் தொடங்கி நீண்ட பொழுதாகி விட்டது. பட்டிக்காட்டுத் தனமாகத் தொனித்தாலும் "இதுக்கென்னல பொருளு" என்று பேச்சு வழக்கில் வருகிறது. அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும்.
April 15, 2006 10:31 AM
G.Ragavan said...
// இதை இத்தனை serious-ஆக நான் எடுத்துக் கொண்டதற்கான காரணம் மேலே குறிப்பிட்டுள்ள வரிதான். இது வேண்டுகோள் இல்லை. கிட்டத்தட்ட கட்டளை. தாழ்மையுடன் சொன்னாலும் கூட.
"பயன்படுத்தலாமே?" இப்படி முடிந்திருக்கலாமே குமரன். //
தேவையில்லை கௌசிகன். அவருடையது வேண்டுகோள். பயன்படுத்துங்கள் என்று கேட்பதில் தவறில்லை. அதை எந்த அளவுக்கு நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதில்தான் முழுப் பலனும் அடங்கியிருக்கிறது. அவருடைய எண்ணம் சரியானதே.
April 15, 2006 10:42 AM
ரங்கா - Ranga said...
கம்பர் தான் எழுதிய நூலுக்கு இராமாவதாரம் என்று பெயரிட்டதாக ஞாபகம்.
குமரன், ஒருவர் தன்னுடைய எண்ணங்களை, கருத்துகளை மற்றவர்கள் புரிந்து கொள்ள உபயோகிப்பது மொழி. ஒரு கருத்தின் பொருளை (அல்லது அர்த்தத்தை :-)) எந்த சொல் முழுமையாக தெரிவிக்கிறது என்பது, கேட்பவருக்கு அந்த சொலின் அர்த்தம் (அல்லது பொருள்) தெரியுமா என்பதையும் பொருத்தது. நீங்கள் சொன்னது போல அதிகமானவர்கள் உபயோகிக்கத் தொடங்கினால் நிறைய சொற்கள் வழக்கத்திற்கு வந்துவிடும். நல்ல முயற்சி. அதே சமயத்தில் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் கேட்கும் வார்த்தைகளையும், உச்சரிப்புகளையும் கவனித்தால், எந்த அளவுக்கு இது நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் சொன்னது போல் முயற்சிக்கிறேன்.
ரங்கா.
April 15, 2006 4:44 PM
குமரன் (Kumaran) said...
கௌசிகன், இன்னொன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டேன். அர்த் என்பது தமிழ்படுத்தி அர்த்தம் என்று ஆகவில்லை. அர்த் என்பது ஹிந்தியில் தற்போது இதே பொருளில் புழங்கும் சொல். அர்த்த: என்ற வடமொழிச் சொல்லே தமிழில் அர்த்தம் என்றும் ஹிந்தியில் அர்த் என்றும் ஆகிறது. இதனை ஏன் சொல்கிறேன் என்றால் நாளை வேறு யாராவது வந்து இந்த சொல் ஹிந்தியில் இருந்து வந்தது; வடமொழியிலிருந்து அன்று என்று சொல்லிவிட்டார்கள் என்றால். தமிழைக் குறைத்துப் பேச எப்போழுதடா வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்திருப்பவர்கள் நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். :-)
இராம.கி. ஐயா அவர்களைக் கேட்டால் இந்த சொல் வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்ததா இல்லை இங்கிருந்து அங்கு சென்றதா என்று சொல்லிவிடுவார். ஒரு வேளை இங்கிருந்து அங்கு சென்றிருந்தால் நாம் இவ்வளவு தூரம் விவாதம் செய்ததற்கே பொருள் இன்றிப் போய்விடும். :-)
April 16, 2006 4:57 AM
குமரன் (Kumaran) said...
இராகவன்,
விளக்கமாய் எழுதியிருப்பதற்கு மிக்க நன்றி. ஆவுடையாரை நான் மறந்துவிட்டேன் பாருங்கள். இதனால் தான் சொல்கிறேன் அதிகம் தமிழ்ச்சொற்களைப் புழங்கவேண்டும் என்று. உடனே தோன்ற மாட்டேன் என்கிறது பாருங்கள். :-) ஹிமாசலத்தையும் பனிமலை என்று நாம் புழங்கலாமே. இந்திய நாட்டில் இருக்கும் ஒரே பனிமலை இமயமலை மட்டும் தானே. அதனால் பனிமலை என்று நாம் புழங்கினால் அது இமயத்தை மட்டும் தானே குறிக்கும்.
நானும் எழுதும் போது அர்த்தம் என்ற சொல்லைக் குறைத்து பொருள் என்ற சொல்லைப் புழங்கத் தொடங்கி அதிக நாளாகிவிட்டது. ஆனாலும் பேசும்போது அது இன்னும் நிகழவில்லை. அங்கும் இந்த மாற்றம் வரவேண்டும் என்பதால் தான் இந்தப் பதிவு. இந்த வலைப்பூவே அதற்காகத் தான்.
April 16, 2006 5:02 AM
குமரன் (Kumaran) said...
ஆமாம் ரங்காண்ணா. நீங்கள் சொல்வது சரி தான். கம்பர் தன் இராமாயணத்திற்கு இராமவதாரம் என்று பெயரிட்டதாய்த் தான் நானும் எண்ணுகிறேன். சந்தேகத்தோடு தான் இராமகாதை என்று சொன்னேன்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நாம் நம் அளவில் தொடங்கினால் அது ஒன்று பலவாக பெருகி நிற்கும் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் கோழி, முட்டை கதையாய் அது சுழன்று கொண்டே இருக்கும். தொலைக்காட்சியினர் மக்கள் இப்படித் தான் பேசுகின்றனர்; அதனால் நாங்களும் அதனைப் பின்பற்றுகிறோம் என்பார்கள்; மக்களோ தொலைக்காட்சியினைப் பார்த்து அது தான் இயல்பானது என்று எண்ணி தம்மை அறியாமல் பின்பற்றுவார்கள்; இது தானே திரைப்படங்கள் விஷயத்திலும் நிகழ்கிறது. இந்த சுழற்சியை யாராவது என்றாவது நிறுத்தவேண்டும்.
April 16, 2006 5:19 AM
குறும்பன் said...
குமரன் & இராகவன் பாராட்டதக்க (போற்றதக்க)மிக நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். நான் பொருள், அர்த்தம் இரண்டையும் புழங்கியுள்ளேன், தற்போது meaning தான் use பண்றேன். :-))
எது தமிழ் சொல் என்று தெரியமாட்டீங்குது அதுதான் சிக்கலே. சிக்கலை, பிரச்சனையாக்கி இப்ப problem ஆக்கிட்டேன். :-))
April 17, 2006 8:19 PM
குமரன் (Kumaran) said...
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி குறும்பன். ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். நானும் நிறைய தடவை meaningஐ use பண்ணியிருக்கிறேன். இதெல்லாம் ஒரு Problemஆ என்றும் சிலர் கேட்கிறார்கள். நான் சொல்வது உங்களுக்கும் நீங்கள் சொல்வது எனக்கும் புரிந்தால் போதாதா என்று கேட்கிறார்கள். என்ன பதில் சொல்லி புரியவைப்பது என்று தான் அந்த நேரங்களில் புரிவதில்லை. :-)
April 18, 2006 7:17 AM
இலவசக்கொத்தனார் said...
ஜிரா குறள் சொல்லுவாருன்னு பார்த்தா சொல்லாம விட்டுட்டாரே. அது என்னங்க குமரன்
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
சரிதானே. விசுவிற்கும் வள்ளுவருக்கும் என்ன உறவுன்னு கண்டுபிடிக்கணும். :)
April 19, 2006 7:23 AM
பொன்ஸ்~~Poorna said...
குமரன், இது மிக நல்ல முயற்சி..( ரொம்ப ரொம்ப என்று எழுத வந்தேன்.. ரொம்ப தமிழா இல்லையா??). தமிழ்மணத்தில் பதியப் பெறும் வரை நான் பார்க்காமல் விட்டுவிட்டேனே என்று வருந்துகிறேன்.
இந்த விஷயத்தில் (என்ன தமிழ்ச் சொல்?!) நானும் கௌசிகன் மாதிரி தான்.. ஆனா, தப்பு கண்டுபிடிக்கும் அளவிற்கு என் தமிழறிவு இல்லாததனால், தப்பித்தது நானா நீங்களா என்றுதான் சந்தேகமாக இருக்கிறது :) (மோஸ்ட்லி நாந்தான்.. )...
1. //"169: அர்த்தம் : பொருள்" //
169 எதற்கு ?
2. //யாராவது வார்த்தை, வாக்கியம், சொல் இவற்றிற்கு உள்ள வித்தியாசங்களைச் சொல்லுங்களேன்//
வாக்கியம் என்பது சொல்லால் ஆனது. வார்த்தை - இந்த வார்த்தைக்கு நீங்களே ஒரு பதிவு போடலாம். இதுவும் வடமொழி, இந்தியிலிருந்து நம்மிடம் வந்து புகுந்து கொண்டது தான் என்று நினைக்கிறேன்.
//விசுவிற்கும் வள்ளுவருக்கும் என்ன உறவுன்னு கண்டுபிடிக்கணும். :) //
கொத்ஸ், இதெல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியலை?? :))))))
இதைப் படித்ததற்கு அப்புறம், நானும் ஏதாவது செய்யலாமே என்று, என் கூடப் பேசுகிறவர்கள் அர்த்தம் என்று சொன்னால் மாற்றலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. எங்க.. ஒருபயலாவது தமிழ்ல பேசறானா.. எல்லாம் மீனிங், மத்லப் நு சொல்றாங்களே ஒழிய... அர்த்தம்.. ம்ஹூம்... :(
April 19, 2006 8:14 PM
குமரன் (Kumaran) said...
பாராட்டுகளுக்கு நன்றி பொன்ஸ். எனக்குத் தெரிந்த வரை ரொம்ப என்பது தமிழ்ச் சொல் தான். நிரம்ப என்பதன் திரிபு என்று எண்ணுகிறேன். விஷயத்திற்குத் தமிழ்ச் சொல் தேடி கொண்டிருக்கிறேன்.
1. இது என்னுடைய 169வது பதிவு. இதுவரை என் எல்லா வலைப்பூக்களிலும் பதியப் பட்டிருக்கும் பதிவுகளை எண்ணி வருகிறேன். அதில் இது 169வது பதிவு.
2. சொற்களின் தொகுப்பு வாக்கியம் என்பது தான் என் புரிதலும். ஆனால் சிலர் சொல்லுக்குப் பதிலாக வார்த்தையைப் புழங்குகிறார்கள்; சிலர் வாக்கியம் என்பது தான் வார்த்தை என்கிறார்கள். அதனால் தான் குழப்பமே. எனக்குத் தெரிந்து வாக்ய என்பதும் வார்த்தா என்பதும் வடமொழியே. ஆனால் வாக்ய என்பது மட்டுமே சொற்களின் தொகுப்பைக் குறிக்கும். வார்த்தா என்றால் செய்திகள் என்று பொருள் அங்கே. தமிழறிஞர்கள் தான் சொல்லவேண்டும் - இவை தமிழ்ச் சொற்களா, அவற்றின் வேறுபாடுகள் என்ன என்பதனை.
உண்மைதான். இப்ப நிறைய பேர் meaning என்று use பண்றாங்களே ஒழிய அர்த்தம்னு சொல்றதும் குறைந்து விட்டது. தமிழிலேயே பேசவேண்டும் என்று எண்ணுபவர்கள் தான் அர்த்தம் என்று சொல்கிறார்கள்.
April 20, 2006 7:55 AM
FloraiPuyal said...
A common mistake we make is to think that sanskrit is the root for all words. In this case, the word "artham" is very much tamil. The root word is "aru" which means "nothing", "god" , "material cause of the world". There are many words originating from this word - aruvam, arukkam, arugam, arutham, karuthu, tharukkam etc. So there is nothing wrong in using the word "artham" as tamil.
April 20, 2006 4:38 PM
குமரன் (Kumaran) said...
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஃபோளரைபுயல் அவர்களே. உங்கள் வெண்பாக்களை இனிமேல் தான் மெதுவாகப் படிக்கவேண்டும்.
உங்கள் கருத்தினைப் படித்தால் கௌசிகன் மெத்த மகிழ்ச்சியுறுவார். இராம.கி. ஐயா வந்து இப்படி சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அவருக்குப் பதிலாக நீங்கள் வந்து சொல்லிவிட்டீர்கள். இது வடமொழியிலிருந்து தமிழ்ப் படுத்தப் பட்ட சொல்லன்று; இது தமிழ்ச் சொல்லே என்றால் எனக்கு மகிழ்ச்சி தான்.
April 21, 2006 9:10 PM
இலவசக்கொத்தனார் said...
குமரன்,
இனி பொருள், அர்த்தம் இரண்டுமே உபயோகிக்கலாம் என அர்த்தம் கொள்ளட்டுமா?
:)
April 21, 2006 9:56 PM
நம்பிக்கை said...
வலைப்பூ நண்பரே வணக்கம்!
நம்மைப் போன்ற நண்பர்களால் தொடங்கப்பட்ட "நம்பிக்கை" கூகுள் குழுமம் தனது முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை ஆரோக்கியமான போட்டிகள் மூலம் கொண்டாடுகிறது. நீங்களும் கலந்து கொண்டு பரிசை வெல்லுங்கள்!
நம்பிக்கை ஊட்டுங்கள் நம்பிக்கை பெறுங்கள்!
நன்றி!
இவண்,
நம்பிக்கை நண்பர்கள்
கூகுள் குழுமம்.
http://groups-beta.google.com/group/nambikkai/
April 22, 2006 2:34 AM
ஜெயஸ்ரீ said...
குமரன்,
மிக நல்ல முயற்சி. நாம் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் வரை பொருள் என்ற சொல்லையே மிக அதிகமாக புழங்குகிறோம்.
(உதா) இடஞ்சுட்டிப் பொருள் விளக்கு,
பாடலுக்கு பொருள் கூறு
அர்த்தம் என்ற சொல் பேச்சு வழக்கிலேயே இருக்கிறது. இது எப்போது மாறுகிறது என்பது புரியவில்லை.
வடமொழியில் அர்த்தம் என்றால் செல்வம் என்றும் ஒரு பொருள் உண்டல்லவா ?. (அர்த்தமனர்த்தம் ...- பஜ கோவிந்தம்).வடமொழியில் இரண்டு 'த' க்கள் இருப்பதால் சற்று அழுத்தி உச்சரிக்கப்படுகிறதோ?.
வார்த்தா என்ற சொல் வடமொழியில் செய்தி, பேசப்படும் பொருள் அல்லது உரையாடல் என்ற பொருளிலேயே அதிகம் புழங்கப்படுகிறது
வார்தாலாப் - உரையாடல்
வார்த்தாகார - தூதுவன்
தமிழிலும் வார்த்தையாடுதல் என்றால் உரையாடுதல் என்றே பொருள்படும். 'வார்த்தை சொல்லிக்கொண்டிருந்து' என்ற பதம் முதியவர்களிடையே அதிகம் புழங்கக் கேட்டிருக்கிறேன்.
செய்தியோ , உரையாடலோ வார்த்தைகளின் தொகுப்பே என்பதால் இருக்கலாம்.
வாக்கியம் என்பது சொற்களின் தொகுப்பே. ஆனால் அந்த தொகுப்பு ஒரு முழுமையான பொருளைத் தரவேண்டும். எழுவாய் (subject) , பயனிலை(predicate), செயப்படுபொருள் (object)(சில நேரம் இது இல்லாமலும் இருக்கலாம்) என்ற மூன்றும் சேர்ந்து முழுப் பொருளைத் தரவேண்டும். அதுவே வாக்கியம் (என் சிற்றறிவுக்கு எட்டியவரை). முழுமையான பொருளைத் தராத சொற்களின் தொகுப்பு சொற்றொடர் எனப்படும் .
April 23, 2006 6:16 AM
குமரன் (Kumaran) said...
FloriPuyal அவர்களுக்கு ஒரு கேள்வி. நீங்கள் 'அரு' என்பதற்குச் சொல்லியிருக்கும் பொருளில் பழைய இலக்கியங்களில் எங்காவது இருக்கிறதா என்று எடுத்துக் காட்டுகளுடன் சொல்லுங்களேன். முக்கியமாக 'அருத்தம்' என்ற சொல்லுடன் உள்ள பழந்தமிழ் இலக்கியங்கள்.
April 25, 2006 1:52 PM
குமரன் (Kumaran) said...
அவசரப்படாதீங்க கொத்ஸ். எடுத்துக்காட்டுகள் வந்தால் அந்தப் பொருளை ஏற்றுக் கொண்டு அருத்தம், பொருள் இரண்டையும் புழங்கலாம். அதுவரை பொருளை மட்டும் புழங்குவோம் (சரி. கௌசிகனுக்காக - புழங்கலாமே). :-)
April 25, 2006 1:54 PM
குமரன் (Kumaran) said...
நம்பிக்கை நண்பர்களே. உங்கள் அழைப்பிற்கு நன்றி.
April 25, 2006 1:55 PM
குமரன் (Kumaran) said...
எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது Jayashree. பொருள் எப்போது அர்த்தமாக நம் உரையாடல்களில் மாறுகிறதோ. ஒரு வேளை செந்தமிழில் பேசும்போது பொருள் என்று சொல்லிவிட்டு, பேச்சுத்தமிழில் அர்த்தம் என்கிறோமோ? எனக்கு இன்னொரு இடரும் உண்டு. சௌராஷ்ட்ரத்தில் 'அர்த்து' என்று புழங்குவதால் அது தமிழில் அப்படியே அர்த்தம் ஆகிறதோ என்று. ஆனால் மற்ற சொற்களில் அந்தத் தாக்கம் இல்லையே.
வடமொழியில் அர்த்தம் என்றால் பொருள் (செல்வம்) என்ற பொருளும் உண்டு. தமிழிலும் அது இருக்கிறதே! பொருட்பால் என்பது செல்வத்தை ஈட்டும் வழியினைக் கூறும் பால் தானே.
நான் வார்த்தை, வாக்கியம், சொல் இவற்றின் வேறுபாடுகள் கேட்டது ஒரு காரணத்திற்காக. பலர் சொல் என்று சொல்லவேண்டிய இடத்தில் வார்த்தை என்ற சொல்லைப் புழங்குகிறார்கள். தமிழறிஞர்களும் அவருள் அடக்கம். அதனால் எனக்கு இந்த சந்தேகம் வந்தது. நீங்கள் சொன்ன விளக்கம் நன்று. எனக்குத் தெரிந்ததை உறுதி செய்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி.
'வார்த்தா' என்பதை நலம் விசாரித்தல் என்ற பொருளிலும் வடமொழியில் புழங்கியுள்ளனர். வயதான காலத்தில் பணம் இல்லாவிட்டால் யாருமே நம் நலனைப் பற்றி கேட்க மாட்டார்கள் என்ற பொருளில் வரும் பஜ கோவிந்தம் வரிகள் - வார்த்தா கோபின ப்ருச்சதி கேஹே...
April 25, 2006 2:05 PM
johan-paris said...
ஈழத்தில்; அர்த்தம்-என்ற சொல்லுக்குப் பதிலாகக் கருத்து;எனும் சொல்லையும் பாவிப்போம். உ+ம்:-
இப் பாட்டின் கருத்தென்ன?; அதற்கு ; நீங்கள் சொல்வது சரியான கருத்து எனக் கொள்ளலாமா? போன்றவை, ;பேச்சு வழக்கில் உண்டு.
யோகன்
பாரிஸ்
April 25, 2006 3:13 PM
FloraiPuyal said...
தேவாரம் :
அருத்தம் பெரிதும் உகப்பேன்
அலவலை யேன்அலந் தார்கள்
ஒருத்தர்க் குதவியேன் அல்லேன்
உற்றவர்க் குந்துணை அல்லேன்
பொருத்தமே லொன்று மிலாதேன்
புற்றெடுத் திட்டிடங் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
பழமொழி நானூறு :
பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர்
அருத்தம் அடிநிழ லாரை - வருத்தாது
கொண்டாரும் போலாதே கோடல் அதுவன்றோ
'வண்டூதா துண்டு விடல்'.
April 25, 2006 4:18 PM
FloraiPuyal said...
இன்னும் நாலடியார் மற்றும் சில நூல்களிலும், பல தனிப்பாடல்களிலும் காணலாம். உடனே நினைவுக்கு வரவில்லை.
April 25, 2006 4:21 PM
பொன்ஸ்~~Poorna said...
சித்தாள் (அ) ப்ளோரை புயல், வடமொழி தமிழில் கலந்து பல நாள் ஆகிவிட்டதே, ஒருவேளை, பழமொழி நானூறு எழுதினவரும் தப்பா பயன்படுத்தி இருந்திருக்கக் கூடாதா?
April 26, 2006 5:30 AM
ஜெயஸ்ரீ said...
அருத்தம் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு
1. பொருள், முக்கியத்துவம்
2. நோக்கம்
3. மூலகாரணம்
4. செல்வம், பொன்,
5. ஒரு பொருளின் பயன் (usefulness or utility)
6. பாதி
7. புலன்கள்
8. சாத்திரங்கள்
April 26, 2006 5:45 AM
ஜெயஸ்ரீ said...
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய்
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்திலங்கு சோதி நீ
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்றிவை
முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பதென் முகம்மனே
April 26, 2006 5:53 AM
பொன்ஸ்~~Poorna said...
ஜெயஸ்ரீ, இந்த இடத்தில் அருத்தம் என்பது எதைக் குறிக்கிறது என்றும் சொல்லுங்களேன்
April 26, 2006 6:17 AM
SK said...
நான் அறிந்தவரை 'ஆவுடையார்' என்பது 'லிங்கம்' அமர்ந்திருக்கும் அகன்ற அடிப்பாகத்தை மட்டுமே குறிக்கும்.
'ஆவுடையார் லிங்கம்' என்றுதான் சொல்லுவார்கள்.
'அந்தப் பெரிய ஆவுடையாரைச் சுற்றிக் கட்ட எட்டு முழம் வேட்டி பற்றாது' என்றெல்லாம் படித்திருக்கிறேன்.
'லிங்கம்' என்பதற்குத் தனித் தமிழ்ச் சொல் இரூபத்கக எனக்கு நினைவில்லை.
April 26, 2006 6:40 AM
ஜெயஸ்ரீ said...
பொன்ஸ்,
" அருத்தம் இன்பம் என்றிவை முற்றும் நீ " -இந்த இடத்தில் அருத்தம் என்றால் பொருட்செல்வம் என்று பொருள் கொள்ளலாம். "பொன்னும், பொருளும், இன்பமும் எல்லாம் நீயே "
அருத்தம் என்றால் புலன்களுக்கு இன்பமளிக்கும் பொருள் (உதா - மூக்கிற்கு இன்பமளிக்கும் நறுமணப்பொருள் )என்றும் பொருள். புலனுக்கு இன்பமளிக்கும் பொருட்களும் , அதன் இன்பமும் எல்லாம் நீ என்றும் பொருள் கொள்ளலாம்.
ப்ளோரைப்புயல் அவர்கள் சொன்ன தேவரப்பாடலில்
அருத்தன் இருப்பதும் ஆரூர்அவர் - இந்த இடத்தில் அருத்தன் என்பது இருவர் இணைந்த உருவத்தில் பாதியான (உமையும் சிவனும் இணைந்த உருவத்தில் ஒரு பாதி ) சிவபெருமானைக் குறிக்கும்.
அருத்தம் பெரிதும் உகப்பேன் - இந்த வரிக்கு "பொருட்செல்வத்தைப் பெரிதும் விரும்புவேன்" என்று பொருள் .
April 26, 2006 8:46 AM
ஜெயஸ்ரீ said...
அர்த்த என்ற வடமொழிச்சொல்லுக்கு பாதி என்று பொருள். (அர்த்தநாரீஸ்வரர்). தமிழிலும் அருத்தம் என்றால் பாதி என்று பொருள் உண்டு. வடமொழியில் ardha என்று உச்சரிக்கப்படுகிறது. அதனாலிந்த சொல் வடமொழியிலிருந்து வந்திருக்ககூடிய வாய்ப்பும் உண்டு.
April 26, 2006 1:01 PM
குமரன் (Kumaran) said...
நல்ல நேரத்தில் சரியாக வந்து சொன்னீர்கள் யோகன் ஐயா. சில இடங்களில் அர்த்தம் என்பதற்குப் பதிலாக பொருளைப் பாவிப்பதை விட கருத்தைப் பாவிப்பது ஏற்புடையதாய் இருக்கும். மிக்க நன்றி.
April 27, 2006 5:58 PM
குமரன் (Kumaran) said...
பொன்ஸ் சொல்வது எனக்கும் சரியாகப் படுகிறது ப்ளோரை புயல். இந்தப் பாடல்களில் தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிச் சொல் தான் வந்துள்ளது என்று எண்ணுகிறேன்.
April 27, 2006 6:00 PM
பொன்ஸ்~~Poorna said...
நல்ல விளக்கம், நன்றி ஜெயஸ்ரி.. அர்த்தத்துக்கு இவ்வளவு அர்த்தம் பயன்பாட்டில் உள்ளதா?!!!
April 28, 2006 4:56 AM
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. சார். நீங்க சொல்றது சரிதான்னு நானும் நினைக்கிறேன்.
April 28, 2006 10:34 AM
குமரன் (Kumaran) said...
Jayashree நல்ல எடுத்துக்காட்டுகள் சொல்லியிருக்காங்க. இதுவரை இங்கே நடந்த உரையாடல்கள்ல இருந்து எனக்குத் தோன்றுவது அர்த்தம் என்பது வடமொழிச் சொல் என்பதும் அது தமிழ்ப்படுத்தப்பட்டு அருத்தம் என்றும் புழங்கியுள்ளது என்பதும். அதனால் பொருள், கருத்து போன்ற சொற்களைத் தொடர்ந்து புழங்கலாம் - அர்த்தம் என்று வரும் இடத்தில் என்று எண்ணுகிறேன்.
April 28, 2006 10:37 AM
வெற்றி said...
அன்பின் குமரன் ஜயா,
//அதனால் பொருள், கருத்து போன்ற சொற்களைத் தொடர்ந்து புழங்கலாம் - அர்த்தம் என்று வரும் இடத்தில் என்று எண்ணுகிறேன்//
அர்த்தம் என்று வரும் எல்லா இடங்களிலும் பொருள்/கருத்து என்ற சொற்களைப் புழங்குவது சாத்தியமா?
எடுத்துக்காட்டாக, கவியரசர் எழுதிய நூல் ஒன்றின் தலைப்பு, "அர்த்தமுள்ள இந்துமதம் " என்பது. இந்த இடத்தில் எப்படி பொருள்/கருத்து என்ற சொல்லை புழங்குவது?
"பொருள் நிறைந்த/உள்ள இந்துமதம்"?
"கருத்து உள்ள இந்துமதம்"?
April 28, 2006 10:57 AM
குமரன் (Kumaran) said...
அவ்வளவு தான் வெற்றி. அர்த்தமுள்ள இந்து மதத்திற்கு கருத்துள்ள இந்துமதம்ன்னு சொன்னாலும் பொருந்தும்; பொருளுள்ள இந்துமதம்ன்னு சொன்னாலும் பொருந்தும்.
April 28, 2006 11:01 AM
வவ்வால் said...
வணக்கம் குமரன்,
//இராமாயணம் என்பது பெயர்ச் சொல். பெயர்ச்சொற்களை முடிந்த வரை மொழி பெயர்ப்பது மிகக் கடினம்//
இராமாயணம் பெயர்சொல் அல்லவே ..எனவே மொழி பெயர்க்கலாம். இராமன் + யாணம் = இராமாயணம்.யாணம் என்றால் வழி என்று பொருள்...எனவே இணையான சொல் கொண்டு வரலாம் குற்றமிலை. இராமனின் வழி தனி வழினு சூப்பர் ஸ்டார்க்கு லாம் முன்னரே அந்த காலத்திலேயே சொல்லியாச்சி.இராமன் இப்பவும் சூப்பர் ஸ்டார் தான் தேர்தல் வந்தா அவர் பேர சொல்லி வாக்கு வாங்க ஒரு காவி கோஷ்டி இருக்கே!
//யாராவது வார்த்தை, வாக்கியம், சொல் இவற்றிற்கு உள்ள வித்தியாசங்களைச் சொல்லுங்களேன்//
வார்த்தை வட மொழி தான் அதற்கு இணையானது சொல் தான்.சொற்களின் கோர்வையே வாக்கியம்
May 14, 2006 7:51 PM
வவ்வால் said...
எஸ்.கே தனது பின்னூட்டத்தில்,
//நான் அறிந்தவரை 'ஆவுடையார்' என்பது 'லிங்கம்' அமர்ந்திருக்கும் அகன்ற அடிப்பாகத்தை மட்டுமே குறிக்கும்.
'ஆவுடையார் லிங்கம்' என்றுதான் சொல்லுவார்கள்.
'அந்தப் பெரிய ஆவுடையாரைச் சுற்றிக் கட்ட எட்டு முழம் வேட்டி பற்றாது' என்றெல்லாம் படித்திருக்கிறேன்.//
லிம் +கம் =லிங்கம்,லிம், என்றால் லயம்,அம் எனறால் முடிவது ,முழுப்பொருள் அண்டம் முடியும் இடத்தில் லயித்து இருப்பதால் தோன்றுகிறது உலகம் என்று சொல்கிறார்கள்.அதாவது முடிவில் இருந்து துவங்குகிறது. இது ஒரு மிகப்பெரிய தத்துவம்.ஒரு புள்ளியில் இருந்தே(singularity) எல்லாம் பிறக்கிறது என்ற பிக் பாங் தியரிக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கவும்.
(லிங்கம் என்பதற்கு இன்னொரு பொருள் உண்டு அது அடல்ட்ஸ் ஒன்லி ரகம் வேண்டாமே)
லிங்கம் என்பதற்கு இணையான தமிழ் சொல் உண்டு என்ன வென்று நினைவு வரவில்லை.கிடைத்ததும் சொல்கிறேன்.
ஒரு லிங்கதில் 3 பாகம் உள்ளது சிவ பாகம்,விஷ்ணு பாகம்(8 கோண வடிவிலான நடு தண்டு),ப்ரம்ம பாகம்(5 கோண வடிவிலான அடிப்பீடம்) என்று எங்கோ படித்தேன்.அதில் அகன்று தோள்களை உடையப் மேல்ப்பகுதிக்கு ஆவுடை என்று பெயர் உண்டு. அது பார்வதியை குறிக்கும் எனவே பார்வதியை உடையவன் எனவும் கொள்ளலாம்.ஆனால் ஆவுடையப்பன் என்பதற்கு வேறு ஒரு சிறப்பான காரணம் உள்ளது ,
பசுபதி என்பதன் தமிழ் வடிவமே ஆவுடையப்பன்.பசு என்றால் ஆன்மா என்று ஒரு பொருள் உண்டு .மனிதர்களின் ஆன்மாவிற்கு அதிபதி ,சொந்தக்காரன் எனப்பொருள்.
அதே போல் ஆ= ஆன்மா என்று பொருள் ஆன்மாவை உடைமையாக(சொந்தம்) கொண்டவன் ,ஆவுடையப்பன், இறப்பிற்கு பின் ஆன்மா இறைவனை சென்றடைகிறது என்ற பொருள் வரும்.
May 14, 2006 9:21 PM
கோவி.கண்ணன் said...
பொருள் விளங்காதபோது அர்த்தம் சொல்லத்தானே வேண்டும். :)
தப்பாக அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டாம். சுவை பொருளில் கூறினேன்
May 15, 2006 6:03 AM
குமரன் (Kumaran) said...
விளக்கங்களுக்கு நன்றி திரு.வவ்வால்.
May 15, 2006 1:41 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் கோவிகண்ணன். நீங்கள் சொல்வது சரிதான். :-)
May 15, 2006 1:41 PM
FloraiPuyal said...
அருத்தம் என்பது தமிழ்ச்சொல்லே. அதில் சிறிதும் ஐயம் வேண்டாம்.
இலங்கு>இலிங்கு>இலிங்கம் = ஓளித் தோற்றம்
http://valavu.blogspot.com/2006/01/
5.html
ஒரு குறிப்பு: ஏதேனும் ஒரு சொல்லின் பிறப்பில் ஐயமிருப்பின் கூகிள் தளத்தில் அச்சொல்லை இட்டு site:valavu.blogspot.com என்று தேடவும். இராமகி பலச் சொற்களுக்கு முன்பே விளக்கம் அளித்திருக்கிறார். நமக்கும் நேரம் வீணாகாது.
May 22, 2006 5:38 PM
குமரன் (Kumaran) said...
குறிப்பிற்கு நன்றி Floraipuyal. அடுத்த முறையிலிருந்து நீங்கள் சொன்ன படியே தேடிப் பார்க்கிறேன்.
May 23, 2006 11:12 AM
***
இந்த இடுகையை இங்கே ஆவணப்படுத்திவிட்டதால் 'சொல் ஒரு சொல்' பதிவிலிருந்து நீக்கப்பட்டது.
4 comments:
என்ன குமரன், ஏன் அங்கு இருந்து நீக்கப்பட்டு இங்க ஆவணப்படுத்துதல்?
கொத்ஸ். ஒன்னும் பெரிய காரணமில்லை. அடுத்த இடுகையில சொல்றேன். :-)
கொத்ஸ். உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டேன். பார்த்தீர்களா?
மதுவி
Post a Comment