Wednesday, May 28, 2008

கொடையா தானமா?

சொல் ஒரு சொல்லிற்காக நம் கோவி.கண்ணன் அண்ணா எழுதி அனுப்பிய இந்தக் கட்டுரை சிற்சில மாற்றங்களுடன்...

***

மழை கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம் என்ற அருமையான கவியரசர் பாடல் கர்ணன் படத்தில் இடம்பெற்றது. நாம் வடமொழியை உள்வாங்கி தமிழின் கையிருப்பைத் தானம் செய்த பலவற்றில் ஒன்று தமிழில் இருக்கும் 'கொடை' என்ற சொல். கடையேழு வள்ளல்களைச் சிறப்பிக்கும் போது மறக்காமல் கொடை வள்ளல்கள் என்கிறோம். கோவில்களில் ஒரு குழல் விளக்கைக் கொடையாகக் கொடுத்து மறக்காமல் தன் பெயரை கொட்டை எழுத்தில் எழுதி வைப்பவரையும் கொடை வள்ளல் என்கிறோம்.

எங்கள் ஊரில் ஆடிமாதம் மாரி ஆத்தாவுக்கு கஞ்சி காய்சி ஊற்ற தண்டோரா போட்டுச் சொல்லிச் செல்வார்கள். மறுநாள் நன்'கொடை' கேட்டு விழா அமைப்பாளர்கள் வந்து பெருள் வாங்கிச் (வசூல் வேட்டைக்கு) செல்வார்கள். பொருட்கள் பணமாகவோ, படிக்கணக்கில் பச்சை அரிசி, பச்சை பயிறு, தேங்காய் போன்றைவைகளாகவோ கொடுக்கப்படும். விழாவில் நன்பகலில் கோவிலுக்கு அருகில் விறகு அடுப்பு மூட்டப் பட்டு பெரிய பானையில் கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். அந்த பச்சரிசிக் கஞ்சி மிகவும் சுவையாக இருக்கும். கூடவே முருங்கைக் கீரை துவட்டல், மாவிளக்கு மாவு ஆகியவை கிடைக்கும். மாலை அலங்காரக் காவடி அம்மன் கோவிலுக்குச் செல்வதுடன் விழா முடியும்.

ஈகை, கொடை, தானம் எல்லாம் தமிழர் மற்றும் இந்தியர்களின் பண்பு நலன்கள். விபத்து கால அவசரத்திற்கு என்ன என்ன தேவைப்படுகிறது ? இரத்தம் தானே. அதனை இரத்ததானம் என்கிறோம். குருதி என்றால் இரத்தம் என்று எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் அதிகமாக இரத்தம் என்றே சொல்கிறோம்.

இரத்த தானம் என்பதை அழகாக குருதிக் கொடை என்று சொல்லலாம். கண் தானம் என்பதை கண் கொடை என்று சொல்லலாம். இதுவே வடமொழியில் நேத்ர தானம் என்கிறார்கள். உடல் உறுப்புகள் தானங்களை உறுப்புக் கொடை என்று சொல்ல முடியும் அந்த வகையில் சிறுநீரகக் கொடை, கல்லீரல் கொடை என்று சொல்லலாம்.

ஈதல், ஈகை, கொடை என்று திருவள்ளுவர் கொடைகளுக்கு குடை பிடித்து நிழல் கொடுத்திருக்கிறார் நாம் நிழலை விட்டு ஒதுங்கியே காய்கிறோம். தமிழ் மழையில் நினையும் போது தானத்தை தானம் செய்துவிட்டு கொடை வைத்துக் கொள்வோமா? எளிதான சொல்தானே !

6 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 09 ஜனவரி 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

25 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் [GK] said...
குமரன் அவர்களே,

கட்டுரைக்கு உங்கள் வலைப்பக்கத்தில் நன்கொடை கொடுத்ததற்கும், பிழைகள் திருத்தி வெளியிட்டதற்கும் நன்றி.

வடமொழியில் கோ தானம், பூ தானம், வஜ்ர தானம் என்பதை தமிழில் அழகாக பசுக் கொடை, நிலக் கொடை மற்றும் ஆடைக் கொடை என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மீண்டும் நன்றி !

January 09, 2007 7:34 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் கோவி.கண்ணன் அண்ணா.

ஆடைக் கொடை என்பது வஸ்த்ர தானம். வஜ்ரம் என்றால் வைரம்.

January 09, 2007 7:39 AM
--

கோவி.கண்ணன் [GK] said...
//ஆடைக் கொடை என்பது வஸ்த்ர தானம். வஜ்ரம் என்றால் வைரம். //

ஆமாம் குமரன்... தவறாக எழுதிவிட்டேன்... வஜ்ரம் என்றால் உறுதியான என்ற பொருளும் இருப்பதாக அறிகிறேன்

January 09, 2007 8:01 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் அண்ணா. வஜ்ரம் என்றால் உறுதிமிக்க வைரம் பாய்ந்த என்ற பொருள் உண்டு. வஜ்ராயுதம் என்னும் போது வைரத்தால் செய்யப்பட்ட ஆயுதம், உறுதிமிக்க வெல்ல முடியாத ஆயுதம் என்ற பொருட்கள் வரும்.

January 09, 2007 4:22 PM
--

மலைநாடான் said...
குமரன்!

ஈழத்தில் அதி உயர் தியாகம், தற்கொடை எனவே போராளிகளாலும், மக்களாலும் போற்றப்படுகிறது. அறிந்திருப்பீர்களென நினைக்கின்றேன்.

January 09, 2007 6:02 PM
--

SK said...
இந்த கொடை, தானம் பற்றி சில கருத்துகள்!

கொடை என்பது கொடுப்பது!
தானம் அளிப்ப்து!

பிறருக்குத் தேவை என்னும் போது கொடுக்கணும், தன் கை உயர்த்தி![கொடை]

தனக்கு அதிகம் உள்ளதை அளிக்கணும் கை தாழ்த்தி![தானம்]

மனமுவந்து கொடுக்கணும் தன்னிடம் அதிகமா உள்ளதை![நன்கொடை]

வறியவர்க்குக் கொடுப்பது ஈகை!

தன் கஷ்டம் பார்க்காமல், இன்னொரூவருக்கு உதவுவது கொடை!

ஒரு முகாம்ல போய் தன்னிடம் அதிகமாக இருக்கும் ரத்தத்தைக் "தானமாக" அளிக்கிறார்கள்!

நம்மால் முடியும் என்னும் நிலையில், ஒரு கோயிலில் "பெயர் போட்ட ட்யூப்லைட்டை" தருவது நன்கொடை!

'அம்மா,தாயே!' என்று கேட்கையில் கொடுப்பது ஈகை!

எல்லாவ்வற்றையும் கொடை, கொடை எனச் சொல்வது சரியில்லை என நினைக்கிறேன்!

ஒருவர் இறந்த பின்னரே, அவரது கல்லீரல் கொடுக்கப்படும்!!
அது கொடையல்ல!!

சிறுநீரகம் விற்கப்படுகிறது, பெரும்பாலும்!

இறந்தபின் எடுக்கப்படும் சிறுநீரகமும் கொடையாகாது!

கண்களும் அதுபோலவே!

இறந்தபின் அவருக்கு அது அதிகமானதே!தேவையில்லாததே!

அப்போது, அது தானம்தான்!

தமிழ் மழையில் நனையவேண்டும் என்பதற்ற்காக, தவறான குடை பிடிக்க வேண்டாம்!

January 09, 2007 9:12 PM
--

SK said...
கொடுப்பது கொடை
எடுப்ப்பது[அளிப்பது] தானம்
மனதாரக் கொடுப்பது நன்கொடை
இடுவது ஈகை

January 09, 2007 9:14 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. தங்கள் விளக்கத்திற்கு ஏற்ற வகையில் சில இலக்கிய எடுத்துக்காட்டுகள் இருந்தால் தாருங்கள்.

January 09, 2007 9:28 PM
--

SK said...
kotai (p. 301) [ koṭai ] , v. n. (kotu) a gift, a present.

ikai; liberal giving;

kotai kotukka, to give large gifts;


nankotai, a generous gift.

அகராதியில் உள்ளபடி!

'கொடு' என்பதின் விரிவுதான் கொடை.

அதிகம் கொடு= நன்கொடை

இடுவது= ஈகை

'தேனா'= அளித்தல்= தானம்

வறியார்க்கொன்று ஈவதே ஈகை= [221]

கொடை அளி செங்கோல் குடியோம்பல்=[390]

தானம் தவம் இரண்டும்= [19]]

வள்ளுவன்

January 09, 2007 9:46 PM
--

வடுவூர் குமார் said...
"கொடை"- ஞாபகம் வைத்துள்ளேன்.தேவை வரும் போது போட்டுக்கொள்கிறேன்.
நன்றி

January 09, 2007 9:46 PM
--

கோவி.கண்ணன் [GK] said...
தானம் என்ற வடச்சொல் தமிழில் ஒரு இடைச்சொருகல் சங்க கால இலக்கியம் எதிலும் இல்லை திருகுறள் உட்பட, அதற்கு திருக்குறளில் கூட பலகுறள்கள் இருக்கின்றன

கொடை வள்ளல் - கொடுப்பவர், அளிப்பவர் என்றாலும் அது ஒரே பொருள்தான். உடல் உறுப்புக்களை காசுக்கு விற்பவர்களைப் பற்றி நாம் சொல்லவில்லை இருக்கும் இரண்டில் ஒன்றைக் கொடுப்பவற்றைத்தான் கொடை என்கிறோம்.

கேட்பவருக்கு கொடுப்பது ஈகை, ஈதல் (பிச்சை), கேட்காமல் அறிந்து தன்னிடம் உள்ளவற்றை கொடுத்து உதவுதல் கொடை. கர்ணன் ஒரு கொடை வள்ளல் ஏனென்றால் தன்னிடம் உள்ளவற்றை கொடை உள்ளத்தால் மகிழ்வுடன் கொடுத்தான். முல்லைக்கு தேர்கொடுத்த பாரி ஒரு கொடை வள்ளல் அதுவும் கேட்காமல் கொடுத்தது.

தானமும் கொடையும் வேறென்றால் தமிழ் இலக்கியத்தில் தானத்தைப் பற்றி பேசவில்லை என்று எஸ்கே ஐயாவின் விளக்கத்தின் மூலம் தெரிகிறது.

இராமகி ஐயாவின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

January 09, 2007 9:48 PM
--

Senthil said...
சிங்கப்பூர் பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சியில் கி.வீரமணி அவர்கள் கொடை என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார்.அவர் பேச்சில் நான் அறிந்த வரை வடமொழி இல்லை.

அதுதான் கோவி கண்ணனை எழுத தூண்டியதோ?

அன்புடன் சிங்கை நாதன்.

January 09, 2007 10:42 PM
--

கோவி.கண்ணன் [GK] said...
//Senthil said...
சிங்கப்பூர் பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சியில் கி.வீரமணி அவர்கள் கொடை என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார்.அவர் பேச்சில் நான் அறிந்த வரை வடமொழி இல்லை.

அதுதான் கோவி கண்ணனை எழுத தூண்டியதோ?

அன்புடன் சிங்கை நாதன்.
//
செந்தில்,

நீங்கள் சொல்வது சரிதான்...வீரமணி ஐயா பேசும் போது குறுதி கொடைபற்றி பேசினார். அதன் பிறகு அதைப் பற்றி சிந்தித்து எழுதினேன்.

திருக்குறளில் பல வடசொற்கள் உண்டு. திருகுறளில் இருக்கிறது என்பதற்காக அப்படியே பயன்படுத்தலாம் என்று கொள்ள முடியாது.

தான பிரபு என்பது கொடை அளிப்பவர் என்ற பொருளில் தான் வருகிறது என்று நினைக்கிறேன்.

தமிழ் கொடை என்பதும் தானம் என்பதும் வேறு வேறு பொருள் என்றால் வடமொழியில் கொடை என்பதற்கு வேறு பதம் உள்ளதா என்பது தெரியவில்லை.

January 10, 2007 7:17 AM
--

G.Ragavan said...
தானம் என்ற சொல் இன்று நிறைய பயன்பாட்டில் வந்து விட்டது. ஆனால் கண்டிப்பாக தானத்திற்கு மாற்றாக கொடையைத் தயங்காமல் பயன்படுத்தலாம் என்றே நம்புகிறேன். ஆனால் ஈகையும் கொடையும் வெவ்வேறு. எஸ்.கே சுட்டிக் காட்டிய குறளே நல்ல எடுத்துக்காட்டு.

January 10, 2007 8:47 AM
--

ஜெயஸ்ரீ said...
திருக்குறளில் தானம் என்ற சொல் வந்துள்ளது

"தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்"

January 10, 2007 9:04 AM
--

ஜெயஸ்ரீ said...
ஆனால் இங்கு "தானம்" இல்லறம் என்ற பொருளில் வந்துள்ளது.

January 10, 2007 9:06 AM
--

ஜெயஸ்ரீ said...
தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவருக்கும் , எளியவருக்கும், இரப்பவருக்கும் அளிப்பது ஈகை.

பூதானம், கோதானம் முதலியவை ஒரு குறிப்பிட்ட பயனுக்காக தக்கார்க்கு (தீவினைப் பயனை அகற்றவோ நல்வினைப் பயன் சேர்க்கவோ) அளிக்கப்படுபவை.

"ஞானமே முதலா நான்கும் நவையறத் தெரிந்து மிக்கார்
தானமுந் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார்" - தேவாரம்

"ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செய்தல் அரிது
தானமும் தவமும் தான்செய்வாராயின்
வானவர் நாடு வழிதிறந்திடுமே" - ஔவை

January 10, 2007 10:03 AM
--

SK said...
19-தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, *பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும்*, தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.

January 10, 2007 10:26 AM
--

குமரன் (Kumaran) said...
மலைநாடான்,

தன்னையே நாட்டிற்காகவும் இனத்திற்காகவும் கொடையாகக் கொடுப்பதை தற்கொடை என்று சொல்வார்கள் என்று இதுவரை அறியேன். சொன்னதற்கு மிக்க நன்றி.

January 10, 2007 10:56 AM
--

குமரன் (Kumaran) said...
பின்னூட்டங்களை எல்லாம் படித்த பிறகு எனக்கு 'தானம்' என்பதே வட சொல் தானா இல்லை தமிழ்ச்சொல்லாக இருந்து வடமொழியில் மிகுதியாகப் புழங்கியதால் வடசொல்லாகத் தோற்றமளிக்கிறதா என்ற ஐயம் வந்துவிட்டது.

சங்ககாலத்திலேயே வடசொற்கள் தமிழில் சேர்ந்திருக்கிறது; அவை இலக்கியங்களிலும் வருகின்றன என்றாலும் தானம் வடசொல் தானா என்று சரியாகத் தெரியவில்லை.

தேனா வில் இருந்து தானம் வந்ததா தானம் என்பதிலிருந்து தேனா வந்ததா என்பதும் கேள்வி.

வடமொழியில் 'கொடுத்தல்' என்பதற்குரிய வினைச்சொல் என்ன? தத்த (Datta) என்ற சொல் நினைவிற்கு வருகிறது. Dhenaa என்பது வடமொழியில் இருக்கிறதா தெரியவில்லை; அது ஹிந்தியில் இருக்கிறது.

January 10, 2007 11:04 AM
--

ஓகை said...
எஸ்கேயின் விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருக்கிறது. ஆனாலும் இது தொடர்பாக இராமகி ஐயா போன்ற அறிஞர்களே முழுமையான விளக்கம் தர முடியும் என நினைக்கிறேன்.

ஈதலிலிருந்து ஈகை,
கொடுத்தலிலிருந்து கொடை மற்றும்
தருதலில் இருந்து தானமும் வந்திருக்கலாம். பல வடசொற்களின் வேர்ச்சொற்களை ஆராயும் போது அவை தமிழாக இருப்பதாக இராமகி சொல்லியிருக்கிறார். தானமும் அப்படி இருக்கலாம்.

பல இடங்களில் கொடைக்கு பதிலாக தானத்தையும் தானத்துக்குப் பதிலாக கொடையையும் போட்டால் பொருள் மாறுவதில்லை. ஆனால்

ஒரு அவ்வையார் பாடல் (வெண்பா):

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தகையும்
கொடையும் பிறவிக் குணம்.

இப்பாடலில் கடைசி அடியில் கொடைக்குக் பதிலாக தானம் என்று போட்டால் பொருள் சரியாக வரவில்லையே, ஏன்?

தானம் என்பது வெறும் பெயர்ச்சொல்லாக இருக்கிறது. கொடை தொழிற்பெயராகவும் இருக்கிறது. ஈகையும் தொழிற்பெயர்தான்.

January 10, 2007 11:44 AM
--

SK said...
வடமொழியும், தமிழுக்கு இணையான பழைமை வாய்ந்ததுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள், குமரன்.

மேலும், அக்காலத்தில் இவை இரண்டு மட்டுமே புழக்கத்தில் இருந்தமையால், இருபாலும் சொற்கலப்புகள், நட்புரவுடனேயே நடந்திருக்கின்றன.

இப்போது போல, சண்டையெல்லாம் அப்போது இல்லை!

வடமொழியில் இருக்கும் "தானம்" dhaanam], தமிழில் 'தானம்'[thaanam] ஆயிற்று, வடமொழி போல் 4 வித 'த'[tha, Tha, dha, Dha] தமிழில் இல்லாததால்.

கட்டபொம்மன் அரசவையில் இருந்த 'தானாதிபதி சிவசுப்ரமணியம் பிள்ளையை" நினைவிருக்குமே!

அக்காலத்தில், எவரெவர் தானத்திற்கு உரியவர் என்பதை முடிவு செய்வதற்கென்றே ஒரு அதிகாரி எல்லாம் இருந்திருக்கிறார்.

தி.கு. 295 லும் இந்த தானம் மீண்டும் வந்திருக்கிறது.

நான் சொல்லியிருப்பது போல, "ஒரு சில சிறிய வேறுபாடுகளுடன்" இந்த தானம், கொடை, ஈகை, நன்கொடை என்பது தமிழில் பரவலாக வழங்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் ஒரே 'கொடைக்குள்' கொண்டு வந்தால் பொருள் மாறிப் போகலாம்!

நன்றி!

January 10, 2007 11:56 AM
--

குறும்பன் said...
தானம் தமிழிலிருந்து வட மொழிக்கு சென்றிருக்கலாம். வட மொழியில் உள்ளது என்பதால் இது தமிழ் அல்ல என்று கூறமுடியாது அல்லவா? இராம.கி போன்றோர் தான் விளக்கவேண்டும்.

கொடை என்ற சொல்லுக்கு உள்ள மதிப்பு தானத்திற்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

January 11, 2007 6:23 PM
--

இலவசக்கொத்தனார் said...
நான் சிறுவனாக இருந்த பொழுது ஒரு பிரசங்கத்தில் எஸ்.கே. ஐயா சொன்ன விளக்கத்தைக் கேட்டு இருக்கிறேன். அதுவும் அந்த கை மேலிருந்து கொடுக்கிறதா அல்லது கீழே இருந்து எடுக்கச் சொல்லி யாசிக்கிறதா என்பதே அங்கு சொன்னதும்.

பிரசங்கி ( அட பிரசங்கம் செய்தவருங்க, இதை விட அதிகமா யோசிச்சா நீங்கதான் அதிகப்----- :)) கிருபானந்த வாரியாரா, கீரனா என ஞாபகம் இல்லை.

January 12, 2007 5:40 PM
--

FloraiPuyal said...
தருவது தருமம், தானம்
கொடுப்பது கொடை - எல்லாம் தமிழ் தான்.

January 28, 2007 12:41 PM

Kavinaya said...

கொடையும் தானமும் வெவ்வேறு பொருளுடன் தான் தெரிகின்றன, என் சிற்றறிவுக்கு...

குமரன் (Kumaran) said...

இந்த இடுகைக்குத் தொடர்புடைய திரு. இராம.கி. ஐயாவின் இடுகைகள்:

வளவு: தானமும் கொடையும் - 1

வளவு: தானமும் கொடையும் - 2

வளவு: தானமும் கொடையும் - 3

R.DEVARAJAN said...

அன்பர்களே,
வட மொழியைத் தமிழுக்குப் போட்டியாகவே சித்திரித்துக் காட்டும் போக்கு நாளும்
தொடர்ந்து வருகிறது. எதாவது கருத்தைச் சொன்னால் முத்திரை குத்தி விடுவர் என்று பலரும் வாய் திறப்பதில்லை. வட மொழி இலக்கியங்களால் தமிழ் வளம்
பெற்றது வரலாற்று உண்மை. பல தமிழ்ப் பாக்களிலும், புதுக்கவிதைகளிலும்
எதுகை மோனைகளுக்காகவும், ஓசை நயத்துக்காகவும் வட சொற்கள் பயன்படுத்தப் படுவதில்லையா?
அவற்றை எல்லாம் நீக்கும் முயற்சியை யார் செய்வர்?
தானம் போன்ற ஓரிரு சொற்கள் இருந்து விட்டால் என்ன ?
வட சொல் என அறியாமல் நாம் பயன் படுத்தும் சொற்கள் எத்தனை?
R.தேவராஜன்

குமரன் (Kumaran) said...

நான் இன்னொரு முறை இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் தொடர்பா இராம.கி. ஐயா எழுதிய கட்டுரைத் தொடரையும் படிக்க வேண்டும் கவிநயா அக்கா.

குமரன் (Kumaran) said...

தேவராஜன் ஐயா. வடமொழி தமிழுக்குப் போட்டி என்ற எண்ணம் அடியேனுக்கு இல்லை. என்னுடைய வடமொழிப் பதிவுகளையும் தாங்கள் படிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். இலக்கியங்களில் இருக்கும் வடசொற்களையும் பேச்சில் இருக்கும் வடசொற்களையோ நீக்குவது நோக்கமில்லை; அவற்றின் இடத்தில் தகுந்த தமிழ்ச்சொல் இருந்தால் அவற்றைப் பரிந்துரைப்பதே நோக்கம். அது வடசொற்களின் மேலுள்ள விரோதத்தால் இல்லை; தமிழ் மேல் உள்ள காதலால்.

தானம் போன்ற ஓரிரு சொற்கள் மட்டுமே என்றால் கவலையில்லையே. ஒரு காலத்தில் வடமொழியும் தமிழும் சரியளவு கலந்து எழுதவும் பேசவும் செய்யப்பட்டதே. இன்று அந்த நிலை மாறியதற்குக் காரணம் என்ன? இன்று தமிங்கிலம் அந்த இடத்தை எடுத்துக் கொள்ளும் போலிருக்கிறது.

நீங்கள் கேட்ட கேள்விகளைப் பற்றி நீண்ட இடுகைகளை முன்பு இட்டிருக்கிறேன். அவற்றை இன்று 'சொல் ஒரு சொல்' பதிவிலிருந்து இந்தக் 'கூடல்' பதிவிற்கு நகர்த்தியிருக்கிறேன். இயன்றால் பாருங்கள். இடுகைகளின் தலைப்புகள்: தமிழ்ச்சுடர், சொல் ஒரு சொல் - ஏன்?