Tuesday, May 06, 2008

ஆத்திகம், நாத்திகம்

இந்த இரு சொற்களையும் நாம் எல்லோரும் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம். எனக்குத் தெரிந்தவரை இவை இரண்டும் வடமொழியடிப்படையில் வந்த சொற்கள். ஆஸ்திகம் - 'உண்டு' என்று சொல்லும் இயல், நாஸ்திகம் - 'இல்லை' என்று சொல்லும் இயல் என்று வடமொழியில் பொருள். அவற்றை முறையே தமிழில் ஆத்திகம் என்றும் நாத்திகம் என்றும் புழங்கிக்கொண்டிருக்கிறோம்.

இல்லை, இவையிரண்டும் தமிழ்ச் சொற்களே. இவையே வடமொழியில் ஆஸ்திகம், நாஸ்திகம் என்று ஆக்கப்பட்டது என்று ஒலி, எழுத்து முதலிய அடிப்படைகளில் இராம.கி. போன்ற தமிழறிஞர்கள் விளக்கினால் இவை தமிழென்று ஏற்றுக் கொண்டு தொடர்ந்து புழங்கலாம்.

அப்படியின்றி இவை இரண்டும் வடமொழிச் சொற்களே; தமிழில் ஆத்திகம், நாத்திகம் என்று வடமொழிச் சொற்களே புழங்குகின்றன என்றால் அவற்றிற்குத் தகுந்த தமிழ்ச் சொற்களைப் புழங்கத் தொடங்கலாம் என்று எண்ணுகிறேன்.

சில இடங்களில் நாத்திகர் என்பதற்கு 'கடவுள் மறுப்பாளர்' என்று சொல்லிப் பார்த்திருக்கிறேன். ஆஸ்திகர் என்பவர்கள் கடவுள், ஆன்மா (உயிர்?), கர்மா (வினை) இவை 'உண்டு' என்று சொல்பவர்கள். அதற்கு நேரெதிராக இவை எல்லாம் 'இல்லை' என்று சொல்பவர்கள் நாத்திகர்கள். 'கடவுள் மறுப்பாளர்' என்பது 'உண்டு' என்று சொல்லப்பட்ட மூன்றில் ஒன்றை மட்டுமே மறுப்பவர்களைக் கூறுகிறது. மூன்றையும் மறுப்பவர்கள் என்று சொல்லும்படியான சொல்லோ சொற்றொடரோ இருக்கிறதா? இல்லை இந்த 'கடவுள் மறுப்பாளர்' என்ற சொற்றொடரே மூன்றையும் மறுப்பதைக் குறிக்குமா? அதற்கு எதிராக ஆத்திகர் என்பதற்குத் தகுந்த தமிழ்ச்சொல் என்ன?

குறிப்பு: இந்தப் பதிவு ஆத்திகர்களையோ நாத்திகர்களையோ போற்றியோ இகழ்ந்தோ எந்த விதமான உ.கு., வெ.கு., நே.கு., நி.கு. வைத்தோ எழுதப்படவில்லை. ஆத்திகம், நாத்திகம் என்னும் சொற்களை ஆய்வது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம். அதனால் அந்த நோக்கத்திற்கு ஏற்ற மாதிரிப் பின்னூட்டங்களே இடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 26 ஜூலை 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

62 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...
அழகாக சொல்லாளாமே இறையிலாளர், பகுத்தறிவாளர் என்றும்
:))

July 26, 2006 7:36 PM
--

விடாதுகருப்பு said...
எதையும் பார்க்காமல் கேள்விப்படாமல் படிக்காமல், கட் அண்டு பேஸ்ட் செய்யாமல் அது எப்படிங்க சொந்தமாகவே இப்படி கட்டுரை எல்லாம் எழுதுகிறீர்கள்? பண்டாஸ்டிக்... பின்றீங்கோ!

July 26, 2006 7:50 PM
--

குமரன் (Kumaran) said...
கோவி. கண்ணன் ஐயா. ஆத்திகருக்கு 'இறையியலாளர்' சரி. ஆனால் நாத்திகருக்கு 'பகுத்தறிவாளர்' சரியான சொல் இல்லையே? நாத்திகர் என்றால் 'இல்லை' என்று சொல்பவர்கள் ஆயிற்றே? அதற்கும் பகுத்தறிவுக்கும் என்ன தொடர்பு? (நாத்திகர்களுக்கும் பகுத்தறிவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கவில்லை. பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவு நாத்திகர் ஆத்திகர் இருவருக்கும் பொது. இங்கே நான் கேட்பது 'நாத்திகர்' என்ற வடமொழிச் சொல்லுக்கு உரிய பொருளுக்கும் பகுத்தறிவு என்பதற்கும் என்ன தொடர்பு என்று தான். இந்தக் குறிப்பு கோவி.கண்ணன் ஐயாவுக்குத் தேவையில்லை. ஆனால் மற்ற யாராவது நான் சொல்ல வந்ததைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். )

July 26, 2006 7:52 PM
--

கோவி.கண்ணன் said...
நாத்திகம் பெரியாருடன் சம்பந்தப்பட்டு கடவுள் மறுப்பு என்று தவறாக பொருள்விளங்கப்பட்டு வருக்கிறது. அது ஒரு கொள்கை மறுப்பே. கடவுளைப் பற்றி பேசாதா புத்தரும், மகாவீரரும் கூட நாத்திகர்கள் தான். நாத்திகம் என்பது ஒரு மதம் ஆனால் அது தனிப்பட்ட ஒருவரின் கருத்துக்களோடு நின்றுவிடுவதில்லை. நாத்திகம் உண்மையான வாழ்வியல் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. நாத்திகம் எனபது மக்களாட்சி, ஆத்திகம் என்பது 'சர்வ' அதிகாரம் :))

July 26, 2006 7:57 PM
--

கோவி.கண்ணன் said...
நம்பிக்கை : நம்புவதும் ஒருவகை நம்பிக்கை, நம்பாததும் ஒரு நம்பிக்கைதான். பகுத்தறிவாளர் என்றால் ஆறாவது அறிவைப் பற்றி நான் பேசவில்லை, நம்பிக்கை என்ற நிலையிலிருந்து
தள்ளி நின்று நம் மீது திணிக்கப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகள் ஏற்புடையது தான என்று ஆராய்ந்து அதனடிப்படையில் பழமைவாதங்களை ஏற்றுக் கொள்ளாதவர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆத்திகம் : இறையியல்;
நாத்திகம் : வாழ்வியல்

July 26, 2006 8:06 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி கறுப்பு அண்ணா.

July 26, 2006 9:00 PM
--

செல்வன் said...
ஆஸ்தி+அகம் என்றால் அகத்தில் ஆஸ்தி(கடவுள்) நிறைந்தவன் ஆஸ்திகன்
நாஸ்தி+அகம் என்றால் நாசமடையும் அகத்தை கொண்டவன் நாத்திகன்

நாத்திகனை மோசமானவனாக நினைத்த காலகட்டத்தில் உருவான வார்த்தைகளின் பொருள் இதுதான்.

ஆங்கிலத்தில் infidel என்ற வார்த்தையை நாத்திகரை குறிக்க பயன்படுத்துகின்றனர்.இறைமறுப்பாளன்என்ற சொற்றொடரே அதற்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்பு என தோன்றுகிறது

July 26, 2006 9:01 PM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் ஐயா. கடவுளைப் பற்றியே பேசாத புத்தரும், மகாவீரரும் நாத்திகர்களாகத் தான் பல பழைய நூல்களில் குறிப்பிடப்படுகிறார்கள். ஆனால் அவர்களும் ஆன்மா, வினைப்பயன் போன்றவற்றை மறுக்கவில்லை.

நீங்கள் நாத்திகம் என்பதற்கு 'உண்மையான வாழ்வியல் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது' என்று சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு ஆத்திகரும் அவரவர் சமயம் 'உண்மையான வாழ்வியல் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது' என்று சொல்லுவர். அதனால் அந்த வரையறையும் நாத்திகம், ஆத்திகம் இரண்டிற்கும் பொது.

நாத்திகம் என்பதும் சர்வாதிகாரமாக மாறலாம். ஆத்திகமும் மக்களாட்சியாக மாறலாம். வரலாற்றில் எடுத்துக்காட்டுகள் உண்டு. 'சர்வ' அதிகாரம் என்று இறைவனுக்கே எல்லா புகழும் என்பதனை நீங்கள் குறிப்பதாக இருந்தால் அது ஆத்திகத்திற்குப் பொருத்தமே.

July 26, 2006 9:05 PM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் கோவி.கண்ணன் ஐயா. நம்புவதும் ஒரு வகை நம்பிக்கை. நம்பாததும் ஒரு நம்பிக்கைதான். உண்டு என்று இதுவரை நம்பாதவரை நம்பவைக்க முடியவில்லை. இல்லை என்று இதுவரை நம்புபவரை ஏற்றுக் கொள்ள வைக்க முடியவில்லை. அதனால் இரண்டுமே நம்பிக்கை தான்.

//நம்பிக்கை என்ற நிலையிலிருந்து
தள்ளி நின்று நம் மீது திணிக்கப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகள் ஏற்புடையது தான என்று ஆராய்ந்து அதனடிப்படையில் பழமைவாதங்களை ஏற்றுக் கொள்ளாதவர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்.
//

ஆத்திகர்களிலும் இது உண்டே. அது தானே இத்தனை விதமான சமயங்கள் தோன்றக் காரணம்.

ஆத்திகம்: இறையியல்.
ஆத்திகம், நாத்திகம்: வாழ்வியல்.

July 26, 2006 9:08 PM
--

குமரன் (Kumaran) said...
செல்வன். நீங்கள் சொல்லும் பொருள் தவறு. ஆஸ்திக: என்பதனை எப்படி ஆஸ்தி + அகம் என்று பிரிப்பீர்கள்? அப்படியே நாஸ்திக: என்பதற்கும் நாஸ்தி + அகம் என்று எப்படி பிரிப்பீர்கள்? அப்படி பிரிக்க முடியாது என்னும் போது உங்களின் பொருளும் அந்த சொற்களுக்கு வராது. ஆஸ்திக: என்றால் 'உண்டு' என்பவன்; கடவுள் நிறைந்தவன் என்று பொருள் இல்லை. அதே போல் நாஸ்திக: என்றால் 'இல்லை' என்பவன்; நாசமடையும் அகத்தை (அகந்தையை) உடையவன் என்று பொருள் இல்லை. அப்படி எங்காவது சொல்லியிருந்தால் அது கட்டாயம் இப்போது பலர் முத்திரை குத்துகிறார்களே; அதைப் போல் யாராவது செய்திருக்கிறார்கள் என்று தான் பொருள். நாத்திகனை மோசமானவனாக நினைத்த காலகட்டத்தில் இந்தச் சொற்களுக்கு இப்படி தவறான பொருள் சொல்லியிருக்கலாம்.

infidel என்பதற்கு வேண்டுமானால் 'இறை மறுப்பாளர்' என்பது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் நாத்திகர் என்பதற்கு அது பொருத்தமா என்று தெரியவில்லை.

July 26, 2006 9:13 PM
--

Merkondar said...
கோவி.கண்ணன்
பகுத்தறிவாளர் என்றால் நாத்திகர்களா? ஆத்திகர்களுக்கு பகுத்து அறியத்தெரியாதா? சிலர் மெய்யன்பர்கள் என்பார்கள் இறைவனை வணங்குபவர்கள் ஆஸ்த்தியை(சொத்தை) அடைவான் ஆஸ்த்திகன்.
நாஸ்த்திகன் நாஸ்த்தியை(சொத்தை இழப்பான்)

July 26, 2006 9:14 PM
--

குமரன் (Kumaran) said...
இந்தப் பதிவை ஆத்திகர் vs. நாத்திகர் என்று கொண்டு செல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். இதுவரை ஆத்திகர், நாத்திகர் என்பதற்கான வரையறைகளே வந்திருக்கின்றன. ஆனால் ஆத்திகம், நாத்திகம் என்பதற்கு நேரான தமிழ்ச்சொற்களைத் தேடுகிறது இந்தப் பதிவு.

July 26, 2006 9:15 PM
--

கோவி.கண்ணன் said...
இயல்பாளர், இறையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆத்திகர் தங்கள் கருத்துக்களை நம்பாதவர்களை பழித்துக் கூறவே நாத்திகர் என்ற எதிர்பொருள்படும் படி அழைத்தனர். உண்மை அதுவன்று. ஒரு மதத்துக் கடவுளை நம்புபவர் வேறொரு மதத்துக் கடவுளை நம்பவில்லை என்றால் அவரை என்ன சொல்வது ?

July 26, 2006 10:26 PM
--

கைப்புள்ள said...
உள்ளேன் ஐயா.

July 26, 2006 10:55 PM
--

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. எப்படி நாத்திகர் என்ற சொல் ஆத்திகரின் பார்வையிலிருந்து ஆத்திகரின் கருத்துகளை நம்பாதவர்களைப் பழித்துக் கூறச் சொல்லப்பட்டதாகச் சொல்கிறீர்களோ அதே போல் நாத்திகருக்கு நீங்கள் இதுவரை சொன்ன சொற்கள் எல்லாமே இருக்கிறத் என்பதைப் பாருங்கள். நாத்திகர் இயல்பாளர் என்று சொன்னால் ஆத்திகர் இயல்பில்லாதவர் என்று பொருளா? அவர்களும் இயல்பாளர்கள் தானே? இப்படி நீங்கள் நாத்திகருக்குச் சொல்லும் சொல் ஒவ்வொன்றும் ஆத்திகருக்கும் பொருந்துகிறதே?

பழித்துக் கூறச் சொல்லப்பட்ட சொல் என்றால் அதனை பெருமையான சொல்லாக இன்று நிறைய பேர் பயன்படுத்துகிறார்களே?! புரியாமல் செய்கிறார்களா?

ஒரு மதத்துக் கடவுளை நம்புபவர் வேறொரு மதத்துக் கடவுளை நம்பவில்லை என்றால் அவரை வெளி நாட்டில் infidel என்று சொல்வார்கள். நம் நாட்டில் அதற்கு ஒரு சொல் இருப்பதாகத் தெரியவில்லை. மாற்றாக எந்த மதக் கடவுளையும் நம்பாமல், கடவுளைப் பற்றியே பேசாமல் இருப்பவரை 'நாஸ்திகன்' என்று சொல்லியிருக்கிறார்கள். மற்ற மதத்துக் கடவுளை நம்புபவரை 'நாஸ்திகன்' என்று சொன்னதில்லை.

July 28, 2006 12:47 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி கைப்புள்ள.

July 28, 2006 12:47 AM
--

கோவி.கண்ணன் said...
//நாத்திகர் இயல்பாளர் என்று சொன்னால் ஆத்திகர் இயல்பில்லாதவர் என்று பொருளா?//

//நாத்திகர் இயல்பாளர் என்று சொன்னால் ஆத்திகர் இயல்பில்லாதவர் என்று பொருளா? //

குமரன் நான் சொன்ன பொருள்களெல்லாம் ஆஸ்திகர் என்பதற்கு எதிர்பொருளாக சொல்லவில்லை, மாறாக நாஸ்திகம் என்பதற்கு ஏற்றப் பொருளாகத் தான் சொன்னேன். நீங்கள் ஆஸ்திகம் நாத்திகமும் நேர் எதிர் என்றுகருதி நான் சொன்னதற்கெல்லாம் எதிர்பொருளை கற்பித்துக் கொள்கிறீர்கள். அது தவறு, ஒன்றை மாற்றிச் செல்வது இனம் பிரித்துக் காட்டுவதற்க்காகத் தான் ஏற்றத் தாழ்விற்காக அல்ல. நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் கீதையில் நாத்திகமும் இருக்கிறது :))

July 28, 2006 1:00 AM
--

சந்திப்பு said...
குமரன் ஆத்திகமோ? நாத்திகமோ? வடமொழியோ, தென்மொழியோ, தமிழ்மொழியோ இது மக்களுக்கு புரியும் மொழியாக இருக்கிறதா! அவ்வளவுதான். அதுதான் தமிழ். அதை விட்டுவிட்டு இப்போது இதனுடைய ரிஷி மூலம் நதி மூலம் பார்ப்பது எதற்கு? எந்த மொழி மற்ற மொழிகளை தனதாக்கிக் கொள்கிறதோ அது வளரும்! இல்லையென்றால் வீழும். அதற்கு லத்தீன், ஈப்ரூ, கிரேக்கம் உதாரணம். ஆங்கிலம் உலகிலேயே அதிகமான மொழிகளை தனதாக்கிக்கொண்ட மொழி... ஆத்திகம் - நாத்திகம் என்று தலைப்பை பார்த்ததுமே சரி விளையாடலாம்னு வந்தா?....

July 28, 2006 1:06 AM
--

SK said...
இதை மிகவும் போட்டுக் குழப்ப வேண்டாம், திசை திரும்பும், திருப்பி விடப்படும் அபாயம் இருப்பதால் என்று சொல்கிறேன், குமரன்.

கனியிருப்பக் காய் கவர்வானேன்?

உண்டு, இல்லை என அழகாகப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள்!
அப்படியே அதை ஒட்டியே இருந்து விட்டுப் போகட்டுமே!

ஆத்திகம் என்றால் இருப்பது.
நாத்திகம் என்றால் இல்லாதது.

ஆத்திகர் = இருப்பவர். எந்தக் கடவுளரையும் நம்பாமல் ஆனால் ஒரு பரம்பொருள் இருக்கிறது என நம்புபவரும் ஆத்திகரே!
நாத்திகர் = இல்லாதவர். அப்படி எதுவும் இல்லை எனச் சொல்பவர்.

இப்படிப் பிரித்து அழைத்தால், கடவுள், ஆன்மா, வினை இவை எல்லாவற்றுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

July 28, 2006 1:13 AM
--

G.Ragavan said...
ஆத்திகமும் நாத்திகமும் மூலத்தில் தமிழில்லை என்று நினைக்கிறேன்.

ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் உள்ள வேறுபாடு இறைவழிபாடு. அதாவது இறைநம்பிக்கையாளர்.

இறையியலார், இறையிலார் என்று வேண்டுமானல் ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் தமிழ்ப்படுத்தலாம்.

இறையியலைச் சார்ந்தவர்கள் ஆத்திகர்கள். இறை என்பது இலார் என்று நாத்திகர்கள்.

July 28, 2006 1:27 AM
--

செந்தழல் ரவி said...
இறையில்லாளர் என்று சொல்லிவுடுங்க சார் பேசாம..

July 28, 2006 2:42 AM
--

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. உங்கள் விளக்கத்திற்கு நன்றி. ஆனால் நடைமுறையில் ஆஸ்திகமும் நாஸ்திகமும் நேர் எதிரான கொள்கைகள் என்று தானே இருக்கிறது. அதனால் அந்த மாதிரி விளக்கம் கொள்கிறேனோ என்னவோ? நீங்கள் சொன்ன முறையில் பார்த்தால் சரியே. கோவி.கண்ணன் கவிஞர் என்று சொன்னால் அது எஸ்.கே. கவிஞர் இல்லை என்று பொருள் படாது தான். :-) (யாருப்பா அது. கோவி.கண்ணனும் எஸ்.கே.யும் நல்ல நண்பர்கள். அவர் இருவரும் நேர் எதிர் மாதிரி சொல்லி நாரதர் வேலை பாக்குறதுன்னு சத்தம் போடுறது?)

ஆமாம் ஐயா. நீங்கள் கீதையும் நாத்திகமும் என்று சில கருத்துகள் சொன்னதும் அதற்கு நான் தனிப்பதிவாகப் போட்டு விளக்கம் சொல்ல வேண்டும் என்று சொன்னதும் நினைவில் இருக்கிறது. விரைவில் அந்தத் தலைப்பிலும் பேசவேண்டும். கற்றுக் கொள்ளும் நோக்கத்தில் தான்.

July 28, 2006 7:02 AM
--

குமரன் (Kumaran) said...
சந்திப்பு, விளையாடலாம்னு வந்த உங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததற்கு மன்னிக்கவும். :-)

மற்ற மொழிச் சொற்களைத் தனதாக்கிக் கொள்வதில் தடையேதும் இல்லை. இந்த வலைப்பூவின் நோக்கம் இழந்தத் தமிழ்ச்சொற்களை மீட்பதும் புதிய கலைச்சொற்களை ஏற்பதும் அவற்றை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வருவதும் தான். அதனால் மற்ற மொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்திப் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் அதிகமாக வேற்று மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்தத் தொடங்கினால் ஒரு முறை மணிப்ரவாளத்திற்குச் சென்று மீண்டு வந்ததைப் போன்றும் இப்போது மிகுதியாகப் புழங்கும் தங்க்லீஷ் போன்றும் தமிழ்மொழியும் மாறிவிடும். அதனால் முடிந்த வரை தனித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவேண்டும். புதிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும் - அங்கு தான் நீங்கள் சொல்லும் வளர்ச்சி வருகிறது. காப்பி என்பதற்கு பல தமிழ்ச்சொற்களைச் சொன்னார்கள். ஆனால் எதுவுமே மக்கள் நடுவில் புழக்கத்தில் வரவில்லை. அதனால் அங்கே காப்பி என்றே பயன்படுத்தலாம். ஆனால் கணினி என்பது புழக்கத்தில் வந்துவிட்டதல்லவா? அது போன்ற புதியச் சொற்களைச் சொன்னால் நீங்கள் சொல்லும் வளர்ச்சி கட்டாயம் இருக்கும்.

July 28, 2006 7:08 AM
--

பொன்ஸ்~~Poorna said...
//ஆனால் நடைமுறையில் ஆஸ்திகமும் நாஸ்திகமும் நேர் எதிரான கொள்கைகள் என்று தானே இருக்கிறது//
இங்கு தான் உங்கள் புரிதல் மாறுகிறது என்று தோன்றுகிறது குமரன். நாஸ்திகர் கடவுள், மதம் அது சார்ந்த சடங்குகளை மட்டும் தான் மறுக்கிறார்கள். ஆத்திகர் கடவுளை நம்புகின்றனர். தீவிர ஆத்திகருக்கும், தீவிர நாத்திகருக்கும் மனிதம் சம்பந்தப்பட்ட மற்ற கொள்கைகளில் ஒற்றுமை இருப்பதைப் பார்க்கலாம்..

எஸ்கேவின் ஒரு பதிவில் சொன்னது போல், வழியோர மூதாட்டியின் சிரிப்பு அவருக்கு முருகனாய்த் தெரிந்தது. நாத்திகருக்கு, அந்தச் சிரிப்பு ஒரு மன அமைதி தந்து அதன் மூலம் பிரச்சனையின் தீவிரத்தைக் குறைத்திருக்கும். அவ்வளவு தான்.

ஆக, நாத்திகருக்கும் ஆத்திகருக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் இருப்பதாக நீங்கள் நினைப்பதே ஒப்புக் கொள்ளக் கூடியதாக இல்லை..

ஆகக் கூடி நாத்திகர் ஆத்திகர் என்போர் வெறும் இறை என்னும் தளத்தில் தான் பிரிகிறார்கள். அந்த விதத்தில் ராகவன் சொன்ன இறையியலார், இறையிலார் என்பது சரியாகத் தோன்றுகிறது

July 28, 2006 10:30 PM
--

கோவி.கண்ணன் said...
//யாருப்பா அது. கோவி.கண்ணனும் எஸ்.கே.யும் நல்ல நண்பர்கள். அவர் இருவரும் நேர் எதிர் மாதிரி சொல்லி நாரதர் வேலை பாக்குறதுன்னு சத்தம் போடுறது?//
குமரன் அவர்களே !
ஆத்திகரும் நாத்திகரும் ஒரு மணி நேரம் தொலைபேசினோம். நாரதரின் வேலை நன்மையில் முடிந்திருக்கிறது.
:))))))))))))))))))))))))

July 29, 2006 7:09 AM
--

kekkE PikkuNi #25511630 said...
குமரன்,
அஸ்தி என்பது வடமொழியில் கைப்புள்ள சொன்னது - "உள்ளது", இருப்பது. ததாஸ்து ("அப்படியே ஆகட்டும்) வில் உள்ள அஸ்து அது தான். ("அஸ்து போடாதே" என்பது பார்ப்பன குல வழக்கு - "வாயை வச்சிட்டு ஏதாவது சொல்லாதே")

sk சொன்ன "இருப்பவர்", "இல்லாதவர்", ஹிஹி, வம்பில் முடியும் (இந்த மாதிரி நான் பெயர் வைத்துக் கொண்டு இப்படி பின்னூட்டம் இடவில்லை என்றால் நன்றாக இருக்காது:-)

இறையியல் வாழ்வியலை தன்னகத்தே கொண்டது என நம்புகிறேன். இறையியலாளர் பகுத்தறிவு கொண்டவராயும் இருக்கக் "கூடும்!" (யோவ், யாருய்யா, எனக்கு பகுத்தறிவு இல்ல-னு சொன்னது?) அதே போல், "இல்லை" என்று தீவிரமாக நம்புவோரும், "நம்பிக்கை" கொண்டவரே! இறையியலாளர் என்று சொல்வது நன்றாக இருக்கிறது. (ஹிஹி, நாத்திகரை "எப்படி", "என்ன பேர் சொல்லி" கூப்பிடலாம்? எல்லாம் நம்ம நேரம்!) இறையில்லார்? அவர்கள் இல்லத்திலும் இறை கட்டாயம் இருப்பார் - நம்பிக்கை இருக்கும் வரை:-))

வம்புக்கு: என் இறை அறிவிலும் அன்பிலும் உறைகிறது. நாத்திகர் பாலும் என்னிடம் அன்புள்ளது; அப்போது அவர்களும் இறையின் அன்புக்குட்பட்டவர்களே.
வம்புக்கு 2: ஆத்திகம், நாத்திகம் என்பது படித்தவர் மத்தியில் புழக்கத்தில் உள்ளது. இதற்கு மாற்று சொல் தேவை தானா?

இப்படிக்கு,
இறையியலாளி.

July 29, 2006 11:45 PM
--

வெற்றி said...
குமரன்,
நல்ல பதிவு.
ஆத்திகம்/நாத்திகம் தமிழ்ச் சொற்கள் என்றே இதுவரை எண்ணியிருந்தேன்.

//அழகாக சொல்லாளாமே இறையிலாளர், பகுத்தறிவாளர் என்றும் //
கோவி.கண்ணன் அவர்கள் கூறுவது போல, நாத்திகர்களுக்கான இணையான தமிழ்ச்சொல் பகுத்தறிவாளர்கள் என்பது சரியாகப்படவில்லை. பகுத்தறிவாளர்கள் என்பது மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள். மூட நம்பிக்கையை ஏற்கவில்லை என்பதனால் அவர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள் என்று பொருளல்ல. நானும் ஒரு பகுத்தறிவாளன் எனத்தான் கருதுகிறேன். அதேநேரம் நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஏன் மதிப்பிற்குரிய அண்ணன் விடாது கறுப்பு அவர்கள் கூட , கடவுள் நம்பிக்கை உள்ள பகுத்தறிவாளர்தானே!
ஆகவே பகுத்தறிவாளர் = நாத்திகர் என்பது சரியாகப்படவில்லை.

July 30, 2006 12:26 AM
--

கோவி.கண்ணன் [GK] said...
நாத்திகர் கெடுதலான விசயங்களை சொல்லியிருக்கிறார்களா ? இல்லை கண்டுகொண்டு சொல்லியிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் நாத்திகம் பெரியாரிசம் என்று தப்பாக புரிந்து கொள்ளப்பட்டதால் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
மெய்பொருள் காண்பது அறிவு என்பது நாத்திக நிலை அதுவே மெய்பொருள் உணர்வது அறிவு என்பது போல் ஆத்திகத்தில் இருக்கும்.

மெய்பொருள் ஒன்றுதான். நாத்திகர் அறிவு என்ற பொருளில் சொல்கிறார்கள். ஆத்திகர்கள் இறைவன் என்ற சொல்லாக காண்கிறார்கள்

நான் நாத்தினும் அல்ல ஆத்திகனும் அல்ல இரண்டையும் சமமாக பார்க்கிறேன். புத்தனும் ஒன்று தான் சிவ சித்தனும் ஒன்றுதான். ஏதோ ஒரு கொள்கையை பிடித்துக் கொண்டிருப்பதால் மற்றவை தவறானவையாக ஒரு தோற்றம் வருவதுதான் அவைகள் குறித்த ஏற்பும் வெறுப்பும்.

July 30, 2006 9:22 AM
--

குறும்பன் said...
/ஒரு மதத்துக் கடவுளை நம்புபவர் வேறொரு மதத்துக் கடவுளை நம்பவில்லை என்றால் அவரை என்ன சொல்வது/ - இறையாளர்தான். இறைவனை நம்புபவர் இறையாளர், எந்த இறைவனாக இருந்தாலும்.

இறையாளர் = இறையியலார் சரியா?

இராகவன், பொன்ஸ் சொல்லறது சரியா வரும் போல இருக்கு.

நாத்திகருக்கு இறையிலார் என்பதே சரி என்பது என் கருத்து.

சீக்கிரம் முடிவுக்கு வாங்கபா.

July 30, 2006 9:59 AM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் எஸ்.கே. இந்தத் தலைப்பு திசை திரும்பும், திருப்பி விடப்படும் அபாயம் இருப்பதால் தான் பதிவிலேயே குறிப்பு போட்டேன். நல்ல வேளை இதுவரை நடந்த விவாதமும் சுமுகமாகவே நடந்தது. 'யாரும்' நான் பின்னூட்டங்கள் பெறுவதற்காக இந்தப் பதிவைப் போட்டதாகக் குற்றம் சுமத்தவில்லை. ;-)

ஆத்திகர் - எந்தக் கடவுளரையும் நம்பாமல் ஆனால் ஒரு பரம்பொருள் இருக்கிறது என்று நம்புபவரும் ஆத்திகரே!

நாத்திகர் - அப்படி மனிதனுக்கு மிஞ்சிய சக்தி, மறுபிறப்பு போன்றவை 'இல்லை' என்பவர்கள்.

சரி தான்.

July 30, 2006 11:07 AM
--

குமரன் (Kumaran) said...
இராகவன், சுருக்கமாக அழகாகச் சொல்லிவிட்டீர்கள். நீங்கள் சொன்ன இந்த இரு சொற்களையும் இதுவரை பின்னூட்டம் இட்டவர்களில் பெரும்பாலானோரும் நானும் ஒத்துக் கொள்வதால் இந்தச் சொற்களையே புழங்கலாம் என்று எண்ணுகிறேன். இவை புழங்குவதால் ஆத்திகம், நாத்திகம் என்ற சொற்களைப் புறந்தள்ள வேண்டுமா என்றால் தேவையில்லை என்று தான் தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள்?

July 30, 2006 11:09 AM
--

குமரன் (Kumaran) said...
செந்தழல் ரவி. இறையில்லாளர்ன்னு சொல்ல முடியாதுங்க. இறைவனை இல்லாளாக (மனைவியாக) உடையவர் என்ற பொருளும் அது தருகிறது. இறையிலார் நன்றாக இருக்கிறது - பதியிலார் என்ற சொல்லைப் போல். :-)

July 30, 2006 11:10 AM
--

குமரன் (Kumaran) said...
இல்லை பொன்ஸ். என் புரிதலும் நீங்கள் சொல்வது போல் தான் இருக்கிறது. எதுவும் மாறவில்லை. 'நாஸ்திகர் கடவுள், மதம், அது சார்ந்த சடங்குகளை மட்டும் தான் மறுக்கிறார்கள். ஆத்திகர் கடவுளை நம்புகின்றார். தீவிர ஆத்திகருக்கும், தீவிர நாத்திகருக்கும் மனிதம் சம்பந்தப்பட்ட மற்ற கொள்கைகளில் ஒற்றுமை இருப்பதைப் பார்க்கலாம்' - இதுவே என் கருத்தும் கூட. அதனால் தான் நாத்திகருக்குச் சொல்லப்பட்டச் சொற்கள் எல்லாம் ஆத்திகருக்கும் பொருந்துகின்றன என்று சொன்னேன்.

நான் சொன்ன கொள்கை வேறுபாடுகள் கடவுள் உண்டு இல்லை என்பதில் உள்ள வேறுபாடுகள். அதனை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். மற்றபடி அவர்கள் நடுவில் வேறுபாடுகள் இல்லை என்பதே என் கருத்தும்.

இறையியலார், இறையிலார் - எனக்கும் ஏற்புடித்தானச் சொற்கள்.

July 30, 2006 11:17 AM
--

பொன்ஸ்~~Poorna said...
//'யாரும்' நான் பின்னூட்டங்கள் பெறுவதற்காக இந்தப் பதிவைப் போட்டதாகக் குற்றம் சுமத்தவில்லை.//
எல்லாம் பயம் தான் குமரன்.. உங்கள் பதிவில் அந்த மாதிரி (உண்மைக்) கருத்துகளைச் சொன்னால், பிற இடங்களில் நான் என்னவோ ஆப்படித்துவிட்டதான ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறதே..

எனவே இனிமேல் மனதில் பட்டதை அப்படியே சொல்லாமல் அடக்கி வாசிப்பதாக முடிவு.. உங்களுக்கும் சங்கடம் வேண்டாம் பாருங்கள்.. அதான்

July 30, 2006 11:17 AM
--

கோவி.கண்ணன் [GK] said...
இறையாளார், இறையிலார் ... நன்றாக இருக்கிறது.

வழக்கமாக ஆஸ்திகர்கள் சேர்ந்து நாத்திகத்துக்கு பொருள் கூறுகிறேன் என்று நாத்திகத்துக்கு இறையை இரை ஆக்குகிறீர்கள். ஆண்டவன் தான் காப்பத்தனும் உங்களை :))

July 30, 2006 11:18 AM
--

குமரன் (Kumaran) said...
ஜிகே. இப்பத் தான் நீங்களும் எஸ்கேயும் தொலைபேசுகிறீர்களா? வியப்பாக இருக்கிறது. நீங்கள் கூடிக் குலாவுவதைப் பார்த்தால் எப்பவோ நீங்கள் தொலைப்பேசி நண்பர்களாய் இருப்பீர்கள் என்று நினைத்தேன். (யாருப்பா அது குமரன் ஒளவியத்தால இப்படிப் பேசறார்ன்னு சொல்றது. அந்தப் பச்சை நிறப் பேயை பத்தி எனக்கு எதுவும் தெரியாது ஆமாம்). :-)

July 30, 2006 11:19 AM
--

கோவி.கண்ணன் [GK] said...
//ஜிகே. இப்பத் தான் நீங்களும் எஸ்கேயும் தொலைபேசுகிறீர்களா? வியப்பாக இருக்கிறது. நீங்கள் கூடிக் குலாவுவதைப் பார்த்தால் எப்பவோ நீங்கள் தொலைப்பேசி நண்பர்களாய் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.//

வழக்கமா ஐயா போடம, ஜிகே ன்னு போட்டதுக்கு சந்தோசம் குமரன்.

நான் வலைப்பதிய ஆரம்பித்தது ஏப்ரல்
முதலே (முதல் நாள் அல்ல :)). இருவருக்கும் கொள்கை வேறுபாடுகள் உண்டு. இது மோதலில் ஏற்பட்ட நட்பு.

July 30, 2006 11:30 AM
--

கோவி.கண்ணன் [GK] said...
//இறையை இரை ஆக்குகிறீர்கள். //
இறையை இரை ஆக்குகிறீர்கள் ...அதாவது இறையிலர் என்று சொல்வதைச் சொன்னேன்

July 30, 2006 11:38 AM
--

SK said...
//
இவை புழங்குவதால் ஆத்திகம், நாத்திகம் என்ற சொற்களைப் புறந்தள்ள வேண்டுமா என்றால் தேவையில்லை என்று தான் தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள்?//

ஆஹா...! இதுதான் விசயம்முன்னு தெரியாமப் போச்சே!

நமக்கு ஆப்பு வைக்கத்தான் இந்தப் பதிவை குமரன் எழுதினார்னு தெரியாமப் போச்சே!

யப்பா! நா உஙளுக்கெல்லம் என்னப்பா கெடுதல் பண்ணினேன்?

ஏம்ப்பா என்னயைப் போட்டு இந்தப்....பின்னு பின்றீங்க?

"ஆத்திகத்தை" புறந்தள்றதுக்கா இந்தப் பதிவு......?

இதுல ஒபீனியன் வேர கேக்குறீகளா?

நல்லாருங்க சாமி..... நல்லாருங்க!!

இப்பத்தான புரியுது இந்த விசயம் நமக்கு!

இது தெரியமத்தான் இத்தன நேரம் நா இங்கிட்டு வெளையாடிக்கிட்டு இருக்கறேனா?

வேணும்யா எனக்கு வேணும்!

எனக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்!

ஒண்ணும் பேசப்படாது!

ஆரும் ஒண்ணும் பேசப்படாது!

நா வர்றேன்!

[நன்றி வடிவேலு!]

July 30, 2006 1:14 PM
--

அழகு said...
ஆஸ்திகர்/ஆத்திகர், நாஸ்திகர்/நாத்திகர் அனைத்தும் தமிழ்ச் சொற்கள் அல்ல.

இறைநம்பிக்கையைச் சொத்தாக (ஆஸ்த்) ஏற்பவர் ஆத்திகர் எனவும் அதையே ஒழித்து (நாஸ்த்) மறுப்பவர் நாத்திகர் எனவும் கொள்வதே பொருத்தமாய் வருகிறது.

எனவே,

(இறையை) ஏற்பவர் மற்றும் மறுப்பவர்; அல்லது கொள்ளுபவர் மற்றும் தள்ளுபவர் என்பவற்றை முறையே ஆஸ்த்துக்கும் நாஸ்த்துக்கும் கொள்ளலாமா?

July 30, 2006 4:24 PM
--

manu said...
குமரன்,
அகம்+கடவுள்
அகம்+கடவுள் இல்லை.
இறை ஏற்பார்
இறை மறுப்பார்.
அவ்வளவுதான் என்று நினைக்கிறேன்

July 30, 2006 10:17 PM
--

kekkE PikkuNi #25511630 said...
பொன்ஸ் பின்னூட்டம் இப்ப தான் பாக்கறேன். கிரேட்டு மைண்டுஸ் என்பதால் நாங்கள் ஒரே மாதிரி திங்கிறோம்னு நினைக்கிறேன் (இறையிலார்/இறையில்லார்) என்ன இப்போ, நான் அப்ப்பளம்னு அழுத்திச் சொல்லிட்டேன்:-)
பொன்ஸு, பரவாயில்லை, ஒடஞ்ச அப்பளமும் திங்கலாம்.

அஸ்தி-ன்னா இருக்கிறதுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கறிங்க, இருக்கட்டும், ஒரு அஸ்து - இல்ல, இல்ல, அச்சு போட்டுட்டு போறேன்.

ந + அஸ்தி (இல்லை) = நாஸ்தி:-) நம்புங்கப்பா, இதையாவது!

குமரன், உங்களுக்கும் SKக்கும் தகராறுன்னா இப்பிடியா?! SK, உங்களை நான் ஒரு முறை கலாய்த்ததால், இந்த முறை நான் உங்களுக்கு ஆதரவு தருகிறேன்.

July 30, 2006 10:49 PM
--

ஓகை said...
என் கருத்து:1. ஆத்திகம் மற்றும் நாத்திகம் சொற்களை அப்படியே புழங்கலாம்

2. ராகவன் சொல்லிய இறையியலார், இறையிலார் என்பது சிறந்த மொழி பெயர்ப்பாக தெரிகிறது.

3.என் பரிந்துரை:
இறையேற்பார், இறையேற்கார்.

July 30, 2006 11:04 PM
--

குமரன் (Kumaran) said...
கெக்கே பிக்குணி, பதில் சொல்லத் தாமதம் ஆகிவிட்டது. மன்னிக்கவும்.

உண்மை. அஸ்தி என்பதும் அஸ்து என்பதும் ஏறக்குறைய ஒன்றே தான்.

இறையில்லார் என்பது சரியாகப் படவில்லை. அதனால் இறையிலார் சரி என்று ஏற்றுக் கொண்டேன்.

இறையியலார் எல்லாரும் பகுத்தறிவு உள்ளவர்களே. எதனைப் பகுத்தறிவு என்று வரையறுப்பதில் தான் எல்லாமே இருக்கிறது. :-) நாத்திகர்கள் தங்களைப் பகுத்தறிவாளர் என்று அழைத்துக் கொண்டதால் இறையியலார் பகுத்தறிவில்லாதவர் என்றாகிவிடுமா? :-)

உண்மை. இறையிலார் இல்லத்திலும் இறை உள்ளார் - அதனால் அவர்களையும் இறை இல்லார் (இறை இருக்கும் இல்லத்தவர்) என்று அழைக்கலாம் தான். :-)

வம்புக்கு 1க்கு பதில்: இறைவன் அன்பும் அறிவும் வடிவானவன். சரி. நாத்திகர்களிடமும் அன்பு உள்ளது. அறிவும் உள்ளது. அதனால் அவர்களிடமும் இறை உள்ளான்.

வம்புக்கு 2க்கு பதில்: மாற்றுச் சொற்கள் தேவையா என்பது அவரவர் மனநிலை பொறுத்தது. தமிழ் இலக்கணம் திசைச் சொற்களை ஏற்கிறது. அதனால் ஆத்திகர், நாத்திகர் என்ற சொற்களையே திசைச் சொற்களாக ஏற்றுக் கொண்டு புழங்க விரும்பினால் தடையில்லை.

August 23, 2006 4:22 PM
--

குமரன் (Kumaran) said...
வெற்றி. பதில் சொல்லத் தாமதமானதற்கு மன்னிக்கவும். வேலை அதிகம்.

இப்போதும் ஆத்திகம், நாத்திகம் என்பவற்றைத் திசைச் சொற்கள் என்று சொல்லிப் புழங்கலாம். இல்லை தமிழ்ச்சொற்களையே புழங்க விருப்பமென்றால் இறையியலார், இறையிலார் என்ற சொற்களைப் புழங்கலாம்.

August 23, 2006 4:26 PM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் கோவி.கண்ணன் ஐயா. ஒரு கொள்கையைப் பிடித்துக் கொண்டிருப்பதால் மற்றவை தவறாகத் தோற்றம் தரும் தான். அதனாலேயே விருப்பும் வெறுப்பும் வரும் தான்.

August 23, 2006 4:28 PM
--

குமரன் (Kumaran) said...
குறும்பன். முடிவுக்கு வந்தாச்சுப்பா. இறையியலார், இறையிலார்.

August 23, 2006 4:28 PM
--

குமரன் (Kumaran) said...
ஆகா பொன்ஸ். ரொம்ப வருத்தப்பட்டு எழுதியிருக்கீங்களே.

August 23, 2006 4:29 PM
--

குமரன் (Kumaran) said...
நாத்திகத்திற்கு இறையை இரையாக்குகிறோமா? வழக்கம் போலா? சரிதான் கோவி.கண்ணன் ஐயா. :-)

August 23, 2006 4:30 PM
--

குமரன் (Kumaran) said...
//வழக்கமா ஐயா போடம, ஜிகே ன்னு போட்டதுக்கு சந்தோசம் குமரன்.
//

ரொம்ப மகிழாதீங்க (சந்தோஷம் - மகிழ்ச்சி) கோவி.கண்ணன் ஐயா. எஸ்கேன்னு சொன்னதால அதுக்கு ஏத்தமாதிரி ஜிகேன்னு சொன்னேன். அம்புட்டுத் தான். ஐயா திரும்ப வந்தாச்சு பாருங்க. :-)

எல்லாருக்கும் கொள்கை வேறுபாடுகள் உண்டு ஐயா. வலைப்பதிவுலகில் இவங்க எல்லாம் ஒரே குழுன்னு யாரையும் சொல்ல முடியாது. எஸ்கேவுடன் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. இராகவனிடமும் உண்டு. இதனை நானும் அவர்களும் அறிவார்கள். அதே போல் தான் நீங்களும். இல்லையா?

August 23, 2006 4:33 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. உங்கள் புலம்பல் அருமை. :)

August 23, 2006 4:34 PM
--

குமரன் (Kumaran) said...
அழகு. இறைவனை ஏற்பவர் ஆத்திகர். அதனை மறுப்பவர் நாத்திகர். சரி. ஆனால் இங்கே ஆஸ்தி - சொத்து என்ற பொருளை எடுத்துக்கொள்வது தேவையில்லாதது என்று எண்ணுகிறேன். ஆஸ்தி என்பதற்கு உண்டு, சொத்து என்ற இரு பொருள்களும் உண்டு. ஆஸ்திகர் என்ற சொல்லில் முதல் பொருளான 'உண்டு' என்பதே பயின்று வருகிறது.

August 23, 2006 4:44 PM
--

குமரன் (Kumaran) said...
மனு. அகம் என்று எதனைக் குறிக்கிறீர்கள்?

August 23, 2006 4:45 PM
--

குமரன் (Kumaran) said...
கெக்கே பிக்குணி. எஸ்.கேவுக்கும் எனக்கும் தகராறா? என்ன ஐயா சொல்றீங்க?

எஸ்.கே. அப்படி ஏதாவது இருந்தா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கறேங்க. இப்ப எல்லாம் எல்லார்கிட்டயும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்கேன். அது தான் சரின்னு முடிவெடுத்தாச்சு. :-)

August 23, 2006 4:47 PM
--

குமரன் (Kumaran) said...
ஓகை நடராஜன் ஐயா. தங்களின் பரிந்துரைகளுக்கு நன்றி. இறையேற்பார், இறையேற்கார் என்ற சொற்களும் நன்றாக இருக்கின்றன.

August 23, 2006 4:48 PM
--

சாத்வீகன் said...
ஆத்திகம்/நாத்திகம் = இறையேற்பு/இறைமறுப்பு

ஆத்திகர்/நாத்திகர் = இறையன்பர்/இறைமறுப்பாளர்

நன்றி.

December 04, 2006 8:07 PM
--

குமரன் (Kumaran) said...
நன்கு சொன்னீர்கள் சாத்வீகன். மிக்க நன்றி.

December 04, 2006 8:16 PM
--

பகுத்தறிவு said...
நடக்கும் நம்புங்க என்பது ஆத்திகம்

நடக்கட்டும் நம்பரோம் என்பது நாத்திகம்.

ஒரு விழாவில் சினிமாத்துறையை சேர்ந்தவர் எழுதியது

December 04, 2006 9:50 PM
--

Anonymous said...
My apologies for writing in English.I am still learning Thamizh fonts.

Astigar=Nambinor
Nasthigar=Nambador
Basic philosophy is blind faith vs
Inquisitive faith or lack of faith.
This will cover god,athma,karma whatever is only a blind faith, believe dont ask.The opposite is question and rationalise.
Nandri.Good posting.

December 04, 2006 9:55 PM
--

குமரன் (Kumaran) said...
வருகைக்கு நன்றி தமிழன் ஐயா.

நீங்கள் சொன்னதில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் எனக்கு மாற்று கருத்து உண்டு.

Basically it is blind faith vs Inquisitive faith or lack of faith.

இதில் தான் எனக்கு மாற்றுக் கருத்து.

என்னைப் பொறுத்தவரை இது

Basically it is Inquisitive faith vs lack of faith. Sometimes blind faith is also included in aaththikam என்று இருக்க வேண்டும்.

God, Athmaa, karma etc come under Inquisitive Faith as without proper understanding, anlysis and rationality these concepts will not make any sense. Those who blindly say these are blind faith are indeed do not have any rational mind to do any analysis of these things.

December 05, 2006 1:34 PM
--

Anonymous said...
Nandri Kumaran Avargalae.
The question what is blind faith and what is faith after inquisition can be argued.When you ask a question and get a clear answer that is easy.When the answer like You have to believe it ,like athma and karma and god,and some dont accept the answer satisfactory they are Atheist etc...and for our discussion Nasthigar.I dont want to go too far from your discussion but "Why I am not a Christian by Bertrand Russell"discusses in detail for those interested in this topic.

December 05, 2006 2:16 PM
--

குமரன் (Kumaran) said...
பகுத்தறிவு ஐயா. நீங்கள் சொன்னதை நானும் படிச்சிருக்கேனுங்க. மிக்க நன்றி. :-)

December 05, 2006 3:34 PM