Monday, July 21, 2008

அண்டத்தவர் பணித்தேத்தும் ஆலவாயான் திருநீறே


குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண் திசைப் பட்ட பொருளாளர் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணித்தேத்தும் ஆலவாயான் திருநீறே

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக் கண் திகைப்பிப்பது நீறு - கமண்டலம் ஏந்தும் கையர்களான சமணர்களும் சாக்கிய குலத்தில் பிறந்த புத்தரைப் பின்பற்றும் பௌத்தர்களும் கூட்டமாய் கூடும் போது அவர்களைத் திகைக்கச் செய்வது திருநீறு. (அவர்கள் வாதங்களை அழித்து அவர்களை திகைக்க வைப்பது திருநீறு)

கருத இனியது நீறு - எண்ணத்தில் நினைத்து தியானிக்க இனியது திருநீறு

எண் திசைப் பட்ட பொருளாளர் ஏத்தும் தகையது நீறு - எட்டு திசைகளில் இருக்கும் மக்கள் எல்லோராலும் ஏத்தும் தகைமை உடையது திருநீறு

அண்டத்தவர் பணித்தேத்தும் ஆலவாயான் திருநீறே - தேவர் அசுரர் மனிதர் என்று எல்லாரும் பணிந்து ஏத்தும் திருவாலவாயான் திருநீறே.

5 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'திருநீற்றுப்பதிகம்' பதிவில் 25 நவம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

7 comments:

G.Ragavan said...
நல்ல விளக்கம். ஒரு சிறிய கருத்து.

சாக்கியர் கூட்டமும் என்றால் சாக்கியர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிறப்போடு சாக்கியத்தை ஒக்கவில்லை ஞானசம்பந்தப் பெருமான் என்றே கருதுகிறேன். சமணரும் பௌத்தரும் என்பதற்குக் குண்டிகைக் கையரும் சாக்கியர் கூட்டமும் என்று சொல்கிறார். அவ்வளவே!

சமணரும் சாக்கியரும் செய்த பெரும்பிழை இரண்டுண்டு. ஒன்று தமிழ்ப்புலவர்களைக் கொலை புரிந்தமை. மற்றொன்று தமிழ்ப்புலவர்களைக் கண்டு முட்டு கேட்டு முட்டு என்று இருந்தமை. தமிழ்ப் புலவர்களைக் கண்டால் தீட்டாம். ஏனென்றால் அவர்கள் நீறணிந்தவர். புறச்சமயச் சின்னம் அணிந்ததைக் கண்டாலே தீட்டு என்று நினைப்பது தவறு. அதுபோல அவர்தம் தமிழ்ப் பாக்களைக் கேட்டாலே தீட்டாம். ஏனென்றால் அவை அருகரையும் புத்தரையும் போற்றுகின்றனவை அல்ல. அதன் பின்னரே அவர்கள் பல நூல்களைத் தமிழில் சமைத்தனர். ஐம்பெருங்காப்பியங்களில் நான்கு சமண-பௌத்தமாக இருப்பதே இதற்குச் சான்று. ஆனால் அந்த நான்கு கதைகளைப் பார்த்தால் தமிழகப் பிண்ணனி சற்றும் இராது. எல்லாம் வடக்கத்திய இறக்குமதி. ஆகையால்தான் நின்று நிலைக்காமல் போயின.

6:18 AM, November 27, 2006
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//எண் திசைப் பட்ட பொருளாளர்//

அட்ட திக் பாலகரைக் குறிக்கின்றாரோ சம்பந்தப் பெருமான்?

//குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும்//

ஜிரா சொல்வது சரியே!
சமணரும், பெளத்தரும் எனக் கொள்வதே சிறப்பாக இருக்கும்!

//சமணரும் சாக்கியரும் செய்த பெரும்பிழை இரண்டுண்டு. ஒன்று தமிழ்ப்புலவர்களைக் கொலை புரிந்தமை. மற்றொன்று தமிழ்ப்புலவர்களைக் கண்டு முட்டு கேட்டு முட்டு என்று இருந்தமை//

வாதத்தில் தோற்றால் இறப்பு என்பது தமிழ்ச் சமுதாயம் அறியாத ஒன்று! அதை முன்னிறுத்தியதே இவர்கள் செய்த பெரும் பிழை!

மேலும் அரசனை அண்டி செல்வாக்கு பெறுவது நல்லது தான்; ஆனால் அதைக் கொண்டுச் செய்யும் கட்டாய மாற்றமும் (forced conversion) கெட்ட பெயரைத் தேடித் தந்து விட்டது!
பாவம், கருணையே உருவான புத்தரும், சமண ஆசாரியர்களும் தந்த நற்போதனைகள் மதம் என்ற கட்டுக்குள் சிக்கிக் கொண்டதால், செல்வாக்கு இழந்தது!

ஆயினும் தமிழுக்கும், தமிழ் மருத்துவத்துக்கும் இந்த இரு பிரிவினர் ஆற்றிய பணி போற்றுதலக்கு உரியதே!

8:31 AM, November 27, 2006
--

குமரன் (Kumaran) said...
அடியேன் 'பிறந்த' என்று சொன்னது புத்தரை, பௌத்தர்களை இல்லை. சரியான இடத்தில் தான் இருக்கிறது. ஆனால் படிக்கும் போது தவறான இடத்தில் பொருத்தப்பட்டுத் தவறான பொருள் தருகிறது.

சாக்கிய குலத்தில் பிறந்த புத்தர் என்பதே நான் சொல்ல வந்தது

சாக்கிய குலத்தில் பிறந்த, புத்தரைப் பின்பற்றும், பௌத்தர்கள் என்று நண்பர்கள் படித்திருப்பதாகத் தெரிகிறது. தவறான பொருள் தரும்படி எழுதியதற்கு மன்னியுங்கள்.

9:49 AM, November 27, 2006
--

SK said...
நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் பொருள் கொண்டேன், குமரன்.

தவறாக ஏதும் நீங்கள் சொல்லவில்லை எனவே கருதுகிறேன்.

11:11 AM, November 27, 2006
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் இராகவன். அடியேனும் அப்படி தான் பொருள் சொல்லியிருக்கிறேன். சொன்னதை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். சாக்கியர் கூட்டம் என்று சாக்கியர் குலத்தைக் கூறவில்லை. சாக்கியரான புத்தரைப் பணியும் பௌத்தர்களைக் கூறுகிறது என்று தான் பொருள் சொல்லியிருக்கிறேன்.

சமணரும் சாக்கியரும் செய்த தவறுகளைத் தெரிந்துகொண்டேன் இராகவன். நன்றி. கண்டு முட்டு கேட்டு முட்டு என்பதை இன்னொரு இடத்திலும் நீங்கள் சொல்லியிருந்தீர்கள்.

ஐம்பெருங்காப்பியங்களில் இரண்டு தமிழகப் பிண்ணனியில் இருப்பது தானே இராகவன்? சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழகப் பிண்ணனியில் இருப்பதாகத் தான் நான் இதுவரை எண்ணியிருக்கிறேன். மற்ற மூன்றைப் பற்றித் தெரியாது. வடக்கத்திய இறக்குமதி என்று தெரிந்து கொண்டேன்.

3:41 AM, November 28, 2006
--

குமரன் (Kumaran) said...
எண்திசைப் பட்ட பொருளாளர் என்பதற்கு எண்திசைக் காவலர்களையும் பொருளாகக் கொள்ளலாம் இரவிசங்கர்.

நல்லதும் தீயதும் எல்லா இடங்களிலும் இருந்தன என்பதற்கு சமணர்கள் ஒரு நல்ல எடுத்துக் காட்டு. நன்றி இரவிசங்கர்.

3:42 AM, November 28, 2006
--

குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி எஸ்.கே.

3:43 AM, November 28, 2006

Kavinaya said...

கருத இனியது நீறு காக்க வல்லது நீறு
எளியவர் ஆயினும் முனிவர்கள் ஆயினும்
ஏற்றம் தருவது நீறு.

நன்றி குமரா!

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

R.DEVARAJAN said...

‘சாக்ய முநி’, ‘ததாகதர்’ போன்றவை புத்தரின் மறு பெயர்கள்
தேவ்

குமரன் (Kumaran) said...

ஆமாம் தேவ் ஐயா. நன்றிகள்.