Tuesday, May 06, 2008

Virtual: மெய்நிகர்

இராம.கி. ஐயா அவர்களின் வளவு வலைப்பூவைப் படித்துக் கொண்டிருந்த போது இந்த 'மெய்நிகர்' என்ற சொல்லை 'Virtual' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தியிருந்ததைப் பார்த்தேன். இது ஒரு நல்ல பரிந்திரை ஆயிற்றே என்று தோன்றியது. அதனால் இந்த வாரச் சொல்லாக அதனை இங்கே தருகிறேன்.

இந்தத் தமிழ்ச்சொல்லை யாராவது புழங்குகிறார்களா என்று கூகிளில் தேடியபோது நிறைய சுட்டிகள் கிடைத்தன. அவற்றில் இந்தச் சொல் பயன்பட்டிருக்கும் இடங்கள்:

1. மெய்நிகர் கன்சோல் - Virtual Console
2. மெய்நிகர் வட்டு - Virtual Disk
3. மெய்நிகர் முனையம் - Virtual Terminal
4. மெய்நிகர் அகராதி - Virtual Dictionary
5. மெய்நிகர் திரைகள் - Virtual Screens
6. மெய்நிகர் தாள் - Virtual Paper
7. மெய்நிகர் வாழ்க்கை - Virtual Life
8. மெய்நிகர் முகவரி - Virtual Address
9. மெய்நிகர் கணினி - Virtual Computer (இராம.கி. ஐயா கணினி என்று சொல்லாமல் கணி என்றே கம்ப்யூட்டரைக் குறிப்பதையும் அவர் வலைப்பதிவில் கண்டேன். )
10. மெய்நிகர் பல்கலைக்கழகம் - Virtual University

இப்படி நிறைய எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. கூகிளில் பாருங்கள். ஏற்கனவே இந்தச் சொல் புழக்கத்தில் வந்துவிட்டது போலும். இன்னும் நம்மைப் போன்ற தமிழார்வலர் அல்லாதாரும் இந்தச் சொல்லைப் புழங்கத் தொடங்கினால் விரைவில் இதுவும் கணினி என்பதைப் போல் அனைவரும் புரிந்து கொள்ளும் ஒரு சொல்லாக கட்டாயம் மாறும்.

***

இந்த மாதிரி சொல்லைப் பரிந்துரைப்பது எவ்வளவு உதவியாக இருக்கிறது? உங்களால் இந்தச் சொற்களை எழுத்திலோ பேச்சிலோ புழங்க முடிகிறதா? அப்படிச் செய்ய முடிந்தால் தான் இந்த வலைப்பதிவுகளால் பயன். இல்லை இது வீண் வேலையாகவே முடியும்.

இரு வாரங்களுக்கு முன் 'ஒளவியம்' என்றச் சொல்லைப் பார்த்தோம். என்னால் ஒரே ஒரு முறை எழுத்தில் மட்டுமே அதனைப் பயன்படுத்த முடிந்தது. அதற்குக் காரணம் பொறாமை என்ற சொல்லை மிகுதியாகப் பயன்படுத்துவதில்லை என்பது தான். ஆனால் அதற்கு முன் சொல்லப்பட்டச் சொற்களை நன்கு பயன்படுத்த முடிகிறது. உங்கள் நிலை எப்படி?

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 19 ஜூலை 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

39 கருத்துக்கள்:

இலவசக்கொத்தனார் said...
virtual reality - இதை எப்படி கும்ஸ் சொல்லறது? மெய்நிகர் நிஜமா? அந்த கன்சோலுக்கும் ஒரு தமிழ் வார்த்தை இல்லையா?

July 19, 2006 7:30 AM
--

SK said...
நல்ல சொல்லே!

அப்போது, Virtual reality/Virtual truth மெய் நிகர் மெய் என வருமில்லையா?!

ஒன்று கவனித்தால், மிகவும் முயன்றுதான் இது போன்ற கூட்டுச் சொற்கள் மூலமே மற்ற மொழிச் சொல்லுக்கு பொருள் சொல்ல வேண்டி இருக்கிறது.

ஒரே சொல்லாகக் கிடைப்பதில்லை.

அவற்றுக்கு ஈடான சொற்களை நம் முன்னோர் பயன்படுத்தியதே இல்லையா?

கணி[னி]யை விடுங்கள்!

இந்த 'மெய்+நிகர்' போன்ற சொற்களைச் சொல்ல வருகிறேன்.

'மெய்யை ஒத்த' என்று வேறு சொல் மூலமே அடையாளம் கொள்ள வேண்டியிருக்கிறது.

மாயை என்பது கிட்டத்தட்ட இந்தப் பொருளைக் கொடுக்குமா?

விடுகதையா வாழ்க்கை!

July 19, 2006 7:51 AM
--

SK said...
அகராதியில் பார்த்தால் ஐந்து விதப் பொருள் சொல்லியிருக்கிறார்கள், இந்த எனும் ஆங்கிலச் சொல்லுக்கு!

இந்த Virtual Console என்னும் சொல் கணி[னி]யைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவி எனும் பொருளில் வந்திருப்பதால், 'மெய்நிகர் கட்டுப்பாட்டுக் கருவி' எனச் சொல்லலாமா?

தலை சுத்துது!

எப்படியோ பொருள் விளங்கினால் சரி.!

என்ன நான் சொல்றது!!

July 19, 2006 8:00 AM
--

கோவி.கண்ணன் said...
மெய்க்கு மெய்நிகர் நிகராகுமா ?
மெய்யின் மெய்நிழல் தான் மெய்நிகர்

செத்துப்போனேன் - மெய்நிகர்
செத்துவிட்டான் - மெய்

July 19, 2006 9:05 AM
--

கோவி.கண்ணன் said...
//Virtual Console//
மெய்நிகர் செயலி

July 19, 2006 9:09 AM
--

Merkondar said...
நல்ல விளக்கம்

July 19, 2006 9:11 AM
--

மு.மயூரன் said...
மெய்நிகர் என்ற சொல் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கிறது. தமிழ் விக்கிபீடியாவில் நிறைய இடங்களில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

virtual reality என்பதற்கு மெய்நிகர் யதார்த்தம் என பயன்படுத்துகிறேன். சரியோ தெரியவில்லை.

console இனை பொறுத்தவரை க்னூ/லினக்ஸ் உலகில் முனையம் என்று பயன்படுத்தி வருகிறோம்

July 19, 2006 9:39 AM
--

மு.மயூரன் said...
console இற்கு செயலி என்பது பொருந்துமா?

நீண்ட நாட்களாக கான்சோலையே முனையம் என்று பயன்படுத்தி வருகிறேன். terminal இற்கும் அதையே. தவறு புரிகிறது.

இந்த வலைப்பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இப்படி ஒரு வலைப்பதிவு கூட்டுப்பதிவாக தொடங்கவேண்டுமென நற்கீரனுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்.

நீங்கள் ஆரம்பித்திருப்பதில் நல்ல மகிழ்ச்சி.

இராம.கி போன்றவர்களை இணைத்துக்கொள்ளலாமே?

அரிய கலைச்சொற்களை பரவலான புழக்கத்துக்கு விட வலைப்பதிவுகளில் விவாதிப்பதுதான் மிகச்சிறப்பானது.

வாழ்த்துக்கள்.

July 19, 2006 9:47 AM
--

Sivabalan said...
குமரன் சார்

மெய்நிகர் என சொல்லும்போதே அருமையாக உள்ளது.


// மெய்நிகர் பல்கலைக்கழகம் - Virtual University //

இது அருமை...

மிக்க நன்றி.

July 19, 2006 1:38 PM
--

இலவசக்கொத்தனார் said...
மெய்நிகர் யதார்த்தம் - நல்லாவே இருக்கு!

July 19, 2006 2:24 PM
--

குறும்பன் said...
//இரு வாரங்களுக்கு முன் 'ஒளவியம்' என்றச் சொல்லைப் பார்த்தோம். என்னால் ஒரே ஒரு முறை எழுத்தில் மட்டுமே அதனைப் பயன்படுத்த முடிந்தது. அதற்குக் காரணம் பொறாமை என்ற சொல்லை மிகுதியாகப் பயன்படுத்துவதில்லை என்பது தான். //
அடிக்கடி அடுத்தவங்கள திட்டனும் குமரன் அப்பதான் பொறாமை / ஔவியம் எல்லாம் பயன்படுத்த முடியும். :-))


மெய்நிகர் எனக்கு புது சொல்.

// அப்படி அந்த தம்பதிகள் தாங்கள் இளமையாக இருப்பதற்கு காரணமாக என்ன தான் சொல்லியிருப்பார்கள் ?
//
இது மெய்நிகர் தோற்றம் தான், மெய்யான தோற்றம் காண சகிக்காதுன்னு சொல்லியிருப்பாங்களோ? :-)

July 19, 2006 3:58 PM
--

கோவி.கண்ணன் said...
//இது மெய்நிகர் தோற்றம் தான், மெய்யான தோற்றம் காண சகிக்காதுன்னு சொல்லியிருப்பாங்களோ? :-) //
உங்கள் விடை தவறு ... :)

வேறு யாரும் முயற்ச்சி பண்ணவில்லையா ?

July 19, 2006 7:59 PM
--

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். Virtual Realityஐ மெய்நிகர் மெய்ன்னு தான் சொல்லலாம்னு இருந்தேன். கன்சோலுக்கு என்ன தமிழ்ச் சொல் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மற்றவர்கள் சொல்லியிருக்கிறார்களே.

July 19, 2006 9:39 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. நீங்கள் சொல்வது மற்ற மொழிகளிலிருந்து தமிழ்மொழிக்குக் கலைச்சொற்கள் கொண்டுவருவதிலும் சரி, தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்குச் சொற்களைக் கொண்டு செல்வதிலும் சரி உண்மையே - பல நேரங்களில் அங்கே ஒரே சொல்லாக இருப்பதின் பொருளை விளக்க இங்கே நாம் இரு (அல்லது அதற்கும் மேலே) சொற்களைச் சேர்த்தே ஒரு புதிய சொல்லை உருவாக்க வேண்டியிருக்கிறது. அப்படியே தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்குச் செல்லும் சொற்களிலும் சிலவற்றைச் சொல்லலாம்.

மாயை என்பது கிட்டத்தட்ட இதே பொருளைக் கொடுத்தாலும் அது delution என்ற பொருளிலேயே மிகுதியாகப் பயன்படுத்தப் பட்டுவிட்டதால் அதனை virtualக்குப் பயன்படாது போல் தோன்றுகிறது.

July 19, 2006 9:43 PM
--

குமரன் (Kumaran) said...
நானும் இந்த ஆங்கிலச் சொல்லுக்கு ஆங்கில அகராதியைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். ஐந்து விதமான பொருள் சொல்லியிருக்கிறார்களா? அவை யாவை என்று சொல்கிறீர்களா எஸ்.கே. எல்லாமே மெய்நிகருக்குப் பொருந்துமா இல்லையா? இடத்திற்குத் தகுந்த மாதிரி பொருள் கொள்ள வேண்டுமா?

Virtual Console - மெய்நிகர் கட்டுப்பாட்டுக் கருவி என்று சொல்வதை விட மெய்நிகர் முனையம் என்பது சரியாகத் தான் தோன்றுகிறது. ஆனால் முனையம் என்பது Terminal என்பதன் நேர் தமிழாக்கம்.

உண்மை. தொடக்கத்தில் பொருள் விளங்காத மாதிரி தான் இருக்கும். குழப்பும். ஆனால் பயன்பாட்டில் வர வர பொருள் எல்லோருக்கும் விளங்கத் தொடங்கிவிடும். இப்போது உ.கு, வெ.கு., எல்லாம் நமக்கு விளங்கவில்லையா என்ன?

July 19, 2006 9:47 PM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் கோவி.கண்ணன் ஐயா. மெய்க்கு மெய்நிகர் நிகராகாது. மெய்யின் நிழலே மெய்நிகர்.

நல்ல எடுத்துக்காட்டுகள் காட்டியிருக்கிறீர்கள்.

தேன் வந்து பாயுது காதினிலே - மெய்நிகர்
தேன் அருந்தினேன் - மெய் :)

virtual console - மெய்நிகர் செயலி எப்படி பொருந்தும்?

July 19, 2006 9:49 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி என்னார் ஐயா.

July 19, 2006 9:49 PM
--

குமரன் (Kumaran) said...
தாங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி மு.மயூரன் அவர்களே. மெய்நிகர் என்பது நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருப்பதை மிகத் தெளிவாக கூகிளாண்டவர் காட்டிவிட்டார். :-)

யதார்த்தம் என்பது தமிழ்ச்சொல் இல்லை என்பதால் அதனைப் பயன்படுத்த மனம் ஒப்பவில்லை.

July 19, 2006 9:51 PM
--

கோவி.கண்ணன் said...
ஒரு வார்த்தை விட்டுப் போய்விட்டது, அந்த பின்னூட்டத்தை எடுத்து விட்டு இதைப் பதிகிறேன்

தெரிந்த மெய்நிகர் தம்பதிகளைப் பார்த்து 'எப்படி எப்பவும் இளமையாக இருக்கிறீர்கள் ?' என்று ஒரு மெய்நிகர் தாத்தா கேட்டார்.

அதற்கு அந்த மெய்நிகர் தம்பதிகள் சொல்லிக் காட்டிய பதிலைக் கேட்டு அந்த மெய்நிகர் தாத்தா 'இப்படித் தானா' என்று வாய்விட்டு சிரித்தார்

அப்படி அந்த தம்பதிகள் தாங்கள் இளமையாக இருப்பதற்கு காரணமாக என்ன தான் சொல்லியிருப்பார்கள் ?

விடையை கண்டுபிடிக்க வேறு யாரும் முயற்சி செய்யவில்லையா ?

July 19, 2006 10:00 PM
--

மு.மயூரன் said...
//யதார்த்தம் என்பது தமிழ்ச்சொல் இல்லை என்பதால் அதனைப் பயன்படுத்த மனம் ஒப்பவில்லை.//

கலைச்சொற்கள் தொடர்பான உங்கள் இந்த மனநிலை, பார்வை மகிழ்ச்சியளிக்கிறது.
பொதுவாக தமிழ் நாட்டில் தனித்தமிழ் பயன்பாடு தொடர்பான பிரக்ஞை புலமையாளர்களிடம் இருக்கிறது.

முடிந்தவரைக்கும் வடசொல்லடிகளை களைந்தே கலைச்சொல்லாக்கங்களை செய்துவருகிறேன்., பயன்படுத்தி வருகிறேன். யதார்த்தம் என்ற சொல்லுக்கு மாற்றாய் பயன்படுத்த என்ன தமிழ் சொல் இருக்கு? அப்படி இருந்தால் சொல்லுங்கள் அதையே பயன்படுத்தலாம்.

குமரன், கோ.ராகவன், நீங்கள் விக்கிபீடியாவுக்கு வரலாமே? கலைச்சொல்லாக்கம் தொடர்பான உதவிகளும் ஆலோசனைகளும் அங்கே நிறைய தேவைப்படுகிறது.

July 20, 2006 3:31 AM
--

johan -paris said...
அன்புக் குமரா!
நிகர்=ஒப்பு; என்ற சொல்லும் வழக்கில் உண்டு. மெய்யொப்பு- மெய்நிகர்
இந்த மெய்நிகர்- மெய்யாகவே சொல்ல நல்லாயிருக்கிறது.இதையே பயன்பாட்டில் கொள்ளலாம்
யோகன் பாரிஸ்

July 20, 2006 7:44 AM
--

குமரன் (Kumaran) said...
மு.மயூரன் அவர்களே. கட்டாயம் இராம.கி. ஐயா, நீங்கள் இன்னும் யார் யார் இதில் இணைய விருப்பம் கொள்கிறார்களோ அவர்கள் எல்லாம் இணையலாம். இந்த வலைப்பூவில் தான் செய்ய வேண்டும் என்று தேவையில்லை. நீங்களும் ஒரு வலைப்பூ தொடங்கி இதே வேலையைச் செய்யலாம். என் கண்களில் படும் போதெல்லாம் நான் வந்து படித்துக் கற்றுக் கொள்கிறேன்.

எனக்கு இந்த எண்ணம் தோன்றியபோது உடனே வலைப்பூவைத் தொடங்கிவிட்டேன். பின்னர் இராகவன் தானும் அப்படிப்பட்ட எண்ணத்துடன் இருப்பதாகச் சொன்ன போது அவரை அழைத்தேன். அவரும் இரு வாரத்திற்கு ஒரு முறை இந்த வலைப்பூவில் பதிவுகள் இடுகிறார். நீங்கள் தனிப்பதிவு தொடங்காமல் இதிலேயே இணைய விரும்பினால் சொல்லுங்கள். அழைப்பு அனுப்புகிரேன்.

//அரிய கலைச்சொற்களை பரவலான புழக்கத்துக்கு விட வலைப்பதிவுகளில் விவாதிப்பதுதான் மிகச்சிறப்பானது.
//

இந்த வலைப்பூவின் நோக்கம் இது தான். ஆனால் அது எந்த அளவிற்கு நிறைவேறுகிறது என்று தான் தெரியவில்லை.

July 23, 2006 1:26 AM
--

குமரன் (Kumaran) said...
மெய்நிகர் என்ற சொல் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா சிவபாலன். இனி எல்லா இடத்திலும் விர்சுவல் என்று சொல்லாமல் இதைப் புழங்குங்கள். :-)

மிக்க நன்றி.

July 23, 2006 1:28 AM
--

குமரன் (Kumaran) said...
குறும்பன். நான் அடிக்கடி அடுத்தவங்களைத் திட்டறவன் தான். நிறையவே ஒளவியம் இருக்கு என்கிட்ட. :) இராகவன் கூட சொல்வார் - எப்படி நீங்க இப்படி படபடன்னு எழுதித் தள்றீங்கன்னு. :-)

July 23, 2006 1:30 AM
--

குமரன் (Kumaran) said...
உங்கள் புதிருக்கு விடை எனக்குத் தெரியவில்லை கோவி.கண்ணன் ஐயா. மற்ற யாரும் முயலவில்லை ஆதலால் விடையைச் சொல்லிவிடுங்கள். :-)

July 23, 2006 1:31 AM
---

குமரன் (Kumaran) said...
யதார்த்தம் என்ற சொல்லுக்குத் தமிழ்ச் சொல் கேட்டிருக்கிறீர்கள் மு,மயூரன். சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏதாவது கிடைத்தால் அடுத்தப் பதிவாக அதனை இடுகிறேன்.

விக்கிபீடியாவிற்கு வரலாம் தான். ஆனால் ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் செயல்களை நிறைவேற்றவே நிறைய நேரம், காலம் ஆகும் போல் இருக்கிறது. அதனால் விக்கிபீடியாவிற்கு வந்தால் எவ்வளவு தூரம் பங்காற்ற முடியும் என்று தெரியவில்லை. எதிர்காலத்தில் முடிந்தால் இணைகிறேன்.

July 23, 2006 1:34 AM
--

குமரன் (Kumaran) said...
மெய்நிகருக்கு ஒப்பான இன்னொரு சொல்லைச் சொல்லியிருக்கிறீர்கள் யோகன் ஐயா. கட்டாயம் மெய்யொப்பும் விர்சுவலுக்குப் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன்.

July 23, 2006 1:35 AM
--

கோவி.கண்ணன் said...
//உங்கள் புதிருக்கு விடை எனக்குத் தெரியவில்லை கோவி.கண்ணன் ஐயா. மற்ற யாரும் முயலவில்லை ஆதலால் விடையைச் சொல்லிவிடுங்கள். :-) //

மெய்நிகர் தம்பதிகள் இளமையாக இருந்ததற்குக் காரணம்
கணவர் தலையில் இருந்த மெய்நிகர் தலைமுடி அதாவது விக், அந்தம்மாவிடம் இருந்த கூந்தலில் மெய்நிகர் வண்ணம் அதாவது 'டை' ஆகா இதுதான ரகசியம் ? என்று வாய்திருந்து சிரித்த பெரியவரிடம் தெரிந்தது மெய்நிகர் பற்கள் - பல்செட் :)))
குமரன் கடி போதுமா ? :)))))))))

July 26, 2006 8:51 PM
--

இலவசக்கொத்தனார் said...
கோவியாரே,

இங்கு நீங்கள் பாவித்த மெய்நிகர் - செயற்கை அல்லவோ? அது வெர்சுவல் இல்லை ஆர்டிஃபிஷியல் தானே?

இரண்டும் வேறல்லவோ....

July 26, 2006 10:08 PM
--

கோவி.கண்ணன் said...
//இலவசக்கொத்தனார் said...
கோவியாரே,

இங்கு நீங்கள் பாவித்த மெய்நிகர் - செயற்கை அல்லவோ? அது வெர்சுவல் இல்லை ஆர்டிஃபிஷியல் தானே?

இரண்டும் வேறல்லவோ....
//
இகொ... பரிசு கொஞ்சம் கொறச்சிக்க கூடாதா ?
செயற்க்கைத் தான் அது மெய்க்கு நிகராக ... கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறதல்லவா. மெய்க்கு அங்கே சாத்தியமே இல்லை :)))

July 27, 2006 11:12 AM
--

Sivabalan said...
குமரன் சார்,

உங்களுடைய இந்த பதிவை என்னுடைய பதிவில் இனைத்துள்ளேன்.. காலம் கடந்து தெரிய படுத்தியமைக்கு .... Sorry...

July 27, 2006 11:22 AM
--

Guru prasath said...
பாரதியார் தன்னுடைய "நிற்பதுவே நடப்பதுவே பறப்பனவே.." என்ற பாடலில் "காட்சிப் பிழைதானோ.." என்ற வார்த்தையை கையாண்டிருப்பார். அவர் கூறியது "Virtual reality" யைப் பற்றி என்பது என் கருத்து. இது சரியாக இருந்தால், நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது?

August 13, 2006 11:36 AM
--

வெற்றி said...
குமரன்,
இப்போதுதான் இப்பதிவு கண்ணில் பட்டது. நல்ல ஒரு தமிழ்ச் சொல்லை அறிமுகப்படுத்தியிள்ளீர்கள். Virtual எனும் ஆங்கிலச் சொல்லை நான் பல இடங்களில் புழங்கியிருக்கிறேன். புழங்குகிறேன். ஆனால் இன்றுதான் அச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்லை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

August 13, 2006 9:21 PM
--

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. வழக்கம் போல் உங்கள் கடி அருமை. :-)

August 22, 2006 10:43 AM
--

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். பழமொழி மட்டும் இல்லை. கடியும் அப்படித் தான். அனுபவிக்கணும். ஆராயக் கூடாது. :-)

August 22, 2006 10:44 AM
--

குமரன் (Kumaran) said...
சிவபாலன். இந்தப் பதிவின் சுட்டியைக் கொடுத்ததற்கு நன்றி. காலம் தாழ்த்தி பதில் சொல்வதற்கு sorry. :-)

August 22, 2006 10:45 AM
--

குமரன் (Kumaran) said...
குரு பிரசாத். காட்சிப் பிழை என்ற சொற்றொடரை விர்சுவல் ரியாலிட்டிக்குப் பயன்படுத்த முடியாது என்று எண்ணுகிறேன். காட்சிப் பிழை என்றால் பார்வையில் ஏற்பட்டப் பிழை என்பதாகத் தான் பொருள் தருமே ஒழிய மெய்க்கு நிகரான ஆனால் மெய்யில்லாத ஒன்று என்று பொருள் தராது.

August 22, 2006 10:46 AM
--

குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி வெற்றி.

August 22, 2006 10:46 AM

மு.சிவலிங்கம் said...

“மெய்நிகர்” என்னும் சொல்லை முதன்முதலில் நான்தான் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் பயன்படுத்தினேன். அதன்பின் பல கலைச்சொல்லாக்கக் குழுக்களிலும் முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. Virtual Reality- மெய்நிகர் நடப்பு.

மு.சிவலிங்கம்.

குமரன் (Kumaran) said...

சொல்லாக்க முன்னோடியான தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி ஐயா.