Monday, March 31, 2008
நீர் மேல் நடந்தாலும்....
ஒரு ஊரில் ஒரு குரு ஒருவர் இருந்தார். எண்பெரும் சித்திகளையும் அடைந்து எல்லா வல்லமையும் கொண்டவராக இருந்தார். அவரிடம் ஐந்து சீடர்கள் இருந்தார்கள். அந்த குரு ஒரே நேரத்தில் ஐவருக்கு மேல் சீடராகக் கொள்வதில்லை என்று இருப்பவர். ஒரு சீடர் எல்லா கல்விகளிலும் தேர்ந்து குருவிடம் இருந்து விடை பெற்றுச் சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நாட்களிலேயே ஒரு பெண் வந்து குருவை வணங்கி அவருடைய சீடராக இருக்க வேண்டினார். குருவும் அந்தப் பெண்ணைத் தகுந்த சோதனைகள் எல்லாம் செய்து பின்னர் சீடராக ஏற்றுக் கொண்டார்.
முன்பிருந்த நான்கு ஆண் சீடர்களுக்கும் இது பிடிக்கவில்லை. 'ஒரு பெண் நம் குருவிடம் சீடராக இருப்பதா? இவளுக்கு ஆன்மிகத்தைப் பற்றி என்ன தெரியும்? சாஸ்திரம் இதனை ஒப்புக் கொள்ளுமா?' என்றெல்லாம் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஆனால் குருவின் முடிவை மீற முடியாமல் அதே நேரத்தில் அந்தப் பெண்ணை எல்லா விதத்திலும் ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு முறை பக்கத்து ஊரில் ஒரு ஆன்மிகத் திருவிழா நடந்தது. அதற்கு குரு தன் சீடர்களுடன் செல்ல முடிவு செய்தார். பெண் சீடரிடம் சொல்லாமல் மற்ற நான்கு சீடர்களும் குருவுடன் சென்றனர். அந்த ஊருக்குச் செல்ல ஒரு ஆற்றைக் கடக்க வேண்டும். ஆற்றங்கரையை அடைந்தால் பெண் சீடர் எல்லோருக்கும் முன்னால் வந்து அங்கே படகில் ஏறி அமர்ந்திருக்கிறார். வேண்டா வெறுப்பாக எல்லா சீடர்களும் அந்தப் படகில் ஏறினார்கள்.
படகு பாதி தூரம் சென்ற பிறகு நின்று விட்டது. என்ன காரணம் என்று படகுக் காரரைக் கேட்டபோது எரிபொருள் (டீசல்) தீர்ந்துவிட்டது என்றார். உடனே பெண் 'இதோ நான் போய் வாங்கி வருகிறேன்' என்று சொல்லி ஆற்றின் மேல் நடந்து செல்லத் தொடங்கினார்.
அதனைக் கண்டு திகைத்தார்கள் நான்கு சீடர்களும். இவ்வளவு காலம் குருவிடம் கற்றும் இந்த வித்தையை நமக்கு குரு இன்னும் சொல்லித் தரவில்லையே. இந்தப் பெண் மட்டும் இவ்வளவு விரைவில் கற்றுக் கொண்டாளே என்று. ஆனால் சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?
'பார்த்தீர்களா இந்தப் பெண்ணை? தண்ணீரில் நடக்கிறாள். ஹும். இவளுக்கு நீச்சல் கூட தெரியவில்லையே'
***
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 3 மே 2007 அன்று இடப்பட்டது.
கல்யானை மீண்டும் கரும்பு தின்றது!!!
மதுரையில் சோமசுந்தரக்கடவுள் செய்த அறுபத்திநான்கு திருவிளையாடல்களைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். அதிலும் கல்யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல் மிகப் பிரபலம். இன்றைக்கும் சோமசுந்தரேஸ்வரர் திருச்சுற்றில் இருக்கும் வெள்ளையானைகளை எல்லோரும் காணலாம். அந்த யானைகளில் ஒன்று தான் கரும்பு தின்றதாகப் புராணம்.
வரலாற்றுக் காலத்தில் மீண்டும் அந்த யானைகளில் ஒன்று கரும்பு தின்றக் கதையைக் கேட்டிருக்கிறீர்களா? செவிவழிச்செய்தி ஒன்று அதனைக் கூறுகிறது.
மாலிக் காபூர் மதுரை வரை படையெடுத்து வந்து எல்லாத் திருக்கோவில்களையும் கொள்ளை அடித்துக் கொண்டு வந்த போது நிகழ்ந்தது இது. மதுரையை முற்றுகையிட்டு மதுரையை வென்று மாலிக் காபூர் ஆண்டு வரும் போது அவரது படைத்தளபதி ஒருவர் திருக்கோவிலைச் சுற்றி வந்துக் கொண்டிருந்தார். அப்போது திருச்சுற்றில் இருக்கும் எட்டு வெள்ளை யானைகளைக் கண்டு வியந்து அருகில் இருந்தவர்களிடம் அவற்றைப் பற்றிக் கேட்டார்.
அங்கிருந்தவர்கள் பலருக்கு அந்த யானைகள் அங்கே காலம் காலமாக இருப்பது தெரியுமே ஒழிய அவற்றைப் பற்றிய மற்ற செய்திகள் தெரியவில்லை. அதனால் அங்கே அமர்ந்திருந்த துறவி ஒருவரிடம் அந்த தளபதியை அழைத்துச் சென்றனர். அந்தத் துறவியும் கல் யானை கரும்பு தின்ற கதையைச் சொன்னார்.
அந்தக் கதையைக் கேட்ட தளபதி உடனே நேராக மாலிக் காபூரிடம் சென்று அந்தக் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டு 'ஆகா. இந்த இந்துக்கள் எல்லோரும் படு முட்டாள்களாக இருக்கிறார்களே. கல்யானையாவது, கரும்பைத் தின்பதாவது. நல்ல கதை' என்று ஏளனமாகச் சிரித்தார் மாலிக் காபூர். 'அந்தக் கதையைச் சொன்ன முட்டாளைக் காட்டு. இப்போதும் கல்யானை கரும்பைத் தின்னுமா என்று கேட்போம்' என்று சொல்லி திருக்கோவிலுக்கு வந்தார்கள்.
துறவியிடம் வந்து 'எந்தக் கல்யானை கரும்பு தின்றது?' என்று கேட்டார் மாலிக் காபூர். அவர் ஒரு யானையைக் காட்ட, 'இப்போது இந்த யானை கரும்பைத் தின்னுமா?' என்று கேட்க, துறவி 'தின்னும்' என்று சொன்னார். ஏளனமாகப் பார்த்துக் கொண்டே மாலிக் காபூர் ஒரு கரும்பை நீட்ட அந்த கல்யானை கரும்பை வாங்கித் தின்றது. ஆச்சரியப் பட்ட மாலிக் காபூர் திரும்பி அந்தத் துறவியைப் பார்க்க அங்கே யாரும் இல்லை.
கூடியிருந்தவர்கள் எல்லோரும் அது சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலே என்று போற்றினார்கள். வியந்து கொண்டே மாற்று மதத்தவர் திருக்கோவிலை விட்டுச் சென்றனர்.
***
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 27 ஏப்ரல் 2007 அன்று இடப்பட்டது.
முல்லைத் திணையின் மரபு மீறல்கள்...
***
முல்லை மகளே!! வாள் மங்கையே!!
ரிஷியா
மழை மேகப்புறாக்கள் வானவெளியில் குப்பலாய் ஓன்று கூடின. மெல்ல மெல்ல வானம் வெண்மழை பொழிய ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஆவணித் திங்களின் கார்காலை அது. வைகறை எழுந்து நீராடிய ஆயர்பாடி மங்கையர், தம் இல்லத்துக் கொட்டிலில் மூங்கில்கழியோடு பிணைக்கப்பட்டிருந்த ஆநிரைகளுக்கு நறுமண தூபப்புகை காட்டினர். குளிருக்கு ஓடுங்கிய இளங்கன்றுகளுக்கு இதமாய் இருக்கட்டுமென்று பெரிய மண்சட்டிகளில் காய்ந்த வரட்டிகளோடு, உலர்ந்த சருகுகளைப் போட்டு எரியூட்டினர். ஆயர்குலச் சிறுவர்கள் தம்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து புல்லாங்குழலை எடுத்துக் காற்றை உள்ளிழுத்துப் பண் இசைக்கத் தொடங்கினர். காலையை வந்தனம் கூறி வரவேற்பதாய் இருந்தது அவர்கள் இசைத்த பூபாளம். சிறுமியர்கள் கொல்லையில் வளர்ந்து நிலம்நோக்கிய வரகுக் கதிர்களைத் தூறல் நனைக்கும் முன் மூங்கில் கூடைகளில் சேமித்தனர். வரகுக் கொல்லையினுடே ஆண்முயல் தன் செவிகளை உயர்த்திக் கொண்டு ஓட, அதன் பின்னே பெண் முயல் ஓட, இதைக் கண்ட சிறுமி ஓருத்தி தன்னிடமிருந்த கூடையைக் கீழே கிடத்திவிட்டு அவைகளைத் துரத்த ஆரம்பித்தாள். சிறுமியர் கூட்டம் கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்தது.
அங்கே, அடர்ந்த கானகத்தின் வழியே புறப்பாடியிலிருந்து அந்தணன் ஸ்ரீமன் மாயோன் கோவிலை நோக்கி நடந்தான். ஓங்கி நெடிதுயர்ந்த கொன்றை மரங்கள் பொற்சரங்களெனக் கொன்றைப் பூக்களைச் சூடி ஈரக்காற்றில் களிநடனம் புரிந்தன. தாழ்ந்திருந்த ஓரு மரக்கிளையைப் பிடித்து உலுக்கித் தன் மேல்துண்டால் கொன்றைப் பூக்களைச் சேகரித்துக்கொண்டு மேலே நடந்தான். ஒரு கையில் கிண்டி, மற்றொரு கையில் பூக்குடலை நிறையக் குல்லை (துளசி) மாலைகள். கொன்றையிலை ஒன்றைக் குழல் போலச் சுருட்டி வாயில் வைத்துச் சீழ்க்கையடித்தான். அவன் சீழ்க்கைக்கு எதிர்ச்சீழ்க்கை ஒன்று சற்றுத் தொலைவில் குறுஞ்சுனைக்கு அருகிலிருந்து பறந்து வந்தது. வியந்து ஆவல் மேலிடப் பசும் புதர்களிடையே சென்று ஒரு மரத்தின் பின்நின்று கவனித்தான். சுனையில் எழிலி நீராடிக் கொண்டே இவன் குழல் பாட்டுக்கு எதிர்க்கச்சேரி நடத்தினாள். ஒ! இவளா! கானநாடனின் பெண்.. ம்.. ம்ம்.. , இன்னும் சற்றுநேரம் நின்றால் என்ன என்று தோன்றியது. ம்ஹூம், அது நாகரிகமல்ல என்று எண்ணியபடியே நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தான். அவள் விடவில்லை. இழுத்து நீண்ட ஒசையாக ஒரு சீழ்க்கையடித்தாள், அவனை நோக்கியபடியே. திமிர்.. திமிர்.. மனதிற்குள் சொல்லிக்கொண்டே நடந்தான்.
திடீரென்று மா.. மா.. என்று பெரும் சப்தமும், இரைச்சலும் சுனையருகே கேட்டது. திரும்பி நோக்கினான். காட்டெருமைக் கூட்டம் ஒன்று சுனையில் இறங்கி நீரைக்கலக்கி அதம் செய்தன. ஐயோ!! அவளுக்கு என்ன ஆயிற்று? மனம் பதறினான். அவளோ, காட்டெருமைக் கூட்டத்தை மூங்கில் கழியால் விரட்டிவிட்டாள். ஒரு கணம் திகைத்தான். எத்தனை வீரம்!! துணிவு, பயம் என்பதையே இந்தப் பக்கத்துப் பெண்கள் அறியார். அந்தோ பாவம்! மேட்டில் எழிலி வைத்திருந்த ஆடைகளைக் காலில் இழுத்துக்கொண்டு காட்டெருமைகள் ஒடிவிட்டன. ஈர ஆடையுடன் அவன் நின்றாள்; என்ன செய்வது என்று புரியாமல். ஸ்ரீமன் அவளை நோக்கி விரைந்தான். இவனைக் கண்டவுடன் அவள் மறுபடியும் சுனைக்குள் இறங்கிவிட்டாள். அவளருகே சென்றவன் தான் போர்த்தியிருந்த மேல் துண்டையும், மாயோனுக்கு அணிவிக்கயிருந்த பட்டுத்துகிலையும் அவள்மேல் எறிந்துவிட்டு விடுவிடுவென்று நடந்தான். சற்றுத் தொலைவு சென்றபின் சற்றே நின்று நிதானித்து அவளைத் திரும்பி நோக்கினான். நன்றியும், அன்பும் ததும்பிய பார்வையுடன் இவனை நோக்கினாள். சிநேகத்தின் பூக்காலம் விழிவழியே மலரத் தொடங்கியது.
வெண்மழைத் தூறல் செந்நிலமாம், முல்லை நிலத்துடன் இரண்டறக்கலந்தது அந்த கார்காலை வேளையில். கார்கால மழை சற்றே ஓய்ந்திருந்த உச்சிப்பொழுது, கான்யாறு கோவில் புறத்தே சுழித்துக் கொண்டு பிரவாகமெடுத்தது. கோவில் முன்றில் விட்டுக் கீழே இறங்கினான், ஸ்ரீமன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். வானம் கொஞ்சமாய் வெளுத்திருந்தது. மெல்லத் தன் வீடுநோக்கி நடக்கத் தொடங்கியபோது அவளின் நினைவு மயிற்பீலியின் மென்மையான தொடுதலாய் வருடியது. என்ன துணிச்சலான பெண்! தூரத்தேயிருந்த ஆயர்பாடியின் ஏறுகோட்பறை ஒலி அந்தக் கானகம் முழுவதும் ஊடுருவி எங்கும் பூம்பூம்.. பூம்பூம்பூம் ஒலியால் அதிரவைத்தது. வீரவிளையாட்டைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவளையும்தான். பல கல் தொலைவிலும் மணம்வீசி மயக்கும் பிடவ நறுமலர்கள் நிறைந்த ஆயர்பாடியின் காட்டுவழி. அங்கொன்றும், இங்கொன்றுமாய்க் குருந்தமரங்கள். ஒரு மரத்தடியில் ஆவுரிஞ்சி கல்தூண். ஒரு இளங்கன்று ஆனந்தமாய்த் தன்முதுகை அதில் உரசிக்கொண்டிருந்தது. ஏறுகோட்பறையின் தாளத்திற்கு ஏற்பச் சன்னமாய் ஒரு பாடல் காற்றில் கரைந்து கானகத்தை மதுரமாய் நிறைத்தது.
குடக் கூத்தாடும் கண்ணனே! காயாம்பூ வண்ணனே!
குழல்கான கந்தர்வனே! என்னை ஆளும் என்னவனே!
அவளேதான்! அவளெதிரே சென்று நின்றான். கல்தூணை விடுத்துக் கன்று துள்ளி ஒடிவந்து அவன் முழங்காலில் முகம் வைத்துத் தேய்த்தது. இவள்வீட்டுக் கன்றும் நம்மோடு நட்பு பாராட்டுகிறதே! கிண்டியை நீட்டினான். வாங்கி பாலைப்பருகினாள். துளசி மாலை ஒன்றையும் கொடுத்தான். வாங்கித் தோளில் சாற்றிக் கொண்டாள்.
காலையில் அவன் கொடுத்த வெண்துகில்கள் ஒன்றில் குருந்தம் (எலுமிச்சை) பழங்களைக் கட்டியிருந்தாள். மற்றொன்றில் முதிரை தான்யங்களை முடிந்திருந்தாள். இரண்டையும் அவனிடம் நீட்டினாள். தலையசைத்து மறுத்தான். 'பெற்றுக்கொள்' என்று விழியாலேயே மிரட்டினாள். வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டான். அவள் ஆயர்பாடி நோக்கி நடந்தாள். அவனும் பின்தொடர்ந்தான். அவனைத் தொடர்ந்து இளங்கன்றும் ஒடியது. அங்கே, ஆயர்பாடியின் வெளிமுற்றத்தில், போருக்குச் செல்லாத இளம் பிள்ளைகள் ஏறுதழுவுதலில் ஈடுபட்டிருந்தனர். ஸ்ரீமன் நின்று ரசித்தான்.
அவ்வழியே, யானைப்பாகர்கள் இருவர், கொம்பன்களை வடமொழிச்சொற்களால் விரட்டிக்கொண்டு சென்றவர்கள், எழிலியும், மூமனும் நிற்பதைக் கண்டு பரிகாசப்பார்வை ஒன்றை வீசினர். ஒரு முரட்டு இளைஞன் பரிக்கோலை மூமனைநோக்கி எறிந்தான். இதைக்கண்ட எழிலி, மூமனை மராமரத்துப் பின்தள்ளிவிட்டுத் தன் இடையில் செருகியிருந்த குறுவாளை வீசிப் பரிக்கோலைத் தட்டிவிட்டாள். கீழே விழுந்த பரிக்கோலைப் பாய்ந்து எடுத்துக் குறி தவறாமல் கொம்பனை நோக்கி எறிய, அவ்யானை பிளிறிக்கொண்டு ஓடியது. பாகர்களும் அதன்பின்னே ஒடினார்கள். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நடந்தவற்றைக் கண்டு திகைத்து உறைந்துப் போனான், ஸ்ரீமன். இந்தப் பெண்ணுக்குள் இத்தனை வீரமா!! மெய்சிலிர்த்தான். அவனை அழைத்துக் கொண்டு தன் இல்லம் நோக்கி நடந்தாள். செஞ்சுடரெனச் செங்காந்தள் மலர்க்கூட்டம் ஒன்றைக் கடந்து செல்லும்போது காலையில் அடித்தச் சீழ்க்கையை அவள் மறுபடியும் எழுப்ப, கீழ் உதட்டைக் கடித்துத் தன் புன்முறுவலை அடக்கிக் கொண்டான்.
அவள் வீட்டுத் திண்ணையில் சிறுமியர் கூடி கண்ணனைப்பாடி, குரவைக் கூத்தாடினர். வீட்டின் உள்ளே பெண்டுகள் தயிர் கடையும் மத்தின் ஒசை ஆய்ச்சியர் குரவைக்குத் தாளமாய் அமைந்தது. அப்போது மெல்லிய சிறு தூறலாய்ப் பெயல் பொழிய, தன் வீட்டு மரக்குடையை அவனிடம் நீட்டினாள். மரக்குடையைப் பிடித்துக் கொண்டு தன் புறப்பாடி நோக்கி நடந்தான். மழை அடர்த்தியாய்ப் பொழிய, பெரும் காற்று மழைத்துளிகளைப் பூத்தூவலாய்ச் சிதறடிக்க, கார்கால உச்சிப்பொழுது அழகாய்க் கடந்தது முல்லை நிலத்தில்.
பெரும்மழைக் காலத்தின் அந்திமாலைப் பொழுது, ஆவணித் திங்கள் மாயோன் திருவோண நன்னாள் அந்திவிழா அன்றைக்கு. மின்னலை எள்ளி நகையாடின நெய்விளக்குகளின் கண்சிமிட்டல்கள். நெல்லும், முல்லையும் தூவி, தெய்வமடை (படையல்) படைத்து வழிபட்டனர், ஆயர்பாடி மக்கள். பெருமுது பெண்டிர் விரிச்சி (நற்சொல்) கேட்கச் சென்றனர். இடிமுழக்கத்துடன் பெயல் பொழிய, அதற்கு இசைந்து மகிழ்ந்தபடியே முல்லைக்கொடிகள் மென்காற்றில் மழைச்சாரலின் தாளகதிக்கு ஏற்ப ஆனந்த நர்த்தனமாடின. நெருங்கிப் பூத்த காயாம்பூக்கள் மழைத்துளிகளைத் தம் இதழ்களில் ஏந்தின. நட்சத்திரப் பூக்கள் மண்ணில் மலர்ந்தாற் போல் வெண்காந்தள்கள் மலர்ந்திருந்தன. மழை வில்லின் அழகை, வாத்சல்யத்தை மண்ணில் கொண்ட அந்த முல்லை கானகம் முழுவதும் எங்கு நோக்கினும் மனோகரமாய் இருந்தது. முறுக்குண்ட கொம்பினை உடைய கலைமான் தன் மடமானுடன் கானகத்தினுடே ஒடி விளையாடியது. தன்னோடு அணைத்தபடியே முல்லையாழில் சாதாரிபண் வாசித்த எழிலி, மாயோன் கோவில் மணியொலி கேட்டு எழுந்தாள். அவள் கோவிலை அடைந்தபொழுது திருஅந்திவிழா நடந்து முடிந்துவிட்டிருந்தது. நெல்லையும், முல்லை பூக்களையும் தூவி வழிப்பட்டாள்.
மரத்தூண் மறைவில் நின்று இவளை கவனித்த ஸ்ரீமன் “முகில் மகளே” என்றழைத்தான். தெய்வமடையை வாழையிலையில் வைத்து அவளிடம் கொடுத்தான். பெற்றுக்கொண்டு வெளியே வந்தாள். அவனும் வெளியே வந்தான். கோவிலை அடுத்த பசும்புதரில் மின்மினிப் பூச்சிகள் வட்டமடித்துப் பறந்தன. அவற்றை வாயில் கவ்விய கன்னல் குருவிகள் அருகே மரக்கிளையில் சுரைக்குடுவை போன்று தொங்கிய கூடுகளின் உள்ளிருந்த மண்கட்டியின் மீது மின்மினிகளை ஒட்டவைத்து இருளை விரட்ட விளக்கேற்றின. அவனும், அவளும் அங்கு தொங்கிய கூடு விளக்குகளை ரசித்தபடியே நின்றனர். மின்னல் ஒளியில் பொன்தூவலாய்ப் பெருமழை பொழிய, சிறுபொழுது மிக ரம்மியமாய்க் கடந்தது.
மேற்கண்டவை, காலை, உச்சி, மாலை மூன்று வேளைகளில் முல்லை நில வாழ்க்கையின் சுகமான கற்பனை. தலைவன் போருக்குச் சென்றுள்ளான். தலைவி அவனை நினைத்து வருந்துகிறாள். இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இதுவே முல்லைத் திணை ஒழுக்கம். இதை மீறியுள்ளேன். போருக்குச் செல்லாதவர்களின் முல்லை வாழ்க்கையைக் கற்பனையில் கண்டேன். காதலும், வீரமும் தலைவன் தலைவிக்கு மட்டுந்தானா? மற்றவர் வாழ்வில் காதலும், வீரமும் இல்லையா? காடுசார்ந்த வாழ்க்கை வாழ்பவர்கள் வீரமிக்கவர்களாய்த்தான் இருந்திருப்பார்கள். இங்கே காதலர்களுக்குப் பெயர் சூட்டி உள்ளேன். அடுத்த மரபுமீறல் இது. எழிலியும், மூமனும் சாதாரண முல்லைநில மக்கள். இவர்களைச் சார்ந்தே முல்லைத்திணையை வர்ணித்துள்ளேன்.
இத்தகைய மரபுமீறலுக்குக் காரணமாய் அமைந்தது நப்பூதனார் பாடல். இதுகாறும் வாளேந்திப் போருக்குச் சென்ற மகளிர் பற்றி நான் படித்ததில்லை. முல்லைப்பாட்டு போர்க்களம் சென்ற வீரமகளிரை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இது ஒரு வரலாற்றுச் செய்தியே! என்ன, நப்பூதனார் அப்பெண்கள் பெயரை குறிப்பிடவில்லை. அதனாலென்ன? முகமும், முகவரியும், பெயரும் இல்லாவிட்டால் என்ன? எழிலி, முகிலி, ராதை, நப்பின்னை என்று நாம் பெயர் வைத்தால் என்ன? மரியாதை செய்தால் என்ன? போருக்குச் சென்ற வீரமகளிரில் மேற்கண்ட எழிலியும் ஒருவராக இருக்கலாம். இனி முல்லைபாட்டு.
வேறுபல் பெரும்படை நாப்பண், வேறுஓர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி, அகம்நேர்பு
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறுபுறத்து
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ,
கைஅமை விளக்கம் நந்துதொறும் மாட்ட
முல்லைப்பாட்டு(43 - 49)
படைவீரர்களின் பாடிக்கு நடுவே நெடிய கோல்களை நட்டு, வண்ணத்திரையால் அரசனுக்குரிய தனிப்பாசறை அமைந்திருந்தனர். அப்பாசறையின்கண் குறுகிய கையணிகள் (வளையல்கள்) அணிந்த முன்கையினையும், சிறுமுதுகில் புரளும் கூந்தலையும் உடைய முல்லைநில மங்கையர் தம் இடையில் இரவைப் பகலெனச் செய்யும் ஒளிபொருந்திய உறுதியான பிடியுடைய வாளினைத் தம் இடைக்கச்சில் பூண்டிருந்தனர். அம்மங்கையர் விளக்கிற்கு நெய் ஊற்றப் பயன்படும் குழலால் நெய் ஊற்றி, நெடுந்திரியைத் தூண்டி விளக்கினை ஏற்றினர். (அவியும் தோறும்).
இந்த மங்கையர் யார்? மருத்துவம் பார்க்கவும், விளக்கேற்றவும், வீரர்களுக்குச் சமைத்துப் போட மட்டும் போர்க்களத்திற்குச் செல்லவில்லை என்பது திண்ணம். வாளை வீசவும், சுழற்றவும் போதிய பயிற்சி இல்லாமலா வாளை இடையில் பூண்டிருந்தனர்?
போர் முனையில் போராடவும், வாள்முனையில் வீரம் நிலைநாட்டவும் சங்ககாலப் பெண்டிர் பழகியிருந்தனர். முல்லைநிலத்து வீரமகளிர் ஆண்களுக்கு இணையாகப் போர்க்களம் சென்றனர் என்ற செய்தியைப் பறைசாற்றுகிறது, மேற்கண்ட முல்லை வரிகள். வீரச்சமர் புரிந்து, வரலாற்றில் தடம் பதித்து, வீரத்தின் விளைநிலமாய் வாழ்ந்திருக்கிறார்கள். புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரமறக்குலத்தின் பரம்பரை இவர்கள்.
பரிசில் பெறும் பாணர்குலமல்ல நப்பூதனார். ஏனெனில், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் ஆவார். நப்பூதனார் கள் பருகிவிட்டு மேற்கண்ட வரிகளை எழுதவில்லை என்பதும் தேற்றம். மேற்கண்ட பாடலைப்போலத் தமிழரின் வீரவரலாறு நிறையச் சங்கப்பாடல்களில் பேசப்படுகிறது. கூர்ந்து அவதானிப்பது நம்கையில் உள்ளது. தமிழனுக்கா வரலாறு இல்லை? (வளையோசை குலுங்கக் குலுங்க, வாள் ஓசை டண், டண் என்று அதிர, வாட்போரிடும் வீரமங்கையரின் காட்சி மனத்திரையில் ஒடி என்னைக் களிவெறி கொள்ளச்செய்கிறது).
முல்லையே நீ பாடு
வீரத்திருமகளை!
வெற்றித்திருவை!
***
அன்றும் இன்றும் என்றென்றும் திருச்சதயவிழா
ரிஷியா
வாசகர் அறிமுகம்
வரலாறு.காம் மின்னிதழின் நெடுநாளைய வாசகியான திருச்சியைச் சேர்ந்த ரிஷியா அவர்கள் மாமன்னர் இராஜராஜர் மீது தீராக்காதல் கொண்டவர். இராஜராஜரைப் பற்றி ஒரு சிறு குறை சொன்னாலும் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குப் பற்று வரக்காரணம், இராஜராஜரின் மேலாண்மை மற்றும் நிர்வாகத் திறமைகள் பற்றிச் செய்த ஆய்வின்போது கிடைத்த தகவல்கள் ஏற்படுத்திய பிரமிப்பு. இயற்பியலில் முதுகலை, வாணிப நிர்வாகத்தில் முதுகலை (MBA), கணிணிப் பயன்பாட்டியலில் பட்டயப்படிப்பு எனத் தகுதிகளை வளர்த்துக் கொண்டாலும், வரலாற்றின் மீது கொண்ட காதலால் கல்வெட்டுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள சமஸ்கிருதத்தில் பட்டயப்படிப்பும் பயின்று வருகிறார். பாரதிதாசன் பல்கலை வழங்கும் திருக்குறள் பட்டயப்படிப்பிலும் சேர்ந்திருக்கிறார். இராஜராஜரைப் பற்றி இவர் மேற்கொண்டிருக்கும் வரலாற்று ஆய்வுகள் மேலும் பற்பல புதிய தகவல்களை வெளிக்கொணர்ந்து அவரது பிரம்மாண்டத்தை உலகுக்கு அறிவிக்க வரலாறு.காம் மனதார வாழ்த்துகிறது.
--------------------------------------------------------------------------------
இனிக்கட்டுரை...
இராஜராஜீசுவரம். நினைத்தாலே தமிழ்மனம் பூரிக்கும், தலை நிமிரும். ஆயிரம் வருடங்களுக்கு முன்னும் சரி, இன்று ஆயிரம் வருடங்களுக்குப் பின்னும் சரி, இனிவரும் ஆயிராமாயிரம் வருடங்களுக்குப் பிறகும் சரி, எத்திசையும் புகழ்மணக்க விளங்கும் தமிழ் அணங்கின் வெற்றித் திருமகுடமாய் விளங்கும் கற்கோயில். காலத்தின் பக்கங்களில் தினம்தினம் ஓரு புதுக்கவிதையை வாரி வழங்கும் நித்யவினோதத் திருக்கோயில். (நித்யவினோதத் திருக்கோயில், ஏனென்றால் ஒவ்வொரு முறை காணும்போதும் விழியில் நுழைந்து, நெஞ்சில் நிறைந்து, கருத்தில் பதிந்து, மனதில் உறைந்து ஓரு புதுக்கவிதையைத் தருகிறது). எடுப்பித்தவர் நம் நித்யவினோதரான மாமன்னர் இராஜராஜசோழர்.
அன்று அவர் காலத்தில் சதயவிழா இராஜராஜீஸ்வரத்தில் எப்படியெல்லாம் கொண்டாடப்பட்டிருக்கும்? சதயவிழா மட்டும்தான் கொண்டாடப்பட்டதா? மற்ற திருவிழாக்கள் என்ன என்ன கொண்டாடப்பட்டன? மகாரசிகரான அவரும் அவரைச் சார்ந்தவர்களும் எப்படி விழா எடுத்தார்கள்? என்மனம் பின்னோக்கிச் செல்ல விழைந்தது, இன்று நடக்கும் வைபவங்களை எல்லா கண்டபின்.
ஆயிரம் வருடங்களுக்கு முன்...
இராஜராஜீஸ்வரத்தில் நடைபெற்ற திருவிழாக்கள்:-
1. திருச்சதயத்திருநாள் : ஒவ்வொரு மாதமும் சதய நட்சத்திரம் அன்று விழா நடைபெற்றது. ஆக, வருடத்தின் 12 சதய நாட்களிலும் இராஜராஜீஸ்வரம் புதுமணம் காணும் மங்கையெனத் திருவிழாக்கோலம் பூண்டது.
2. ஸ்ரீஇராஜஜேஸ்வரமுடையார் ஆட்டை பெரிய திருவிழா : இது வருடம் ஓரு முறை நடக்கும் உற்சவம். (ஆட்டை - ஆண்டு). கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெற்றது.
3. சங்கிரமம் அல்லது சங்கிராந்தி : சூரியன் ஓரு இராசியிலிருந்து மற்றொரு இராசிக்குப் பிரவேசிப்பதே சங்கிராந்தி (மாதப்பிறப்பு) எனப்பட்டது. ஆக, 12 மாதப்பிறப்பும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டன.
4. கார்த்திகைத் திருவிழா : கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை நட்சத்திரம் அன்று, ஓரு நாள் உற்சவமாக இவ்விழா நடைபெற்றது.
இவ்விழாக்கள் நடக்கும் நாட்களில் உற்சவத் திருமேனிகளுக்கு, ஒரு நாளில் மூன்றுமுறை திருமஞ்சனம் பாங்குடன் நடைபெற்றது. பெரிய செண்பக மொட்டுக்கள், ஏலவரிசிகள் (ஏலக்காய்) மற்றும் இலாமிச்சை (ஓரு வகையான வாசனை வேர்) வேர்கள் ஆக மூன்று வாசனையூட்டும் பொருட்களால் திருமஞ்சன நீர் சுகந்த மணமூட்டபட்டது. இந்நீர் கொண்டு உற்சவத் திருமேனிகளுக்குத் திருமஞ்சனம் நடைபெற்றது. முற்றிலும் இயற்கை வேதிக்கூறுகளைக் கொண்ட பொருட்கள். இவை மிகுந்த சுகந்த நறுமணம் தரக்கூடியவை. இன்றோ, 47 வகையான பொருட்கள் கொண்ட பேரபிஷேகப்பட்டியலால் நம் இராஜராஜீஸ்வரமுடையார் மூச்சுத்திணறிப்போய் விடுகிறார். பின்னர், அபிஷேகப் பொருட்களெல்லாம் பெரிய பெரிய அண்டாக்களில் கொண்டுவரப்பட்டு, சண்டேஸ்வரர் திருமுன் முன்பாக வைக்கப்பட்டுத் தரையில் கால்பதிக்க இயலாதவாறு இரண்டாம் முறை அபிஷேகிக்கப்பட்டு நம்மைத் தலைதெறிக்க ஓடவைப்பது தனிக்கதை.
திருமஞ்சனநீரை வாசனையூட்ட வேண்டிய மூன்று பொருட்களையும் பெறுவதற்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டன. சிறுதனத்துப் பணிமகன் அருமொழிதேவவளநாட்டுப் புலியூர்நாட்டு முருகநல்லூருடையான் காடன்கணவதி உடையார் 56 காசு பொலிசையூட்டாகத் (வைப்புநிதி போன்றது) தஞ்சாவூர்க் கூற்றத்துப் புறம்படி திரிபுவனமாதேவி பேரங்காடி வணிகர்கள் சமூகத்திடம் வழங்கியுள்ளார். அவ்வணிகர்கள் 7 காசை வட்டியாகத் தரவேண்டும். வருடந்தோறும் இந்த 7 காசைக் கொண்டு செண்பகமொட்டுக்கள், ஏலவரிசிகள் திருமஞ்சனநீருக்குப் பெறப்பட்டன. மேலும், வடகரை ராஜேந்திரசிங்கவளநாட்டு மிறைக்கூற்றத்துப் பிரம்மதேய இராமனூர் சபையார் 29வது ஆட்சியாண்டு முதல் 30 காசைப் பொலிசையூட்டாகப் பெற்றுக்கொண்டு, வட்டியாகத் தரும் மூணேமுக்கால் காசிற்கு இலாமிச்சைவேருக்கு ஆன செலவுகளைச் செய்யவேண்டும் என்று நிவந்தம் அளிக்கப்பட்டது.
திருவிழா என்றால் மேளதாளம் இல்லாமலா? அதற்கும் நிவந்தம் அளிக்கப்பட்டது. இராஜேந்திரசிங்கவளநாட்டு மண்ணிநாட்டு நாட்டார்மங்கலத்துக் கடிகையான், உடையார் ஸ்ரீராஜராஜேஸ்வர உடையார்க்குத் திருவாய்க்கேள்வி செய்யும் ராஜகேசரி கோதண்டராமனான ஜெயங்கொண்ட சோழகடிகைமாராயன் 29வது ஆண்டுவரை பொலிசையூட்டுக்காக 40 காசு வழங்கியுள்ளார். ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்துச் சபையார் 40 காசினை வருடந்தோறும் செலுத்தவேண்டும். அதில் அரைக்காசு வீதம், திருப்பறை அடிக்கும் கடிகையார் ஐவர் ஆட்டைதிருவிழா கொடியேற்று நாளில் பறை கொட்டுவதற்கு கூலியாகப் பெற்றுக்கொண்டனர். மேலும், ஆடவல்லான் திருச்சுற்று வைபவத்தின் போதும் பறைகொட்டுவதற்கு அரைக்காசு வீதம் 5 மேளக்காரர்களும் பெற்றுக்கொண்டனர். ஒருவேளை, முந்தைய ஆட்டைத் திருவிழாவின்போது பறைகொட்டியவர் கிடைக்கவில்லை என்றால், வேறு ஒருவர் இரு உற்சவங்களின்போதும் பறைகொட்டி ஒருகாசு வீதம் பெற்றுக் கொள்ளலாம் என்று நிவந்தமளிக்கப்பட்டது.
அன்னமிடல் என்பது அந்நாளில் இயல்பாய் நடைபெற்ற ஒரு தர்மவழக்கமாக இருந்துள்ளது. (இன்று போல் புகைப்படம் எடுத்து கொள்வதற்கும் போஸ்டர் ஒட்டுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட சடங்கல்ல). இராஜராஜீஸ்வரத்தில் மாதாந்திர சதயவிழாவின் போதும், வருடாந்திர ஆட்டைத் திருவிழாவின் போதும், சிவயோகிகள் பதின்மரும் உடையார் சாலையிலே உண்ணக்கடவர் என்று பெயர் குறிப்பிடயியலாத (கல்வெட்டு வரிகள் சிதைந்துள்ளன) ஒரு பெருமகனார் நிவந்தமளித்துள்ளார். 25 கலம் நெல் ஒரு வருடத்திற்குத் தேவைப்பட்டது. ஒரு குறுணியும், 2 நாழி நெல்லும், ஆடவல்லான் என்னும் அளவையால் அளந்து சிவயோகிகளுக்கு ஒரு வேளை உணவிற்காகக் கொடுக்கப்பட்டது. திருவிழா நடந்த அத்தனை நாட்களிலும் 240 சிவயோகிகள் வயிறார உண்ண உணவளிக்கப்பட்டது.
பொலிசையூட்டாக 100 காசுகள் இதற்காகப் பெற்றுகொண்டவர்கள் நித்தவினோத வளநாட்டு வெண்ணிக்கூற்றத்துப் பிரம்மதேயத்துப் பெருநங்கைமங்கலத்துச் சபையார். பெற்றுக்கொண்ட பொலிசையூட்டுப் பணத்திற்கு அவர்கள் வட்டிவிகிதமாய் ஒரு காசிற்கு மூன்று குறுணி நெல் வருடந்தோறும் அளிக்க கட்டளையானது.
சூரியன் இருக்கும் திசைநோக்கி முகம் திருப்பும் சூரியகாந்தி மலரெனப் பல பெருந்தனத்து அதிகாரிகள் அன்று செயல்பட்டுள்ளனர். யதா ராஜக: ததா சேவக: என அவர்களில் ஒருவர் தான் ஸ்ரீராஜராஜேஸ்வரமுடையாருக்கு ஸ்ரீகாரியம் செய்த பொய்கை நாடுகிழவன் ஆதித்தன்சூரியனான தென்னவன் மூவேந்தவேளான். இவர் திருவிழாக்களின்போது இறைத்திருமேனிகளுக்குத் திருவமுது படைப்பதற்கான நிவந்தம் அளித்துள்ளார். பொலிசையூட்டாக 78 காசுகள் கொடுத்துள்ளார். இக்காசு ஒன்றுக்கு வட்டியாக மூன்று குறுணி நெல் வருடந்தோறும் தஞ்சைப் பெரிய பண்டாரத்தில் சேர்க்க வேண்டும்.
என்னென்ன திருவமுது படைத்தார்கள் என்றால், அப்பக்காய்க் கறியமுது, கைக்கறியமுது (பழங்களால் ஆனது), பொரிக்கறியமுது, புளியங்கறியமுது ஆகியன. இவற்றைச் சமைக்கத் தேவையான போனகபழவரிசி, பூரிநெல்லு, பருப்பு, மிளகு, கடுகு, சர்க்கரை, ஜீரகம், கொள்ளு, நெய், தயிர், உப்பு, புளியங்காய்கள், பழம் எனப் பலதும் வட்டி நெல்லிற்கு இணையாகப் பெறப்பட்டன. அமுதைப் படைப்பதற்கான வாழைக்குருத்து இலைகள், அடையக்காய் (பாக்கு), வெள்ளியிலை (வெற்றிலை) எல்லாம் பெறப்பட்டன. திருவமுது சமைப்பதற்கான விறகுக்கட்டைகள் பெறவும் வட்டிநெல் நிவந்தமளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டின்போது தூபமேற்ற உரியுஞ்சிதாரி எனப்பட்ட தோலுடைய தூபப்பண்டம் உபயோகிக்கப்பட்டது. அதைப் பெறுவதற்கும் ஒரு நாழிநெல் ஒரு காசிற்கு வட்டியாகப் பண்டாரத்தில் வைக்கப்பட்டது.
திருவிழாக்களின்போது ஸ்ரீஇராஜராஜீஸ்வரமுடையாருக்கும், தட்சிணமேரு விடங்கருக்கும் விளக்கேற்றவும், தூபமிடவும் வேண்டுமல்லவா? தீபமேற்றக் கற்பூரங்களே உபயோகிக்கப்பட்டன. தீபம், தூபம் ஏற்றவும், திருவமுது படைக்கவும் மொத்தம் 94 காசுகள் தஞ்சைப் பண்டாரத்தில் பெருமகனார் ஆதித்தசூரியனால் பொலிசையூட்டாக வைக்கப்பட்டன. இப்பொலிசையூட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்ட நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றத்துப் பிரம்மதேயப் பெருநங்கைமங்கலத்துச் சபையார், வட்டியாக நெல்லும் காசும் வருடந்தோறும் கொடுக்கக் கட்டளையானது.
இவ்வாறாக, அன்று ஸ்ரீஇராஜராஜீஸ்வரத்தில் மாதாந்திர, வருடாந்திரத் திருவிழாக்கள் களைகட்டின. அன்றுமுதல், இன்றுவரை திருச்சதயவிழா தவறாமல் நடைபெற்று வருகிறது. (என்ன, பல வேறுபாடுகள் உள்ளன.) சந்திர ஆதித்தவர் உள்ளவரை இந்தத் தர்மம் நடக்கக்கடவது என்று கல்லில் வெட்டிச் சென்றுள்ளர்கள். ஆதலால், சந்திர ஆதித்தவர் உள்ளவரை திருசதயத் திருநாள் இன்றும், என்றென்றும் கொண்டாடப்படும்.
பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரத்தாண்டு இராஜராஜ சோழனின் புகழ் நிலைக்க வேண்டும்.
தமிழ் உள்ளவரை, தமிழ்மண் உள்ளவரை.
நிலவு உள்ளவரை, பிரபஞ்சம் உள்ளவரை.
ஆதித்தன் உள்ளவரை, பொதிகைத் தென்றல் உள்ளவரை.
Sunday, March 30, 2008
பொன்மணியா? நெல்மணியா?
ஒரு சிறந்த வணிகர், பெருந்தனக்காரர், நிலவுடைமையாளர் மட்டுமின்றி ஒரு சிறந்த தமிழார்வலர் என்றும் வள்ளல் என்றும் ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள் அந்தக் காலத்தில் பாராட்டப்பட்டிருக்கிறார். அவர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சுவையான நிகழ்ச்சி இது.
பிள்ளை அவர்களின் வள்ளல் தன்மையைப் பற்றிக் கேள்விப்பட்ட மதுரகவிராயர் என்ற புலவர் பிள்ளை அவர்களைப் பார்த்து கவி பாடி பரிசில் பெற விரும்பி வந்தார். புலவர் வந்த நேரம் பிள்ளை வீட்டில் இல்லை. அவர் வயலுக்குப் போயிருப்பதாக வீட்டிலிருப்பவர்கள் சொன்னார்கள். மதுரகவிராயரும் விடவில்லை. வயலுக்குச் சென்றார். பிள்ளையவர்களின் வயல்வெளிகளின் வளத்தைக் கண்டு மகிழ்ந்தவாறே சென்றார். எங்கும் நெற்கதிர்களின் கனம் தாங்காமல் பயிர்கள் பூமியே தெரியாதபடி மூடியிருந்தன. ஓரிரு வயல்கள் அறுவடையாகியிருந்தன. அந்த அறுவடையான வயல்களில் ஒன்றில் கீழே சிதறிக் கிடந்த நெல்மணிகளை ஆனந்தரங்கம் பிள்ளை பொறுக்கிக் கொண்டிருந்தார்.
தற்செயலாக நிமிர்ந்த போது புலவரைப் பார்த்துவிட்டு, 'ஐயா. கொஞ்சம் வரப்பில் உட்காருங்கள். இதோ வந்துவிடுகிறேன்' என்று சொன்னார். சொல்லிவிட்டு மீண்டும் நெல்மணிகளைப் பொறுக்கத் தொடங்கினார். நேரம் சென்று கொண்டிருந்தது. புலவரின் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக அவரை விட்டுச் சென்று கொண்டிருந்தது. தன் பொறுமை தீர்ந்துவிட்டதைப் பலவறாகக் குறிப்பால் உணர்த்தினார்.
அதனைக் கண்ட பிள்ளை 'ஏன் பறக்கிறீர்கள் புலவரே?' என்று கேட்டார். அது புலவரின் மனதைச் சுருக்கென்று தைத்தது. உடனே அவர்
கொக்கு பறக்கும் புறா பறக்கும்
குருவி பறக்கும் குயில் பறக்கும்
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்
நான் ஏன் பறப்பேன் நராதிபனே!
திக்குவிஜயம் செலுத்தி உயர்
செங்கோல் நடத்தும் செயதுங்கன்
பக்கல் இருக்க ஒரு நாளும்
பறவேன் பறவேன் பறவேனே
என்று பாடல் படித்தார்.
பாடலின் சுவையையும் அதன் பொருளையும் கண்ட ஆனந்தரங்கம் பிள்ளை இனியும் புலவரைக் காக்கவைக்கக் கூடாதென்று வீட்டிற்குக் கிளம்பினார். புலவர் முன் செல்ல பிள்ளை பின் தொடர்ந்தார். வீட்டை அடைந்தவுடன் புலவரை கூடத்தில் அமரவைத்து பெரிய தலைவாழை இலை இட்டார். நடுப்பகல் நேரமாகிவிட்டிருந்ததால் பெரும்பசியுடன் இருந்த புலவரும் அறுசுவை உணவை எதிர்பார்த்து நிமிர்ந்து அமர்ந்தார்.
ஒரு வெள்ளி தட்டு நிறைய தங்க காசுகளைக் கொண்டு வந்து இலையில் இட்டு 'சாப்பிடுங்கள் கவிராயரே' என்றார் பிள்ளை.
இலை நிறைய காசுகளை இட்டு சாப்பிடுங்கள் என்றால் எப்படி என்று விழித்தார் புலவர்.
'என்ன விழிக்கிறீர்கள் கவிராயரே? தங்கக் காசுகளைச் சாப்பிடுங்கள். வயல்வெளியில் உதிர்ந்து கிடந்த நெல்லையெல்லாம் நான் பொறுக்குவதைப் பார்த்து நக்குப் பொறுக்கி என்று என்னை அற்பமாக நினைத்துப் பாடினீர்கள் அல்லவா? அந்த நெல் தானே பசிப்பிணிக்கு மருந்து. அது பசியைப் போக்குமா இல்லை இந்த தங்ககாசுகள் பசியைப் போக்குமா?' என்று சிரித்தபடியே கேட்டார்.
கவிராயரும் 'பெருமானே. பசியின் கொடுமை தாங்க இயலாமையால் அவ்வாறு அவசரப்படுத்தினேன்' என்று பதில் சொன்னார். பிள்ளையும் அந்த இலையுடன் தங்கக் காசுகளை அப்படியே முடிந்து புலவரிடம் கொடுத்துவிட்டு புலவரும் தாமுமாக அறுசுவை உணவு உண்டு புலவரை வழியனுப்பினார்.
***
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 10 பிப்ரவரி 2007 அன்று இடப்பட்டது.
Friday, March 28, 2008
இலவு காத்த கிளி
இறைவனை வணங்க இது காலமில்லை; நான் தற்போது இளைய வயதுடன் இருக்கிறேன். சற்று முதிர்ந்த பிறகு இறைவனை வணங்கி இன்புறலாம் என்று ஒவ்வொரு மனிதனும் நினைத்துக் கொள்கிறான். காலமும் செல்கிறது. வயது ஏறினாலும் இறைவனை வணங்கும் வயது வந்துவிட்டதாக யாரும் நினைப்பதில்லை. காலன் வந்து உயிரைக் கவர்ந்து சென்ற பின் காலத்தை எல்லாம் வீணே கழித்து ஏமாந்தோமே என்று அந்த ஜீவன் வருந்துகிறது.
இளமையில் அனுபவித்து முடிக்க வேண்டியவற்றிற்கு முடிவே இல்லை. இலவங்காயும் பழுக்கப் போவதில்லை. அதனால் கிளியைப் போல் ஏமாறாமல் இன்றே இறைவனை வணங்கி அவன் புகழ் பாடி 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்றெண்ணி அவன் தொண்டினைச் செய்து அவன் அடியாராய் வாழ்வோம்.
***
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 13 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது.
Thursday, March 27, 2008
உடுக்கை இழந்தவன் கை - 10 (பாரி வள்ளலின் கதை)
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறுவரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற!
களிறு மென்றிட்ட கவளம் போல
நறவு பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்
வார சும்பொழுகும் முன்றிற்று
ஏர் வீசிருக்கை நெடியோன் குன்றே!
பாரி வாழ்ந்த காலத்தில் இந்த மலையின் ஒரு பகுதியில் நீர் அருவி கொட்டிக் கொண்டிருக்கும். மற்றொரு பக்கம் பாணர்களின் உண்கலத்தில் மதுவை வார்ப்பதற்காக வடிகக்ப்பட்ட இனிய கள்ளின் தேறல் அருவி கற்களை எல்லாம் உருட்டி ஓடிக் கொண்டிருக்கும். வேற்படையுடையவனும் யானைப்படையைக் கொண்டிருக்கும் வேந்தர்களுக்கு இன்னானும் ஆகிய நமக்கு இனியவன் வாழ்ந்த போது நிகழ்ந்த இவை இனி நிகழாதே.
ஒரு சார் அருவி ஆர்ப்ப ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க உக்க தேக்கள் தேறல்
கல்லலைத்து ஒழுகும் மன்னே! பல்வேல்
அண்ணல் யானை வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!"
"பெரியப்பா. எத்தனை தான் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வரோ? சென்றதும் மீளுமோ? வாருங்கள் பகல் வீழும் காலமும் ஆனது. இன்றிரவு தங்கும் இடம் ஏதேனும் தென்படுகிறதா பார்க்கலாம்"
"ஆமாம் சங்கவை. நீ சொல்வது சரி தான். மாலை மயங்கி வருகிறது. இன்று முழுமதி நாள் என்பதால் இருக்கை தேடி விரைய வேண்டாம். மெதுவாகத் தேடுவோம்"
"அப்படியே செய்வோம் பெரியப்பா. அருகில் ஏதேனும் ஊர் உண்டா?"
"மலையின் அடிவாரத்தில் ஒரு சிற்றூர் உண்டு அம்மா. இரு திங்களுக்கு முன்னர் அந்த ஊரில் ஒரு பாணரின் வீட்டில் தான் நண்பகல் தங்கினேன். இரவு முதல் நாழிகைக்குள் அங்கே சென்றுவிடலாம் என்று எண்ணுகிறேன்"
***
"வாருங்கள் புலவரே. வாருங்கள்"
"பாணரே. நலமா? தங்கள் மனையாளும் நலமா?"
"தங்கள் ஆசிகளினால் நாங்கள் நலமாகத் தான் இருக்கிறோம் புலவரே. நம் மன்னர் மறைந்ததே இப்போது பெரும் குறை."
"நாடும் நகரமும் நன்கறிந்தது தானே அது பாணரே. இதோ இந்த இரு பெண்களும் பாரி மகளிர். இவர்களுக்குத் தகுந்த மணவாளனைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறோம். இன்றிரவு இங்கே தங்க இயலுமா என்றறியவே வந்தோம்"
"இது என்ன கேள்வி கபிலரே. எங்கள் மன்னன் மகளிர் எங்கள் குடிசையில் தங்க வந்தது எங்களின் பெரும்பேறல்லவா? இங்கேயே நீங்கள் விரும்பும் நாட்கள் வரை தங்கியிருக்கலாம். உள்ளே வாருங்கள். உணவு அருந்திய பின்னர் அமர்ந்து உரையாடலாம்"
***
உணவு அருந்திய பின்னர் அனைவரும் முற்றத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கின்றனர். பாரி மகளிரிடம் மன்னரைப் பாடித் தான் பெற்ற தங்க நாணைப் பற்றி விறலி சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்லச் சொல்ல அந்த நாள் நினைவுகளால் இரு பெண்களின் கண்களிலும் நீர் நிரம்பின.
(தொடரும்)
***
பாடற்குறிப்புகள்:
ஈண்டு நின்றோர்க்கும் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 114ம் பாடல். ஒருசார் அருவி ஆர்ப்ப என்று தொடங்கும் பாடல் புறநானூறு 115ம் பாடல். இரண்டும் கபிலர் பறம்பு நோக்கிப் பாடியது.
திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை. (விளக்கத்திற்கு சென்ற பகுதியைப் பார்க்கவும்). இரண்டு பாடல்களுக்கும் ஒரே திணையும் துறையும்.
பாடல்களின் பொழிப்புரையைத் தரவில்லை. பாடலில் ஏதேனும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.
Tuesday, March 25, 2008
தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு
கை முளைச்சு கால் முளைச்சு ஆடுது என் பாட்டுக்கு
கண்ணா கண்ணா மூச்சு ஏன் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு
இரவும் வருது பகலும் வருது எனக்குத் தெரியலை
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியலை
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவளைக் கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்றாலே
விட்டுடு விட்டுடு ஆளை விட்டுடு பொழைச்சு போறான் ஆம்பளை (இரவும்)
ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா?
பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்தைத் தோழியா?
பம்பரத்தைப் போல நானும் ஆடுறேனே மார்க்கமா
பச்சைத் தண்ணி நீ கொடுக்க ஆகிப்போகும் தீர்த்தமா
மகாமகக் குளமே என் மனசுக்கேத்த முகமே
நவ்வாப் பழ நிறமே என்னை நறுக்கிப் போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு எதும் தோணல
கிழக்கு மேல விளக்கு போல இருக்க வந்தாளே
என்னை அடுக்குப் பானை முறுக்கு போல உடைச்சுத் தின்னாளே
கட்டழகு கட்டழகு கண்ணு படக் கூடுமே
எட்டியிரு எட்டியிரு இன்னும் வெகு தூரமே
பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
பாதாதி கேசம் வரை பாசத்தோடு காட்டு நீ
தேக்கு மர ஜன்னல் நீ தேவலோக மின்னல்
ஈச்ச மரத் தொட்டில் நீ இலந்தைபழ கட்டில்
அறுந்த வாலு குறும்புத் தேளு
ஆனாலும் நீ ஏஞ்சலு
ஈரக்கொல குலுங்க குலுங்க சிரிச்சு நின்னாளே இவ
ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சாளே (தாவணி)
திரைப்படம்: சண்டக்கோழி
வெளிவந்த வருடம்: 2005
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
இயற்றியவர்: ??
***
இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 07 பிப்ரவரி 2007 அன்று இடப்பட்டது.
பச்சை நிறப் பேய்
பொறாமையில் அவை மறந்தது உண்மை - நாக்கு உணவைச் சுவைத்து உள்ளே அனுப்பினால் தான் அது சக்தியாக மாறி உடலில் எல்லா பாகங்களும் சுகமாக இருக்க முடியும் என்பது. வேலைநிறுத்தம் செய்ததால் தங்களின் முடிவைத் தாங்களே தேடிக்கொண்டன. இந்தப் பொறாமை என்னும் பச்சை நிறப் பேயே எல்லாத் தாழ்வுகளுக்கும் காரணம்.
***
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 26 ஜூலை 2006 அன்று இட்டது.
Monday, March 24, 2008
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி...
பக்தி மரபில் இறைவனை காதலனாகவும் நம்மை காதலியாகவும் நினைத்து வழிபடுவதும் ஒரு முறையாக இருக்கிறது. இந்த மரபு பழங்காலத்திலிருந்து பாரதியின் 'கண்ணன் என் காதலனை'த் தாண்டி இன்னும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையிலும் இந்தப் பாடல் ஒரு அருமையான பக்திக் காவியம்.
திரைப்படம்: மீரா
வெளிவந்த வருடம்: எனக்குத் தெரியவில்லை
பாடகி: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
இசையமைப்பாளர்: எஸ்.வி.வெங்கட்ராமன்
இயற்றியவர்: கல்கி
குழலில் இசைத்தவர்: சிக்கில் மாலா சந்திரசேகர்
காற்றினிலே..... வரும் கீதம்..... காற்றினிலே....
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
துணை வண்டுடன் சோலை குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாராகணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்
நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீலநிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்
அருஞ்சொற்பொருள்:
பண்ணொலி - இசையுடன் கூடிய ஒலி
மதுர - இனிமை
மோகன - மனம் மயக்கும்
கீதம் - பாடல்; இசை
தாராகணையே - தாரா என்றால் விண்மீன்கள்; தாராகணையே என்றால் விண்மீன்கள் கூட்டம்
வேய்ங்குழல் - மூங்கில் குழல்
***
இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 24 மே 2006 அன்று இட்டது.
தொடரும் தமிழ்த் திருவிழா (அ) இந்த வாரமும் போர் (boring) அடிக்குமா?
சென்ற வாரம் முழுவதும் விண்மீன் வார நாயகனாக இருந்து மிக மிக அருமையான இடுகைகளாக இட்டு நம்மை எல்லாம் மகிழ்வித்தார் இரவிசங்கர். அவற்றில் பாதிவரை நேரம் கிட்டாமல் நான் இன்னும் படிக்கவில்லை என்றாலும் இன்னும் படிக்காதவையும் மிக நன்றாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை. (இதனைத் தான் முன்முடிவு என்கிறார்களோ? :-) இருக்கலாம்) கடைசி இரு நாட்களில் அடுத்த வாரமும் (அதாவது இந்த வாரம்) ஒரு அருமையான பதிவர் விண்மீனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று ஏனோ மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. உள்மனத்தில் தோன்றும் இந்த எண்ணம் மட்டும் உறுதியாக இருந்தால் கட்டாயம் 'தொடரும் தமிழ்த் திருவிழா' என்ற தலைப்பில் இடுகை இடவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
காலையில் எழுந்தவுடன் தமிழ்மண முகப்பைப் பார்த்தால் உள்ளுணர்வு சொன்னது உறுதியாகிவிட்டது. நினைத்தது போல் அந்தத் தலைப்பில் இடுகை இட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டேன்.
அப்படியே இரவிசங்கரின் இடுகைகளுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை ஒரு பார்வை பார்த்த போது ABN என்ற பெயரில் தன்னைப் பதிவர் என்று சொல்லிக் கொள்ளும் அன்பர் ஒருவர் அனானியாக இட்டிருக்கும் பின்னூட்டம் கண்ணில் பட்டது. பின்னூட்டத்தைப் பார்க்க இந்த இடுகையைப் பாருங்கள். அவரும் அவரது கருத்தை மிக நாகரிகமாக நன்றாகத் தான் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் சொன்னதில் மிகவும் கவர்ந்தது இந்த வார்த்தை: I would say this week was pretty boring to an average tamil blog reader. பல கேள்விகள் எழுந்தன. வரிசையாக அவற்றைக் கேட்கலாம் என்று தான் நினைக்கிறேன். நேரமிருந்தால் பின்னர் கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால் இந்த வாரமும் ABN அவர்களுக்கு சுவையான வாரமாக இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் சராசரி பதிவர்கள் சென்ற வாரம் இரவிசங்கர் இடுகைகளைப் படித்துச் சுவைத்தது போல் இந்த வாரமும் படித்துச் சுவைப்பார்கள் என்று உறுதி கூறுகிறேன்.
வாழ்க வாத்தியார் ஐயா! வளர்க அவர்தம் தமிழ்ப்பணி!
Saturday, March 22, 2008
வசீகரா... என் நெஞ்சினிக்க...
திரைப்படம்: மின்னலே
வெளிவந்த வருடம்: 2000
இயற்றியவர்: தாமரை
பாடகி: பாம்பே ஜெயச்ரி
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ச்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் (வசீகரா)
தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே (வசீகரா)
***
இந்தப் பாடல் 22 மே 2006 அன்று 'கேட்டதில் பிடித்தது' பதிவில் இட்டது.
Thursday, March 20, 2008
நமச்சிவாயம் என சொல்வோமே!! நாராயணா என சொல்வோமே!! (பங்குனி உத்திரச் சிறப்பு இடுகை)
பங்குனி மாதத்தில் முழுநிலவு நாளில் உத்திர நாட்காட்டுடன் கூடி வரும் இந்த நன்னாளாம் பங்குனி உத்திரத்தைப் பற்றி நிறைய ஏற்கனவே பேசிவிட்டேன். அவற்றை எல்லாம் முன்பு படிக்காதவர்கள் படித்துக் கொள்ளும் படி தொடுப்புகளாகக் கீழே கொடுத்துள்ளேன்.
இந்த நன்னாளில் இந்தப் பாடல்களை எல்லாம் உங்களுடன் சேர்ந்து பாடியும் கேட்டும் மகிழும் பெரும் வாய்ப்புக்கு நன்றிகள்.
நமச்சிவாயம் எனச் சொல்வோமே
நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
நாராயணா எனச் சொல்வோமே
நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
வெள்ளிப்பனிமலையில் அமர்ந்திருப்பான்
வேதங்கள் பாடிட மகிழ்ந்திருப்பான்
பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில்
உள்ளத்திலும் இருப்பான் அருள்வடிவில்
(நமச்சிவாயம்) (நாராயணா)
மலைமகள் மகிழ்ந்திட மணம் கொண்டான் - அந்த
மங்கைக்கு மேனியில் இடம் தந்தான்
அலைமகள் அன்பில் ஆடியவன் - அந்த
அன்னையை மார்பில் சூடியவன்
கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
கானங்கள் பிறந்திட அருள் தந்தான்
நிலை தரும் சிவனை நாடுபவன் - நான்
நெடியவன் புகழைப் பாடுபவன்
(நமச்சிவாயம்) (நாராயணா)
ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமோ நாராயணாய நம:
படம்: அகத்தியர்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், டி.ஆர். மகாலிங்கம்
இசையமைத்தவர்: குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்றியவர்: கண்ணதாசன் (?)
இன்னொரு பாடலை முருகனருள் கூட்டுப் பதிவில் எதிர்பாருங்கள்.
***
பங்குனி உத்திரத்திற்காக முன்பு இட்ட இடுகைகள்:
பங்குனி உத்திரத் திருநாள்
பங்குனி உத்திரம் - 1
பங்குனி உத்திரம் - 2
பங்குனி உத்திரம் - 3
உடுக்கை இழந்தவன் கை - 9 (பாரி வள்ளலின் கதை)
ஐயகோ. அதனை நினைக்கவும் இயலவில்லையே. கொடுமை. கொடுமை. ஆருயிர் நண்பனைப் பலி கொடுத்துவிட்டு இன்னும் நான் ஏன் உயிரோடு இருக்கிறேன்? இறக்கும் தருவாயில் அவன் அடைக்கலமாகக் கொடுக்க மகளிருக்குச் செய்ய வேண்டிய கடமையும் செய்து முடித்தாகிவிட்டது. இனி இங்கிருக்கக் கூடாது. வடக்கிருந்து உயிரை விட வேண்டியது தான்.
பாரியின் உயிர் போகும் வழியை உண்டாக்கிக் கொடுத்த பாவி நான் அல்லவோ?! பாரியின் குன்றைப் பெற வேண்டுமென்றால் பாணராகவும் விறலியாகவும் வாருங்கள் என்று பார்வேந்தர்களுக்குச் சொன்னேன். அந்தத் தார்வேந்தர்களோ தாளாத கொடுமைக்காரர்கள் என்று அறிந்திலனே. பாணர்களாகவும் விறலியர்களாகவும் படைவீரர்களை அனுப்பி பாரியைக் கொன்று போட்டார்களே. ஐயகோ. இந்தப் பழியை நான் எப்படித் தீர்ப்பேன்?!
நாம் வடக்கிருக்கிறோம் என்று தெரிந்தால் மலையமான் பேசாது இருக்க மாட்டான். அதனால் எங்காவது மனிதர் இல்லாத இடத்திற்குச் சென்று விடுவதே மேல். அதோ அங்கு ஆற்றின் குறையாக ஆற்றின் நடுவில் பெரும்பாறை தெரிகிறதே. அங்கு சென்று அமர்ந்துவிட வேண்டியது தான்.
நண்பன் பாரியின் மனக்குறை தீர அவன் விரும்பிய வண்ணம் வேளிர் குலத்தவருக்கே அவன் மக்களை மணம் முடித்துக் கொடுத்தேன். அவனைக் கொல்லும் வழி சொன்ன என் மனக்குறை தீர இந்த ஆற்றுக்குறையில் உயிர் விடுவதே வழி.
***
பாரி இறந்துவிட்டான். பறம்பு மலையிலிருந்து அவன் அடைக்கலமாகக் கொடுத்த பாரி மகளிர் இருவருடன் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கிறார் கபிலர். பாரி இறந்தான் என்ற செய்தி கேட்டவுடன் பெரும் மகிழ்ச்சியுடன் அதனைக் கொண்டாடத் தொடங்கிய வேந்தர்கள் கபிலரையும் மற்றவரையும் மறந்துவிட்டனர். தங்கள் குலத்தைக் குறைத்துப் பேசியவன் ஒழிந்தான் என்பதே அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் கபிலர் இரு பெண்களுடன் கோட்டையை விட்டு அகன்று செல்வதை அவர்கள் தடுக்கவில்லை.
"பெரியப்பா. இது என்ன கொடுமை பெரியப்பா. தந்தையார் இறந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. இந்தப் பகைவருக்குப் பயந்து இப்படிப் பதுங்கிப் பதுங்கி நம் கோட்டையை விட்டு வெளியேறும் நிலை நமக்கு வந்ததே"
"கலங்காதே அங்கவை. இதுவும் நீங்கும். பாரியின் ஆசைப்படி உங்கள் இருவரையும் வேளிர் குலத்துதித்த வேங்கையருக்கு மணம் முடிப்பேன். இது உறுதி. நீங்கள் இருவரும் எதற்காகவும் கலங்க வேண்டாம்"
"பெரியப்பா. எங்களைச் சொல்லிவிட்டு நீங்கள் கலங்குகின்றீர்களே. நீங்கள் அழுதால் நாங்களும் அழுவோம்"
"என் செய்வது சங்கவை. உன் தந்தையுடன் நான் வாழ்ந்த நட்பு வாழ்க்கை அப்படிப்பட்டது. இதோ இந்தப் பறம்பு மலையில் எத்தனை நாட்கள் மகிழ்ச்சியோடு இருந்திருக்கிறோம்.
பறம்பு மலையே. மது இருந்த பாண்டத்தை ஒரு பக்கம் திறந்து மதுவைச் சேந்திச் சேந்தி அருந்தினோம். ஆட்டுக்கிடாயை ஒரு பக்கம் வீழ்த்தி அதன் ஊனிலிருந்து தின்றுத் தீராத அளவிற்கு துவையலும் ஊனும் சேர்ந்த சோற்றினை உண்டோம். அப்படிப்பட்ட செல்வச் செழிப்பைத் தந்து எங்களுடன் நட்பு செய்தாய் நீ. இப்போதோ பாரி மாய்ந்தான் என்று கலங்கிச் செயலற்று நீர் சொரியும் கண்களுடன் இந்தப் பெண்களுக்கு ஏற்ற மணவாளரைத் தேடிச் செல்கிறோம். நீயாவது வாழ்ந்து போ பெரும்புகழ் பறம்பே.
மட்டு வாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டான்றானாக் கொழும் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே இனியே
பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர் வார் கண்ணேன் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிரும் கூந்தற் கிழவரைப் படர்ந்தே"
***
பாடற்குறிப்பு:
புறநானூறு 113ம் பாடல். கபிலர் பறம்பு நோக்கிப் பாடியது.
திணை: பொதுவியல் (பொதுவானது)
பொழிப்புரை: மது இருந்த பானையை வாய் திறக்கவும் இன்னொரு பக்கம் கரு நிற ஆட்டுக்கிடாயை வீழ்த்தவும் அவை சமைக்கப்பட்டு (இன்றைக்கும் மேற்கத்திய அசைவ உணவு வகைகளில் மது சிறிதளவு சேர்க்கப்படுகிறது. அது போல் சொல்கிறாரோ?) தீரவே தீராத அளவிற்கு கொழுத்த துவையலும் ஊனும் கலந்த சோற்றை தொடர்ந்து தரும் செல்வம் நிறைந்து எங்களுடன் நட்புடன் இருந்தாய் முன்னர். இனி மேலும் அப்படி இருப்பாயோ? பாரி மாய்ந்தான் என்று கலங்கிச் செயலற்று நீர் சொரியும் கண்ணுடன் உன்னைத் தொழுது பாடுகிறேன். அழகிய வளையல்களை அணிந்த இந்தப் பெண்களின் நறுமணம் வீசும் திரண்ட கூந்தலுக்கு உரியவர்களைத் தேடிச் செல்கிறோம். நீ வாழ்ந்து போவாய் பெரும் பெயர் கொண்ட பறம்பே. (இளம்பெண்களின் கூந்தலைத் தீண்டும் உரிமை கணவனுக்கு/காதலனுக்கு மட்டுமே உரியது என்பது பழந்தமிழ் மரபு. )
Tuesday, March 18, 2008
TBCD என்று சொன்னால் தான் சரியா? த.பி.கு.தி என்றோ த.பி.உ.தி என்றோ சொன்னால் தான் என்ன?
2. மாற்றுத் தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைப்பேன். அவற்றைப் புழங்குவேன்.
3. இயன்றவரை/தெரிந்தவரை சந்திப் பிழை இல்லாமல் எழுதுவேன்.
இப்படியெல்லாம் என் மனதுக்கிசைந்த முறையில் பேசியும் எழுதியும் வரும் அரவிந்த் தனது பெயரை மட்டும் TBCD என்று வைத்திருப்பதில் எனக்கு இசைவில்லை. அதனால் இந்தப் பரிந்துரைகள்.
த.பி.கு.தி = தமிழ்நாட்டில் பிறந்த குழம்பிய திராவிடன்
த.பி.உ.தி = தமிழ்நாட்டில் பிறந்த உறுதிபடுத்தப்பட்ட திராவிடன்
TBCD என்றால் Tamiznadu born confused dravidian or Tamiznadu born confirmed dravidian என்று தெரியாததால் இரண்டையும் மாற்றித் தந்திருக்கிறேன்.
Monday, March 17, 2008
இவரது நிறை குறைகளைச் சொல்ல எனக்கு முழுத்தகுதி உண்டு தானே?!!
இந்தக் கோரிக்கை வந்தவுடனே நான் முதலில் செய்தது என் மறுப்பைச் சொன்னது தான். இராகவன் உடனே 'யோவ். நீர் மட்டும் மற்றவர்களிடம் விமரிசனம் கேட்டு நச்சரிப்பீர்கள். அவர்கள் கேட்டால் நீங்கள் செய்ய மாட்டீர்களா? உமக்கொரு நியாயம் மற்றவர்களுக்கு நியாயமா?' என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டார். சரி இவரைப் பேசவிட்டால் 2005ல் நடந்ததை எல்லாம் சொல்லிச் சத்தம் போடுவார் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.
மறுநாள் அலுவலகம் சென்ற பின் 'சரி. அப்படி என்ன தான் இவர் எழுதியிருக்கிறார் என்று ஒரு பார்வை தான் பார்ப்போமே' என்று தொடங்கினேன். நான் பதிவுகளில் எழுத வந்த அதே நேரத்தில் தான் அவரும் வந்திருக்கிறார். அவரது முதல் இடுகை அக்டோபர் 2005ல் இடப்பட்டிருக்கிறது. நானும் அந்த மாதத்தில் தான் பதிவுகள் எழுதத் தொடங்கினேன். இப்போது அதனைக் கவனித்தவுடன் 'நல்லவேளை. அவர் தொடர்ந்து எழுதாமல் அடுத்த வருடம் செப்டம்பரில் தான் மீண்டும் பதிவெழுத வந்திருக்கிறார். அவர் 2005லேயே தொடர்ந்து எழுதியிருந்தால் ஆலையில்லாத ஊருக்கு இலுப்பையாக நாம் இருந்திருக்க முடியாது' என்று ஒரு எண்ணம் மனதில் ஓடியது. உண்மை தானே?!!!
2006 ஆகஸ்ட், செப்டம்பரில் ஒளவையாரின் விநாயகர் அகவலுக்குப் பொருள் சொல்ல இன்னொரு பதிவு தொடங்கலாம் என்று எண்ணி 'சீதக்களப செந்தாமரை பூம்பாதச் சிலம்பு...' என்று பொருளை எழுதத் தொடங்கியிருந்தேன். அப்போது வந்தது பாருங்கள் ஒரு இடுகை தமிழ்மணத்தில். உள்ளே சென்று படித்தால் 'அடடா. எவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறார். நாம் எழுதியிருந்தால் வழக்கம் போல் வெறும் கோனார் உரையாகப் போயிருக்கும். இவர் எழுதியதில் எவ்வளவு சுவை' என்று தோன்றியது. பதிவுலகில் ஒத்த மனம் கொண்ட இன்னொரு நண்பர் எனக்குக் கிடைத்துவிட்டார் என்பது அப்போதே தெரிந்துவிட்டது.
பதிவு எழுத வரும் பலரும் பொது புத்தியுடன் செய்யும் ஒன்றைத் தான் இவரும் செய்திருந்தார். அண்ணனுக்கு வணக்கம் என்பது இடுகையின் தலைப்பு. அதில் நானும் வழக்கம் போல் என் பொது புத்தியின் படி ஒரு பழைய பாட்டை இட அதற்கு அவர் சொன்ன பதிலை இன்று பார்த்தால் 'அடடா. தலைவர் அப்போதே இன்றைக்குப் பதில் சொல்பதைப் போலவே சொல்லியிருக்கிறாரே' என்று தோன்றுகிறது. அந்த பதிலிலேயே அவர் நண்பர் ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன்.
அடுத்து அவர் இட்ட இடுகையின் தலைப்பே அவர் என்றென்றைக்கும் தமிழ்மணத்தில் ஒளி வீசும் பதிவராக வலம் வருவார் என்று கட்டியம் கூறியது. அது வரை சுவையாகத் தலைப்பையும் இடவேண்டும் என்று எண்ணினாலும் சிலவற்றை இணைத்துக் கூற மாட்டேன். ஆனால் இவரோ எதிர் எதிராக பொது புத்தியில் பதிந்திருக்கும் சிலவற்றை இணைத்தே தலைப்பை இட்டிருந்தார். அது அவர் இட்ட நான்காவது பதிவு என்று இப்போது சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அவர் தமிழ்மணத்தில் நன்கு அறியப்பட்ட பின்னர் இடப்பட்ட இடுகையைப் போலவே இருக்கும் அந்த இடுகையும் அதில் வந்த பின்னூட்டங்களும்.
திருப்பதியிலும் திருவரங்கத்திலும் நடக்கும் திருவிழாக்களையும் அவற்றின் பின்னணியில் இருக்கும் சுவையான செய்திகளையும் இவர் எழுதிப் படிப்பது தனி இன்பம் தான். எளிமையாக எழுத வேண்டும்; அனைவரும் விரும்பிப் படிக்கும் வண்ணம் எழுத வேண்டும் என்று எண்ணி இந்த இடுகைகளை நீர்த்துப் போகச் செய்துவிடுகிறாரோ என்ற எண்ணம் அவ்வப்போது வருவதுண்டு. ஆனால் 'பொய்யான பேர்வழிகளைக் கண்டு ஆன்மிகம் என்றாலே காத தூரம் ஓடும் நண்பர்கள், அதெல்லாம் நமக்கு புரியாதப்பா என்று விலகும் நண்பர்கள் என்று பலவகையில் ஆன்மிகத்தைக் கண்டு விலகும் நண்பர்களுக்கு ஆன்மிகத்தில் சுவையை ஊட்ட அப்படி எழுதுவது நல்லது தான்; அப்படி வந்து சுவை கண்ட பின்னர் அவர்கள் இன்னும் கனமானவற்றையும் படித்து இன்பம் பெறுவர்' என்ற எண்ணமும் அப்போதே வந்துவிடும்.
சமய இலக்கியங்கள் எதனைப் பற்றிப் பேசினாலும் அதில் இவருக்கு இருக்கும் புலமையைக் கண்டு வியந்ததுண்டு. சமய இலக்கியங்கள் மட்டுமில்லை பழந்தமிழ் இலக்கியங்களிலும் பயிற்சி உண்டு. அந்த வகையில் இவரையும் தமிழறிஞர் என்று சொல்வதில் தட்டில்லை.
யாரைப் பற்றி பேசுகிறேன் என்று தெரிந்திருக்குமே. தெரியாவிட்டால் தமிழ்மணத்தை நீங்கள் அறியாதவர்கள் என்று தெளிவாகச் சொல்லிவிடலாம்.
அவர் திருமலை பிரம்மோற்சவ பதிவுகளை இட்டு பெரும் பெயர் பெற்றவர், புதிரா புனிதமா என்று தலைப்பிட்டு அடிக்கடி தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்பவர், பெருமாளைப் பற்றியே நிறைய பேசுபவர் ஆனால் முருகனையும் சிவனையும் மறக்காதவர், இசை இன்பம் என்ற கூட்டுப் பதிவில் இன்ப இசையை அள்ளித் தருபவர், கண்ணன் பாட்டு பாடுபவர், கற்பூர நாயகியாம் கனகவல்லியைப் போற்றுபவர், நமச்சிவாய வாழ்க என்று புகழ்பவர், முருகனருள் பெற்றவர், திருப்பள்ளியெழுச்சி பாடுபவர், கோதையின் தம்பி - அதனால் கோதையின் மாதவிப்பந்தலைச் சொந்தம் கொண்டவர் - இரவிசங்கர் கண்ணபிரான் (KRS).
இப்போது சொல்லுங்கள் இவரிடம் என்ன நிறை குறைகளைக் கண்டு நான் சொல்வது? அப்படிச் சொல்லும் தகுதியும் எனக்கு உண்டா?
***
இரவிசங்கர் கண்ணபிரான் தன் பதிவின் 'நிறைகுறை'களைப் பற்றி இந்த வாரத்தில் எழுதும் படி மூவரிடம் கேட்டிருப்பதாகச் சொன்னார். முதல்வர் நேற்று அந்த இடுகையை இட்டுவிட்டார். இன்று நான். யானைப்படையை நடத்திக் கொண்டிருப்பவர் நாளை இடுவாரோ என்னவோ?
அவர் மூவரிடம் கேட்டால் என்ன? நாம் இதனை ஒரு தொடர் விளையாட்டாக்கி இன்னும் ஒரு மூன்று வாரம் விளையாடக் கூடாதா? அவர் சென்னை சென்று திரும்பி வருவதற்குள் நாம் எல்லோரும் அவருடைய பதிவுகளின் நிறை குறைகளை அலசி ஆராய்ந்துவிடலாம்.
நான் சிலரை இந்தத் தொடருக்கு அழைக்கிறேன். நீங்கள் இன்னும் சிலரை அழையுங்கள். இப்படியே கண்ணபிரான் இரவிசங்கரை அறிந்தவர்கள் எல்லாம் அவரது இடுகைகளை அலசி ஆராயட்டும்.
1. இராகவன்
2. எஸ்.கே (VSK) ஐயா
3. ஓகை ஐயா
4. வல்லி அம்மா
5. கீதா அம்மா
6. ஜீவா
7. மௌலி
8. மலைநாடான்
9. யோகன் ஐயா
10. வெற்றி
11. கானா பிரபா
12. வெட்டிப்பயல்
பன்னிரு ஆழ்வார்களைப் போல் நீங்கள் பன்னிருவரும் இந்தக் கண்ணபிரானைப் பற்றிப் பாடுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
திரைப்படம்: டிஸ்யூம்
வெளிவந்த வருடம்: 2005
பாடகர்கள்: ஜயதேவ், ராஜலக்ஷ்மி
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
ஹே நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டிப் போட்டு காதல் செய்கிறாய் - முதுகில்
கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை (நெஞ்சாங்கூட்டில்)
ஹே விண்ணைத் துடைக்கின்ற முகிலை
வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை
என்னைத் தேடி மண்ணில் வரவழைத்து
உன்னைக் காதலிப்பதை உரைத்தேன்
இன்று பிறக்கிற பூவுக்கும் சிறு புல்லுக்கும்
காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் இன்னும்
சொல்லவில்லையே இல்லையே
லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க
ஒத்தை சொல்லும் சிக்கவில்லை எதனாலே
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிட்டு
பட்டினியா கிடப்பாளே அது போலே (நெஞ்சாங்கூட்டில்)
சின்னச் சின்னச் செல்லக் குறும்பும் சீனிச் சிரிப்பும்
என்னை சீரழிக்குதே
விறுவிறு என வளரும் பழம்
எந்தன் விரதங்களை வெல்லுதே
உன்னைக் கரம் பற்றி இழுத்து வளை உடைத்து
காதல் சொல்லிடச் சொல்லுதே
வெட்கம் இருபக்கம் மீசை முளைத்து என்னைக்
குத்திக் குத்தியே கொல்லுதே
காதலெந்தன் வீதி வழி கையை வீசி வந்தபின்னும்
கால்கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே
பெப்ரவரி மாதத்திற்கு நாளு ஒன்னு கூடிவரும்
ஆண்டு நாலு காத்திருக்கும் அது போல (நெஞ்சாங்கூட்டில்)
இந்தப் பாட்டிற்கு விளக்கம் வேண்டுமா? சொல்லுங்கள். :-)
***
இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 17 மே 2006 அன்று இட்டது.
பதிவுலகப் பரந்தாமனே சரணம் சரணம்!!!
பதிவுலகப் பரந்தாமனே சரணம் சரணம்!!!
Sunday, March 16, 2008
தமிழகத் திருக்கோயில்கள்
***
இந்த இடுகை 'படித்ததில் பிடித்தது' பதிவில் 14 ஜூன் 2006 அன்று இடப்பட்டது.
Saturday, March 15, 2008
என்னவளே அடி என்னவளே
நான் பி.ஈ. படிக்கும் போது வந்த படம். உன்னிகிருஷ்ணனின் முதல் திரைப்பட பாடல். முதல் தடவையாக இந்தப் பாடலைக் கேட்டது ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியின் நடுவில். நம்ம தலைமையில ஒரு இருபது மாணவர்கள் சேர்ந்து ஒவ்வொரு வார இறுதியிலும் மாணவர் விடுதியில் எங்கள் அறையில் கூடி இறைவழிபாட்டுப் பாடல்கள் (பஜனைப்பாடல்கள்) பாடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் பாடிக் கொண்டிருந்தோம். எங்கள் கூச்சல்(?!!) தாங்க முடியாமலோ இல்லை தற்செயலாகவோ ஒரு நண்பர் அவருடைய அறையில் இந்தப் பாடலை விடுதி முழுக்கக் கேக்கறமாதிரி போட்டுவிட்டார். பல்லவி, அனுபல்லவி எல்லாம் வரும் போது நான் வழிபாட்டு அறைக்குள் தான் இருந்தேன். ஆனால் அதற்கு மேல் என்னால் முடியவில்லை. அருமையான இந்தப் பாடல் அழைக்கிறது. வெளியே வந்து இந்தப் பாடல் முழுவதும் முடியும் வரை அருமையான இந்தப் பாடலை கேட்டுவிட்டுச் சென்றேன். அருமையான குரல், அருமையான இசை, அருமையான கவிதை. கேட்டுப் பாருங்கள். ஒவ்வொரு வரியும் அருமை என்பதால் தனியாக விளக்கம் சொல்லப்போவதில்லை. நீங்களே கேட்டு ரசித்து உங்களுக்குத் தோன்றும் விளக்கத்தைச் சொல்லுங்கள். :)
திரைப்படம்: காதலன்
வெளிவந்த வருடம்: 1993
பாடகர்: உன்னிகிருஷ்ணன்
இசையமைத்தவர்: ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றிவர்: வைரமுத்து (என்று தான் நினைக்கிறேன்)
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் (என்னவளே)
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி (என்னவளே)
கோகிலமே நீ குரல்கொடுத்தால் உன்னைக்
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் (என்னவளே)
***
இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 12 மே 2006 அன்று இடப்பட்டது.
Friday, March 14, 2008
துறவு
ஒரு முறை அசதியின் மிகுதியால் வயல் வரப்பில் தலை வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார். அந்த வழியே சென்ற பெண்கள் இருவர் 'இந்தச் சாமியாரைப் பாரேன். எல்லாத்தையும் விட்டுட்டு வந்தும் தலைக்கு தலையணை வேணுங்கற சுகம் மட்டும் போகலையே. தலைக்கு வரப்பு தேவைப்படுது பாரு' என்று சொல்லிக் கொண்டே சென்றனர். அதனைக் கேட்டுத் துணுக்குற்றப் பட்டிணத்தார் உடனே வரப்பில் இருந்து தலையை எடுத்து காய்ந்த வயல் வெளியிலேயே வைத்துக் கொண்டு உறங்கினார்.
அவ்வழியே சென்ற பெண்கள் திரும்பி வந்தனர். அப்போது பட்டிணத்தார் வரப்பிலிருந்து தலையை எடுத்துக் கீழே வைத்திருப்பதைப் பார்த்து, 'ஆகா. இந்தச் சாமியாரைப் பாரடி. ஒரு சொல் பொறுக்க மாட்டேங்கறார். நாம வரப்புச் சுகம் தேவையா இவருக்குன்னு கேட்டோம். உடனே வரப்புல இருந்து தலையை எடுத்துக் கீழ வச்சுட்டாரு. என்ன இருந்தாலும் நான்ங்கற எண்ணம் போகலை பாரு' என்றாள் அந்தப் பெண்.
படிக்காத அந்தப் பெண்களின் அறிவின் பெருமையை எண்ணி வியந்தார் பட்டிணத்தார்.
***
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 22 ஜூலை 2006 அன்று இட்டது.
ஆழிப் பேரலையா ஆன்மிகப் பேரலையா?
ஆழிப் பேரலை (சுனாமி) என்றாலே எல்லோருக்குமே வருத்தம் தரும் நினைவுகளே வரும். ஆனால் ஆன்மிகப் பேரலை என்றால் சிலருக்கு வருத்தம்; பலருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அப்படி மகிழ்ச்சி அடையும் பலருள் நானும் ஒருவன். ஆன்மிகப் பேரலை என்னும் ஆழிப் பேரலை திங்கள் முதல் தமிழ்மணத்தை மூழ்கடிக்க வருகிறது என்று கட்டியம் கூறவே இந்த இடுகை.
ஆவலுடன் எதிர்பாருங்கள். மற்றவை திங்களன்று தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில்...
Thursday, March 13, 2008
எனக்கு மிகவும் பிடித்த கலவை (வீக் எண்ட் பதிவு 3)
1. பிடிச்ச பாட்டுகளைக் கேட்பதே இன்பம்.
2. அந்தப் பாட்டைக் கொலை செய்யாமல் மறுகலவை செய்து கேட்பது அதிலும் பெரும் இன்பம்.
3. அந்த மறுகலவை செய்யப்பட்டப் பாடலையும் இயற்கைச் சூழ்நிலையில் கேட்பது பெரும் பேரின்பம்.
அந்த மூன்றாவது நிலையைத் தான் இந்தப் பாடல் காட்சி எனக்குத் தந்தது.
இந்தப் பாடலை மறுகலவை செய்தவர்கள் 'சுப்ரபாதம்' என்று குறித்திருக்கிறார்கள். இது சுப்ரபாதம் இல்லை. ஆதிசங்கரரின் மேல் அவரது சீடர் தோடகர் எழுதிய 'தோடகாஷ்டகம்' இது.
***
இதே பாடலை இன்னொரு இயற்கை அழகோடு மறுகலவை செய்திருக்கிறார்கள். அந்தப் படத்தை அடுத்த வாரம் இடுகிறேன். அதற்குள் நீங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். :-)
எண்ணெய்
கடைக்குப் போய் எண்ணெய் வாங்கி வா என்று அம்மா சொன்னால் நாம் என்ன சொல்வோம்? என்ன எண்ணெய் என்று சொல்ல வேண்டாமா என்றுதானே கேட்போம். அதுதானே முறையும் கூட! இருக்கிற எண்ணெய்களில் எந்த எண்ணெய் என்று வாங்குவது? சரி. எண்ணெய்யில் எத்தனை வகை உண்டென்று பட்டியல் போட்டுப் பார்க்கலாமா? முதலில் நல்லெண்ணெய்யில் துவங்குவோம். தலைக்குத் தேய்க்க தேங்காய் எண்ணெய். பிறகு கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் எனப்படும் பனையெண்ணெய், இலுப்பை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், சுளுக்கு நீக்கும் நீலகிரி எண்ணெய், அடுப்பென்ன சமயத்தில் ஆளையே எரிக்கும் மண்ணெண்ணெய் என்று அடுக்குவதில் என்ன சிரமம் இருக்கிறது.
ஆனால் பாருங்கள். இவை அனைத்தும் எண்ணெய்கள் அல்ல. அதாவது எண்ணெய் என்ற வகையைச் சார்ந்தவை அல்ல. அப்படியானால் இவற்றை எப்படி வகைப்படுத்துவது? ஒரு வகை இருக்கத்தான் செய்கிறது. இவை அனைத்தும் நெய் வகையைச் சார்ந்தவை. என்ன தலையைச் சுற்றுகிறதா? உண்மை என்றைக்குத்தான் உடனடியாக விளங்கியிருக்கிறது? தெளிவாகச் சொல்கிறேன். உலகத்தில் ஒரேயொரு வகையான எண்ணெய் மட்டுமே அன்றும் இன்றும் காணப்படுகிறது. ஆனால் அதுவும் நெய் வகையைச் சார்ந்ததுதான். அது என்ன நெய்? எள் நெய். புணர்ச்சி விதிகளால் அது எண்ணெய் ஆனது.
தமிழில் மிருதுவான கொழகொழப்பான திரவங்கள் அனைத்தும் நெய் வகையைச் சார்ந்ததுதான். வெண்மையாக இருக்கின்ற நெய்தான் வெண்ணெய். அது உருகினால் வருவதுதான் நெய். நெய் ஒரு தியாகி. தான் பிறந்த இடத்திற்கே பெயர் கொடுத்திருக்கிறதே! இந்த நெய்தான் முதலில் தமிழன் பயன்படுத்திய நெய். பிறகுதான் வித்துக்களை கல்லுரலிலிட்டு ஆட்டி அரைத்து நெய்யைப் பிரிக்கும் முறைகளைக் கற்றுக் கொண்டான். அவன் கையில் முதன் முதலில் அகப்பட்ட வித்து எள்தான். அந்த எள்ளில் இருந்து பெறப்பட்டதால் எண்ணெய். அதுதான் எண்ணெய்களில் தலைமை. அதன் பண்புகளால் அதற்கு நல்ல எண்ணெய் என்ற சிறப்புப் பெயர் வேறு! சிறப்புப் பெயர் வந்ததால், பழைய பெயர் பொதுப் பெயராயிற்று. நாளாவட்டத்தில் அது எண்ணெய் என்ற புதிய வகையை உருவாக்கிவிட்டது.
வடமொழியில் ஒரு வழக்கு உண்டு. அது "ஜலே கங்கே! தைலே லக்ஷ்மி!". அதன் பொருள்....நீரெல்லாம் கங்கை. எண்ணெய் எல்லாம் இலக்குமி. இங்கே வருகின்ற எண்ணெய் நல்லெண்ணெய். அதாவது நல்லெண்ணெய்யில் இலக்குமி வசிக்கிறாள்.
அன்புடன்,
கோ.இராகவன்
***
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் இராகவனால் 10 மே 2006 அன்று இடப்பட்டது.
உடுக்கை இழந்தவன் கை - 8 (பாரி வள்ளலின் கதை)
"தமிழ்மாறா. நான் சொல்லும் தமிழ் மாறா. உங்கள் வலிமையின் மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையாலும் பாரியின் வலிமையின் மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையாலும் நான் சொன்னது பொய்யாகத் தோன்றுகிறது உனக்கு"
"புலவரே. நாங்கள் உமது அச்சுறுத்தலுக்கெல்லாம் பணியப் போவதில்லை. பாரி தன் மகளிரை எங்களுக்கு மணம் செய்து தரப்போகிறானா இல்லையா என்பதை மட்டும் சொல்லிவிட்டுச் செல்லுங்கள். அவன் மகண்மறுத்தால் இந்த பறம்பு நாடும் பறம்பு மலையும் அவனும் நீறுபடுவர் என்பதை அவனிடம் சென்று சொல்லுங்கள்"
"வளவா. நான் சொல்வதெல்லாம் வழுவா?! பாரியின் குணத்தையும் வலிமையையும் நீங்கள் அறியவில்லை. அதனால் மீண்டும் சொல்கிறேன் கேளுங்கள். எதிர்ப்பதற்கு கடினமான பெரும்படையுடன் நீங்கள் மூவரும் ஒன்றுபட்டுப் போர் செய்தாலும் பறம்பு வெல்வதற்கு அரியது. பறம்பு நாட்டில் முன்னூறு ஊர்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் பரிசிலர் ஏற்கனவே பெற்றுவிட்டனர். நீங்களும் பாடிக் கொண்டு பாணர்களாகச் சென்றால் உங்கள் மூவருக்கும் தருவதற்கு பாரியிடம் மூன்று பொருட்கள் இருக்கின்றன - இந்த குன்றும், பாரியும், நானும் இருக்கிறோம்.
கடந்தடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினர் செலினே"
"மீண்டும் அதையே சொல்கிறீர்களே கபிலரே. எங்கள் நோக்கம் பறம்பு நாட்டைக் கைப்பற்றுவது இல்லை. எங்கள் வேந்தர் குடிகளைக் குறைத்துப் பேசிக் குலமுறை கூறிப் பெண் தர மறுக்கிறானே பாரி. அதனை எதிர்ப்பது. அவனுக்கு நல்லதை அவனிடம் எடுத்துக் கூறுவதை விட்டுவிட்டு இங்கு வந்து எங்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறீர்களே?"
"வஞ்சிப்பதி. பெண்ணைப் பெற்றவன் பெண் தர மறுத்தால் அதனால் படை எடுத்து வஞ்சிப்பதா? அவன் கருத்தைத் தான் தெளிவாகச் சொல்லிவிட்டானே. இன்னும் அதனை ஏற்க மறுத்தால் எப்படி?"
"புலவரே. அவன் கருத்து அதுவானால் எங்கள் கருத்து இது தான். அவன் தன் நிலையிலிருந்து இறங்கி வரும் வரை நாங்கள் எங்கள் முற்றுகையைத் தொடருவோம். சேமித்து வைத்திருக்கும் உணவுப்பொருட்கள் எல்லாம் தீர்ந்த பின்னர் அவன் தன்னையும் தன் சுற்றத்தையும் மக்களையும் காக்க இறங்கி வந்து தானே ஆகவேண்டும்'
"மூவேந்தர்களே. பறம்பு மலையின் வளத்தை அவ்வளவு எளிதாக நினைத்துவிடாதீர்கள். பெருமையுடைய போர் முரசுகளைக் கொண்ட நீங்கள் மூவரும் முற்றுகை இட்டாலும், இந்த மலையிலிருக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு யானையும் இருக்கும் இடமெல்லாம் தேர்களும் கொண்டு படை எடுத்தாலும் உங்கள் முயற்சியால் இந்த மலையை வெல்லமுடியாது. உங்கள் வாள்வலிமை கண்டு அவனும் தர மாட்டான். பறம்பு மலையின் வளமும் மிகப்பெரிது. உழவரால் உழப்படாமலேயே அங்கு நான்கு வகை உணவுப்பொருட்கள் விளைகின்றன. தானே விளையும் மூங்கில் நெல்லும், இனிய சுளையையுடைய பலாப் பழங்களும், வள்ளிக்கிழங்குகளும், மலைத் தேனும் என்ற இந்த நான்கும் இருக்கும் வரை உணவுப்பொருட்களுக்கு எந்த குறையும் வராது. உங்களின் முற்றுகையும் நிறைவேறாது. அதனால் முன்பே சொன்னது போல் விறலியர் பின் தொடர பாணர்களாகப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் சென்றால் நாட்டையும் குன்றையும் எல்லாவற்றையும் உடனே தந்துவிடுவான்.
அளிதோ தானே பாரியது பறம்பே
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே
வான் கணற்று அவன் மலையே வானத்து
மீன் கணற்று அதன் சுனையே ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளிற் கொள்ளலிர் வாளில் தாரலன்
யான் அறிகுவன் அவனது கொள்ளும் ஆறே
சுகிர் புரி நரம்பின் சீறி யாழ் பண்ணி
விரை ஒலி கூந்தனும் விறலியர் பின் வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே"
"உழவர் உழாதன நான்கு வகை உணவுப்பொருட்கள் மலையில் விளைகின்றனவா?! நல்லது கபிலரே. அப்படி என்றால் இப்போதே எங்கள் முற்றுகையை நிறுத்திவிட வேண்டியது தான்"
"பாண்டியரே. என்ன சொல்கிறீர்கள்? கபிலரின் மிரட்டலுக்கு நாம் பணிவதா?"
"வேந்தர்களே. முற்றுகையை இத்துடன் நிறுத்திவிட்டு நேரடி போரில் இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பது என் எண்ணம்"
"ஓ. அப்படி சொல்கிறீர்களா?! நான் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். சேரலரே. உங்கள் கருத்து என்ன?"
"மூவரும் சேர்ந்து தானே இதில் இறங்கினோம். இதில் மட்டும் மாற்றுக் கருத்து வந்துவிடுமா? நானும் உங்கள் இருவரின் கருத்தோடு உடன்படுகிறேன்"
"கபிலரே. பாரியிடம் சென்று எங்கள் முடிவினைக் கூறுங்கள். இன்னும் இரு நாட்களில் நாங்கள் மலையேறத் தொடங்கிவிடுவோம். அதற்குள் போரில் ஈடுபட முடியாத முதியவர்களையும் பெண்களையும் மலையை விட்டு நகர ஏற்பாடு செய்துவிடும் படி சொல்லுங்கள்."
"வேந்தர்களே. முற்றுகையை நீங்கள் எத்தனை நாள் தொடர்ந்தாலும் பரவாயில்லை; பரிசில் வேண்டி வருபவர்களைத் தடுக்காதீர்கள் என்று எடுத்துச் சொல்லத் தான் பாரி என்னை இங்கே அனுப்பினான். அந்த வேண்டுகோளை வைப்பதற்கே இடமில்லாமல் நீங்கள் செய்துவிட்டீர்கள். உங்கள் கருத்தைப் பாரிக்கு அறிவிக்கிறேன். நான் உங்களுக்குத் தந்த அறிவுரைகளை மீறிச் செயல்படுகிறீர்கள். நான் சொன்னவை உண்மை என்பதை நீங்களே நேரடியாகக் கண்டு கொள்வீர்கள்"
"கபிலர் பெருமானே. தங்கள் அறிவுரையை மீறி நடக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் இல்லை. ஆனால் எங்கள் குலத்தைக் குறைத்துப் பேசிய பாரியின் அகந்தையை அடக்காமல் விட்டால் வரலாறு எங்களை மன்னிக்காது. அதனால் தான் இந்த முடிவிற்கு வந்திருக்கிறோம். நீங்கள் சினம் கொள்ளாது எங்கள் தூதுவனாகப் பாரியிடம் சென்று இந்த செய்தியை அறிவிக்க வேண்டும்"
"சேரலா. நீ மிகவும் பணிவானவன். ஆனால் சேரலாக் கூட்டத்துடன் சேர்ந்து செய்யக்கூடாதவற்றைச் செய்யத் தொடங்கிவிட்டாய். நடந்ததைப் பற்றிப் பேசிப் பயனில்லை. இனி நடக்கப் போவதைப் பார்க்கச் செல்கிறேன். வாழ்க தமிழ்"
***
பாடற் குறிப்புகள்:
1. கடந்தடு தானை என்று தொடங்கும் பாடல் புறநானூறு 110ம் பாடல். மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரைக் கபிலர் பாடியது.
திணை: நொச்சி (அரணைக் காக்கும் வீரர்கள் அணியும் மலர் நொச்சி. இங்கே முற்றுகையைத் தவிர்க்கச் சொல்லுதால் இது நொச்சித் திணையானது). இந்தப் பாடல் காஞ்சித் திணை என்றும் சொல்லப்படுவதுண்டு. சான்றோர் அறிவுரை கூறுவது காஞ்சித் திணையாகும்.
துறை: மகண் மறுத்தல் (குலத்தின் பெருமையைக் கூறி பெண் தர மறுத்தல்)
பாடலின் பொழிப்புரை:
எதிரிப்படைகளை வென்று அவற்றைக் கொல்லும் படைகளையுடைய நீங்கள் மூவரும் கூடி போர் செய்தாலும் பறம்பு கொள்ளுதற்கு அரிதானது. குளிர்ந்த பறம்பு நாடு முன்னூறு ஊர்களை உடையது. அந்த முன்னூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றார்கள். நீங்கள் பாடிக் கொண்டு சென்றீர்கள் என்றால் பெறுவதற்கு நானும் பாரியும் இருக்கிறோம்; பறம்பு மலையும் உண்டு.
2. அளிதோ தானே என்று தொடங்கும் பாடல் புறநானூறு 109ம் பாடல். மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரைக் கபிலர் பாடியது
திணையும் துறையும் 110ம் பாடலின் திணையும் துறையுமே.
பாடலின் பொழிப்புரை:
இரங்கத்தக்கது தானோ பாரியின் பறம்பு மலை?! பெருமையுடைய முரசுகளை உடைய நீங்கள் மூவரும் முற்றுகையிட்டாலும், உழவர் உழாமல் விளையும் உணவுப் பொருட்கள் நான்கு வகைகளாய் இருக்கின்றன. முதலாவது சிறிய இலையை உடைய மூங்கிலில் விளையும் நெல். இரண்டாவது இனிய சுளைகளைக் கொண்ட, மரத்தின் மேலிருந்து வேர் வரை விளையும் பலாவின் பழம். மூன்றாவது நன்கு படர்ந்து வளரும் கொடியைக் கொண்ட, நிலத்தின் அடியில் வெகுவாக விளையும் வள்ளிக் கிழங்கு. நான்காவது அழகிய நிறம் கொண்ட நரி பாய்ந்ததால் சிதைந்து தானே மலையிலிருந்து சொரியும் தேன். பறம்பு மலை அகல நீள உயரத்தால் வானத்தைப் போன்றது. அந்த மலையிலிருக்கும் சுனைகள் வானத்திலிருக்கும் விண்மீன்களை ஒத்தன. அந்த மலையில் இருக்கும் மரங்கள் தோறும் கட்டப்பட்ட யானைகளை உடையவராகவும் இருக்கும் புலங்கள் தோறும் நிறுத்தப்பட்டத் தேர்களை உடையவராகவும் உங்கள் முயற்சியால் இந்த மலையை நீங்கள் கொள்ளமாட்டீர்; அவனும் உங்கள் வாள்வலிமைக்குத் தர மாட்டான். அந்த மலையை அடையும் வழியை நான் அறிவேன். முடுக்கப்பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைப் பண்ணி வாசித்துக் கொண்டு நறுமணம் கொண்ட கூந்தலையுடைய உங்கள் விறலியர்களுடன் சேர்ந்து ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றீர்கள் என்றால் அவன் உங்களுக்கு நாட்டையும் குன்றையும் ஆளும் உரிமையை உடனே தருவான்.
Tuesday, March 11, 2008
நான்கே ரூபாய்க்குப் பிள்ளையை வாங்கலாம்!!
நன்றி: தமிழ் மரபு அறக்கட்டளையின் முதுசொம்
தமிழகக் கோட்டைகள்
இரண்டு விஷயங்களில் இந்தக் கட்டுரை என்னைக் கவர்ந்தது.
1. தமிழகத்தில் இருந்த, இருக்கும் கோட்டைகளைப் பற்றி இன்னும் நாம் ஆராய வேண்டியவை எத்தனை உள்ளது என்பதையும் அதற்கு நம் இலக்கியச் சான்றுகளையும் பயன் கொள்ளலாம் என்பதையும் கூறியது.
2. தமிழ்க் கடவுள் முருகக்கடவுள் மட்டும் தானா? தென்னாடுடைய சிவனே என்று சொல்வதால் அவர் பழந்தமிழ் நாட்டில் மட்டும் தான் வழிபடப்பட்டாரா? ஆரியரின் கலப்புக்குப் பின்னால் தான் அவர் வடநாட்டிற்குச் சென்று எந்நாட்டவர்க்கும் இறைவன் ஆனாரா? திருமாலும் பல சங்கக் காலத் தமிழ்ப் பாடல்களில் பாடப்பட்டிருக்கிறாரே; திருமாலின் பத்து அவதாரங்களின் தெய்வீகச் செயல்கள் பல சங்கக் காலப் பாடல்களில் பாடப்பட்டிருக்கிறதே? அப்படியென்றால் ஆரியர் வருகை எப்போது நிகழ்ந்தது? எப்போது கலப்பு (எல்லா விதங்களிலும்) ஏற்பட்டது? சங்கப் பாடல்களைக் கொண்டு முருகப் பெருமானைத் தமிழ்க்கடவுள் என்று நிறுவியதைப் போல் எந்தத் தமிழறிஞரும் மாலவனையும் தமிழ்க்கடவுள் என்று நிறுவ முயலவில்லையா? இல்லை அப்படி செய்த ஆராய்ச்சிகளும் கட்டுரைகளும் இன்னும் என் கண்களில் படவில்லையா? இப்படி ஏராளமான கேள்விகளை என்னுள் எழுப்பியது.
அந்தக் கட்டுரை இங்கே.
***
இந்த இடுகை 'படித்ததில் பிடித்தது' பதிவில் 18 ஏப்ரல் 2006 அன்று இட்டது.
வேஷ்டி: வேட்டி
---
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 3 மே 2006 அன்று இடப்பட்டது.
Sunday, March 09, 2008
யார் கள்வன்?
'சுவாமி. காசி என்னும் புனிதத் தலத்தைப் பற்றி மிகப் பெருமையாக நீங்களும் அடியார்களும் பேசிக் கேட்டிருக்கிறேன். எவராயினும் ஒரு முறை காசிக்குச் சென்று கங்கை நதியில் நீராடி தங்களை விசுவநாதராகத் தரிசித்தால் அளவிட முடியாத புண்ணியங்கள் பெற்று கைலையை அடைந்து இங்கேயே நிரந்தரமாக இருக்கும் பேறு பெறுவார்கள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உண்மையா?'
'தேவி. நீ சொல்வதெல்லாம் உண்மையே. ஆனால் காசிக்குச் செல்லும் எல்லோரும் அந்தப் புண்ணியங்களை அடைவதில்லை. காசிக்குச் செல்லுதல், என்னை வழிபடுதல் போன்ற செயல்கள் மட்டுமே போதுமானவை இல்லை. என்ன செல்கிறேன் என்பது தெளிவாகப் புரிய வேண்டுமானால் நாம் உடனே காசிக்குச் சென்று ஒரு நாடகத்தை நடத்துவோம். அதிலேயே புரியும்'.
ஐயனும் அம்மையும் காசி விஸ்வநாதர் திருக்கோவிலின் முன்பு ஒரு வயது முதிர்ந்த கிழத்தம்பதிகளாகத் தோன்றினார்கள். ஐயன் அம்மையின் மடியில் தலையை வைத்துக் கொண்டு மரண வலியில் துடிப்பதைப் போல் முனகத் தொடங்கினார். கிழவியோ செய்வதறியாது அந்த வழியே செல்பவர்களை எல்லாம் உதவிக்கு அழைத்துப் புலம்பிக் கொண்டிருக்கிறாள். அந்த வழியே கோவிலுக்குள் சென்ற ஒவ்வொரு பக்தரிடமும் 'பெருமானின் அடியார்களே. இங்கு பாருங்கள் என் கணவர் படும் பாட்டை. அவர் கடும் தாகத்தில் இருக்கிறார். எந்த நேரமும் அவர் உயிர் பிரிந்து விடும் போல் இருக்கிறது. யாராவது அவருக்குத் தண்ணீர் கொடுத்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. நான் அவரை இந்த நிலையில் தனியே விட்டுவிட்டுச் செல்ல முடியாது. யாராவது அவருக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்' என்று வேண்டிக் கொண்டிருந்தாள்.
பலரும் புனித கங்கையில் நீராடிவிட்டு கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய கைகளில் சிறிய கிண்ணங்களில் கங்கை நீரை ஏந்திக் கொண்டு சென்றனர். அவர்கள் பாட்டி படும் பாட்டினைப் பார்த்தனர்; அவள் புலம்பல்களைக் கேட்டனர். சிலர் 'அம்மா. கொஞ்சம் பொறுத்துக் கொள். நாங்கள் காசி விஸ்வநாதரைத் தரிசித்துவிட்டு இந்தத் தீர்த்தத்தால் அவரை திருமுழுக்காட்டிவிட்டுப் பின்னர் வந்து உன் கணவரைக் கவனித்துக் கொள்கிறோம்' என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர். சிலர் 'ஓ இது என்ன தொல்லை. இந்தப் பிச்சைக்காரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. நிம்மதியாக இறைவனை வணங்க முடிகிறதா?' என்றார்கள். அதற்குப் பதிலாக சிலர் 'பிச்சைக்காரர்கள் இங்கே அமர்வதை அனுமதிக்கக் கூடாது.' என்று சொல்லிச் சென்றனர். பலர் இதனை எல்லாம் பார்க்கக் கூட இல்லை. அவர்கள் பக்திப் பரவசத்துடன் ஐயனைக் காண நேரே கோவிலுக்குள் சென்று கொண்டிருந்தனர்.
இந்த மக்கள் கூட்டத்தில் ஒரு திருடனும் இருந்தான். அவன் அந்த அம்மையின் அழுகுரலைக் கேட்டான். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் தான் அவன் தன் கைவரிசைக் காண்பிப்பது. என்றும் போல் இன்றும் கோவிலில் அதிக கூட்டம் இருந்ததால் தனக்குச் சரியான வேட்டை என்று தான் எண்ணியிருந்தான். ஆனால் அம்மையின் அழுகுரலையும் தாத்தாவின் வலிமுனகலையும் கண்டு அவன் மனம் பொறுக்கவில்லை. அவன் நேரே பாட்டியிடம் சென்று 'அம்மா. நீங்கள் யார்? ஏன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்? அவருக்கு என்ன?' என்று வினவினான். பாட்டியும் 'மகனே. நாங்கள் காசி விஸ்வேஷ்வரரைத் தரிசிக்க வந்தோம். என் கணவர் திடீரென்று உடல் நலம் குறைந்து மயங்கி விழுந்துவிட்டார். யாராவது அவர் தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தால் அவர் உயிர் பிழைப்பார். அவரை இந்த நிலையில் தனியே விட்டுவிட்டு என்னால் போய் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. நான் எத்தனையோ பேரைக் கேட்டுவிட்டேன். அவர்களில் பலர் தண்ணீர் செம்பினை கைகளில் வைத்திருந்தும் யாருமே தரவில்லை' என்று சொன்னாள்.
அவர்கள் படும் கஷ்டத்தைக் கண்டு கள்வனின் மனம் பொறுக்கவில்லை. உடனே கங்கைக்குச் சென்று கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வந்தான். பாட்டி அவனைத் தடுத்து 'மகனே. என் கணவர் எப்போதும் உண்மையே பேசி உண்மையாகவே நடந்து கொண்டவர்கள் கைகளால் தான் தண்ணீர் அருந்துவார். நீ எப்போதும் உண்மையே பேசினாயா? சொல்' என்று கேட்டாள். திருடனும் ஒரு நொடி தயங்கிவிட்டு 'அம்மா. நான் நல்லவனில்லை. இது வரை நான் அறிந்து ஒரு நல்ல செயலும் செய்ததில்லை. பலரின் பணத்தைத் திருடி அவர்களை கஷ்டத்தில் ஆழ்த்தியிருக்கிறேன்' என்று உண்மையைக் கூறி தலைகுனிந்து நின்றான். பாட்டி அவனிடம் 'இத்தனை நாள் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது உண்மையைச் சொன்னதால் என் கணவருக்குத் தண்ணீர் தரலாம்' என்று சொன்னாள். அதனைக் கேட்டவுடன் அந்தத் திருடனும் மிக்க மகிழ்ச்சியுடன் கிழவனாருக்குத் தண்ணீரைக் கொடுத்தான்.
ஒரு மடக்கு அந்த நீரை தாத்தா குடித்த உடனேயே அந்தக் கிழத் தம்பதியினர் மறைந்து அங்கே ஐயனும் அம்மையும் தோன்றினர். ஐயன் திருடனைப் பார்த்து 'மகனே. நீயே சிறந்தவன். உண்மையைப் பேசுவதை விட மிகச் சிறந்தது ஒன்றும் இல்லை. மக்களுக்குச் சேவை செய்வதை விட சிறந்த வழிபாடு ஒன்றும் இல்லை. நீ இன்று செய்த இந்த நற்செயலால் இதுவரை செய்த அனைத்து தீய செயல்களுக்கும் பரிகாரம் தேடிவிட்டாய்' என்றார்.
***
இந்த இடுகை எனது 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 16 ஜூலை 2006 அன்று இட்டது.
Friday, March 07, 2008
என்ன புண்ணியம் செய்தேனோ?
அழும்தொறும் அணைக்கும் அன்னை - அறிவிலாது ஓடி
விழும்தொறும் எடுக்கும் அப்பன்
விளையாடும் போது தோழன்
தொழும்தொறும் காக்கும் தெய்வம்
சொந்தமாய் எடுப்போர்க்கெல்லாம் குழந்தை
இப்படி உலவும் என் குருநாதன் வாழி வாழி
என்ன புண்ணியம் செய்தேனோ - சத்குருநாதா
எத்தனை தவம் செய்தேனோ - நின் அருள் பெறவே
பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும்
உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது (என்ன)
வாடிய பயிருக்கு பெய்யும் மழையைப் போலே
படர்முல்லை கொடிக்கொரு கொழு கிடைத்தாற் போல
தேடியும் காணாத த்ரவ்யமே சத்குரு
தேவா தேவா சத்குரு நின் அருள் பெறவே (என்ன)
இயற்றியவர்: ஊத்துக்காடு வெங்கட கவி
இராகம்: ரீதி கௌளா
தாளம்: ஆதி
இந்தப் பாடலை தன் கந்தர்வ கானக் குரலில் ஜேசுதாஸ் பாடியதைக் கேட்க இங்கே அழுத்தவும்.
***
இந்த இடுகை 10 மே 2006 அன்று 'கேட்டதில் பிடித்தது' பதிவில் இட்டது.
அன்றே மடக்கப்பட்ட தில்லை அந்தணர்கள்....
***
எறும்புகள் உலகத்தில் எதற்கு விளம்பரம் கொடுத்தாலும் சர்க்கரைக்கு விளம்பரம் கொடுக்க வேண்டுமா? வண்டுகள் உலகத்தில் எதற்கு விளம்பரம் செய்தாலும் மணமிகு மலர்களுக்கு விளம்பரம் தேவையா? தேனீக்களின் உலகத்தில் எதற்கு விளம்பரம் தேவைப்பட்டாலும் தேன் நிறைந்த மலர்களுக்குத் தேவையா? அது போல் தமிழ்ச்சுவை நாடிப் பதிவுகள் படிக்கும் தமிழ்மண நேயர்கள் உலகில் இராகவனின் எழுத்துக்களுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் அடியேன் தமிழ்மணத்திற்கு வந்த புதிதில் அவரின் எந்தப் பதிவைப் படித்து மனம் கிறங்கினேனோ அந்தப் பதிவை நம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால் இந்த அறிமுகம். அண்மையில் அவர் எழுத்துக்களைப் படிக்கத் தொடங்கியவர்கள் இந்தப் பதிவைப் படித்திருக்க மாட்டார்கள். படித்துப் பாருங்கள். அவருடைய தமிழ்ச் சொல்வீச்சு புரியும். அதில் மயங்கி பின்னூட்டம் இட மறந்து விடாதீர்கள் - அங்கும் இங்கும். :-)
***
இந்த இடுகை 30 ஏப்ரல் 2006 அன்று 'படித்ததில் பிடித்தது' பதிவில் இட்டது.
Thursday, March 06, 2008
சிவனைப் பாடினால் தப்பா?
மூன்று இடுகைகளை இட்டு, தமிழ்மண பட்டையின் நிரலையும் இட்டு, தமிழ்மண அனுமதிக்காக இந்தக் குழுப்பதிவு இப்போது காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்தக் குழுப்பதிவிற்கு சிவராத்திரி அன்றே அறிமுகம் தரவேண்டும் என்று இங்கே இந்த அறிமுகம் தந்தேன்.
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
உடுக்கை இழந்தவன் கை - 7 (பாரி வள்ளலின் கதை)
படைகளின் நடமாட்டம் வெகுவாக இருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. மிகச்சிறிய நாடு தானே என்று மூவேந்தர்களும் அளவிற்கு மீறி படைகளையும் திரட்டிக் கொண்டு வரவில்லை. சிறிய படையைக் காட்டியே பாரியைப் பணியச் செய்துவிட முடியும் என்று நம்பினார்கள். அதனால் மலையில் முன்னேறிச் சென்று போரினைத் தொடங்காமல் மலையின் கீழ் முற்றுகை இட்டு அமர்ந்து கொண்டார்கள். முற்றுகை தொடங்கிய சில நாட்களிலேயே பாரியிடமிருந்து தூது வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் நாட்கள் தான் சென்று கொண்டிருந்தன. பாரியிடமிருந்து எந்த செய்தியும் இல்லை. முற்றுகை தொடங்கி ஒரு திங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இனி மேலும் காத்திருக்க முடியாது என்று எண்ணி மலையின் மேல் என்ன நடக்கிறது என்று அறிந்து வர சில ஒற்றர்களை அனுப்பினார்கள்.
***
"பாரி. மூவேந்தர்களின் முற்றுகை தொடங்கி ஒரு திங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் அவர்கள் முற்றுகையைத் தொடரலாம். நமக்கு ஒரு குறையும் இல்லை. ஆனால் இதனை இப்படியே விட்டுவிடுவது சரியா? ஏதேனும் செய்ய வேண்டும்"
"சரியாகச் சொன்னீர்கள் கபிலரே. முற்றுகை தொடங்கிய நாள் முதல் பரிசிலர்களும் வரவில்லை. அவர்களை வேந்தர்களின் படைகள் மலைக்குக் கீழேயே தடுத்து நிறுத்திவிடுவதாக ஒற்றர்கள் வந்து சொன்னார்கள். வேந்தர்களின் ஒற்றர்களும் மலையின் மேல் திரிவதாகச் செய்தி வந்திருக்கிறது. மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும் பரிசில் வேண்டி வருபவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் வந்து செல்லும் வண்ணம் நிலையை மாற்றுவது மிகவும் தேவையானது"
"உன்னிடம் பல முறை பேசிப் பார்த்துவிட்டேன். நீ மூவேந்தர்களுக்குப் பணிந்து உன் மக்களை மணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாய். அதனால் முற்றுகையை முடிப்பதற்கு என்ன வழி என்று எனக்குப் புரியவில்லை. என்ன செய்யலாம் என்று நீ நினைக்கிறாய்?"
"ஐயனே. நீங்கள் பெரும் புலவர் என்பதால் மூவேந்தர்களுக்கும் உங்கள் மேல் பெரும் மதிப்பு இருக்கின்றது. அவர்களிடம் நீங்கள் சென்று நம் கருத்தினை இன்னும் தெளிவாகச் சொல்லிப் பார்க்கலாமே. பரிசிலர்களுக்கு ஏற்படுகின்ற துன்பத்தைப் பற்றியும் சொல்லிப் பாருங்கள். அவர்கள் தொடர்ந்து இங்கே வந்து சென்றால் எனக்குப் போதும். முற்றுகை எத்தனை நாள் நீடித்தாலும் கவலையில்லை"
"நீ சொல்வது சரியாகத் தான் தோன்றுகிறது பாரி. இன்றே மூவேந்தர்களைக் காண நான் செல்கிறேன். அவர்களிடம் பேசி முற்றுகையை நீக்கக் கோருகிறேன்"
மூவேந்தர்களிடம் பேசும் போது பாரியின் பெருமைக்கு எந்த வித இழிவும் வராமல் பேசுவது நண்பனாகியத் தன் கடமை என்று எண்ணிக் கொண்டார் கபிலர்.
***
ஒற்றர்களின் மூலம் மூவேந்தர்களுக்கும் பாரியிடமிருந்து கபிலர் வரும் செய்தி அறிவிக்கப்பட்டது. இறுதியில் பாரி இறங்கி வருகிறான் என்று மூவரும் மகிழ்ந்தனர். கபிலர் வருவதை எதிர்பார்த்து அவர் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
"வாருங்கள் புலவர் பெருமானே. தங்கள் வரவு எங்கள் மூவருக்கும் இந்தப் பறம்பு நாட்டிற்கும் நன்மை விளைவிக்கட்டும்"
"பாண்டியா. உன் வரவேற்பிற்கு நன்றி. ஒரே நேரத்தில் உங்கள் மூவரையும் ஒரே இடத்தில் காண்பது மிகவும் அரிதான ஒன்று. அது இன்று நிகழ்ந்தது என் பெரும் பேறு தான்"
"புலவரே. நீங்கள் பாரிவேளிடமிருந்து வருவதாக அறிகின்றோம். பாரியிடமிருந்து ஏதேனும் செய்தி உண்டா?"
"புகார்க்காவலா. நீ அறிந்தது சரியே. பாரியிடமிருந்து தான் வருகிறேன். உங்கள் தூதுவர்களிடம் அவன் என்ன செய்தி அனுப்பினானோ அதே செய்தியைத் தான் என் மூலமும் அனுப்பியிருக்கிறான்"
"என்ன? இவ்வளவு நாட்கள் முற்றுகை இட்ட பின்னரும் பாரி பணியவில்லையா? பெரும் வியப்பு தான்"
"வஞ்சிக்காவலா. பாரியின் இயற்கை அது தான். அவனை வென்று இந்தக் குன்றினை நீங்கள் கொள்ளுதல் என்பது மிகக் கடினம். இப்படி முற்றுகை இடுவதை விடுத்து வேறு வகையில் இந்தக் குன்றினைக் கொள்ள வழியுள்ளதா என்று பார்க்கலாம்"
"புலவரே. இந்தச் சிறு குன்றை வெல்வது தான் எங்கள் நோக்கம் என்று நினைத்துவிட்டீர்களா? நாங்கள் நினைத்தால் ஒரே நாளில் இந்தக் குன்றை வென்றுவிடுவோம். நாங்கள் வந்த நோக்கம் என்ன என்று உங்களுக்குத் தெரியாதா?"
"நன்றாகத் தெரியும் வேந்தர்களே. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவே நிறைவேறாது. அதனால் தான் பறம்பு மலையையாவது நீங்கள் வென்றுவிடப் பாருங்கள் என்று சொன்னேன். அப்படி பறம்பு மலையை வெல்வதும் உங்கள் படை வலிமையால் நிகழாது. அதற்கு வேறு வழி உண்டு"
"எங்கள் படை வலிமையாலும் இயலாத ஒன்று வேறு வழியின் நடக்குமா? அந்த வழி எது கபிலரே?"
"மூவேந்தர்களே. இந்த கரிய பறம்பு மலை உங்கள் படைகளால் எளிதாக வெல்லக் கூடியது; ஆனால் நீங்கள் இரங்கி அதனை வெல்லாமல் விட்டு வைத்திருப்பதாகத் தானே எண்ணியிருக்கிறீர்கள்?! அது தவறு. உங்கள் வேல் வன்மையால் இந்தக் குன்றை வெல்லுதல் மிக அரிது. ஆனால் இந்தக் குன்றை வெல்வது இன்னொருவருக்கு மிக எளிது. யார் அவர் தெரியுமா? கருநிற மலரைப் போலுள்ள எல்லோரையும் விழுங்கும் கண்கள் கொண்ட சிறுபறை ஏந்திய விறலி பாடிக் கொண்டு வந்தால் அவளுக்கு அது எளிது.
அளிதோ தானே பேரிருங்குன்றே
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே
நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதாம் பாடினள் வரினே"
இந்தப் பாடலைக் கேட்டதும் மூவேந்தர்களின் முகத்திலும் எள்ளல் குறி தோன்றியது.
***
பாடல் குறிப்பு:
புறநானூறு 111ம் பாடல்.
திணை: நொச்சி (அரணைக் காக்கும் வீரர்கள் அணியும் மலர் நொச்சி. இங்கே முற்றுகையைத் தவிர்க்கச் சொல்லுதால் இது நொச்சித் திணையானது). இந்தப் பாடல் காஞ்சித் திணை என்றும் சொல்லப்படுவதுண்டு. சான்றோர் அறிவுரை கூறுவது காஞ்சித் திணையாகும்.
துறை: மகண் மறுத்தல் (குலத்தின் பெருமையைக் கூறி பெண் தர மறுத்தல்)
பாடலின் பதவுரை:
அளிது: இரங்கத் தக்கது.
பேரிரும்: மிகப்பெரிய (பெருமையில் சிறந்த)
வேறல்: வெல்லுதல்
கிணை: சிறுபறை
பாடினள் வரினே என்று குறிப்பிட்டுக் கூறியது தன் பெண்மையின் அழகாலும் அவள் இந்தக் குன்றினை அடைய முடியாது; ஆனால் பாடிக் கொண்டு வந்தால் முடியும் என்று சொல்வதற்காக.
Wednesday, March 05, 2008
அவசியம், அநாவசியம், அத்தியாவசியம்....
அவசியம், அநாவசியம், அத்தியாவசியம் இம்மூன்றும் வடமொழிச் சொற்கள். அவை வடமொழி என்பதையே மறுக்கும் அளவிற்கு இன்று மக்களிடையேயும் தொலைக்காட்சிகளிலும் புழங்குபவை. அவசியம் என்பதற்குத் 'தேவை, தேவையானது/வை,வேண்டியது/வை' போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அநாவசியம் என்பதற்குத் 'தேவையற்றது/வை, வேண்டாதது/வை' போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அத்தியாவசியம் என்பதற்கு 'இன்றியமையாதது/வை' என்பதனைப் புழங்கலாம். ஆனால் நம்மவர்கள் தான் மிகத் தெளிவானவர்கள் ஆயிற்றே. க்யூ வரிசை, சாப்புக் (Shop) கடை போன்றவற்றைப் போல இன்றியமையாதது என்று சொல்ல 'அவசியத் தேவை' என்பார்கள். :-)
***
இது 'சொல் ஒரு சொல்' பதிவில் 25 ஏப்ரல் 2006 அன்று இட்ட இடுகை.
தினமலர் சொல்வது உண்மையா?
இதோ தினமலர் செய்தி:
05. சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடினர் தமிழ் ஆர்வலர்கள் : மாலை மரியாதையுடன் தீட்சிதர்கள் வரவேற்பு
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழ் ஆர்வலர்கள் ஐந்து பேர், 10 நிமிடம் தேவாரம் பாடினர். மாலை மரியாதையுடன் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர் தீட்சிதர்கள்.
சிதம்பரம், நடராஜர் கோவிலில் திருச்சிற்றபல மேடையில் தேவாரம், திருவாசகம் பாட சிவனடியார் ஆறுமுகசாமி முயற்சித்தார். 2005 ம் ஆண்டு முயற்சித்த போது தாக்கப்பட்டார். சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட தடைவிதிக்கப்பட்டிருந்தது. மேல் முறையீட்டில், பூஜை காலங்களை தவிர பிற நேரங்களில் பாடலாமென கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து, அறநிலையத் துறையிடம் தீட்சிதர்கள் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்து, `பாடலாம்' என்று, கடந்த 29ம் தேதி அறநிலையத் துறை செயலர் சந்தானம் உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 2 ம் தேதி, சிவனடியார் ஆறுமுகசாமி தனது ஆதரவாளர்களுடன் நடராஜர் கோவிலுக்கு தேவாரம் பாடச் சென்றார். அப்போது மோதல் ஏற்பட்டது. தீட்சிதர்கள் தரப்பில் 11 பேரும், ஆறுமுகசாமி தரப்பில் 34 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தீட்சிதர்களுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக அரசு, `தமிழ் ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் கோவிலில் தேவாரம் பாடலாம்' என்று, உத்தரவிட்டது. அதை தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் முன்னணி, விவசாய விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம், மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் தெற்கு வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் முற்பகல் 11.05 மணிக்கு கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர். கோவில் தெற்கு வீதி கோபுர நுழைவு வாசலில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, 30 பேரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க முடியும். தேவாரம் பாட திருச்சிற்றம்பல மேடை மீது ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கூறினர். அதனை ஒப்புக் கொண்டனர். 30 பேரையும் `மெட்டல் டிடக்டர்' கருவியால் சோதித்த பின் கோவிலுக்குள் அனுமதித்தனர்.
சிதம்பரம் உதவி எஸ்.பி., செந்தில்வேலன் தலைமையில் இரண்டு சப் -இன்ஸ்பெக்டர் உட்பட 15 போலீசார் சட்டை அணியாமல் திருச்சிற்றம்பல மேடையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் ஆர்வலர்கள் பொய்யூர் முருகன், ஆயுதகளம் சண்முகம் ஆகியோர் தலைமையில் சீர்காழியை சேர்ந்த ஏழுமலை, ரவி, ராஜேந்திரன் ஆகியோர் திருச்சிற்றம்பல மேடைக்கு சென்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். தீட்சிதர்கள் தரப்பில் தன்வந்திரி, சிவா ஆகியோர் தலைமையில் எட்டு தீட்சிதர்கள் மட்டுமே சிற்றம்பல மேடைக்குள் அனுமதிக்கப்பட்டனர். திருச்சிற்றம்பல மேடையில் காலை 11.15 மணி முதல் 10 நிமிடங்கள் தேவாரம் பாடினர். மேடைக்கு கீழே நின்ற பக்தர்களும் சேர்ந்து பாடினர். பாடி முடித்ததும் நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தேவாரம் பாடிய தமிழ் ஆர்வலர்களுக்கு, தீட்சிதர்கள் தரப்பில் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து கவுரவம் செய்யப்பட்டது. போலீசாரும் கவுரவிக்கப்பட்டனர். பாடிமுடித்து திருச்சிற்றம்பல மேடையில் இருந்து இறங்கிய தமிழ் ஆர்வலர்களை, போலீசார் பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்தனர். கோவிலைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நன்றி: தினமலர்