Wednesday, May 21, 2008

போதுதல்

திருப்பாவை திருவெம்பாவை மாதமான இந்த மார்கழியில் 'சொல் ஒரு சொல்' பதிவில் இந்தச் சொல் வருவது மிகப் பொருத்தமானது தான்.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் (பாசுரம் 1)

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரா போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய் (பாசுரம் 15)

இந்தத் திருப்பாவைப் பாசுரங்களுக்கு இங்கே பொருள் சொல்லப் போவதில்லை. பாசுரப் பொருள் தேவையென்றால் தேசிகன், இராகவன் பதிவுகளைப் பாருங்கள். இல்லை இனிமேல் கோதை தமிழில் அவை வரும்போது பாருங்கள். இப்போது எடுத்துக் கொண்ட சொல்லான 'போதுதல்' & அதன் மற்ற உருவங்களை மட்டுமே இங்கே பார்க்கப் போகிறோம்.

போதுதல் என்றவுடன் என்ன பொருள் தோன்றுகிறது? போ என்ற வினைச்சொல்லின் அடிப்படையான போதல் என்ற பொருள் தானே தோன்றுகிறது? எனக்கும் முதன்முதலில் இந்தச் சொல்லைப் பார்த்ததும் அப்படித் தான் தோன்றியது. அண்மையிலும் ஏதோ ஒரு பெரிய கவிஞர் இந்தச் சொல்லை போதல் என்ற பொருளிலேயே எடுத்தாண்டிருப்பதையும் பார்த்தேன். ஆனால் இந்தத் திருப்பாவைப் பாசுரங்களுக்குப் பொருள் சொல்லும் போது போதல் என்பதற்கு நேர் எதிரான பொருளைச் சொல்லியிருக்கிறார்கள்.

முதல் பாசுரத்தில் வரும் சொற்களான 'நீராடப் போதுவீர்' 'போதுமினோ' என்ற சொற்களுக்கு 'நீராட வாருங்கள்', 'வாருங்களே' என்ற பொருளைச் சொல்லியிருக்கிறார்கள்.

பதினைந்தாம் பாசுரத்தில் வரும் சொற்களான 'போதருகின்றேன்', 'போதாய்', 'போந்தாரா', 'போந்தார்', 'போந்து எண்ணிக் கொள்', என்ற சொற்களுக்கு 'வருகின்றேன்', 'வருவாய்', 'வந்தாரா', 'வந்தார்', 'வந்து எண்ணிக்கொள்' என்ற பொருளைச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் சொல்லாட்சியை வேறு எந்த இலக்கியத்திலாவது பார்த்திருக்கிறீர்களா? எதன் அடிப்படையில் இந்தச் சொல்லுக்கு இந்த பொருள்?

9 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 19 டிசம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

23 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் [GK] said...
குமரன்,

தேடித் தேடிப்பார்த்தேன், கூகுளில் தேடியதில் *போந்தார்* என்ற சொல் பல இலக்கியங்களில் வந்துள்ளது ஆனால் பொருள் பிடிபடவில்லை !

:(

December 20, 2006 6:53 AM
---

குமரன் (Kumaran) said...
நீங்கள் சொன்ன பிறகு நானும் தேடிப் பார்த்தேன் கண்ணன் அண்ணா. இன்னும் நன்றாக எல்லாப் பக்கங்களிலும் பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கும் போது செய்கிறேன்.

December 20, 2006 9:06 AM
--

SK said...
குமரன்,
சற்று எனக்குப் பட்ட அளவில் சொல்லுகிறேன்!

இது ஒன்றும் புதுமையானதல்ல என நினைக்கிறேன்!

நாமெல்லாம் அன்றாடம் பயன்படுத்துவதுதான், ....இன்னொரு விதத்தில்!

இப்போ, கிளம்பும் போது என்ன சொல்கிறோம்?
"அப்ப நா வர்ட்டா?" என்கிறோம்?
உண்மையில் வருகிறோமா?
போய் வரட்டா, சென்று வரட்டா? என்பதையே அப்படிக் குறைத்து வர்ட்டா, போட்டா என்கிறோம்?

அது போலத்தான் இதுவும் எனக் கருதுகிறேன்.

போதல் வேறு; போதுதல் வேறு.
போதல் என்றால்தான் நீங்கள் குறிப்பிட்ட செல்லல்.
போதுதல் என்றால் போய்த் திரும்பி வருதல்.

//
பதினைந்தாம் பாசுரத்தில் வரும் சொற்களான 'போதருகின்றேன்', 'போதாய்', 'போந்தாரா', 'போந்தார்', 'போந்து எண்ணிக் கொள்', என்ற சொற்களுக்கு 'வருகின்றேன்', 'வருவாய்', 'வந்தாரா', 'வந்தார்', 'வந்து எண்ணிக்கொள்' என்ற பொருளைச் சொல்லியிருக்கிறார்கள்.//

எனவே நீங்கள் கொடுத்த விளக்கத்தை இப்படிப் படியுங்கள், சற்று சுலபமாக இருக்கும்!


"போங்கள் வருகின்றேன்", "போகலாம் வா", "செல்பவர் வந்தாரா", "செல்பவர் வந்தார்", "கிளம்பி [எழுந்து] வந்து", எனப் பொருள் வரும்.

இந்த இலக்கண விதி என்னவென்று , கற்றவர் வந்து சொல்லட்டும்!

முமு

December 20, 2006 12:27 PM
--

இலவசக்கொத்தனார் said...
ஆங்கிலத்திலும் Do you want to go with me? என்ற சொற்றொடருக்கு Do you want to come with me? என்றுதானே பொருள்?

இதுவும் அது போலத்தான் போலத் தெரிகிறது.

December 20, 2006 1:23 PM
--

வெற்றி said...
குமரன்,
பதிவுக்கு மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள பதிவு.

SK ஐயா, இ.கொ ஆகியோரின் கருத்துக்களும் உங்களின் விளக்கத்திற்கு வலுச் சேர்த்திருக்கிறது.

/* 'போந்தாரா', 'போந்தார்',
'போந்து */

ஈழத்தில் எனது ஊரில் பேந்து எனும் சொல் புழக்கத்தில் உண்டு. ஆனால் அதன் பொருள் போதல் அல்ல. பேந்து என்றால் பிறகு , அப்புறம் எனும் (தமிழகச்) சொற்களுக்கு இணையான சொல்.

எடுத்துக்காட்டு:-
ம்ம்ம் சொல்லுங்க, அப்புறம் [இது தமிழகத் தமிழில்]

ம்ம்ம் சொல்லுங்கோ பேந்து {இது ஈழத் தமிழ்)

குமரன், இனி நீங்களும் இராகவனும் ஒவ்வொரு வாரமும் சொல் ஒரு சொல் தளத்தில் பதிவுகள் போடவுள்ளதாக தெரிவித்திருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. இப்படியான பயனுள்ள பதிவுகள் ஒவ்வொரு வாரமும் வருவதன் மூலம், பலரும் படித்துப் பயன் பெறுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மிக்க நன்றி.

December 20, 2006 2:27 PM
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்
அருமையான ஒரு சொல்லை
அருமையான மார்கழி நேரத்தில்
அருமையாக எடுத்தாண்டு உள்ளீர்கள்!

இதே ஆண்டாள்
போவான் போகின்றாரைப் "போகாமல்" காத்து உன்னைக்
கூவுவான் "வந்து" நின்றோம் கோது கலமுடைய
என்றும் பாடுகிறாள்;

இங்கே போதல், வருதல் என்பதை வெளிப்படையாக போவது, வருவது என்ற பொருளில் தானே பேசுகிறாள்!

அப்படியானால் போதுவீர், போந்தாரா என்பதற்குக் குறிப்புப் பொருள் வேறு ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும்!

//விண்ணீல மேலாப்பு
விரித்தாற்போல் மேகங்காள்,
தெண்ணீர்பாய் வேங்கடத்தென்
திருமாலும் போந்தானே//

திருமாலும் போந்தானே
=திருமால் வேங்கடத்துக்குப் போனான் என்றும் சொல்ல முடியாது!
வந்தான் என்றான் சொல்ல முடியாது!
அவன் அங்கேயே தானே இருக்கிறான்!

December 20, 2006 4:27 PM
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
போதுதல் என்பதற்கு ஒழுகுதல் என்ற பொருளும் உண்டு!
"அறன் அறிந்து போதுதல் சான்ற வர்க்கெல்லாம் முறைமை" என்பது பழந்தமிழ்ப் பாட்டு (கலித்தொகை என்று நினைக்கிறேன்)

இப்படி ஒழுகுதல் என்று பார்த்தால்,
எல்லாரும் ஒழுகினரோ? = போதுவீர் போதுமினோ
ஒல்லை நீ போதாய் = ஒழுக வில்லையோ என்று ஆகிறதே!

மார்கழி நோன்பே ஒழுகுதல் தானே! அதைத் தான் குறிப்பால் சொல்கிறாள் போலும்!
இல்லை என்றால் மற்ற பாசுரங்களில் போல் வந்துன்னை என்றும் போவான் போகின்றார் என்றும் நேரிடையாகவே குறிப்பிட்டு இருப்பாளே!

தமிழ் ஆய்ந்தார், இன்னும் பலர் இங்கு வந்து விளக்கிடுமின்!

December 20, 2006 4:31 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. விளக்கம் நன்றாக இருக்கிறது. ஆனால் இன்னும் மனம் ஒப்புக் கொள்ளவில்லை.

December 26, 2006 6:28 AM
--

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். நீங்கள் சொன்ன சொற்றொடரை இந்தப் பொருளில் பலரும் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் அப்படி பயன்படுத்தின் நான் பார்த்ததில்லை. கல்கத்தாகாரர்கள் 'Do you want to go with me' என்றும் நம் ஊர்காரர்கள் 'Do you want to come with me' என்றும் சொல்வதைக் கண்டிருக்கிறேன். அது அப்படியே தங்கள் தாய்மொழியில் எப்படி சொல்வார்களோ அதற்கான மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். எங்கே செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் இருந்து கொண்டு கேட்கும் போது 'come' என்றும் வெளியில் இருக்கும் போது 'go' என்றும் ஆங்கிலம் தாய்மொழியாகக் கொண்டவர் சொல்வதைக் கண்டிருக்கிறேன்.

December 26, 2006 6:32 AM
--

johan -paris said...
அன்புக்குமரா!
நல்ல சுவையான சொல் ;இது பற்றிக் கூற எனக்கு அறிவு பற்றாது. பின்னூட்டங்களை ஆவலுடன் படிக்கிறேன்.
தமிழ் ஆழமான மொழிதான்!எப்படி எல்லாம் சிந்திக்க வைக்கிறது.
யோகன் பாரிஸ்

December 26, 2006 6:39 AM
--

neo said...
குமரன்,

"போது" என்பதை மலரும் பருவத்தில் (Mஊடியிருக்கும்) மலர் அன்பதைக் குறிக்கவும் பயன்படுத்தலாம்.

"போது" என்கிற வேர்ச்சொல்லின் பொருளை வைத்துப் பார்க்கையில் - 'இன்னமும் கண்விழிக்காத (மலர் போன்ற இளம் பெண்களே) எழுந்து வாருங்கள்' - என்கிற குறிப்பு இருக்கக் கூடும்.

பின்வரும் சொற்களைப் பாருங்கள்:

( சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியிலிருந்துஎடுத்தவை)

போது³ (p. 2965) [ pōtu³ ] n pōtu . perh. போது²-. cf. bōdha. 1. Flower bud ready to open; மலரும்பருவத் தரும்பு. காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி (குறள், 1227). 2. Flower; மலர். (திவா.) போதார் கூந்தல் (பு. வெ. 12, இருபாற். 5, கொளு). 3. Freshness, beauty; செவ்வி. (திருவிருத். 76, அரும். பக். 389.)

போது¹-தல் (p. 2965) [ pōtu¹-tal ] 5 v. intr pōtu. 1. To be adequate; to suffice; போதியதாதல். உலகமெலா முரல் போதாதென்றே (திருவாச. 9, 6). 2. To be competent, fit, proper; to be adapted, suitable; தகுதியாதல். (W.) 3. To be respectable; மதிக்கப் படுதல். (W.)

போது²-தல் (p. 2965) [ pōtu²-tal ] 13 v. intr pōtu. [Conjugating only in present and future tenses, as போது கின்றான், போதுவான் < போ-. 1. To go, pass, proceed; செல்லுதல். போது நான் வினைக்கேடன் (திருவாச. 5, 22). 2. To conduct oneself, behave; ஒழுகுதல். அறனை யறிந்து போதுதல் . . . சான்ற வர்க்கெல்லாம் முறைமை (கலித். 139, 2, உரை).


போதுகட்டுதல் (p. 2965) [ pōtukaṭṭutal ] n pōtu-kaṭṭutal . < போது&sup4; +. Loc. 1. Hiding of the sun by clouds for some time in the morning and the evening; காலை மாலைகளில் மேகம் சிலநாழிகைவரைச் சூரியனை மறைத்துக்கொண்டிருக்கை. 2. Hiding of the sun by clouds on a Saturday evening and the next morning as indicative of heavy rain during the week; மழைபெய்வதற்கு அறிகுறியாய்ச் சனிக்கிழமை மாலையும் அடுத்தநாட் காலையும் மேகம் சூரியனை மறைத்திருக்கை.

போதுகாலம் (p. 2965) [ pōtukālam ] n pōtu-kālam . prob. போது¹- +. Time of childbirth; பேறுகாலம். Brāh.

போதுசெய்-தல் (p. 2965) [ pōtucey-tal ] v. intr pōtu-cey. < போது³ +. 1. To be ready to blossom, as a bud; பேரரும்பாதல். 2. To close; மூடுதல். கண் போது செய்து (திவ். இயற். திருவிருத். 93). 3. To blossom; அலருதல். (திவ். இயற். திருவிருத். 93 வ்யா.) 4. To eat; உண்ணுதல். வெண்ணெய் போது செய்தமரிய புனிதர் (திவ். பெரியதி. 8, 7, 4). 5. To change, as voice on account of phlegm; குரல் சிலேஷ்மத்தால் மாறுதல். (ஈடு, 2, 3, 7.)


கதிரவனைப் பார்த்து மலரும் மலர் போல - இறவனை நினைத்து மனமுருகிப் பாடி "மேன்மை"யான பெண்மை நிலை அடையுங்கள் - என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்த 'போது' என்கிற சொல் ஆளப்பட்டிருக்கக் கூடும்.

December 26, 2006 3:37 PM
--

neo said...
"போது" என்கிற சொல்லுக்கான நேரடி சுட்டி இது
http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?page=2966&table=tamil-lex&display=utf8

December 26, 2006 3:41 PM
--

SK said...
//இதே ஆண்டாள்
போவான் போகின்றாரைப் "போகாமல்" காத்து உன்னைக்
கூவுவான் "வந்து" நின்றோம் கோது கலமுடைய
என்றும் பாடுகிறாள்;

இங்கே போதல், வருதல் என்பதை வெளிப்படையாக போவது, வருவது என்ற பொருளில் தானே பேசுகிறாள்!

அப்படியானால் போதுவீர், போந்தாரா என்பதற்குக் குறிப்புப் பொருள் வேறு ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும்!//

அதையேதான் நானும் சொல்கிறேன், ரவி!

போதல், வருதல் என்பது வேறு;
போய்வருதல் என்பது வேறு!

போதுதல் என்றால் போய்வருதல் என்பதையே குறிக்கிறது என நான் நினைக்கிறேன்!

//ஆனால் இன்னும் மனம் ஒப்புக் கொள்ளவில்லை.//

குமரன்...:))

திரு. 'நியோ'வின் பின்னூட்டமும் என் கருத்திற்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது!

போது என்றால் மலர். இதை எனது திருவெம்பாவை பதிவிலும் சொல்லி இருக்கிறேன்.
"போதார் அமளி" என்று!

மலர் ஒன்றுதான் இரு செயல்களையும் செய்வது!

மூடுவது, திறப்பது!

அதாவது, போவது, மீண்டும் வருவது!

:))

December 26, 2006 5:05 PM
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
SK ஐயா

போதுதல்=ஒழுகுதல் என்ற என் இன்னொரு பின்னூட்டத்தையும் பார்த்து, உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்!

December 26, 2006 8:04 PM
--

SK said...
அதையும் அப்போதே படித்தேன், ரவி!

என்னிடம் இருக்கும் உரைகளில், அந்த "ஒல்லை நீ போதாய்" என்பதற்கு, "சீக்கிரம் நீ எழுந்து வா" என்றே இருக்கிறது!

அதுவும், எனது 'வந்து போதல்' எனும் கருத்தையே ஒட்டி இருக்கிறது!

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கலித்தொகைப் பாடலும்,
// "அறன் அறிந்து போதுதல் சான்ற வர்க்கெல்லாம் முறைமை"//

அறவழியை அறிந்து "சென்று வருதல்" எனும் பொருளையே எனக்குத் தருகிறது!

:))

December 26, 2006 8:24 PM
--

குமரன் (Kumaran) said...
பேந்து என்ற புதிய சொல்லைச் சொன்னதற்கு நன்றி வெற்றி. முடிந்த வரை வாரா வாரம் இந்த வலைப்பூவில் பதிவுகள் போட முயல்கிறோம்.

December 27, 2006 12:51 PM
--

குமரன் (Kumaran) said...
உண்மை இரவிசங்கர். பல இடங்களில் போதல், வருதலை வெளிப்படையாகச் சொன்ன கோதை போதுதல் என்பதை எந்தப் பொருளில் சொல்லியிருப்பாள் என்று புரியவில்லை தான்.

திருமாலும் போந்தானே என்னும் போது திருமால் வேங்கடத்திற்கு வந்தான் என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. வேங்கடனான திருமால் வந்தான் என்று பொருள் கொள்ளலாமே.

January 01, 2007 7:26 AM
--

குமரன் (Kumaran) said...
போதுதல் என்றால் ஒழுகுதல் என்ற பொருள் உண்டு என்பதை இன்றறிந்தேன் இரவிசங்கர். நன்றி. ஆனால் அதுவும் நீங்கள் சொன்னது போல் இந்த இடங்களுக்குப் பொருந்தவில்லையே.

January 01, 2007 7:27 AM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் யோகன் ஐயா. ஆழமான தமிழ்ச்சொற்கள் பொருள் உணர்ந்து சொல்லும் போது இன்னும் அதிக இன்பத்தைக் கொடுக்கின்றன.

January 01, 2007 7:28 AM
--

குமரன் (Kumaran) said...
நியோ. அகராதியின் சுட்டிகளுக்கு நன்றி. போது என்றால் மலர் என்ற பொருள் தெரியும். அதிலிருந்து போதுதலுக்குப் பொருள் பெற முயன்றமைக்கு மிக்க நன்றி.

January 01, 2007 7:29 AM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. சீக்கிரம் நீ எழுந்து வா என்பது எப்படி வந்து போதல் ஆகும்? அது எழுந்து வருதல் என்ற ஒன்றை மட்டும் தானே சொல்கிறது?

January 01, 2007 7:31 AM
--

ஜெயஸ்ரீ said...
மிக நல்ல சொற்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.


போதுமின் என்ற சொல்லைப் பார்ப்போம்

போதுமின் - முன்னிலை பலர்பால்(second person plural), மரியாதைப்பன்மை மற்றும்
தன்மை பலர்பால் (first person plural) வினைமுற்றாக அமைகிறது.

இருவர் அல்லது பலர் சேர்ந்து ஓரிடம் செல்லும்போது ஒருவர் மற்றவரிடம் செல்வீர்களாக அல்லது
செல்வோம் வாருங்கள் என்று சொல்லும் இடங்களிலேயே பெரும்பாலும் போதுமின் என வருவதைக்
காணலாம்.

இந்த தேவாரப் பாடல்களைப் பாருங்கள்

"தீதவை செய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப்
போது மின்வினை யாயின போகுமே "

"மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்
பேத மாகிப் பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப்
போது மின்னெழு மின்புக லாகுமே".

"இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற விச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்"

"துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்"


இறைவன் அடி பணிய வாருங்கள் போகலாம் என்றும் பொருள் கொள்ளலாம்
அல்லது அவன் அடி பணியச் செல்வீர் என்றும் பொருள் கொள்ளலாம்.


பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதி யாதது,ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்,

இணக்கி யெம்மையெந் தோழிமார் விளையாடப் போதுமின் என போந்தோமை,
உணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வாதவரே?
- திருவாய்மொழி

(போதுமின் எனப் போந்தோமை - வாருங்கள் போகலாம் என்று சென்ற எங்களை)"பொற்றுகிலால் புள்வளைக்கப் போதுவோம்,' என்றுரைத்தான்
பற்றகலா உள்ளம் பரிந்து " - நளவெண்பா

(போதுவோம் - நாமிருவரும் செல்வோம் வா )

February 15, 2007 9:46 AM
--

ஜெயஸ்ரீ said...
போதுவார், போதுவாள்- போதல்அல்லது புறப்படுதல்(to start), திரும்பி வருதல் (go, return) இரண்டையும் குறிக்கும்
வண்ணம் இலக்கியங்களில் வந்துள்ளன.

ஐ அரி உண் கண் அழு துயர் நீங்கி
பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று - மணிமேகலை
(பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் - பொய்கையில் நீராடித் திரும்புவாள்)

"பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில் காணத்தாம் புகுவார் புக்குப போதுவார்
ஆணொப்பார் இவன்நேரில்லை காண் திருவோணத்தான் உலகாளு மென்பார்களே." - முதல் திருமொழி
(காணத்தாம் புகுவார் புக்குப் போதுவார் -காணச் செல்பவர்களும் சென்று திரும்புபவர்களும்)

புகுவார்க்கு இடம்கொடா போதுவார்க்கு ஒல்கா
நகுவாரை நாணி மறையா இகுகரையின்
ஏமான் பிணைபோல நின்றதே கூடலார்
கோமான்பின் சென்றஎன் நெஞ்சு. - முத்தொள்ளாயிரம்

என் மனது, என் காதலன் பாண்டியனின் அரண்மனை வாசலில் இருக்கிறது !'வீட்டினுள் போகிறவர்களுக்கு
இடம் கொடுக்காமல், வீட்டிலிருந்து வெளியே வருபவர்களுக்கும்வழிவிடாமல்,(புகுவார்க்கு இடம்கொடா போதுவார்க்கு ஒல்கா)

பல இடங்களில் எதுகை, மோனைக்காகவும், தளையமைப்பிற்காகவும் செல்வார் போவார் என்ற சொற்களுக்கு
மாற்றாக வருவதைக் காணலாம்
-
"முப் போதில் ஒரு போதும், என் மனப் போதிலே முன்னி, உன் ஆலயத்தின்
முன் போதுவார் தமது பின் போத னினைகிலேன், மோசமே போய் உழன்றேன்
-அபிராமியம்மை பதிகம்

15ம் திருப்பாவையில்
"வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரா போந்தார் போந்து எண்ணிக்கொள்"

இங்கு எல்லாரும் கூடி ஓரிடத்திற்குச் செல்வதால் (செல்லுமிடம் ஒன்றாகவே இருப்பதால்) ,போந்தாரா என்பதற்கு
புறப்பட்டாயிற்றா (ஈழத்தமிழில் வெளிக்கிட்டாச்சா ) என்று பொருள் கொள்ளலாம்.
போது என்றால் வெளிவருதல் என்றும் பொருள் உண்டு.

February 15, 2007 2:37 PM

கவிநயா said...

புரியற மா...திரி இருக்கு; ஆனா புரியல :(

mariappan said...
This comment has been removed by the author.
mariappan said...

போதாய் என்பதற்கு வந்தாய் என்பதுதான் சரி என்று தோன்றுகிறது.

குமரன் (Kumaran) said...

போதாய் என்பதற்கு வருவாய் என்று தான் உரையாசிரியர்கள் பொருள் சொல்கிறார்கள் மாரியப்பன். நன்றி.

mariappan said...

இறந்த கால இடைநிலை தானே த்?

குமரன் (Kumaran) said...

எனக்கு கால இடைநிலைகளைப் பற்றி தெரியாது மாரியப்பன். போதுதல் என்ற சொல்லின் அடிப்படையில் எழுந்த சொற்களை நான் பார்த்தவரையில் அந்த பொருளைச் சொன்னேன்.

திருப்பாவையில் இந்த சொற்கள் வரும் போது தரப்படும் பொருள்:

போதுவீர் - வாருங்கள்; வருவீர்
போதுமினோ – வாருங்களேன்

mariappan said...

முதலில் போதுமின், போதுவீர் ஆகிய சொற்களின் பொருளை அறி்வோம்.

போதுமின் = போது + மின்
போதுவீர் = போது + வ் + ஈர்

இங்கு மின், ஈர் போன்றவை முன்னிலை பன்மை ஏவல் வினைமுற்று விகுதிகள்.

போதுவீர் என்ற சொல்லில் உள்ள வ் எதிர்காலம் காட்டுகிறது.

இங்கு போது என்ற சொல்லுக்கு வா என்பது பொருள்.

போதுவீர் என்பதற்கு வாருங்கள் என்ப்து பொருத்தமான பொருள்.

மின் என்ற முன்னி்லை ஏவல் பன்மை வினைமுற்று விகுதி, இடைநிலை இல்லாத பொழுது எதிர்காலங்காட்டும்.

எனவே போதுமின் என்பதற்கு வாருங்கள் என்ற பொருளும் சரியே.

போதாய் என்ற சொல்லின் பொரு்ளைப் பார்ப்போம்.

போதாய் = போது + ஆய்

ஆய் என்பது முன்னி்லை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி. இதுவும் இடைநிலை இல்லாத பொழுது எதிர்காலங்காட்டும்.

போதாய் என்பதற்கு வருவாய் என்ற உரையாசிரியர்கள் கூறிய பொருளும் சரியே.

வருவாய் = வா + வ் + ஆய்

இங்கு வ் எதிர்கால இடைநிலை.

இங்கு ஆய் என்ற வி்குதி, இடைநிலை பெற்று காலங்காட்டியது.

நினைக்க நினைக்க மனம் இனிக்குதய்யா......

குமரன் (Kumaran) said...

மிக அருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றிகள் மாரியப்பன் ஐயா.