Wednesday, May 07, 2008

நல்ல இடத்துச் சம்பந்தம்

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?" ரொம்பப் பேர் கேட்டிருப்போம். இதில் வரும் சம்பந்தம் என்ற சொல் தூய தமிழ்ச் சொல் இல்லை. இன்றைக்குப் பயன்பாட்டில் இந்தச் சொல் இருக்கிறது. இதற்கான இணைச் சொல் தமிழில் தொடர்பு எனப்படும். இந்தச் சொல்லை இனியாவது நிறைய பயன்படுத்த வேண்டும். சம்பந்தம் இருக்கையில் தொடர்பு தேவையா எனக் கேட்கலாம். சரிதான். சம்பந்தம் இருக்கட்டும். தொடர்பு ஏன் இல்லாமல் போக வேண்டும். ஆகையால் தொடர்பைப் பேச்சில் இனிமேல் தொடர்பு படுத்துவோம்.

( திருஞான சம்பந்தர் இருந்தாரல்லவா. தமிழ் பிழைக்கப் பாடிய பிள்ளை அவர். அவர் அறிவோடு தொடர்ந்தவர் என்பதால்தான் அவருக்குத் திருஞான சம்பந்தர் என்று பெயர். திருஞானம் என்றால் மெய்ப் பொருள். மெய்பொருள் என்பது இறையருள். பெயர்ப் பொருள் புரிந்ததா! )

அன்புடன்,
கோ.இராகவன்

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் நண்பர் இராகவனால் 9 ஆகஸ்ட் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

61 கருத்துக்கள்:

வெற்றி said...
இராகவன்,
சம்பந்தம் பற்றி சம்பந்தம் இல்லாமல் பதிவு போடாமல் சங்கதிக்கு வாறேன்.

[1]சிலர் [என்னையும் சேர்த்து] சம்மந்தம் என்று சொல்வதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். சம்மந்தம் = சம்பந்தம்? இரு சொற்களும் ஒன்றா?

[2]சம்பந்தி வீட்டுக்காரரை எப்படித் தூயதமிழில் சொல்வது?

August 09, 2006 12:35 PM
--

G.Ragavan said...
சம்மந்தம் என்று எந்தச் சொல்லும் இல்லை. சம் + பந்தம் என்பது சம்பந்தம். அதைச் சம்மந்தம் என்று சொல்வதும் தவறே. சம்பந்தத்தில் வந்தவரே சம்பந்தி. அவரையும் சம்மந்தி என்று சொல்வார்கள். சம்+மந்தி ஹா ஹா ஹா மந்தி என்றால் குரங்கு

தமிழில் சம்பந்தி என்பவரை எப்படிச் சொல்வது? யாராவது துணைக்கு வாங்களேன்! (வெற்றி...எனக்கு எதுவும் சட்டென்று தோன்றவில்லை. ஹி ஹி)

August 09, 2006 12:52 PM
--

இலவசக்கொத்தனார் said...
ஏற்கனவே இந்த குமரனால அர்த்தம் என்ற சொல்லை மறந்து பொருள் என சொல்லத் தொடங்கியாகிவிட்டது. இனி சம்பந்தத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. :)

August 09, 2006 1:35 PM
--

பொன்ஸ்~~Poorna said...
//[2]சம்பந்தி வீட்டுக்காரரை எப்படித் தூயதமிழில் சொல்வது? //
இதைப் படிச்சு முடிச்சதும், எனக்கும் இதே ஐயம் வந்தது.. என்ன சொல்வது?

கல்யாணப் பெண் பெயரைச் சொல்லி "அவளோட வீட்டு மனுஷங்க" என்று சொல்லும் வழக்கம் உண்டு எங்களிடையே.. மற்றபடி அந்த உறவுக்கு வேறு தமிழ்ப் பெயர் இருக்கிறதா என்ன?

இன்னும் சில வார்த்தைகளையும் விளக்கி இருக்கலாம்.. சின்னப் பதிவாகப் போய்விட்டது :(.. பந்தம் தமிழா?

August 09, 2006 2:11 PM
--

குறும்பன் said...
சில இடங்களில் உறவு என்ற பொருளிலும் சம்பந்தம் புழங்கப்படும்.

/சம்பந்தத்தில் வந்தவரே சம்பந்தி. அவரையும் சம்மந்தி என்று சொல்வார்கள். சம்+மந்தி ஹா ஹா ஹா மந்தி என்றால் குரங்கு /

வேண்டுமென்றேதான் சம்பந்தியை சம்மந்தி ஆக்கி கூப்பிடுகிறார்கள்.:-))

சம்பந்திக்கு நேர் தமிழ் சொல்? யாராவது சொல்லுங்கப்பா.

பந்தம் தமிழ் இல்லை அதற்கான தமிழ் சொல் உறவு.

August 10, 2006 10:56 AM
--

SK said...
நாடார் சமூகத்தில் உறவினர் அனைவருக்கும் பொதுவான ஒரு சொல் உண்டு.
"உறவின்முறை" என்று சோலுவார்கள்.
உறவென்னும் முறையால் வந்தவர்கள் எனப் பொருள்.

அதை வைத்துக் கொன்டு ஒரு சிறு முயற்சி செய்கிறேன், இந்த 'சம்பந்தி' என்னும் சொல்லுக்கு!

இரு வீட்டாரும் திருமணத்தின் மூலம் உறவாய் வருபவர்கள்.
நேரடிச் சொந்தம் கிடையாது!

தனது மகளை மணம் செய்தவரின் தந்தையோ, தாயோ, அல்லது தன் மகனுக்கு மனைவியாய் வந்த பெண்ணின் தாய், தந்தையரோ தான் சம்பந்தி எனப்படுகின்றனர்.

மணம் என்னும் சம்பந்தத்தால், உறவினர் ஆனவர்!

அப்படியெனின்,
"மணவழி உறவின் முறை"
என்னும் சொல் சரியாக வரும் எனத் தோன்றுகிறது!

பாட்டனைத், தாய்வழிப் பாட்டன், என்பது போல, இப்படிச் சொல்லத் தொடங்கலாமே!

வேறு நேரடி சொல் இல்லாமலிருந்தால்...!
வேறு எளிய சொற்கள் இல்லாமலிருந்தால்!!

August 10, 2006 10:39 PM
--

கைப்புள்ள said...
உள்ளேன் ஐயா.

August 10, 2006 11:36 PM
--

G.Ragavan said...
// இலவசக்கொத்தனார் said...
ஏற்கனவே இந்த குமரனால அர்த்தம் என்ற சொல்லை மறந்து பொருள் என சொல்லத் தொடங்கியாகிவிட்டது. இனி சம்பந்தத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. :) //

ரொம்ப நல்லது கொத்ஸ். இப்படித்தான் இருக்க வேண்டும் கொத்தனார்
இங்கீலீசு படித்தாலும்
இன்ப அமெரிக்க நாட்டுல
இப்படித்தான் இருக்க வேண்டும் கொத்தனார்

August 13, 2006 2:10 AM
--

G.Ragavan said...
// பொன்ஸ் said...
//[2]சம்பந்தி வீட்டுக்காரரை எப்படித் தூயதமிழில் சொல்வது? //
இதைப் படிச்சு முடிச்சதும், எனக்கும் இதே ஐயம் வந்தது.. என்ன சொல்வது?

கல்யாணப் பெண் பெயரைச் சொல்லி "அவளோட வீட்டு மனுஷங்க" என்று சொல்லும் வழக்கம் உண்டு எங்களிடையே.. மற்றபடி அந்த உறவுக்கு வேறு தமிழ்ப் பெயர் இருக்கிறதா என்ன? //

இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு இப்பொழுது தோன்றவில்லை. யாராவது உதவிக்கு வருவார்களா என்று பார்க்கிறேன். இராம.கி ஐயா என்னார், குமரன், யோகன்...யாராவது வாருங்கள்...ஓடி வாருங்கள்...என்னைக் காப்பாற்றுங்கள்.

// இன்னும் சில வார்த்தைகளையும் விளக்கி இருக்கலாம்.. சின்னப் பதிவாகப் போய்விட்டது :(.. பந்தம் தமிழா? //

இன்னும் சில சொற்கள் என்றால்? சம்பந்தத்தோடு தொடர்புடையனவா? வேறா?

பந்தம் தமிழன்று. பந்தத்திற்கு இணையான தமிழ்ச் சொல் உறவு.

August 13, 2006 2:15 AM
--

நவீன பாரதி said...
தமிழ்ச் சொற்கள் தொடர்பான உங்கள் பணி தொடர்க! வாழ்த்துக்கள் கோ.இராகவன் மற்றும் குமரன்!

August 13, 2006 9:30 AM
--

Merkondar said...
நாங்கள் அவரோடு சம்பந்தம் வைத்துக்கொண்டோம் என்போம். அதற்கு பெண் கொடுத்து அல்லது பெண் எடுத்து உறவு வைத்தக் கொண்டோம் என்று பொருள் சரிதானே இராகவன்

August 13, 2006 10:47 AM
--

kekkE PikkuNi #25511630 said...
ஆம், தொடர்பு என்பதே சம்பந்தத்தை விட நன்றாக இருக்கிறது.

பந்தம் வடமொழிச் சொல்.

ஹிஹி, நமக்கு வாணாத சொந்தக்காரங்களை, நமக்கு "சம்மந்தம்" - மந்தம்னு சொல்லிக்கலாம்:-)

SK சொன்னது அழகாக இருக்கிறது: உறவின் முறை. மணவழி என்றால், தன் மணவழி - அதாவது மாமியாரை/மாமனாரைப் பற்றிச் சொல்ல சரி (ஆங்கிலத்தில் cousin through marriage என்று சொல்வது போல்). மருமக்கள் (மருமகள்/மருமகன்) உறவின்முறை (அல்லது) மக்கள் மணவழி உறவின்முறை என்று சொல்லலாமா?

BIL = Brother-In-Law போல, இதற்கும் மூ.எ.கு. (மூன்று எழுத்துக் குறுக்கம்) வரத் தாவலை;-) அதாவது மணவழி / மக்கள் மணவழி உறவின் முறையாரை நல்ல பேர் சொல்லிக் கூப்பிடுபவர்களுக்கு மட்டுமே இது:-)

August 13, 2006 2:22 PM
--

G.Ragavan said...
கெக்கே பிக்குனி, நல்ல பாயிண்ட் எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்.

நாட்டார் வழக்கில் உறவின் முறை என்ற சொல்வழக்கு உண்டு. "அவங்க எங்க ஒறமொற" என்று சொல்வதும் உண்டு தெற்கில். இது இரத்தத் தொடர்புடைய உறவுகளைக் குறிக்கும். அதாவது cousins மற்றும் அப்பா அம்மா வழி உறவுகள்.

சம்பந்தி என்ற உறவுக்கு? அதற்கும் ஒரு வழி இருந்திருக்கிறது. இப்பொழுது வழக்கொழிந்திருந்தாலும் நல்ல சொற்கள் இருக்கின்றன. எடுத்தார் மற்றும் கொடுத்தார் என்ற வகையில் அழைக்கப்பட்டனர் சம்பந்திகள். எடுத்தார் என்றால் பெண் எடுத்தார். கொடுத்தார் பெண் கொடுத்தார்.

August 14, 2006 1:10 AM
--

G.Ragavan said...
// நவீன பாரதி said...
தமிழ்ச் சொற்கள் தொடர்பான உங்கள் பணி தொடர்க! வாழ்த்துக்கள் கோ.இராகவன் மற்றும் குமரன்! //

என் சார்பிலும் குமரன் சார்பிலும் நன்றி நவீன பாரதி. பாரதியே நவீனமானவன். அந்த நவீனத்திலும் நீங்கள் நவீனம். கதைக்குள் கதை போல. :-)

August 14, 2006 1:11 AM
--

G.Ragavan said...
// SK said...
நாடார் சமூகத்தில் உறவினர் அனைவருக்கும் பொதுவான ஒரு சொல் உண்டு.
"உறவின்முறை" என்று சோலுவார்கள்.
உறவென்னும் முறையால் வந்தவர்கள் எனப் பொருள்.

அதை வைத்துக் கொன்டு ஒரு சிறு முயற்சி செய்கிறேன், இந்த 'சம்பந்தி' என்னும் சொல்லுக்கு!

இரு வீட்டாரும் திருமணத்தின் மூலம் உறவாய் வருபவர்கள்.
நேரடிச் சொந்தம் கிடையாது!

தனது மகளை மணம் செய்தவரின் தந்தையோ, தாயோ, அல்லது தன் மகனுக்கு மனைவியாய் வந்த பெண்ணின் தாய், தந்தையரோ தான் சம்பந்தி எனப்படுகின்றனர்.

மணம் என்னும் சம்பந்தத்தால், உறவினர் ஆனவர்!

அப்படியெனின்,
"மணவழி உறவின் முறை"
என்னும் சொல் சரியாக வரும் எனத் தோன்றுகிறது!

பாட்டனைத், தாய்வழிப் பாட்டன், என்பது போல, இப்படிச் சொல்லத் தொடங்கலாமே!

வேறு நேரடி சொல் இல்லாமலிருந்தால்...!
வேறு எளிய சொற்கள் இல்லாமலிருந்தால்!! //

சரியான தொடுப்பு கொடுத்திருக்கிறீர்கள் எஸ்.கே. உறவின் முறை என்பது நாடார் வழக்கில் இரத்தத் தொடர்புள்ளவர்களைக் குறிப்பது. அம்மா அப்பா வழியில் வந்த உறவுகளைக் குறிப்பது.

கெக்கே பிக்குனியிடம் சொன்னது போல "அவங்க எடுத்தார் வீட்டுக்காரங்க. கொடுத்தார் வீட்டுக்காரங்க என்று சொல்வது மேலும் எளிமையாக்கும் என்று நினைக்கிறேன். சம்பந்தி என்றால் மகன் வழியிலா மகள் வழியிலா என்று சொல்ல முடியாது. ஆனால் எடுத்தார் கொடுத்தார் எனப் பிரிக்கையில் அந்தப் பிரச்சனையும் தீர்ந்தது. இல்லையா?

August 14, 2006 1:15 AM
--

G.Ragavan said...
// ENNAR said...
நாங்கள் அவரோடு சம்பந்தம் வைத்துக்கொண்டோம் என்போம். அதற்கு பெண் கொடுத்து அல்லது பெண் எடுத்து உறவு வைத்தக் கொண்டோம் என்று பொருள் சரிதானே இராகவன் //

ஆமாம் என்னார். பெண்ணை மையமாக வைத்தே தமிழ் உறவுகள் பெரும்பாலும் அறியப்படும். அப்படித்தார் எடுத்தாரும் கொடுத்தாரு.

August 14, 2006 1:16 AM
--

ஜயராமன் said...
இந்த மாதிரி ஒவ்வொரு வார்த்தையும் பிரித்துக்கொண்டு இது தமிழ், இது இரவல் என்று கூறுபோட்டு தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று புதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த தமிழில்தான் எனக்கு தெரிந்து இப்படி ஒரு கூத்து நடக்கிறது. மற்ற மொழிகள் எல்லாம் பல மொழிகளின் "சம்பந்தத்தை" ஆர்வத்துடன் வரவேற்று மேலே செழித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த அதிமேதாவிகளுக்கு மொழிகள் என்பது ஒரு தேங்கிய குட்டை. அதை ஓட விட மாட்டார்கள்.

இதில் தமிழில் வடமொழி கலந்துவிட்டது என்று சிலர் அரசியல் வேறு. வடமொழி கலக்காமல் தமிழ் கிடையாது என்ற உண்மை தெரிந்தும் இவர்கள் என்னமோ புதிய தழிழை உருவாக்கப்போவதாக நினைத்து எல்லோரையும் முட்டாளாக்கியது தான் மிச்சம். நாம் தமிழ் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பல சொற்கள் (நீர், மீன், காகிதம்... போல) தமிழ் அல்ல. பல சொற்களுக்கு (முகம், மௌனம் போல...) வடமொழிக்கேற்ற தமிழ் வார்த்தைகளே இல்லை.

வேறு நல்ல வேலையாக இருந்தால் ஜி.ரா. பார்க்கலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்.

நன்றி

August 14, 2006 3:11 AM
--

Pot"tea" kadai said...
சம பந்தி என்பதிலிருந்து சம்பந்தி (அ) சம்மந்தி வந்திருக்கலாமோ?

நெருங்கிய நட்பு, உறவினரோடு மட்டுமே பொதுவில் அமர்ந்து? பந்தியை பகிர்ந்து கொள்வோம் என்பதனால் வந்திருக்கலாமோ?

பந்தியும் வடமொழிச் சொல்லா? (அ) பந்தத்திலிருந்து தான் பந்தியே வந்ததா?

August 14, 2006 5:57 PM
--

Muse (# 5279076) said...
ஜயராமன் ஸார்,

நாம் தமிழ் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பல சொற்கள் (நீர், மீன், காகிதம்... போல) தமிழ் அல்ல. பல சொற்களுக்கு (முகம், மௌனம் போல...) வடமொழிக்கேற்ற தமிழ் வார்த்தைகளே இல்லை.

அதேபோல ஸம்ஸ்க்ருதத்திலும் வார்த்தை தட்டுப்பாடு உண்டு. உதாரணமாக, வாய் என்பதற்கு ஸம்ஸ்க்ருதத்தில் வார்த்தை இல்லை.

August 15, 2006 1:11 AM
--

வசந்தன்(Vasanthan) said...
இராகவன்,
கொஞ்சநாட்களாக இந்த வலைப்பக்கம் படிக்கவில்லை. (இப்போதைய சூழ்நிலையில் எதுவும் எழுதவும் பிடிக்கவில்லை.)
ஈழத்தில் 'கும்பா' என்ற உறவுமுறை ஒன்றுண்டு. எங்கள் சொந்தங்களில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எனக்குச் சரியான உறவுமுறை தெரியவில்லை.
இப்போது 'சம்பந்தி' என்ற சொல்லுக்கான உறவுச்சொல்லை யோசித்தபோது 'கும்பா' வாக இருக்குமோ என்று ஐயம். யாராவது ஈழத்தவர் இச்சொல் பற்றிய விளக்கத்தைத் தரலாம்.

August 15, 2006 6:13 AM
--

enRenRum-anbudan.BALA said...
ராகவன்,
உங்களின் "சொல் ஒரு சொல்" பதிவுகளுக்கு நானும் ரசிகன் ! தொடர்ந்து எழுதுங்கள், நண்பரே ! இந்த பதிவும் சுவையாகவே இருந்தது :)
என்றென்றும் அன்புடன்
பாலா

August 15, 2006 7:46 AM
--

இராம.கி said...
அன்பிற்குரிய இராகவன்,

சம்பந்தம் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். இது போலப் பலரும், தங்களுக்கு இருக்கும் சொற்களைப் பற்றிய அய்யப்பாடுகளை வலைப்பதிவுகளிலோ, பின்னூட்டுக்களிலோ அவ்வப்போது கேட்கிறார்கள். அவற்றிற்கு விடை தெரிந்து இருந்தால், சொல்ல வேண்டும் என்றே நினைப்பது உண்டு. ஆனால் பலநேரம் வேலை அழுத்தங்களில் ஆட்பட்டு, செய்ய முடியாமலே போகிறது. அப்புறம் வேறு சொல் வந்துவிடுகிறது; வேறு கேள்விகள், வேறு விடைகள். முடிவில் நழுவியது நழுவியது தான்.

இப்பொழுது விடுமுறை நாள்; இடையே கொஞ்ச நேரம் கிடைத்தது. எனவே எழுதுகிறேன்.

இராகவன், குமரன், ஆகிய உங்கள் இருவரின் முயற்சி பாராட்டத் தக்கது. ஏனென்றால் பலரின் நடையைச் செழுமைப் படுத்த ஒரு வாய்ப்பையும், நம் மொழியின் மேல் ஓர் அக்கறையையும் நீங்கள் உருவாக்குகிறீர்கள். உங்களின் தூண்டுகோலால், மற்றவர்கள் தமிழ் அகரமுதலியைத் தேடுவார்கள். "தமிழா, தமக்கு எல்லாமே தெரியும்" என்ற அலட்சியப் போக்கு உள்ளவர்களும், தமிழின் மேல் ஒரு பெரும்போக்குத் தனமான கருத்துள்ளவரும் (மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றத்திற்கு மட்டுமே என்று சொல்லுபவர்கள்) சொல்லும் முன்னிகைகளைப் (comments) பொருட்படுத்தாதீர்கள். அலட்சியப் போக்கு உள்ளவர்கள் தான் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு (அதாவது, குறைந்த தமிழ்ச் சொற்களேயே தெரிந்து கொண்டு) புதுச் செய்திகளைச் சொல்லும் போது, தம் அறியாமை காரணமாய், ஆங்கிலச் சொற்களையும், மற்ற மொழிச்சொற்களையும் போட்டுக் கொண்டு ஒரு கலவை மொழி பயின்று கொண்டிருப்பார்கள். கலவை மொழி கூடக் கூட, நாலுக்கு இரண்டாய் தமிழ் பழுதாகித் தான் போகும்.

இந்தக் கலவை மொழிக்காரர்கள் எல்லாம், மறதி என்னும் நோயை ஒப்புக் கொள்ளத் துணிவு இல்லாதவர்கள். அதே பொழுது தாம் பழகும் கலவை மொழிக்கு ஒரு சப்பைக் கட்டும் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ["இது தமிழில்லை; அது தமிழில்லை; வடமொழி இல்லாமல் தமிழ் இயங்குமா? பிறமொழிச்சொல் கலக்காத மொழி உண்டா? தேங்கிய நீர்க்குட்டையாக ஆக்காதீர்கள்" என்று, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல, குசும்பு செய்து கொண்டிருப்பார்கள். இவர்களைப் பொருட்படுத்தாதீர்கள். நீர், மீன், முகம், மோனம் ஆகியவை முற்றிலும் தமிழே. (காகிதம் தமிழல்ல.) இந்தச் சொற்களைத் தமிழல்ல என்று சொல்லுபவர்கள் மேம்போக்காகச் சொல்லாமல், ஆதாரத்தோடு சொல்லட்டும். நான் மறுமொழி தருகிறேன்.] சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் இருக்க இருக்க, நம் சொல் மறதி கூடும்; இதனால் தமிழ்ப் பயன்பாடு மேலும் குறையத் தான் செய்யும். இப்படி மறதியால் ஏற்படும் தமிழ்ப் பயன்பாட்டுக் குறைவைப் போன்றதை "பொதிவுப் பின்னூட்டு (positive feedback)" என்று கட்டுப்பாட்டுத் தேற்றத்தில் (control theory) சொல்லுவார்கள். பொதிவுப் பின்னூட்டு இருக்கும் கட்டகம் (system) கட்டுக்கு அடங்காமல் நிலை குலைந்து போகும். தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் மறதி கூடி பிறசொற்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், நம் மொழிக் கட்டகமும் குலைந்துதான் போகும்.

இனி சம்பந்தத்திற்கு வருவோம்.

சம் என்ற முன்னொட்டிற்கு முன்னால் பந்தம் என்ற சொல்லைப் பார்ப்போம். இங்கே ஒரு சிலர் "பந்தம்" என்பது தமிழில்லை என்று சொன்னார்கள். எனக்கு வியப்பாக இருக்கிறது. இப்படிச் சொல்லுவதற்கு முன்னால், கொஞ்சம்

"இது போல ஒலிக்கும் மற்ற சொற்கள் யாவை?
அகரமுதலியில் பந்தம் என்ற சொல்லிற்கு அருகில் இருக்கும் சொற்கள் எவை? (அவை எல்லாவற்றிற்குமே தொடர்பிருக்காது; இந்தத் தொடர்பை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.)
இந்தச் சொற்களின் வினைச்சொல் என்ன?
மெல்லின இணைகள் (இங்கே ந்ந), மெல்வல் இணைகள் (ந்த), வல்லின இணைகள் (த்த) உள்ள சொற்கள் எவை?
இந்த இணைகளில் உள்ள பலுக்கத் திரிவுகள் [(ந்ந, ண்ண, ன்ன), (ந்த, ண்ட, ன்ற), (த்த, ட்ட, ற்ற) எவை?"

எனப் பலவற்றை ஓர்ந்து பார்க்கவேண்டும். ஒவ்வொன்றையும் அலசி, ஒதுக்க வேண்டியவற்றை ஒதுக்கி, ஏற்க வேண்டியவற்றை ஏற்று, கொஞ்சம் மற்ற தமிழிய (திராவிட) மொழிகளையும் பார்த்து, பின்னால் வடமொழி அகர முதலி, இந்தையிரோப்பிய அகர முதலிகளையும் பார்த்து ,அப்புறம் முடிவிற்கு வரவேண்டும். சரவலான வேலை தான். ஆனால் சொற்களின் மேல் ஆர்வம் இருந்தால் முடியும்.

"பந்தலிலே பாகற்காய், பந்தலிலே பாகற்காய், விதைக்கல்லோ போட்டிருக்கு, விதைக்கல்லோ போட்டிருக்கு" என்ற இழவு வீட்டு நாட்டுப்புறக் கதை கேட்டிருப்பீர்களே! அந்தக் கதையில் வரும் பந்தல் என்ற சொல் எதைக் குறிக்கிறது? பந்தலின் வினைச்சொல் என்ன? பந்துதல் என்று சொல்லலாமா? கொடி படரப் போடப்படும் பந்தல் என்பது பந்தப் பட்டது தானே? பந்துதல் என்றால் கட்டுதல் என்ற பொருள் வர வில்லையா? நாலு குச்சியை எடுத்துச் சதுரமாய் ஊன்றி அவற்றின் மேலே இன்னும் நாலு குச்சிகளைச் சேர்த்து நாரால் இழுத்துக் கட்டிப் ஒரு பந்தல் உருவாக்குகிறோமே? எண்ணிப் பாருங்கள், குச்சிகள் அல்லவா கட்டிப் பொருத்தப் படுகின்றன?

இன்னொரு விதமாய்ப் பார்ப்போம். பற்றுதல் என்பது என்ன? ஒன்றை ஒன்று பிடித்துக் கொள்ளுவது, கட்டிக் கொள்ளுவது, பொருத்திக் கொள்ளுவது தானே? பற்றிக் கொண்டதைத் திரித்துப் பேச்சு வழக்கில் "பத்திக்கிச்சு" என்று சொல்லுகிறோமே? (அண்மையில் ஒரு திரையிசைப் பாடல் கூட வந்தது.) ஏனத்தில் ஓட்டை விழுந்தால் பற்ற வைக்கிறோமே? பற்ற வைக்கும் போது உடன் பயன்படும் பொருளுக்குப் பற்றாசு என்கிறோமே? நாட்டுப் பற்று, இறைப்பற்று, மொழிப்பற்று என்று சொல்லுகிறோமே? பற்றுக் கொண்டவர் பத்தியாளர் (பக்தியாளர் என்று வடமொழிப் பலுக்கையும் கொண்டு வருவோம்.) பத்துதல் என்பதன் பொருள் தான் என்ன? கிட்டத் தட்ட மேலே சொன்ன பந்துதல் என்பது போல் இல்லையா? பத்துதல் என்பது பல நேரங்களில் பிறவினைச் சொல்லாகவும், சிலபோதுகளில் வினை மயக்காய் தன்வினைச் சொல்லாகவும் ஆகும். ஆனால் மெல்வல் இணை கொண்ட பந்துதல், எப்பொழுதுமே தன்வினைச் சொல்லையே குறிக்கும்.

மேலும் ஒரு விதமாய்ப் பார்ப்போம். நாட்டுப்புறங்களில் குறிப்பாக முற்றங்களை (எங்கள் ஊர்ப் பக்கம் வளவுகளை) ஒட்டிய சிறிய ஒட்டுப் பகுதிகள் நடப்பதற்குத் தகுந்தாற் போல இருப்பதைப் பத்தி என்கிறோமே? அதன் பொருள் தான் என்ன? ஒட்டி நிற்கும் நீளவாட்டுப் பகுதி என்றல்லவா பொருள்? இன்றைக்கு ஆங்கிலத்தில் வரும் "paragraph" என்பதைப் பத்தி/பந்தி என்று சொல்லுகிறோமே? அதன் பொருளென்ன? ஒரு குறிப்பிட்ட செய்தியை தொடர்புள்ள கருத்துக்களாய்ப் பொருத்தி (=பகுத்து) எழுதுவது தானே பத்தி?

இன்னும் நான்காவது விதம். திருமண வீடுகளில் "என்னப்பா, எந்தனை பந்தி ஆயிற்று?" என்று கேட்கிறோம் இல்லையா? இங்கே பந்தி என்பது வரிசை, கட்டு, ஒழுங்கு என்பதைச் சுட்டுகிறது.

ஐந்தாவது விதமாய்ப் பார்த்தால், பந்து (ball) என்ற சொல் கூட எப்படி எழுந்தது என்று நினைக்கிறீர்கள்? மல்லிகைப் பந்து என்பது நீளமான மல்லிகைச் சரத்தைச் சுற்றிச் சுற்றிக் கோளமாய் வந்தது தானே? சணற் பந்து, நூற் பந்து இப்படி எல்லாமே சுற்றி வந்ததைக் குறிக்கவில்லையா?

ஆறாவது விதமாய்ப் பார்த்தால், பந்தயம் என்ற சொல்லும் கூட முதற்பொருளாய் கட்டுப் பட்டதையே குறிக்கும். "இந்தாப் பாரு, உனக்கும் எனக்கும் பந்தயம், இதுலே யாரு செயிக்கிறாங்கன்னு பார்ப்போம்" என்று சொல்லும் போது, போட்டி என்ற கருத்து மட்டுமே நமக்கு இந்தக் காலத்தில் தென்பட்டாலும், முதற்பொருள் "ஒரே விதமான கட்டிற்கு இருவரும் உடன்படுகிறார்கள்" என்பதே; "பின்னால் இதில் யார் வெல்லுகிறார்கள்?" என்பது வழிப்பொருள்.

இத்தனை சொற்களைப் பார்த்த பின் எண்ணிப்பாருங்கள். பந்தம் என்ற தமிழ்ச் சொல் மட்டும் சுற்றம், கட்டு போன்றவற்றைக் குறிக்காதா?

பந்தணம், பந்தகம், பந்தனம், பந்தனை, பந்தி, பந்து, பத்தம், பத்தி என வெவ்வேறு ஈறுகளோடு வரும் எல்லாச் சொற்களுக்கும் கட்டு, ஒழுங்கு, வரிசை, சுற்றம் என்றே பொருள் கூறுவதை உணருங்கள். இத்தனை விகுதிகளோடு ஒரு சொல்லின் திரிவு வருமானால் அது தமிழில் இருந்து எழுந்த இயற் சொல்லாகத் தான் இருக்க முடியும். அது கடந் சொல்லாக இருந்தால், இவ்வளவு ஈறுகளில் பயன்பாடு இருக்காது. பந்துதலைப் போல பந்தித்தலும் கட்டுதல், கூடுதல் என்ற பொருளிலேயே வரும்.

சரி பந்துதலின் வேர், பத்துதலின் வேர், பற்றுதலின் வேர் என்ன என்று கேட்டால் "பல்" என்பதே. அதைப் பற்றிய விளக்கத்தை நான் இங்கு சொல்லவில்லை. காட்டியிருக்கும் எடுத்துக் காட்டுக்கள் போதும் என்றே நான் எண்ணுகிறேன்.

சம் என்பது பற்றி "சமயம்" என்ற என் முந்தைய இடுகையில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன். அந்த முன்னொட்டு தமிழ், வடமொழி இரண்டிலுமே பரவிக் கிடந்த முன்னொட்டே. இங்கே "கலந்த" என்ற பொருள் அதற்கு வரும். சம்பந்தம் என்பது சேர்ந்து/சேர்த்துக் கொண்ட கட்டு அல்லது கூட்டு, சேர்ந்து கொண்ட உறவு.

இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், மருமகன், மருமகள் என்ற சொற்களில் மருவுதல் என்ற வினை முன்னொட்டாய் வருவதைச் சற்று எண்ணிப் பாருங்கள். மருவுதல் என்பது தழுவுதல், அணைத்தல். மருவுதலின் பெயர்ச்சொல்லாய் மார்பு என்ற உடல் உறுப்பும் அமையும். சேர்த்துக் கொண்ட மகனும் மகளும் மருமகன், மருமகள் ஆவர்.

மணம் என்று சொல்லுவதும் கலத்தல் என்ற பொருள் கொண்டு marriage என்பதைக் குறிக்கும். to marry என்ற மேலையிரோப்பியச் சொல் கூட நம் மருவுதலையும், நம் முடைய வதுவை அவர்களுடைய to wed என்பதையும் ஒட்டியிருப்பதைப் பாருங்கள்.

அதே போல, சமுத்தல்/சமத்தல் என்பதும் கலத்தல் என்ற பொருளைக் கொள்ளும். சமந்து கொண்ட பந்தம் சம்பந்தம்.

சங்கதம் என்ற சொல் கூட சமுந்து கொண்ட கதம் (=பேச்சு) அதாவது கலந்து செய்த பேச்சு என்றே பொருள் கொள்ளும். அது பல்வேறு வட்டார மொழிகளை எடுத்து, பெரு கதத்தை - prakrit - அடிப்படையாய் வைத்துக் கலந்து செய்த மொழி. பின்னால் அதை நம் செந்தமிழ் போலச் செங்கதம் - சீர்மை செய்யப்பட்ட மொழி - என்றும் சொன்னார்கள்.

சம் என்னும் முன்னொட்டு பற்றிப் பலவும் சொல்லலாம். கூறியது கூறலைத் தவிர்க்கலாம் என்றே என் "சமயம்" என்ற பதிவைப் படிக்கச் சொல்லுகிறேன்.

சம்பந்தம் என்பதற்கு வேறு சொற்கள் இருக்கின்றனவா என்று கேட்டீர்கள்? எங்கள் மாவட்டத்தில் இருக்கிறது. "மருவீட்டார்கள்". அதாவது திருமணத்தால் சேர்த்துக் கொண்ட வீட்டார்கள். எங்கள் பக்கம், திருமணம் ஆகிப் பிள்ளை வீட்டிற்குப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்த பின்னால், மீண்டும் மணப்பெண்ணின் பெற்றோர்கள் பெண்ணையும் , மாப்பிள்ளையையும் தங்கள் வீட்டிற்கு விருந்தோம்பலுக்குக் கொண்டு போவார்கள். (மூன்று முறை இப்படி அழைத்துக் கொண்டு போவார்கள்.) அந்த அழைப்பின் மேல் போவதை, மருவீட்டிற்குப் போவதாகவே எங்கள் பக்கத்தில் சொல்லுவார்கள். மருவீடு = மருவிக் கொண்ட வீடு = The house to which we got related through marriage = சம்பந்தி வீடு.

மருவீடு
மருவீட்டினர்
மருமகன்
மருமகள்

என்ற தொகுதியைச் சேர்த்துப் பாருங்கள், புரியும்.

சம்பந்தியினர், மருவீட்டினர் என்ற இரண்டையுமே நம் உகப்பிற்குத் தகுந்தாற் போல் பயன்படுத்தலாம். தமிழ் ஒரு நெகிழ்ச்சியான மொழி; வளமான மொழி. நம்மில் சிலர் அதன் வளம் தெரியாமல் கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

மேற்கொண்டு நான் பேசவேண்டாம். கற்றது கைம்மண்ணளவு.

அன்புடன்,
இராம.கி.

August 15, 2006 10:44 AM
--

G.Ragavan said...
// Pot"tea" kadai said...
சம பந்தி என்பதிலிருந்து சம்பந்தி (அ) சம்மந்தி வந்திருக்கலாமோ?

நெருங்கிய நட்பு, உறவினரோடு மட்டுமே பொதுவில் அமர்ந்து? பந்தியை பகிர்ந்து கொள்வோம் என்பதனால் வந்திருக்கலாமோ?

பந்தியும் வடமொழிச் சொல்லா? (அ) பந்தத்திலிருந்து தான் பந்தியே வந்ததா? //

டீகடை, பந்தி வேறு பந்தம் வேறு. சம் என்றால் தொடர்ந்து வருவது என்று நினைக்கிறேன். தொடர்ந்து வரும் பந்தம் சம்பந்தம். வடமொழி தெரிந்தவர்கள் விளக்கலாம்.

August 15, 2006 12:28 PM
--

G.Ragavan said...
// அதேபோல ஸம்ஸ்க்ருதத்திலும் வார்த்தை தட்டுப்பாடு உண்டு. உதாரணமாக, வாய் என்பதற்கு ஸம்ஸ்க்ருதத்தில் வார்த்தை இல்லை. //

ம்யூஸ், ஒவ்வொரு மொழியிலும் சில கட்டுப்பாடுகளும் விதிவிலக்குகளும் உண்டு. தமிழும் விதிவிலக்கல்ல. தமிழுக்கு முகமில்லை. வடமொழிக்கு வாயில்லை என்ற சொலவடையும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

அடுத்த பதிவில் விளக்கமாகச் சொல்கிறேன்.

August 15, 2006 12:31 PM
--

G.Ragavan said...
// வசந்தன்(Vasanthan) said...
இராகவன்,
கொஞ்சநாட்களாக இந்த வலைப்பக்கம் படிக்கவில்லை. (இப்போதைய சூழ்நிலையில் எதுவும் எழுதவும் பிடிக்கவில்லை.)
ஈழத்தில் 'கும்பா' என்ற உறவுமுறை ஒன்றுண்டு. எங்கள் சொந்தங்களில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எனக்குச் சரியான உறவுமுறை தெரியவில்லை.
இப்போது 'சம்பந்தி' என்ற சொல்லுக்கான உறவுச்சொல்லை யோசித்தபோது 'கும்பா' வாக இருக்குமோ என்று ஐயம். யாராவது ஈழத்தவர் இச்சொல் பற்றிய விளக்கத்தைத் தரலாம். //

வசந்தன் உங்கள் மனநிலை புரிகிறது.

கும்பா என்ற சொல்லைப் பற்றி ஈழத்தவர் விளக்கினால் தெரிந்து கொள்ளலாம். யோகன் ஐயாவிடம் கேட்டால் தெரியலாம்.

August 15, 2006 12:35 PM
--

G.Ragavan said...
// enRenRum-anbudan.BALA said...
ராகவன்,
உங்களின் "சொல் ஒரு சொல்" பதிவுகளுக்கு நானும் ரசிகன் ! தொடர்ந்து எழுதுங்கள், நண்பரே ! இந்த பதிவும் சுவையாகவே இருந்தது :)
என்றென்றும் அன்புடன்
பாலா //

நன்றி பாலா. சிறப்பாகவும் சுவையாகவும் சொல்ல முயல்கிறேன்.

August 15, 2006 12:39 PM
--

குமரன் (Kumaran) said...
இராகவன். இந்த 'சொல் ஒரு சொல்' வலைப்பூவைத் தொடங்குவதற்கு முன்பே முடிந்த அளவில் தமிழ்மொழிச் சொற்களையே பயன்படுத்தி எழுத முயற்சிப்பேன். ஆனால் அறியாமல் வேறு மொழியிலிருந்து தமிழுக்கு வந்து தமிழாக்கப்பட்டச் சொற்களையும் புழங்கியதுண்டு. 'சொல் ஒரு சொல்' அறிமுகத்திலேயே தமிழில் இருந்து ஆனால் தற்போது புழக்கத்தில் இல்லாத சொற்களை அறிமுகம் செய்யவே இந்த வலைப்பூ என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறோமே. இந்த வலைப்பூ தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு சொல் எழுதும் போது பார்த்துப் பார்த்து தான் எழுதுகிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த நாள் முதல் சம்பந்தம் என்ற சொல் எழுத வரும்போதெல்லாம் அதற்குப் பதிலாக தொடர்பு என்று எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். அதனை இந்தப் பதிவில் நீங்கள் சொன்னவுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

August 15, 2006 2:03 PM
--

குமரன் (Kumaran) said...
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சம்பந்தம் என்ற சொல் இருக்கும் போது தொடர்பு என்பது தேவையா என்று. இதில் சம்பந்தத்தை ஒதுக்கித் தொடர்பைக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. வடமொழிச் சொல்லான சம்பந்தத்தைப் புழங்கும் இடத்தில் தமிழ்ச்சொல்லான தொடர்பைப் புழங்கினால் தமிழ்ச்சொல் நிலைக்கும். இல்லையேல் சம்பந்தம் மட்டுமே நிலைத்துத் தமிழ்ச் சொல் புழக்கத்தில் இல்லாமல் இலக்கியத்தில் மட்டுமே இருக்கும் ஒரு சொல் ஆகிவிடும். சிலர் பிறமொழிச் சொற்களைத் தமிழ் ஏற்பதால் மட்டுமே தமிழ் வாழும். அப்படியில்லையேல் மெல்ல தமிழ் இனிச் சாகும் என்றெல்லாம் பதிவு இடுகின்றனர். ஆனால் உண்மையில் தமிழ்ச் சொற்கள் இருக்க அவற்றை விடுத்துப் பிற மொழிச் சொற்களைப் புழங்கினால் தான் தமிழ் சாகும். என்ன நடக்கும் தெரியுமா? முதலில் தமிழ்ச் சொற்கள் மறந்து போகும், பிறமொழிச் சொற்கள் மட்டும் நிற்கும், பின்னர் ஒருவர் வந்து தமிழே பிறமொழியிலிருந்து வந்தது தான் என்று நிறுவுவார். அந்த நிலையில் தான் தமிழ் சாகும்.

பிற மொழிச் சொற்களின் மீது வெறுப்பு இல்லை. ஆனால் தமிழ்ச்சொற்கள் இருக்க பிறமொழிச் சொற்களை ஏன் புழங்க வேண்டும். தமிழ்ச்சொற்களையே புழங்குவோம் என்பதற்கே இந்த 'சொல் ஒரு சொல்' வலைப்பூ.

August 15, 2006 2:11 PM
--

குமரன் (Kumaran) said...
ஒரு கேள்வி இராகவன். திருஞான சம்பந்தர் பெயர் விளக்கம் புரிகிறது. ஆனால் அந்தப் பெயர் அவரது இயற்பெயரா காரணப் பெயரா? நம்மாழ்வார் என்பது இயற்பெயர் இல்லை - அவரது இயற்பெயர் காரிமாறன் சடகோபன் என்பது. அதைப் போல் காழிப்பிள்ளையாருக்கும் இயற்பெயர் வேறு ஏதேனுமா? அறியாமல் கேட்கிறேன்.

August 15, 2006 2:13 PM
--

குமரன் (Kumaran) said...
இப்போது தான் இராம.கி. ஐயாவின் பின்னூட்டத்தைப் பார்த்தேன். ஆகா. என்ன அருமையாக விளக்கியிருக்கிறார்! அருமை அருமை.

August 15, 2006 8:29 PM
--

இராமநாதன் said...
பழைய தொடர்போட விட்டுபோன தொடர்பை திரும்பி வச்சுகிட்டா சம்பந்தம் பண்ணவங்க கோச்சிக்க மாட்டாங்களே ஜிரா?

டிஸ்கி போடப்போறதில்லை. ஹி ஹி.

August 15, 2006 10:09 PM
--

G.Ragavan said...
இராம.கி ஐயா. இப்பொழுதுதான் உங்கள் பின்னூட்டம் படித்தேன். மிகச் சிறப்பாக விளக்கியிருக்கிறீர்கள். அருமையான திறனாய்வு. நீங்களும் கண்டிப்பாக இந்தத் திரியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். வாருங்கள். அள்ளித் தாருங்கள்.

August 16, 2006 1:13 AM
--

G.Ragavan said...
மருவீட்டை எப்படி மறந்து போனேன். மருவீட்டார் என்ற சொல்லும் இன்றும் ஊர்ப்பக்கம் கேட்டதுண்டு. நன்றாக எடுத்துக் காட்டியிருக்கிறீர் ஐயா. மிக்க நன்றி.

August 16, 2006 1:14 AM
--

இப்னு ஹம்துன். said...
நல்ல ஒரு வலைப்பக்கமிது. இராகவனுக்கும் குமரனுக்கும் நன்றிகள்.
இராம.கி ஐயா அவர்கள் அருமையான விளக்கமளித்துள்ளார்கள்.
நான் கூட 'இணை உறவினர்' என்றொரு சொல்லை பரிந்திருந்தேன். இராம.கி ஐயா சொல்வதுப் போல வழக்கத்தில் உள்ள 'மருவீட்டார்' இன்னுஞ்சிறப்பு.

August 16, 2006 1:20 AM
--

குமரன் (Kumaran) said...
வெற்றி. இராகவனின் பதிவைப் படித்ததும் எனக்கு வந்த கேள்வியும் இது தான். சம்மந்தம் என்பது தவறான சொல் என்று தெரியும். வாரியார் சுவாமிகளோ வேறு யாரோ ஒருவர் சம்மந்தி என்பதனை சம்+மந்தி என்று பிரித்து உறவினர் மேல் எவ்வளவு சினம் (கோபம் -> சினம்) இருந்தாலும் இப்படியா குரங்கு என்று சொல்லவேண்டும் என்று கிண்டலாகச் சொல்லியதையும் கேட்டிருக்கிறேன். இராகவனும் அதனையே சொல்லியிருக்கிறார். :-)

சம்பந்தி வீட்டுக் காரரை எப்படி அழைப்பது என்பது தான் எனக்கும் தோன்றிய வினா. அதற்குத் தக்க விடைகளைப் பலரும் குறிப்பாக இராம.கி. ஐயாவும் சொல்லியிருக்கிறார்கள்.

August 16, 2006 6:17 AM
--

குமரன் (Kumaran) said...
பொன்ஸ். நானும் பந்தம் என்றால் வடமொழி தான் என்று சொல்ல வந்தேன். ஆனால் இராம.கி. ஐயா நல்ல விளக்கம் கொடுத்து அதனை மறுத்துவிட்டார். அவர் சொன்னது போல் 'கற்றது கைம்மண்ணளவு'. :-)

அவங்க வீட்டு மனுஷங்க என்று சொல்வது உண்டு தான். ஆனால் அது பேச்சுமொழியில் நன்றாக இருக்கிறது.

August 16, 2006 6:19 AM
--

குமரன் (Kumaran) said...
குறும்பன். பந்தமும் தமிழ்ச்சொல் என்று இராம.கி. ஐயா நிறுவியிருக்கிறார். அதனால் பந்தம், உறவு இரண்டையும் பாவிக்கலாம் என்கிறேன். என்ன சொல்கிறீர்கள்? :-)

August 16, 2006 6:20 AM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. நீங்கள் சொன்ன 'உறவின் முறை' நன்றாக இருக்கிறது. ஆனால் அது நேரடிச் சொல் இல்லையே நீங்களே சொல்லியது போல். மருவீட்டார் என்று சொல்வது கடினமாக இருந்தால் நீங்கள் சொல்வது போல் மணவழி உறவின் முறை என்று நன்றாகச் சொல்லலாம். :-)

August 16, 2006 6:22 AM
--

குமரன் (Kumaran) said...
உள்ளேன் ஐயா சொன்ன கைப்புள்ள ஐயா. பாசக்காரப் பய நீங்க. நன்றி ஐயா. :-)

August 16, 2006 6:23 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி நவீன பாரதி. உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். இனிமேல் தான் படிக்க வேண்டும். விரைவில் படிக்கிறேன்.

August 16, 2006 6:24 AM
--

குமரன் (Kumaran) said...
மக்கள் மணவழி உறவின் முறை - ம். நன்றாக இருக்கிறது கெக்கே பிக்குணி. :-)

August 16, 2006 6:25 AM
--

குமரன் (Kumaran) said...
எடுத்தார், கொடுத்தாரும் நல்லா இருக்கே இராகவன்.

August 16, 2006 6:26 AM
--

குமரன் (Kumaran) said...
ஜயராமன் ஐயா. உங்கள் கருத்துகளைச் சொல்வதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அப்படி சொல்வதற்கு முதலில் அதனை நல்ல வழியில் சொல்ல வேண்டும். எப்படி நீங்கள் சொல்கிறீர்கள் என்பதும் உங்கள் விருப்பமே. ஆனால் இங்கே நீங்கள் சொல்லியிருக்கும் முறை 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்பார்களே அப்படித் தான் இருக்கிறது. உங்களுக்குக் கட்டாயம் நாவடக்கம் தேவை என்பது என் தாழ்மையான எண்ணம். (இதனைச் சொல்லத் தயக்கம் தான். நான் இப்படிச் சொன்னால் இன்னொருவர் வந்து எனக்கு நாவடக்கம் தேவை என்பார். ஏனெனில் மற்றவர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதே கொஞ்சம் அதிகபிரசங்கித் தனம் தானே).

//இந்த மாதிரி ஒவ்வொரு வார்த்தையும் பிரித்துக்கொண்டு இது தமிழ், இது இரவல் என்று கூறுபோட்டு தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று புதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.//

இந்த மாதிரி ஒவ்வொரு வார்த்தையையும் பிரித்துக் கொண்டு இது தமிழ், இது இரவல் என்று பிரித்துச் சொல்வது மட்டுமே இங்கே நடைபெறவில்லை என்பதை ஐயா கவனித்தீர்களா? இரவல் சொல்லுக்கு ஏற்றத் தமிழ்ச்சொல் இருக்கிறதப்பா; அதனைப் பயன்படுத்துங்கள் என்றும் சொல்லப் படுகிறது. அப்படிச் செய்யாமல் 'இது தமிழ்; இது இரவல்' என்று மட்டும் இனம் காட்டிக் கொண்டிருந்தால் தமிழ் வளர்க்கிறேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது தான். ஆனால் அதற்கு உரிய தமிழ்ச்சொல்லைச் சொல்லி மறந்து போன சொற்களை மீட்டுக் கொண்டுவருவது தமிழை வளர்க்கும் ஒரு செயல் தான் என்பதை இங்கே பரிந்துரைத்தச் சொற்களைப் பயன்படுத்தும் யாரும் எளிதாக உணர்வார்கள்.

//இந்த தமிழில்தான் எனக்கு தெரிந்து இப்படி ஒரு கூத்து நடக்கிறது. மற்ற மொழிகள் எல்லாம் பல மொழிகளின் "சம்பந்தத்தை" ஆர்வத்துடன் வரவேற்று மேலே செழித்துக்கொண்டிருக்கின்றன.
//

உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த மொழிகள் எல்லாம் நேற்று தோன்றிய மொழிகள். தமிழோ வடமொழிக்கும் தாய் என்று சில ஆய்வாளர்களால் சொல்லப்படும் பழம்பெரும் மொழி. அந்தத் தமிழ்மொழியில் வடமொழி கலந்து கலந்து மணிப்ரவாளம் என்ற ஒரு நடையில் எழுதப்பட்டது உங்களுக்கு நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். வடமொழியும் தமிழும் கலந்த 'அழகான' நடை என்று சிலர் (நீங்களே கூட) சொல்லலாம். ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் வெறும் இலக்கிய மொழி என்று ஆவதற்கு வழி செய்வதாகவே முடிந்திருக்கும்.

ஆரியமாம் வடமொழி போல் செந்தமிழும் வெறும் இலக்கிய மொழியாக மாறாமல் இருக்க நல்ல வேளையாக தனித்தமிழ் இயக்கம் வந்தது. பல வடமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்தார்கள். இப்போது மணிப்ரவாளம் வழக்கொழிந்து மிகுதியாகத் தமிழ்ச்சொற்களே உள்ள தமிழ் பேசப்படுகிறது. ஆனால் இப்போதும் பிற மொழிச் சொற்கள் தமிழில் இருக்கின்றன. அவற்றை இனம் கண்டு தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைப்பதே இந்த வலைப்பூவின் நோக்கம். இது நன்றாகவே நடக்கிறது என்பது நடைமுறை உண்மை. இந்தக் கூத்து தொடர்ந்து நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் தொடர்ந்து கூத்தைப் பாருங்கள்; இல்லை இந்தக் கூத்தாடிகளை விட்டுவிடுங்கள். எங்கள் கூத்தினை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

//இந்த அதிமேதாவிகளுக்கு மொழிகள் என்பது ஒரு தேங்கிய குட்டை. அதை ஓட விட மாட்டார்கள்.
//

இது உங்கள் பார்வை. அவ்வளவே. பெரும் உண்மை இல்லை.

எங்களைப் போன்ற அதிமேதாவிகளுக்கு மொழிகள் என்பது ஓட வேண்டிய ஒன்று. அதனைப் பிறமொழிச் சொற்கள் என்ற கரையைக் கொண்டு தடை செய்யும் போது தமிழ்மொழிச் சொற்கள் வழக்கிழந்து தமிழ் ஒரு தேங்கிய குட்டை ஆகிவிடும். அதனைத் தடுத்து தமிழ் தடையின்றி எங்கும் ஓட வழிசெய்வதே எங்கள் ஆசை. எங்களுடன் இணைந்து அதிமேதாவிகள் ஆவதற்கு யார் யாருக்கு விருப்பம் உண்டோ அவர்களை எல்லாம் இப்போது அழைக்கிறேன். வாருங்கள். தமிழை மீட்டெடுப்போம்.

//இதில் தமிழில் வடமொழி கலந்துவிட்டது என்று சிலர் அரசியல் வேறு.//

தமிழில் வடமொழி கலந்ததும் வடமொழியில் தமிழ் கலந்ததும் வரலாறு கண்ட உண்மை. எந்த இரு மொழியும் ஒன்றோடு ஒன்று உறவாடும் போது இந்தக் கொடுத்தல் வாங்கல் நடப்பது இயற்கை. ஆனால் அதனால் ஒரு மொழியின் சொற்கள் மறைந்துவிடும் போல் இருந்தால் அதனை மீட்டெடுப்பதே இந்த வலைப்பூவின் நோக்கம்.

//வடமொழி கலக்காமல் தமிழ் கிடையாது என்ற உண்மை தெரிந்தும் இவர்கள் என்னமோ புதிய தழிழை உருவாக்கப்போவதாக நினைத்து எல்லோரையும் முட்டாளாக்கியது தான் மிச்சம். //

வடமொழி கலக்காமல் தமிழ் கிடையாது என்பது உண்மையா? சரி. ஆனால் இராம.கி. ஐயா போன்றவர்கள் தமிழ் கலக்காமல் வடமொழி கிடையாது என்று நிறுவுகிறார்களே. அப்போது என்ன சொல்வீர்கள்? எப்போதும் போல் வடமொழியிலிருந்தே தமிழுக்குச் சொற்கள் வந்தன; வடமொழியிருப்பதால் தான் தமிழே உயிரோடு இருக்கிறது; அது தான் உண்மை என்று அப்போதும் அடித்துச் சொல்வீர்களா? இப்படி நீங்கள் சொல்லி நாங்கள் கேட்டால் தான் நாங்கள் முட்டாள்கள். இப்படிச் சொல்லிச் சொல்லியே எங்களை முட்டாள் ஆக்கப் பார்க்கிறீர்கள்.ஆனால் உண்மையில் 99% தனித்து பிறமொழியின் துணையின்றித் தமிழால் இயங்கமுடியும் என்பதே உண்மை என்று என்போன்றோர் நம்புகிறோம். அதனை உங்களைப் போன்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இப்படிப் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ் மொழிச் சொற்களைப் பரிந்துரைத்து அதனைப் புழங்கினால் தான் முடியும் என்பதனை அறிகிறோம். அதனாலேயே இந்த முயற்சி. இதில் பயன்பெறுபவர்கள் முட்டாள்கள் என்றால் நாங்கள் முட்டாள்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம். நீங்கள் அதிமேதாவி ஆகிவிடுவீர்கள் அப்போது.

//நாம் தமிழ் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பல சொற்கள் (நீர், மீன், காகிதம்... போல) தமிழ் அல்ல. பல சொற்களுக்கு (முகம், மௌனம் போல...) வடமொழிக்கேற்ற தமிழ் வார்த்தைகளே இல்லை.
//

இப்படிப் பொத்தாம் பொதுவாகச் சொல்வதை விட்டுவிட்டு கொஞ்சம் விளக்கமாக எடுத்துச் சொன்னீர்களென்றால் மேலும் பேசலாம்.

//வேறு நல்ல வேலையாக இருந்தால் ஜி.ரா. பார்க்கலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்.
//

ஹிஹி. என்னிடம் கேட்டால் நான் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையையே விட்டுவிட்டு 'சொல் ஒரு சொல்'லில் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதே வேலையாக இருக்கலாம் என்று சொல்வேன். அந்த அளவில் இருக்கிறது எங்கள் வேகம். இதுவே மிக மிக நல்ல வேலை. இதனைத் தவிர்த்து வேறு வேலை இல்லை.

August 16, 2006 6:51 AM
--

குமரன் (Kumaran) said...
பொட்'டீ'கடை. உங்கள் கேள்விகளுக்கு இராம.கி. ஐயா நல்ல பதில்களைச் சொல்லியிருக்கிறார்.

சம பந்தி என்பதில் இருந்து சம்பந்தி வந்ததாகத் தெரியவில்லை.

பந்தியும் சரி பந்தமும் சரி இரண்டுமே தமிழ்ச்சொற்கள் என்று விளக்கியிருக்கிறார் இராம.கி. ஐயா.

August 16, 2006 6:53 AM
--

குமரன் (Kumaran) said...
Muse ஐயா. வாய் என்பதற்கு வடமொழியில் சொல்லே இல்லை என்பது இதுவரை எனக்குத் தெரியாது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறீர்களா? வாய் என்ற சொல் இல்லையென்றால் எந்தச் சொல்லை வாய் என்பதைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள்?

August 16, 2006 6:55 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி இப்னு ஹம்துன். இணை உறவினர் என்பது நல்ல சொல்லே. ஆனால் அது படித்தவுடன் சம்பந்தி என்ற பொருள் தருவதாக இல்லையே. ஆனால் புழக்கத்தில் வந்தால் அது அந்தப் பொருள் தரத் தொடங்கும் நல்ல சொல்லே. மிக்க நன்றி.

August 16, 2006 6:57 AM
--

குமரன் (Kumaran) said...
நான் இதுவரை மருவீட்டார் என்பதனை மறுவீட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் மருமகள், மருமகன் என்பதற்கும் மருவுதல் என்பது அடிப்படை என்ற இராம.கி.ஐயாவின் விளக்கம் பார்த்த பிறகு புரிகிறது. மிக்க நன்றி ஐயா.

August 16, 2006 6:58 AM
--

இராம.கி said...
ஞான சம்பந்தரின் இயற்பெயரைக் குமரன் கேட்டிருந்தார்.

ஆளுடைய பிள்ளை. அவர் பிறந்த நாள் ஆதிரை நாள். சிவனின் நாளும் ஆதிரை. ஆதிரையான் ஆதிரை நாளில் ஆளுகிறான். அதனால் இவருக்கு ஆளுடைப் பிள்ளை என்று வைத்திருந்தார்கள். அந்தப் பக்கங்களில் சிவநெறி பின்பற்றும் பிள்ளைமார் வீடுகளில் ஆளுடையா பிள்ளை என்ற பெயர் இருக்கும்.

ஞானப் பால் குடித்த பிறகு, ஆளுடைப் பிள்ளை இறைவருக்கும் உமையவளுக்கும் சேர்க்கப் பட்ட உறவானார். ஞான சம்பந்தர் ஆன கதை அது தான்.

அதே போல மருள்நீக்கியார் தருமசேனராகிப் பின் திருநாவுக்கரசரானார்; சம்பந்தரால் அப்பர் என்று அழைக்கப் பட்டார்.

மாணிக்க வாசகருக்கும் இயற்பெயர் தெரியவில்லை. அவர் ஊரை வைத்து வாதவூரார் என்றும், அவர் நூலை வைத்து மணிவாசகர் (=மாணிக்க வாசகர்) என்றும் கூறுகிறோம்.

சுந்தரருக்கு அது இயற்பெயரென்றே நினைக்கிறேன்.

பொதுவாகத் தமிழ் இலக்கியங்களிலும், மரபிலும், யாரும் இயற்பெயரைப் பெரிது படுத்துவதில்லை. இது போன்ற பழக்கம் ஏன் நம்மிடையே இருந்தது/ இருக்கின்றது (காட்டாக பாரதி, பாரதிதாசன், கலைஞர் இப்படி இன்றும் சொல்கிறோம் அல்லவா?) என்பது கொஞ்சம் வியப்பானது; ஆயத் தகுந்தது.

அன்புடன்,
இராம.கி.

August 16, 2006 8:15 AM
--

SathyaPriyan said...
தங்களது இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். திரு. ஜெயராமன் அவர்களின் கருத்து நகைப்புக்குரியதாகும்.

"தருமம் புரிவார்போல் தக்காரை ஏசும்;
மொழியறிந்தார் போல முனிவரை ஏசும்"

என்பது இவருக்கு பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

எந்த நல்ல முயற்சிக்கும் வரும் இது போன்ற தடங்கல்கள் அம்முயற்சியின் வீரியத்தை அதிகரிக்குமே அல்லாது குறைப்பதில்லை.

தங்களது இந்த முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

August 16, 2006 11:27 AM
--

குறும்பன் said...
நம்ம பந்தம் என்றும் தொடரனும் குமரன். :-)

மணிப்பிரவாள நடையில் எழுதப்படும் கலியாண பத்திரிக்கையில் இஷ்ட மித்திர பந்துக்கள் என்பதையும், திருமண அழைப்பிதல்களில் சுற்றம் சூழ, உற்றார் உறவினர் என்றும் படித்ததை வைத்து 'பந்தம்' சங்கதம் என்று நினைத்திருந்தேன். இராம.கி ஐயா சொன்ன பிறகு தான் பந்தத்தை பந்தூஸ் ஆக்கிட்டாங்கன்னு புரியுது. :-))

இந்த மாதிரி எத்தனை தமிழ் சொற்களை சங்கதம் என்று தவறாக நாம் புரிந்துகொண்டுள்ளோமோ? இப்பதிவு அவ்வாறான சில தவறான புரிதல்களை தெளிவுபடுத்தியுள்ளது. அதற்காக குமரனுக்கும் இராகவனுக்கும் நன்றி.

August 16, 2006 8:04 PM
--

kekkE PikkuNi #25511630 said...
முதலில்:
பந்தம் என்பது வடமொழிச் சொல். அது வடமொழி மட்டுமன்று, பழகு தமிழிலும் பயில வந்து விட்டது என்று கருதுகிறேன் (இராம. கி. அய்யா அவர்களின் பின்னூட்டத்தின் விளைவு:-). வேண்டுபவர்கள் யைப் பார்க்கலாம் - வடமொழி, தமிழ் இரண்டுக்கும் பொருள் கிடைக்கும். (பொருள்: binding, tying to) பந்தம் பழைய தமிழில் பயிலப்பட்டிருக்கிறதா என்று நிறைய மண் இருப்பவர்கள் சொல்லலாம்.

இராம. கி.: நீங்க கற்றது கைம்மண்ணளவு என்றால், என்னைப் போன்றவர்கள் அதில் ஒரு மணலளவு, அவ்வளவு நல்ல விளக்கம். என் கருத்து: தமிழில் ப / ப (pa/ba) வேறுபாடு எழுத்தில் இல்லை. எனவே, பந்தியும் பந்தமும் வேறு ப-க்கள்...

"மருவீட்டாரு"ம் நன்றாக இருக்கிறது கெக்கே பிக்கே: என்ன இப்போ, அவர்கள் முகத்தில் மரு இருந்தால் தான் சொல்வதற்கு கடினம்:-)

இராகவன்: //எடுத்தார் என்றால் பெண் எடுத்தார். கொடுத்தார் பெண் கொடுத்தார்.
கெ.பி.: பெண்ணோடு துட்டு/சீர் "கொடுத்தாரா" இல்லையா? எங்கியோ போலாமே இந்த வழியிலே, காவல் நிலையம் வரை:-)

குமரன்: உங்கள் மேல் எனக்கு மிக மரியாதை உண்டு. உங்கள் நேரத்தை வெட்டியாக ஜயராமன் போன்றோருக்குப் பின்னூட்டம் இட்டு வீணாக்க வேண்டாம்.

என் அய்யன் பரமசிவன் ஊழிக் கூத்தாடிய போது அவர் மத்தளத்தின் ஒரு பக்கத்தில் வடமொழியும் மற்றொரு பக்கத்தில் தமிழும் பிறந்ததாகச் சொல்லிக் கேள்வி. இரண்டும் மரியாதைக்குரியவை. தமிழ் என் தாய்மொழி என்பதால், அதை வளமூட்டவே இந்தப் பதிவு/பணி என்றும் கருதுகிறேன்.

சரி, ரொம்ப கருதியாச்சு, நன்றி.
கெ.பி.

August 16, 2006 9:36 PM
--

SK said...
நேரடிப் பொருள் வரும் வண்னம் கொடுத்த சொற்களே அவை.
அப்போதே சொல்லியிருந்தேன், வேறு எளிய சொற்கள் இல்லையெனில் மட்டுமே என்றும்!
'எடுத்தார்', 'கொடுத்தார்' கேலியாக்ப் பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது என நினைக்கிறேன்.
எதை எடுத்தார், எதனைக் கொடுத்தார் என விளக்க வேண்டி வரும்!

'மருவீட்டார்' நல்ல சொல்லே!

மருமகன், மருமகள் எனும் சொற்கள் பயன்படுத்தப்படும் போது, இதையும் கொணர்வது சரிதான்!
'மனவழி உறவின் முறையை நன்கு விளக்கும் சொல் இது!
'மருவீடு' வரை வந்த நாம் இதை எப்படி மறந்தோM!!
:))

இராம. கி. ஐயா நன்கு இந்த 'பந்தம்' எனும் சொல்லை பல விதங்களில் விளக்கியிருந்த போதிலும், சிலவற்றோடு [சிலவற்றோடு மட்டுமே!] எனக்கு உடன்பாடில்லை என்பதைத் தகுதி இல்லையெனினும் சொல்லிக் கொள்கிறேன்.

வேண்டுமாயின், பிறகு விரித்து எழுதுவேன்.

August 16, 2006 10:29 PM
--

குமரன் (Kumaran) said...
ஆளுடைய பிள்ளை என்ற பெயரையும் கேட்டிருக்கிறேன் இராம.கி. ஐயா. ஆனால் அது தான் திருஞானசம்பந்தரின் இயற்பெயர் என்று தெரியாது. அதுவும் ஒரு காரணப்பெயர் என்று எண்ணியிருந்தேன். ஆண்டாள் என்பது போல் பொருள் வரும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அது ஆதிரைத் திருநாளுடன் தொடர்புடையது என்று விளக்கியுள்ளீர்கள்.

மருள்நீக்கியார் தருமசேனராகி திருநாவுக்கரசர் ஆனதும் பின்னர் சம்பந்தரால் அப்பர் என்றழைக்கப்பட்டதும் அறிவேன். அதனைத் தங்கள் விளக்கம் மீண்டும் நினைவுறுத்தியது.

திருவாதவூராரின் இயற்பெயர் தெரியவில்லை என்றும் படித்திருக்கிறேன். தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு வேறு ஏதோ ஒரு இயற்பெயர் இருப்பதாகத் தான் நினைக்கிறேன். ஆனல் நினைவிற்கு வரவில்லை.

நீங்கள் சொன்னது போல் பொதுவாக இயற்பெயரைப் பெரிதும் புழங்காத மரபு இருக்கிறது. வடமொழியிலும் இந்த மரபு இருக்கிறது என்று எண்ணுகிறேன். ஆனால் ஏன் என்பது ஆய்வுக்குரியது.

August 18, 2006 4:48 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி திரு. சத்யப்ரியன்

August 18, 2006 5:43 PM
--

குமரன் (Kumaran) said...
நம்ம பந்தம் என்றும் தொடரட்டும் குறும்பன். ஆனா உங்க உண்மைப் பெயர் என்ன என்று தெரியாமல் எப்படி பந்தத்தைத் தொடருவது? :-)

உண்மை. நிறையச் சொற்கள் வடமொழியா தமிழா என்ற சரியான புரிதல் இல்லாமல் தான் இருக்கிறது. பல முறை நான் நினைப்பதுண்டு - இந்த சொல் ஒரு சொல் வலைப்பூவில் எத்தனைத் தமிழ்ச்சொற்களை வடமொழிச்சொற்களுக்குப் பதிலாகப் பரிந்துரைக்கிறோமே, அவை உண்மையிலேயே வடமொழிச் சொற்கள் தானா? இராம.கி. ஐயாவிடம் கேட்டால் அவை எல்லாமே தமிழ் தான் என்று நிறுவிவிடுவாரா? அப்படி என்றால் அந்தச் சொற்களை ஏன் தமிழல்ல என்று சொல்ல வேண்டும் என்று எண்ணியதுண்டு. ;-) எல்லாம் குறைப்புரிதல் தான்.

August 18, 2006 5:47 PM
--

குமரன் (Kumaran) said...
கெக்கே பிக்குணி. இந்த ஒலி வேறுபாட்டால் அவை வேறு வேறு சொற்கள் என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் பல தமிழ்ச் சொற்கள் வடக்கே போகும் போது ஒலி மாற்றம் பெறுவது இயற்கை. எந்த ஒரு சொல்லும் ஒரு மொழியிலிருந்து மற்றொன்றிற்குப் போகும் போது அதே போல் பலுக்கப்படுவதில்லை (உச்சரிக்கப் படுவதில்லை). தற்போது வடமொழியில் பந்தம் என்பது பந்தியை விட வேறு ஒலியைக் கொண்டிருப்பதால் அவை வெவ்வேறு சொற்கள் என்று நிறுவ முடியுமா என்று தெரியவில்லை.

என் நேரத்தை ஜயராமன் போன்றோருக்குப் பதிலுரைத்து வீணாக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதனை மறுக்க விரும்புகிறேன். ஒருவரை ஒரு கருத்திற்காக மதிக்கலாம். ஆனால் ஒரு கருத்திற்காக வெறுக்கக் கூடாது. இப்படி நான் சொல்கிறேனே நான் யாரையும் வெறுப்பதில்லையா என்று கேட்டால் 'உண்டு. நான் வெறுப்பவர்களும் உண்டு. ஆனால் அன்பிற்குரிவர்களின் வட்டத்தைப் பெரிது படுத்த முயன்று கொண்டிருக்கிறேன்' என்று தான் சொல்ல வேண்டும்.

உண்மை. தமிழை விட வடமொழி எந்தவிதத்திலும் தாழ்ந்ததில்லை. அதே போல் வடமொழியை விட தமிழ் எந்த விதத்திலும் தாழ்ந்ததில்லை. என்னுடைய முந்தைய 'தமிழும் ஆரியமும்' பதிவைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இல்லையேல் கூடல் வலைப்பூவையோ தமிழ்மணத்தின் ஜனவர் 2006 விண்மீன் பட்டியலையோ பாருங்கள். செந்தமிழும் ஆரியமும் என் இரு கண்கள் என்றே சொல்லியிருக்கிறேன்.

August 18, 2006 5:55 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. விரித்து எழுதுங்கள்.

August 19, 2006 5:53 AM
--

Muse (# 5279076) said...
குமரன்,

வாய் என்ற சொல் இல்லையென்றால் எந்தச் சொல்லை வாய் என்பதைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள்?

முகத்திற்கான வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

சொல் ஒரு சொல் நான் விரும்பிப் படிக்கும் ப்ளாக்குகளில் ஒன்று. ராகவனுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்.

August 20, 2006 12:28 AM
--

குமரன் (Kumaran) said...
Muse,

'முகம்' என்பதனைத் தான் 'வாய்' என்ற சொல்லிற்குப் பதிலாக வடமொழியில் பயன்படுத்துகிறார்களா? அடுத்த முறை ஏதாவது வடமொழி நூலைப் படிக்கும் போது கவனிக்கிறேன். மிக்க நன்றி.

August 21, 2006 9:29 PM
--

Anonymous said...

சம்பந்தி என்னும் சொல்லிற்கு நிகரான சொல்லாக மருவீட்டினர் என்று விதந்துரைத்துள்ளார் திரு இராம.கி அவர்கள் நன்றி. சம்பந்தி எனும் சொல் மணவழி உறவைக் குறிப்பதோடு ‘சம்பந்தி’ என அழைக்கவும் பயன்படுகிறது எனவே சம்பந்தியை எவ்வாறு விளிப்பது?

March 04, 2008 10:45 AM