Sunday, March 09, 2008

யார் கள்வன்?

ஒரு முறை திருக்கைலாயத்தில் பார்வதி தேவியும் பரமேஸ்வரனும் பேசிக் கொண்டிருக்கையில் பார்வதி தேவியார் ஐயனை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார்.

'சுவாமி. காசி என்னும் புனிதத் தலத்தைப் பற்றி மிகப் பெருமையாக நீங்களும் அடியார்களும் பேசிக் கேட்டிருக்கிறேன். எவராயினும் ஒரு முறை காசிக்குச் சென்று கங்கை நதியில் நீராடி தங்களை விசுவநாதராகத் தரிசித்தால் அளவிட முடியாத புண்ணியங்கள் பெற்று கைலையை அடைந்து இங்கேயே நிரந்தரமாக இருக்கும் பேறு பெறுவார்கள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உண்மையா?'

'தேவி. நீ சொல்வதெல்லாம் உண்மையே. ஆனால் காசிக்குச் செல்லும் எல்லோரும் அந்தப் புண்ணியங்களை அடைவதில்லை. காசிக்குச் செல்லுதல், என்னை வழிபடுதல் போன்ற செயல்கள் மட்டுமே போதுமானவை இல்லை. என்ன செல்கிறேன் என்பது தெளிவாகப் புரிய வேண்டுமானால் நாம் உடனே காசிக்குச் சென்று ஒரு நாடகத்தை நடத்துவோம். அதிலேயே புரியும்'.

ஐயனும் அம்மையும் காசி விஸ்வநாதர் திருக்கோவிலின் முன்பு ஒரு வயது முதிர்ந்த கிழத்தம்பதிகளாகத் தோன்றினார்கள். ஐயன் அம்மையின் மடியில் தலையை வைத்துக் கொண்டு மரண வலியில் துடிப்பதைப் போல் முனகத் தொடங்கினார். கிழவியோ செய்வதறியாது அந்த வழியே செல்பவர்களை எல்லாம் உதவிக்கு அழைத்துப் புலம்பிக் கொண்டிருக்கிறாள். அந்த வழியே கோவிலுக்குள் சென்ற ஒவ்வொரு பக்தரிடமும் 'பெருமானின் அடியார்களே. இங்கு பாருங்கள் என் கணவர் படும் பாட்டை. அவர் கடும் தாகத்தில் இருக்கிறார். எந்த நேரமும் அவர் உயிர் பிரிந்து விடும் போல் இருக்கிறது. யாராவது அவருக்குத் தண்ணீர் கொடுத்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. நான் அவரை இந்த நிலையில் தனியே விட்டுவிட்டுச் செல்ல முடியாது. யாராவது அவருக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்' என்று வேண்டிக் கொண்டிருந்தாள்.

பலரும் புனித கங்கையில் நீராடிவிட்டு கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய கைகளில் சிறிய கிண்ணங்களில் கங்கை நீரை ஏந்திக் கொண்டு சென்றனர். அவர்கள் பாட்டி படும் பாட்டினைப் பார்த்தனர்; அவள் புலம்பல்களைக் கேட்டனர். சிலர் 'அம்மா. கொஞ்சம் பொறுத்துக் கொள். நாங்கள் காசி விஸ்வநாதரைத் தரிசித்துவிட்டு இந்தத் தீர்த்தத்தால் அவரை திருமுழுக்காட்டிவிட்டுப் பின்னர் வந்து உன் கணவரைக் கவனித்துக் கொள்கிறோம்' என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர். சிலர் 'ஓ இது என்ன தொல்லை. இந்தப் பிச்சைக்காரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. நிம்மதியாக இறைவனை வணங்க முடிகிறதா?' என்றார்கள். அதற்குப் பதிலாக சிலர் 'பிச்சைக்காரர்கள் இங்கே அமர்வதை அனுமதிக்கக் கூடாது.' என்று சொல்லிச் சென்றனர். பலர் இதனை எல்லாம் பார்க்கக் கூட இல்லை. அவர்கள் பக்திப் பரவசத்துடன் ஐயனைக் காண நேரே கோவிலுக்குள் சென்று கொண்டிருந்தனர்.

இந்த மக்கள் கூட்டத்தில் ஒரு திருடனும் இருந்தான். அவன் அந்த அம்மையின் அழுகுரலைக் கேட்டான். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் தான் அவன் தன் கைவரிசைக் காண்பிப்பது. என்றும் போல் இன்றும் கோவிலில் அதிக கூட்டம் இருந்ததால் தனக்குச் சரியான வேட்டை என்று தான் எண்ணியிருந்தான். ஆனால் அம்மையின் அழுகுரலையும் தாத்தாவின் வலிமுனகலையும் கண்டு அவன் மனம் பொறுக்கவில்லை. அவன் நேரே பாட்டியிடம் சென்று 'அம்மா. நீங்கள் யார்? ஏன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்? அவருக்கு என்ன?' என்று வினவினான். பாட்டியும் 'மகனே. நாங்கள் காசி விஸ்வேஷ்வரரைத் தரிசிக்க வந்தோம். என் கணவர் திடீரென்று உடல் நலம் குறைந்து மயங்கி விழுந்துவிட்டார். யாராவது அவர் தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தால் அவர் உயிர் பிழைப்பார். அவரை இந்த நிலையில் தனியே விட்டுவிட்டு என்னால் போய் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. நான் எத்தனையோ பேரைக் கேட்டுவிட்டேன். அவர்களில் பலர் தண்ணீர் செம்பினை கைகளில் வைத்திருந்தும் யாருமே தரவில்லை' என்று சொன்னாள்.

அவர்கள் படும் கஷ்டத்தைக் கண்டு கள்வனின் மனம் பொறுக்கவில்லை. உடனே கங்கைக்குச் சென்று கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வந்தான். பாட்டி அவனைத் தடுத்து 'மகனே. என் கணவர் எப்போதும் உண்மையே பேசி உண்மையாகவே நடந்து கொண்டவர்கள் கைகளால் தான் தண்ணீர் அருந்துவார். நீ எப்போதும் உண்மையே பேசினாயா? சொல்' என்று கேட்டாள். திருடனும் ஒரு நொடி தயங்கிவிட்டு 'அம்மா. நான் நல்லவனில்லை. இது வரை நான் அறிந்து ஒரு நல்ல செயலும் செய்ததில்லை. பலரின் பணத்தைத் திருடி அவர்களை கஷ்டத்தில் ஆழ்த்தியிருக்கிறேன்' என்று உண்மையைக் கூறி தலைகுனிந்து நின்றான். பாட்டி அவனிடம் 'இத்தனை நாள் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது உண்மையைச் சொன்னதால் என் கணவருக்குத் தண்ணீர் தரலாம்' என்று சொன்னாள். அதனைக் கேட்டவுடன் அந்தத் திருடனும் மிக்க மகிழ்ச்சியுடன் கிழவனாருக்குத் தண்ணீரைக் கொடுத்தான்.

ஒரு மடக்கு அந்த நீரை தாத்தா குடித்த உடனேயே அந்தக் கிழத் தம்பதியினர் மறைந்து அங்கே ஐயனும் அம்மையும் தோன்றினர். ஐயன் திருடனைப் பார்த்து 'மகனே. நீயே சிறந்தவன். உண்மையைப் பேசுவதை விட மிகச் சிறந்தது ஒன்றும் இல்லை. மக்களுக்குச் சேவை செய்வதை விட சிறந்த வழிபாடு ஒன்றும் இல்லை. நீ இன்று செய்த இந்த நற்செயலால் இதுவரை செய்த அனைத்து தீய செயல்களுக்கும் பரிகாரம் தேடிவிட்டாய்' என்றார்.

***

இந்த இடுகை எனது 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 16 ஜூலை 2006 அன்று இட்டது.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை எனது 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 16 ஜூலை 2006 அன்று இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

31 comments:

கோவி.கண்ணன் said...
//மக்களுக்குச் சேவை செய்வதை விட சிறந்த வழிபாடு ஒன்றும் இல்லை//

மக்கள் சேவையே மகேசன் சேவை - இதைத்தான் இராமலிங்க வள்ளலாரும் சொல்கிறார்.
நல்ல கதையை எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்

July 16, 2006 10:26 PM

இலவசக்கொத்தனார் said...
நல்ல கதை!

July 17, 2006 9:01 AM

நாமக்கல் சிபி said...
குமரன்,
பாடல்களைவிட கதைகள் தான் எல்லோரையும் சென்றடைய உதவும் கருவி.

தங்கள் பணிக்கு எனது நன்றி.

July 17, 2006 2:30 PM

சிவமுருகன் said...
//நீ எப்போதும் உண்மையே பேசினாயா? சொல்' என்று கேட்டாள். திருடனும் ஒரு நொடி தயங்கிவிட்டு 'அம்மா. நான் நல்லவனில்லை.//

யார்தான் நல்லவர்கள்?, செயற்கரிய செயல்களை செய்தவர்களும் தங்களை நல்ல்வர்கள் என்று கூறிக்கொள்வதில்லை. "ஆயிரம் பொய் சொல்லி ..." என்று பழமொழிகள் வேறு.

கதையை என்னுடைய எட்டாம் வகுப்பு ஆசிரியர் திருமதி. பாக்கியம் சொல்லி கேட்டிருக்கிறேன். அவரை நினைவில் கொண்டு வந்த அண்ணனுக்கு நன்றிகள் பல.

July 20, 2006 10:15 PM

குமரன் (Kumaran) said...
ஆமாம் கோவி.கண்ணன் ஐயா. வள்ளலார் பெருமான் மட்டுமின்றி எல்லா அடியவர்களும் சொல்லுவது அதுவே.

July 21, 2006 4:58 AM

குமரன் (Kumaran) said...
நன்றி கொத்ஸ்

July 21, 2006 4:58 AM

குமரன் (Kumaran) said...
உண்மை தான் பாலாஜி (வெட்டிப்பயல்). கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும். அதனால் அதுவே செய்தி சொல்வதற்கு மிகவும் ஏற்ற வழி. ஆனால் பாடல்களும் கருத்து சொல்வதற்கு ஒரு சிறந்த வழி தான். இசையில் மயங்காதவர்கள் யாரும் உண்டா? இசைப்பாடல்களில் மயங்கி அவை சொல்லும் கருத்துகளை மனத்தில் ஏற்றிக் கொள்வார்கள் அன்றோ? எப்போதோ சிறு வயதில் படித்தக் கேட்டப் பாடல்களும் நமக்கு இன்றும் நினைவில் இருப்பதற்குக் காரணம் அந்த இசையுடன் கூடிய பாடல்வரிகள் தானே.

July 21, 2006 5:01 AM

G.Ragavan said...
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்....உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.

பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின்.

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

(குமரன், இதுக்கெல்லாம் விளக்கம் கேக்க மாட்டீங்கன்னு நெனைக்கிறேன்.)

July 21, 2006 5:01 AM

குமரன் (Kumaran) said...
சிவமுருகன், இந்தக் கதை பல உருவங்களில் சொல்லப்படுகின்றது என்று அறிவேன். உங்கள் ஆசிரியையும் அவற்றில் ஒன்றைச் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.

எனக்கெல்லாம் முந்தா நேத்து படித்ததே மறந்துவிடுகிறது. உங்களுக்கு எட்டாம் வகுப்பில் சொல்லப்பட்டக் கதையெல்லாம் நினைவில் இருக்கிறது. பெரிய ஆள் தான் நீங்கள். :-)

July 21, 2006 5:03 AM

குமரன் (Kumaran) said...
இராகவன்,

விளக்கம் கேக்கலாம்னு தான் இருந்தேன். ஆனா 'பொய்' என்ற சொல் எல்லா அடிகளிலும் இருக்கிறதால யாரோ பொய்யைப் பத்திச் சொல்லியிருக்காங்க; அதை நீங்க எடுத்துப் போட்டிருக்கீங்கன்னு மட்டும் புரிஞ்சிக்கிட்டேன். இது ஒவ்வொன்னுக்கும் விளக்கம் வேண்டாம். ஆனா கதையா எழுதுங்கன்னு சொன்னா நீங்க என்ன மறுக்கவா போறீங்க?! :-)

பாடல்களை விட கதைகளே சிறந்த வழின்னு வெட்டிப்பயல் மேலே சொல்லியிருக்கார் பாருங்க. அதனால இந்த நாலு அடிகளையும் 'நான்கு' கதைகள் மூலமா விளக்குங்க :-)

July 21, 2006 5:06 AM

சிவமுருகன் said...
//எனக்கெல்லாம் முந்தா நேத்து படித்ததே மறந்துவிடுகிறது. உங்களுக்கு எட்டாம் வகுப்பில் சொல்லப்பட்டக் கதையெல்லாம் நினைவில் இருக்கிறது. பெரிய ஆள் தான் நீங்கள். :-) //

சும்மாவா 2 வருஷம் கேட்டதாச்சே, (7ம் வகுப்பிலும் அவர் தான் ஆசிரியர்). :)

July 21, 2006 6:27 AM

நாமக்கல் சிபி said...
//ஆனால் பாடல்களும் கருத்து சொல்வதற்கு ஒரு சிறந்த வழி தான். இசையில் மயங்காதவர்கள் யாரும் உண்டா? இசைப்பாடல்களில் மயங்கி அவை சொல்லும் கருத்துகளை மனத்தில் ஏற்றிக் கொள்வார்கள் அன்றோ? எப்போதோ சிறு வயதில் படித்தக் கேட்டப் பாடல்களும் நமக்கு இன்றும் நினைவில் இருப்பதற்குக் காரணம் அந்த இசையுடன் கூடிய பாடல்வரிகள் தானே.
//

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பாடல்கள் இசையுடன் சேர்ந்தால்தான் அதன் சிறப்பை அடைகிறது.

இசையுடன் சேராமல் பள்ளியில் சொல்லி தரும் பாடல்கள் 1 வருடத்திற்குள் மறந்துவிடுகிறது.
அதுவும் போக பாடல்களின் அர்த்தம் புரிந்து கொள்வதும் கடினமாக இருக்கிறது. உதாரணத்திற்கு கம்ப இராமாயணம் படித்தால் விளக்கவுரை இல்லாமல் எனக்கு புரியாது.
இதையே கதையாக சொன்னால் காலத்திற்கும் மறக்காது.

இசையுடன் கூடிய பாடல்களும் இதை போலத்தான்.
குனித்த புருவமும்... பாடல் எப்போழுதும் மறக்க முடியாது.

July 21, 2006 7:36 AM

வெற்றி said...
குமரன்,
அருமையான கதை மட்டுமல்ல பல தத்துவங்களைச் சொல்லும் கதை. மிகவும் அழகாகவும் , நேர்த்தியாகவும், சுவையாகவும் சொல்லியுள்ளீர்கள். உண்மையைச் சொல்லப்போனால், இன்றைக்கு இந்த கதைதான் எல்லா மத வழிபாட்டுத் தலங்களிலும் நடக்கின்றது என்பதே என் கருத்து. மக்கள் பூசையே மகேசன் பூசை எனும் வாக்குத்தான் சைவத்தின் தாரகை மந்திரம் என யாழ்ப்பாணத்தில் சொல்வார்கள். அதாவது, கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதைவிட துன்பத்தில் வாடுபவர்களுக்கு உதவி செய்தலே சாலச் சிறந்தது என்பது.

July 21, 2006 1:46 PM

SK said...
உங்கள் பதிவுகளிலேயே மிகச் சிறந்ததாக இதைக் கருதுகிறேன், குமரன்!

இதுதான் உங்கள் நோக்கமா எனத் தெரியாது!
இருப்பினும் சொல்லிவிடுகிறேன்.

வெறும் பாட்டுக்குப் பொருளும், பிடித்த திரைப்பாடல்களும், கதைகளும் போட்டு வந்திருந்த நீங்கள் ஒரு புது அவதாரம் எடுத்திருக்கிறீர்கள், இப்பதிவின் மூலம்!

உள்ளதை வெளிப்படையாக இதுவரை எழுதி வந்த உங்களுக்குள் இப்படி ஒரு விஸ்வரூபம் இருப்பதை நான் முன்னமேயே உணர்ந்திருக்க வேண்டும்! தவறுதான்!

என்ன சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லையா?

இந்த உள்குத்துக் கலையை இவ்வளவு தேர்ச்சியாகவும், பொறுப்புடனும் சொல்லி என் மதிப்பில் மிகவும் உயர்ந்து விட்டீர்கள்!

இந்தக் கதையின் மூலம்,
"தமிழை வளர்க்க வேண்டுமெனில், அதற்கு உரிய மரியாதையை மனதில் வைத்திருப்பதாகப் பூச்சுற்றுபவர்களே, மக்களைப் பாருங்கள்!,முதலில் உங்கள் வீட்டில் இருந்து ஆரம்பியுங்கள்!, கோயிலில் கை வைத்து விளையாடாதீர்கள்! அந்தத் தெய்வம் சும்மா பார்த்துக் கொண்டிராது! அதே நேரத்தில், என் வீட்டில் விளையாடுவதை விடுத்து, நலிந்த மக்களுக்கு உண்மையான சேவை செய்யப்போங்கள்!"
என்று தெய்வம் சொல்லுவது போன்ற ஒரு ஆழமான கருத்தை, ஆணித்தரமாக சொல்லாமல் சொல்லி விளக்கி, கிட்டத்தட்ட முகமூடி ரேஞ்சுக்குப் போய்விட்டிர்கள்!

சித்சபை, பொன்னம்பலம், கருவறை என்றெல்லாம் ஜல்லி அடிக்காமல், தெருவில் இறங்கி கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யுங்கள்; அங்கு போய் பாடிவிட்டால் மட்டும் நலிந்தவர் நிலை உயர்ந்து விடாது; என ஒரு சூடு கொடுத்திருக்கிறீர்களே; அதுதான் இதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இது குறித்து தனியே ஒரு பதிவு போட இருக்கிறேன். மீதியை அங்கு சொல்லிகொள்கிறேன்.

நாலு வரியில் சொன்னாலும், நச்சென்று சொல்லித் தாக்கியிருக்கிறீர்கள்!
மனமார்ந்த பாராட்டுகள்!

இதை அனுமதிக்கா விட்டால் வருத்தப் பட மாட்டேன்.
நான் புரிந்து கொண்ட அளவில் சொல்ல விழைந்தேன்.
நன்றி.

July 21, 2006 8:06 PM

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. இந்தப் பதிவின் நோக்கம் கட்டாயம் நீங்கள் சொன்னது இல்லை. இந்தக் கதைக்கும் சிதம்பரம் சர்ச்சைக்கும் தொடர்பு என் மனதளவில் இல்லை.

ஆனால் ஒரு கதை என்பது படிப்பவர்களின் மனநிலையைப் பொறுத்து பொருள் பெறும் என்பதற்குத் தங்கள் விளக்கம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தாங்கள் சொன்னது போல் பொருள் கொள்வது தங்கள் உரிமை.

இந்த 'சின்னச் சின்னக் கதைகள்' வலைப்பூவில் உ.கு., வெ.கு., போன்றவற்றுடன் எந்தக் கதையும் வராது என்று தான் எண்ணுகிறேன். நான் கேட்ட, படித்தக் கதைகளை இங்கே எழுதப் போகிறேன். அவ்வளவு தான். :-)

July 21, 2006 8:14 PM

தி. ரா. ச.(T.R.C.) said...
அரிச்சந்திரனை பொய் சொல்லச்சொன்னபோது அவன் சொன்னது.
பதிழந்தனம் பாலனை இழந்தனம் வைத்த நிதி இழந்தனம்
இனி எமக்கு உளது என நினைக்கின்ற கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேனே
பதி=மனைவி, நிதி=அரசவாழ்வு, கதி=சொர்கம்,கட்டுரை=உண்மை பேசுவது என்ற நிலை
நல்ல பொருத்தமான கதை.

July 21, 2006 9:32 PM

srishiv said...
it was really a nice story :) keep it up :)
siva

July 22, 2006 1:07 AM

குமரன் (Kumaran) said...
//உதாரணத்திற்கு கம்ப இராமாயணம் படித்தால் விளக்கவுரை இல்லாமல் எனக்கு புரியாது.
இதையே கதையாக சொன்னால் காலத்திற்கும் மறக்காது.
//

உண்மை தான் பாலாஜி. அதனால் தான் என் வலைப்பதிவுகளில் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. யாராவது பழந்தமிழ்ப் பாடல் வரிகளைப் பின்னூட்டமாக இட்டால் அதற்கு விளக்கமும் எழுதவேண்டும். என் வலைப்பூக்கள் பெரும்பாலும் பழந்தமிழ் பாடல்களுக்கு விளக்கம் எழுதுவதாகத் தானே அமைந்திருக்கிறது.

செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள் இல்லையா? கொஞ்சம் தொடர்ந்து படித்தால் விளக்கவுரை இல்லாமலேயே கம்பராமாயணம் படிக்கலாம். இப்போது கம்பராமாயணம் படித்துக் கொண்டிருக்கிறேன் - விளக்கவுரையுடன் கூடிய புத்தகம் தான். ஆனால் பாடலைப் படிக்கும் போதே 90% புரிகிறது. புரிந்தது சரி தானா என்று சரிபார்க்க விளக்கவுரை பயன்படுகிறது. கொஞ்சம் தமிழ்ப்பழக்கம் வந்தால் எல்லோருக்கும் இது நடக்கும். பாரதியாரிடமிருந்து தொடங்கலாம்.

July 22, 2006 7:16 AM

குமரன் (Kumaran) said...
உண்மை தான் வெற்றி. பல விதயங்களை இந்தக் கதை சொல்கிறது. சொன்ன விதம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? மிக்க மகிழ்ச்சி. :-)

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு - மானவ சேவையே மாதவ சேவை - ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் - என்றெல்லாம் ஆன்றோர்கள் திரும்பத் திரும்பச் சொன்னாலும் நாம் எங்கு கேட்கிறோம். கடவுளை மற; மனிதனை நினை என்று யாராவது சொன்னால் அது உண்மைதான் என்று தோன்றுகிறதே.

July 22, 2006 7:18 AM

குமரன் (Kumaran) said...
ஆமாம் தி.ரா.ச. வெளிப்பகட்டில் பொய் சொல்லிக் கொண்டே இறைவனை வணங்குவது 'ருத்திராட்சப் பூனை'யைப் போல் வாழ்வது என்பதை என் மனதிற்குச் சொல்லும் முகமான கதை இது. அரிச்சந்திரனின் கூற்றை இங்கே பொருத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

July 22, 2006 7:22 AM

குமரன் (Kumaran) said...
நன்றி சிவா. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

July 22, 2006 7:22 AM

குமரன் (Kumaran) said...
நாகை சிவா. முதல் வருகைக்கு நன்றின்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ளே மன்னிப்பு கேக்கறீங்க? எதுக்கு? வந்ததுக்கு நன்றி. பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி. நம்ம ஒப்பந்தப்படி நான் உங்க கதைக்கு தேன்கூட்டுல வாக்களிச்சாச்சு. நீங்களும் இனிமே தொடர்ந்து இங்க வந்து பின்னூட்டம் போடணும். ஆமாம். :-)

July 22, 2006 10:39 AM

Natarajan said...
Nalla Kathai Kumaran. We should not do mistakes in life is what everyone wishes. But humans make mistakes. But this story tells be true and anytime one wants to change, God would be there with us.

Nandri.
Anbudan,
Natarajan

July 22, 2006 10:47 AM

நாகை சிவா said...
//நான் உங்க கதைக்கு தேன்கூட்டுல வாக்களிச்சாச்சு. நீங்களும் இனிமே தொடர்ந்து இங்க வந்து பின்னூட்டம் போடணும். ஆமாம். :-) //
குமரன் அந்த பதிவு ஒட்டு வாங்க வேண்டும் என்பதற்காக அல்ல. சும்மா சேட்டை பண்ண வேண்டும் என்பதற்காக தான். ஒட்டு போட்டதுக்கு நன்றி. உங்க பதிவுக்கு வருவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மொத்தம் நீங்கள் எத்தனை பதிவுகள் எழுதிகின்றீர்கள் என்று சொல்லுங்க. ஏகப்பட்ட குமரன் பதிவு வருது தமிழ் மணத்தில், அதை பார்த்து தான் நான் குழம்பி விடுகின்றேன். உங்களின் குறை ஒன்றும் இல்லை என்ற ஒரு பதிவிற்கு வந்து இந்த தொடைத்தட்டி மேட்டர கிளப்பி விட்டது ஞாபகத்தில் உள்ளது. சரி தானே.
எல்லா பதிவை side bar யில் போடவும்.

July 22, 2006 10:56 AM

செல்வன் said...
இதேபோல் இன்னொரு கதை ஞாபகத்துக்கு வருகிறது.

காசியில் கங்கைக்கரையில் ஒரு முதியவர் மரணத்தருவாயில் கிடந்தார்."கடைசியாக யாராவது அவருக்கு தண்ணீர் கொடுங்கள்" என அவர் மனைவி சொல்ல,அனைவரும் தண்ணீர் செம்புடன் ஓடி வந்தனர்.

"ஐயா..இவர் சாகப்போகிறார்.பாவம் செய்யாத நல்லவர்கள் யாராவது கடைசியாய் ஒரு சொட்டு நீரை ஊற்றினால் இவர் சொர்க்கர்க்துக்கு போவார்.நல்லவர்கள் யாராவது தண்ணீர் ஊற்றுங்கள்,பாவிகள் ஊற்றவேண்டாம்" என்றாள் அந்த அம்மா.

தன்னை பாவி இல்லை என்று சொல்ல ஒருவருக்கும் மனம் வரவில்லை.தலைகவிழ்ந்து நின்றனர்.

"நான் இருக்கிறேன்" என ஒரு வணிகன் ஓடி வந்தான்.

"நீ பாவி இல்லையா?' என அந்த அம்மா கேட்டார்.

"நான் பாவம் செய்தவன் தான்.ஆனால் கங்கையில் குளித்ததும் என் பாவங்கள் மறைந்துவிட்டன." என்று சொல்லி நீர் ஊற்றினான்.

அந்த முதியவர் எழுந்து அமர்ந்தார்.

"இத்தனை பேர் கங்கையில் பாவம் தொலயட்டும் என குளிக்கிறீர்கள்.ஆனால் உங்களுக்கே உங்கள் பாவம் போய்விட்டது என நம்பிக்கை இல்லையா?நம்பிக்கை இல்லாமல் தான் கங்கையில் குளிக்கிறீர்களா?" என கேட்டார்

குனிந்த தலைகள் நிமிரவே இல்லை.

முதியவரும்(சிவன்) அம்மாவும்(கங்கா தேவி) அதன்பின் மாயமாய் மறைந்தனர்

July 22, 2006 12:22 PM

SK said...
சபாஷ்! சரியான பதில் கதை!!

நம்பிக்கையில்லா வாழ்வு
நலமில்லா வாழ்வு
நமக்கது தேவையில்லை!
நம்புங்கள் நாராயணனை!

July 22, 2006 2:52 PM

நாமக்கல் சிபி said...
//உண்மை தான் பாலாஜி. அதனால் தான் என் வலைப்பதிவுகளில் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. யாராவது பழந்தமிழ்ப் பாடல் வரிகளைப் பின்னூட்டமாக இட்டால் அதற்கு விளக்கமும் எழுதவேண்டும். என் வலைப்பூக்கள் பெரும்பாலும் பழந்தமிழ் பாடல்களுக்கு விளக்கம் எழுதுவதாகத் தானே அமைந்திருக்கிறது.
//

ஐயய்யோ!!! உங்க பதிவுகளில் எல்லாம் நான் பாடலைப் பார்த்தவுடன் நம்ம அறிவுக்கு எட்டாத விஷயம்னு சன்னலை மூடிவிடுகிறேன். நீங்க கீழே அர்த்தம் கொடுத்திருப்பீர்கள் என்று உணரவில்லை. இனி எல்லாவற்றையும் படிக்கிறேன்.

//செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள் இல்லையா? கொஞ்சம் தொடர்ந்து படித்தால் விளக்கவுரை இல்லாமலேயே கம்பராமாயணம் படிக்கலாம்//
நீங்க சொன்னீங்கனா சரியாகத்தானிருக்கும்.

// இப்போது கம்பராமாயணம் படித்துக் கொண்டிருக்கிறேன் - விளக்கவுரையுடன் கூடிய புத்தகம் தான். ஆனால் பாடலைப் படிக்கும் போதே 90% புரிகிறது. புரிந்தது சரி தானா என்று சரிபார்க்க விளக்கவுரை பயன்படுகிறது. //
அதையும் வலைப்பூவில் போட்டீங்கனா, ராம கதை கேட்ட எங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்.

July 22, 2006 3:32 PM

குமரன் (Kumaran) said...
ஆகா. நடராஜன் ரொம்ப நாளைக்கப்புறம் வந்து பின்னூட்டம் போட்டிருக்கீங்க. உங்களுக்கு மிகவும் பிடித்த 'திறந்த புத்தக வாழ்க்கையை'ப் பற்றிய கதையல்லவா? அது தான். :-)

உங்கள் பாராட்டிற்கு நன்றி நடராஜன்.

July 22, 2006 11:08 PM

குமரன் (Kumaran) said...
எனக்குத் தெரியும் நாகை சிவா. நீங்கள் அந்தப் பதிவை இட்டது சும்மா ஜாலிக்காகத் தான் என்று. மொத்தம் எத்தனை பதிவுகள் என்றா கேட்கிறீர்கள்? மொத்தம் 20 தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டில் எழுத நினைத்ததை எழுதி நிறைவு செய்தாயிற்று. ஆனால் எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில் எழுத இயல்வதில்லை. ஒரே நேரத்தில் இரண்டோ மூன்றோ வலைப்பூக்களில் தான் கவனம் செலுத்த முடிகிறது.

ஏகப்பட்டக் குமரன் பதிவுகள் வருகின்றனவா தமிழ்மணத்தில்? :-) 'குமரன் எண்ணம்' என்ற பெயரில் ஏதாவது பதிவு வந்தால் மட்டும் அது 'செந்தில் குமரன்' எழுதுவது. மற்றவை எல்லாம் அடியேன் எழுதுவதே. எங்களைத் தவிர்த்து வேறு குமரன்கள் யாரும் தற்போது தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இணைக்கவில்லை என்று தான் நினைக்கிறேன். :-) உங்களுக்கு எங்கள் இருவர் பதிவுகள் படிக்கவும் பிடிக்கும் என்றால் தயங்காமல் படியுங்கள்.

ஒரு சில வலைப்பூக்களில் என் எல்லா வலைப்பூக்களின் சுட்டிகளையும் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்புறம் அதனைத் தொடர்ந்து செய்ய இயலாமல் போய்விட்டது. என் ப்ரொபைல் போய் பார்த்தால் தான் என் எல்லா வலைப்பூக்களும் தெரியுமே.

தொடைத்தட்டி என்று பொன்ஸ் பதிவில் நீங்கள் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு நான் என் பதிவில் அதைச் சொல்லப்போக அதை வைத்துப் பல பின்னூட்டங்களும் உங்கள் பின்னூட்டமும் வந்தது நன்கு நினைவில் இருக்கிறது.

July 22, 2006 11:15 PM

குமரன் (Kumaran) said...
செல்வன். நீங்கள் சொன்ன கதை இயேசுநாதரின் வரலாற்றில் வரும் விபசாரியைக் கல்லால் அடிக்கும் நிகழ்ச்சியைப் போல் இருக்கிறதே. நானும் நீங்கள் சொல்லும் இந்தக் கதையை வேறு ஏதோ உருவத்தில் படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். 'நம்பிக்கை' என்பது அவ்வளவு எளிதாக ஏற்படும் ஒன்றில்லை. இறைவன் எங்கும் இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டே நம் கருத்தை எதிர்த்த ஒருவர் மீது எரிந்து விழுகிறேனே. இறைவன் அவரிலும் இருக்கிறான் என்ற நம்பிக்கை திடமாய் இருந்தால் அது செய்வேனா? :-)

July 22, 2006 11:18 PM

குமரன் (Kumaran) said...
பாலாஜி. இனிமேல் தயங்காமல் பாடல் பதிவுகளையும் படித்துப் பாருங்கள். உங்களுக்கு விருப்பம் ஏற்படலாம். பிடிக்கவில்லை என்றால் தொடரவேண்டாம். ஆனால் செந்தமிழின் சுவை தெரிந்தால் விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. :-)

கம்பராமாயணத்தை வலைப்பூவில் போடுவதா? கட்டாயம் செய்யலாம். ஏற்கனவே எடுத்துக் கொண்ட முயற்சிகளை எல்லாம் முடிக்கவே நான் வேலையிலிருந்து ஓய்வு பெறவேண்டும் போல் இருக்கிறது. :-) ஒவ்வொன்றாக முடிக்கிறேன். இருக்கும் வலைப்பூக்களில் எல்லாம் எழுதி முடித்தபின்பே இன்னொரு வலைப்பூ தொடங்க வேண்டும்; இல்லையென்றால் என் வலைப்பூவைப் படிக்கப் போவதில்லை என்று அன்பும் மிரட்டலும் கலந்த அறிவுரையை நம்ம இராகவன் சொல்லியிருக்கார். :-)

July 22, 2006 11:21 PM

sury said...

நீங்கள் கதை சொல்லியதாக நான் நினைக்கவில்லை. காசிக்குச் செல்லும் எல்லோரிடையும் ஒரு கேள்வி கேட்பதாகவே நினைக்கிறேன்.

காசிக்குச் சென்றவர் ஏதேனும் ஒன்றை, பொதுவாக சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றை, விடுவர். ஒன்றை விடவேண்டும் என்பதற்கு சிறப்பான பொருள்: நாம் எதனால்தான் வாழ்கிறோம், எது இல்லாது வாழ் இயலாது என நினைக்கிறோமோ, அந்த ஒன்றை
விடவேண்டும்.

திருடன் பொய் பேசுவதை விட்டுவிட்டான். நாமெல்லாம் காசிக்குச் செல்லும்போது
எதை விடப்போகிறோம் ?

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

பி.கு: உங்கள் அனுமதியை எதிர் நோக்கி எனது வலைப்பதிவு
http://arthamullavalaipathivugal.blogspot.com
தனில் இந்த வலைக்கு ஒரு தொடர் தருகிறேன்.

குமரன் (Kumaran) said...

நல்ல கேள்வி ஐயா. தங்கள் அன்பிற்கு நன்றிகள்.