Tuesday, July 29, 2008

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

அம்மையே - என் தாயே!

அப்பா - என் தந்தையே!

ஒப்பிலா மணியே - நிகரில்லாத மாணிக்கமே!

அன்பினில் விளைந்த ஆரமுதே - அன்பெனும் கடலில் உண்டாகிய அருமையான அமுதமே!

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் - பொய்யான செயல்களிலேயே ஈடுபட்டு என் வாழ்நாளை வீணே கழிக்கும்

புழுத்தலைப் புலையனேன் தனக்கு - புழுக்கள் நிரம்பிய உடலும் தலையும் கொண்டு அலையும் கீழ்மையான எனக்கு

செம்மையே ஆய - மிகவும் மேன்மையான

சிவபதம் அளித்த - என்றும் இன்பமயமான சிவ பதத்தைக் அருளிய

செல்வமே சிவபெருமானே - அருட்செல்வமே சிவபெருமானே!

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - இப்போதே, இவ்வுலகத்திலேயே உன்னை உறுதியாகப் பற்றினேன்

எங்கெழுந்தருளுவதினியே - நீர் இனிமேல் என்னை விட்டுவிட்டு எங்கே செல்லமுடியும்?


என் தாயே! தந்தையே! நிகரில்லாத மாணிக்கமே! அன்பெனும் கடலில் உதித்த அருமையான அமுதமே! என் உயிருக்கு உறுதி தரும் நல்ல செயல்களைச் செய்யாது தீமையான செயல்களையே செய்து என் வாழ்நாளை வீணே கழிக்கும் இந்தக் கீழானவனுக்கு மிக மேன்மையான சிவபதம் அருளிய அருட்செல்வமே! சிவபெருமானே! இந்தப் பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பற்றினேன். நீர் எங்கு என்னை விட்டு சென்றுவிடப் பார்க்கிறீர்?

11 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'திருவாசகம் ஒரடொரியொ' பதிவில் 24 நவம்பர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

முநி said...
பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாயிருக்கே! நிறைய எழுதுங்கோ!

தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

-நித்தில்

November 24, 2005 7:48 AM
--

Merkondar said...
நண்பர் குமரன் நல்லயிருக்கிறது தங்கள் விளக்கம் இதுபோன்றவற்றை அதிகமாக எழுதுங்கள். இதுவும் ஒரு சிவத்தொண்டுதான்.
இனியும் நிறைய பிறவாயாக்கைப் பெரியோனைப் பற்றி எழுத எனது வாழ்த்துக்கள்.

November 24, 2005 8:01 AM
--

குமரன் (Kumaran) said...
வாழ்த்துகளுக்கு நன்றி நித்தில். எனது மற்ற வலைப்பதிவுகளையும் படித்தீர்களா? என் Profile பாருங்கள். படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

November 24, 2005 12:05 PM
--

குமரன் (Kumaran) said...
வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி திரு. என்னார். பிறவாயாக்கைப் பெருமானைப் பற்றி மட்டும் அல்ல அவரின் மனையாள், மகன், மைத்துனர் எல்லாரைப் பற்றியும் பதிவுகள் இருக்கின்றன. படித்துத் தங்கள் கருத்தினைக் கூறுங்கள்.

November 24, 2005 12:08 PM
--

மூர்த்தி said...
அருமையான விளக்கம் குமரன். என்னார் அய்யா சொன்னதுபோல தொடருங்கள். இறைதொண்டு சாலச் சிறந்தது.

November 24, 2005 7:06 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி மூர்த்தி அண்ணா.

November 24, 2005 9:34 PM
--

G.Ragavan said...
இறைவன் நம்மை விட்டு எங்கும் செல்ல முடியாது. நம்மோடு இருப்பவனை உணர்ந்து கொண்டால் எல்லாம் இன்ப மயம். நல்ல விளக்கம் குமரன். விரிசடைக்கடவுளின் அருள் உங்களுக்கு நிறையட்டும்.

November 26, 2005 12:49 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன்

November 26, 2005 7:15 AM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
Dear Kumaran,
Manikkavasakarin vasakathil ezhum santhegamum oongal vasakathil purinthuvidukirathu. Anpar pani seya ennai akkivittal inbanilay thane vanthu eyyum paraparame endra thumumanaswamigalay pinpatrukreergal .thdaruttm iraypani.TRC

November 27, 2005 12:59 AM
--

சிவா said...
விளக்கத்துக்கு நன்றி குமரன்! உங்கள் விளக்கம் பாடலை மேலும் புரிந்து கொள்ள உதவியது. தொடருங்கள். அடுத்த பாடலை சீக்கிரம் போடுங்கள்.

- சிவா

November 27, 2005 6:52 AM
--

பரஞ்சோதி said...
குமரன், உங்க சிவத்தொண்டிற்கு பாராட்டுகள்.

அருமையான விளக்கம். தொடர்ந்து எழுதுங்கள், எழுதுவதை எல்லாம் தொகுத்து வையுங்கள். பின்னர் பிடிஎப் கோப்பாக மாற்றி நண்பர்களுக்கு கொடுங்கள்.

November 27, 2005 12:23 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றிகள் திருவாளர்கள் TRC, சிவா, பரஞ்சோதி. அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்.

November 27, 2005 2:55 PM
--

குமரன் (Kumaran) said...
பரஞ்சோதி, நீங்கள் ஒரு நல்ல suggestion சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொன்னபடி pdf ஆக மாற்றுகிறேன்.

November 27, 2005 10:04 PM
--

Sadish said...
மிக நல்ல முயற்சி குமரன். மேலும் எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறேன்.

ஒரு சின்ன விஷயம்.

புழுத்தலை புலையன் - என்ற பதத்திற்கு நான் உணர்ந்து கொண்ட பொருள்.

புழுவின் மூளை கொண்டவன். புழுவின் மூளைக்குத் தெரிந்ததெல்லாம், உண்ணுதல், உறங்குதல் மற்றும் இனப்பெருக்கம்.
அது போன்ற ஒரு "புழுவைப் போல திரிந்துவந்த என்னை ஆட்கொண்ட இறைவா" - இப்படி கூறியிருப்பாரோ ?

சிந்திக்கிறேன். சிந்தியுங்கள். சிந்திப்போம்.

- சதீஷ் -

November 28, 2005 7:51 PM
--

குமரன் (Kumaran) said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சதீஷ். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

புழுத்தலையன் என்பதற்கு புழுவின் மூளையைக் கொண்டவன் என்ற பொருள் பொருத்தமாகத் தான் இருக்கிறது. நல்ல சிந்தனை.

November 29, 2005 5:18 AM

Kavinaya said...

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேனுக்கு அவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற புத்தியையும் அவனைப் பற்றிக் கொள்ள வேண்டிய பக்தியையும் அவனே அருளல் வேண்டும். நன்றி குமரா.

குமரன் (Kumaran) said...

சரியாகச் சொன்னீர்கள் கவிநயா அக்கா. நன்றி.

வெற்றி said...

Kumaran,
Thanks. Really appreciate it.

குமரன் (Kumaran) said...

வெற்றி, எவ்வளவு நாளாயிற்று உங்கள் பின்னூட்டம் பார்த்து?! எப்படி இருக்கிறீர்கள்?

வெற்றி said...

/* வெற்றி, எவ்வளவு நாளாயிற்று உங்கள் பின்னூட்டம் பார்த்து?! எப்படி இருக்கிறீர்கள்? */

குமரன்,
நான் நல்ல சுகம். நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்?

முந்தி மாதிரி அடிக்கடி பின்னூட்டம் எழுதாவிட்டாலும், உங்களின் பதிவுகள், கண்ணபிரான் ரவிசங்கர் போன்றோரின் பதிவுகளைக் காலம் கடந்தேனும் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

நீங்கள் இன்னும் தொடர்ந்து எழுதி எங்களை மகிழ்விக்க முருகனை வணங்கி நிற்கிறேன்.

நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி வெற்றி. உங்கள் வேண்டுதல் பலிக்கட்டும்.

வடிவேல் சண்முகம் said...

நான் 8ஆம் வகுப்பில் படித்த பாடல்.
படிக்கும் போது இறை பக்தி அவ்வளவாக இல்லை. எனப்பனின் பால் ஈர்ப்பு வந்த தருணத்தில் இப்பாடலின் சிறப்பை உணர்கிறேன்.
சிவசிவ..
🙏🙏🙏🙏🙏

Guru2k12 said...

திருச்சிற்றம்பலம்

saran said...

nice thevaram songs lyrics

P.MAHARAJAN said...

அருமையான விளக்கம். சிவனருள் தங்களுக்கு கிடைக்கும்..சிவ சிவா.............