Saturday, May 03, 2008

ஒளவியம்: பொறாமை

இந்த ஒளவியம் என்ற சொல்லை இதற்கு முன் ஓரிரு முறை கேட்டிருந்தாலும் இதற்கு என்ன பொருள் என்று மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை போலும். இன்று ஒரு வலைப்பதிவு போடுவதற்காக ஒள என்று தொடங்கும் வார்த்தைகளை கூகுளில் தேடியபோது இந்தச் சொல் அகப்பட்டது. மேலும் தேடிய போது கூகிளாண்டவரால் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மூன்றினைத் தான் தர முடிந்தது.

1. ஒளவியம் பேசேல் - ஒளவையாரின் ஆத்திச்சூடியில் வருவது இது. ஓரிடத்தில் இதற்கு 'பொறாமையுடன் கூடிய சொற்களைப் பேசாதீர்கள்' என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். இன்னோரிடத்தில் ஒளவியம் என்பதற்குப் 'பொறாமை, தீவினை' என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது.

2. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு - இதுவும் ஒளவையார் சொன்னதே. கொன்றை வேந்தனில். இங்கும் பொறாமை என்ற பொருளே ஒளவியம் என்ற சொல்லிற்குத் தரப்பட்டுள்ளது.

3. மூன்றாவது சுட்டி சண்முகக் கவசத்தைத் தந்தது.

ஒளவியம் உளர், ஊன் உண்போர்
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனை மல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க காக்க

பொறாமை உள்ளோர், உயிர்வதை செய்து ஊன் உண்போர், அசடர், பேய், அரக்கர், புல்லர், பகைவர்கள் எவரானாலும் என்னுடன் மல்லாட (சண்டையிட) தாவியே (தவ்வியே) வருவார்கள் ஆயின் உலகத்தில் அசையும் அசையாப் பொருட்கள் யாவும் காக்கும் பெருமையுடைய சூரனை எதிர்த்தவன் கையில் இருக்கும் வேல் காக்கட்டும்.

(தெவ்வர் - பகைவர்.
சராசரம் - சரம் + அசரம். அசையும் பொருட்கள் சரம். அசையாப் பொருட்கள் அசரம்.
புரத்தல் - காத்தல்.
கவ்வு - பெருமை.
அயில் - வேல்)

ஒளவில் தொடங்கும் சொற்கள் மிகக் குறைவாகத் தான் இருக்கின்றன. இந்த 'ஒளவியம்' என்ற சொல் அழகான சொல்லாக இருக்கிறது. நாமும் பொறாமை என்ற சொல்லைப் பல இடங்களில் புழங்குகிறோம். ஓரிரு முறை பொறாமை என்று சொல்லாமல் ஒளவியம் என்றுச் சொல்லத் தொடங்குவோமானால் இந்தச் சொல் மீண்டும் புழக்கத்திற்கு வரும்.

உங்களுக்குத் தெரிந்த வேறு ஏதாவது சொல் 'ஒள' என்று தொடங்குகிறதா? உடனே எல்லோருக்கும் நினைவிற்கு வருவது 'ஒளவை'யும் 'ஒளடதமு'ம் தான். வேறு ஏதாவது சொல்?

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 5 ஜூலை 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

64 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...
ஒளகார குறுக்கம், மகர குறுக்கம் என்று எங்கோயோ படித்த ஞாபகம்.
ஒளகாரம் 'ஒள' என்பதுதானே.

எனக்கும் தெரிந்து 'ஒளறு' வாயன்னு எழுதினால் கூட அதை 'ஒ-ள-று வாயன்' என்று தான் படிக்க முடியும் தவிர 'அவ்று வாயன்' என்று படிக்க முடியாது. ..ம் ஹூம் வேறு சொல் நினைவில் இல்லை

July 05, 2006 11:06 AM
--

SK said...
"ஔ"வில் சொற்கள் குறைவுதான்.
மெய்யெழுத்துகளுடன் சேர்ந்து பல சொற்கள் உண்டு.
ஆனால், தனியே அதிகம் இல்லை.

அது சரி, இந்த 'ள' எனும் எழுத்தை இதற்கும் [ஔ], 'ஊ' என்பதற்கும் பயன்படுத்துவதற்கு என்ன காரணம்??

July 05, 2006 12:00 PM
--

குமரன் (Kumaran) said...
இந்தப் பதிவு இட்டு முடித்த பிறகு 'ஒளவியம் தீர்த்தென்னை ஆட்கொண்ட குருபரனே... அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்...தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா...ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோ...' என்ற வரிகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. கூகிளில் தேடினால் இந்த வரிகள் கிடைக்கவில்லை. இது ஸ்கந்த குரு கவசம் என்று நினைக்கிறேன். யாராவது சரியா என்று சொல்லுங்கள்.

July 05, 2006 2:03 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் கோவி.கண்ணன். ஒளகாரம் என்பது ஒள தான். நானும் ஒளறு வாயன்னு எழுதியிருந்தா ஒ ள று வாயன்னு தான் படிச்சிருப்பேன். ஒள று வாயன்னு படிச்சிருக்க மாட்டேன். :-)

July 05, 2006 4:25 PM
--

குமரன் (Kumaran) said...
//அது சரி, இந்த 'ள' எனும் எழுத்தை இதற்கும் [ஔ], 'ஊ' என்பதற்கும் பயன்படுத்துவதற்கு என்ன காரணம்??
//

என்ன காரணம் என்று எனக்குத் தெரியலையே எஸ்.கே.

July 05, 2006 4:26 PM
--

பொன்ஸ்~~Poorna said...
குமரன், ஔவியம் தெரியும்.. மற்றபடி வேறு சொற்கள் தெரியலை..

ஊ மேல ஊர்ந்து போகும் ளவுக்கும் எனக்கு ஏன் எதுக்குன்னு தெரியாது... எஸ்கே, இது அறிவினா தான்னு எனக்குத் தெரியும்.. சொல்லுங்க.. கேட்டுக்கிறோம் :)

July 05, 2006 5:33 PM
--

manu said...
குமரன் ஔதார்யம் நம்ம எழுத்து இல்லை தானே?
ஒரு வேளை
ஔ ஒரு உண்மையான உயிர் எழுத்தாக இருக்க்த் தீர்மானித்து விட்டதோ?
பொன்ஸ், குஞ்சரம் எங்கே போகிறது?:-)

July 05, 2006 7:57 PM
--

SK said...
ஔ, ஊ எனும் இரு எழுத்துகளைக் கவனித்தால்,
அவற்றிற்கும், மற்ற உயிரெழுத்துகளுக்கும் உள்ள வேறுபாடை உணர முடியும்.

அ, ஆ== 'அ' காலில் ஒரு சுழி சுழித்தாயிற்று.
'இ' 'ஈ'== இதையும் ஒரு வரைபடுத்தி வடித்தாயிற்று!
'எ' 'ஏ'== 'எ'யை கிழிழுத்து 'ஏ' ஆக்கியாயிற்று.

'ஒ' 'ஓ'== 'ஒ'வை சுழித்து!, 'ஓ'!
ஃ== இதை ஒன்றும் செய்ய இயலாது.

எழுத்தை வடித்த போது, அதிகம் சிந்திக்க வைத்தவை இந்த 'ஊ'வும், 'ஔ'வும்தான்!

" "
[குமரன் கவனிக்க!! 12 எனச் தொல்காப்பியர் அறுதியிட்டுச் சொல்லிவிட்டார்!]

'புள்ளி இறுதி' எனச் சொல்லுகின்ற 11 எழுத்துகளில் கடைசி எழுத்து 'ள'.

எனவே ஒரு நினைவுக்காகவும், அடையாளத்துக்ககவும், இந்த 'ள' என்னும் கடைசி எழுத்தை, நீட்ட முடியாத, சுழிக்க முடியாத 'ஊ'விற்கு மேலேயும், 'ஔ'விற்குப் பக்கலிலும் வைத்திருப்பார்கள் என நான் கருதுகிறேன்.

வேறு கருத்துகளை வரவேற்கிறேன்

July 05, 2006 8:05 PM
--

குறும்பன் said...
யார் ஔட்? . இதுதான் ஔவைக்கு அப்புறம் எனக்கு தெரிந்த ஔ சொல். :-))

July 05, 2006 8:33 PM
--

குமரன் (Kumaran) said...
பொன்ஸ். ஒளவியம் முன்னாலேயே தெரியுமா? வேறு சொற்கள் தெரியவில்லைன்னு சொல்லியிருக்கீங்க. ஆனா வேறு சொற்களைத் தேடிப்பிடித்துச் சொன்னால் அவையும் உங்களுக்குத் தெரிந்திருக்க பெரும் வாய்ப்பு உண்டு என்று தான் நினைக்கிறேன். இல்லையா? :-) தற்போது சட்டென்று நினைவிற்கு வரவில்லை. அப்படித்தானே?! :-)

அது எப்படி எஸ்.கே.வுடைய வினா அறிவினா என்று தெரிந்தது? :-)

July 05, 2006 10:06 PM
--

குமரன் (Kumaran) said...
மனு அம்மா. ஒளதார்யம் நம்ம சொல் இல்லை; வடமொழிச் சொல் தான். வள்ளல்தன்மை என்று பொருள்.

//ஒரு வேளை
ஔ ஒரு உண்மையான உயிர் எழுத்தாக இருக்க்த் தீர்மானித்து விட்டதோ?
//

இங்கே என்ன சொல்றீங்கன்னு புரியலையே?!

பொன்ஸின் குஞ்சரம் எங்கே போகிறது என்று உண்மையிலேயே தெரியாதா? வள்ளிமானை குமரனிடம் சேர்க்கத் துரத்திக் கொண்டு போவதாய் பிஞ்சில் பழுத்தவர் சொல்கிறார். :-)

July 05, 2006 10:09 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. நீங்கள் சொல்லியிருப்பதற்கு மேல் விளக்கம் தேவை என்று நினைக்கிறேன். ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. மன்னிக்கவும்.

July 05, 2006 10:10 PM
--

குமரன் (Kumaran) said...
குறும்பரே. குறும்பு தானே?! :-) ஒளவில் தொடங்கும் தமிழ்ச்சொல்லைக் கேட்டால் தமிழாக்கப்பட்டச் சொல்லைச் சொல்கிறீர்? :-)

July 05, 2006 10:15 PM
--

manu said...
குமரன், ஔ உயிர் எழுத்து ரைட்?

மற்ற மெய்யெழுத்துக்களுக்காகத்
தன்னை விட்டுகொடுத்துவிட்டதோ //
என்று சொன்னேன்.

நான் சொல்றது புரியவில்லை என்பது சுலபமாகப் புரியக்கூடியது.:-))

July 05, 2006 10:53 PM
--

Merkondar said...
நான் படித்த பள்ளியில் ஆரம்ப ஆசியரியருக்கு இது வெல்லாம் தெரியாத எங்களை திட்ட அடிக்கத்தான் தெரியும்

July 06, 2006 6:58 AM
--

குமரன் (Kumaran) said...
http://nradhak.blogspot.com/2005_02_01_nradhak_archive.html

இந்தச் சுட்டியில் ஒளகாரத்தில் தொடங்கும் சில சொற்களின் பட்டியல் அந்தச் சொற்களின் பொருட்களோடு சொல்லப்பட்டிருக்கிறது.

July 06, 2006 7:05 AM
--

நாமக்கல் சிபி said...
கும்ரன்,
ஔவியம் பேசேல்னு ஔவையார் சொன்னது சிறுவயதிலேயே படித்திருக்கிறேன். பொருள் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

தற்போது ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் ஔதடம் என்னும் வார்த்தையைப் பார்த்தேன். அது பற்றி இதற்கு முந்தைய பதிவிலேயே பார்த்தோம். அதனால் மருந்து என்று உடனே தெரிந்து கொண்டேன். புத்தகத்திலும் மருந்துக் குப்பி படம்தான் போட்டிருந்தனர்.

பிறகு ஔகாரக் குறுக்கம். இலக்கணத்தில் கேள்விப் பட்டதுதான்.
இவை தவிர வேறேதும் (ஔவில் ஆரம்பிக்கும்) சொற்கள் எனக்கு நினைவில் இல்லை.

July 06, 2006 7:23 AM
--

நாமக்கல் சிபி said...
குமரன்,
சுட்டியைப் பார்த்தேன்.

அட! ஔ-ல் ஆரம்பிக்கும் சொற்கள் அத்தனை உள்ளனவா?

July 06, 2006 7:27 AM
--

பினாத்தல் சுரேஷ் said...
எங்க கைப்புள்ள ஔனு அழுவாரா அவ்வ்வ்-னு அழுவாரா?

July 06, 2006 8:19 AM
--

SK said...
//இந்தச் சுட்டியில் ஒளகாரத்தில் தொடங்கும் சில சொற்களின் பட்டியல் அந்தச் சொற்களின் பொருட்களோடு சொல்லப்பட்டிருக்கிறது.//

அதில் ஔவை, ஔவியம் இரண்டைத் தவிர மற்றவையெல்லாம் சம்ஸ்கிருத சொற்களின் நேர்திரிபு

//எஸ்.கே. நீங்கள் சொல்லியிருப்பதற்கு மேல் விளக்கம் தேவை என்று நினைக்கிறேன். ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. மன்னிக்கவும். //

குமரன், எதுவுமே நான் சொன்னதில் புரியவில்லையா அல்லது குறிப்பிட்ட இடம் புரியவில்லையா எனத் தெரிவித்தால், மேற்கொண்டு சொல்ல முயலலாம்.
பொன்ஸ், நான் சொன்னதில் உங்களுக்கு புரிந்ததை இன்னும் எளிமையாகச் சொல்லுங்களேன்.

July 06, 2006 8:36 AM
--

கைப்புள்ள said...
ஒளவியம் என்ற சொல் எனக்கு மிகப் புதிதாக உள்ளது. ஆத்திச்சூடியில் படித்தது என்பது கூட மறந்து விட்டேன். நினைவு படுத்தியமைக்கும் பொருள் கூறியதற்கும் மிக்க நன்றி.

இயல்வது கரவேல் என்ற ஆத்திச்சூடி வரி நினைவுக்கு வருகிறது. அதற்கும் பொருள் கூறினீர்கள் என்றால் நன்றாக இருக்கும். பழசு எல்லாம் மறந்து போய் விட்டது.

July 06, 2006 10:05 AM
--

நாமக்கல் சிபி said...
//இயல்வது கரவேல்//

தலை! ரொம்ப சிம்பிளான மேட்டரு!
டிராஃபிக் கான்ஸ்டபிள்கிட்ட கேட்டுப் பாருங்க!

July 06, 2006 11:09 AM
--

G.Ragavan said...
நல்ல கேள்வி குமரன். ஔவியம் தவிர்த்து ஔகாரந் தவிர்த்து எனக்குத் தமிழில் ஔவில் தொடங்கும் சொற்களே தோன்றவில்லை. ஔவையார் அல்லது ஔவை என்ற சொல்லும் உண்டு. ஔடதம் என்பது வடமொழித் திரிபு. முறையான தமிழன்று. யோசித்துப் பார்க்கிறேன்.

சண்முகக் கவசம் பாம்பன் சுவாமிகள் அருளியது. அதை மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார் டீ.எம்.எஸ். கிடைத்தால் கேளுங்கள். சொக்கிப் போவீர்கள். முருகன் அருளில் சிக்கிப் போவீர்கள்.

July 06, 2006 11:33 AM
--

பொன்ஸ்~~Poorna said...
// 'புள்ளி இறுதி' எனச் சொல்லுகின்ற 11 எழுத்துகளில் கடைசி எழுத்து 'ள'.//

இதைக் கொஞ்சம் விளக்குங்கள் எஸ்கே.. இது புரிந்தால் மற்றவையும் சுலபம் தான் என நினைக்கிறேன்

July 06, 2006 11:52 AM
--

குமரன் (Kumaran) said...
விளக்கத்திற்கு நன்றி மனு அம்மா. இப்போது புரிகிறது.

July 06, 2006 8:17 PM
--

SK said...
ஔகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப. 8
இது குமரனுக்கு!
உயிரெழுத்து 12 என்பதற்கான தொல்காப்பியம்.
***********************************
பொன்ஸ்!
இது உங்களுக்கு.
11 புள்ளி எழுத்து எவை என்பதைச் சொல்லும் சூத்திரம்.

இதில் வருவதை வைத்து நான் ஒரு அனுமானமாய்ச் சொன்னதுதான் 'ஊ'விலும், 'ஔ'விலும் 'ள' வந்ததன் காரணம்!
[45 - ஐக் கவனிக்கவும்.]


""வல்லெழுத்து என்ப க ச ட த ப ற. 19
மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன. 20
இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள. 21

அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்
மெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை. 22
ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்
க ச ப என்னும் மூ எழுத்து உரிய. 23
அவற்றுள்,
ல ள·கான் முன்னர் ய வவும் தோன்றும். 24

ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்
தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. 25

""ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும்
அப் பதினொன்றே புள்ளி இறுதி. 45""

July 06, 2006 9:45 PM
--

johan -paris said...
குமரா!
ஔவையார் ;ஔவியம்,ஔடதம், இவை தவிர எதுவும் கேள்பிப்பட்டதாகத் தெரியவில்லை. உங்கள் பதிவால் ;பல விடயங்கள் பலர் மூலம் வெளிவருகிறது.
ஔவியம் எனும் சொல்லை பொறமைக்கு பதிலாக உபயோகிப்பதில் பிரச்சனையில்லை;ஆனால் சிலருக்கு அதற்கு விளக்கம் தரவேண்டியதாக வரும். குறிப்பாக இன்றைய பல இளைய தலைமுறை.
யோகன் பாரிஸ்

July 07, 2006 6:21 AM
--

குமரன் (Kumaran) said...
என்னார் ஐயா. எனக்கும் அப்படித்தான் என்று சொல்ல வாய் வரை சொல் வருகிறது. ஆனால் ஒரு வேளை நான் வகுப்பில் கவனிக்கவில்லையோ என்ற எண்ணம் அதனைத் தடுக்கிறது. :-)

July 07, 2006 6:50 AM
--

குமரன் (Kumaran) said...
சிபி. இனிமேல் நாம் ஒளவியம் என்ற சொல்லைப் புழங்கலாமா? இல்லாவிட்டால் ஒளவை, ஒளகாரம் இவை இரண்டு மட்டுமே வருங்காலத்தில் நிற்கும்.

July 07, 2006 6:52 AM
--

குமரன் (Kumaran) said...
பெனாத்தலாரே. இந்தக் கேள்வியை நான் போன பதிவிலேயே கேட்டுட்டேனே. நீங்க தாமதமா வந்து கேக்கறீங்களே?!

July 07, 2006 6:53 AM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. உங்கள் விளக்கத்தைப் பார்த்தேன். நான் வகுப்பில் சரியாகக் கவனிக்காததால் இப்போதும் புரியவில்லை. ஐயப்பன் கிருஷ்ணன் தொல்காப்பியத்திற்கு பொருள் சொல்லிக் கொண்டிருக்கிறாரே. அவர் இந்த தொல்காப்பிய அடிகளுக்குப் பொருள் சொல்லும்வரை காத்திருந்து தெரிந்து கொள்கிறேன். அப்போதும் புரியவில்லை என்றால் உங்களையோ பொன்ஸையோ இல்லை இலக்கணம் கற்றுக் கொள் என்று எனக்குத் தகுந்த அறிவுரை கூறிய இராகவனையோ :-) கேட்கிறேன்.

July 07, 2006 6:55 AM
--

குமரன் (Kumaran) said...
கைப்புள்ள. அதைத் தாங்க சொல்றேன். புழங்கினாத் தானே எந்த சொல்லும் நிற்கும். இனிமே யாரையாவது பொறாமைப் பிடிச்சவனேன்னு திட்டறப்ப ஒளவியம் பிடிச்சவனேன்னு திட்டுங்க. தொடக்கத்துல 'ஞே'ன்னு முழிப்பாங்க. போகப் போகப் புரியத் தொடங்கிவிடும். இல்லையா? :-)

இயல்வது கரவேல் - இதற்குப் பொருள் கேட்டிருக்கிறீர்கள். உடனேத் தோன்றிய பொருள் 'நம்மால் முடிந்ததைப் பிறருக்குக் கொடுக்காமல் மறைக்கக் கூடாது' என்பது தான். ஆனால் எதற்கும் இருக்கட்டும் என்று கூகிளில் தேடினேன். கிடைத்த பொருட்கள்:

1. Never hoard that you can afford to give.
2. Never Stop Learning

மற்ற சுட்டிகளும் இதே விதமான பொருள் தான் சொல்கிறது.

July 07, 2006 7:01 AM
--

குமரன் (Kumaran) said...
மேலே கடைசிச் சொல்லை 'சொல்கின்றன' என்று படித்துக் கொள்ளுங்கள் கைப்புள்ள மோகனா.

July 07, 2006 7:02 AM
--

குமரன் (Kumaran) said...
அட ஆமாம் சிபி. முடிஞ்சதைக் குடுங்கங்கறது தானே அவங்க வேதவாக்கியம். :-)

July 07, 2006 7:03 AM
--

குமரன் (Kumaran) said...
இராகவன். ஷண்முகக்கவசத்தை டி.எம்.எஸ். பாடியிருக்காரா? நான் இதுவரைக் கேட்டதில்லையே?! சுட்டி இருந்தா குடுக்கிறீங்களா? நானும் தேடிப் பார்க்கிறேன்.

July 07, 2006 7:04 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் யோகன் ஐயா. கட்டாயம் விளக்கம் தர வேண்டும் தொடக்கக் காலத்தில். கணினி என்ற சொல்லை முதன்முதலில் புழங்கும் போது அடைப்புக் குறிக்குள் கம்ப்யூட்டர் என்று போட்டோமே. இப்போது அதற்குத் தேவையில்லாமல் போய்விட்டதே. அது போலத் தான். நாம் விரும்பினால் செய்யலாம். ஒளவியம் (பொறாமை) என்று எழுதினால் நாளடைவில் இரு சொல்லும் மக்களுக்குப் புரியும். அதே நேரத்தில் நாம் முழுவதும் பொறாமை என்ற சொல்லையும் விட்டுவிடக் கூடாது. இரண்டுமே தமிழ்ச்சொல்லே. அதனால் தமிழில் பேசும்போதும் எழுதும் போதும் இரண்டினையும் புழங்கலாம். தொடக்கத்தில் எழுத்தில் புழங்கத் தொடங்கினால் பின்னர் பேச்சிலும் ஒளவியம் என்பது இயற்கையாக வந்துவிடும்.

July 07, 2006 7:09 AM
--

SK said...
நான் படித்தவரை 'கரவு' எனும் சொல்லுக்கு 'வஞ்சனை' என்றே வருகிறது!

'களவறிந்தார் நெஞ்சில் கரவு' [தி.கு. 288]

கரவு தவிந்தவென்று ஊதூது சங்கே![திருவருட்பா]

பெஸ்கி முனிவரின் 'தேம்பாவனி என்னும் விவிலிய நூலில் இறைவனின் 10 கட்டளைகளை விவரிக்கும் அழகிய செய்யுளில், 'வஞ்சனை' என்னும் பொருளிலேயே 'கரவைப்' பயன்படுத்தியிருக்கிறார்.

மின்னலால் நிகர்ப்பரிந்தோர் எழுத்தத்தீட்டி விதித்திருகல்

1.என்னல்லால் இறைமையளார் உமக்கில்லாவீர் எனை மெய்ம்மை
தன்னல்லால் சாட்சிவையீர்,
2.திருநாள் ஆடத்தவிர்கில்லீர் 3.மன்னல்லா ரணமிதென்று ஒருகல் கொள்முவ் வாசகமே)
4.(தந்தைதாய் வணங்குமின்நீர், 5.கொலையோ செய்யீர்,
6.தவிர்காம நிந்தையாய் ஊடில்லீர்,
7."கரவீர்,"
8.பொய்யீர்,
நிலைப்பிறரில் சிந்தையாய் இரீர், 9.பிறர்கைப் பொருளை வெஃகீர் தீங்கிதென்று
10.எந்தையாய்ந் திரண்டாங்கல் தீட்டி வைத்த ஏழ்விதியே)
(சீனயிமாமலை காண்படலம், 21-22)
(கரவு= வஞ்சனை)


பொறாமை வேறு; வஞ்சனை வேறு.

July 07, 2006 8:36 AM
--

பொன்ஸ்~~Poorna said...
குமரன்,
எஸ்கே சொல்வது ரொம்ப தெளிவா இருக்குங்க... உ, ஒ தவிர மற்ற உயிரெழுத்துக்களை எந்தப் பக்கத்திலிருந்தாவது நீட்ட, சுழிக்க முடிகிறது..இந்த எழுத்துக்களுக்கு நெடில் வடிவம் வேணும்னா, ஏதாவது புதுசாத் தான் செய்யணும்..

அதனால பட்டியலில் இருக்கும் கடைசி எழுத்தான ள வை இவற்றுடன் இணைத்து விட்டார்கள்.

எஸ்கே,
அப்படிப் பார்த்தாக் கூட, ஐ-யை இப்படிக் கையாள வில்லை தானே? அது போல ஔக்கும் புது எழுத்து வடிவம் கொடுத்திருக்கலாமே!!

July 07, 2006 10:23 AM
--

கைப்புள்ள said...
//மேலே கடைசிச் சொல்லை 'சொல்கின்றன' என்று படித்துக் கொள்ளுங்கள் கைப்புள்ள மோகனா.//

யூ டூ ப்ரூட்டஸ்
:))

July 07, 2006 10:53 AM
--

கைப்புள்ள said...
இயல்வது கரவேலுக்கு விளக்கம் அளித்ததற்கு நன்றி குமரன் மற்றும் எஸ்கே சார்.

July 07, 2006 10:54 AM
--

SK said...
பொன்ஸ்,

புரியும்படி விளக்கியதற்கு நன்றி.
ஔ எனும் சொல்லின் சத்தம் 'ஒ'வை ஒட்டி வருவதாலும், ஏற்கெனவே அதை நீட்டி 'ஓ' அமைத்துவிட்டதாலும், ஏற்கெனவே, 'உ'வை ''ள' சேர்த்து 'ஊ' ஆக்கமுடிந்த தைரியத்தாலும், அதே ஃபார்முலாவை இதற்கும் வைத்திருக்கலாமோ என 'ஊ'கிக்கிறேன்!

July 07, 2006 11:55 AM
--

FloraiPuyal said...
ஒளவியம் = envy
பொறாமை = jealousy.

July 08, 2006 8:14 PM
--

FloraiPuyal said...
கரவு = concealment.
இயல்வது கரவேல் = தன்னால் இயன்றதை மறைக்கக் கூடாது.

July 08, 2006 8:17 PM
--

வெற்றி said...
குமரன்,
தங்களின் இப் பதிவு சில தினங்களுக்கு முன் கண்ணில்பட்டும் வேலைப்பளுக்கள் காரணமாக உடனடியாகப் படித்துப் பின்னூட்டமிட முடியவில்லை. நிற்க.

நான் இதுவரை அறிந்திராத சொல் ஒன்றை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள். நானும் கடந்த இரு தினங்களாக 'ஒள' எழுத்தில் வரும் சொல் ஏதாவது எம்பிடும் என்று மண்டையை போட்டு குழப்பிப் பார்த்தேன். ஒரு சொல் கூட அகப்படவில்லை.

July 09, 2006 12:55 AM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. எனக்குத் தெரிந்தவரை 'கரத்தல்' என்றால் மறைத்தல், மறைந்திருத்தல், மறைதல் என்ற பொருளிலேயே படித்திருக்கிறேன். 'உடல் மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்' என்பார் நம்மாழ்வார்.

அந்தச் சொல்லை 'வஞ்சனையால் மறைக்காதீர்' என்ற பொருளிலும் நீட்டிப் பொருள் கொள்ளலாம்.

கட்டாயம் பொறாமை வேறு; கரவு வேறு தான். யாராவது கரவு தான் பொறாமை என்று சொல்லியிருக்கிறார்களா? அப்படிப் புரிந்து கொள்ளும் படி ஏதாவது சொல்லிவிட்டேனா?

July 11, 2006 10:15 PM
--

குமரன் (Kumaran) said...
பொன்ஸ். நீங்கள் சொல்கின்ற வரைக்கும் எனக்கும் புரியுதுங்க. ஆனா தொல்காப்பியத்துல இருந்து எடுத்துக் காமிக்கிறாரே. அவை எனக்கு சட்டுனு புரியலை. அதைத் தான் ஐயப்பன் பதிவிலே பாத்துக்கறேன்னு சொன்னேன்.

July 11, 2006 10:16 PM
--

குமரன் (Kumaran) said...
//
யூ டூ ப்ரூட்டஸ்
:)) //

ஆமாம் கைப்புள்ள. உங்க 'ஆறு' பதிவை வேகமா ஒரு பார்வை பார்த்தப்ப இது மட்டும் கண்ணைக் கவர்ந்தது. அதான் உடனே பயன்படுத்திட்டேன். :-) உங்க ஆறு பதிவை சாவகாசமா படிக்கணும்ன்னு குறிச்சு வச்சிருக்கேன்.

July 11, 2006 10:18 PM
--

குமரன் (Kumaran) said...
ப்ளோரைப் புயல். ஒளவியம் என்ற சொல்லுக்கும் பொறாமை என்ற சொல்லுக்கும் ஆங்கிலத்தில் இரு வேறு சொற்களைச் சொல்லியிருக்கிறீர்களே. அவை இரண்டும் எனக்குத் தெரிந்த வரை ஆங்கிலத்திலும் ஒரே பொருளைத் தருபவை தான். ஏதாவது நுண்ணிய வேறுபாடு இரண்டுக்கும் நடுவில் உண்டா என்ன? அதைத் தான் சொல்லாமல் சொல்கிறீர்களோ?

July 11, 2006 10:23 PM
--

குமரன் (Kumaran) said...
புதிய சொல்லை அறிமுகப்படுத்த முடிந்தமைக்கு ஐயப்பனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் வெற்றி. கூடலில் 'ஸ்வாமியே சரணம் ஐயப்பா' பதிவினைப் போடும் போது அகர வரிசையில் சரணம் சொல்லிக் கொண்டு வந்தேன். அப்போது ஒளகாரத்தில் ஒரு சொல்லைத் தேட கூகிளைக் குடைந்த போது இந்தச் சொல் கிடைத்தது. அதுவே இந்த வார 'சொல் ஒரு சொல்'லில் சொல் ஆனது. :)

July 11, 2006 10:52 PM
--

Anonymous said...
ஒளவியம் is not just envy or jealousy.

In the context of Aathichoodi, it doesn't make sense if we mean these words as ஔவியம்/envy பேசேல்.

How can one "talk" envy?

Here it means "do not talk in a slandering/traducing manner"

Also, the phrase 'ஒளவியம் தீர்த்தென்னை ஆட்கொண்ட..." in Kumaran's quote as in "Skandha guru kavacham (?)" was first used by Abhirama Phattar in his Andhaadhi:

vavviya paakaththu iRaivarum neeyum makizhnNthirukkum
chevviyum, unkaL thirumaNak kOlamum, chindhaiyuLLE
avviyam theerththu ennai aaNdapoR paadhamum aakivandhu-
vevviya kaalan enmEl varumpOthu-veLi niRkavE!

Good, thought provoking blog, Mr.Kumaran.

---Mahesh Rajagopal

July 12, 2006 12:10 AM
--

Anonymous said...
Kumaran,

ஸ்கந்த குரு கவசம் is available here:

http://www.unarvukal.com/ipb/index.php?showtopic=502

I remember seeing it in project Madurai also:

http://tamil.net/projectmadurai/

However, I could not see the phrase you have quoted.

-Mahesh

July 12, 2006 12:27 AM
--

குமரன் (Kumaran) said...
தங்களின் பின்னூட்டங்களுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி மகேஷ் இராஜகோபால்.

உண்மை தான் மகேஷ். பொறாமையைப் பேச முடியாது தான். ஆனால் அங்கே பொறாமையுடன் கூடிய சொற்களைப் பேசாதே என்று தான் பொருள் கொண்டேன்.

நீங்கள் சொன்ன அபிராமி அந்தாதி வரிகளைத் தான் நான் ஸ்கந்த குரு கவச வரிகளுடன் குழப்பிக் கொண்டேன் போலிருக்கிறது. ஸ்கந்த குரு கவசத்தில் வரும் வரிகள் 'அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே...'.

அபிராமி அந்தாதிக்கு அடியேன் பொருள் கூறுகிறேன். என்னுடைய அபிராமி அந்தாதி வலைப்பதிவையும் பார்த்தீர்களா? என் ப்ரொபைலைப் பாருங்கள்.

தங்கள் பாராட்டிற்கு நன்றி. அடிக்கடி வந்து படித்துத் தங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

July 12, 2006 12:50 AM
--

Anonymous said...
Kumaran, pleasure is mine.

I did see your Andhaadhi blog. Quite a good work.

I too am an admirer of Anddhaadhi. One point I would like to make is your blog is not fundamentally different from many other Vilakkavurais already available.

I would have been happier to see some explanation on the tantric/Srividya ideas mentioned by Pattar. Have you seen Prof. Shanmuganathan's Urai related to this?
--Mahesh

July 12, 2006 1:09 AM
--

குமரன் (Kumaran) said...
உண்மை மகேஷ். நான் முதன்முதலாக வலைப்பதிவில் எழுதத் தொடங்கியது அபிராமி அந்தாதி விளக்கவுரை தான். அதனால் முதலில் சொற்பொருள் விளக்கம் தருவதில் தொடங்கினேன். நீங்கள் சொல்வது போல் தந்திர/ச்ரி வித்யைக் கருத்துகளைப் பற்றி எழுதவில்லை. அவை எனக்கு அதிகம் தெரியாது என்பதும் காரணம். பின்னர் எழுதத் தொடங்கிய பதிவுகளில் சொற்பொருள் விளக்கத்தையும் தாண்டி அனுபூதி விளக்கங்களையும் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். அபிராமி அந்தாதிக்கு அப்படிப்பட்ட விளக்கங்களைத் தொடக்கத்தில் கொடுக்காததால் சொற்பொருளோடு நிறுத்திக் கொள்கிறேன். நான் கண்ணதாசனுடைய விளக்கவுரையைப் பார்த்திருக்கிறேன். பேராசிரியர். ஷண்முகநாதன் அவர்களுடைய உரையைப் பார்த்ததில்லை. இணையத்தில் இருக்கிறதா? இருந்தால் சுட்டியைத் தாருங்கள்.

July 12, 2006 1:16 AM
--

FloraiPuyal said...
குமரன், இரண்டும் ஒரே பொருள் தருவது போல் தோன்றினாலும் இரண்டிற்கும் ஒரு வேறுபாடு உண்டு. தன்னிடம் உள்ள ஒரு பொருளோ , தனக்குக் கிடைத்து வரும் வசதியோ வேறு ஒருவரால் பறிக்கப் படுமோ என்ற அச்சத்தால் வருவது பொறாமை (jealousy). தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் உள்ளதைக் கண்டு அதை எப்படியாவது இல்லாமல் செய்து விட வேண்டும் என்று எண்ணுவது ஒளவியம்(envy).

காட்டு: (கொத்தனார், சீவா மற்றும் குமரன் மன்னிக்கவும்)
சீவா வெண்பாப் பதிவிடுகிறார். பின் கொத்தனார் ஒரு வெண்பாப் பதிவிடுகிறார். தன் பதிவை விட கொத்தனார் பதிவு அதிக பின்னூட்டம் பெறுவதைக் கண்டு கொத்தனார் பதிவை நிறுத்த சீவா முயன்றால் பொறாமை. அதே எண்ணம் குமரனுக்கு வந்தால் ஒளவியம், சீவாவின் பதிவைக் கண்டு கொத்தனாருக்கு அவ்வெண்ணம் வந்தால் அழுக்காறு.

மகேஷ், தமிழிலுள்ள அனைத்தையும் அப்படியே ஆங்கிலத்தில் மொழிமாற்ற இயலாது. தமிழில் ஒளவியமும் பேசலாம் அன்பும் பேசலாம். In English, you dont speak envy, you speak with envy. You dont speak love, you speak with love.

July 14, 2006 9:40 AM
--

இலவசக்கொத்தனார் said...
//தன்னிடம் உள்ள ஒரு பொருளோ , தனக்குக் கிடைத்து வரும் வசதியோ வேறு ஒருவரால் பறிக்கப் படுமோ என்ற அச்சத்தால் வருவது பொறாமை (jealousy). தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் உள்ளதைக் கண்டு அதை எப்படியாவது இல்லாமல் செய்து விட வேண்டும் என்று எண்ணுவது ஒளவியம்(envy). //

இப்படி ஒரு மெலிதான வித்தியாசம் இருப்பதை (தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி) நான் அறிந்திருக்க வில்லை. நன்றி ஃப்ளோரிப்புயல்.

என்ன உங்களை கடந்த சில வெண்பா பதிவுகளாகக் காணவில்லை?

July 14, 2006 1:37 PM
--

FloraiPuyal said...
விசாரிப்பிற்கு நன்றி கொத்தனார். வேலைப் பளு காரணமாக எதிலும் பங்கு பெற முடியவில்லை. ஓரிரு வாரங்களில் சீராகிவிடும் என்று நம்புகிறேன். அப்பொழுது நிச்சயம் இரட்டிப்பாக எழுதுகிறேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்.

July 14, 2006 9:35 PM
--

குமரன் (Kumaran) said...
மெலிதான வேறுபாட்டை விளக்கியதற்கு நன்றி ப்ளோரைப்புயல். ஆனால் எனக்கென்னவோ இரு சொற்களுமே ஒரே பொருளில் தான் பயன்பாட்டில் இருப்பதாகத் தோன்றுகிறது. குறைந்த பட்சம் நான் அப்படித் தான் புழங்கிக் கொண்டிருக்கிறேன். இனிமேல் வேறுபடுத்திப் புழங்க முடியுமா என்று பார்க்கிறென். மிக்க நன்றி. தொடர்ந்து வந்துபடித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

July 15, 2006 1:25 AM
--

தருமி said...
அறிவு சார்ந்த சேதிகள் பலவும் பேசும் இடத்தில் இப்படி ஒரு கேள்வி கேட்க வெட்கமாகத்தானிருக்கிறது; இருந்தும் கேட்டு விடுகிறேனே:

இவ்வளவு குறைந்த பயனுள்ள எழுத்தை எதற்காக உள்ளே கொண்டு வந்திருப்பார்கள் நம் முன்னோர்?
அது எப்படி இன்னும் தாக்குப் பிடித்து (பிடிவாதமாக) நிற்கிறது?

February 07, 2007 12:35 PM
--

சிறில் அலெக்ஸ் said...
குமரன்
ஔ ஆர் யு? :)

ரெம்ப அருமையான பதிவு. எனக்கு ஆத்திச் சூடியில் புரியாத வார்த்தை இது.

கலக்கல் சொல். கலக்கல் சொல்லி.

February 07, 2007 4:34 PM
--

குமரன் (Kumaran) said...
நல்ல கேள்விகள் தருமி ஐயா. எனக்கும் விடை தெரியவில்லை. :-)

February 08, 2007 8:24 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி சிறில். அது ஹவ் தானே? நீங்கள் என்ன ஒள ஆக்கிட்டீங்க? :-)

சொல் நல்ல சொல் தான். சொல்லி? :-)

February 08, 2007 8:25 PM
--

சிறில் அலெக்ஸ் said...
சொல்லி - சொல்பவர் (உ.ம். கதை சொல்லி)

அப்ப 'கில்'லின்னா - கொல்பவரான்னு கேட்காதீங்க

சும்மா கடி..
:)

February 08, 2007 8:39 PM
--

குமரன் (Kumaran) said...
நீங்க கடிச்சது புரிஞ்சது சிறில். ஆனால் சொல்லி நல்ல சொல்லி இல்லைன்னு சொல்ல வந்தேன். :-)

கில்லின்னா என்னன்னு தெரியாது. ஆனா கொல்லின்னா நீங்க சொல்ற அருத்தத்துல சொல்லலாம். :-)

February 09, 2007 9:34 AM