Thursday, March 06, 2008

உடுக்கை இழந்தவன் கை - 7 (பாரி வள்ளலின் கதை)

மூவேந்தர்களின் முற்றுகை தொடங்கிவிட்டது. ஒரு பட்சத்திற்குள் மூவரும் படை திரட்டிக் கொண்டு வந்தது வியப்பாகத் தான் இருக்கிறது. படைகள் நாட்டிற்குள் நுழைந்த போது எந்த விதமான எதிர்ப்பும் இல்லை. மக்கள் மூவேந்தர்களின் படைகளை வரவேற்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. மூவேந்தர்களுக்கும் பாரியைப் பணிய வைத்துப் பாரி மகளிரைச் சிறை எடுத்துச் செல்வதே நோக்கம் என்பதால் மக்களைத் துன்புறுத்தாமலேயே தங்கள் படைகளை நடத்தி வந்தார்கள். பறம்பு மலையினை சுற்றித் தங்கள் படைகளை நிறுத்தி வைத்தார்கள். எந்தத் திசையிலிருந்தும் மலைக்கு மேல் எந்த விதமான உதவிகளும் உணவுப் பொருட்களும் போகாத வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.

படைகளின் நடமாட்டம் வெகுவாக இருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. மிகச்சிறிய நாடு தானே என்று மூவேந்தர்களும் அளவிற்கு மீறி படைகளையும் திரட்டிக் கொண்டு வரவில்லை. சிறிய படையைக் காட்டியே பாரியைப் பணியச் செய்துவிட முடியும் என்று நம்பினார்கள். அதனால் மலையில் முன்னேறிச் சென்று போரினைத் தொடங்காமல் மலையின் கீழ் முற்றுகை இட்டு அமர்ந்து கொண்டார்கள். முற்றுகை தொடங்கிய சில நாட்களிலேயே பாரியிடமிருந்து தூது வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் நாட்கள் தான் சென்று கொண்டிருந்தன. பாரியிடமிருந்து எந்த செய்தியும் இல்லை. முற்றுகை தொடங்கி ஒரு திங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இனி மேலும் காத்திருக்க முடியாது என்று எண்ணி மலையின் மேல் என்ன நடக்கிறது என்று அறிந்து வர சில ஒற்றர்களை அனுப்பினார்கள்.

***

"பாரி. மூவேந்தர்களின் முற்றுகை தொடங்கி ஒரு திங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் அவர்கள் முற்றுகையைத் தொடரலாம். நமக்கு ஒரு குறையும் இல்லை. ஆனால் இதனை இப்படியே விட்டுவிடுவது சரியா? ஏதேனும் செய்ய வேண்டும்"

"சரியாகச் சொன்னீர்கள் கபிலரே. முற்றுகை தொடங்கிய நாள் முதல் பரிசிலர்களும் வரவில்லை. அவர்களை வேந்தர்களின் படைகள் மலைக்குக் கீழேயே தடுத்து நிறுத்திவிடுவதாக ஒற்றர்கள் வந்து சொன்னார்கள். வேந்தர்களின் ஒற்றர்களும் மலையின் மேல் திரிவதாகச் செய்தி வந்திருக்கிறது. மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும் பரிசில் வேண்டி வருபவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் வந்து செல்லும் வண்ணம் நிலையை மாற்றுவது மிகவும் தேவையானது"

"உன்னிடம் பல முறை பேசிப் பார்த்துவிட்டேன். நீ மூவேந்தர்களுக்குப் பணிந்து உன் மக்களை மணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாய். அதனால் முற்றுகையை முடிப்பதற்கு என்ன வழி என்று எனக்குப் புரியவில்லை. என்ன செய்யலாம் என்று நீ நினைக்கிறாய்?"

"ஐயனே. நீங்கள் பெரும் புலவர் என்பதால் மூவேந்தர்களுக்கும் உங்கள் மேல் பெரும் மதிப்பு இருக்கின்றது. அவர்களிடம் நீங்கள் சென்று நம் கருத்தினை இன்னும் தெளிவாகச் சொல்லிப் பார்க்கலாமே. பரிசிலர்களுக்கு ஏற்படுகின்ற துன்பத்தைப் பற்றியும் சொல்லிப் பாருங்கள். அவர்கள் தொடர்ந்து இங்கே வந்து சென்றால் எனக்குப் போதும். முற்றுகை எத்தனை நாள் நீடித்தாலும் கவலையில்லை"

"நீ சொல்வது சரியாகத் தான் தோன்றுகிறது பாரி. இன்றே மூவேந்தர்களைக் காண நான் செல்கிறேன். அவர்களிடம் பேசி முற்றுகையை நீக்கக் கோருகிறேன்"

மூவேந்தர்களிடம் பேசும் போது பாரியின் பெருமைக்கு எந்த வித இழிவும் வராமல் பேசுவது நண்பனாகியத் தன் கடமை என்று எண்ணிக் கொண்டார் கபிலர்.

***

ஒற்றர்களின் மூலம் மூவேந்தர்களுக்கும் பாரியிடமிருந்து கபிலர் வரும் செய்தி அறிவிக்கப்பட்டது. இறுதியில் பாரி இறங்கி வருகிறான் என்று மூவரும் மகிழ்ந்தனர். கபிலர் வருவதை எதிர்பார்த்து அவர் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

"வாருங்கள் புலவர் பெருமானே. தங்கள் வரவு எங்கள் மூவருக்கும் இந்தப் பறம்பு நாட்டிற்கும் நன்மை விளைவிக்கட்டும்"

"பாண்டியா. உன் வரவேற்பிற்கு நன்றி. ஒரே நேரத்தில் உங்கள் மூவரையும் ஒரே இடத்தில் காண்பது மிகவும் அரிதான ஒன்று. அது இன்று நிகழ்ந்தது என் பெரும் பேறு தான்"

"புலவரே. நீங்கள் பாரிவேளிடமிருந்து வருவதாக அறிகின்றோம். பாரியிடமிருந்து ஏதேனும் செய்தி உண்டா?"

"புகார்க்காவலா. நீ அறிந்தது சரியே. பாரியிடமிருந்து தான் வருகிறேன். உங்கள் தூதுவர்களிடம் அவன் என்ன செய்தி அனுப்பினானோ அதே செய்தியைத் தான் என் மூலமும் அனுப்பியிருக்கிறான்"

"என்ன? இவ்வளவு நாட்கள் முற்றுகை இட்ட பின்னரும் பாரி பணியவில்லையா? பெரும் வியப்பு தான்"

"வஞ்சிக்காவலா. பாரியின் இயற்கை அது தான். அவனை வென்று இந்தக் குன்றினை நீங்கள் கொள்ளுதல் என்பது மிகக் கடினம். இப்படி முற்றுகை இடுவதை விடுத்து வேறு வகையில் இந்தக் குன்றினைக் கொள்ள வழியுள்ளதா என்று பார்க்கலாம்"

"புலவரே. இந்தச் சிறு குன்றை வெல்வது தான் எங்கள் நோக்கம் என்று நினைத்துவிட்டீர்களா? நாங்கள் நினைத்தால் ஒரே நாளில் இந்தக் குன்றை வென்றுவிடுவோம். நாங்கள் வந்த நோக்கம் என்ன என்று உங்களுக்குத் தெரியாதா?"

"நன்றாகத் தெரியும் வேந்தர்களே. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவே நிறைவேறாது. அதனால் தான் பறம்பு மலையையாவது நீங்கள் வென்றுவிடப் பாருங்கள் என்று சொன்னேன். அப்படி பறம்பு மலையை வெல்வதும் உங்கள் படை வலிமையால் நிகழாது. அதற்கு வேறு வழி உண்டு"

"எங்கள் படை வலிமையாலும் இயலாத ஒன்று வேறு வழியின் நடக்குமா? அந்த வழி எது கபிலரே?"

"மூவேந்தர்களே. இந்த கரிய பறம்பு மலை உங்கள் படைகளால் எளிதாக வெல்லக் கூடியது; ஆனால் நீங்கள் இரங்கி அதனை வெல்லாமல் விட்டு வைத்திருப்பதாகத் தானே எண்ணியிருக்கிறீர்கள்?! அது தவறு. உங்கள் வேல் வன்மையால் இந்தக் குன்றை வெல்லுதல் மிக அரிது. ஆனால் இந்தக் குன்றை வெல்வது இன்னொருவருக்கு மிக எளிது. யார் அவர் தெரியுமா? கருநிற மலரைப் போலுள்ள எல்லோரையும் விழுங்கும் கண்கள் கொண்ட சிறுபறை ஏந்திய விறலி பாடிக் கொண்டு வந்தால் அவளுக்கு அது எளிது.

அளிதோ தானே பேரிருங்குன்றே
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே
நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதாம் பாடினள் வரினே
"

இந்தப் பாடலைக் கேட்டதும் மூவேந்தர்களின் முகத்திலும் எள்ளல் குறி தோன்றியது.

***

பாடல் குறிப்பு:

புறநானூறு 111ம் பாடல்.

திணை: நொச்சி (அரணைக் காக்கும் வீரர்கள் அணியும் மலர் நொச்சி. இங்கே முற்றுகையைத் தவிர்க்கச் சொல்லுதால் இது நொச்சித் திணையானது). இந்தப் பாடல் காஞ்சித் திணை என்றும் சொல்லப்படுவதுண்டு. சான்றோர் அறிவுரை கூறுவது காஞ்சித் திணையாகும்.

துறை: மகண் மறுத்தல் (குலத்தின் பெருமையைக் கூறி பெண் தர மறுத்தல்)

பாடலின் பதவுரை:

அளிது: இரங்கத் தக்கது.
பேரிரும்: மிகப்பெரிய (பெருமையில் சிறந்த)
வேறல்: வெல்லுதல்
கிணை: சிறுபறை

பாடினள் வரினே என்று குறிப்பிட்டுக் கூறியது தன் பெண்மையின் அழகாலும் அவள் இந்தக் குன்றினை அடைய முடியாது; ஆனால் பாடிக் கொண்டு வந்தால் முடியும் என்று சொல்வதற்காக.

11 comments:

G.Ragavan said...

அருமை. ரசித்தேன். ரசித்தேன். :)

குமரன் (Kumaran) said...

இராகவன்.

ஆறாம் பகுதிக்கு உங்கள் பின்னூட்டம் வரவில்லை. அதனால் அந்தப் பகுதியை நீங்கள் இரசிக்கவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? :-)))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
விபரமான கதை தெரியாது. துண்டு துண்டாக கேள்விப்பட்டுள்ளேன். அதில் இந்தத் தூது சென்ற விடயமும் அடக்கம்.

பாச மலர் said...

//மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும் பரிசில் வேண்டி வருபவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் வந்து செல்லும் வண்ணம் நிலையை மாற்றுவது மிகவும் தேவையானது"//

ஒரு வள்ளலின் அடையாளம் ..
நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்
..ஒரு வேந்தன் என்பதை விட வள்ளலாகவே இருந்த பாரி...

குமரன் (Kumaran) said...

கபிலர் தூது சென்றது பலருக்கும் தெரிந்திருக்கிறது ஐயா. எனக்கு நீங்கள் பாரியின் கதையைப் பற்றி கேட்டபிறகு இலக்கியத் தரவுகளைத் தேடிய போது தான் தெரிந்தது.

குமரன் (Kumaran) said...

ஆமாம் பாசமலர். எழுதிக்கொண்டு வரும் போது தானாக அமைந்த உரையாடல் அது. வரும் பகுதிகளிலும் இந்த நோக்கத்தைப் பற்றி சொல்லி முடிக்க வேண்டும். திட்டமிடாத பகுதி இது.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அருமை. ரசித்தேன். ரசித்தேனை ரசித்தேன்! :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இதில் பாரி மகளிரின் கருத்து என்ன குமரன்? பாரி, தம் மகளிரின் கருத்தை அறிய முற்பட்டானா?

சொந்தப் பிரச்சனை என்பதால் மக்களைத் துன்புறுத்தாமல் போருக்கு வந்தது மூவேந்தரின் பண்பையும் காட்டுகிறது!

//பரிசிலர்களுக்கு ஏற்படுகின்ற துன்பத்தைப் பற்றியும் சொல்லிப் பாருங்கள். அவர்கள் தொடர்ந்து இங்கே வந்து சென்றால் எனக்குப் போதும். முற்றுகை எத்தனை நாள் நீடித்தாலும் கவலையில்லை//

:-)
முற்றுகையினால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாதா?

இந்தக் கதையைப் படிக்கப் படிக்கப் பாரியின் மேல் வைத்திருந்த மதிப்பை விட, கபிலரின் மேல் தான் மதிப்பு கூடுகிறது!
பாரி கொடுத்து வைத்தவன்! கபிலரை நண்பனாக அடைய!

கீதா சாம்பசிவம் said...

போரிலே கூட ஒழுக்கத்தையும், நேர்மையையும், பண்பாட்டையும் கடைப்பிடித்த வேந்தர்கள் வாழ்ந்தனர் என்பது நமக்குப் பெருமை தான், இப்போதும்! :(((((((((
அருமையான நடை குமரன், வாழ்த்துகள்!

குமரன் (Kumaran) said...

நானும் இந்தப் பகுதியை எழுதும் போது இதே கேள்வியைத் தான் கேட்டுக் கொண்டேன் இரவிச்ங்கர். பாரியின் மகளிர் தெய்வீகன் என்ற ஒரு சிற்றரசனை விரும்பியதாகவும் அவனுக்கே இவர்களை ஒளவையார் திருமணம் செய்து வைத்ததாகவும் ஒரு கதை உண்டு. கபிலர், பாரி இவர்களைப் பற்றிப் பேசும் கதையில் பாரி மகளிர் திருமுடிக்காரிக்கு மணம் செய்து வைக்கப்படுகின்றனர். அதனால் முதல் கதையின் படி பாரி மகளிரின் விருப்பப்படி திருமணம் நடந்திருக்கிறது. இரண்டாவது கதையில் அதனைப் பற்றிய குறிப்பு இல்லை. அதனால் பாரியின் விருப்பமே அவன் மகளிரின் விருப்பமாக இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.

முற்றுகையினால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றும் சொல்லியிருக்கிறேனே?! :-)

குமரன் (Kumaran) said...

கீதா அம்மா. அந்தக் காலத்தில் போர்கள் முறையோடு நடந்ததாகத் தான் இலக்கியங்கள் நமக்குச் சொல்கின்றன. வடமொழி இதிகாசங்களும் புராணங்களும் தமிழ் இலக்கியங்களும் காட்டும் காட்சி அது தான். பெரும்பாலும் முறையாகத் தான் போர் நடந்திருக்கிறது.