Sunday, May 25, 2008

அசைகலையும் வரைகலையும்

அசைகலை என்பதும் வரைகலை என்பதும் அண்மையில் நான் படித்த புதிய கலைச்சொற்கள். இவை எந்த ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற சொற்கள் என்று தெரிகிறதா?

விக்சனரி (tamil_wiktionary@googlegroups.com) என்றொரு கூகுள் குழுமத்தை அறிமுகப்படுத்தி அண்மையில் பதிவர் இரவிசங்கர் ஒரு பதிவு இட்டிருந்தார். அதனைப் படித்து விட்டு அந்தக் குழுமத்தில் இணைந்தேன். பல புதிய சொற்களை அங்கே அறிமுகப்படுத்துகிறார்கள். புதிய கலைச்சொற்களைக் கற்கும் ஆர்வமுள்ளவர்கள் அந்தக் குழுமத்தில் இணையுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அந்தக் குழுமத்தில் அன்பர் மணிமாறன் அவர்கள் அனுப்பிய சொற்கள் தான் இவை. Graphics என்பதை வரைகலை என்றும் Animation என்பதை அசைகலை என்றும் மொழிபெயர்த்துத் தந்திருந்தார். வேறு ஏதேனும் சொற்கள் இவற்றிற்காக பரிந்துரை செய்யலாமா? அப்படி எண்ணினால் சொல்லுங்கள். இல்லை இவை நல்ல சொற்கள் என்றால் இனிமேல் நாம் புழங்கத் தொடங்கலாம்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 03 ஜனவரி 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

18 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் [GK] said...
குமரன் அவர்களே,

Graphic Animation Art என்பதை வரை அசைகலை (Graphic Animation Art) என்று சொல்லலாமா ?

அசைவு, நகர்தல், ஓடுதல் எல்லாமே move என்ற சொல்லுக்கு பொருத்தமாக இருக்கிறது.

முறையே அசைகலை, நகர்(படக்)கலை, ஓடு(ம் படக்)கலை என்று சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் பொருத்தமாக தெரிவது அசைகலைதான்.

அசைவு என்பதன் பொருள் move என்ற ஒருபக்க அசைவைவிட அதிகமாக shake என்று இருபக்க அசைவின் பொருள்படுகிறது. எனவே முடிவு செய்யும் முன்பு நன்கு பரிசீலனை(தமிழா?) செய்யவேண்டும்.

January 03, 2007 6:14 AM
--

Anonymous said...
நல்லா இருக்கே

January 03, 2007 11:20 AM
--

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் அண்ணா. அதென்ன திடீரென்று 'அவர்களே' எல்லாம் போடத் தொடங்கிவிட்டீர்கள்? எப்போதும் போல் குமரன் என்பதோடு நிறுத்தலாமே.

January 04, 2007 9:42 AM
--

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் அண்ணா. நீங்கள் சொல்வது போல் கட்டாயம் சொல்லலாம். வரை அசைகலை என்று சொல்லலாம். ஆனால் என்பதிலேயே ம் அடங்கிவிடுவதால் அசைகலை என்பதோடு கூட நிறுத்திக் கொள்ளலாம்.

அசைவு என்றால் எல்லா வித அசைவுகளும் தானே. ஆனால் கொஞ்சம் ஆராய்ச்சி (பரிசீலனை = ஆராய்ச்சி) செய்துவிட்டே முடிவெடுக்கலாம்.

January 04, 2007 9:44 AM
--

குமரன் (Kumaran) said...
நல்லா இருக்கே என்று மட்டும் சொல்லிவிட்டுப் போன பெயர் சொல்ல விரும்பாத நண்பருக்கு நன்றி. :-)

January 04, 2007 9:45 AM
--

Sivabalan said...
குமரன் சார்,

பொதுவாக வரைகலை என்பது Drawing குறிப்பது என்று நினைக்கிறேன். சில அரசாங்க அலுவலகங்களில் பார்த்திருக்கிறேன். வரைகலை உதவியாளர் என...

January 04, 2007 10:02 AM
--

SK said...
ஏதோ ஒண்ணு! புரிஞ்சா சரி!
இதெல்லாம் இதுவரை தமிழில் இல்லாத பெயர்கள்தானே!

அனிமேஷன் என்றால் ஒன்றை 'உயிர்பெறச் செய்வது' அல்லது 'உயிரான ஒன்றைப் போல் நகர்த்துவது' என ஆங்கில அகராதியில் போட்டிருக்கிறது.
அப்படிப் பார்த்தால், 'உயிர்ப்பு போல் அசைகலை', 'உயிர் அசைகலை' எனலாம்!

இது மறுபொருளாகி உயிர் அசையவில்லை என்றும் விபரீதமாகப் பொருள் கொள்ள முடியும்! :)

ஏன், அசைகலை என்பதையே 'அசையவில்லை' எனக் கொள்ள முடியுமே!
[உ-ம்: என்ன சொல்லியும் அவன் அசைகலை!]

யாரோ ஒருத்தர் ஒரு பேர் வெச்சாரா.
அதைச் சொன்னா, அனிமேஷன் என்று புரிந்துகொள்கிறோமா; அவ்வளவுதான் வேண்டும்.

ஆங்கில சொற்களுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் பல பெயர்கள் இந்த வகைதானே!

பேருந்து [பஸ்], இரு சக்கர வண்டி [சைக்கிள்] இதெல்லாம் என்ன அப்படியே சரியான பெயர்களா?

சொல்லப்போனால், இந்த ஆங்கிலப் பெயர்களே காரணப் பெயர்கள் அல்ல![பஸ், சைக்கிள் என்றால் என்ன பொருள்?!]

நம்க்குப் பழகினால் எல்லாம் சரியாகிவிடும்!


க்ராஃபிக்ஸைப் பற்றியும் இதே கருத்துதான் !

:)

January 04, 2007 10:07 AM
--

வெற்றி said...
குமரன்,
பதிவுக்கு மிக்க நன்றி.

/* புதிய கலைச்சொற்களைக் கற்கும் ஆர்வமுள்ளவர்கள் அந்தக் குழுமத்தில் இணையுமாறு வேண்டிக் கொள்கிறேன். */

இன்றே, இப்போதே இணைந்து விடுகிறேன் குமரன்.

/* Graphics என்பதை வரைகலை என்றும் Animation என்பதை அசைகலை என்றும் மொழிபெயர்த்துத் தந்திருந்தார். */

Wow! அருமையான சொற்கள். இச் சொற்கள் மிகவும் sweet & simple ஆக இருக்கின்றன. இனி, இக் கணம் முதல் இச் சொற்களை நான் புழங்குகிறேன்.

January 04, 2007 11:19 AM
--

SK said...
அப்படிப் புழங்கும் போது கொஞ்ச காலத்திற்கு அதற்கான அந்த ஆங்கிலச் சொல்லையும் கூடவே அடிப்பானுக்குள் சொல்லிவிடுங்கள், வெற்றி!

அப்போதுதான் இந்த எளிய சொற்கள் என்னவென மற்றவர்க்கும் தெரிய வரும்.

:)

January 04, 2007 11:48 AM
--

Anonymous said...
குமரன்!
எளிமையாக இருப்பதால் புழக்கத்தில் கொள்ளலாம்.நன்று
யோகன் பாரிஸ்
எஸ்கே அண்ணா!
நாங்கள் ஈழத்தில் அசையாததை "அசயல" எனத்தான் கூறுவோம்.
என்ன? சொல்லியும் அவன் அசயலை. இது பேச்சுத் தமிழ்

January 04, 2007 4:10 PM
--

குறும்பன் said...
அசைகலை என்பது Animation க்கு ஈடாக உள்ளது.

வரைகலை என்பது Graphics க்கு சரியான சொல்லாக தெரியவில்லை.

January 04, 2007 5:57 PM
--

குறும்பன் said...
/ஏன், அசைகலை என்பதையே 'அசையவில்லை' எனக் கொள்ள முடியுமே!
[உ-ம்: என்ன சொல்லியும் அவன் அசைகலை!]
/
அசையவில்லை என்பதை அசையலை , அசயல, அசயலை, அசையல இப்படி பேச்சு வழக்கில் கேட்டதுண்டு, பேசுவதுண்டு . அசைகலை என்று கேட்டதில்லை.
SK ஐயா எப்பகுதியில்/ வட்டாரத்தில் இவ்வாறு பேசுகிறார்கள் என்று சொன்னால் புதிய வட்டார வழக்கு அறிந்து கொள்வேன்.

January 04, 2007 9:19 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. உங்கள் பின்னூட்டத்தின் பொதுவான கருத்தை ஒத்துக் கொள்கிறேன். புதிய கலைச்சொற்கள் இடுகுறிப் பெயர்களாக இருந்தாலும் பரவலாகப் புழக்கத்தில் வந்துவிட்டால் அது சரியானப் பொருளை மக்கள் மனத்தில் ஏற்படுத்திவிடும் என்பதை நேரில் பல எடுத்துக்காட்டுகளில் நாம் காண்கிறோம். புதிய கலைச் சொல் ஆக்கத்தில் ஈடுபட்டுள்ள நண்பர்களும் இதனை அறிந்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அதனால் சொற்களை அப்படியே மொழிபெயர்க்காமல் எளிதாக இருக்கும் வண்ணம் இயன்றவரை பொருள் சிதையா வண்ணம் எடுத்துக் கொடுக்கிறார்கள்.

'ஏதோ ஒண்ணு! புரிஞ்சா சரி' என்பதை மட்டும் ஒத்துக் கொள்ள முடியவில்லை. இப்படி சொன்னால் புதிய சொற்கள் தேர்ந்தெடுக்கும் முயற்சியே காணாமல் போய்விடும். எது எளிதாக இருக்கிறது; எது பொருளைச் சிதைக்கவில்லை என்று அறியத் தான் ஆர்வலர்கள் சொற்களைப் பொதுவில் வைக்கிறார்கள். இதன் மூலம் நீங்கள் சொன்னதைப் போல் எங்கே பொருள் சிதைகிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம்; அப்படியே இச்சொற்கள் புழங்குவதற்கு எளிதாக இருக்கிறதா என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் சொன்னது போல் 'அனிமேஷன்' என்பதற்கு 'உயிருள்ள ஒன்றைப் போல் நகர்த்துவது' என்பது நேரடியான மொழிபெயர்ப்பு. இதனை நீங்கள் சொன்னது போல் 'உயிர் அசைகலை' என்றோ 'அசைகலை' என்றோ பயன்படுத்தலாம். எது எளிதாகவும் பொருள் சிதைக்காமலும் மக்களின் இடையே பரவுகின்றதோ அது நிலைக்கும். இல்லையா?

சைக்கிளை யாரோ ஒருவர் ஈருருளி என்றார். ஆனால் அது நீங்கள் சொன்னது போல் இருசக்கரவண்டி என்று தானே அறியப்படுகிறது. அது போல் அசைகலையோ உயிரசைகலையோ நிற்கும்.

அசைகலை என்பது அசையவில்லை என்ற பொருளில் வழங்கப்படுகின்றதா என்று தெரியவில்லை. யாருமே அசைகலை என்று அசையவில்லையைச் சொல்லி எந்த வட்டார வழக்கிலும் கேட்டதில்லை. அதனால் அப்படி இல்லவே இல்லை என்று சொல்ல வரவில்லை. நான் கேட்டதில்லை. அவ்வளவு தான். அசையலை என்றும் அசையல என்றும் கேட்டிருக்கிறேன்.

யாரோ ஒருவர் பெயர் வைத்தும் அது நம்மூரில் ஒத்துகொள்வதும் நடக்க வேண்டுமென்றால் எல்லாராலும் பெரிய தமிழறிஞர் என்று ஒத்துக் கொள்ளப்பட்டவராகவோ இல்லை ஒரு தமிழைச் சார்ந்த செல்வாக்கு மிக்கவராகவோ இருக்க வேண்டும். அவர்கள் சில சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் அது புழக்கத்தில் எளிதாக வந்துவிடும். ஆனால் அப்படி நடப்பது வேகமாக நடப்பது போல் தெரியவில்லை. 'எல்லோரும் ஒத்துக் கொள்ளும் தமிழறிஞர்கள்' குறைவு. செல்வாக்கு மிக்கவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ்க்கலைச்சொற்கள் ஆக்குவதை விட முக்கியமான வேறு வேலைகள் இருக்கின்றன.

January 07, 2007 8:41 AM
--

குமரன் (Kumaran) said...
சிவபாலன். வரைகலை என்பதை Drawing என்பதற்கும் Graphics என்பதற்கும் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். ஏற்கனவே இது புழக்கத்தில் இருந்தால் இன்னும் பரவலாகப் புழங்குவதற்கு எளிதாக இருக்கும்.

January 07, 2007 8:41 AM
--

வெற்றி said...
குமரன்,

/*சைக்கிளை யாரோ ஒருவர் ஈருருளி என்றார். ஆனால் அது நீங்கள் சொன்னது போல் இருசக்கரவண்டி என்று தானே அறியப்படுகிறது. */

ஈழத்தில் பேச்சு வழக்கில் சைக்கிளைச் சைக்கிள் என்று சொன்னாலும், எழுத்துதமிழில் துவிச்சக்கர வண்டி என்று தான் பலர் எழுதுவதைப் படித்திருக்கிறேன்.

January 07, 2007 1:10 PM
--

G.Ragavan said...
நன்றாக இருக்கின்றன இந்தக் கலைச் சொற்கள். புதிய சொற்களை அறிமுகப் படுத்துகையில் அவை எளிமையாக இருக்கும் வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தச் சொற்கள் அருமையாக இருக்கின்றன.

January 10, 2007 8:51 AM
--

FloraiPuyal said...
தமிழ் பல்கலைக்கழகம் சொல்வது :
animation - அசைவூட்டுதல்
graphics - வரைவியல்

பிகு: அணு என்ற சொல் உயிர் என்றும் பொருள்படும். இதிலிருந்து வந்த வடமொழிச் சொல் ஆன மற்றும் ஆனன. இத்துடன் பிர் சேர்ந்து பிரான என்று ஆகும். இந்த ஆன என்ற சொல் கிரேக்கம் மற்றும் இலத்தீனத்தில் அசைவுள்ள, உயிருள்ள என்ற பொருட்களோடு அனிமஸ், அனிமா என்று ஆகிறது.

கீருதல் என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது graphein. எழுதுதல் என்றும் வரைதல் என்றும் பொருள்படும்.

January 28, 2007 12:41 PM
--

-/பெயரிலி. said...
http://www.tamil.net/list/2001-03/msg00292.html in tscill

January 28, 2007 1:54 PM

இவான் said...

Computer Graphics என்பதை வரைகலை மொழி பெயர்ப்பது சரியாக இருக்காது என்று படுகிறது. ஏனென்றால் Graphic என்ற சொல் வெறும் வரைதலை மட்டும் உள்ளடக்கியது இல்லை. வேறு ஏதாவது சொல்லை பயன்படுத்தலாம்.

பிறகு animation என்பதற்கு அசைகலை அல்லது நகர்கலை என்ற பதத்தை பயன்படுத்தலாம். அசைவு அல்லது நகர்வு இருக்கக்கூடிய ஒரு Graphicதான் animation. நகர்கலை அல்லது அசைகலை என்ற பதங்களின் பின்னால் உள்ள கலை என்ற சொல் கூட சரியா இருக்குமா என்று தெரியவில்லை .

மணவை முஸ்தபா animationனுக்கு அசைவூட்டம் என்ற பதத்தினைத் தந்துள்ளார்.

அசைதல் அல்லது நகர்தல் இருக்கக்கூடிய எல்லாமே அசைகலையைச் அல்லது நகர்கலையைச் சார்ந்ததா ? அப்படி என்றால் videoவில் கூடத்தான் அசைவு இருக்கிறது. அதுவும் animation னுக்குக் கீழ் வருமா ?

கேள்விகள் கேட்போம். விடைகளைத் தேடுவோம். :)

Kavinaya said...

அசைகலை, வரைகலை நல்லாதான் இருக்கு, சுலபமா.