Tuesday, March 04, 2008

தமிழ் கருவறையில் நுழையக் கூடாதா?

இது வரை தில்லையில் நடக்கும் கூத்தினைப் பற்றிப் படித்ததில் எனக்கு உண்டாகியிருக்கும் புரிதல்களும் கேள்விகளும் இவை:

1. தில்லையில் தமிழ் மறைகள் பாடப்படுகின்றன. ஆனால் கருவறையில் இல்லை. ஓதுவார் கீழே நின்று பாடுவதில் தீட்சிதர்களுக்கு மறுப்பு இல்லை.
2. தீட்சிதர்களும் தமிழ் மறைகள் பாடுவார்கள். ஆனால் கருவறையெனும் மேடையின் மேல் இல்லை. வேறெங்கேனும் நின்று பாடுவார்கள்.
3. தமிழகத்தில் நான் சென்ற சைவ ஆலயங்களில் எல்லாமும் தமிழ் மறைகள் பாடப்படுகின்றன. ஓதுவார் மூர்த்திகள் எனப்படுவோர் பாடுவார்கள். ஆனால் யாரும் கருவறையில் சென்று தமிழ் பாடுவதில்லை.
4. இது மொழிப்பிர்ச்சனையும் சாதிப்பிரச்சனையும் இரண்டும் கலந்தது. ஓதுவார்கள் முப்புரி நூல் (பூணூல்) அணியாத சாதியினர்.
5. வைணவ ஆலயங்களில் எல்லாம் முப்புரி நூல் அணிந்த அர்ச்சகர்களே கருவறையில் தமிழ் மறைகளை ஓதும் போது சைவ ஆலயங்களில் மட்டும் அது நடக்கவிடாமல் ஏன் இந்த எதிர்ப்பு?
6. மரபுகள் என்பது மீறப்படாமலேயா இருக்கின்றன? இராமானுஜர் காலத்திலும் அதற்கு முன்னரும் நிகழ்ந்த மாற்றங்களில் ஒன்று தானே தமிழக வைணவ ஆலய கருவறைகளில் தமிழ் ஆட்சி செய்வது? அப்படிப்பட்ட நிகழ்வுகள் சைவ ஆலயங்களில் நடக்காமல் தடுக்கும் காரணிகள் யாவை? ஏன் சைவத்தில் இராமானுஜர் போன்று ஒருவர் வரவில்லை? அப்படி வந்தவர்களும் ஏன் தமிழை ஒதுக்கிவிட்டு வடமொழிக்கே உயர்வு கற்பிக்கிறார்கள்?

38 comments:

குமரன் (Kumaran) said...

மதுரையில் மீனாட்சி அம்மன் சன்னிதியில் பொற்றாமரைக்குளத்திற்கு அருகில் இருக்கும் அம்மன் சன்னிதி கொடிமரத்திற்கு அருகில் தான் ஓதுவார் அமர்ந்து தமிழ் மறைகளை ஓதுவார். மாலை நேரத்தில் கோவிலுக்குச் சென்றால் அவர் அப்படி ஓதுவதைப் பார்க்கலாம்; ஒலிபெருக்கியின் வழியாகக் கேட்கலாம். அவர் கருவறையிலோ அர்த்த மண்டபத்திலோ அமர்ந்து தேவார திருவாசகங்களை ஓதிக் கண்டதில்லை. யாரேனும் கண்டதுண்டா?

ஓகை said...

குமரன்,

தமிழை எல்லா சிவத்தலங்களின் கருவறைகளிலும் கேட்க ஆசைப்பட்டிருகிறீர்கள். எனக்கு அந்த ஆசை இல்லை. ஏனென்றால் எனக்கு வேண்டிய அளவு கோயில்களில் தமிழ் கிடைக்கிறது. குறையொன்றுமில்லை.கொட்டிக் கிடக்கிறது. கொள்வதற்குத்தான் ஆளில்லை என்பது என் வருத்தம். கருவறையில்தான் தமிழ் கேட்கவேண்டும் என்கிற தனித்த குறித்த ஆசையெல்லாம் எனக்கில்லை. மேலும் வைணவக் கோயில்களில் அந்த பட்டர்களே ஆனந்தமாய் தமிழிசைப் பாடிவிடுகிறார்கள்.ஓதுவார் பாடல்கள் அங்கில்லை.ஆனால் அவை சிவத்தலங்களில் கோயில் முழுவதும் ஓங்கி ஒலிக்கின்றன.

என்னை விடுங்கள். உங்களது தனித்த குறித்த ஆசைக்கு வருவோம். இது குறித்து நீங்கள் இதுவரை பலமாக வலைப்பதிவுகளில் எழுதியிருக்கிறீர்கள். என் பதிவில் கூட வெகுவிளக்கமாய் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் பதிவுகளில் எழுதியதைத் தவிர்த்து வேறு ஏதேனும் செய்திருக்கிறீகளா? தில்லையிலோ அல்லது உங்கள் ஊரான மதுரையிலோ அல்லது வேறெங்குமோ உள்ள சிவத்தலங்களில் அங்குள்ள பொறுப்பாளர்களிடம் பேசியிருக்கிறீர்களா? சைவ மடத் தலைவர்களிடமோ அல்லது அங்குள்ள அடுத்த நிலை அலுவலர்களிடமோ ஏதாவது பேசியிருக்கிறீர்களா? இந்து மதக்காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சி பொறுப்பாளர்களிடமாவது பேசியிருக்கிறீர்களா? ஆன்மீகப் பத்திரிக்கைகளில் ஏதாவது கட்டுரை எழுதியிருக்கிறீர்களா? அல்லது எழுதி அனுப்பி பதிப்பிக்காமல் இருந்தார்களா? ஆத்திகர்களை எதிர்க்காமல் இருக்கும் நிலைப்பாட்டினைக் கொண்டிருந்த சென்ற அதிமுக அரசுக்கு ஏதேனும் வேண்டுகோள் வைத்தீர்களா? இது குறித்து உங்களுக்கு உடன்பாடில்லாத தீர்ப்புகளை அளித்த நீதிமான்களிடமாவது ஏதாவது விளக்கம் கேட்க முனைந்தீர்களா? இருப்தரப்பு வாதங்களையும் கேட்டுதானே தீர்ப்புகள் வழங்கப்டுகின்றன? அதில் உங்கள் தரப்பு சரியாக எடுத்துரைக்கப்படவில்லையா? அல்லது அந்த வழக்கறிஞர்கள் யாருக்கோ விலைபோய்விட்டார்களா? கேட்டறிந்தீர்களா? அல்லது அந்த நீதிமான்கள் பழமைக்கும் பழமரபுகளுக்கும் அல்லது இவற்றைப் போற்றுபவர்களுக்கும் விலை போய்விட்டார்களா? கேட்டறிந்தீர்களா?

கருவறைகளில் தமிழ்க்குரலைக் கேட்க அளவிலாத ஆசை கொண்ட நீங்கள் நான் மேல கேட்டிருக்கும் காரியங்கள் சிலவற்றையோ அல்லது எல்லாவற்றையுமோ அல்லது அதற்கு மேலுமோ செய்திருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அவற்றின் பலாபலன்களை அறியத் தாருங்கள்.

நோக்கமும் வழிமுறையும் நல்லவிதமாகவும் பொருத்தமான முறையிலும் இருக்கவேண்டுமென்பது எனக்குப் புரிந்த விஷயம்.

கோயில்களில் தமிழ் பரப்புவது தில்லை நடராஜனை பீரங்கி வைத்துத் தகர்க்கும் ஆசை கொண்டவர்கள் சிலரிடம் இருக்கிறது. உங்களை அந்த கூட்டத்தில் நான் பார்த்ததில்லை. அதனால்தான் கேட்கிறேன். தவறாக எடுத்துகொள்ளாதீர்கள்.

nayanan said...

அன்பின் நண்பர் குமரன்,

தென்காசியில் ஆய்குடி என்ற ஊரில்
மகாலிங்க மலை உள்ளது. தமிழ்த் திருமுறை வழிபாட்டைக் கண்டு இன்புற வேண்டுமானால், தமிழ் வழிபாடு செய்வதை கற்கவேண்டுமானால் அங்குதான் செல்ல வேண்டும். அந்த வழிபாட்டைக்
காண்பவர்கள் யாரும் அதற்குப் பிறகு
பிறழ மாட்டார்கள்.

அதே போல திருஈங்கோய் மலையிலும் தமிழ் வழிபாட்டைக் காணலாம். நாகையில் கோரக்கர் கோயிலில் பார்த்திருக்கிறேன்.
ஒப்பற்ற இடங்கள்.

தங்கள் பதிவில் அற்புதமான பணியைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். இது பல்கிப் பெருகும் போது நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தே விடும் விரைவில்.
மிக்க மகிழ்ச்சி. நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஓதுவார்கள் முப்புரி நூல் (பூணூல்) அணியாத சாதியினர்.//

ஓதுவா மூர்த்திகளும் முப்புரி நூல் அணிந்துள்ளதைக் கண்டுள்ளேன் குமரன்! சைவப் பிள்ளைமார்கள் வழி வந்த ஓதுவார்கள் அவர்கள்!

//வைணவ ஆலயங்களில் எல்லாம் முப்புரி நூல் அணிந்த அர்ச்சகர்களே கருவறையில் தமிழ் மறைகளை ஓதும் போது//

அந்த அர்ச்சகரில் வேறு சில சாதியினரும் உண்டூ!

//ஏன் சைவத்தில் இராமானுஜர் போன்று ஒருவர் வரவில்லை?//

இது பல பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் நான் அடிக்கடி சொல்லும் ஆதங்கம்!
வைணவத்துக்கு ஆழ்வார்கள் தமிழ்ப் பாசுரம் அருளிச் செய்தார்கள் என்றால், அதைக் காலமெல்லாம் ஆலயத்தில் ஓதி மகிழ ஆச்சாரியர்கள் மேலாண்மை செய்து கொடுத்தார்கள்!

ஆனால் சைவத்தின் நற்பேறின்மை போலும்! நாயன்மார்களின் பதிகங்களைக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து புழங்க ஒரு இயக்கமோ, ஆச்சார்ய பரம்பரையோ அமையவில்லை! :-(

இனியாவது அமைய இறைவன் திருவுள்ளம் கனிய வேண்டும்!

G.Ragavan said...

// கருவறைகளில் தமிழ்க்குரலைக் கேட்க அளவிலாத ஆசை கொண்ட நீங்கள் நான் மேல கேட்டிருக்கும் காரியங்கள் சிலவற்றையோ அல்லது எல்லாவற்றையுமோ அல்லது அதற்கு மேலுமோ செய்திருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அவற்றின் பலாபலன்களை அறியத் தாருங்கள். //

ஓகை ஐயா, என்ன இப்பிடிச் சொல்லீட்டீங்க. அப்ப இனிமே நீங்க அரசியல்வாதிங்க மோசம்னு சொல்ல முடியாது. அப்புறம் அவங்கள திருத்த என்ன செஞ்சீங்க? எத்தனை முறை நீங்க மனு கொடுத்தீங்க? எத்தனை முறை முதல்வரிம் குறை சொன்னீங்க? அதோட பலாபலன்களை அறியத் தாருங்கள்னு கேப்பாங்க. :)

கோயில்களில் தமிழைப் பரப்ப வேண்டும் என்ற நிலையே கேடுகெட்ட நிலை என்பது என்னுடைய கருத்து. அந்த நிலமையில் இருக்கிறோம்.

அதெல்லாம் சரி. தில்லைல என்ன நடக்குது? அங்கல்லாம் நீதிமான்கள் செத்துப் போயிட்டாங்களா? இல்ல மடத்தலைவர்கள் தூங்கீட்டாங்களா? என்னவோ போங்க. எனக்கு ஒன்னும் புரியலை :(

G.Ragavan said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஏன் சைவத்தில் இராமானுஜர் போன்று ஒருவர் வரவில்லை?//

இது பல பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் நான் அடிக்கடி சொல்லும் ஆதங்கம்!
வைணவத்துக்கு ஆழ்வார்கள் தமிழ்ப் பாசுரம் அருளிச் செய்தார்கள் என்றால், அதைக் காலமெல்லாம் ஆலயத்தில் ஓதி மகிழ ஆச்சாரியர்கள் மேலாண்மை செய்து கொடுத்தார்கள்!

ஆனால் சைவத்தின் நற்பேறின்மை போலும்! நாயன்மார்களின் பதிகங்களைக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து புழங்க ஒரு இயக்கமோ, ஆச்சார்ய பரம்பரையோ அமையவில்லை! :-( //

ஆமா. ஆமா. நற்பேறின்மையுள்ளதுதான் சைவம். புரியுது புரியுது. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின் சேவடி செவ்வித் திருக்காப்பு....வாசல்ல இருந்துக்கிட்டே :)

// இனியாவது அமைய இறைவன் திருவுள்ளம் கனிய வேண்டும்! //

வைணவத்துக்குக் கனிஞ்ச கடவுள் சைவத்துக் கனியலைன்னா... அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கனுமே ரவி. ;)

கால்கரி சிவா said...

மாற்றம் வேண்டும் என்கிறார்கள் சிலர், வழக்கத்தை மாற்றமாட்டோம் என்கிறார்கள் சிலர்.

இதை அரசியலாக்கி மகிழ்கிறோம்.

எங்கேவேண்டுமானலாம் என்ன மொழியில் வேண்டுமானலாம் இறைவனை பாடலாம். இறைவனுக்கு அது கேட்கும்.

அங்கேதான் பாடுவேன் என அடம்பிடிப்பவரும் பாடக்கூடாது என அடம்பிடிப்பவரும் இறைவனின் அருகில் இல்லை என்றே அர்த்தம்

dondu(#11168674346665545885) said...

நான் தீட்சிதர்களுக்கு கொடி பிடிக்கவில்லை. அதே சமயம் இந்த பிரச்சினைக்கு வேறு கண்ணோட்டம் தர விரும்புகிறேன்.

முக்கியமானது சொல்வது யார் என்பதுதான். நடராஜர் கோவிலையே குண்டு போட்டு தகர்க்க வேண்டும் என்ற தொனியில் பேசுபவர்கள் இதைக் கூறுவதாலும் பிரச்சினை உள்ளது. நாத்திகருக்கு இங்கே என்ன வேலை? ஆத்திகர்கள் தங்களுக்குள் பார்த்து கொள்வார்கள்.

ஐம்பதுகளில் பிறாமணாள் ஹோட்டல் என்று எழுதியதை தார் கொண்டு அழிக்க பெரியாரும் அவர் சிஷ்யகோடிகளும் முற்பட்டபோது, திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் சாலையில் உள்ள முரளி கஃபேயில்தான் அப்போராட்டம் நடக்கும். அதன் முதலாளி முரளி பெரியார் அதை சொல்கிறார் என்பதற்காகவே அதை செய்ய மறுத்தார். ஏனெனில் பெரியார் பிறாம்மண துவேஷி. 'அவர் யார் எனது ஹோட்டலில் நான் என்ன போர்ட் வைக்க வேண்டும் எனக் கூறுவது' என்பதுதான் அவரது நிலைப்பாடு. அதில் தார் அடித்ததால் கல்லில் செதுக்கப்பட்ட அந்த அறிவிப்பு இன்னும் பிரகாசமாக ஜொலித்ததுதான் நடந்தது.

அது சரியா தவறா என்பதற்குள் நான் இங்கு போகவில்லை. அதே முரளி பிற்காலத்தில் காஞ்சி பெரியவர் அந்த அறிவிப்பை எடுக்கும்படி கூற உடனே அதை நீக்கினார்.

எதை யார் கூறுவது என்பதையும் சிலர் பார்க்கின்றனர். இதே நாத்திகவாதிகள் மசூதிகளில் அரபியில் ஓதக்கூடாது என்று கோஷமிடத் தயாரா? அது கூட வேண்டாம், அவ்வாறு ஒரு முசல்மான் போராடினால் அவருக்கு ஆதரவு தரத் தயாரா? தஸ்லீமாவுக்கு இவர்கள் ஆதரவு உண்டா? டாவின்சி கோட் தடையை இவர்கள் எதிர்ப்பார்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

பிறைநதிபுரத்தான் said...

தகவல்கள் அடங்கிய தங்களின் நல்ல பதிவுக்கு நன்றி அய்யா!

Thangamani said...

குமரன் பதிவுகளுக்கு நன்றி!

முதலில் இந்த விதயத்தில் சில திசைதிருப்பல்களை நிறுத்த வேண்டும்.

1. தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று கேட்பது ஒரு ஒதுவாரே அன்றி தி.க அல்ல.

2. தமிழ் வழிபாட்டை தமிழக அரசுதான் ஆணையிடுகிறதே அல்லாமல் தி.மு.க அல்ல. நாளை தீட்சிதர்களுக்கு ஊதிய உயர்வை கொடுத்தால் அது தமிழக அரசு, அதன் கீழான இந்து அறநிலையத் துறையின் செயல்பாடே அன்றி தி.மு.கவின் சிதம்பர வட்டத்தின் செயல்பாடல்ல.
இந்த நிலையில் பீரங்கி வைத்து பிளப்பதெல்லாம் அர்த்தமற்ற திசைதிருப்பல்கள்.

3. தி.மு.கவின் நிலைப்பாட்டைத் தான் அரசு பிரதிபலிக்கிறது என்று சொன்னால் பா.ஜ.க நிலைப்பாட்டை நோக்கவும். அது இதில் உள்ள மக்கள் உரிமை, மொழி மட்டும் சாதி பாகுபாட்டை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தீட்சிதர்களின் (பிராமணர்களின்) நலம் தான் முக்கியம் என்று செயல்படும் போது ஒரு மாநில மக்களின் உரிமை வலியுறுத்தும் தி.மு.கவின் விருப்பமும், தமிழக அரசின் விருப்பமும் ஒன்றாக இருந்தால் அதைக்குறித்து குற்றம் சொல்ல எதுவுமில்லை. மாறாக பா.ஜ.கவின் உண்மையான நிலைப்பாடு அல்லது அது யாருடைய கட்சி என்பதுதான் வெளிப்பட்டிருக்கிறது.

இந்த விதயத்தில் ஆன்மீக ஆர்வலர்கள் விருப்பம் கூட சில குறிப்பிட்ட வகுப்பினரின் நலனைத்தாண்டியதாக இருக்கமுடியாது என்பதற்கு உங்களது இந்தப்பதிவுகளும் அதற்கு வந்த எதிர்வினைகளும் இன்னொரு சாட்சி என்றே நினைக்கிறேன்.

ஓகை said...

என் கேள்விகளை குமரனைக் குற்றம் சொல்வதற்காக கேட்கவில்லை. இன்று முதன்முதலாக பதிவுலகிற்கு வந்தவர் ஒருவருக்கு இப்படி ஐயம் வருவதை நான் எதிர்பார்க்க முடியும். ஆனால் என்னை கொஞ்சமாவது அறிந்திருக்கும் இராகவனுக்கும் அதே ஐயம் வருவது காலக்கொடுமை. குமரனுக்கு வராமல் இருக்கவேண்டும் என்பது என்னுடைய இப்போதைய கவலை.

//என்ன இப்பிடிச் சொல்லீட்டீங்க. அப்ப இனிமே நீங்க அரசியல்வாதிங்க மோசம்னு சொல்ல முடியாது. அப்புறம் அவங்கள திருத்த என்ன செஞ்சீங்க? எத்தனை முறை நீங்க மனு கொடுத்தீங்க? எத்தனை முறை முதல்வரிம் குறை சொன்னீங்க? //

கேள்விகளுக்கு பதில் எதிர் கேள்விகள் என்பது சரியா ஜீரா? எனக்கு கோயில் கருவறைகளில் தமிழ் வேண்டுமென்ற தீவிர ஆசை இருந்தால் என் அணுகுமுறை எப்படிப் பட்டதாக இருக்கும் என்கிற அடிப்படையிலேயே அக்கேள்விகள் எழுந்தன. நான் என்னைப்போல் குமரனை நினைத்து எழுப்பிய கேள்விகள்தாம் அவை.

நான் அரசியல்வாதிகளை குறை சொல்லும்போது இது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்டால் கண்டிப்பாக என் பட்டியலைத் தருகிறேன்.

//கோயில்களில் தமிழைப் பரப்ப வேண்டும் என்ற நிலையே கேடுகெட்ட நிலை என்பது என்னுடைய கருத்து. அந்த நிலமையில் இருக்கிறோம். //

இந்த நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை நான் ஏற்கவில்லை ஜீரா.

//அதெல்லாம் சரி. தில்லைல என்ன நடக்குது? அங்கல்லாம் நீதிமான்கள் செத்துப் போயிட்டாங்களா? இல்ல மடத்தலைவர்கள் தூங்கீட்டாங்களா? என்னவோ போங்க.//

சாகவும் இல்லை. தூங்கவும் இல்லை. ஆனால் இவ்விஷயத்தில் செயலாற்றவில்லை. அவர்களை செயலாற்றச் செய்வதே என் கேள்விகள் சொல்லும் வழிமுறையின் அடிப்படை.

//எனக்கு ஒன்னும் புரியலை :(//

இதில் கொஞ்சம் உண்மை இல்லாமல் இல்லை. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நின் சேவடி செவ்வித் திருக்காப்பு....வாசல்ல இருந்துக்கிட்டே :)//

ஜிரா..புரியலை! என்ன சொல்ல வரீங்க?

திருக்காப்பை வாசல்ல இருந்துகிட்டே தான் சொல்லுறாங்க-ன்னா அது தவறான தகவல்!
பல்லாண்டு கருவறைக்குள்ளும் சொல்லப்படும்!
சுப்ரபாதம் தான் கருவறைக்கு வெளியில் சொல்லப்படும்!
கூட வாங்க, காட்டி மகிழ்விக்கிறேன் :-)

குமரன் (Kumaran) said...

ஓ. அது தான் இராகவன் சொல்ல வந்ததா? எனக்குப் புரியவில்லை. இப்போதும் இராகவன் வந்து அதைத் தான் சொன்னேன் என்று உறுதி செய்யவேண்டும். அவர் அப்படித் தான் சொன்னாரா என்று தெரியவில்லை.

திருக்காப்பிடல் என்றால் வாசற்கதவைப் பூட்டுதல் என்று ஒரு பொருள் இருக்கிறதல்லவா? அதனைத் தான் இராகவன் வாசல் என்று சொல்கிறாரோ என்று நினைத்தேன்.

இரவிசங்கர் சொல்வது போல் 'பல்லாண்டு' உட்பட எல்லா திவ்விய பிரபந்த பாசுரங்களும் கருவறையிலும் முக மண்டபத்திலும் புறப்பாட்டின் போது இறைவனுக்கும் முன்னரும் என்று எல்லா இடங்களிலும் முதன்மை பெறுகின்றன. அதனால் 'வாசலில் நின்று கொண்டும்' பாடியிருப்பார்கள். அதனை இராகவன் பார்த்திருக்கலாம். ஆனால் வாசலில் மட்டுமே தான் நின்று பாடமுடியும். கருவறைக்குள் பிரபந்த பாசுரங்களுக்கு இடமில்லை என்பது தவறான தகவல் தான். வைணவத்தில் 'கோவில்' என்று பெருமைப்படுத்தப்படும் திருவரங்கத்திலும் கருவறைக்குள் தமிழ்மறைகள் முழங்குவதைக் கேட்கலாம்.

குமரன் (Kumaran) said...

தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிவரும் பின்னூட்டங்களை வெளியிட மாட்டேன். அப்படிப்பட்ட பின்னூட்டங்களை எழுதியவர்களுக்கும் இனி மேல் எழுதப் போகின்றவர்களுக்கும் இந்த இடுகையைப் படித்துப் பின்னூட்டம் இட எண்ணிய உங்கள் எண்ணத்திற்கு நன்றிகளை இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//அவர் கருவறையிலோ அர்த்த மண்டபத்திலோ அமர்ந்து தேவார திருவாசகங்களை ஓதிக் கண்டதில்லை. யாரேனும் கண்டதுண்டா?//

குமரன், பூஜா காலங்களில் ஓதுவார் உள்ளே அர்த்த மண்டபத்தில் பாடுவதைப் பார்த்திருக்கிறேன். அந்த பூஜை முடிந்து அவர்களுக்கு பிரசாதம் அளித்த பின்னரே அர்ச்சகர்கள் பொதுமக்கள் பக்கம் வருவர்.

மெளலி (மதுரையம்பதி) said...

// சைவத்தின் நற்பேறின்மை போலும்! நாயன்மார்களின் பதிகங்களைக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து புழங்க ஒரு இயக்கமோ, ஆச்சார்ய பரம்பரையோ அமையவில்லை! //

நற்பேறின்மை அப்படிங்கறதெல்லாம் கொஞ்சம் பெரிய வார்த்தை ரவி.

சைவத்தில் தமிழ் சார்ந்த மடங்களோ இல்லை ஆச்சார்யார்களோ இல்லாமல் இல்லை. இன்றும் மதுரை ஆதினம், திருவாவடுதுறை மடம், காசி மடம் போன்றவை இருக்கிறது. இதற்கெல்லாம் தலைவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் தமிழகத்தில் இருக்கும் 90% க்கும் மேலான சைவ கோவில்கள் இந்த மடங்களுடன் தொடர்பு உள்ளவையே!...இந்த தொடர்பினை அந்த கோவில்களின் கும்பாபிஷேகத்தின் போது தெளிவாக உணரலாம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

டோண்டு ராகவன்,நீங்கள்தான் பிரச்னையை திசை திருப்ப பார்க்கிறீர்கள்.
மசூத்களில் தமிழில் ஓத வேண்டும் என எந்த தமிழ் முஸ்லீமும் வேண்ட வில்லை;மேலும் மசூதிகளுக்கான தனியான் மத சட்டம் அல்லது கோட்பாடுகள் இருக்கின்றன,அதில் அரச் தலையிடுவதில்லை.மேலும் முஸ்லீம்களுக்கான மதக் கோட்பாடுகள்,மத நூல்கள் தமிழில் உருவானவை அல்ல.
ஆனால் திருமுறைகள் இறைவனே ரசித்த நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவாகவே இருக்கின்றன.எனவே இதில் தீட்சிதர்கள் செய்வதுதான் அராஜகம்.
அரசு இந்த விதயத்தில் சரியாகவே செயல்பட்டிருக்கிறது.

மதுரையம்பதி,
மடத் தலைவர்கள் இவ்விதயத்தில் செயல்படாமல் இருந்தார்கள் என்பதும் சரியல்ல;ஆவடுதுறை மற்றும் குன்றக்கூடி ஆதீனங்கள் இவ்விதயத்தில் மிகுந்த ஆர்வமுடன்,ஈடுபாட்டுடன் இருந்ததை நான் அறிவேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நற்பேறின்மை அப்படிங்கறதெல்லாம் கொஞ்சம் பெரிய வார்த்தை ரவி.//

யப்பா...அது சாதாரணச் சொல் தாங்க! அடியேன் சொன்னதால் தானோ ரொம்ப பெருசா படுது? :-)
அந்த அதிர்ஷடம் இல்லாமப் போச்சே-ன்னு சொல்லுறதில்லையா? அதைத் தான் நற்பேறின்மை-ன்னு தமிழில் சொன்னேன்! சொல் ஒரு சொல் மக்கள் வந்து சொல்லுங்கப்பா!

அன்பர்களே
இதைச் சைவ வைணவ விவாதமாக்க நான் ஒரு போதும் விழைய மாட்டேன்! குமரன் கேட்ட கடைசிக் கேள்வியான "ஏன் சைவத்தில் இராமானுசர் போன்று ஒருவர் வரவில்லை"-க்கு என் பதிலை முன்வைத்தேன். அவ்வளவே!

திருவாவடுதுறை, தருமபுரம், மதுரை, திருப்பனந்தாள், குன்றக்குடி ஆதீனங்கள் எல்லாம் சிறந்த தமிழ்ப் பணிகளைச் செய்துள்ளார்கள். எத்தனையோ புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்கள்! ஆனால் இவ்வளவு செய்தும் ஆலயத்தில் மட்டும் தமிழ் வழிபாட்டுக்கு இப்படிப் போராட வேண்டி இருக்கே என்பது தான் ஆதங்கம்! அதைத் தான் குமரன் கேள்விகளாக முன்வைத்துள்ளார்.

சிவாலயங்களில் அர்த்த மண்டபம் தாண்டிக் கருவறையிலும் தமிழ்மகள் வலது காலை எடுத்து வைத்துக் குடிபுகும் நாள் எந்நாளோ?

கால்கரி சிவா said...

//சிவாலயங்களில் அர்த்த மண்டபம் தாண்டிக் கருவறையிலும் தமிழ்மகள் வலது காலை எடுத்து வைத்துக் குடிபுகும் நாள் எந்நாளோ?
//
அபத்தமைய்யா உங்கள் கேள்வி. எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த இறைவனுக்கு எல்லா மொழியும் எல்லா இடமும் ஒன்று. அது கருவறையாகட்டும் மற்ற ஏதோவாகட்டும்.

தமிழ்மகள், தமிழன்னை, தமிழுணர்வு போன்ற பதங்கள் திராவிட அரசியல்வாதிகளின் கவர்ச்சி வார்த்தை விளையாட்டின் எச்சங்கள். அதை தங்களை போன்ற மெத்த படித்தவர்களும் ப்ரயோகிப்பது ஆச்சர்யம்.

கால்கரி சிவா said...

/முஸ்லீம்களுக்கான மதக் கோட்பாடுகள்,மத நூல்கள் தமிழில் உருவானவை அல்ல.
ஆனால் திருமுறைகள் இறைவனே ரசித்த நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவாகவே இருக்கின்றன./

வரலாற்று பதிவாக இருக்கின்றது என்பது முகமதியர்களின் நம்பிக்கை. அவ்வளவே. இறைவன் ஒருகாலும் ஒரே ஒரு மனிதனிடம் கட்ட கடைசியாக மட்டும் பேசுவதில்லை. எக்காலத்திலும் என்னிலும் உன்னிலும் இருப்பவன் இறைவன்இதுவே சைவர்களின் நம்பிக்கை.
தமிழாக இருந்தால் என்ன ஆங்கிலமாக இருந்தால் என்ன அடே அரபு மொழியாக இருந்தால் என்ன என்னாட்டவர்க்கும் இறைவனான தென்னாட்டு சிவனுக்கு எல்லாம் ஒன்றே

குமரன் (Kumaran) said...

ஓகை ஐயா. செயலாற்றுவதில் அடுத்த நிலை செல்ல எத்தனை வழிகள் இருக்கின்றன என்று சொன்னதற்கு மிக்க நன்றி. நான் இவற்றை எல்லாம் செய்யாவிட்டாலும் நீங்கள் பட்டியல் இட்டிருப்பவைகளில் பற்பல நம் நண்பர்கள் செய்வதற்கு உரியனவாக இருக்கின்றன.

தங்கள் பதிவினில் இதனைப் பற்றி எப்போது எழுதினேன் என்பது நினைவில்லை. ஆனால் அண்மைக்காலமாக இந்த உணர்வு இருப்பதால் சொல்லியிருப்பேன்.

பதிவுகளை எழுதியதைத் தவிர்த்து வேறேதேனும் செய்திருக்கிறேனா? இல்லை.

தில்லைக்கு இது வரை சென்றதில்லை. மதுரையில் கோவில் பொறுப்பாளர்களிடம் பேசுவது ஒரு நல்ல வழி.

சைவ மடத் தலைவர்களிடமோ அங்குள்ள பணியாளர்களுடனோ பேசுவதும் ஒரு நல்ல வழி.

இந்து மதத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள் மேல் நம்பிக்கை இல்லை.

ஆன்மிக ஏடுகளுக்கு எழுதி அனுப்புவது நல்ல வழி.

நீதியரசர்களைப் பற்றிப் பேசும் அளவிற்கு எனக்கு அறிவு போதாது. அதனால் அந்தப் பக்கமே போகவில்லை. :-)

நீங்கள் குறித்துள்ளவற்றில் எதையுமே நான் செய்ததில்லை என்பது தான் உண்மை. ஆனால் பதிவினில் எழுதிய ஆவலைச் செயல்படுத்த எத்தனை வழி இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள்.

தில்லை நடராஜனையும் திருவரங்கனையும் பீரங்கி வைத்துத் தகர்க்கும் வழி பார்ப்பவர்கள், தேவார திருவாசகங்களை கொளுத்தும் எண்ணம் கொண்டவர்கள் - இவர்களைப் போல் உணர்வு வேகத்தில் பேசுபவனாக நான் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படிச் செய்யும் எண்ணம் கொண்டவன் இல்லை என்பது உறுதி.

திருக்கொவில்களில் தமிழ் என்ற கருத்தாக்கத்தில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் வேறுவகைப்பட்டது. அந்த ஆர்வத்தின் பேரில் அவர்களும் இதில் இறங்குகிறார்கள். இதில் இறங்க அவர்களுக்கு உரிமை இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. கடைசியில் ஆத்திகர்களால் இயலாததை நாத்திகர்கள் நடத்திக் காட்டினோம் என்பார்கள். ஒன்றும் செய்ய முடியாது. ஊர்ப்பிடாரி ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு ஒண்டவந்த பிடாரியை நொந்து கொள்வதில் பயனில்லை.

குமரன் (Kumaran) said...

திரு. நாக. இளங்கோவன்.

தென்காசிக்குச் சென்றிருக்கிறேன். ஒரே ஒரு முறை. ஆனால் ஆய்குடிக்குச் சென்றதில்லை. நீங்கள் சொன்ன மற்ற திருக்கோவில்களையும் தரிசிக்கும் வாய்ப்பினைப் பெற்றதில்லை. இறைவன் திருவுள்ளம் வைக்க வேண்டும்.

தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

நானும் சில இடங்களில் ஓதுவார்கள் பூணூல் அணிந்துள்ளதைப் பார்த்திருக்கிறேன் இரவிசங்கர். ஆனால் அவர்கள் எந்த சாதி என்று அறியேன்.

நானும் நீங்கள் வேண்டுவதையே வேண்டிக் கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இராகவன், நீங்கள் இந்த இடுகையில் இட்ட இரண்டு பின்னூட்டங்களும் எனக்கு இல்லை. யாருக்கு இட்டீர்களோ அவர்களும் பதில் சொல்லியிருக்கிறார்கள். அதனால் வருகைக்கு மட்டும் நன்றி சொல்லிக்கிறேன். :-)

வவ்வால் said...

குமரன்,

ஹெ ..ஹெ ..ஹே ... இப்போ தான் விழிப்பு வந்திருக்கு போல :-))

புதிதாக எதுவும் நான் சொல்லப்போவதில்லை, பல முறை நான் சொல்லியாச்சு(நான் எதாவது சொன்னா சில அய்யாக்களுக்கு புடிக்காது)

குமரன் (Kumaran) said...

வவ்வால். பல வருடங்களாக நான் சொல்லி வருவது தான். நான் சொல்லி வந்ததில் எந்த வேறுபாடும் ஏற்பட்டதாகத் தோன்றவில்லை. ஏன் 'இப்பத் தான் விழிப்பு வந்திருக்கு போல'ன்னு நீங்க சொன்னீங்கன்னு தெரியலை.

ஒரு வேளை உங்க தலைகீழ் பார்வையில நான் இப்படி நினைக்கவே மாட்டேன் என்று எண்ணியிருந்தீர்களோ? :-)

cheena (சீனா) said...

பதிவினையும் பின்னூட்டங்களையும் கவனமாகப் படித்தேன். விவாதம் நன்றாகச் செல்கிறது. பல நாள் என்ணம் என்றாவது ஈடேறும். அதிகம் சிந்தித்தேன். எண்ணங்களை எழுதுவதாக விரும்பவில்லை.

நல்லதே நடக்கட்டும்.

ஜெகதீசன் said...

//
அபத்தமைய்யா உங்கள் கேள்வி. எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த இறைவனுக்கு எல்லா மொழியும் எல்லா இடமும் ஒன்று. அது கருவறையாகட்டும் மற்ற ஏதோவாகட்டும்.
//
ஆஹா.... அப்படி இருக்கும்போது தமிழ் ஏன் கருவறைக்குள் போகக்கூடாது?

குமரன் (Kumaran) said...

//
அங்கேதான் பாடுவேன் என அடம்பிடிப்பவரும் பாடக்கூடாது என அடம்பிடிப்பவரும் இறைவனின் அருகில் இல்லை என்றே அர்த்தம்
//

மிக நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் சிவா அண்ணா. இதே போல் இன்னும் சில எண்ணங்களும் எனக்குத் தோன்றுவதுண்டு. இராமர் எல்லா இடத்திலும் தானே இருக்கிறார். ஆனால் அவர் பிறந்த இடம் என்று ஒரு இடத்தை நாம் நம்புகிறோம் என்பதால் அதே இடத்தில் தான் கோவில் கட்டுவோம் என்று ஏன் குருதி வெள்ளத்தை ஓட விடுகிறோம்? உண்மையிலேயே நாம் செய்வது இறைவனுக்கு உகப்பாக இருக்குமா? தனுஷ்கோடியில் வில்லின் நுனியால் தான் குரங்குப்படையை வைத்துக் கட்டிய பாலத்தை உடைத்துத் தூள் தூளாக்கிவிட்டான் இராமன் என்று படித்து நம்புகிறோமே. இப்போது திடீரென்று ஆதாம் பாலம் என்ற கடலுக்கடியில் இருக்கும் மண் திட்டை இராமர் பாலம் என்று பெயர் சூட்டி அதனை வைத்து அரசியல் பண்ணுகிறோமே? இதுவும் இராமபிரானுக்கு மகிழ்ச்சியைத் தருமா?

இதே போல் 'இறைவனுக்கு அருகில் இல்லாத' கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் பற்றிய கேள்விகள் நிறைய எழுவதுண்டு. அதே போல் தான் இப்போது 'இறைவனுக்கு அருகில் இல்லாத' லட்சக்கணக்கான தமிழர்களின் உணர்வுகளும் போலும்.

அறிவும் உணர்வும் ஒன்றையே எப்போதும் சொல்லும் என்று இல்லையே. நீங்கள் பேசுவது அறிவுபூர்வமானது. நான் கேட்பது உணர்வுபூர்வமானது. இராமர் கோவில், இராமர் பாலம் போன்ற இடங்களிலும் நீங்கள் அறிவு பூர்வமானதையே பேசுவீர்கள் என்று எண்ணுகிறேன். அந்த இரு விதயங்களில் என் அறிவு என் உணர்வை விட அதிக வலிமையுடன் இருக்கிறது. ஆனால் கருவறையிலும் தமிழ்ப்பண்கள் என்னும் விதயத்தில் என் உணர்வு அறிவை விட வலிமையுடன் இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

டோண்டு ஐயா. ஆத்திகர்கள் நாத்திகர்கள் என்று நாம் பேசுகிறோம். ஆனால் உண்மையில் பெரும்பாலான மக்கள் முழுக்க முழுக்க ஆத்திகர்களும் இல்லை; முழுக்க முழுக்க நாத்திகர்களும் இல்லை. ஆத்திகத்தில் முழுக்க ஈடுபாடு கொண்ட மக்களோ மரபு மரபு என்றும் காலம் காலமாக இப்படித் தான் விதித்திருக்கிறது என்றும் சொல்லி காலத்திற்கேற்ற மாற்றங்கள் செய்ய முன்வருவதில்லை. ஆத்திகரும் நாத்திகரும் இல்லாத நடுவில் நிற்கும் மக்களோ தங்களுக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் இந்த மாதிரி மாற்றங்களை எல்லாம் கொண்டு வரத் தங்களுக்குத் தகுதி இருக்கிறதா என்ற ஐயத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள். அதிலும் காலம் காலமாக இருக்கும் விதிகள், சாஸ்திர சம்ப்ரதாயம், மரபு என்றெல்லாம் சொல்லும் போது பயந்து பின் வாங்கிவிடுகிறார்கள். அப்போது காலத்திற்கேற்ற மாற்றங்களை ஏற்படுத்தக் காலம் என்ற சக்தி நாத்திகர்களைத் தான் முன்னிருத்தும். வரலாற்றைக் கவனித்தாலும் இது நன்றாகப் புரியும்.

திருவரங்கனையும் தில்லை நடராஜனையும் பீரங்கிப் போட்டுத் தகர்க்க வேண்டும் என்று வெறி கொண்டு பேசும் போது எனக்கும் உடம்பெல்லாம் எரியத் தான் செய்கிறது. ஆனால் அந்தப் பேச்சைத் தாண்டி அந்த உணர்வின் பின்புலத்தைப் பார்த்தால் எரிச்சல் குறைந்து போகிறது.

பெரியார் சொல்லும் முன்னர் பெரியவர் சொல்லியிருந்தால் பெரியாருக்கு அந்தப் பெயர் கிடைத்திருக்காதே. பெரியார் சொல்லி எடுக்காதவர் பெரியவர் சொல்லி எடுத்தார் என்பதில் நமக்கும் ஒரு பாடம் இருக்கிறதே. நாத்திகர்கள் இந்தப் போராட்டத்தைத் தங்கள் அரசியலுக்குத் திருப்பிக் கொண்டு போவதற்கு முன் ஆத்திகர்கள் செய்ய வேண்டியதைச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இனி மேலாவது செய்யலாமே.

நம் நாட்டில் பெரும்பான்மையானவர்கள் அரபி ஓதும் முஸ்லீம்களா? கிறிஸ்தவர்களா? இந்துக்களா? தமிழ்நாட்டிலாவது அந்த விகிதாசாரத்தில் ஏதேனும் மாற்றம் உண்டா? பெரும்பான்மையரின் உரிமைகளைப் பற்றி முதலில் நாத்திகர்கள் பேசுகிறார்கள் என்று எடுத்துக் கொள்வோமே. நம்மிடம் தப்பு இருக்கிறது என்று ஒருவன் சொன்னால் 'ஏன்டா எங்கிட்ட மட்டும் வந்து சொல்றே? அவன்கிட்ட இல்லையா? இவங்கிட்ட இல்லையா? அவனையும் இவனையும் போய் முதல்ல கேட்டுட்டு அப்புறம் என்கிட்ட வா' என்பது சில நேரங்களில் ஒத்துக் கொள்ளும்படியான வாதமாகத் தோன்றவில்லை.

குமரன் (Kumaran) said...

வாங்க பிறைநதிபுரத்தான். நான் வழக்கமா எழுதுற அளவுல 10% தான் இந்த இடுகையின் நீளம். இதில் தகவல்கள் இருக்குன்னு சொல்லிட்டீங்க. நன்றிகள். :-)

பிறைநதிபுரத்தான் said...

குமரன் அய்யா,

தமிழ் கருவறைக்குள் நுழையலாமா கூடாதா என்ற விவாதத்தை திசைதிருப்பி -நன்பர்கள் சிலர் ‘மசூதிகளிள்' தமிழ் வழிபாட்டை நுழைக்க தமிழ் ஆதரவாளர்கள் மற்றும்
நாத்திகவாதிகள் தயரா என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்கு முன்பு பள்ளிவாசல்களில் நடக்கும் மத பிரசங்கங்கள் (குத்பா உரைகள்) தமிழில்தான் நடக்கும் (தமிழில் உரை நிகழ்த்தப்படுவ(ட்ட)தால்
எந்தப் பள்ளிவாயிலிலும் இதுவரை ‘தீட்டுப்பரிகாரமும்' நடந்ததில்லை). தொழுகை மட்டும்தான் அரபியில் நடத்தப்படும். தொழுகையின்போது வழக்கமாக
ஒதப்படுகிற குர் ஆன் வசனங்களின் பொருள் சிலருக்கு மட்டுமே புரியும் - மற்றவர்கள் மொழி புரியாமல் முனுமுனுப்பதும் உண்மை.

1980-களிலிருந்து குர்ஆன்-ஹதீஸ்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் பெருகி - மிகவும் குறைந்த விலைக்கு கிடைக்க ஆரம்பித்ததும்
‘குர் ஆனின்' விளக்கத்திற்கு புரோகிதர்களின் தயவை நாடாமல் - தமிழ் குர் ஆனை கையில் ஏந்திக்கொண்டு - திரிபு விளக்கங்களை மறுப்பவர்களின்
எண்ணிகையும் கடந்த 20-25 ஆண்டுகாலமாக பெறுகி வருகிறது. இணையத்தில் தமிழ் குர் ஆன் தாராளமாக கிடைக்கிறது.

அடுத்து, இஸ்லாமிய மதம் - புரோகிதத்தையோ - அல்லது புரோகிதர்களையோ அங்கீகரிக்கவில்லை. இஸ்லாம் தென் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில் -
புரோகிதர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது உண்மைதான். சடங்குகள், சம்பிரதாயங்கள், மத்ஹபு, பாத்திஹா, தர்கா வழிபாடு, கொடியேற்றம், கந்தூரி, கூடு என்று
பல மூட நம்பிக்கைகளை வளர்த்து, அப்பாவி பக்தர்களின் ‘சட்டை பாக்கெட்டை' சுரண்டி - உழைக்காமல் -உட்கார்ந்த இடத்திலிருந்தே
தங்களது ‘தொப்பையையும்' - ‘தாடியையும்' வளர்த்துக்கொண்டிருந்தனர். பக்தர்களை நாகூரில் - நாகப்பட்டினத்தில்-
ஏர்வாடியில் - பரங்கிப்பேட்டையில் ‘உறைந்திருப்பதாக' கூறி ஊர் ஊராக அலைய வைத்துகொண்டிருந்தனர். அவ்வாறு அழைந்து திரிந்தவர்களை
தடுத்தது- ஓரிறை கொள்கைகளை எடுத்தியம்பிய இயக்கங்கள்தான். இத்தைகைய இயக்கங்களால் ‘பிழைப்பு' போன
இஸ்லாமிய புரோகிதர்கள் - இவர்களை பெரியாரின் வாரிசுகளாக கூறி - அவர்களை பள்ளிவாசல்களில் நுழைவதிலிருந்து தடுத்து வைத்தனர். இதெல்லாம் கடந்த கால வரலாறு.

பள்ளிவாயிலின் எந்தப்பகுதியிலும் முஸ்லிம்கள் நுழையலாம் - தீட்டாகாது. அதுபோலவே குர் ஆனை முஸ்லிம்கள் யார் வேண்டுமானலும்- தொடலாம் -
ஓதலாம்- ஒதுவதை கேட்கலாம். குறிப்பிட்ட பிரிவினர் ஓதப்படாது என்றோ, ஒதுவதைக்கூட கேட்கப்படாது என்றோ - பக்தி முத்திப்போய் -காது கொடுத்து கேட்டால்
அந்தக் காதில் ‘ஈயத்தை' காய்ச்சி 'சுடச்சுட' ஊற்ற வேண்டும் என்ற புண்ணாக்கு சட்ட திட்டங்கள் எதையும் 'கட்டக்கடைசி' (கால்கரி சிவா சொல்வது போல)
தூதரான முகம்மது நபி (ஸல்) கூறவில்லை. அது மட்டுமல்ல ‘அரபி' ‘அல்லா' வின் பாஷையென்றோ - மற்ற மொழிகள் ‘புடுங்கி' பாஷைகள் என்றோ 'ஹதீஸ்' களை ஆதாரம் காட்டி
எந்த முட்டாள் முல்லாவோ-மவ்லவியோ கூறவில்லை.

அடுத்து முஸ்லிம்களில் - குறிபிட்ட ஒரு சில பிரிவினர் மட்டும்தான் - ‘முல்லாக்களாக' ‘மவ்லவிகளாக' பணிபுரிய முடியும் என்ற மத அடிப்படையிலான வரையறை
கிடையாது அவர்களை அல்லாவின் ஏஜண்ட்டுகளாகவோ - இடைத்தரகர்களாகவோ - புனிதம் நிறைந்தவர்களாகவோ பட்டம் சூட்டி பள்ளக்கில் ஏற்றி பவனி வர வேண்டும் என்றோ
பள்ளிவாயிலிலிருந்து வரும் வருமானத்தை வாயில் போட்டுக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு மட்டும்தான் என்ற மத ரீதியான
சலுகைகள் கிடையாது. எந்த இடைத்தரகர்கள்-புரோக்கர்களின் -மொழியின் - தயவின்றி எந்த ஒரு முஸ்லிமும் தானாகவே இறைவனிடம் பிரார்த்திக்கலாம்.

இஸ்லாத்தில் ஒரு வேளை புரோகிதம்-புரோகிதர்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தால் பள்ளிவாசலுக்குள் - யார் நுழையவேண்டும்- எந்த மொழி நுழையவேண்டும்
என்று அடம்பிடித்தாலும் பிடித்திருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன். நல்லவேலை புரோகிதத்திடமிருந்து தப்பித்தது இஸ்லாம்.

குமரன் (Kumaran) said...

பிறைநதிபுரத்தான்,

தகவல்களுக்கு நன்றி. ஆனால் என் பதிவில் இந்து முஸ்லீம் வேறுபாடுகளைப் பற்றியோ இரு மதத்தாரிடையே இருக்கும் பிரச்சனைகளைப் பற்றியோ விவாதிப்பதில் கூட எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் இப்போது ஒரு பட்டியலுடன் வந்திருப்பது போல் இஸ்லாமில் இருப்பதில் எதெல்லாம் இந்து மதத்தில் இல்லை என்றொரு பட்டியலுடன் இன்னொருவர் வரலாம்; ஏன் முயன்றால் நானே அப்படி ஒரு பட்டியலைக் காட்டலாம். அதில் மதவெறி/மதவெறுப்பு இருக்க வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் அப்படித் தொடங்கும் விவாதங்கள் மிக மிக விரைவில் சேற்றை வாரியிறைப்பதாக முடியும் என்பதால் அது என் பதிவில் நடக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.

இந்த விதயத்தைத் தொடர்ந்து பேச நினைப்பவர்கள் தயவு செய்து இந்த விவாதத்தைத் தங்கள் பதிவுகளுக்குக் கொண்டு செல்லுங்கள். இங்கே பின்னூட்டம் இட்டு என்னைத் தருமசங்கடத்திற்கு ஆளாக்க வேண்டாம்.

குமரன் (Kumaran) said...

வாங்க தங்கமணி.

ஆன்மிக ஆர்வலர்களின் விருப்பம் கூட சில குறிப்பிட்ட வகுப்பினரின் நலனைத் தாண்டியதாக இருக்க முடியாது என்பதற்கு என்னுடைய இந்த இடுகைகளும் அதற்கு வந்த எதிர்வினைகளும் சாட்சி என்று நினைப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். எந்த குறிப்பிட்ட வகுப்பினரின் நலனை மட்டுமே கொண்டு என் இடுகைகள் அமையவில்லை என்று நினைக்கிறேன். அதனால் நீங்கள் சொன்னது புரியவில்லை. முடிந்தால் விளக்கிச் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

//குமரனுக்கு வராமல் இருக்கவேண்டும் என்பது என்னுடைய இப்போதைய கவலை.
//

நீங்கள் சொன்னதைச் சரியாகப் புரிந்து கொண்டேனா ஓகை ஐயா. முதலில் உங்கள் கேள்விகளைப் பார்த்ததும் 'அடடா. மடக்குவதைப் போல் இத்தனைக் கேள்விகளைக் கேட்டிருக்கிறாரே' என்று நினைத்தேன். பின்னர் சிறிது நேரத்திலேயே 'இதில் இன்னும் இத்தனை செய்யலாம்' என்று சொல்லிச் சென்றதாகத் தோன்றியது. பின்னர் நீங்களும் வந்து அதனை உறுதி செய்திருக்கிறீர்கள்.

குமரன் (Kumaran) said...

மதுரையில் ஓதுவார்கள் அர்த்த மண்டபத்தில் பாடுவதைப் பற்றிய தகவலைச் சொன்னதற்கு நன்றிகள் மௌலி.

ஜோ/Joe said...

குமரன்,ஜி.ரா,
நல்ல விவாதம் ,கருத்துக்கள் .
என்னோட கருத்து ..எதுக்கு வம்பு .. டோண்டு சார் வந்து உனக்கிங்கு என்ன வேலைண்ணு கேப்பார் ..தேவையா !

ஓகை said...

//குமரன் பதிவுகளுக்கு நன்றி!//

சாதிகளை ஒழிக்க இந்து மதத்தை ஒழிக்கவேண்டுமென்ற மிகவும் பேசப்பட்ட பதிவை வெளியிட்ட தங்கமணி, ஆன்மிகத்தையும் இந்துகடவுகள்களின் புகழ் பரப்புவதையும் முதல் நோக்கங்களாகக் கொண்டு பதிவிடும் குமரனின் பதிவுகளுக்கு நன்றி சொல்கிறார்! குமரன் தேவாரம் எல்லா கோவில்களிலும் ஒலிக்க வேண்டுமென்று விரும்புவதே நமக்குப் புரிந்த மொழியில் இறைவன் புகழ் பாடப்பட்டு இறை உணர்வு பல்கிப் பெருக வேண்டும் என்பதற்கே என்பது என் புரிதல். தங்கமணி இதற்காக நன்றி தெரிவித்திருந்தாரானால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான்.

//முதலில் இந்த விதயத்தில் சில திசைதிருப்பல்களை நிறுத்த வேண்டும்.

1. தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று கேட்பது ஒரு ஒதுவாரே அன்றி தி.க அல்ல.//

ஆனால் இந்த ஓதுவாரின் வேண்டுகோளுக்கு போராட்ட ஆதரவு அளிப்பது இறை மறுப்பு இயக்கங்களும் உலகளாவிய நாத்திகர்களான கம்யூனிஸ்டுகளும்.

இறைவன் துதி பாடப்படுவதற்கு இவர்கள் அளிக்கும் ஆதரவு இவர்களின் அடிப்படைக் கொள்கைகளுடன் உடன்படவில்லை. 'தில்லைவாழ் அந்தணரின் அடியார்க்கும் அடியேன் என்ற சுந்தரர் எழுதிய தேவாரம் பக்த கோடிகளிடம் பரப்பப் படுவதை இவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?

தமிழக சாலைகள் முழுவதிலும் keep left என்பது போன்ற பெயர்பலகைககள் இடதுபுறம் செல்க என்று மாற்றப்படவேண்டும் என்பதற்கான போராட்டம் என்றால் அது தமிழ் மொழிக்கான போராட்டமாக ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் 'கற்றுணை பூட்டி கடலில் வீசினும் நற்றுணை ஆவது நமச்சிவாயமே' என்பது தமிழனின் வழிபாடாக இருக்கவேண்டுமென்று வெறெங்குமே சொல்லாமல் அதற்கு எதிர்ப்புக் குரல் எழுப்பிவிட்டு இங்கு மட்டும் ஆதரவளிப்பது எப்படி?

//2. தமிழ் வழிபாட்டை தமிழக அரசுதான் ஆணையிடுகிறதே அல்லாமல் தி.மு.க அல்ல.//

அரசாணை மதிக்கப்பட்டே ஆக வேண்டும். போரட்டங்களை சிலாகிக்கும் இயக்கங்கள் இவ்விஷயத்தில் அரசாணை மதிக்கப்பட வேண்டும் என்று கூறுவதும் ஆனந்தமான செய்திதான். ஆனால் அரசாணை மீறப்பட்டிருந்தால் மீறுகின்ற எவர்க்கும் அதற்கான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும்.

//இந்த நிலையில் பீரங்கி வைத்து பிளப்பதெல்லாம் அர்த்தமற்ற திசைதிருப்பல்கள்.//

இறை மறுப்பாளர்களின் இந்த அபிலாஷை விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டதாக கொள்ளலாமா?

//3. தி.மு.கவின் நிலைப்பாட்டைத் தான் அரசு பிரதிபலிக்கிறது என்று சொன்னால் பா.ஜ.க நிலைப்பாட்டை நோக்கவும்.//

திமுக நிலைப்பாட்டை அரசு பிரதிபலிப்பதில் தவறில்லை. திமுக நிலைப்பாடு தெரிந்துதான் மக்கள் ஓட்டளித்திருக்கிறார்கள்.

//இந்த விதயத்தில் ஆன்மீக ஆர்வலர்கள் விருப்பம் கூட சில குறிப்பிட்ட வகுப்பினரின் நலனைத்தாண்டியதாக இருக்கமுடியாது என்பதற்கு உங்களது இந்தப்பதிவுகளும் அதற்கு வந்த எதிர்வினைகளும் இன்னொரு சாட்சி என்றே நினைக்கிறேன்.//

ஒரே பொருள் பாம்பாகவும் பழுதாகவும் தெரிவது பார்ப்பவர்களின் கண்ணையும் கருத்தையும் பொருத்ததுதான்.