Sunday, May 18, 2008

சால உறு தவ நனி கூர் கழி

என்ன தலைப்பைப் பார்த்தால் ஒன்றும் புரியவில்லையே என்று நினைக்கிறீர்களா? சாலச் சிறந்தது என்று சிலர் சொல்வார்கள் கேட்டிருக்கிறீர்களா? அது மட்டுமே இந்தப் பட்டியலில் இந்தக் காலத்திலும் மிகுதியாகப் பயன்படுகிறது. ஆனால் தலைப்பிலுள்ள ஆறு சொற்களும் சில சொற்களின் முன்னால் நின்று 'மிகுதி', 'பெருக்கம்' போன்ற பொருட்களைத் தந்து நிற்கும்.

1. இலக்கண நூலான நன்னூல் சொல்வது:

சால உறு தவ நனி கூர் கழி மிகல்

இந்த ஆறு சொற்களும் 'மிகல்' என்ற பொருளைத் தரும்.

2. பாரதியாரின் சுயசரிதையில் வருவது:

வசிட்ட ருக்கும் இராமருக்கும் பின்னொரு
வள்ளு வர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்து ஓர் ஆயிரம் ஆண்டு தவம் செய்து
பார்க்கினும் பெறல் சாலவரிது காண்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதைத் தான் இங்கே சொல்கிறார். மிக அரிது என்ற பொருளில் சாலவரிது என்கிறார்.

3. திருவாவடுதுறைப் பெருமானைப் பாடும் திருநாவுக்கரசப் பெருமான் சொல்வது:

உற்ற நோய் தீர்ப்பர் போலும்
உறுதுணை ஆவர் போலும்
செற்றவர் புரங்கள் மூன்றும்
தீயெழச் செறுவர் போலும்
கற்றவர் பரவி ஏத்தக்
கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும்
ஆவடு துறையினாரே.

இந்தப் பாடலில் 'நெருங்கிய துணை', 'மிகத் துணை' என்ற பொருளில் உறுதுணை வருகிறது.

4. தவப்பெரியோன் என்று மிகவும் பெரியவரைக் கூறுதல் மரபு.

5. நனி என்ற சொல்லை பல என்ற சொல்லிற்கு இணையாகப் புழங்க வேண்டும் என்று இராம.கி. ஐயா கருதுகிறார். அதற்கேற்ப நனி என்ற சொல் பல இடங்களிலும் நனிவகையில் (பலவகையில்) புழங்கியிருக்கிறது என்பதை கூகுளாண்டவர் சொல்கிறார். எல்லோரும் கேட்டிருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.

'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே' என்ற பாரதியாரின் அழகு வரி. இங்கே மிகச் சிறந்தவை என்ற பொருளில் நனி சிறந்தனவே என்கிறார்.

6. கூர் என்பது மிகுதி என்ற பொருளிலும் கூர்மை என்ற பொருளிலும் பல இடங்களில் சேர்ந்தே வருகிறது. கூர்மதி, கூரொலி, கூரொளி, கூர்கடல், கூர்குழல், கூர்குழலி, கூர்கூந்தல், கூர்சுடர், கூர்சோலை, கூர்பொறை என்று எடுத்துக்காட்டுகளைக் கூறிக் கொண்டே போகலாம்.

7. கழி என்ற சொல்லைத் தேடி எங்கேயும் அலையவேண்டாம். கழிநெடிலடி என்று பல பாவகைகளைக் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். கழி நெடில் அடி என்றது மிக நீண்ட அடிகளைக் கொண்ட பாவகைகளை.

பழமொழி நானூறில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு:

கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார் முன்
சொல்லும் கால் சோர்வு படுததால் - நல்லாய்
'வினா முந்துறாத உரையில்லை; இல்லை
கனா முந்துறாத வினை'

நம் முதல் குடிம்கனார் சொல்வதைத் தான் இந்தப் பழமொழி சொல்கிறது. கனவு காணுங்கள்; கனவே செயலில் இறக்கும் என்பதைச் சொல்கிறது. அப்போது கல்வி இல்லாதவனின் மிகுதியான அறிவு கற்றவர் முன் நில்லாது என்றும் சொல்கிறார். ஏனென்றால் கல்வியில்லாதவன் கழிநுட்பம் கேள்வியில்லாமல் பிறந்த பதிலையும் கனவின்றிப் பிறந்தச் செயலையும் ஒத்தது என்பதால்.

8 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 14 டிசம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

39 கருத்துக்கள்:

johan-paris said...
அன்புக் குமரன்!
இவற்றைத் தானே! இலக்கணம் உரிச்சொல் என்கிறது. இவை மிகுதிப் பொருளை உணர்த்துவதென கூறுகிறது.
யோகன் பாரிஸ்

December 14, 2006 4:41 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் யோகன் ஐயா. இவை உரிச்சொற்களே

December 14, 2006 4:44 PM
--

நாமக்கல் சிபி said...
நான் சொல்ல வந்தேன் அதுக்குள்ள யோகன் ஐயா சொல்லிட்டாரு ;)

December 14, 2006 4:58 PM
--

இலவசக்கொத்தனார் said...
//சால உறு தவ நனி கூர் கழி மிகல்//

படித்தவுடனேயே எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே எனப் பார்த்தால் பள்ளியில் மனப்பாடம் செய்தது! ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி குமரன்.

December 14, 2006 5:02 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் பாலாஜி. :-)

இந்த உரிச்சொற்களைத் தமிழாசிரியர்கள் தவறாமல் சொல்லிக் கொடுப்பார்கள் போலும். என் தமிழாசிரியர் ஒரு கவிதையைப் போல் இதனைச் சொல்லிக் கொடுத்தார். முதலில் கொஞ்சம் இழுத்து 'சால' என்று சொல்லிவிட்டுப் பின்னர் 'உறு தவ நனி கூர் கழி' என்று வேகமாகச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லிக்கொடுத்ததால் மறப்பதே இல்லை. :-)

ஆனால் எந்த இடத்தில் எந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம் என்ற தெளிவில்லாததால் நனி இடங்களில் இவற்றைப் பாவிப்பதே இல்லை.

December 14, 2006 5:04 PM
--

பாலராஜன்கீதா said...
என் நினைவில் வந்தவை:

1. பால் நினைந்தூட்டும் தாயினும் ***சாலப்*** பரிந்து....

2. உற்றுழி உதவியும் ***உறு***பொருள் கொடுத்தும் .... கற்றல் நன்றே

5. ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை ***கூர்*** என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது.

December 14, 2006 5:29 PM
--

குமரன் (Kumaran) said...
ஆகா. மிக்க நன்றி பாலராஜன்கீதா. எடுத்துக்காட்டுகள் தந்ததற்கு மிக்க நன்றி.

December 14, 2006 5:31 PM
--

சாத்வீகன் said...
இவையாவும் பெயர் உரிச்சொற்கள்...

இவற்றை தொடர்ந்து பெயர்ச்சொல் மட்டும் வரக் காணலாம். வினைச்சொல் வராது..

December 14, 2006 5:32 PM
--

ஜெயஸ்ரீ said...
அடடா பள்ளிக்கூட இலக்கண வகுப்பை னைவுபடுத்திவிட்டீர்களே )))

ஆலயம் தொழுவது சாலவும் நன்று -ஔவை

உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு - திருக்குறள்

உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றி - திருவருட்பா


சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு. - நாலடியார்

December 14, 2006 5:41 PM
--

ஜெயஸ்ரீ said...
//இவற்றை தொடர்ந்து பெயர்ச்சொல் மட்டும் வரக் காணலாம். வினைச்சொல் வராது.. //


நனி, சால போன்றவை வினை உரிச்சொற்களாகவும் வரும்.

December 14, 2006 5:53 PM
--

ஜெயஸ்ரீ said...
கழிமகிழ் சால நினைப்பவர் உள்ளக் கமலத் துறையன்னமே


"வழித்துணையாய் மருந்தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்" - திருமந்திரம்


வழினடந்திளைத்தவே இம்மலரடி இரண்டும் என்ன
கழிமகிழ் சிறப்ப மெல்ல வருடினான் கமலக் கண்ணன் - குசேலோபாக்கியானம்

December 14, 2006 6:46 PM
--

johan-paris said...
ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிடுக்குமாம் கொக்கு!
கூரிருள் கழிந்தன கோழிகள் கூவின!
இந்தச் சொற்கள் தனித்து நின்று பொருள்தரா!!!எனப் படித்ததாக ஞாபகம்.
யோகன் பாரிஸ்

December 14, 2006 6:46 PM
--

வடுவூர் குமார் said...
"சாலு" தெலுங்கில் போதும் என்று அர்த்தம்.
படிச்சது, அதுவும் தமிழ் இலக்கணம் அவ்வளவாக ஞாபகம் வரவில்லை.
தேமா,புளிமா எல்லாம் படித்த ஞாபகம், வெ..பயல் சொன்னதும் வந்தது.

December 14, 2006 7:26 PM
--

G.Ragavan said...
உரிச்சொற்றொடர். முன்பு படித்தது. இன்றைக்குச் சால தெலுங்கிலும் நனி மலையாளத்திலும் பயின்றுவருகிறது என்று நினைக்கிறேன்.

விக்கிபீடியாவில் இந்த இலக்கணம் கிடைக்கிறது.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D

இங்கே நண்பர்கள் அவரவர்கள் அறிந்த கவித்தொடர்களையும் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. "சால தவமுடைய மேலோர்" என்று எங்கோ படித்த நினைவு வருகிறது.

December 14, 2006 10:37 PM
--

நாமக்கல் சிபி said...
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

December 15, 2006 12:46 AM
--

ஓகை said...
வெட்டிப் பயலே வெட்டிப் பயலே சேதி கேளடா!

என்னதான் நகைப்பான் போட்டாலும் வடுவூர் குமார் குழம்பி விட்டார் பாருங்கள். இலக்கணத்தில் எல்லாம் நாம் விளையாடலாமா? தமிழ் பரிட்சையில் அது தானே நம் கூட விளையாடும்!

வடுவூர் குமார்,

தேமா புளிமா எல்லாம் யாப்பிலக்கணம். வெட்டி வெட்டியாய் சொன்ன பகுபத உருப்பிலக்ககணம் - பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி சாரியயை ஆகியவைகளாக பகு பதங்களைப் பிரிக்கும் இலக்கணம்.

குழம்பற்க நண்பரே!

December 15, 2006 1:06 PM
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்
உரிச்சொற்களை உரித்துக் கொடுத்திருக்கீங்க! :-) நன்றி!

நண்பர்கள் கூடவே எடுத்துக் கொடுத்திருப்பதும் "சாலவும்" சிறப்பானது! "சால" மிகுத்துப் பெய்திருக்கிறார்கள்!
"நனி" சிறந்த பதிவு!

December 15, 2006 8:20 PM
--

குறும்பன் said...
குமரன் முதலில் இந்த தலைப்பை பார்த்தவுடன் ஏதோ சங்கத பாடல் கொண்ட பதிவோ என்று நினைத்தேன். அப்புறம் சொல் ஒரு சொல்லுக்கு வந்தால் இது தமிழ் :-))

நான் இதை இதுவரை படித்ததில்லை, என் தமிழாசிரியர் சொல்லிக்கொடுக்கலையா அல்லது வழக்கம் போல் வகுப்பில் நான் கவனிக்காமல் இருந்திட்டேனா என்று தெரியவில்லை.
நாமக்கல் சிபி எனக்கு தெரிந்த 'சால' குறளை சொல்லிட்டார்.

December 15, 2006 10:01 PM
--

SK said...
கடன் ஆ கொளின் ஏ மடம் நனி இகக்கும். [நன்னூல் சூத்திரம்] 41

குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப, [பரிபாடல்.] [திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் சிறப்பும்]

உங்க ஊர்தான் குமரன்!!

December 15, 2006 11:26 PM
--

SK said...
விழவு ஆற்றுப் படுத்த "கழி" பெரு வீதியில் -- மணிமேகலை

மிகுதியாகப் போவதால்தான் கழிகிறான் என்கிறார்களோ!
:))

December 15, 2006 11:32 PM
--

நாமக்கல் சிபி said...
ஓகை,

////என் தமிழாசிரியர் ஒரு கவிதையைப் போல் இதனைச் சொல்லிக் கொடுத்தார். முதலில் கொஞ்சம் இழுத்து 'சால' என்று சொல்லிவிட்டுப் பின்னர் 'உறு தவ நனி கூர் கழி' என்று வேகமாகச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லிக்கொடுத்ததால் மறப்பதே இல்லை. :-) //
//

குமரனவர்கள் இவ்வாறு குறிப்பிட்டதால் பாடல் போல சொல்லி கொடுத்த பகுபத உறுப்பிலக்கணமும் பத்து ஆண்டுகளாகியும் மறக்கவில்லை என்று சொன்னேன். பதிவை திசை திருப்பியிருந்தால் மன்னிக்க. அதை எடுத்துவிட்டேன்...

December 16, 2006 12:21 AM
--

குமரன் (Kumaran) said...
மேலும் எடுத்துக்காட்டுகள் தந்ததற்கு மிக்க நன்றி ஜெயஸ்ரீ. சாத்வீகன் இவை பெயர் உரிச்சொற்கள் என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் நனி, சால போன்றவை வினை உரிச்சொற்களாகவும் வரும் என்று சொல்லியிருக்கிறீர்கள். எடுத்துக்காட்டுகள் தாருங்கள்.

December 16, 2006 4:14 PM
--

குமரன் (Kumaran) said...
எடுத்துக்காட்டுகளுக்கு நன்றி யோகன் ஐயா.

December 16, 2006 4:15 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் வடுவூர் குமார். எனக்கும் பாலாஜி சொன்ன போது தேமா, புளிமா போன்றவை நினைவிற்கு வந்தன.

December 16, 2006 4:16 PM
--

குமரன் (Kumaran) said...
இராகவன், இந்தச் சொற்கள் தெலுங்கிலும் மலையாளத்திலும் எப்படி பயின்று வருகின்றன என்று எடுத்துக்காட்டுகள் சொல்லியிருக்கலாமே.

நானும் இந்தப் பதிவைப் படிக்கும் போது கூகிளாண்டவர் நீங்கள் தந்த விக்கி பக்கத்தையும் தந்தார். பார்த்தேன்.

December 16, 2006 4:18 PM
--

வெற்றி said...
குமரன்,
சொன்னால் நம்புவீர்களோ தெரியாது. இப் பதிவின் தலைப்பைப் பார்த்துவிட்டு, 'என்னடா ஒர் கோதாரியும் விளங்கேலை, எதற்கும் குமரனுக்கு பின்னூட்டம் எழுதிக் கேட்போம்' என்று நினைத்துக் கொண்டுதான் பதிவுக்குள் நுழைந்தனான். ஆனால் உங்களின் பதிவின் முதல் வரியிலேயே பதில் கிடைத்தது. நிற்க.
இனிப் பதிவு பற்றி:
அருமையான் பதிவு. நல்ல பல தமிழ்ப் பழைய பாடல்களையும் எடுத்துக்காட்டாக கையாண்டு மிகவும் இரசிக்கும் வண்ணம் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி குமரன். பல தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொண்டேன்.பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய நல்ல பதிவு. சில ஐயங்கள்.

[1]மிகல் == ??
மிகல் என்றால் மிகை என்ற பொருளா?
[2] செற்றவர் ==?
நீங்கள் இங்க்ற் குறிப்பிட்ட அப்பர் சுவாமிகள் அருளிச் செய்த தேவராத்தில் வரும் இச் சொல்லின் பொருள் என்ன ?

நன்றி.

December 16, 2006 5:10 PM
--

குமரன் (Kumaran) said...
அட எல்லாருக்கும் ரொம்ப நல்லா தெரிஞ்ச திருக்குறளைச் சொல்லியிருக்கீங்க சிபி. சால மிகுத்துன்னு ரெண்டு தடவை மிகுதியை சொல்லியிருக்கார். :-)

December 19, 2006 9:11 AM
--

ஜெயஸ்ரீ said...
நனி, சால - இவை வினை உரிச்சொற்களாகவும் (adverb) வரும்

இந்தக் கம்பராமாயணப் பாடலைப் பாருங்கள்


"கோ மன்னவன் ஆகி, மூஉலகும் கைக்கொண்டான் -
நாம மறை ஓதாது ஓதி, நனி உணர்ந்தான் "

நனி உணர்ந்தான் - நன்கு உணர்ந்தான்

"உகு பகல் அளவு' என, உரை நனி புகல்வார்"

நனி புகல்வார் - நல்ல வண்னம் சொல்வார்

"உண்ணும் நாளில்லை உறக்கமுந் தானில்லை,
பெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான்" - திவ்யப்பிரபந்தம்

"உற்றுலகில் தன்னையே சால மதித்து உள்ளான் " - பெரியபுராணம்

December 20, 2006 9:32 AM
--

ஜெயஸ்ரீ said...
செற்றவர், செற்றார் - பகைவர்


"கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் " - திருப்பாவை

December 20, 2006 9:47 AM
--

வெற்றி said...
ஜெயஸ்ரீ,
செற்றவர் எனும் சொல்லின் பொருளைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

December 20, 2006 11:27 AM
--

குமரன் (Kumaran) said...
மனப்பாடம் மட்டும் செய்தாலே இப்படி தான் கொத்ஸ். மறந்து போய்விடும். :-) இராகம், தானம், பல்லவி எல்லாம் புரிஞ்சு படிச்ச மாதிரி சால உறு தவ நனி கூர் கழி யையும் புரிஞ்சு படிச்சிருக்கலாமே. :-)

December 20, 2006 4:55 PM
--

குமரன் (Kumaran) said...
ம்ம். இப்படித்தான் இரவிசங்கர் உடனே கற்பூரம் மாதிரி பற்றிக் கொண்டு உடனே பாவிக்கத் தொடங்க வேண்டும். இங்கே மட்டுமின்றி முடிந்த போதெல்லாம் நனி சிறந்து புழங்குங்கள். :-)

December 20, 2006 4:59 PM
--

குமரன் (Kumaran) said...
குறும்பன். நீங்கள் தான் கவனிக்காமல் விட்டிருப்பீர்கள். எல்லா தமிழாசிரியர்களும் கட்டாயம் இதனைச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். :-)

December 20, 2006 5:00 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. எங்க ஊரு பத்தி சொன்னீங்க. ஆனா அந்த வரிகள் என்ன சொல்லுதுன்னு சொல்லாம விட்டுட்டீங்களே. அந்த வரிகள் புரியலைங்க. கொஞ்சம் சொல்லுங்க.

December 21, 2006 9:53 AM
--

குமரன் (Kumaran) said...
வெற்றி, நீங்கள் சொல்வதை கட்டாயம் நம்புகிறேன். அதனால் தான் பதிவின் முதல் வரியையே அப்படி எழுதினேன்.

மிகல் என்றால் மிகுதியாகுதல் என்று பொருள் கொள்ளலாம்.

செற்றவருக்கு ஜெயஸ்ரீ பொருள் சொல்லியிருக்கிறார். அது சரியே. இன்னொரு பொருளும் இருப்பதாக எண்ணுகிறேன். செறுதல் என்றால் சினமுறுதல் என்ற பொருளும் வரும் என்று எண்ணுகிறேன். அப்பர் சுவாமிகளின் பாடலில் வருவதைப் பார்த்தால் இந்தப் பொருள் புரியும். சிவனின் மேல் செற்றம் (பகை, சினம்) கொண்ட திரிபுர அசுரர்களின் முப்புரங்களிலும் தீ எழும் படி சினமுற்றவர் சிவபெருமான் (சினமுற்று சிரித்து முப்புரங்களை அழித்தார் என்பர்).

ஈழத்தமிழில் தொடங்கி தமிழகத் தமிழுக்கு வந்துவிட்டீர்கள். ஈழத்தமிழ் மிக அழகாக இருக்கிறது. அதிலேயே பின்னூட்டங்கள் இடுங்களேன்.

December 21, 2006 10:01 AM
--

குமரன் (Kumaran) said...
சால நனி இரண்டும் எப்படி வினை உரிச்சொற்களாகவும் வரும் என்பதைச் சொன்னதற்கு நன்றி ஜெயஸ்ரீ.

December 21, 2006 10:03 AM
--

ரங்கா - Ranga said...
குமரன்,

ஒய்வாக விடுமுறையில் உங்கள் பதிவுகளில் படிக்க விட்டதைத் தொடங்கியிருக்கிறேன் :-) இந்தப் பதிவுக்கு சால நன்றி!

ரங்கா.

தலைப்பைப் பார்த்ததும் தியாகராஜரின் 'நிதி சால சுகமா' பாடல் நினைவுக்கு வந்தது.

December 24, 2006 1:46 PM
--

குமரன் (Kumaran) said...
பொறுமையா படிங்க ரங்கா அண்ணா.

வடுவூர் குமாரும் சாலு என்ற தெலுங்கு சொல்லைப் பற்றி சொல்லியிருந்தார். தியாகபிரம்மத்தின் வரிகளை நோக்கும் போது சால என்ற சொல்லிலிருந்து தான் சாலு வந்திருக்கும் என்று தோன்றுகிறதே.

December 24, 2006 1:53 PM

VSK said...

//குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப,//
//எஸ்.கே. எங்க ஊரு பத்தி சொன்னீங்க. ஆனா அந்த வரிகள் என்ன சொல்லுதுன்னு சொல்லாம விட்டுட்டீங்களே. அந்த வரிகள் புரியலைங்க. கொஞ்சம் சொல்லுங்க.//

இப்பத்தான் கவனிச்சேன் குமரன்!

குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவுதாம்.
மிகுந்த[நாஇ] மதம் பிடித்த யானை தொடர்ந்தாற்போல [மாறுமாறு- ரெட்டைக் கிளவி - திரும்பத் திரும்ப] பிளிறுகிறதாம்!

கவிநயா said...

சால அரிதான பதிவுகளை நனி சிறந்தவையாய்த் தருவதை உறுதொழிலாய்க் கொண்ட தவப்பெரியோன் குமரனுக்கு நன்றிகள்!

R.DEVARAJAN said...

அன்பரே,
வணக்கம். பிற்காலப் பாண்டிய மன்னர்கள் அமைத்த
ஆலயங்கள் குறித்த விரிவான தகவல்களை எங்கிருந்து பெறலாம் ?
தங்கள் உதவியை நாடுகிறேன்.
பணிவுடன்,
R. தேவராஜன்

குமரன் (Kumaran) said...

விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி எஸ்.கே. மாறுமாறு என்பது இரட்டைக்கிளவி என்பது புரியாமல் விழித்தேன் போலும்.

குமரன் (Kumaran) said...

ஒரு சொல் விட்டுப்போனதே கவிநயா அக்கா. கழிசடை என்றும் சொல்லியிருக்கலாமே. :-)

தவப்பெரியோன் என்றாற்போல கழிசடையோன் என்று சொல்லியிருந்தால் காளமேகப் புலவரைப் போல் சிலேடையாகவும் சொல்லியதாகியிருக்கும். :-)

குமரன் (Kumaran) said...

தேவராஜன் ஐயா. தாங்கள் தேடும் தகவலைப் பெறும் வழி எனக்குத் தெரியாது. அந்தத் துறையில் அறிவிலி நான். மன்னிக்கவும்.

கவிநயா said...

நானே இப்பதான் தமிழ்க் கடவுள்ட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா தமிழ் கத்துக்கிட்டு வரேன். இதுல சிலேடை வேறயா?:)