Tuesday, July 22, 2008

அன்னம் நாண நடை கற்கும் பதாம்புயத்தாள்


சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற - கவிதைகளிலும் கட்டுரைகளிலும் சொல்லும் சொற்களுக்கும், அவற்றின் பொருட்களுக்கும் உயிராக உள்ளுரைப் பொருளாக இருக்கும் மெய்யான ஞானவடிவாக விளங்குகின்ற

நின்னை நினைப்பவர் யார் - உன்னை (எப்போதும்) வணங்குபவர் (என்னையன்றி வேறு) யார்?

நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு - நிலத்தில் தோயும்படி இருக்கும் நீண்ட தும்பிக்கையுடைய சிறந்த பெண்யானையும்

அரசன்னம் - பறவைகளிலேயே அழகில் சிறந்த ராஜஹம்ஸமாகிய அரச அன்னப் பறவையும்

நாண நடை கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே - வெட்கும் படியான நடையுடைய திருவடித் தாமரைகளை உடையவளே கலைவாணியே

***

அருஞ்சொற்பொருள்:

புழைக்கை - துதிக்கை, தும்பிக்கை

குஞ்சரம் - யானை

பிடி - பெண்யானை (இங்கு குஞ்சரத்தின் பிடி என்பது பெண்யானை என்ற பொருளில் வந்தது)

பதாம்புயம் - பத + அம்புயம் - பாதத் தாமரைகள். அம்புயம் என்பது அம்புஜம் என்பதன் திரிபு. அம்பு - நீர், ஜம் - பிறந்தது; நீரில் பிறந்தது தாமரை மலர்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சகலகலாவல்லிமாலை' பதிவில் 27 மார்ச் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

33 comments:

இராமநாதன் said...
//நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத்தாயே//

அடாடா, என்ன கற்பனை!

4:17 AM, March 27, 2006
--

தி. ரா. ச.(T.R.C.) said...
அன்னபக்ஷியை வாகனமாகக்கொண்ட அன்னை சரஸ்வதியின் நடையை ராஜஹம்சத்தின் நடைக்கு ஒபிடுகிறார். இதேபோல் மீனாக்ஷியையும் பெறும்தேன் இறைக்கும் நறைக்கூந்தல் பிடியே வருக என்று குமரகுருபரர் அங்கு வருணிக்கிறார்.என்ன ஒரு உயர்ந்த கற்பனைகள். தி ரா ச

6:12 AM, March 27, 2006
--

வெளிகண்ட நாதர் said...
//குஞ்சரம் - யானை//

மலையாள சொற்றொடர் போல உள்ளதே! இதே அர்த்தம் என்று நினைக்கிறேன்!

7:37 AM, March 27, 2006
--

செல்வன் said...
குஞ்சரம் = யானை சரி தான்.மலையாள வார்த்தையல்ல.சமஸ்கிருத வார்த்தை.
"அஸ்வத்தாமா அதா குஞ்சரா" என மகாபாரதத்தில் தூரோண வதத்தில் புகழ் பெற்ற வசனம் வருகிறது

10:54 AM, March 27, 2006
--

Karthik Jayanth said...
குமரன்,

//அவற்றின் பொருட்களுக்கும் உயிராக உள்ளுரைப் பொருளாக இருக்கும் மெய்யான ஞானவடிவாக விளங்குகின்ற

இந்த வரிகள் அருமை

1:07 PM, March 27, 2006
--

johan-paris said...
அன்புடன் குமரனுக்கு!
பறவைகளிலே அழகில் ;சிறந்தது மயில் எனவறிந்தேன்.(நானறிந்தது தவறாகவுமிருக்கலாம்); ஆனால் நடையழகுக்கு;அன்னத்தின் நடையையே,ஒப்பிடுவதால்; இவ்வரியை "பறவைகளிலே நடையழகில் சிறந்த அன்னப்பறவையும்" எனக் கொள்ளலாமா?
மிக இலகுவான பொருள் தந்துள்ளீர்கள்.
நன்றி
யோகன்
பாரிஸ்

1:35 PM, March 27, 2006
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் இராமநாதன். மிக நல்ல கற்பனை தான். கம்பரும் இந்த உவமையைச் சொல்கிறார். ஆனால் சிறு மாற்றத்துடன். காட்டில் இளைய பெருமாள் பின் தொடர பிரானும் பிராட்டியும் நடந்து போகும் போது திடீரென அன்னப்பறவைகள் வெட்கி ஒதுங்குகின்றன. ஐயன் அதனைப் பார்த்து அன்னையிடம் 'ஜானகி, உன் நடையைப் பார்த்து அது தங்கள் நடையை விட அழகாய் இருக்கிறது என்று வெட்கி அன்னங்கள் எல்லாம் ஒதுங்குகின்றன பார்' என்னவும் அன்னை 'ஐயனே. அங்கும் அதே கதை தான். களிறுகள் (ஆண் யானைகள்) எல்லாம் அங்கு ஆடாமல் அசையாமல் எதனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன? உங்கள் கம்பீர நடையைத் தானே. தங்கள் நடையை விட உங்கள் நடை அழகுடையது என்பதால் அவை நாணி அசையாமல் நிற்கின்றன' என்கிறார். :-)

2:37 PM, March 27, 2006
--

குமரன் (Kumaran) said...
சரியாகச் சொன்னீர்கள் தி.ரா.ச. அன்னப் பறவையை வாகனமாகக் கொண்ட அன்னையின் நடையும் அன்னப் பறவையின் நடையை ஒத்திருக்கிறது. மிகப் பொருத்தம்.

மீனாட்சி பிள்ளைத்தமிழிலும் இதே உவமையை சொல்லியிருக்கிறாரா குமரகுருபரர்? பாடல் வரிகளைத் தந்ததற்கு மிக்க நன்றி. அழகான வரிகள் - பெரும்தேன் இறைக்கும் நறைக்கூந்தல் பிடியே வருக - அளவில்லா தேனை வாரி இறைக்கும் தேனுள்ள மலர்களால் நிறைந்த கூந்தலையுடைய பெண்யானையே வருக - நன்றாய் இருக்கின்றன இந்த வரிகள்.

2:41 PM, March 27, 2006
--

குமரன் (Kumaran) said...
வெளிகண்ட நாதர் சார். குஞ்சரம் என்பது பழந்தமிழ் சொல் என்று தான் நினைக்கிறேன். அது கொடுந்தமிழான மலையாளத்தில் இன்றும் பயின்று கொண்டிருக்கலாம்.

2:42 PM, March 27, 2006
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் செல்வன். நீங்கள் சொல்வது போல் 'அஸ்வத்தாமா அத: குஞ்சர:' என்ற சொற்றொடரில் உள்ள மகாபாரதப் போரின் திருப்புமுனை நிகழ்ச்சியில் குஞ்சர: என்பது யானையைத் தான் குறிக்கிறது. சில சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்குப் போனதா இல்லை அங்கிருந்து இங்கு வந்ததா என்று சரியாகத் தெரிவதில்லை. இந்தச் சொல்லும் அது போன்றது தான். குஞ்சரம் என்ற சொல் பழந்தமிழ் நூல்களிலும் (மகாபாரதக் காலத்திற்கும் முந்தைய நூல்களிலும்) பயின்று வந்துள்ளது என்று எண்ணுகிறேன். ஒரு வேளை தென்னகத்தில் இருந்து வந்த யானைக்கு குஞ்சர: என்று வடமொழியாளர் கூறினார்களோ என்னவோ?

2:47 PM, March 27, 2006
--

ரங்கா - Ranga said...
குமரன்,

உங்கள் நடை மிகவும் எளிதாகவும், குறிப்பாகவும் இருக்கின்றது. நன்று.

ரங்கா.

3:11 PM, March 27, 2006
--

SK said...
'குடை நிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்வோர்
நடை மெலிந்து ஓர் நாள் நண்ணினும் நண்ணுவர்"

என ஒரு பழந்தமிழ்ப் பாடல் உண்டு!

3:31 PM, March 27, 2006
--

Ram.K said...
என்னையன்றி யார் வணங்குவார்கள் என்று கேட்டுவிட்டு வர்ணனை வேறயா? கொழுப்பு தான்.

:))

5:24 PM, March 27, 2006
--

தி. ரா. ச.(T.R.C.) said...
குஞ்சரம் என்பது சம்ஸ்கிரதம் தான். குஞ் எனறால் ஆடுதல்.பின்னலில் குஞ்சலம் என்று கேள்வி பட்டு இருப்பீர்களே ஆடிகொண்டு அசைந்து இருக்குமே. சரம் என்றால் நடை. சி சரதி T0 வாக் என்பது சம்ஸ்கிருத இலக்கணம்.குஞ் என்றால் சிறிய மலை என்றும் கூறலாம்.சிறிய மலை போன்று ஆடிக்கொண்டு வரும் யாணை.பரமாசாரியார் ஒருமுறை சொன்னார் எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காதது ஆறுமாதத்து சிறு குழந்தை, பொளர்ணமி முழு நிலவு,அலைமோதும் சமுத்ரம்,பெற்றதாயின்முகம், ஆடிஅசைந்து வரும் யாணை.அதனால்தனோ குமரகுருபரர் பார்க்க பார்க்க திகட்டாத அலுக்காத அன்னையின் நடையை குஞ்சரத்துக்கு ஒப்பிட்டாரோ ? தி ரா ச

7:06 PM, March 27, 2006
--

தி. ரா. ச.(T.R.C.) said...
குஞ்சரம் என்பது சம்ஸ்கிரதம் தான். குஞ் எனறால் ஆடுதல்.பின்னலில் குஞ்சலம் என்று கேள்வி பட்டு இருப்பீர்களே ஆடிகொண்டு அசைந்து இருக்குமே. சரம் என்றால் நடை. சி சரதி T0 வாக் என்பது சம்ஸ்கிருத இலக்கணம்.குஞ் என்றால் சிறிய மலை என்றும் கூறலாம்.சிறிய மலை போன்று ஆடிக்கொண்டு வரும் யாணை.பரமாசாரியார் ஒருமுறை சொன்னார் எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காதது ஆறுமாதத்து சிறு குழந்தை, பொளர்ணமி முழு நிலவு,அலைமோதும் சமுத்ரம்,பெற்றதாயின்முகம், ஆடிஅசைந்து வரும் யாணை.அதனால்தனோ குமரகுருபரர் பார்க்க பார்க்க திகட்டாத அலுக்காத அன்னையின் நடையை குஞ்சரத்துக்கு ஒப்பிட்டாரோ ? தி ரா ச

7:07 PM, March 27, 2006
--

சிவமுருகன் said...
//நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை//

சௌரஸ்ட்ர நூலான நளதமயந்தியில் அதன் ஆசிரியர் ஐயா. தாடா. சுப்ரமண்யம் அன்னபறவையை வர்ணிப்பார். அந்த அழகு அன்னத்திறிக்கு நடை ஒன்று தான் அழகு, அந்த நடையே நாண வைக்கும் (அதுவும் அரசன்னத்தின்) நடை தேவியின் நடை என்பது கற்பனையின் சிகரம்.

8:22 PM, March 27, 2006
--

G.Ragavan said...
அழகிய நடை செய்யுளிலும் அதன் விளக்கத்திலும் மட்டுமில்லாமல் இங்கு வந்து ஒவ்வொருவரும் இட்ட பின்னூட்டத்திலும் இருக்கிறது.

குமரனின் அருமையான விளக்கங்கள் வழக்கம் போல.

10:07 PM, March 27, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி கார்த்திக் ஜெயந்த்

4:17 AM, March 28, 2006
--

குமரன் (Kumaran) said...
யோகன். நீங்க சொல்ற பொருள் தான் சரியானது. ஒன்றைக் கவனித்தீர்களா? 7வது பாட்டிற்கு போட்டப் பதிவில் உள்ள படத்தில் அன்னையின் அருகில் அன்னப் பறவைகள் இருக்கின்றன. ஆனால் இந்தப் பதிவில் உள்ள படத்தில் அன்னப் பறவையைக் காணவில்லை. அன்னையின் நடையழகைக் கண்டு நாணி ஓடிவிட்டது போலும். அழகில் சிறந்த மயில் தான் ஒய்யாரமாக அன்னையின் அருகில் நிற்கிறது. :-)

4:19 AM, March 28, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி ரங்காண்ணா.

4:20 AM, March 28, 2006
--

குமரன் (Kumaran) said...
குஞ்சரம் என்ற சொல் வரும் ஒரு பழந்தமிழ் பாடலைக் கொடுத்ததற்கு நன்றி SK

4:21 AM, March 28, 2006
--

குமரன் (Kumaran) said...
இராம்பிரசாத் அண்ணா. இதில் கொழுப்பு இல்லை. அடக்கம் தான் இருக்கிறது. மத்தவங்களுக்கு எல்லாம் சொல்லும் பொருளும் அருமையாகக் கைகூடி வருகிறது. எனக்கு அப்படி வரவில்லை. அதனால் நான் உன்னை வணங்குகிறேன். ஏற்கனவே உன் அருள் இருப்பதால் அவர்கள் மீண்டும் உன்னை வணங்கத் தேவையிருக்கவில்லை. எனக்குத் தேவையிருக்கிறது. அதனால் என்னையன்றி வேறு யார் உன்னை வணங்குகிறார்கள். யாரும் இல்லாததால் உன் நேரத்தை எல்லாம் எனக்கு அருள் செய்வதில் செலவிடக்கூடாதா அப்படின்னு கேக்கறார். எல்லாம் அடக்கம் தான் காரணம்.

4:24 AM, March 28, 2006
--

johan -paris said...
"நற் குஞ்சரக் கன்றை, நண்ணிற் கலை,ஞானம் கற்கும் சரக்கன்று காண்"- என பிள்ளையாரை வணங்கினால் யாவும்,கிட்டுமென ;அவரை நற் குஞ்சரக்கன்று; எனவும் படித்துள்ளேன்.
நன்றி
யோகன்
பாரிஸ்

4:24 AM, March 28, 2006
--

குமரன் (Kumaran) said...
தி.ரா.ச. சலம் என்றால் அசைதல் என்றும் சரம் என்றால் நடை என்றும் பொருள் என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் குஞ் என்பதற்கு பொருள் தெரியவில்லை.

பரமாச்சாரியர் சொன்னதையும் இங்கே குமரகுருபரர் சொல்லியிருக்கிறார். 'நடை கொண்ட' என்று சொல்லாமல் 'நடை பயிலும்' அப்படின்னு சொல்லியிருக்கிறார் பாருங்க. ஆறு மாதக் குழந்தையின் நடை அழகு அன்னையின் நடை அழகில் இருக்கிறது என்பதைக் குரிப்பாகச் சொல்கிறார். :-)

4:27 AM, March 28, 2006
--

குமரன் (Kumaran) said...
சிவமுருகன். நான் தமிழில் நள புராணம் கொஞ்சம் படித்திருக்கிறேன். அன்னத்தை வருணிக்கும் பகுதிகளும் படித்திருக்கிறேன். சௌராஷ்ட்ர நள தமயந்தி புத்தகம் எங்கு கிடைக்கும்? கிடைத்தால் படிப்பேன்.

4:28 AM, March 28, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன். உண்மை. பின்னூட்டங்களில் பல விஷயங்கள் அழகாகச் சொல்லப்பட்டன. விளக்கத்தில் அடிப்படையான பொருளை மட்டும் சொல்லிவிட்டு மேலும் விளக்காமல் சென்றால் படிப்பவர்களுக்கு விளக்கம் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கிறதோ என்னவோ. :-)

4:30 AM, March 28, 2006
--

குமரன் (Kumaran) said...
அருமையான பாடல் வரிகள் யோகன். பிள்ளையார் குட்டியானை என்பதை அழகாகச் சொல்லி அவரை வணங்கினால் கலையும் ஞானமும் தானே கிட்டும்; அதனைத் தனியாகக் கற்றுக் கொள்ளத் தேவையில்லை என்று அருமையாகச் சொல்லியிருக்கிறார்கள். மிக்க நன்றி.

4:37 AM, March 28, 2006
--

சிவமுருகன் said...
//சௌராஷ்ட்ர நள தமயந்தி புத்தகம் எங்கு கிடைக்கும்? //

நள தமயந்தி,
ஆசிரியர் - தாடா. ஸுப்ரமண்யம்

ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் இலக்கிய் மன்றம்,
௮8-காந்தி சாலை, இராசிபுரம்-637408.

ஸ்ரேஷ்ட சௌராஷ்ட்ரா ஸாஹித்ய சபாவிலும் கிடைக்கும்.

4:15 AM, March 30, 2006
--

rnateshan. said...
அற்புதம் ஆஹா அற்புதம்!!
நன்றி குமரனுக்கே!! நாளை நமது ஞான வெட்டியான் அய்யாவை சிதம்பரம் நடராஜர் அருகே சந்திக்கிறேன்!!

6:48 AM, March 31, 2006
--

ஜெயஸ்ரீ said...
குமரன்,

பாடலும், அதற்கு உங்கள் பொருளும் பின்னூட்டங்களும் சேர்ந்து படிக்க இனிமையாக இருக்கிறது.
California பயணம் எப்படி இருந்தது ?

இந்த வார அபிராமி அந்தாதி பதிவை இன்னும் காணவில்லையே ??

1:11 PM, March 31, 2006
--

குமரன் (Kumaran) said...
தகவலுக்கு நன்றி சிவமுருகன்.

7:56 AM, April 04, 2006
--

குமரன் (Kumaran) said...
நடேசன் சார். பாராட்டுக்கு நன்றி. ஞானவெட்டியான் ஐயாவை சந்தித்ததைப் பற்றிய உங்கள் பதிவினைப் படித்தேன்.

7:57 AM, April 04, 2006
--

குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி Jayashree. கலிஃபோர்னியா பயணம் மிக நன்றாய் இருந்தது.

இந்த சுற்றில் அபிராமி அந்தாதியில் எழுத நினைத்தது நிறைவு பெற்றுவிட்டது. இனி அடுத்த சுற்றில் தான் அபிராமி அந்தாதி வரும். இப்போது கோளறு பதிகம் துவங்கிவிட்டது. பார்த்தீர்களா?

8:02 AM, April 04, 2006

Kavinaya said...

//இதில் கொழுப்பு இல்லை. அடக்கம் தான் இருக்கிறது. //

நல்ல விளக்கம் குமரா.

அன்னை கலைவாணி அருள்வாளோ..
அவள் பதம் பற்றித் துதிக்க மகிழ்வாளோ..
அறியாமற் செய் பிழைகள் பொறுப்பாளோ..
அம்மே என்றழைக்கும் குரல் கேட்பாளோ?

குமரன் (Kumaran) said...

அவளின் அருள் ஏற்கனவே இருக்கிறது அக்கா. இன்னும் பல்கிப் பெருகும்.