Wednesday, July 30, 2008

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!


அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களுக்கும் தலைவனாய் இருந்த போதிலும் எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் ஆனவன். இந்த உலகில் பிறக்கும் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றுவித அழுக்குகளால் மூடப்பெற்று இறைவனை மறந்து புலன்களின் வழியே சென்று பாவக்குழியில் விழுந்து சொல்லொணா துயரம் அடையும் போது, செய்த குற்றங்களை எல்லாம் மறந்து அந்த உயிர்களை நல்வழிக்குக் கூட்டிவந்து அருள்செய்வது இறைவனின் தனிப்பெரும்கருணை. தம் குழந்தைகள் எத்தனைத் தான் குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றை எல்லாம் பொறுத்து அந்த குழந்தைகளைக் காப்பது பெற்றோர் இயல்பு. இறைவன் அப்படி நம் குற்றங்களை எல்லாம் பெற்ற அன்னையும் தந்தையும் போல பொறுத்துக்கொண்டு நம்மை எப்போதும் காப்பதால் 'அம்மையே! அப்பா!' என்றார் மாணிக்கவாசகர். 'பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்; பெற்றவள் குறமகள் பெற்றவளாமே' என்றார் பாலன் தேவராய சுவாமிகளும்.

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு என்றார் பொய்யாமொழிப்புலவர். இந்த உலகில் நாமும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, நம் குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்து, உலக மக்கள் அனைவரும் துன்பமின்றி இருக்குமாறு உதவி செய்ய, கைப்பொருள் மிக்க அவசியம் ஆகிறது. அந்த கைப்பொருளை அடையத்தான் இங்குள்ளவர் அனைவரும் தம் வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுக்கொண்டிருக்கிறோம். அந்த கைப்பொருளை பொன்னாகவும் மணியாகவும் மாற்றி சேமித்து வைத்தலும் நடக்கிறது. அப்படி நாம் சேமித்துவைக்கும் வைத்த நிதிகளிலேயே விலைமதிப்பற்ற ஒப்பு இல்லாத பெரும் மாணிக்கம் இறைவனே. அவன் அருள் இருந்தால் நாம் கைப்பொருளால் அடையும் அத்தனை இன்பத்தையும் அடைந்து அதற்கு மேலும் அடையலாம். நாம் சேர்த்துவைக்கும் 'வைத்த நிதிகள்' எல்லாம் காலவேகத்தில் கரைந்து போகும். ஆனால் இறைவனோ என்றும் அழியா பெரும் செல்வம் - வைத்த மா நிதி. அதனால் தான் பாண்டியனின் முதலமைச்சர் இறைவனை 'ஒப்பிலா மணியே' என்கிறார்.

அன்பே சிவம் என்றார் திருமூல நாயனார். அமுதம் கடலில் விளைந்தது. அந்த அமுதம் உண்டவர்களை இறவா நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியது. ஆனால் அந்த அமுதமும் அளவுக்கு மீறி அருந்தினால் திகட்டிவிடும். இறைவனோ அன்பே உருவாய் அந்த அன்பினில் விளைந்த ஆரா அமுதமானவன். அவனை அடைந்தால் இறவா நிலையும் பிறவா நிலையும் என்றும் அவன் அருகில் இருந்து ஆனந்தம் அடையும் நிலையும் அடையலாம்.

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப்போகும்; நின்றதில் பதினைந்தாண்டு
பேதைப் பாலகனதாகும்; பிணி, பசி, மூப்பு, துன்பம்


என்று பாடுவார் ஆழ்வார். வேதங்கள் விதித்தபடி ஒரு மனிதன் நூறு பிராயம் வரை வாழ்ந்தாலும், அந்த நூறில் பாதியாகிய ஐம்பது வருடங்கள் உறக்கத்தில் சென்று விடுகிறது. மிச்சம் உள்ள ஐம்பதில் பதினைந்து வருடம் வரை ஏதும் அறியா பேதைப் பருவமாய் சென்று விடுகிறது. மிச்சம் உள்ள முப்பத்தி ஐந்தில் நாம் அடையும் துன்பங்கள் அளவில - பிணி உண்டு; பசி உண்டு; மூப்படைவோம்; மற்ற எத்தனையோ துன்பங்கள். இப்படி நூறு வயது வாழ்ந்தாலுமே இறைவனை நினைக்க நமக்குக் கிடைக்கும் வாய்ப்பு மிக குறைவு. அப்படி நிலையில்லாதவற்றையே நம்பி நம் வாழ்நாளை வீணே கழித்துக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வாழ்க்கையையே 'பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்' வாழ்க்கை என்கிறார் மாணிக்கவாசகர்.

அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துவந்த தமக்கு சிறந்த சிவபதம் என்னும் பெருமையை இறைவன் தானே வந்து அருளினான் என்பதால் 'செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே, சிவபெருமானே' என்றார்.

உன் அருளாலே உன் தாள் வணங்கினேன். இம்மையே இப்பொழுதே உன் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்தேன். நீர் எம்மை விட்டு எங்கே சென்றுவிடப் பார்க்கிறீர்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'திருவாசகம் ஒரடொரியொ' பதிவில் 8 டிசம்பர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

மதுமிதா said...
சிக்கென பிடித்த பாதம்
சீருடன்சிறப்பளித்திடும்
உடன் உறைந்து
துயர் துடைத்திடும்

சிவாய சிவாய சிவாய நம ஓம்

December 08, 2005 6:29 AM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
சிவன் எனவே தேறினன்யான் என்றமயால் இன்றும்
சிவன் அவனி வந்தபடி செப்பில் -அவனிதனில்
உப்பெனவே கூர்மய் உருச்செய்யக் கண்டமய்யால்
அப்படியே கண்டாய் அவன்

நமசிவாய வாழ்க

December 08, 2005 10:34 AM
--

குமரன் (Kumaran) said...
சிக்கென திருப்பாதம் பிடித்தவுடன்
அக்கையும் வந்தார் வாழ்த்து சொல்ல
இக்கணம் அடிக்கடி வரவேண்டும்
அக்கை நீர் உறுதியே தரவேண்டும்.

சிவாய சிவாய சிவாய நம ஓம்

December 08, 2005 11:58 AM
--

குமரன் (Kumaran) said...
அன்பு TRC, இந்தப் பாட்டுக்குப் பொருளும் கூறிவிடுங்கள். இந்தப் பாட்டு மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவில் வந்து அருள் செய்த்தைக் கூறுகிறதா?

December 08, 2005 11:59 AM
--

G.Ragavan said...
நெஞ்சகமே கோயில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூசை கொள்ள வாராய் பராபரமே!

குமரன். அழகான விளக்கம். அற்புதமான பதிவு.

December 09, 2005 6:58 AM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
anbuLLa kumaran
uqkaL uukam mikassariyanathu inaRavan nEril thOnRiyanathathAn kuRikkiRathu.
kadal nIril uruvamillAthu irukkum uvarppu suvai uppAga uruvam koNdathu pOla
sivanum uruvam konddAn enRu koLLa vENdum.ippadi urumillAthaa avan uruvu koNdu
varA vittAl eppadi sikkena pidippathu thirAsa thi rA sa

December 09, 2005 10:55 AM
--

குமரன் (Kumaran) said...
நீங்கள் போட்டிருக்கும் தாயுமானவர் பாடல் இந்த அம்மையே அப்பா பாட்டிற்கு பொருத்தம். இதிலும் தாயும் ஆனவரைத் தானே போற்றுகிறோம்.

December 09, 2005 2:24 PM
--

குமரன் (Kumaran) said...
பாட்டிற்கு நல்ல விளக்கம் TRC. கடலில் காணும் உவர்ப்புச் சுவை கடலில் இல்லாத இடமே இல்லையெனும்படி நிறைந்திருந்தாலும் உப்பாய் உருக்கொள்ளும் வரை தெரிவதில்லை. அதுபோல எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம் கண்களுக்கு நேராய் உருவம் கொண்டு வரும் போது தான் நாம் அவனை உணர்கிறோம்.

December 09, 2005 2:27 PM
--

G.Ragavan said...
// நீங்கள் போட்டிருக்கும் தாயுமானவர் பாடல் இந்த அம்மையே அப்பா பாட்டிற்கு பொருத்தம். இதிலும் தாயும் ஆனவரைத் தானே போற்றுகிறோம். //

ஆமாம் குமரன். ஆகையால்தான் அதையிங்கே இட்டேன்.

December 12, 2005 1:47 AM
--

ஞானவெட்டியான் said...
//>பாட்டிற்கு நல்ல விளக்கம் TRC. கடலில் காணும் உவர்ப்புச் சுவை கடலில் இல்லாத இடமே இல்லையெனும்படி நிறைந்திருந்தாலும் உப்பாய் உருக்கொள்ளும் வரை தெரிவதில்லை. அதுபோல எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம் கண்களுக்கு நேராய் உருவம் கொண்டு வரும் போது தான் நாம் அவனை உணர்கிறோம்.>//

மன்னிக்கவுக் குமரன். தங்களின் கருத்திலிருந்து சற்றே வேறுபடுகிறேன்.

உவர்ப்புச் சுவைதான் கடல்நீரில் எங்கும் நிறைந்துளது. அதைத்தான் இறைவனுக்கு ஒப்பிடல் வேண்டும். உப்பு எனும் பொருள் எங்கும் நிறைந்திருக்கவில்லையே? அதிலும் "கண்ணுக்குத் தெரிவதெல்லாம் மாயையே". இறைவன் நம் கண்களுக்கு நேராய் உருக்கொண்டு வந்துவிட்டால் அதுவும் மாயைதானே?

ஆக, உவர்ப்புச் சுவையைச் சுவைத்து சுவையை உணர்தல்போல் இறைவனையும் உணர்ந்துதான் அனுபவிக்க இயலும் என்பது எம் கருத்து.

December 22, 2005 9:18 AM
--

குமரன் (Kumaran) said...
ஞானவெட்டியான் ஐயா. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இந்த மாயை என்பதைப் பற்றி நான் ஒரு கட்டுரை எனது 'பாட்டுக்கொருபுலவன்' வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன். முடிந்தால் படித்து உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

http://nambharathi.blogspot.com/2005/11/54-1.html

December 22, 2005 12:22 PM
--

ஞானவெட்டியான் said...
அன்பு குமரன்,
தங்களின் பதிவு அருமை(பக்தி மார்க்கத்திற்கு). தங்களின் வாதத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

ஆயினும் அதற்குமேல் உள்ள ஞானமார்க்கத்தில், நம் உடலினுள்(மெய்) உணர்வதே மெய். பாக்கி மாயை.

அறிவு
உணர்வு
நினைவு
கருத்து(கரு)

நினைவினில் உணர்வாய் ஒன்றிக் கருவாய்க் கருத்தினில் நிற்கும்பொழுது உணரும் நிலையே பரவசம்(பர+வசம்)

December 23, 2005 8:22 AM
--

குமரன் (Kumaran) said...
ஐயா, பக்தி மார்க்கத்திற்கு மேல் ஞான மார்க்கமா; இல்லை ஞான மார்க்கத்திற்கு மேல் பக்தி மார்க்கமா; இல்லை இரண்டுமே ஒன்று தானா என்றெல்லாம் ஏற்கனவே பல பெரியோர்கள் வாதம் செய்துப் பார்த்துவிட்டார்கள். இரண்டு மார்க்கங்களும் இருப்பதே அந்த மார்க்கங்களில் செல்வதற்கு மக்கள் இருப்பதால் தானே. அதனால் எது மேலே எது கீழே; எது உண்மை; எது மாயை என்பதெல்லாம் என்னைப் போன்றவர்களால் இப்போது சொல்ல முடியாது. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்று வேறு பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனால் இந்த விவாதம் முடியாமல் என்றுமே நடந்துக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

http://nadanagopalanayaki.blogspot.com/2005/10/blog-post_30.html

December 23, 2005 9:54 AM
--

ஞானவெட்டியான் said...
அன்பு குமரன்,
தாங்கள் தந்த சுட்டியையும் படித்தேன்.
முன்னோர்கள் வரிசைப்படுத்தியது:
பக்தி
யோகம்
ஞானம்.
பக்தியில் சரணாகதி அடையாவிடில் மீதி எதுவும் கிட்டாது.
இருப்பினும் வீணாக விவாதித்து காலம்(ன்) விரயம் செய்வது எமது நோக்கமல்ல. ஏதோ, எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அவ்வளவுதான்.

December 24, 2005 6:17 AM
--

குமரன் (Kumaran) said...
உண்மைதான் ஐயா. வீண்விவாதம் தேவையில்லாதது.

December 24, 2005 8:11 AM

Kavinaya said...

இறைவனைப் பற்றிக் கொண்டால் அத்தனையும் கிட்டிவிடும்; அறிந்தாலும் உணராமல் எதையெதையோ பற்றிக் கொண்டு பரிதவிக்கின்றோம். அவனைச் சிக்கெனப் பிடிக்க அவனருளை வேண்டுவோம். அருமையான பதிவு குமரா.

//நெஞ்சகமே கோயில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூசை கொள்ள வாராய் பராபரமே!//

ஜிரா எடுத்துக் காட்டிய பாடல் அருமை.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் அக்கா. எறும்பின் கண்களில் தன் முன்னே இருக்கும் சிறுதுகள் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் கொஞ்சம் பார்வையை விரித்தால் எதிரில் இருக்கும் சர்க்கரை மலையே தென்படும் தான். அந்தப் பார்வை விரிவும் அவன் அருளால் தான் வர வேண்டும்.