Friday, May 30, 2008

முக்கியம், பிரபலம்

பிரபல மருத்துவர் சென்னை விஜயம் என்று நக்கீரன், துக்ளக் அட்டைப் படங்களில் பார்த்திருப்போம். 7 தலைமுறைகளாக வைத்தியம் செய்துவருவதாக சொல்லி, ஆண்மை குறைபாட்டு சிகிச்சைக்கு உடனடி தீர்வுக்கு நாட விரும்புபவர்கள் நாடலாம் என்று ஒரு பக்கத்திற்கு விளம்பர தகவல் இருக்கும். பிரபல நடிகர் வரி ஏய்ப்பு, பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார். நகரில் முக்கிய சாலைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது என்ற அறிவுப்பு இது போல 'நன்கு அறியப்பட்ட' இரண்டு சொற்களைப் பார்ப்போம்.

செல்வாக்குடையவர், கைராசிக்காரர், சிறப்புடையவர், நன்கு அறியப்பட்டவர், நன்கு அறிமுகமானவர்கள் என்ற பொருள் இருக்கும் இடங்களில் எல்லாம் பிரபலம் என்று எழுதிவருகிறோம். அதற்கு பதிலாக எல்லோருக்கும் தெரிந்த அரசியல் வாதி என்ற இடத்தில் பிரபல அரசியல்வாதி என்று சொல்லாமல் செல்வாக்குள்ள அரசியல்வாதி அல்லது அரசியல் செல்வாக்குடையவர் என்று சொல்லலாம். பிரபல மருத்துவர் என்று சொல்வதற்கு பதில் நன்கு அறியப்பட்ட மருத்துவர் அல்லது அனைவரும் அறிந்த அல்லது புகழ்பெற்ற மருத்துவர் அல்லது பெயர்பெற்ற மருத்துவர் என்று சொல்லாம். பிரபல நடிகர் என்பதற்குப் பதில் புகழ்பெற்ற நடிகர் என்று சொல்லலாம். பிரபல கொள்ளைக்காரன் பிடிபட்டான் என்பதற்கு பதில் அனைவராலும் தேடப்படும் கொள்ளைக்காரான், நன்கு அறியப்பட்ட (கொள்ளைக்காரனெல்லாம் பிரபலப்படுத்த வேண்டாம்) கொள்ளைக்காரன், சமூக எதிரி பிடிபட்டான் என்று எழுதலாம். பிரபல கிரிக்கெட் வீரர் என்பதற்கு பதில் முன்னனி கிரிக்கெட் விரர் என்று சொல்லலாம்.

முக்கிய என்ற சொல்லுக்கு முதன்மையான, இன்றியமையாத என்ற சொல்லை இடத்துக்கு ஏற்றார்போல் பயன்படுத்தலாம். முக்கிய சாலைகளில் என்பதற்கு பதில் முதன்மைச் சாலைகளில் என்று சொல்லலாம். முக்கியஸ்தர், முக்கிய விருந்தினர், முக்கியமானவர் என்பதற்கு பதில் சிறப்புடையோர், சிறப்புவிருந்தினர், இன்றியமையதவர் என்ற வழக்கில் வருவது தனித்தமிழுக்கு மேலும் மெருக்கூட்டும்.

தனித்தமிழுக்கு தனிச்சிறப்புச் (மிக முக்கியமாக) சேர்க்க நாம் இன்றியமையாது என்பது போல் பயன்படுத்தும், 'பிரபலமடைந்த, முக்கியமான' மேற்கண்ட இரு சொற்களை முறையே நன்கு அறிந்த, முதன்மையான என்ற பொருளில் பயன்படுத்தலாம். எல்லா இடத்திலும் பிரபலம் என்று எளிதாக சொல்வதைவிட இடத்துக்கு ஏற்றார் போல் தமிழ் செற்களைப் பயன்படுத்துவது பொருள் நிறைந்ததாக இருக்கும். விஜயம் என்பது வருகை என்று நன்கு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது.

இது பற்றி உங்களின் முதன்மையான கருத்துக்கள் என்ன, வேறு பொருத்தமான தமிழ் சொற்கள் இருந்தால் பரிந்துரையுங்கள்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை திரு.கோவி.கண்ணன் அவர்களால் 'சொல் ஒரு சொல்' பதிவில் 25 ஜனவரி 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

11 கருத்துக்கள்:

செந்தழல் ரவி said...
இது ஒரு முக்கியமான பதிவு, அதனால் எனது முதன்மையான பின்னூட்டம்.

January 25, 2007 7:46 AM
--

குமரன் (Kumaran) said...
வாங்க கோவி.கண்ணன் அண்ணா. சொல் ஒரு சொல்லில் உங்களது இரண்டாவது பதிவு இது. நீங்களாகவே இடும் முதல் பதிவு. தொடர்ந்து உங்கள் எண்ணங்களை 'தமிழ்', 'சொல்' என்ற வகைப்பாட்டுக்குள் வருவதை எழுதிக் கொண்டு வாருங்கள். சொற்களில் ஐயம் இருந்தால் இராம.கி. ஐயா போன்ற தமிழறிஞர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.

பலரும் அறிந்த நீங்களும் இந்த 'சொல் ஒரு சொல்' பதிவில் இணைவது பெருமகிழ்ச்சி.

முதன்மையும் பெருமையும் ஆன கருத்துகளைச் சொல்லுங்கள்.

(அப்பாடா. பிரபலத்தையும் முக்கியத்தையும் புழங்கவில்லை).

January 25, 2007 8:09 AM
--

கோவி.கண்ணன் [GK] said...
குமரன் மற்றும் ஜிரா,

ஆரம்பம் முதலே இந்த பதிவின் இடுகைகளை தொடர்ந்து படித்துவருவதால் நான் பதிவு எழுதும் போது முடிந்த வரையில் தமிழ்ச் சொற்களை பயன்படுத்த வேண்டும் என்று எண்ணி மிகுந்த கவனம் எடுத்துக் வருகிறேன். தொடர்ந்து இராமகி ஐயா அவர்களின் பதிவையும் படித்துவருவதல் உங்களுடன் சேர்ந்து தமிழ் சொற்கள் பரிந்துரையில் கைகோர்க்க வந்துள்ளேன்.

இருவருக்கும் மிக்க நன்றி !

January 25, 2007 8:47 AM
--

G.Ragavan said...
இந்தப் பதிவைப் படிக்கையில் இதைச் சொல் ஒரு சொல்லில் போட்டிருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைத்தேன். பிறகு பார்த்தால் பதிவு சொல் ஒரு சொல்லில்தான் இருக்கிறது. :-)

வருக. வருக. வருக. உங்கள் வரவு நல்வரவாகுக. புதிய வலைப்பூவிற்கு மாறிய பிறகுதான் குழுமப்பூக்களில் சேர்வது என்று முடிவெடுத்திருப்பதால் உங்கள் வரவும் குமரனின் பங்களிப்பும் சொல் ஒரு சொல்லைக் கலகலப்பாகவும் பயனுள்ளதாகம் கொண்டு சென்று சிறப்பெய்தும் என்று நம்புகிறேன். வாழ்க. வளர்க.

January 25, 2007 10:04 AM
--

கோவி.கண்ணன் [GK] said...
//G.Ragavan said...
இந்தப் பதிவைப் படிக்கையில் இதைச் சொல் ஒரு சொல்லில் போட்டிருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைத்தேன். பிறகு பார்த்தால் பதிவு சொல் ஒரு சொல்லில்தான் இருக்கிறது. :-)

வருக. வருக. வருக. உங்கள் வரவு நல்வரவாகுக. புதிய வலைப்பூவிற்கு மாறிய பிறகுதான் குழுமப்பூக்களில் சேர்வது என்று முடிவெடுத்திருப்பதால் உங்கள் வரவும் குமரனின் பங்களிப்பும் சொல் ஒரு சொல்லைக் கலகலப்பாகவும் பயனுள்ளதாகம் கொண்டு சென்று சிறப்பெய்தும் என்று நம்புகிறேன். வாழ்க. வளர்க.
//

ஜிரா,

இடுகையின் தலைப்பை மட்டும் ("027: முக்கியம், பிரபலம்" )பார்த்து பதிவின் தலைப்பைப் (சொல் ஒரு சொல் )பார்க்காமல் இருந்துவீட்டீர்களா ?
நல்ல நகைச்சுவை ! :))))

உங்கள் இருவருக்கும் தமிழ்மேல் உள்ள பற்றைப் பார்த்துதான், நானும் இதில் சேர்ந்து செயலாற்ற முடிவு செய்தேன். வாய்பளித்து பாராட்டும் உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் !

January 30, 2007 4:10 AM
--

குறும்பன் said...
முக்கியமான மன்னிக்க சிறப்பான பதிவு. சிரா, குமரன் & கோவி அருமையான கூட்டு. சொல் ஒரு சொல் பதிவு குடுத்து வைத்த்து. படிக்கும் நாங்களும் குடுத்து வைத்தவர்கள். தொடரட்டும் உங்கள் பணி.

February 07, 2007 7:11 PM
--

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
நீங்கள் சொல்வதுபோல்; தேவைக்குத் தகுந்தவகையில் இடத்துக்கேற்றார்ப்போல்.; யாவற்றையும் பிரயோகிக்கலாம்.
யோகன் பாரிஸ்

February 08, 2007 7:39 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி குறும்பன்.

February 08, 2007 8:22 PM
--

சிறில் அலெக்ஸ் said...
பிரபலம் எங்கிற வார்த்தை ரெம்ப பிரபலமாயிட்டதால அத தமிழில் அப்படியே சேத்துக்கிட்டா தமிழ் பிரபலமாகும்னு நினைக்கிறேன்.

ஆங்கிலம் வளருது பாருங்க இப்படித்தான்.

குரு, கயிறு, பண்டிட் இன்னும் எத்தனையோ இந்திய சொற்களை உள்வாங்கியிருக்குது.

இது எனக்குத் தோணியதுதான்..
பேச்சுத் தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் வேறுபாடு இருப்பதுபோல எல்லா மொழிகளிலும் இருக்குது.

பிரபலம் தூய தமிழ் வார்த்தையில்லைன்னு தெரிஞ்சுகிட்டேன் நன்றி.

February 08, 2007 8:49 PM
--

ஆழியூரான். said...
இம்மாதிரியான பதிவுகள் வரவேற்கப்பட வேண்டும்.
வாழ்த்துக்கள்.

February 09, 2007 4:44 AM
--

கோவி.கண்ணன் [GK] said...
//சிறில் அலெக்ஸ் said...
பிரபலம் எங்கிற வார்த்தை ரெம்ப பிரபலமாயிட்டதால அத தமிழில் அப்படியே சேத்துக்கிட்டா தமிழ் பிரபலமாகும்னு நினைக்கிறேன்.

ஆங்கிலம் வளருது பாருங்க இப்படித்தான்.
//
சிறில்,
வளவு இராமகி ஐயாவின்
இந்த கட்டுரையை நேரம் கிடைக்கும் போது படித்துப்பாருங்கள். மேலும் இது குறித்துச் நம் நண்பர் குமரன் திரு ஜயராமன் அவர்களுக்கு பதிலுரைத்த மற்றொரு
சுட்டி

February 09, 2007 4:57 AM

Kavinaya said...

நன்கு அறியப்பட்ட சொற்களைக் குறித்து புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு பாடமாய் இருக்கிறது. நன்றி குமரா, திரு.கோவி. கண்ணன்!

குமரன் (Kumaran) said...

கவிநயா அக்கா.

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே. :-) ஆனால் அவர் தான் தமிழகத்திற்குப் போய்விட்டார். :-)